10/28/2011

கணினியா குப்பைத் தொட்டியா?

என் நண்பன் ஒருவன் தன் கணினியைத் திறக்கும்போது எதேச்சையாக நானும் அருகில் இருந்தேன். அவனது டெஸ்க்டாப்பைப் பார்த்து ஆடிப்போனேன். எண்ணற்ற கோப்புகளால் அது நிறைந்திருந்தது. என்னடா எனக் கேட்டால் அவன் டவுன்லோட் செய்வதெல்லாம் டெஸ்க்டாப்புக்குத்தானாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்தேன்.

அதே சமயம் ஏதேனும் கோப்பை அப்ப்டேட் செய்து வெளியில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமானால் தாவு தீர்ந்து விடுகிறது என்று வேறு மூக்கால் அழுதான். “வேறு எதையடா எதிர்ப்பார்த்தாய் மடையா” எனக் கூறி அவன் தலையில் செல்லமாகக் குட்டினேன். பிறகு அவனுக்கு நான் சொன்னதை இங்கும் பதிவாகப் போடுகிறேன், ஏனெனில் அவனைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என அவன் அல்ப திருப்தியுடன் குறிப்பிட்டான்.

வழ்க்கம் போல எனது உதாரணங்களையே கூறுவேன். என் நண்பன் செய்வது போல எல்லாம் நான் எல்லாவற்றையும் டெஸ்ட்டாப்பில் லோட் செய்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கோப்பை மொழிபெயர்ப்புக்காக அனுப்பியதும் நான் சரியான முறையில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அதை அடைய முடியும்.

டெஸ்க்டாப்பில் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் அதில் சேமிக்கப்படுபவை எல்லாமே C டிரைவில்தான் இருக்கும். திடீரென புதிதாக ஃபார்மாட்டிங் செய்தால் முதலில் போவது டெஸ்க்டாப் கோப்புகளே என்பதை மறக்கக் கூடாது. சி டிரைவில் புரொக்ராம் கோப்புகள் மட்டுமே இருப்பது நலம். கணினியின் ரீபூட்டுக்கான வசதிகளும் அதில் இருக்க வேண்டும். தேவையின்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது.

நான் கோப்புகளை எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன். மொழிபெயர்ப்புக்காக வரும் வாடிக்கையாளர் கோப்புகளை நான் F டிரைவில் சேமிக்கிறேன். E டிரைவில் நான் டவுன்லோட் செய்யும் மென்பொருள்கள் இருக்கும். அவற்றை இன்ஸ்டால் செய்யுபோது அது ஆட்டமேடிக்காக சி டிரைவில்தான் இன்ஸ்டால் ஆகும். அதே போல ரீஃபார்மாட்டிங் செய்யும்போது இ டிரைவிலிருந்து நிரலிகளை தேர்ந்தெடுத்து வழமையான முறையில் இன்ஸ்டாலும் செய்து கொள்ளலாம்.

எஃப் டிரைவில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனி ஃபோல்டர். அந்த ஃபோலட்ருக்குள் வாடிக்கையாளர் அனுப்பும் ஒவ்வொரு வகை கோப்புக்கும் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், பிடிஎஃப் ஆகியவை) தனித்தனி ஃபோல்டர். உதாரணத்துக்கு எனது ஒரு வாடிக்கையாள்ர் விஷயத்தில் இவ்வாறு 7 துணை ஃபோல்டர்கள் உண்டு. ஒவ்வொரு துணை ஃபோல்டரிலும் இன்னும் பிரிவினை தொடரும். கோப்பை டவுன்லோட் செய்யும் தேதியை தலைப்பாக வைத்து அதனுள் அக்குறிப்பிட்ட கோப்பை வைப்பது. அக்கோப்பின் மொழிபெயர்ப்பும் அதிலேயே வரும்.

ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இதற்கு இணையாக எனது மின்னஞ்சல்களையும் அடுக்க வேண்டும். ஜிமெயில் பாவிப்பதால் எதையும் அழிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கான பதிலோ அல்லது ஆக்‌ஷனோ நடந்து விட்டால் அதை உடனே ஆர்கைவ்சில் போட வேண்டும். சாதாரணமாக எனது இன்பாக்ஸ் காலியாகத்தான் இருக்கும். பிறகு தேவையான மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் சர்ச் போட்டு தேடிக் கொள்ளலாம். (பலரது இன்பாக்ஸில் நூற்றுக்காண மின்னஞ்சல்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன்).

ஒரு வாடிக்கையாளர் நீண்டகால மௌனத்துக்கு பிறகு என்னை அணுகினால் ஆர்கைவ்ஸை வைத்து அவரது பழைய மின்னஞ்சலைப் பார்த்து அதிலிருந்து எனத் எஃப் டிரைவில் உள்ள அவரது ஃபோல்டருக்கு போவதெல்லாம் இடது கை விளையாட்டுதான். ஆகவே முந்தைய ரேட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப கோட் செய்வதும் நடக்கும். அவர்களில் சிலர் தான் பழைய வாடிக்கையாளர் என்றெல்லாம் சீன் போட்டு ரேட்டை குறைக்க நினைத்தால், “ஐயா நீங்கள் கடைசியாக எனக்கு வேலை அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னால் பலான தேதியில்” எனக்க்கூறி அவர் சீன் போடுவதைத் தடுப்பேன்.

நான் மேலே கூறியவை மிக எளிதாக எல்லோராலும் செய்யவியலும்.

நான் முதலில் குறிப்பிட்ட தோழனிடம் இந்த இடுகை பற்றி கூறியபோது அவன் இன்னொரு பீதியைக் கிளப்பினான். லேப்டாப் எல்லாம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல் நிரலியுடன் வரும்போது ஒரே ஒரு சி டிரைவ்தான் இருக்கும் என்கிறான். கூடவே டி டிரைவில் கோஸ்ட் பேக் அப் இருக்கும் அவ்வளவே என்கிறான்.

நல்லா பீதியை கிளப்பறாங்கப்பா. ஏம்பா அது உண்மையா? யாராவது சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/27/2011

டோண்டு பதில்கள் - 27.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. வாஸ்து பிரச்னை: ஆன்டிலியாவிலிருந்து வெளியேறுகிறார் முகேஷ் அம்பானி?

பதில்: இதில் என்ன சொல்ல இருக்கிறது? ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்பவர் இம்மாதிரி வாஸ்து மூட நம்பிக்கை வைத்திருப்பதால் வாஸ்து கன்சல்டண்டுக்குத்தான் பணம் வரப்போகிறது என்பதில் என்ன ஆர்வம் எனக்கு இருக்கப் போகிறது?

எனக்கு இதில் மொழிபெயர்ப்பு வேலை ஒன்றும் இல்லாததால் நோ கமெண்ட்ஸ். :))))))))

கேள்வி-2. ஊழல்களால் வர்த்தகத்துறை முதலீடுகளில் பாதிப்பா? பிரணாப் மறுப்பு
பதில்: பாதிப்பு என்பதைத்தான் மறுக்கிறார் போலிருக்கிறது. ஊழல்கள் இருக்கு என்பதை சிரிக்காமல் மறுக்க அவராலேயே முடியாது.

கேள்வி-3. விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை: தினேஷ் திரிவேதி
பதில்: அப்போ தேவை குறையும்போது டிக்கெட் விலை குறையுமா?

கேள்வி-4. டி.என்.பி.எஸ்.சி., ரெய்டு எதிரொலி: நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை
பதில்: அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தானே.

கேள்வி-5. அமைதியான முறையில் நடந்து முடிந்தது 2ம் கட்ட ஓட்டுப்பதிவு: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
பதில்: 2-ஆம் கட்ட ஓட்டுப் பதிவில் கலந்து கொண்ட மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.


BalHanuman
கேள்வி-6. எடியூரப்பா?
பதில்: பாஜகாவுக்கு அவரால் சங்கடமப்பா.

கேள்வி-7.‘தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்கிறாரே பரிதி இளம்வழுதி?
பதில்: தனக்கு என வரும்போதுதான் அவருக்கு உரைக்கிறது என ஒரு வார இதழில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அதுதான் என் கருத்தும்.

கேள்வி-8. கனிமொழி ஜாமீனில் தீபாவளி ரிலீஸ்?
பதில்: அவரை புக் செய்த செக்சன் 409 (?) ஜாமீனை அனுமதிக்காது என படித்த நினைவு இருக்கிறதே.

கேள்வி-9. கூடங்குளம் குழப்பங்குளம்?
பதில்: ரஷ்யாவின் சம்பந்தம் உள்ள எதுவுமே சரியில்லை.


ரமணா
கேள்வி-10. கனிமொழிக்கு கடைசியில் ஜாமீன்?
பதில்: கேள்வி 8-க்கான பதில்தான் இங்கும். ஒரு வேளை எனக்குத்தான் சரியாக புரியவில்லையா?

கேள்வி-11. கருணாநிதியின் சோனியாவை சந்திக்க மாட்டேன் எனும் சபதம் உடைந்தது ஏன்?
பதில்: குண்டி காஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்னு ஒரு பழைய சொலவடை உண்டு.

கேள்வி-12. தேமுதிகவின் படுதோல்வி?
பதில்: அது தனது செயல்பாட்டை சரி செய்து கொள்வது நல்லது.

கேள்வி-13. மருத்துவர் இனி என்ன செய்வார்?
பதில்: மரம் வெட்ட கோடாலியை தீட்டுவாரோ?

கேள்வி-14. காங்கிரசின் எதிர்காலம் இனி யார் கையில்?
பதில்: யாரும் அதை கையில் எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள், குறைந்த பட்சமாக தமிழகத்தில்.

கேள்வி-15. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்திய விதம் எப்படி?
பதில்: மோசமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-16. ரஜினி மீண்டும் திரை வானில்?
பதில்: அவர் பிழைக்க வேண்டாமா?

கேள்வி-17. இனி சட்ட சபை களை கட்டுமா?
பதில்: விஜயகாந்த் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவாரா? களை கட்டுகிறதோ இல்லையே தளை கட்டாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-18. பாஜக‌வின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ள‌தா?
பதில்: நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. முதலில் இருந்தது பூஜ்யம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

கேள்வி-19. 3ஜி உரிமம் இல்லாமல் சில தனியார் கம்பெனிகள் 3 ஜி வியாபாரம் செய்யும் விஷயம் அடுத்த ஸ்கீமா?
பதில்: அப்படி நடக்கவியலுமா?

கேள்வி-20. ஒரு உண்மையான தொழிற்சங்க வாதியின் அன்பு மகனாய் வளர்ந்த நீங்கள் அமெரிக்காவின் வலதுசாரி கொள்கையின் கண்மூடி ஆதரவளராய் இருப்பதின் அடிப்படை காரணம் என்ன?
பதில்: பதின்ம வயதுகள் என்பதே ரிபல்களின் வயதுதானே. இந்தியாவில் அப்போது நிலவி வந்த பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்யத்தில் தொழிற்சங்கங்கள் சர்வாதிகாரமே செலுத்தின. எனது தந்தையின் நம்பிக்கையையே அவை சில சமயம் ஆட்டிப் பார்த்தன.

அப்போது நான் வலதுசாரி ஆதரவாளனாக இருந்தது காலத்தின் கட்டாயம்.

கேள்வி-21. அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியாவில் உள்ள வசதி இல்லாத மக்களின் எழுச்சியை பார்த்த பிறகவாது‍ மன மாற்றம் வருமா?
பதில்: எழுச்சியா, எங்கே, எங்கே, எங்கே?

கேள்வி-22. அரசியல் சொல்வக்குடன், இல்லாத பொல்லாத செயல்கள் எல்லாம் செய்து பொருள் குவிக்கும் வல்லான்களை எப்பொழுது வசை பாடுவீர்கள்?
பதில்: அதைத்தான் பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்ய கால கட்டங்களில் ஆள்பவர் துணை கொண்டு செய்யலாயினர். அதைத் நான் அப்போதே சாடினேனே.

கேள்வி-23. லஞ்ச லாவண்யத்தின் தயவால் நடத்தப்படும் ஆட்சி, அதிகாரம், வணிகம், கொள்ளை லாபம் பற்றி?
பதில்: முந்தைய கேள்வியிலேயே இதற்கான பதிலும் அடங்கியுள்ளது.

கேள்வி-24.பொருள் வர்த்தக வணிகம் மூலம் பரமபதம் விளையாடும் வர்த்தக சூதாடிகளை எதிர்ப்பீர்களா?
பதில்: பொருளாதார சுதந்திரத்தில் இதைத் தவிர்க்கவியலாது. ஸ்பெகுலேஷன் எனப்படும் இவ்வகை குற்றங்களை சோவியத் யூனியன் காலத்தில் சட்ட விரோதமாக்கி பார்த்துள்ளனர். காரியத்துக்காகவில்லை.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/22/2011

ஒரு தொழிற்சங்கவாதியின் மகனாக இருப்பதில் உள்ள சங்கடம்

எனது பதின்ம வயதுகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கும் என் தந்தைக்கும் இடையே பல விவாதங்கள் நடந்துள்ளதை உணர்கிறேன். முக்கால்வாசி எல்லா விவாதங்களும் இடதுசாரி வலதுசாரி பற்றிய விவாதமே.

உண்மையான அமெரிக்கன் என என் தந்தையே என்னைக் கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு நான் அமெரிக்க தனிநபர் பொருளாதாரத்தை விதந்தோதியிருக்கிறேன். என் தந்தையோ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்தவர். முதலில் எக்ஸ்பிரசில் வேலை பார்த்திருக்கிறார். அப்போதிலிருந்து ராம்நாத் கோயங்காவை அவருக்கு பிடிக்காது. அதுவும் தினமணி, எக்ஸ்பிரஸ் (சென்னை எடிஷன்) ஆகியவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும் கோயங்காவிற்கும் ஏழாம் பொருத்தமே.

தினமணியிலிருந்து பலர் விலகி நவமணி என்னும் பத்திரிகை ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தொழிலாளர்களால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை என்று வேறு கூறப்பட்டது அப்போதெல்லாம். என்ன, சம்பளம் மட்டும் இரு மாதத்துக்கொரு முறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என போட்டு வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு முறை என தந்தை திடீரென ஒரு நாள் கூறினார், “நல்ல வேளை தினமணி மூடிய நேரத்தில் நான் எக்ஸ்பிரஸ் குரூப்பில் இல்லை”. அவ்வாறு இருந்திருந்தால் தனக்கும் அதே கதிதான் என்பதில் அவருக்கு ஐயமேதுமில்லை. இதை அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். என் மரமண்டைக்கு அது எட்டாமல் யூனியன் விஷயங்களில் அவர் அதிகமாக ஆழ்ந்து போவதை அட்டாக் செய்திருக்கிறேன். அவருக்கே நான் கூறியதில் விஷயம் இருக்கிறது என்பதால் மேலே பேசவில்லை.

ஆனால் தந்தை மகன் இடையில் மகன் தந்தையை வெல்வது போன்ற சோகம் ஏதுமில்லை. சிறு வயதில் எங்களுடன் ஓட்டப் பந்தயம் பீச் மணலில் வைப்பார். அவர்தான் வெற்றி பெறுவார். ஆனால் வயதாக ஆக அவரது உடல் பலம் குறைந்து ஒரு நாள் நான் வின் செய்ததில் பிறகு எனக்குத்தான் அவ்வ்வ் என அழும்போல ஆகிவிட்டது. தந்தையின் ஆரோக்கியம் குறைகிறது என்பது மகனுக்கு எப்போதுமே அதிர்ச்சியைத்தான் தரும்.

சற்றே திசை திரும்பி விட்டேன், இருப்பினும் எழுதியது எழுதியபடியே இருக்கட்டும்.

1969-ல் நான் பொறியியல் பட்டம் பெற்றபோது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அச்சமயம் மின்வாரியத்தில் இஞ்சினியர்கள் ஸ்ட்ரைக் வர, பேப்பர்களில் இஞ்சினியர்கள் கேட்டு விளம்பரம் வந்தது. எனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அப்ளை பண்ண என் தந்தை எனக்கு அனுமதி திட்டவட்டமாக மறுத்தார். ஒரு வேலை நிறுத்தத்தை உடைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது உறுதியைப் பார்த்து நானும் அப்ளை செய்யாமல் விட்டுவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு மகத்தான காரியம் செய்திருக்கிறேன் என்பதை உணர மகிழ்ச்சியாக உள்ளது.

1967, 1968-ல் தொடர்ந்து இரு ஸ்ட்ரைக்குகள் ஹிந்துவில் நடந்தன. ரிப்போர்டர்கள் எல்லோரும் மேனேஜ்மெண்டுக்கு துணையாக நிற்க, என் தந்தை மட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். அதனால் பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன. உதவி தலைமை ரிப்போர்டர் பதவி அவருக்கு சீனியாரிட்டி மூலம் கிடைக்கவிருந்த நேரத்தில் அந்த போஸ்டையே நீக்கினார்கள். அதேர் போல அவர் தலைமை ரிப்போர்டராக வரவிருந்தபோது அப்போதைய தலைமை ரிப்போர்டருக்கு வேண்டுமெனவே ஓராண்டு நீடிப்பு தந்தனர். அதனால் எல்லாம் மனம் தளரவில்லை என் தந்தை. அவர் ரிட்டையரானதும் நிம்மதியாக தனது வழியில் ஆக்டிவாக இருந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.

இக்கால கட்டங்களில் அவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் புதுப்புது அசைன்மெண்டுகள் பெற்று வாழ்கின்றனர். அவரது காலகட்டத்தில் அத்தனை வாய்ப்புகள் இல்லை, கூடவே அவரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவருக்கு பொருளாதாரச் சுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நிஜமே. சொல்லி வைத்தது போல எனக்கும் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலை கிடைத்ததும் உதவியாக இருந்தது.

மொத்தத்தில் எனது தந்தை பொருளாதார வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் செல்வம் ஈட்டவில்லையானாலும் அவருக்கு பத்திரிகை உலகில் நல்ல பெயர் இருந்திருக்கிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நான் எதிர்ப்பாராத தருணங்களில் அவரது பழைய நண்பர்களுடன் எனக்கு சந்திப்பு ஏற்படுவதில் எனக்கு மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/21/2011

துபாஷி வேலையில் எதிர் கொண்ட பிரச்சினை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு தொழிலதிபருக்கு பிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டது. அவர் இது சம்பந்தமாக சென்னையிலுள்ள தனது க்ரூப் கம்பெனியை அணுகியிருக்கிறார். அந்த கம்பெனிக்காக நான் ஏற்கனவேயே பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன்.

அக்கம்பெனி என்னை சிபாரிசு செய்ய, இவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நானும் சென்றேன். அவர் என்னிடம் கொட்டேஷன் கேட்க அதையும் தந்தேன். சற்று பேரம் பேசிப் பார்த்தார், நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சரி என ஒத்துக் கொண்டார். பிறகுதான் தமாஷ். தன்னுடன் இன்னும் பலர் வந்திருப்பதாகவும், எல்லோரும் இரு குழுக்களாக பிரிந்திருப்பார்கள் என்றும், ஆகவே இன்னொரு துபாஷியும் வேண்டுமெனக் கேட்டார். நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.

நான் யோசித்துச் சொல்கிறேன் என ஒரு நாள் டைம் கேட்டு வந்தேன். முடியாது என்று சொன்னால் அவர்கள் யாரேனும் இன்னொருவரை கூப்பிட்டு, அவருடன் நெகோஷியேட் செய்து அவரையே இன்னொருவரையும் கொண்டுவரச் செய்து என்னைக் கழட்டிவிடும் அபாயம் இருந்தது.

நான் தேர்ந்தெடுத்தது ஒரு பெண் துபாஷியை. ஒருவரை ஒருவர் பார்த்திருக்காவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் அவருடன் பரிச்சயம் உண்டு. அவருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு துபாஷியாக வர விருப்பமா எனக் கேட்டேன். அவரும் சரி எனச் சொல்ல, அவருக்கு சில கண்டிஷன்கள் போட்டேன்.

1. நான் ஒத்துக் கொண்ட ரேட்டைத்தான் அவரும் கேட்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது (இது ரொம்ப முக்கியம்). பிற்காலத்தில் அதே வாடிக்கையாளர் அவரை மட்டும் வேறு அசைன்மெண்டுக்கு கூப்பிட்டால், தாராளமாக தனது ரேட்டை என்ன வேண்டுமானால் கூறிக் கொண்டு செய்யட்டும். ஆனால் இம்முறை மட்டும் எனது ரேட்டைத்தான் கேட்க வேண்டும்.

2. வாடிக்கையாளர் அவருடன் தனியாகப் பேசி, அவர் மனதைக் கலைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு இவர் இடமே தரலாகாது. ரேட்டை ராகவன் மட்டுமே நிர்ணயிப்பார் எனக் கூற வேண்டும்.

3. அவருடைய பணத்திலிருந்து நான் ஒரு பைசா கூட கமிஷனாகக் கேட்க மாட்டேன். அதே சமயம் தனது பில்களை சப்மிட் செய்து பணம் வாங்குவது அவரது பொறுப்பேதான். அவரது நிலையும் எனது நிலையும் இந்த அசைன்மெண்டில் ஒன்றுதான் எனவும் தெளிவுபடுத்தினேன்.

இந்த கண்டிஷன்களை அப்பெண்மணி தனது கணவரிடம் தெரிவிக்க, மறுபேச்சு பேசாமல் அவரை ஒத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

மூன்று நாட்கள் எங்கள் இருவருக்கும் வேலை இருந்தது. ஆக்சுவலாக அப்பெண்மணியின் குழுவினர் அவரை அதிக நேரம் ரீடைன் செய்ததில் அவரது பில் என்னுடையதை விட அதிகமே. அதில் எனக்கு பிரச்சினையில்லை, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்குமே பணம் கிடைத்தது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நான் அந்த தொழிலதிபர் இவ்வாறு செய்வார் என அனுமானித்தது அப்படியே நடந்தது. அப்பெண் ரேட் விஷயம் ராகவன் சொற்படி எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு குழுவினருமாக சேர்ந்து கடைசியில் ஒரு பார்ட்டி வைத்திருக்கின்றனர். என்னைக் கூப்பிடவில்லை, அப்பெண்மணிக்கு மட்டும் அழைப்பு போயிருக்கிறது. அப்பெண்மணியின் கணவர் ஒரு விஷயம்தான் அவரிடம் கூறினார், “ராகவன் சாரும் வருவதாக இருந்தால் தாராளமாகச் செல்”. அப்பெண் என்னிடம் இது பற்றிக் கேட்க, எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என நான் தெளிவுபடுத்த, அவரும் பார்ட்டிக்கு செல்ல மறுத்து விட்டார். இது பற்றி பிறகுதான் அறிந்தேன்.

துபாஷி வேலையில், அதுவும் பெண்களுக்கு, இம்மாதிரி சங்கடங்கள் வரலாம். இந்த விஷயத்தில் அப்பெண்ணின் கணவர் சரியான முறையில் தன் மனைவியை வார்ண் செய்து அச்சங்கடத்தைத் தவிர்த்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/20/2011

டோண்டு பதில்கள் - 20.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. அமெரிக்க செனட்டில் சீன கரன்சிக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

பதில்: இடியாப்பச் சிக்கலாகத்தான் எனக்கு இது படுகிறது. தனது கரென்சியின் மதிப்பை அந்தந்த நாடுதான் தீர்மானிக்கும் என்பதுதான் எனது கருத்து. அதற்கு எதிர்வினைகள் மற்ற நாடுகளின் தரப்பிலிருந்து வரும் எனறும் எனக்கு புரிகிறது. இது எது சரி, எது தவறு என்பதில்தான் குழப்பம்.

இது பற்றி படிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் லேசாக தலை சுற்ற, நான் என்னையே மறந்து விடுகிறேன்.

பிறகு நான் தூக்கத்தில் குறட்டை விடுவதாக அவதூறாக சிலர் கூறி வருகின்றனர்.

கேள்வி-2. "மக்கள் என்னை வீட்டுக்கு அனுப்பினாலும், நாட்டுக்குச் செய்யும் கடமையை மறந்து விடவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
பதில்: அவர் செய்ய வேண்டிய ஒரே கடமை அரசியலிலிருந்து விலக வேண்டியதுதான்.

கேள்வி-3. திராவிட கட்சிகளை வேரறுப்பதுதான் தலையாய நோக்கம்: ராமதாஸ்
பதில்: அதானே, அன்புமணிக்கு மந்திரி பதவி தர உதவாதவை இருந்தென்ன லாபம்?

கேள்வி-4. மத்தியில் அடுத்து தே.ஜ., கூட்டணி ஆட்சி தான்: அடித்துச் சொல்கிறார் அத்வானி
பதில்: அவர் நம்பிக்கை சரிதான். ஆனால் முதலில் உட்கட்சி ஒற்றுமை வரட்டுமே.

கேள்வி-5. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஒரு பவுன் பத்து ரூபாய் இருந்தது ஒரு காலம். இப்போழுது இருபது ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது
பதில்: பவுனுக்கு பத்து ரூபாய் இருந்த காலத்திலும் அக்கால கட்டத்து மக்களில் 99 சதவிகிதத்தினருக்கு தங்கத்தின் அந்த விலையும் மிக அதிகமே.

நமது இக்கால சம்பளம் அக்காலத்தில் இருந்திருக்கும் என மயங்குவதுதான் பிரச்சினையே.

கேள்வி-6. ம.தி.மு.க., அதிக இடங்கள் கைப்பற்றும்: சொல்கிறார் வைகோ
பதில்: அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அது கூட இல்லாவிட்டால் எப்படி?

கேள்வி-7. அதிகாரிகள் வெளியில் நடமாட முடியாது: ராமதாஸ் எச்சரிக்கை
பதில்: இவர் போன்றவர்களை டிபாசிட் கூட கிடைக்க முடியாத அளவுக்கு தோற்கடித்தால்தான் அவர்கள் வெளியே வரவும் அஞ்சுவர்.

கேள்வி-8. மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
பதில்: கவலை தரும் விஷயம். அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். மின் திருட்டுகளை ஒழித்தாலே நிலைமையில் அபிவிருத்தி காணப்படும்.

கேள்வி-9. சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது: வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
பதில்: பயனுள்ள செய்தி.


ரமணா
கேள்வி-10. உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுக்கு இரண்டாவது இடமாமே?
பதில்: அது நடந்தால் திமுக இன்னும் வேகமாக உடையும்.

கேள்வி-11. திருச்சியில் திமுக ஜெயித்தால்?
பதில்: கருணாநிதிக்கு சற்றே ஆசுவாசம் கிடைக்கும்.

கேள்வி-12. முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் செல்வாக்கு இப்போது?
பதில்: அதை தக்கவைத்துக் கொள்ள அவர் இன்னும் பாடுபட வேண்டும்.

கேள்வி-13. வைகைப்புயல் வடிவேலு?
பதில்: நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.

கேள்வி-14. மாவீரன் அழகிரியின் அதிரடி அரசியல்?
பதில்: ஆட்சியில் இல்லாத போது அது எடுபடாது.

கேள்வி-15. பேராசை கொண்டோரை எதிர்த்து அமெரிக்காவில் நடைபெறும் போராட்டம்?
பதில்: போராட்டம் நடத்துவோருக்கு மட்டும் பேராசை இருக்காது என்கிறீர்களா?

கேள்வி-16. எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிக்கல்?
பதில்: தெரியவில்லையே. கூகளிட்டு பார்த்தாலும் பலனில்லையே.

கேள்வி-17. சன் டீவி விவகாரம் ‍/400 பிஎஸ் என் எல் போன்கள்/ ஏர்செல்?
பதில்: மாறன் சகோதரர்களுக்கு தலைவலிதான்.

கேள்வி-18. அரசு டீவியில் சன் டீவி சாத்யமா?
பதில்: இப்போதைக்கு இல்லை. அரசு டிவிக்கு இது நல்லதல்ல.

கேள்வி-19. உலகமயமாக்கம் தோல்வியை நோக்கியா?
பதில்: உலகமயமாக்கல் காலத்தின் கட்டாயம். பல மாறுதல்கள் வரும், அவற்றில் பல பலருக்கு சாதகமாக இருக்காதுதான்.

ஆனால் ஒன்று, உலகமயமாக்கல் வந்தே விட்டது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/18/2011

எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, வேகமா பார்க்க முடியல்லே

அமெரிக்காவில் எல்லாம் பலர் தாங்களாகவே வீடு கட்டுவார்கள் என படித்துள்ளேன், எப்போது? சமீபத்தில் 1950-களில் “அமெரிக்கா அழைக்கிறது” என்னும் புத்தகத்தில் காந்திமதி என்னும் ஆசிரியை எழுதியுள்ளதை படித்ததைத்தான் இப்போது நினைவிலிருந்து கூறுகிறேன்.

அதே கால கட்டத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த ஒரு ஜோக்கும் எனக்கு நினைவுக்கு வருகிறது. இம்மாதிரித்தான் ஒரு பெரிசு தனது அண்டை அயலார் தாங்களாகவே வீடு கட்டுவதை பார்க்கும் பழக்கம் வைத்து கொண்டிருந்ததாம். ஒரு முறை மிகுந்த தயக்கத்துடன் ஒரு இளைஞன் தன் பகுதியில் அஸ்திவாரத்துக்காக தோண்ட ஆரம்பிக்க இந்தப் பெரிசும், குடை, சாய்வு நாற்காலி, பக்கத்து ஸ்டூலில் லெமன் ஜூஸ் எல்லாம் வைத்துக் கொண்டு இவன் வேலை செய்ய ஆரம்பிப்பத்தை பார்க்க ஆரம்பிக்க, அந்த இளைஞனின் டென்ஷன் அதிகமானது.

“சார் நான் ரொம்ப மெதுவாகத்தான் வேலை செய்வேன், உங்களுக்கு போர் அடிக்குமே” என சொல்லிப் பார்த்திருக்கிறான். அதனால் என்னப்பா, எனக்கும் வயசாயிடுத்தோல்லியோ, நான் மெதுவாகத்தான் பார்ப்பேன், எனக் கூறியதாம் அப்பெரிசு.

ஆனால் இப்போதெல்லாம் அமெரிக்காவில் அவ்வாறெல்லாம் நடக்கிறதா என்றால் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் பிரிட்டனில் செய்கிறார்கள் போல இருக்கிறது.

ஆனால் இது முடியவில்லையென்றால் சாவகாசமாக மற்றவர் போடும் சண்டையை பார்ப்பதும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. என்ன, கட்சியெல்லாம் எடுக்கக் கூடாது. அதுவும் இரு தரப்பிலும் பார்வையாளருக்கு பிடிக்காதவர்கள் இருக்கும்போது யார் எங்கு அடி வாங்குகிறார்கள்/தருகிறார்கள் எனப் பார்ப்பதும் ஒரு பொழுது போக்குத்தானே. (உதாரணம்: பாமக, திமுக சண்டை, காங்கிரசார் பார்வையில்).

டிஸ்கி: திருவல்லிக்கேணி பிளாட்பாரம் கடையில் போன ஞாயிறு மாலை பழைய புத்தகங்கள் கடை வரிசையில் இந்த ரீடர்ஸ் டைஜஸ்டை பார்த்ததுதான் இப்பதிவுக்கு உந்துதல் தந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2011

எப்படியோ ஒட்டு போட்டுட்டோமில்ல?

ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் இந்த தமாஷா விடாது நடைபெறுகிறது.

நாங்கள் வசிப்பது ஹிந்து காலனி 15-ஆம் குறுக்குத் தெருவில். எலெக்‌ஷன் புள்ளிவிவரங்கள் எடுக்க வந்த அந்த நாதாரி 17-ஆம் குறுக்குத் தெருவிலிருந்து எங்கள் தெருவுக்கு வரும்போது, புது பக்கத்தில் எங்கள் தெருவின் பெயரை மேலே எழுதிவிட்டு எங்களது விவரங்களையும் பதித்திருந்தால் பிரச்சினை ஏதும் இருந்திராது. 17-ஆம் குறுக்குத் தெருவின் கீழேயே எங்கள் விலாசத்தையும் எழுதிக் கொண்டு போயிருக்கிறார்கள். எனக்கு வந்த ஐடி கார்டில் 17-ஆம் குறுக்குத் தெரு என ஸ்பஷ்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே எங்கள் பெயர்களை புது லிஸ்டுகளில் கண்டறிவது வைக்கற்போரில் ஊசியை தேடும் நிலைதான். இம்முறை எனக்கு தந்த பதிவு எண் 877. அதே எண்ணை மேலும் இருவருக்கு தந்து சாதனை புரிந்துள்ளனர். இந்த அழகில் எனது பெயர் ஹிந்து காலனி 17-ஆம் தெருவில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் அம்மாதிரி தெருவே கிடையாது.

இரண்டு அடுத்தடுத்த பூத்துகளில் ஹிந்து காலனி 17-ஆம் தெரு காட்டப்பட்டுள்ளது. ஒரு பூத்தில் கிடைக்காமல் அடுத்த பூத்துக்கு போனால் அங்கு கிடைத்தது.

எங்கு போய் அடித்துக் கொள்வது? வோட்டர் ஐடி நம்பரை வைத்து லிஸ்ட் த்யாரித்தால் என்ன இந்த மடையர்களுக்கு? ஒருவேளை ஒரே ஐடி எண் ஒன்றுக்கும் மேற்பட்டவருக்கு தந்திருந்தால்? தலை சுற்றுகிறது சாமியோவ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/13/2011

டோண்டு பதில்கள் - 13.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்து கொண்டிருந்த தேயிலை, இப்போது அவமானத்தைத் தேடித் தருகிறது என்றால் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை

பதில்: இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? அதில் வந்த ஒரு பின்னூட்டம் கூறுகிறது: திரு மன்மோகன் சிங் அரசு இதில் யாருக்கு எவ்வளவு கமிஷன் பார்க்கிறதோ இன்னும் ஐந்து ஆண்டுகள் இவர்களிடம் ஆட்சி கொடுத்தால் இந்தியாவை விற்று விடுவார்கள் மக்கள் எப்போதுதான் விழிப்பார்களோ தெரியவில்லை. அதுதான் என் கருத்தும்.

கேள்வி-2. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக, நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் சந்தித்துப் பேசுகின்றனர்.
பதில்: ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதா பதவியில் இருக்க இயலாமல் போன போது கொஞ்ச நாட்கள் டம்மி முதல்வராக இருந்தார். மன்மோகனும் டம்மிதான், சோனியாவுக்காக பிரதமரே. டம்மிகள் சந்திப்பு, பலே பலே.

கேள்வி-3. தயாநிதி வீட்டில் "எக்சேஞ்ச்': ஆவணங்களைக் கேட்கிறது சிபிஐ
பதில்: டெலிஃபோன் எக்சேஞ்சுடன் ஏன் நிறுத்த வேண்டும்? அதன் பின்னணியில் உள்ள பண எக்சேஞ்சையும்தான் கேட்க வேண்டும்.

கேள்வி-4. தூக்கு தண்டனை விவகாரம்: மூவரையும் விடுவிக்க வேண்டும்: கருணாநிதி
பதில்: அரசியலில் இது ஜகஜம்.

கேள்வி-5. ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்தார் ரஜினிகாந்த்
பதில்: மகிழ்ச்சி.

கேள்வி-6. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் : ஸ்டாலின்
பதில்: தேர்தலில் ஊழல் செய்து திருமங்கலம் ஃபார்முலாவை கொண்டு வந்த திமுகாவே இப்போது அதெல்லாம் நடக்கக் கூடாது எனக் கூறுவதே மாற்றம்தானே. இதில் என்ன ஏமாற்றம்?

கேள்வி-7.உள்ளாட்சி தேர்தலில் கரை ஏற கட்சிகள் வியூகம் : ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கவும் முயற்சி
பதில்: உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் கலந்து கொள்ளக் கூடாது சுயேச்சைகள் மட்டுமே என எதிர்பார்க்கும் ஆதர்ச நிலை வராத வரைக்கும் இதெல்லாம் நடப்பதை கண்டு வியப்படைய ஒன்றுமேயில்லை.

கேள்வி-8. ஆளுங்கட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும் "தகிடு தத்தம்' திட்டம் தடுக்கப்படுமா?
பதில்: நான் என்ன ஆளும்கட்சிக்கு குத்தகை எடுத்துள்ளேனா? ஆளும்கட்சியை எதிர்ப்பது எதிர்கட்சியின் கடமை. திட்டம் வெற்றி பெற்றால் எதிர்கட்சியினர் அதை நல்ல திட்டம் என்பார்கள், ஆளும் கட்சியினரோ அதை தகிடு தத்தம் என்பார்கள். அவ்வளவே.

கேள்வி-9. இலவச திட்டத்தால் அதிகரிக்கும் மின் தேவை: சமாளிக்குமா தமிழக அரசு?
பதில்: அந்தளவுக்கா மிக்சி கிரைண்டர் எல்லாம் தரப்போகிறார்கள்?

கேள்வி-10. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.5,904 கோடி சரிவு
பதில்: எனக்கு தெரிந்தவரை அது வழமையான நடைமுறைதான். பங்குச் சந்தையில் வருவதும் போவதுமாக இருக்கும் நிலையில் அன்றாடம் நடக்கும் அதிகரிப்பு குறைப்புக்கு ஓரளவுக்கு மேல் முக்கியத்துவம் தரலாகாது என நினைக்கிறேன். நிலைமையை அவதானம் செய்ய இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.


BalHanuman
கேள்வி-11. கருணாநிதி இப்படி மாற்றி மாற்றி பேசி மக்களை முட்டாள்களாக்கக் காரணம் என்ன? முதலில் தி.மு.க. தோல்விக்கு தேர்தல் கமிஷனின் பாரபட்சம் தான் காரணம் என்றார். பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடம் கொடுத்தது தான் காரணம் என்றார். பின்னர் தான்தான் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இப்போது கட்சியினர்தான் காரணம் என்கிறார்.
பதில்: ஏதாவது பேசி அப்போதைய நிலையை சமாளிக்கும் வேலையை மட்டும் செய்து நீண்ட கால பார்வை ஏதுமின்றி செயல்படுபவர் கருணாநிதி.

ஹிந்தி எதிர்ப்புக்காக அரசியல் சட்ட நகலை கொளுத்த, அவர்களை எம்.ஜி.ஆர். அரசு கைது செய்ய, “நாங்கள் பேப்பரைத்தான் கொளுத்தினோம்” என திமுக உறுப்பினர்கள் மன்றாடியது கலைஞரின் டிராஃப்ட்படி என்பது எல்லோருக்கும் தெரியுமே. அதன் பிறகு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ. பதவியும் பறிமுதல் ஆனதாக நினைவு. அப்போது எம்.ஜி.ஆர். சாடிஸ்ட் என டரியல் ஆனதும் கருணாநிதியே.

தேர்தலில் தோல்வியுற்றால் தமிழன் சோற்றுப் பிண்டம் என்பாரே வழக்கமாக? இம்முறை அதை இன்னும் கூறவில்லை போலிருக்கிறதே. அல்லது அதையும் கூறிடுவாரோ? நான் என்ன கண்டேன்?

கேள்வி-12. இந்த சிறிய தொகையை (2,645 கோடி) மத்திய கணக்குத் தணிக்கைக் குழு 1.76 லட்சம் கோடி என்று உயர்த்தி தில்லுமுல்லு செய்துள்ளது’ என்கிறதே முரசொலி? 2,645 கோடி இவர்களுக்குச் சிறிய தொகையா?
பதில்: ஒப்பிட்டு நோக்கினால், கணித லாஜிக்படி முரசொலி கூறுவதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், மத்திய கணக்குத் தணிக்கை குழு பொருள் நஷ்டத்தை மட்டும் குறிப்பிடவில்லை. தவற விட்ட லாபத்தின் சாத்தியக் கூற்றையும் பார்த்தது. எது எப்படியாயினும் திருட்டு நடந்ததை மறுக்கவியலாது.

ஹிட்லர் அறுபது லட்சம் யூதர்களைக் கொல்லவில்லை, வெறுமனே 40 லட்சம்தான் என ஒரு பிரகஸ்பதி அக்காலத்தில் கணக்கு கூறுவதை போல முரசொலி பேசுகிறது என்பதும் நிஜமே.

கேள்வி-13. நில அபகரிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கே.என். நேருவை, திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக எதேச்சாதிகாரமாக, மக்களின் பொதுக் கருத்தை மதிக்காமல் கருணாநிதி நிறுத்தியிருக்கிறாரே?
பதில்: தமிழன் சோற்றாலடித்த பிண்டம் என்பதை அவர் கூறாமல் கூறுகிறார்.

கேள்வி-14. சமீபத்தில் தமது வீடுகள், அலுவலகங்கள் முதலியவற்றில் சிபிஐ சோதனை நடைபெற்ற மாறன் சகோதரர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு' என்கிறாரே கருணாநிதி?
பதில்: முரசொலி மாறன் ஒரு வேளை அவர் கனவில் வந்து அவரை மிரட்டியிருப்பாரோ?


Arun Ambie
கேள்வி-15. தமிழ் வலைப்பூக்களால் வசூல் வருவதில்லையாமே?
பதில்: சுலபமாக வருவதில்லை என்பது உண்மைதான். ஆனால் தாய் மொழியில் எழுதுவதில் வரும் இன்பத்துக்கெதிரில் இதெல்லாம் என்னைப் பொருத்தவரை தூசுதான்.

என்.எச்.எம் போன்ற நிரல்கள் இருக்கும்போது தமிழில் எழுத ஒரு கஷ்டமும் லேது.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/06/2011

டோண்டு பதில்கள் - 06.10.2011

ரமணா:
கேள்வி-1. அரசியல் உலகில் சனிப்பெயர்ச்சி பெரிய பாதிப்பை யாருக்கு கொடுக்கும்?
பதில்: நிஜமாகவே பெயர்க்கப்படப் போகிறவர்களுக்கு?

கேள்வி-2. கடைசியில் 2ஜி விவகாரம்?
பதில்: அதை பிசுபிசுக்க வைக்க எல்லா முயற்சிகளும் நடக்கின்றன.

கேள்வி-3. அதிமுக தனி ஆவர்த்தனம் ஜெயிக்குமா?
பதில்: உள்ளாட்சி தேர்தலில் இம்மாதிரி தனித்தனியாக போட்டி போடுவதுதான் நலம்.

4. மீண்டும் ஒரு பொருளாதார மந்தம் உலகம் முழுவதும்?
பதில்: கேப்பிடலிசத்தில் இம்மாதிரி மந்தமும் செழிப்பும் மாறி மாறி வருவது சகஜம்.

கேள்வி-5. உள்ளாட்சித் தேர்தலில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் பிரகாசித்தால்?
பதில்: 1991-ல் காங்கிரஸ் செய்த கூத்தை இவர் ரிபீட் செய்யாமல் இருப்பது இவர் மேல் நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இத்தேர்தலில் பிரகாசிக்க வேண்டியது அவரைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயம்.

BalHanuman
6. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோற்றதற்கு அதன் தொண்டர்களே காரணம் என்கிறாரே கருணாநிதி?
பதில்: பிச்சைக்காரனிடமே பிச்சை எடுப்பவர்கள் பேசுவது போல இருக்கிறது. எல்லா நல்லவவற்றையும் இவரும் இவரது குடும்பம், சின்ன வீடுகள் ஆகியோர் மட்டும் அனுபவிப்பார்களாம். தேர்தலுக்கு மட்டும் தொண்டன் பாடுபட வேண்டுமாம். தூ, வெட்கமாக இல்லை!!!


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-7. என்னை மயக்கவும் முடியாது.... யாருக்கும் விலை போகவும் மாட்டேன் :பாளையில் விஜயகாந்த் ஆவேசம்

பதில்: இப்போ அதை சொல்லறார். ஆனால் எப்போ எதைச் சொல்லுவாறோ என்ற சந்தேகமும் எழுகிறதே.

கேள்வி-8. மகாத்மா பட்டத்தை ஏற்க ஹசாரே மறுப்பு
பதில்: நல்ல முடிவு. அவர் அடக்கி வாசிக்கிறார். அடக்கி வாசிக்க வேண்டிய விஷயங்கள் அவரிடம் பல உள்ளன.

கேள்வி-9. ஆக்கப்பூர்வ பாதையில் செல்ல கருணாநிதி யோசனை
பதில்: அப்படியெல்லாம் நல்ல யோசனைகள் கூட அவர் செய்வாரா என்ன?

கேள்வி-10.ஊழல் அமைச்சர்களை காக்கும் மத்திய அரசு : அத்வானி
பதில்: இல்லாவிடில் மத்திய அரசே காலியாகி விடுமே.

கேள்வி-11."ஐ.ஐ.டி., மாணவர்களின் தரம் குறைகிறது' : "இன்போசிஸ்' நாராயண மூர்த்தி வருத்தம்
பதில்: ஐஐடிகள் சுய பரிசோதனை செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது.


மேலும் கேள்விகள் வந்தல் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/05/2011

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.10.2011

விட்டலன், புதிய தென்றல் மற்றும் நான்
எனது இப்பதிவில் இது சம்பந்தமாக நான் இட்ட கடைசி பின்னூட்டம் பற்றி சில வரிகள்:
தமிழ்மணத்தின் இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இதோ:
//ஒவ்வோர் இடுகையையும் எங்களாலே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் இவ்விடத்தில் பதிவர்களும் பயனர்களும் இருகண்களாக இருந்து தெரிவிக்கக் கோருகிறோம். தமிழ்மணத்தின் சிறப்பிற்கு டி.எம்.ஐ நிர்வாகக் குழுவினர் மட்டுமன்றி, பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் காரணமே.//
அதைத்தான் நானும் காவ்யாவும் விட்டலன் போன்றவர்கள் விஷயத்தில் செய்தோம்.
நான் கேட்டுக் கொண்டபடி அம்மாதிரியான விளம்பரப் பதிவுகள் அதற்கான ஏதேனும் ஓர் அடையாளத்துடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரேனும் நிஜமாகவே தில்லாலங்கடி வேலை செய்து தமது பதிவை முகப்புப் பக்கத்திலேயே நிலைக்கச் செய்தால், நான் அவை விளம்பரப் பதிவாக இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பலனாய் ஒன்றுமே கூறாது விட்டுவிடும் வாய்ப்பு உண்டு.

இப்போதெல்லாம் விட்டலனோ புதிய தென்றலோ காணப்படவில்லை.

சந்தேகம் கேள் மகனே, அப்போதுதான் உனக்கு அறிவு வளரும்!!!
மகன்: அப்பா நீராவி இஞ்சின் எப்படி வேலை செய்கிறது?
தந்தை: (பேப்பர் படித்தவாறு) தெரியாது மகனே.

மகன்: உலகிலேயே அதிக மழை பொழியும் ஊர் எது?
தந்தை: (கொட்டாவி விட்டவாறு) தெரியாது மகனே.

மகன்: தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்?
தந்தை: கககபோ

மகன்: கொதிக்கும் நீர் முழுவதும் ஆவியாகும் வரைக்கும் உஷ்ண அளவு 100 டிகிரி செல்சியாகவே நிற்கிறது அது ஏன்?
தந்தை: நான் என்னத்தைக் கண்டேன்.

அரை மணி நேரம் மௌனம் நிலவுகிறது.

தந்தை: என்ன மகனே கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டாய்? கேள்வி கேட்டுக் கொண்டேயிரு, அப்போதுதான் அறிவு வளரும்.

Any resemblance with actual events is purely intentional!

பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் கல்வி அமைச்சர்
ஒரு விவேக் படத்தில் ஒரு காட்சி. விவேக்குக்கு தவறாக ஆபரேஷன் செய்து விடுகிறார் டாக்டர். விவேக் தட்டிக் கேட்க அவர் பம்முகிறார். அப்போது அங்கு வரும் கம்பவுண்டர் “டாக்டர், நீங்கள் ப்ளஸ் டூவுல பாஸ் பண்ணிட்டீங்க” எனக்கூற, விவேக் டரியலாகிறார். படம் பெயர் யாராவது சொல்லுங்கப்பூ.

இப்போ பார்த்தால் பத்தாவது கூட பாஸ் செய்யாத கல்யாணசுந்தரம் புதுவையில் கல்வி அமைச்சர்! சட்டப்படி தவறில்லைதான், இருந்தாலும் இடிக்கிறது. இந்த அழகில் அவர் இப்போது பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் நிலையில் சமூக அறிவியல் தேர்வில் வசூல்ராஜா கிரேசி மோகன் மாதிரி இவர் சார்பில் இன்னொருவர் பரீட்சை எழுதுவதாக பீதியை கிளப்புகிறார்கள்.

அசாம் முதன் மந்திரியாக தெரிவு செய்யப்பட்ட பிரஃபூல்ல குமார் மொஹந்தாவும்தான் பிறகு ஒரு பரீட்சை சக மாணவர்களுடன் சேர்ந்து பந்தா ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே எழுதினார். நிருபர்கள் அதை கவர் செய்தனர். புதுவை கல்வி அமைச்சருக்கு மட்டும் இங்கு என்ன பிரச்சினை?

மெகா சீரியல்கள் என்றால் கிள்ளுக்கீரையா?
ஒரு சீரியலை தொய்வு ஏதும் இல்லாமல் கொண்டு செல்வதில் உள்ள கஷ்டம் நம்மைப் போன்ற வெளி ஆட்களுக்கு புரியாதுதான். இந்த முயற்சியில் பல டைரக்டர்கள் லேடீஸ் செண்டிமெண்டை பிழிந்தெடுக்க முயற்சி செய்து அபத்தமான அளவுக்கு செல்வதும் நடப்பதுதான். “கோபுரங்கள் சாய்வதில்லை” என்னும் அருமையான திரைப்படத்தை இப்போது கடந்த பல ஆண்டுகளாக கஸ்தூரி என்னும் சீரியலாக எடுத்து கொலை செய்வதையும் பார்க்கிறோம்.

அதே சமயம் “எங்கே பிராமணன்” போன்ற சீரியலையும் பார்க்கிறோம். எப்படி ஒரு சீரியலை எடுக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக் காட்டுதான் எங்கே பிராமணன் என நான் பலமுறை சொல்லியாகி விட்டது.

இப்போது நான் மிகவும் ரசிக்கும் ஒரு சீரியல் “நாதஸ்வரம்”. அது வந்த புதிதில் நான் பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் ஆரம்ப எபிசோடுகள் பலவற்றை பார்க்கவில்லைதான். இருப்பினும் என் வீட்டம்மாவிடம் கதை சுருக்கம் பெற்றுக் கொண்டு பிறகு பார்க்க ஆரம்பித்தது முதல் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் சில எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் காட்டப்பட்டபோது சம்பந்தப்பட்ட பதிவுகளை பார்க்காமல் புறக்கணிக்கவும் செய்தேன் என்பதும் நிஜம்.

இப்போதுதான் சில நாட்களாக விட்டுப்போன ஆரம்ப எபிசோடுகளை டெக்சதீஷ் உபயத்தில் பார்த்தேன். அசந்து விட்டேன். சும்மா சொல்லப்படாது, திருமுருகன் சீரியலின் மேல் தனது முழு கண்ட்ரோலையும் வைத்துள்ளார். முதல் நான்கு எபிசோடுகளிலேயே பாத்திரங்கள் அழகாகச் செதுக்கப்பட்டு விட்டனர்.

கீழே நான் காட்டும் க்ளிப்பிங்க் அக்டோபர் மூன்றாம் தேதியுடையது. காவிய ரேஞ்சுக்கு இதை டைரக்டர் இயக்கியுள்ளார். கோபி, மலருக்கு இனிமேல்தான் பல சோதனைகள் வரப்போகின்றன என்றாலும், அவர்கள் இருவருமாக சேர்ந்தே அவற்றை எதிர்கொள்வார்கள் என்ற நிச்சயமும் மனதில் ஏற்படுகிறது. வசனகர்த்தாவுக்கு ஒரு சல்யூட். திருமுருகனுக்கும், கோபிக்கும் மலருக்கும், காஜாவுக்கும் ரோகிணிக்கும்தான்.


அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது