7/30/2005

அன்புமணி அவர்கள் நல்ல தந்தை

அன்புமணி அவர்கள் நான் ஏற்கனவே கூறியபடி ஒரு நல்லத் தந்தை என்பதை நிரூபிக்கிறார். மிகத் தெளிவாகவே சிந்தித்துள்ளார். தமிழ் வாழ்க என்பதெல்லாம் இளிச்சவாய் தொண்டர்களுக்குத்தான். தனக்கல்ல என்பதை அவர் செயலில் கூறி விட்டார். வலைப்பூ பாவிக்கும் பல அன்புமணி தாங்கிகள் இதைப் புரிந்து கொள்ளாமல் அவர் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இது அவர்களுக்கு வேண்டாத வேலை என்றுதான் நினைக்கிறேன்.

மிக மிருதுவான வார்த்தைகளை எழுதும் என் நண்பர் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கு கீழ்கண்ட விளக்கம் தன் பதிவில் கொடுத்தார். அதாவது தில்லியில் செயல்படும் D.T.E.A. பள்ளிகள் தரம் வாய்ந்தது இல்லையாம், தமிழ்நாட்டில் இருந்திருந்தால் தன் குழந்தைகளை தமிழ் பள்ளியிலேயே படிக்க வைத்திருப்பாராம். அப்பதிவாளரின் போறாத காலம் தில்லியில் இருபது வருடங்கள் இருந்து தன் பெண்ணை அப்பள்ளிகளில் ஒன்றில் படிக்க வைத்த என்னிடம் போய் அதைக் கூறினார். அவருக்கு அப்போதே தேவையான பதில் கூறினேன்.

அதற்கப்புறம் இன்னொரு உண்மையும் வெளிப்பட்டது. அன்புமணி அவர்களே ஆங்கிலப் பள்ளியில் படித்தவர்தானாமே? இதற்கு என்ன சப்பை கட்டு க்ட்டப் போகிறார் அதே நண்பர் என்பதை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

மறுபடி கூறுவேன். அன்புமணி தன் பெண்களை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தது யதார்தத்தை உணர்ந்து செய்தது. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் தயவு செய்து தமிழக மக்களுக்கு இது சம்பந்தமாக அறிவுரைகள் கூறாது இருத்தல் நலம்.

அவரோ அவர் தந்தையோ அவ்வாறு அறிவுரை கூறாது இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். அப்புறம் அவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்கள்? ஆகவே தொண்டர்களே, (இது எல்லா கட்சியினருக்கும் பொருந்தும்) உங்கள் தலைவர்கள் கூறும் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ரசியுங்கள். போராட்டம் ஏதேனும் தலைமை செய்தால் அதில் உங்களுக்கு ஏதாவது (பிரியாணியாவது) கிடைக்குமா என்று பாருங்கள். முடிந்தால் வீட்டுக்கு பார்சல் கட்டிக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவரவர் வேலைகளை கவனியுங்கள். இதை செய்யாது பிறகு அழுது புலம்பாதீர்கள். இல்லாவிட்டால் தொண்டன் அடிபட்டு சாவான், அன்புமணிகள் மந்திரிகளாவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/22/2005

நெட்.மெஸ்ஸெஞ்சரின் அடாவடி

கணினியை ஆன் செய்ததும் பல நிரலிகள் தாமே செயல்படத் துவங்கி விடுகின்றன. உதாரணம் குறள், முரசு அஞ்சல் முதலியன. ஆனால் அவை எல்லாம் நான் அவ்வாறு செயல்பட செட்டிங்க் கொடுத்திருக்கிறேன். ஆகவே பிரச்சினை ஏதும் இல்லை.

இந்த எம்.எஸ்.என். தூதுவன் மட்டும் அழும்பு செய்கிறது. டிஷ்னெட்டை க்ளிக்கி இணையத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் முன்னரே அது வந்து லாக்-இன் செய்யச் சொல்கிறது. இருப்பதெல்லாம் இருக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பது போல இது ஒரு இம்சை. அந்த ஜன்னலை மூடி விட்டு இணையத் தொடர்பை ஏற்படுத்தி விடுகிறேன். பிறகு எம்.எஸ்.என்னை செயலாக்கினால் நெட்.மெஸ்ஸெஞ்சர் வந்து பிரலாபிக்கிறார். "நீங்கள் வேறிடத்தில் க்ளிக்கியதால் நான் செல்கிறேன்" என்று. யார் ஐயா இவனை முதலில் கூப்பிட்டது?

அது மட்டும் இல்லை. நான் எம்.எஸ்.என்.தூதுவனை ஆன் செய்யவில்லையென்றால் இன்னொரு இம்சையும் இருக்கிறது. எம் எஸ்.என். பட்டியலில் இருக்கும் அனைவருக்கும் நான் ஆன்லைனில் இருப்பது தெரிந்து அவர்கள் பேச வந்து விடுகிறார்கள். அதற்காகவே எம்.எஸ்.என்னைப் போட்டு ஆஃப்லைனில் இருப்பதாக செட்டிங்க் செய்ய வேண்டியிருக்கிறது.

எதனை முறை எம்.எஸ்.என். தூதுவன் தானே செயல்படத் துவங்குவதை செயலிழக்கச் செய்தாலும் இந்த சனியன் ஓய மாட்டேன் என்கிறது.

இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/18/2005

ஜே.கே.ரௌலிங்குக்கு தர்ம அடி காத்திருக்கிறது

ஹாரி பாட்டர் ஆறாவது புத்தகம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் என்ன? டம்பிள்டோரேயைக் கொலை செய்து விட்டாரே? இவர் நல்லா இருப்பாரா என்றுதான் என் மனதில் ஆவேசம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இப்படித்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் இறந்ததாக எழுதி ரொம்பவே தாக்குதலுக்கு ஆளானார் சர் ஆர்தர் கானன் டாயில் அவர்கள். அடே கொலைகாரா என்ற ரேஞ்சில் அவருக்கு கடிதங்கள் தந்திகள் ஆகியவை வந்து குவிந்தன. வேறு வழில்லாமல் மீண்டும் ஷெர்லாக் ஹோம்ஸ் என்றெல்லாம் கதைகள் வந்தன.

ஆனால் அதற்கும் இங்கு வழியில்லாமல் செய்துவிட்டாரே கல் நெஞ்சுக்கார ரௌலிங்க். ஏழாவது புத்தகம் வேறு வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ எனத்தெரியவில்லை.

என்ன சஸ்பென்ஸை உடைத்து விட்டேனோ? ஆனால் என்ன செய்வது? என்னை இந்த ரேஞ்சுக்கு புலம்ப விட்ட ரௌலிங்க் ஒழிக. உலகத்துக்கே தெரிந்த விஷயத்துக்கு என்ன ஒளிவு மறைவு? புத்தகம் வந்து மூன்று நாட்கள் ஆகி விட்டனவே. படிக்கவில்லையானால் படியுங்கள். ரௌலிங்குக்கு எல்லோரும் சேர்ந்து தாக்குதல் கணைகள் அனுப்புவோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/11/2005

செல்லப் பெயரின் பயன்

என் சிறு வயது தோழன் சிங்கு என்ற நரசிம்மனுடன் 30 வருடங்களாக தொடர்பு விட்டு போயிருந்தது. அவனைப் பலகாலமாகத் தேடிக் கொண்டிருந்தேன். அவன் குடும்பத்தினரும் என் அம்மாவின் அத்தையும் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரித் தெருவில் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள். அவ்வீட்டார் அனைவரும் எனக்குப் பழக்கம்.

திடீரென்று ஒரு நாள் சிங்குவின் அக்கா டில்லியின் (இயற் பெயர் தெரியாது) தொலை பேசி எண் கிடைத்தது. பரபரப்புடன் போன் செய்தேன். ஃபோனை எடுத்து பதில் சொன்னது டில்லிதான் என்பதை அவர் குரலிலிருந்து அடையாளம் கண்டு கொண்டேன்.

நான்: ஹல்லோ, டில்லியா பேசுவது?
டில்லி: ஆமாம், நீங்கள் யார் பேசுவது?
நான்: டோண்டு
டில்லி: அடேடே டோண்டுவா, எப்படிடா இருக்கே? என்ன விஷயம்?
நான்: ஒன்றுமில்லை, சிங்குவின் நம்பர் வேண்டும்.
டில்லி: இதோ தருகிறேன்

30 வருட இடைவெளி செல்லப் பெயரால் ஒரு நொடியில் தகர்க்கப்பட்டது. ஆனால் ஒன்று. யாராவது க்ராஸ் டாக்கில் கேட்டிருந்தால் ரொம்பவே நொந்து போயிருப்பர்.

இதற்கு மாறாக வேறு இடத்தில் என்னைப் பற்றி விலாவரியாக என் அம்மாவின் தோழியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் சாவகாசமாக கேட்டார் "டோண்டுதானே" என்று. அப்போதுதான் செல்லப் பெயரின் உபயோகம் தெரிந்தது.

இப்போது? டோண்டு என்றப் பெயரை நானே எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்பவுமே முனைந்து பிரபலமாக்கியிருக்கிறார் ஒரு புண்ணியவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/06/2005

நான் தேடும் ஹைப்பெர்லிங்க்

சாதாரணமாக என் ஹைப்பெர் லிங்க் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதும் போது சம்பந்தப்பட்ட ஹைப்பெர்லிங்க் எது என்பதில் எனக்கு ஐயமே இருந்ததில்லை. இப்போது மட்டும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன ஆனால் அவற்றைப் பற்றிய நினைவைத் தூண்டிய ஹைப்பெர்லிங்க் எது என்பதைத்தான் மறந்து விட்டேன். என் வலைப்பதிவு நண்பர்கள் எனக்கு இதில் ஏதாவது உதவி செய்ய முடியுமா?

சரி, நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சி அலிபாபாவின் கதையில் வரும். அந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அலிபாபா (எம்.ஜி.ஆர்.) தையற்காரனின் (தங்கவேலு) கண்களைக் கட்டி தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வெட்டப்பட்டிருக்கும் தன் அண்ணன் (எம்.ஜி.சக்கரபாணி) உடலைத் தைக்கச் செய்து, நிறையப் பணம் கொடுத்து, திருப்பி அவன் கண்களைக் கட்டி அவனை அனுப்புவார். வீட்டைத் திரும்ப அடையாளம் கண்டு கொள்ள அந்தத் தையற்காரன் அலிபாபாவின் வீட்டுக் கதவில் ஒரு குறியிடுவான். இதை யதேச்சையாக கவனித்த மார்ஜியானா (பானுமதி) புத்திசாலித்தனமாக தெருவில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அவ்வாறே குறியிட, பிறகு கொள்ளையர் தலைவன் (பி.எஸ்.வீரப்பா) பின்தொடர வரும் தையற்காரன் வீட்டை அடையாளம் காட்ட முடியாது திகைப்பான்.

இன்னொரு நிகழ்ச்சி நிஜமாக நடந்தது. ஐ.டி.பி.எல்.-லில் எங்கள் பொறியியல் மேலாளர் பாலிகா அவர்கள் தன் சகா மகரபூஷணம் சம்பந்தமாகக் கூறியது. மகரபூஷணத்துக்கு பொது மேலாளர் ஒரு வேலை கொடுத்தார். அதாவது, தனக்கு வேண்டிய மூவருக்கு முன்கூட்டிய ஊதிய உயர்வு அளிப்பதற்காக ஒரு கோப்பைத் தயார் செய்யச் சொன்னார். மகரபூஷணம் ஒரு காரியம் செய்தார். கோப்பைத் தயார் செய்தார், ஆனால் வேண்டிய மூவருக்காக கொடுத்த குறிப்புகளை வைத்து கொண்டு மொத்தம் 10 பேர் முன்கூட்டிய ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்பதாகக் கோப்பைத் தயாரித்தார். பொது மேலாளரும் வேறு வழியின்றி அதை நிதி ஒதுக்கலுக்காகப் பரிந்துரைக்க, தலைமை அலுவலகம் அப்பரிந்துரையை நிதிப் பற்றாக்குறை காரணமாக நிராகரித்தது.

இந்த நிகழ்ச்சிகள் இரண்டும் திடீரென எனக்கு இப்போது ஏன் நினைவுக்கு வந்தன? அதுவும் பிரிட்டிஷ் தயாரிப்பான மார்ரிஸ் மைனர் காரைப் பற்றி ஒரு பழைய பத்திரிகைக் குறிப்பை பார்த்ததும் அவை நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/04/2005

மொழி பெயர்ப்பில் ஹைப்பர் லிங்க்

This is another updated old post.

ஒரு ஜெர்மன் கட்டுரை மொழி பெயர்ப்புக்காக வந்தது. அதில் திடீரென்று ஒரு சுருக்கப்பட்டச் சொல்லைப் பார்த்தேன்.

"ver. Spiegel" என்று குறிப்பிட்டிருந்தார்கள். Spiegel என்றால் கண்ணாடி என்றுப் பொருள். ஆனால் ver.?

கட்டுரை ஒரு பெரிய ஜெனரேட்டரைப் பற்றியது. மேலே குறிப்பிடப்பட்டிருந்தக் கண்ணாடி ஜெனரேட்டரைச் சோதிப்பதற்கு உபயோகப்படுவது. தலை முடியைப் பிய்த்துக் கொள்வதுதான் பாக்கி. ஏனெனில் ver.-க்கு முழு வார்த்தை (expansion) என்னவென்றுக் கூறுதல் மிகக் கடினம்.

அம்மாதிரி நேரங்களில் நான் சிறிது நேரம் வேலையை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது செய்வது வழக்கம். கையில் ஒரு ஆங்கிலத் துப்பறியும் நாவல் கிடைத்தது. அதை சுவாரஸ்யமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அதில் கதாநாயகன் காரில் இரு தேசங்களுக்கிடையில் உள்ள எல்லைக்கோட்டைக் கடப்பதற்காக அங்குச் செல்வான். எல்லையில் உள்ள அதிகாரி காரின் அடியில் ஒரு பெரியக் கழியின் முடிவில் ஒரு கண்ணாடியைப் பொருத்தி ஏதாவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க அக்கண்ணாடியைக் காருக்கு அடியில் தள்ளிப் பார்ப்பார்கள். அதை ஆங்கிலத்தில் "sliding mirror" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதைப் படித்த உடன் என் வழக்கமான பல்ப் மண்டைக்குள் எரிந்தது. என்னை அறியாமலேயே அந்த ஆங்கிலச் சொல்லை ஜெர்மனில் கூறிப் பார்த்தேன்.

"Vershiebbarer Spiegel" என்று வந்தது. அப்புறம் என்ன. புத்தகத்தை ஓரமாக வைத்து விட்டு மொழி பெயர்க்க ஆரம்பித்தேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று வாடிக்கையாளரைக் கேட்டால் அவர் நான் ஊகித்தது சரி என்றுக் கூறினார்.

7/02/2005

ஹைப்பர் லிங்க் (ஆனால் என்னுடையது அல்ல)

ஹைப்பெர் லிங்க் பற்றி நான் முன்னம் பதித்த இன்னொரு பதிவை இங்கு இற்றைப்படுத்துகிறேன் அப்படியே வாசகர்களையும் படுத்துகிறேன் என்று யாராவது கூறிவிடும் முன்னால் நானே அதையும் இப்போதே கூறிவிடுகிறேன்.

வருடம் 1971. அப்போது பம்பாயில் மாதுங்காவில் இருந்தேன். நாங்கள் 10 தமிழர்கள் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தோம். ஆளுக்கொரு கட்டில். ஒரு கட்டிலுக்கு வாடகை 70 ரூபாய்கள்.

அது பற்றிப் பிறகு. இப்போது ஹைப்பர் லிங்க்குக்கு வருவோம்.

ஞாயிறு காலையில் 10 மணி அளவில் ஆனந்தமாக கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பக்கத்தில் உள்ள அரோரா சினிமாவில் ஏதாவது தமிழ்ப்படம் காலைக் காட்சி பார்க்கச் செல்வது வழக்கம். அன்று அம்மாதிரி என் சக அறைவாசிகள் நரசிம்மன் மற்றும் சுந்தரம் 'குடியிருந்த கோவில்' படத்துக்குச் சென்றிருந்தனர். ஆனால் பாதியிலேயே திரும்பி விட்டனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

நரசிம்மன் எரிச்சலுடன் கூறினான்:"அட போப்பா. ஏற்கனவே பார்த்த படம். இந்தப் படத்தைப் பொறுத்த வரை இது நான்காம் முறையாக நடக்கிறது" என்றான்.

"சற்று விவரமாகச் சொல்லப்பா" என்றேன். அதற்கு அவன் கூறினான்:

"நம்பியார் இரண்டாவது சீனில் எம்.ஜி.ஆரின் அப்பா ராம்தாசைத் துரத்திக் கொண்டு வருவார். முகத்தை வழக்கம்போல கோணிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேகக் குரலில் 'அடேய் ராமனாதா' என்று கத்துவார் இல்லையா"?

நான்:"ஆமாம் அதற்கு என்ன இப்போது?"

நரசிம்மன்:" அதுதான் பிரச்சினையே. அந்த 'அடேய் ராமனாதா' வந்தப் பிறகுதான் எனக்கு இது நான் ஏற்கனவே பார்த்த படம் என்று நினைவுக்கு வரும். இது நான்காம் முறை."

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது