8/30/2005

அன்னியன் அம்பி ராகவன்

அம்பி ராகவன் என் பெரியப்பாவின் பிள்ளை. எங்கள் இருவருக்கும் தாத்தாவின் பெயரை வைத்தார்கள். பிறகு என் பாட்டி கணவன் பெயரைச் சொல்லி எங்களைக் கூப்பிட முடியாததால் அவன் அம்பியானான், அவனுக்கு நான்கு வருடம் கழித்துப் பிறந்த நான் டோண்டுவானேன். இந்தக் கதை இங்கு எதற்கு?

இப்போதுதான் அன்னியன் படம் பார்த்துவிட்டு வருகிறேன். எங்கள் ஊர் வெற்றிவேல் தியேட்டரில் (பழைய ரங்கா தியேட்டர்) ஓடுகிறது இப்படம். என்னைச் சேர்த்து பால்கனியில் 3 பேர் மட்டுமே. கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அன்னியன் படத்தில் அம்பி அம்பி என்று கேட்கும்போதெல்லாம் 3 வருடம் முன்னால் காலஞ்சென்ற எங்கள் அம்பியே நினைவுக்கு வந்தான். அவனும் அன்னியன் அம்பியைப் போலத்தான் ரூல்ஸ் எல்லாம் பேசுவான்.

சரி படத்துக்கு வருவோம். படம் முதல் காட்சியிலிருந்து விறுவிறுவென்று ஓடுகிறது. யோசிக்கவே இடம் தரவில்லை. சங்கர் அவர்களின் பிரம்மாண்டமானத் தயாரிப்பு மனதைக் கொள்ளை கொண்டது. கதை? ஸ்பைடெர்மேன், ஷக்திமான், மிஸ்டர் இண்டியா போன்றதுதான். அவற்றிலும் ஹீரோ அம்மாஞ்சியாக வருவான். ஹீரோயின் அவனை வெறுத்து ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டியை காதலிப்பாள். இப்படி அரைத்த மாவையே அரைத்தாலும் அதை சுவைபட அரைத்தார்கள் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மெட்டி ஒலி ராஜம்மா ஐயங்கார் மாமியா? ரொம்ப லட்சணமா இருக்காள் போங்கோ. கதாநாயகியை விட அவள் அம்மா கொள்ளை அழகு. (வீட்டம்மாவிடம் உதை வாங்கப் போகிறாய் டோண்டு).

தியாகையர் ஆராதனைக் கச்சேரியில் முன்னணியில் சங்கீத ஜாம்பவான்களைப் பார்க்கும்போது மனம் ஆனந்தத்தால் விம்மியது. விவேக்கும் பிரகாஷ்ராஜும் அசத்துகின்றனர். விக்ரமோ கேட்கவே வேண்டாம். அவர் நடித்து நான் பார்க்கும் முதல் படம் இதுவே. ரொம்ப இம்ப்ரெஸ் செய்கிறார்.

மற்றப்படி சங்கர் பார்ப்பனர்களைத் தூக்கி நிறுத்தியதாகத் தோன்றவில்லை. பார்ப்பனர்கள் சாதாரணமாக கோழை மனதுடையவர்கள் என்ற ஸ்டீரியோடைப்பை உபயோகித்திருக்கிறார். இது பார்ப்பனர்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. ஏதோ கிண்டல் செய்வது போலத்தான் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை. கதைதானே. போகட்டும்.

பாடல் காட்சிகளில் சில நேரம் பால்கனி சீட்டுகளில் வைப்ரேஷனை உணர்ந்தேன். அவ்வளவு சத்தம். சில இடங்களில் பேச்சே புரியவில்லை.

இன்னொரு முறை பார்க்கலாம் என யோசிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/28/2005

கடைசி பூ

இத்தலைமுறையைச் சேர்ந்த எவ்வளவு பேருக்கு ஜேம்ஸ் தர்பரைத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. இன்னும் இளமையாக இருப்பதாக உணரும் என்னுடைய சமீபத்தியக் கல்லூரிக் காலங்களில் என்னைப் பாதித்த அமெரிக்க எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவர் கட்டுரையைப் படிக்கும்போது எப்படி அதை முடிப்பார் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கும். என்னை மிகவும் பாதித்த அவருடைய சிறுகதை போன்ற ஒரு பதிவு இதோ.

உலக மகா யுத்தம்-XII மனித நாகரிகத்துக்குச் சாவுமணி அடித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஊர்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் காணாமலேயே போயின. அவற்றுடன் சேர்ந்து அழிந்தன தோப்புகள், காடுகள் மற்றும் தோட்டங்கள்; கலை படைப்புகள் கூடத் தப்பிக்கவில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே விலங்குகளை விடக் கீழ்நிலைக்குச் சென்றனர். தைரியம் இழந்து, விசுவாசம் துறந்து நாய்கள் கூடத் தோற்றுப்போனத் தத்தம் எஜமானரை விட்டு விலகின. புத்தகங்கள், ஓவியங்கள் மற்றும் இசைச் செல்வங்கள் உலகிலிருந்து மறைந்தன. மக்கள் கூட்டங்கள் ஒன்றுமே செய்யாது உட்கார்ந்து வெட்டிப் பொழுது போக்கின. பல வருடங்கள் இவ்வாறே கடந்தன. உயிர் தப்பிப் பிழைத்த சில படைதளபதிகள் கூட கடைசி யுத்தம் எதை ஸ்தாபித்தது என்பதை மறந்தனர். இளைஞர்களும் யுவதிகளும் உணர்ச்சி ஏதுமின்றி ஒருவரை ஒருவர் பார்த்து வளர்ந்தனர். காதல் என்பது உலகை விட்டு நீங்கியது.

ஒரு நாள்: பூவையே பார்த்தறியாத ஓர் இளம்பெண் எதேச்சையாக ஒரு பூவைக் கண்டாள். உலகின் கடைசி பூ அது; தன் கடைசி மூச்சில் இருந்தது. தன் கூட்டாளிகளிடம் அப்பூவைப் பற்றிக் கூறினாள். அது சாகாமல் இருக்க ஏதேனும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். ஒருவர் அவள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை, ஓர் இளைஞனைத் தவிர. அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பூவைப் பராமரித்தனர். அது மறுபடி வாழத் துவங்கியது. ஒரு நாள் ஒரு தேனீ அப்பூவிடம் வந்தது, கூடவே ஒரு பாடும் பறவை. சீக்கிரம் இன்னொரு பூ உருவாயிற்று, பல பூக்கள் உருவாயின. தோப்புகளும் காடுகளும் மறுபடி வீறு கொண்டெழுந்தன. இளம் பெண்ணுக்கு தன் தோற்றத்தில் அக்கறை பிறந்தது. அவளைத் தொடுவது தனக்கு சந்தோஷம் தருகிறது என்பதை இளைஞன் கண்டுக்கொண்டான். உலகில் காதல் மறுபடியும் தோன்றியது.

அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலசாலிகளாவாகவும் ஆரோக்கியமானவர்களாயும் விளங்கினர். ஓட, சிரிக்க கற்றுக்கொண்டனர். நாய்கள் தங்கள் வனவாசத்திலிருந்துத் திரும்பின. எல்லோரும் வீடுகள் கட்டக் கற்றுக் கொண்டனர். ஊர்கள், நகரங்கள், கிராமங்கள் உருவாயின. இசை திரும்ப வந்தது. நாடோடிப் பாடகர்கள், கழைக்கூத்தாடிகள், தையற்காரர்கள், சக்கிலியர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் மற்றும் சிற்பிகள் உருவாயினர்; கூடவே வந்தனர் சிப்பாய்கள், லெப்டினன்டுகள், கேப்டன்கள், தளபதிகள் பிரதம சேனாதிபதிகள் மற்றும் விடுதலை வீரர்கள். சிலர் ஓரிடம் சென்று வசித்தனர், மற்றவர் வேறிடம். கூடிய சீக்கிரம் சமவெளிகளுக்குச் சென்றவர்கள் தாங்கள் மலையிலேயே இருந்திருக்க வேண்டும் என எண்ணினர், மலைக்குச் சென்றவர்களோ சமவெளியே நல்லது என நினைத்தனர். கடவுள் பெயரில் போராடிய விடுதலை வீரர்கள் திருப்தியின்மைக்குத் தூபம் போட்டனர். ஆக மறுபடி ஒரு உலக மகா யுத்தம் வந்தது, இம்முறை எல்லாம் சுத்தமாக அழிந்தன. உலகில் ஒன்றுமே மிஞ்சவில்லை, ஒரு மனிதன், ஒரு பெண் மர்றும் ஒரு பூவைத் தவிர.

வசந்தன் அவர்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு திடீரென இக்கதை ஞாபகம் வந்தது. பார்க்க ஹைப்பர்லிங்க்:
http://vasanthanin.blogspot.com/2005/05/blog-post_111495556338876908.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/25/2005

மேலும் பதில் கூறும் மூட் உள்ளதா?

உப்பிலியைப் பற்றி விடை கொடுத்தவர்களுக்கு என் நன்றி. இப்போது மேலும் சில கேள்விகள் தோன்றுகின்றன. விடை கொடுத்து விடுவீர்கள் என நிச்சயம் அறிவேன்.

1. ராமனுக்கும் ராமன் அப்பாவுக்கும் ஒரே வயதாமே. இது என்னக் கூத்து?

2. அம்பானி அவர்கள் தன் காரியதரிசியிடம் ஐந்து நிமிடத்துக்கான பேச்சை தனக்கு தயார் செய்துத் தருமாறு ஆணையிடுகிறார். காரியதரிசியும் அவ்வாறே செய்து தருகிறார். ஆனால் மீட்டிங் முடிந்து வந்த அம்பானி காரியதரிசி மிகப் பெரிய அளவில் பேச்சை தயார் செய்ததாகவும் ஆகவே தான் அதை 15 நிமிடங்களுக்குப் படிக்க வேண்டியதாகி விட்டதாகவும் கூறி அவரை டிஸ்மிஸ் செய்து விடுகிறார். தான் தவறே செய்யவில்லை என்று புலம்புகிறார் காரியதரிசி. என்ன ஆயிற்று?

3. மாது யூனிவர்சிடி பரீட்சை எழுதுகிறான். அவனுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த சங்கரைப் பார்த்து எழுதுகிறான். மாதுவை விடப் பெரிய கபோதியான கோவிந்தன் மாதுவைப் பார்த்து எழுதுகிறான். சங்கர் மற்றும் கோவிந்தன் பாஸ் ஆனால் மாது பெயில். எங்ஙனம்?

4. இரண்டு சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன. ஒன்றையொன்று நோக்கி ஒரே நேரத்தில் கிளம்புகின்றன. இரண்டினது வேகமும் மணிக்கு 20 கிலோமீட்டர்கள். அதே நேரத்தில் ஈ ஒன்று ஒரு சைக்கிளிலிருந்து கிளம்பி இன்னொரு சைக்கிளை நோக்கி 40 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிறது. அது இன்னொரு சைக்கிளின் ஹேண்டில்பாரைத் தொட்டு முதல் சைக்கிளை நோக்கி வருகிறது. இப்போது முதல் சைக்கிளைத் தொட்டு மறுபடி இரண்டாம் சைக்கிளுக்குச் செல்கிறது. இதே மாதிரி திரும்பத் திரும்பச் செய்து கடைசியில் இரண்டு சைக்கிள்களும் ஈயும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூடுகின்றன. ஈ அதிகப் பட்சம் எவ்வளவு தூரம் பறந்தது?

5. ஒருவன் தன் மனைவியைக் காரில் வைத்து வேகமாக ஓட்டிச் செல்கிறான். நடுவில் கார் ரிப்பேர். காரை அப்படியே விட்டு கணவன் மட்டும் மெக்கானிக்கைத் தேடி செல்கிறான். திரும்பி வந்து பார்த்தால் அவன் மனைவி அவன் இதுவரை பார்க்காத ஒருவனை அணைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் கணவன் கோபம் அடையவில்லை. ஏன்?

6. ஒருவன் ஒரு தீவில் தனியாக இருக்கிறான். அத்தீவில் உணவோ தண்ணீரோ கிடையாது. ஆனாலும் அவன் தான் இறந்துவிடுவோம் என்று ஒரு போதும் பயப்படவில்லை. இருப்பினும் 10 நிமிடங்களில் இறந்து விடுகிறான். என்ன நடந்தது?

7. ஓட்டப் பந்தயத்தில் ராமமூர்த்திக்கு முதலிடம் கிடைத்தது ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஏன் இந்த அக்கிரமம்?

8. இக்கதை அக்கால மேற்கு ஜெர்மனியில் நடந்ததாகக் கூறுவர். அப்போது Adenauer பிரதம மந்திரி (Bundeskanzler). தேசத்தின் அணுசக்தித் துறையின் தலைமை பதவி காலியாக இருந்தது. மூவர் போட்டியிட்டனர். ஒருவர் Karl Fritz. அவர் கணித நிபுணர். இன்னொருவர் Arendt. அவர் இயல்பியல் நிபுணர். மூன்றாவர் Schmidt. அவர் ரசாயனத் துறையில் வல்லவர். மூவருமே ஒரே அளவில் மதிப்பெண்கள் பெற்றனர். Adenauer வேலையை யாருக்குக் கொடுத்திருப்பார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/24/2005

நஞ்சுப் பின்னூட்டங்கள்

சற்று கடுமையானச் சொற்களை தலைப்பில் பயன்படுத்த நேர்ந்ததற்கு உங்கள் எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரவர பின்னூட்டங்களின் தரம் குறைந்து போகிறது. முக்கியமாக எரிதப் பின்னூட்டங்களின் தொல்லை தாங்க முடியவில்லை. என் வலைப்பூவில் அவை இது வரை வராவிட்டாலும் போலி டோண்டு வந்து என் வலைப்பூவில் அமர்க்களம் செய்வது எல்லோருக்குமமே தெரியும். போலி டோண்டுவை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நான் பேசப் போவது விளம்பர எரிதங்களைப் பற்றியே.

அவற்றுள் ஒன்றை இங்கு மாதிரியாகக் காண்பிக்கிறேன்.
"At August 21, 2005 11:00 PM, Anonymous said...
This blog is awesome! I'll be bookmarking it and sharing it with many others. If you get a chance you may want to visit this PDF Software site, it's pretty awesome too!"

எப்படி கதை போகிறது பாருங்கள். அவர்கள் உங்களை புக் மார்க் செய்வார்களாம். நீங்கள் அவர்கள் தளத்துக்கு வர வேண்டுமாம். காதில் நன்றாகவே பூ சுற்றுகிறார்கள் இல்லை?

நான் கவனித்தவரை அனானிப் பின்னூட்டங்களுக்கு வழி விடும் பதிவுகளில் இது அதிகமாகத் தென்படுகிறது. பல முறை அது ஒரு மென் பொருள் மூலம் மனித முயற்சி இல்லாது தன்னிச்சையாக இடம் பெறுகின்றன என்றும் தோன்றுகிறது. அவற்றைத் தவிர்க்க எனக்கு இரு வழிகள் தோன்றுகின்றன.

முதல் வழி ப்ளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது. இதனால் எரிதம் குறையும் என்றாலும், முழுவதாக அழியும் என்று கூற முடியாது. சில எரிதங்கள் செட்டிங்க்ஸில் சில மாறுதல்கள் மூலம் தவிர்க்கலாம். பார்க்க:

What is the word verification option?
The "word verification" option can be found on the Settings | Comments tab for your blog, and it looks like this:

"Show word verification for comments? yes no

If you choose "yes" for this setting, then people leaving comments on your blog will be required to complete a word verification step, similar to the one presented when you create a blog:
Here you will get a random collection of letters that can only be copied by a man and not an inanimate system.

What this does is to prevent automated systems from adding comments to your blog, since it takes a human being to read the word and pass this step. If you've ever received a comment that looked like an advertisement or a random link to an unrelated site, then you've encountered comment spam. A lot of this is done automatically by software which can't pass the word verification, so enabling this option is a good way to prevent many such unwanted comments.

சரி ஐயா, எரிதம் வந்து விட்டது. என்ன செய்யலாம்? அது உடனே அழிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு அழிப்பதையும் சற்று யோசித்து செய்யவும். விளக்குகிறேன்.

பின்னூட்டங்களை அழிக்க இரு முறைகள் உள்ளன. ஒன்று ஒரேயடியாக மொத்தமாக அழித்து விடுவது. இல்லாவிடில் பின்னூட்டம் இட்டவர் பெயர் லிங்க் ஆகியவற்றை அப்படியே வைத்துக்கொண்டு பின்னூட்ட வாசகங்கள் மட்டும் அழிப்பது.

முதலில் குறிப்பிட்ட முறையில் ஒரு நடைமுறை சங்கடம் உண்டாகிறது. உதாரணத்துக்கு உங்கள் பதிவு ஒன்றில் 50 பின்னூட்டங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பதிவு வந்து சில தினங்கள் ஆகி விட்டன என்றும் வைத்துக் கொள்வோம். இப்போது ஒவ்வொரு முறை பின்னூட்டம் வரும்போதும் தமிழ் மணத்தில் "மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள்" கீழ் அது இற்றைப்படுத்தப்படும். இப்போது ஐம்பது பின்னூட்டங்கள் வந்து விட்ட நிலையில் 51 வது பின்னூட்டம் வந்ததுமே அது இற்றைப்படுத்தப்படும். 4 எரிதங்கள், 10 போலி டோண்டுவின் பின்னூட்டங்கள் டமாலென்று வருகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அவையும் இற்றைப்படுத்தப்பட்ட பிறகு 65 பின்னூட்டங்கள் என்று காண்பிக்கப்படும். இந்த 14 பின்னூட்டங்களையும் அடையாளமின்றி அழித்தால் என்ன நடக்கும்? பின்னூட்டங்கள் எண்ணிக்கை உங்கள் பதிவில் மறுபடி 51 ஆகும். தமிழ் மணத்தில் 65 பின்னூட்டங்கள் என்றே காண்பிக்கப்படும். அடுத்து வரும் பின்னூட்டங்கள் இற்றைப்படுத்தப்பட மாட்டாது. மறுபடி எண்ணிக்கை 65-ஐ தாண்ட வேண்டும். அப்போதுதான் அது சாத்தியம். என்ணிக்கை 65-ஐ தாண்டுவது நடக்காமலேயும் போகலாம்.

ஆனால் இரண்டாம் முறையில் இச்சிக்கல் இல்லை. உங்கள் பதிவில் பின்னூட்ட எண்ணிக்கை மாறாது. 65 என்றே இருக்கும். அழிக்கப்பட்ட பின்னூட்டங்களும் அவை பதிவு மேலாளரால் அழிக்கப்பட்டன என்று காண்பிக்கப்படும். ஆகவே இம்முறையே சிறந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/22/2005

சில கேள்விகள்

கேள்விகள் பலருக்குப் பிடித்திருக்கின்றன. ஆகவே இன்னும் சில கேள்விகளைக் கேட்கலாம் என்று எண்ணம்.

1. ஜன்னல் எதுவும் இல்லாத ஒரு மூடிய அறையில் மூன்று பல்புகள் உள்ளன. அவற்றிற்கான ஸ்விட்சுகள் அறைக்கு வெளியே உள்ளன. அறையை ஒரு முறை மட்டும் திறந்து உள்ளே பிரவேசிக்கலாம் எந்த ஸ்விட்ச் எந்த பல்புக்கு என்று அறிய முடியுமா? எவ்வாறு?

2. ஒருவன் தன்னுடையக் காரில் ஒரு சக்கரத்தை மாட்டிக் கொண்டிருக்கிறான். அப்போது துரதிர்ஷ்டவசமாக சக்கரத்தின் நான்கு நட்டுகளும் சாக்கடையில் விழுந்து காணாமல் போகின்றன. அத்துவானக் காட்டில் இருக்கிறான். பக்கத்தில் கடை ஏதும் இல்லை. இப்போது என்ன செய்து சிக்கலிலிருந்து மீளுவான்?

3. ஒரு லாரி உயரம் குறைந்தப் பாலத்துக்கு அடியில் செல்லும்போது இசகு பிசகாக மாட்டிக் கொள்கிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. ஒரே கூச்சல். லாரியை எவ்வாறு மேலே ஓட்டிச் செல்வது?

4. நீங்கள் ஒரு கிலோமீட்டர் நீளமும் 100 மீட்டர் அகலமும் கொண்டத் தீவின் நடுவில் இருக்கிறீர்கள். தீவு முழுக்க உலர்ந்த செடிகள் அடர்த்தியாக உள்ளன. தீவின் ஒரங்களில் செங்குத்தான வழுக்குப் பாறைகள் உள்ளன. தீவைச் சுற்றிலும் உள்ளக் கடலில் பல சுறாமீன்கள். தீவின் ஒரு எல்லையில் திடீரென்று காட்டுத்தீ மூண்டு விடுகிறது. காற்று நீங்கள் இருக்கும் இடம் நோக்கியே வீசுகிறது, ஆகவே தீயும் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. எவ்வாறு தப்பிப்பீர்கள்?

5. முந்தாநேற்று மீராவின் வயது 17. அடுத்த வருடம் அவள் வயது 20. எப்படி?

6. ராமு தன் பெற்றோர்களுடன் சென்னையில் வசிக்கிறான். போன வாரம் அவன் பெற்றோர்கள் வீட்டில் இல்லை. பக்க்த்து வீட்டு நிர்மலா அவனுக்கு கம்பெனி கொடுத்தாள். சற்று நேரம் கழித்து நிர்மலா சிகரெட் வாங்க வெளியில் சென்றாள். அப்போது முன்பின் தெரியாத இருவர் வந்து வீட்டிலிருந்து டி.வி செட்டை எடுத்துச் சென்றனர். அவர்கள் திருடர்கள். ராமு அவர்களை இது வரை பார்த்ததேயில்லை. ஆனாலும் அவன் அவர்களைத் தடுக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை. சொல்லப் போனால் அவர்கள் செயலைக் கண்டு திகைப்பு கூட அடையவில்லை. ஏன்?

7. அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு வாலிபனின் பிணம். அது நீச்சல் உடை அணிந்திருந்தது. நீந்துவதற்குரிய ஏரி 10 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. வேறு நீர்நிலைகளும் இல்லை. வாலிபன் எப்படி இறந்தான் என்பதை விளக்குக. இது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சி.

8. ஒரு போலீஸ்காரர் தெருவோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு குரலைக் கேட்டார், "பீட்டர், என்னைச் சுடாதே, என்னைச் சுடாதே!" துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டது. சத்தம் வந்த வீட்டினுள் போலீஸ்காரர் நுழைந்து பார்த்தார். ஒரு பிணத்தைச் சுற்றி அவர் இது வரை பார்த்திராத மூவர் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் வக்கீல், இரண்டாமவர் பொறியாளர், மூன்றாமவர் பாதிரியார். போலீஸ்காரர் பாதிரியாரை உடனே அரஸ்ட் செய்தார். ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/21/2005

ராஜாஜி என்னும் மாமனிதர் - 5

வருடம் 1959. ராஜாஜி, மசானி, பிலூ மோதி மற்றும் என்.ஜி.ரங்கா ஆகியோர் சேர்ந்து சுதந்திரா கட்சியை நிறுவினர். அப்போது எனக்கு வயது 13. வீட்டில் கல்கி, விகடன் இரண்டுமே வாங்கப்பட்டன. விகடன் காங்கிரஸை ஆதரித்தது, கல்கி சுதந்திரக் கட்சியை. தமிழகத்தின் இரு பெரிய பத்திரிகைகள் இவ்வாறு இரு வேறு கருத்துக்களைக் கூறி வந்தன.

நான் இதை முதலில் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அதாவது ஒரே ஒரு தரப்பு வாதங்களைக் கேட்டு என் நிலைப்பாட்டை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. விகடன் கூறிய வாதங்களையும் படித்தேன், கல்கியின் வாதங்களையும் கண்டேன்.

என் மனம் சுதந்திரா கட்சியையே ஆதரித்தது. அதற்கு ராஜாஜி அவர்களின் எழுத்துக்களும் காரணம். அந்த அளவில் காங்கிரஸ் ஆதரவு எழுத்தாளர்கள் என்னைக் கவரவில்லை. ஆக, நான் அப்போதிலிருந்தே சுதந்திரா கட்சி ஆதரவாளன். காங்கிரஸ் எதிர்ப்பாளன். கம்யூனிஸ்டுகளின் அதி தீவிர எதிர்ப்பாளன்.

அக்காலக் கட்டத்தில் பல தொழில்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அரசு நிறுவனங்கள் மிகுந்த அதிகாரங்களைப் பெற்றிருந்தன. ராஜாஜி அவர்கள் கூறியது ரொம்ப எளிமையாக்கினால் இவ்வாறு வரும். "அரசின் வேலை ஆட்சி புரிவதே, வெற்றிலைப் பாக்குக் கடைகள் திறப்பது அல்ல." ஆனால் அரசு தரப்பில் அதைத்தான் செய்தார்கள். ஒரு நிறுவனம் அதிகம் லாபம் பார்க்கிறதா, உடனே அது தேசியமாக்கு என்பதே கோஷம். அதே போல ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறதா, அதையும் தேசீயமயமாக்கு என்றும் கோஷம். ஒரே குழப்பம்.

புதிதாகத் தொழில் துவங்க வேண்டுமா, பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ஆகியவை பெற வேண்டும். அவ்வாறு அவற்றை எப்படியோ அரசியல்வாதிகளுக்கு வாய்க்கரிசி போட்டு பெற்ற நிறுவனங்கள் பிறகு தனிக்காட்டு ராஜாவாகவே ஆட்டம் போட்டன. இவை எல்லாவற்றையும் ராஜாஜி அவர்கள் எதிர்த்தார். ஆனால் அவர் வாதங்கள் எல்லாம் அவை எல்லாவற்றாலும் பயன் பெற்ற vested interst குழுக்களால் மறைக்கப்பட்டன.

ஆடம்பரச் செலவுகளுக்கு வெளி நாடுகளிடம் கடன் வாங்காதே என்றார். அதையும் அரசு கேட்கவில்லை. கடன் சுமை ஏறியதுதான் மிச்சம். கட்டுப்பாட்டுடன் நடந்து கொள் என்றால் யாருக்குப் பிடிக்கும்? ராஜாஜி கூறியவை அப்போது எல்லோருக்கும் கசந்தன.

1959-ல் அரசியல் நிலை என்ன? நாட்டின் ஏறத்தாழ எல்லா மானிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான். கேரளா மட்டும் விதி விலக்கு, ஆனால் அதையும் காங்கிரஸ் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது. தமிழக சட்ட சபையில் காங்கிரஸுக்கு 150 இடங்கள், தி.மு.க.வுக்கு 15. காங்கிரஸை எதிர்ப்பதுதான் சுதந்திரக் கட்சியின் அப்போதைய முதல் பிரச்சினை. ஆகவே தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து கொண்டது. 1962-ல் காங்கிரஸுக்கு கிடைத்த இடங்கள் சுமார் 135, தி.மு.க. 50 இடங்கள் பெற்றது. சுதந்திரக் கட்சிக்கோ 6 இடங்களே கிடைத்தன. முழு அளவில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளாததால் இந்த நிலைமை. ஆனால் சுதந்திரக் கட்சிக்க்கு வட மாநிலங்களில் கணிசமான வெற்றி.

1962-லிருந்து நாட்டுக்குப் பல சோதனைகள். சீன ஆக்கிரமிப்பு அவ்வருட அக்டோபர் வாக்கில் நடந்தது. 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் மற்றும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், 1966-ல் ரூபாய் மதிப்புக் குறைப்பு ஆகியவை நடந்தன.

1967 தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து மகா கூட்டணி போடப்பட்டது. காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகள் சிதறுவது தடுக்கப்பட்டது. அவ்வாறு காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகள் கூட்டணி போடுவது காலத்தின் கட்டாயம் ஆயிற்று. தேர்தலில் திமுக 130-க்கு மேல் இடங்கள் பெற்று தனிப்பட்ட ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் மந்திரிகளில் பூவராகனைத் தவிர அனைவரும் தோற்றனர். திமுகவே எதிர்ப்பார்க்காத பெரிய வெற்றி. மக்கள் சபைக்குத் தேர்வு பெற்ற அண்ணா அவர்கள் அப்பதவியை விட்டு எம்.எல்.சி. ஆகி ராஜ்ய முதன் மந்திரியானார். 1969-ல் அவர் மறைந்தார். அதன் பிறகு மெதுவாக நிலைமை மோசமாகத் துவங்கியது. 1969-ல் காங்கிரஸ் பிளவின் போது கருணாநிதி அவர்கள் இந்திரா காங்கிரஸை ஆதரித்தார். சுதந்திரா கட்சியும் திமுகவும் மன வேறுபாடு கொண்டன.

1971-ல் இந்திரா அவர்கள் தேர்தலை ஒரு வருடம் முன்னால் நடத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தார். அதே மூச்சில் கருணாநிதி அவர்களும் கவர்னருக்கு தேர்தல் பரிந்துரை செய்தார். இ.கா. திமுக கூட்டை ராஜாஜியும் காமராஜரும் தமிழகத்தில் எதிர்த்தனர். ஆனால் படுதோல்வியையே அவர்கள் சந்தித்தனர். அதன் பிறகு காங்கிரஸ் தமிழகத்தில் தலை தூக்கவே இயலவில்லை.

நான் எல்லா விவரங்களையும் கூற முயலவில்லை, ஏனெனில் இப்பதிவு அதற்குப் போதாது. முடிந்தவரை தமிழகத்துடனேயே நிறுத்திக் கொள்கிறேன்.

ராஜாஜி அவர்கள் 1967-ல் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டதை இப்போது பலர் குறை கூறுகின்றனர். பின்னோக்கிப் பார்க்கும் போது எல்லாமே சுலபமே. ஆனால் அக்காலத்தில் நிலவிய அரசியலை நேரடியாகக் கண்டவன் என்ற முறையில் கூறுவேன். ராஜாஜி நடந்து கொண்டது காலத்தின் கட்டாயம். காங்கிரஸின் பலமே அந்தந்த மாநிலத் தலைமைகள் உள்ளூர் நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதில் இருந்தது. இந்திரா அவர்களோ தான் மட்டும் நாடு முழுதும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றத் தவறான எண்ணத்தால் காமராஜ் போன்றத் தலைவர்களை மட்டம் தட்டினார். அதன் பலனை காங்கிரஸ் இன்னும் அனுபவிக்கிறது. 1971 தேர்தலில் பிளவுபடாத காங்கிரஸ் இருந்திருந்தால் நிலைமையே வேறாயிருந்திருக்கும் ஆனால் நடந்ததை யார் இப்போது மாற்ற இயலும்?

ராஜாஜியிடம் வருவோம். 1972-ல் அவர் காலமானார். ஆனால் அவர் பொருளாதாரக் கொள்கைகள் இப்போதைய அரசால் ஏற்கப்பட்டு இந்தியா முன்னேற வழி செய்தன. சுதந்திரா கட்சி இவ்விஷயத்தில் கூறியதையே மன்மோஹன் சிங்கும் ப. சிதம்பரமும் செய்கின்றனர். அந்த வகையில் ராஜாஜி இன்னும் வாழ்கிறார். அது என்னைப் போன்ற அவர் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2005

ராஜாஜி என்னும் மாமனிதர் - 4

1954 - ல் முதலைமச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜாஜி அவர்கள் சில ஆண்டுகள் தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்விலிருந்தார். அவர் கவனம் இலக்கியத்துக்கு திரும்பியது. அடாடா என்ன பாக்கியம் அவர் வாசகர்களுக்கு. அப்போது எனக்கு 8 அல்லது 9 வயது. சிறுவர்களுக்கானக் கதைகளை அவர் வாரா வாரம் கல்கியில் எழுதுவது அவர் வழக்கம்.

வியாழக்கிழமை வந்தாலே எங்கள் வீட்டில் சண்டை எனக்கும் என் அக்காவுக்கும் தூள் பிறக்கும். கலகி பத்திரிகையை யார் முதலில் படிப்பது என்பதைப் பற்றித்தான் அது என்று கூறவும் வேண்டுமோ? வெள்ளிக்கிழமை சண்டை விகடனைப் பற்றியிருக்கும் ஆனால் அது வேறு கதை. பிறகு எழுதுகிறேன்.

அப்போது ராஜாஜி அவர்கள் "சக்கிரவர்த்தித் திருமகன்" என்றத் தலைப்பில் குழந்தைகளுக்காக ராமாயணக் கதை ஆரம்பித்தார். முதல் அத்தியாயம் "சந்தத்தைக் கண்டார்" என்றத் தலைப்பில். வால்மீகி அவர்கள் ராமகாதையை எழுதத் தூண்டிய நிகழ்ச்சியை அது விவரித்திருந்தது. இப்போது அதைத் திரும்பப் படித்தாலும் மெய் சிலிர்க்கும் எனக்கு. துணையிழந்த க்ரௌஞ்ச பட்சியின் சோகத்தால் பாதிக்கப்பட்டு வால்மீகி முனிவர் வேடனை சபிக்க, அச்சாபத்தின் வார்த்தைகள் ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து விட, வியாகூலத்தில் ஆழ்கிறார் மஹரிஷி. தேவ ரிஷி நாரதர் அவர் முன் தோன்றி அவர் செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிக் கூற நிகழ்ச்சிகள் விறுவிறுவென்று நகர்கின்றன. அடுத்த அத்தியாயத்திலிருந்து நாமாயணக் கதை ஆரம்பம். கதை கடகடவென்று நகர்கிறது. சொற்சிக்கனம் ராஜாஜி அவர்களின் சிறப்பு. விஸ்வாமித்திரர் அரசன் திரிசங்குவை சந்திக்கிறார். அவனோ வஷிஷ்டர் சாபத்தால் கோர உருபெற்றவன். இருந்தும் விஸ்வாமித்திரர் அவனை அடையாளம் கொண்டு கேட்கிறார்: "நீ அரசன் திரிசங்கு அல்லவா? என்ன நடந்தது? யார் சாபம்?" இதை விட சொற்சிக்கனம் செய்ய முடியுமா? இந்த நூலுக்காக அவருக்கு சாகித்திய அகாடெமி விருது கிடைத்து அது அவரால் பெருமை பெற்றது.

குழந்தைகளுக்கானக் கதைகள் தனி. ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவ்வாரத்துக் கதையை ராஜாஜி அவர்களே வானொலியில் வாசிப்பார். தெளிவான உச்சரிப்பு, அலட்டலில்லாத நடை. நான்தான் கல்கியில் வந்த உடனேயே படித்து விடுவேனே. இருப்பினும் அவர் வாயால் அதைக் கேட்பது நான் செய்த பாக்கியம். ஆனால் அச்சமயத்தில் இதையெல்லாம் நினைத்தவன் இல்லை நான். அவர் கதைகளைப் படிக்க எனக்கு பிடிக்கும். அவ்வளவுதான். அக்கதைகளில் பல இப்போதும் என் மனதில் நிலை கொண்டுள்ளன.

ஒரு அரண்மனை நந்தவனத்தில் இருந்த ஒரு துளசிச் செடியையும் ரோஜாச் செடியையும் பற்றி ஒரு கதை. ராஜாஜியின் கதைகளில் அச்சமயத்தில் கல்கியில் வந்த முதல் கதை. ரோஜா செடிக்குத் தன் பூக்களின் மணம் மற்ரும் அழகில் கர்வம். துளசிச் செடியைக் கேலி செய்கிறது. துளசிச் செடியை நோக்கி வருபவர் பெருமாள் கோவில் பட்டாச்சாரி ஒருவர்தான். ரோஜாவையோ எல்லோரும் நாடுவர். அதனால் அதற்குக் கர்வம். ஒரு நாள் 6 வயது ராஜகுமாரி ரோஜாவைப் பறிக்க முயல, அதன் முள் அவள் கையைக் குத்திக் காயப்படுத்தி விடுகிறது. ராஜா கோபம் கொண்டு செடியை வெட்டிப் போட்டு விடுகிறான். தன் தோழி வெட்டப்பட்டதற்கு துளசி அழுகிறது. அன்று கோவிலில் பட்டாச்சாரியாருக்கு ஒரே வியப்பு. ஏனெனில் துளசி மாலையில் ரோஜாவின் மணம்.

இன்னொரு கதையில் அனுமதியில்லாது கட்டப்பட்ட குடிசைகளை அரசு ஆணையின்படி பிய்த்து எறிகிறார்கள். அதைப் பார்த்தக் குழந்தைகள் அழுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அரசு சார்பில் குடிசைகளைப் பிய்த்து எறிந்த அரசு ஊழியன் கோவிலில் நின்று தன்னை மன்னிக்குமாறு தெய்வத்திடம் மன்றாடுகிறான். என்னை மிகவும் பாதித்தக் கதை இது.

இன்னொரு கதையில் ஒரே இறைவனை பல உருவங்களில் எவ்வாறு வழிபடுகிறார்கள் என்பதை ஒரு அணில் மற்றும் குருவியை வைத்து அழகான கற்பனையுடன் விளக்கியிருப்பார் ராஜாஜி அவர்கள்.

மொத்தமாகவே கதைப் புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர். தினம் பீச்சுக்கு விளையாடப் போவதாக வீட்டில் சாக்கு கூறி அங்கு மெரினா நீச்சல் குளத்தருகில் இருந்த நூலகத்தில் பொழுதைக் கழிப்பதே என் வாடிக்கை. ஆகவே ராஜாஜியையையும் விரும்பிப் படித்தேன் என்றுதான் கூற வேண்டும்.

மற்றப்படி அவர் ரேஷன் முறையை ஒழித்து, இந்தியாவுக்கே முன் உதாரணமாக இருந்தவர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் அறிந்தவனில்லை. இந்த நிலைமை நீடித்தது 1959-ல் அவர் சுதந்திரா கட்சியை நிறுவியது வரை. அப்போது எனக்கு வயது 13. அது பற்றி அடுத்தப் பதிவில் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/18/2005

இன்னும் கேள்விகளா

"இன்னும் கேள்விகளா, அடப்பாவிகளா" என்று நம்பியாரை மிமிக் செய்யும் விவேக் ரேஞ்சுக்கு கத்தத் தோன்றலாம். விடைகளை அளித்து விட்டு கத்துங்களேன்.

1. தில்லியிலிருந்து ஜெயப்பூர் செல்லும் நெடுஞ்சாலை. குர்காம் தாண்டியவுடன் ஒரு ரௌண்ட் டாணா வரும். அதிலிருந்து 4-க்கும் மேல் பாதைகள் பிரியும். ஒரு பாதை மூலம் ஆள்வார் செல்லலாம், இன்னொரு பாதை மூலம் பரீதாபாத், இன்னொரு பாதை ஜெயப்பூருக்கு இட்டுச் செல்லும், இத்யாதி இத்யாதி. ஒரே ஒரு கைகாட்டி மரம் எல்லா பாதைகளையும் கவர் செய்யும். நேரம் இரவு 12 மணி. ரோட்டில் ஈ காக்காய் இல்லை. அன்று மாலை அடித்தப் பேய்க்காற்றில் கைகாட்டி மரம் கீழே விழுந்திருக்கிறது. தில்லியிலிருந்து வந்த மாருதிகார் ஓட்டுனர் அந்த இடத்தில் திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்கிறார். வண்டியின் உள்ளே சிடுமூஞ்சி முதலாளி. ஜெயப்பூருக்கு உடனே செல்ல வேண்டும். இப்போது ஓட்டுனர் வழியை எப்படிக் கண்டுபிடிப்பார்? அவர் அந்த ஏரியாவுக்குப் புதிது, சுற்றிலும் உதவிக்கு யாரும் இல்லை வழி சொல்ல. முதலாளிக்கும் ஒன்றும் தெரியாது.

2. ஒரு குடியிருப்புக் காலனி, 500 வீடுகள் கொண்டது. கட்டி முடிக்கும் தருவாயில்தான் முக்கியமானப் பொருள் ஒன்று வாங்கவில்லை என்று தெரிந்தது. அப்பொருளின் விலை பின் வருமாறு. ஒன்றுக்கு ஐந்து ரூபாய், பத்துக்கு இருவது ரூபாய், 100க்கு முப்பது ரூபாய், 500-க்கும் முப்பது ரூபாய்தான். அது என்னப் பொருள்?

3. சோமுவுக்கு காலை 5 மணிக்கு வண்டி பிடிக்க வேண்டும். அதற்கு அவன் வீட்டிலிருந்து விடியற்காலை மூன்று மணிக்கே கிளம்ப வேண்டும். அலாரம் 2.30-க்கு வைத்து விட்டு தூங்குகிறான். திடீரென 1 மணி வாக்கில் மின் வெட்டு. விழித்துப் பார்த்தால் கடிகாரம் ஓடவில்லை. ஒரே எரிச்சல். எப்போதிலிருந்து ஓடவில்லை என்பது தெரியவில்லை. வேறு கடிகாரமும் இல்லை. ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவும் இல்லை. மணி எப்படிக் கண்டு பிடிப்பது? இம்மாதிரி ஒரு பிரச்சினையை சஞ்ஜீவ்குமார் நடித்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். இது க்ளூ.

4. ஜெர்மன் பேப்பரில் வந்த செய்தி. "100,000 கிலோகிராம் எடையை சாம்பியன் தூக்கினார்." யார் இந்த சூப்பர் மேன்?

5. தில்லியிலிருந்து 10 மணி காலை ஆக்ராவை நோக்கி ஒரு ரயில் புறப்படுகிறது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது. அதே 10 மணி காலை ஆக்ராவிலிருந்து ஒரு ரயில் புறப்பட்டு தில்லியை நோக்கி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது. இரண்டு ரயில்களும் ஒன்றையொன்று கடக்கையில் எந்த ரயில் தில்லிக்கு அதிக சமீபத்தில் இருக்கும்?

6. நாட்டின் எல்லைக்கோடு தெற்கு வடக்காக உள்ளது. அங்கு காவலுக்கு இருவர். ஒருவர் தெற்கை நோக்கி, இன்னொருவர் வடக்கை நோக்கி. அதில் ஒருவன் இன்னொருவனைக் கேட்கிறான், "என்ன இளிப்பு வேண்டியிருக்கிறது" என்று. வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தவன் எப்படி இதைக் கண்டுபிடித்தான்?

7. பாரீஸில் ஒருவன் மனைவிக்கு பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவன் குடும்பத்திலோ அல்லது அவன் மனைவியின் குடும்பத்திலோ இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக சரித்திரமே இல்லை. டாக்டரிடம் கேட்க அவர் கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்துக்கொண்டே கூறினார், "இதோ பாரப்பா, உன் மனைவியின் இரட்டைக் குழந்தை பிரசவத்துக்கு இரு காரணிகள் பொறுப்பு" எனக் கூற, அவன் ஒன்றும் பேசாமல் தன் பக்கத்து வீட்டிலிருக்கும் இரு சகோதரர்களை செவுளில் அறைந்தான். ஏன்?
க்ளூ: இதற்கு விடை ஸ்ரீரங்கன், ரோஸா வசந்த், காஞ்சி பிலிம்ஸ், மஸ்ட் டூ அல்லது ரவியா போன்றவர்தான் விடையளிக்க முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன் .

8/17/2005

ஒரு கேள்விக்கு எத்தனை பதில்கள்

ஒரு கேள்விக்கு விஞ்ஞானத்தில் பல பதில்கள் உண்டு.

பௌதிக ஆசிரியர் ராமனுக்கு தன் மாணவன் ஒருவன் பரீட்சையில் கேள்வி ஒன்றுக்கு கொடுத்த பதிலில் திருப்தியில்லை. ஆகவே அவர் அப்பதிலுக்கு பூஜ்யம் மதிப்பெண் அளித்தார். பிள்ளையாண்டான் ஒத்துக் கொள்ளவில்லை. தன் பதிலுக்கு முழு மார்க் கொடுக்க வேண்டும் என்றான். கல்லூரி முதல்வரிடம் கேஸ் சென்றது.

தேர்வில் கேட்கப்பட்டக் கேள்வி பின்வருமாறு: "ஒரு கட்டிடத்தின் உயரத்தை காற்றழுத்தமானியின் உதவியுடன் கண்டுபிடிப்பது எங்கனம்?"

பிள்ளையாண்டான் கொடுத்த விடை: "காற்றழுத்தமானியை கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு கொண்டு செல். அதன் ஒரு முனையில் பெரிய கயிற்றைக் கட்டி தரை வரை கயிற்றை விடு. காற்றழுத்தமானி தரையைத் தொட்டதும் கயிற்றில் சரியான இடத்தில் குறியிட்டு காற்றழுத்தமானியை உன்னிடம் இழுத்துக் கொள். கயிற்றின் நீளம் மற்றும் காற்றழுத்தமானியின் நீளத்தை கூட்டினால் கட்டிடத்தின் உயரம் கிடைக்கும்."

கல்லூரி முதல்வர் தலை சுற்றியது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு மாணவனிடம் கூறினார்: "ஆனால் இதில் பௌதிக விதிகள் எதுவும் சம்பந்தப்படவில்லை. அவை பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்பது ஊர்ஜிதம் ஆகவில்லை. ஆகவே இன்னொரு வாய்ப்பைத் தருகிறேன். நான் கூறியது போல ஏதேனும் பௌதிக விதிகளைச் சம்பந்தப்படுத்தி விடை கூறு."

மாணவனுக்கு ஆறு நிமிடங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் வரை மாணவன் ஒன்றும் எழுதாமல் யோசித்துக் கொண்டிருந்தான். "என்ன முடியவில்லையா" என்று முதல்வர் கேட்க, "இல்லை ஐயா, இக்கேள்விக்கு பல விடைகள் உள்ளன. எதை எழுதுவது என்று யோசித்தேன்" எனக் கூறினான். பிறகு வேகமாக விடையை எழுதினான். அவன் இப்போது அளித்த விடை:

காற்றழுத்தமானியை கட்டிடத்தின் மேல் மாடிக்கு கொண்டு செல். மேலேயிருந்து அதைக் கீழே போடு. ஸ்டாப் வாட்ச் துணையுடன் அது தரையைத் தொடும் நேரத்தை அள. பிறகு S=0.5at2, என்ற விதியின்படி கட்டிடத்தின் உயரத்தை அள. இப்போது ராமனை நோக்கி முதல்வர் "திருப்தியா" என்று கேட்டார், ராமன் கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டு மாணவனுக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண்கள் கொடுத்தார்.

ஆனால் இன்னும் பல விடைகள் இருப்பதாக மாணவன் கூறியது நினைவுக்கு வர முதல்வர் அவனை அவற்றையும் கூறுமாறு கேட்டார்.

"ஓக்கே, காற்றழுத்தமானியை சூரிய வெளிச்சத்துக்கு கொண்டு செல்லவும். அதன் நிழல் மற்றும் கட்டிடத்தின் நிழலின் நீளங்களை அளக்கவும். காற்றழுத்தமானியின் நீளத்தையும் அளக்கவும். விகித முறைப்படி கட்டிடத்தின் உயரத்தை அளக்க இயலும். அது வேண்டாமா, இன்னொரு முறை இருக்கிறது. காற்றழுத்தமானியைக் கையில் எடுத்துக்கொண்டு படிகளில் ஏறவும். அதை பக்கத்து சுவற்றில் வைத்து மார்க் செய்துக் கொண்டே போகவும். முழு உயரத்தில் எத்தனை முறை மார்க் செய்கிறாயோ அதைக் காற்றழுத்தமானியின் நீளத்தால் பெருக்கவும். கட்டிடத்தின் உயரம் கிடைக்கும்"

"வேறொரு நாசுக்கான முறை வேண்டுமா, காற்றழுத்தமானியை ஒரு நூல் கயிற்றின் முனையில் கட்டி தனி ஊசல் போல ஆட்டவும், 'g.' எனப்படும் ஈர்ப்பு முடுக்கத்தைக் கண்டுபிடித்து அதன் மூலம் கட்டிடத்தின் உயரத்தை அளக்கலாம்."

"பௌதிக விதிகளுக்கு என்னைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், கீழ்த்தளத்தில் உள்ள கட்டிட மேற்பாளருக்கு காற்றழுத்தமானியை அன்பளிப்பாகக் கொடுத்து கட்டிடத்தின் உயரத்தை அவர் கூறக் குறித்துக் கொள்ளுவேன்."

"கடைசியாக இருக்கவே இருக்கிறது, நீங்கள் எதிர்பார்க்கும் விடை. காற்றழுத்தமானியின் உதவியால் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும் காற்றழுத்தத்தைக் கண்டு பிடித்து காற்றழுத்தங்களின் வித்தியாசத்தை வைத்தும் கட்டிடத்தின் உயரம் கண்டு பிடிக்க இயலும். நினைக்கும் சுதந்திரம் அளிக்காத இந்த கல்வி முறையின் மேல் எனக்கு வந்த கோபமே நான் இவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம்."

அது இருக்கட்டும். கட்டிடத்தின் உயரத்தை காற்றழுத்தமானியை வைத்து அளக்க இன்னும் எதாவது உபாயம் உண்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/16/2005

மேலும் கேள்விகள்

இன்னும் சில கேள்விகளைப் பார்ப்போமா?

1. கீழ்க்கண்ட இரண்டு வாக்கியங்களைப் பார்த்து கடைசி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும்.
பாபர் அக்பரின் தந்தையின் தந்தை
ஹுமாயூன் ஜெஹாங்கீரின் தந்தையின் தந்தை.
ஹுமாயூன் அக்பரின் தந்தையின் ............

2. ஒருவன் முதுகில் சுமையுடன் மைதானத்தை நோக்கி வருகின்றான். மைதானத்தை நெருங்கும்போது தான் இறப்பது உறுதி என்பது அவனுக்குத் தெரிந்து விடுகிறது. எப்படி?

3. ஒருவன் பூங்காவில் உட்கார்ந்து பேப்பர் படிக்கிறான். கப்பலிலிருந்து கடலில் தவறி விழுந்து பெண் மரணம் என்ற செய்தியைப் பார்த்ததும் இது அப்பேண்ணின் கணவனால் நிகழ்த்தப்பட்டக் கொலை என்று புரிந்து கொள்கிறான். பூங்காவில் இருப்பவன் யார், அவனுக்கு எப்படி இது தெரிந்தது? இது நிஜமாக நடந்த செய்தி என்று என் ஷட்டகர் சௌந்திரராஜன் சத்தியம் செய்து கூறினார்.

4. ஒரு பையன் 10 விடைகளில் ஒன்பது விடை சரியாக எழுதியிருப்பினும் அவன் பெயில் என்று ஆசிரியர் தீர்மானிக்கிறார். தட்டிக்கேட்ட அவன் அன்னையிடம் அவர் அவள் மகன் பக்கத்துப் பையனைப் பார்த்து காப்பியடித்ததாலேயே அந்த நிலை என்று கூறுகிறார். சரியாக இருந்த ஒன்பது கேள்விகளின் பதில்களும் எழுத்துக்கெழுத்து பக்கத்துப் பையனின் பதில்களிலுடன் ஒன்றாக ஒத்துப்போயின என்றும் அவர் கூறினார். "ஏன், பக்கத்துப் பையன் காப்பியடித்திருக்கக்கூடாதா" என்று அன்னை கேட்டதற்கு ஆசிரியர் தெளிவான பதிலைக் கூறி அப்பெண்மணியை பேச்சிழக்கச் செய்கிறார். அவர் என்ன கூறியிருப்பார்? பரீட்சை பேப்பரைத் திருத்தும் வரை அவருக்கு அப்பையன்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆகவே யார் புத்திசாலி என்பது அவருக்குத் தெரியும் என்பதெல்லாம் பதிலாக முடியாது.

5. ஒரு காலத்தில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி நோக்கி வந்தால் பல சினிமா தியேட்டர்கள் வரும். உதாரணம்: அண்ணா, சாந்தி, தேவி, ப்ளாசா, அலங்கார், ஆனந்த், சபையர். ஆனால் என் நண்பன் ஸ்ரீனிவாச தேசிகன் கூறினான்:
"1983 ஜனவரி ஒன்றாம் தேதி நான் அண்ணா சிலையிலிருந்து ஜெமினி வரை நடந்து சென்றேன். ஆனால் ஒரு தியேட்டரையும் கடந்து செல்லவில்லை".
இது எவ்வாறு சாத்தியம்?

6. பறவைகளைப் பார்க்கும் விருப்பமுடைய ஒருவர் ஒரு அபூர்வப் பறவையை சந்திக்கிறார். சிறிது நேரத்தில் இறக்கிறார். என்ன நடந்தது? இது ஒரு உண்மை நிகழ்ச்சி.

7. ஒரு லாரி ஓட்டுனர் ஒருவழிப் பாதை ஒன்றில் தவறான திசையில் சென்றார். ஆனால் அவரை போலீஸ் பிடிக்கவில்லை. ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/12/2005

என் கேள்விக்கென்ன பதில்

நான் கேள்வி கேட்டு ரொம்ப நாளாயிற்று. சில கேள்விகளூக்கு பதில் அளிக்க முயலுங்களேன்.

1. இருவர் பாருக்கு செல்கின்றனர். ஸ்காச் ஆன் தெ ராக்ஸ் ஆர்டர் செய்கின்றனர். அவர்களுக்குத் தெரியாமல் இரு கோப்பைகளிலும் விஷம் ஒரே அளவு கலக்கப்பட்டுள்ளது. ஒருவன் மடமடவென்று குடித்து விடுகிறான். இன்னொருவன் நிதானமாக உறிஞ்சிக் குடிக்கிறான். முதலாமவன் உயிர் பிழைக்கிறான். இரண்டாமவன் இறக்கிறான். என்ன நடந்தது?

2. வெள்ளை நிற மாருதி கார்கள் மற்ற நிறக் கார்களை விட குறைவாகவே பெட்ரோல் உபயோகிக்கின்றன. ஏன்?

3. 854917632. இந்த எண்ணின் விசேஷம் என்ன?

4. என்னிடம் இரண்டு நோட்டுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூபாய் 55. ஆனால் அதில் ஒன்று ஐந்து ரூபாய் இல்லை. விளக்குக.

5. ஒரு பெண்மணி ஷாப்பிங்கிலிருந்து கை நிறைய பைகளுடன் வீடு திரும்புகிறார், வாசலில் இருக்கும் தபால் பெட்டியிலிருந்து கடிதங்களை சேகரிக்கிறார், வீட்டிற்குள் நுழைகிறார். சமையல் அறைக்கு செல்லும் வழியில் ஹாலில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்த தன் கணவனை பார்த்தபடியே குளிர்சாதனப் பெட்டியில் கறிகாய்களை அடுக்கி விட்டு தன் மற்ற வேலைகளை கவனிக்கிறார். என்ன நடக்கிறது இங்கே?

6. தன் சகோதரிதான் தன் கணவனை சுட்டுக்கொன்றாள் என்பதை நீதிமன்றத்தில் நிருபித்தாள் ஒரு பெண். இருப்பினும் நீதிபதி அச்சகோதரியைத் தண்டிப்பதற்கில்லை என்று கூறி விடுகிறார். என்ன விஷயம்?

இன்னும் பிறாண்டுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/08/2005

தமிழகப் பள்ளிகளில் தமிழின் நிலை

ராமதாஸ், அன்புமணி, கருணாநிதி ஆகியோரை சிறிது நேரத்துக்கு மறப்போம். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.

முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.

இன்னுமொரு காரணம் மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.

இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.

தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.

மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.

இப்போது என் மனதுக்கு தோன்றியதை எழுதி விட்டேன். பின்னால் வேறு விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தால் அவற்றையும் எழுதுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/04/2005

மாடர்ன்கேர்ளுக்கு ஒரு கேள்வி

மாடர்ன் கேர்ள் படத்துடன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். பார்க்க: http://moderngirl83.blogspot.com/2005/08/blog-post.html
அதில் அவர் எழுதியிருப்பது படத்துடன் கீழே:
வாந்தி எடுப்பது என்பது ஒருவரின் தவறு கிடையாது. அது ஒரு இயலாமை தான்.
வாந்தி எடுப்பது என்பது ஒருவரின் தவறு கிடையாது. அது ஒரு இயலாமை தான்.= என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்களை பற்றி (290) : டோண்டு

வேறு ஒரு விவரமும் இல்லை.

அப்பதிவில் பின்னூட்டம் இடவும் வழியில்லை. அவருக்கு தனி மின்னஞ்சல் அனுப்பினால் அதுவும் திரும்ப வந்து விட்டது, அந்தப் பெயரில் யாகூ மெயில் ஐ.டி.யே கிடையாது என்ற குறிப்புடன்.

ஆகவே நான் இப்பதிவை போட்டேன்.

மாடர்ன் கேர்ள் என்ன கூற விரும்புகிறார்? உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரத்தில் அவருடைய அப்பதிவுக்கு பின்னூட்டம் இட விரும்புவர்கள் இங்கு இடலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/02/2005

தில்லி தமிழ் கல்விக் கழகம்

1923 வருடம் ஆரம்பிக்கப் பட்டது தில்லி மந்திர் மார்க்கில் ஒரு D.T.E.A. தமிழ் பள்ளி. நாளாவட்டத்தில் த்ல்லியின் வெவ்வேறு பகுதிகளில் இதே தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் கீழ் பல பள்ளிகள் திறக்கப் பட்டன.

82 வருடங்கள் கழித்து நிலை என்ன? இப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தமிழர் அல்லாதோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம். அதிலும் நான்காம் வகுப்பு வரை தம்ழிலேயே எல்லா பாடங்களும் கற்பிக்கப் படுகின்றன. ஆகவே அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆறாம் வகுப்பிலிருந்து சேர்த்து வருகின்றனர்.

D.T.E.A. பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை இதோ:

"DTEA schools, or Madrasi schools as they are popularly known in Delhi, have had a presence of their own in the national capital. For the vast colonies of Tamilies, the network of schools under the DTEA have been a lifeline institution in the capital, serving the cause of good education at reasonable cost for almost eight decades now.

These schools had provided quality education to countless number of south Indians in Delhi, particularly Tamilians, and given them the necessary early educational base for greater efforts for realising their true potential, which many have fulfilled and carved a name for themselves.

Over the years, given its record of performance in the Board exams, it has attracted students from other communities as well, particularly at the high-school stage when Tamil is not a compulsory subject. A big contribution of the schools has been in its making education accessible to pupils from the poorer sections of the community.

As the schools enter their eightieth year of existence in the capital, they have produced countless number of illustrious careers, including those in civil services, business, medicine, science and research, art and other professions. Of particular recent interest is the election of Hema Malini, a well known danseuse and film personality, to the Rajya Sabha. She passed out of the Mandir Marg branch of DTEA school in 1965. She is not the first DTEA alumnus to enter Parliament. We have had Sharath Kumar, another film personality, before.

To name some leading lights from the DTEA schools: Padmashri 2003 awardee, Mr. M. Natarajan, the brain behind the main battle tank, the first woman air vice marshal in the world Ms. Padmavathy Bandopadhyaya, the tennis ace Ramanathan Krishnan, the top computer scientist Padma Bhushan Prof. V. Rajaraman, the CEO of the top ranking software company TCS, Mr. S. Ramadorai, the former director of the Terminal Ballistics Research Laboratory, Dr. M. Balakrishnan, the well known theoretical physicists of the country, Prof. R. Rajaraman of JNU, Prof. R. Ramachandran, former director of Institute of Mathematical Sciences, Chennai, Prof. H. S. Mani, former director of the Harish Chandra Research Institute, Allahabad, Dr. V. Siddhartha of DRDO, Dr. Ganesh K. Mani, a Cardiac Surgeon of the country, Dr. Ashok Rajgopal, a top orthopaedic surgeon of the country, Mr. N. R. Krishnan, former environment secretary, Mr. S. Lakshminarayanan, additional secretary, ministry of communications, Lt. Gen. S. R. R. Iyengar, former director of National Defence College, former special commissioner (intelligence) and present DG Home Guards, Mr. S. Ramakrishnan, T. R. Gopalakrishnan, editor The Week, T. R. Ramachandran, Editor, R. Badrinath UNCTAD, classical vocalist O. S. Arun, classical violinists Kumaresh and Ganesh, famous Tamil film music director Ramani Bharadwaj, Mr. Santhanam, the personal secretary to Mahatma Gandhi, R Ramachandran science correspondent Frontline, who has been one of the prime movers in reviving the alumni."

பார்க்க: http://timesofindia.indiatimes.com/articleshow/282187.cms

விட்டுப்போன பெயர்கள் சில: மோஹன் வைத்யா, ராஜேஷ் வைத்யா, அமைச்சர் சி.சுப்ரமண்யம் வீட்டு குழந்தைகள், எழுத்தாளர் இ.பா. வீட்டு குழந்தைகள், அமைச்சர் அருணாசலம் வீட்டு குழந்தைகள் ஆகியோர். அமைச்சர் அன்பு மணி அவர்களின் குழந்தைகள் லோதி எஸ்டேட் பள்ளியில் தமிழ் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படிக்கின்றனராம்.

நம் பதிவாளர்களில் யாராவது இப்பள்ளிகளில் படித்திருந்தால் பின்னூட்டமிடுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/01/2005

நபியில்லாமல் டோண்டு இல்லை

சமீபத்தில் 1998-ல் தில்லியில் வைத்து எனக்கு ஒரு பெரிய பிரச்சினை. வருமானவரி கணக்கு கொடுக்க வேண்டும். அதற்கான படிவத்தைப் பார்த்தால் தலை சுற்றியது. என்னென்னவோ sections, sub-sections என்றெல்லாம் ஒரே கலாட்டா. என் பக்கத்து கட்டிடத்தில் இருந்த ஆடிட்டர் ஒருவரிடம் இம்மாதிரி சட்டப் பிரிவுகள் என்னைக் குழப்புகின்றன என்று மூக்கால் அழ அவர் என்னிடம் நக்கலாக கூறினார், "அதற்குத்தான் நாங்கள் ஆடிட்டர்கள் இருக்கின்றோம், நாங்கள் பிழைக்க வேண்டாமா" என்று.

அப்போதுதான் என் இன்னோரு அண்டை வீட்டுக்காரரான ஹமீது கூறினார், "நீங்கள் நபியிடம் பாரத்தைப் போடுங்கள்" என்று. பிறகு அவரே என்னை அன்புடன் தில்லி கனாட் ப்ளேசில் உள்ள ஜெயின் புத்தகக் கடைக்கு அழைத்து சென்று அங்கிருந்து "Nabhi's Income Tax, Guidelines & Mini Ready Reckoner" வாங்கிக் கொடுத்தார்.

அடாடா என்ன எளிமையாக அதில் விளக்கங்கள் கிடைத்தன! எல்லா sections- ம் தங்கள் பயமுறுத்தும் தன்மையை விட்டு எனக்கு தோழர்களாக மாறின. அதை வைத்து கொண்டு மிகச் சுலபமாக ரிடர்ன் சமர்ப்பிக்க முடிந்தது.

வருடம் 2002. இப்போது நான் சென்னையில். நபிக்காக கடை கடையாக ஏறினேன். வேறு யார் பெயரெல்லாமோ சொன்னார்கள். எனக்கு திருப்தியில்லை. நபிதான் வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தேன். பிறகு சீதாராமன் கடையில் நபி கிடைக்கப் பெற்றேன்.

இப்போது? ஒரு பிரச்சினையும் இல்லை. நபி இருக்கும்போது என்னக் கவலை? ஆக, நபி இல்லாமல் டோண்டு இல்லை என்பது சரிதானே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது