12/31/2007

பாகிஸ்தான் கிளறிய மேலும் சில எண்ணங்கள்

எனது முந்தைய பதிவு பாகிஸ்தான் பற்றிய வேறு சில எண்ணங்களுக்கு வழிவகுத்தது.

உதாரணத்துக்கு நான் எழுதிய இந்த நீதிக்கதை பாகிஸ்தானில் முடிவடைகிறது. சரி, சரி அந்தக் கதை சற்று டூ மச் என்றுதான் இப்போது எனக்கும் தோன்றுகிறது. முரளி மனோஹரும் அதைத்தான் பலமுறை சொன்னான். :))))))))))

என் தந்தையின் சக நிருபர் ராமச்சந்திரன் அவர்கள் சில காலம் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். பிறகு ஹிந்துவில் கல்கத்தா நிருபராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு முறை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஃபீல்ட் மார்ஷல் அயூப்கானை பேட்டி எடுக்க சமீபத்தில் அறுபதுகளில் சென்றுள்ளார். கூடவே வேறு பத்திரிகை நிருபர்கள் கூட. திடீரென அவர் ராமசந்திரன் அவர்களைப் பார்த்து "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே" எனக் கேட்க அவர் தான் அயூப் கான் கீழே பணி புரிந்திருப்பதை கூறியுள்ளார். அவ்வளவுதான் உடனே பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் அயூப்கான். பிறகு ராமச்சந்திரன் அவர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு தந்து, அவ்வாறு வந்தவரை தனது விருந்தோம்பலில் திக்குமுக்காட வைத்து விட்டார். அரசு விருந்தினராக அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் எங்கே வேண்டுமானாலும் பாகிஸ்தானில் பயணிக்கலாம் என்று கூறி சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அவருக்கு ஒத்துழைப்பு தர ஆணை பிறப்பியுள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நான் தில்லியில் இருந்தபோது காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா அவர்களைப் பற்றிய படம் வெளிவந்தது. காந்தி படத்தை பார்த்த எனக்கு அதையும் பார்க்கும் ஆவல் வந்தது. ஆகவே பாகிஸ்தான் ஹைகமிஷனின் கலாச்சார அதிகாரிக்கு ஃபோன் போட்டு அப்படம் ஹைகமிஷனால் தில்லியில் திரையிடப்படுமா என ஆவலுடன் கேட்டேன். மிகவும் கனிவான முறையிலேயே பதில் வந்தது. அவ்வாறு உத்தேசம் அப்போதைக்கு இல்லல என்றும், அப்படியே வந்தால் எனக்கு கண்டிப்பாக அழைப்பு அனுப்புவதாகவும் அவர் கூறினார். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றதும் வணக்கம் என்று தமிழில் வேறு கூறினார்.

கம்யூனிஸ்ட் எம்.பி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.

வருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் "என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே" என்று கேட்டாரே பார்க்கலாம்!

பிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார். ராமமூர்த்தி அவர்களும் திருவல்லிக்கேணியுடன் சம்பந்தம் உடையவர். திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா? சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா ஷஹி அல்லது ஆகா இலாஹி.

நான் ஏற்கனவே கூறியபடி பாக் டி.வி. நாடகங்கள் அருமையாகவே இருக்கும். உருது மொழியில் அவை இருப்பது மேலதிக போனஸ். தென்னிந்தியர்களுக்கு அதிகப் பாந்தமாகவும் இருக்கும், ஏனெனில் முறைப்பெண், முறை மாப்பிள்ளை கதைகள் அங்கும் அதிகம். வட இந்தியாவில் உறவு முறை திருமமணங்கள் இந்து லா பிரகாரம் தடை செய்யப்பட்டவை. அஞ்சும் மூணும் எட்டு அத்தை மகளை கட்டு என்றெல்லாம் சொன்னால் முட்டியைப் பேர்த்து விடுவார்கள். கணவனை மாமா என்று அழைத்தால் அவர்களுக்கு இதயமே நின்று விடும்.

Sardar Farooq Ahmad Khan Leghari (Urdu: سردار فاروق احمد خان لغاری) அவர்கள் பாகிஸ்தானின் அதிபராக தொண்ணூறுகளில் இருந்துள்ளார். அவர் ஒரு முறை அபத்தமாக என் கனவில் வந்தார். அவரிடம் சுத்த உருதுவில் கதைத்தேன். பாக் டி.வி. சீரியல்களை பற்றி பேச நான் ஆரம்பித்ததுமே அவை போர் என்று கலங்கினார் அவர். நான் விடவில்லையே. டைட்டில்ஸ்கள் போடும்போது உருது லிபியில் போடுவதுடன்கூடவே தேவ நாகரி லிபியிலும் போட்டால் என்னைப் போன்ற உருது தெரிந்த, ஆனல் உருதுவை தேவநாகரியில் மட்டும் படிக்க முடிந்த இந்தியர்களும் பயன் பெறுவார்களே என்று மேலும் ஆர்க்யூ செய்தேன். ஹிந்தி திரப்படங்களில் டைட்டில்களை ஆங்கிலம், தேவநாகரி மற்றும் உருதுவில் போடுவதையும் சுட்டிக்காட்டினேன். மனிதர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை. ரொம்பவும் போர் அடித்து விட்டேன் போலிருக்கிறது. கனவு வந்த சில நாட்களிலேயே அவர் அதிபர் பதவியை விட்டுவிட்டார். :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/30/2007

ஒரு பாகிஸ்தானியருடன் சந்திப்பும் அதன் விளைவாக சில எண்ணங்களும்

சமீபத்தில் 1980-ல் ஒரு நாள் சென்னை ஈகா தியேட்டருக்கு சென்றிருந்தேன், அட்வான்ஸ் புக்கிங்கிற்காக. அடுத்த நாள் மாலை காட்சிக்கு புக் செய்து விட்டு கவுண்டரிலிருந்து திரும்பும்போது சென்றபோது ஒரு வாலிபர் என்னிடம் வந்து நான் ஹிந்தி பேசுவேனா என்று உருதுவில் கேட்டார். ஆம் என்று உருதுவிலேயே பதிலளிக்க அவருக்கு ஒரே சந்தோஷம். அவர் பெயர் அப்துல் வஹாப். அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவுக்கு லக்னோவுக்கு வந்திருக்கிறார். அப்படியே போலீஸ் அனுமதி பெற்று தென் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார். அடுத்த நாள் காலை அவர் கிளம்ப வேண்டும் என்று போலீஸில் கூறிவிட்டார்கள் ஏனெனில் சென்னையில் இருப்பதற்கு அவரது அனுமதி அப்போது முடிவடைகிறது. அது தெரியாது அவர் அடுத்த நாள் மாலை ஈகாவில் ஹிந்தி படம் பார்க்க புக் செய்திருக்கிறார். அவருக்கு பிடித்த அமிதாப் பச்சனின் படம் அது (கூன் பஸீனா).

டிக்கட்டை கவுண்டரில் கொடுத்து பணம் பெற முயன்றபோது தியேட்டர்காரர்கள் மறுத்து விட்டனர். வேண்டுமானால் புக்கிங் செய்ய வருபவர்களிடம் விற்று கொள்ளுங்கள் என கூறிவிட்டிருக்கின்றனர். அதனால் என்னை உதவி செய்யுமாறு கேட்க நானும் சரி என்றேன். அந்த சாக்கில் தேனினும் இனிய உருது மொழியில் பேச வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற ஆசையே காரணம். உருது மொழியில் பேசும் வாய்ப்பை இழப்பதே இல்லை என்பதை இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன். :))))))))))

சரி என்று இருவரும் கவுண்டர் அருகிலேயே நின்றோம். ஒருவர் வேகமாக வந்தார். அவரிடம் எந்த ஷோவுக்கு அவர் புக் செய்யப் போகிறார் எனக் கேட்க அவர் சொன்ன பதில் எங்களுக்கு சாதகமாகவே இருந்தது. அவரிடம் இந்த டிக்கெட்டை எடுத்துக் கொள்ளும்படி நான் கூற அவர் இரண்டு ஆட்சேபணைகளை வைத்தார். முதலாவதாக அவருக்கு டிக்கெட் செல்லுமா என்ற சந்தேகம், இரண்டாவதாக அவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் தேவைப் பட்டன அதுவும் அருகருகே உள்ள சீட்டுகளில். ஆனால் நான் விடவில்லை. அப்துலின் டிக்கெட்டைக் கையில் வைத்து கொண்டு புதிதாக வந்தவருடன் கவுண்டருக்கு சென்று முதலில் டிக்கெட் செல்லுமா என கேட்டேன். செல்லும் என பதில் வந்ததும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சீட்டுக்கு அருகே உள்ள சீட் காலியாக உள்ளதா எனக் கேட்க அதுவும் இருக்கிறது எனக்கூற அதை புதியவருக்கு ஒதுக்கச் செய்து ஒரு டிக்கட் அவருக்கு தரச் சொன்னேன். இன்னொரு டிக்கெட் அப்துலுடைய டிக்கெட். அவர் அப்துலிடம் டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு சென்றார். அப்துலுக்கு ரொம்ப சந்தோஷம்.

என்னுடன் பேசிக் கொண்டே வெளியில் வந்தார். நானும் பேசிக்கொண்டே அவருடன் சேன்றேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம். பாகிஸ்தானில் அவர் ஒரு கேரேஜ் வைத்திருக்கிறார். ஒரு சர்தார்ஜி நடத்தும் லஸ்ஸி கடைக்கு அழைத்து சென்றார். லஸ்ஸிக்கு நான் பணம் கொடுக்க முயற்சித்தபோது அவர் என்னை விடவில்லை. பாகிஸ்தானியருக்கே உரித்தான விருந்தோம்பல் அவரிடம் அதிகமாகவே காணப்பட்டது.

நான் ஏற்கனவே சொன்னது போல அவர் அமிதாப்பின் வெறிபிடித்த விசிறி. அவரை இமிடேட் செய்து நடிக்கும் பாகிஸ்தான் நடிகர் ஒருவர் அமீதாப்பின் அருகே கூட வரமுடியாது என்பது அவரது துணிபு. பாகிஸ்தானில் தினசரி வாழ்க்கை பற்றி கேட்டபோது, பாகிஸ்தானில் வாழ்வது நரகம் போல இருக்கிறது என்றார். அவ்வளவு தூரம் ஜியா உல் ஹக் மீது வெறுப்பு. அவர் புட்டோ கட்சி ஆதரவாளர். ஆகவே நான் அதற்கு முந்தைய வருடம் தூக்கிலிடப்பட்ட புட்டோவை பற்றி கேட்டபோது புட்டோ சாஹேப் கொல்லப்பட்டது பாகிஸ்தானின் பெரிய துரதிர்ஷ்டம் எனக் கூறினார். இந்தியாவில் அவருக்கு பிடித்ததே இங்குள்ள ஜனநாயகம் என்றும் கூறினார். பிறகு என்னிடம் பிரியாவிடை பெற்று தான் தங்கியிருந்த இடத்துக்கு சென்றார்.

இப்போது அதைப் பற்றி நினைக்கும்போது பல எண்ணங்கள் எனக்குள் எழுகின்றன. நேரில் பார்த்து பேசும்போது அவருக்கும் எனக்கும் இடையே ஒரு வேற்றுமையும் தெரியவில்லை. மேலும், நான் பார்த்த பாகிஸ்தானி சீரியல்கள் தமிழனான எனக்கு அதிகப் பாந்தமாகவே இருந்தன. ஒரு தடவை ஜீ.டி. ரோடில் என்னுடைய காரில் சென்று வாகா பார்டர் வழியாக பாகிஸ்தான் செல்ல ஆசை. முடியுமா என்று பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/28/2007

மனம் நிறையச் செய்த மோதியின் வெற்றி

ராமாயணத்தில் ஒரு காட்சி. வாலியினால் பீடிக்கப்பட்டு, மலைக்குகை ஒன்றில் ஒளிந்திருக்கும் சுக்ரீவனிடம் ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறான் அனுமன். சுக்ரீவனுக்கு உதவுவதாக ராமன் கூறுகிறான். இருப்பினும் சுக்ரீவனுக்கு பயம் தீரவில்லை. வாலியின் பலத்தைப் பற்றி ராமனிடம் கூறுகிறான். ஆச்சா மரத்தைப் போன்ற வலிமையுடைய அவன் மார்பை பாணத்தால் பிளக்கவும் முடியுமோ என ஆயாசம் அடைகிறான். அப்போதுதான் ராமன் ஒன்றன்பின் ஒன்றாக நின்ற ஏழு ஆச்சா மரங்களையும் ஒரே பாணத்தால் துளைத்து காட்டுகிறான். பிறகு நடந்தது என்னவென்று ராமாயணம் படித்த அனைவருமே உணர்வர். அதுவல்ல இப்பதிவின் விஷயம்.

குஜராத் தேர்தல் முடிவுகள் ஒரு வழியாக வந்த நிலையில் எனக்கு உடனே பதிவு போட நேரம் கிடைக்கவில்லை. இதற்கு முந்தையப் பதிவில் வெறுமனே பின்குறிப்புடன் நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு மூன்று நாட்களுக்கு மேல் சுற்றுப்பயணத்தில் இருந்து விட்டேன். இன்றுதான் நேரம் கிடைத்தது. இவ்வாறு காலதாமதமானதும் நல்லதற்குத்தான். ஏனெனில் நேற்று விற்பனைக்கு வந்த துக்ளக்கின் அட்டைப்பட கார்ட்டூன் நான் சொல்ல நினைத்ததை சில கோடுகளிலேயே குறிப்பிட்டு விட்டது. அந்தக் கார்ட்டூன் இதோ:



தனக்கு எதிராக இருந்த இத்தனை எதிர்ப்புகளையும் மீறி அவர் ஜெயித்து ராமர் மாதிரி ஏழு ஆச்சாமரங்களைத் துளைத்தது தர்மம் என்னும் அவரது அம்புறாத்தூணியிலிருந்து அவர் செலுத்திய ஒரே பாணம்தான். ஆட்டம் க்ளோஸ்.

நிகழ்ச்சிகளைப் பற்றி கருத்து ரிப்போர்ட் தரும்போது பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஒரு கேள்வி கேட்டார். அதாவது மோடியின் டில்லி வருகை அதவானி போன்ற தலைவர்களுக்கு பேதியளிக்குமா என்னும் பொருள்பட கேள்வி கேட்க, அவருக்கு ஒரு பா.ஜ.கட்சிக்காரர் (பெயர் மறந்து விட்டது, மன்னிக்கவும்) மண்டையில் அடித்தாற்போல ஒரு பதில் அளித்தார். அதன் சாரம்: "கடந்த ஐந்து ஆண்டுகளாக மோதி இப்படி, மோதி அப்படி என்றெல்லாம் திட்டினீர்கள். ஆங்கிலப் பத்திரிகையுலகமே அவருக்கு விரோதமாக அமைந்தது. இன்று அவை எல்லாவற்றையும் மீறி நிமிர்ந்து நிற்கிறார். அவரது தினம் இது. இன்று ஒரு நாளாவது முடிந்தால் நியாயமாக நடவுங்கள். குழப்பம் விளைவிக்கும் முயற்சிகளை நாளையிலிருந்து வைத்து கொள்ளுங்கள்". ஒன்று சொல்ல வேண்டும். Rajdeep had the grace to look abashed and ashamed.

இப்போது சோ அவர்களின் தலையங்கத்திலிருந்து சில வரிகள் (நன்றி துக்ளக்). அவரது வரிகளுடன் இந்த டோண்டு ராகவன் 100% ஒத்துப் போகிறான் என்று கூறவும் வேண்டுமோ?

"நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள் ஒரு முதல்வருடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நேர்மையான நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் நடப்பதில்லை; இம்முறை அது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்".

"ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக்கூடிய விஷயம் இந்தத் தேர்தலில் நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க் கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது".

நேர்மையானவர் என்பதால் செயல்திறன் இல்லாமலும் அவர் போய் விடவில்லை. சோ அவர்களின் வார்த்தைகளில்: "விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது பெரும் எதிர்ப்பு கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர்". ஆனால் மோடி அவர்கள் நேரடியாக விவசாயிகளிடமே பேசி அவர்களைச் சம்மதிக்க வைத்தார். அதையும் மீறி மின்சாரம் திருடியவர்களள இரும்புக்கரம் கொண்டு அடக்கி, நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதன் பலனை முழுமையாக அடைந்தவர்கள் விவசாயிகள். நம்மூரிலோ ஆளும் கட்சித் தலைவரது 50 வயதுக்கும் மேற்பட்ட மகன் தலைமை வகிக்கும் இளைஞரணி (!) மகாநாட்டுக்காக எப்படியெல்லாம் மின்சாரம் எடுத்தனர் என்பதைத்தான் எல்லோரும் பார்த்தோமே. குஜராத்காரர்களைப் பார்த்து பொறாமைப்பட வேண்டியதுதான் நமது தலைவிதி.

ரிசர்வ் பேங்க், திட்டக் கமிஷன் ஆகியவை கூட குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி பற்றி ஒத்துக் கொள்ளவேண்டிய நிலை.

கடைசி பாராவில் சோ அவர்கள் குறிப்பிடுகிறார்: "நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா? என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க் கொண்டிருக்கிற நம் நாட்டு அரசியலில் - மோடி பெற்றிருந்த வெற்றி, மக்கள மனதில் நம்பிக்கை துளிர்க்க வழி செய்யும்". 100% உண்மையிது.

ஆனால் ஒன்று, மக்கள் மனதில் நம்பிக்கை சரிதான், ஆனால் ஊழல் அரசியல்வியாதிகள் மனதில் வயிற்றெரிச்சல். என்ன செய்யலாம்? ஜெலூசிலை பரிந்துரை செய்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/23/2007

தேர்தல் ஆணையமும் நடுநிலைமையும்

சட்டசபையின் ஆயுள் முடியும் முன்னாலேயே பதவியில் இருக்கும் முதலமைச்சரோ, பிரதம மந்திரியோ பொது தேர்தல் நடத்த கவர்னருக்கோ குடியரசுத் தலைவருக்கோ ஆலோசனை தரலாம். அவ்வாறுதான் சமீபத்தில் 1971-ல் அப்போதைய பிரதம மந்திரி இந்திரா காந்தி அவர்களும் அப்போதைய தமிழக முதல் மந்திரி கருணாநிதி அவர்களும் பொது தேர்தலை ஓர் ஆண்டுக்கு முன்னமேயே வைத்தனர். இதில் தவறு இல்லைதான். ஆளும் கட்சி தனக்கு சாதகமான நேரங்களில் பொது தேர்தல் வைப்பது பிரிட்டனிலும் நடப்பதுதான். அதே மாதிரித்தான் 2002-ல் மோதி அவர்கள் குஜராத்தில் பொது தேர்தல் வைக்குமாறு கவர்னருக்கு ஆலோசனை அளித்தார். அப்போது தேர்தலை நடத்த இயலாது என்பதற்கு பல நொண்டிச் சாக்குகளை தேர்தல் ஆணையம் கூறியது.

அதற்கும் மேலாக மோதி ஒரு கோமாளி என்றே அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் J. M. Lyngdoh திருவாய் மலர்ந்தருளினார். அதற்காக நிருபர்கள் அவரை கேள்விகளால் துளைத்த போது தான் அதை வெளியிட்டது தனது சொந்த கருத்து என்றும், மைக் இணைப்பை தான் கவனிக்கவில்லை என்றும் அசடு வழிந்தார். இவரெல்லாம் ஒரு தேர்தல் ஆணையர் என வந்து விட்டார், என்ன செய்வது விதி. ஆனால் ஒன்று, பிறகு தேர்தல் ஆணையமே நிர்ணையித்த தேர்தலில் மோதி அவர்கள் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையில் வெற்றி பெற்று தேர்தல் ஆணையரை இன்னும் நெளிய வைத்தார். மிக்க மகிழ்ச்சி. அப்போது சோ அவர்கள் மோதி காங்கிரஸ் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகவே வெற்றி பெற்றார் என்று பொருள்பட எழுதினார்.

அதே தேர்தல் ஆணையம் சோனியா காந்தி அவர்கள் தனது எம்.பி. பதவியை துறக்க நேர்ந்தபோது அவசரம் அவசரமாக அவரது தொகுதிக்கு இடைதேர்தலை ஏற்பாடு செய்து, அவர் மீண்டும் ஜெயிக்கும் வாய்ப்பைத் தந்தது. அதற்கான செலவு ஏமாளி குடிமக்கள் மீதுதான்.

சமீபத்தில் 1984 சீக்கியக் கொலைகளுக்கு பிறகு உடனடியாக நடந்த தேர்தலை எந்தக் கணக்கில் சேர்ப்பதென்று தெரியவில்லை? அத்தேர்தலில் தீவிரவாதிகள் என்று சர்தார்ஜிகளின் படத்தையே போட்டு ராஜீவ் காந்தி அவர்கள் பிரசாரம் செய்ததற்கு யாரை குறை கூற வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இப்போதைய குஜராத் தேர்தலையே பார்ப்போமா? சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. இன்று வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தெருக்களில் சங்கிலி விபத்து என்று நடக்கும். அதாவது ஒரு வண்டி இன்னொரு வண்டியில் மோதி, அந்த இன்னொரு வண்டி மூன்றாவது வண்டியின்மீது மோதி என்று தொடர்ச்சியாக நடக்கும் விபத்துகளையே இங்கு குறிக்கிறேன். அவற்றுக்கு முதல் குற்றவாளி முதலில் மோதிய வண்டி டிரைவர்தான். ஆக, அந்த விஷயத்தில் சோனியாஜிக்குத்தான் அதிக பொறுப்பு. அதைக் கூறாது தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஆச்சரியமாக உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: மோதி அவர்கள் இந்தத் தேர்தலில் காங்கிரசுக்கும் பத்திரிகைகளுக்கும் எதிராகப் பெற்ற வெற்றி மனதுக்கு நிறைவாக உள்ளது. குஜராத்தியினர் நல்ல அரசு பெற்றுள்ளனர். அவர்கட்கு எமது வாழ்த்துக்கள். ஓசி டெலிவிஷனுக்கெல்லாம் மயங்காத அவர்களுக்கு ஒரு பெரிய ஓ போடுகிறான் இந்த இளைஞன் டோண்டு ராகவன்.

12/12/2007

இடி போன்ற மௌனம்

ஆங்கிலத்தில் கூறுவார்கள், there was thundering silence. பார்வைக்கு வினோதமாகத் தோன்றினாலும் கூர்ந்து பார்த்தால் சொல்ல வருவது புலப்படும். ஒரு உதாரணம் தருகிறேன்.

ராமநாதனின் வீடு ரயில்வே லைனுக்கு பக்கத்தில். அதில் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு வண்டி செல்லும். அது ஒரு தொழிற்சாலை சைடிங். ஆகவேதான் இவ்வளவு குறைச்சலான போக்குவரத்து. அச்சமயம் ராமநாதனின் வீடே ஆடும். இருந்தாலும் அவனது தூக்கத்துக்கு ஒரு பங்கமும் இல்லை, ஏனெனில் பழகி விட்டது. அன்று ஒரு நாள் மட்டும் ரயில் வரவில்லை. ஒரே நிசப்தம். சரியாக இரவு 12 மணிக்கு ராமநாதன் அலறி புடைத்து எழுந்தான். "அது என்ன சப்தம்" என்று குழறினான். விஷயம் என்னவென்றால் அவனது உடல் அந்த சத்தத்துக்கு பழகி விட்டது. அன்று இல்லாமல் போனதை அவன் உடல் ஏற்றுக் கொள்ளாது அவனை எழுப்பி விட்டு விட்டது.

ராமநாதனை விடுங்கள். அவன் இனிமேல் இப்பதிவுக்கு வரமாட்டான்.

போன வாரம் தமிழ்மண நட்சத்திரம் என்றென்றும் அன்புடன் பாலாவின் ஒரு பதிவில் நான் பின்னூட்டமிட்டிருந்தேன். அப்பதிவு பாலா அவர்களின் வடநாட்டு அனுபவத்தைப் பற்றியது. தனக்கு ஹிந்தி தெரியாததனால் வந்த பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். அதில் ஒரு கேள்வியும் கேட்டார். "இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))

எனது பின்னுட்டம்:
"அதுவும் நீங்க ஹிந்தி பிரச்சார் சபையில் சேர்ந்து (திருவல்லிக்கேணி அக்பர் சாஹேப் தெருவில் உள்ளது) படித்திருந்தால் தேராதூனில் தூள் கிளப்பியிருக்கலாம். ஏனெனில் அங்கு பேசப்படுவது ஹிந்தி பிரச்சார் சபையில் கற்ற இலக்கணசுத்த ஹிந்தி. நான் ஹரித்துவார் ரிஷிகேஷுக்கு சமீபத்தில் 1967-ல் சென்றபோது எனக்கு ஒரு சிரமமும் இல்லை. இந்த அழகுக்கு அங்கு பார்ப்பவரிடம் எல்லாம் மாங்கு மாங்கென்று ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஹிந்தியிலேயே பேசி அறுத்தேன். :)

தமிழகத்தின் ஒரு முழுதலைமுறையின் எதிர்காலத்தை இவ்வாறுதான் திராவிட இயக்கம் நாசமாக்கியது. அதெல்லாம் செய்து விட்டு, தன் பேரன்களையும் பேத்திகளையும் மட்டும் திருட்டுத்தனமாக ஹிந்தி படிக்க வைத்து மந்திரிகளாக்கி மகிழ்ந்தது.

இதில் ஒரு இரட்டை நிலையைப் பாருங்கள். நாங்கள்தான் சொன்னோம் ஹிந்தி படிக்க வேண்டாம் என்று, உங்களுக்கு எங்கே புத்தி போச்சு என்ற ரீதியில் இதற்கு பின்னூட்டமிடுவார்கள். அதே சமயம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் வன்கொடுமை செய்தாலும் பார்ப்பனர்கள்தானே ஜாதிப் பிரிவினை செய்தனர், அதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று சட்டமாகப் பேசுவார்கள்.

நான் கேட்கிறேன், ஏம்பா ஜாட்டான்களா, வாதத்துக்காகவே அப்படியே வைத்து கொள்வோம். பாப்பாந்தான் சொன்னான் என்றால் உங்கள் புத்தி எங்கே மேயப் போச்சு"?

என்ன ஆயிற்று நமது பதிவர்களுக்கு? இப்பின்னூட்டத்துக்கு அவர்தம் பதில் இது வரை இடிபோன்ற மௌனமே.

இப்போது கூறுகிறேன். பார்ப்பனரல்லாதவர்கள் வன்கொடுமை செய்தாலும் அதையும் பார்ப்பனீயம் என்று எழுதுவது அபத்தமாக இல்லை? உயர்சாதீயம் என்று சொல்லிவிட்டு போங்கள். அத்துடன் ஒரு குறிப்பிட்ட வன்கொடுமை செய்தவன் என்ன ஜாதி என்பதையும் வேண்டுமானால் எழுதுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/10/2007

என்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல் ஸ்டாரே வேண்டாம் என்னும் முடிவு

என்றென்றும் அன்புடன் பாலா தாக்குதல், ஆகவே ஸ்டாரே வேண்டாம் என்னும் முடிவுக்கு தமிழ்மணம் வந்து விட்டதா என்ன? இந்த வாரம் ஸ்டாரைக் காணோமே?

லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்தது போல நம்ம பாலா மொத்தம் 33 பதிவுகளைப் போட்டு தாக்க எல்லோரும் திக்குமுக்காடி போய் விட்டனர் என நினைக்கிறேன். ஆகவே சற்று ஓய்வு எடுக்க தமிழ்மணம் எண்ணியிருந்தால் அது புரிந்து கொள்ளத் தக்கதே.

அதிலும் தமிழ்மண நட்சத்திர வரலாற்றில் முதன்முறையாக (சன் டிவியில் வரும் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" போல் வாசிக்கவும்:)) அவரது நட்சத்திர வாரத்தில் 26 புத்தம் புதிய பதிவுகளை (இப்பதிவையும் சேர்த்து, மீள்பதிவுகளையும் சேர்த்தால் 33!) இட்டு ஓர் அரிய பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது :)

அடுத்து வருபவருக்கு சற்று கடினமான வேலை காத்திருக்கிறது என்பதுதான் நிஜம்.
மனிதர் எல்லாவற்றையும் தொட்டுள்ளார். அசைவ ஜோக்குகள் உட்பட!!!! லிஸ்டைப் பார்க்கவும். ரொம்பவும் தயார் நிலையில் இருந்து வந்திருக்கிறார்.

இங்கு எனக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒரு எழுபது வயது பிரம்மச்சாரி பெரிசு ஒன்று கல்யாணம் செய்து கொண்டாராம். தான் மணக்கப் போகும் பெண்ணிடம் தான் நிறைய சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினாராம். முதலிரவுக்கு அடுத்த நாள் அப்பெண் களைப்புடன் வந்து தன் தோழியிடம் "அவர் ஏதோ காசு சேர்த்து வைத்திருந்ததாகக் கூறினார் என எண்ணினேன்" என்று பெருமூச்சு விட்டாளாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்னால் (19.44 மணிக்கு) சேர்க்கப்பட்டது:
நட்சத்திர பதிவர் போட்டிருக்கிறார்கள். பிரதீப் என்பவர். ஆனால் இன்னும் கணக்கைத் துவக்கவில்லைப் போல.
இருப்பினும் பாலாவின் நட்சத்திர வாரத்தின் விமரிசனமாகவே இப்பதிவும் தொடரும்.

12/05/2007

சரோஜாதேவி புத்தகங்களும் இன்னும் பிற இலக்கியங்களும்

இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட நினைத்து துவங்கினால் நிறைய வருவதால் தனிப்பதிவாகவே போட்டு விடுகிறேனே.

அப்பதிவில் சொன்னது மாதிரி சரோஜாதேவி புத்தகங்களால் பாதிக்கப்படாத இளைஞனே இருக்க முடியாதுதான். சமீபத்தில் 1971 முதல் 1974 வரை நான் பம்பாயில் வசித்த போது அவற்றை நிறைய படித்ததை இங்கே எழுதியுள்ளேன். சரோஜாதேவி புத்தகங்கள் சென்னையில் காணக் கிடைக்கவில்லை. பங்களூரில் பப்ளிஷ் செய்வதாகக் கேள்வி. எழுபது எண்பதுகளில் சென்னையில் மருதம் என்ற பெயரில் இம்மாதிரி பலான புத்தகங்கள் வந்தன. எண்பதுகளில் தில்லியில் மதுக்குடம் என்ற பெயரிலும் புத்தகங்கள் வந்தன.

அப்போது கேட்ட ஒரு டயலாக், இரண்டு நண்பர்களுக்குள்.

ஒருவன்: டேய் நம்ம ராமு நேத்திக்கு என்ன செஞ்சான் தெரியுமா, மதறாஸ் ஸ்டோர்ஸில் போய் மதுக்குடமும் ஞானபூமியும் கேட்டிருக்கான். என்ன என்று கேட்டால் அவன் அப்பாவுக்கும் அவனுக்கும் தேவையானதையே கேட்டானாம்.

இன்னொருவன்: பாவம்டா ராமுவின் அப்பா. தனக்கு ஞானபூமி வாங்கப்போன இடத்திலேயே தன் மகன் மதுக்குடமும் கேட்டான் அப்படீன்னா எவ்வளவு வருத்தப்படுவார்?

ஒருவன்: டேய் அடங்குடா, ராமு ஞானபூமி கேட்டது தனக்காகத்தான். புரிஞ்சுக்கோ.

விடலைப்பருவம் தாண்டும்போது இதெல்லாம் ஒரு காலத்தின் கட்டாயமே. கஷ்டப்பட்டு நான் வாங்கி வந்தால் எனக்கு தெரிந்த பெரிசுகள் சில "அடேய் அயோக்கியா, இதெல்லாம் படிக்கிற வயசாடா உனக்கு" என்று அதட்டி புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு தாங்கள் படிக்க எடுத்து செல்வார்கள்.

அமெரிக்க, பிரிட்டிஷ் நூல்நிலையங்களிலிருந்து புத்தகம் எடுக்கும்போது சில குறிப்பிட்ட எழுத்தாளர்களை தேடிப் போவேன். நூர்றுக் கணக்கான பக்கங்களில் அள்ளித் தெளித்தது போல அங்கங்கே பலான மேட்டர்கள் வரும். அவற்றை கண்டுபிடிக்க நேக் வேண்டும். அவ்வாறான சில புத்தகங்கள் எடுத்து வந்தால் அப்போதென்று என் தந்தையோ, பெரியப்பாவோ அல்லது சித்தப்பாவோ வந்து "என்னடா புத்தகம், காண்பி" என்று அதட்டல் போட்டு அதை வாங்கி புரட்டுவார்கள். எப்படி புரட்டினாலும் அவர்களுக்கென்று அதே பலான பக்கங்களே மாட்டும். ரொம்ப கஷ்டம்.

நான் ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு படித்ததற்கு இம்மாதிரி தலையீடுகளை தவிர்ப்பதுவும் ஒரு முக்கிய காரணம். ஆனால் இதில் சோகம் என்னவென்றால், மேக்ஸ் ம்யுல்லர் பவனிலோ அல்லியான்ஸ் ஃபிரான்ஸேய்ஸிலோ கிடைத்த புத்தகங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப சைவமே.

இந்த போர்னோகிராஃபி என்பது ஒரு தனி உலகம். அதை எழுதுவது ஒரு கலை. துரதிர்ஷ்டவசமாக அதை எழுத நல்ல எழுத்தாளர்கள் கிடைப்பதில்லை. மொழிவீச்சின் முழுமையும் தெரியாதவர்களே அதில் ஆட்சி செலுத்துகின்றனர். இர்விங் வேலஸ், ஹெரால்ட் ராப்பின்ஸ், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது கிளுகிளுப்பை உண்டாக்குவர். அவ்வளவே. நினைத்தால் அவர்கள் நல்ல போர்னோகிராஃபி எழுதலாம். எழுதுவார்களாக இருக்கும். அப்போது வேறு பெயரில் எழுதுவார்கள். நம்மூர் ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையாக மாறியது போல.

நல்ல எழுத்தாளர்கள் இல்லாததால், கழிசடைகள் இந்தத் துறையில் அதிகம். தவறில்லாது சேர்ந்தாப்போல் பத்து வாக்கியங்கள் கூட எழுதத் தெரியாதவர்கள்தான் இங்கு அதிகம். கணினியில் நிலைமை இன்னும் மோசம். பலான சைட்டுகள் என்றாலே வைரஸ் பிரச்சினை வேறு வந்து தொலைக்கிறது. வெறுமனே டெக்ஸ்ட் கோப்புகள்தான் என்றால் அவற்றில் வைரஸ் இருக்காது என்று கேள்வி. மேலும் சட்டம் இதில் என்ன சொல்கிறது என்பதும் தெளிவாக இல்லை.

அமெரிக்காவில் போர்னோகிராஃபி சட்டத்தை உள்ளடக்கமாக்கி இர்விங் வேலஸ் "ஏழு நிமிடங்கள்" என்னும் நாவல் எழுதினார்.

எனக்கு பிடித்த எழுத்தாளர் டெட் மார்க் (Ted Mark). எழுபதுகளில் அவர் மிகப் பிரபலம். இப்போதெல்லாம் இணையத்தில் புத்தகங்கள் எண்ணற்ற அளவில் படிக்கக் கிடைக்கின்றன. ஆனால் பிரச்சின என்னவோ பழையதுதான். நன்றாக எழுதுபவர்கள் மிகக் குறைவே. மீதி எல்லாம் தப்பும் தவறுமாக இலக்கணப் பிழைகளுடன் எழுதுபவர்களே.

மனது வைத்தால் நம்ம சுஜாதா சார் செய்யலாம். செய்வாரா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது