10/30/2006

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா?

சமீபத்தில் 1970-ல் நான் திருவிளையாடல் படம் பார்த்த போது யோசித்த சில விஷயங்களை இங்கு பதிவிடுகிறேன்.

கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா?

உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் ஒரு நொடியில் விடை கூறியிருப்பார்கள். அதாவது ஒரு பெண்ணின் உடலில் பருவம் செய்யும் மாறுதல்களில் அவளது வியர்வை மணமும் மாறும். தலையில் இருக்கும் வியர்வையின் மணம் கூந்தலுக்குப் பரவும். முடிகள் வாசனைகளை நிறுத்திவைத்துக் கொள்ளும் ஊடகங்கள். ஐந்தறிவு கொண்ட நாய் கூட அதை அறியும். பெண் நாயை அது முகர்ந்து பார்ப்பது அதில் அடங்கும். உடல் உறவுக்குத் தயாராகும் ஆண் பெண் உடல்களில் வரும் மாற்றங்கள் மணங்களாக உருவெடுத்து கூந்தல் இயற்கை மணம் பெறுகிறது.

இங்கு இயற்கை மணத்திற்கும் ஒரு வரையறை செய்கிறேன். அதாவது எது செயற்கை மணம் இல்லையோ, அதுவே இயற்கை மணம். ஆக, வாசனாதி திரவியங்கள் கொடுக்கும் மணம் இல்லை.

ஆனால் கேனத்தனமாக அரசன் புலவர்களிடம் போய்க் கேட்டு வைத்தான். பாருங்கள், "இதனை இவனால் முடிக்கும் என ஆய்ந்து அதனை அவன்கண் விடல்" என்பது போல வரும் குறளை மன்னன் மறந்திருப்பானோ?

எது எப்படியோ, புலவர்களிடம் கேட்டு அவர்கள் விழிக்க, தண்டோரா போடச் செய்து தருமி வந்து புலம்பி, சிவபெருமான் மண்டபத்தில் இருந்து கொண்டு எழுதித் தந்ததை கொண்டு போய் கொடுத்து, சிவபெருமானிடம் மீண்டு வந்து, "உதைக்காம விட்டாங்களே" என்று அல்ப திருப்திப்பட்டு என்றெல்லாம் கதை போகிறது.

என்னமோ சொற்குற்றம் பரவாயில்லையாம், பொருள் குற்றம்தான் தவறு என்று கூறி, இருப்பதிலேயே பெரிய பொருள் குற்றம் செய்கிறார் நக்கீரர், ஏனெனில் அவர் ப்ளஸ் டூ படிக்கவில்லை.

இப்போது இக்கதையை நான் கீழ்க்கண்டவாறு மாற்றுகிறேன்.

சிவபெருமான்: ஆக, உயர்குல மாதரின் கூந்தலில் கூட இயற்கைமணம் இல்லையா?
நக்கீரன்: இல்லை
சிவபெருமான்: தேவலோகப் பெண்டிர்கள்?
நக்கீரன்: இல்லை, நான் வணங்கும் பார்வதி தேவியிடமும் இல்லை
சிவபெருமான்: நக்கீரா இப்போது என்னைப் பார்.
நக்கீரன்: நீர் முக்கண் முதல்வனே ஆனாலும் குற்றம் குற்றமே.

அடுத்த சீன் பொற்றாமரைக் குளத்தருகில்.
பாண்டிய மன்னன்: சொக்கேசரே என்ன இது விளையாட்டு.
சிவபெருமான்: ஷண்பகப் பாண்டியனே, உமது நக்கீரன் தேவலோகப் பெண்டிர் கூந்தல் கூட இயற்கை மணம் கொண்டதில்லை என்று கூறுகிறான். அவன் என்ன நேரில் பார்த்தானா? நேரில் பார்த்தவனான என்னிடமே இவ்வாறு விதண்டாவாதம் செய்தால் என்ன செய்வது. சரி உனக்காக நக்கீரனை பிழைக்கச் செய்கிறேன்.
நக்கீரன்: மன்னிக்க வேண்டும் சிவபெருமானே நீங்கள் வளர்த்த தமிழில் பிழை இருக்கலாகாது என்பதால்தான் வாது புரிந்தேன்.
சிவபெருமான்: அதற்காக விதண்டாவாதம் செய்தால் எப்படி? நீர் ஏதேனும் தேவலோக மங்கையரைக் கண்டீரா? நான் கண்டவன். என்னிடமே கேட்டுத் தெரிந்து கொள்வதுதானே முறை? இல்லையென்றால் உமது புலமைச் சக்தியால் பார்வதி தேவியிடமே பிரார்த்தித்து அவரை வரச் செய்து அவரைக் கேட்பதுதானே முறை. இல்லாமல் அனுமானத்தில் பேசினால் எப்படி?
பாண்டியன்: (தலையைப் பிய்த்துக் கொண்டு) ஐயோ கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டா இல்லையா?
சிவபெருமான்: அது தெய்வ ரகசியம் பாண்டியனே.
பாண்டியன்: பிறகு எப்போதுதான் தெரிந்து கொள்வது?
சிவபெருமான்: பல நூறாண்டுகள் கழித்து தமிழ்மணத்தில் டோண்டு ராகவன் என்பவர் பதிவிடுவார். பிழைத்துக் கிடந்தால் அப்போது படித்து தெரிந்து கொள்.

இப்போது டோண்டு ராகவன் பேசுகிறேன்:
ஷண்பகப் பாண்டியனே பதிவு போட்டு விட்டேன். முடிந்தால் படித்துக் கொள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/27/2006

ரொம்ப நாளைக்கப்புறம்

ரொம்ப நாளாயிற்று புதிர்கள் போட்டு.

1. ராஜாமணி தான் கையில் பிடித்திருந்த பந்தை மிக மெதுவாகத்தான் தள்ளி விட்டான். ஆனால் அதற்கு பிறகு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் போக வேண்டியிருந்தது. ஏன்?

2. ஒருவன் தனது காரின் முன்சீட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான். கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் மூடி உள்பக்கமாக லாக் செய்யப்பட்டுள்ளன. சுட்ட துப்பாக்கியோ காரின் பின் சீட்டில் அவன் கைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. காரின் எந்தக் கண்ணாடியும் உடையவில்லை, குண்டு புகுந்த துளைகளும் எங்கும் இல்லை. என்ன நடந்தது?

3. ஒரு போலீஸ்காரன் கடற்கரையில் நின்று அழுது கொண்டிருக்கிறான். அவன் ஒரு பேப்பரில் எதையோ படித்துக் கொண்டிருக்கிறான். சிகரெட் புகைக்க ஆரம்பிக்கிறான். அதன் நெருப்பு அவன் கையைத் தீண்டினாலும் அவன் அதை கவனிக்கவில்லை. அப்படி என்னத் துயரம்?

4. ஒரு பெண்மணி மைக்ரோ அவனில் இரண்டு நிமிட செட்டிங் செய்து கொண்டு காப்பி தயாரிக்கிறாள். இரண்டு நிமிடம் கழித்து கதவைத் திறந்து பார்த்து விட்டு மறுபடி இரண்டு நொடிகளுக்குக் கதவை மூடி விட்டு பிறகு கப்பை வெளியே எடுக்கிறாள். ஏன்?

5. ஒருவன் அவன் மனைவி அவனுக்கு பரிசாக அளித்த ஆஃப்டர்ஷேவ் லோஷனைப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போகிறான். இறக்கிறான். என்ன நடந்தது?

6. ஒருவன் தனது மனைவியுடன் சினிமாவுக்குப் போகிறான். அந்த தியேட்டரில் ஹவுஸ்ஃபுல். படம் பார்க்கும்போது மனைவியைக் கொன்று விடுகிறான். பிறகு பதட்டப்படாமல் அவள் பிணத்தை ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக்கு கொண்டு செல்கிறான். எப்படி?

7. தில்லியில் வசிக்கும் ராமகிருஷ்ணமாச்சாரி ஒரு சாதாரண மனிதர். ஒரே நாளில் விசா, பாஸ்போர்ட் ஏதும் இல்லாமல் 8 அயல்நாடுகளுக்கு சென்று திரும்புகிறார், காலணா செலவில்லாமல். யாரும் அவரை எங்கும் கைது செய்யவில்லை. எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அறிவு இடைவெளி

இந்தப் பதிவில் கணினி அறிவு பலரிடம் எவ்வாறு பூஜ்யமாக இருக்கிறது என்பதை எழுதியிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் நாளொரு கண்டுபிடிப்பு பொழுதொரு முன்னேற்றம் என்றுதான் வளர்ந்திருக்கிறது. இப்போதோ கேட்கவே வேண்டாம். ஒரு புது தொழில் நுட்பத்தின் ஆயுளே குறைவாகத்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு வி.சி.ஆர். மற்றும் வி.சி.பி.

முந்தையதில் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முடியும். பிந்தையதிலோ வெறுமனே பதிவு செய்த நிகழ்ச்சிகளி டி.வி.யில் போட்டுப் பார்க்க மட்டுமே முடியும், அதன் விலையும் குறைவு. பலர் முந்தையதையே வாங்கினர். ஆனால் அதை சரியாக உபயோகிக்கத் தெரியாது விசிபி போலவே உபயோகித்தனர். நிகழ்ச்சிகளை ரெகார்ட் செய்தவர்கள் கூட அதன் முழு சாத்தியக் கூறுகளையும் அறிந்தார்கள் இல்லை.

ஒரு நிகழ்ச்சியைப் பதிவு செய்ய வேண்டுமானால் அது டிவியிலும் பார்த்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே ரிகார்ட் செய்ய முடியும் என்றே பலரும் நம்பினர். ஒரு சேனல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே வேறொரு சேனல் நிகழ்ச்சியைப் பார்க்கலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு வரவில்லை. முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளை ஒரு நிகழ்ச்சி நிரல் மூலம் சரியான தருணத்தில் பதிவு செய்யலாம், அப்போது டிவிகூட ஆன் செய்ய வேண்டாம் என்பதோ அவர்களுக்குத் தெரியவே தெரியாது.

இப்போது அதைப் பற்றிப் பேசி என்ன புண்ணியம். விசிஆர் கான்சப்டே மொத்தத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டு விட்டது. சிடி, டிவிடி என்றெல்லாம் வந்து விட்டன.

ஒரு முறை எனது வாடிக்கையாளரிடமிருந்து ஒரு ஜாப் ஆர்டர் வரவேண்டியிருந்தது. அவருடைய ஆர் & டி பிரிவுக்கு அந்த ஆர்டரின் ஒரு காப்பி வந்திருந்தது. அதை எனக்கு ஃபேக்ஸ் செய்யுமாறுக் கூற, அந்தப் பிரிவின் ஸ்டெனோ என்னிடம் தங்களுக்கு அந்த காப்பி தேவைப்படுவதால் அதை எனக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்ப முடியாது என சீரியஸாகச் சொன்னார்!

அவரை விடுங்கள், ஏதோ குழம்பி விட்டார். இந்த வாடிக்கையாளர் மென்பொருள் நிபுணர். அவரது ஜெர்மானிய வாடிக்கையாளருக்காக வங்கி ப்ராடக்டுகள் மென்பொருளை உருவாக்கி அனுப்புபவர். அவற்றை ஆங்கிலத்தில் உருவாக்குவதை நான் ஜெர்மன் மொழியில் மாற்ற வேண்டும். அவ்வாறு செய்து நான் ஒரு கோப்பு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பியிருந்தேன். அதையே அவர் எனக்கு திரும்ப அதே மின்னஞ்சல் வழியே திருப்பி அனுப்புகிறார். கிட்டத்தட்ட ஒரு MB அளவுள்ள கோப்பு. என்ன விஷயம் என்றால், அதில் ஓரிரு இடங்களில் அவருக்கு மொழிபெயர்ப்பு விட்டுப் போனதாகத் தோன்றியதாம்! அவரிடம் ஒரே கேள்விதான் கேட்டேன், அதாவது "நான் அனுப்பும் கோப்பு என் வந்தகட்டிலேயே இருக்குமே, அதை ஏன் மெனக்கெட்டு அனுப்பினீர்கள்" என்று. கேட்காத கேள்வி என்னவென்றால், "இந்த அடிப்படை அறிவு கூட இல்லாது, என்னத்தே மென்பொருளை உருவாக்கி, அனுப்பி ..." என்பதே அது.

ஒரு முறை கோப்பை அனுப்புவார்கள். நான் கொட்டேஷன் தருவேன். சரியாகப் பட்டால் வேலை தருவார்கள். அச்சமயத்தில் அதே கோப்பை மறுபடி அனுப்பித்த பிரஹஸ்பதி கம்பெனிகளும் இருந்தன.

என்னத்தை வேலை, செஞ்சு...

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/26/2006

கணினி அறிவுக் களஞ்சியங்கள்

கணினி அறிவு உலகத்தில் பொதுப்படையாக எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக
கணினி கால் செண்டர்களுக்கு வந்த உண்மையான புகார்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இது பற்றி எனது ஆங்கிலப் பதிவிலும் எழுதியுள்ளேன். Proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலை வாசலிலும் எழுதியுள்ளேன்.

தகவல் மையம் (த.மை.): நீங்கள் என்னக் கணினி வைத்திருக்கிறீர்கள்?
வாடிக்கையாளர் (வா.): வெள்ளை நிறக் கணினி...

> > ====

வா.: என் பெயர் செலின். என்னால் கணினியிலிருந்து ஃப்ளாப்பியை வெளியே எடுக்க இயலவில்லை.
த.மை.: பட்டனை அழுத்திப் பார்த்தீர்களா?
வா.: பார்த்தேன், ஆனால் அப்படியே மாட்டிக் கொண்டுள்ளது.
த.மை: சீரியஸான புகார்தான், இதோ குறித்துக் கொள்கிறேன் ..
வா.: வேண்டாம்... ஒரு நிமிஷம்... அடேடே நான் ஃப்ளாப்பியை உள்ளே திணிக்கவே இல்லை.... மேஜையின் மேலேயே இருக்கிறது, ஹி ஹி ஹி.

> > ====

த.மை: திரைக்கு இடப்புறம் உள்ள "மை கம்ப்யூட்டர் ஐக்கானில் க்ளிக் செய்யவும்.
வா.: உங்களுக்கு இடதா அல்லது எனக்கு இடதா?

> > ====

த.மை.: வணக்கம். ஏதேனும் உதவி தேவையா?
ஆண் வா.: ஹலோ... என்னால் ப்ரிண்ட் செய்ய முடியவில்லை.
த.மை: ஸ்டர்ட்-ல் க்ளிக் செய்து ...
வா: இதோப் பாருங்க; இவ்வளவு தொழில் நுட்பமெல்லாம் நமக்கு வராது! நான் என்ன பில் கேட்ஸா!

> > ====

வாய்ஸ் மெயில் செய்தி: ஹலோ, நான் மார்த்தா பேசுகிறேன். என்னால் பிரிண்ட் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு தடவை முயற்சிக்கும்போதும் கணினி 'பிரிண்டரை கண்டுபிடிக்க இயலவில்லை' என்று செய்தி தருகிறது. ப்ரிண்டரைத் தூக்கி அதன் திரை முன்னால் ஆட்டியும் அதுக்குப் புரியலை, சொன்னதையே சொல்லிட்டிருக்கு...

> > ====

வா.: என்னால் சிவப்பு எழுத்துகள் பிரிண்ட் செய்ய முடியவில்லை...
த.மை: உங்களிடம் இருப்பது கலர் பிரிண்டர்தானே?
வா.: இல்லை.

> > ====

த.மை: உங்க மானிட்டர்லே என்ன பாக்குறீங்கம்மா?
வா.: என்னோட பாய்ஃபிரண்ட் கொடுத்த கரடி பொம்மைதான் இருக்கு, என் பிறந்த நாளுக்காக வங்கியது.

> > ====

த.மை: இப்போ F8 அழுத்தவும்.
வா.: பிரயோசனமில்லை, வேலை செய்ய மாட்டேங்குது.
த.மை.: என்னதான் பண்ணீங்க நீங்க?
வா.: நீங்க சொன்ன மாதிரி F-கீயை 8-முறை அமுக்கினேன, ஆனால் ஒண்ணும் வரமாட்டேங்குது.

> > ====

வா.: என்னோட கீபோர்ட் வேலை செய்ய மாட்டேங்குது.
த.மை: அதை கணினியோட சேத்திருக்கீங்களா?
வா.: தெரியல. கணினி பின்னால் எல்லாம் போய் பார்க்க முடியாது.
த.மை.: கீபோர்டை எடுத்துக்கிட்டு 10 அடி பின்னாலே வாங்க.
வா.: ஓக்கே
த.மை.: உங்க கையோட கீபோர்ட் வந்துதா?
வா.: வந்துது.
த.மை.: அப்படீன்னாக்க கீபோர்ட் இணைக்கப்படல்லை. வேறே இன்னொரு கீபோர்ட் பக்கத்திலே இருக்கா?
வா.: அட ஆமாம், இதோ இன்னொண்ணு இருக்கே. ...இது வேலை செய்யறது, ஹி ஹி ஹி!

> > ====

த.மை: உங்க கடவுச் சொல் small letter a as in apple, a capital letter V as in Victor, மற்றும் எண் 7.
வா.: எண் 7 கேப்பிடலிலா?

> > ====

ஒரு வாடிக்கையாளரால் இணையத்துக்கு செல்ல இயலவில்லை.
த.மை: சரியானக் கடவுச் சொல்லை உபயோகித்தீர்களா?
வா.: நிச்சயமாக. மற்றவர்கள் செய்வதையும் பார்த்திருக்கிறேன்.
த.மை.: கடவுச் சொல்லைக் கூற இயலுமா?
வா.: ஐந்து நட்சத்திரங்கள்.

> > ====

த.மை.: என்ன ஆண்டி-வைரஸ் ப்ரொக்ராம் பாவிக்கிறீர்கள்?
வா.: நெட்ஸ்கேப்.
த.மை.: அது ஆண்ட-ிவைரஸ் இல்லையே.
வா.: ஓ, மன்னிக்கவும்...இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.

> > ====

வா.: எனக்கு இப்போது பெரிய பிரச்சினை. என் நண்பன் எனக்கு ஒரு ஸ்க்ரீன்சேவர் அளித்துள்ளான். ஆனால் எலிக்குட்டியை நகர்த்தும்போதெல்லாம் அது மறைந்து விடுகிறதே!

> > ====

த.மை.: மைக்ரோஸாஃப்ட் உதவி மையம், உதவி தேவையா?
வா.: வணக்கம்! கடந்த 4 மணி நேரமா காத்திருக்கேன், எப்போ வருவீங்க?
த.மை.: என்னது..? மன்னிக்கவும், என்ன உங்கள் பிரச்சினை?
வா.: நான் இப்போது வோர்ட் கோப்பில் வேலை செய்கிறேன், உதவிக்கான பட்டனை 4 மணி நேரத்துக்கு முன்னாலேயே அமுக்கியாயிற்று. எப்பத்தான் நீங்க உதவி பண்ணப் போறீங்க?

> > ====

த.மை.: என்ன உதவி வேண்டும்?
வா.: முதல் தடவையாக மின்னஞ்சல் அனுப்பறேன்.
த.மை.: சரி, அதிலே என்ன பிரச்சினை?
வா: அதாவது, எங்கிட்டே எழுத்து a இருக்கு, ஆனால் அதை சுத்தி எப்படி வட்டத்தைப் போடறது?

> > ====

வா.: ஹலோ, என்னோட கணினிலே ஒரு பாகம் உடைஞ்சுப் போச்சு.
த.மை: என்ன பாகம்?
வா.: காப்பி கப் ஹோல்டர்.
த.மை.: இன்னாது???
வா.: அதாங்க, நடுவிலே ஓட்டையோட ஒரு டிரே மாதிரி இருக்குமே. ஒரு பட்டனை அழுத்தினா, டொய்ன்னு வெளியே வருமே, அதுங்க ... காப்பியெல்லாம் கூட கீழே கொட்டிடிச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி இந்தப் பக்கத்துக்கு

10/24/2006

ஆ கலே லக் ஜா - கஜமுஜா

ஹைப்பர்லிங்க் - 1
ஆடுதுறை ரகு

இன்னொரு மீள்பதிவு, இன்னொரு ஹைப்பர்லிங்க். இந்த ஹைப்பர் லிங்குகளின் விசேஷமே அவை எதிர்பாராது வருவதில்தான் இருக்கிறது. ஒரு நிமிடம் வேறு எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருப்போம். அடுத்த நிமிடம் ஹைப்பர் லிங்க் வந்து முடிந்திருக்கும். எல்லோரும், நான் உட்பட, ஆச்சரியத்தில் ஆழ்ந்து போவோம். இப்போது ஹைப்பர் லிங்குக்குக்கப் போவோம்.

வருடம் 1982. ஐ.டி.பி.எல்லில் என்னை அவசர பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைக்காக ஹைதராபாத் பிளாண்டுக்கு அனுப்பியிருந்தனர். அங்கு டவுன்ஷிப்பில் என் சக பொறியாளர் திரு ராமமூர்த்தி அவர்கள் வீட்டில் என்னை சாப்பாடுக்குக் கூப்பிட்டிருந்தார்கள்.

சாப்பாடு முடிந்தது; தூர் தர்ஷனில் சித்ரஹார் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது ஷஷி கபூர் மற்றும் ஷர்மிலா டாகோர் நடித்த "ஆ கலே லக் ஜா" என்ற படத்திலிருந்து ஒரு பாட்டை ஒளி பரப்பினார்கள். அதைப் பார்த்த உடன்,

ராமமூர்த்தி: "இப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நண்பன் செய்த கஜமுஜாதான் ஞாபகத்துக்கு வருகிறது".
நான்: "நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி சென்னை எமரால்ட் தியெட்டரில் 1973 டிசம்பர் 31-ல் மாலைக் காட்சியில்தானே நடந்தது?"

ராமமூர்த்தி என்னைத் திகைப்புடன் பார்த்தார்.

ராமமூர்த்தி: "எப்படி ராகவன்...?"
நான்: நீங்கள் நண்பர்கள் சேர்ந்து தண்ணியடித்துவிட்டு புது வருடத்தை (1974) வரவேற்க இந்தப் படம் சென்றீர்கள். அப்போது முதல் காட்சியில் சர்மீலா டாகோர் பின்னால் ஓடி வரும் ஷஷி கபூர் 'ஸிர்ப் ஏக் பார், ஆ கலே லக் ஜா' என்று கூறுவார். அன்று திரையில் அவ்வாறு அவர் கூறியதும் இங்கே உங்கள் குழுவில் ஒருவன் 'களக், புளக, தூ தூ தூ என்ற சப்ததுடன் வாந்தி எடுத்தான். முன் ஸீட்டில் உட்கார்ந்திருந்தவர் சட்டையெல்லாம் வாந்தி. நண்பனை டாய்லெட்டுக்கு அழைத்துச் சென்றால், முன் ஸீட்டு நபர் வாஷ் பேஸினில் தன் சட்டையை அலசிக் கொண்டிருந்தார். எல்லாம் கஜமுஜா ஆகி விட்டதல்லவா"?
ராமமூர்த்தி: "ராகவன் எப்படி உங்களுக்கு இது தெரியும்? நீங்கள் அச்சமயம் அங்கு இருந்தீர்களா?"
நான்: "அன்று நான் பம்பாயில் இருந்தேன்".
ராமமூர்த்தி: பின் எப்படி நேரில் பார்த்தது போலக் கூறுகிறீர்கள்?
நான்: ஆனால் சில நாட்களுக்குப் பிறகு என் ரூம்-மேட் கிருஷ்ணமூர்த்தி என்பவன் சென்னைலிருந்து திரும்பி வந்து என்னிடம் இதைக் கூறினான். அவன் குழுவில் ராமமூர்த்தி என்றொருவன் இவ்வாறு செய்ததாகவும், ஆ கலே லக் ஜாவை கஜமுஜா செய்ததாகவும் கூறினான்."
ராமமூர்த்தி (ஆவேசத்துடன்): "செருப்பு பிய்ந்து விடும் என்று கிருஷ்ணமூர்த்தி படவாவைப் பார்த்தால் கூறுங்கள். வாந்தியெடுத்தது அந்த ராஸ்கல்தான்."
நான்: "டேக் இட் ஈஸி ராமமூர்த்தி, இது நடந்து 8 வருடம் ஆகி விட்டன."

இப்படியாக இன்னொரு ஹைப்பர் லிங்க் என் வாழ்வில் நடந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/19/2006

தாம்புக்கயிறுகள் எதற்கு?

சென்னை மாநகராட்சித் தேர்தல் நடந்த பிறகுதான் நான் வசிக்கும் நங்கனல்லூரில் ஆலந்தூர் முனிசிபாலிட்டி தேர்தல் நடந்தது. காலை 6.50 மணியளவிலேயே போலீஸார் சுறுசுறுப்பாக வலம் வந்து எந்தக் கட்சிக்காரரும் (ஆளும் கட்சியினர் உட்பட) undue advantage எடுத்துக் கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டனர். மரியாதையாக அதே சமயம் கறாராகச் செயல்பட்டனர்.

பூத்துகளிலும் படு அமைதி. எல்லா கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் காணப்பட்டனர். ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொண்டனர். ஓட்டளிப்பும் தள்ளுமுள்ளு இல்லாமல் நடந்தது.

ஆக, ஒன்று தெளிவாகிறது. இப்போது கூட மனதிருந்தால் தேர்தலை ஒழுங்காக நடத்த முடியும். நான் ஏற்கனவே இந்தப் பதிவில் கூறியபடி, ஆளும் கட்சிக் கூட்டணி இப்போதும் சரி, 2001-லும் சரி, நல்ல நிலைமையாலே இருந்தாலும் தேவையின்றி பிரம்மாஸ்திரத்தைத் தாம்புக் கயிறு போட்டு மேலும் இறுக்கியதுதான் நடந்தது.

2001-ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுகவினர் செய்த ரகளைகளைப் பற்றிய செய்திக் குறிப்புகளை அக்காலத்திலேயே சுடச்சுட படித்தவன் நான். மேயர் தேர்தல் நேரடியாக நடந்த நிலையில், ஒட்டு எண்ணிக்கையைக் கூட அதிமுகவினர் விட்டு வைக்கவில்லை. எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்குப் போய் ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த சீட்டுக்களில் அதிக முத்திரைகள் குத்தி அவற்றைச் செல்லாத சீட்டுகளாக மாற்ற முயற்சி செய்தனர். இருந்தாலும் ஸ்டாலின்தான் ஜெயித்தார்.

இப்போது? அதே மாதிரியானத் தவற்றை தி.மு.க. கூட்டணியினர் செய்கின்றனர். இந்த இடுகை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையுமே குறை கூறுகிறது.

தாம்புக் கயிறுகள் எதற்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/18/2006

IDPL நினைவுகள் - 6

பதிவு - 5
பதிவு - 4
பதிவு - 3
பதிவு - 2
பதிவு - 1

நான் ஏற்கனவே கூறியிருந்தபடி பிளாண்டில் வேலை செய்ய வேண்டிய என்னை கார்ப்பரேட் ஆஃபீசிலேயே உட்கார வைத்து, அதன் லைட் மற்றும் ஃபான்களை மேற்பார்வை செய்யுமாறு பணித்திருந்ததால் நான் பாட்டுக்கு தேமேனென்று எனது மொழிபெயர்ப்பு வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கள் மேனேஜருக்கு மட்டும் என் மேல சிறிது சம்சயம் என்று நினைக்கிறேன். வேறு ஒன்றும் இல்லை, நான் ஆஃபீசுக்கு வராமல் எங்காவது மட்டம் அடித்து விடுகிறேனா என்றுதான். ஆகவே தினமும் தான் காலையில் வேலைக்கு வந்ததும் என்னை இண்டர்காமில் கூப்பிட்டு ஏதாவது பேசி அறுப்பார். நானும் சமயம் கிடைத்தது என்று அவரைப் போட்டு எதிர்மரியாதையாக அறுத்து விடுவது உண்டு.

வருடம் 1987. எம்.ஜி.ஆர். அவர்களது இறுதிச் சடங்குகள் நடந்த தினத்தன்று ஐ.டி.பி.எல். கார்ப்பரேட் ஆஃபீஸில் திடீரென காலை 10 மணிக்கு அமைச்சகத்திலிருந்து வந்த தகவல்களின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5 பஸ்கள் ஸ்டாஃபுகளுக்காக. அடுத்த 5 நிமிடத்தில் எல்லோரும் பஸ்களில் ஏறிக் கொள்ள, கட்டிடமே காலியானது. நான் மட்டும் என் சீட்டில் இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடர்ந்தேன். அடுத்த நாளிலிருந்து நான் பத்து நாட்கள் லீவில் போகவிருந்தேன். ஆகவே கையில் இருக்கும் வேலையை முடிக்க வேண்டுமே என்ற அவசரம் வேறு.

எண்ணி ஐந்தாவது நிமிடம் இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினால் மேனேஜர். அவர் நான் இன்னும் என்னிடத்தில் இருப்பதைப் பார்த்து வியப்படைந்தது போல இருந்தது. சாதாரணமாகப் பேசுவது போல நினைத்துக் கொண்டு என்னெனாவோ சம்பந்தம் இல்லாத கேள்விகள். பிறகு கார்ப்பரேட் ஆஃபீஸ் நிலவரம் பற்றிக் கேட்க எல்லோரும் வீட்டுக்குப் போய் விட்டதைக் கூறினேன். நான் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறேன் என்பதை கடைசியில் கேட்க, பிளாண்டுக்கும் லீவா என்று "ஆச்சரியத்துடன்" நானும் கேட்டேன். சிறிது நேர மௌனம். அவருக்கு பின்னால் லாம்பா என்னும் ஆஃபீஸர் "ராகவன் போயிருக்க மாட்டான் என்று நான் கூறியது சரியாகப் போய் விட்டது பார்த்தீர்களா" என்று கேட்டது மேனேஜர் டெலிபோன் மவுத் பீசை சரியாக மூடாததால் எனக்குத் தெளிவாகக் கேட்டது.

"உங்களைப்போல் எத்தனைப் பேரை நான் பார்த்திருக்கிறேன்" என்று நான் நினைத்தேன், ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சற்று நேரம் அறுத்து விட்டு, பேச்சை முடித்து கொண்டார் மேனேஜர். நானும் விறுவென்று மூட்டை கட்டிக் கொண்டு, கீழே வந்து, என் சைக்கிளில் ஏறி வீடு நோக்கி விரைந்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2006

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி - 2

ராமர் அயோத்திக்குத் திரும்புகிறார். பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது. மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பதினான்கு ஆண்டு காலம் தங்கள் வீட்டுப் பிள்ளையாம் ராமனை காணாமல் இருந்தவர்கள் அல்லவா? ஏதோ அந்தப் பதினாலு ஆண்டுகளுக்கு ராமனுக்கு எவ்வகையிலும் குறைவில்லாத பரதாழ்வாரின் ராச்சியம் நடந்ததோ அவர்கள் பிழைத்தார்களோ. இருந்தாலும் தலைப் பிள்ளை என்பது தனிதானே. மக்களை முந்திக் கொண்டு பரதனும் அல்லவா ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.

எல்லோரும் ராமனை பிரமிப்புடனேயே நோக்குகின்றனர். ஆனானப்பட்ட தசகண்டன் ராவணனை அல்லவா வெற்றி கொண்டு வந்துள்ளான் அவர்கள் வீட்டுப் பிள்ளை? ஒரு மலையையே பெயர்த்து எடுக்கக் கூடிய அனுமனே அவனைப் பணியும்போது தாங்கள் எம்மாதிரம் என திகைத்து நிற்கின்றனர்.

அப்போது கழியை ஊன்றிக் கொண்டு எல்லோரையும் விலக்கி உள்ளே ஓடி வருகிறான், அந்த வயதான தோட்டக்காரன். ராமனும் அவன் சகோதரர்களும் குழந்தைகளாக இருந்த போது ஓடி விளையாடி தூள் கிளப்பிய தோட்டத்தைப் பராமரித்தவன் அவன். அடேய் ராமா, லட்சுமணா, பரதா, சத்ருக்குனா, பூக்களை சேதப்படுத்தாது விளையாடுங்கள் என்று கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து குழந்தை போல அவனும் விளையாடிய உரிமை உடையவன்.

அந்த தோட்டக்காரன் நேரே வந்து ராமரிடம் வந்து, பழக்க தோஷத்தில் "அடேய் ராமா, என்னை ஞாபகம் இருக்கிறதா" என்றுக் கூறிக் கொண்டு அவரைக் கட்டியணைத்துக் கண்ணீர் உகுக்க, பகவானும் அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாராம். சுற்றியிருந்தவர்கள் திகைத்து நின்றனராம். அந்தத் தோட்டக்காரனைப் பொருத்தவரை ராமன் அதே பாலகனே. இந்தக் கதையை 19-ஆம் நூற்றாண்டில் வெளி வந்த "வினோத ரச மஞ்சரி" என்னும் புத்தகத்தில் சமீபத்தில் 1963-ல் முதன் முறையாகப் படித்தேன்.

இந்தக் கதை பின்னால் இந்திப் படம் "அதாலத்" பார்த்த போது ஞாபகம் வந்தது. அப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதில் அமிதாப் பச்சன் அப்பா, மகன் என்று இரு வேடங்களிலும் வருவார். அது ஒன்றும் புதிது அல்ல. அதே போல, அதில் பிள்ளை அமிதாப்பைப் பற்றியும் இங்கே நான் பேச வரவில்லை.

அப்பா அமிதாப் பச்சனைப் பற்றி மட்டும் பேசப் போகிறேன்.

முதலில் கிராமத்தானாக வருவார். எளிய போஜ்பூரியில் பேசிக் கொண்டுக் கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார். வில்லன்களின் சூழ்ச்சியால் சிறைக்குச் சென்று அதன் பிறகு காலத்தின் கோலத்தால் ஒரு பெரியக் கடத்தல்காரனாக உருவெடுப்பார்.

அது வரை போஜ்பூரியில் பேசி வந்தவர் மும்பை இந்திக்குத் தாவுவார். மிக நாசுக்கானவராக மாறி எல்லோரையும் கலங்கடிப்பார்.

ஆனால் அது எல்லாம் மற்றவர்களிடம்தான். தான் உயிரையே வைத்திருக்கும் தன் மனைவி வஹீதா ரெஹ்மானிடம் மட்டும் கடைசி வரை போஜ்பூரியே பேசுவார்.

அந்தப் படம் எழுபதுகளில் வெளி வந்தது. அப்போது அப்படத்தைப் பார்த்து இந்த ஒரு விஷயத்தைக் கண்டு மிக பிரமித்தேன். படம் என்னவோ வழக்கமான அமிதாப் கதைதான். இந்த ஒரு விஷயம் மட்டும் என்னை மிகக் கவர்ந்தது. என்ன காவிய ரேஞ்சில் அன்பு?

ராமன் மாறவேயில்லை!

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/16/2006

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி

காகுத்தனுக்காக அன்னை சீதா பிராட்டியாரைத் தேடி அனுமன் கடலைத் தாண்டி இலங்கை வருகிறான். தடுத்த லங்கையின் காவல் தெய்வத்தை தோற்கடித்து உள்ளே பிரவேசிக்கிறான். ஒரு சிறு குரங்கு ரூபமெடுத்து ஒவ்வொரு இடமாக சீதா பிராட்டியார் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நாடுகிறான். கடைசியில் அசோக வனத்துக்கு வருகிறான். சீதா பிராட்டியாரை சந்தித்துப் பேசி, காகுத்தன் கொடுத்தக் கணையாழியை அவரிடம் அளித்து, பதிலுக்கு ராம பிரானிடம் "கண்டேன் சீதையை" என்று பின்னால் கூற ஏதுவாக சீதா பிராட்டியாரிடமிருந்து சூடாமணியை பெறுகிறான்.

வந்த வேலை முடிந்தது. ஆனால் ஒரு நெருடல் பாக்கி இருக்கிறதே. சீதா பிராட்டியாரைத் தான் விஸ்வரூபம் எடுத்து தன் முதுகில் ஏற்றி ராமபிரானிடம் சேர்ப்பிப்பதாகச் சொன்ன யோசனையை சீதா தேவி அது தன் கணவனுக்கு இழுக்கு என்று மறுத்து விட்டார். சற்றே கையறு நிலையில் இருப்பதாக உணர்கிறான் ராமதூதனாகிய அனுமன். "சரி, இந்த ராட்சஸப் பசங்களை சற்று விசாரித்து விட்டுச் செல்வோம்" எனத் தீர்மானிக்கிறான். சடசடவென்று மரங்களை முறித்துப் போடுகிறான். காவல்காரர்களை ஆத்திரம் தீர அடித்து விரட்டுகிறான். அவர்கள் குய்யோ முறையோ எனக் கத்திக் கொண்டு அரசனிடம் தகவல் சொல்ல ஓடுகின்றனர்.

ராவணனின் வீரர்கள் ஒவ்வொருவராக பரலோகம் செல்கின்றனர். ராவணனது அருமை மகன் அட்சயக் குமாரனும் மாள்கிறான். அப்போது போருக்கு வருகிறான், மேகநாதனாகிய இந்திரசித்து. அனுமன் மேல் விடும் அம்புகளை அனுமன் அனாயாசமாக தவிர்த்து பறக்கிறான். மேலிருந்து பாறை, பிடுங்கப்பட்ட மரங்கள் என்றெல்லாம் படையினர் மேல் போட்டு துவம்சம் செய்கிறான் அனுமன். இந்திரசித்து செய்வதறியாது திகைக்கிறான். பிறகு சுதாரித்து பிரும்மாஸ்திரத்தை விடுகிறான். வருவது பிரம்மாஸ்திரம் என்பதைக் கண்டு அனுமன் மரியாதையுடன் கைகூப்ப அவனை அஸ்திரம் கட்டிப் போட்டு தரையில் தள்ளுகிறது. அனுமனுக்குக் கிடைத்த வரத்தின்படி அது அவனை ஒரு முகூர்த்த காலம்தான் கட்டுப்படுத்தும். அது அவனைத் தவிர மற்றவருக்குத் தெரியாது. ஆகவே அவன் கவலையின்றி இருக்கிறான்.

அரக்கர்களுக்கோ கும்மாளம். அகப்பட்டுக் கொண்டது துஷ்டக் குரங்கு என்று ஆர்ப்பரித்து, அனுமனை மேஎலும் கயிற்றினால் கட்டுகின்றனர். அதைப் பார்த்த இந்திரசித்து தலையில் அடித்துக் கொள்கிறான். "அட இந்த முட்டாப் பசங்க செஞ்ச வேலைய என்னான்னு சொல்லுறது" என்று கவுண்டமணி ரேஞ்சுக்கு புலம்புகிறான். விஷயம் என்னவென்றால், பிரும்மாஸ்திரம் செயலில் இருக்கும்போது, அதன் மேல் வேறு அதிகப்படியான கயிற்றைக் கொண்டு வந்து கட்டினால், பிரும்மாஸ்திரம் தானே விலகி விடும் என்பதே. அனுமனுக்கும் அது தெரியும், இருப்பினும் பேசாமல் இருந்து இந்திரசித்தை மேலும் டென்ஷனாக்குகிறான்.

இப்போது இந்தக் காட்சி ஏன் என் ஞாபகத்துக்கு வரவேண்டும்?

ஏற்கனவே பலமான நிலையில் உள்ள ஆளும் கட்சிக் கூட்டணி தேவையில்லாமல் தேர்தலில் ஏன் தில்லுமுல்லு செய்ய வேண்டும்? இது 2006-க்கும் பொருந்தும், 2001-க்கும் பொருந்தும்? தேவையில்லாத தாம்புக் கயிற்றால் முக்கியமான பிரம்மாஸ்திரம் அல்லவா செயலிழந்து போகிறது?

சமீபத்தில் 1977-ல் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் பிரதமர் புட்டோ நல்ல நிலையிலேயே இருந்தார். இருந்தாலும் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற எண்ணி தேர்தலில் தில்லுமுல்லு செய்து, பேரைக் கெடுத்துக் கொண்டார். ஜியா உல் ஹக்கால் பதவியிறக்கப்பட்டு, கடைசியில் தூக்கில் தொங்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/13/2006

CPWD அனுபவங்கள் - 6

இதன் முந்தையப் பகுதிகளின் சுட்டிகள்:

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
குட்டி ரேவதியும் CPWD-யும்

அன்று கோட்டகப் பொறியாளர் (மின்சாரம்) எங்கள் சைட்டுக்கு (CRPF முகாம், ஆவடி) வரும்போதே சற்று டென்ஷனுடன் வந்தார். மெயின் கேட்டிலேயே ஜீப்பை நிறுத்தி விட்டு நான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த தெருவிளக்கு கேபிள் போடும் குழிக்கு அருகில் வந்தார்.

சிறிது நேரம் நான் மேற்பார்வை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு திடீரென்று "ஏன் அம்மாதிரிக் கடிதம் எழுதினீர்கள்" என்று கேட்டார். எனக்கு அவர் கேட்பது புரியவில்லை. பிறகு அவர் என்னை ஜீப்பில் ஏறுமாறு கேட்டுக் கொண்டு அலுவலகம் அழைத்துச் சென்றார். அங்குதான் மனிதர் விளக்கினார்.

சில நாகளுக்கு முன் எங்கள் அலுவலகத்துக்கு ஸ்பெசிஃபிகேஷன் கமிட்டியாரிடமிருந்து ஒரு சர்குலர் வந்திருந்தது. அதில் High Rupturing Capacity (HRC) பியூஸ்கள் காலாவதியான பிறகு இரண்டாக வெட்டிப் போடுமாறு கூறப்பட்டிருந்தது. ஏனெனில் பழையதை வைத்து spurious பியூஸ்கள் தயாரிக்கப்பட்டு மார்க்கெட்டிற்கு வருகின்றனவாம். இந்த பியூஸ்கள் ரொம்ப பாதுகாப்பானவை, அதே சமயம் விலையும் அதிகம். முதல் முறை வாங்கிப் போட்டு விடுவார்கள். அது ப்ளோ அவுட் ஆனதும் இன்னொன்று வாங்காது சாதாரண கம்பிகளையே பியூஸாக உபயோகிப்பார்கள். இதுதான் யதார்த்த நிலை. அதே சமயம் கம்பி பியூஸ்களை (rewirable fuses) உபயோகிக்கும் ஸ்விட்சுகளும் இருந்தன.

ஆகவே என்ன நடந்ததென்றால் HRC-க்கு பதிலாக சாதாரண மின் கம்பிகளையே உபயோகிப்பார்கள். நான் என்ன செய்தேனென்றால், ஸ்பெசிஃபிகேஷன் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதாவது செய்யப் போவது சாதாரண கம்பிகளை உபயோகிப்பதே. அதற்கு பேசாமல் ரிவைரபிள் பியூஸ் உள்ள ஸ்விட்சையே போட்டுத் தொலைக்கலாமே என்று ஒரு இன்லேண்ட் லெட்டரில் எழுதி தில்லிக்கு போஸ்ட் செய்து விட்டு அதைப் பற்றி மறந்தும் விட்டேன். அக்கடிதம் தில்லியில் போய் பெரிய புயலையே கிளப்பி விட்டது. அங்கிருந்து ஒரு பெரிய ஓலை எல்லா கோட்டகங்களுக்கும் வந்தது. அதில் ஒவ்வொரு கோட்டகத்தில் உள்ள சைட்டிலும் நான் சொல்வது போலத்தான் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லியிருந்தார்கள். அதை எடுத்துக் கொண்டு எங்கள் EE வந்திருக்கிறார். அவர் எங்கள் ஏ.இ.யிடம் கேட்ட்க அவர் மென்று விழுங்கியிருக்கிறார். இப்போது இருவருமே என்னை "அடே பாதகா" என்பது போல பார்த்தனர்.

சரி பதில் அனுப்ப வேண்டுமே. இ.இ. பேசாமல் தனது சைட்டுகளில் HRC பியூஸ்கள்தான் போடுகிறோம் என்று சத்தியம் செய்யாத குறையாக எழுதி அனுப்பி விட்டார். சொல்லி வைத்தாற்போல எல்லா டிவிஷன்களிலிருந்தும் அதே பதில் அனுப்பப்பட்டு விட்டது.

என் சக இஞ்சினியர் என்னிடம், "என்ன சார் இவ்வாறு ஆகி விட்டதே, ஸ்பெசிஃபிகேஷன் கமிட்டி உங்களை விளக்கம் கேட்டால் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். நான் கூறினேன்: "ஒன்றும் நடக்காது. ஊரே சிரித்தால் கல்யாணம். எல்லாமே ஒப்புக்கு செய்யும் வேலை. நோண்ட மாட்டார்கள். அப்படி நோண்டினால் நான் ஏதாவது ஜூனியர் இஞ்சினியர் Materials at site (MAS) அக்கவுண்டைப் பார்க்கச் சொல்வேன். அதுவும் கடந்த 5 வருடங்களுக்கு. அப்போது எல்லோரும் மாட்டுவார்கள். ஆகவே இதை அப்படியே அமுக்கி விடுவார்கள் பாருங்கள்" என்றேன். அதுதான் நடந்தது.

இந்த ஒப்பந்தக்காரர்கள் பில்கள் போடும்போது பார்ட் பில்கள் வேலை நடந்து கொண்டிருக்கும்போது போடுவோம். அதில் ஒரு டிக்ளரேஷன் தர வேண்டும். அது இவ்வாறு தரப்படும்:

1. It is hereby declared that the work measured and paid for in this part bill has been done as per agreement.
2. Part rates are proposed in Government interest.
3. Contractor has removed all debris from site.

நான் என்ன செய்தேன் என்றால், பில்லை எல்லாம் எழுதிவிட்டு மேலே உள்ளதை மட்டும் ஹிந்தியில் எழுதுவேன். ப்ரமாணித் கியா ஜாத்தா ஹை, என்று ஆரம்பித்து அது செல்லும். முதல் தடவை எழுது ஏ.இ.யிடம் கொடுத்தேன். அவர் என்னை புருவம் உயர்த்திப் பார்த்தார். நான் அவரிடம் இந்த டிப்பார்ட்மெண்டில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் வேலை செய்ய அனுமதி உண்டு என்பதை எடுத்துக் கூற சிரித்துக் கொண்டே கையெழுத்திட்டார். டிவிஷன் ஆஃபீசில் ஆடிட்டர் டென்ஷன் ஆனார். இ.இ.யிடம் போயிருக்கிறார். அவரும் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார். பில்லை திருப்பி அனுப்பப் போவதாக என்னை ஆடிட்டர் போனில் மிரட்ட, அவர் தைரியமிருந்தால் எழுத்தில் ஆட்சேபிக்குமாறு கூற அவரும் ஜகா வாங்கினார். பிறகு என்னிடம் அழாக்குறையாக என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்க நானும் விளக்க, மனதேயில்லாது பாஸ் செய்தார். எல்லாம் ஒரு தமாஷுக்குத்தான். டிவிஷன் ஆபீசில் அக்காலக் கட்டத்தில் நான் தயாரித்த பில்கள் சுலபமாக ஹிந்தி எழுத்துக்கள் இருந்ததால் தேடி எடுக்க முடிந்தது.

ஆனால் விஷயம் அதோடு முடியவில்லை. தில்லியிலிருந்து ஒரு ஆடிட் பார்ட்டி வந்திருந்தது. டிவிஷன் ஆபீசில் இந்த பில்களைப் பார்த்து விட்டு எங்கள் சப்டிவிஷனையே ரேண்டம் ஆடிட்டுக்குத் தேர்ந்தெடுத்தனர். இப்போது ஏ.இ. டென்ஷனார். "என்னங்க நீங்க இப்படி மாட்டி விட்டீர்கள் என்று சாடினார். எனக்கும் உதறல்தான். ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது. அவர்கள் வந்தது என்னைப் பார்ப்பதற்கே. என்னுடன் சந்தோஷமாக ஹிந்தியில் உரையாடிவிட்டுச் சென்றனர். காட்டிய ரிஜிஸ்தர்களில் ஒப்புக்கு புரட்டிப் பார்த்து விட்டு கையெழுத்திட்டு விட்டு சென்றனர். அப்போதுதான் எங்களுக்கும் மூச்சு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/12/2006

யோம் கிப்பூர் யுத்தம் டோண்டு ராகவனுடையது

இஸ்ரேலுக்கும் எனக்கும் பூர்வ ஜன்ம பந்தம் என்று நான் மனப்பூர்வமாக நினைத்தது என்னை பொருத்தவரை நிஜமாகி விட்டது. யோம் கிப்பூரன்று இஸ்ரேல் மேல் யுத்தம் தொடுக்கப்பட்டது. என் மேலும்தான். என்னுடைய முந்தைய யோம் கிப்பூர் பதிவை வலைப்பூவில் இட்டப் போது அது நல்ல விளைவை ஏற்படுத்தும் என்பதை எதிர்ப்பார்த்தது நிஜம். ஆனால் அது பொய்த்தது. அப்பதிவு ஒரு சமாதானத்துக்கான சமிக்ஞை என்றால் இப்பதிவு ஒரு யுத்த அறிவிப்பு.

நான் மிகவும் மதிக்கும் வலைப்பூ நண்பர் ஒருவர் சொன்ன ஆலோசனையின் பெயரிலும், நானே அது பற்றி யோசித்து வந்ததாலுமே எனது அந்த சமாதான ஆஃபர் தந்தேன். அது ஏற்கப்படவில்லை. மாறாக எதிராளி தரப்பிலிருந்து விரோதச் செய்கைகள் பன்மடங்கு அதிகரித்து, என் மகள் பெயரிலும் வலைப்பூ ஆரம்பிக்க வைத்தது. ஏற்கனவே என் மனைவி பெயரில் இன்னொரு வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டிருந்தது. அதை தமிழ்மணத்திடம் பேசி லிஸ்டிலிருந்து எடுக்கச் செய்த பிறகே முந்தையப் பதிவையே போட்டேன். அதே போல எனது மகள் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூவையும் தமிழ்மணத்தார் எனது கோரிக்கையை மதித்து நீக்கினர். ஆனால் அவ்விரு பதிவுகளும் பிளாக்கரில் இருக்கும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

துளசி அவர்களிடம் என்னை இம்பெர்சனேட் செய்து அவரிடமிருந்து நானும் என் மகளும் இருக்கும் படங்களை போலி வாங்கினான். அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்து ஜூலை மாதமே என்னிடமிருந்து சஷ்டியப்தபூர்த்தி படங்களை வாங்கியிருக்கிறான் என்பதை நான் நேற்று ஜீமெயில் ஆர்கைவ்ஸைப் பார்த்து தெரிந்து கொண்டேன். இப்போதைய நிலை என்னவென்றால், படங்கள் அவனிடம் போய் விட்டன. ஆனால் எனது தளங்களை உடைத்தல்ல. சாதாரண ஜேப்படித் திருடன் ரேஞ்சில்தான் வேலை செய்திருக்கிறான் போலி. என்னைப் போல இமிடேட் செய்ய அவன் உபயோகித்த ஐடி raghtransin at gmail dot com (the last t is missing in raghtransint). அதே போல மாயவரத்தானை இமிடேட் செய்ய உபயோகித்த ஐடி mayiladuturai at gmail dot com (h has been removed from mayiladuthurai). இரண்டு சேட்டுகள் நடந்துள்ளன. வேறு ஏதாவது நடந்ததா என்பதை இப்போதுதான் பார்க்க வேண்டும். என்னிடமிருந்து வரும் மெயில்களை ஐடியை சரிபார்த்து பதிலளிக்கவும் என என் நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நான் பார்க்க வேண்டும். மேலே கூறியது எல்லாம் மைனஸ் பாயிண்டுகள். ப்ளஸ்ஸில் என்ன இருக்கிறது? முதலில் எனக்கு பக்கபலமாய் இருப்பது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன். அதே போல லட்சக்கணக்கில் ராமநாமத்தை எழுதும் என் மகளுக்கோ, லட்சுமிநரசிம்மரின் பக்தையான என் மனைவிக்கோ ஒரு கேடும் வராது.

அடுத்த ப்ளஸ் பாயிண்ட் இந்த அறுபது வயது இளைஞன் டோண்டு ராகவனின் மனவுறுதி. அந்த உறுதி அவன் சாகும்வரை அவனுடனேயே இருக்கும். போலி டோண்டு, படங்களைத்தானே போடப் போகிறாய்? போ, போய் போட்டுக் கொள்.

நான் இப்போது என்ன செய்யப் போகிறேன்? நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வேலைகளைப் பார்த்துக் கொண்டு, அதே சமயம் பதிவுகளும் போடப் போகிறேன். இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையேயானது. அதர்மம் இப்போது கொக்கரிக்கிறது, உன் சம்பந்தமானப் படங்களைப் போடுவேன் என்று மிரட்டுகிறது. போட்டுக் கொள் என்று அந்த மிரட்டலுக்கு பதில் கூறியாகி விட்டது. என் இணைய நண்பர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அதற்கு முன்னால் சதயம் அவர்கள் அவர் பதிவில் போட்டதை இங்கே எடுத்து எழுதுகிறேன்.

"தனிப்பட்ட முறையில் பெரியவர் டோண்டுவிற்காக வருந்தினாலும் இத்தகைய ஆப்புகளை வாங்குவதற்காக அவர் மெனக்கெட்டு உழைத்தார் அல்லது அவரின் நலம்விரும்பிகளை உழைக்க வைத்தார் என்றே நிணைக்கிறேன்.அந்தச் சகோதரியைப் பற்றிய சில பின்னூட்டங்கள் நிச்சயமாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்."
ஏன் சார் ஆஷாடபூதித்தனமாக வருத்தமெல்லாம் தெரிவிக்கிறீர். அதற்கு உங்களுக்கு அனானியில் பின்னூட்டம் இட்டவரே மேல். வெளிப்படையாகவே எழுதுகிறார்.

"ஜாக்கிரதை சதயம். நீங்கள் கூறியது போல ஒரு டோண்டு சந்திக்கும் பிரச்சினைகள் போதாதா. நீங்கள் வேறு சனியனை ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? டோண்டு நாசமாய் போகட்டும். அவனால்தானே மட்டுறுத்தல் வந்து தமிழ்மணத்தின் சுதந்திரமே பறிபோனது. நன்றாக வேண்டும் அவனுக்கு."
அதானே, அந்த மட்டுறுத்தலால்தானே உங்கள் பதிவுகள் இற்றைப்படாமல் இருக்கின்றன. போய் ஸ்வீட் சாப்பிடுங்கள் சார்.

"இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டோண்டு அவர்கள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பார் என நான் எண்ணவில்லை."
இல்லையே, நன்றாகத் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன்.

"மற்றபடி தொழில்நுட்ப யுத்தத்தில் உங்கள் கை ஓங்கியிருப்பது உண்மைதான்....உங்களின் திறமையையும், உழைப்பையும், துல்லியத்தையும் பார்த்து என் போன்ற அரைட்ரவுசர்கள் அசந்து போயிருக்கிறோம். உங்களின் பின்னூட்டத்தை நீக்கவே படாதபாடு பட்டேன்...ஹி..ஹி...என்னுடைய தொழில்நுட்ப அறிவு அத்தகையது."
போய் போலி டோண்டு ரசிகர் மன்றம் வைப்பதே நலம், அல்லது சிம்ரன் ஆப்பக்கடையிலிருக்கும் ரசிகர் மன்றத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி, கருத்துச் சுதந்திரம் பறிபோகிறதென்று ஒரு ஹை மாரல் ரீசனுக்காக மட்டுறுத்தலையே செயல்படாது இருப்பவர் போலியின் தரப்பிலிருந்து வரும் கருத்து சுதந்திர கொலைக்கு இப்படி ஏன் ஜிஞ்சா அடிக்கிறீர்கள்? உங்களுக்கும் ஆப்பு வைப்பான் என்ற பயம்தானே காரணம்?

இப்போது போலிக்கு. என்னைப் பொருத்தவரை நீ இல்லை. அவ்வளவுதான். இனிமேல் உன்னை நான் லட்சியம் செய்ய மாட்டேன். நான் பாட்டுக்கு என் பதிவுகளை வழக்கம் போல போட்டுக் கொண்டிருப்பேன். பின்னூட்டங்கள் வருகின்றனவா இல்லையா என்பதைப் பற்றி கவலை இல்லை. இப்போது நண்பர்களுக்கு. இது யுத்தம். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடுநிலைமை இருக்க முடியாது. என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

அதற்காக அனானி மற்றும் அதர் ஆப்ஷன்களை நான் திறக்கப் போவதில்லை. ஒரு வலைப்பூ உருவாக்கி, ப்ரொஃபைல் கிடைக்காமல் செய்தால் போலியால் என்ன செய்ய முடியும்? அதே சமயம் இன்னொரு வேண்டுகோள். என் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுபவர்கள் போலி டோண்டுவைப் பற்றி ஒன்றும் பேசாதீர்கள். பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட பதிவுக்கு ஏற்றவையாக இருக்கட்டும். இப்பதிவு மட்டும் நான் மேலே கேட்டுக் கொண்டதற்கு ஒரு விதி விலக்கு என்பதும் வெள்ளிடை மலை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/11/2006

ஞாபகசக்தி பற்றிய சில ஞாபகங்கள்

இது ஒரு மீள்பதிவு, சற்று கூடுதல் விஷயங்களுடன்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நான் கூறும் ஆண்டுகள் சிலருக்கு வியப்பைத் தரலாம். உதார் விடுகிறேன் என்ற ரேஞ்சுக்கு ஒருவர் போய் விட்டார். ஆனால் அவருக்காக மட்டுமல்ல இந்தப் பதிவு. (அவருக்கு மட்டும் காதோடு ஒரு வார்த்தை. நான் எப்படியுமே பழைய பதிவுகளை இற்றைப்படுத்துவதாகத்தான் இருந்தேன். நீங்கள் வெறும் ட்ரிக்கர் மட்டுமே. ட்ரிக்கரை தமிழாக்கம் செய்யலாம் என்று பார்த்தால், அதற்கு இரண்டு வார்த்தைகள்தான் எனக்குத் தெரிந்து தமிழில் உள்ளன, அதாவது, 'குதிரை' மற்றும் 'சனியன்'. ஆகவே ஏன் வம்பு? ஆங்கிலமே உத்தமம்). இப்போது பதிவுக்கு செல்வோம்.

எனக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தச் சக்தி எதிர்ப்பாராத நேரங்களில் வந்து என்னையே வியப்பிலாழ்த்தி விடுகிறது.

வருடம் 1972. பம்பாயில் விநாயக சதுர்த்தி தினம். பல பொது இடங்களில் இலவச சினிமா காட்சிகள் காண்பிக்கப்படும். மாதுங்காவில் ஒரு இடத்தில் "சபாஷ் மீனா" படம் போட்டார்கள்.

இப்படத்தை நான் முதலில் 1958-ல் சென்னையில் ஒரு முறை பார்த்ததோடு சரி. கடந்த 14 வருடங்களில், அதாவது 1972 வரை அப்படத்தைப் பற்றி நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

ஆனால் என்ன ஆச்சரியம்! காட்சிகள் ஒவ்வொன்றாகத் திரைக்கு வரவர சில நொடிகள் முன்னால் அவற்றுக்குரிய வசனங்கள் தாமாகவே எனக்கு நினைவுக்கு வந்தன.

சிவாஜி வாயைத் திறப்பதற்கு முன்னமேயே அவர் வசனங்களை நான் கூற ஆரம்பித்தேன். என் நண்பர்களுக்கு ஒரே ஆச்சரியம். எனக்கும்தான்.

இப்போது என் நண்பன் ஒருவனின் ஞாபக சக்தியைப் பற்றிக் கூற வேண்டும்.

வருடம் 2002. ஒரு பேட்டன்ட் வக்கீலின் பெயரை டாட்டா மஞ்சள் பக்கங்களில் பார்த்தேன். அவர் பெயர் ஈ. ஆர். நாராயணன். முகவரி திருவல்லிக்கேணியில். என்னுடன் இந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தவனாக இருப்பானோ என்ற ஒரு சம்சயம் (மண்டையில் பல்ப்!).

அவனுக்கு டெலிஃபோன் செய்தேன். அவன் ஹல்லோ என்று சொல்லும்போதே அவன் குரலை அடையாளம் கண்டு கொண்டேன். இருந்தாலும் சற்று முன் ஜாக்கிரதையுடன் பேச ஆரம்பித்தேன்.

நான்: "ஹல்லோ, நாராயணன்தானே?"
அவன்:"ஆம் நீங்கள் யார்?"
நான்: "நீங்கள் 1962-ல் எஸ்.எஸ்.எல்.ஸி. ஹிந்து உயர்நிலைப் பள்ளியிலிருந்து, பொறியியல் வகுப்பில் பாஸ் செய்தீர்களா? வகுப்பு ஆசிரியர் என்.டி.சுப்பிரமண்யம் அவர்கள்?"
அவன்:"ஆமாம்".
நான்: "அப்படியென்றால் நான் உங்கள் வகுப்புத் தோழன், என் பெயர் ராகவன்" அவன்: (சிறிதும் தயக்கமின்றி): இந்து ரிப்போர்ட்டரின் பிள்ளைதானே, 15, வெங்கடாசல செட்டித் தெரு?"

100% சரி. இதில் என்ன விசேஷம் என்றால் நான் முதலிலேயே தயாராக இருந்து கொண்டுதான் அவனுடன் பேச்சை ஆரம்பித்தேன். அவனோ ஒரு தயார் நிலையிலும் இல்லாத போதே 40 வருடங்களாக என்னைப் பற்றி நினைக்காமலேயே இருந்தாலும் ஒரு நொடியில் என்னை அடையாளம் கண்டுக் கொண்டான்.

அதுவே இன்னொரு க்ளாஸ்மேட் ஸ்ரீராஜ் என்று பெயர். திருவல்லிக்கேணி தேரடி தெருவில் கடந்த 60 ஆண்டுகளாக வாசம். அவனுக்கு சுத்தமாக என் ஞாபகமே இல்லை. நாராயணனும் நானும் எவ்வளவோ முயன்றும் அவனுக்கு ஞாபகசக்தியை வரவழைக்க முடியவில்லை. நாராயணனை அவனுக்குத் தெரியும், ஏனெனில் அவர்கள் தினமும் சந்திக்கின்றனர்.

சுஜாதா அவர்கள் தான் 4 வயது குழந்தையாக இருந்தபோது மாட்டு வண்டி கட்டிக் கொண்டு சினிமாவுக்குத் தன்னை அழைத்துச் சென்றது நன்றாக ஞாபகம் இருக்கிரது ஆனால் படையப்பாவில் வில்லி கேரக்டரில் வரும் நடிகையின் உண்மைப் பெயர் மறந்து விட்டது என எழுதியிருந்தார்.

மனித மூளை ஒரு அற்புதமே. ஆயிரம் கணினிகளும் இதற்கு ஈடாகுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/10/2006

ஹைப்பர் லிங்க்-2

சக வலைப்பதிவாளர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். இந்த மீள்பதிவுக்கும் கிருஷ்ணாவே காரணம். கிருஷ்ணாவும் என்னை மன்னிக்கவும். இப்பதிவிலும் உங்களைப் படுத்திய அதே 1961-ஆம் ஆண்டு வந்து தொலைக்கிறது. இப்போது பதிவுக்கு:

சமீபத்தில் 1970-ஆம் ஆண்டு என்னுடன் பத்மா சந்திரசேகரன் என்பவர் ஜெர்மன் படித்து வந்தார். அவருடன் ஒரு நாள் மேக்ஸ் ம்யுல்லெர் பவன் நூலகத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.

தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் தன் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் கூறினார். உடனே என் தலைக்குள் வழக்கமான பல்ப் எரிந்தது போன்ற உணர்ச்சி.

நான்: "நீங்கள் 1948-ல் பள்ளியிறுதித் தேர்வு குறைந்த வயதுக் காரணமாக பனாரஸ் மெட்ரிக்கில்தானே தேர்ச்சிப் பெற்றிர்கள்?"

பத்மா: "ஆமாம். உங்களுக்கு எப்படித் தெரியும்?"
நான்: "அதன் பிறகு பனாரஸ் இன்டெர் செய்தீர்கள் அல்லவா?"
பத்மா: "ஆமாம், ஆனால் எப்படி இது உங்களுக்கு...?"
நான்: "அதே போல பி.ஏ.வும் செய்தீர்கள் அல்லவா?"
பத்மா: முதலில் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கூறுங்கள்"
நான்: "பிறகு சொல்கிறேன். நீங்கள் ஐ.ஏ.எஸ். எழுதலாமா என்று சாயி பாபாவிடம் கேட்ட போது, அவர் உங்களிடம் 'எஸ்.ஏ.ஐ திருப்பிப் போட்டால் ஐ.ஏ.எஸ் என்று வருகிறது. முயற்சி செய்' என்று கூறினார் அல்லவா?"
பத்மா (பொறுமை இழந்து): "இதற்கு மேல் உங்களுடன் பேச வேண்டுமானால் இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்பதைக் கூற வேண்டும்!"
நான்: இதைப் பற்றியெல்லாம் நீங்கள் சமீபத்தில் 1961- ல் குமுதத்தில் எழுதியிருந்தீர்கள். அதை நான் படித்தேன்."
பத்மா: "அதைப் பற்றி நானே மறந்து விட்டேன். நீங்கள் எப்படி நினைவு வைத்திருக்கிறீர்கள்?"
நான்: "அந்தக் கட்டுரையில் மேலே கூறியதையெல்லாம் எழுதிய நீங்கள் உங்கள் பேட்சில் ஐ.ஏ.எஸ் பிரிவில் போதுமான காலியிடம் இல்லாததால் ஐ.ஏ.& ஏ.எஸ் ஆக பணி ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது என்றும் கூறினீர்கள். உங்கள் பேட்சில் இருந்த சந்திரசேகரன் என்பவரை காதலித்து மணம் புரிந்ததாகவும் கூறினீர்கள். இப்போது பேசுகையில் நீங்கள் ஐ.ஏ.& ஏ.எஸ். என்றும் உங்கள் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ் என்றும் கூறினீர்கள். உடனே நான் படித்த உங்கள் கட்டுரை நினைவுக்கு வந்தது. ஆகவே கேட்டேன்."

கால வரிசைப்படிப் பார்த்தால் இது என் நினைவிலிருக்கும் முதல் ஹைப்பர் லிங்க் ஆகும். ஹைப்பர் லிங்குக்கான சொற்கள் இங்கு: "நான் ஐ.ஏ.& ஏ.எஸ், என் கணவரும் ஐ.ஏ.& ஏ.எஸ்"

மேலும் பல ஹைப்பர்லிங்குகள் போட்டு படுத்துவேன் என்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஆடுதுறை ரகு - ஒரு ஹைபெர் லிங்க்

இது ஒரு மீள் பதிவு. இன்னொன்றா என்று நம்பியார் குரலை விவேக் மிமிக்ரி செய்வது போல கூவ நினைப்பவர்களுக்கு ஒரு விஷயம். இந்த மீள்பதிவுக்கு வலைப்பதிவர் கிருஷ்ணா அவர்களே பொறுப்பு. இப்போது இந்த ஹைப்பர்லிங்குக்குப் போவோமா? கிருஷ்ணா அவர்களுக்கு நம்பிக்கை வராவிட்டால் இதில் உள்ள முதல் பின்னூட்டங்களின் தேதிகளைப் பாருங்கள்.

சமீபத்தில் 1972-ஆம் வருஷம் நான் பம்பாயில் சி.பி.டபிள்யூ.டி யில் இளநிலைப் பொறியாளராக இருந்தேன். ஒரு நாள் கேன்டீனில் வைத்து என் நண்பர் வெங்கடராமன் எனக்கு ஒரு புது நபரை அறிமுகப் படுத்தினார். "ராகவன் இவர்தான் ஆடுதுறை ரகு" என்று. அவரும் ஹல்லோ என்று கை குலுக்கினார். அவர் வயதும் என் வயதும் ஏறத்தாழ ஒன்று போலவே இருந்தது. திடீரென்று என் தலைக்குள் ஒரு பல்ப் எரிந்தது போல் இருந்தது.

உடனே ரகுவை நான் கேட்டேன்: "உங்கள் பெரியப்பா பெயர் T.P. கிருஷ்ணமாச்சாரியா?"
ரகு (திகைப்புடன்): "ஆமாம், உங்களுக்கு எப்படி...?"
நான்: "அவருடைய ஷட்டகர் பெயர் சீனுவாசந்தானே?"
ரகு: "ஆமாம், ஆனால் நீங்கள் எப்படி...?"
நான்: "சீனுவாசன் என்னுடைய மாமா."
வெங்கடராமன்: "சே, இதான் ஐயங்கார்களுடன் பிரச்சினை. ஏதாவது உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். "(அவர் ஐயர்)
ரகு: "இப்போது நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?"
நான்: "உங்கள் பெரியப்பாவின் மனைவியும் என் மாமியும் சகோதரிகள்".
ரகு (அழும்போல ஆகி விட்டார்): "எப்படி சார் கண்டு பிடித்தீர்கள்?"
நான்: "இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ரகு. சமீபத்தில் 1955-ல் என் சின்ன மாமாவுக்குப் பெண் பார்ப்பதற்காக என் அம்மா, சின்ன மாமா மற்றும் உங்கள் பெரியப்பா கும்பகோணம் சென்றனர். திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் உங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்போது அந்த வீட்டில் ரகு என்று என் வயதுடையப் பையன் இருந்ததாக என் அம்மா கூறியிருந்தார். இப்போது ஆடுதுறை ரகு என்று என் காதில் விழுந்தவுடனேயே அந்த ஞாபகம் வந்தது. ஆகவே உங்களைக் கேட்டேன்."

அப்பொது கணினி அறிவு எனக்கோ வேறு யாருக்குமோ இல்லை. இப்போது அது நடந்திருந்தால் இதை ஒரு ஹைப்பெர்லிங்கிற்கான உதாரணமாக ரகுவிடம் கூறியிருப்பேன்.என் வாழ்க்கையில் இம்மாதிரி பல ஹைப்பெர்லிங்குகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/09/2006

சில நிறுவனங்களின் நேர்மைக் குறைவு

வியாபார நாணயம் என்று ஒன்று இருக்கிறது. அது ஏதோ பெரிய பிரம்ம வித்தை இல்லை. ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டால் அதன்படி நடப்பது முக்கியம் என்பது போன்ற கோட்பாடுகளை உள்ளடக்கியதே அது. சில உதாரணங்களுடன் விளக்குவேன்.

ஜஸ்ட் டயல் என்று ஒரு நிறுவனம் இருக்கிறது. அதன் சேவை நம்பரில் போன் செய்து கேட்டால் உங்களுக்குத் தேவையானத் தகவல்கள் தருவார்கள். உதாரணத்துக்கு பிளம்பர் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் இல்லத்தருகில் இருக்கும் பிளம்பர்கள் பற்றிய விவரம் கேட்கலாம். அதே போல அன்னிய மொழியில் இருக்கும் ஒரு ஆவணத்தின் மொழிபெயர்ப்பு வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களின் போன் நம்பர்கள் தரப்படும். இந்த சேவை தகவல் பெற விரும்புபவர்களுக்கு இலவசம். சேவை பற்றிய விவரம் கேளுங்கள், உங்கள் பெயர், நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுங்கள், விவரம் பெறுங்கள் தீர்ந்தது விஷயம்.

இதில் நிறுவனத்துக்கென்ன லாபம்? எங்களைப் போன்ற சேவை அளிப்பாளர்கள் இந்த நிறுவனத்தில் பணம் கட்டிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எங்கள் சேவை சம்பந்தமான கால் வரும்போது எங்கள் பெயரைத் தருவார்கள், வாடிக்கையாளர்களும் எங்களைத் தொடர்பு கொள்வார்கள். அதே சமயம் எங்கள் பெயரை ஒரு வாடிக்கையாளருக்குத் தந்திருந்தால் அதன் விவரத்தை எங்களுக்கும் தருவார்கள். தேவையானால் நாங்கள் கூட அவர்களைத் தொடர்பு கொள்ளுவோம். ரொம்ப நல்ல ஏற்பாடு, சரியாக நடத்தினால். அதில்தான் பிரச்சினையே.

2003-ல் நான் ஜஸ்ட் டயலில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதிவு செய்து கொண்டேன். அப்போது என்னிடம் என்ன கூறப்பட்டதென்றால் என்னைப் போன்றவர்களது லிஸ்டிலிருந்து வரிசைக் கிரமப்படி பெயர்களை அவ்வப்போது எங்கள் சேவை பற்றித் தகவல் கேட்பவர்களுக்குத் தருவதாகக் கூறினார்கள். உதாரணத்துக்கு எங்கள் பிரிவில் 7 பெயர்கள் உள்ளன. ஒவ்வொரு enquiry போதும் மூன்றிலிருந்து நான்கு பெயர்களைத் தருவார்கள். சுழற்சி முறையில் எல்லார் பெயரும் அவ்வாறு ஒரு மாத காலத்தில் பல முறை கூறப்படும்.

ஆனால் திடீரென இதில் ஒரு மாற்றம் கொண்டு வந்தார்கள். ஒரு குறிப்பிட்ட பிரீமியம் தொகை கட்டினால் ஒவ்வொரு முறையும் உங்கள் பெயரைக் கூறுவார்களாம். அதற்கு அதிகப்படிக் கட்டணம் கட்ட வேண்டும். இது முதலில் போட்ட ஒப்பந்தத்தை ஒரு தலை பட்சமாக மீறுகிறது என்று நான் சுட்டிக் காட்டியும் பிரயோசனம் இல்லை. ஒரு பேச்சுக்கு எல்லோரும் பிரீமியம் தொகை கட்டி விட்டால் என்ன ஆகும்? மறுபடியும் பழைய சுழற்சி முறைதானே? ஆக, அதே சேவைக்கு எல்லோரையும் ஏய்த்து அதிகப் பணம் பெற்றாகி விட்டதாகி விடும் அல்லவா. ஆகவே இப்பணம் நான் கட்டவில்லை.

இதில் எரிச்சல் தரும் விஷயம் என்னவென்றால் அவ்வப்போது என்னிடம் அந்த அதிகத் தொகை பெறுவதற்கு முயற்சி அதுபாட்டுக்கு நடக்கிறது. நான் 2008-ல் புதுப்பித்துக் கொள்வது அவர்கள் எனக்கு அளிக்கும் சேவையை பொருத்தது என்று கடுமையாகக் கூறிவிட ஏதோ அவ்வப்போது வேண்டாவெறுப்பாக என் பெயரைக் கூறுகிறார்கள். எனக்கு பிரச்சினை இல்லை, ஏனெனில் அவ்வாறு பிரீமியம் தொகை கட்டியவர்கள் ஏஜென்ஸீக்களே. அவர்கள் சேவை பிடித்தம் இன்றி எனது வெப்சைட் மூலம் நேரிடையாக என்னை அணுகும் வாடிக்கையாளர்கள் அதிகமாகி வருவதால் எனக்குக் கவலை இல்லை.

அதே போல Business Today என்னும் பத்திரிகை India Today குழுமத்தைச் சார்ந்தது. 2001-ல் அதன் ஒரு பிரதி விலை 20 ரூபாய். இரண்டு வாரத்துக்கொரு முறை வெளிவரும் பத்திரிகை அது. அதில் 5 ஆண்டுகளுக்கான சந்தா அப்போது அறிவித்தார்கள். ஒரு கிஃப்டும் தந்தார்கள். அந்தப் பிரதியின் அப்போதைய விலைக்கு அது நல்ல் லாபமே. சரி என்று எடுத்தேன். எண்ணி இரண்டே வாரத்தில் பிரதியின் விலையை 10 ரூபாயாகக் குறைத்தார்கள். இப்போது எனக்கு அந்த 5 ஆண்டு சந்தா கணக்கு நட்டமே. அதை விடுங்கள். 20 ரூபாயிலிருந்து 10 ரூபாய்க்கு குறைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? கண்டிப்பாக அந்த முடிவு எடுக்க பல காலம் பிடித்திருக்கும். ஆக, அறிவிப்பு வந்த நேரத்தில் அவர்களுக்கு அது சீக்கிரம் வரப்போவது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆகவே ஏமாந்தவர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடித்திருக்கிறார்கள். கேட்டால் இதுதான் பிசினஸாம். நான் 2006-ல் சந்தாவை புதுப்பிக்கவில்லை. நான் பார்க்கும் எல்லோரிடமும் எனது அனுபவத்தை வேறு கூறிவருகிறேன்.

டிஷ்னெட் டி.எஸ்.எல் வருவதற்கு முன்னால் 2002-ல் நான் வி.எஸ்.என்.எல்லில் டயல் அப் தொடர்பு 3 ஆண்டுகளுக்கு அல்லது 100 மணிநேரத்துக்கு எடுத்திருந்தேன். பிறகு டிஷ்னெட் அகலப்பட்டை எடுத்ததும் வி.எஸ்.என்.எல். உபயோகம் குறைந்து போனது. பிறகு டிஷ்னெட்டை வி.எஸ்.என்.எல். எடுத்துக் கொள்ள பிறகு டாட்டா இண்டிகாம் வி.எஸ்.என்.எல்லை எடுத்துக் கொண்டது. இப்போது தமாஷ் என்னவென்றால் 2005-ல் வி.எஸ்.என்.எல்லில் இருந்து என்னிடம் டயல் அப் தொடர்பை புதுப்பித்துக் கொள்ள ஃபோன் மேல் ஃபோன் கால்கள். என்னிடம் அகலப்பட்டை இருக்கிறது, எனக்கு அதிலேயே டயல் அப் தொடர்பும் இருக்கிறது என்று கூறினால் ஒத்துக் கொள்ளவே இல்லை. பிறகு நான் பொறுமை இழந்து நான் இதை புதிப்பிப்பதால் பெறப்போகும் நன்மையைக் கூறுமாறு சவால் விட்டேன். அதற்கு அந்த டெலிமார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் சற்றுநேரம் மென்று முழுங்கிவிட்டு, நான் எனது வி.எஸ்.என்.எல். மின்னஞ்சல் முகவரியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கூற நான் அவர்களிடம் அதை வைத்துக் கொண்டு என்னென்ன செய்து கொள்ளலாம் என்பதற்கான எனது மேலான ஆலோசனையைக் கூறியதும்தான் என்னைத் தொந்தரவு செய்வதை விட்டார்கள்.

இதுதான் உலகம். ஏமாறாமல் இருப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. விழிப்பாக இருக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/06/2006

Quia absurdum

தருமி அவர்களது இந்த இடுகை எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக அமைந்தது. எல்லா மதங்கள் சம்பந்தமான அவரது சந்தேகங்கள் பிரசித்தமானவை. எனக்கும் பலமுறை அம்மாதிரி சந்தேகங்கள் வந்துள்ளன. ஆகவே அவரது இம்மாதிரி இடுகைகளை நான் சுவாரசியமாகப் படிப்பதுண்டு.

"ஆதாம் ஏடனில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறான். கடவுள் எல்லாம் உனக்கே என்று சொல்லி, பிறகு ஒரு 'rider' வைத்து விடுகிறார் - ஒரே ஒரு மரத்தின் கனியைப் புசிக்கக்கூடாதென்று! மீதிக்கதை எல்லோருக்கும் தெரியும்தானே. பாம்பு வருகிறது; ஏவாளை வார்த்தைகளால் ஏமாற்றுகிறது. தின்னக்கூடாதென சொல்லப்பட்ட கனி "அறிவு பெருவதற்கு விரும்பத்தக்கதாக இருந்ததாகக்" கூறப்படுகிறது. பிறகு அவர்கள் அந்தப் பழத்தைச் சாப்பிட்டு விட, கடவுள் "நீ எங்கிருக்கிறாய்:" என்று கேட்டார்."

இந்த விஷயத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு. ஆதாம் மற்றும் ஏவாள் கடவுள் சொன்னபடி நடந்து அக்கனியை பறித்துண்ணாதிருந்தால் என்னவாகியிருக்கும்? சற்று கற்பனையை ஓட்டிப் பாருங்கள். முடியாவிட்டாலும் கவலையில்லை. ஏற்கனவே ஃபிரெஞ்சு எழுத்தாளர் Pierre Boulle இதை கற்பனை செய்து ஒரு அருமையான கதையை எழுதியுள்ளார். அது அவரது Quia Absurdum (Sur la Terre comme au Ciel) *சொர்க்கத்திலும் பூமியிலும் அபத்தங்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் வருகிறது. கதையின் பெயர் Quand le Serpent Échoua. (பாம்பு தோல்வியுற்றபோது).

இக்கதையில் ஆசிரியர் ஒரு விஷயத்தை முதலில் தெளிவுபடுத்துகிறார். அதாவது பழைய ஏற்பாட்டில் வரும் genesis நிகழ்வுகள் ஒவ்வொரு உலகிலும் அப்படியே வருகின்றது என்பதுதான் அது. இக்கதை ஆரம்பிக்கும்போது ஒரே நிகழ்வு பல்லாயிரக்கணக்கான முறை பல்லாயிரக்கணக்கான உலகில் நடந்து விட்டது. ஆகவே இந்த முறை பாம்புக்கு கூட கொஞ்சம் போர் அடிக்கிறது. ஏவாள் ஈடன் தோட்டத்தில் சந்தோஷமாகப் பாடிக் கொண்டிருக்கிறாள். பாம்பு அவளிடம் வந்து வேகமாகத் தான் சொல்வதை சொல்லி விட்டு அறிவுக் கனியை பறித்துண்ணும்படி ஏவாளுக்கு ஆசை காட்டி விட்டு தன் வழியே போக யத்தனிக்கும் போது, ஏவாள் இம்முறை கூறுகிறாள், "பாம்பே, நீ சொல்வதை நான் கேளேன், பரமபிதா எங்களுக்கு இக்கனியை பறிக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டார். ஆகவே நான் அக்கனியைத் தொடேன்" என்று கூற பாம்புக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சரி ஆதாமிடமாவது போய் முயற்சி செய்ய, அவனோ அதை அடி அடி என்று அடித்து விரட்டி விடுகிறான்.

அன்று இரவு பரம பிதா வருகிறார். அவருக்குப் பல வேலைகள். நடுவில் இந்த வேலை வேறு, அதாவது ஆதாம் ஏவாளை ஈடன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுவது. "ஆதாம் எங்கிருக்கிறாய்?" என்று கோபம் கலந்த இடிக்குரலில் கேட்க, அவனோ "இங்கிருக்கிறேன் ஆண்டையே" என்று ஏவாளின் கையை பிடித்துக் கொண்டு தைரியமாக ஆடையின்றி அவர் முன் வந்து நிற்கிறான். "அக்கனியை பறித்தாயா" என்று சற்றே குறைந்த சப்தத்தில் வழக்கமான கேள்வியைக் கேட்க, "இல்லை ஆண்டே, அவ்வாறு செய்வோமா நாங்கள்" என்று கூற, பரமபிதாவுக்கு மூர்ச்சை வரும்போலாகி விட்டது. "சரி, சரி, ஜாக்கிரதையாக இருந்துக் கொள்" என்று சுரத்தேயில்லாமல் கூறிவிட்டு தன்னிடம் இருக்கும் சூப்பர் கணினியிடம் சென்று பார்க்கிறார். அதனிடம் நடந்ததை எழுதி உள்ளிட, அது மெதுவாகப் பேச ஆரம்பிக்கிறது. "இது என்ன சோதனை, இத்தனை உலகங்களிலும் சமத்தாக இருந்த ஆதாம் ஏவாள் இங்கு மட்டும் ஏன் படுத்துகிறார்கள்" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறது. பிறகு கூறுகிறது, "ஏவாள் இம்மாதிரி நடந்து கொள்வதற்கானச் சாத்தியக்கூறு ஒன்றின் கீழ் பத்து கோடி என்று நான் செட் செய்திருந்தேன். இது வரை நடக்காதது இப்போது நடந்து விட்டது".

"சரி இப்போது என்ன செய்யலாம்" என்று பரமபிதா கேட்க கணினி சற்று நேரம் கேட்கிறது. அதற்குள் இங்கு ஈடன் தோட்டத்தில் அனர்த்தம் ஆரம்பிக்கிறது. அக்கனியைப் பறிக்காததால் பாவம் புண்ணியம் பற்றிய அறிவே ஆதாம் ஏவாளிடம் சுத்தமாக இல்லை. ஏவாள் கையில் கிடைக்கும் பட்டாம்பூச்சிகளின் சிறகுகளை பிய்த்து ஆராய்கிறாள். ஆதாம் தோட்டத்திற்கே நெருப்பு வைக்கிறான். நேரம் செல்லச் செல்ல அவர்களது அட்டகாசங்கள் அதிகரிக்கின்றன. தோட்டத்தை விட்டு அவர்களை அனுப்பவும் முடியாது.

அப்போது பரமபிதாவின் புத்திரர் வருகிறார். "என்ன தந்தையே இப்படியாகி விட்டது, எப்போது இவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேறி, நான் சிலுவை சுமப்பது எல்லாம் நடக்கும்?" என்று அவர் தரப்புக்கு அவரும் கூற, பரம பிதா யோசனையில் ஆழ்கிறார். பிறகு வேறு வழியில்லாது புத்திரரிடம் ஒரு விஷயத்தைக் கூறுகிறார். அவரும் வேறு வழியின்றி அழகிய வாலிபன் உருவம் தரித்து, ஏவாளிடம் சென்று, அவள் மனதை மாற்றி அவளையும் ஆதாமையும் கனியைப் புசிக்கச் செய்கிறார். இப்போது பழைய ஏற்பாடுகள் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.

இப்புத்தகத்தை நான் முப்பது வருடங்கள் முன்னால் படித்தேன். ஆகவே 100% அப்படியே கொடுத்தேன் எனக் கூறமுடியாது. ஆனால் பிளாட் அதுதான்.

இதே எழுத்தாளர் எழுதிய நாவல்தான் "Bridge on the river Quai". சர் அலெக் கினஸ் நடித்தது. அவரது பிரெஞ்சு நடை பிரமிக்கத் தக்கது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/05/2006

வறுமையும் புலமையும்

இது ஒரு மீள்பதிவு.

திருவிளையாடலில் நாகேஷ் சிவாஜியைக் கேட்பார் "பிரிக்க முடியாதது எது?" சிவாஜியின் பதில் அம்பு போல வரும் "வறுமையும் புலமையும்" என்று. சமீப காலம் வரைக்கும் அது உண்மையாகவே இருந்தது.

நிறைய பொருள் ஈட்டியப் புலவர்கள் அதிகம் இல்லை. உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தன் ஆசிரியர் பற்றி எழுதிய புத்தகத்தில் அவர் (ஆசிரியர்) பல தனவந்தர்களால் ஆதரிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். பொருள் ஈட்டியிருக்கிறார், ஆனால் எல்லாம் செலவழிந்து விட்டன. கடைசி காலத்தில் ரொம்ப மிஞ்சவில்லை என்றுதான் அறிந்தேன்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அதாவது புலவர்களுக்கு புலமையைத் தவிர வேறு லௌகீக விஷயங்களில் தேர்ச்சியிருந்ததில்லை என்பதையே குறிப்பிட விரும்புகிறேன். இருபதாம் நூற்றாண்டில் ஐம்பதுகள் வரையிலும் கூட இதே நிலைதான் ஏறத்தாழ இருந்திருக்கிறது.

வசதியுடன் வாழ்ந்தவர்களும் மாத ஊதியத்தில்தான் இருந்திருக்கிறார்கள். கல்கி அவர்கள் இறக்கும் போது அவர் சம்பளம் 3000 ரூபாய் என்று அறிகிறேன். 1954-ல் இது ஒரு பிரமிப்பை ஊட்டியத் தொகை. வீடு, கார் என்று தன் மகனுக்கு விட்டுச் சென்றார். மேலும் தன் எழுத்துக்களுக்கான காப்பிரைட் வேறு. அதிலும் விகடனில் அவர் ஆசிரியராக இருந்த போது எழுதியதை வாசன் அவர்கள் தன் வசம் வைத்திருந்திருக்கிறார். சாவி அவர்கள் தன் எழுத்துக்களுக்காகப் போராடி வாசன் அவர்களை கன்வின்ஸ் செய்து காப்பிரைட்டைத் தன்வசப்படுத்தியவுடன் கல்கியின் மகனுக்கும் அதன் பெனிஃபிட் கிடைத்தது.

மற்றப்படி ஃப்ரீலான்ஸாக இருந்தவர்கள் சோபிக்கவில்லை. புதுமைப் பித்தன் அனுபவித்த கஷ்டம் இப்போது படிக்கையிலும் மனதை உருக்கி விடும். அப்படியே இருப்பவர்களும் ஏதாவது பதிப்பாளரிடம் ஒப்பந்தம் மாதிரி போட்டுக் கொண்டு மாதம் தவறாமல் பொருள் வருமாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அதெல்லாம் பழைய கதையாகி விட்டது என்றுதான் தோன்றுகிறது. இப்போதைய நிலை என்ன? பல எழுத்தாளர்கள் வேறு தொழிலை கையில் வைத்திருக்கிறார்கள். சுஜாதா ஒரு முக்கிய உதாரணம். சோவும் கூட இதற்கு நல்ல உதாரணம். இக்காலத்தில் பல துறைகளில் திறமை வளர்ப்பது ரொம்ப முக்கியமாகி விட்டது. பதிப்பாளர்களுடன் பேரம் பேசுவதற்கு ஒரு தெம்பை இது கொடுக்கிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை கூடுவதும் ஒரு முக்கியக் காரணியாகி விட்டது. சந்தையில் எது விலை விலை போகிறது என்பதைப் பார்ப்பதும் முக்கியம்.

நான் மொழிபெயர்ப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் முன்னேறியதற்கும் என்னிடம் இருந்த முழுநேர வேலைதான் காரணம். மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடம் இருந்த போது கவலையின்றி மொழிபெயர்ப்பு வாடிக்கையாளர்களுடன் பேரம் பேச முடிந்தது அல்லவா. கூடவே இஞ்சினியராக இருந்ததாலும், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இஞ்சினியர் கூட்டு இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு புதிதாக அதே சமயம் விரும்பத்தக்கதாக ஆனதாலும் என் முன்னேற்றத்துக்கு தடையே இல்லை.

அதே போல மொழிபெயர்ப்பாளரானதால் ஐ.டி.பி.எல்லில் இஞ்சினியர் க்ளாஸ் 1 அதிகாரியாக முடிந்தது. ஆகவே இரு திறமைகளும் ஒன்றுக்கொன்று உதவி செய்தன.

அதே போல இங்கு வலைப்பதிவர்களும் 90 சதவிகிதத்துக்கு மேல் வேறு தொழிலை கைவசம் வைத்துக் கொண்டுதான் எழுத்தாளர்களாக உள்ளனர். ஆக, வெறுமனே ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் என்பது குறைந்து விட்டதென்றுதான் நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இந்தக் காலத்துப் பசங்க, ஹூம்!

"இக்காலப் பசங்களுக்கு சொகுசே பிரதானமாகி விட்டது, சுத்தமா மரியாதையே இல்லை. அரசைத் துச்சமாக நினைக்கிறார்கள். தேகப் பயிற்சி செய்வதை விட வாய்க்கு அதிகப் பயிற்சி கொடுத்து வம்பு பேசவே ஆசைப்படுகிறார்கள். குழந்தைகள் கொடுங்கோலர்களாகி விட்டார்கள். வீட்டுக்கு அடங்குவதில்லை. தாய் தந்தையரை எதிர்த்து பேசுகின்றனர். பெரியவர்கள் வந்தால் மரியாதையாக எழுந்து நிற்பதையே விட்டு விட்டனர். நாசூக்கிலாமல் வாயில் உணவை அடைத்துக் கொள்கின்றனர். ஆசிரியர்களிடம் அடாவடி செய்கின்றனர்."

மேலே இருப்பது சமீபத்தில் கி.மு. 399-ல் காலமான சாக்ரட்டீஸ் கூறியதாக இப்போது அறியப்படுகிறது. இல்லை, இது சாக்ரட்டீஸ் சொன்னது இல்லை என்று சிலர் வாது புரிய தயாராகலாம். சரி, சாக்ரட்டீஸ் சொல்லவில்லை. யாரோ பொல்லோனியஸ் கூறியிருப்பார், அரிஸ்டாட்டிலாகக் கூட இருக்கலாம். அதை விடுங்கள். நான் சொல்ல வருவது வேறு.

அந்தக் காலம் போல வருமோ என்று பெரிசுகள் என்னைப் போன்ற இளைஞர்களிடம் இப்போதும் பெருமூச்சு விடும்போது, நான் அவர்களிடம் சாக்ரட்டீஸ் கூறியதாகச் சொல்லப்படுவதை பெயர் குறிப்பிடாமல் கூற, அவர்களும் ஆவலுடன் யார் சொன்னது என்று கேட்க நான் சாக்ரட்டீஸ் கூறியது என்று போட்டு உடைப்பேன். நேற்றுக் கூட அறுபது வயது இளைஞனாகிய இந்த டோண்டு ராகவன், 55 வயசான ஒரு பெரிசிடம் இதைக் கூற அவர் ரொம்பவே நொந்துப் போனார்.:)))

"ஒவ்வொரு தலைமுறையும் தான்தான் செக்ஸைப் பற்றிக் கண்டுபிடித்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறது" என்று ஹர்ஷர் காலத்தில் வாழ்ந்த வாத்சாயனர் வேறு கூறியிருக்கிறார். அக்கால ஆசிரியர்கள் போல இக்காலத்தில் எங்கு கிடைக்கிறார்கள் என்று சமீபத்தில் 1930-ல் வெளி வந்த தனது "ஏட்டிக்கு போட்டி" புத்தகத்தில் பேராசிரியர் கல்கி பொருமியிருப்பார்.

இன்று துக்ளக்கில் துர்வாசர் என்னும் புனைப்பெயரில் வரும் ஒரு எழுத்தாளரை பற்றி வந்த ஒரு பிரஸ்தாபமே நான் இப்போது போடும் பதிவுக்குக் காரணம். துர்வாசர் இப்போதெல்லாம் கல்விக்கூடங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது போல இல்லை என்று பொருமி வருகிறார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அதே துக்ளக்கில் அதே பெயரில் அப்போது எழுதியவரும் பொருமியிருப்பார். அதாவது நாற்பதுகளில் இருந்த மாதிரி இப்போது இல்லை என்று. முப்பதுகளில் இருந்த நிலையைப் பற்றி கல்கி அவர்கள் கூறியதை ஏற்கனவே மேலே பார்த்து விட்டீர்கள்.

சமீபத்தில் 1880-களில் வெளி வந்த "கமலாம்பாள் சரிதம்" என்னும் நாவலில் (தமிழில் இரண்டாவது நாவல் இது. முதல் நாவல் பிரதாப "முதலியார் சரிதம்"). அதில் பள்ளிக்கூட பசங்கள் பாடிய பாட்டை இப்போது பார்ப்போம்.

"நெடுமால் திரு மருகா
நித்தம் நித்தம் இந்தெழவா
இந்த வாத்யாரும் சாவாரா
என் வவுத்தெரிச்சல் தீராதா".

நான் மிகவும் ரசிக்கும், எனக்கு பதிவுகள் போடுவதற்கான இன்ஸ்பிரேஷனாக இருந்த என் அருமை நண்பர் பதிவிலிருந்து கோட் செய்து இப்பதிவை முடிக்கிறேன்.

"ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது."

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/02/2006

Jom Kippur - டோண்டு ராகவனுடையது

இன்று யோம் கிப்பூர் என்று அழைக்கப்படும் நாள், யூதர்களுக்கு முக்கியமான நாள். தாங்கள் செய்த தவறுகள் மற்றும் சக மனிதர்களுக்கு இழைத்த அநீதிகள் ஆகியவற்றுக்காக யூதர்கள் மன்னிப்பு கேட்கும் நாள்.

இஸ்ரவேலர்கள் சந்திர நாட்காட்டியை உபயோகிப்பதால் அதன் தேதி முன்னே பின்னே வரும். சமீபத்தில் 1973-ல் இது அக்டோபர் 6 அன்று வந்தது. அன்றுதான் எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கினர். 20 நாள் நடந்த இந்த யுத்தத்தைப் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. வஜ்ரா அவர்கள் பதிவு, அதில் தரப்படும் சுட்டிகள் இது பற்றி மிகத் தெளிவாக விஷயங்கள் தருகின்றன.

இப்போது என்னுடைய யோம் கிப்பூருக்கு வருவோம்.

நேற்று எனக்கு நான் மிகவும் மதிக்கும் பதிவரிடமிருந்து இந்த மெயில் வந்தது. அதை அனுப்பும் முன்னால் என்னுடன் chatßl தொடர்பு கொண்டு மெயில் அனுப்பப் போவதையும் கூறினார். இப்போதைக்கு அவர் பெயரை இங்கு போடப் போவதில்லை. போடவே மாட்டேன் என்றும் கூறப்போவதில்லை. இப்போது அவருடைய மெயில் அப்படியே நகலெடுத்து:

"உங்களுடைய அனுபவம், அறிவு, துணிச்சல் போன்றவற்றை மதிப்பவர்களில் நானும்
ஒருவன். உங்கள் கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றுடன் ஒத்துப் போகா
விட்டாலும் உங்களுடைய எழுதும் பாணி, உங்கள் எழுத்திலிருந்து தெரியும்
அனுபவ உண்மைகளுக்காக உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்து வருகிறேன்.

நீங்கள் மாதம் தோறும் சென்னையில் ஏற்பாடு செய்யும் வலைப்பதிவர் கூட்டங்கள், வெளியூர் போனாலும் சக பதிவர்களைச் சந்திக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைவருக்கும் பயனளிக்கும் நற்செயல்கள்.

ஆனால் உங்கள் அனுபவத்தை, பணிகளை எல்லோரும் இயல்பாக பயன்படுத்துவதற்கு
இருக்கும் சில இடையூறுகள் நம் எல்லோருக்கும் தெரியும்.

சில சூழ்நிலைகளால் போலிகளின் நாகரீகமற்ற எதிர்ப்புகளால் நீங்கள் மிக சிரமத்துக்கு ஆளாகினீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். பெரு முயற்சி எடுத்து உங்களைத் தற்காத்துக் கொள்கிறீர்கள் என்பதும் புரிகிறது. ஆனால் அந்த மிரட்டல்களால் சலித்துப் போய் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்க்கும், உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதைத் தவிர்க்கும் நண்பர்களின் எண்ணிக்கை ஏராளம். அந்த மிரட்டல்களைச் செயல்படுத்தும் முகமாக போலிகள் உருவாக்கியுள்ள தளங்களின் பாதிப்பும் விரும்பத்தக்கவை இல்லை.

இந்த நிலையில் தமிழ் வலைப்பதிவு உலகுக்கு நீங்கள் ஒரு உதவி செய்தால் நான் என்றென்றும் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன்.

'என்னுடைய கருத்துக்களில் சில பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். நான் அதைச் சொல்லும் விதம் சிலருக்குக் கோபத்தை மூட்டியிருக்கலாம். அதனால், ஒரு தவறும் செய்யாத பலர் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இன்னும் ஒரு தீ வளையத்துக்குள்ளேயே உலாவும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

போலி நண்பர்களுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவர்களது மனம் எந்த வகையிலாவது என்னால் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்.

நான் எனது மனதில் படும் கருத்துக்களை வழக்கம் போல வெளிப்படையாகச் சொல்லி
வருவேன். யாருக்காவது கருத்து வேறுபாடு இருந்தால் என்னிடம் கேட்டால் எனது பக்க நியாயங்களை விளக்கத் தயாராக இருக்கிறேன்.

பிறர் பெயரில் உருவாக்கியுள்ள ஆபாசப் பதிவுகள், சக பதிவர்களுக்கு அனுப்பும் ஆபாசப் பின்னூட்டங்களை முற்றிலும் அழித்து தமிழ் வலை உலகை மேம்படுத்த வேண்டுகிறேன்.'

இப்படி ஒரு பதிவை போட்டால் நீங்கள் பல நூறு மக்களின் அன்பையும் மதிப்பையும் ஈட்டிக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது."

மறுபடியும் டோண்டு ராகவன்.

நானும் இது சம்பந்தமாக சில நாட்களாக யோசித்து வருகிறேன். இவருடைய மெயில் ஒரு ட்ரிக்கராக வந்தது.

இந்தப் பாராவை மட்டும் சற்றே மாற்றுகிறேன். ஏனெனில் என்னால் போலி டோண்டுவின் மனம் புண்பட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

"போலி டோண்டுவுக்கு நான் நிபந்தனை இல்லாத வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அவரது மனம் என்னால் புண்பட்டதற்காக என்னை மன்னித்து விடுமாறு கேட்டு கொள்கிறேன். அவர் தமது நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டு தமிழ் சமூகத்துக்குப் பலன் உள்ள வகையில் தமது ஆற்றலைப் பயன்படுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்."

நான் போலி டோண்டுவுக்கு மேலே கூற விரும்புவது. நாம் இருவரும் நமது நிலைகளை தெளிவாகவே பல தருணங்களில் வெளிப்படுத்தி விட்டோம். இனிமேல் வெளிப்படுத்துவதற்கு வேறு விஷயங்கள் இல்லை என்று தோன்றுகிறது. நமது சண்டையில் collateral damage சற்று அதிகமாகவே வந்து விட்டது. அதற்கு நாம் இருவருமே காரணம். என் தரப்பு பங்களிப்பிற்காக சக வலைப்பதிவாளர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை விட நீங்கள் வயதில் இளையவர். இருப்பினும் உங்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.

நானும் உங்களை மனப்பூர்வமாக மன்னிக்கிறேன்.

உங்களது எதிர்வினை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையிலேயே இப்பதிவைப் போட்டுள்ளேன். உங்கள் பெயரை இப்போதும் வெளியிட மாட்டேன். முதலில் வெளியிட மறுத்தது போர் யுக்தி. ஆனால் இப்போது மறுப்பது சமாதான யுக்தி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது