5/30/2006

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

"என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயராதோ நம் மதிப்பு அயல் நாட்டில்"

மேலே கூறிய பாடல் சமீபத்தில் 1966-ல் திரையிடப்பட்ட "விவசாயி" படத்தில் வந்தது. "சரி, அப்போது விவசாயம் செய்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பான்மையினர். இப்போது அப்படியில்லை" என்பவர்களுக்கு நான் கூறுவேன், "எல்லா வளமும் நம் நாட்டிலேயே இருக்கும் போது கொத்தடிமைகள் போல ஏஜெண்டுகள் எனப்படும் கொள்ளையரிடம் மனைவியின் தாலி வரை விற்றுக் கொடுத்து வெளிநாட்டில் போய் கேவலப்பட வேண்டுமா?" என்பதுதான் என் கேள்வி. விவசாயமோ அல்லது வேறு தொழிலோ, நம் நாட்டிலேயே வேலை பார்க்க முயற்சி செய்யுங்கள் என்றுதான் கூறுகிறேன்.

ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் நான் ஏன் ஜெர்மனிக்கோ பிரான்ஸுக்கோ செல்ல முயற்சிக்கக் கூடாது என்று பலரும் என்னிடம் பல முறை கேட்டு விட்டனர். நான் நினைத்திருந்தால் சென்றிருக்க முடியும். ஆனாலும் ஏனோ எனக்கு அவ்வாறு செல்ல வேண்டும் என்று ஒருபோதும் ஆவல் வந்ததேயில்லை. அம்மொழிகளில் பல புத்தகங்கள், செய்தி பத்திரிகைகள் படிப்பவன் என்ற முறையில் என்னால் அந்த நாட்டில் தினசரி வாழ்க்கை என்னைப் போன்றவர்களுக்கு எவ்வாறு அமையும் என்பதை மிகச் சுலபமாகக் கற்பனை செய்து பார்க்க முடியும். அக்கற்பனைகள் ஒருபோதும் எனக்கு வெளிநாடு செல்லும் ஆவலைத் தூண்டியதேயில்லை. நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன்? என் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு வரும் வருமானத்தை வைத்து நான் பெற்றுள்ள வாழ்வின் தரம் மற்றும் நிம்மதி கண்டிப்பாக அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ பிரான்ஸிலோ கிடைத்திராது என்பதே நிஜம். என்னை பொருத்தவரை ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என் வீட்டு வாசலுக்கே எனக்காக வந்துவிடுகின்றன. என்னிடம் பாஸ்போர்ட் கூடக் கிடையாது.

அவுட்சோர்ஸிங் ஏற்பாட்டில் இந்தியாவிலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமானதாகவே உள்ளது என்றுதான் எனக்கு படுகிறது.

அப்படியும் மீறி போகவேண்டியக் கட்டாயம் பலருக்கு இருக்கிறது என்பதும் உண்மைதான். அவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்குவதும் இப்பதிவின் நோக்கங்களில் ஒன்று.

முதலில் ஒரு விஷயம் மறக்காதீர்கள். வெளி நாடுகளுக்கு நீங்கள் வேலை செய்யப் போவது பணம் சம்பாதிக்கவே. அந்த வேலையை பிடிக்கவே சொத்தையெல்லாம் விற்றுப் போவது முட்டாள்தனம். ஏமாற்றும் ஏஜெண்டுகளுக்கு கொடுப்பதற்கு பதில் அப்பணத்தை உள்ளூரிலேயே முதலீடு செய்து தொழில் செய்ய முடியுமே. இதை தீமாக வைத்து வந்த "வெற்றிக்கொடி கட்டு" என்ற படம் இதை அழகாகக் கூறுகிறது.

நீங்கள் இங்கு ஒரு கம்பெனியில் வேலை செய்து அவர்கள் உங்களை வெளிநாட்டில் இருக்கும் தங்கள் அலுவலகங்களில் வேலை செய்ய அனுப்பித்தால் தாராளமாகச் செல்லுங்கள். ஏனெனில் உங்களுக்கு இதில் காலணா செலவில்லை. எல்லாவற்றையும் கம்பெனி பார்த்துக் கொள்ளும். ஆனால் நீங்களே முயன்று கல்ஃப், சவுதி போன்ற பிரதேசங்களுக்கு செல்லும்போது ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் இசுலாமியராக இல்லாத பட்சத்தில் அங்கு போகாமல் இருத்தலே நலம். அப்படி மீறிப் போனால் பல அவமானங்களுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ளவும். அங்கு ஏடாகூடமாக மாட்டிக் கொண்டால் கண்டிப்பாக நமது தூதரகங்கள் உங்களைக் காப்பாற்றாது என்பதை மறக்காதீர்கள்.

அமெரிக்கா மாதிரியான இடங்களில் வேறு வகையான அவமானங்கள் காதிருக்கின்றன. அமெரிக்க தூதரகங்கள் வாயிலில் எவ்வளவு பேர் சூட், கோட் எல்லாம் போட்டுக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை தில்லியில் பஸ்ஸில் செல்லும்போது பார்த்து கோபப்பட்டிருக்கிறேன்.

வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை கட்டிக் காப்பதும் ஒரு கலையே. உறவினர்களுக்கு வாரிக் கொடுத்துவிட்டு அவதிப்படாதீர்கள். நீங்கள் திரும்பி வரும்போது அந்தப் பணம் உங்களுக்குத் தேவை. சகோதரனின் படிப்பு, சகோதரியின் கல்யாணம் எல்லாவற்றையும் உங்கள் பணத்தை வைத்து தாம் தூமென நடத்திக் கொள்ளும் உறவினர்களால் உங்களுக்கு ஒரு பயனும் இல்லை. எந்த உதவி செய்தாலும் அளவோடு செய்யுங்கள். உங்கள் மனைவி, பிள்ளைகளை மறந்து விடாதீர்கள். நீங்கள் நிரந்தரமாக ஊர் திரும்பும்போது உங்கள் கைவசம் கணிசமான பணம் இருத்தல் முக்கியம். குடும்பத்தை நீங்கள் வேலை செய்யும் ஊருக்கு அழைத்துக் கொள்ள முடியுமானால் அதை முதலில் செய்யுங்கள்.

ஊருக்கு வரும்போது மாமன் மச்சான் எல்லோருக்கும் பரிசுகள் வாங்கி நொந்தவர்கள் அனேகம். எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது. ஒன்றும் கொடுக்காமல் இருந்தால் பணமாவது மிச்சம். என்ன, திட்டுவார்கள். திட்டட்டுமே.

முக்கியமாகத் தன்னம்பிக்கையை விடாதீர்கள். வெளிநாடு செல்லும்போது மனதில் என்ன பயம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாதீர்கள். "தைரியம்னா என்ன, பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாதிருத்தல்தான்" என்று குருதிப் புனல் படத்தில் கமல் கூறுவதாக வசனம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் (அப்படத்தை நான் பார்த்ததில்லை), இது சத்தியமான வார்த்தை.

போன இடத்தில் உள்ளூர் மொழியை கற்கவும். அது மிக உபயோகமாக இருக்கும். முக்கியமாக அரபு நாடுகளில். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். யாரோடும், முக்கியமாக உள்ளூர்காரர்களோடு சண்டை போடாதீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/28/2006

ஜெர்ரி

பல மாதங்ககளுக்கப்புறம் ஒரு திரைப்படம் தியேட்டரில் போய் பார்த்தேன். ஒரு எக்ஸல் கோப்பை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். மொழிபெயர்ப்பு வேலையை விட பிரெஞ்சு எழுத்துகளுக்கு ஆக்ஸண்ட் போடுவதுதான் சள்ளை பிடித்த வேலை. மொத்தம் 11 ஆக்ஸண்டுகள். அவற்றை கேப்பிடல் எழுத்துக்களிலும் போட வேண்டும். வேர்ட் கோப்பாக இருக்கும் பட்சத்தில் தட்டச்சுப் பலகை குறுக்கு வழிகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எக்ஸல் மற்றும் பவர் பாயிண்டில் அந்தப் பாச்சா பலிக்காது. அதற்காகவே நான் க்ளிப் போர்டை உபயோகித்து ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். கஷ்டம்தான், ஆனாலும் செய்யக் கூடியதே. ஆனால் விளைவு என்னவென்றால், வெகு சீக்கிரம் களைப்பை உண்டு பண்ணும். இன்று மாலை வீட்டம்மா அபூர்வமாக சினிமா போக வேண்டும் என்ற ஆசையைக் கூற, அதை நிறைவேற்றுவதை விட எனக்கு என்ன வேலை? ஆகவே ஜெர்ரி படத்திற்கு போனேன். போய் விட்டு ஃபிரெஷ்ஷாக வந்தேன். இப்பதிவைப் போடுகிறேன்.

நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு படத்தைப் பற்றி ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லை, கிரேஸியின் வசனங்கள் தூள் ஆக இருக்கும் என்பதைத் தவிர. ஆனாலும் படம் நன்றாகவே இருந்தது. மேரேஜ் மேட் இன் சலூன் என்ற நாடகத்தின் தீம்தான். அது ஏற்கனவே பொய்க்கால் குதிரையாகவும் வந்திருக்கிறது. அதை வேறு மாதிரி உல்டா செய்து ஜெர்ரியாக்கியிருக்கிறார்கள். கிரேசி ட்ரூப்பின் முக்கிய நடிக நடிகையர் துணைப் பாத்திரங்களில். இதில் என்ன விசேஷம் என்னவென்றால் அவர்களைத் தவிர வேறு எந்த முகமும் - கதாநாயகன் நாயகி உட்பட - எனக்குப் பரிச்சயமில்லை. ஆனால் சும்மா சொல்லக் கூடாது, அவர்களும் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்கள். சூப்பர் மார்க்கெட்டில் மாட்டிக் கொண்டு அவர்கள் பாடும் பாடலின் வார்த்தைகள் பின்னணி இசையின் களேபரம் இன்றி க்ளியராக காதில் விழுகிறது, நல்லப் பாடல்.

படம் ஓடுமா என்று தெரியவில்லை. வெற்றி பெற எல்லாத் தகுதிகளும் உள்ள படம் அவ்வளவுதான் கூற முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மீட்டிங் பற்றிய விஷயங்கள்

சில நாட்கள் முன்னால் ஜோசஃப் அவர்களிடமிருந்து சிவஞானம்ஜி அவர்களின் எண்ணை பெற்று அவருடன் பேசியிருந்தேன். அப்போது மாதக் கடைசியில் வலைப்பதிவார் சந்திப்பு நடைபெறலாம் என்று கூறியிருந்தேன். மூக்கு சுந்தர் அவர்கள் சென்னைக்கு வந்திருக்குக்கும் தருணத்தை பயன்படுத்தி அவருடன் பேச விருப்பம் தெரிவித்து அவருக்கு மின்னஞ்சல் இட்டிருந்தேன். அவரும் சந்திக்கலாம் எனக் கூறியிருந்தார். தவிர கோ.ராகவன் வேறு இங்கிருக்கிறார். எல்லோரையும் சந்திக்கலாம் என்று நானும் ஜோசஃப் சாரும் நினைத்திருந்தோம். அதையெல்லாம் மனதில் வைத்துத்தான் அவ்வாறு சிவஞானம்ஜியிடம் அவ்வாறு கூறியிருந்தேன்.

நேற்று காலை திடீரென சிவஞானம்ஜி அவர்கள் தொலை பேசியில் கூப்பிட்டார். மீட்டிங் விஷயம் என்னவாயிற்று எனக் கேட்டார். ஜோசஃப் சாருடன் பேசிவிட்டு கூப்பிடுவதாக அவரிடம் கூறினேன்.

ஜோசஃப் அவர்கள் திடீரென கூக்ள் டாக்கில் வந்து நான் கேட்க நினைத்ததையே அவரும் கேட்டார். சில நிமிடப் பேச்சிலேயே நேற்று மாலை மீட்டிங் வைக்கலாம் என்று தீர்மானித்தோம். என்னுடைய வலைப்பூவில் ஒரு பதிவு போடுவது எனத் தீர்மானித்தோம். அது போலவே போட்டேன். மணி 11.30. குறுகிய கால அவகாசம்தான், ஆனால் என்ன செய்வது. முடிவு எடுத்த ஐந்து நிமிடத்தில் பதிவு போட, அடுத்த சில நிமிடங்களில் ஜோசஃப் அவர்களும் அதை பின்னூட்டம் ரூபத்தில் கன்ஃபர்ம் செய்தார்.

ஜயராமன் அவர்களை தொலைபேசியில் கூப்பிட்டு பேச அவர் வருவதாகக் கூறினார். சிவஞானம் அவர்கள் பின்னூட்டத்திலேயே அதை கூறிவிட்டார். நாங்கள் பயந்த மாதிரியே பலருக்கும் முன்னாலேயே ஏற்றுக் கொண்ட வேலைகள் இருந்ததால் வர இயலாமையை பின்னூட்டங்களில் தெரிவித்தனர்.

மாலை 6 மணிக்கு சரியாக என் கார் டிரைவ் இன்னில் நுழைந்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே ஜோசஃப் சார் காரை பார்க் செய்து விட்டு வந்தார். அதன் பிறகு ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு சிவஞானம்ஜி வந்தார். ஜயராமன் வழியில் இருப்பதாக செல்பேசியில் தெரிவித்தார். அதே போல வந்து சேர்ந்தும் விட்டார். மரவண்டு கணேஷ் ஃபோன் செய்து மீட்டிங் பற்றி கேட்க, அவரை உடனே புறப்பட்டு வரும்படி கூறினேன். அவர் நுங்கம்பாக்கத்தில் இருந்தபடியால் உடனே வந்து விட்டார். ஆக மொத்தம் ஐந்து பேர் தேறினோம். 6.10 அளவில் சந்திப்பையும் ஆரம்பித்தோம்.

சிவஞானம்ஜி பல அரசுக் கல்லூரிகளில் பொருளாதாரம் பேராசிரியராகப் பணியாற்றியவர். 2000 ஆண்டில் ஓய்வு பெற்றவர். பொருளாதாரத்தை மாணவர்களுக்கு தமிழ் போதனா மொழியிலும் கற்பித்தவர். பல பாடங்களை தமிழில் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து எழுதியவர். பல சுவாரசியமான விஷயங்கள் பற்றி கூறினார். இப்போது தமிழ்மணத்தின் ருசியை அறிந்து உள்ளே வந்தவர். தற்சமயம் பின்னூட்டங்கள் அதிகம் போடுவதாகவும் பதிவுகள் ரொம்பவும் போடவில்லை என்றும் கூறினார். தமிழில் நூற்றுக் கணக்கான பக்கங்களை அனாயாசமாக எழுதியவர் தற்சமயம் கணினி தட்டச்சு மூலம் அவ்வளவாக வேகமாக அடிக்க இயலவில்லை என்ற நிலை. ஜோசஃப் சார் அவரிடம் இகலப்பையை இறக்கிக் கொள்ளுமாறு கூறினார்.

தமிழ்மணத்தின் பிரச்சினையாகிய போலியின் விஷயத்தை நான் சிவஞானம் அவர்களிடம் மிகச் சுருக்கமாக விளக்கினேன். பிறகு அது பற்றி பேச்சைத் தவிர்த்து வேறு பல விஷயங்கள் பேசினோம். பேசிப் பேசி அலுத்த விஷயம்தானே அது.

ஐந்து பேர் மட்டும் இருந்ததில் ஒரு சாதகமான விஷயம் என்னவென்றால், எல்லோரும் ஒருக்கொருவர் பேசிக் கொள்ள முடிந்ததுதான். இப்போது பல குடும்பங்களில் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக் கொள்வதால் நாளடைவில் மாமா, சித்தப்பா, அத்தை, பெரியப்பா, சித்தி ஆகிய உறவுமுறைகள் பற்றி யாருக்குமே பரிச்சயம் இருக்காது என்ற அச்சத்தை சிவஞானம்ஜி வெளியிட்டார். ஜயராமன் அவர்கள் தன் தரப்புக்கு தன் அம்மாஞ்சி மன்னியின் ஒன்று விட்ட அத்தங்காவின் வீட்டில் நடந்த மரணத்தை துக்கம் கேட்டு வருமாறு தன் தந்தை பணித்ததைக் கூறி இவ்வாறான உறவுமுறைகள் தற்சமயம் யாருக்கும் தெரியாமல் போய்விடும் அபாயத்தையும் கூறினார்.

பொருளாதாரம் சம்பந்தமாக ஏதேனும் சொல்லகராதி தமிழில் அதிகாரபூர்வமாக உள்ளதா என்று சிவஞானம்ஜியை நான் கேட்க, அவர் இல்லையென்று கூறினார். பாடப் புத்தகங்களும் தமிழில் சரியானத் தரத்தில் இல்லை என்றும் கூறினார். ஆங்கிலப் புத்தகங்களை வைத்துத்தான் ஒப்பேற்றவேண்டியிருக்கிறது, முக்கியமாக பி.ஏ. மற்றும் எம்.ஏ. வகுப்புகளில் என்றார். இந்த அழகில் தமிழ்வழிக் கல்வியை எவ்வாறு கொண்டு வருவது?

நானும் மரவண்டு கணேஷும் மற்ற மூவர் பேசுவதை கூர்ந்து கவனித்தோம். தமிழ்வழிக் கல்வி பற்றிய பல புது விஷயங்களை சிவஞானம்ஜி அவர்கள் சுவையாகக் கூறினார். ஏ.எல். லட்சுமணஸ்வாமி முதலியார் அவர்கள் மதறாஸ் யூனிவெர்சிடி துணைவேந்தராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்ததை நான் நினைவுகூற, சிவஞானம்ஜி அவர்கள் ஆதிசேஷய்யாவை பற்றி பேசினார். அவர்கள் அளவுக்கு இப்போது யாரும் இல்லை என்பது ஒரு கசப்பான உண்மையே. என் சொந்த ஊரான சருக்கை பற்றியும் சிவஞானம்ஜி அவர்கள் பேசினார். அந்தப் பக்கத்தில் தனக்கு நிலங்கள் இருப்பதையும் கூறினார். மூப்பனார் அவர்களது குடும்பம் தனக்கு மிகப் பரிச்சயம் என்றும் கூறினார்.

ஜயராமன் அவர்கள் டிஜிட்டல் கேமரா கொண்டு வந்தார். அப்பக்கம் வந்த வெயிட்டரை எங்கள் ஐவரையும் சேர்த்து போட்டோ எடுக்குமாறு அவர் கேட்டுக் கொள்ள, வெயிட்டரும் அவ்வாறே செய்தார். முதல் போட்டோ சற்று டார்க்காக வர, ஜயராமன் அவர்கள் "விடாது கறுப்பு" என்று வந்த படத்தை விடுத்து இன்னொரு படம் எடுக்குமாறு கூறி எடுக்கச் செய்தார். இப்போது எனக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்ப இப்பதிவில் அதை ஏற்றுகிறேன்.



இடமிருந்து வலம்: மரவண்டு கணேஷ், ஜோசஃப், டோண்டு ராகவன், சிவஞானம்ஜி மற்றும் ஜெயராமன்

இப்போது சில பொதுவான எண்ணங்கள்.

சந்திப்பு பற்றிய பதிவை போடும் முன்னரே நான் ஜோசஃப் அவர்களிடம் Arrangement will be on the basis of Dutch treat என்று போட்டுவிடலாமா என்று கேட்டேன். அவர் தான் பாங்க்கில் பெற்ற பதவி உயர்வுக்கான ட்ரீட்டாக இதை பாவித்து, செலவைத் தானே ஏற்றுக் கொள்வதாகக் கூறி விட்டார். எனக்கு மனது கேட்கவில்லை, ஆகவே கையில் தேவையான பணம் எடுத்துக் கொண்டு வந்தேன். ஐந்து பேர்களுக்கும் மைசூர் போண்டா (மரவண்டு மட்டும் சாம்பார் வடை ஆர்டர் செய்தார்) மற்றும் காப்பி ஆர்டர் செய்தோம். பில் வந்ததும் ஜோசஃப் அவர்கள் அதை நொடியில் கைப்பற்றி பணம் செலுத்தி விட்டார்.

செலவைப் பங்கு போடுவது பற்றி போன முறையே ஜயராமன், மரபூர் சந்திரசேகர் ஆகியோர் என்னிடம் பிரஸ்தாபித்தனர். அப்போது செலவை பி.கே.எஸ். ஏற்றுக் கொண்டிருந்தார். அதற்கு முன்னால் துளசி அவர்களது கணவர் கோபால் பில்லை பே செய்தார். எனக்கு என்னவோ இதை வேறு மாதிரி கையாள வேண்டும் எனத் தோன்றுகிறது. நாசுக்கான இந்த விஷயத்தை இத்தருணத்தில் நான் எழுப்பி விட்டேன். அடுத்த முறையாவது இது பற்றி ஏதேனும் செய்து செலவை எல்லோரும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். சந்தர் அவர்களும் இது பற்றி எனது முந்தையப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஊத வேண்டிய சங்கை இங்கு ஊதி விட்டேன். அடுத்த முறை பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/27/2006

சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு

நண்பர்களே,

இன்று மாலை 6 மணியளவில் சென்னை உட்லேண்ட்ஸ் டிரைவ்-இன்னில் ஒரு சென்னை வலைப்பதிவாளர்கள் சந்திப்பு வைக்க எண்ணியுள்ளோம் (டிபிஆர். ஜோசஃப் மற்றும் நானும்). சென்னை வலைப்பதிவாளர்கள், சென்னையில் தற்சமயம் இருக்கும் வெளியூர் வலைப்பதிவாளர்கள் ஆகியோரைக் கண்டு உரையாட ஆசை. சந்திப்பு சுமார் 2 மணி நீடிக்கலாம்.

குறைந்த அவகாச அறிவிப்புக்கு மன்னிக்க வேண்டுகிறோம். வர எண்ணம் உள்ளவர்கள் இப்பதிவின் பின்னூட்டமாக அதை வெளியிடலாம். தொலைபேசியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

டோண்டு ராகவன்: 9884012948
டி.பி.ஆர். ஜோசஃப்: 9840751117

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/25/2006

மதுமிதா அவர்கள் கேட்டுக் கொண்டபடி

மதுமிதா அவர்கள் கேட்டுக் கொண்டபடி என் வலைப்பூ விவரங்களை அளிக்கிறேன்.

வலைப்பதிவர் பெயர்: டோண்டு ராகவன்

வலைப்பூ பெயர் : Dondus dos and donts & Musings of a translator

சுட்டி(url) : http://dondu.blogspot.com/ as well as http://raghtransint.blogspot.com/
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகளாண்டவர்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : நவம்பர் 8, 2004

இது எத்தனையாவது பதிவு: 266

இப்பதிவின் சுட்டி(url): http://dondu.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: தமிழில் எழுதுவது மிகுந்த நிறைவை அளிக்கிறது.

சந்தித்த அனுபவங்கள்: ஏராளம்

பெற்ற நண்பர்கள்: அதே

கற்றவை:கணக்கிலடங்கா

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: போதை அளிக்கிறது.

இனி செய்ய நினைப்பவை: எத்தனையோ ஆசைகள்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன். புதிதாகக் கற்கவும் ஆசை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வாழ்க்கை இனிமையானது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/22/2006

ஒரு வழிப் பாதையின் மகிழ்ச்சிப் பக்கம்

ஒரு வருடம் முன்னால் நான் போட்ட 3 பதிவுகளை ஒன்றாக்கி இங்கு தந்துள்ளேன்.

"On the sunny side of a one way street" என்னும் தலைப்பில் உள்ள இந்த ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் கவித்துவத்தைத் தமிழில் கூறும் ஒரு முயற்சியாக இதைக் கருதலாம்.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் பிறந்தவர் வில்லியம் இ வில்சன். (William E. Wilson Junior) பிப்ரவரி 12, 1906-ல் பிறந்தவர். லிங்கனுடைய பிறந்த நாளும் இவர் பிறந்த நாளும் ஒன்றாக வருவதால் முன்னவர் மேல் பின்னவருக்கு ஒரு அபிமானம். அவரைப் பற்றிப் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

இப்போது நான் கூறிய புத்தகத்துக்கு வருகிறேன். தான் 15, 16 வயது வரை அனுபவித்த விஷயங்களை இதில் அவர் கூறுகிறார். அவர், அவருடைய அக்கா, மற்றும் அப்பா, அம்மா ஆகிய நால்வர் அடங்கியது அவரது பாசமிக்கக் குடும்பம்.

அவர் நினைவுகளை என் ஞாபகத்துக்கு எட்டிய வரை தமிழில் தர முயற்ச்சிக்கிறேன். இனிமேல் வரும் பத்திகளில் வரும் 'நான்' அவர்தான்.

என்னுடைய தந்தை மிகைபடுத்திப் பேசுவதில் வல்லவர். எங்கள் விட்டில் ஒரு பெரிய தெர்மாமீட்டர் இருந்தது அதில் அவர் பார்த்து விட்டு என் அன்னையிடம் "இன்று 85 டிகிரி (Fahrenheit) வெப்பம்" என்றுக் கூறி விட்டுப் போவார். என் அன்னை அவர் தரப்பில் பார்த்து விட்டு "இல்லை வில்லியம், இன்று வெப்பம் 90 டிக்ரீ" என்றுக் கூறுவார். அவர்கள் ரீடிங்குகள் எப்போதும் ஒத்துப் போனதேயில்லை.

ஒரு நாள் இம்மாதிரியான தருணத்தில் நான் பார்த்த போது, வெப்பம் 88 டிக்ரீ என்று காண்பித்தது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் எனக்குக் காரணம் புலப்பட்டது. என் தந்தையின் உயரம் 6 அடி 2 அங்குலம். என் தாயின் உயரம் 5 அடி 4 அங்குலம். ஆனால் என்னுடைய உயரம் 5 அடி 8 அங்குலம். என் கண்கள் தெர்மாமீட்டர் ரீடிங்கின் மட்டத்தில் இருந்தது. ஆகவே நான் பார்த்ததுதான் சரியான அளவு. இது ஒரு தோற்றப் பிழை (parallellaxe error) கணக்கில் வரும்.

என் தந்தையிடம் உடனே இதை விவரிக்க முயன்றேன். அவரோ, " அதனால்தான் உன் தாய் குறிப்பிட்ட அளவு சரியில்லை என்பது எனக்கு முதலிலேயே தெரியும்" என்றுக் கூறினார்.

நான் உடனே அவரிடம் "அது உங்களுக்கும் அவ்வாறே பொருந்தும்" என்றுக் கூறினேன். அவர் கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை. உடனே அவருக்கு ஏதோ 'வெளி வேலை' ஞாபகத்துக்கு வர, சடுதியில் இடத்தைக் காலி செய்தர்ர்.

நான் திகைப்புடன் அம்மாவைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அட அசடே என்றுக் கூறிக் கட்டியணைத்து முத்தமிட முயன்றார். நான் என்னக் குழந்தையா? 12 வயது ஆகவில்லையா? என்ற என்ணத்தில் அவரை அவ்வாறு செய்ய விடவில்லை.

அம்மா சொன்னார். உன் அப்பாவுக்கு நீ கூறியது உண்மை என்றுத் தெரியும். ஆனால் அவர் இன்னும் குழந்தைப் போன்றவர்தான். ஆகவே நீ அதைக் கண்டுக் கொள்ளாதே".

அப்போது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியும் வயது வந்தப் போது இந்த நிகழ்ச்சி என் நினவில் இல்லை. இப்போது இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வரும்போது அப்பா அம்மா இருவரும் உயிரோடு இல்லை.

புத்தகத்தின் இன்னொரு பகுதி:

நான் சிறுவனாக இருந்தப் போது டிஃப்தீரியா வந்து செத்துப் பிழைத்தேன். ஆனால் என் அக்காவுக்கு நடந்ததைப் பார்த்தால் எனக்கு வந்தது ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அவள் மெதுவாகக் குருடாகிக் கொண்டிருந்தாள்!

முதலில் எங்கள் யாருக்கும் அவள் பிரச்சினை புரியவில்லை. அவள் மார்க்குகள் குறைய ஆரம்பித்தன. என் தாய் தந்தையர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பிறகுதான் அவள் முழுக்கவும் பார்வை இழக்கப் போகிறாள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.

அப்போது எனக்கு 12 - 13 வயது இருக்கும். அவளுக்குப் 15 வயது.

மருத்துவரைப் பார்த்தப் பிறகு அவள் தனியே தன்னறையில் இருந்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கையை முன்னால் பரப்பிக் கொண்டு மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு 12 வயதுப் பையன் தன்னுடைய அக்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு மையமானப் பிரியம் எனக்கும் உண்டு. அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு எரிச்சல் கலந்தப் பொறுமையுடன் அவளிடம் "என்ன செய்யறே?" என்றுக் கேட்டேன். அவள் அதற்கு "குருடியாக இருக்கப் பயிற்சி செய்றேன்" என்றுக் கூறினாள்.

இப்போது தான் இவ்வரிகளை எழுதும்போது ஏதாவது அவளிடம் ஆறுதலாகக் கூறினேன் என்று சொல்ல எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. ஏதோ கேலியாக அவளிடம் பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடிப் போனதுதான் நான் செய்தது.

அவள் முழுக் குருடியானாள். அவள் அதற்கு மனத்தளவில் தயாரானாள். அவள் கண்கள் அழகானவை. பார்வை இல்லை என்பது புதிதாகப் பார்ப்பவர்களுக்கு முதலில் புரியாது. வீட்டின் எல்லா மூலைகளும் அவளுக்கு அத்துப்படி. உடல் வலிமை அதிகம் இல்லாதவள். ஆகவே அவளால் தன்னை வழிநடத்திச் செல்ல ஒரு பார்க்கும் நாயைக் கையாள முடியாமல் போனது.

என் தந்தை எங்கு நாங்கள் வெளியே சென்றாலும் அவளுக்கு தெருக்க்காட்சிகளைப் பொறுமையாக விளக்குவார். எனக்குத்தான் மிகவும் போர் அடிக்கும்.

அவர் சளைக்காமல் பொறுமையாக அவளுக்கு எங்கள் ஊரில் (ஈவான்ஸ்வில், இந்தியானா மாநிலம்) எல்லா தெருக்கள், கட்டிடங்கள், கடைகள் முதலியவற்றை விளக்குவார். இதன் பலன் பின்னால் தெரிந்தது.

1944-ல் எங்கள் அன்னை மறைந்தார். அடுத்த 4 தனிமையான வருடங்களை ஒரு வழியாகக் கழித்து எங்கள் தந்தையும் தன் அருமை மனைவியைப் பின் தொடர்ந்தார்.

இந்த 4 வருடங்களில் என் தந்தைக்கு மறதி அதிகம் வர ஆரம்பித்தது. தெருவில் போய்க் கொண்டே இருப்பார். திடீரென்று வீட்டுக்குத் திரும்பும் வழி மறந்து விடும். ஊரில் எல்லோருக்கும் அவரைத் தெரியும். இருந்தாலும் யாரையும் போய் உதவி கேட்க அவர் தன்மானம் இடம் கொடுக்காது.

ஆகவே அருகில் உள்ள ஏதாவத் டெலிஃபோன் பூத்துக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் செய்து என் அக்காவைக் கூப்பிடுவார்.
"வீட்டிற்கு வரும் வழி மறுபடியும் மறந்து விட்டேன் பெண்ணே. நான் இப்போது கோல்ட்ஷ்டைன் மளிகைக் கடை வாசலில் இருக்கிறேன்" என்பார்.
அக்கா உடனே கூறுவாள்: "கவலைப் படாதீங்கப்பா. அந்த மளிகைகடையை அடுத்தக் கடை ஜானின் தையற்கடை. அதை அடுத்து ஒரு சந்து. அதில் நேரே சென்றால் அது ஒரு பெரியத் தெருவில் முடியும். வலப் பக்கம் திரும்பி வந்தால் நான்காவது கட்டிடம்தான் நம் வீடு."

இவ்வாறாக என் தந்தை முன்பு பொறுமையுடன் செய்தது அவருக்குச் சாதகமாகவே முடிந்தது.

புத்தகத்தின் வேறொரு பாகம்:

எனக்கு பதினாறு வயது நெருங்கும்போது என் தந்தை உள்ளூர் தேர்தலில் வேட்பாளராக நின்றார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. நான் பள்ளியிலிருந்து நேராக என் தந்தையின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தேன். நான் உள்ளே நுழையும்போது என்னைத் தாண்டி அதுவரை நான் பார்த்திராத நால்வர் வெளியே சென்றனர். என்னுடைய ஹல்லோவை அவர்கள் சட்டை செய்யாமல் விர்ரென்று அந்த இடத்தை விட்டு அகன்றனர். நான் உள்ளே சென்று "யார் அப்பா அவர்கள்?" என்றுக் கேட்டேன். எனக்கு அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. நான் கேட்டதை கவனிக்காதது போல அவர் நான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் அவரை ஒன்றும் கேட்கவில்லை.
தேர்தல் நெருங்க, நெருங்க ஏதோ சரியாக இல்லாதது போன்ற உணர்வு எனக்கு வர ஆரம்பித்தது. அது வரை எங்களை கண்டதும் ஆர்வமாக வரவேற்றுப் பேசும் வாக்காளர்கள் எங்கள் பார்வையைத் தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் இதை கவனிக்காத நான் மெதுவாக நிலைமையின் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன். தேர்தலுக்கு முந்தைய நாள் எல்லா வேலைகளையும் முடித்தப் பின்னால் நான் என் தந்தையுடன் காரின் முன்ஸீட்டில் அவருடன் அமர்ந்துக் கொள்ள அவர் காரை மெதுவாக வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தார்.
அவர் ஒன்றும் பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று என்னை நோக்கி அவர் கேட்டார்:"இந்த தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நான் கூறினேன்: "நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இந்த ஊரில் உங்களுக்கு நல்லச் செல்வாக்காயிற்றே".
அவர்: "இல்லை வில்லியம், இம்முறை தோல்விதான்"
நான்: "ஏன் அப்பா?"
அவர்: "அன்றொரு நாள் நான்கு பேர் என் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர். நான் அவர்கள் கட்சி சார்பில் நிற்க வேண்டும் என்றுக் கூறினர். அவர்கள் கூ க்ளுக்ஸ் கான் (Ku Klux Khan) என்றத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீக்ரோக்களுக்கெதிராய் வன்முறை செயல்கள் நடத்துபவர்கள். நான் மறுத்து விட்டேன். அவர்களுக்கு இங்கு நல்லச் செல்வாக்கு உண்டு. என்னை ஜெயிக்க விட மாட்டார்கள்"

எனக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.

என் தந்தை தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார். "இந்த நாட்டில் என்ன நடக்கிறது? ஆபிரஹாம் லிங்கன் போன்ற மாமனிதர்கள் கட்டிக் காத்த இந்த நாட்டின் நிலை இப்படியா ஆக வெண்டும்?" என்றுக் கத்திக் கொண்டே தன் கார் முன் கண்ணாடியை ஒரு குத்து விட்டார். "சிலீர்" என்ற சப்தத்துடன் கண்ணாடி உடைந்து அதில் "ட" வடிவில் ஒரு ஓட்டை விழுந்தது.திடீரென்று என் தந்தையின் ஆவேசம் அடங்கியது. "என்ன இவ்வாறு ஆகி விட்டதே" என்று ஒரு குழந்தையைப் போல் என்னை நோக்கிக் கேட்டார்.

நேரே டாக்டர் வீட்டுக்குப் போய் ஒரு தையல் போட்டுக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். அதற்கு முன்னால் அவர் என்னிடம் தேர்தல் பற்றி உன் அம்மாவிடம் எதுவும் கூறாதே" என்று என்னைக் கேட்டுக் கொண்டார். "நீயே ஏதாவது கதை கூறிச் சமாளி" என்றும் கூறினார். என்னுடையக் கதை கட்டும் திறமையில் அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. முக்கியமாகக் கார் கண்ணாடி உடைந்ததற்கு அம்மா என்ன கூறுவாரோ என்று வேறு அவருக்குப் பயம்.
வீட்டுக்குச் சென்றோம். அப்பாவின் கையில் கட்டைப் பார்த்ததும் அம்மாவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்த களேபரத்தில் திட்டவும் மறந்துப் போனார்.

"என்ன வில்லியம் என்ன நடந்தது" என்று அவர் தலையை கோதியபடி கேட்டார். நான் முந்திக் கொண்டு "ஒன்றும் இல்லை அம்மா, நம் ஊர் கால்பந்தாட்டக் குழு நேற்று ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்கள். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே அப்பா வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று நம்மூர் குழுவின் முன்னணி வீரர் எவ்வாறு தாவி பந்தை உதை விட வேண்டும் என்றுக் காண்பிக்கப் போக, அவர் கையால் முன் கண்ணாடியைக் குத்தினார்" என்று உளறினேன்.

"அப்பா, பிள்ளை இருவருக்கும் வேறு வேலையில்லை" என்று எங்களை மொத்தமாகத் திட்டி விட்டு அம்மா அடுக்களைக்குள் சென்றார். என் தந்தை என்னை நன்றியுடன் பார்த்தார். அத்தருணத்தில் நான் பையனிலிருந்து ஒரு வளர்ந்த ஆளாக மாறியதை உணர்ந்தேன். தேர்தல்? அதில் எதிர்ப்பார்த்தத் தோல்விதான். ஆனாலும் அவ்வளவு அதிர்ச்சியைத் தரவில்லை.

இப்போது பேசுவது டோண்டு ராகவன்.

வில்ஸன் பிறந்த நாள் 12 பிப்ரவரி, 1906. ஏற்கனவே கூறியது போல லிங்கனுக்கும் அவருக்கும் ஒரே நாளில் தன் பிறந்த தினம். நான் இப்புத்தகத்தைப் படித்து முடித்தது 2, பிப்ரவரி, 1968. அவருக்குப் பிறந்த தின வாழ்த்து அனுப்ப எண்ணினேன். அமெரிக்க நூலகத்துக்குச் சென்று "ஹூ ஈஸ் ஹூ இன் அமெரிக்கா"-விலிருந்து அவர் முகவரியைப் பெற்றேன். 65 பைசாவுக்கு ஒரு ஏரோக்ராம் வாங்கி அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். 12-ஆம் தேதிக்குள் போய் சேர்ந்து விடும் என்றுக் கணக்குப் போட்டேன். அது என்னடாவென்றால் 8-ஆம் தேதியே போய் சேர்ந்து விட்டது. அவர் உடனடியாகப் போட்ட பதில் எனக்கு 12-ஆம் தேதி வந்தது.

என் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். தன் பிறந்த தினத்தன்றுத் தன் அக்கா வீட்டிற்கு செல்லப் போவதாகவும், அவரிடம் என் கடிதத்தைப் பற்றிக் கூறப்போவதாகவும் எழுதியிருந்தார். இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னோடியாக அமைந்தது.

அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்: " என் பிறந்ததினத்துக்கு ஈவான்ஸ்வில் செல்கிறேன். அங்கு வசிக்கும் என் அக்காவிடம் உங்கள் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2006

முரட்டு வைத்தியம் - 4

முதல் பதிவு
இரண்டாம் பதிவு
மூன்றாம் பதிவு

இந்தப் பதிவில் நான் கூறப்போகும் முரட்டு வைத்தியத்துக்கானப் பின்னணியை முதலில் கூறிவிடுகிறேன்.

"துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால், இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க:பதிவின் சுட்டி" என்ற ரேஞ்சில் வரும் என் பின்னூட்டங்கள் பலருக்கு ரொம்ப பரிச்சயமானது. இப்பதிவு அந்த அதர் ஆப்ஷனைப் பற்றியது.

கல்லூரிகளில் இயற்பியல் வகுப்பில் அளக்கும் கருவிகளை காலிப்ரேஷன் செய்யும் பரிசோதனையை உங்களில் பலர் செய்திருப்பீர்கள். உதாரணத்துக்கு ஒரு ammeter-ஐ எடுத்துக் கொள்வோம். மின்சார கரெண்டை அளக்கும் இக்கருவியை உபயோகத்துக்கு அளிக்கும் முன்னால் அதை கேலிப்ரேட் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்வார்கள் என்றால் அக்கருவியை ஒரு ஸ்டேண்டர்ட் கருவியுடன் சீரீஸில் இணைத்து கரெண்ட் ரீடிங்குகளை எடுப்பார்கள். 1, 2, 3, 4, 5, .... 27, 28, 29, 30 ஆம்ப்ஸ் ரீடிங்குகளை ஸ்டேண்டர்ட் காண்பிக்கும்போது சோதனைக்குட்படுத்தப்படும் கருவி என்ன ரீடிங்குகள் காட்டுகிறது என்பதையும் குறிப்பார்கள். பிறகு இரண்டு கருவிகள் ரீடிங்குகளையும் க்ராஃபில் ப்ளாட் செய்வார்கள். 0-30 A கருவியில் ஒரு ஆம்பியருக்கு ஒரு புள்ளி வீதம் 30 பாயிண்டுகள் கிடைக்கும். எல்லாவற்றையும் ப்ளாட் செய்து பிறகு அவற்றை ஒரு கோட்டால் இணைப்பார்கள். சாதாரணமாக நாம் ஸ்மூத் கர்வ் வருவது போல இணைக்க வேண்டும். ஆனால் இங்கு மட்டும் ஒரு பாயிண்டை அதன் அடுத்த பாயிண்டுடன் நேர்க் கோட்டால்தான் இணைக்க வேண்டும். ஏனெனில் இந்த இணைக்கும் கோடு கண்டின்யுவஸ் கர்வ் அல்ல. அப்படி ஸ்மூத் கர்வாக வெளியிடுவது நியாயப்படுத்தமுடியாத துல்லியம் என்று கூறுவார்கள்.

விஞ்ஞானத்தில் இது ரொம்ப முக்கியமான அடிப்படை. அதாவது தேவையில்லாமல் துல்லியம் தரக் கூடாது. சரி, இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம். அனானி ஆப்ஷன் என்பதில் ஒரு பொய்மையும் இல்லை. அது அனாமத்து என்பதில் எந்த சந்தேகமும் இல்லையாதலால் தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். அதாவது கேலிப்ரேஷன் கிராஃபில் நேர்க்கோடுகளால் பாயிண்டுகளைச் சேர்ப்பது.

ஆனால் இந்த அதர் ஆப்ஷன் இருக்கிறதே, இது ரொம்ப அபாயகரமானது. இதை வைத்துக் கொண்டு பல விஷமக் காரியங்கள் செய்யலாம்.என் விஷயத்தில் செய்யப்பட்டன என்பதை இந்தத் தமிழ்மணத்தில் பலரும் அறிவார்கள். இதை நாம் கேலிப்ரேஷன் புள்ளிகளை smooth curve ஆக இணைப்பதற்கு சமம்.

பலருக்கு நான் இப்போது கூறப்போவது கசப்பாக இருந்தாலும் ஒன்றைக் கூறியே ஆக வேண்டும். வலைப்பதிவாளர்களில் கணிசமான பேர்கள் மென்பொருள் உணர்வு அதிகம் இல்லாதவர்கள். பார்ப்பதை அப்படியே நம்புபவர்கள். அதர் ஆப்ஷனில் வெறுமனே பெயர் மற்றும் வலைத்தள முகவரி மட்டும் கேட்கப்படும். இந்த அதர் ஆப்ஷனை உபயோகித்து யார் வேண்டுமானாலும் எவருடைய பிளாக்கர் எண்ணையும் உபயோகித்து பின்னூட்டம் இட்டு விடலாம். அப்போது டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தாலும் சரியான பிளாக்கர் எண்ணே தெரியும். ஆனால் இதைப் பலமுறை கூறியும் பிரயோசனம் ரொம்ப இல்லை என்றுதான் கூறவேண்டும்.

இப்போதைய பிளாக்கர் வசதிகள்படி அனானி ஆப்ஷனும் அதர் ஆப்ஷனும் தனித்தனியே செயலற்றதாகச் செய்ய இயலாது. ஆகவேதான் வெறும் பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவ்வளவு அபாயம் இல்லாத அனானி ஆப்ஷனும் இதில் அடிபட்டாலும் வேறு வழியில்லை. பிளாக்கருக்கு இது பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். அவர்களும் கவனிப்பதாகக் கூறியுள்ளனர்.

அதெல்லாம் சரிதான் முரட்டுவைத்தியம் இதில் எங்கே வந்தது என்று கேட்பவர்களுக்கு இதோ கூறிவிடுகிறேன்.

இந்த அதர் ஆப்ஷனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்று கூறினேன் அல்லவா. அதை எப்படி எதிர்க்கொள்வது என்று யோசித்து செயல்பட்டதுதான் அந்த முரட்டு வைத்தியம். அம்மாதிரி யோசனையின் விளைவுதான் நான் பிரபலப்படுத்திய மூன்று சோதனைகள். அவை உருவானதுகூட ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான்.

முதலில் என் பெயரில் பிளாக்கர் கணக்கு துவங்கப்பட்டு அசிங்கப் பின்னுட்டங்கள் அப்பெயரில் வெளியிடப்பட்டன. என்னுடைய உடனடி எதிர்வினை எலிக்குட்டி சோதனையைப் பற்றிக் கூறுவதே. போலி ஆசாமி அவ்வாறு துவக்கிய பிளாக்கர் கணக்கில் ஒரு வலைப்பூவையும் துவக்கினான். அதை க்ளிக் செய்தால் அது மெடா ரீடைரக்ஷன் என்ற உத்தியைப் பயன்படுத்தி என்னுடைய வலைப்பூவுக்கு இட்டுச் சென்றது. இதை எப்படி முறியடிப்பது? அதில்தான் பிறந்தது "என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்" என்றப் பதிவு. சில நாட்களுக்கு புதுப்பதிவு ஒன்றும் போடாமல் இருந்ததில் மெடா ரீடைரக்ஷன் மூலம் என் வலைப்பூவுக்கு வந்தவர்களின் கவனம் இப்பதிவால் ஈர்க்கப்பட்டது. ஆகவே போலியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஓசைப்படாமல் மெடா ரீடைரக்ஷனை வாபஸ் பெற்றான்.

இப்போது அதர் ஆப்ஷனை உபயோகித்து எலிக்குட்டி வைத்தாலும் என் பிளாக்கர் எண் வருமாறு செய்தான். சிறிது நேரம் என்ன செய்வது என்று திகைத்தேன். அப்போதுதான் என் நண்பர் எஸ்.கே. துணைக்கு வந்தார். என் ப்ரொஃபைலில் போட்டோ போட்டுக் கொள்ளச் சொன்னார். அவ்வாறு செய்ததில் நிலைமை சீரானது.

அதர் ஆப்ஷனில் வரும் பின்னூட்டங்களில் போட்டோ தெரியாது. அதே போல என் போட்டோவைப் போட்டு போலி ஆசாமி ஆரம்பித்த பிளாக்கர் கணக்கிலிருந்து பின்னூட்டமிட்டால் எலிக்குட்டி சரியான எண்ணைக் காண்பித்து விடும். இவ்வாறு என் முதல் இரண்டு சோதனைகள் வடிவு பெற்றன, அதாவது எலிக்குட்டி மூலம் சரியான பிளாக்கர் எண் தெரிய வேண்டும், அதே சமயம் போட்டோவும் தெரிய வேண்டும். மேலும் இவை இரண்டும் சேர்ந்து நிறைவேற வேண்டும்.

ஆனால் பிரச்சினைகள் வேறு ரூபத்தில் வந்தன. பல வலைப்பதிவாளர்கள் போட்டோக்கள் எனேபிள் செய்யவில்லை. அவர்களில் சிலர் அதர் ஆப்ஷன் வேறு வைத்திருந்தனர். மேலும், பிளாக்கர் இல்லாத வேறு சேவை தளங்களில் வலைப்பூ வைத்திருப்பவர்கள் விஷயத்தில் எலிக்குட்டி சோதனையோ போட்டோவோ பிரயோசனப்படாது. இங்குதான் என் மூன்றாம் சோதனை உருவாயிற்று. நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் அதன் நகலை நான் இதற்காகவே வைத்திருக்கும் என் தனிப்பதில் பின்னூட்டமாக இடுவதைத்தான் கூறுகிறேன்.

என்னால் முடிந்த அளவுக்கு பாதுகாப்புகள் செய்து கொண்டேன். ஆனால் அவை மட்டும் போதாது என்பதுதான் நிஜம். எலிக்குட்டியை வைத்துப் பார்க்கக் கூட சோம்பல் பலருக்கு. சிலருக்கு அது பற்றி நிஜமாகவே தெரியாது என்பதையும் கூறிவிட வேண்டும். இங்குதான் என் முரட்டு வைத்தியத்தின் அடுத்த நிலை எட்டப்பட்டது. தமிழ் மணத்தில் மறுமொழியப்பட்ட முந்தைய நாள் ஆக்கங்கள், புதுப்பதிவுகள் எல்லாவற்றையும் படித்து என் பெயரில் ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று பார்ப்பது எனக்கு வழமையான வேலையாயிற்று. அவ்வாறு வரும் பதிவுகளில் போய் சம்பந்தப்பட்ட வலைப்பதிவாளர்களின் கவனத்தை ஈர்ப்பது எனது அடுத்த நடவடிக்கை ஆயிற்று. வீர வன்னியன், மயிலாடுதுறை சிவா, ரயாகரன், வா. மணிகண்டன் போன்ற சிலரைத் தவிர்த்து எல்லோருமே உடனுக்குடன் போலிப் பின்னூட்டங்களை நீக்கினர். இத்தருணத்தில் என் சார்பில் போலி பின்னூட்டங்களை அடையாளம் கண்ட என் நண்பர்கள் ரோசா வசந்த், குழலி ஆகியோரை நான் நன்றியுடன் குறிப்பிடுகிறேன். பலர் எனக்கு இது சம்பந்தமாக தனி மின்னஞ்சல்கள் வேறு அனுப்பினர்.

ஆக, நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தது. இங்குதான் போலி ஒரு தவறு செய்தான். என் பதிவில் யாருமே பின்னூட்டம் இடக்கூடாது என்று அடாவடி செய்ய ஆரம்பித்தான். அதன்படி யார் என் பதிவில் பின்னூட்டமிட்டாலும் அவர்கள் பதிவுகளில் போய் அசிங்கமாக பின்னூட்டம் என் பெயரில் இட ஆரம்பித்தான். அதன் விளைவாக தமிழ்மணத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் கட்டாயமாக்கப் பட்டது. விரல் எண்ணிக்கையில் அடங்கக் கூடிய சிலரைத் தவிர எல்லோருமே இந்த விதியை ஆதரித்தனர். ஆகவே தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டப் பதிவுகளிலிருந்து அசிங்கப் பின்னூட்டங்கள் மறைந்தன.

இன்னும் எனது இந்த முரட்டு வைத்தியம் தொடர்கின்றது. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்.

"Constant vigilance is the price demanded by freedom" என்பது தாரக மந்திரம். சிறிது ஏமாந்தாலும் சுதந்திரம் பறிபோய்விடும் அபாயம் உண்டு. அதே போலத்தான் மன நிம்மதியும். சுற்றுப்புறத்தில் எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எங்கிருந்து யார் வந்து நிம்மதியைக் குலைப்பார்கள் என்பது தெரியாது. ஆகவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/13/2006

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 3

பகுதி - 1
பகுதி - 2

ஆகவே நான் கடல் பயணம் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அது எனக்காக இல்லை, ஜார்ஜ் மற்றும் ஹாரிஸின் உடல்நலத்தை உத்தேசித்தே என்பதையும் தெளிவுபடுத்தினேன். எனக்கு எப்பொதும் கடல் நோய் ஏற்பட்டதேயில்லை என்றும் கூறினேன். ஜார்ஜ் அவன் பங்குக்கு கூறினான், தனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையென்றும், கடல் பயணம் அவனுக்குப் பிடிக்கும் என்றும், ஆனால் நானும் ஹாரிஸும் சிரமப்படுவோம் என்றெண்ணியே கடல் பயணம் தேவையில்லையெனக் கூறியதாகக் கருணையுடன் கூறினான். ஹாரிஸும் கிட்டத்தட்ட இவ்வாறே, ஆனால் தேவையான எழுவாய் மாறுதல் செய்து கூறினான். எப்படி ஒருவருக்கு கடல் பயணம் செய்தால் வாந்தி மயக்கம் வரக்கூடும் என்பது தனக்குப் புரியவேயில்லை என்று வேறு ஹாரிஸ் கூறினான். வேண்டுமென்றே மற்றவர் பாவனை காண்பிக்கிறார்கள் என்று கவலையுடன் அபிப்பிராயப்பட்டான். தான் எவ்வளவு முயற்சி செய்தும் அம்மாதிரி வாந்தி எதுவும் தனக்கு வரவேயில்லை என்று திகைப்புடன் சொன்னான்.

பிறகு ஹாரிஸ் இங்கிலீஷ் கால்வாயில் தான் செய்த பயணங்களைப் பற்றிக் கூறினான். கடல் கொந்தளிப்பிள் பயணிகளை அவரவர் படுக்கையுடன் கட்டிப் போட வேண்டியதாயிற்று. அவனும் கேப்டனும் மட்டுமே வாந்தியெடுக்காமல் இருந்தனர் என்றும் அவன் கூறினான். சில அவனும் துணை கேப்டன் மட்டும், வேறு சமயங்களில் அவனும் மீகாமன் மட்டும் என்று யாரேனும் இருவர்தான் எந்த சமயத்திலும் பாதிக்கப்படாமல் இருந்தனர் என்று கூறி தலையை வேகமாகா ஆட்டினான். அதாவது அந்த இருவரில் ஒருவனாக ஹாரிஸ் எப்போதுமே இருப்பான். அப்படியில்லாவிட்டால் சில சமயங்களில் அவன் மட்டுமே.

எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. கடல் பயணங்களின் போது மயக்கம் அடைந்ததாக கரையில் இருக்கும் எவருமே எப்போதுமே ஒத்துக் கொண்டதில்லை. கடல் பயணம் செய்யும்போது நீங்களே அம்மாதிரி பலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அத்தனை பேரும் கரையிறங்கியதும் எங்கு போய் ஒளிந்து கொள்கின்றனர் என்பது மிகப் பெரிய புதிரே.

ஆனால் நான் பார்த்த ஒரு மனிதனை உதாரணமாகக் கொண்டால் என்ன நடக்கிறது என்பதை ஊகிக்க முடியும். அவனை ஒரு கடல் பயணத்தின்போது பார்த்தேன். கப்பல் மேல்தளத்தின் ரெயிலிங்கில் அபாயகரமாக சாய்ந்து, ஓங்கார சப்தத்துடன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். அவன் கீழே விழுந்துவிடப் போகிறான் என்ற ஆதங்கத்தில் நான் அவனை ஜாக்கிரதையாக இருக்கும்படி கூற அவன் அப்படி விழுந்தால்கூட தேவலை என்ற ரேஞ்சில் பேசிவிட்டு வாந்தியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். மூன்று வாரங்கள் கழித்து அவனை பாத் என்ற ஊரில் உள்ள ஹோட்டல் காபி ஷாப்பில் பார்த்தேன். அவன் சுற்றி இருந்தவர்களுடன் தன் செய்த கடல் பயணங்களை பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டு வந்தான். தனக்கு கடல் என்றால் உயிர் என்றும் பேசினான். அவன் தனக்கு கடல் நோய் வந்ததே இல்லையென்றும், ஒரே ஒரு முறை தென் அமெரிக்காவில் உள்ள கேப் ஹார்ண் அருகே சற்றே வயிற்றை குமட்டியதாகவும், அடுத்த நாள் கப்பல் மூழ்கியதாகவும் கூறினான்.

நான் சொன்னேன், "உங்களை ஒரு கப்பல் பயணத்தின் போது ஜிப்ரால்டர் அருகே வாந்தி எடுப்பதை பார்த்தேனே" என்று. "எப்போது" என்று அவன் ஆச்சரியத்துடன் கேட்க, "சமீபத்தில் மூன்று வாரங்களுக்கு முன்பு, அது ஒரு வெள்ளிக் கிழமை" என்று விடாமல் கூற, அவனோ, "ஓ, அதுவா? அன்று சாப்பாட்டில் கொடுத்த ஊறுகாயில் பூஞ்சைக் காளான், ஆகவே உடல் நிலை சற்று சரியில்லை, அவ்வளவே. இம்மாதிரி மட்டமான ஊறுகாய் போட்டதற்காக கேப்டனை திட்டி விட்டேன். அவரும் மன்னிப்பு கேட்டு கொண்டு ஒரு புது ஊறுகாய் பாட்டில் கொடுத்தார், இதோ அது" என்று ஒரு ஊறுகாய் பாட்டிலை தன் பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.

என்னைப் பொருத்தவரை கடல் நோய்க்கு ஓர் அருமையான மாற்றுமுறை கண்டுபிடித்துள்ளேன். கடல் நோய் ஏன் ஏற்படுகிறது? உங்கள் பேலன்ஸ் தவறுவதால்தானே. ஆகவே கப்பல் மேல்தளத்தில் நின்று கொண்டு கப்பல் முன்பக்கம் சாய்ந்தால் நீங்கள் பின் பக்கமாக அதே அளவு சாய வேண்டும், அதே போல கப்பலில் இருக்கும் எல்லா நாட்களிலும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் செய்தால் போதும்.

இப்போது எங்கள் மூவர் விஷயத்துக்கு வருகிறேன்.

ஜார்ஜ் சொன்னான். "பேசாமல் தேம்ஸ் நதியில் படகு பயணம் செய்யலாம்." அவன் மேலும் இதனால் நல்ல காற்று நம் மேல் படும் என்றும், நல்ல உடற் பயிற்சி, ஆரவாரமில்லாத சூழ்நிலை ஆகியவை கிட்டும் என்றும் விடாது மாறும் காட்சிகள் நம் மூளைக்கு புத்துணர்ச்சி தரும் (இதில் ஹாரிஸிடம் இருக்கும் மூளை என்று அவதூறாகக் கருதப்படும் வஸ்துவும் அடங்கும்) என்றும் கூறினான். மேலும் நல்ல உடல் உழைப்பால் சுகமான தூக்கம் வேறு வரும் என்றும் கூறினான்.

ஹாரிஸொ இப்போதிருப்பதற்கு மேல் ஜார்ஜ் தூங்க நினைத்தால் நாடு தாங்காது என்று அபிபிராயப்பட்டான். உண்மை கூறப் புகுந்தால் இதற்கு மேல் எவ்வாறு ஜார்ஜுக்கு தூங்க நேரம் கிடைக்கும் என்றும் கேட்டான். குளிர்க்காலமோ, கோடைகாலமோ ஒரு நாளில் 24 மணி நேரங்கள்தான் உள்ளன என்றும் இதற்கு மேல் ஜார்ஜ் தூங்க நினைத்தால் அதற்கு செத்துப் பொவதே ஒரு வழி என்றும் அப்படியானால் ஜார்ஜுக்காக ஆகும் வாடகையும் சாப்பாட்டுச் செலவும் மிச்சம் என்றும் ஹாரிஸ் கவலை தோய்ந்த முகத்துடன் கூறினான்.

ஆனால், நதிப் பயணம் தனக்கு ஜாடிக்கு மூடியென என ஒத்துக் கொள்ளும் என்றும் ஹாரிஸ் கூறினான். எனக்குத் தெரிந்த ஜாடி எல்லாம் ஊறுகாய் ஜாடிதான்.

எனக்கும் அது ஜாடிக்கு மூடியென ஒத்துக் கொள்ளும்தான். ஆகவே நானும் ஹாரிஸும் ஜார்ஜின் யோசனை நல்லது என்று கூறும்படியாயிற்று. இவ்வளவு நல்ல யோசனையை ஜார்ஜ் போன்ற ஒருவன் எவ்வாறு கூறலாயிற்று என்று நாங்கள் இருவரும் எங்கள் தலையை பிய்த்துக் கொண்டோம்.

மாண்ட்மரன்ஸிக்கு மட்டும் இந்த யோசனை பிடிக்காது எனத் தோன்றியது. அவன் கூறக்கூடும், "எல்லாம் சரிதான், ஆனால் எனக்கு என்ன பயன்? கடல் பயணத்தின்போது துரத்த ஒரு கோழியோ பூனையோ எலியோ உண்டா?" அதெல்லாம் அவன் கூறவில்லை. ஏனெனில் மாண்ட்மரன்ஸி நான் வளர்க்கும் நாய்.



நாங்கள் மூவர் மெஜாரிட்டியில் இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/12/2006

ரீடர்ஸ் டைஜஸ்ட்

ரீடர்ஸ் டைஜஸ்டின் ஆரம்பம் மிக சாதாரணமானது. பல பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றிலிருது தொகுத்து அவற்றை அவற்றை தங்கள் வாசகர்கள் படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டெவி வாலஸ் மற்றும் அவரது மனைவி லீலாவால் ஆரம்பிக்கப்பட்டது இது. முதல் இதழ் 1922-ல் வந்தது. ஒரு இதழ் பத்து அமெரிக்க டாலர் செண்டுகள் விலைக்கு சந்தாதாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பட்ட இந்த பத்திரிகை 1929-ல் கடைகளுக்கு வந்தது. பத்து லட்சம் காப்பிகள் இலக்கு 1935-ல் எட்டப்பட்டது. 1994-ல் சர்குலேஷன் 100 கோடியை எட்டியது. ஆகஸ்ட் 2005 ஆயிரமாவது மாத இதழாகும் (80 வருடங்களுக்கு மேல்). தற்சமயம் ரீடர்ஸ் டைஜஸ்ட் 49 எடிஷன்களாக, 20 மொழிகளில் அச்சிடப்பட்டு 61=க்கும் அதிகமான நாடுகளில் வாங்க முடிகிறது. 2005-ல் கூட ஒரு புது ருமேனிய எடிஷனைக் கொண்டு வந்தார்கள்.

புள்ளி விவரங்கள் போதும் என நினைக்கிறேன். இனிமேல் ரீடர்ஸ் டைஜஸ்ட் என் வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதைப் பார்க்கலாம். நான் 1962-லிருந்து ரீடர்ஸ் டைஜஸ்டை மாதா மாதம் படிக்க ஆரம்பித்தேன். அதன் கம்யூனிச எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு, அமெரிக்க நிலையின் பிரதிபலிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டேன். பல கட்டுரைகள் வெவ்வேறு மூலங்களிலிருந்து திரட்டப் பட்டவை. அவை புத்தகங்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றை அமெரிக்க நூலகத்தில் தேடி படித்தேன். அறுபதுகள் முழுக்க அதனால் நான் நல்ல முறையில் பாதிக்கப்பட்டேன். வீட்டில் இந்திய எடிஷன் வந்தது. அமெரிக்க எடிஷனுக்கு அமெரிக்க நூலகம் செல்வேன். அதனுடைய It pays to increase your word power, drama in real life, book of the month, humor in uniform, life's like that, laughter the best medicine ஆகிய பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தன. கம்யூனிசத்தின் புளுகு பிரசாரங்கள், சோவியத் யூனியன் சரித்திரத்தை தங்களுக்கேற்ப திருத்தி எழுதுவது ஆகியவற்றை இப்பத்திரிகை தோலுறுத்திக் காட்டியது. என்னைப் போலவே இளைஞர்கள் பலரும் இப்பத்திரிகையால் ஈர்க்கப்பட்டனர். அவ்வப்போது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்களிலிருந்து எனக்கு பிடித்த கட்டுரைகளை சேர்த்து, பைண்ட் செய்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

வயதானவர்களும் ரீடர்ஸ் டைஜஸ்டின் பிடியிலிருந்து தப்பவில்லை. முக்கியமாக சீதாப்பாட்டி. அவர் டைஜஸ்டை படித்துவிட்டு அவ்வப்போது அப்புசாமி தாத்தாவை படுத்துவது தமிழ் கூறும் நல்லுகம் முழுதும் அறிந்த செய்தியாகும். முதல் கதையிலேயே டைஜஸ்டில் வந்த கட்டுரை ஒன்றில் பொடி போடுவதின் கெடுதியைப் பற்றி படித்துவிட்டு அப்புசாமிக்கு பொடிபோட தடா விதித்தவர் சீதாப்பாட்டி.

போன வருடம் அமெரிக்க நூலகத்துக்கு சென்றிருந்தேன். செக்யூரிடி சோதனைகள் என்று படுத்தினார்கள். எல்லாம் முடிந்து உள்ளே போனால் ரீடர்ஸ் டைஜஸ்ட் கிடைக்கவில்லை. விசாரித்தால் அதை வரவழைப்பதை நிறுத்தி விட்டார்களாம். பிறகு நான் அமெரிக்க நூலகங்களுக்கு செல்லவில்லை. ஒரு சகாப்தமே முடிந்த உணர்வு எனக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/10/2006

ஹிந்தி மொழி கற்றுக் கொண்ட கதை

சமீபத்தில் 1968 நவம்பரில் கடைசி வருடம் பொறியியல் வகுப்பில் இருந்த போது கல்விசார் சுற்றுப் பயணமாக பம்பாய் சென்றிருந்தோம். நாங்கள் நால்வர், பிரகாசம், டி.பி.ராமச்சந்திரன், சம்பத் மற்றும் நான் ஒரு குழுவாக விஹார் மற்றும் பவாய் ஏரிகளைக் காணலாம் என்று போனோம். கையில் மேப், வாயில் (என்) ஹிந்தி என்ற தைரியத்தில் கிளம்பி விட்டோம். வழி தெரியாத இடங்களில் நான் எதிர்ப்பட்டவர்களை விசாரிக்க (ஹிந்தியில்தான்) மெதுவாக முன்னேறினோம். என் நண்பர்கள் அவ்வப்போது என்னை சற்று வித்தியாசமாக நோக்க அவர்களிடம் காரணம் கேட்டேன். ராமசந்திரன் என்னிடம், "அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, நாம இவ்வளவு வருஷம் ஒண்ணா பழகியிருக்கோம், இப்போ உன்னை நீ ஹிந்தி பேசறச்செ பார்க்கும்போது ஏதோ புது ஆளை பார்க்கிறாப் போல இருக்குடா, அதனால்தான்.." என்று இழுத்தான்.

அதுதான் விஷயம். நமக்கு ஒரு மொழி தெரியவில்லையென்றால் அதைப் பேசுபவர்கள் நமக்கு அன்னியமாகவே தெரிவார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை ஹிந்தி பேசப் பேசத்தான் நம் நாட்டின் நீள அகலங்கள் என் உணர்வுக்கு நன்றாகப் பட்டன. நான் ஏற்கனவே ஜெர்மன் பற்றி எழுதும்போது கூறியதுதான், அதாவது ஓர் அன்னிய மொழியைக் கற்கும்போது அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நமக்கு இனிமேல் அன்னியமில்லை. அவர்களின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்கின்றன.

என் முதல் ஹிந்தி ஆசிரியை என் தாயார்தான். அவர் எனக்கும் என் அக்காவுக்கும் ஹிந்தி மற்றும் ஆங்கில இலக்கணங்களின் அடிப்படையைக் கற்றுத் தந்தார். ஹிந்தியில் அவர் மூன்று தேர்வுகள் மற்றும் பாஸ் செய்திருந்தார், இருப்பினும் விசாரத் (5வது தேர்வு) அளவுக்கு எழுதும் தேர்ச்சி பெற்றவர். ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் எங்கள் பாடத் திட்டத்தில் உண்டு. ஹிந்தியும் ஆரம்பித்தனர். அதற்கு முன்பே என் அன்னை எங்களை அம்மொழிகளைப் படிக்கச் செய்து விட்டார். பிறகு ஒன்பதாம் வகுப்பில் நானே பிராதமிக் என்னும் முதல் தேர்விலிருந்து ஆரம்பித்து மத்யமா மற்றும் ராஷ்ட்ரபாஷா என்று மூன்று தேர்வுகளை பாஸ் செய்தேன். மத்யமா வரைக்கும் என்னுடன் இருந்த என் அருமை அன்னை காலமாக அவர் எனக்கு விட்டுச் சென்ற நோட்ஸ்கள் மற்றும் என் மாமா பிள்ளையின் ஆதரவுடன் மத்யமா எழுதி பாஸ் செய்தேன். அதற்கு ஹிந்தி பிரசார சபையில் சேர்ந்து ராஷ்ட்ரபாஷா பாஸ் செய்தேன்.

மெதுவாக ஹிந்திப்படங்கள் ஹிந்தியில் செய்திகள் கேட்டல் என்று ஆரம்பித்து பேச்சு ஹிந்தியையும் பலப்படுத்திக் கொண்டேன். அதுதான் நான் இப்பதிவின் ஆரம்பத்தில் கூறியதற்கான பின்புலம். மூன்றரை வருடங்கள் நான் பம்பாயில் இருந்தபோது என் பேச்சு ஹிந்தி இன்னும் பலப்பட்டது. பிறகு ஏழு வருடங்கள் சென்னை வாசம். அதன் பிறகு 20 ஆண்டுகள் தில்லியில். இங்குதான் என் ஹிந்தியில் அபார முன்னேற்றம். ஹிந்தியில் ஜோக்குகள் (முக்கியமாக அசைவ கோக்குகள்) சொல்வதில் நான் மிகப் பிரசித்தம். நான் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் படித்ததையெல்லாம் ஹிந்தி உருதுவில் கூற ஆரம்பிக்க, ஒரே ஜாலிதான். அதுவும் உருதுவுடன் அதிகத் தொடர்பு இக்காலக் கட்டத்தில்தான் ஏற்பட்டது.

தில்லியில் இருந்தபோது நான் எந்த சந்தர்ப்பத்திலும் பேசுவதற்காக மொழிகளை இம்முறையில் தேர்ந்தெடுத்தேன். தமிழர்களைப் பார்த்தால் தமிழில். அவர் ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழில்தான் பேசுவேன். அவரே சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக (கூட இருப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பது போன்ற காரணங்கள்) என்னையும் ஆங்கிலத்தில் பேசச் சொன்னால்தான் அவ்வாறு செய்வேன். அதே போல தமிழர் அல்லாத சக இந்தியரிடம் பேசும்போது என்னையறியாமலேயே ஹிந்தியில் பேசுவேன். அவர் ஆங்கிலத்தில் பேசினாலும் ஹிந்தியில்தான் பேசுவேன். சான்ஸ் கிடைத்தால் அவர் ஆங்கிலத்தில் பேசியதற்காக மிருதுவாக அவரைக் கலாய்ப்பேன். ஆங்கிலம் மூன்றாம் சாய்ஸ்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/09/2006

ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கை - 2

முதல் பதிவுக்கு வந்த சில பின்னூட்டங்கள் இந்த இரண்டாம் பதிவையிட ஊக்குவித்தன.

ஹிந்தியில் அவதார் என்று ஒரு படம் எண்பதுகளில் வந்தது. ராஜேஷ் கன்னா, ஷபனா ஆஸ்மி, ஏ.கே. ஹங்கல், சுஜீத் குமார், சச்சின் ஆகியோர் நடித்திருந்தனர். மோட்டார் மெக்கானிக் ராஜேஷ் கன்னாவுக்கு இரண்டு பையன்கள். சச்சின் அவர் நம்பிக்கைக்குரிய வேலைக்காரன். முதல் பையன் பேங்க் ஆபீஸர், இரண்டாவது பையன் பொறியியல் கல்லூரியில் படிக்கிறான். விபத்தில் ஒரு கை இழந்த ராஜேஷ் கன்னாவுக்கு அவர் முதலாளி கணிசமான தொகை தருகிறார். அதை ஒரு வீடு வாங்க உபயோகிக்கும் ராஜேஷ் கன்னா, பணத்தை பெரிய மகனிடம் கொடுத்து வீட்டை தன் மனைவியின் பெயரில் பதிவு செய்யச் சொல்ல அவனோ அதை தன் மனைவி பெயருக்கு பதிவு செய்து விடுகிறான். அவர் கஷ்டப்பட்டு இரண்டாம் மகனை படிக்க வைக்க அவனோ பாஸ் செய்ததும் தந்தையிடம் கூடக் கூறாது தன் காதலியின் தந்தையின் ஆசி பெற்று அவர் வீட்டோடு மாப்பிள்ளையாகிறான். இதற்குள் முதல் மருமகளும் மாமனார் மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறாள். அப்போதுதான் அவருக்கு தன் மகன் வீட்டு விஷயத்தில் செய்த மோசடியை பற்றித் தெரிந்து கொள்கிறார். இது போல நூற்றுக்கணக்கானக் கதைகள் வந்திருக்கும்தானே. ஆனால் பிறகு நடந்ததுதான் பார்வையாளருக்கு ஒரு பெரிய எழுச்சியை ஊட்டுகிறது என்றால் மிகையாகாது.

நிஜமாகவே நடுத்தெருவுக்கு வந்த ராஜேஷ் கன்னா வேலைக்காரன் துணையுடன் சிறிய மெக்கானிக் ஷாப் அமைத்து, எரிபொருள் சிக்கனம் செய்யும் கார்பொரேட்டர் வடிவமைத்து பெரிய பணக்காரராகிறார். பல நிறுவனக்களை திறக்கிறார். அவரை ஏமாற்றிய பையன்களை சாவகாசமாகப் பழி வாங்குகிறார். மனதுக்கு நிறைவு தந்த காட்சிகள் அவை. அதே படம் தமிழிலும் வந்தது, வாழ்க்கை என்னும் தலைப்பில். சிவாஜி, அம்பிகா நடித்திருந்தனர்.

அது இருக்கட்டும் இப்பதிவுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு, நான் கூறுவது இதுதான். ரிடயர்மெண்ட் பணம் கைக்கு வந்ததும் அதை யாருக்கும் தராது பத்திரமான முதலீட்டில் இட வேண்டும். மனதை உருக்கும் சோகக் கதைகளை உறவினர் கூறி பணம் கேட்பார்கள். மூச், ஒருவருக்கும் தரக்கூடாது. முக்கியமாக பிள்ளைகளுக்கு. ரொம்பக் கடுமையாகப் படுகிறதா? ஏமாந்தால் அதே பிள்ளைகள் கையில் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டுமே ஐயா? எதற்கும் ஒரு நல்ல வேலை தேடிக் கொள்வதும் நலமே. கடைசி வரை தன் தேவைகளுக்கான செலவுகளுக்கு யாரிடமும் கையேந்தக் கூடாது. தனது சொத்தையெல்லாம் தான் இருக்கும்போதே பசங்களுக்கு மேடோவர் (made over) செய்து விட்டு கடைசி காலத்தில் பசங்களால் பந்தாடப்பட்டு, சந்தியில் நின்றவர்கள் அனேகம்.

விசு சினிமா கூட ஒன்று அதே தீமில் வந்தது. ரிடையர்மெண்ட் பெற்றவர்களே, இதெல்லாம் உங்களுக்கு நடந்தால் இதற்கு முக்கியக் காரணம் நீங்களே. உங்கள் கையில் எல்லா கண்ட்ரோலையும் வைத்திருக்கவும். இல்லாவிட்டால் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் வருவது கணவன் மனைவியையே பிரித்து ஒருவர் முதல் பிள்ளை வீட்டிலும் இன்னொருவர் இன்னொரு பிள்ளை வீட்டிற்கும் சென்று தொண்டு செய்ய நேரிடும். சினிமாதானே என்று கூறுபவர்களுக்கு நான் கூறுவது, இதெல்லாம் நடக்கக் கூடியதே. உங்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்காதீர்கள் என்பதே. இதையெல்லாம் சரி செய்து கொண்டு உங்கள் சமூக சேவைகளை ஆரம்பிக்கவும். ஒன்றும் அவசரம் இல்லை.

இதைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்குக் கூறுவேன், தயவு செய்து பெற்றோர்களை கண்ணீர் விட வைக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/08/2006

ரிடயர்மெண்டுக்கு பிறகு வாழ்க்கை

ஐ.டி.பி.எல்.-லில் நான் இருந்தபோது ஒரு விஷயம் நடந்தது. எங்கள் ஜி.எம். ஒருவர் தனது 58 வயதில் ஓய்வு பெற்றார். எனக்கு ஒரே ஆச்சரியம். நான் அவரது வயது ஐம்பது இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். இளமை தோற்றம் + சுறுசுறுப்பு நிறைந்த மனிதர். அவருக்கு நல்ல பார்ட்டி கொடுத்து வழியனுப்பினோம்.

ஒரு மாதம் கழித்து அவர் ஒரு வேலையாக அலுவலகம் வந்தார். எனக்கு ஒரே திகைப்பு. மனிதர் இப்போது 70 வயதினராக தோறம் அளித்தார். அலுப்பு நிறைந்த முகம். முழுத்தலையும் நரைத்திருந்தது. "என்ன சார் உடம்புக்கு" என்று நான் கேட்டேன். "அதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுதான் சோர்வாக இருக்கிறது" என்றார் அவர். அப்போது எனக்கு வயது 40. ஒரு நிமிடம் யோசித்தேன், ஏன் இவ்வாறு நடக்கிறது என்று. இந்த மனிதரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு கம்பெனியே சகலமும். எப்போதும் வேலை, வேலை என்று ஆழ்ந்திருப்பார். வீட்டை கவனிக்கக் கூட நேரமின்றி இருந்திருக்கிறார். ஆனால் இப்போது? திடீரென வேலை இல்லை. வேறு பொறுப்புகளும் இல்லை. குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ந்து வேலைக்கு போயாயிற்று. இவரது தேவை குடும்பத்துக்கு இல்லை. ஆகவே தான் உபயோகமற்றவனாகி விட்டோம் என்ற காப்ளக்ஸே அவருக்கு வந்திருக்கிறது. சட்டென்று முதுமை தாக்கி விட்டது.

இவருக்கு இப்படியென்றால் பலருக்கு வேறுவித கவலை. பசங்கள் இன்னும் பெரியவர்களாகவில்லை, குடும்பத்துக்கு இவர் தேவை. ஆனால் திடீரென ஓய்வு வந்து விட்டது. அவர்கள் பாடு இன்னும் மோசம். அப்படிப்பட்ட ஒருவர் வாழ்க்கைதான் வியட்னாம் வீடு திரைப்படமாக சமீபத்தில் 1970-ல் வந்தது. சிவாஜி மிக அருமையாக நடித்திருப்பார். ஆனால் இப்பதிவு அப்படத்தைப் பற்றி இல்லை.

பிரச்சினை என்ன? மாணவர்கள் பரீட்சைக்கு தயார் செய்து, படித்து பாஸ் செய்கிறார்கள். பிறகு படிப்புக்கேற்ப வேலை தேட தங்களை தயார் செய்து கொள்கிறார்கள். வேலை காலத்தில் தங்களுக்கு பிரமோஷன் வருவதற்கான முஸ்தீபுகளையும் செய்கிறார்கள். எல்லாம் செய்பவர்கள், தங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரும் என்பதை எப்படி மறக்கிறார்கள்? திடீரென ஓய்வு தரும் அலுவலக ஆணையை கையில் வாங்கி ஏன் நிலை குலைந்து போகின்றனர்? ஏன் ஐயா இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? வருடங்கள் கடப்பதை தடுக்க முடியுமா? முன்கூட்டியே ஓய்வுக்கு பிறகு என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டாமா?

இதில் பெண்கள் பாடு சற்றே தேவலை போல் எனக்கு படுகிறது. அவர்கள் அலுவலக வேலையுடன் வீட்டு வேலையையும் சேர்ந்து பார்க்கின்றனர். ஆகவே ஓய்வுக்கு பிறகு அதை அவர்களால் ஆண்களை விட அதிக தைரியத்துடன் எதிர் கொள்ள முடிகிறது என்று தோன்றுகிறது. ஆனால் அவர்களுக்கு வருவது வேறு வித அழுத்தங்கள். ஐ.டி.பி.எல்,-லில் என்னுடன் வேலை செய்த ஒரு பெண்மணி விருப்ப ஓய்வு பெற்றார். அவருக்கு கணிசமான தொகை வரவேண்டியிருந்தது (சுமார் 4 லட்ச ரூபாய்கள்). அதை தன் கணவருக்கு கடனாகத் தருமாறு அவரது நாத்தனார் கேட்டார். அப்பெண்மணி என்னிடம் அது பற்றி ஆலோசித்தார். நாத்தனாரின் கணவர் அதற்கு வட்டி கொடுப்பதாகக் கூறியதாக என்னிடம் சொன்னார். நான் அவருக்கு இதற்கு அவர் ஒருபோதும் ஒத்துக் கொள்ளலாகாது என்று அறிவுரை கூறினேன். அப்படியானால் நாத்தனாருடன் தனக்கு மனத்தாங்கல் வருமென அவர் கூற, அதற்கும் நான் பதில் வைத்திருந்தேன். எப்படியும் நாத்தனாரின் கணவர் ஒழுங்காக வட்டி எல்லாம் கொடுக்க மாட்டார், கொஞ்சம் கொஞ்சமாக அசலை திருப்பித் தருவதாக அப்புறம் கூறுவார். ஆகவே மனத்தாங்கல் வரத்தான் போகிறது, ஆகவே தன் கைப்பணத்தை பாதுகாத்துக் கொண்ட பிறகு அந்த மனத்தாங்கல் வரட்டுமே என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு யூனிட் ட்ரஸ்ட் மாதாந்திர வருமானத் திட்டத்தில் அதை போட்டு நிம்மதியாக இருந்தார். இது ஒரு விதிவிலக்கு. சாதாரணமாக பெண்களின் ஓய்வுத்தொகை இம்மாதிரி வாராக் கடன்களில் மூழ்குவதுதான் நட்க்கிறது.

இப்போது ஓய்வை எப்படி சமாளிப்பது என்று பார்ப்போம். நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசிய கடமைகள் ஒன்றும் இல்லையென்றால், ஏதேனும் செயல்பாட்டை உண்டாக்கி கொள்வது நலம். வேறு வேலை தேடிக் கொள்வதும் புத்திசாலித்தனமே. நல்ல வருவாய் பெற்று வேறு ஏதேனும் பொழுது போக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம். கடமைகள் இன்னும் இருக்கும் பட்சத்தில் வேறு வேலைக்கு போயே ஆக வேண்டும். அது தன் திறமைக்கேற்றதாகவும் அதற்கேற்ற சம்பளம் தருவதாகவும் இருத்தல் நலம். இதையெல்ல்லாம் முன்பே திட்டமிடல் வேண்டும். ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகள் முன்னாலேயே இதற்கான பூர்வாங்க வேலைகளை துவக்க வேண்டும்.

முக்கியமான விஷயம் மனம் துறுதுறுவென்று இருக்க வேண்டும். வயதில் இளையவர்களுடன் நட்பு பூண்டு மனதை இளைமையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் சிறு வயதிலேயே கிழவன் போல நடந்து கொள்வார்கள். அவர்களது அண்மையை தவிர்க்க வேண்டும். ரிடையர்மெண்ட் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்ய வேண்டும். ஒன்று விட்ட அத்திம்பேர் அல்லது மாமா தாத்தா சிபாரிசு செய்யும் பிளேடு கம்பெனிகளில் எல்லாம் பணத்தைப் போடக் கூடாது. இல்லாவிட்டால் தி.நகரில் பனகல் பார்க்கில் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் சங்கத்தில் சேர வேண்டியிருக்கும். ஆகவே ஜாக்கிரதை.

இதெல்லாம் கூற எனக்கென்ன தகுதி என்று கேட்கிறீர்களா? நான் வாழ்வில் இரண்டு முறை ஓய்வு பெற்றவன். முதல் முறை 35 வயதில், சமீபத்தில் 1981-ல் மத்தியப் பொதுப்பணி துறையிலிருந்து. பிறகு இரண்டாம் முறை சரியாக பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ஐ.டி.பி.எல்.-லிருந்து விருப்ப ஓய்வு. முதல் முறை பெற்ற ஓய்வுக்காக இன்னும் எனக்கு பென்ஷன் வருகிறது. இரண்டாம் முறை நான் பெற்ற கணிசமானத் தொகை யூ.டி.ஐ. மாதாந்திர திட்டத்தில் போடப்பட்டு நல்ல மாத வருவாயைத் தந்தது. ஆகவே நான் எடுத்துக் கொண்ட முழுநேர மொழிபெயர்ப்பாளர் தொழிலில் டென்ஷன் இல்லாமல் என் முன்னேற்றத்தை திட்டமிட முடிந்தது. வாடிக்கையாளர்களுடன் தைரியமாக பேரம் பேச முடிந்தது. என் வேலையில் இருந்து கொண்டே ஓய்வு நேரத்தில் என் மொழிபெயர்ப்பு வேலைகள் செய்து வந்ததால் நான் விருப்ப ஓய்வு பெறும்போது என்னிடம் ஒரு பெரிய வாடிக்கையாளர் லிஸ்டே இருந்தது.

இப்போதுதான் நான் உண்மையாகவே அதிகம் வேலை செய்கிறேன். ஒரு நாளைக்கு கணினியின் முன்னால் 15 மணி நேரத்துக்கு குறையாது உட்கார்ந்து என் வேலையை செய்கிறேன். கூடவே தமிழ்மணத்தில் அவ்வப்போது அடிக்கும் கொட்டம் வேறு. பொழுது போக்கு, வேலை எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாமல் இருக்கும் இந்த நிலை எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த விஷயத்தில் நான் ரோல் மாடலாக வைத்திருப்பது குஷ்வந்த் சிங் மற்றும் சோ அவர்கள். அவர்களைப் பார்த்துத்தான் நானும் மனதை இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் வைக்க தீர்மானித்தேன்.

எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

C.P.W.D. அனுபவங்கள் - 5

மத்தியப் பொதுப்பணித் துறையின் கட்டுமான வேலைகள் ஒப்பந்தப் புள்ளிக்காரர்களுக்கு அளிக்கப்பட்டு செய்விக்கப்படுகின்றன. துறையில் பணிபுரியும் தொழிலாளிகள் (எலக்ட்ரீஷியன், கலாசி, பம்ப் ஆப்பரேட்டர்கள்) பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுத்தப் படுகின்றனர். பொறியாளர்கள் மேற்பார்வை வேலைகள் செய்கின்றனர். பராமரிப்பு வேலை மேற்பார்வை வேலை நான் அங்கிருந்த பத்தரை ஆண்டுகளில் எனக்குத் தரப்படவில்லை. முதல் மூன்றரை வருடம் ப்ளானிங்கிலும் மீதி ஏழு வருடங்கள் கட்டுமானப் பணியில்தான் எனக்கு வேலை.

ஆகவே, நான் காண்ட்ராக்டர்கள் வேலையை மேற்பார்வை செய்து, அளவுகளை எடுத்து, பிறகு அவர்களது பில்களை சமர்ப்பிக்க வேண்டும். கேட்பதற்கு சுலபமாக இருந்தாலும் உள்ளே நுழைந்து பார்த்தால் பல காம்ப்ளிகேஷன்ஸ் தெரிய வரும். காண்ட்ராக்டர் பில்கள் என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. பில்கள் போடும்போது ஒன்று நினைவில் கொள்ள வேண்டும். அவற்றை சரிபார்க்கப் போவது ஆடிட்டர், டிராயிங்க் பிரிவு மற்றும் அக்கௌண்டன்ட் ஆகியோர். அவர்கள் பார்வை கோணத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். பொறியியல் விஷயங்களில் அவர்களுக்கு அவ்வளவாக அக்கறை இல்லை. ஒப்பந்த ஷெட்யூல்களில் உள்ளபடி வேலை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதைத்தான் பார்ப்பார்கள். என் நல்ல வேளை என் முதல் பில்லிலேயே அப்போது என்னை வழிநடத்திய அசிஸ்டண்ட் இஞ்ஜினியர் சங்கரன் அவர்கள் எனக்கு இதை அழகாகப் புரிய வைத்ததில் இது சம்பந்தமான பிரச்சினைகள் எனக்கு வரவேயில்லை.

சமீபத்தில் 1974-ல் நான் மத்திய ரிஸர்வ் போலீஸ் வளாகத்துக்கு போஸ்டிங் பெற்றேன். அவர்களது கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்தன. நான் மின்சார கட்டுமான வேலைகளை கவனித்தேன். அடுத்த 7 வருடம் அங்கு நான் பெற்ற அனுபவங்கள் என்னை புடம் போட்டன என்றால் மிகையாகாது.

நான் இங்கு வேலையில் சேர்ந்தபோது என்னை சேர்த்து 4 ஜூனியர் இஞ்ஜினியர்கள். அவர்களில் ஒருவர் ஸ்டோர்ஸ் பொறுப்பை வகித்தார், ஒருவர் பராமரிப்புக்கு, மூன்றாமவரும் நானும் கட்டுமான வேலைகளுக்கு. அதுவரை பிளானிங்கில் இருந்த நான் முதல் முறை சைட்டுக்கு வந்தேன். வந்ததிலிருந்து மூச்சு விடாத அளவுக்கு வேலை. என்வசம் 6 கட்டிடங்கள். அவற்றுக்கு ஸ்லேப் போடும்போது எலெக்ட்ரிகல் பைப்புகளை போடும் வேலையை மேற்பார்க்கவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஸ்லேப்புகள் போடுவது சர்வசாதாரணம். கட்டிடம் கட்டிடமாக ஓட வேண்டும். இளரத்தமாக இருந்ததால் சமாளிக்க முடிந்தது. காண்ட்ராக்டர்களின் தொழிலாளிகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும்.

நல்ல வேளையாக பெரிய ப்ராஜக்ட் ஆதலால் காண்ட்ராக்டர்களே தினமும் வருவார்கள். அவர்களில் இருவர் மட்டும் பிராஜக்டில் உள்ள கட்டுமான வேலைகளில் 80% தங்கள் வசம் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் என் நண்பர் பால் பாக்கியசாமி. அவரைப் பற்றி இப்பதிவில் பேசலாம் என நினைக்கிறேன்.

அவர் 10 வருடம் மத்திய பொதுப்பணித் துறையில் என்னை மாதிரியே ஜே.இ. ஆக இருந்தவர். நாக்பூரில் பெரிய பிராஜக்டை அப்போது ஹேண்டில் செய்தவர். அங்கு தான் பெற்ற அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டதில் வாழ்க்கையில் பிராக்டிகலாக இருப்பது எப்படி என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.

அளவுகள் எப்படி எடுக்க வேண்டும், அவற்றை பதிவு செய்வது எப்படி என்பதையெல்லாம் எனக்கு அழகாக விளக்கினார். சி.டி.இ. (Central Technical Examiner) என்றாலே அக்காலத்தில் இஞ்ஜினியர்களும் காண்ட்ராக்டர்களும் அலறுவார்கள். அவர்கள் வேலை தப்பு கண்டிப்பதே. பால் அவர்களை மிக அழகாக சமாளித்தார். அவர் என்ன செய்வார் என்றால் வேண்டுமென்றே பின்னால் சரி செய்யக் கூடிய சில குறைபாடுகளை விட்டு வைப்பதாகும். உதாரணத்துக்கு எர்த் குழியில் மூடி போட மாட்டார், தண்ணீர் ஊற்ற ஃபன்னல் வைக்க மாட்டார். ஸ்விட்ச்போர்டுகளுக்கு கவர் வைக்க மாட்டார். சி.டி.இ. விறுவிறென்று அவற்றை எழுதிக் கொண்டு போவார். சுமார் 10 பாயிண்டுகள் கிடைத்து விடும். திருப்தியுடன் அடுத்த கட்டிடத்துக்கு சென்று விடுவார். அங்கு விஷயம் புரியாத காண்ட்ராக்டர் எல்லாவற்றையும் பக்காவாக செய்து விடுவார். அங்குதான் சி.டி.இ. மேலும் நோண்ட ஆரம்பிப்பார். ஸ்விட்ச் போர்ட் அருகில் சுவற்றை உடைத்து சரியாக கிளாம்ப் பொருத்தவில்லை என்று கண்டுபிடிப்பார். அம்மாதிரி குறைகள் எல்லாம் பின்னால் சரி செய்ய முடியாதவை. ஆவால் பால் விஷயத்தில் சி.டி.இ. டில்லிக்கு திரும்பி சென்றதும் நோட் செய்த பாயிண்டுகளையெல்லாம் சரி செய்து விடுவார். சி.டி.இ. கடிதம் கிடைத்ததும் நாங்களும் அவை எல்லாம் செய்யப்பட்டு விட்டன என்று எழுதி விடுவோம். ஆட்சேபங்கள் நீக்கிக் கொள்ளப்ப்பட்டு விடும். மற்ற வேலை விஷயங்களில் இது நடக்காது, ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட குறைகள் சரிசெய்யப்படக் கூடியவை இல்லை. இது சி.டி.இ.க்கும் தெரியும்.

பால் எனக்கு தந்த இன்னொரு அறிவுரை தேவையில்லாது சி.டி.இ.டம் பேசக் கூடாது என்பதே. பால் அவர்கள் மேற்பாற்வையில் இருந்த ஒரு கட்டிடத்தில் மெயின் போர்டுகள், துணை மெயின் போர்டுகளை தனியான காண்ட்ராக்டில் செய்வித்தோம். பால் அவ்ர்கள்தான் அந்த காண்ட்ராக்டையும் பெற்றவர். அவற்றை பெற்ற நாங்கள் பிறகு கட்டிடம் எழும்பும் நேரத்தில் பால் அவர்களிடம் கொடுத்து அவற்றை பதிக்கச் செய்தோம். ஆனால் இது வேறு காண்ட்ராக்ட். நிலைமை என்னவென்றால் இரண்டு காண்ட்ராக்டும் ஒருவராலேயே நிறைவேற்றப்பட்டது, இரண்டிலும் சம்பந்தப்பட்ட ஜே. இ. நான் மட்டுமே. இப்போது சி.டி.இ. இந்தக் கட்டிடத்திற்கு வருகிறார். போர்டில் குறைகூற ஆரம்பிக்கிறார். நான் அவரிடம் "போர்டுகள் டிபார்ட்மெண்டால் காண்ட்ராக்டருக்கு வழங்கப்பட்டவை" என்று கூறுகிறேன். ஆகவே அந்த விஷயத்தை அப்படியே விட்டுச் செல்கிறார் அவர். பக்கத்தில் இருந்த கோட்டகப் பொறியாளருக்கு திருப்தி. நன்றாக சமாளித்தேன் என்று எனக்கு பாராட்டு வேறு. அவர் சைட்டுக்கு புதிது. சில நாட்கள் கழித்து திடீரென நினைத்துக் கொண்டு அவர் என்னை கேட்கிறார், "போர்டுகள் செய்யும் காண்ட்ராக்டை யார் நிறைவேற்றினார்?" என்று. நான் சிரிக்காமல் கூறினேன், "பால் அவர்களேதான் அதையும் செய்தார்" என்று. அவர் மூச்சே நின்று விட்டது. "அடப்பாவி, இதை ஏன் சி.டி.இ.டம் கூறவில்லை?" என்று. "ஏனெனில் அவர் என்னைக் கேட்கவில்லை" என்கிறேன். "அது தவறில்லையா" என்று அவர் கேட்டதற்கு நான், "அச்சமயம் சி.டி.இ. நம்மிடம் தப்பு கண்டு பிடிக்க வந்தவர், அவருக்கு தேவையில்லாது ஏன் தகவல் தர வேண்டும்?" என்று பதிலளித்தேன்.

பால் அவர்கள் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்து அவரும் அவர் தாயும் தந்தை வீட்டாரால் விரட்டப்பட்டு அன்னையின் அன்னை வீட்டில் வளர்ந்தவர். அப்போது தான் பட்ட அவமானங்கள், தான் அவற்றை சமாளித்த விதம் எல்லாவற்றையும் என்னிடம் விவரிப்பார். அவர் கதை விடுவதாக எனக்கு முதலில் சந்தேகம். ஆகவே பல குறுக்கு கேள்விகள் பல தருணங்களில் வெவ்வேறு கோணங்களிலிருந்து போட்டேன். எல்லாவற்றுக்கும் பொருத்தமான பதில்களே வந்தன. உண்மையைக் கூறியிருந்தால் ஒழிய இது சாத்தியமே இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். அப்போதுதான் உண்மை கூறுவதன் பலனை புரிந்து கொண்டேன். பொய் சொல்ல ஆரம்பித்தால் எந்த பொய்யை எங்கு யாரிடம் கூறினோம் என்றெல்லாம் நினைவில் வைக்க வேண்டும் சள்ளை பிடித்த வேலை. கால விரயம் வேறு. உண்மை கூறிவிட்டால் நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டே போகலாம்.

நான் பொறியியல் கல்லூரியில் கற்க முடியாத பல பாடங்களை அவரிடமிருந்து கற்றேன். மறக்க முடியாத மனிதர் அவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/06/2006

இத்தாலிய மற்றும் டச்சு மொழிகளுடன் என்னுடைய அனுபவம்

சமீபத்தில் 1982ல் நான் ஐ.டி.பி.எல்லில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் என் மேஜைக்கு ஒரு கடிதம் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பதற்காக அனுப்பப்பட்டது. கடிதம் ரோமிலிருந்து வந்திருந்தது, இத்தாலிய மொழியில் இருந்தது. 4 வரிகள்தான்.

விளையாட்டாக எடுத்துப் பார்த்தேன். இத்தாலிய மொழியில் இருந்தாலும் அது என்ன கூற வருகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்போதுதான் அம்மொழிக்கும் ஃபிரெஞ்சுக்கும் இடையில் உள்ள உறவை நேரில் பார்த்தேன். பேசாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். ஆனால் கூடவே ஒரு குறிப்பையும் வைத்தேன்.

அதாவது எனக்கு ஃபிரெஞ்சு நன்றாக வருவதால் இத்தாலிய மொழி கடிதத்தை மொழி பெயர்க்க முடிந்தது, ஆனால் பதில் கடிதம் ஆங்கிலத்தில் கொடுத்தால் அதை இத்தாலிய மொழிக்கு மாற்றுவது என்னால் இயலாது என்பதை அதில் குறிப்பிட்டிருந்தேன். உடனே திரு ஜலானி அவர்கள் என்னைக் கூப்பிட்டு "என்ன செய்யலாம் ராகவன்?" என்றுக் கேட்டார். நான் அவரிடம் "சார், எனக்கு இத்தாலிய மொழி புரிந்தது போல ஒரு இத்தாலியனுக்கு ஃபிரெஞ்சு மொழி புரிவதில் அவ்வளவு பிரச்சினை இருக்கக் கூடாது" என்றேன். "நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது புரிந்தது" என்று அவர் சொன்னார். அவ்வாறே நான் பதிலை பிரெஞ்சில் போட்டு, இங்கு நடந்ததையும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் எழுதி அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அந்த குறிப்பிட்ட கம்பெனியிலிருந்து பிரெஞ்சிலேயே கடிதம் எழுத ஆரம்பித்தனர்.

வருடம் 1983. பெல்ஜியத்திலிருந்து ஒரு பெரிய கோப்பு (காகிதத்தில்தான்) சி.பி.ஐ.க்கு வந்தது. பெல்ஜியத்தில் வைத்து தன் மனைவியை கொலை செய்த் இந்திய டாக்டர் இந்தியாவுக்கு ஓடி வந்து விட, அவனை எக்ஸ்ட்ராடைட் செய்து பெல்ஜியத்துக்கு அழைத்து போவதற்காக பெல்ஜிய உள்துறை அமைச்சகம் தில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அக்கோப்பு கிட்டத்தட்ட முழுமையாக ஃபிரெஞ்சில் இருந்தது. அது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக இன்ஸ்டாக்கிற்கு அனுப்பப்பட்டது. இன்ஸ்டாக் எனக்கு அந்த வேலையைக் கொடுத்தது. சுமார் 100 பக்கங்கள். அவற்றில் இரண்டு மட்டும் டச்சு மொழியில்! ஆனால் என்ன ஆச்சரியம்! அவற்றைப் படிப்பதில் எனக்கு அவ்வளவு சிரமம் இல்லை. எப்படி? டச்சுக்கும் ஜெர்மனுக்கும் இடையில் மிக அதிகமான ஒற்றுமை உண்டு. கோப்பின் கான்டக்ஸ்டும் எனக்குத் தெரியும். ஆகவே இதையும் மொழி பெயர்த்து இன்ஸ்டாகிற்குக் குறிப்பெழுத, அந்த மொழிபெயர்ப்பும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

ஆனால் நிஜமாகவே இத்தாலியன் கற்க முயற்சி செய்தப் போது ஃபிரெஞ்சுக்கும் அதற்கும் இருந்த அதே ஒற்றுமை நான் இத்தாலிய மொழியை சரியாக கற்க முடியாதக் காரணங்களில் ஒன்றாயிற்று. அது பற்றி இப்போது கூறுவேன்.

பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அந்தந்த மொழிகளிலேயே கற்று கொடுக்கப்பட்டன. அதாவது ஒரு குழந்தை தன் தாய்மொழியை கற்றுக் கொள்வது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுதான் நவீன முறை. இதை பற்றி நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆனால் இத்தாலியன் விஷயத்தில் மட்டும் "Italian for foreigners" என்ற ஒரு கேனத்தனமான புத்தகத்தை வைத்து சொல்லிக் கொடுத்தனர். பாடம் மட்டும் இத்தாலியனில், ஆனால் பயிற்சி விளக்கங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ரொம்ப கண்றாவியாக இருந்தது. இந்த அழகில் இத்தாலியனுக்கும் பிரெஞ்சுக்கும் இடையில் இருந்த ஒற்றுமை வேறு நடுவில் வந்து காரியத்தைக் கெடுத்தது. இத்தாலியில் ஏதாவது கூற வரும்போது பிரெஞ்சு உள்ளே புகுந்து குழப்பம் செய்ய ஆரம்பித்தது. கோர்ஸ் கண்டெண்டும் ரொம்ப குறைபாட்டுடன் இருந்தது. இரண்டு பரீட்சைகள் மட்டுமே. வெறும் இலக்கணம் கற்றுக் கொடுத்து விட்டு அம்போ என்று விட்டு விட்டார்கள். ஆக நடந்தது என்னவென்றால் இத்தாலியனில் பேசத் திணற வேண்டும். மொழிபெயர்ப்பும் இத்தாலியனிலிருந்து ஆங்கிலத்துக்கு செய்ய முடியும் அதன் எதிர் திசையில் முடியாது. இம்மாதிரி அரைகுறை நிலையில் எங்களை விட்டதில் எங்களுக்குத்தான் நஷ்டம். கொடுமை என்னவென்றால் இத்தாலியில் பெரூஜா என்ற இடத்தில் இத்தாலிய மொழி சொல்லிக் கொடுக்கும் பெரிய மையம் உண்டு. அவர்கள் அருமையான இத்தாலிய பாடபுத்தகங்களை வெளியிட்டிருக்கின்றனர். அவை ஒரு மொழி புத்தகங்கள். அதாவது முழுக்க முழுக்க இத்தாலியனில் மட்டும்.

ஒரு மொழியை எப்படி கற்க வேண்டும் என்பதற்கு நான் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கற்று கொண்டது சிறந்த உதாரணங்கள் என்றால், அதை எப்படி கற்கக் கூடாது என்பதற்கு நான் இத்தாலியனை அரைகுறையாய் கற்றதே பொருத்தமான உதாரணமாகும். இத்தருணத்தில் ப்ளஸ் டூவில் நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளை எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாடப் புத்தகத்தைப் பார்க்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது. மாணவ மாணவிகள் பரீட்சை முடிந்ததும் இம்மொழிகளை அப்படியே அம்போ என்று விட்டு விடுகின்றனர். எடுத்த முயற்சிகள் வீணாகின்றன. இதை பற்றி யாரும் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமாக் செய்த முயற்சிகளை மேன் அவரில் (manhours) கணக்கிட்டுப் பார்த்தால் தலை சுற்றும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2006

கிண்டி பொறியியல் கல்லூரி நினைவுகள் - 1

நான் 1963-ல் முதல் ஆண்டில் இக்கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது தமிழ் நாட்டில் (அண்ணாமலை சர்வகலாசாலை நீங்கலாக) மொத்தம் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே. ஆறு கல்லூரிகளுக்கும் ஒரே நேர்காணல்தான். பி.யு.சி.யில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணலுக்கு கூப்பிடுவார்கள். மொத்தம் 1500 மாணவர்கள் ஆறு கல்லூரிகளுக்கு என்றுதான் ஞாபகம். நேர்காணலில் கிடைத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கல்லூரி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். எனக்கு கிடைத்தது. நேர்காணலில் மூன்று மாணவர்கள் அடங்கிய குழுவை பேட்டி கண்டனர். வினாடி வினா மாதிரி இருந்தது.

நாங்கள் மூன்று விண்ணப்பதாரர்கள் சேர்ந்த குழு மாதிரி, நேர்காணலும் மூன்று கட்டங்களில் மூன்று நிபுணர்களால் நடத்தப்பட்டது. முதல் நிலையில் நேர்காணலை நடத்தியவர் ப்ரொஃபசர் ஸ்ரீனிவாசன் அவர்கள். அவர் கணக்கு சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டார். அதற்கு அடுத்து வந்தவர் திரு. மணிசுந்தரம் அவர்கள். இவர்தான் 1964-ல் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி ஆர்.இ.சி.க்கு முதல்வராக வரப்போகிறவர். மனிதன் சிரித்த முகமாக இருந்து கேள்விகள் கேட்டார். நாங்கள் மூவரில் ஒருவன் பெயர் எம்.கே. காந்தி. அவனைத் தான் முதல் கேள்வியைக் கேட்டார் மணிசுந்தரம் அவர்கள், "Mr. M.K. Gandhi, why were you so named?" என்று. அவன் நெர்வஸாகி தன் தாத்தாவுக்கு காந்தி பிடிக்கும் என்று உளற ஆரம்பித்தான். பிறகு பொது அறிவு பற்றி கேள்விகள் கேட்டார். அக்கட்டம் முடிந்ததும் நான் அவனைக் கேட்டபோது அவன் அழாக்குறையாக தான் அக்டோபர் இரண்டில் பிறந்ததைக் கூற, நாங்கள் இருவரும் "அட அசடே, இதை சொல்லித் தொலைப்பதுதானே என்று கேட்க தன் தந்தை பிறந்த தேதியை ஸ்கூலில் மாற்றிக் கொடுத்து விட்டதாகவும், இப்போது அதைக் கூறியிருந்தால் மணிசுந்தரம் அவர்கள் ரிகார்டைப் பார்த்து உடனே கண்டு கொண்டிருப்பார்" என்றும் கூறினான். விவரமான பையன்தான்.

கடைசியாக எங்களை நேர்கண்டது திரு முத்தையன் அவர்கள். அவர் தொழில் நுட்பக் கேள்விகள் கேட்டார். எல்லாம் முடிந்ததும் என்னை மட்டும் ஒரு கேள்வி கேட்டார். அதை பற்றி நான் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

அக்காலக் கட்டத்தில் பார்ப்பனர்களுக்கு சீட்டுகள் கொடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். ஆனால் அதெல்லாம் மிகைபடுத்தப்பட்டக் கருத்துக்களே. உதாரணத்துக்கு கிண்டி பொறியியல் கல்லூரியில் அவ்வருடம் 280 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 150க்கும் மேல் பார்ப்பனர்கள்தான். இதை நான் இங்கு குறிப்பிடுவதன் ஒரே காரணம், நான் பார்த்தவரை பார்ப்பனவிரோத நடவடிக்கை ஏதுமில்லை என்பதுதான். இதன் க்ரெடிட் அப்போதைய தமிழக அரசுக்கே போக வேண்டும்.

அக்கால செலக்ஷன் முறை இக்காலத்திய மாணவர்களுக்கு மிகப் புதிதாக இருக்கும் என்பதற்காகவே இங்கு விலாவாரியாகக் குறிப்பிட்டேன்.

நான் படித்தது 5-வருட இண்டெக்ரேடட் கோர்ஸ். இப்போதுள்ளது போல செமஸ்டர் முறை இல்லை. ஜூன் மத்தியில் ஆரம்பிக்கும் வகுப்புகள், மார்ச்சில் முடிவடைந்து, ஒரு மாத ஸ்டடி விடுமுறைக்குப் பிறகு ஏப்ரலில் பரீட்சைகள் நடக்கும். வகுப்பறை வேலைகளுக்காக ரொம்ப மதிப்பெண்கள் (செஷனல் மதிப்பெண்கள்) எல்லாம் இல்லை. இப்போது பாதிக்கு பாதி என்று கேள்விப்படுகிறேன். அப்போதெல்லாம் 10 அல்லது 20 மார்க்குகள் இருந்தால் அதிகம். அதுவும் எல்லா பாடங்களுக்கும் இல்லை. அதனால் என்னவாயிற்றென்றால், பல மாணவர்கள் வருடம் பூரா ஊர் சுற்றிவிட்டு ஸ்டடி லீவில் அவதிப்படுவர். ஊர் சுற்றிய சமயம் நான் நண்பர்களுக்கு கதையெல்லாம் சொல்லி படுத்துவேன். அக்கதைகளில் ஒன்று பற்றியும் பதிவு போட்டுள்ளேன். அப்போது பிரசவ வைராக்யம் போல அடுத்த ஆண்டிலிருந்தாவது ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்றெல்லாம் முடிவெடுப்போம். ஆனால் நிறைவேற்ற மாட்டோம்.

இப்போது வகுப்புகளில் அசைன்மெண்ட் கொடுத்தே கொன்று விடுவதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் இதில் சௌகரியம் என்னவென்றால், வகுப்புகளில் சின்ஸியராக இருப்பவர்கள் பாஸ் ஆவது விளையாட்டு போல ஆகிவிடும். ஆனால் எங்கள் முறையிலோ ஒவ்வொரு பரீட்சையும் தொந்திரவுதான்.

இன்னொரு சள்ளை பிடித்த விஷயம் அடுத்த வகுப்புக்கு போவதற்கான விதி முறைகள். முதலாம் ஆண்டு 9 பேப்பர்கள், அதில் ஒன்று மட்டும் பெயிலாகலாம். அடுத்த வகுப்புக்கு செல்லலாம். இரண்டு பெயிலானால் ஒரு வருடம் வீட்டில் உட்கார வேண்டும். இதில் சில கிளை விதிகள் உண்டு. கணக்கு - IA & IB என்று உண்டு. அதில் இரண்டிலும் பெயிலானாலும் ஒரு சப்ஜக்டாகத்தான் கருதப்படும். இரண்டாம் வருட வகுப்புக்கு செல்லலாம். அதே போல பிஸிக்ஸ் மற்றும் பிஸிக்ஸ் லேப் ஒரு ஜோடி, கெமிஸ்ட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி லேப் இன்னொரு ஜோடி. பிஸிக்ஸ் லேப் மற்றும் கெமிஸ்ட்ரி லேப்பில் ஃபெயிலானால் சங்குதான். ஒரு வருடம் காலி. இன்னொரு கொடுமை என்னவென்றால் அர்ரியர்ஸ்களை அடுத்த வருடம் முடிவதற்குள் க்ளியர் செய்ய வேண்டும். ஒரு சப்ஜெக்டில் அடுத்த வருடம் கண்டின்யூ செய்பவர்கள் அதை செப்டம்பரிலேயே முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிற்கு அனுப்பப்படுவர். முதலாம் ஆண்டை அடுத்த வருடத்துக்குள் முடிக்கவில்லையென்றால் கோர்ஸை விட்டே அனுப்பப்படுவர்.

இரண்டாம் வருடம் பத்து பேப்பர்கள். அதில் ஒன்று காலி என்றாலும் ஒரு வருடம் வீட்டில் உட்கார வேண்டும். முதல் வருடம் அத்தனை தேர்விலும் பாஸான நான் இரண்டாம் வருடத்தில் மூன்று சப்ஜெக்டில் காலி. முக்கியமாக கணக்கில். அது எனக்கு பெரிய ஷாக். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965-ல் பலரது வாழ்க்கை போராட்டத்தால் பாதிக்கப் பட்டது. அப்போது எடுத்த ஒரு முடிவில் நான் பிரதிக்ஞை எடுத்து கோர்ஸ் முடியும் வரை சினிமா பார்க்காமலேயே இருந்ததைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன். மூன்றாம் வருடம் செல்வதற்கு முன்னால் இரண்டாம் வருட பேப்பர்ஸ் எல்லாம் க்ளியர் செய்ய வேண்டும். சிலர் இன்னொரு வருடம் கூட எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளையாக நான் அடுத்த செப்டம்பரிலேயே பாசாகி விட்டேன்.

முதல் இரண்டு வருடம் எல்லோருக்கும் பொது. மூன்றாம் வருடம் பிராஞ்சு அலாட் செய்வார்கள். எனக்கு எலெக்ட்ரிகல் பிரிவு கிடைத்தது. அப்போது இருந்த பிரிவுகள் சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிகல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மைனிங்க் அவ்வளவுதான். மூன்றாம் வருடம் 11 பேப்பர்கள். அத்தனையிலும் பெயிலானாலும் நான்காம் வருடம் செல்லலாம். ஆகவே 3-ஆம் வருடம் பல பேப்பர்களை பாக்கி வைப்பவர்கள் ஏராளம். என்ன ஆச்சரியம், அவ்வருடம் நான் ஃபுல் பாஸ். நான்காம் வருடம் 9 பேப்பர்கள், அவற்றில் இரண்டு பேப்பர்கள் வரை ஃபெயிலாகலாம், ஐந்தாம் வருடத்துக்கு அனுப்பப்படுவோம். அவ்வருடம் நான் இரண்டு பேப்பரில் ஃபெயில். ஐந்தாம் வருடம் செல்ல முடிந்தது. சாதாரணமாக மூன்றாம் வருடத்தின் அத்தனை பேப்பர்களும் க்ளியர் செய்திருந்தால்தான் இந்த இரண்டு பேப்பர் சலுகையை உபயோகிக்க இயலும். இதனால் என்ன ஆகும் சென்றால் சிலர் ஐந்து வருடங்களுக்கு பதில் 10 வருடங்கள் கூட எடுத்துக் கொள்வர்.

ஆனால் நான் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதின 1968-ல் ஒரு விஷயம் நடந்தது. 1969-ஆம் ஆண்டு செமஸ்டர் முறை படிப்புகளை அறிமுகப்படுத்தவிருந்தனர். ஆகவே இண்டெக்ரேடட் கோர்ஸ் மாணவர்கள் எல்லோரையும் முடிந்த அளவு சீக்கிரம் வெளியேற்ற நினைத்தனர். ஒருவரையும் நிறுத்தவில்லை. 1968-ல் முதல் வருட வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இரண்டாம் வருடம் கண்டின்யூ செய்தாலும் அத்தனை பேப்பர்களையும் இரண்டாம் வருடத்திற்குள் க்ளியர் செய்தாக வேண்டும் இல்லாவிட்டால் கோர்ஸை விட்டே அனுப்பப்படுவார்கள் என்றக் கட்டுப்பாட்டைத் தவிர்த்து மீதி எல்லா கட்டுப்பாட்டையும் நீக்கினர். ஆக, 1968-ல் சேர்ந்த மாணவர்கள் 1973-ல் கல்லூரியை விட்டு வெளியேற முடிந்தது. வீட்டில் பழையக் கட்டுப்பாடுகளினால் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு கடிதம் எழுதி கல்லூரிக்கு வரவழைத்தனர்.

என்னால் நான்காம் ஆண்டில் மிச்சம் வைத்திருந்த பேப்பர்களை செப்டம்பரில் க்ளியர் செய்ய முடிந்தது. கடைசி வருடப் பரீட்சை 1969-ஆம் வருடம் நடந்தது. இரண்டு சப்ஜெக்டில் காலி (மொத்தம் 10 பேப்பர்கள்). நான் அதுவரை முதல் வகுப்பு மார்க்குகள் எடுத்து வந்திருந்தாலும் இந்த மாதிரி கடைசி வருடப் பரீட்ட்சையில் கோட்டை விட்டதில் என் கனவுகள் பொய்த்தன. மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். என் தந்தை ஆறுதல் அளித்து என்னை அடுத்த தேர்வுகள் நவம்பர் 1969-ல் நடத்தப்படும் வரை மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் வகுப்பில் சேரச் சொன்னார். என் வாழ்க்கையே திசை மாறியது. இன்று வரை அதன் நல்ல பலனை அனுபவிக்கிறேன். இதைப் பற்றி ஏற்கனவே பதிவு போட்டு விட்டேன்.

என் ஆசிரியர்கள், ஆறு (5+1) வருட அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி அடுத்தப் பதிவுகளில் எழுதுவேன். என் கல்லூரி நினைவுகளை எழுதவும் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த என்றென்றும் அன்புடன் பாலா அவ்ர்களுக்கும் நன்றி. அவர் எழுதிய திருவல்லிக்கேணி அனுபவங்கள்தான் நான் வலைப்பூ துவங்கவே என்னை ஊக்குவித்தன. ஆகவே டோண்டு ராகவனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பாலா அவர்களை பிடித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/04/2006

அந்நியன் அளிக்கும் மென்பொருள்

என்னுடைய இனிய நண்பர் ஒருவரிடமிருந்து எனக்கு இந்த மின்னஞ்சல் வந்தது:

"டோண்டு அவர்களே
இந்த அன்னியன் யார்? திடீரென வந்து நம் டெம்ப்ளேட்டில் எதையோ இணைக்க சொல்கிறார்.நமது கடவு சொல்லை அறிந்து வலை பதிவை முடக்க செய்யும் முயற்சி இது என நினைக்கிறேன்.அல்லது தமிழ் மணத்தையே முடக்க செய்யும் சதியாகவும் இருக்கலாம்.

தான் யார் என்பதை பொதுவில் சொல்லவில்லை என்றாலும் உங்களிடம்,அல்லது தருமி, ராம்கி போன்ற எதாவது ஒரு வலை பதிவரிடமாவது அவர் வெளிப்படுத்துவாரா?அப்படி செய்தால் அவர் ஒரிஜினல்.இல்லையேல் போலி.மகேந்திரன் மகேஷ் அவர்களின் இந்த பதிவை பாருங்கள்."

அங்கு போய் பார்த்ததில் மகேஸ் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

"நம்முடைய அந்நியன் அவர்கள் போலிப் பின்னூட்டங்களைத் தடுக்க சில வழிமுறைகளைச் செய்திருக்கிறார். அது மிகவும் நல்ல முயற்சி. வரவேற்கத்தக்கது. ஆனால் இதில் சில தொழில் நுட்ப ஓட்டைகள் உள்ளன.
அவரின் ப்ளாக் முழுவதையும் பிரித்துப் போட்டுப் பார்த்ததில், XSS (Croos site scripting) எனப்படும் குறுக்கு வழித் தொழில் நுட்பம் மூலம் உபயோகிப்பவர்களின் user id மற்றும் password ஆகியவற்றை போலி திருடிக் கொள்ளும் வாய்ப்புகள் 100 சதவீதம்.

நம்ம போலி கம்ப்யூட்டர் கில்லாடி என்று சொல்லிக் கொள்கிறார்கள். எனவே இது குறித்து கலந்தாலோசனை செய்ய நான் தயாராக இருக்கிறேன். அந்நியன் அவர்களே உங்களின் E-Mail முகவரியைப் இந்தப் பதிவில் பின்னூட்டம் இடுங்கள், நான் தொடர்பு கொள்கிறேன், அதை வெளியிட மாட்டேன் என்றும் உறுதியளிக்கிறேன். வாருங்கள், போலியை ஒரு கை பார்ப்போம்."

எனக்கு மென்பொருள்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. பலரும் அப்படித்தான் என நினைக்கிறேன். இருப்பினும் தட்டுத் தடுமாறி நாமும் தமிழ் மணத்தில் இருந்து வருகிறோம், காசி, மதி போன்ற நல்ல உள்ளங்களின் உதவியுடன்.

இப்போது அந்நியன் உண்மையா போலியா என்ற பிரச்சினைக்கெல்லாம் நான் செல்லவில்லை. நான் இந்த போலி டோண்டு விஷயத்தை ஒரு அடிப்படையான முறையில் அணுகுகிறேன். பின்னூட்ட மட்டுறுத்தல் ஒரு கவசம். பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதிப்பது இன்னொரு கவசம். இந்த இரு கவசங்களும் மிகுந்த பலனளிக்கின்றன.

அனானி ஆப்ஷனை கூட சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் அது அனாமத்து பின்னூட்டம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் இந்த அதர் ஆப்ஷன் இருக்கிறதே, அதுதான் மிகுந்த விஷமகரமானது. அதை உபயோகித்து யார் வேண்டுமானாலும் வேறு எவரின் பிளாக்கர் எண்ணுடனும் பின்னூட்டமிட்டு விட முடியும். எலிக்குட்டி சோதனையிலும் வெற்றி பெற்றுவிட முடியும். அதனால்தான் நான் என் ப்ரொஃபைலில் ஃபோட்டோ போட்டேன். ஆனால் நான் பின்னூட்டமிடும் மற்றவர் பதிவில் ஃபோட்டோக்கள் எனேபிள் செய்யப்படவில்லையென்றால் கஷ்டமே.

இன்னுமொரு விஷயம் பிளாக்கர் இல்லாத பதிவுகள். அவற்றில் எலிக்குட்டி விஷயம் பிரயோசனமேயில்லை. ஆகவே நான் அங்கு இடும் பின்னூட்டங்களை என்னுடைய ஒரு குறிப்பிட்ட தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இட்டு வருகிறேன்.

உண்மையைக் கூறவேண்டுமென்றால், முதலில் பின்னூட்ட நகலை என் பதிவில் போடுவது ஒரு டிஃபால்டாகவே இருந்தது. ஏனெனில் மிகச் சுலபமான எலிக்குட்டி சோதனையை செய்யக்கூட யாரும் தயாராக இல்லை. சமீபத்தில் சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பில் இது பற்றி பேசினோம். நான் ஒரு பிளாக்கரின் பெயரைச் சொல்லி "அவர் இந்த விஷயத்தில் பல முறை அலட்சியம் காட்டினார்" என்று சீற, அங்கிருந்த ஒரு பதிவாளர் கடவென்று சிரித்து இன்னொருவரை என்னிடம் காட்டி, "நீங்கள் இப்போது குறிப்பிட்ட வலைப்பதிவாளரின் உயிர் தோழர் இவர்" என்று குறிப்பிட்டார். "அப்படியா ரொம்ப சந்தோஷம், உங்கள் உயிர் நண்பரிடம் கூறுங்கள், டோண்டு ராகவன் உங்கள் மேல் கோபித்துக் கொண்டான்" என்று என்னிடம் அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டவரிடம் கூறினேன்.

இதெல்லாம் நான் பலமுறை கூறி வந்திருக்கிறேன். அந்நியனின் மென்பொருள் கூட அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலற்றதாக செய்வதைத்தான் வலியுறுத்துகிறது.

இன்னொரு விஷயத்தைப் பார்ப்போம். ஒரு வெள்ளைப் பட்டியல் தயார் செய்து அதிலுள்ளப் பதிவுகளை மட்டும் அனுமதிப்பது என்பது ஒரு சள்ளை பிடித்த காரியம். மேலும் எனக்கு பின்னூட்டம் இட வேண்டுமென்று ஒருவர் மெனக்கெட்டு பிளாக்கரில் பதிவு செய்கிறார். வலைப்பூவெல்லாம் திறக்க நேரம் இல்லை. நான் நெருப்புச் சுவர் வைத்தால் அது அவர் பின்னூட்டத்தைத் தடுத்து விடும். ஆகவே அவர் மெனக்கெட்டு வலைப்பூ ஓபன் செய்து, தம்ழ்மணத்தில் சேர்ந்து, பிறகு நான் அவரை என் வெள்ளைப் பட்டியலில் சேர்த்து என்றேல்லாம் ஆகிவிடும். நடக்கும் காரியமா இது?

இப்போது என்ன ஆகிவிட்டது? ஐந்து நிமிட வேலையில் பிளாக்கராக பதிவு செய்து கொண்டு ஒருவர் பின்னூட்டமிடுகிறார். நான் அவர் பின்னூட்டம் நல்லதாக இருந்தால் அனுமதிக்கப் போகிறேன், இல்லையென்றால் மறுத்துவிடப் போகிறேன். அதர் ஆப்ஷன் இல்லாததால் அது சம்பந்தமாக நான் மேலே கூறிய விஷமமும் இல்லை. என்ன, அசிங்கப் பின்னூட்டத்தைப் படிக்க வேண்டும். படித்தால் போகிறது. ஒரு விஷயம் தெரியுமா, பல நாட்கள் கழித்து நேற்றுதான் அந்நியன் பெயரில் போலி டோண்டுவிடமிருந்து எனக்கு அசிங்கப் பின்னூட்டங்கள் நான்கு வந்தன. அத்தனையையும் தடுத்தேன். அவ்வளவே.

ஆகவே நான் கூறும் ஆலோசனை:

1. பின்னூட்ட மட்டுறுத்தல்.
2. அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை செயலற்றதாக்குதல்.

இவையே எதேஷ்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/02/2006

இன்ஸ்டாக் - டில்லி

எந்தப் பெரிய விஷயமாயினும் அதன் ஆரம்பம் அனேக சமயங்களில் ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருக்கும். அதற்கு உதாரணமாக என்னுடைய மொழிபெயர்ப்பு வேலையையே சொல்லலாம். தற்சமயம் நான் சென்னையில் உள்ள ரொம்ப தீவிர அளவில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எந்த போலி அடக்கமும் என்னைத் தடுக்கவில்லை. ஆனால் அதன் ஆரம்பம் ரொம்ப எளிமையானது.

1975 மார்ச்-ல் ஜெர்மன் மொழி பெயர்ப்பு செய்ய ஆரம்பித்தேன். சென்னை வாடிக்கையாளர்கள்தான் முதலில் எனக்குக் கிடைத்தனர். அதிலும் முக்கியமாக மேக்ஸ் ம்யுல்லர் பவனின் நிர்வாக அதிகாரி காலம் சென்ற தேசிகன் அவர்கள்தான் எனக்கு முதல் வேலையை கொடுத்தார். பேப்பர்களில் விளம்பரம் கொடுத்ததில் ரொம்பப் பலன் இல்லை. ஏதோ அவ்வப்போது வேலைகள் கிடைத்து வந்தன. மொழிபெயர்ப்பு செய்வதில் எனக்கு இருந்த விருப்பமே என்னை விடாது முயற்சி செய்ய வைத்தது.

1976-ல் ஹிந்துவில் இன்ஸ்டாக் (Insdoc-Indian National Scientific Documentation Centre) பற்றி ஒரு கட்டுரை வந்தது. அதன் டைரக்டர் திரு. பார்த்தசாரதி அவர்களின் பேட்டி அந்தக் கட்டுரையில் வந்திருந்தது. அதில் இன்ஸ்டாக்கின் மொழி பெயர்ப்புப் பிரிவைப் பற்றி எழுதப் பட்டிருந்தது. அதில் வேலை செய்யும் முழு நேர மொழி பெயர்ப்பாளர்கள் தவிர ப்ரீ லான்ஸ் மொழி பெயர்ப்பாளர்கள் சேவையையும் பயன் படுத்திக் கொள்வதாக எழுதப் பட்டிருந்தது.

உடனே ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்து இன்ஸ்டாக்குக்கு ஒரு லெட்டர் என் கைப்பட எழுதி அனுப்பினேன் (தட்டச்சு கூடச் செய்யவில்லை). ஒரே வாரத்தில் இன்ஸ்டாக்கிலிருந்து ஸ்வாமி என்பவர் எழுதியக் கடிதமும், மொழி பெயர்ப்பு சோதனைக்காக ஒரு சிறிய டெக்ஸ்டும் கிடைக்கப் பெற்றன.

மொழி பெயர்ப்பு செய்து அனுப்பியப் பிறகு சில நாட்கள் கழித்து என் சேவை ஏற்கப் பட்டதாகத் தகவல் கிடைத்தது. அதன் பிறகு அவ்வப்போது தபால் மூலம் வேலை வரும். தபால் மூலம் மொழி பெயர்ப்பு அனுப்பப்படும்.

நடுவில் ஃபிரெஞ்சு டிப்ளோம் சுபேரியர் முடிந்து 1978 முதல் சில பிரஞ்சு வேலைகளும் பெற ஆரம்பித்தேன். அதனால்தான் எனக்கு ஐ.டி.பி.எல்லில் மொழிபெயர்ப்பாளராக மட்டுமின்றி பொறியியல் நிபுணராகவும் வேலை கிடைத்தது.

1981-ல் ஐ.டி.பி.எல்லில் பணி செய்வதற்காக டில்லிக்கு குடி புகுந்தேன். அதன் பிறகு சுமார் 13 வருடம் இன்ஸ்டாக்குக்காக பல மொழி பெயர்ப்பு வேலைகள் ஏற்றுக் கொண்டேன். தன்னுடைய ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்களில் இன்ஸ்டாக் எனக்குத்தான் அதிக வேலை கொடுத்தது. இன்ஸ்டாக்கின் முழு நேர மொழிபெயர்ப்பாளர்கள் கூட என்னளவுக்கு இன்ஸ்டாக் வேலைகளை செய்யவில்லை என்பதை நான் இப்போது கூறினால் உங்களால் நம்ப முடியாதுதான். ஆனால் அதுதான் உண்மை.

இவை எல்லாம் ஒரு சாதாரண 20 பைசா இன்லேன்ட் லெட்டரிலிருந்து ஆரம்பித்தது என்பதை நினைத்து இப்போதும் வியக்கிறேன். பின்னொரு நாள் ஸ்வாமியுடன் பேசும்போது இது பற்றிக் கூறினேன். அவர் அதற்கு ஹிந்துவில் வெளியானக் கட்டுரை சம்பந்தமாக என் கடிதத்தை டாக்டர் பார்த்தசாரதியிடம் அவர் காட்டிய போது அவர் மிக மகிழ்ந்து ஒரு கோப்பில் இம்மாதிரிக் கடிதங்களை இடச் சொன்னார் என்று கூறினார். ஒரு மாதம் கழித்து ரிவ்யூ செய்த போது என் கடிதம் மட்டும்தான் கோப்பில் இருந்ததாம். ஏதோ இன்ஸ்டாக்குக்கும் எனக்கும் விட்ட குறை தொட்ட குறை போல இல்லை?

இன்ஸ்டாகின் உதவியால் என்னால் ஒரு வெற்றிகரமான மொழிப் பெயர்ப்பாளனாக மாற முடிந்தது. அதாவது டில்லியில் கால் ஊன்றிக் கொள்ள ஒரு இடம் கிடைத்து, ஐ.டி.பி.எல்லில் நல்ல வேலை கிடைத்து, அனுபவம் பல பெற்று, என்றெல்லாம் கூறிக் கொண்டே போகலாம். சென்னையிலேயே இருந்திருந்தால் இன்ஸ்டாக் தபால் மூலம் இவ்வளவு வேலைகள் கொடுத்திராது. இதையும் இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 2

பகுதி - 1 இங்கே:

இப்போது கல்லீரல் கையேடு விஷயத்துக்குப் போவோம். அதை பற்றிய எல்லா அறிகுறிகளும் என்னுள் குடி கொண்டிருந்தன என்பது சந்தேகத்திடமின்றி வெளிப்படையானது. அவற்றில் முக்கியமானது "எந்த விதமான வேலையையும் மேற்கொள்ள மனமின்றி இருத்தல்."

என் கஷ்டத்தை வர்ணிக்க ஒரு நாவு போதாது. என் குழந்தைப் பருவத்திலிருந்தே நான் இதனால் அவதிப்படுகிறேன். சிறுவனாக இருந்தபோது இது என்னை ஒரு நாள்கூட விட்டகலவில்லை. அப்போது பெரியவர்களுக்கு இதன் காரணம் என் கல்லீரல் கோளாறே என்பது புரியவில்லை. மருத்துவ அறிவு இப்போதைப் போல (வருடம் 1889) அப்போது வளரவில்லை. ஆகவே நான் சோம்பேறி என்றே முடிவு கட்டினர்.

"ஏண்டா சோம்பேறி பையா, கொழுப்பா? மரியாதையா எழுந்து ஏதாவது உருப்படியான வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பாரடா நாயே" என்றுதான் அவர்கள் என்னை மிரட்டி வளர்த்தனர். அவர்களுக்கு என்னத் தெரியும் எனக்கு உடம்பு சரியில்லையென்று?

அவர்கள் எனக்கு மாத்திரை ஒன்றும் தரவில்லை. மண்டையில் அவ்வப்போது குட்டியதுடன் சரி. ஆனால் என்ன ஆச்சரியம்! ஒவ்வொரு முறை குட்டு வாங்கியதும் என் கல்லிரல் நிலை உடனே அப்போதைக்கு சரியாயிற்று. ஒரு புட்டி மாத்திரைகள் இப்போது தர முடியாத உடல் நலத்தை குட்டுகள் அச்சமயத்தில் உடனே தந்தன. நேரத்தை மேலும் வீணாக்காது உழைக்க ஆரம்பிக்க முடிந்தது.

அதுதான் வாழ்க்கை ஐயா. பல சமயங்களில் இம்மாதிரியான லகுவான பழையகால வைத்திய முறைகள் தற்சமயம் இருக்கும் மருத்துக் கடைகளை விட அதிகப் பலனை அளிக்கின்றன.

இதே மாதிரி நாங்கள் மூவரும் அடுத்த அரை மணி நேரத்துக்கு பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் நோய் அறிகுறிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். காலையில் எழுந்ததும் படும் கஷ்டங்களை நான் ஜார்ஜுக்கும் ஹாரிஸுக்கும் கூற, ஹாரிஸ் படுக்கப் போகும்போது அவன் படும் கஷ்டங்களைக் கூறினான். ஜார்ஜோ கணப்பருகே நின்று கொண்டு, தான் இரவில் படும் வேதனைகளை நடித்தே காட்டினான்.

உங்களுக்கு தனியாக ஒரு விஷயத்தை காதில் போடுவேன். இந்த ஜார்ஜ் பையனின் உடம்புக்கு ஒரு கேடும் இல்லை. அவன் என்னமோ தான் உடம்பு சரியில்லாதது போல பந்தா செய்கிறான்.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது என் ஹவுஸ்கீப்பர் திருமதி போப்பெட்ஸ் என் அறைக் கதவைத் தட்டினார். இரவு உணவு தயார், நாங்கள் தயாரா என்று கேட்டார். ஒருவரையொருவர் பார்த்து சோகமாகப் புன்னகை செய்தோம். ஏதாவது வயிற்றுக்குள் தள்ளுவது நலம் என்று முடிவு செய்தோம். ஏதாவது உண்டால் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று ஹாரிஸ் அபிப்பிராயப்பட்டான். திருமதி போப்பெட்ஸ் சாப்பாட்டை அறைக்குள்ளேயே கொண்டு வந்தார். நாங்களும் ஆளுக்கு நான்கைந்து கறித் துண்டுகள், பழ கேக்குகள், பாற்றிட்ஜ், இரண்டு கப்புகள் ஐஸ்க்ரீம் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

எனக்கு நிஜமாகவே உடம்பு சரியில்லாமல்தான் இருந்திருக்க வேண்டும். அரைமணி நேரம் ஆகாரம் எடுத்துக் கொண்ட பிறகு பசியே போய்விட்டது. சீஸ் கூட வேண்டாம் என்று கூறிவிட்டேன். சாதாரணமாக சீஸ் எனக்கு பிடிக்கும்.

இந்தக் கடமை முடிந்ததும், கிளாஸ்களில் விஸ்கியை ஊற்றி, பைப்பைப் பற்றவைத்து, எங்கள் உடல்நிலை பற்றிய பேச்சைத் தொடர்ந்தோம். எங்கள் உடலில் நிஜமாக என்னக் கோளாறு என்பது எங்களுக்குத் தெரியாதுதான். ஆனாலும் இதில் மட்டும் ஏகோபித்தக் கருத்து கொண்டிருந்தோம். எந்தக் கோளாறாய் இருந்தாலும் சரி அது ரொம்பவும் அதிகமாகவே வேலை செய்ததால் வந்துள்ளது என்பதுதான் அது.

"நமக்கு வேண்டியத் ஓய்வு," என்றான் ஹாரிஸ்.

"ஓய்வு, அத்துடன் கூடவே ஒரு முழு மாறுதல்," என்று ஆமோதித்தான் ஜார்ஜ். "நமது மூளை ஒரு பெரிய அழுத்ததின் கீழ் இருந்ததால் ஒரு பொதுவான மனச் சோர்வு நம் எல்லோரையும் பாதித்துள்ளது. இட மாறுதல், கஷ்டப்பட்டு யோசிக்கவே தேவையில்லாத நிலை ஆகியவையால் நம் மனம் சமநிலையை எய்தும்."

ஜார்ஜின் அத்தைபிள்ளை ஒருவன் இருக்கிறான். சாதாரணமாக அவன் மாட்டிக் கொள்ளும் நியூசன்ஸ் கேஸ்களில் போலீசார் தாங்கள் தயாரிக்கும் சார்ஜ் ஷீட்டுகளில் அவனை மருத்துவக் கல்லூரி மாணவன் என்றே குறிப்பிடுவர். அவனோடு பழகி இவனுக்கும் மருத்துவ பந்தாவுடன் பேசும் பழக்கம் வந்து விட்டது.

ஜார்ஜ் கூறியதுடன் நான் ஒத்துப் போனேன். எங்காவது ஒரு மூலையில், கும்பல் இல்லாத இடத்தில் சில நாட்கள் கழிக்க வேண்டும். மூச்சை முட்டும் இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு உலகத்தின் நெருக்கடியிலிருந்து விலகி இருக்க வேண்டும். ஒதுக்குப் புறமாய் ஓர் இடம், சோலைகள் சூழ்ந்த அதன் ஒற்றையடிப் பாதைகள் ஆகியவற்றை சிறிது நாட்கள் அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் நான் யோசனை கூறினேன்.

ஹாரிஸோ அம்மாதிரி இடங்கள் ரொம்ப போர் என்றான். அங்கு இரவு எட்டு மணிக்கு மேல் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும். குடிப்பதற்கு ஒன்றும் பணம் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. எதை வாங்க வேண்டுமானாலும் பத்து மைலுக்குக் குறையாமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் பயமுறுத்தினான்.

"வேண்டவே வேணாம்பா, அப்படி ஓய்வும் மாறுதலும் அவசியம் என்றால் கடலில் ஒரு டிரிப் அடிக்கலாம்" என்றான் ஹாரிஸ்.

கடல் பயணத்துக்கு நிச்சயமாக் என் ஒப்புதல் கிடைக்காது. ஓரிரு மாதங்கள் என்றால் பரவாயில்லை. ஒரு வாரம்தான் என்றால் அது மிகக் கொடுமைடா சாமி, என்பது என் கட்சி.

நீங்கள் ஒரு திங்கட்கிழமை காலையில் ஒருவாரக் கடல் பயணத்துக்காக கிளம்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களை வழியனுப்ப வந்த நண்பர்களுக்கு பந்தாவாக டாட்டா காட்டி விட்டு கப்பல் ஏறுகிறீர்கள். கேப்டன் குக், சர் ஃபிரான்ஸிச் ட்ரேக் மற்றும் கொலம்பஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்து நீங்களாக இருப்பது போன்ற பிரமை உங்களுக்கு. ஒரு பெரிய பைப்பை பற்ற வைத்துக் கொண்டு பந்தாவாக கப்பல் தளத்தில் நடை போடுகிறீர்கள். செவ்வாயன்று ஏன்தான் கப்பலுக்கு வந்தோமோ என்று அலுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். புதன், வியாழன் மற்றும் வெள்ளியன்று வாந்தியெடுத்து, வாந்தியெடுத்து இறப்பே மேல் என சிந்திக்கத் துவங்குகிறீர்கள். சனிக்கிழமை சற்றே நீர்த்த டீ அருந்த முடிகிறது. உங்கள் உடல்நலம் குறித்து விசாரிப்பவர்களுக்கு களைப்புடன் கூடிய புன்முறுவலுடன் பதில் சொல்ல முடிகிறது. ஞாயிறன்று சற்றே நடமாட முடிகிறது, சிறிது திட உணவு எடுத்துக் கொள்ள முடிகிறது. திங்களன்று கப்பல் மேல்தளத்தில் பக்கத்தில் மூட்டை முடிச்சு, கையில் குடை என்று கரை இறங்குவதற்காகக் காத்திருக்கும்போது, இப்பயணத்தை நிஜமாகவே விரும்ப ஆரம்பிக்கிறீர்கள்.

இப்படித்தான் எனது அத்திம்பேர் ஒரு வாரத்துக்கு கப்பல் பயணம் செய்தார். லண்டனிலிருந்து லிவர்பூல், பிறகு அங்கிருந்து லண்டன் என்று ரிடர்ன் பெர்த் வாங்கினார். லிவர்பூல் சென்றதும் முதல் வேலையாக ரிடர்ன் டிக்கட்டை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு ரெயிலில் லண்டன் திரும்பினார்.

அதே அத்திம்பேரின் மாமா தாத்தா (அம்மாவின் மாமா) ஒருவர், நன்றாக வஞ்சனை இன்றி சாப்பிடக் கூடியவர். அவரும் இதே மாதிரி ஒருவார கடல் பயணத்துக்குச் சென்றார். அவரிடம் ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் தனியாகப் பணம் செலுத்துகிறாரா அல்லது சீஸன் டிக்கெட் பேல வாங்கிக் கொள்கிறாரா என்று கேட்கப்பட்டது. அம்மாதிரி செய்தால் நிறைய பணம் மிச்சம் செய்யலாம் என்று வேறு கூறப்பட்டது. அவரும் அவ்வாறே செய்தார்.

முதல் நாள் பகல் சாப்பாட்டு நேரம் வந்தது. ஏனோ நன்றாகப் பசிக்காததால் வேக வைத்த மாட்டிறைச்சி, கொஞ்சம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் என்று எடுத்துக் கொண்டார். பகல், மாலை முழுதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். எப்போதுமே தான் வேக வைத்த மாட்டிறைச்சி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீமிலேயே வாழ்ந்திருப்பது போன்ற பிரமை அவருக்கு. அவற்றைப் பற்றி நினைக்கும்போதே உற்சாகக் குறைவு ஏற்பட்டது அவருக்கு.

மாலை ஆறுமணி அளவில் டின்னர் ரெடி என்று கூறப்பட்டது. அவருக்கு சாப்பிடவே மூட் இல்லை, இருப்பினும் கொடுத்த காசு வீணாகக் கூடாது என்று மெல்ல மெல்ல கயிற்றைப் பிடித்துக் கொண்டே உணவு வழங்கும் இடத்துக்கு சென்றார். நல்ல வெங்காய வாசனை, ஹேம் எனப்படும் பன்றிக்கறியின் மணம், கூடவே கருவாடு வேறு என்ற நிலை அவரை வரவேற்றது. அந்த இடத்துக்கு செல்லும் ஏணி அருகே நின்று கொண்டிருந்த ஸ்டூவெர்ட் அவரிடம் என்ன ஐயா சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்க இவரோ, "ழேய், என்ன இங்கேருந்து கொண்டு போங்கடா, உவ்வேழ்" என்று கத்த, அவரை அப்படியே அலேக்காக தளத்தின் கைப்பிடிக் கம்பி அருகே ஒரு நாற்காலியில் (நீல குஷன் பச்சை பார்டர் போட்டது) உட்கார வைத்து அவ்விடத்தை விட்டுப் பைய அகன்றனர். அடுத்த அரை மணிக்கு அவரது மற்றும் சில பயணிகளின் சத்தம் மிகுந்த வாந்திக் கச்சேரியில் கழிந்தது.

அடுத்த நான்கு நாட்களுக்கு அவருக்கு சோடா மற்றும் ஒல்லியிலும் ஒல்லியான கேப்டனின் பிஸ்கட்டுகள்தான் (அதாவது பிஸ்கட்தான் ஒல்லி, கேப்டன் அல்ல) ஆகாரம். சனிக்கிழமை வாக்கில் நான்கு டோஸ்டுகள் மற்றும் நீர்த்த டீ என்று முன்னேற்றம் ஏற்பட்டது. திங்களன்று சிக்கன் சூப்பில் காலம் கழிந்தது.



செவ்வாயன்று அவரை துறைமுகத்தில் இறக்கி விட்டு அப்பால் மேலே சென்றது. அதை சோகமாகப் பார்த்துக் கொண்டே என் அத்திம்பேரின் மாமா தாத்தா, "நான் ஏற்கனவே பணம் கொடுத்து வாங்கிய கணிசமான உணவு ஐயோ என்று போய்விட்டதே" என்று அவரை ரிசீவ் செய்ய வந்த என் அத்திம்பேரிடமும் என் அக்காவிடமும் கூறினார். இன்னும் ஒரு நாள் அதிகம் தங்கியிருந்தாலும் போட்ட பணத்துக்கு வஞ்சனையில்லாமல் சாப்பிட்டு பணத்தை ஈடு கட்டியிருக்க முடியும் என்ற எண்ணம் அவருக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/01/2006

நான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 5

இது மறு பதிவு செய்யப்பட்டது.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மனிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் கேட்க, பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அது பற்றி ஏற்கனவே கூறி விட்டேன். ஐஷ்மன் விஷயத்துக்கு வருவோம். அவன் குற்றவாளி என்றுத் தீர்ப்பளிக்கப் பட்டது. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மே 31 1962-ல் அவன் தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிட இரண்டு சக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன. அவற்றை இருவர் ஒரே நேரத்தில் செயலாக்கினர். ஆகவே யார் அவனைத் தூக்கில் ஏற்றியது என்பது ரகசியமாக வைக்கப்பட்டது. பிணத்தை எரித்து சாம்பலை மத்தியதரைக் கடலில் தூவினர் இஸ்ரவேலர்கள். ஐஷ்மன் சகாப்தம் முடிவடைந்தது.

நாஜிகள் பலர் வேடையாடிக் கொல்லப்பட்டனர். தப்பியவர்கள் தங்கள் வாழ்நாள் கடைசி வரை நிம்மதியாக வாழ இயலவில்லை. இத்தனை ஆண்டுகள் யூதர்களைக் கிள்ளுக்கீரையாக மதித்தவர்கள் இப்போது இஸ்ரவேலர்களைக் கண்டு பயந்தனர்.

வலைப்பதிவர்கள் பலர் நான் ஏன் இஸ்ரேலை இவ்வளவுத் தீவிரமாக ஆதரிக்கிறேன் என்பதற்குத் தங்கள் மனதுக்குத் தோன்றியக் காரணங்களை எழுதியுள்ளனர். அது அவர்தம் சுதந்திரம். நான் உலக விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டுப் பத்திரிகைகள் படிக்கும் காலத்திலிருந்தே இஸ்ரவேலர்கள் என்னைக் கவர்ந்தனர்.

கடைசி பிரெஞ்சு பரீட்சையில் (Diplome superieur) ஜெரூசலத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரை முழுக்க முழுக்க இஸ்ரேலிய ஆதரவுடையது. நான் அதை எழுதிக் கொண்டிருந்த போது என் ஆசிரியர் (ஒரு பிரெஞ்சுக்காரர்) என் பின்னால் நின்ற வண்ணம் அதைப் படித்திருக்கிறார். பிறகு என்னிடம் அதை பற்றிப் பேசும்போது, அக்கட்டுரைக்கு பூஜ்யம் மதிப்பெண்கள் கொடுக்கப்படும் அல்லது கிட்டத்தட்ட 100 மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றார். பிரான்ஸில் பேப்பர் திருத்துபவரின் மனநிலையை பொருத்தது என்றும் கூறினார். நான் அதற்காகக் கவலைப்படவில்லை. தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்காக என்னால் ஏதோ செய்ய முடிந்தது என மக்ழ்ச்சி கொள்வேன் எனக் கூறினேன். அப்பரீட்சையில் நான்காவது ரேங்கில் (Tres honorable) தேர்வடைந்தது வேறு விஷயம்.

ஜெர்மன் பரீட்சை ஒன்றில் ஓரல் தேர்வு நடந்தது. மேக்ஸ் ஃப்ரிஷ் எழுதிய அண்டோரா என்ற நாடகத்தைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் வழக்கத்துக்கும் மேல் தீவிரமான என்னுடைய யூத ஆதரவு நிலையைக் கண்ட ஜெர்மன் ஆசிரியர் திகைப்படைந்தார். அவர் என்னிடம் "நீங்கள் இவ்வாறு இருப்பதற்குக் காரணம் நீங்கள் நம்பும் முந்தையப் பிறவி காரணமாக இருக்குமோ? அதாவது 1946-ல் பிறந்த நீங்கள் ஒரு வேளை யூதராக இருந்துக் கொல்லப்பட்டவரா?" என்றுக் கேட்டார். அதற்கு நான் "தெரியாது ஐயா, ஒரு வேளை நாஜியாக அப்பிறவியில் இருந்து இப்போது பிராயச்சித்தம் தேடுகிறேனோ என்னவோ" என்றேன். இப்போதும் தெரியவில்லை. நான் அதிகம் நேசிக்கும் நாடு இஸ்ரேல். அதை விட அதிகமாக நேசிக்கும் நாடு என் தாயகம் இந்தியா மட்டுமே. நான் அமெரிக்க ஆதரவாளனாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் இஸ்ரேல் ஆதரவு நிலையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது