Showing posts with label தவிர்க்க வேண்டிய நபர்கள். Show all posts
Showing posts with label தவிர்க்க வேண்டிய நபர்கள். Show all posts

12/07/2010

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 8

இந்த வரிசையில் உள்ள முந்தைய பதிவுகளை பார்க்க அதற்கான லேபலை சுட்டவும்.

இதுவரை நாம் தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி எழுதியதில் என்னால் குறிப்பிடப்பட்டவர்கள்:

1. தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவர்கள்

2. கோலங்கள் அபி, தொல்காப்பியன் போன்ற மசோகிஸ்டுகள்

3. தாங்கள் முன்னுக்கு வந்தால் மட்டும் போதாது அடுத்தவர்கள் தோல்வி அடைய வேண்டும் என நினைப்பவர்கள்

4. சம்மன் இல்லாமல் ஆஜராகி தேவையற்ற, அனேக சமயங்களில் உபயோகமற்ற ஆலோசனைகள் தருபவர்கள்

5. தாம் செய்யும் ஒரு தவறுக்கும் பொறுப்பேற்காது, அதை மற்றவர்கள் தலையில் கட்டுபவர்கள்

6. எமோஷனலாக பிளாக்மெயில் செய்பவர்கள்

7. கழுத்து மட்டும் குறைகளை சுமந்து யார் சாதாரணமாக எதையும் சொன்னாலும் தன்னை தாக்குவதாக நினைத்து கொண்டு பிறாண்டுபவர்கள் (they have a chip on their shoulders)

இப்பதிவுக்கு நான் தேர்ந்தெடுத்த தவிர்க்க வேண்டிய நபர் தாங்கள் சொல்வதை அவர்களே சீரியசாக எடுத்துக் கொள்ளாது அவர்கள் சொன்னதை அப்படியே நம்புபவர்களை நட்டாற்றில் விடுபவர்கள்.

பழைய அம்புலிமாமாவில் நான் படித்த ஒரு கதை இங்கு நினைவுக்கு வருகிறது. ஒரு கல்விமான் தன் வித்தைகளை அரசரிடம் காட்டி பரிசு பெற தலைநகரத்துக்கு சென்றான். சில நாட்களிலேயே திரும்ப வருவதாக அவன் பிளான். அவன் தன் ஊரை விட்டுக் கிளம்பும் முன்னால் அவன் ஊரைச் சேர்ந்த அவன் நண்பன் தனக்கு அர்ஜெண்டாக சில பொருட்கள் தன் ஆராய்ச்சிக்காக தேவைப்படுகின்றன என்றும், அவை தலைநகரில் மட்டும்தான் கிடைக்கும் என்றும், அவன் அவற்றை தான் திரும்பும்போது கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான்.

அவன் தலைநகரத்துக்கு சென்று அரசரைப் பார்த்தான். அவர் அவன் மேல் இம்ப்ரெஸ் ஆகி அவனுக்கு உடனடியாக அரசில் முக்கிய பதவி அளித்து, உடனேயே வேலையைத் துவங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவன் அதற்கு தலைநகரிலேயேதான் தங்க வேண்டும். இவனோ அரசரிடம் தான் உடனேயே தன்னூருக்கு திரும்ப வேண்டும் என பிடிவாதமாகக் கூறி, நண்பன் கேட்டப் பொருட்களை வாங்கி ஊர் திரும்ப அவன் தந்தை அவன் வேலையில் உடனடி சேராததற்காக அவனைக் கடிந்து கொண்டார்.

இவன் தன் நண்பனைக் கண்டு அவனிடம் பொருட்களை கொடுக்க, அவனோ தலையை சொரிந்தவாறே “அடேடே நான் உன்னிடம் கேட்டதே மறந்து போயிற்றே, மேலும் இப்போது நான் வேறு ஆராய்ச்சியில் இறங்கியுள்ளதால் இவை எனக்குத் தேவையில்லை, நீயே வைத்துக் கொள்” எனக்கூறி விட்டு அப்பால் சென்றான்.

இது ஒரு கதைதான் என்றாலும் இப்போதும் இம்மாதிரி அடிக்கடி நடக்கிறதே.

இன்னொரு வகை நபரும் மேலே நான் சொன்னவருடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டவர்.

இப்படித்தான் நாங்கள் தில்லியில் இருந்தபோது ஆண்டுக்கொரு முறை சென்னைக்கு வந்து போய் கொண்டிருந்தோம். அக்கம்பக்கத்து பெண்மணிகள் என் மனைவியிடம் சென்னையில் கிடைக்கக் கூடிய பல பொருட்களை வாங்கி வரச் சொல்லுவார்கள். அவரும் சில முறை அவ்வாறு செய்து பார்த்தார். ஆனால் பொருட்களை பார்த்து, அவை தமக்கு பிடிக்கவில்லை ஆகவே வேண்டாம் என்பார்கள் சிலர். பலர் பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் இழுக்கடிப்பார்கள்.

என்னவாயிற்றென்றால், என் மனைவி தன் அக்கம்பக்கத்தாரிடம், முக்கியமாக தில்லியில் இருக்கும் எங்கள் உறவினர்களிடம் தான் ஊருக்குச் செல்வதையே மறைத்து விடுவார். சாதாரணமாக அவர் என் மகளுடன் கிளம்பிப் போன ஒரு மாதம் கழித்துத்தான் நான் கிளம்புவேன். என்னிடம் இம்மாதிரி பொருட்களை வாங்கச் சொன்னால் நான் தாட்சணியம் இன்றி மறுப்பேன். அப்படி மறுக்க முடியாத சிலரிடம் அவர்கள் பட்ஜெட் என்ன எனக்கேட்டு முன்னாலேயே முழுப் பணமும் வாங்கி விடுவேன். பிறகு அப்பணத்தை தில்லியில் இருக்கும் எனது வங்கியிலேயே போட்டு விட்டு குஷாலாக சென்னை செல்வேன். பொருட்கள் வாங்க மாட்டேன்.

ஊருக்கு வந்ததும் பணம் கொடுத்தவர்கள் கேட்டால், அவர்களுக்கேற்ற பொருள் மிக அதிக விலையானதாலும், அவை நன்றாக இல்லாததாலும் வாங்கவே இல்லை என்றும், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பணம் வேறுவகையில் செலவழிந்து விட்டதாகக் கூறி சில நாட்களுக்கு பின்னால் அதை திருப்புவேன். ஆகவே என்னிடம் அவ்வாறு கேட்டவர்கள் பிறகு கேட்டதேயில்லை. விட்டது சனி.

என் மனைவியிடமும் கடுமையாகக் கூறினேன். இனிமேல் ஏதாவது யாருக்காவது வாங்கி வரவேண்டும் முதலிலேயே பணம் வாங்கிவிட வேண்டும் என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/16/2009

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 7

இந்த வரிசையில் உள்ள முந்தைய பதிவுகளை பார்க்க அதற்கான லேபலை சுட்டவும்.

ரொம்ப நாளைக்கு பிறகு இந்த விஷயத்தை மீண்டும் தொடுகிறேன். இப்போது நான் தொட நினைப்பது கழுத்து மட்டும் குறைகளை சுமந்து யார் சாதாரணமாக எதையும் சொன்னாலும் தன்னை தாக்குவதாக நினைத்து கொண்டு பிறாண்டுவது. They have a chip on their shoulders என்று அவர்களை பற்றி கூறுவார்கள். நீங்கள் அவர்களுடன் சாதாரணமாகவே பேச இயலாது.

அவர்களில் ஒரு வெர்ஷன் “உனக்கென்னப்பா, நீ பணக்காரன். எனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாதப்பா, நான் ஏழை” என சீன் காட்டுவார்கள். அதுவும் அவர்களுடன் பயணம் செய்யும்போது இது மிக அதிகமாகவே வெளிப்படும். ஒரு நல்ல பொருளை பார்த்து நாம் வாங்கினால் இதை நாம் கேளாமலே அவர்கள் கூறுவார்கள். சில அசடுகள் அதற்காகவே நல்ல் பொருட்களை வாங்குவதை அவர்கள் இருக்கும்போது தவிர்ப்பார்கள். இங்குதான் நான் கூறுவேன், அவர்கள் உங்கள் உறவினர்கள், வேறு குடும்ப காரணங்களுக்காக தவிர்க்க முடியாதவர்கள் என்றில்லாத பட்சத்தில் அவர்களுடன் செல்வதை முழுமையாகவே தவிர்க்கவும். அப்படியே வந்தாலும் நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை கவனியுங்கள். அவர்களது அனுமதி உங்களுக்கு தேவையில்லை.

ஒரு முறை நண்பன் குடும்பத்தினருடன் நாங்கள் வெளியூர் சென்றோம். அவனது மனைவியும் அவனும் இம்மாதிரியே தாங்கள் ஏழைகள் என்றெல்லாம் பேசி சீன் காட்டினர். முதலில் என்னை செலவு செய்ய சொல்லி, பிறகு தங்கள் பங்கை கொடுப்பதாக அவர்கள் சொன்னதை நம்பி செலவு செய்த பிறகு அப்பணத்தை வாங்க மாதக் கணக்காயிற்று. அடுத்த முறை நாங்கள் வெளியூர் சென்றபோது தனியாகவே எங்கள் குடும்பம் மட்டும் சென்றோம். நண்பன் விஷயம் தெரிந்து பிறகு என்னிடம் நானும் வந்திருப்பேனே, ஏன் சொல்லவில்லை என கேட்க, நான் அவனிடம் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு கூறினே, “வேண்டாம்பா, நீ ஏழை, உனக்கு அதெல்லாம் கட்டுப்படி ஆகாது” என்றேன். அவனுக்கு பயங்கர கோபம். இதுதான் தாங்கள் ஏழைகள் என புலம்புபவரிடம் உள்ள பிரச்சினை. மற்றவர்கள் அவர்களிடம் ஆம் நீங்கள் ஏழைகள்தான் என ஒத்து கொண்டால் அது மட்டும் ஏனோ பிடிப்பதேயில்லை.

chip on their shoulder காரர்களிடம் உள்ள வேறொரு பிரச்சினை என்னவென்றால், நீங்கள் என்ன சொன்னாலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள். அதே சமயம் அவர்கள் உங்களை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவார்கள். அவ்வாறான நபர்களை சுத்தமாக ஒதுக்குவதே சிறந்த வழி. அப்படித்தான் ஒரு பதிவர் இட்ட பதிவுக்கு சாதாரணமான பின்னூட்டம் போட, அவர் அதை எப்படியெல்லாமோ திரித்து சீன் காட்டி, நான் சந்திக்க விரும்பாத நபர் நீங்கள் ஒருவர் மட்டுமே என எழுதினார். ரொம்ப சந்தோஷம், the feeling is quite mutual என எதிர்வினை தந்தது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது. அப்பாடா தவிர்க்க வேண்டிய நபரை தவிர்க்க அவரே சான்ஸ் கொடுத்தாரே என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/04/2009

அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார் மறத்துக்கும் அஃதே துணை

திருக்குறள் கால எல்லைகளை மீறியது் என்று கூறுவதற்கு சரியான சான்றாக இக்குறளைக் கூறலாம். அது பற்றி இங்கு இப்போது ஏன் பேச வேண்டும் என்றால் அவ்வாறு செய்யத் தூண்டியது ஜெயமோகனின் இறைவிருப்பம் என்ற தலைப்பில் வந்துள்ள இடுகையே. முதலில் அதை பார்ப்போம், பிறகு டோண்டு ராகவன் வருவான்.

மலையாள கவிஞர் வயலார் ராமவர்மா பற்றியது இந்த இடுகை. அதில் என்னைக் கவ்ர்ந்த வரிகள் கீழே:

“வயலார் ராமவர்மா கண்ணதாசனின் நெருக்கமான நண்பர். இருவருக்கும் பொதுவான பல வாழ்க்கைக்கூறுகள் இருந்தன. மது மாது தட்டுகெட்ட வாழ்க்கை. இருவரும் சேர்ந்து மதுவருந்தும் மாதுக்களை கோண்டாடும் வழக்கமும் இருந்தது. ஆனால் கண்ணதாசனின் பாடலுக்கும் வயலார் ராமவர்மாவின் பாடலுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கண்ணதாசனிடம் ஒரு தத்துவார்த்தத் தன்மை உண்டு. அது அவரது பாடல்களுக்கு ஒரு செவ்வியல்தன்மையை அளித்தது. மாறாக வயலார் ராமவர்மா கற்பனாவாதத்தில் ஊறியவர்.

வயலார் ராமவர்மாவின் கவிதைகள் வைரங்களை செங்கற்களாக அடுக்கிக் கட்டி மேக விதானம் இடப்பட்ட மாளிகை போல மண்ணில் சற்றும் கால்பாவாத கற்பனாவாத எழுச்சிகள். காமமும் இயற்கை வருணனையும் கற்பனையின் பொன்னிலத்தில் ஒன்று கலந்தவை. பாடல் என்ற வடிவில் அவற்றுக்கு இருக்கும் கனவுத்தன்மையே பெரும் கவற்சியாக ஆகிறது. அத்துடன் அழகிய சம்ஸ்கிருதச்சொற்கள் கலந்து கம்பீரமான ஒலியழகை அளிக்கின்றன.

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே
ஜோதிர்மயியாம் உஷஸினு
வெள்ளீச்சாமரம் வீசும் மேகங்ஙளே
சுப்ர·பாதம் சுப்ர·பாதம்!

[நீலமலையின் தோழிகளே, சுடர்முகத்தவர்களே!
ஒளிவடிவாம் புலரிமகளுக்கு
வெள்ளிச்சாமரம் வீசும் மேகங்களே!
நல்விடியல்! நல்விடியல்!]

என்று அவரது கவிதை கிட்டத்தட்ட சம்ஸ்க்ருத சுலோகம்போலவே ஒலிக்க்கும். சலீல் சௌதுரி தவிர பிறர் அவரது வரிகளுக்குத்தான் இசையமைத்திருக்கிறார்கள். இசைக்குப் பாடல்கள் அமைக்கும்போதுகூட

”இவிடே காற்றினு சுகந்தம்?
இதிலே போயொரு வசந்தம்!
வசந்தத்தின் சுவர்ண தேரில் இருந்நதாரு?
வாஸர ஸ்பனத்தின் தோழிமாரு!

[இங்கே காற்றுக்கு நறுமணம்?
இவ்வழியாகச் சென்றதொரு வசந்தம்!
வசந்தத்தின் பொற்தேரில் இருந்தது யார்?
இளமைக்கனவின் தோழியர்!]

என்று சகஜமாக நகர்ந்தது அவரது கவிதை. காமத்தை பலசமயம் அத்துமீறிக்கூட அவர் எழுதியிருக்கிறார். அதை சம்ஸ்கிருதம் மறைத்துவிடும். ‘ஒவ்வொரு மாமிசமலரும் இதழ்விட்டு விழித்தெழும் இந்த இரவில்…’, ‘ஈர உடையணிந்து நீ பூஜைக்கு வருகையில் நீலக்கார்வண்ணனாக நிற்பேன் நான்’ போன்ற வரிகளை சாதாரணமாக அவர் கவிதைகளில் காணலாம். நிலவு அவருக்கு பெரியதோர் படிமம். ஓடம், காயல், நிலவு மூன்றும் கலந்த ஒரு காட்சி சித்திரம் அவரது பல பாடல்களில் மீண்டும் மீண்டும் வருகிறது. ‘எத்தனை கறந்தாலும் அகிடு வற்றாத ஒரு கருநீலப் பெரும்பசு’ அவருடைய நிலாவானம்.

சமீபத்தில் வயலார் ராமவர்மாவின் மனைவி பாரதி தம்புராட்டி கணவரைப்பற்றி எழுதிய ஓரு சிறு நூலைப் படித்தேன். [இந்திர தனுஸின் தீரத்து'.. ஸைந்தவ புகஸ் ] அவர் எழுத்தாளர் அல்ல. ஆகவே சும்மா எழுதிச்செல்கிறார். வர்ணனைகள் இல்லை. நுண்விவரிப்புகள் இல்லை. வெறும் தகவல்கள் , நினைவுகள். வயலார் 1975ல் தன் 48 ஆவது வயதில் வயலார் ராமவர்மா மறைந்தார். மறைவில் இருந்து தொடங்குகின்றன நினைவுகள். சமீபத்தில் இத்தனை உள்சுழிகள் கொண்ட ஒரு வாழ்க்கை வரலாற்றை வாசிக்க நேர்ந்ததில்லை”.

“வயலார் ராமவர்மாவுக்கும் அம்மாவுக்குமான உறவின் விசித்திரங்களை தொட்டுத்தொட்டுச் செல்கிறது பாரதியம்மாவின் குறிப்புகள். அம்மாவில் நிழலில் வளர்ந்தவர் வயலார். அம்மா சொல்லை ஒரு கணமேனும் தட்டமுடியவில்லை அவரால். அம்மாவுக்கு தன் மகனை எவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. சற்று கூட. வயலார் ராமவர்மா பிரபல மலையாள எழுத்தாளர் காரூர் நீலகண்ட பிள்ளையின் சகோதரியை மணக்க விரும்பினார். ஆனால் அம்மாவுக்கு ஒரு நாயர் பெண்ணை அவர் மணப்பது பிடிக்கவில்லை. ஆகவே அந்த எண்ணத்தையே உதறிவிட்டார்.

அம்மாவின் கூற்றுக்கு இணங்க பாரதியின் அக்காவைத்தான் முதலில் மணம் புரிந்தார் வயலார் ராமவர்மா. கிட்டத்தட்ட நான்குவருடங்கள் கழித்துத்தான்தான் அம்மா தன் மகனுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் இரவில் பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டுப் படுக்கப்போகும்முன்பு தான் வீட்டு விலக்காகிவிட்டதாகச் சொல்வது பாரதியின் அக்காவின் வழக்கம். அதை சந்தேகப்பட்ட அம்மா அவளை மிரட்டிக்கேட்கும்போது உண்மை வெளியாகிறது. அவளுக்கு மாதவிலக்கே வருவதில்லை. அவளால் தாய்மை அடைய முடியாது.

மனைவியை ஆழமாக நேசித்த வயலார் ராமவர்மா தன் அம்மாவின் கட்டளைக்கு ஏற்ப அவளை விவாகரத்து செய்கிறார். அவள் அதற்குச் சம்மதிக்க மறுக்கிறாள். அழுகிறாள். ஆனால் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார்கள். அவளை பிறந்தகத்துக்குக் கொண்டுவந்து விடுவிடுகிறார்கள். அங்கே உள்ளறைகளின் இருட்டில் வாழ்ந்து அவள் மறைந்தாள். பாரதியை வயலார் இரண்டாவதாக மணக்கவேண்டும் என்று அம்மா ஆணையிடுகிறாள். வயலார் ராமவர்மாவை எண்ணி காத்திருந்த காரூர் நீலகண்டபிள்ளையின் சகோதரி மீண்டும் திருமண ஆலோசனையுடன் வந்தபோதும் அம்மா சம்மதிக்கவில்லை.

பாரதியை வயலார் ராமவர்மா மணக்கிறாள். பாரதிக்கு வயலார் ராமவர்மாவை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறுவழியே இல்லை. வேறு ஒரு பெண் வயலார் ராமவர்மாவை மணந்தால் அவரை தன்னால் பார்க்கக்கூட முடியாது போய்விடுமே என்று அக்கா அழுதுகொண்டு சொன்னதனால் பாரதி சம்மதிக்கிறாள். ஒரு முறை மூத்தமனைவியை ஒரு திருமண நிகழ்ச்சியில் பார்த்து விட்டு வந்த வயலார் பாரதியிடம் அதைப்பற்றிச் சொல்லி கண்ணீர் வடிக்கிறார்.

அப்போது வயலார் ராமவர்மா திரையுலகில் உச்சத்தில் இருந்தார். எப்போதாவது வீட்டுக்கு வருவதோடு சரி. வந்தால் அம்மாவுடன் மட்டுமே பேசமுடியும். அவர் தன் மனைவியுடன் பேசுவது வெளியே செல்வது எதுவுமே அம்மாவுக்குப் பிடிக்காது. பாரதி வயலார் ராமவர்மாவுக்கு சமைத்துப்போடக்கூட அம்மா சம்மதிப்பதில்லை. கடிதங்கள்கூட வயலார் ராமவர்மா அம்மாவுக்குத்தான் எழுதினார். பெயர்கூட எழுதமாட்டார். ‘அம்மா, ராகவப்பறம்பு, வயலார், சேர்த்தலா’ என்றுதான் விலாசம் எழுதுவார். தொலைபேசியில் தினமும் அம்மாவிடம் பேசுவார் வயலார் ராமவர்மா, ஒருமுறைகூட மனைவியிடம் பேசியதில்லை.

சமையலறையிலேயே வாழ்ந்து குழந்தைகளை வளர்த்து வாழ்க்கையைக் கடந்து வந்தார் பாரதி. நினைவில் சில பயணங்கள் சில அபூர்வ தினங்கள் அல்லாமல் வயலார் ராமவர்மாவுடனான வாழ்க்கையின் ஒளிமிக்க கணங்களே இல்லை. சென்னையிலேயே தங்கிய வயலார் ராமவர்மா குடிகாரர் ஆனார். பெண்பித்தராக அலைந்தார். அவரது பெண்பித்து பற்றி பாரதி கேள்விப்படுகிறார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை, அவர்களெல்லாம் அவரது சகோதரிகள்தான் என்று கற்பனை செய்துகொண்டேன் என்கிறார். வேறு என்ன செய்ய முடியும்?

வயலாரை பாரதி நேசித்தாரா? ஆமாம் என்று சொல்கிறார் பாரதி. ஏனென்றால் நேசித்தாகவேண்டும். வேறு உலகமே கிஐயாது. நேசிக்கும்படியாக அவர் வளர்க்கபப்ட்டிருக்கிறார். அவரன்றி நினைவுகள் கூட இல்லை. ஆனால் அது நேசம்தானா? வெறும் கற்பனையா? சொல்ல முடியாது. என் வாழ்க்கையை நரகமாக்கிய வயலாரின் அன்னையை முதுமைக்காலத்தில் நன்றாகவே புரிந்துகொள்வதாகவும், அவர்மீது நேசமும் இரக்கமும் மட்டுமே மனதில் எஞ்சியுள்ளது என்றும் சொல்கிறார்.

குடி வயலார் ராமவர்மாவை வதைத்தது. அதை விட்டுவிட ஒவ்வொருநாளும் விரும்பினார். அதற்காக பலமுறை சபதம் எடுத்தார். புத்தாண்டுகள் தோறும் டைரியில் எழுதிவைத்தார். மனைவியை நேசிக்க முடியாமையைப்பற்றி புலம்பி எழுதினார். ஆனால் அந்த மரணப்பாதையில் சென்றுகொண்டே இருந்தார். அவரை நினைத்து அம்மா மனம் புழுங்கினார். அவருக்காக கோயில்தோறும் வேணிக்கொண்டார்.

ஒருமுறை குடி மூத்து நிற்க முடியாத வயலார் ராமவர்மா தன் வேலையாளிடம் மேலும் மது வாங்க பணம் எடுத்துக் கொடுக்கும்படி பாரதியிடம் சொல்ல பாரதி அழுதபடி மறுக்கிறார். அம்மா வெளியே வந்து ”நீ சீதனம் கொண்டுவந்த பணம் அல்ல அது. அவன் சம்பாதித்த பணம்… போய் எடுத்து கொடுடீ”என்று சீறினாள். பணத்தை எடுத்துக்கொடுத்துவிட்டு பாரதி வந்து பார்த்தபோது அம்மா அறைக்குள் கதறி அழுது கொண்டிருந்தாள்.

”பாரதீ நீ கவலைப்படாதே, அம்மாவின் காலம் முடிந்தபின் நாம் நிம்மதியாக வாழலாம்”என்று போதையில் மனைவியிடம் சொல்லி கண்ணீர்விடுகிறார் வயலார் ராமவர்மா. ஆனால் அம்மாவின் கண்முன் அவர் இறந்தார். ஈரல் கெட்டுவிடிருந்தது. மரணப்படுக்கையில் ”என்னை வேலூருக்குக் கொண்டு செல்லுங்கள்…”என்று கதறினார். கசக்கவில்லை வாழ்க்கை ”இந்த அழகிய நிலத்தில் ஆசை தீர வாழ்ந்து மறைந்தவர்கள் உண்டா?” என்று கேரளத்தைப்பற்றி பாடியவர் அவர்

அம்மா உடைந்துபோய்விடுகிறாள். சற்றே மனநலம் பாதிக்கப்பட்டது. தலையில் தண்ணீர் விடமுடியாது, ஜன்னி வரும் . ஆனால் பேரப்பிள்ளைகளை வளர்த்து மேலும் பல வருடங்கள் வாழ்ந்தாள். எத்தனை வீணான வாழ்க்கை. ஏன் அப்படி அது நிகழ்ந்தது?

வாழ்க்கையின் பெரும் புதிர்களை ‘ஈஸ்வரஹிதம்’ என்று சாதாரணமாக தாண்டிச்செல்கிறார் பாரதி. தனித்த வாழ்க்கையின் குரூரங்களை கண்ட அம்மா அதே வாழ்க்கையை ஏன் தன் மருமகளுக்குக் கட்டாயமாக்கினாள்? அம்மாவின் சொல்லை மகன் தட்டமாட்டான் என்று அறிந்திருந்தும் ஏன் மகனை குடிக்கக்கூடாது என்று அம்மா சொல்லவில்லை?

”சொல்லியிருந்தால் மகன் தட்டியிருப்பான் என்று அம்மாவுக்குத்தெரியும்”என்றார் லோகித தாஸ். ”ஓர் எல்லை உள்ளது. அந்த அம்மா அதை மீறிவிட்டார்”. வயலார் ராமவர்மா குடித்து அலைந்தது ஏன்? உள்ளூர அவர் ஏன் நிறைவில்லாதவர் ஆனார்? ”மறுக்கப்பட்ட அன்பை உலகில் எங்குமே மனிதன் கண்டுகொள்ள முடியாது…தேடித்தேடிச் சாகவேண்டும் என்பது விதி…”என்றார் லோகிததாஸ். பேரன்பால் தன் மகன் வாழ்க்கையைத் தின்று அழித்தார் அம்மா. பேரன்பால் தன்னை அம்மாவுக்கு பலிதந்தார் மகன்”.

மீண்டும் டோண்டு ராகவன். ஜெயமோகன் மேலும் ஜேசுதாஸை பற்றியும் எழுதுகிறார். அது எனது இப்பதிவுக்கு தேவையில்லை. நன்றிகெட்டத்தனத்தை குறித்து வள்ளுவர் எழுதியதை எடுத்து காட்ட நான் பதிவு போட்டால் அதற்கு உபயோகமானதாக அது இருக்கும் என்பது வேறு விஷயம். ஆவல் உள்ளவர்கள் ஜெயமோகனின் பதிவுக்கே சென்று பார்த்து கொள்ளலாம்.

வயலார் ராமவர்மாவின் அம்மாவின் பேரன்பு அவரை மட்டுமின்றி அம்மாவையும் ராமவர்மாவின் மனைவியையுமே அழித்து விட்டது. அதைத்தான்் ஐயன் வள்ளுவன் மறத்துக்கும் அஃதே துணை என்கிறார். சூர்ப்பனகையிடம் ராவணன் வைத்த அன்பு அவன் குலத்தையே அயித்தது. மகாபாரதத்தில் இம்மாதிரி எண்ணற்ற உதாரணங்களைப் பார்க்க இயலும்.

எமோஷனலாக பிளாக்மெயில்களைத்தானே தொலைக்காட்சி சீரியல்களில் செய்கிறார்கள்? “மெட்டி ஒலி” மாணிக்கத்தைவிட சிறந்த உதாரணம் தரவியலுமா? சரியோ தவறோ என் அன்னை சொல்வதே சரி என்று எத்தனை கணவன்மார்கள் படுத்துகின்றனர். பெண்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல. வயலார் ராமவர்மாவின் அன்னையே சிறந்த உதாரணம். முதல் மனைவி தான் ராமவர்மாவை பார்த்து கொண்டிருக்க வேண்டும் என்ற தனது சுயநலனுக்காகத்தானே தன் தங்கையை வற்புறுத்தி அவரை மணம் செய்ய வைக்கிறாள். அவள் மேல் உள்ள பாசத்தால்தானே அத்தங்கையும் தன் வாழ்வை பலிகொடுத்தாள். இவ்வரிகளை தட்டச்சிடும் போதெ என்னுள்ளே கோபம் கொப்பளிக்கிறது.

சமீபத்தில் 1969-ல் உயர்ந்த மனிதன் படத்தை நான் பார்க்க மறுத்ததன் காரணமே மறத்துக்கு வழி செய்யும் இந்த அன்பை பார்க்கப் பிடிக்காமல்தான். தன் மகன் சிவாஜியின் காதலியின் வீட்டுக்கு நெருப்பு வைத்து கொளுத்தும் ராமதாஸ் பிறகு சிவாஜி சவுக்கார் ஜானகியை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொல்லி மிரட்டியே தன் காரியத்தை சாதித்து கொள்கிறார் என்ற கதையோட்டத்தைக் கேட்டதுமே அப்படத்தைக் காண நான் விரும்பவில்லை. இன்றுவரை முயுமையாக பார்க்கவில்லை. கடைசி சில காட்சிகள்தான் க்ளிப்பிங்களில் பார்த்தேன்.

இன்னமும் கோலங்கள் தொலைக்காட்சி தொடரில் அம்மாதிரி காட்சிகள் வரும்போது பார்க்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிடுவேன்.

எனது பாலிசி என்னவென்றால் யாரும் என்னை எமோஷனலாக பிளாக்மெயில் செய்ய அனுமதிக்கக் கூடாது; அம்மாதிரி செய்பவர்கள் தவிர்க்க வேண்டிய நபர்கள் என்பதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/18/2007

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 5

இந்த தவிர்க்க வேண்டிய நபர்கள் பற்றிய ஐந்தாம் பதிவில் ஒரு அடி மேலே எடுத்து வைக்கிறேன். சிலர் கேட்கலாம், ஐயா, நான் தவிர்க்க வேண்டிய நபர் எனக் கருதுபவர் என் அலுவலகத்தில் எனது டீமில் எனது சக உறுப்பினர். அவர் வேலை என்னவென்றால் எந்தப் பிரச்சினை வந்தாலும் தான் அதற்கு பொறுப்பில்லையென்றும், குழுவில் உள்ள மற்றவர்தான் காரணம் என்றும் எப்போதும் கூறிக் கொண்டேயிருப்பார். அவரது கூற்றுக்களில் சில உதாரணங்கள்:

1. பிரச்சினை வந்த அன்று நான் லீவில் இருந்தேன். நான் இருந்திருந்தால் அது நடக்காமல் தடுத்திருப்பேன்.

2. இந்த கோப்பு பற்றி பேசும்போது நீங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என கூறினீர்கள். அதை நான் நம்பி விட்டேன்.

3. சரி நாந்தான் சொன்னேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று. நீங்கள் அதை சரி செய்து பார்த்திருக்க வேண்டாமா? எனக்கு இந்த கோப்பை கொடுத்தவர் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னார். அவரை நான் நம்பி விட்டேன். (இது எப்படி இருக்கு?)

இந்தப் பதிவில் நான் அவரைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை. அவர் தவிர்க்க வேண்டியவர்தான், ஆனால் முடியாது. அதை எப்படி சமாளிப்பது? இந்தக் கேள்விக்கு என்னிடம் முழு விடையில்லை. அதற்கு சகபதிவர்கள் ஏதாவது விடையளிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவை போடுகிறேன்.

இப்போது இப்பதிவை போடுவதற்கு முக்கியக் காரணமே நேற்று (17.02.2007) ஒரு கம்பெனியில் ஆன்சைட் மொழிபெயர்ப்பு வேலைக்கு போன இடத்தில் நான் எதிர்க்கொண்ட இந்த நபர்தான் காரணம்.

நேற்று நான் காலை 9 மணிக்கு மறைமலை நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு சிலவரைபடங்களை மொழிபெயர்க்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நான் முதலிலேயே கூறினேன், செக்யூரிடியிடம் நான் வருவதை எழுத்துமூலமாகத் தெரிவிக்கும்படி. ஏனெனில் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற அக்கம்பெனியில் அவ்வளவு சீக்கிரம் உள்ளே சென்று விடமுடியாது. கம்பெனியிலிருந்து சம்பந்தப்பட்ட நபர் வந்து அழைத்து செல்ல வேண்டும். உள்ளே நடமாட்டமும் மிகக்கட்டுப்பாட்டில் இருக்கும். இவரும் சரி என்று கூறி காலை ஒரு செக்யூரிட்டியிடம் கூறியுள்ளார். ஆனால் எனது கார் சரியாக 8.55க்கு கம்பெனி வளாகத்தின் உள்ளே வந்தபோது அந்த செக்யூரிட்டி இல்லை. ஆகவே உள்ளே செல்வதில் தாமதம். உள்ளே போனதுமே அவர் என்னிடம் தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், ஆனால் செக்யூரிடியினர் சொதப்பினர் எனக் கூறினார். நான் இது குறித்து கவலைப்படவில்லை. அது கம்பெனியின் உள்பிரச்சினை என விட்டுவிட்டேன். (அரைமணி மீட்டர் அதிலேயே ஓடிவிட்டது).

பிறகு கணினியை ஆன் செய்து வரைபடத்தைத் திரையில் வரவழைத்தார். அதன் மென்பொருள் அருமையானது. A0 அளவு வரைபடத்தில் கனினி திறையில் முழுமையாக A4 அளவில் சுருக்கி காண்பிக்கும். பூதக்கண்ணாடி ஐக்கானை அழுத்தி, குறிப்பிட்ட பகுதியை தெரிவுசெய்து க்ளிக் செய்தால் அந்த இடம் பலமடங்கு பெரிதாக்கப்பட்டு, படிக்க முடியும். பிறகு டெக்ஸ்டை உள்ளிடும் ஐக்கானை அழுத்தி, டெக்ஸ்ட் பாக்ஸ் போல செய்து, அதில் ஆங்கில மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டியதுதான் பாக்கி. இதில் நான் வேலை செய்வது ஐந்தாம் முறை. அருமையான மென்பொருள். சங்கடம் என்னவென்றால், அவ்வாறு மொழிபெயர்ப்பதை சேமித்து வைப்பதுதான். 'சேமி', 'இப்படிச் சேமி' என்பது போல எளிதானதில்லை அது. எல்லோரும் மன்றாடிப் பார்த்து விட்டார்கள். ஆக என்ன நடந்ததென்றால், ஒவ்வொரு முறையும் ஒரு பக்கத்தை நான் தட்டச்சு செய்து முடித்ததும் அதை சேமிப்பதற்கென்றே ஒருவர் வரவேண்டியிருந்தது. இந்த அழகில் அக்கம்பெனியில் அது பல கணினிகளில் வெவ்வேறு வெர்ஷன்களில் இருந்தது. அவற்றை சேமிக்கும் முறையும் வெர்ஷனுக்கேற்ப மாறுபட்டது. ஒரே கலாட்டாதான்.

நானும் அதைபற்றி எனது மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் ஒரு பதிவு போட்டு சக மொழிபெயர்ப்பாளர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இன்றுவரை அதற்கு பதிலில்லை. நான் கூறிய ஆலோசனை என்னவென்றால் அந்த வரைபடங்களை அனுப்பியவரையே அதை கேட்கலாமேயென்று. கடைசியில் அப்படித்தான் நடந்திருக்கிறது. நேற்று நான் போய் பார்த்தவர் எனக்கு சேமிப்பு எப்படி செய்வது என்பதைக் காண்பித்தார். அவருக்கும் தடுமாற்றம்தான். அதிலேயே ஒரு மணி நேரம் போய்விட்டது. பிறகு வேலை ஆரம்பித்தது. செய்து முடித்தேன் என வைத்து கொள்ளுங்கள்.

ஆனால் இப்போது இந்த மனிதரை பற்றி கூறவேண்டும். என்னிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதையும் எனது எதிர்வினைகளையும் இப்போது பாருங்கள்.

அவர்: நீங்கள் ஐந்தாம் முறையாக இதில் வேலை செய்கிறீர்கள் என்பதால் உங்களுக்கு இதில் நிபுணத்துவம் உண்டு என நினைத்து விட்டேன்.
நான்: என்ன சார் விளையாடுகிறீர்களா? செய்தவேலையை எப்படி காப்பாற்றுவது என்பதுதானே இத்தனை முறையும் உங்கள் கம்பெனியில் எல்லோருக்குமே பிரச்சினையாக இருந்திருக்கிறது? இதில் எனக்கு மட்டும் நிபுணத்துவம் எப்படி வந்திருக்க முடியும்?

அவர்: சரி வேலையை ஆரம்பியுங்கள். ஆனால் இணைய தொடர்பு கிடையாது.
நான்: அது அவசியம் ஆயிற்றே. இல்லையெனில் ஆன்லைன் அகராதி, எனது மொழிபெயர்ப்பு தலைவாசலுக்கு சென்று ஆன்லைன் உதவி பெறுவது எல்லாம் பாதிக்கப்படுமே?
அவர்: இணையத் தொடர்பு வேண்டுமென்று நீங்கள் கூறவேயில்லையே?
நான்: அதுபற்றி எனது ஆஃபர் லெட்டரில் குறித்துள்ளேனே. மேலும் இத்தனை முறையும் அதை கொடுத்துத்தானே வந்திருக்கிறீர்கள்?
அவர்: நான் ஆஃபர் லெட்டரை பார்க்கவேயில்லை
(இது முழு பொய். எனது அக்கவுண்டை முழுமையாக டீல் செய்யும் எனது தொடர்பு அதிகாரி அவர் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை).
நான்: பரவாயில்லை. என்னிடம் எனது பேப்பர் அகராதிகள் உள்ளன. என்ன, அவை சற்று பழையவை. ஆன்லைன் அகராதி இற்றைப்படுத்தப் பட்டிருக்கும். மொழிபெயர்ப்பின் தரமும் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.

அவர்: நீங்கள் இன்றைக்கு எவ்வளவு வார்த்தைகள் மொழிபெயர்த்தீர்கள் என்பதை கூட்ட வேண்டும்.
நான்: அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. நேரடியான வெறுமனே மொழிபெயர்ப்பு என்னும் போதுதான் வார்த்தை எண்ணிக்கை கணக்குக்கு வரும். அது நான் வீட்டில் எனது கணினியில் செய்யும் டெக்ஸ்டை மொழிபெயர்ப்பு செய்யும்போது. இங்கு உங்கள் நிறுவனத்துக்கு வந்து வேலை செய்தபோது, உங்கள் மென்பொருள் என்னவெல்லாம் தன்ணிகாட்டியது என்பதைப் பார்த்தீர்கள்தானே. அந்த நேரவிரயத்துக்கெல்லாம் யார் ஜவாப்? மேலும் இங்கு மணிக்கு இவ்வளவு என்ற கணக்கில்தான் ரேட். இந்த இடத்தில் வார்த்தைகள் அடிப்படையில்லை.
அவர்: அப்படியா எனக்கு அதை யாரும் கூறவில்லையே.
நான்: என்ன சார் எனது இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் பில்களை உங்களிடம் நேரடியாகத்தானே கொடுத்துள்ளேன். அதில் இவ்வளவு மணி நேரம் என்றுதானே இருந்திருக்கிறது. நீங்களும் நான் குறிப்பிட்ட மணியளவு சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்துதானே அனுப்பினீர்கள்? அதன் பக்கத்திலேயே மணிக்கு இவ்வளவு ரூபாய்கள் என்று இருக்குமே? பார்க்கவில்லை?
அவர்: பார்க்கவில்லை. நான் வெறுமனே மணி நேரம் சரியாக உள்ளதா என்றுதான் பார்த்தேன். மீதியயெல்லாம் பார்க்கவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்.
நான் (மனதுக்குள் 20 வரை எண்ணிவிட்டு): நம்பிக்கைக்கு நன்றி சார். எனது பழைய பில்களின் போட்டோ காப்பிகளை என்னிடம் காட்டினீர்களே, அவற்றை எடுத்து பாருங்களேன்?
அவர் (அவசரம் அவசரமாக): நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

அவர் மாலை 5.30 க்கு வேலை இன்றைக்கு இதற்கு மேல் வேண்டாம் எனக் கூறினார். நானும் அவரிடம் வேலை முடித்த வரைபடங்களின் நகலைக் கொடுத்து வேறு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்குமாறு கேட்டேன். பார்த்தாகி விட்டது எனக் கூறினார். நானும் 8 மணி நேரத்துக்கான பில்லை போட்டு விட்டு (அரை மணி நேரம் லஞ்ச் நேரம் பில்லில் இடவில்லை) கிளம்பும் ஆயத்தங்கள் செய்தேன். அவர் மறுபடியும் லிஸ்டை பார்த்து விட்டு தேள் கொட்டிய பாவனையில் துள்ளிக் குதித்தார்.

அவர்: ஐயையோ, முக்கியமாக இரு வரைபடங்கள் விட்டுப் போய் விட்டனவே. எல்லாம் முடிந்ததாக நீங்கள் கூறியதை நம்பிவிட்டேன்.
நான் இதற்கு பதில் சொல்லாது அவரைக் கூர்ந்து பார்த்தேன். அவருக்கே தான் சொன்னது ஓவர் எனப் பட்டது போலிருக்கிறது.

அவர்: சரி, இப்போது நீங்கள் அவற்றையும் மொழிபெயர்க்கிறீர்களா?
நான்: சார் அவை பெரிய வரைபடங்கள். மொழிபெயர்க்க இரண்டு மணிகளுக்கு மேல் ஆகும். என்ன செய்யலாம்? இப்போதே மணி 5.45.
அவர்: பரவாயில்லை சார் தயவு செய்து செய்யுங்கள்.
நான்: சரி செய்கிறேன். இப்போது நான் கொடுத்த பில்லை திருப்பித் தாருங்கள். வேறு பில் வேலை முடிந்ததும் தருகிறேன்.

அவரும் அதைத் தந்தார். பிறகு என்ன அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு புயல் வேலைதான். எல்லாம் முடிந்து 10 மணிநேரத்துக்கு பில். பிறகு ஒன்றாக கிளம்பி வெளியில் வந்து அவரை எனது காரில் குரோம்பேட்டை வரைக்கும் அழைத்து சென்று டிராப் செய்தேன்.

இவரைப் போன்றவர்கள் தமது கீழே, அதே நிலையில், மேலே வேலை செய்யும் எல்லாறுக்குமே தலைவலி தருபவர்கள். அதாவது பொதுவான ஒருபிரச்சினைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று நிலைநிறுத்துவதிலேயே துடியாக இருப்பார்கள். அத்துடன் மற்றவர்கள்தான் பொறுப்பு என்பதையும் சமயம் வரும்போதெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள். இவர்களை தவிர்க்கவோ இயலாது. ஆகவே எதிர்க் கொள்ள வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/06/2007

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 4

இந்த வரிசையில் வந்த முதல் மூன்று பதிவுகள்:
1)
2)
3)

என் தமக்கையார் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்கு வந்த தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். என் தமக்கை அப்போது பாட்டு கிளாசுக்காக சாதகம் செய்து கொண்டிருந்தார். ஒரு கீர்த்தனையை பாடினார். உறவினர் அது என்ன ராகம் என்று கேட்க அவர் ராகத்தின் பெயர் டக்கா என்று கூறினார். உடனே அந்த உறவினர் ரொம்ப சீரியஸாக இம்மாதிரி ஊர்பேர் தெரியாத ராகமெல்லாம் ஏன் பாட வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டார். எல்லோருக்கும் தெரிந்த ராகங்களான காம்போதி, கல்யாணி, தோடி ஆகிய ராகங்களே பாடினால் போதும் என்று உபதேசம் வேறு.

இந்த அழகில் அவர் சங்கீதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்தான். இந்த நிகழ்ச்சியை ஏன் கூறினேன் என்றால், ஒருவர் அட்வைஸ் செய்யும்போது அவர் விஷயம் தெரிந்து பேசுகிறாரா இல்லை ஏதாவது பேச வேண்டும் என்பதற்காகப் பேசுகிறாரா என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது பற்றிப் பேசுகையில் ஒரு வடிவேலு படம் ஞாபகத்துக்கு வருகிறது. சீட்டாட்டம் பற்றி ஒன்றுமே அறியாது, மும்முரமாக ஆடிக் கொண்டிருந்தவர் கையிலிருந்து சீட்டைப் பிடுங்கி கீழே போட்டு அவர் எல்லா பணத்தையும் இழந்ததும், "சீட்டாட்டத்தில் வெற்றி தோல்வி ஜகஜம் என்று வேறு பேசி வெறுப்பேற்றுகிறார். பிறகுதான் தனக்கு சீட்டுக் கட்டுகளில் எவ்வளவு கார்டுகள் இருக்கும் என்பது கூடத் தெரியாது என்பதை தோற்றவரிடம் கூறி நன்கு உதை வாங்குகிறார்.

இப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அது கண்டிப்பாக அவ்வாறு அட்வைஸ் செய்பவர்களை குறிவைத்து அல்ல. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அதைக் கேட்டு நடந்து சந்தியில் நிற்கப் போகிறவர்களைப் பற்றித்தான் இப்பதிவு பேசும். என் தமக்கை விஷயத்தில் அவர் அந்த உறவினர் கூறியதை லட்சியமே செய்யவில்லை. அவர் பாட்டுக்கு தனக்கு சரி என்று தோன்றுவதையும் தனது பாட்டு ஆசிரியர் கூறியதையும் கடைபிடித்து சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார். அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

இவ்வாறு விஷயம் புரியாது அட்வைஸ் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தாங்கள் செய்ய நினைப்பதை விவாதிக்காமல் தவிர்ப்பதே நலம். அது சற்று கடினம்தான். ஏனெனில் அவ்வாறு அட்வைஸ் செய்பவர்கள் தாங்கள் தவறான கருத்தை கூறுகிறோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களே அதை முழுமையாக நம்புபவர்கள். அதுவும் ஒன்றுமே தெரியாதவன் யாரோ எங்கோ வேறு சூழ்நிலையில் எழுதியதை படித்து கருத்து கூறும்போது தான் கூறுவதில் உறுதியாக இருக்கும் மன்னர்கள் (அல்லது மன்னிகள்).

இதைத்தான் "The certainty of the ignorant" என்று கூறுவார்கள்.

இன்னும் ஆபத்தானவர்கள், தங்களுக்கு நிறைய கைவைத்தியம் தெரியும் என நம்பி மற்றவர்கள் மேல் அதைத் திணிப்பவர்கள். உங்களுக்கு நான் கூறியது புரியாவிட்டால் பொது இடத்தில் மற்றவர்கள் முன்னிலையில் இரண்டு தும்மல் போடுங்கள். ஜலதோஷம், அதனுடன் சேர்ந்த அல்லது சேராத தலை/மூட்டு/முதுகு வலிகள் எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வைத்திய ஆலோசனைகள் தாராளமாக வழங்கப்படும்.

மேலும் கூறுவேன்.

12/30/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 3

இதற்கு முன்பு இந்த வரிசையில் வந்த
இரண்டாம் பதிவு
முதல் பதிவு

இதற்கு முந்தைய 2 பதிவுகளில் நீங்கள் தவிர்க்க வேண்டிய நபரகளை பற்றி பேசும்போது தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்களையே குறி வைத்தேன். இப்பதிவில் சற்று வேறு மனநிலைகளில் இருப்பவர்களைப் பற்றி கூறுவேன்.

நான் சமீபத்தில் 1963-69 காலக் கட்டத்தில் பொறியியல் கல்லூரியில் படித்த தருணம் அது. என் நண்பன் ஒருவன். பெயர் ராமகிருஷ்ணன் என்று வைத்துக் கொள்வோமே. (அவன் இப்போதும் என்னுடன் தொடர்பில் இருப்பதால் அவனது உண்மைப் பெயரை கூறவில்லை). அவன் நன்றாகப் படிப்பவன். தினமும் தவறாது அன்றன்றைய பாடங்களைப் படித்து விடுபவன். ஹாஸ்டலில் இருந்தான். ஆனால் அவ்வாறு படிப்பது விடியற்காலை 3 மணியிலிருந்துதான். நாள் முழுக்க ஊர் சுற்றுவான். தான் ஒன்றுமே படிப்பதில்லை என்றெல்லாம் ஃபிலிம் காட்டுவான். அவன் சொல்வதை அப்படியே நம்பி சில அசடுகள் அவனுடன் ஊரை சுற்றும். இரவு 10 மணி வரை கொட்டம் அடித்து விட்டு படுக்கப் போய் விடுவான். அசடுகளும் அவ்வாறே செய்யும்.

ஆனால் விடியற்காலை 3 மணிக்கு ஃபிரெஷாக எழுந்து படித்து விடுவான். அது தெரியாத மற்ற அசடுகள் காலை 7 மணி வரை தூங்கும். கடைசியில் பரீட்சையில் இவன் எல்லா சப்ஜெக்டுகளையும் க்ளியர் செய்து போய்க் கொண்டே இருப்பான். அசடுகள் கம்பார்ட்மெண்டுகள் வாங்கும். இவன் ஒரு உதாரணமே. ஆனால் வாழ்க்கையில் இவனைப் போல பலர் உண்டு. தாங்கள் நேரத்தை வீணாக்குவதுபோல நடிப்பார்கள். எனக்கு எப்போதுமே இவர்களின் மோட்டிவேஷன் புரிந்ததேயில்லை. நல்ல வேளையாக நான் ஹாஸ்டலில் இருந்ததில்லை. இவனிடம் நான் மாட்டிக் கொள்ளவில்லை. இவனை பற்றி நான் என் தந்தையிடம் பேசினேன். அப்போது என் ஆச்சரியம் எல்லாமே அவன் எப்படி ஊர் சுற்றினாலும் அவ்வாறு எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்றான் என்பதுதான். ஆனால் நான் அவனை வர்ணித்ததுமே என் தந்தை கூறினார், அவன் நடிக்கிறான் என்று. ஏனெனில் அவர் படிக்கும்போது கூட அவருடன் ஒருவன் இதே குணநலன்களுடன் இருந்தானாம். அப்புறம் விசாரித்ததில் என் தந்தை கூறியது போலத்தான் எனது கிளாஸ்மேட்டும் நடந்து கொள்கிறான் என்று தெரிய வந்தது.

அப்படிப்பட்டவர்களை நிச்சயம் தவிர்க்கவும். அதிலும் இப்போதெல்லாம் டீம் செயல்பாடுகள் அதிகம். இந்த குணாதிசியம் உள்ளவர்கள் தாங்கள் முன்னுக்கு வந்தால் போதாது, மற்றவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதற்காகக் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். தங்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் காலில் விழுவார்கள், காரியம் முடிந்ததும் காலை வாருவார்கள்.

ஒரு பிரசித்தி பெற்ற அமெரிக்க பதிப்பாளர் ஒரு சமயம் கூறினார், "வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க நீங்கள் வெற்றி பெற்றால் மட்டும் போதது, உங்கள் நண்பர்கள் அதே சமயம் தோற்கவும் வேண்டும்" என்று.

அரசியல்வாதிகள் பலரும் இவ்வாறுதான் செயல்படுவார்கள்.

"தமிழ்வழிக்கல்வி எல்லோருக்கும் விழுந்து விழுந்து சிபாரிசு,
ஆனால் ஆங்கில மீடிய கல்வியில்தான் அவர்தம் வாரிசு"

என்ற ரேஞ்சில் செயல்படுவார்கள். அவர்களை பற்றி ஏற்கனவே வேணமட்டும் எழுதியாகி விட்டதால், இங்கு அவர்களை பற்றி அதிகமாகக் குறிப்பிடமாட்டேன்.

ஆனால் வேறு சில பதிவர்களை பார்க்கிறேன். உலகமயமாக்கலை எதிர்ப்பார்கள் ஆக்கிரோஷமாக. ஆனால் கூர்ந்து பார்த்தால், அப்பதிவுகளையும் அவர்கள் அதே உலகமயமாக்கல் கொள்கையால் உண்டான வேலைகளில் இருந்து கொண்டே வேலை நேரத்தில் போடுவார்களாக இருக்கும். அமெரிக்காவைத் திட்டுவார்கள், ஆனால் அங்கு வேலை செய்ய வாய்ப்பு வந்தால் அமெரிக்க தூதரக வாசலில் தேவுடு காப்பவர்களில் அவர்களே முதன்மையாக இருப்பார்கள்.

அது சரி, அது அவர்கள் பிரச்சினை, உமக்கென்ன வந்தது என்று கேட்பவர்களுக்கு எனது பதில்:

இப்பதிவு அவர்களைக் குறைகூறி அல்ல. அவர்கள் அப்படித்தான். ஆனால் அதே சமயம் அவர்கள் பதிவுகளை மற்றவர்கள் ஜாக்கிரதையாகவே அவதானிக்க வேண்டும் என்றெடுத்துரைப்பதற்காகவே. ஏனெனில் அவர்களது அறிவுறைகளை அவர்களே நம்புவதில்லை.

இருக்கட்டும், நான் கூற நினைப்பது என்ன?

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/05/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள் - 2

நான் எனது இந்தப் பதிவை பல மாதங்களாகவே முன்வரைவாக வைத்திருந்தேன். அதை எப்படி வெளியிடுவது என்பதில் சிறு குழப்பம்.

பிறகு அந்த இடுகையை இட்டதும்தான் புரிந்தது, இது சம்பந்தமாகப் பலரும் பலவிதமாக யோசித்து வந்திருக்கிறார்கள் என்று. நான் அதில் கூறியது மாதிரி நடந்து கொள்வது சுயநலமாகக் கருதப்படுமோ என்று சிலர் கேள்வி எழுப்பினர். அவ்வாறு எழும் கேள்விகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இப்பதிவு.

இந்த உலகமே தன்னலத்தில்தான் இயங்குகிறது என்று எனது பிரெஞ்சு பேராசிரியர் லாற்டே கூறுவார். தாயின் அன்புகூட அதிலிருந்து தப்பவில்லை என்றும் அவர் கூறினார். அதுவும் ஒரு பார்வை கோணமே. அது பற்றிப் பேசவே இப்பதிவு.

தாழ்வு மனப்பான்மையில் இருப்பவருக்கு உதவுவது நமது கடமையில்லையா என்று ஒருவர் கேட்டார். நான் சுருக்கமாக அது என் வேலையில்லை என்று கூறி விட்டேன். சிலருக்கு என் மேல் கோபம் கூட வந்திருக்கும். அதைப் பற்றியும் விவரிக்க வேண்டும். ஆகவே இப்பதிவு.

பழைய ஏற்பாட்டில் "போ, போய் உன் இனத்தைப் பெருக்கிக் கொள்" என்று கடவுள் மனிதனிடம் கூறியதாக வரும். இந்த அறிவுறை எல்லா இனங்களுக்கும் பொருந்தும். மனிதன் தோன்றுவதற்கு பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமேயே பல ஜீவராசிகள் தோன்றின, அழிந்தன. மனிதனே இல்லாமல் போனாலும் இந்த வேலை நடக்கும். ஜீவராசிகள் அழிந்ததற்கு இனப்பெருக்கம் இல்லாததும் ஒரு முக்கியக் காரணமே. அந்த இனப்பெருக்க வேலையில் ஈடுபட்டபோது சம்பந்தப்பட்டவருக்கு இன்பமாக இருந்ததால்தான். அவர்கள் அந்த வேலையிலேயே ஈடுபட்டனர். ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுக்கும்போது அவளுக்கு அது மகிழ்ச்சியை தருவதாலும் அந்த வேலையும் விடாது நடக்கிறது.

ஒரு சிவசங்கரி நாவலில் படித்த ஞாபகம். ஒரு வயதான மூதாட்டி திருமணமே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் இளம் பெண்ணிடம் "ஆம்பளை சுகம்னா என்னன்னு தெரியுமா? பால் கொடுப்பதன் சந்தோஷம் புரியுமா?" என்றெல்லாம் கேள்வி கேட்டிருப்பாள். அதே போல ஆண்களுக்கு பொம்பளைசுகம் இருப்பதால்தானே இனப்பெருக்கமே ஏற்படுகிறது?

ஆக, எல்லாவித வேலைகளுக்கும் ஒரு உந்துதல் சக்தி தேவைப்படுகிறது என்று கூறுவதற்காகத்தான் மேலே சற்று வெளிப்படையாக எழுதினேன்.

சுருக்கமாகக் கூறப் புகுந்தால். தன்னலமே எல்லாவற்றுக்கும் உந்துதல். மற்றவர்களது தன்னலத்தை சரியான பாதையில் செலுத்தி, தனக்கு சாதகமாகக் காரியம் செய்வித்து கொள்வதே புத்திசாலியின் அழகு. அதை மோட்டிவேட் செய்வது என்றும் கூறலாம். வாழு, வாழ விடு என்றும் கூறலாம். என்னிடம் உதவி கேட்பவனுக்கு உதவி செய்வதால் எனக்கும் நலம் ஏற்படும் என்று வெளிப்படையாகத் தெரிந்து விட்டால் நான் ஏன் மறுக்கப் போகிறேன்? என்னை மாதிரித்தானே மற்றவரும்?

ஆனால் இந்த மாசோகிஸ்டு ஆசாமிகள் இருக்கிறார்களே, அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். "என்ன அடிச்சாலும் இவன் அழல்ல, இவன் ரொம்ப நல்லவண்டா" என்பதற்காகவெல்லாம் ஃபீலிங்ஸ் ஆனால் வடிவேலு ரேஞ்சில் உதை வாங்க வேண்டியதுதான். ஆகவே நான் ரொம்ப கெட்டவன் என்று முதலிலேயே டிஸ்கி போட்டு விடுகிறேன். :))))

"என்னத்த, வேல, செஞ்சு" என்று சோம்பித் திரிபவர்கள் வேறு ரகம். அவர்கள் சோம்பலில் இன்பம் காண்பவர்கள். அவர்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் சில தியாக மனப்பான்மை உள்ள மாசோகிஸ்டுகள் உதவிக்கு வருவார்கள் என்று திமிரில் இருப்பவர்கள். அந்தத் திமிரை அடக்கவாவது அவர்கள் அண்மையைத் துறப்பது நலம்.

அதிலும் இந்த தமிழ் சீரியல்கள் செய்யும் அலம்பல்கள் ரொம்பத்தான் ஓவர். உதாரணத்துக்கு இந்தக் "கோலங்கள்" சீரியலையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அபி மாதிரி எரிச்சல் தரும் கேரக்டரை பார்க்கவே இயலாது. அவருக்கு மிக அண்மையில் இரண்டாவதாக வருபவர் தொல்காப்பியன். இதுகள் ரெண்டும் சேர்ந்து அடிக்கும் கூத்தைக் காணவே சகிக்கவில்லை. இவர்கள் பார்வையாளர்களின் மாசோகிஸ்ட் உணர்வுகளுக்கு தீனி போடுகிறார்கள். அவ்வளவே. இதில் சீரியல் தயாரிப்பாளர்கள் நல்ல பணம் பண்ணுகிறார்கள், ஆனால் பார்வையாளர்கள் தங்கள் மன தைரியத்தை இழக்கிறார்கள். "மெட்டி ஒலி" இன்னொரு கொடுமை! "அலைகள்" ஐயையோ.

சீரியல்களை பார்ப்பதை இப்போது நான் விட்டுவிட்டதில் மிக நிம்மதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் நான் பாட்டுக்கு என் அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலைகளை செய்வதில் நல்ல லாபம். ஆனாலும் பக்கத்து அறையிலிருந்து வரும் வசனங்கள் அவ்வப்போது தொந்திரவு செய்கின்றனதான். இதில் என்ன கஷ்டம் என்றால், நான் குறிப்பிட்ட மூன்று சீரியல்களும் மிக நல்ல முறையில் படமாக்கப்பட்டவையே.அதுவே செவ்வாயன்று இரவில் வந்து கொண்டிருந்த மகா கண்றாவியான சென்னை தொலைக்காட்சி நிலைய நாடகங்கள் என்றால் இவ்வளவு பாதிப்புகள் இராது, ஏனெனில் அவற்றைப் பார்க்க அவ்வளவு பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா?

பல படங்களை நான் அவை தேவையற்ற அசட்டு தியாகத்தை வலியுறுத்தியதாலேயே பார்க்க மறுத்தவன். அவற்றைப் பற்றி பின்னொரு முறை பதிவு போடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2006

தவிர்க்க வேண்டிய நபர்கள்

தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களைத் தவிர்க்கவும். இவர்கள் தாங்களும் காரியம் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் அதைரியப்படுத்துவார்கள். ரீடர்ஸ் டைஜஸ்டில் பல ஆண்டுகளுக்கு முன்னால் படித்த ஒரு துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு மழை நிறைந்த இரவில் ஆற்றுப்பாலம் மீது ஒருவன் நிற்கிறான். வாழ்க்கையில் வெறுப்பு அவனுக்கு. அவனைக் காப்பாற்ற ஒருவன் விரைந்து சென்று அவனுடன் பேசிப் பார்க்கிறான். 10 நிமிடம் தீவிரப் பேச்சு. பிறகு இருவருமே அந்த மழை நிறைந்த இரவில் ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

நண்பர் முகம்மது யூனுஸ் அவர்கள் ஒரு அருமையான பதிவு இட்டிருக்கிறார். சிறு சந்தோஷங்களையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளுமாறு கூறுகிறார். இங்கு நான் ஒன்று கூறுவேன். அவ்வாறு சந்தோஷங்களைச் சேமிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்களுடன் நட்பு கொள்வது மிகவும் நல்லது.

அதே சமயம் துக்கங்களாகப் பார்த்து சேமித்து அவற்றை அனுபவிப்பதிலேயே சுகம் காண்பவர்களும் உள்ளனர். அவர்களை masochist என்று அழைப்போம். அவர்களைத் தவிர்க்கவும். இல்லாவிட்டால் ஒரு மழை நிறைந்த இரவில் ஆற்றுப் பாலத்திலிருந்து தண்ணீரில் விழுந்து இறக்கக்கூட நேரிடலாம்.

"நான்" என்னும் படத்தில் ஒரு கேரக்டர், "என்னத்தே செஞ்சு, என்னத்தே சாதிச்சு" என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் அந்த பாத்திரத்தில் நடித்தவர் என்னத்தே கன்னையா என்னும் பெயரில் பிரபலமானனர். அதனால் அவர் பணம் சம்பாதித்தார். அவரைப் பொருத்தவரை அவர் செய்தது அபார நடிப்பு, தவறில்லை. ஆனால் அதையே தமாஷாக நினைத்து நாமும் நிஜ வாழ்வில் பேச முடியுமா? பேசினால் அனர்த்தம் ஆகாதா? ஆனால் பலர் அவ்வாறுதான் உள்ளனர். எடுத்த உடனேயே ஒண்ணும் சரியா நடக்கப் போறதில்லை என்னும் நிலைப்பாடு எடுத்து விடுகின்றனர். அவர்களுடன் நாம் சேருவது தகுமா?

விமரிசகர் சுப்புடு அவர்கள் இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் பர்மாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு இந்தியா வந்தடைந்தவர். அவருடன் ஒரு கும்பலே வந்தது. பலர் வழியிலேயே மாண்டனர். பயங்கரப் பசி. வழியில் வெறும் புதீனா மட்டும் கிடைத்தது. அப்போது அவர்களில் ஒருவர் "ஏய், எல்லோரும் சாகப் போறோம் இப்ப" என்று சவுண்டுவிட, சுப்புடு அவரைப் பொளேரென்று செவுளில் அறைந்தார். பிறகுதான் அந்த மனிதர் அடங்கினார். என்ன ஆயிற்று, எப்படியோ இந்தியா வந்து சேர்ந்தனர் கணிசமான நபர்கள். அவர் அவ்வாறு வந்ததற்காக சுமார் 30 ஆண்டுகள் கழித்து பல சங்கீத வித்வான்களும், நடனமணிகளும் வருத்தப்படப் போவது இப்பதிவுக்கு சம்பந்தமில்லாததால் அது பற்றிப் பேச வேண்டாம்.

இப்போது இஸ்ரேல் விஷயத்துக்கு வருவோம் (அதானே, டோண்டு ராகவனாவது இஸ்ரேலைப் பத்திப் புகழ்ந்து பேசாமல் இருப்பதாவது என்று யாரும் டென்ஷன் அடையவேண்டாம், ஏனெனில் டோண்டு ராகவன் அதற்காகவெல்லாம் இஸ்ரேல் பற்றி பேசாது விட்டு விடுவான் என எண்ணாதீர்கள்.)

வருடம் 1967. இஸ்ரேலை சுற்றிலும் அதன் எதிரிகள் வியூகம் அணிவகுத்து நிற்கின்றனர். உலக யூதர்களுக்குக் கலக்கம். தத்தம் நாட்டில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்குச் சென்று தாங்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக சண்டையிடத் தயார் என்று கூறினர். "நம்மில் 60 லட்சம் பேரை ஏற்கனவே இழந்தோம், இப்போது இஸ்ரேல் அழிவதைப் பார்ப்பதைவிட சண்டையிட்டு மடிவதே மேல் என வந்துள்ளோம்" என அவர்கள் கூற, தூதரக அதிகாரிகள் "சாவதற்கு வேறு ஆளைப் பாருங்கள், நாங்கள் வாழப் பிறந்தவர்கள்" என்று மன உறுதியுடன் கூறினர். அவ்வாறே செய்தும் காட்டினர். நான் பலமுறை பல இடங்களில் கூறியபடி பைபிள் பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல இப்போர். அதுவரை யூத இனத்தையே கோழைகளாக 2000 ஆண்டுகளுக்கு சித்தரித்து வந்த எதிரி இனத்தவர்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டனர்.

அப்படிப்பட்ட மனிதர்களுடன் நட்பு கொள்வதுதான் நலம் தரும்.

மறுபடியும் யூனுஸின் பதிவுக்கே வருகிறேன். எனது சந்தோஷங்களைப் பட்டியலிட ஆசைப்படுகிறேன்.

பல சந்தோஷங்கள். அருமையான தாய் தந்தையர். காதல் மனைவி. அன்பான மகள். நல்ல இஞ்சினியரிங் மற்றும் மொழி பெயர்ப்பு அனுபவங்கள். நான் சந்தித்த அருமையான மனிதர்கள் - பள்ளி, கல்லூரி நண்பர்கள், மேக்ஸ் ம்யுல்லர் பவன் தேசிகன், அல்லியான்ஸ் பிரான்ஸேய்ஸின் சாரதா லாற்டே, ஐ.டி.பி.எல். பொது மேலாளர் ஜலானி, தமிழ்மண இணைய நண்பர்கள் - கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் எனக்கு இன்னல் வந்தபோது ஆதரவு தெரிவித்தவர்கள், வலைப்பூவில் நான் இது வரை இட்ட முன்னூறுக்கும் அதிக தமிழ் இடுகைகள், அவற்றால் எனது தமிழில் மேம்பாடு, 56 வயதில் முதன்முறையாக கணினியுடன் சம்பந்தம் ஏற்பட்டு அதை கையாளுவதில் நான் பெற்ற வெற்றிகள், அவற்றால் வந்த பல மொழிபெயர்ப்பு வேலைகள் ... எதைச் சொல்ல, எதை விட? வாழ்க்கை இன்பமயமானது.

நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே மாறுகிறீர்கள். வெற்றியடைவதைப் பற்றியே நினையுங்கள். அவ்வாறு நினைப்பவர்களுடன் சேருங்கள். தோல்வி பயத்தில் இருப்பவரது அண்மையை விட்டு நீங்குங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது