8/30/2008

கங்கம்மாவின் கதை

"இல்லாத ஆணையைக் காட்டி ஏமாற்றிய அதிகாரிகள்" என்னும் தலைப்பில் இன்று விற்பனைக்கு வந்த குமுதம் ரிப்போர்டரில் (04.09.2008 தேதியிட்ட இதழ்) ஒரு ரிப்போர்ட் வந்துள்ளது. அது சுருக்கமாக பின்வருமாறு:

17 ஆண்டுகளுக்கு முன்பாக ரத்து செய்யப்பட்டது ஒரு சட்டம். அதை ரத்தானதை மறைத்த உப்புத்துறை அதிகாரிகள் உப்பு வியாபாரிகளிடம் அதை வைத்தே கெடுபிடி செய்து வைத்துள்ளனர். உப்பு ஏற்றுமதியால் நாட்டுக்கு கணிசமான அன்னியச் செலாவணி கிடைக்கிறது. ஏற்றுமதி செய்யும் முன்னால் உப்புத்துறை அதிகாரிகளிடம் தரச்சான்றிதழ் பெற வேண்டும் என 1972-ல் வந்த ஆணை கூறியது. அதைத் தருவதற்கு உப்புத்துறையால் நடத்தப்படும் பரிசோதனைச் சாலைகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய உப்பை அனுப்ப வேண்டும். அவர்கள் தரச்சான்றிதழ் தருவார்கள். வழக்கம்போல மாமூல் தந்தால் உடனே கிடைக்கும் இல்லாவிட்டால் உற்பத்தியாளருக்கு சங்குதான்.

ஆனால் 1991-ல் இந்தச் சான்றிதழுக்கான அவசியம் நீக்கப்பட்டது. இதை அப்படியே மறைத்து விட்டனர் உப்புத்துறை அதிகாரிகள். ஆக அன்றிலிருந்து 17 ஆண்டுகளுக்கு இல்லாத ஒரு சட்டத்திற்காக செலவு செய்ய வைக்கப்பட்டுள்ளனர் உப்பு வியாபாரிகள். இப்போது எதேச்சையாக விஷயம் வெளிப்பட உப்பு வியாபாரிகள் கோப நிலையில் உள்ளனர். உப்புத்துறை அதிகாரிகள் உப்புசப்பற்ற பதில்களையே தருகின்றனர்.

எனது பெரியப்பாவின் மகன் அம்பி ராகவன் டிஃபன்ஸ் அக்கௌண்ட்ஸ் பூனாவில் வேலை செய்த போது தொழிற்சங்கத்தில் செயலாளர். எழுபதுகளில் அவன் அங்கு இருந்தான். 1962 சீன ஆக்கிரமிப்பின்போது அவசரநிலை முதலில் ஏற்பட்டது. அத்துறையின் ஊழியர்களது வேலை நேரம் அரைமணி அரசு ஆணை ஒன்றின்மூலம் அதிகரிக்கப்பட்டது. அந்த ஆணை அடுத்த இரண்டாண்டுகளில் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை அப்படியே மூடி மறைத்தனர். பழைய ஆணைகளை புரட்டி பார்த்துக் கொண்டிருந்த அம்பி ராகவன் எதேச்சையாக இதை கவனித்தான். உடனே பிறந்தது பிரச்சினை. கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அதிக வேலைநேர அட்டவனை உடனடியாக வாபஸ் பெறப்பட்டது. "அது போதாது" என்றான் அம்பி. அவ்வாறு வேலை செய்த ஊழியர்கள் ஓவர்டைம் பெற வேண்டும் என்று கொடி உயர்த்தினான். அதிகாரிகளுக்கு எரிச்சல் இரண்டு காரணங்களால். முதல் காரணம் அவர்களும் அதே அளவு அதிக நேரம் வேலை செய்திருந்தாலும் அந்த ஓவர்டைம் அவர்களுக்கு கிடைக்காது. இரண்டாவது பணச்செலவு. அத்தனை பேருக்கு ஓவர்டைம் போட்டால் கணிசமான தொகை செலவாகும். அதை எப்படி சமாளிப்பது? எந்த அதிகாரிகள் பொறுப்பு என்று பார்க்க வேண்டும். அவர்கள் சிலர் ஓய்வு பெற்றுவிட்டனர், சிலர் ஓய்வு பெறும் நிலையில் இருந்தனர். அம்பி ஆனால் உறுதியாக இருந்தான். தேவையானால் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பென்ஷனை நிறுத்தலாம் என்றும் ஆலோசனை சொன்னான். சில நாட்கள் மண்டைகாய்ச்சலுக்குக்கு பின்னால் ஒருவழியாக பூசிமெழுகினார்கள் என்று வைத்து கொள்ளலாம்.

The Front Page என்ற தலைப்பில் 1974-ல் ஒரு படம் வந்தது. தூக்குதண்டனைக் கைதி ஒருவனுக்கு கடைசி நேர மன்னிப்புவந்தது. அதை சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி அப்படியே மறைத்து விட்டார். நல்ல வேளையாக கதாநாயகன் வால்டர் மாத்தோ அதை கண்டுபிடித்து அவனைக் காப்பாற்றுகிறார்.

இதையெல்லாம் பார்த்தால் எனக்கு கங்கம்மா என்னும் பெண் பற்றி நான் படித்தது நினைவுக்கு வருகிறது. அவர் கல்கத்தாவில் சிவப்பு விளக்கு பகுதியில் செயல்பட்டு வந்த பாலியல் தொழிலாளி. ஒரு நாள் ஒரு புதியமுகம் அங்கு தட்டுப்பட்டது. பிம்புகள் அவனுக்கு நல்ல பெண்களைக் காட்டுவதாகக் கூறி சூழ்ந்து கொண்டனர். அவனோ இரண்டாம் தெரு, 15-ஆம் நம்பரில் இருக்கும் கங்கம்மாதான் வேண்டும் எனக் கூறிவிட்டான். கங்கம்மாவிடம் அவனை அழைத்து சென்றனர். அவன் கங்கம்மாவிடம் ஒரு இரவுக்கு 500 ரூபாய் என ரேட் பேசி 4 இரவுகள் வந்து போனான். பணத்தை அவ்வபோது செட்டிலும் செய்தான். நான்காம் நாள் இரவு கங்கம்மா அவனிடம் ஊர் பேர் எல்லாம் விசாரிக்க அவன் தான் பம்பாயில் கிராண்ட்ரோட் பகுதியில் வசிப்பதாகக் கூறினான். "அடேடே அங்குதான் என் அக்கா சீதம்மா இருக்கிறாள், அவளைத் தெரியுமா"? எனக் கேட்க அவன் "நன்றாகத் தெரியும். நான் கல்கத்தா போகப்போகிறேன் என்பதை அறிந்த சீதம்மா உன்னிடம் த்ருவதற்காக என்னிடம் 2000 ரூபாய் கொடுத்து விட்டாள். அதைத்தான் நான் உனக்கு இப்போது கொடுத்து முடித்தேன்" என்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/29/2008

டோண்டு பதில்கள் 29.08.2008

வால்பையன்:
1. மத்தியில் காங்கிரஸ் வலுவிழந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் எம்மாதிரியான முயற்சிகள் பா.ஜா.க.விற்கு பயனளிக்கும் என்று உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்?
பா.ஜ.க.விற்கு நல்ல சான்ஸ் மத்தியில். அதன் ஆட்களாக ஏதேனும் சொதப்பாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களுக்கு எப்போதுமே வலுவான நிலை கிடையாது. அ.தி.மு.க. கொடுத்தாலும் அவமானம் செய்து ஏதோ ஐந்து சீட்டுகள் தரலாம். திருநாவுக்கரசரை அமுக்கப் பார்ப்பார் ஜெ. நிலைமை கஷ்டம்தான். என்னைக் கேட்டால் அந்த ஐந்து இடங்களையும் தானே தேர்ந்தெடுத்து தனியாக நிற்பதுதான் பலன் தரும். உடனடி பலன் கிட்டாவிட்டாலும் பரவாயில்லை. கட்சியை வளர்க்க வேண்டியதுதான். 1984 தேர்தலி இரண்டு லோக்சபா சீட்டுகள்தான் அதற்கு கிடைத்தன என்று ஞாபகம். அதிலிருந்து உழைத்து முன்னேறவில்லையா? இம்மாதிரி திமுக மாற்றி அதிமுக என தமிழகத்தில் குதிரை ஏறுவது காங்கிரஸ் பாஜக இரண்டுக்குமே நல்லதல்ல.
(பின்குறிப்பு: சாதாரணமாக நான் கேள்விகள் பதிவு வரும்போதே அடுத்த வாரத்துக்கான பதிவின் வரைவை போட்டு வைத்து. கேள்விகள் வரவர அவற்றை வரைவில் ஏற்றிவிடுவேன். இம்முறை விட்டு போயிற்று. ஒரு கேள்வியை மிஸ் செய்து விட்டேன் எனத் தெரியும். தேடியும் பார்த்தேன். அனுப்பியவர் பெயரை மறந்ததால் சட்டென்று கண்டுபிடிக்க இயலவில்லை. இப்போது உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் கூகள் ஆர்கைவ்சில் உங்கள் பெயரையிட்டு ஒரு நொடியில் கண்டு பிடித்து விட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.)


மொக்கைசாமி:
1. ஏங்க இப்பல்லாம் உங்க பதிவுல மொக்கை போட்டு பின்னூட்டம் வர்ரதே இல்லை?
பதில்: அதாவது நான் மொக்கையாகப் பதிவு போட்டு அதற்கு பின்னூட்டம் வரவில்லை என்கிறீர்களா அல்லது நான் சாதாரணமாக பதிவு போட்டு அதுக்கு மொக்கையாக பின்னூட்டம் வரவில்லை என்கிறீர்களா அல்லது நானும் மொக்கையாக பதிவு போட்டு பின்னூட்டமும் மொக்கையாக வரவில்லை என்கிறீர்களா என்பதை தெளிவான மொக்கையுடன் கூறினால் நலம்.

அனானி அடுத்தவாரக் கேள்வி என்னும் பெயரில்:
1. (ஒரிஸா) கலிங்கத்தில் மதக்கலவரம் வரக்காரணம் என்ன?
பதில்: இதற்கு காரணம் மதம் என்பதை விட இட ஒதுக்கீடு என்றுதான் கூற வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சாதிக்கொடுமைகள் இந்து மதத்தில் அதிகம் என கிறித்துவ மதத்துக்கு சென்றால் அங்கும் அது தலைவிரித்தாடுகிறது. பாவம் மதம் மாறுபவர்கள். இந்த அழகில் சைவமும் வைணவமும் தோமா கிறித்துவமே என்னும் வெறுப்பின் அடிப்படையில் செய்யப்படும் பிரசாரங்கள் வேறு. இந்தியாவுக்கு வந்த போப் பாண்டவர் ஆன்மாக்களை அறுவடை செய்ய வந்தோம் என்று வெளிப்படையாகவே கூறினார். ஏதோ திட்டங்களுடனேயே காய்கள் நகர்த்தப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகள் இல்லாமல் இருக்குமா? அந்த எதிர்வினைகள் சரியா தவறா என்பதைப் பற்றி நான் பேசவில்லை. அவை இருக்கின்றன அவ்வளவுதான்.

2. காஷ்மீரை இந்தியா விட்டுக்கொடுக்கவேண்டும் என்று சொல்லும் அறிவுசீவிகள் பற்றி?
பதில்: ஜம்மு, லடாக் நம்மிடம் வைத்து கொண்டு காஷ்மீரை விட்டு கொடுத்தால் பல ஆயிர கோடிக்கணக்கான ரூபாய்கள் மிச்சம், மன அமைதியும் கிட்டும் என்று நினைப்பவர்கள் அவ்வாறு கூறுகின்றனர். 1948-ல் பட்டேல் கிட்டத்தட்ட பாகிஸ்தானை காஷ்மீரத்திலிருந்து விரட்டவிருந்தபோது நேரு அவர்கள் ஆர்வக்கோளாறில் சொதப்பியதன் பலனை நாம் இன்னும் அனுபவிக்கிறோம்.

3. சமீபத்தில் பார்த்த ஆங்கிலப்படம் (தமிழ் டப்பிங்கும் சேர்த்து).
பதில்: கடைசியாக நான் பார்த்த ஆங்கிலப்படம் "ஹாரி பாட்டரும் சிரஞ்சீவிக் கல்லும்" (முதல் புத்தகம்). ஸ்னேப், ஹாரி, ஹெர்மியோன் ஆகியவர் நல்ல தமிழ் பேசினர். டப்பிங் அமர்க்களம் எனக்கூறுவது மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன்.

டி. ராமசந்திர பிரபு:
1. அது என்ன நவீன குசேலன் கதை?
சொன்னால் போயிற்று.
கதையின் முடிச்சை மட்டும் எடுத்து அதை தற்காலத்துக்கு கொண்டு வந்துள்ளார் சுஜாதா அவர்கள். கல்கியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்யமர் என்னும் வரிசையில் வந்த பல கதைகளில் அதுவும் ஒன்று என ஞாபகம். கதை பற்றி சில வரிகள் எனது நினைவிலிருந்து.
கதாநாயகனின் பெயர் சுதாமா (குசேலனுக்கு இன்னொரு பெயர்). அவர் நண்பன் கிருஷ்ணன். பெரிய குரூப் கம்பெனியின் அதிபர். இருவரும் பள்ளியில் சிறு வகுப்பில் தோழர்கள். சுதாமனுக்கு கஷ்ட ஜீவனம். நிறைய குழந்தைகள். அதற்காக 27 குழந்தைகள் என்றெல்லாம் சொல்ல முடியாது. சுதாமா கிருஷ்ணனை பார்க்க வருகிறார். கிருஷ்ணரும் "ஹாய் எப்படியிருக்கே" என்ற ரேஞ்சில் கேள்வி எல்லாம் கேட்கிறார். தன் மனைவி ருக்மிணியிடம் சுதாமாவை அறிமுகப்படுத்துகிறார். இப்போது கிருஷ்ணர் பழைய ஞாபகங்களை தன் நண்பனுடன் பகிர்ந்து கொள்கிறார். ருக்மிணியும் கூடவே கமெண்ட் எல்லாம் செய்கிறாள். "டேய் சுதாமா, நம்ம ஸ்கூல் எதிரில் ரவிக்கை போடாத ஒரு அம்மணி இலந்தப்பழம் விற்பாளே ஞாபகம் இருக்கா"? என்பார் கிருஷ்ணர். "ரவிக்கை போட்டாமல் இருந்தவர்களைப் பற்றி எல்லாம் நல்லா ஞாபகம் வச்சிப்பீங்களே" என்று நொடிப்பாள் ருக்மிணி. "நம்மளோட மூணாம் கிளாஸ் படித்த பிரதீபா ஞாபகம் இருக்கா" என கிருஷ்ணர் கேட்பார். "ரொம்பப் பழக்கமோ அப்பெண்ணோட? Show me yours, I'll show you mine" எல்லாம் இருந்ததா? என்பது ருக்மிணியின் அடுத்த கேள்வி.
எல்லாம் முடிந்து கடைசியில் சுதாமாவுக்கு தனது குரூப் கம்பெனி ஒன்றில் பெர்சனல் மேனேஜராக போஸ்டிங் தருகிறார். என்ன, சுதாமாவின் முதல் பெண் கிருஷ்ணனிடம் சில நாட்கள் இதற்காக இருக்க வேண்டியிருந்தது. கதை முடிந்தது.
மனதுக்கு கஷ்டம் தந்த முடிவு, ஆயினும் கற்பனை கலியுக உண்மைக்கு சமீபத்தில் இருந்தது. குசேலன் கதையைப் பற்றி பெரியார் கூறும்போது 27 குழந்தையுள்ளவனுக்கு கண்டிப்பாக 20 வயதுக்கு மேல் பிள்ளைகள் குறைந்த பட்சம் 2 அல்லது 3 இருந்திருக்க வேண்டும். அவர்கள் என்ன கழட்டினார்கள் என்று கேட்பார். எனக்கும்கூட 27 குழந்தைகள் டூ மச் ஆகத்தான் தோன்றுகிறது.
இந்த மாதிரி சந்தேகங்கள் பல இடங்களில் வருகின்றன. உதாரணத்துக்கு ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் அந்த ஞானப்பழத்தைப் புசிக்காது சொர்க்கத்திலேயே இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைக்கிறீர்கள்?


நக்கீரன் பாண்டியன்:
1. பல முனைத் தாக்குதலில் சிக்கியுள்ளதாக பத்திரிகைகள் (புலான்ய்வு) கலைஞர் அவர்களை பற்றிய எழுதும் கதைகளில் உண்மையின் அளவு எவ்வளவு? சமாளிப்பாரா?
பதில்: பிணங்கள் அழுகும் இடத்தில் கழுகுகள் வட்டமிடுவதுபோல பணம் இருக்கும் இடத்தில் உறவுக்கழுகள் வட்டமிடும். இதுவரை கலைஞர் வெளிப்பகைகளை சமாளித்து வந்துள்ளார். கட்சியையும் குடும்பத்தையும் பிரிக்கத் தெரியாது அவர் செய்த காரியங்கள் அவருக்கே வினையாக வந்துள்ளன. பதவி பணம் எல்லாம் இவர் மூலமாக வினியோகம் ஆகும் நிலையில் அவற்றுக்காக அவரது உறவினர்கள் போட்டி போடுகின்றனர். அதுதான் கசப்பான உண்மை. ஸ்டாலின் அழகிரியாவது அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு தத்தம் வட்டத்தைத் தேடிக்கொண்டுள்ளனர். மற்ற உறவினர்கள் - மாறன் சகோதரர்கள் உட்பட - எல்லோரும் கலைஞரின் உறவுக்காரர்கள் என்னும் நிலையில்தானே பதவி பெற்றனர்? அது மற்ற உறவினர்கள் கண்ணை உறுத்தாதா என்ன? உள்பகையை சமாளிப்பது கஷ்டம்தான். அதற்கு முதலில் மன உறுதி வேண்டும். கலைஞரிடம் அது இருக்கும் என நம்புவோம்.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/25/2008

நச்சுப் பொய்கை யட்சனின் கேள்விகளும் யுதிஷ்டிரர் அளித்த மறுமொழிகளும்

12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.

நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.

மகாபாரதத்தில் இந்தப் பகுதி மிக பிரசித்தம். யட்சனின் கேள்விகளுக்கு தருமர் அளித்த விடைகளில் வெளிப்படையாக ஒரு அர்த்தம் தெரியும். ஆனால் தத்துவார்த்த முறையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அப்பதில்களில் புதைந்து கிடக்கும் பொருளும் தெரியும். ஆனால் அதை அறிய மிகுந்த பாண்டித்யம் தேவைப்படும். தன் போன்றவர்களுக்கு அது கிடையாது என சோ அவர்கள் தான் எழுதியுள்ள "மகாபாரதம் பேசுகிறது" என்னும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை படித்து இப்பதிவைப் போடும் டோண்டு ராகவன் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்? ஆகவே நேரடி விளக்கங்கள் மட்டுமே இங்கே.

யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.

யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.

யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.

யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.

யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.

யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.

யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.

யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.

யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.

யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.

யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.

யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.

யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.

யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.

யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.

யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.

யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.

யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.

யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.

யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை

யட்சன்: எதை அடக்குவதன் மூலம் துயரத்தைத் தவிர்க்க முடியும்?
தருமர்: மனதை அடக்கினால் துயரம் வராது.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.

யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.

யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.

யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.

யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.

யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.

யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.

யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.

யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.

யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்

யட்சன்: எது சிறந்த ஸ்நானம்?
தருமர்: மனதில் உள்ள அழுக்கைப் போக்குவதே உண்மையான ஸ்நானம்.

யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.

யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.

யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.

யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.

யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.

யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.

யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.

யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.

யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.

யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.

யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.

யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.

யட்சன்: பின்பற்ற வேண்டிய வழி எது?
தருமர்: வேதங்கள், ஸ்மிருதிகளைக் கற்றறிந்து பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டு கொள்ளலாம் என்றால், அது அவ்வளவு எளிதாக முடிகிற முயற்சி அல்ல. ஆழ்ந்து கவனிக்காமல் மேலோட்டமாக இவற்றை அறிபவனுக்கு, அவை முரண்பட்டவை போலவே தெரியும். ரிஷிகளின் கருத்துப்படி நடக்கலாம் என்று நினைத்தாலோ, அவர்கள் பற்பல வகைகளில் இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள். ஆக, தர்மத்தை அறிவது சிக்கலாகவே இருந்து வருகிறது. ஆகையால் நமது பெரியோர்கள் சென்ற வழியே நாம் பின்பற்ற வேண்டிய வழி.

யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.

யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.

இப்படி தெருமபுத்திரர் கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.

தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.

தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.

தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.

மகாபாரதத்தின் வனபர்ர்வத்தின் இக்கடைசி நிகழ்ச்சிகளைப் பற்றி படிப்பவர்களுக்கு நல்ல ஆயுள் கிட்டும் பிறன் பொருளை அபகரிக்கும் அதர்மச் செயல்களில் அவர்தம் மனம் செல்லாது என மகாபாரதம் கூறுகிறது.

நன்றி: சோ அவர்கள் எழுதிய "மகாபாரதம் பேசுகிறது" மற்றும் ராஜாஜி அவர்கள் எழுதிய "வியாசர் விருந்து".

அன்புடன்,
டோண்டு ராகவன்

அப்போ இந்த படத்துக்கான விமரிசனத்துக்கு நாந்தான் ஃபர்ஸ்டா?

உள்ளூர் கேபிள்காரர் உபயத்தில் ஒரு படத்தை வழக்கம்போல நடுவிலிருந்து பார்த்தேன். பரவாயில்லை என்று சொல்லும் ரகம். படத்தின் பெயர் தெரியாது, அதே வழக்கம்போல லக்கிலுக்குக்கு போன் செய்து கேட்டதில் அப்படத்தின் பெயர் "வீராப்பு" என்று கூறினார். ஒரிஜினல் மலையாளப் படம் மிக அருமை என்றும் தமிழ் வெர்ஷனில் மோசமான எடிட்டிங் என்றும் கூறினார். மோசமான எடிட்டிங் என்பதை விட என் மனதுக்கு பட்டது மிகமிக மோசமான கேமிரா பிரிண்ட் என்பதே. பல வசனங்கள் காதில் விழவேயில்லை. மலையாளப் படம் மூன்று ஆண்டுகளுக்கு முன் வந்ததாகவும், பெயர் ஞாபகமில்லை என்றும் அவர் கூறினார். யாராவது அப்படத்தின் பெயர் தெரிஞ்சால் சொல்லுங்கப்பூ.

தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் "வீராப்பு"-க்கு விமரிசனம் எழுதியதாகத் தெரியவில்லை. ஆகவே எனது இப்பதிவு.

வழக்கமான அப்பா பிள்ளைக்கு நடுவில் உள்ள தகவல்பரிமாறலில் குறைபாடுதான். அப்பா கணக்கு வார்த்தியார். பிள்ளையும் கணக்கில் புலியாக வேண்டும் என்ற ஆர்வம். தவறில்லை எனக் கூறினாலும் அதுவே வெறியாகப் போவது நிச்சயம் தவறுதான். ஆர்வக்கோளாறில் பிள்ளையை ரௌடியாக்குவதுதான் நடக்கிறது. அருமையாக சென்றிருக்க வேண்டிய கதையை சொதப்பினாலும் படம் பரவாயில்லை என்று சொல்லும்படிக்கு இருந்தது ஒரிஜினல் கதையின் அழுத்தமான மெசேஜ்தான் என்றால் மிகையாகாது. பிள்ளை மெக்கானிக் வேலையில் நிபுணனாக இருப்பதை அங்கீகரிக்க தயாராக இல்லாமல், கணக்கில் அவன்பெறும் தோல்விகளையே குத்திக் காட்டும் செயல் செய்வது ஒரு தகப்பனுக்கோ ஆசிரியருக்கோ அழகல்ல. தானாக மணி அடிக்கும் பொறியை மகன் செய்தபோது பாராட்டாது உதாசீனப்படுத்தியவரே சில ஆண்டுகள் கழித்து அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க நேரிடும் நிகழ்ச்சி நம்பக் கடினமாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தது.



சுந்தர் சி. காமெடியும் நன்றாகவே செய்கிறார். டில்லி குமார், பிரகாஷ்ராஜ், சுமித்ரா, சந்தோஷி, ஆகியோரும் தத்தம் பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். காமெடியில் நடிகர் விவேக் பட்டையை கிளப்பியிருக்கிறார் என்றாலும் படத்துடன் ஒட்டவில்லை. சாதாரணமாக இம்மாதிரி காமெடி டிராக்குகளை தனியாக எடுத்து படத்துடன் சேர்ப்பது என்பது கலைவாணர் காலத்திலிருந்தே வந்துள்ளது. அவ்வாறு சேர்ப்பதை பிறர் அறியாவண்ணம் செய்வதே சிறப்பு. இப்படத்தில் இது நடக்கவில்லை. லாரி டிரைவராக வரும் சுந்தர்.சி. யிடம் கிளீனர்களாக இருக்கும் சந்தானமும், பாவா லட்சுமணனும் காமெடிக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.



வில்லன் இன்ஸ்பெக்டர்கள், சுந்தர் சி. க்கு உதவி செய்யும் ஹெட் கான்ஸ்டபிளாக நடிப்பவர்களது பெயர் தெரியவில்லை. அதனால் என்ன, நன்றாகவே செய்திருந்தனர். கடைசியில் வரும் பொன்னம்பலமும் தூள் கிளப்புகிறார். சதிக்கு எதிர் சதி என சுந்தர் செயல்பட்டு எதிரி கேம்பில் புயல் விளைவிப்பது குழந்தைத்தனமாக இருந்தாலும் மனதுக்கு நிறைவாகவே இருந்தது.

போன ஆண்டு இப்படம் வந்ததாம். ஆனால் நான் கேள்விப்படவே இல்லை. இணையத்திலும் இது பற்றி செய்திகள் இல்லை என்றே கூறிவிடலாம்.

ஆக, அப்போ இந்த படத்துக்கான விமரிசனத்துக்கு நாந்தான் ஃபர்ஸ்டா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
முரளி மனோஹரின் குறிப்பு: "அடேய் டோண்டு! வீராப்பு என்று எழுதி கூகளில் தேடாமல் வீறாப்பு எனத் தவறாக தேடுபெட்டியில் தட்டச்சினால் எப்படியடா உருப்படும்? ஏதோ வஜ்ரா ஸ்படிகம் என மலையாள வெர்ஷனின் பெயரைச் சொன்னதால், ஓசைப்படாது நீ தவறை திருத்த முடிந்தது. இப்போது கூகளில் பார்த்தால் வீராப்பு பற்றி வலைப்பதிவுகள் வந்துள்ளன. ஆகவே நீ ஃபர்ஸ்ட் அல்ல".
நன்றி முரளி மனோஹர்.
படங்களுக்கு நன்றி: http://tamil.cinesouth.com/masala/hotnews/new/22012007-4.shtml

8/22/2008

டோண்டு பதில்கள் 22.08.2008

பட்டாம்பூச்சி அருண் (Arun as Butterfly):
1. விகடன் சில தினங்களுக்கு முன் இலங்கை பிரச்சனை தொடர்பாக நடத்திய கருத்து கணிப்பை பற்றிய தங்கள் கருத்து எண்ண? (படிக்கவில்லை என்று எஸ்கேப் ஆகவேண்டாம்:) )
பதில்: நிஜமாகவே நான் அதை படிக்கவில்லை. எனது கோரிக்கையை ஏற்று விகடன் சர்வேயினை பி.டி.எஃப் கோப்பாக அனுப்பியதற்கு நன்றி. உண்மை கூறப்போனால் ஈழப்பிரச்சினை விஷயம் என்று பத்திரிகைகளில் வந்தாலே நான் அவற்றைத் தாண்டிப்போவதுதான் வழக்கம். அலுத்துவிட்டது. தமிழீழத்தவர் துயரத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இங்கு புலிகள் ஆதரவு நிலை எடுப்பவர்கள் செய்யும் அலம்பல்கள்தான் தாங்க முடிவதில்லை. எனது நிலை இதுதான். தமிழ் ஈழம் வருகிறதோ இல்லையோ, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கும் புலிகள் ஆட்சிக்கு வருதல் ஈழத்தமிழருக்கும் நல்லதல்ல, இந்தியாவுக்கும் நல்லதல்ல. விகடன் எடுத்த சர்வேயில் ஆன்லைனில் வாக்களித்தவர் எத்தனை பேர் ஈழத்தமிழர்கள் என்பது பற்றி ஏதேனும் செய்தி இருக்கிறதா எனத் தெரியவில்லை.
"ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா"? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சரி வாதத்துக்கு ராஜிவும் குற்றவாளி என்றால், அவர் தண்டனை அடைந்து விட்டார். பிரபாகரனும் தண்டனை அடைவதுதானே பலரும் விரும்புவது. இதில் என்ன தவறு? நான் ஏற்கனவே பல இடங்களில் குறிப்பிட்டதுபோல பிரபாகரன் தனது ஈகோவுக்காக ராஜீவ் காந்தியினை கொலைசெய்வித்து அதையும் தமிழகத்தில் நடத்தி தமிழகத்துக்கு மாறா களங்கத்தை கொடுத்து சென்றார். வெறுமனே "அது துன்பியல் செயல்" என உளறுவாராம், எல்லோரும் அப்படியே அவரை மன்னித்து விட வேண்டுமாம். ஐ.பி.கே.எஃப். படை வாபஸ் பெறுவதற்காக இந்தியா தங்களுக்கும் இலங்கை அரசுக்கும் வேண்டாத வெளியாள் என்று கூறிய பிரபாகரன் இப்போது ஏன் பதறிப்போய் ஆதரவு பிச்சை எடுக்க வேண்டும் என நான் கேட்கிறேன். "ஐயா உன்னைத் தண்ணீர் தெளித்துவிட்டாயிற்று. இன்னும் இந்திய ஆதரவுக்கு ஏன் தொங்க வேண்டும் என்பதுதான் எனக்கு புரியவில்லை". தானும் தனது பிள்ளைகளும் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க, ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு பெல்ட் பாம் கட்டும் இந்த மகானுபாவன் பிரபாகரன் தலைவனாக இருக்கும்வரை விடுதலைப்புலிகளை யாரும் நம்ப மாட்டார்கள்.

2. தமிழ் நாட்டுக்கு நியாயமாக வர வேண்டிய ரயில்வே திட்டங்கள் தள்ளி போகும் நிலையில்.. அதிக நஷ்டத்தில் ஓடும் பீகார், உபி மாநிலத்தில் வரும் ரயில்வேக்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு போகிறதே..??
பதில்: என்ன செய்வது, அதுதான் நம் தலைவிதி. மத்தியில் இருக்கும் நம்ம மந்திரிகள் இளிச்சவாயர்கள். வடக்கத்திக்காரர்கள் அப்படியில்லை.

3. புது தில்லிக்கு ஒரு நாளைக்கு வேலை தேடி வரும் பீகாரிகள் எண்ணிக்கை 30,000 என்று படித்தேன்.. எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் பீகாரிகள் அதிக அளவில் தில்லியில் குவிவது உண்மைதானே.. பீகார் உபி மாநிலங்களில் இப்படி சீர் கெட்டு போனதற்கு என்ன காரணம்? எப்படி இந்த நிலை மாறும்?
பீஹாரிகள் கடும் உழைப்பாளிகள். வெயில் மழைக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்கு கிராக்கி ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை. அதே சமயம் பீஹாரில் மாஃபியாக்கள் ராஜ்ஜியம் சகிக்கமுடியாத அளவில். என்னதான் செய்வார்கள் அந்த உழைப்பாளிகள்?

4. அணுசக்தி ஒப்பந்தம் எல்லாம் முடிந்து போய் விட்டது.. ஆதாயம் கிடைக்க நமக்கு பல வருடங்கள் ஆகலாம்.!! பொது பணி துறை பொறியாளர் என்ற முறையில் உங்களுக்கு மரபு சாரா எரிசக்தியால் தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு ஏன் அத்துணை முக்கியத்துவம் இல்லை என்று கூற முடியுமா?
இப்போது தொழில்நுட்ப அறிவு இந்தியாவில் இருக்கும் நிலையில் நாம் அணு மின் உற்பத்தியில் செல்ல வேண்டியது இன்னும் வெகுதூரத்தில் உள்ளது. அதற்குத்தான் அணு ஒப்பந்தம். அதை பிடிவாதமாக நிறைவேற்ற முயலும் பிரதமர் பாராட்டுக்குரியவர். அதே சமயம் உடனடி லாபம் என்பது அதிகமில்லை என்பதால், ஒரு சராசரி அரசியல்வாதியின் நிலையையும் புரிந்து கொள்ள முடிகிறது.

5. தில்லி வாழ்க்கை சென்னை வாழ்க்கை எது உங்களுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. விளக்கம் தேவை.
1981-ல் முதன்முதலில் தில்லிக்கு சென்றபோது அவனது மொழிபெயர்ப்பாளர் வேலை ஆரம்பித்து 4 ஆண்டுகள் ஆகியிருந்தன. சென்னையில் அந்த 4 ஆண்டுகளில் சம்பாதித்ததை டில்லியில் ஒரே ஆண்டில் சாதித்தான். அவனது மொழிபெயர்ப்பு வேலைக்கு தீனி அதிகம் போட்டது டில்லி. ஆகவே 1991-ல் சென்னைக்கு மாற்றல் வரும்போல இருந்த நிலையில் குறுக்கே படுத்து அதை ரத்து செய்வித்தான். ஏனெனில் டில்லியைப் போல சென்னையில் அச்சமயம் வாய்ப்புக்கள் லேது. 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றாலும் அங்கேயே மேலும் 8 ஆண்டுகள் இருந்து மொழிபெயர்ப்பாளராக கொழிக்க முடிந்தது. இதற்குள் உலகமயமாக்கம் வந்து விட்டது. இந்தியா முழுக்கவே வாய்ப்புக்கள் வந்தன. அதுவும் இணையத்தின் உபயத்தால் இருக்கும் இடத்துக்கும் வரும் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்ற நிலை வந்தது. 2001-ல் டோண்டு ராகவன் அவனது பாண்டவர் பூமிக்கு வந்தான். வந்த மூன்று ஆண்டுகளிலேயே டில்லியில் 20 ஆண்டுகளாக ஈட்டியதை மிஞ்ச முடிந்தது. இப்போது? மறுபடியும் சென்னைதான் கோலோச்சுகிறது, அவன் மனதில்.

மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்


8/21/2008

அரசு அதிகாரிகள் மக்களை விட புத்திசாலிகளா?

எனது சந்தன வீரப்பனை சுலபமாக தவிர்த்திருக்கலாமோ என்னும் பதிவில் சிலர் இம்மாதிரி பின்னூட்டம் இட்டிருந்தனர்.

"சந்தன மரத்தை வளர்க்கலாம். வெட்டத்தான் அனுமதி தேவை.அதற்கு காரணம் மரம் endangered species ஆக மாறி விடக்கூடாது என்பதுதான்". ஆக, இச்சட்டத்துக்கு அடிப்படை ஒரு நல்ல எண்ணம் என்பதை வாதத்துக்காக வைத்து கொள்வோம். வளர்ப்பவர்கள் எல்லாம் மாங்காய் மடையர்கள், அரசு அதிகாரிகள்தான் புத்திசாலிகள் என்று நினைத்த சோஷலிச காலத்தில் இச்சட்டம் போடப்பட்டுள்ளது. அதை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது. காடுகளில் சந்தன மரங்களை ஒட்டுமொத்தமாக வெட்டி காசு பார்க்கிறார்களே பலர். அதற்கு காட்டிலாகா அதிகாரிகளும்தானே துணை? சந்தன மரங்கள் மிகுதியாக உள்ள ஒட்டுமொத்த காடுகளே அழியும் அபாயம் உள்ளதே. இதைத் தடுக்க வேண்டாமா? நரகத்துக்கு செல்லும் பாதை நல்லெண்ணம் என்னும் கற்களால் வேயப்பட்டுள்ளது என்பதை தெரியாமலா சொன்னார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது டி.ஜி.எஸ்.&டி. என்னும் அமைப்பு நினைவுக்கு வருகிறது. இதுதான் அரசு துறைகளுக்கான பொருள்களை வாங்கும் அமைப்பு. உதாரணத்துக்கு மின்விசிறி வாங்க வேண்டுமானால் இத்துறையிடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும். இவர்கள் பொறுக்கி எடுத்த சில கம்பெனிகளுடன் விலை ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அவர்களுக்கு இவர்கள் ஆர்டர் கொடுப்பார்கள். ஓட்டையோ உடைசலோ அவர்கள் தரும் ஃபேனைத்தான் மொத்தமாக வாங்கி வினியோகம் செய்வார்கள். அத்துறையின் நிர்வாகச் செலவு கட்டுக்கடங்காமல் போனதில் உலகமயமாக்கம் வந்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அதற்கு சாவுமணி அடித்தார்கள். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

அரசு ஒரு துறையில் புகுந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை "The Adventures of Jonathan Gullible: A Free Market Odyssey" (எழுதியது Ken Schoolland) என்னும் புத்தகம் அருமையாக விவரிக்கிறது. சுதந்திரம் என்பது அவரவர் தமக்கு சரி எனத் தோன்றுவதை மற்றவருக்கு பாதிப்பின்றி செய்வது. சொல்ல எளிதாக இருப்பினும் இது மிகவும் கடினமான செயல்பாடு. பலருக்கு இந்த பொறுப்பு பிடிப்பதில்லை. யாராவது வந்து தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். இங்குதான் அரசு நுழ்க்ஷைகிறது. இதைச் செய், இதை செய்யாதே என்று கட்டுப்பாடுகள் விதிக்கிறது. லைசன்ஸ் முறை வந்ததும் இப்படித்தான். ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் குறிப்பிட்ட தொழிலை செய்ய ஒருவருக்கு மட்டும் லைசன்ஸ் தருவது. பலர் ஒரே தொழிலை செய்தால் போட்டி மனப்பான்மை அதிகரிக்குமாம். அது நல்லது இல்லை சோஷலிசத்துக்கு என ஆரம்பகாலங்களில் செய்த முடிவை பிறகு பரிசீலிக்க பலருக்கு நேரம் இல்லாமல் போயிற்று. இந்தியா முழுக்க மூன்றே மூன்று கம்பனிகளின் கார்கள்தான் ஓடின. அவையும் உடனேயே கிடைக்காது. பதிவு செய்து முன்பணம் தர வேண்டும், சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அவை கொடுப்பதுதான் தரம். அதைத்தான் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை. 1991-ல் தங்கத்தையே அடகுவைக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படும்வரை இப்படித்தான் நிலைமை இருந்தது. இப்போது? லைசன்ஸ் இன்னும் இருந்தாலும் அதை தாராளமாக கொடுப்பதால் பலனடைந்தது நுகர்வோர்கள்தானே.

இன்னொரு பாடாவதி சட்டம், வீட்டு வாடகைக் கட்டுப்பாடு. அதனால் விளைந்த அனர்த்தங்கள் அனேகம். இபோது கூட பம்பாயில் பல பழைய குடியிருப்புகளில் வாடகை 30 அல்லது 40 ரூபாய்கள்தான். வீட்டுச் சொந்தக்காரர்கள் பணக்காரர்கள், குடித்தனக்காரர்கள் ஏழைகள் என்ற தட்டையான மனப்போக்கால் எழுந்த சட்டம் அது. என்ன ஆயிற்றென்றால், வீடுகளை கட்டுபவர்கள் அவற்றை பூட்டி வேண்டுமானலும் வைத்தார்களே தவிர யாருக்கும் அவற்றை வாடகைக்கு விடுவதாக இல்லை. இந்த ஒன்றரையணா வாடகையில் மராமத்து யார் பார்ப்பார்களாம். கட்டிடங்கள் இடிந்து விழ ஆரம்பித்துள்ளன. பம்பாயில் அவ்வாறு இடிந்து விழும் கட்டிடங்களை கூர்ந்து கவனித்தால் அங்கிருப்பவர்கள் இந்த ரெண்ட் கண்ட்ரோலின் கீழ் குறைந்த வாடகை தருபவர்கள்தான் என்பது புலனாகும்.

ஆமையும் அமீனாவும் புகுந்த வீடு உருப்படாது என்பதை சற்றே மாற்றி அரசு தொடங்கும் தொழிற்முயற்சிகள் உருப்படாது என்றே கூறிவிடலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/20/2008

சந்தன வீரப்பனை சுலபமாகத் தவிர்த்திருக்கலாமோ!

நண்பர் ஜயகமல் அனுப்பிய் இந்த மின்னஞ்சல் சிந்தனையைத் தூண்டியது. On A Strike... And Veerappan என்னும் தலைப்பில் Sauvik Chakraverti என்னும் பதிவர் எழுதியுள்ளார்.

மேலே குறிப்பிட்டுள்ள இடுகையில் அவர் இருவிஷயங்களைத் தொட்டுள்ளார். முதல் விஷயம் இன்றைய பொதுவேலைநிறுத்தம் பற்றி. அதுவும் மேற்கு வங்கத்தில். அதன் விரும்பாத்தன்மையை பல முறை எடுத்து காட்டியாகி விட்டது. பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்ற கணக்கில் இங்கு அதை மறுபடியும் எடுக்க விரும்பாது தற்காலிகமாக ஓரமாக வைக்கிறேன். அதே பதிவில் வந்த இரண்டாவது விஷயம்தான் நான் இப்பதிவுக்கு எடுத்துக் கொள்ளப் போகும் விஷயம்.

பெங்களூரைப் பசுமையாக்க மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டனவாம். கர்நாடகாவின் வனத்துறையினரின் செய்தி அறிவிப்பு ""A variety of trees including Peepal, Mahogany, Glory of India, Neem and Thespecia were planted at the event." என்று பெருமிதத்துடன் கூறுகிறது. எல்லாம் சரி, ஆனால் அவற்றில் ஏன் சந்தன மரக்கன்றுகள் இல்லை என கேட்பது பதிவர் Sauvik Chakraverti. அவரே அதற்கு விடையும் தருகிறார். ஏனெனில் சந்தன மரங்கள் எல்லாமே அரசுக்கு சொந்தம். உங்கள் தோட்டத்தில் இருப்பினும் அது அரசுக்கே சொந்தம். அதே நிலைதான் தேக்கு மரத்துக்கும். ரோஸ்வுட்டும் விதிவிலக்கல்ல. ஏன்? எனக்கு தெரியவில்லை. ஏதேனும் காரணம் முதலில் எங்காவது இருந்திருக்க வேண்டும். இப்போது அது இருக்கிறதா எனத் தெரியவில்லை. எது எப்படியானாலும் சட்டம் அதைத்தான் சொல்கிறது. அது கழுதையானாலும் மதிக்கப்படவேண்டியதே.

சந்தன மற்றும் தேக்கு மரங்கள் சுதந்திரமாக தனியார் தோப்புகளிலும் வளர்ந்தால் சுனாமி வந்துவிடுமா என்ன? நிறைய வளர்வதால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது அல்லவா? ஒருவேளை அதைத்தான் சுயநலம் பிடித்த குறிப்பிட்ட குழுவினர் விரும்பவில்லையோ. யோசித்து பாருங்கள். கஞ்சாச்செடி விஷயங்களை ஒத்து கொள்ளலாம் ஏனெனில் அவற்றால் பொது மக்கள் உடல்நலனுக்கு கெடுதி ஏற்படும். ஆனால் சந்தனம், தேக்கு, ரோஸ்வுட்?

இம்மாதிரி குருட்டுத்தனமாக கட்டுப்பாடுகள் விதிப்பது அறிவுகெட்ட சோஷலிச காலத்துக்கு வேண்டுமானால் சரியாக இருந்திருக்கலாம். வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமையை எதிர்ப்பவர்கள் இச்சட்டத்தத்தை போட்டிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் இப்போது என்ன கேடுகாலம்?

பல கட்டுப்பாடுகள் அதன் தேவைகளையும் தாண்டி நீடிக்கின்றன. உதாரணத்துக்கு கார்டினால் மாத்திரைகளை எடுத்து கொள்ளுங்கள். அவை மிகவும் மலிவானவை. ஒரு மாத்திரை ஒரு பைசாவுக்கும் குறைவு. காக்காய் வலிப்புக்கு அது பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதன் உற்பத்தியில் பல கட்டுப்பாடுகள். ஒவ்வொரு மாத்திரை விற்பனைக்கும் மூன்று ரெஜிஸ்டர்கள் தேவைப்பட்டன. பல மருந்து கம்பெனிகள் அவற்றின் உற்பத்தியையே கைவிட்டன. இப்போது நோயாளிகளே அவற்றை பரிந்துரைக்க வேண்டாம் என மருத்துவர்களை கெஞ்சி கேட்டுக் கொள்கின்றனர். ஏனெனில் ஒரு முறையில் ஐம்பது மாத்திரைகள்தான் பெற முடியும் அடுத்த முறை இன்னொரு புது மருந்துசீட்டு தேவை.

இத்தனைக்கும் என்ன காரணம்? ஐம்பதுகளில் அதை தற்கொலைக்கு உபயோகித்தனராம். ஆகவே இத்தனை கட்டுப்பாடுகளாம். அட மாங்காய் மடையர்களா! அதற்கு பின்னால் கங்கை, யமுனை மற்றும் காவேரியில் எவ்வளவு தண்ணீர் பாய்ந்து விட்டது என்பதை அறிவீர்களா? இன்னுமா அந்தக் கட்டுப்பாடு தேவை? யார் கேட்பது?

சரி, இப்பதிவின் தலைப்புக்கு வருகிறேன். சந்தன மரங்கள் தனியார் நிலங்களிலும் வளர்ந்திருந்தால் அதன் விலை குறைந்திருக்கும், ஆகவே அதை திருட்டுத்தனமாக காடுகளிலிருந்து வெட்டி ஊருக்கு எடுத்து செல்வது கடத்தல்காரர்களுக்கு கட்டிவந்திராது. ஆகவே அவர்கள் வேறு வேலை பார்த்திருக்கலாம். அதே போல வீரப்பனும் உருவாகியிருக்க மாட்டான். அவனைப் பிடிக்க செலவழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வேறு ஏதாவது உருப்படியான நிர்மாண வேலைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?

ஆக, சந்தன வீரப்பனை சுலபமாகத் தவிர்த்திருக்கலாமோ!

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/17/2008

இப்படித்தான் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

மதியம் ஒரு சிறுதூக்கம் போட்டுவிட்டு வந்தால் டி.வி.உள்ளூர் கேபிள் நெட்வொர்க்கில் ஒரு விஜய் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு காட்சி. விஜயின் மனக்கண்களுக்கு திடீர் என ஒரு காட்சி. அவர் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரரின் பெண் மாடியிலிருந்து கீழே விழுவது அவருக்கு தெரிகிறது. அப்பெண்ணை அவரால் காப்பாற்ற இயலவில்லை. ஆனால் தன் தந்தையும் அவர் ஊர்க்காரர்களும் போகும் பஸ் லெவல் கிராசிங்கில் மாட்டிக் கொள்ளும் காட்சி முன்கூட்டியே தெரிவது அவருக்கு மட்டும் தெரிவதால் அவரால் அப்பாவைக் காப்பாற்ற இயலுகிறது.

எனக்கும் ஏதோ பொறி தட்டியது. இம்மாதிரி ஒருபடம் வந்தது பற்றி படித்த ஞாபகம் வந்தது. சரி அம்மாதிரி நேரங்களில் நான் ரொம்ப கஷ்டப்படுவது இல்லை. காரணம், நம்ப லக்கிலுக் இருக்கும் தைரியம்தான். உடனே அவருக்கு ஃபோன் போட்டு இந்த கதை முடிச்சை சொல்லிக் கேட்டவுடனேயே அவர் படத்தின் பெயர் "அழகிய தமிழ்மகன்" எனக் கூறிவிட்டார்.

இண்டெர்வல்லுக்கு பிறகு சில சொதப்பல் காட்சிகள் வந்தன. நானும் சேனலை மாற்றிவிட்டு இப்படத்தைப் பற்றி லக்கிலுக் என்ன எழுதியுள்ளார் எனப் பார்க்க அவர் வலைப்பூவைத் திறந்து "அழகிய தமிழ்மகன்" என தேடுபெட்டியில் தட்டச்சு செய்து சர்ச் போட்டால் வந்தது "டோண்டு VS போலி டோண்டு கதைதான் அழகிய தமிழ்மகன்! :-(" என்னும் இப்பதிவு.

இதுதான் நிஜம். அதாவது இம்மாதிரி ஒரு கதையை எழுதினால் யாரும் நம்ப மாட்டார்கள். நானேகூட நம்ப மாட்டேன். ஆனால் நடந்ததென்னவோ அதுதான். லக்கிலுக்கின் இப்பதிவுக்கு பின்னூட்டமிட்டுவிட்டு மறுபடியும் ஃபோன் போட்டேன். கதையின் முடிவைக் கேட்டால் மனிதர் படத்தைப் பார்க்குமாறு அறிவுரை கூறினார். பார்த்தேன். பரவாயில்லை நன்றாகவே இருந்தது. முடிவு நம்பும்படியாக இல்லையெனினும் கவித்துவமாக இருந்தது. சாமியாராக நடிக்க முயன்றவன் கடைசியில் அவனையறியாது நல்லவனாக மாறுவது டால்ஸ்டாயின் கதைகளில் ஒன்று.

முதலில் இது எந்த எந்த படங்களின் காப்பி என்பதை பார்த்துவிடலாம். முதலில் நினைவுக்கு சமீபத்தில் அறுபதுகளில் வெளிவந்த எம்.ஜீ.ஆர். படம் "ஆசைமுகம்" என்ன, அதில் ராம்தாஸ் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் எம்.ஜீ.ஆர். போல முகத்தை மாற்றிக் கொள்வார். அதிலும் கதாநாயகன் தான் தினசரி செய்யும் செயல்களை டைரியில் குறித்துவைக்கும் பழக்கமுடையவர். இப்படத்தில் விஜயும் அவ்வாறே செய்கிறார்.

ஆங்கிலப்படம் "Eyes of Laura Mars" படத்திலும் இதே கதைமுடிச்சுதான், அதாவது நடக்கப்போகும் விஷயங்கள் முன்னாலேயே மனக்கண்கள் முன்னால் தெரிவது.

ஹிந்திப்படம் "Bhol Radha Bol" என்னும் ரிஷிகப்பூர் நடித்த படத்தின் கதையிலோ ஆள்மாறாட்ட முடிச்சு. அங்கும் ஒரு போலி ரிஷிகப்பூர். அப்படத்தில் வரும் இப்பாட்டோ தளபதி படத்தின் "ராக்கம்மா கையைத் தட்டு" மெட்டை அப்பட்டமாகக் காப்பியடிக்கிறது. ஆகா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க.

இப்பதிவின் நீதி யாது? யாரும் டைரி எழுதாதீங்கப்ப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/15/2008

டோண்டு பதில்கள் 15.08.2008

வால்பையன்:
1. தமிழில் இரண்டு மெய் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வரக்கூடாது என்கிறார்கள், உதாரணமாக "இதற்க்கு" ஆனால் நான் வழக்கம் போல் மல்லாக்கப் படுத்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தமிழ் வார்த்தை தோன்றியது. அதில் இரண்டு மெய் எழுத்துக்கள் தொடர்ச்சியாக வருகின்றன, எவ்வளவு யோசித்தும் அதற்கு மாற்று வழி தெரியவில்லை, எனது சந்தேகம் அது உண்மையிலேயே தமிழ் வார்த்தைதானா? அந்த வார்த்தை: "அர்த்தம்".
அப்படி ஒன்றும் விதி இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லையே. ஆனாக்க மல்லாக்க படுத்து யோசிக்கும்போது தொடர்ச்சியாக பார்த்தாலோ பார்க்கும்போதோ நீங்கள் சொல்வது போலத்தானே பொருத்தமாக வருகின்றன? அதே சமயம் அர்த்தம் என்பது வடமொழிச் சொல்லே. இதற்கும் மேலே பதில் தேவைப்பட்டால் நான் அம்பேல். இராமகி ஐயாதான் பதிலளிக்கத் தகுதியானவர்.


அவனும் அவளும்:
1) வாயை பிடுங்குவது என்றால் என்ன?
பதில்: சங்கடமான கேள்விகளை கேட்பதையே அது குறிக்கும். உதாரணத்துக்கு "நீங்கள் சூதாடுவதை நிறுத்தி விட்டீர்களா, உண்டு அல்லது இல்லை என்று பதில் சொல்லவும்" என்பதும் அம்மாதிரிக் கேள்வியே. போப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவர் ஒரு முறை நியூயார்க் வந்தபோது அந்த நகர நிருபர்களைப் பற்றி கூறி அவரை எச்சரித்திருக்கிறார்கள். வாயைப் பிடுங்கும் கேள்விகளை கேட்பதில் அவர்களை மிஞ்ச இயலாது. போப் பிளேனிலிருந்து இறங்கியதுமே அவரை ஒரு கேள்வி கேட்டார்கள். அதாவது, "இங்குள்ள இரவுவிடுதிகளுக்கு போவீர்களா"? என்று. அவரும் "அவை எல்லாம் நியூயார்க்கில் உண்டா"? என என எதிர்க் கேள்வியான பதிலை போட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். அடுத்த நாள் பேப்பர்களில் கொட்டை எழுத்தில் செய்தி வந்தது, "நியூயார்க்கில் இரவு விடுதிகளை பற்றி தகவல் கேட்டு பொப் அவர்கள் விசாரிக்கிறார்" என்று.

2) வாயை பிடுங்கினாலும் அசராமல் (அசையாமல்) பதில் அளிப்பவன் புத்திசாலியா? இல்லையேல் பதில் சொல்லாமல் இருப்பவன் புத்திசாலியா? இதில் நீங்கள் எந்த வகை?
பதில்: நிலைமைக்கேற்ப நடக்கவேண்டும். நல்ல பதில் இருந்தால் அதை உடனுக்குடன் சொல்லிவிடுதல் உத்தமம். அதேபோல அப்படிப்பட்ட பதில் லேது என்றால் நெடுமால் திருமருகா என்ற தோரணையில் தீவட்டி தடியன் போன்று மௌனமாக இருப்பதுவே மேல்.

3) நைஜீரியா மற்றும் அங்கோலாவில் தாங்கள் ஆதரிக்கும் கட்சி எது?
பதில்: அந்த நாடுகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு இருக்க வேண்டும், அல்லது அந்த நாடுகளை பற்றி ஏதேனும் கருத்து எனக்கு இருக்க வேண்டும். அந்த இரு நாடுகளை பொருத்தவரை அவை இரண்டுமே இல்லை என்பதால் அங்கு ராமன் ஆண்டாலென்ன, ராவணன் ஆண்டாலென்ன?

4) கேள்வி - பதில்கள் மற்றவருக்கு சலிப்பூட்டாமல் திரு சோ அவர்கள் இவ்வளவு வருடமாக எப்படி தாக்கு பிடிக்கிறார்?
பதில்: கடந்த 38 ஆண்டுகளில் அவர் இரண்டுக்கும் மேல் தலைமுறைகளை சந்தித்து விட்டார். தன் செயல்பாடு மற்றும் கொள்கைகளில் உறுதியாக உள்ளார். எப்போதுமே தன்னை புதுப்பித்து கொள்கிறார். தான் ஏதேனும் தவறு செய்தால் அதை உடனடியாக திருத்தி கொள்கிறார். அப்புறம் அவர் சுவாரசியமான மனிதராக இருப்பதில் என்ன வியப்பு இருக்க முடியும்?

5) போலிகளை கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சியால் பயனடைந்த மற்றவர்களை தாங்கள் குறை கூறுவீர்களா?
பதில்: ஏன் குறை கூற வேண்டும்? செந்தழல் ரவி, குழலி, ஓசை செல்லா, உண்மைத் தமிழன் போன்றவர்கள் எனக்கு உதவியல்லவா செய்தனர். நான் தேவையில்லாது போலிக்கு கொம்புசீவி விட்டேன் என்று கூறியவர்களும் இப்போது அவன் கொட்டம் அடக்கப்பட்டதில் நிம்மதியாக இருக்கின்றனரே. அது போதும் எனக்கு.

6) சுவாரசியமாகக் கேள்வி கேட்பது எப்படி?
பதில்: இது ஒரு 64000 டாலருக்கான கேள்வி. கேள்வி கேட்பதுவும் ஒரு கலையே. உபநிஷத்துகளைப் பார்த்தால் குருவை சிஷ்யன் கேட்கும் கேள்விகள் அனந்தம். குரு அளிக்கும் பதில்கள்தான் உபநிஷத்துகளின் பெரும்பாகத்தை ஆக்கிரமிக்கின்றன. சில கேள்விகளுக்கு நித்திய ஆயுசு உண்டு. கடவுள் இருக்கின்றாரா என்பது அதில் முக்கியமானது. அதற்கு வெவ்வேறு விதமான பதில்கள் வந்துள்ளன. இருப்பினும் அக்கேள்வி தொடர்கிறது. பொருளாதாரம் எடுத்து படித்த ஒருவர் பல ஆண்டுகள் கழித்து தனது பேராசிரியரை அவரது கல்லூரிக்கு சென்று சந்தித்தார். பேராசிரியர் அப்போதுதான் மாணவர்களது விடைத்தாள்களை திருத்தி கொண்டிருந்தார். வினாத்தாளை பார்த்த முன்னாள் மாணவர் கேள்விகள் அப்படியே தனது கடைசி ஆண்டு தேர்வுக்கானவை, ரிபீட் ஆகியுள்ளன எனக் கண்டுகொண்டார். ஏன் அப்படி எனக் கேட்டதற்கு, பேராசிரியர் அலட்டிக் கொள்ளாமல் கூறினார், "கேள்விகள் அப்படியே உள்ளன, ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல விடைகள் மட்டும் மாறிக் கொண்டே வருகின்றன".


ஜெரூசலம் ஜக்கு:
1. வலைப்பதிவுகளில் அதுவும் தமிழ் வலைப்பதிவுகளில் பரவலாகக் காணப்படும் அமெரிக்க எதிர்ப்பு ஏன்?
பதில்: அமெரிக்காவை ஒன்று ஆதரிக்க வேண்டும் அல்லது அதை எதிர்க்க வேண்டும். அதைத் தவிர அதை அலட்சியப்படுத்துவது என்பது மிகக் கடினம்.

2. அத்தகைய எதிர்ப்பு மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் வட கொரியா, சீனா, போன்ற நாடுகளின் மேல் பாய்வதில்லையே?
பதில்: அவை தண்ணீர் தெளித்துவிடப்பட்ட நாடுகள். அவை நன்றாக ஏதேனும் செய்தால்தான் நியூஸ்.

3. தமிழ் ஈழ அகதிகள் ஏன் ஜெர்மனி, கனடா, போன்ற நாடுகளுக்கு குடி புகுகின்றனர்? அவர்கள் நலம் விரும்பிகள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் விரும்பும் வட கொரியாவுக்கு, க்யூபா, வெனிசூலாவுக்கு புலம்பெயரவேண்டியது தானே?
பதில்: அப்படி செய்தால் உதைவாங்குவது அகதிகளா நலம் விரும்பிகளா? அகதிகள் மேல் உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

4. சமாஜ்வாதி பார்ட்டி அர்ஜுன் சிங் நிதி அமைச்சரானால்?
பதில்: எம்.பி.களுக்கு நியாயவிலை நிர்ணயம் செய்வார் என நம்பலாம்.


பாண்டு:
1. ராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலையை நம் பி.ஜே.பி அரசு தகர்ப்பது உண்மையா?
பதில்: இது பற்றி இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. நீங்கள் கூறித்தான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். மேலதிகத் தகவல்கள் பெற முயற்சித்து கொண்டிருக்கிறேன். அவை கிடைத்ததும், ஏதேனும் பதில் இருந்தால் போடுகிறேன்.


சுகுமாரன்:
ஆனந்த கணேஷ் என்பவர் எழுதியிருப்பதைப் படித்தால் பயம் வருகிறது. அந்த அளவுக்கா நிலமை மோசமாக இருக்கிறது?
இன்னும் அந்த அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. ஆனால் இந்த கிறித்துவ மதவெறியர்களை விட்டால் இதைவிட மோசமான நிலைமை வந்தாலும் வரலாம். ஜாக்கிரதையாக இருப்பது நம் கையில்தான் உள்ளது. இந்து மதத்தில் தீண்டாமைக் கொடுமையை சாடுபவர்கள் வெட்கமே இல்லாது கிறித்துவ மதத்திலும் அதைத் தொடர்வதை என்னவென்று சொல்வது? மேலும் இவர்கள் செய்த இந்த புளுகுப் பிரசாரங்களே பெரியார் அண்ட் கம்பெனி லிமிட்டட் செய்யும் பார்ப்பன எதிர்ப்புக்கான அடிப்படியாக உள்ளது. என்ன செய்வது, அத்தகையோர் மனதில் ஏற்கனவே உள்ள பொறாமை மற்றும் வெறுப்புக்கு தூபம் போட இவ்வாறு நடக்கிறது. இங்காவது பரவாயில்லை, ருவாண்டாவில் ரத்த ஆறுகளே ஓடின இந்த மிஷ "நரிகள்" செய்த பிரசாரத்தால்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/13/2008

ராஜாஜி அவர்களின் சுதந்திரா கட்சி மீண்டும் வருமா?

"Dreaming of Swatantra" என்ற தலைப்பிலுள்ள கட்டுரையை நண்பர் ஹேயக் ஆர்டர் சந்திரசேகரன் அனுப்பியுள்ளார்.

இப்போது இல்லாமல் போன சுதந்திரக் கட்சியை பற்றியது அக்கட்டுரை. சமீபத்தில் 1959-ல் மாமனிதர் ராஜாஜி, பேராசிரியர் ரங்கா மற்றும் எம்.ஆர். மசானி ஆகியோரால் நிறுவப்பட்ட அந்த கட்சி அறுபதுகளில் தனது முத்திரையை பதித்தது. சோஷலிசம் பேசுவதுதான் முற்போக்காக தவறாக எண்ணப்பட்ட அக்காலத்தில் தைரியமாக தனியுடைமையை ஆதரித்து தனது கொள்கைகளை அது பரப்பியது. அதை அவதூறாக பணக்காரர்கள் கட்சி என அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் முத்திரையிட, ராஜாஜி அவர்கள் அனாயாசமாக காங்கிரஸ்தான் பணக்காரர்கள் கட்சி என்பதை நிறுவினார். இருப்பினும் பாப்புலர் வோட் ராஜாஜியிடம் லேது என்ற மறுக்க முடியாத உண்மையால் இது நேருவின் நம்பிக்கைத் தன்மைக்கு பங்கம் ஏதும் விளைவிக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். முழு கட்டுரையையும் எனது ஆங்கிலப் பதிவில் பார்க்கலாம். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பு கீழே தடித்த சாய்வெழுத்துக்களில். கட்டுரையை எழுதியது நிரஞ்சன் ராஜ்யதக்‌ஷா. அதில் வரும் நான் என்பது நிரஞ்சன் அவர்களை குறிக்கும்

நவ இந்தியாவின் சரித்திரத்தில் வெற்றிகரமாக செயல்பட்ட ஒரே ஒரு லிபரல் கட்சி இப்போது இருந்திருந்தால் அடுத்த வருடம் 50-ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடியிருக்கும். அது சமீபத்தில் ஆகஸ்ட் 1959-ல் துவங்கப்பட்டது.

நோபல் பரிசு பெற்ற அமார்த்யா சென் அவர்கள் தற்சமயம் இந்தியாவின் தேவை ஒரு மதசார்பற்ற, சுதந்திர பொருளாதாரத்தை ஆதரிக்கும் வலதுசாரி லிபரல் கட்சி எனப் பேசியுள்ளார். இப்போது இப்பிரச்சினையை கையில் எடுக்க இரண்டு முக்கியக் காரணங்கள். ஒன்று இடதுசாரி கும்பல்கள் பொருளாதார சீர்த்திருத்தங்களை வரவிடாமல் என்னென்னவோ செய்கின்றன. இரண்டாவது எதேச்சையாக அடுத்த ஆண்டு அம்மாதிரி கட்சியாக இருந்த சுதந்திராக் கட்சியின் 50-ஆம் ஆண்டு நிறைவு.

பரஸ்பர நம்பிக்கை குறைந்து, லஞ்ச லாவண்யங்கள் நிறைந்த தேசங்கள் சுதந்திரப் பொருளாதாரத்துக்கு பொதுவாகவே எதிரானவை. கடந்த 15 ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தத்தால் விளைந்த நன்மைகளை பார்த்த பிறகு சாதாரணமாக இம்மாதிரி வலதுசாரி சிந்தனையுடைய லிபரல் கட்சியின் தேவைக்கான பலமான அரசியல் அடிப்படை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. சீர்திருத்தங்களால் பலனடைந்தவர்கள் கூட அரசு கட்டுப்பாடுகள் மூலம் விலைவாசி உயர்வைத் தடுக்க இயலும் என்னும் நம்பிக்கையிலிருந்து மீளவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயமே. பலர் இன்னும் வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை சமூகத்துக்கு கெடுதல் என நம்புவதும் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஆக, எந்தக் கட்சியும் துணிந்து வலதுசாரி கொள்கைகளை சுவீகரித்து கொள்ளும் என நம்பாததும் எவ்வாறு தவறாகும்?

ஏன் இப்படி? அரசியலையும் மீறி இந்திய சமூகத்தின் தன்மை மற்றும் தனியுடைமை ஆகியவை இதில் பங்கு வகிக்கின்றன.

ஹார்வேர்ட் பல்கலை கழகத்தைச் சேர்ந்த Philippe Aghion, Paris School of Economics-ஐ சேர்ந்த Yann Algan, Ecole Polytechnique-ன் Pierre Cahuc மற்றும் ஹார்வேர்ட் பல்கலை கழகத்தைச் சேர்ந்த Andrei Schleifer ஆகியோரால் தயார் செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று இதற்கான காரணங்களைப் பற்றிப் பேசுகிறது. அதாவது நாட்டு மக்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் நாட்டில் கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் உண்டு என்று அது கூறுகிறது.

இதை அவர்கள் பல பணக்கார நாடுகளை ஆராய்வதன் மூலம் உணர்ந்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மிக அதிக கவனத்தை ஈர்த்த சமுதாய மூலதனம் என்ற கோட்பாட்டை இங்கு அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு தேவையானது இயந்திரங்களின் மூலதனம், பண் மூலதனம் மற்றும் மக்கள் செல்வம் ஆகியவையே. அவை வளர வேண்டும். அதே சமயம் சமுதாய மூலதனமும் தேவையே (அதாவது பரஸ்பர நம்பிக்கை). பொருளாதார நிபுணர் Kenneth Arrow ஒரு முறை கூறியதாவது: "எந்தவித வணிகச் செயல்பாட்டுக்கும் நம்பிக்கை என்பது அவசியம் தேவை, அதிலும் நீண்டகால நம்பிக்கை. இந்த நம்பிக்கை இல்லாமல் போவதே பொருளாதார பின்னடைவுகளுக்கு காரணம் எனவும் கூறலாம்."

Aghion-ம் அவரது மூன்று கூட்டாளிகளும் இந்த மக்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை குறைவுள்ள நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகம், அதன் மூலம் லஞ்ச ஊழல் பெருகும் என்பதை இந்தக் கட்டுரை மூலம் காட்டியுள்ளனர். இதை நாம் ஏற்கனவே பெர்மிட், லைசன்ஸ் கோட்டா அரசில் பார்த்து விட்டோமே. "நம்பிக்கை குறையக் குறைய அதிக கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் வலுபெறுகின்றன என்பதும் ஒரு சுவாரசியமான விஷயமே. இதனால் லஞ்ச ஊழல் பெருகினாலும் கோரிக்கைகளில் மாற்றமில்லை" என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏழை நாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் சில நேர்மையற்ற முதலாளிகள் லைசன்ஸ்கள் பெற்று உற்பத்தியை முடக்குவதில்தான் முடிகின்றன. அவர்கள் செயல்பாடுகள் நேர்மையான தொழிலதிபர்களையும் பாதிக்கின்றன. ஆகவே தனியுடைமை பொதுவாகவே யாருக்கும் பிடிக்காத விஷயமாகிறது. இதைக் கூறுவது Harvard Business School-ஐச் சேர்ந்த Rafael Di Tella மற்றும் Imperial College-ஐச் சேர்ந்த Robert MacCulloch தயாரித்த இன்னொரு ஆய்வுக் கட்டுரை.

நாட்டில் உள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் அதன் பொருளாதாரத் துறையில் வரும் லாபங்கள் நேர்மையான முறையில் வருகின்றனவா அல்லாது அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதர்மமான முறையில் வருகின்றனவா என்பதைப் பொருத்துத்தான் வலதுசாரி சிந்தனை கட்சிக்கு ஆதரவு கிடைக்குமா அல்லது இல்லையா என்பதைக் கூற இயலும் என இந்த இரு கட்டுரைகளும் நிறுவுகின்றன.

எண்பதுகளில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த இரும்பு பெண்மணி மார்க்கரெட் தாச்சர் தைரியமாக தனியுடைமைக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.அவர் அளவுக்கு தில்லுடன் செயல்பட நமது அரசியல்வாதிகளுக்கு மஞ்சாச்சோறு இருக்கிறதா?


இப்போது மீண்டும் டோண்டு ராகவன். இக்கட்டுரையை அனுப்பிய சில நிமிடங்களில் சந்திரசேகரன் இன்னொரு மின்னஞ்சலையும் அனுப்பினார். அதில் அவர் கூறியதாவது:
"சென் அவர்கள் கடந்த திங்களன்று பாராளுமன்றத்தில் பேசும்போது சமூக நீதி தேவை எனப் பேசினார். என்ன குழந்தைத்தனமான நம்பிக்கை? அது எங்கேயிருக்கிறது? ("சமூக நீதியா? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்கோ" என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னமேயே பிரபல பொருளாதார நிபுணர் ஹேயக் ஆர்டர் கூறிவிட்டார்).

நன்றி சந்திரசேகர். ஆனால் ஒரு பிரச்சினை. சுதந்திரா கட்சியோ அது போன்ற வேறு கட்சியோ வர இயலாது. ஏன் என்பதை எனது ஒரு முக்கியமான பொதுநல வழக்கு என்னும் பதிவில் குறித்துள்ளேன். அதாவது, புதிதாக வரும் எந்த கட்சியும் சோஷலிசம் என்னும் விளங்காதக் கொள்கையை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தாக வேண்டிய சட்ட நிலை இப்போது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/12/2008

வெறுப்பின் அடிப்படையில் மதப்பிரசாரம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களது தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ் என்னும் தலைப்பில் வந்துள்ளப் பதிவை அனைவரும் கூர்ந்து படிக்க வேண்டும்.

அதாவது இந்துமதம் என்றே ஒன்றும் இல்லையாம். எல்லாமே கிறித்துவ மதம்தானாம். அதுவும் புனித தோமையார் நிறுவிய கிறித்துவ மதத்தைத்தான் திரித்து இவ்வாறு சைவம், வைணவம் என்றெல்லாம் ஆக்கினார்களாம். அக்கட்டுரையில் காணப்படும் சில கருத்துக்கள். (அடைப்புக் குறிகளுக்குள் எனது எதிர்வினைகள் தடித்த சாய்வு எழுத்தில்).

முதலில் ஒரு டிஸ்கி. கீழே உள்ள கருத்துக்களை பற்றி ஜெயமோகனுக்கும் எனக்கும் ஒரே அபிப்பிராயமே; அதாவது அவற்றை முழுமையாகவே நிராகரிக்கிறோம். அதே சமயம் தடித்த சாய்வெழுத்தில் எனது எதிர்வினைகள் என்னுடையவை மட்டுமே. இந்த உளறல் கருத்துக்களை அசாத்திய பொறுமையுடனே அவர் படித்துள்ளார். எனக்கு அந்த அளவுக்கு பொறுமை கிடையாது. இப்போது அவற்றில் சில கருத்துகளுக்கு போவோமா? அத்தனை கருத்துகளையும் பொறுமையாக ஜெயமோகன் அவர்களது பதிவில் படிக்க இயலுபவர்களுக்கு பொறுமை திலகம் எனப் பட்டம் தரலாம்.

"இந்தியத் துணைக்கண்டத்தில் மனித இனம் உருவானது குமரிக்கண்டம் என்னும் லெமூரியாவில். இங்கே பழங்குடிகள் வாழ்ந்துவந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ். இவர்கள் கல்லையும் மண்ணையும் வழிபடுவதுபோன்ற மதப்பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்தார்கள். குமரிக்கண்டத்தில் இருந்து இவர்கள் வடக்கே பரவி வடக்கே உள்ள பிராகிருதம் போன்ற பண்படாத மொழிகளை உருவாக்கினார்கள். சிந்துசமவெளிநாகரீகம் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான். இவர்கள் சிவன் அல்லது பசுபதி போன்ற கடவுள்களை வழிபட்டார்கள். பண்பாட்டுவளர்ச்சி இல்லாத ஒரு வாழ்க்கை இங்கே நிலவியது. இக்காலத்தில் தமிழர்களின் ஆன்மவியல் [soulology] வளர்ச்சியுறாத நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் வடக்கில் இருந்து வந்த சமணர்களும் பௌத்தர்களும் தமிழர்களின் நிலத்தைக் கைப்பற்றி ஆண்டார்கள். தமிழர்களின் சிந்தனையையும் அவர்கள் அழித்தார்கள். அவர்கள் கடவுளை உணரக்கூடிய ஞானம் இல்லாதவர்கள்.இவர்களால் தமிழர்களின் ஆன்மவியல் முழுமையாக அழிந்தது. இக்காலகட்டத்தில் வடக்கே இருந்து வந்த அன்னியர்களான ஆரியர்கள் தமிழர்களின் பண்பட்டை அழித்து அவர்களை சாதிகளாகப் பிரித்து அவர்களை அடிமையாக்கி சுரண்டினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்துவின் சீடரான புனித தோமையர் [தாமஸ்] இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார். இவர் மேலைக்கடற்கரைக்கு வந்து அங்கிருந்து கீழைக்கடற்கரைக்கு வருகைதந்தார். அவர் கிறித்தவ ஆன்மவியலை தமிழர்களுக்கு கற்றுத்தந்தார். தமிழர்களின் தொன்மையான ஆன்மவியலில் கிறிஸ்தவத்தின் இறைச்செய்திகள் சில உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அதன் வெளிச்சத்தில் அவர் தமிழ்-கிறித்தவ ஆன்மவியலை உருவாக்கினார்.

அதை அரைகுறையாக புரிந்துகொண்டவர்களால் அந்த தத்துவ சிந்தனைகள் திரிக்கப்பட்டன. இவ்வாறு திரிபுபட்ட கிறித்தவமே சைவம்,வைணவம் என்ற இருபெரு மதங்களாக உருவெடுத்தது. இதுவே பக்தி இயக்கம் ஆகும். இந்த பக்தி இயக்கமானது பௌத்தர்களையும் சமணர்களையும் துரத்தியது".

(ஏன் தமிழ் மொழியை விட்டுவிட்டார்கள்? விட்டால் அதுவும் அரேமிக் மொழி என்று கூற வேண்டியதுதானே? மாட்டார்கள், ஏனெனில் அதை லத்தீன மொழி என கூறிக்கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள். அப்படி சொன்னால் அவர்களே சிரிப்பார்கள் போலும்).

"புனித தோமையர் பிராமணர்களால் கொல்லப்பட்டார். அவர் கற்பித்த தமிழ்-கிறித்தவச் சிந்தனைகள் பிராமணர்களால் மேலும் திரிக்கப்பட்டன. அவ்வாறாக சைவத்தையும் வைணவத்தையும் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆதிக்கிறித்தவ சிந்தனைகளை அவர்கள் தங்களுடைய சிந்தனைகளாக மாற்றிக் கொண்டார்கள். இதன்பொருட்டு அவர்கள் சம்ஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள். இந்தமொழியில் வேதங்கள் உபநிடதங்கள் போன்ற நூல்களை எழுதிக்கொண்டார்கள். அவற்றில் உள்ள ஞானம் கிறித்தவ ஞானமே என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவற்றை யாரும் கற்கக் கூடாது என்று சொன்னார்கள். சாதிப்பிரிவினைகளை நிலைநிறுத்திய அன்னியர்களான பிராமணர்கள் தமிழர்களை இந்தியா முழுக்க அடிமையாக்கி வைத்திருந்தார்கள்".

(நான் சிறுவனாக இருந்தபோது, என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் என்னை நட்பு முறையில் கலாய்க்கவே கூறிய சில கருத்துகள்: "தெலுங்கு மொழிதான் முதல் மொழி. கிருஷ்ணதேவராயர்தான் தமிழகத்துக்குக் மன்னர். சேரக் கிராமம், சோழக் கிராமம் மற்றும் பாண்டியக் கிராமம் என்ற மூன்று கிராமங்கள் மட்டுமே தமிழகம். தனது ஆஸ்தான கவி தெனாலிராமனை வைத்து திருக்குறள், சிலப்பதிகாரம், ஆத்திச்சுவடி ஆகிய நூல்களை எழுதி எல்லாவற்றையும் ஒட்டக்கூத்தர் என்ற ஒருவரிடம் கொடுத்தார் அவர்". இவையாவது தமாஷ் என்ற ரூபத்தில் கூறப்பட்டன, அவ்வாறே புரிந்தும் கொள்ளப்பட்டன. ஆனால் கிறித்துவம் பற்றிய கருத்துகள் இவ்வளவு உளறலாக இருப்பினும் அதையும் நம்பும் மனிதர் உள்ளனரே. ஒன்று மட்டும் நிச்சயம் பார்ப்பன எதிர்ப்புக்கு தேவையான ஐடியாக்கள் எங்கிருந்து வந்தன என்பதில் இப்போது ஐயமே வேண்டாம்).

"தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனித தாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்ட வடிவம். இன்று இந்துக்கள் சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே. இந்து என்ற ஒரு மதம் இல்லை. அப்படி ஒருமதம் இருப்பதாக எந்த ஒரு அறிஞருமே சொன்னதில்லை. அது ஆரிய பிராமணர்கள் சாதிபேதங்களை உருவாக்கும்பொருட்டு உருவாக்கிய பொய். ஆகவே சைவம் வைணவம் என்ற இரு மதங்களைச் சேர்ந்த இந்துக்களை ஆதிகிறித்தவர்கள் அல்லது தாமஸ்கிறிஸ்டியன்ஸ் என்றுதான் சொல்லவேண்டும்". (அப்படிப் போடு அருவாளை)

"சிந்துவெளியில் உள்ள நினைவுக்கல் வழிபாடானது பைபிள் கூறும் பெத்தேல் வழிபாடே ஆகும். கல்லில் எண்ணை ஊற்றி வழிபடுவது கிறித்தவத்தில் இருந்து வந்தது. பெத்தேலில் யாக்கோபால் நினைவுக்கல்லின் மேல் எண்ணை ஊற்றப்பட்டதை நினைவுகூரும்வகையில் ‘எண்ணை ஊற்றப்பட்டவர்’ என்ற அர்த்தம் வரும் சொல்லாகிய கிறிஸ்து என்பதால்தான் ஏசு அறியப்படுகிறார். அந்த வழிபாட்டை நாம் திராவிட [தமிழ்] வழிபாட்டில் காண்கிரோம்.ஆகவே திராவிட சமயம் என்பது கிறித்தவமே". (ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் சாத்துவதற்கும் ஏதேனும் கிறித்துவ ஆதாரம் வைத்திருப்பார்களே)

"இயேசுகிறிஸ்து சாவைக்கொடுக்கும் சாத்தானை வென்று உயிர்த்தெழுந்து சாவின்மீது அடைந்த வெற்றியைத்தான் சற்றே உருமாறிய வடிவத்தில் சுடுகாட்டில் முயலகன் மீது சிவன் ஏறி ஆடும் நடனத்தில் காண்கிறோம். பெத்தேலின் நினைவுக்கல்லின் நினைவால் கிறிஸ்து ‘உயிருள்ள கல்’ என்று சொல்லப்பட்டார். அதிலிருந்து சிவலிங்க வழிபாடு தோன்றியிருக்கலாம். சிவலிங்க வழிபாட்டிலிருந்து சிவகுடும்ப வழிபாடு உருவானது. இது திருக்குடும்பம் என்ற கிறித்தவ கருத்தாக்கத்தின் விளைவேயாகும். பிதா சிவன் ஆகவும் சக்தி பரிசுத்த ஆவி ஆகவும் ஏசு முருகன் ஆகவும் உருமாற்றம் பெற்றார்கள்". (சிவலிங்கத்துக்கு வேறு அர்த்தம் தந்தார்களே, அது இல்லையா இப்போ)?

"கிறித்தவத்தில் மகனாக அவதரித்த கடவுளுக்கு நான்கு குணங்கள் உள்ளன. சாத்தானை வென்றநிலை சூரனை வென்றநிலையாக மாற்றம் செய்யப்பட்டது. இறந்து உயிர்த்தெழுந்த நிலை தலைவெட்டப்பட்ட பிள்ளையாராக ஆகியது. உலகைப்படைத்த நிலை பிரம்மனாக ஆகியது. உலகின் ஒளியாக இருக்கும் நிலை மலைமீது ஒளியாக தெரியும் ஐயப்பனாக மாறியது. புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட ஆதிகிறித்தவ சிந்தனைகள் இவை என்று தெரியாதபடி பிராமணர்களால் இவை புராணங்களாக ஆக்கப்பட்டன". (ஆகா என்ன தெய்வீக சிந்தனை)!

"இவ்வாறு சிவ வழிபாட்டில் பலதெய்வக் கோட்பாடு ஆரியர்களான பிராமண அன்னியர்களால் உருவாக்கப்பட்டது. அதை மீண்டும் தூய கிறித்தவ அடிப்படைகளின்படி திருத்தி ஓரு தெய்வக் கோட்பாட்டை நோக்கிக் கொண்டுவர எழுதப்பட்ட நூலே சிவஞானபோதம் ஆகும். திருமந்திரம் ‘அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்’ என்று சொல்வது புனித தாமஸால் முன்வைக்கப்பட்ட இந்த தூய கிறித்தவ கருத்தையே. அன்பு என்பது கிறித்தவக் கருத்து". (ஆமாமாம், இந்த அன்புக் கருத்தைப் பரப்பவே அவர்கள் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பழங்குடியினரை அன்புடன் சிதையில் வைத்து உயிருடன் கொளுத்தினர்).

"தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் பௌத்தத்தில் மகாயானம் என்ற பிரிவு உருவானது. இதன் பிறகே பௌத்தத்தில் தத்துவ சிந்தனைகள் உருவாயின. புத்தரை ஏசுவைப்போன்ற ஒரு கடவுளாக ஆக்கினார்கள். புத்த மைத்ரேயர் என்ற கடவுள் உருவாக்கப்பட்டார். அவர் ஏசுவைப்போன்றே ஊழி முடிவில் பிறந்து வருவார் என்று சொல்லப்பட்டது. மகாயான பௌத்தத்தில் இருந்துதான் பௌத்த தத்துவங்கள் உருவாக்கி சீனாவுக்கு சென்றன. ஜென் பௌத்தம் அவ்வாறுதான் உருவாயிற்று

அதேபோல தாமஸ்கிறித்தவத்தின் செல்வாக்கினால் சமணத்தில் சுவேதாம்பரம் என்ற பிரிவு உருவாகியது. இதன் பின்னரே சமண மதத்திலும் தத்துவ சிந்தனை உருவாகியது. சமணர்கள் கிறித்துவ தீர்க்கதரிசிகளைப் பின்பற்றி தங்கள் தீர்த்தங்காரர்களை கற்பனைசெய்து அவர்களை வழிபட ஆரம்பித்தார்கள்". (சமண புத்த மதங்களும் அவ்வளவுதானா, கண்ணைக் கட்டுதப்பா).

"வேதங்களில் ஆரியர்கள் கிறித்தவக் கோட்பாடுகளை திருடி எழுதிவைத்திருக்கிறார்கள். பிரஜாபதி என்று வேதங்கள் சொல்வது கிறிஸ்துவையே.

திருக்குறள் தாமஸ் கற்பித்த ஆதிகிறித்தவக் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு முழுமையான கிறித்தவ நூல் ஆகும். திருக்குறளின் பாயிரம் கிறித்தவர்களின் விசுவாசப் பிரமாணமே. அதேபோல சிவஞானபோதமும் ஒரு பற்றுறுதிப்பிரமாணமே.

இவ்வாறு இந்தியசிந்தனைகள் அனைத்தையுமே உருவாக்கிய தாமஸ் பற்றி இந்தியநூல்களில் எதிலுமே எந்தக்குறிப்பும் இல்லை. காரணம் ஆரிய பிராமணர்களின் சதியே". (ஒருவன் மரம் வெட்டும் வேலைக்கு வந்தானாம். அவனது முன்னனுபவம் பற்றி கேட்கப்பட்டபோது சகாரா பாலைவனத்தில் மரம் வெட்டியதாகக் கூறினானாம். அங்கு மரமே இல்லையென்றதற்கு, "இப்போது இல்லை" எனக் கூறுங்கள் என்றானாம். சக்கரவர்த்தி ஆடையின்றி இருக்கிறார் என்பதை கூறும் குழந்தைகள் இங்கு யாருமே இல்லை என நினைத்தார்களா இந்த புருடாக்களை எழுதியவர்கள்)?.

"பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து தூய கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்தது. இந்த முழுமையான கிறித்தவத்தின் அடிப்படையில் திரிபு நிலையில் உள்ள் தமிழர்களின் ஆன்மவியலை நாம் திருத்தியமைக்க வேண்டும்".

இப்போது ஜெயமோகன் அவர்கள் மேலே கூறுவது:
இக்கருத்துக்களை நாம் டாக்டர் தேவகலா எம்.ஏ எம்.·பில் பி.எச்.டி எழுதிய ‘இந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே’ என்ற தமிழ் நூலில் தெளிவாகவும் விரிவாகவும் காண்கிறோம். இது தமிழ் கிறித்தவ ஊழியருக்கான சுருக்கக் கையேடு. இது ஆய்வளர் தெய்வநாயகம் அவர்களால் செயப்பட்ட ஆய்வுமுடிவுகளை ஊழியர்களுக்குக் கொண்டுசெல்லும்பொருட்டு அவரது மகளால் உருவாக்கப்பட்டது

கிட்டத்தட்ட ஒரு அதிகாரபூர்வ கையேடு இது. சென்னை -மயிலை கத்தோலிக்கப் பொறுப்புப் பேரயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்கள் இதற்கு அளித்த முன்னுரையில் ‘இந்தியா தோமாவழி கிறித்தவ நாடே என்பதை டாக்டர் தெய்வநாயகம் ஆணித்தரமாக நிலைநாட்டியிருக்கிறார்’ என்று சொல்லி ‘சைவர் வைணவர் அனைவரும் மறைமுகக் கிறித்தவர்களே’ என்று சொல்கிறார். இந்தக் கருத்தை பிரச்சாரம்செய்வதற்கான பயிற்சி வகுப்புகள் மயிலை தாமஸ் ஆலயத்தில் நிகழும் என்றும் அதில் பங்குபெறுவோருக்கு வாழ்த்துக்கள் என்றும் சொல்கிறார்.

இந்திய சுவிசேஷத் திருச்சபை பேராயர் டாக்டர் எஸ்றா சற்குணம், சி.எஸ்.ஐ. தென்னை திருமண்டல பேராயர் அம்மா மறைதிரு ஜோன் தேவசகாயம் அவர்கள், சென்னை அப்போஸ்தல தலைமைபோதகர் பாஸ்டஎ எம்.கெ.சாம் சுந்தரம் அவர்கள், குருகுல் லுத்தரன் இறையியல் கல்லூரி முதல்வர் மறைதிரு மாணி சாக்கோ அவர்கள் ஆகியோர் இந்நூலின் ‘நிரூபிக்கப்பட்ட’ கருத்துக்களை வழிமொழிந்து இந்திய சிந்தனைகள் அனைத்துமே தாமஸிடமிருந்து உருவானவையே என்று சொல்கிறார்கள்.

ஆரியர்கள் என்று ஒரு இனம் இல்லை என்று டாக்டர் தேவகலா அவர்கள் சொல்கிறார்கள். இந்தியா மீது படைஎடுத்து வந்த பாரசீகர், கிரேக்கர்,சகர், குஷானர், ஹூணர் ஆகியோர் கிபி ஏழாம் நூற்றாண்டில் மௌண்ட் அபு என்ற இடத்தில் கூடி அப்போது இருந்த திராவிட அரசனான ஹர்ஷவர்தனனைக் கொன்று ஆட்சியைப் பிடித்தார்கள். அவர்கள் தாங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தமையால் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் உருவாக்கிய நீதியே மனுநீதி

மனுநீதியின்படி ஆரியர் உயர்வானவர்கள். திராவிடர்கள் அவர்களுக்கு அடிமைகள். அப்படி அடிமையாக திராவிடர்கள் இருக்க வேண்டுமென்று கூறுவதே இந்துத்துவம் ஆகும் என்கிறார் டாக்டர் தேவகலா. இந்தக்கருத்தை வலியுறுத்துபவர்கள் பிராமணர்கள்.

பழந்தமிழ் இலக்கியங்கள் பத்துபாட்டு எட்டுத்ததொகை முதலியவை கிபி இரண்டாம் நூற்றாண்டில் ,அதாவது தாமஸ் வந்தபின் நூறுவருடம் கழித்து உருவானவை என்று டாக்டர் தேவகலா சொல்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆதன்- அவ்வை என்று சொல்லப்படுகிறவர்கள் ஆதாம் ஏவாள்தான் என்கிறார். தமிழ்ச் சொல்லாகிய அன்பு என்பதில் கிறித்தவத்துக்கே உரிய அன்பு என்ற நற்குணத்தின் சில பண்புக்கூறுகள் காணப்படுகின்றன என்பதை ஒரு முக்கிய ஆதாரமாக தேவகலா குறிப்பிடுகிறார். ஏறத்தாழ 300 பக்க அளவுள்ள இந்த நூல் இத்தகைய விரிவான ஆய்வுகளை முன்வைக்கிறது.

இது ஒரு தனிநபரின் ஆய்வோ, அல்லது சிறு குழுவின் கருத்துக்களோ அல்ல. இதற்கு தமிழகத்தின் செல்வாக்குள்ள எல்லா கிறித்தவ சபைகளும் வெளிப்படையான ஆதரவை தெரிவித்திருக்கின்றன என்பதைக் கண்டோம். சென்ற பத்து வருடங்களில் இக்கருத்தை பிரச்சாரம்செய்யும் ஏராளமான ஆங்கில தமிழ் நூல்கள் வெளியாகியிருக்கின்றன. பலநூறு துண்டுப்பிரசுரங்கள் வெளியாகி கிறித்தவ ஆலயங்களில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகக் கிறித்தவர்களில் உயர்கல்வி கற்றவர்கள் பழந்தமிழ் ஆய்வுசெய்தவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் இந்தக் கோட்பாட்டை ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை என்றே எண்ணுகிறார்கள். உதாரணமாக குமரிமாட்டத்தின் பிரபல அறிவுஜீவியும் நவின இலக்கிய வாசகருமான பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல் இக்கருத்தை ஒரு நூலில் வழிமொழிகிறார்! கிறித்தவப் பள்ளிகளில் இந்த வரலாற்றை அதிகாரபூர்வமற்ற வகையில் சொல்லியும் கொடுக்கிறார்கள்.

இந்த நூல்களை முழுக்க எனக்கு திரட்டி அளித்தவர் தக்கலையைச் சேர்ந்த லுத்தரன் சபையைச் சேர்ந்த கிறித்தவ ஊழியர் ஒருவர். நான் இவற்றைப் படித்தால் என்னுடைய வரலாற்றுப் பார்வையே மாறிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் படிக்க மாட்டேன் என்று சவால் விட்டார். படிப்பேன் என்று அவருக்கு உறுதி அளித்தேன். அவர் எனக்கு அளித்த பிற நூல்கள் இவை:

1. India is a Christian Nation- By. M.Sunder Yesuvadian [a] M.S.Mankad. [ Published by Anaryan Publications , Indian Anarya Samaj Trust, 16A, Chidambara Nathan Street, Ramavarma puram. Nagercoil 629001] இந்நூலுக்கும் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபை தலைவர்களும் முழுமையான ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள்.

2. Hindu Religion is the offshoot of St.ThomaS Dravidian Christianity- By Dr.Devakala [ Meypporul Publications 278, Konnur High Road,ayanapuram Chennai 600023]

3.Love Hindus. By M.Christopher MA LLB, Beniah Kallukatti, Kuzhithurai K K dist Tamilnadu 629163

4 தமிழர் சமயத்தை விடுவிக்கப்போவது யார்? பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எம் ஏ.பி எச் டி [மெய்ப்பொருள் அச்சகம், 278, கொன்னூர் கைரோடு, அயனாவரம் சென்னை 600023 ]

மற்றும் பத்து துண்டுபிரசுரங்கள். பெரும்பாலும் ஒரே ஆதாரங்கள் ஒரே வரிகளினால் ஆனவை இவை. இந்நூல்களின் பின்னட்டைகளில் ஏராளமான பிற நூல்களைப்பற்றிய தகவல்கள் உள்ளன.
***
பேராசிரியர் ஜேசுதாசன் இந்தக் கருத்தமைவின் முக்கியமான தொடக்கப்புள்ளி. எஸ்.வையாபுரிப்பிள்ளை வழிவந்தவரான ஜேசுதாசனுக்கு பைபிளிலும் கம்பராமாயணத்திலும் இணையான ஈடுபாடு உண்டு. தமிழிலக்கியம் சார்ந்த வையாபுரிப்பிள்ளையின் காலக்கணக்குகளை பெரிதும் ஏற்றுக் கொண்டவர் அவர்.பேராசிரியர் தமிழிலக்கிய வரலாறு ஒன்றை ஆரம்பகாலத்தில் எழுதினார். பின்னர் அவரது முதியவயதில் அவரது உதவியுடன் ஹெப்ஸிபா ஜேசுதாசன் அந்த தமிழிலக்கிய வரலாற்றை ஆங்கிலத்தில் மூன்றுபாகங்களாக விரிவாக எழுதினார்.

அந்த தமிழிலக்கிய வரலாற்றின் பெயர் ‘Count Down From Solomon’ அந்நூலின் தலைப்பைப் பற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அத்துடன் தமிழின் சிறந்த இலக்கியங்களில், குறிப்பாக திருக்குறளிலும் ஆழ்வார்பாடல்களிலும் உள்ள அறம் அன்பு பற்றிய தரிசனங்கள் கிறித்தவ விழுமியங்களுடன் ஒத்திசைந்து போகின்றன என்று சொல்லியிருக்கிறார். இது அவருடைய நோக்கில் இலக்கியத்தின் உச்சங்கள் இயல்பாகவே உயரிய மானுடவிழுமியங்களைச் சார்ந்து இருக்கும் என்பதன் வெளிப்பாடே.

இந்நூல்களை பேராசிரியர் ஜி.ஜான் சாமுவெல் வெளியிட்டார். அவர் அப்போது சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். கடைசிக்காலத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை.

ஜான்சாமுவேல் இங்கிருந்து ஆரம்பிக்கிறார். 2003ல் ‘தமிழகம் வந்த தூய தோமா’ என்ற நூலை அவர் எழுதினார். இந்தியச் சிந்தனைகள் அனைத்துமே தமிழகம் வந்த தோமஸால் உருவாக்கப்பட்ட¨வையே என்று அதில் வாதிடுகிறார். [ ஹோம் லேண்ட் பதிப்பகம். 23, திருமலைநகர் இணைப்பு, பெருங்குடி,சென்னை 600096 ]

இந்த கருத்தை ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் இருவரும் வெற்றிகரமாக அமெரிக்க இவாஞ்சலிஸ்டுகளுக்கு கொடுத்து ஏற்கச்செய்தனர். பொதுவாகவே மதப்பரப்புதலுக்கு உள்ளாக்கப்படும் நாடுகளின் வரலாற்றை முழுமையாக மாற்றி எழுதுவது கிறித்தவ மரபு. அந்த மாற்றப்பட்ட வரலாற்றை அம்மக்களை ஏற்கச்செய்யும்போதுதான் மதமாற்றம் நிரந்தரமாகும் என்று எண்ணுகிறார்கள்.

இந்த வரலாற்று மறு உருவாக்கத்தில் பொதுவாக இரு கூறுகள் செயல்படும். இவற்றை மிகமேலோட்டமாக சமகால ஆப்ரிக்க ஆசிய வரலாறுகளை அணுகினாலே காணமுடியும். ஒன்று அந்நாடுகளில் பண்பாடு, சிந்தனை, மெய்யியல் எதுவும் பூர்வீகமாக இருந்ததில்லை, கிறித்தவம் மூலமே அவை கொண்டுவரப்பட்டன என்று நிறுவுவது. மதம்மாறியவர்கள் அந்த அப்பழைய காலத்தை ‘இருண்டகாலம்’ என்று சொல்லத்தலைப்படுவார்கள்.

இரண்டு அந்த தேசத்தை இரு பெரும் இனப்பிரிவுகளாகப் பிரித்து அதில் ஒன்று இன்னொன்றை முழுமையாக அடக்கி ஆண்டது, அந்த நாட்டின் அனைத்து இழிவுகளுக்கும் அந்த அடக்கியாண்ட இனம்தான் காரணம் என்று நிறுவுவது. பலநாடுகளில் அப்படி குறிப்பிடப்படும் இரு இனங்களிலும் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளக்கூட உரிமை இருக்கும்! உதாரணம் ரவாண்டாவின் டுட்சி-ஹூடு இனங்கள். நைஜீரிஒயா, சியலா லியோன் போல ஆப்ரிக்க நாடுகள் ஒவ்வொன்றிலும் மாற்றமே இல்லாமல் இதே வரலாற்றுபாணியை கிறித்தவ மதப்பரப்பாளர்கள் கடைபிடித்திருப்பதைக் காணலாம். அந்த வெறுப்புகள் பெரும் இனக்கலவரங்களாக வெடித்து ரத்த ஆறை ஓடவிட்டுக்கொண்டிருக்கின்றன.

ஜான்சாமுவேல்-தெய்வநாயகம் உருவாக்கிய இந்த வரலாற்று உருவகம் இவ்விரு அம்சங்களையும் தெளிவாகவே கொண்டிருப்பதைக் காணலாம். தமிழகத்தில் திராவிட இயக்கம் ஆரிய வெறுப்பை கால்டுவெல்லில் இருந்து கண்டெடுத்து முன்வைத்தது, அது தமிழகத்தில் புதிதல்ல என்றாலும் இந்நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டுகிறது. ஆரியர்களையும் பிராமணர்களையும் கிட்டத்தட்ட ரத்தவெறிகொண்ட பேய்களைப்போல சித்தரிக்கின்றன இந்த நூல்கள். இரண்டாவதாக இந்தியாவில் உள்ள அனைத்துச் சிந்தனைகளையும் கிறித்தவமே கொண்டுவந்தது என்று வாதிடுகின்றன.

ஆகவே இந்தக் கருதுகோள் ஏற்கப்பட்டது. பெரும் நிதியுதவியுடன் முதல் ‘இந்தியாவில் ஆதி கிறித்தவம்’ என்ற தலைப்பில் முதல் சர்வதேச கருத்தரங்கு ஜான்சாமுவேலை முதன்மை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு தெய்வநாயகம் மற்றும் தேவகலா ஆகியோர் முக்கியப்பங்காற்ற 2005 ல் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. நியூயார்க்கில் மதப்பரப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான டாக்டர் சுந்தர் தேவப்பிரசாத் அதற்கான அமெரிக்க தொடர்பாளர்

கருத்தரங்க மலரில் ஆர்ச் பிஷப் ஆ·ப் காண்டர்பரியின் வாழ்த்துச்செய்தி உள்ளது. செனெட்டர் ஹிலாரி கிளிண்டனின் வாழ்த்துச்செய்தி, ஹெலென் மார்ஷல், பரோ ஆ·ப் குயீன்ஸ் நியூயார்க் அவர்களின் வாழ்த்துச்செய்தி, நியூயார்க் மேயரின் வாழ்த்துச்செய்தி, கவர்னர் ஜார்ஜ் படாகியின் வாழ்த்துச்செய்தி ஆகியவை உள்ளன.ஹிலாரி கிளிண்டன் நேரில்வந்து பங்கெடுத்தார். வழக்கம்போல இந்தியாவின் முக்கியமான எல்லா கிறித்தவ திருச்சபையில் இருந்தும் வாழ்த்துச்செய்திகள் உள்ளன. மலபார் சர்ச்சின் ஆர்ச் பிஷப், சிரியன் மலங்கர திருச்சபை ஆர்ச் பிஷப்,சி.எஸ்.ஐ பேராயத்தின் ஆயரின் வாழ்த்துச்செய்தி போன்றவை உள்ளன

அத்துடன் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்த்துச்செய்தியும் உள்ளது. தமிழக கிறித்தவத்தின் இருபது நூற்றாண்டுப்பழமையில் பெருமைகொள்வதாக சொல்லும் முதல்வர் அது ஒரு மிக அறிவார்ந்த நிகழ்வாக இருக்கும் என்று வாழ்த்துகிறார். (அதானே பார்த்தேன், இந்துக்களை திட்டவேண்டுமென்றே அவதாரம் எடுத்தவராயிற்றே, மாண்புமிகு முதல்வர்)!

மாநாட்டின் நோக்கம் முதலிலேயே ஜான் சாமுவேலால் தெளிவுறச் சொல்லப்பட்டுவிடுகிறது. தாமஸ்கிறித்தவமே இந்துமதம் என்றும் அதை ஆரியபிராமணர் அழித்தார்கள் என்பதும்தான் அது. தாமஸ் பற்றிய ஒரு துதியுடன் மலர் ஆரம்பிக்கிறது. குடுமி வைத்து பூணூல் போட்டு அரைநிர்வாணமாக தோன்றும் கொடூரமான ஒரு பிராமணன் காவி உடை அணிந்து முழந்தாளிட்டு ஜெபம்செய்யும் தாமஸை பின்னாலிருந்து ஈட்டியால் குத்திக்கொல்லும் வண்ணச் சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் சைவசித்தாந்தம் இந்துமதம் போன்ற தலைப்புகளில் மீண்டும் மீண்டும் தெய்வநயகமும் தேவகலாவும் கட்டுரைகள் சமர்ப்ப்பித்திருப்பதைக் காணலாம். அத்துடன் பெரும்பாலான கட்டுரைகள் ஒரே குழுவினரால் உருவாக்கப்பட்டவைபோல ஒரேவகையான திரிப்புகள் ஒரேவகையான சொற்றொடர்கள் மையக்கருத்துக்களுடன் காணப்படுகின்றன.

இந்த மாநாட்டில் ஹெப்ஸிபா ஜேசுதாசன் ‘Early Christianity in Tamil Nadu’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில் தமிழின் எல்லா பண்டைய இலக்கியங்களும் கிறித்தவ தாக்கத்தால் உருவானவையே என்று அவர் வாதிட்டிருக்கிறார்.

இரண்டாவது சர்வதேசக் கருத்தரங்கு ஜான் சாமுவேலை தலைமையாகக் கொண்டு ஜனவரி 2007ல் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதற்கு குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார். ஆர்ச் பிஷப் மயிலை-சென்னை ஏ.எம்.சின்னப்பா தொடங்கி ஏறத்தாழ எல்லா சபைத்தலைவர்களும் ஆசியுரை வழங்கியிருக்கிறார்கள். முதல் கருத்தரங்கு பெரும் வெற்றிபெற்று இந்தியவரலாற்றைப்பற்றிய மறுக்க முடியாத கருத்துக்களை நிறுவி விட்டது என்று சொல்லும் ஜான் சாமுவேல் அதை மேலும் விரிவுபடுத்தவே இந்த கருத்தரங்கு என்று குறிப்பிடுகிறார்.

டி.தயானந்தன் ·ப்ரான்ஸிஸ், எஸ்ரா சற்குணம், ஹெப்ஸிபா ஜேசுதாசன் போல தமிழில்பரவலாக அறியப்படும் கிறித்தவ சிந்தனையாளர்கள் அனேகமாக அனைவருமே இந்த அரங்கில் கருத்துக்களை முன்வைத்திருப்பதைக் காணமுடிகிறது. எல்லா கருத்துக்களும் ஒரே சாரம் கொண்டவை. ஹெப்ஸிபா கம்பராமாயணம் கிறித்தவ சாரம் கொண்ட நூல் என்கிறார்.

இப்போது இந்த கருத்தரங்குகளின் நீட்சியாக ‘தமிழர் சமய உலக முதல் மாநாடு’ 2008 ஆகஸ்டு 14 முதல் 17 வரை சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட அருட்பணி மையத்தில் [ரோஸரி சர்ச் சாலை சாந்தோம், சென்னை 600004] நடக்கவிருக்கிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராயர் முனைவர் எ.எம்.சின்னப்பா [சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம். சாந்தோம்.சென்னை] முனைவர் மு.தெய்வநாயகம் நிறுவனர் உலக தமிழர் ஆன்மவியல் இயக்கம் சென்னை. துணைஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், முனைவர் தெ.தேவகலா அமைப்பாளர் உலகத்தமிழர் ஆன்மவியல் இயக்கம்.

இவ்வரங்கின் கோஷமாக முன்வைக்கப்படுவதை அதன் அறிவிப்பு இதழில் காண முடிகிறது. ‘ஓவ்வொருவரும் தன்மான உணர்வுடன் பிறப்பால் ஏற்றதாழ்வு கற்பிக்கும் இந்துத்துவாவின் பிடியில் இருக்கும் இந்து மதத்தைச் சார்ந்தவனாக தன்னைக் கூறாமல் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவன் என்று அறிவித்து இந்துத்துவாவின் பிடியில் இருந்து விடுபட்டு தன்னுடைய பழைய சிறப்பு நிலைக்கு திரும்ப வேண்டும்’

அழைப்பிதழின் அட்டையில் உலக உருண்டைக்கு மேல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியும் ‘ஒன்றேகுலம் ஒருவனே தேவன் ‘என்ற வரியும் கொடுக்கப்பட்டுள்ளன. அழைப்பிதழிலேயே மாநாட்டில் பேசுபொருட்கள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. தமிழர் சமயம் என்பது தோமாகிறித்தவமே என்பதுதான் அது.

இந்த மாநாட்டுக்குப் பின் ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவில் தாமஸ் இந்தியாவந்தது, வாழ்ந்தது பற்றி ஒரு ஆங்கில-தமிழ் திரைப்படம் எடுக்கப்போவதாகவும் அதில் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட முக்கிய நடிகர்களை நடிக்கவைக்கப்போவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏன் செய்ய மாட்டார்கள், துட்டு கொழுத்து கிடக்கிறதே)!

****

தத்துவ வரலாற்றுப் பரிச்சயமே இல்லாமல் , மிக எளிமையான தர்க்கங்களுடன் , கிட்டத்தட்ட கிறுக்குத்தனமாக உருவாக்கபப்ட்டுள்ள இந்த கருத்தமைப்பு குறித்து ஏன் இத்தனை எழுதவேண்டும் என்றால் இதன் பின்னணியில் உள்ள பணம் மற்றும் அமைப்புபலம்தான். ஜான்சாமுவேல் மற்றும் தெய்வநாயகம் மூளையில் உதித்த இந்தக் கரு இப்போது பலகோடி ரூபாய் புரட்டும் சக்தியுடைய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. தமிழ் அறிவுஜீவிகளில் பணத்துக்காகப் பேசாதவர்கள் மிகச்சிலரே.

இப்போதே அ.மார்க்ஸ் இந்தக் கருத்தரங்கில் பேசவிருப்பதாக எனக்கு இவ்விதழ்களை அளித்தவர் சொன்னார். அ.மார்க்ஸ் அவ்வளவு எளிதாக தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஆனால் அவரும் தமிழில் புகழ்பெற்ற அறிவுஜீவிகளான எஸ்.வி.ராஜதுரை, தொ.பரமசிவன், ஞானி, தமிழவன், குமரிமைந்தன் போன்றவர்களை சாதாரணமாக இந்த அமைப்பு திரட்டிவிடமுடியும். அவர்களை உள்ளே இழுக்கவேண்டிய இடைவெளிகளை இந்த கருத்தமைப்பு அதற்கான தந்திரங்களுடன் உள்ளே விட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்ச்சூழலில் பிரபலமாக உள்ள கருத்துக்களை எடுத்து சற்றே திரித்து தோமா வரை கொண்டுசெல்வது இதன் வழி.

உதாரணமாக இந்தியசிந்தனை முழுக்கவே குமரிக்கண்டத்தில் இருந்து வந்தது என்ற கருத்து குமரிமைந்தனுக்கோ ஞானிக்கோ உவப்பானதுதான். தமிழர்களின் சிந்தனையை ஆரியர் அழித்தார்கள் என்றோ இந்துஞானம் என்ற ஒன்று இல்லை என்றோ சொன்னால் தொ.பரமசிவம் அதை ஏற்றுப்பேசுவார்தான். அவர்களை உள்ளிழுக்கும்படி ஒரு பொதுவான தலைப்பில் ஓர் அரங்கை உருவாக்கி அதில் அவர்கள் தங்கள் இடத்தைமட்டும் பேசிவிட்டுச்செல்ல செய்தால்போதும். இயல்பாக அடுத்தபடிக்கு தெய்வநாயகமும் ஜான்சாமுவேலும் நகர்ந்தால் இவர்கள் பேசாமலிருப்பார்கள்.

மெல்லமெல்ல இது ஒரு வலுவான தரப்பாக ஆகும். உதாரணமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கமலஹாசன் சொன்னார். ‘திருவள்ளுவரை சிலர் சமணர் என்ற்கிறார்கள் சிலர் சைவர் என்கிறார்கள் சிலர் கிறிஸ்தவர் என்கிறார்கள்…’ என்று. 1970 களில் ஆர்ச்பிஷப் அருளப்பா காலத்தில் மோசடியாக செப்பேடு ஒன்று உருவாக்கப்பட்டு திருக்குறள் ஒரு கிறித்தவ நூல் என்று சொல்லப்பட்டது. பின்பு அது மோசடி என்று நிரூபிக்கப்பட்டது. ஆர்ச் பிஷப் மன்னிப்பு கோரினார். இன்று அது இயல்பான ஒரு வரலாற்று ஊகமாக ஆகிவிட்டிருப்பதை பாருங்கள். (மக்களுக்கு மறதி என்று உண்டல்லவா)?

அதேபோல இந்திய மெய்ஞானம் முழுக்கமுழுக்க கிறித்தவர்களால், இல்லை தன்னந்தனியாக வந்த ஒரே ஒரு கிறித்தவரால், [தாமஸ் தனியாகவே வந்தார் என்கிறார் தெய்வநாயகம்] கொண்டுவரப்பட்டது என்பதும் தமிழ் வரலாறு பற்றிய பல கோட்பாடுகளில் ஒன்றாக ஆகிவிடும். மெல்ல பாடபுத்தகங்களில் இணைக்கவும் படும். அதை மறுப்பவர்களை இந்துத்துவர்கள், பார்ப்பனியர்கள், சாதியவாதிகள் என்றெல்லாம் முத்திரை குத்தி வசைபாட ஆரம்பித்தால் ஐயங்கள்கூட மெல்ல இல்லாமலாகும்

***
உண்மையில் தாமஸ் இந்தியா வந்தாரா? வந்திருக்கலாம். ஆனால் ஓரளவேனும் பொருட்படுத்தும்படியான வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை என்பதே உண்மை. இன்றுவரை அவரது வருகை அது ஒரு மதநம்பிக்கையாகவே உள்ளது. தாமஸ் பற்றி பொதுவாகவே அதிகம் தெரியாது. மிகவிரிவான கிறித்தவ ஆய்வுகள் நிகழ்ந்த மேலைச்சூழலில் அவரைப்பற்றி கத்தோலிக்க கலைக்களஞ்சியமே மிகக் குறைவான தகவல்களையே அளிக்கிறது.

பிற்காலத்தில் உருவான ஆக்டா தோமா என்ற சிறு நூலில் சில குறிப்புகள் உள்ளன. அதில் இருந்து அறியக்கூடியவை இவை. தாமஸ் கீழைநாட்டுக்கு மதத்தை பரப்புவதற்காக கிளம்பினார். அலக்ஸான்டிரியாவுக்கு வந்தார். ‘காப்டிக்’ திருச்சபையை நிறுவினார். அவர் ஆப்கானிஸ்தான் [காந்தாரம்] வழியாக இந்தியாவுக்கு நுழைந்தார். அதுவே இயல்பான பாதையாகும். அவர் அங்கே ஒரு மன்னனை மதம் மாற்றினார். கொல்லப்பட்டார். அவரது சடலம் மீண்டும் எடேஸாவுக்குக் கொண்டுபோகப்பட்டது. இதுவெ நமக்குக் கிடைக்கும் தகவல்.இதுகூட மிகப்பிற்காலத்தில் எழுதப்பட்ட ஒன்று.

ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய் நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவியும் மகன் வாசனையும் மதம் மாற்றினார். மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ் பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும் குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது!

நாணய ஆய்வுகளின் படி தாமஸ் வட இந்த்¢யாவுக்கு வந்திருக்கலாமென சில ஆய்வாள்ர்கள் சொல்கிறார்கள். தென்னிந்தியா வந்தமைக்கு எந்த விதமான புறவய ஆதாரமும் இல்லை. அவர் இந்தியாவந்தார் என்ற நம்பிக்கை ஐரோப்பாவில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் வாஸ்கோடகாமா முதலியோர் இந்தியா வந்தபோது இங்கே உள்ள கிறித்தவர்களைக் காண விழைந்திருக்கிறார்கள். இங்கெ மலபார் கடற்கரையில் ஒரு சிறு கிறித்தவ சமூகம் இருந்தது.அவர்களை அவர்கள் தாமஸ்கிறித்தவர்களாக அடையாளம் கண்டார்கள்.

ஆனால் அது பாரசீக வணிகர்களால் ஆன ஒரு சிறிய கிறித்தவக் குழுதான். தாமஸ் என்று அவர்கள் சொல்வது ஏழாம் நூற்றாண்டில் மதமாற்றக் குழு ஒன்றை கொண்டுவந்த ‘கானா தோமா’ வையே என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்புகளே அதிகம். ஏனென்றால் இன்றும் உள்ள மார்த்தோமா கிறித்தவர்களின் சபையும் பண்பாடும் பெரிதும் அராபியச் சாயல்கொண்டது. காப்டிக் சாயலே அதில் இல்லை. அவர்களின் போப் பாரசீகத்தில் பதவி ஏற்றார் என்று பண்டைக்கால குறிப்புகள் சொல்கின்றன [Cosmas Indicopleustes] ஆனால் அவர்கள் தாமஸால் மதமாற்றம் செய்யபப்ட்டவர்கள் என்று சொல்லப்படவில்லை.

பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின் தோமா கிறித்தவர்கள் தாங்கள் ஏசுவின் சீடரான தாமசால் மதமாற்றம்செய்யப்பட்டவர்கள் என்று நம்ப ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால் ரோமாபுரி கிறித்தவர்களான போர்ச்சுக்கல்காரர்களை எதிர்த்து தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதானால் அந்நிலைபாட்டை அவர்கள் ஏற்றார்கள் என்று சொல்லலாம். மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த சில தேவாலயங்களை தாமஸால் உருவாக்கப்பட்டவை என்று அடையாளம் சொல்வது அவர்களின் வழக்கம்.

சென்னைக்கு அருகே உள்ள புனித தோமையர் மலை தாமஸ் இருந்த இடமாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளது தாமஸ் அங்கே கற்சிலுவை ஒன்றை உருவாக்கினார் என்று சொல்லி சில கல்வெட்டுகளைக் காட்டுகிறார்கள். தாமஸின் காலத்தில் கிறித்தவ மதத்தில் சிலுவை வழிபாடு வேரூன்றவில்லை என்றும் புனித தாமையர் மலையில் உள்ள சிலுவையில் உள்ள எழுத்துக்கள் மிகவும் காலத்தால் பிந்தியவை என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவ்வெழுத்துக்கள் இன்றுவரை அதிகாரபூர்வ புறவய ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. தாமஸ் தெற்கு அமெரிக்க நாடுகளுக்குச் சென்றதாககூட நம்பிக்கை உள்ளது.

தாமஸின் இந்திய வருகையை பற்றி மேலைநாட்டு ஆய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. அதை ஒரு மதநம்பிக்கை என்று மட்டுமே கொள்கிறார்கள். பெரும்பாலான மதநம்பிக்கைகள் காலத்தால் பலவாறாக உருமாற்றப்பட்டவை. மொழியில் எவ்வகையிலோ இருந்துகொண்டிருப்பவை.

இந்திய நிலப்பகுதியில் வெளிநாட்டவர்கள் சரித்திரகாலம் முன்பே வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிரேக்கர்களும் ரோமர்களும் வந்திருக்கிறார்கள். அபிசீனியர்களும் அரேபியர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களின் சிந்தனைகள் இந்தியாவில் எந்த அளவுக்கு பாதிப்பைச் செலுத்தியிருக்கும்? இந்திய நூல்களைப் பார்க்கும்போது புறச்சிந்தனைகளின் பாதிப்பை பெரும்பாலும் காணமுடிவதில்லை. யவனர்கள் தமிழ்நாட்டில் காவலர்களாகவும் வணிகர்களாகவும் சகஜமாகப் புழங்கியிருக்கிறார்கள். ஆனால் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் எவரது சிந்தனைகளையும் நாம் தமிழிலக்கியத்தில் காணமுடியாது. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் ஒழிய.

இதையே சீன சிந்தனைகளுக்கும் சொல்லலாம். நமக்கும் சீனாவுக்குமான உறவு என்பது மிகமிக தொன்மையானது. சீனப்பொருட்கள் இங்கே மிக விரிவாகப் பரவின. நம்முடைய தச்சு சாஸ்திரத்தின் சீனப்பாதிப்பு மிக விரிவானது. இருந்தும் சீனச் சிந்தனைகள் நம் இலக்கியங்கலில் துளியேயும் காணப்படுவதில்லை. உரையாசிரியர் குறிப்புகளில்கூட ஒரு பெயர் இல்லை. ஏன், நமது பண்டைய மொழியில் கிரேக்க,லத்தீன், அராமிக், சீன சொற்கள்கூட இல்லை. மீண்டும் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு தேவை.

ஏன்? இரு ஊகங்களைச் செய்யலாம். ஒன்று இங்கே சிந்தனையில் ஒருவகை செவ்வியல்தன்மை நிலவியது. செவ்வியல் எப்போதும் தன்னைத்தானே மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருக்கும். நுட்பமான வித்தியாசங்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தும். தமிழிலக்கிய வாசகன் எளிதில் இதைக் கண்டடையலாம். இந்த அம்சம் புறப்பாதிப்பை முழுமையாக உதாசீனம் செய்யும்.

இரண்டு, மலையாள வரலாற்றாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் செய்யும் ஊகம். அதாவது நம் நாட்டுக்கு வந்த அன்னியர் கடலோரங்களில் தனிச்சமூகமாக வாழ்ந்துசென்றனர். அவர்களுக்கும் நம் சமூகத்தின் மையத்துக்கும் எந்தவிதமான உரையாடலும் நிகழவில்லை. இப்போதுகூட கடற்கரை நம் மையப்பண்பாட்டில் இருந்து மிக ஒதுங்கியதாகவே உள்ளது.

இதற்கு பி.கே.பாலகிருஷ்ணன் ஒரு சான்று சொல்கிறார். [ஜாதி வியவஸ்தையும் கேரள சரித்ரமும்] அரேபியரும் கிரேக்கரும் ஒரே காலகட்டத்தில் மேற்குக் கடற்கரைக்கு வந்து சென்றார்கள். பலநூறு வருடம். கிரேக்கர்கள் நல்லமிளகை கேரளத்தில் கோழிக்கோட்டில் வாங்கினார்கள். போகும் வழியில் அரேபியாவில் இருந்து சுக்கு வாங்கினார்கள். அதை ஒரு அரேபியப்பாலைவன வேர் என்றே பலநூற்றாண்டுக்காலம் அவர்கள் நம்பினார்கள். அரேபியர்கள் சற்று கீழே கொல்லத்தில் இருந்து சுக்கு வாங்கிக்கொண்டுசென்று தங்கள் நாட்டில் வைத்து விற்றார்கள்.

அந்த அளவுக்கு அன்றைய உரையாடல் இருந்திருக்கிறது. கிரேக்கர்கள் தங்களுக்கு நல்ல மிளகை விற்றவர்களிடம் பேசியே இருந்திருக்கமாட்டார்கள். நம் மரபை வைத்துப் பார்த்தால் அந்த வணிகத்தை நடத்த ஒரு தனி சாதி உருவாகியிருக்கும். அவர்கள் அதைச் செய்வார்கள். மற்றவர்களுக்கு தொடர்பே இருக்காது. ஆகவேதான் ஆயிரம் வருடம் கிரேக்கர் வந்து போன மலையாளச்சூழலில் ஒரு சிறு கிரேக்க தடையம் கூட கிடையாது, மொழியில் பண்பாட்டில். இப்படித்தான் நம்முடைய பண்பாடும் இருந்துள்ளது.

தாமஸ் வந்திருந்தால்கூட கடற்கரையோரம் மிகச்சிறிய ஒரு சமூகத்தை உருவாக்குவதுடன் அவரது பணி முடிந்திருக்கும். அவரது காலம் வரலாற்றுத் தொடக்க காலம். அவருக்குப் பின்பு, சாலைகளும் தொடர்புகளும் பலமடங்கு பெருகியபின், வந்த புனித சவேரியார் பல காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்திருக்கிறார். அவருக்கு தமிழிலக்கியத்தில் சிந்தனையில் பண்பாட்டில் உள்ள பங்களிப்பு என்ன? பைபிளின்படி தாமஸ் தத்துவம்கற்றவர் அல்ல. ஆனால் சவேரியார் ஒரு தத்துவஞானி. சவேரியாரின் பணி கடலோரங்களில் தொடங்கி அங்கேயே முடிந்தது. அவரது பெயர்கூட நம் இலக்கியங்களில் இல்லை

அதேப்போல முகமது நபிக்குபின் நெடுங்காலம் முஸ்லீம்கள் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பதிமூன்றாம்ன் நூற்றாண்டில் அவர்கள் வட இந்தியாவிலிருந்து படையெடுபப்து வரை அவர்களின் பாதிப்பு தமிழ்ச் சிந்தனையில் மிகமிகக் குறைவே.

இந்த தர்க்கமெல்லாம் தெய்வநாயகம் போன்றவர்களின் கண்மூடித்தனமான பிரச்சார வேகம் முன் ஒன்றும் செய்யமுடியாது. ஆயினும் இதுவே சிந்திக்கும் பழக்கம் உடையவர்களுக்கான பதில். நாளை அவர்களின் மேடை ஏறி முழங்கப்போகும் தமிழ் திராவிட அறிவுஜீவிகளுக்கும் இதுவே விளக்கம்.

****

கிறித்தவ மரபில் தாமஸ் முக்கியமானவர் அல்ல. ஏனென்றால் அவர் கிறிஸ்துவை ஐயப்பட்டவர். இருந்தும் ஏன் அவரை திடீரென மீட்டெடுக்கிறார்கள்?

இந்திய பாரம்பரியம் கிறித்தவம் வருவதற்கு முன்பு சிந்தனையற்ற இருண்டகாலம் கொண்டிருந்தது என்று சொல்வதற்கு தடையாக உள்ளவை இங்குள்ள பேரிலக்கியங்கள். அவற்றை மறைப்பது கடினம்.ஆகவே அவற்றின் காலத்தை பின்னுக்குத்தள்ளி கிறித்தவத்தின் வருகையை முன்னுக்குக் கொண்டுசெல்கிறார்கள். அதற்கு தாமஸ் தேவையாகிறார். (என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் விளையாட்டாக கலாய்ப்பதற்கே ஒட்டக்கூத்தர் வரவேண்டியிருந்தது, ஆனால் இவர்கள் வினையானவர்கள், அவ்வளவே).

தாமஸின் சுவிசேஷம் என்று ஒன்று எகிப்தில் நாக் ஹமாதியில் கிடைத்துள்ளது. [விவிலியத்தின் முகங்கள் - ஓர் அறிமுகம் ]பாப்பிரஸ் சுவடிகளில் எழுதப்பட்ட அந்தச்சுவடி கார்பன் டேட்டிங் முறைப்படி கிபி இரண்டாம்நூற்றாண்டுக்கு முந்தியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தாமஸ் எகிப்தில் வாழ்ந்தார் என்ற வரலாற்றுடனும் காப்டிக் சர்ச்சை நிறுவினார் என்ற வரலாற்றுடனும் அந்த விஷயம் பெருமளவு ஒத்துப்போகிறது. ஆய்வாளர் நடுவே அச்சுவடி ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதப்படுகிறது

அந்த சுவிசேஷத்தில் [மறைக்கப்பட்ட பைபிள்: தோமையர் எழுதிய சுவிசேஷம்] தாமஸ் ஏசுவை ஒரு தேவனாக, கடவுளின் மகனாக முன்வைக்கவில்லை. மாறாக ஒரு ஞானகுருவாக முன்வைக்கிறார். கிறிஸ்து வானத்தில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வரவில்லை, மண்ணில் உள்ள சொற்கத்தைப்பற்றி பேசுபவராக வருகிறார். பைபிளின் அதிகாரபூர்வ வரிகளில் இருப்பதைவிட ஆழமும் கவித்துவமும் கொண்டவையாக அவ்வரிகள் உள்ளன. நாக் ஹமாதியிலும் செங்கடல் பகுதிகளிலும் கிடைத்த பல பைபிள் வடிவங்களை வலுவான தொல்பொருள் சான்று இருந்த போதிலும்கூட கத்தோலிக்கத் திருச்சபை நிராகரித்துவிட்டது. ஆனால் எந்த உறுதியான ஆதாரமும் இல்லாமல் இந்தியப் பண்பாடே தாமஸ் என்ற தனிநபரால் உருவாக்கப்பட்டது என்று நிறுவ முயல்கிறது.

மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப் பேசியிருக்கிறேன்:"மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்"

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

அதற்கும் அப்பால்சென்று கிறிஸ்துவின் சொற்களில் வெளிப்படும் மானுடநீதிக்கும் எளியவர்மீதான கருணைக்குமான குரலை இவர்கள் கேட்டிருந்தார்கள் என்றால் கிறிஸ்துவை முன்வைப்பதற்கு இத்தனை பொய்களைச் சொல்ல கூச மாட்டார்களா? தியாகத்தின் சிலுவையுடன் கிறிஸ்து வரட்டும், கள்ளநோட்டு எந்திரத்துடன் வரவேண்டாம்.

(சபாஷ் ஜெயமோகன் அவர்களே)

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/11/2008

கைவசம் நல்ல வேலை உளவாக ஆராய்ச்சிக் கல்வி பெறுவது கனியிருப்பக் காய் கவர்ந்தற்று

நண்பர் சந்திரசேகரன் (Hayek Order) எனக்கு அனுப்பிய இக்கட்டுரையை எழுதிய John Samuel Raja D மேலும் கூறுகிறார், "மோசமான ஆசிரியக்குழு மற்றும் மிகக் குறைவான ஸ்காலர்ஷிப் தொகையும் இதற்குக் காரணமே என்று. முழு கட்டுரையையும் எனது ஆங்கிலப் பதிவில் காணலாம்.இங்கு சுட்டவும்.

நான் படித்த அகாதா கிறிஸ்டியின் நாவல் 4.50 from Paddington இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. அதில் வரும் லூசி என்னும் பெண்மணி கணிதத்தில் எம்.ஏ. படித்தவர். அவர் மார்க்கெட்டை கூர்ந்து கவனித்து எடுத்த வேலை ஹவுஸ்கீப்பிங்தான். அதில் நல்லபடியாகச் செயல்பட்டு வந்ததில் அவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட். அவரை புக் செய்ய பெரிய கியூவே இருந்தது. சில நாட்களுக்கு மட்டும்தான் ஒவ்வொரு அசைன்மெண்டும் எடுத்து கொள்வார். எங்கும் முழுநேர வேலைக்கு போக மாட்டார். என்னை மாதிரி ஃப்ரீலேன்ஸ் என்று வைத்து கொள்ளுங்களேன்.

இதையெல்லாம் நான் கூறுவதை விட மேலே குறிப்பிட்ட அந்த கட்டுரை மிகச் சிறப்பாகவே கூறுகிறது. கீழே தடித்த சாய்வெழுத்துகளில் அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பு வருகிறது.

Madras School of Economics (MSE) -ன் டைரக்டர் D K ஸ்ரீவாஸ்தவ் அவர்கள் ஆண்டுதோறும் ஐம்பது எம்.ஏ. மாணவர்கள் பட்டம் பெற்ற கையுடன் நல்ல வேலையை சம்பாதித்துக் கொண்டு போவது குறித்து ஏமாற்றத்தால் வருந்துகிறார்.

ஏனெனில் அவர்களில் யாருமே பி.எச்.டி. பெறுவதிலோ டாக்டரேட் படிப்புகள் படிப்பதிலோ அக்கறை காட்ட மாட்டேன் என்கிறார்கள். நல்ல உயர்தர மாணவர்களை இப்படிப்புக்கு இழுப்பது கடினமாகவே உள்ளது.

இந்த பிரச்சினை சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ளது என்று கூறப்படுகிறது

"மாஸ்டர்ஸ் டிகிரி முடிந்ததும் நல்ல வேலை பெற்று வெளியில் சென்று விடுகின்றனர்" கூறுகிறார் ஸ்ரீவாஸ்தவ்.

ஆராய்ச்சி மாணவர்களின் இந்த வறட்சி சாதாரணமான மற்ற கல்வி கழகங்களுக்கு மட்டும்தான் இதுவரை இருந்துள்ளது. ஆனால் தற்போதோ மிகச் சிறந்த முன்னணி கல்வி அமைப்புகளும் இந்த வறட்சியிலிருந்து தப்பவில்லை என அவர் கூறுகிறார்.

அமார்த்யா சென் போன்ற நோபல் பரிசு பெற்றவர்கள், வணிக பொருளாதார நிபுணர் ஜகதீஷ் பகவதி ஆகியோர் சிலரை மேற்கோள் காட்ட முடிந்தாலும் இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் நடைபெறும் ஆய்வு சர்வதேச தரத்துக்கு ஏற்றதாக இல்லை.

உயர்தரமற்ற ஆசிரியர் குழுக்கள், குறைந்த அளவு ஸ்காலர்ஷிப் பணம், வேலை வாய்ப்பு ஆகிய விஷயங்களே நல்ல மாணவர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்று இந்த கட்டுரை சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்ட நான்கு பொருளாதார நிபுணர்கள் கூறினர். அவர்களில் மூவர் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள்.

"அவ்வாறு பி.எச்.டி. படிக்க விரும்பும் மாணவர்களும் வெளிதேச பல்கலைக் கழகங்களுக்கு செல்லவே விரும்புகின்றனர், ஏனெனில் அங்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் நமது இந்திய நிறுவனக்களுக்கு கட்டாது" என்று கூறுகிறார் IGIDR-ன் டைரக்டர் D. M. Nachane அவர்கள்.

இங்குள்ள ஆய்வு மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித் தொகை மாதத்துக்கு Rs 6,000 முதல் Rs 14,000 வரைதான்; சில இடங்களில் அது ரூபாய் 25,000 வரை கூட செல்கிறது. ஆனால் வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பாடக் கட்டணம் தள்ளுபடி, கூடவே மாதம் $800-லிருந்து $1,500வரை உதவித் தொகை. சான்ஸே இல்லை இந்திய கல்வி நிறுவனங்களுக்கு.

Nachane மற்றும் Srivastava உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். இது பற்றி MSE மற்றும் IGIDR சிந்தித்து வருகின்றன. Delhi School of Economics (DSE) கருத்து ஏதும் கூறவில்லை.

மாஸ்டர்ஸ் டிகிரியுடன் வரும் MSE மற்றும் IGIDR மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆறு லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கிறது. பி.எச்.டி. முடித்தால் மேலே 50,000 ரூபாய் கிடைக்கலாம் அவ்வளவுதான் என்கிறார் IGIDR-ன் Nachane.

ஆக இந்த விஷயத்தில் பி.எச்.டி. செய்வது ரொம்ப காஸ்ட்லியாகப் போய்விடுகிறது என்றும் அவர் கூறுகிறார். நேரே வேலைக்கு சென்றால் 4 ஆண்டுகளுக்கு 24 லட்சம் கிடைக்குமே, அதை விட்டுவிட அவர்கள் என்ன கேனைகளா?

அதே சமயம் ஆசிரியர் குழுவும் பாடத்திட்டங்களும் கூட சொல்லிக் கொள்ளும் நிலையில் இல்லை என்று கூறுகிறார் மிச்சிகன் பல்கலை கழகத்தில் முன்னாள் பொருளாதார பேராசிரியர் பார்த் ஜே. ஷா அவர்கள்.

பல்கலைக் கழகங்களில் உள்ள சம்பளவிகிதங்கள் திறமைக்கேற்ற ஊதியம் தரும் அளவுக்கு வளைந்து கொடுப்பதாக இல்லாததும் நல்ல ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆறாம் சம்பள கமிஷன் இதை சரி செய்யும் என அபிப்பிராயப்படுகிறார் திரு. Nachane.

ஷா அவர்கள் இன்னொரு விஷயத்தை கூறுகிறார். கல்வி நிறுவனங்கள் எந்தப் பல்கலைக் கழகத்துடன் தாங்கள் இணைந்து கொள்வது என்பதில் சுதந்திரம் இருப்பது நலம் என்கிறார். தற்சமயம் இந்த இணைப்பு பூகோள அடிப்படையில் செய்யப்படுகிறது. அது நீக்கப்பட வேண்டும் அப்போதுதான் பல்கலைக் கழகங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நல்ல கல்வி நிறுவனக்களை தங்களுடன் இணைக்கச் செய்வதில் போட்டி ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.

தற்சமயம் ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து மாணவர்கள் ஓரிரண்டு காலம் வேலையில் இருந்துவிட்டு Madras School of Economics (MSE)-க்கு ஆய்வு படிப்புக்காக வருகின்றனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் கோர்ஸுகளுக்கு தயார் செய்து கொள்ளவே அங்கு வருகின்றனர். இனிமேலாவது அவர்களில் சிலர் இங்கேயே தங்குவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஸ்ரீவாஸ்தவ் அவர்கள்.


மீண்டும் டோண்டு ராகவன். பதிவை முடிக்கும் முன்னால் ஒரு சிறு கதை சொல்லுவேன். இதய நோய் நிபுணராக பணிபுரியும் நாச்சிமுத்து அவர்கள் தன் வீட்டு வாஷ்பேசினை ரிப்பேர் செய்ய பிளம்பர் பேச்சிமுத்துவை கூப்பிடுகிறார். ரிப்பேருக்கு பின் பேச்சி முத்து தனது பில்லை நாச்சிமுத்துவிடம் தருகிறார். அதைப் பார்த்து நம்ம நாச்சிக்கு ரொம்ப ஷாக். பெருமூச்சு விட்டவாறே கூறுகிறார், "என்ன இது எனது பில்லைவிட அதிகமாக இருக்கிறதே" என்று. நீங்கள் சொல்வது சரி சார், நான்கூட உங்களை மாதிரி டாக்டராக இருந்தபோது இவ்வளவு ஃபீஸ் பெற்றதில்லை" என்கிறார் முன்னாள் மருத்துவர் பேச்சிமுத்து.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/10/2008

பதிவர் சந்திப்பு 10-08-2008

எனது பஸ் காந்தி சிலையை அடைந்தபோது மணி சரியாக மாலை 05.30 ஆகியிருந்தது. வெண்பூ என்னும் வெங்கட், அதிஷா மற்றும் ஜிங்காரோ ஜமீன் ஏற்கனவே வந்து விட்டிருந்தனர். சுய அறிமுகங்களுக்கு பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கிருஷ்ணகுமார் என்னும் பரிசல்காரனிடமிருந்து தொலைபேசி அதீஷாவுக்கு வந்தது. அவருடன் பேசிவிட்டு என்னிடமும் செல்பேசியை கொடுத்தார். பரிசல்காரன் தனது மைத்துனர் ஆத்திலிருந்து பேசியதாகக் குறிப்பிட்டார்.

சிறிது நேரம் கழித்து ஜிங்காரோ ஜமீனும் அதீஷாவும் வெண்குழல் பற்றவைக்க சற்றே அப்பால் சென்றனர். அச்சமயம் பாலபாரதியும் லக்கிலுக்கும் வந்து சேர்ந்தனர். பாலபாரதி தன் செல்பேசியை எடுத்து அதீஷாவை உடனே வருமாறு அழைக்க, அவரும் ஜிங்காரோவும் ஆஜர். ஆனந்த விகடனில் வேலை செய்யும் ரமேஷ் வைத்யா அடுத்து வந்தார். முரளி கண்ணன் தனது சுட்டிப்பையனுடன் வந்தார். பையனை பீச்சுக்கு அழைத்து சென்றால்தான் அவர் பதிவர் மீட்டிங்கிற்கு வரமுடியும் என்பது அவரது தங்கமணியின் உத்திரவு என நினைக்கிறேன். சுட்டிப் பையன் சற்றுநேரம் சும்மா இருந்து விட்டு பிறகு பீச்சுக்குள்ளே போக வேண்டும் என அடம்பிடிக்க அவரும் தற்காலிகமாக விடை பெற்று சென்றார்.

வால்பையனுக்கு நான் ஃபோன்போட்டு அவர் எங்கிருக்கிறார் என விசாரித்தேன். அவர் ஈரோடில்தான் இருந்தார். அதீஷா லக்கிலுக் ஆகியோரிடம் பேச விருப்பமா என கேட்க, அவர் தானே தொடர்பு கொள்வதாகக் கூறி லைனை கட் செய்தார். பிறகு உடனேயே எனக்கு அவரிடமிருந்து இன்கமிங் கால் வந்தது. செல்பேசி அதீஷா, பாலபாரதி மற்றும் லக்கிலுக் என எல்லோரிடமும் சென்றது. லக்கிலுக் பேசும்போது மழை பிடித்து கொண்டது. செல்பேசி, கடிகாரம் ஆகியவற்றை நான் தயாராக எடுத்து சென்றிருந்த பிளாஸ்டிக் பையில் போட்டு கொண்டு நான் கடலை நோக்கி விரைந்தேன். நல்ல மழையில் கடலில் காலை நனைக்கும் நோக்கத்துடன் சென்றேன். ஆசைதீர நின்றேன். மழையும் விட்டுவிடவே திரும்பினேன். மீட்டிங் வழக்கமான மொக்கையுடன் தொடர்ந்தது.

வால்பையன் மறுபடி ஃபோன் செய்து மருத்துவர் ப்ரூனோவுடன் பேச வேண்டுமென்றார். அவர் இன்னும் வரவில்லை. ஆகவே அவரது எண்ணை வால்பையனிடம் தந்து பேசச் சொன்னேன். மழை விட்டுவிட்டு வந்தபடியால் ரொம்பநேரம் மொக்கை போட இயலவில்லை.

லைட்ஹவுஸ் தாண்டி வழமையான டீக்கடைக்கு புறப்பட்டோம். அச்சமயம் கடலையூர் செல்வமும் வந்தார். டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது மருத்துவர் ப்ரூனோவும் வந்தார். அவரிடம் வால்பையனைப் பற்றிக் கூற அவர் வால்பையன் தன்னுடன் செல்பேசியதாகக் கூறினார். குசேலன் படு ஃப்ளாப் என்பதை லக்கிலுக் உறுதி செய்தார். அதே சமயம் தசாவதாரத்துக்கான விளம்பரமும் சரிவரச் செய்யவில்லை என்பதைத் தன் தொழிலறிவு பார்வையில் எடுத்துரைத்தார்.

முதலில் பாலபாரதி விடைபெற்று சென்றார். பிறகு ஒவ்வொருவராகக் கலைய நானும் பஸ்ஸை பிடித்து வீடு சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
11.08.2008 காலை 8 மணியளவில் சேர்த்தது:
மீட்டிங் முடியும் தருவாயில் அது நடப்பது பற்றி தெரியாது, வேறு காரணத்துக்காக எனக்கு ஃபோன் போட்டார் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள். மீட்டிங் விஷயத்தை அவரிடம் கூறினேன். ப்ரூனோவிடம் சற்று நேரம் பேசினார்.

8/09/2008

லீயுக்கும் சீயுக்கும் சண்டை (Mr. Lee and Mr. Chee agreed to have a fight)

என்னுடைய 'சார், நீங்கதான் ஆடம் ஸ்மித்னு நினைக்கிறேன்' பதிவுக்கு தூண்டுதலாக இருந்த நண்பர் ஜயகமல் இன்றும் (05.06.2008) ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். (காலதாமதத்திற்கு மன்னிக்கவும் ஜயகமல் அவர்களே).

அதில் 'லீயுக்கும் சீயுக்கும் சண்டை' குறித்து அதே Atanu Dey 04.06.08 அன்று எழுதிய கட்டுரையை ஃபார்வேர்ட் செய்துள்ளார். முதலில் அதை சுருக்கி தமிழில் மொழிபெயர்த்துவிடுகிறேன். அதற்கு இதுவரை வந்த 9 எதிர்வினைகளையும் அங்கேயே போய் பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதானு பேசுவார். அதில் நான் என வரும் இடங்கள் அதானுவையே குறிக்கும்:

30.05.2008 தேதியிட்ட நியூயார்க் டைம்சில் வந்த செய்தியின் தலைப்பை இவ்வாறு தமிழில் கூறலாம்:"சிங்கப்பூர் நீதிமன்றத்தில் விடாக்காண்டனும் கொடாக்கொண்டனும் மோதல்". மாஜி பிரதமர் Lee Kuan Yew, (லீ குவான் யூ, வயது 84) அவரது அரசியல் எதிரி Chee Soon Juan, (சீ சோன் ஜுவான், வயது 45) ஆகிய இருவர்தான் மோதுகின்றனர். லீயானவர் சீயுக்கு விரோதமாக மான நஷ்ட வழக்கு போடுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 2006-ல் சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றில் சீ சிங்கப்பூர் அரசுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். அதற்காகத்தான் லீ மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார். குற்றச்சாட்டைக் கண்டுகொள்ளாமல் விட லீ தயாராக இல்லை.

சீ கூறுவது உண்மையா பொய்யா என்பதை கோர்ட் தீர்மானிக்கட்டும். ஆனால் அது பொய் என்றால் எனக்கு நிம்மதி. ஏனெனில் நான் மிகவும் மதிக்கும் லீ தவறு செய்தார் என்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.

நான் ஏன் லீயை அந்த அளவுக்கு மதிக்கிறேன்? அவரது சாதனைகள்தான் காரணமாக இருக்க வேண்டும். NY Times-ல் லீ கூறியதாவது:

"லிட்மஸ் சோதனையாக 1959-ல் லீ பிரதமரான போது சிங்கப்பூர் இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் உள்ள நிலைகளின் வேறுபாட்டைப் பார்த்தாலே போதும். அப்போது அன்னியச் செலாவணி இருப்பு $100 மில்லியன்களுக்கும் குறைவே. ஆனால் தற்சமயம்? $300 பில்லியன்களுக்கும் மேலே".

சிங்கப்பூரின் ஜனத்தொகை சில லட்சங்களே. கொசுக்கள் நிறைந்த சதுப்பு நிலத்தை மூன்றாம் தர நாட்டின் நிலையிலிருந்து இப்போதைய முதல்தர பணக்கார நாடாக மாற்றியது லீ அவர்களின் சாதனை. குறைந்த அளவிலேயே லஞ்ச ஊழல்கள், சட்ட ஒழுங்கான நிலை, சுற்றுப்புறச் சூழலை மதிக்கும் நிலை ஆகியவற்றில் சிங்கப்பூரை மிஞ்சும் நாடுகளை லென்ஸ் கொண்டுதான் தேடிப் பார்க்க இயலும். இதற்காக எல்லாம் வெறுமனே வெட்டித்தனமான கரகரத்த குரலில் பொருளாதார சிகரங்களை தொடப்போவதாகவெல்லாம் பேசவில்லை. வெறுமனே அதை செய்ய மட்டும் செய்தார், அதுவும் ஒரு தலைமுறை காலத்திலேயே. அன்னியச் செலாவணியை 3000 மடங்குக்கு ஏற்றினார்.

லீ கூறுகிறார், சிங்கப்பூரின் இந்த நிலையை. ஆனால், சீ என்ன சொல்கிறார் என்றால் அதனால் ஜனநாயகத்தை அழித்ததை நியாயப்படுத்த முடியாது என்கிறார். ஊடகங்களின் சுதந்திரத்தையும் பறித்தார் என்றும், தான் எலெக்‌ஷன் மீட்டிங்குகளில் பேசுவதையும் அவர் தடுத்தார் என்றும் அவர் கூறுகிறார்.

நான், அதானு கூறுவது என்னவென்றால், அரசியல் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை நான் மதிக்கிறேன். நாகரீக உலகில் அவை அவசியமே. ஆனால் பட்டினி கிடப்பவனுக்கு அவற்றால் என்ன பயன்? பசி வந்திட பத்தும் பறந்து போகும்தானே. உங்கள் குழந்தைகள் பட்டினி கிடந்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்ய மாட்டீர்கள்? தனிப்பட்ட முறையில் நான் அச்சமயம் அரசியல் சுதந்திரமாவது மயிராவது என்றுதான் செயல்படுவேன்.

சீ மேலும் கூறுகிறார்: சிங்கப்பூரின் அன்னியச் செலாவணி இருப்புக்காக கொடுக்கப்பட்ட விலை மிக அதிகம் என்கிறார். அந்த விலையைத் தராமலேயே சிங்கப்பூரின் முன்னேற்றங்களும் எப்படியுமே வந்திருக்கும் என நம்புகிறார் அவர். ஆனால் எனக்கு அதில் சந்தேகம் உண்டு. நாடு ஏழ்மை நிலையில் இருக்கும்போது முன்னேறுவதை பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தால் பல சக்திகள் உள்ளே நுழைந்து இருக்கும் சிறிதளவு செல்வத்தையும் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்குமே பங்கு போட்ட நினைக்கும்.

இப்போது நான் எழுதும் இந்த வரிகளை படிக்கும் எவருமே பட்டினி கிடப்பவர்கள் அல்ல. ஆகவே தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பசியின் கொடுமை தெரியவில்லை. அந்த நேரத்தில் கருத்து சுதந்திரமாவது மண்ணாங்கட்டியாவது?

நான் வைக்கும் கேள்வி இதுதான். எந்த இடத்தில் கருத்து சுதந்திரம் பசியின் தேவையை மிஞ்சுகிறது? அதுவும் அந்த கருத்து சுதந்திரத்தைக் கேட்பவர் மிகச்சிலரே. ஆனால் பசியினால் வாடுபவர்கள் அவர்களை விட ஆயிரம் மடங்குக்கும் மேல் அதிகமானவர்கள். அப்படியே கருத்து சுதந்திரத்தை உபயோகிப்பவர்களும் செய்யப்போவது என்ன? பட்டினி கிடப்பவர்களை குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதுதான் அவர்கள் செய்யப் போவது. அம்மாதிரி கண்ணீர் வடிக்காது, வறுமையை ஒழிக்கும் செயல்களை செய்பவர்கள் எவ்வளவோ மேல்தானே.

தேவைகளை முன்னுரிமைகளின் அடிப்படயில்தான் கையாள வேண்டும். அந்த வகையில் முதலில் பொருளாதார முன்னேற்றம், பிறகுதான் கருது சுதந்திரம் போன்றவை. சுவாசிக்க காற்றே இல்லையென்னும் நிலையில் அதன் தேவை உணவு மற்றும் தண்ணீரை விட அதிகமே. அதே போல பட்டினியை ஒழிக்க நான் கருத்து சுதந்திரத்தை பலியிடவும் தயங்க மாட்டேன்.

மேலே கூறியதுடன் இதையும் கூறிவிடுகிறேன். இந்த விஷயத்தில் அவரவருக்கு அவரவர் அளவுகோல் உண்டு.

பின்குறிப்பு:

நான் ஏன் பட்டினி கிடப்பதற்கு அத்தனை அழுத்தம் தருகிறேன்? இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் கதி என்ன ஆகும் என்பதை நான் சொந்த முறையிலேயே உணர்ந்தவன். இரண்டு நாட்களுக்கே இந்தக் கோலம் என்றால், விடாது பட்டினி கிடப்பவரின் மனநிலையை ஊகிப்பதா கஷ்டம்? இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி மக்கள் இந்த நிலையில்தானே உள்ளனர். அவர்கள் நிலையில் நான் இருந்தால் சாத்தானுடன் கூட நான் ஒப்பந்தம் போட்டிருப்பேன். நம்ப இயலவில்லையா? கம்யூனிஸ்டுகளுக்கு வேறு எப்படி ஓட்டுகள் கிடைக்கிறதாம்?


இப்போது மீண்டும் டோண்டு ராகவன்.

ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு அதானு அவர்களே. கடைசி வரியைத்தான் நான் குறிக்கிறேன். பட்டினியில் வாடும் மக்களுக்கு சோஷலிச சொர்க்கத்தை வாக்குறுதியாக அளித்துத்தான் கம்யூனிஸ்டுகள் பஜனை செய்கின்றனர். கூடவே தங்கள் சீன எஜமானர்களுக்கு விசுவாசமாக இருப்பதை தற்போதைக்கு இப்பதிவில் ஒதுக்கிவிடலாம். பொருளாதாரம் மட்டும் பேசுவோம். கம்யூனிஸ்டுகளும் லீயும் கருத்து சுதந்திரத்தை மதிக்காதவர்கள் என்பதில் மட்டும்தான் ஒற்றுமை. ஆனால் லீ நிஜமாகவே பொருளாதார மேம்பாட்டை கொண்டுவந்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள்? சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விஷயங்களே லேது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: அதே சமயம் லீ செய்வது வேண்டாத வேலை. அவரைப் பொருத்தவரை அவர் நன்றாகவே செயல்பட்டு, சிங்கப்பூரை இந்த பெரிய அளவுக்கு கொண்டு வந்தார். சீ சொன்னதால் அவரது மானம் போய்விட்டதாக நான் நினைக்கவில்லை. தேவையின்றி சீயுக்கு இவர் முக்கியத்துவம் தருகிறார். இவர் என்ன பாப்புலாரிட்டி தேர்வுக்கா நிற்கிறார்? விட்டுத் தொலையுங்கள் லீ அவர்களே.

பி.பி.கு.: இப்போது பிளாக்கரில் My Blog List என்ற புது வசதி வ்ந்துள்ளதால், நான் பார்க்கும் வலைப்பூக்களின் லேட்டஸ்ட் பதிவுகளை அவற்றின் முதல் சில வரிகளுடன் சேர்த்து காட்ட இயலுகிறது. ஆகவே இதுவே எனது ஆங்கிலப் பதிவுகளை விரிவான அளவில் போடும் ரேஞ்சுக்கு என்னை கொண்டு சென்றுள்ளது. எனது இப்பதிவின் ஆங்கில லோக்கலைசேஷனைப் பார்க்கவும்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது