5/26/2011

டோண்டு பதில்கள் - 26.05.2011

Surya
கேள்வி-1. நெடுமாறன் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் சில உண்மைகள் இருந்தாலும் அவரது ஒரு சில கருத்துக்களுக்கும் நடை முறை உண்மைக்கும் சம்பந்தமே இல்லையே! மு.க.வின் தோல்விக்கு அவர் ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகமே என்று கூறி உள்ளார். மு.க. தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் தேர்தல் முடிவுக்கும் அதற்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது என் கருத்து. சீமானும் அப்படிதான் சொல்லிக்கொண்டு திரிகின்றார் (அப்படி என்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எப்படி மு.க. வும் காங்கிரசும் ஜெயித்தார்களாம்?). நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: நீங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை. பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் ஸ்பெக்ட்ரம் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. ஈழத் தமிழர்கள் மேல் அனுதாபம் இருந்தாலும் புலிகள் செய்த சொதப்பல்களும் மக்கள் நினைவில் அதிகம் நின்றன. ஆகவே அத்தருணத்தில் இலங்கைப் பிரச்சினை தேர்தல் காலத்தில் அவ்வளவாக வேலை செய்யவில்லை.

ஆனால் இப்போதைய நிலைமையே வேறு. ஊழல் பிரச்சினைகள் படா பிரச்சினைகளாக இருந்தன. கூடவே ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காங்கிரஸ், திமுக, அவற்றின் கூட்டாளிகள் செய்த துரோகமும் மக்களால் நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டு ஒரு குறைந்த அளவிலாவது அவர்களது தோல்விக்கு வழி வகுத்தது.

கேள்வி-2. எனக்கென்னவோ அஞ்சா நெஞ்சன் என்று சொல்லிக்கொண்ட அழகிரியை விட ஸ்டாலின் தோல்வியை தைரியமாக சந்திக்கிறார் என்று தோன்றுகிறது. கொளத்தூருக்குப் போய் நன்றி சொல்லி விட்டார் அதற்குள் (பெரு வெற்றி பெற்ற அம்மா கட்சிக்காரர்களே இன்னும் நன்றி நவிலவில்லை). அழகிரி வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடக்கிறாரே!
பதில்: இக்கேள்வி பதில்கள் வரும் தினத்துக்குள்ளாவது (26.05.2011) அழகிரி வெளியே வருவார் என நம்புவோமாக. (பதில் ஏற்றப்பட்ட தேதி: 22.05.201).

கேள்வி-3. கனிக்காக ராம் ஜெத்மாலனி வாதாட ஒத்துக் கொண்டது முறையா? அவர் ஒரு வக்கீல் மட்டும் அல்ல, மத்திய மந்திரியாக இருந்திருக்கிறார். மக்கள் அவரிடம் ஒரு "தொழில் முறை" வக்கீலை விட சற்று அதிக அளவில் நாணயத்தை எதிர்ப்பார்ப்பது தவறல்லவே!
பதில்: எப்படிப்பட்ட குற்றவாளிக்கும் தன்னைப் பாதுகாக்கும் செயல்பாடுகளுக்கான உரிமை உண்டு. அதுவே கனிக்கும் பொருந்தும். ராம் ஜேத்மலானி திறமையான வழக்கறிஞர். அவருடைய தொழில் தர்மம் அவரது செயலையும் நியாயப்படுத்தும்.

கேள்வி-4. வீரமணியின் அறிக்கைகளைப் பார்த்தால் அம்மாவிடம் கூடிய சீக்கிரம் சரணாகதி அடையும் நாள் தூரத்தில் இல்லை என்று நினைக்கிறீர்களா?
பதில்: பாவம் அவரை விட்டு விடுங்கள். சில கோடிகளுக்கு மட்டுமே சொந்தக்காரரான ஓர் ஏழை. அவர் என்னமோ செய்து பிழைத்துப் போகட்டுமே.

கேள்வி-5. அம்மா அனுபவம் வாய்ந்தவர்களை மந்திரி சபையில் சேர்க்காதது ஏன்? அது தவறா?
பதில்: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

6. மோதி எப்படி அம்மாவின் பதவி ஏற்பு விழாவுக்கு வந்தார்? மைனாரிட்டி ஒட்டு பயம் போய் விட்டதா அம்மாவுக்கு?
பதில்: மோதியின் ஊழலற்ற ஆட்சி குஜராத் இசுலாமியரையும் கவர்ந்துள்ளது எனப்தையே அது காட்டுகிறது.

கேள்வி-7. அ.தி.மு.க. தொண்டர்கள் பிரவீன் குமார் காலில் விழுந்தார்களாம். எனக்கென்னவோ எல்லாப் புகழும் "சேஷனுக்கே" என்று தோன்றுகிறது. அவர் மட்டும் ஆரம்பித்து வைக்காமல் இருந்திருந்தால் இன்றும் எலெக்க்ஷன் கமிஷன் ஒருன் "டம்மி பீசாகவே" இருந்திருக்கும்.
பதில்: சேஷனுக்குப் பிறகு வந்த பல ஜால்ராக்களால் நிலைமை மீண்டும் சீரழிந்ததே. அதை மீண்டும் தூக்கி நிறுத்திய பெருமை இப்போதைய தேர்தல் ஆணையத்துக்குத்தானே.

8. குரேஷியைப் பத்தி அவர் பதவி ஏற்பதற்கு முன் பல விமர்சனங்கள் இருந்தன. அவர் நல்லபடியாகவே செயல் படுவதாகவே தெரிகிறது. ஒரு நல்ல முன் மாதிரி (சேஷன் கோபாலஸ்வாமி போன்றவர்களுக்கு நன்றி) இருந்தால் யார் எலெக்ஷன் கமிஷனர் ஆனாலும் சரியான படியாகவே செயல் படுவார்கள். என்ன சொல்கிறீர்கள்?
பதில்: நல்ல முன்மாதிரிகள் பலர் இருந்தாலும் சாவ்லா போன்ற ஜால்ரா முன்மாதிரிகள் வேறு நடுவில் வந்து தொலைக்கிறார்களே.

கேள்வி-9. சோ "எதிர்க் கட்சி" வேலையை அம்மாவுக்கு எதிராக ஆரம்பித்து விடுவாரா? எவ்வளவு நாள் கொடுப்பார்?
பதில்: இப்போதுதானே ஜெ வெற்றி பெற்றுள்ளார். அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்ப்போம்.


பார்வையாளன்
கேள்வி-10. காங்கிரசால் திமுகவுக்கு பாதிப்பா அல்லது திமுகவால் அதிமுகவுக்கு பாதிப்பா?
பதில்: காங்கிரஸ் திமுக ஜோடி: உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய். திமுக அதிமுக: சீசா விளையாட்டு

11. இரண்டு ஆண்டுகள் கழித்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுக்கு கூட்டணி சேர ஆள் இல்லாத நிலையில் (சொந்த பலமும் குறைந்த நிலையில்) விஜய்காந்த் அதிமுகவுக்கு மாற்றாக உருவெடுப்பாரா?
பதில்: திமுக விட்டால் அதிமுக என்ற நிலைமை மாறுவதே ஒரு முன்னேற்றம்தானே.

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-12. மதுரையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த 6 பேர் கைது

பதில்: இது சாதாரணமாக புதுவையில்தான் அதிகம் நடப்பதாக கேள்விப்பட்டிருந்தேன். இப்போது மதுரையிலுமா?

கேள்வி-13. முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டு
பதில்: கூட்டணி தர்மம்?

கேள்வி-14. அமைச்சர்கள் நல்ல பெயர் வாங்க வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா
பதில்: நியயமான ஆசைதானே.

கேள்வி-15. எம்.எல்.ஏ. பதவியேற்பில் தாமதம்: சிக்கலை ஏற்படுத்துமா?
பதில்: தினமணி கூறும் பதில் ஏற்புடையதாகவே உள்ளது.

கேள்வி-16. கர்நாடகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநருடன் முதல்வர் திடீர் சந்திப்பு
பதில்: அரசியல், அரசியல். முக்கியமாக சட்டசபையை கலைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆகவேதான் மத்திய அரசு கவர்னரை அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்கும் என நம்புகிறேன்.

கேள்வி-17. முதல்வர் ஜெயலலிதா , முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்பிடுக?
1.அமைச்சரவை கூட்டம் நடத்துதல்; 2. கோப்புகளைக் கையாளுதல்; 3. சட்டசபை நடவடிக்கைகள்;
4. ஆங்கிலத்தை கையாளுதல்; 5.காவல் துறை; 6. மத்திய அரசுடன் உற‌வு; 7. அண்டை மாநிலங்களுடன் உள்ள பிரச்சனைகளை கையாளுதல்; 8. திரைப்படத் துறை செயல்பாடுகள்;
9. சின்னத் திரை செயல்பாடுகள்(சொந்த டீவிகள்); 10.கூட்டணிக் கட்சிகள் உறவு; 11. எதிர்க் கட்சிகளைக் கையாளுதல்; 12. இலங்கை பிரச்சனை; 13.கட்சியிலிருந்து பிரிந்து செல்பவரை கையாளுதல்; 14.அரசு அதிகாரிகளின் திடீர் மாறுதல்கள்; 15.நண்பர்கள்,உற‌வினர்கள் ஆகியோரின் அதிகார துஷ்பிரயோகம்; 16. நதி நீர் பிரச்சனைகள்; 17. மின்வெட்டு; 18. கல்வி சீரமைப்புகள்; 19. அரசு ஊழியர், வக்கீல், மாண‌வர் போராட்டங்கள்; 20.பத்திரிக்கைகள்,ஊடகங்கள்
குறிப்பு:இது பற்றிய ஒரு விரிவான விளக்கம் இன்றைய இளைஞர்களுக்கு பழைய வரலாற்றைத் தெரிய‌வைக்கும்.

பதில்: மேலே கூறிய்ன பலவற்றில் இருவரது செயல்படுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான். ஆனால் மந்திரிசபை கூட்டம், அதிகாரிகள் கூட்டம் ஆகியவற்றை ஜயலலிதா நன்றாகவே கையாளுகிறார். ஆங்கில ஆளுமை பற்றிய கேள்வி தேவையற்றது. தமிழகத்தைப் பொருத்தவரை தமிழே போதும். அதில் அதிகத் திறமை வாய்ந்தவர் கருணாநிதி என்றாலும், அதை மட்டுமே அவர் அதிக அழுத்தத்துடன் செயல்பாட்டில் வைத்திருப்பது சலிப்பையே தரும்.

மற்றப்படி இது உண்மைத் தமிழனுக்கு போக வேண்டிய கேள்வி.

மிகுதி கேள்விகள் அடுத்த வாரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2011

டோண்டு பதில்கள் - 19.05.2011

ரமணா
கேள்வி-1. ஜெயா டீவிக்கு சோ அளித்த பேட்டியில் குஜராத் மோடி போல் ஜெயல‌லிதா ஆட்சி செய்வார் எனச் சொன்னார்‍‍௧ள்‍‍‍ ‍நம்புகிறீர்களா?
பதில்: இல்லவே இல்லை.

கேள்வி-2.காங்கிரசாரின் அடுத்த மூவ் என்னவாயிருக்கும்?
பதில்: தமிழகம் பொருத்தவரை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை மேலே மாட்ட முயல்வதாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கேள்வி-3.அழகிரியின் வழக்குகள் இனி?
பதில்: தூசி தட்டப்படும் என ஓரிடத்தில் படித்தேன். அழகிரி மதுரையிலிருந்து காலி செய்வார் என வதந்தி.

கேள்வி-4. கருணாநிதியின் இரண்டு குடும்பங்களுக்குள் இனி என்ன நடக்கும்?
பதில்: பரஸ்பர குற்றச்சாட்டுகள்

கேள்வி-5. வைகோவின் அரசியல் எழுச்சி வாய்ப்புண்டா?
பதில்: மனது வைத்தால் முடியும். அதாவது மக்கள், ஹி ஹி ஹி.

கேள்வி-6. ஸ்டாலினின் இழுபறி வெற்றி பற்றி?
பதில்: போகட்டும், அந்த ஆறுதல் கூட அவருக்கு இல்லாவிட்டால் எப்படி?

கேள்வி-7. தேர்தல் கமிஷ்னின் கெடுபிடியில் பின்னணியில் யார்?
பதில்: தேர்தல் கமிஷன் கெடுபிடி காட்ட, மத்திய அரசு போகட்டும் என விட்டதாகத் தோன்றினாலும், மனது வைத்தால் இவ்வாறே தேர்தல் கமிஷன் சேஷன் காலக் கண்டிப்பு போல காட்டி எப்போது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம் என்றுதான் படுகிறது.

கேள்வி-8. தமிழகத்தில் பாஜகவுக்கு இனி எதிர்காலம்?
பதில்: நிறைய உழைப்பு தேவை. மக்கள் பிரச்சினைகளில் அவர்களுக்கு தோள் தரவேண்டும். கடினமான வழிதான் ஆனால் வேறு வழியில்லை.

கேள்வி-9. ராகுல் திட்டம் தமிழகத்தில் தோல்விதானே?
பதில்: திட்டம் போட்டால் போதுமா? செயல் வீரர்கள் தேவையல்லவா. காங்கிரசில் தொண்டர்கள் ஏது? எல்லோருமே தலைவராக ஆக அல்லவா முயற்சிக்கின்றனர்.

கேள்வி-10. ஜெயலலிதாவிடம் ஒரு அசாத்திய அடக்கம் தெரிவது போல் உள்ளதே?
பதில்: அது அப்படியே நிலைத்தால் நாட்டுக்கு நல்லது.

கேள்வி-11. பாமகவுக்கு கிடைத்த அடி?
பதில்: மரண அடி.

கேள்வி-12. திருமாவும் பாவம்தானே?
பதில்: ஆமாம்.

கேள்வி-13. மேல்சபை இனி வருமா?
பதில்: தெரியவில்லையே

கேள்வி-14. ஆசை ஆசையாய் கருணாநிதி கட்டிய புது சட்டமன்றம் இனி?
பதில்: சரியான ராகுகாலத்தில் ஆரம்பித்தாரோ?

கேள்வி-15. மின் வெட்டுப் பிரச்சனை சரியாகுமா?
பதில்: குஜராத்தில் மோதி சாதித்தார். ஜெயும் மனது வைத்தால் இங்கு சாதிக்கலாம்.

கேள்வி-16. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி மாற்ற‌ம் வருமா?
பதில்: எப்போது உள்ளாட்சித் தேர்தல்? அப்போது பார்க்கலாம்.

கேள்வி-17. இலவச வீட்டு வசதி திட்டம் இனி?
பதில்: சாதாரணமாக ஜெயும் கலைஞரும் ஒருவர் செய்த திட்டங்களை இன்னொருவர் தொடர்வதில்லை

கேள்வி-18. ஒரு லடசம் கோடி கடனாமே எப்படி சரி செய்வார் ஜெ.?
பதில்: மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் அவருக்குத் தெரியாதா என்ன செய்ய வேண்டுமென.

கேள்வி-19. கள் இறக்க அனுமதி கொடுக‌கப்படுமா? சரியா?
பதில்: தெரியாது. சரியே.

கேள்வி-20. இன்னும் 16 வருசத்திற்கு ஜெயலலிதாவின் ஜாதகப்படி அவர்தான் முதல்வராமே?
பதில்: அதற்கு அவர் தன்னை நிரம்ப மாற்றிக் கொள்ளவேண்டுமே.

21. மின்வெட்டினை சரி செய்தல்,ஒரு லட்சம் கோடி கடனை திருப்பிச் செலுத்தும் முகமாய் பொருளாதார நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு சரி செய்தல், விலை வாசி கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தத்தான் மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர் என்பதை மறந்தால்?
பதில்: அடுத்த தேர்தலில் பணால்.

22. கருணாநிதியால் கட்டப்பட்டது என்ற ஒரு காரணத்திற்காக முடக்கப்படும் புதிய தலமைச் செயலகம்,மாற்றப்படும் செம்மொழி நூலகம், ஊழல் சார்ந்த வழக்குகளில் அதீத அக்கறை போன்றவற்றினால் மக்களின் அனுதாபம்,வரும் உள்ளாட்சிச் தேர்தலில் திமுக பக்கம் திரும்பும் போல் தெரிகிறதே. காங்கிரஸ் கைவிடாத படசத்தில் எதுவும் நடக்கலாம்.
துக்ளக் சோ முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிவுரை கூறுவாரா?

பதில்: நிறைய அனுமானங்களை உள்ளடக்கிய கேள்வி.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-21. தமிழக மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம்: ஜெயலலிதா உறுதி

பதில்: மின்வெட்டை வராது தடுத்தாலே போதுமே.

கேள்வி-22. தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்றுள்ளது - வைகோ
பதில்: சற்றே வயிற்றேரிச்சல் இருப்பது போல தோன்றுகிறது.

கேள்வி-23. அன்பழகன் முதல் தமிழரசி வரை 18 தி.மு.க. அமைச்சர்கள் தோல்வி
பதில்: காலத்தின் கட்டாயம் அது.

கேள்வி-24. கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றி
பதில்: கேரளாவில் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் அதிகம்.

கேள்வி-25. 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றிஅப்போது.
பதில்: சமீபத்தில் 1967-ல் அப்போதைய தமிழக மந்திரி பூவராகனைத் தவிர மற்ற எல்லா தமிழக காங்கிரஸ் மந்திரிகளும் தோல்வி. “அசிங்கத்துக்கு பொட்டு வைத்தாற்போல என மபொசியின் கமெண்ட் அப்போது.

கேள்வி-26. காகித ஓடம் கடலலை மீது// போவது போலே மூவரும் போவோம்// ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்// அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்//
காகித ஓடம் கடலலை மீது// போவது போலே மூவரும் போவோம்//
IS THIS TOO MUCH? dondu's special comment please.

பதில்: டூ மச் அல்ல, த்ரீ மச்.

ரமணா
கேள்வி-26. அதிமுகவின் தலைவி முதல்வர் ஜெயலலிதா இரண்டு முக்கிய அறிவிப்புகள் செய்ததாக சொல்லப்படுகிற‌தே உண்மையா? 1.காலில் விழும் கலாச்சாரத்திற்கு விடுதலை 2.முதல்வர் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தம் இனி கிடையாது.
பதில்: ஆசை, தோசை, அப்பளம் வடை.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/14/2011

மனதை நிறையச்செய்த திமுகவின் தோல்வி

டிஸ்கி: மனதை நிறையச் செய்த மோதியின் வெற்றி என்று தலைப்பிட்டவன் இப்போது மட்டும் தோல்வியை குறிப்பிடுகிறேன் என்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

மோதியின் வெற்றிக்கான நேர்மறை காரணங்களே அதிகம். அவருடன் ஒப்பிடும்போது குஜராத்தில் காங்கிரஸ் ஒரு டம்மி காமெடி பீஸ் மட்டுமே. ஆனால் இங்கு அப்படியில்லை ஊழல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிமுகவும் சரி திமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

நான் ஏற்கனவேயே பல முறை குறிப்பிட்டபடி 1996 தேர்தலில் அதிமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் 2001-லும் சரி, 2006-லும் சரி அப்போதைய ஆளும் கட்சி ஏற்கும்படியாகவே ஆட்சி செய்து முடித்திருந்தது. கூட்டணிகள் கணக்கு விவகாரங்களில்தான் வெற்றி தோல்வி பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டன.

ஆனால் 2011-ல் திமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. அதை தமிழக மக்கள் உணர்ந்து செயல் பட்டதற்கு ஒரு ஓ போடுவோம். தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு ஓ. தொங்கு சட்டசபையெல்லாம் கொண்டுவராது ஒரு கட்சிக்கு தெளிவாக ஆட்சிப் பொறுப்பை தந்திருப்பதும் சிறப்புக்குரியதே.

விஜயகாந்த் புத்திசாலித்தனமாக ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. எதிர்க்கட்சித் தல்கைவர் என்ற அந்தஸ்து அவருக்கு பொருத்தமாகவே இருக்கும். திமுகவுக்கு அது கூட கிடைக்கவில்லை என்பதும் மனதுக்கு ஒரு நிறைவைத் தருகிறது.

இனிமேல் என்ன, ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும் அதிமுக. சரியாக நடத்தவில்லையென்றால் 1996-ல் ஏற்பட்ட கதிதான் மீண்டும் என்பதை அக்கட்சி உணருவது அவசியம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் செய்ய வேண்டியதைச் செய்து சீக்கிரம் கனிமொழியை உள்ளே தள்ள வேண்டும். காங்கிரஸ் புத்திசாலி என்றால் மத்திய ஆட்சியிலிருந்து திமுக அமைச்சர்களை நீக்குவது பற்றி யோசிக்க வேண்டும். செய்யுமா?

இந்தத் தேர்தல் விஷயத்தில் டோண்டு ராகவனாகிய நான் மிகவும் அடக்கி வாசித்தேன். திமுக தோற்கும் என சோ அவர்கள் கூறினாலும் அவ்வளவு நிச்சயமாக நான் இல்லை என்பதை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு: பிளாக்கர் சொதப்பியதால் நேற்று முழுக்க பதிவுகள் போட முடியாமல் பல வலைப்பதிவாளர்கள் தவித்தனர். எனது டோண்டு பதில்கள் 12.05.2011 காணாமல் போயிற்று. ஆனால் எனது டாஷ்போர்டில் Edit Posts-பக்கத்தில் அது அப்படியே இருந்தது, scheduled for publishing என்ற வரையறையில். உடனே போஸ்டிங் தெரிவில் ஆட்டமேட்டிக் என மாற்றி பப்ளிஷ் செய்து விட்டேன். என்ன டோண்டு பதில்கள் 12.05.2011 சரியாக அந்தத் தேதியில் காலை 5 மணிக்கு வராது 14.05.2011 காலை 04.33-க்கு வந்துள்ளதாக ரிகார்ட் கூறுகிறது, அவ்வளவே.

பின்குறிப்பு-2
தமிழ்ப்புத்தாண்டு அதனுடைய சரியான தினத்துக்கு வைக்கப்படுமா? இந்துக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட கலைஞர் தோற்றதற்கு நான் மகிழ்வது இந்த விஷயத்துக்காகவும்தான்.

டோண்டு பதில்கள் - 12.05.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. தமிழக அரசுக்கு வெளிநாட்டு பத்திரிகைகள் பாராட்டு: திமுக-கருணாநிதி

பதில்: எந்த பத்திரிகைகள், சந்தர்ப்பம் என்ன என்பதை அறியாமல் விமரிசனம் செய்வது சரியல்ல. ஆனால் ஒன்றை மறக்கக் கூடாது. உள்ளூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அவர்களுக்கு சரியாகப்பட வேண்டாமா?

கேள்வி-2. கருத்து கணிப்புகள் சரியாகுமா? -கருணாநிதியின் பாராட்டு பெற்ற சோலை, அரசியல் விமர்சகர்
பதில்: கருத்துக் கணிப்புகள் சாதகமாக இருந்தால் அது சரி இல்லையென்றால் இல்லை என பேசுவதில் கருணாநிதி ஜயலலிதா ஆகிய இருவருமே ஒரே போலத்தான்.

கேள்வி-3. மீண்டும் அவரே முதல்வராக வரக்கூடாது: அதற்காக தான் சமதூரத்தை மாற்றினோம்-கேரளாவில்
பதில்: அவர்கள் கூறுவது நியாயமாகத்தான் படுகிறது.

கேள்வி-4. கழுத்துக்கு கத்தி: கடன் வாங்குவோர் உஷார்...-ஒரு எச்சரிக்கை
பதில்: படிக்கவே பயங்கரமாக இருக்கிறது. தன் திருமணத்துக்காக கடன் வாங்கி பின்னால் குடும்பமே அழிந்த கதைகளை மதர் இந்தியா சினிமா காலத்திலிருந்தே பார்த்தாயிற்று. கடன் வாங்குவது / கொடுப்பது பற்றி பலரும் பல முறை கூறிவிட்டார்கள். ஆனால் பலன்தான் லேது.

கேள்வி-5. ஆட்சி மாற்றம் ஏற்படுமானால், அடுத்தடுத்து பாயும் வழக்குகள் மூலம், தி.மு.க.,வை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற திட்டம், உயரதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பில் நிச்சயம் நடக்கப் போகிறது என்கின்றனர்-அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிகள்.
பதில்: ஆட்சி மாற்றம் ஏற்படட்டும் பிறகு பார்க்கலாம்.

கேள்வி-6. 2ஜி விவகாரம்--- 17 மாதங்களாக பிரதமர் மௌனம் ?
பதில்: இதன் பெயர் வெறும் மௌனம் அல்ல. கள்ள மௌனம்.

கேள்வி-7. பயங்கரவாதிகளை நீதிக்குமுன் நிறுத்துவதில் உறுதியாகவுள்ளோம்'---- அதிபர் பராக் ஒபாமா
பதில்: நீதிக்கு முன் நிறுத்துவது என்பது கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். போட்டுத் தள்ளுவது என்பதுதான் அவரை போன்றவர்களுக்கு பிராக்டிகலாகப் படுகிறது என நினைக்கிறேன்.

கேள்வி-8.2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது --- சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் ஆட்சேபம்
பதில்: அவர் வேறு எப்படி வாதிட முடியும்?

கேள்வி-9. நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குலும் மும்பைத் தாக்குதலும் ஒன்றல்ல --- அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர்
பதில்: எதிர்வினை ஆற்ற அமெரிக்காவுக்கு வக்கு இருக்கிறது இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் அப்பேச்சின் பொருள். புலியை பார்த்து சூடு போட்டுக் கொள்ளாதே என பூனையிடம் கூறுவதாகவும் கொள்ளலாம்.

கேள்வி-10. அட்சய திருதியை முன்னிட்டு ரூ.600 கோடிக்கு தங்கம் விற்பனை
பதில்: நகை வியாபாரிகளாக கிளப்பிய புருடா நன்கு வேரூன்றிவிட்டது.

ரமணா
கேள்வி-11. வைகோ வை கூட்டணியில் சேர்க்காததற்கு 1000 கோடி கைமாறியதாய் வரும் செய்திகள் உண்மையா?
பதில்: தெரியவில்லையே. உண்மையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கேள்வி-12. திருமாவின் விருதுகள்-பரிசுகள் கூட்டாளிகளுக்கு?
பதில்: பின்னே எதிராளிக்கா தருவார்கள்?

கேள்வி-13. ரஜினியின் உடல்நலம் பற்றி முதல்வரின் நேரடி ஆஸ்பத்திரி விசாரிப்புக்கு ஏதாவது காரணம்?
பதில்: மனித அபிமானமாகக் கூட இருன்க்கலாமே? ஏன் முதல்வரை இவ்விஷயத்தில் சந்தேகப்பட வேண்டும்?

கேள்வி-14. வடிவேலுவுக்கு திரையுலகில் திண்டாட்டமாமே?
பதில்: தேர்தல் ரிசல்டுகள் வரட்டும். அப்போது பல நிலைப்பாடுகள் மாறும்.

கேள்வி-15. சாய்பாபா--ஷிர்டி, பிரசாந்தி நிலையம் ஒப்பிடுக?
பதில்: ஷிர்டி போயிருக்கிறேன். அந்த சாய்பாபா பற்றி படித்ததோடு சரி. பிரசாந்தி போனதில்லை. இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை.

கேள்வி-16. நேற்று சுமாராக இரண்டு மணி நேரம் தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலாப் பயணிகளாய் வந்திருந்த பலதரப்பட்ட மக்களிடம் பேசியதில் பெரும்பாலோர்கள் திமுக கூட்டணிக்கு எதிராய் வாக்களித்தாய் சொல்லும் போது அந்த ஆங்கிலச் சேனல் திமுக ஆட்சி தொடரும் எனச் சொல்வது எப்படி சாத்தியம்?
பதில்: இது என்ன கூத்து? ஆங்கிலச் சேனல்காரரிடம் பேசியவர்கள் வேறு மாதிரியாகக் கூறியிருந்தால்?

கேள்வி-17. ஓட்டுப்போட கொடுத்த பணமெல்லாம் கோவில் உண்டியலில் போடப்பட்டதாய் அவர்கள் சொன்னதை பார்க்கும் போது?
பதில்: மக்களுக்கு தர்மசிந்தனை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் அதே தர்மசிந்தனை கை நீட்டி வாங்கிய காசுக்கு வஞ்சனை செய்யலாகாது என்ற எண்ணமும் சிலரிடம் இருக்கலாமே என்பதுதான் என் கவலை.

கேள்வி-18. கிராமத்து மக்களுக்கு கூட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் வியாபார உலகில் உள்ளது தெளிவாய் தெரிவதை எண்ணுபோது?
பதில்: கிராம மக்களுக்கு பல விஷயங்கள் யதார்த்தமாக புரியும். கனிமொழி விஷயத்தில் உள்ள உள் விவகாரங்கள் பற்றி என்னிடம் விலாவாரியாகப் பேசியவர் இரு கிராமத்தார்தான்.

கேள்வி-19. குருப் பெயர்ச்சி ஜெயலலிதாவுக்கு சாதகம் என வரும் செய்திகள்?
பதில்: அது குருவுக்கு சாதகமாக இருக்குமா?

கேள்வி-20. தமிழ் சினிமா உலகம் சுதந்திரத்தை எதிர்பார்த்து?
பதில்: யாரிடமிருந்து சுதந்திரம்? தமிழகத்தின் முதல் குடும்பத்தாரிடமிருந்தா?

கருத்துக்கணிப்பு சொல்வது போல் திமுக தோற்றால்!
கேள்வி-21. கருணாநிதியின் குடும்பங்களுக்குள் மோதல் வரலாம் என சோவின் கணிப்பு சரியா?

பதில்: அனுமானக் கேள்விகளுக்கு ஓரளவுக்கு மேல் பதில் தருவது சரியாக இருக்காது. இருப்பினும் இந்த அனுமானம் எனக்கு உவந்ததாக இருப்பதால் பதிலளித்து விடுகிறேன்.

குடும்பப் பூசல்கள் வரும் எனக் கூறுவதற்கு சோ போன்றவர்களை ஏன் தொந்திரவு செய்ய வேண்டும்? டோண்டு ராகவனே அதை கூறிவிட இயலும்.

கேள்வி-22. சினிமா உலகம் நிம்மதி பெருமூச்சுவிடுமா?.
பதில்: விடும், கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே. பிறகு புது முதல்வருக்கான பாராட்டு விழாக்களையெல்லாம் ஆர்கனைஸ் செய்ய வேண்டியிருக்குமே.

கேள்வி-23. வியாபார உலகம் கொண்டாடுமா?
பதில்: சினிமா உலகம் போலத்தான். கொண்டாடி விட்டு புது அரசின் அதிகார மையங்களை அடையாளம் காணும் காட்சிகள் நடைபெறும்.

கேள்வி-24. சொத்து குவிப்பு வழக்குகளால் இனி வக்கீல் காட்டில் மழை கொட்டுமா?
பதில்: கொட்டும், அதுவும் நீண்ட காலத்துக்கு.

கேள்வி-25. இலங்கை தமிழர் பிரச்சனை இனி திமுகவின் கொட்டு முரசாகுமா?
பதில்: ஆறின கஞ்சி பழங்கஞ்சி.

கேள்வி-26. மீனவர் பிரச்சனையை இனி திமுக கையிலெடுத்து போராடுமா?
பதில்: வேறு வழி?

கேள்வி-27. திமுக, பாஜக இடையே புதிய உறவு மலருமா?
பதில்: அதற்கான தருணம் வர இன்னும் பல நாட்கள் இருக்கின்றனவே.

கேள்வி-28. அதிமுக காங். உடன் கைகோர்ககுமா?
பதில்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கேள்வி-29. மருத்துவர் அணி மாறுவாரா?
பதில்: மாற மாட்டார் என்கிறீங்களா?

கேள்வி-30. கருணாநிதி முழு நேர இலக்கிய ஆர்வலராய் மாறி இன்னுமொரு புதிய அத்தியாயம் எழுதுவாரா?
பதில்: யார் கண்டார்கள், “சிறையில் பூத்த சின்ன மலர்கள் - 2 வெளிவரலாம்.

மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2011

டோண்டு பதில்கள் - 05.05.2011

ரமணா
கேள்வி-1. 2ஜி வழக்கில் திமுக தலைவரின் துணைவியாரின் பெயரும் இருக்கும் என வந்த செய்திக்கு மாறாய் அறிக்கை இருப்பதன் காரணம்?
பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா.

தயாளுவை வழக்கில் சேர்த்தபிறகு தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றும் காங்கிரசார் மட்டும் பிளாங்கியடிக்க, மத்தியில் கண்டின்யூ செய்ய திமுகவின் தயவு தேவையாக இருக்கும் என வெளி ஆளான நானே ஊகிக்கும்போது சோனியா அதை செய்யாமல் இருப்பாரா என்ன?

கேள்வி-2. திமுக, காங் கூட்டணி டமாலா?
பதில்: டமாலோ இல்லையோ, ஒருவர் இன்னொருவரை முழுமையாக நம்பும் நிலைமை வராதுதான்.

கேள்வி-3. 2ஜி பற்றிய செய்தியை திரும்பத் திரும்ப போடும் ஜெ.சேனல்கள், செய்தியே போடாத சன் டீவி பற்றி உங்கள் கருத்து?
பதில்: அதில் சராசரியை எடுத்து, கூட்டிக் கழித்துப் பாருங்கள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும்.

கேள்வி-4. நடுநிலையான பத்திரிக்கை, டீவி சேனல் இனி கானல் நீரா?
பதில்: நடுநிலைமை என்பது இறுகிய நிலை அல்ல, தீயதுக்கும் நல்லதுக்கும் இடையில் நடுநிலைமை என்பதைக் காண நினைப்பது பைத்தியக்காரத்தனமே.

எனக்கு என் மாமா பிள்ளை காலஞ்சென்ற ஸ்ரீதரன் சமீபத்தில் 1952-ல் அம்புலிமாமா பத்திரிகையில் தான் படித்து சொன்னக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு கடையில் அரிசி வாங்க ஒரு படிக்கான விலையைத் தந்து அரிசி போடச் சொன்னால், கடைக்காரர் படியைத் தலைகீழாக வைத்து அரிசியை நிரப்ப, ஓரிரு அரிசிகளே நின்றன. இதை ஆட்சேபித்து கோர்ட்டுக்கு செல்ல நீதிபதி நேராகவும் வேண்டாம் த்லைகீழாகவும் வேண்டாம் என படுக்கப் போட்டு அளக்குமாறு தீர்ப்பு சொன்னதில் அந்த ஓரிரு அரிசிகளும் கிடைக்கவில்லையாம்.

இந்த நடுநிலையையா விரும்புகிறீர்கள்? மேலும், துக்ளக் போன்ற பத்திரிகைகள் இருக்க ஏன் இந்த விரக்தி?

கேள்வி-5. சவுக்கு எழுதும் பரபரப்பு பிளாக்குகள் படிப்பதுண்டா?
பதில்: அவ்வப்போது படித்துள்ளேன். சுவாரசியமாக இருக்கும்.

கேள்வி-6. சோ அவர்களின் ஜெய டீவி பேட்டி-0630 pm -dated 28-4-2011-கனிமொழியின் மேல் சிபிஐயின் குற்றச்சாட்டு பலவீனமானதாமே-இவ்வளவு சலுகை செய்யும் காங்கிரசை குற்றம் சாட்டும் திமுகவின் நிலையை பார்த்தால் என்ன சொல்லத் தோன்றுகிறது?
பதில்: நானும் அப்பேட்டியைப் பார்த்தேன். வேண்டுமென்றே கனிமொழியின் மேல் பலவீனமாக குற்றச்சாட்டுகளைத்தானே வைக்கிறார்கள். இதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறார்களாம்?

கேள்வி-7. கருணாநிதியின் நடிப்பை இன்னும் நம்பும் அப்பாவி திமுக தொண்டன் நிலை?
பதில்: திமுக தொண்டன் கண்டிப்பாக கருணாநிதியை ஒரு விதத்தில் பின்பற்ற வேண்டும். அவன் தனது நலனை பார்த்துக் கொண்டால் போதும்.

கேள்வி-8. வியாபார ரீதியில் பொன்னர் சங்கரும் இன்னுமொரு இளைஞனா?
பதில்: இளைஞன் படம் ஊற்றிக் கொண்டது என்பது உண்மையானால், உங்கள் கேள்விக்கு ஆமாம் என்பதே என் பதில். பொன்னர் சங்கரை வெறுமனே ஓட்டுவதாக அறிகிறேன். ஒரு பிரசாந்தைப் பார்ப்பதே கஷ்டமான வேலை. இருவரைப் பார்ப்பதா? என்ன கொடுமை சரவணன்?

கேள்வி-9. குரங்கு ஆப்பை புடுங்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்ற நிலை பற்றி?
பதில்: கேள்வியின் பின்புலம் என்ன?

கேள்வி-10. தினகரன், தினத்தந்தி, குங்குமம், முரசொலி, நக்கீரன், த ரைசிங் சன்,சன் டீவி குழும சேனலகள், கலைஞர் டீவி குழும சேனல்கள் (இந்து ராமின் ஆதரவு)-75 % மேல் ஊடக ஆதரவை வைத்துக் கொண்டு யாரை கலைஞர் சாடுகிறார்?
பதில்: சமீபத்தில் 1977-ல் இதே மாதிரி எல்லா பக்கபலங்களையும் வைத்துக் கொண்டும் இந்திரா காந்தி தேர்தலில் மண்ணைக் கவ்வவில்லையா? அந்த ஞாபகம் வந்திருக்குமாக இருக்கும்.

கேள்வி-11. சோவின் கணிப்புபடி திமுக மோசமாய் தோற்றால்-முதல் வசவு, திட்டு, சபித்தல் யாருக்கு?
பதில்: முதலில் சோற்றால் அடித்தப் பிண்டங்களான தமிழ் மக்களுக்கு, பிறகு சோவுக்கு.

கேள்வி-12. தருமனுக்கு நேர்ந்த இக்கட்டு என எதைச் சொல்கிறார் கருணாநிதி அவர்கள்?
பதில்: தெரியவில்லையே, ஆனால் இதைவிட யாரும் தருமனை அதிகமாக அவமதிக்க முடியாது.

கேள்வி-13. கருத்துகணிப்புகள் திமுகவுக்கு சாதகமாய் இருப்பதாய் வரும் செய்திகள் பற்றி?
பதில்: இன்னும் சில நாட்கள் பொறுங்களேன்.

கேள்வி-14. கனிமொழி கைது ஆவார் எனச் சொல்லப்படும் விவகாரம் வதந்தியா?
பதில்: அவர் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவீனமாக இருப்பதாகத் தோன்றுகின்றன. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்க்ள்.

கேள்வி-15. ராகுல் அடுத்து என்ன செய்வார்?
பதில்: எங்கு போய் கஞ்சி குடிப்பாரோ, யாரறிவார்?

கேள்வி-16. அதிமுக தோல்விகண்டால் அடுத்த மூவ்?
பதில்: ஜயலலிதா மனம் தளராது செயல்பட வேண்டும். அவரது ரிகார்டைப் பார்த்தால் அது சந்தேகமே.


pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-17. கனிமொழியை கட்சியின் தொண்டர் என்கிற முறையில்தான் பார்க்கிறேன்-- திமுகவின் தலைவர்-கலைஞர்

பதில்: இந்தத் தொண்டர் தீ குளித்தால் வெறுமனே சில லட்சங்கள் கொடுத்து அமைதியாகி விடுவாரா?

கேள்வி-18. சோதனைகளை உரங்களாக்கி வெல்லும் தி.மு.க.--திகவின் தலைவர் கி. வீரமணி
பதில்: பாவம் கலைஞர். வீரமணி போன்ற சந்தச்ர்ப்பவாதிகளை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கேள்வி-19. மே தின விழாவை ஒருவார காலத்துக்கு கொண்டாடுங்கள் --தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்
பதில்: அப்புறம் 13-ஆம் தேதி வரை என்ன செய்வார்களாம்? அதற்கு அப்புறம் என்ன செய்வார்களாம்?

கேள்வி-20. இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க இந்தியா முன்வரவேண்டும்-அதிமுகவின் தலைவர் ஜெயலலிதா
பதில்: அதற்கான வலு இந்தியாவிடம் உள்ளதா?

கேள்வி-21. காங்கிரஸ் மீது வருத்தம், பத்திரிகைகள் மீது கோபம், கனிமொழியைக் காப்பாற்றுவது கட்சியைக் காப்பாற்றுவதாகும் - திமுக உயர்நிலைக் குழு செயல் திட்டக் குழு கூட்ட நிகழ்வுகள்.
பதில்: பலசரக்கு கடைக்காரனுக்கு பைத்தியம் பிடித்த மாதிரி என சில பெரியவர்கள் கூறுவதன் பொருள் இபோதுதான் விளங்குகிறது.

மீண்டும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/03/2011

இந்தப் பெண்களை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை

டிஸ்கியை பதிவின் கடைசியில் தருகிறேன்.

சடகோபராமானுஜம் வீட்டு காலிங் பெல்லை அழுத்தியபோது சத்தியமாக அங்கு ஏதோ ஏடாகூடமாக நடந்து அப்போதுதான் முடிந்திருந்தது என்பதை நான் அறியவில்லை.

“வாடா” என என்னை வரவேற்ற சடகோபராமானுஜம் முகம் சுரத்தாகவே இல்லை. “வாங்கோ டோண்டு அண்ணா” என வரவேற்ற அவன் மனைவி ஜெயாவின் முகமும் கோபத்தால் சிவந்திருந்தது.

“ஜெயா, டோண்டுவுக்கு காப்பி கொடு” என்று சொன்ன சடகோபராமானுஜனை அவள் லட்சியமே செய்யாது உக்கிரமான முகத்துடன் உள்ளே விருட்டென சென்றாள்.

“என்னடா ஏதாவது அசந்தர்ப்பமான நேரத்தில் வந்து விட்டேனா” என நான் கவலையுடன் கேட்க, “ஆமாம் ஆனால் இல்லை” என, வரும் ஆனா வராது பாவனையில் பதிலளித்தான். நான் அமைதி காத்தேன், அவனாகவே சொல்லட்டும் என.

சிறிது நேரம் ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. பிறகு அவனாகவே ஆரம்பித்தான். “எல்லாம் இந்த ஜெயா கணினியை இயக்கக் கற்றுக் கொண்டதால் வந்த விபரீதம்” என பூடகமாக ஸ்டேட்மெண்ட் விட மேலும் அமைதி காத்தேன்.

“என் புத்தியைத்தான் செருப்பால் அடிக்கணும். நான் பாட்டுக்கு நான் உண்டு, கணினி உண்டு, தமிழ்மணம் உண்டுன்னு இருந்திருக்கணும். என்னோட வலைப்பூவை ஜெயாவும் படிக்கணும்னு பிடிவாதம் பிடித்ததுதான் தவறாகப் போய் விட்டது” என்றான். மேலும் விளக்கினான்.

முதலில் பிகு செய்த ஜெயா பிறகு கணினியில் மூழ்கிப் போயிருக்கிறாள். அப்போது கூட அவனுக்கு அதனால் எல்லாம் பிரச்சினை வரவில்லை. திடீரென இன்று காலை சற்று நேரத்துக்கு முன்னால்தான் எதிர்ப்பார்க்காத வகையில் பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

கணினியை திறந்து தனது பதிவுக்கு செல்ல கடவுச்சொல்லை உள்ளிட்டிருக்கிறான். கண்கொத்திப் பாம்பாக அவன் டைப் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த ஜெயாவை அவன் கவனிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவனை அவள் ஒரு கேள்வி கேட்டாள்.

“யார் இந்த சகுந்தலா? உங்கப்பாவின் நண்பர் கே.ஆர்.டி. யின் மகள்தானே” என்று கேட்டபோதும் அவனுக்கு வரும் புயல் பற்றி ஒரு ஐடியாவும் இல்லைதான். ஆமாம் திடீரென ஏன் அவளைப் பற்றிக் கேட்கிறாள் என கேட்டதும்தான் பாம்ப்ஷெல் வெடித்தது. “அதான் பாஸ்வேர்ட் அடிச்சீங்களே sakunthalaa_1961-ன்னு எனக் கூறிய்தும் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு.

எனக்கும்தான். சகுந்தலாவை எனக்கும் தெரியும். எங்களை விட 15 வயது இளையவள் (1961-ல் பிறந்தவள்). நானும் சடகோபராமானுஜமும் பள்ளி நாட்களிலிருந்தே நண்பர்கள். நாங்கள் காலேஜில் படித்த போது சகுந்தலா ஒரு 4 வயதுக் குழந்தை. சடகோபராமானுஜம் என்றால் அவளுக்குப் பிடிக்கும். பிறகு நாங்கள் காலேஜ் முடிந்து வேலைக்காக பம்பாய் சென்றபோது கே.ஆர்.டி. குடும்பத்தாருடன் தொடர்பு விட்டுப் போயிற்று.

சடகோபராமானுஜத்தின் முழியே சரியில்லை. “ஏண்டா அவளோட பெயரை கடவுச்சொல்லா வச்சிருக்கே” ந்னு கேட்டதும் திருதிருவென விழித்தான். சகுந்தலாவை அவன் சில வருடங்களுக்கு முன்னால் மீண்டும் சந்தித்திருந்திருக்கிறான். அப்போது நான் தில்லியில் இருந்ததால் எனக்கு அது பற்றிக் கூறவில்லை. சிறு வயதில் அவன் மேல் அவளுக்கு ஒரு கிரஷ் இருந்திருக்கிறது. அதை இப்போது அவள் அவனிடம் சொல்லிவைக்க, அவனுக்கும் சற்றே சபலம் தட்டியிருக்கிறது. கொஞ்ச நாளைக்கு பிரெண்ட்லியாகக் கூட இருந்திருக்கிறார்கள். ஏடாகூடமாகவெல்லாம் எதுவும் நடந்து விடவில்லைதான். பிறகு அப்பெண்ணே அவனை விட்டு விலகி விட்டாள். இப்போது அந்த நிகழ்வு கடவுச்சொல் வடிவத்தில் மட்டும்தான் மிச்சமிருந்திருக்கிறது. அதுவும் ஜெயாவுக்குத் தெரிந்து விட்டது. என்ன செய்வது என அவன் என்னைப் பரிதாபமாகக் கேட்டான்.

ஜெயா அவனது மாமா பெண். சிறுவயதிலிருந்தே அவள்தான் தன் மனைவியாக வரப்போகிறவள் என்ற விஷயத்தில் அவன் தெளிவாகவே இருந்திருக்கிறான். கிட்டத்தட்ட எனது கதைதான். ஆகவே இருவரது நட்பும் மேலும் உறுதிப்பட்டது. நிற்க.

ஜெயா கையில் ஒரே ஒரு கோப்பை காப்பியுடன் வெளியே வந்து என்னிடம் கொடுத்தாள். சடகோப ராமானுஜத்துக்கு காப்பி இல்லை. “வீட்டிலே கறிகாயே இல்லை, வீட்டு ஆம்பிளைக்கு அதெல்லாம் தெரிய வேண்டாமா?” என சுவற்றில் ஒட்டியிருந்த பல்லியைப் பார்த்த வண்ணம் அவள் என்னுடன் பேசினாள்.

சடகோப ராமானுஜம் வேகவேகமாக பையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த உழவர் சந்தைக்கு கிளம்பினான். நானும் கிளம்ப, “நீ இருடா, இதோ வந்துட்டேன்” எனக் கூறியவாறு என்னை இறைஞ்சும் பாவனையில் பார்த்து விட்டு சென்றான். “ஏதாவது பேசி ஜெயாவின் மனதை மாற்று” என்னும் கோரிக்கை அவனது பார்வையில் இருந்ததை நானும் புரிந்து கொண்டேன்.

அவனது கணினியை ஓப்பன் செய்து பதிவுகள் பார்த்தேன். அச்சுப்பிழைகள் பற்றி ஜெயமோகன் எழுதிய கட்டுரை கண்ணில் பட்டது. “போச்சு, நீங்களும் ஜெயமோகனின் விசிறியா” என அலுத்துக் கொண்டே ஜெயா அப்பால் சென்றாள். கட்டுரையில் இருந்த சில வரிகளைப் படித்து நான் வழக்கம்போல கெக்கெக்கே என சிரிக்க, “அப்படியே உங்க நண்பரைப் போலத்தான் நீங்களும்” என ஜெயா அலுத்துக் கொண்டாள். இருந்தாலும் நான் விடாது அவளுக்கு அக்கட்டுரையிலிருந்து சில வரிகளை படித்துக் காட்ட அவளும் சிரித்தாள்.

என்னுள் உறங்கும் ஹைப்பர்லிங் திடீரென உயிர் கொண்டது. நானும் சடகோபராமானுஜமும் சமீபத்தில் 1957-58 கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்ச்சி திடீரென நினைவுக்கு வந்தது.

அன்று காலை முதல் பீரியட் தமிழ் வகுப்பு. நாங்கள் முந்தைய நாளன்று சப்மிட் செய்திருந்த கட்டுரை நோட்டுகளுடன் தமிழாசிரியர் நரசிம்மாச்சாரியார் ஆஜர். கோபக்காரர், அன்று க்ஷவரம் வேறு செய்திருந்தார். உள்ளே வந்ததுமே “அடேய் சடகோபராமானுஜம்” என சப்தம் போட, அவன் சப்த நாடியும் ஒடுங்க நின்றான். அவனை சற்று நேரம் கூர்ந்து கவனித்து விட்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்த வண்ணம், “ஏண்டா உனக்கு ஜயான்னு யாராவது மாமா பெண் இல்லை அத்தைப் பெண் இருக்கிறாளா” எனக் கேட்க, அந்த அப்பாவியும் ஆமாம் சார் என உளறினான்.

“ஏண்டா மேலதிகாரிக்கு எழுத வேண்டிய கடிதத்தைக் கட்டுரையாக எழுது என்றால், அதை ஏன் ஜயாவுக்கு எழுதினாய்? அதுவும் அன்புள்ள ஜயா என்று” எனக் கேட்ட வண்ணம் அவர் அவனது காது தலையில் சரியாக ஒட்டப்பட்டிருக்கிறதா என பரிசோதிப்பது போல அதைத் திருகினார்.

பிறகு அவனை விட்டு விட்டு, அன்புள்ள ஐயா என்பதை அன்புள்ள ஜயா என தவறாக எழுதுவது மாணாக்கர்கள் வழக்க்ம் எனவும் கூறி, சாதாரணமாக அவர்கள் செய்யும் வேறு எழுத்துப் பிழைகளையும் உதாரணமாகக் கூறினார்.

“ஆக, உனக்காக இந்த பிருகஸ்பதி ரொம்பநாளைக்கு முன்னாலேயே அடி வாங்கியிருக்கிறான்” எனக் கூறி நான் சிரிக்க அவளும் அச்சிரிப்பில் கலந்து கொண்டாள். அப்போது கறிகாய் கடையிலிருந்து சடகோபராமானுஜமும் திரும்ப வந்தான். என்னை பார்வையாலேயே கேட்டான், நான் ஏதாவது கூறி அவள் மனதை மாற்றினேனா என. இல்லை என நானும் பார்வையாலேயே கூற அவன் முகம் வாடியது.

நான் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப அவனும் என்னுடன் கிளம்ப ஆயத்தமானான். “கறிகாயெல்லாம் யார் நறுக்குவதாம்” என உள்ளேயிருந்து பெண்புலியின் உறுமல் கேட்க, அவன் பெட்டிப் பாம்பாய் அடங்கினான்.

நான் வீட்டுக்கு சென்று சில மணி நேரம் கழித்து அவன் என்னைப் பார்க்க வந்தான், ஒரு கேனத்தனமான சிரிப்புடன். நான் போனதும் அப்பெண் அவனை கறிகாய் நறுக்கவே விடவேயில்லையாம். கதவையெல்லாம் சாத்திவிட்டு ஒரே மஜாவாம். கடைசியில் அவள் தன் தலையைத் தடவியவாறே “என் மேல் இவ்வளவு ஆசையான்னு” கொஞ்சினாள் என்றான். ஏன் என்றுதான் புரியவில்லை என்றான்.

எனக்கு புரிந்தது, ஆனால் அவனிடம் சொல்லவில்லை.

இந்தப் பெண்களை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

டிஸ்கி:
1. ஜெயமோகனின் அக்கட்டுரைதான் இக்கதைக்கு இன்ஸ்பிரேஷன்.
2. இது எனது முதல் சிறுகதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது