ஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்

எனது வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய பதிவில் பதிவர் ஆர்.வி. இவ்வாறு பின்னூட்டம் இட்டார்.
“நீங்கள் பார்ப்பனீயம், ஜாதீயம் பற்றி எழுதியதை பார்த்ததும் அட என்று வியந்தேன். ஏறக்குறைய இதே தோரணையில் ஒரு வாரம் முன் ஒரு போஸ்ட் எழுதி இருந்தேன். இளைஞரான உங்கள் வாழ்க்கையில் ஜாதி பற்றிய பிரக்ஞை எங்கே எல்லாம் குறுக்கிட்டிருக்கிறது? இதை பற்றி எழுதினால் என்னை போன்ற அரை கிழங்கள் கொஞ்சம் புரிந்து கொள்வோம்”. அவருக்கு நான் அளித்த பின்னூட்டத்திலிருந்து: “எனது வெளிப்படையான எண்ணங்கள் என்னும் பதிவில் நான் எழுதியதை அப்படியே இங்கு தருகிறேன். அதற்கான பின்னுட்டங்களைப் பார்க்க இங்கு செல்லவும்”:

அப்புறம் பார்த்தால் அவரே அதில் பின்னூட்டமும் இட்டிருக்கிறார் என்பதை கூறி விட்டு மறுபடியும் எழுதியுள்ளார், “ திருநெல்வேலிக்கே அல்வா விற்ற கதையாகிவிட்டது. உங்கள் மறுமொழியை பார்த்ததும், "பார்ப்பனராக பிறந்ததில் என்ன பெருமை" என்று நானே கேட்டிருந்த ஞாபகம் வந்தது. உங்களிடமே வந்து ப்ளாக் உலகில் பார்ப்பன வெறுப்பை பற்றி நான் எழுதியதை பார்க்க சொல்லி இருக்கிறேனே! நம் கருத்துகள் இங்கே ஒன்றுபட்டிருப்பது மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையில் ஜாதியின் தாக்கத்தை நீங்கள் உணர்ந்த தருணங்கள் என்னென்ன? அனுபவத்தில் மூத்தவர் என்ற முறையிலும், இளைஞர் என்ற முறையிலும், உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக இருக்குமே”!

எனக்கும் அது சரி என படுவதால் எனது பின்னணியையும் கூறிவிடுகிறேன். முதற்கண் ஒன்று தெளிவுபடுத்துவேன். வடகலை ஐயங்காராக பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன் என எழுதியதற்கு காரணமே இப்போதைய தமிழ் உலகில் பார்ப்பனன் என்பவனை இளப்பமாகவே பார்ப்பனரல்லாதவர்கள் நோக்குகின்றனர். அதற்கு பயந்து பல பார்ப்பனர் தாம் பார்ப்பனர் என்பதை அடக்கி வாசித்து, தேவையானால் தாங்களும் பார்ப்பனரை திட்டினால் காலணா பிரயோசனமில்லாத இணையதாசில்தார்களாக தம்மை நினைத்து கொள்ளும் சில பேர்வழிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதாக நினைத்து, ஆனால் அதே பேர்வழிகளின் இளப்பத்தை மேலும் சம்பாதித்து கொள்கின்றனர். அம்மாதிரி தயங்கும் பார்ப்பனரிடம் “ஐயா பார்ப்பனனாக பிறப்பதற்காகா ஏன் பயப்படுகிறீர்கள்? இது பெருமைக்குரிய விஷயம்தான்” என அடித்து கூறுவதே நான் எழுதியதன் நோக்கமாகும். மற்றப்படி பார்ப்பன சாதி மற்ற எந்த சாதியையும் விட சிறந்தது என நான் எங்குமே கூறியதில்லை.

ஓக்கே, எனது பின்னணிக்கு செல்வேன். நான் பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் 1963-ல் சேரும் வரை இம்மாதிரி சாதீய எண்ணங்கள் எதுவும் எனக்கில்லை. பிறந்து வளர்ந்த திருவல்லிக்கேணியில் உள்ள சூழலில் நான் இருந்ததால் நான் நானாகவே இருந்தேன். இது பற்றி ஏதேனும் எண்ணம் இருந்திருந்தாலும் இந்த சாதி ஒசத்தி, வேறொரு சாதி மட்டம் என்ற ரீதியில் யோசித்ததே இல்லை. பொறியியல் கல்லூரியில் சேருவதற்கான நேர்க்காணலில் கூட அப்போதைய தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் திரு முத்தையன் அவர்கள் என்னைப் பார்த்து "நீங்கள் பார்ப்பனரா?" என்று கேட்ட போது "ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். அவர் புன்னகை புரிந்த வண்ணம் இன்டர்வியூ முடிந்தது என்றார். வெளியில் வந்ததும் என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக சங்குதான் என்றார்கள். "அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. இந்த அழகில் ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்று வேறு கூறியிருந்தார். ஆக, முத்தையன் அவர்கள் என் பதிலுக்காக கோபம் எல்லாம் படவில்லை. இதில் என்ன விசேஷம் என்றால் திரு. முத்தையன் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற பேச்சு அப்போது உண்டு. அதில் உண்மையிருந்தாலும் அதை தனது முடிவுக்கு அடிப்படையாக வைத்து கொள்ளாதது அவர் பெருந்தன்மைதான் என்பதையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.

ஆனால் நான் கல்லூரியில் சேர்ந்ததுமே இந்த பார்ப்பன வெறுப்பை நேரடியாகவே அனுபவித்தேன். பல வேற்று சாதியினர், அதிலும் தெற்கு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் எங்களை போன்றவர்களிடம் வேண்டுமென்றே எங்கள் சாதியை மட்டம் தட்டுவார்கள். அதுவும் ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் பாடு திண்டாட்டம்தான். நல்ல வேளையாக நான் டே ஸ்காலராக இருந்ததால் ரொம்ப கஷ்டமெல்லாம் படவில்லை. எனது நண்பர்கள் எல்லா சாதியிலிருந்தும் வந்தவர்கள். அவர்களும் டே ஸ்காலர்களே, அதுவும் திருவல்லிக்கேணியில் வசிப்பவர்களே. ஆக இப்படியே விளையாட்டாகவே கல்லூரிக்காலம் முடிந்தது.

1971-ல் பம்பாய்க்கு சென்று மூன்றரை ஆண்டுகள் இருந்ததில் இந்த பார்ப்பன வெறுப்பு என்னை அண்டவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டைத் தாண்டியதுமே பார்ப்பன வெறுப்பு கிட்டத்தட்ட மறைந்து விடுகிறது. பம்பாய்க்கு பிறகு அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில் வசித்தபோதும் நேரடியாக தாக்கம் ஏதும் இல்லை. 1981-லிருந்து 2001-வரை தில்லியில் இருந்தபோது பார்ப்பனர்களுக்கு மிகப்பெரிய மதிப்பே இருந்தது. உதாரணத்துக்கு ஒரு பிராம்மண புரோகிதர் பஞ்சக்கச்சம் அணிந்து, திருநீறோ திருமண்ணோ இட்டு சென்றால், “நமஸ்தே பண்டிட்ஜீ, ஆயியே பண்டிட்ஜீ” என்றெல்லாம் வட இந்தியர்கள் மரியாதையுடன் பேசுவார்கள். ஆக, இங்கும் எனக்கு எந்தவித தாக்கமும் இல்லை.

தாக்கம் என்று சீரியசாகக் கூறப்போனால் இங்கு திரும்ப வந்து வலைப்பூ தொடங்கியதும்தான் எனக் கூறவேண்டும். போலி டோண்டு பிரச்சினையே அதனால்தான் வந்தது என்பது எல்லோருக்குமே தெரியும். அதே சமயம் என் சார்பாக இருந்தவர்கள் பல சாதி மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

கிட்டத்தட்ட எல்லா நாளுமே பார்ப்பனர்களை தாக்கியே பல பதிவுகள் தமிழ்மணப்பக்கங்களில் காணக்கிடைக்கின்றன. உதாரணத்துக்கு இந்தப் பதிவர் போடும் பதிவுகள்.

தலித்துகள் மேல் வன்கொடுமையா, பார்ப்பனீயத்தைத் தாக்கி பதிவு போடுவார்கள். உள்ளே போய்ப் பார்த்தால் வன்கொடுமை செய்தது கவுண்டராகவோ, தேவராகவோ, வன்னியராகவோ, அல்லது வேறு யாராவதாகவோ பார்ப்பனர் அல்லாதவராக இருப்பார்கள். நான் கேட்பது இதுதான், “பின்னே ஏண்டா ஜாட்டான் பார்ப்பனீயம் எனக் கூறுகிறாய்? உயர்சாதீயம் என சொல் இருக்கிறதல்லவா, அதைக் கூறு” என்பதே. உடனே விளக்கெண்ணெய் விளக்கங்கள் வரும், அதாவது, “நாங்கள் பார்ப்பனியத்தைத்தான் எதிர்க்கிறோம், பார்ப்பனரை அல்ல” என்று. இங்கு அவர்கள் பார்ப்பனீயம் என்று உயர்சாதீயத்தையே கூறுகின்றனர். உயர்சாதீயம் என்ற ஒரு தனிச்சொல் இருக்கும்போது தேவையற்று பார்ப்பனீயம் என்று பேசி பார்ப்பனரை ஏன் இழிவுபடுத்த வேண்டும்? இப்போது என்ன நடக்கிறது என்றால் வன்கொடுமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட பார்ப்பனருக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போகிறது. என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.

மோடிக்கு ஆதரவா, இஸ்ரேலுக்கு ஆதரவா, உடனே பார்ப்பனீயம் வந்துவிடுகிறது. இந்த நிலைப்பாடுகளுக்கும் பார்ப்பனீயத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பகுத்தறிவுடன் ஒரு கேள்வி கேட்டாலே அவர்களுடைய தீசிஸ் எல்லாம் காலி. அதுவும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளனான என்னைப் போய் நாசிஸத்துக்கும் ஆதரவாளன் என அபத்தமாக சரித்திர அறிவேயில்லாது எழுதுவார்கள். ராமாயணத்தில் ஏதேனும் பிடிக்காத விஷயமா, உடனே அதை எழுதி விட்டு, பார்ப்பனர்களே பதில் கூறுங்கள் என்ற ரேஞ்சில்தான் விடுதலை போன்ற பத்திரிகைகள் எழுதுகின்றன. ஒரு பார்ப்பனன் திருடனாக இருந்து போலீசில் பிடிபட்டால் “பார்ப்பனத் திருடன்” என நீட்டி முழக்குவார்கள். அதையே வேற்று சாதிக்காரன் செய்தால் அப்போது சமரச சன்மார்க்கமாக வெறுமனே பெயரை மட்டும் போட்டு திருடன் எனக் கூறுவார்கள். கீழ்வெண்மணியில் தலித்துகளை ஒரு பார்ப்பன மிராசுதார் எரித்திருந்தால் பெரியார் என்ன மாதிரி ருத்ர தாண்டவம் ஆடியிருப்பார்?

நான் நேரடியாக பாதிக்கப்படாமல் பார்ப்பன வெறுப்பைப் பார்த்தது தியாகி வாஞ்சிநாதனனின் விதவைக்கு பென்ஷன் தரும் விஷயத்தில்தான். அவர் பார்ப்பனத்தி என்பதற்காகவே விடுதலை பத்திரிகை அவருக்கு பென்ஷன் தரக்கூடாது என்றெல்லாம் வரிந்து கட்டி எழுதியது. ஆஷ்துரை என்னதான் இருந்தாலும் கலெக்டராம், ஆகவே அவரை கொன்றது ராஜத்துரோகமாம். கொலையாளியின் விதவைக்கு பென்ஷன் தரக்கூடாது என்று மனதில் ஈரமேயில்லாது அப்பத்திரிகை எழுதியது. 60 ஆண்டுகள் விதவையாக கஷ்டப்பட்ட அப்பெண்மணி பென்ஷன் வாங்காமலேயே இறந்தார். அதுவும் என்னை பாதித்தது.

ஒன்று நிச்சயம். என்னுடன் நேரடியாக பழகியவர்களில் மா.சிவக்குமாரும் ஒருவர். அவர் ஒரு முறை என்னிடம் கூறியிருக்கிறார், “ஜாதிவெறி இல்லாதவர்களில் நீங்களும் ஒருவர்” என்று. இப்போதும் அதே கருத்துதான் வைத்திருப்பார் என நினைக்கிறேன். மற்றவர்களும் ஏறத்தாழ அந்த நிலைப்பாட்டுடனேயே இருப்பார்கள் என நம்புகிறேன். இணையத்தில் எனது இந்த மாதிரி பதிவுகள் கூட விருப்பு வெறுப்பின்றியே போடப்படுகின்றன. Setting the record straight என்ற வகையிலேயே அவை உள்ளன. ஆகவேதான் பதிவர் மீட்டிங்குகளிலும் என்னுடன் மனம் விட்டு பேசுபவர்கள் அதிகமே.

வேண்டுமென்றே இந்தத் தருணத்தில் பதிவை முடிக்கிறேன். வேறு ஏதாவது விளக்கங்கள் தேவையென்றால் பின்னூட்டமாகக் கேட்டால் அம்முறையிலேயே பதிலளிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்னூட்டங்களுடன் கூடிய ஒரிஜினல் பதிவு
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது