மூன்றாம் அத்தியாயமும் மிகப்பெரியதுதான். ஆகவே அதையும் சில பகுதிகளாக பிரித்தாக வேண்டும். எத்தனை பகுதிகள் வரும் என்பது இப்போதைக்கு இன்னும் தெரியவில்லை.
முதல் அத்தியாயம் இங்கே
இரண்டாம் அத்தியாயம் நான்காம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் இரண்டாம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் மூன்றாம் பகுதி இங்கே
மூன்றாம் அத்தியாயம் (பாகம் - 4)
ரோஜாக்களின் எழுச்சி - 4
இரவு வருவதற்குள் அண்டைவீட்டார் சுதாரித்து கொண்டனர் போல. அவரவர் தத்தம் செல்பேசிகளுடன் ஆஜர். லோலிட்டா சைரன் ஹெலன் என்னும் பெயருடைய தனது நண்பியுடன் பேசிக்கொண்டிருந்தாள். “அடியே ஹெலன் நான் இன்னிக்கு என்ன பண்ணேன் தெரியுமா”?
“வாழைப்பழத்தோலியில் கால்வைத்து வழுக்கி விழுந்ததில் குண்டியில் பலத்த அடி” ஹெலனின் குரலில் தத்ரூபமாக ஜெஸ்டசின் சில்லு உரக்கக் கத்தியது. அடுத்த முனையில் இருந்த அந்த ஹெலன் வீல் எனக்கத்தினாள், “ஐயையோ நிஜம்மாவாடீ? என்ன ஆச்சு!” சைரன் சொன்னாள்,
“சேச்சே அப்படியெல்லாம் இல்லை, இங்கே யாரோ என்னை வேணும்னே வெறுப்பேத்தறாங்க”.
“ஆனாக்க சைரன், அப்படியே உன் குரல் மாதிரியே இருந்திச்சே”.
“இருக்கலாம் ஆனா நான் அதை சொல்லல்லை”.
உடனே சில்லு தன் வேலையை மறுபடியும் காண்பித்தது, சைரனின் குரலில்
“இல்லே ஹெலன், நான் சொல்லறதை நம்பு. நேரிலேயே வா, குண்டியில அடிப்பட்ட இடத்தை காட்டறேன்”.
சைரன் செல்பேசியை அணைத்து விட்டு உள்ளே ஓடினாள். அவள் அப்பா இன்னும் வீட்டுக்கு வரவில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கினாள். ஒரு விக்கெட் அவுட். அடுத்து வந்தது அந்த எக்ஸிக்யூட்டிவ் தடியன். யாரிடமோ செல்பேசியில் அறுத்து கொண்டிருந்தான்.
“என்னப்பா பால், பாத்து ரொம்ப நாளாச்சில்ல”
அவனுக்கு உரித்தான சில்லு இப்போது டியூட்டிக்கு வந்தது. “ஏதோ ஒண்ணு ஒங்கிட்ட சரியில்லையப்பா. பாத்து ரொம்ப நாளாச்சா, போய் கண் டாக்டரை பார்க்கறதுதானே. பாக்காம எப்படி இருக்க முடியும்? இல்லேன்னா ரொம்ப தண்ணி போட்டியா”? இன்னொரு அண்டை வீட்டுக்காரனான காலேஜ் பையன் குரலில் அச்சு அசலாக சில்லு பேசியது. எக்ஸிக்யூடிவ் தடியன் ஒரு நிமிடம் திடுக்கிட்டான். பிறகு சுதாரித்து கொண்டான். அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றன. அவனது ராடார் சிக்னல்களை வாங்க தயாராக இருந்தது. ஆனால் சிக்னல்கள்தான் வாங்கப்பட தயாராக இல்லை. திகில் படங்களில் வருவது போன்ற மயான அமைதிதான் நிலவியது.
பிறகு சப்தமாக கதவை சாத்திக் கொண்டு ஜன்னல் திரைக்கு பின்னால் நின்று இரவு விஷன் பைனாக்குலர் மூலம் வெளியே வேவு பார்த்தான். ஒன்றும் கண்ணுக்கு சிக்கவில்லை என்று சொல்லவும் வேண்டுமோ?
பெரிய ஏப்பத்துடன் காலேஜ் நாதாரி தனது செல்பேசியுடன் இப்போது வந்தது.
“அடே வில்லியம் நாயண்ட மோனே, மோனா என்னோட ஆள் அவ கிட்ட வச்சுண்டா நீ க்ளோஸ் மச்சி” என்று கத்தினான். அவனுடைய சில்லு கடமை உணர்ச்சியுடன் செயலுக்கு வந்தது.
“இதபாருடா கம்முனாட்டி, மோனா என்னோட பொண்ணு. அவகிட்ட வாலு, இல்ல வேறு ஏதாச்சயும் ஆட்டினே மவனே ஆட்டறதை வெட்டிடுவேன். என் கையில பல கிரிமினல்ஸ் குழுக்கள் இருக்காங்க. ஜாக்கிரதை,” இது கம்பெனி அதிகாரியின் குரலில்.
காலேஜ் நாதாரி கோபத்துடன் கைப்பிடி சுவர்களை தாண்டி வந்து சுற்றுவட்டாரத்தில் நேரடியாகவே தேடினான். யாரும் சிக்கவில்லை. கம்பெனி அதிகாரியின் வீட்டை கூர்ந்து கவனித்தான். பிறகு தன் வீட்டு பால்கனிக்கு சென்று சுவர் மேல் குறுக்காக உட்கார்ந்தான்.
இப்போது நான்கு சில்லுகளும் தத்தம் கைவரிசைகளை காட்ட ஆரம்பித்தன. ஆந்தை அலறியது, காகம் கரைந்தது, புலி உறுமியது, கழுதை புலி கேனத்தனமாக சிரித்தது, சிங்கம் கர்ஜித்தது, யானை பிளிறியது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஜெஸ்டசின் கிக்கிக்கி சிரிப்பு எதிரொலித்தது.
பிறகு சுற்றுவட்டாரத்தில் இடிபோன்ற மௌனம் நிலவியது. இரவு முழுதும் அது நீடித்தது. அடுத்த நாள் காலை சுற்றிலுமுள்ள வீடுகளில் ரகசிய குரல்களில் பேச்சு கேட்டது. நான் வெளியே வந்தேன். என்னையும் சம்பந்தப்பட்டவர்கள் சந்தேகத்துடன் பார்த்தனர். மொசப் பிடிச்ச நாயின் முகக்களிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு நான் பாட்டுக்கு என் வேலைகளை கவனித்தேன்.
அடுத்த நாள் இரவு வழக்கம்போல எனது நாவலை விரித்து உட்கார்ந்தேன். வாசல் கதவில் லேசாக தட்டும் சப்தம் கேட்டது. யாராக இருக்கும் என அனுமானம் செய்த வண்ணம் கதவைத் திறந்தால் அனுமானம் சரியாக செய்ததை உணர்ந்து கொண்டேன். கம்பெனி அதிகாரி, கூடவே லோலிட்டாவின் தந்தை வந்திருந்தனர். அவர்களுக்கு பின்னால் நன்கு உடையணிந்து, மேக்கப் வாசனாதி திரவியங்களை போட்டுக் கொண்டு வந்திருந்த ஒரு பேரிளம்பெண்ணும் வந்தாள். அவள் செண்ட் நெடி தாங்கவில்லை. கம்பெனி அதிகாரியை பார்த்து என்ன விஷயம் என வினவினேன்.
“அதாவது, மிஸ்டர்..” என்றான்.
“என் பெயர் ரைட்டர்”
“நீங்கள் எழுத்தாளரா”?
“ரெண்டும்தான். என் முழுப்பெயர் வைட் ஹார்ட் ரைட்டர் (Wide Heart Writer). கூட வந்த பேண்மணி தேவையின்றி களுக்கென சிரித்தாள்.
“மிஸ்டர் ரைட்டர், இவங்க பேரு மாலினி. இந்த ஊர் மக்கள் நலக்குழுவின் தலைவி”, என்றான் கம்பெனி அதிகாரி.
“அவங்களைத் தெரியுமே. ஒரு தடவை பாத்துருக்கேன்”
“சாரி ரைட்டர். ஒரு நாசுக்கான விஷயம், ஒங்க வீட்டை சற்றே உள்ளே வந்து பாக்கலாமா. அண்டைவீட்டார்களுக்கிடையே இம்மாதிரி ஒத்துழைப்பு வருவது நல்லதுதானே”. அந்தப் பெண்மணியும் தலையை ஆட்டினாள்.
“அதாவது என் வீட்டை சோதனை போடணும்னு சொல்லறீங்க. சர்ச் வாரண்ட் இருக்கா”? நான் மிருதுவாக அதே சமயம் உறுதியுடன் பேசினேன்.
“சோதனை கீதனைன்னு ஏன் பெரிய வார்த்தைகள் எல்லாம் போடறீங்க. உங்க ஒத்துழைப்பைத்தான் கேக்கறோம். சட்ட மிரட்டல் ஏதும் இல்லை. இதை உறுதி செய்யத்தான் மாலினி மேடமும் வந்திருக்காங்க”.
“அதனால் என்ன சார். எனச்க்கு எல்லாரோட நட்பும் வேணும். உள்ளே வாங்க. ஏதேனும் நாய்குட்டி தொலைஞ்சு போச்சா? அதத்தான் தேடறீங்களா”?
கம்பெனி அதிகாரி மாலினியை நோக்கினான். அவள் தொண்டையை கனைத்து கொண்டு பேசலானாள்.
“ஒங்க கிட்டே சொல்லறதுக்கு என்ன சார். நேத்து ராத்திரி இந்த வட்டாரத்திலே பலத்த சத்தங்கள் கேட்டன. கழுதை காள்காள்னு சத்தம் போடறது, குதிரை கனைக்கிறது, நாய் குலைக்கிறது, யானை பிளிறரது அப்படீன்லாம் கேட்டுது. என்னோட வந்திருக்கற உங்க அண்டைவீட்டுக்காரங்க அந்த சத்தமெல்லாம் உங்க வீட்டுலேருந்துதான் வந்ததுன்னு உறுதியா சொல்லறாங்க, அதனாலத்தான்...”.
“என்னது, இத்தனை சத்தமும் என் வீட்டுலேருந்தா? யானை பிளிறினது கூடவா”?
“ஆமாம்”
“ஏதோ ரெண்டாம் வகுப்பு பாட புத்தகத்துல எழுதியிருக்கா மாதிரியில்ல நீங்க சொல்லறது இருக்கு”. அப்பெண்மணி மரியாதைக்கு சிரித்து வைத்தாள். நான் தொடர்ந்தேன்,
“தாராளமா பாருங்கோ. நல்லா செக் பண்ணுங்கோ. இதை வீடுன்னு சொல்லறதை விட புறாக்கூண்டுன்னுதான் சொல்லணும்”. நல்லா பாருங்கோ. இந்த வீட்டிலேயா கழுதை சிங்கம் புலியெல்லாம் இருக்கு? இருந்தா தாராளமா எடுத்துண்டு போங்கோ.வந்தவர்கள் திகைத்தனர். ஏதாவது மிருகங்களின் கழிவுப்பொருள் கீழே கிடக்கிறதான்னு பார்த்தனர். ஒரு வேளை நான் அதெல்லாம் க்ளீன் செஞ்ச தடயமாவது கிடைக்குமான்னு பாத்தாங்க. ஒண்ணுமே சிக்கவில்லைன்னு சொல்லவும் வேணுமா. இந்த வீட்டுல மனுஷங்களுக்கே இடமில்லை, இதுல மிருகங்களை எங்கேத்தான் வச்சுக்கறது என அப்பெண்மணி முணுமுணுத்தாள்.
மன்னிப்பு கேட்டு திரும்பும் மூடில் இருந்தனர். நான் அவர்களுக்கு காப்பி போட்டுத் தருவதாக ஆஃபர் செய்ய, அதற்கு ஏனோ மறுத்துவிட்டு சென்றனர். போகும்போது லோலிட்டாவின் அப்பா ஒரு கேள்வி கேட்டார்.
“நேத்து ராத்திரி உங்களுக்கு ஏதேனும் சத்தம் கேட்டதா மிஸ்டர் வைட் ஹார்ட்”?
நான் சிரிக்காமல் சொன்னேன். நேத்து மட்டுமா, ரொம்ப நாளாவே நீங்களும் மத்தவங்களும் செல்பேசிலே பேசற சத்தம் கேக்கறது. அது சம்பந்தமா மாலினி மேடத்தை அணுகினேனே. அவங்கதான் அப்போ கண்டுக்கலை”.
“ஆனாக்க மிருகங்களோட சத்தம்”, அவர் விடாமல் கேட்டார்.
“என்னைப் பொருத்தவரைக்கும் எல்லாமே சத்தம்தான். நேத்திக்கு ஒண்ணும் மாறுதலா கேக்கலை” அவர்கள் சென்றதும் கதவை சாத்திக் கொண்டேன்.
காலேஜ் நாதாரி ஏன் வரல்லைன்னு யோசிச்சேன். ஆனா அவன் கொஞ்சம் அதிகம் புத்திசாலி. நாங்க பேசிக்கிட்டிருக்கச்ச என் விட்டின் வெளிப்புற சுவர்களை கூர்ந்து ஆராய்ந்ததில் ஜெஸ்டசின் நாலு சில்லுகளும் அவன் கண்ணில் பட்டன. அவை புதிதாக முளைத்தன என்பதையும் அவன் உணர்ந்தான்.
அண்டை வீட்டாருக்குள் இந்த செய்தி காட்டுத்தீ மாதிரி பரவியது. ஞாயிற்றுக் கிழமை காலை அந்த அதிகாரி அவற்றை கூர்ந்து கவனித்தான். நான் அவனுக்கு காலை வணக்கம் சொன்னேன்.
“இந்த ஸ்வஸ்திகா சில்லுகள் பார்க்க அழகா இருக்கே. சமீபத்தில்தான் வாங்கினீங்களா”
“வாங்கறதாவது. என்னோட நண்பர் எனக்கு பரிசா தந்தார். நகரத்துக்கு வெளியே காட்டு பிரதேசத்தில் இருக்கார். எல்லோரும் அவரை பைத்தியம்னு சொல்லறாங்க. அவருக்கு ஏனோ என்னைப் பிடிச்சு போச்சு. இந்த ஸ்வஸ்திகாக்கள் அதிர்ஷ்டம் கொண்டு வரும்னு சொன்னார்”.
“ஏதேனும் எலெக்ட்ரானிக் சில்லா இருக்குமா? அதுங்களை எப்படி சுவத்துல பொருத்தினீங்க”?
அவன் என்ன சொல்ல வரான்னு புரிஞ்சுது. ஆனாலும் ஒண்ணுமே தெரியாத அஞ்சு வயசு பாப்பா மாதிரி முகத்தை வச்சுண்டு சொன்னேன்.
“அப்படியெல்லாம் இல்லை, அவை வெறும் பிளாஸ்டிக் சில்லுகள்தான். அதை வெறுமனே சுவத்துல வச்சு அழுத்தச் சொன்னார். அம்மாதிரியே செஞ்சேன். சபக்குன்னு ஒட்டிண்டுது”.
“அப்படியா? சுவாரசியமா இருக்கே. நான் அதை வெளியே எடுத்து பார்க்கலாமா”?
“தாராளமா பாருங்க பிரச்சினையேயில்லை”.
ஒரு சில்லை பிடித்து இழுத்தான். கையோடு வந்தது. அதை நுட்பமா ஆராய்ந்தான். எப்படி பார்த்தாலும் அது பிளாஸ்டிக்தான்னு புரிஞ்சுது. திரும்ப சுவத்தில வைத்தான். மறுபடியும் சபக்குனு ஒட்டிக் கொண்டது. தலையை சொரிந்து கொண்டே அந்த இடத்தை விட்டு அகன்றான். ஒரு கப் காப்பி சாப்பிட கூப்பிடேன். மறுத்து விட்டு சென்றான்.
அண்டை வீட்டார்களுக்குள் மந்திராலோசனைகள் தீவிரமாயின. ஒரு மாந்திரீகரை வரவழைக்கலாம்னு லோலிட்டாவின் அப்பா சொன்னதை எல்லோரும் நிராகரித்தனர். திடீரென காலேஜ் நாதாரிக்கு ஒரு ஐடியா வந்தது. அவனுடைய பேனா நண்பன் ஒருத்தன் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தான். அங்கு சினிமா நட்சத்திரங்களின் விசிறிகள் ஒருவருக்கொருவர் இடும் சண்டை பற்றியெல்லாம் எழுதியிருக்கிறான். யாரோ தல அப்படீன்னு ஒரு ஸ்டாராம். இன்னொரு ஸ்டார் பேரு இளைய தளபதியாம். அவங்க போஸ்டர்ல எதிர் தரப்பினர் சாணியடிக்கிறது தமிழகத்தின் கலாச்சாரமாம். இதை பார்த்து காலேஜ் நாதாரி ஒரு காரியம் செய்தான். வறட்டி தட்டறா மாதிரி நாலு சில்லுகள் மேலேயும் சாணியைப் பரப்பினான்.
ஆன்லைனில் ஜெஸ்டஸின் ஆங்கில மூலத்தை வாங்க
இங்கே செல்லவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்