7/22/2007

Harry Potter and the deathly hallows

கடந்த காலத்துக்கு செல்வது என்பது பலருக்கு பிடிக்கும். எனக்கும்தான். அதே சமயம் அது முடியாது என்பதும் தெரியும். அப்படியே கற்பனை செய்து போனாலும் தற்கால சிந்தனைகள் அறிவுகள் ஆகியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.

நான் அப்பதிவில் குறிப்பிட்டபடி அந்தக் காலம் போல இப்போதெல்லாம் அதிகம் புத்தகம் படிக்க பொறுமையில்லை. அப்போதெல்லாம் ஒரு சராசரி புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற வேகத்தில் படிப்பேன். தமிழாக இருந்தால் ஒரு நிமிடத்துக்கு இரு பக்கங்கள். ஆனால் இப்போது, சில பக்கங்கள் படித்த உடனேயே ஆர்வம் குன்றி விடுகிறது. வேறு வேலையில் மனம் செல்கிறது. நூலகத்திலிருந்து கொண்டு வரும் சில புத்தகங்கள் படிக்கப்படாமலேயே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.

பழைய வேகத்தில் புத்தகங்கள் படிப்பது ரொம்ப குறைந்து விட்டது. 2003, 2005 மற்றும் 2007-ல் மூன்று புத்தகங்களை அவ்வாறு முடிக்க முடிந்தது. அவை முறையே ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள். நேற்றைக்கு புத்தகம் வாங்கி வந்ததும் நிறைய வேலைகள். இருப்பினும் நேரம் திருடி படித்தேன். இன்று கணினியை திறந்து வைத்திருந்தாலும் வேலை எல்லாவற்றையும் ஒத்திப் போட்டு விட்டு முப்பது வருடங்களுக்கு முந்தைய ராகவனாக மாறினேன். அந்த அளவுக்கு அந்தக் காலம் திரும்ப வந்தது.

ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் என்பதால் இது பற்றிய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தன. கதையின் ஓட்டத்தை ஊகித்து பலர் பல கதைகள் விட்டார்கள். அவ்வாறு நான் படித்ததில் ஒன்று கூட உண்மையில்லை. இந்தப் புத்தகம் என்னைப் பொருத்தவரை முழுக்கவும் புதிதாகவே இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. ரௌலிங் பின்னி பெடல் எடுத்துள்ளார். இரண்டு நாட்கள் முன்னால் கதையின் அச்சிட்ட பக்கங்களை சில நாதாறிகள் இணையத்தில் வெளியிட்டு இழிந்த காரியம் செய்தனர். என்னிடம் அதை கூறிய எனது நண்பர் சுட்டி வேண்டுமா எனக் கேட்டார். வேண்டவே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

ரௌலிங் ஏற்கனவே சொன்னது போல பல மரணங்கள் நிகழ்கின்றன. யார் யார் என்று நான் கூறப் போவதில்லை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வேடிக்கை விளையாட்டு ஒன்றும் இல்லை என்பது இப்புத்தகத்தின் அடிப்படை நாதம். அதை இந்த மரணங்கள் உறுதி செய்கின்றன. வெற்றியோ தோல்வியோ, கடமையைச் செய்யவும் என்று கூறிய கீதாசார்யனின் அறிவுரையைக் கடைபிடிக்கிறான், பகவத் கீதையின் பெயரைக் கூட கேட்டிருக்க முடியாத ஹாரி பாட்டர். அவன் தோழர்கள் ரானும், ஹெர்மியானும் அவனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கதையின் பிற்பகுதியில் டம்பிள்டோரேயின் சேனை வேறு வந்து சேர்ந்து கொள்கிறது. மந்திரச் சொற்கள் வழக்கம் போல லத்தீன மொழியில் இருப்பது கம்பீரமாக உள்ளது. டாபி, க்ரீச்சர் போன்ற எல்ஃபுகள் அமர்க்களம் செய்கின்றன. ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள் ரொம்பவும் சீரியசான விஷயங்களை கூறுகின்றன. இதற்கு மேல் கதையை கூற மாட்டேன். போன தடவை ராபணா என்று போட்டு உடைத்ததைப் போல் இம்முறை சேய்ய மாட்டேன்.

எதேச்சையாக ஆரம்பித்த ஹாரி பாட்டர் கதை இப்படி பல கோடிக்கணக்கான வாசகர்களை புரட்டிப் போட்டு விட்டது. மிக அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் இவையும் அடங்கும்.

7/20/2007

சொற்குற்றமும் பொருட்குற்றமும்

மண்டபத்திலிருந்து தருமிக்கு பாட்டெழுதி அதை தருமிக்கு சொக்கநாதப் பெருமான் தர, தருமி சண்பக பாண்டியன் அரசவைக்கு சென்று ஒவ்வொருவரையாக அரசர் என நினைத்து விளித்து, பிறகு கடைசியாக அரசனிடம் வந்து, "பார்வேந்தே, என்னைப் பார் வேந்தே" என்றெல்லாம் கூறி, பாடலை வேகமாகப் படித்து பரிசு பெறும் சமயத்தில்... அப்பா மூச்சு வாங்கிக்கிறேன்.

இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். தருமியின் பாட்டில் பொருட்குற்றம் இருப்பதாக நக்கீரன் கூறுகிறான். ஏனெனில் கூந்தலுக்கு இயற்கைமணம் கிடையாதாம். அதைப் பற்றி நான் போட்ட பதிவில் பொருட்குற்றம் செய்தது நக்கீரனே என்பதையும் எழுதியிருந்தேன். அதுவும் இப்பதிவின் விஷயம் அல்ல, ஆகவே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவான் இந்த டோண்டு ராகவன் உப்பிலி கதைப் பதிவைப் போல என டென்ஷன் கொள்ளவேண்டாம்.

நான் பேச வந்தது இலக்கிய உலகில் பொருட்குற்றத்தின் நிலை பற்றியே.

முதலில் சுஜாதா அவர்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன். இளா அவர்களது இப்பதிவில் கூறியது உண்மையே. ஆண் சிங்கம் ஒரு சோம்பேறி. பெண்சிங்கங்கள் வேட்டையாடுவதைத்தான் அது உண்ணும். ஆகவே ஒருவனை சிங்கம்டா நீ என்றால், அதற்கு ஒருவன் மனம்கிழ்வதில் பொருளே இல்லை. ஆக, சுஜாதா செய்தது பொருட்குற்றத்தில் வரும். அவர் மட்டுமல்ல சிங்கத்தை ஒப்பிட்டு கவிதைகள் இயற்றியுள்ள எல்லோருமே அக்குற்றத்தை செய்தவர்கள்தான். நக்கீரனுக்காவது ப்ளஸ் டூ படித்த அனுபவம் இல்லை என்ற சாக்கு உண்டு. சுஜாதாவுக்கு அதுவும் கிடையாது. ஆகவே அவர் செய்த பொருட்குற்றம் சீரியசானதுதான். ஆனால் ஒன்று குற்றத்துக்கு குறைத்து கொண்டு மீதியைத் தரவில்லை (நன்றி தருமி (பதிவர் அல்ல) அவர்களே). முழுப்பணமே தந்து மேலும் கௌரவிக்க இருக்கிறார்கள்.

நான் கண்ட பொருட்குற்றங்களைக் கூறுகிறேன்.

"மௌன கீதங்கள்" படத்தில் "டாடி டாடி" என்னும் பாடலில் கடற்கரையில் இருக்கும் நண்டுகள் எல்லாம் தத்தம் தாய் தந்தையருடன் சேர்ந்து வாழும்போது நாம் வாழ இயலவில்லையே என கதாநாயகனின் மகன் கூறுவதாக வரிகள் வரும். உண்மை என்னவென்றால், தாய் நண்டு குஞ்சுகள் பொறிக்கும்போது, முதுகு வெடித்து இறந்து விடும். முக்கியமாக மிருகங்களிடம் தாய், தந்தை, அதை, மாமா உறவுமுறைகள் கிடையாது. ஆகவே வைரமுத்து அவர்கள் செய்ததும் பொருட்குற்றமே என்றால் அவரது சிஷ்யகோடிகள் என்னை அடிக்க வருவார்கள். சுஜாதா ரசிகர்கள் மட்டும் என்னை அடிக்கவரமாட்டார்கள் என்றால், என்னைவிட அவருக்கு பெரிய ரசிகன் இருக்கமுடியாது என நானே கூறிவிடுவேன்.

இப்போது நான் ஏற்கனவே கூறியபடி திருக்குறள் பரிமேலழகர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையில் எனது மனைவியின் அத்தையன்பருக்கு உதவி செய்து வருகிறேன். நேற்றுதான் காமத்துப்பாலின் இக்குறளுக்கு வந்தேன்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு ...... (குறள் எண் 1081)

"எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்", என உருகி வழிகிறான் (ரொம்பத்தான் வழியறான் இல்லை?) தலைவன். அவனிடம் போய் "ஐயா ஆண்மயில்தான் அழகு, ஆகவே இப்பெண்ணை மயிலுடன் ஒப்பிடுவது தவறு" எனக் கூறினால் உதைக்க மாட்டானா அவன்?

எனது ஒரு புதிர்கள் பதிவில் நான் கேட்ட கேள்வி, டொனால்ட் டக் விஷயத்தில் வால்ட் டிஸ்னி அவர்கள் பொருட்குற்றம் செய்தார், அது என்ன என்று? அக்கேள்வியை பல பதிவுகளுக்கு கேரி ஓவர் செய்ய வேண்டியதாயிற்று என்பது வேறு விஷயம். டக் என்பது பெண்பால் டிரேக் என்பதுதான் சரி. ஆனால் அதற்குள் டொனால்ட் டக் மிகப்பிரபலம் அடைந்து விடவே பொருட்குற்றத்தை நீக்க இயலவில்லை.

சமாதானப்புறா என்று எழுதுபவர்களும் பொருட்குற்றம் செய்கிறார்கள். புறாவைப் போன்ற கொடூரத்தன்மை வாய்ந்த பறவையைக் காண்பது துர்லபமே.

இதையெல்லாம் போய் யாரிடம் கூறுவது? ஆகவே உங்களிடம் இப்பதிவு மூலம் கூறுவது,

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/18/2007

மா.சிவகுமாருக்கு வாழ்த்துக்கள்

அருமை நண்பர் மா.சிவகுமார் நாளை ஜெயா டிவியில் தோன்ற இருக்கிறார். அது பற்றி பதிவும் போட்டுள்ளார். அவர் கையாளப் போகும் விஷயத்தை பற்றி நேரடி அறிவு (first hand knowledge) பெற்றவர். நிச்சயம் அது சுவாரசியமான நிகழ்ச்சியாக இருக்கும். எல்லோரும் கேள்விகளுடன் தயாராகவும்.

நிகழ்ச்சியை சாத்தியமாக்கிய நண்பருக்கும் ஜெயா டிவிக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/14/2007

தாய் மொழி தரும் உற்சாகம் - 2

நேற்று நடந்த ஒரு விஷயம் எனது இப்பதிவின் இரண்டாம் பகுதியை இடத் தூண்டியது.

நான் proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் பிப்ரவரி 2003-லிருந்து சாதாரண உறுப்பினராக இருக்கிறேன். முழு உறுப்பினர்களுக்கு பிளாட்டினம் உறுப்பினர்கள் என்று பெயர். அதற்கு வருடம் 120 டாலர்கள் கட்ட வேண்டும். நம்மால் ஆகாது என்று விட்டு அப்போதைக்கு விட்டு விட்டேன். ஆனால் திடீரென நேற்று நான் பிளாட்டினம் உறுப்பினன் ஆனேன் என்பதை proz.com மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது? 120 டாலர்கள்? மூச், காலணா செலவில்லை. அதன் பின்புலன்? பொறுங்கள் அதைத்தான் இந்த இடுகையில் சொல்ல வந்தேன்.

ஆங்கிலத்தில் ஆரம்பமான இந்தத் தளம் விறுவிறுவென்று ஐரோப்பிய மொழிகளில் வர ஆரம்பித்தது. இங்குதான் தள நிர்வாகிகள் புத்திசாலித்தனமான வேலை செய்தனர். சம்பந்தப்பட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த வேலையை கொடுத்தனர். அதை செய்பவர்களுக்கு ப்ரௌனீஸ் புள்ளிகள் தந்தனர். அப்புள்ளிகள் பல விஷயங்களில் உபயோகமானவை. உதாரணத்துக்கு 4000 ப்ரௌனீஸ் புள்ளிகளும் 80 டாலர்களும் கொடுத்தால் பிளாட்டினம் உறுப்பினர் ஆகலாம். அதாவது 40 டாலர்கள் கழிவு. பிளாட்டினம் அல்லாத உறுப்பினர்கள் அவற்றை பல ப்ரோஸ் சேவைகளுக்கு உபயோகிக்கலாம்.

தமிழிலும் ப்ரோஸ் வந்து விட்டது. நேரடியாக proz.com-க்கு போய் தளமொழி பெட்டியில் தமிழைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் பக்கத்துக்கு செல்லலாம்.

இப்போது சில வார்த்தைகள் இந்த மொழி பெயர்ப்பு வேலை பற்றி. சில உதாரணங்கள் தருகிறேன். நான் செய்தவை இவை.

ஆங்கிலம்: Impersonating others or using assumed identities is prohibited. Commenting on others' behalf, without permission ('Jenny thinks...'), is also not allowed.

தமிழ்: மற்றவர்களைப்போல தன்னைக் காட்டிக் கொள்ளல் அல்லது வேறு கற்பனை அடையாளங்களை பயன்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் சார்பாக அனுமதியின்றி கருத்து சொல்லலுக்கும் ('கிருஷ்ணமூர்த்தி என்ன நினைக்கிறார் என்றால்...') தடை.

ஆங்கிலம்: For more info, see the FAQ.
தமிழ்: மேலதிகத் தகவலுக்கு பார்க்க, அகேகே. (அதிகம் கேட்கப்படும் கேள்விகள்)

இப்படியே கூறிக் கொண்டே போகலாம். தாய்மொழியில் எழுதுவது என்பதே போதை தரும் விஷயம்.

மறுபடியும் டோண்டு ராகவன். தமிழுக்கு மாற்ற நாங்கள் மூவர் இருந்தோம்: பொன்னன், குணசேகரன் மற்றும் நரசிம்மன் (டோண்டு) ராகவன். மே 22-ல் வேலை ஆரம்பித்து போன வார இறுதியில் எல்லா வேலையும் முடிந்தது. எனக்கு இந்த வேலை மூலம் ஐம்பதாயிரத்துக்கும் மேல் ப்ரௌனீஸ் புள்ளிகள் கிடைத்தன (கிட்டத்தட்ட 17000 சொற்கள்). இங்கு நான் ஒரு காரியம் செய்தேன்.

ஒரு மன்றப் பதிவை இட்டேன். ஒன்றுமில்லை ஜெண்டில்மென், இலவசமாக பிளாட்டினம் உறுப்பினர் ஆவது பற்றித்தான் கேட்டேன். அதில் வரும் எதிர்வினைகள் உலகெங்கிலும் உள்ள மனித இயற்கையையே பிரதிபலிக்கின்றன. அதில் ஒருவர் இம்மாதிரி கொடுத்தால் இத்தலைவாசல் போண்டியாகி விடும் என்ற கருத்தையும் கூறினார். அதாவது எல்லோரும் உழைத்து 12000 ப்ரௌனி புள்ளிகள் பெற்று விடுவார்கள். எனக்கு ஒரு கார்ட்டூன் ஞாபகத்துக்கு வந்தது. அன்னை தெரசா வாங்கிய சமாதான நோபல் பரிசுக்கு முழு வருமான வரி விலக்கு ஏன் அளிக்கக் கூடாது என்ற நிருபர்களின் கேள்விக்கு நிதி மந்திரி பதிலளிக்கிறார், "அப்படி செய்தால் நிறைய இந்தியர்கள் நோபல் பரிசு பெற்று இந்திய அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தி விடுவார்கள்" என்று. இதை ப்ரோஸின் அந்த மன்றப்பதிவில் என்னை எழுதாமல் இருக்கச் செய்தது எனது இயற்கையான தன்னடக்கமே! :) (உதை வாங்கப் போறே டோண்டு கொஞ்சமாவது சீரியசாக இரு என்று கத்துவது முரளி மனோஹர்).

சமீபத்தில் 1970-ல் வந்த வா ராஜா வா என்னும் படத்தில் ஒரு வசனம் வரும். விரும்பிப் போனால் விலகிப் போகும், விலகிப் போனால் விரும்பி வரும். அதற்கேற்ப, கொடுத்தால் கொடுக்கவும், இல்லையென்றாலும் பாதிப்பில்லை என்று நான் விட்டு விட்டிருந்தேன்.

நேற்று இரவு 9 மணி அளவில் நான் பாட்டுக்கு எனது திருக்குறள் வேலையில் மூழ்கியிருந்தேன். திடீரென ஜீ டாக் பலூன் மேலே எழும்பியது. நீங்கள் ப்ளாட்டினம் உறுப்பினர் ஆகி விட்டீர்கள் என ப்ரோஸிடம் இருந்து வந்த மின்னஞ்சல் கூறியது. என்ன, 20,000 புள்ளிகள் வாங்கி எனக்கு அது கிடைத்தது. அதே சமயம் ப்ரோஸ்.காம் சரித்திரத்திலேயே இம்மாதிரி முழு கட்டணக்கழிவு தருவது இதுதான் முதல் தடவை என்றும் அறியத் தந்தார்கள். பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு பல சலுகைகள். அவற்றில் மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப் படுத்துவதில் பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை என்பதும் ஒன்று. இப்போது ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் இந்திய மொழிபெயர்ப்பாளர்களில் என் பெயர் முதலில் உள்ளது. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால் இரண்டாம் இடத்தில் உள்ளேன். ஆங்கிலத்திலிருந்து தமிழ் பற்றி கேட்கவே வேண்டாம்.

ஆக, இந்த மொழிபெயர்ப்பு வேலைக்கு நேரடியாக துட்டு கிடைக்காவிட்டாலும் பல இதர லாபங்கள் உண்டு. உறுப்பினர் கட்டணமே இந்த ஜூலை 1-லிருந்து 128 டாலர்கள். மிகவும் முக்கியமானது தாய் மொழியில் சிருஷ்டி செய்யும் மகிழ்ச்சி.

இச்செய்தி வந்ததுமே நான் அதை என் நண்பர் மா.சிவகுமார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தொலைபேசியிலேயே அவரது மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.

இத்தருணத்தில் தமிழில் நான் எழுத தூண்டுகோலாக இருந்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகும். தமிழ் வலைப்பூக்கள் மூலம் பல அரிய நண்பர்களை பெற்றுள்ளேன். எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்த அவர்களுக்கும் மிக்க நன்றி.

என்னை உசுப்பிவிட்டு என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து எனது போராட்ட உணர்ச்சியைத் தூண்டிவிட்ட என் முக்கிய எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/13/2007

அதியமான் அவர்களை தமிழ்வலைப்பூவுக்கு வரவேற்கிறேன்

திரு அதியமான அவர்கள் துடிப்பு மிக்க இளைஞர். ஆங்கிலத்தில் பதிவுகள் போட்டு வந்தார். அவரிடம் தமிழுக்கு வருமாறு நான் ஒரு முறை கேட்டு கொண்டேன். இன்னும் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே எங்கள் ஆலோசனை ஏற்று அவரும் தமிழ்வலைப்பூ துவங்கியுள்ளார். அது பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.... என்ற தலைப்பில் வருகிறது. அவரது இந்த வலைப்பூவுக்கு எனது இப்பதிவில் இணைப்பைத் தருவதில் மிக்க மகிழ்ச்சி.

எனக்கும் அவருக்கும் பொருளாதார விஷயங்களில், ராஜாஜியிடம் ஈடுபாடு கொண்டிருப்பது போன்று பல விஷயங்களில் ஆச்சரியமான ஒற்றுமைகள் உள்ளன. துடிப்பான இந்த இளைஞரை வருக வருக என வரவேற்கிறான் டோண்டு ராகவனான இந்த 61 வயது இளைஞன்.

தமிழ்மணத்திற்கும் வருவாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் வரவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.

சில ஆலோசனைகள்:

டிஸ்ப்ளே பெயரை அதியமான் (#13230870032840655763) என்று போட்டுக் கொள்ளவும். ப்ரொஃபைல் படமும் போட்டு, தனது கமெண்ட் பப்ளிஷிங் பக்கத்தில் படத்த்தை எனேபிள் செய்யவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/05/2007

கோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி

தலைப்புக்கு பிறகு வருகிறேன். நான் ஏற்கனவே இப்பதிவில் கூறியது போல, சீரியல்களை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அதிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படும் சீரியல்கள் விஷயத்தில் நான் கூறுவது அதிகமாகவே பொருந்தும். கடந்த 25 வருடங்களாக நான் பார்த்த சீரியல்களை வைத்துத்தான் பேசுகிறேன். இப்போது கூட ஹிந்தி சீரியல்களான நுக்கட், ஹம்லோக், புனியாத், தர்பண், கதா சாகர், யே ஜோ ஹை ஜிந்தகி ஆகியவை மனதில் நிற்கின்றன. அதே போலத்தான் விழுதுகள், சித்தி, மெட்டி ஒலி, மலர்கள் ஆகியவையும். இப்போது ஓடும் சீரியல்களில் முக்கியமான கோலங்கள் பற்றித்தான் இப்பதிவு பேசுகிறது.

நேற்று யதேச்சையாக சன் மியூசிக் சேனல் ஆன் செய்ய அதில் திருச்செல்வம் அவர்களை நேயர்கள் கேள்வி கேட்கலாம் என ஒரு டெலிஃபோன் எண்ணை திரையில் தந்தனர். நானும் அதை டயல் செய்ய கனென்க்ஷனும் கிடைத்தது. "தயவு செய்து காத்திருக்கவும்" என்ற அறிவிப்பு அடுத்த 20 நிமிடங்களுக்கு வந்து கொண்டிருந்தது. நிஜமாகவே லைவ் ப்ரொக்ராம்தான். நிகழ்ச்சி அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்செல்வம் அவர்களும் நேயர் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை தொல்காப்பியன் என்றே குறிப்பிட்டுப் பேசினர். எனது முறை வந்தது.

எனது பெயர், இடம், நான் என்ன செய்கிறேன் ஆகியவற்றை சம்பிரதாயமாகக் கேட்டு அவற்றுக்கு நான் பதிலளித்தவுடன் எனது கேள்விக்கு வந்தேன்.

முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தினேன். அதாவது சீரியல் நல்ல முறையிலேயே படமாக்கப்படுகிறது, ஆகவே பெரும்பான்மையான நேயர்கள் இதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஆகவே சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன. அந்த வரிசையில் இந்த சீரியல் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ என்ற எனது அச்சத்தை வெளியிட்டேன். உதாரணமாக பாஸ்கர் விவாகரத்து கேட்டு அபியிடம் தான் இன்னொரு மணம் செய்து கொள்ள அவளுக்கு ஆட்சேபணை இல்லை என எழுதி வாங்குகிறான். அதே மாதிரி கடிதத்தை அபியும் கேட்டு வாங்குவதாக ஏன் கதையில் காண்பிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி. அதற்கு தொல்காப்பியன் அபி என்ற பாத்திரம் மறுமணத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே பதிலளித்தார். ஆனால் எனது பார்வை வேறுவிதமாக இருந்தது. பாஸ்கர் அவளுக்கு மறுதாலி கட்டப்போவதாகத்தான் கதையை இப்போது கொண்டுபோகிறார்கள். ஆகவே அவள் பாஸ்கருக்காகவே புனிதமாக வைக்கப்படுகிறாள் என்ற எண்ணத்தையும் கேள்வியாக வெளிப்படுத்தினேன். அப்படியெல்லாம் பிரெடிக்ட் செய்ய முடியாது என்று மட்டும் கூறினார் தொல்காப்பியன். அதற்குள் எனது நேரம் முடிந்து விட்டது.

இப்போது இங்கு சற்று விஸ்தாரமாக பேசுவோம்.

நான் ஏற்கனவே இப்பதிவில் எழுதியதுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் "வரம்" என்னும் சீரியல்). கோலங்கள் சீரியலிலும் அபிக்கு அவளுக்குத் தெரியாமலேயே அவள் மாஜிக் கணவனை விட்டு மறுத்தாலி கட்ட வைப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. எவ்வளவு அபத்தம்? அபி என்னும் பெண் தன் மனவுறுதியால் முன்னுக்கு வருபவள். பாஸ்கர் என்பவன் சரியான சோம்பேறி, நல்ல வேலையில் கூட இல்லை. அவனுக்கு இப்பெண்ணை கட்டிவைக்க அப்பெண்ணின் தாய் முதற்கொண்டு ஏற்பாடு செய்கின்றனர். அந்தத் தாய் சொல்லும் காரணங்கள் குழந்தைத்தனமாகவே உள்ளன. பக்கா ஆணாதிக்கத்தை வலியுறுத்துகிறது இந்த சீரியல். அதே சமயம் எல்லோருமே அற்புதமாகவும் சுவையாகவும் நடித்து சீரியலும் நன்றாக உள்ளது. ஆகவேதான் சீரியல் தயாரிப்பாளர்களின் பொறுப்பு அதிகமாகிறது. நேயர்களுக்கு பல தவறான சமிக்ஞைகள் தரப்படுகின்றன. இவற்றில் பல டிஆர்பி ரேட்டிங் என்ற மாயபிம்பத்துக்காகவே உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க இயலவில்லை. ஆகவே அதுவாகவே சேரும்போது இதை விவாத மேடையில் வகைப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது