5/21/2007

தந்தைக்கு பெருமை சேர்த்த மகள்

நான் சாதாரணமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து பதிவுகள் போடுவது அவ்வளவாக இல்லை. ஆனால் அவ்வாறு கூறி முன்பு ஒரு முறை போட்டபோது பல எதிர் அலைகளைத் தோற்றுவித்தது அது. ஆகவே இப்பதிவு என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது இப்போதைக்குத் தெரியாது.

கேஷுவலாகத்தான் இந்தப் பெண்ணின் சாதனையைப் பற்றிய ரிப்போர்ட்டை இன்றைய ஹிந்துவில் (21-05-2007) பார்த்தேன்.

Vidya Ram tops class at Columbia University's journalism school என்றத் தலைப்பில் சம்பந்தப்பட்டப் பெண்ணின் படத்துடன். இந்த ரிப்போர்ட் தனது கடைசி பத்தியில் இந்தக் குழந்தை ஹிந்து ராமுடைய பெண் என்று சிக்கனமாக ஒரே வாக்கியத்தை எழுதிவிட்டு மேலே செல்கிறது.

சுட்டியை போட்டாலும் ஒரு சிந்தனை. அது அப்படியே இருக்குமா எனத் தெரியவில்லை. ஆகவே அந்த ரிப்போர்ட்டை இங்கே இப்பதிவின் முழுமை கருதி இடுகிறேன்.

Vidya Ram tops class at Columbia University's journalism school


NEW YORK: Vidya Ram, 27, from Chennai was designated the top student in the Class of 2007 of the Graduate School of Journalism of Columbia University, New York.

Ms. Ram topped a list of 28 honours students in the school's M.S. programme. She was also awarded a Pulitzer travelling fellowship. These fellowships are given to five outstanding graduates to enable them to study and travel abroad. Ms. Ram plans to use her Pulitzer fellowship travelling to, and writing about, China.

Ms. Ram's classmates gave her a big round of applause when the school announced on Journalism Day, the day before the convocation, that she was the student of the year. It is very rare for a foreign student to win top honours at the school.

More than 250 M.S. programme students took their degrees along with Ms. Ram at the May 16 convocation of one of the world's premier journalism schools. Ben Bradlee, vice-president at large of The Washington Post, gave the commencement address to students, faculty, and parents. He received the school's highest honour, the Columbia Journalism Award.

Ms. Ram is the daughter of N. Ram, Editor-in-Chief, The Hindu, who is an alumnus of the Columbia University journalism school. She studied at Sishya, Chennai, Oxford University, and the London School of Economics before going to Columbia University. Ms. Ram spent a year teaching English in Harbin, China; interned at The Hindu group's Frontline magazine in 2001-2002; and subsequently worked at the Hansard Society in London.

இப்போது மீண்டும் டோண்டு ராகவன். என் தந்தை அமரர் ஆர்.நரசிம்மன் அவர்கள் 1970-ல் ஹிந்து நிருபர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற அந்தக் காலக் கட்டத்தில் ராம் அவர்கள் எடிட்டோரியல் பக்கங்களுக்கு வந்து தூள் கிளப்ப ஆரம்பித்தார். அது வரை ரொம்பவும் அடக்கி வாசிக்கப்பட்ட ஹிந்து செய்திகள் நெருப்பைத் தாங்கி வர ஆரம்பித்தன. ஒரு கால்பந்து விளையாட்டு போது நடந்த கலாட்டாவை ராம் அவர்கள் போலீஸ் அராஜகம் (police brutality) என்ற ரேஞ்சில் போட்டோக்களுடன் எழுதிய போது என் தந்தை என்னிடம் வழமையான நிருபர்கள் யாரேனும் இதை எழுதியிருந்தால் அவர்களுக்கு சங்குதான் என்று கூறினார். ஆனாலும் ராம் இவ்வாறு எழுதுவது ஹிந்துவுக்கு ஒரு புது ரத்தத்தைக் கொடுத்தது என்றும் கூறினார்.

அப்போதிலிருந்தே ராம் அவர்களை கவனித்து வருகிறேன். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருப்பவர் அவர். 1979-ல் எனது தந்தை திடீரென மறைந்தபோது இரண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் அவர் ஹிந்துவில் வைத்திருந்தார். அவர் பெயருடன் என்னுடைய பெயரையும் சேர்த்து கூட்டு டிபாசிட்டாக வைத்திருந்தார். மாதாந்திர வட்டி செக்குகள் அவர் பெயருக்குத்தான் வரும். அவர் இறந்ததற்கு பிறகு வந்த மாதத்துக்கான வட்டி செக் என்.ராகவன் என்று என் பெயருக்கு, அதுவும் ராம் அவர்களே கையெழுத்திட்டு வந்தது. இந்த அழகில் தந்தை இறந்த பிறகு அதற்கான மரணச் சான்றிதழைக்கூட ஹிந்துவுக்குத் தர நேரமில்லாது காரியங்களில் நான் ஆழ்ந்திருந்த நேரம் அது. உடனே ராம் அவர்களுக்கு ஃபோன் செய்து நன்றி தெரிவித்து, இன்னும் மரணச் சான்றிதழ் கூட நான் தரவில்லை எனக் குறிப்பிட்டபோது அவர் சர்வ சாதாரணமாகக் கூறினார், "அதெல்லாம் நீங்கள் தராமலா போகப் போகிறீர்கள், எங்கள் முன்னாள் ரிப்போர்டர் இறந்த ஒபிச்சுவரியை செய்தியாகப் போட்ட எங்களுக்கு இந்தச் சான்றிதழ் சிறு ஃபார்மாலிட்டியே" எனக் கூறி விட்டார்.

வித்யாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அப்பெண் மேலும் மேலும் எழுதி, தன்னை கௌரவித்த அதே பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவராகியத் தன் தந்தையின் பெயரை நன்கு காப்பாற்றுவார் என்ப்தில் ஐயம் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/13/2007

ஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 6

4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)

நான் ஏற்கனவே கூறியபடி இந்த தேர்தலில் காங்கிரசுக்கு அதுவரை கிடைக்காத வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு மனமாச்சரியமும் இன்றி ராஜாஜி அவர்களும் காமராஜ் அவர்களும் ஒரே அணியில் நின்றனர். அவர்களுக்கு படுதோல்வி. இந்திரா காங்கிரசுக்கு தமிழகத்திலிருந்து நிறைய எம்.பி.க்கள் கிடைத்தனர். அசெம்பிளி தேர்தலில் ஒரு சீட்டிலும் நிற்கக் கூட வாய்ப்பு தரவில்லை கருணாநிதி அவர்கள். ஆக காங்கிரசுக்கும் நீண்ட காலத் திட்டத்தில் ஒரு பின்னடைவே. அதற்கு பிறகு இன்று வரை காங்கிரஸ் சிந்துபாத் கதையில் வரும் கிழவன் போல திமுக அல்லது அல்லது அதிமுகவின் முதுகிலேயே சவாரி செய்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு செய்தி இப்போதைக்கு. ரே பரேலியில் இந்திராவிடம் தோல்வியுற்ற ராஜ் நாராயண் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அது பற்றி அப்புறம்.

இங்கு ஒரு சிறு டைவர்ஷன். இதே சமயத்தில்தான் சோ அவர்கள் இயக்கி தயாரித்த முகம்மது பின் துக்ளக் படமும் வந்தது. அதில் துக்ளக் அடித்த கூத்துக்கள் பலரால் வெறும் மிகைபடுத்தப்பட்ட கற்பனையாகவே மக்களால் பார்க்கப்பட்டன. ஆனால் இப்பதிவின் காலக் கட்டத்திலேயே இந்திரா அவர்கள் துக்ளக் மாதிரி உருவாகும் எல்லா சாத்தியக் கூறுகளும் தெரிய ஆரம்பித்து விட்டன. அடுத்தப் பதிவில் அவசர நிலை பற்றி எழுதும்போது இன்னும் விரிவாக எழுதுவேன். இதில் என்ன விசேஷம் என்றால், அப்படம் வந்து 36 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை இப்போது பார்த்தாலும் காலத்துக்கு பொருத்தமானதாகவே இருப்பதுதான். ஏனெனில் மனித இயல்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக ஒருபோலத்தான் இருந்து வந்திருக்கின்றன.

1971 மார்ச்சிலேயே வங்கதேசப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அதற்கு சற்று முன்புதான் (1970) பாக்கிஸ்தான் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்க தேசத்தில் ஷேக் முஜிபூர் கட்சியான அவாமி லீகுக்கும் மேற்கு பாகிஸ்தானில் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதிக சீட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வங்க தேச எம்பிக்கள் முழுமையான பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்ததால் முஜிபூர்தான் பிரதமராகியிருந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாபியர் டாமினேட் செய்த பாக்கிஸ்தானுக்கு ஒரு வங்க தேசத்தவர் பிரதமராக வருவது அவர்களால் சகிக்க முடியாமல் இருந்தது.

ஆகவே மேற்கு பாகிஸ்தானியர் முஜிபூர் ரஹ்மானின் கட்சி பதவி ஏற்க முடியாதபடி அழுகினி ஆட்டம் ஆடினர். யாஹ்யா கான் முஜிபுரை மார்ச் 25, 1971-ல் கைது செய்து மேற்கு பாக்கிஸ்தானுக்கு கொண்டு சென்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானில் அகோர அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் கசாப்புக்காரன் என்று பெயர் பெற்ற டிக்கா கானின் அட்டூழியம் கொடி கட்டி பிறந்தது. மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து இசுலாமியர் பாகிஸ்தானை பிரித்து சென்று 1947-48-ல் நடந்த கலவரங்கள் எல்லாமே தவிக்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதும் நிரூபணமாயிற்று. வெவ்வேறு நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் சாரி சாரியாக வெளியேறி இந்தியத் தூதரகங்களில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் மானம் கப்பலேறியது. நாட்டைப் பிரிவினை செய்த இரு தேசக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறு என்று அப்போது அவர்களில் பலர் கூறினர்.

இசுலாமியரே இசுலாமியரைக் கொன்ற கூத்தும் நடைபெற்றது. இந்தியாவோ சுமார் 100-120 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது. இந்த தருணத்தில் இந்திரா அவர்கள் திறமையாகச் செயல்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். யாஹ்யா கான் திமிருடன் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் இந்திராவை நேரில் பார்த்தால், "வாயை மூடு பொட்டச்சி. எங்க அகதிகளை திருப்பி அனுப்பு" (shut up woman, and let my refugees return) என்று கூறப்போவதாகக் கூறினார். இதைவிட ஒருவர் ஆணாதிக்கத்துடன் பேசியிருந்திருக்க முடியாது. ஆனால் அதே திமிர் பிடித்த ஆண் இந்த வலிமையான பெண்மணியிடம் மண்டியிட நேர்ந்தது.

டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த யுத்தம், கிழக்கு பாகிஸ்தானில் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனெரல் நியாஜி இந்திய ராணுவத் தலைவர் அரோராவிடம் சரணடைந்தார். பாக்கிஸ்தானின் சுமார் 93000 துருப்புகள் இந்தியரிடம் போர் கைதியாக மாட்டிக் கொண்டனர். இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். பாக்கிஸ்தான் மிகுந்த மனகிலேசத்திலும் அவமானத்திலும் இருந்தது. அதற்கு மேலே யுத்தம் செய்யும் தைரியம் இல்லை. ஆகவே போர் நிறுத்தம் கடைசியில் அமுலுக்கு வந்தது. அப்போதைய ஜெர்மானிய பத்திரிகையான Der Spiegel Niederlage gegen Indien (இந்தியாவிடம் படுதோல்வி) என்ற தலைப்பில் ஒரு இஷ்யூவே போட்டது.

ஷேக் முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்க தேசம் இந்தியா வழியாக சென்றார். ஆக, வங்க தேசம் உருவாவதில் இந்தியாவின், முக்கியமாக இந்திராவின், பங்கு ஒரு சரித்திர உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை 1962-ல் சீனாவிடம் தோல்வி, 1965-ல் பாகிஸ்தானுடன் ஒரு மாதிரி குழப்பமான சண்டை. அதற்கு பிறகு முதன் முறையாக சந்தேகத்துக்கிடமேயில்லாத ஒரு வெற்றி. அப்போது இந்திரா அவர்கள் புகழ் உச்சியில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பேயீ அவர்கள் இந்திராவை துர்க்கா என்றார்.

ஜூலை 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அது பற்றி விக்கிபீடியாவில் பார்க்கலாம். ஆனால் அக்காலக் கட்டத்தில் குமுதத்தில் வந்த ஒரு செய்தித் துணுக்கை இங்கே கூறுவேன். புட்டோவுடன் அவர் தூதுக் குழுவில் ஆகா ஷஹி (அல்லது இலாஹி?) என்ற ஒரு மந்திரி வந்தார். வந்தவர் சும்மா இல்லாமல் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. ராமமூர்த்தியைப் பார்க்க ஆவல் தெரிவித்திருக்கிறார். ராமமூர்த்திக்கோ ஒரேதிகைப்பு. இருந்தாலும் போய்ப் பார்த்திருக்கிறார். அந்த மந்திரிக்கு முகமன் கூறி ஹிந்தியில் பேச ஆரம்பித்து இருக்கிறார். (நம்ம தேசத்தவர் ஹிந்தி பேசினால் உருது பேசும் பாக்கிஸ்தானியர் எளிதில் புரிந்து கொள்வர். உருதுக்கும் ஹிந்திக்கும் அவ்வளவு ஒற்றுமை). அந்த மந்திரியோ ஹாஹாஹா என்று சிரித்து விட்டு, "என்ன சார் தமிழ் பேசணும்னு ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டா, நீங்க ஹிந்தீலே பேசறீங்களே என்று ஸ்பஷ்டமானத் தமிழில் கூறினார். ராமமூர்த்திக்கு மூச்சே நின்று விட்டது. பிறகுதான் தெரிந்தது அவர் பிரிவினைக்கு முன்னால் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் குடியிருந்தார் என்று.

1971 முடிவில் இந்திரா அவர்கள் பாப்புலாரிட்டியின் உச்சத்தில் இருந்தார். ஆனால் அதன் பிறகு மெதுவாக அவரது புகழ் மங்க ஆரம்பித்தது. 1973 மற்றும் 74-ல் பணவீக்கம் தலைவிரித்தாடியது. மக்கள் சுதந்திரங்களில் கைவைக்கு வகையில் பல அரசியல் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த நேரத்தில்தான் இந்திராவின் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி அரசியலில் பங்கெடுக்க ஆரம்பித்தார். பதவி அதனால் வரும் பொறுப்பு ஒன்றுமில்லாமல் தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்தார். இந்திரா காந்தியே அவரைப் பார்த்து நடுங்கியதாகவும் கூறுவர்.

தமிழகத்தைப் பொருத்தவரை எம்ஜீஆர் திமுகாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அதிமுக உருவானது. அக்கட்சி முதன்முறையாகப் போட்டியிட்ட திண்டுக்கல் இடைதேர்தலில் அவர் கட்சி அமோக வெற்றி பெற்றது. காமராஜரின் பழைய காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும், திமுக மூன்றாம் இடத்திலும் இந்திரா காங்கிரஸ் நான்காம் இடத்திலும் இருந்தன. காமராஜ் தனது கட்சிப்பணிகளை செய்து வந்தாலும் பழைய உற்சாகம் எதுவில்லை. ராஜாஜி 1972 மற்றும் அவரது உயிர்த் தோழர் பெரியார் சரியாக ஓராண்டு கழித்து 1973லும் மறைந்தனர்.

1972 ம்யூனிக் ஒலிம்பிக்கில் இஸ்ரேலிய தடகள வீரர்கள் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். அப்போது மௌனம் காத்த இந்தியா, இஸ்ரேலியர் எதிர் நடவடிக்கை எடுத்த போது மட்டும் கண்டித்தது. இம்மாதிரி வெளியுறவு விவகாரங்களில் பல சொதப்பல்கள் அவை பாட்டுக்கு நிகழ்ந்தன.

நாட்கள் சென்றன. நான் முதலில் குறிப்பிட்டிருந்த இந்திரா காந்தியின் தேர்தல் வழக்கு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. 1975 ஜூன் மாதத்தில் இடி போன்ற தீர்ப்பு வந்தது. இந்திரா காந்தியின் தேர்வு ரத்து செய்யப்பட்டு ராஜ் நாராயண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அடுத்த 6 ஆண்டுகள் இந்திரா அரசியலில் ஈடுபட்டு தேர்தலில் நிற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. அதே காலக் கட்டத்தில் திமுகாவும் இந்திரா காங்கிரஸும் கருத்து வேறுபாடுகளால் ஒன்றை விட்டு இன்னொன்று தூரச் சென்றது. கருணாநிதியை ஊழல் ராஜா என்று இந்திரா வர்ணிக்க, அப்போது ஊழல் ராணி யார் என்று அவர் எதிர்க் கேள்வி கேட்டார். தமிழக அரசு கொண்டு வந்த விதவைகள் மறுவாழ்வுத் திட்டத்தில் இந்திரா காந்தி வேண்டுமானால் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆக இரு கட்சிகளுக்குமிடையில் பூசல்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தன. மத்திய அரசை தாக்கி எழுதும் பத்திரிகைகளின் கைகள் கட்டப்பட்டன. அதே சமயம் தமிழக அரசைத் தாக்குபவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டனர்.

இந்த இடத்தில் நம்ம சோ ஒரு காரியம் செய்தார். எப்போது மத்திய அரசை எதிர்க்க முடியாமல் போயிற்றோ மானில அரசையும் தான் விமரிசனம் செய்யப்போவதில்லை என்று துக்ளக்கில் கொட்டை எழுத்தில் அறிவித்தார். அதனை நிகழ்ச்சிகளும் ஜூன் 12 முதல் ஜூன் 25 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏற்பட்டது.

ஜூன் 25-க்கு பிறகு நடந்தவற்றை அடுத்தப் பதிவில் காண்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/10/2007

அந்த நாளும் வந்திடாதோ

"பிருந்தாவனத்தில் நந்தன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ" என்றப் பாடல் எம்.எஸ். அவர்களது தேனினுமினிய குரலில் கேட்டு மகிழாத காதும் ஒரு காதோ! பாடல் வரிகள் எழுதியது கல்கி அவர்கள் என்று ஞாபகம். மீரா படத்துக்காக எழுதியது என்று நினைக்கிறேன் (அதாவது 99% உறுதி).

இப்பதிவு அப்பாடலைப் பற்றியது அல்ல. வேறு எதைப் பற்றி? மேலே படியுங்கள்.

ராபர்ட் பென்ச்லீ என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இம்மாதிரியான அந்த நாளைப் பற்றி (the good old days) எழுதும்போது குறிப்பிட்டார். The good old days are those, which when they really come back, you cannot stand for more than 5 minutes.

பாகவதத்தில் கண்ணன் கோகுலத்தை விட்டு கிளம்பியதும் திரும்பவும் அங்கே வரவேயில்லை என்றும் கூறுபவர் உண்டு. யசோதை, நந்தகோபன் ஆகியோரும் பிறகு கிருஷ்ணர் வாழ்க்கையில் வருவதாகத் தெரியவில்லை. ராமநந்த் சாகர் அவர்களின் கிருஷ்ணா தொலைக்கட்சித் தொடரில் பலராமர் கிருஷ்ணரிடம் பேசும்போது, "தம்பி, நாம் கோகுலத்தில் இருந்த அந்த இனிமையானக் காலக்கட்டம்.." என்று பேச ஆரம்பிக்க உடனேயே கிருஷ்ணர் கூறுகிறார், "அண்ணா, கோகுலத்தின் காலம் நம்மைப் பொருத்தவரை முடிந்து விட்டது. அதற்கு திரும்பப் போவது இயலாது, நாம் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னும் பல உள்ளன" என்று. பேச்சையும் மாற்றி விடுகிறார்.

சற்றே யோசியுங்கள். கோகுலத்திலேயே கிருஷ்ணர் இருந்திருக்க இயலுமா? குழந்தை கிருஷ்ணனை பாதுகாக்க வேண்டிய தினங்கள் அவை. கிருஷ்ணர் வயதுக்கு வந்து தன்னை மட்டுமன்றி மற்றவரையும் பார்த்து கொண்டால்தானே அவதார காரியம் நிகழும்?

ராபர்ட் பென்ச்லீ கூறுவதும் கவனிக்கத் தக்கதே. ஐம்பதுகளில் நாம் ரேடியோ சிலோன், அறுபதுகளில் விவித பாரதி என்றெல்லாம் விரும்பிக் கேட்டோம். பினாகா கீத் மாலாவில் அமீன் சயானியின் ரீங்காரமிடும் குரலைக் கேட்டு மகிழ்ந்தோம். தமிழ் ரேடியோ சிலோனில் மயில்வாகனன், ராஜா ஆகியோர் பலருக்கு பிடிக்கும். ஆனால் இப்போது? முதலில் ரேடியோ யார் கேட்கிறார்கள்? அப்படியே கேட்டாலும் அது எஃப்.எம். ரேடியோவாகத்தான் இருக்கும். ஆனால் அதுவும் மிக அதிகமாக வந்து போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. டி.வி.யில் ஒளியும் ஒலியும், வாரம் ஒரு முறை திரைப்படம் என்றெல்லாம் இருந்தபோது எவ்வளவு ஆவலுடன் கேட்டோம்? இப்போது? ஹூம்.

எதுவுமே புதிதாக வரும்போது ஆவலாகத்தான் இருக்கும். முதலில் ஹிந்தி கற்று கொண்டபோது எல்லா தமிழ் ஆங்கில வார்த்தைகளுக்கும் ஹிந்தி சொற்களை தேடியுள்ளேன். இப்போது? தேடுவதில்லை, ஆனால் கிடைத்தால் உள்வாங்கிக் கொள்வேன் அவ்வளவுதான். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உருவான போது சுண்டல் மடிக்கும் காகிதத்தில் ஏதாவது அச்சிடப்பட்டிருந்தால் அதையும் விரும்பிப் படித்தேன். பிறகு மெதுவாக என்னைக் கவர வேண்டுமானால், சொன்ன விஷயத்தை சுவாரசியமாகச் சொல்ல வேண்டும் என்ற நிலை உருவானது. இந்த மாற்றம் முதலில் தமிழில் தொடங்கி, பிறகு ஆங்கிலம், ஜெர்மன். பிரெஞ்சு என்று வேவேறு காலக் கட்டங்களில் நிகழ்ந்தது. இப்போது? எந்த மொழியிலுமே சுவாரசியமாக இருந்தால்தான் படிப்பது என்றாகி விட்டது. அதற்காகப் படிக்காமல் விட்டுவிட முடியுமா? படிப்பேன், ஆனால் அதை தனியாக உணர்ந்து செய்வதில்லை.

என்னை மாதிரியே மற்றவருக்கும் அவரவர் நிலைக்கேற்ப மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என நினைக்கிறேன். சிறு வயதில் மெரினா கடற்கரையில் நின்று கப்பல்கள் தெற்கு நோக்கி நகரும்போது அவை ஏதோ பெயர் தெரியாத ஊர்களுக்கு செல்வதாக கற்பனை வளரும். ஆனால் இப்போது அவை எந்த ஊருக்கு போகின்றன என்பதை சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும் ஆனால் ஆர்வமில்லை. சிறுவனாக இருந்த போது தி.நகர் நடேசன் பூங்காவை ஒரு வனமாக பாவித்து விளையாடி இருக்கிறேன். அதன் ஊடே செல்லும் பாதைகள் எங்கு போகின்றன என்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன். (ஐந்து வயது டோண்டு ராகவன் அந்தக் காலத்தில் தானாகவே அந்தப் பாதைகள் வழியாகச் செல்ல இயலாது. அப்படிச் சென்று பிறகு வீட்டில் உதை வாங்கியிருக்கிறான், அது இங்கு எதற்கு)?

ஐம்பதுகள் எனது இளம்பிராயக் காலம். அதற்கு திரும்பப் போக முடிந்தால் என்ன ஆகும்? ஆனால் எந்த ரூபத்தில் செல்வது? இப்போது இருக்கும் அறுபத்தோரு வயது வாலிபனாகவா? அல்லது இப்போது இருக்கும் நினைவுகள் எல்லாம் அப்படியே இருக்க, பத்துவயது பாலகனாகவா? ஒத்து வருமா? திருவல்லிக்கேணியிலிருந்து மாம்பலத்தில் இருந்த பெரியப்பா வீட்டுக்கு செல்ல தேவைப் பட்ட பஸ் சார்ஜ் மூன்றணா (19 பைசாக்கள்) கூட அப்பாதான் தரவேண்டும். என் கையில் காலணா கிடையாது. 1.37 ஆகும் டாக்சி கட்டணம் மட்டும் கிடைக்குமா? இருப்பினும் இப்போது இருக்கும் அறிவு இருந்தால் அதெல்லாம் துக்கத்தைத்தானே வருவிக்கும்? விட்டால் போதும் என்று சில நிமிடங்களிலேயே தற்காலத்துக்கு ஓடி வந்து விட மாட்டேனா? ஆக, மேலே ராபர்ட் பென்ச்லீ சொன்னதில் விஷயம் இருக்கிறது. மேலும் அக்கால இனிய நினைவுகள் திரும்ப வேண்டுமானால் அக்கால அறியாமையும் தேவைப்படும். அப்போது வைத்திருந்து, பிற்காலத்தில் தவறானவை என்று நிரூபணமான நம்பிக்கைகளையும் அதே அறியாமையுடன் வைத்திருக்க வேண்டும். நடக்கும் காரியமா? நடந்தாலும் அதுவிரும்பத்தக்கதா?

அதனால்தான் கூறுகிறேன். அந்த அறியாமையுடன் சேர்ந்த இனிய அனுபவங்கள் பெற புதிது புதிதாகக் கற்க வேண்டும். இப்போது தமிழில் தட்டச்சு செய்வதையே எடுத்து கொள்ளுங்கள். தினம் ஏதாவது புதிதாக கற்க முடிகிறது. இப்போதைக்கு பிரமிப்பை ஊட்டுகின்றன. இனிய அனுபவம். வயது குறைந்தது போன்ற உணர்ச்சி. புதிய நம்பிக்கைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும். அவை பொய்க்கும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு முன்னேற அவை தேவை.

இங்கே நான் குறிப்பிட்டப் போராட்டத்தை மறுபடியும் நடத்துவேன் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அது நடந்த 4 ஆண்டுகள் என் வாழ்க்கை பார்வை கோணத்தை மாற்றியது. சினிமா பார்ப்பதற்கும் பரீட்சையில் தோல்வியடைவதற்கும் தொடர்பில்லை என்று இப்போது இருக்கும் அறிவு அப்போது இல்லை. ஆகவே வைத்தியம் அப்போது வெற்றியடைந்தது.

அதே சமயம் சில அனுபவங்கள் சில மாற்றங்களுடன் திரும்ப வருகின்றன. உதாரணத்துக்கு சமீபத்தில் 1971-ல் கிடைத்த இந்த அனுபவம் இந்த ஆண்டிலும் மாறுதல்களுடன் வந்தது. மாறுதல்களுக்கு காரணம் முதல் அனுபவத்தின்போது இருந்த பல அறியாமைகள் இப்போது இல்லாமல் போனதே என நினைக்கிறேன்.

இப்போதும் பல அறியாமைகள் இன்னும் என்னிடம் இருக்கத்தான் வேண்டும். அவை காலப் போக்கில் வெளிப்படும். அதுவரை அவற்றின் காரணமாக நான் பெறும் இனிய நினைவுகளை வைத்து கொள்ள விரும்புவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/08/2007

ராம்நகரி

அமோல் பாலேக்கர் எனக்கு ரொம்ப பிடிக்கும். மராட்டிய நடிகர். பார்ப்பதற்கு நம்ம அடுத்த வீட்டுப் பையன் போல இருப்பவர். சிட் சோர், ரஜனி கந்தா, சோட்டீ ஸீ பாத், கோல்மால் (நம்ம ரஜனி நடித்த தில்லுமுல்லு) ஆகிய படங்கள் மூலம் அகில இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர். அதிலும் முக்கியமாக தில்லு முல்லுவில் நடித்த ரஜனியை விட கோல் மாலில் நடித்த அமோல் பாலேக்கர் அந்த பாத்திரத்துக்கு அதிக பொருத்தமாக இருந்தார் என்பது என் கருத்து.

ஆனால் நான் இங்கு பேசப்போவது அவர் நடித்து நம்ம ஊர்களில் அதிகப் பிரபலம் ஆகாத படமான ராம் நகரி. 1982-ல் வந்தது. அப்போது தில்லியில் வசித்து வந்தேன். இப்படத்தைப் பற்றி அப்போதைக்கு அறியாமலிருந்தேன். திடீரென 1986-ல் தொலைகாட்சியில் பார்த்தேன். அப்போது வீ.சி.ஆர். வாங்கிய புதிது. படங்களை பதிவு செய்யும் பழக்கம் உண்டு. ஆகவே இதையும் பதித்து வைத்தேன். பிறகு பலமுறை போட்டுப் பார்த்தேன். என் மனதை கவர்ந்தது அப்படம்.

முதலில் கதை சுருக்கம். ராம் நகரி பிறப்பால் நாவிதர். மராட்டியக் கலைவடிவமான தமாஷாவில் ஈடுபாடு உடையவர். திருமணம் ஆகும் வரை தாய் தந்தையருடன் வசித்து வந்த அவருக்கு திருமணத்திற்கு பிறகு தனி வீடு தேவைப்படுகிறது. தனது தமாஷா நாடகங்களால் அவருக்கு பல அறிமுகங்கள் கிடைக்கின்றன. அதை வைத்து ஒரு ஹவுஸிங் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கிறது. அரசு அலுவலகம் ஒன்றில் பணி புரியும் அவர் நாடகம் போடுவதற்காக லீவு எடுக்க கூறும் காரணங்கள் புன்னகையை வரவழைக்கின்றன.

பிறகு பல நிகழ்ச்சிகள். கோர்வையில்லாதது போல தோற்றம் தந்து, பிறகு யோசிக்கும்போது அவற்றின் காரண காரியங்கள் விளங்குகின்றன. மொத்தத்தில் கூற வேண்டுமென்றால், சாதாரணமாக ஒருவர் வாழ்க்கையில் வரும் மாறுதல்கள் எவ்வாறு சம்பந்தப்பட்டவர் குண நலன்களை பாதிக்கின்றன என்பதைப் பார்க்க இயலுகிறது.

முதலிலிருந்தே காட்சிகளை எடுத்து கொள்வோம். ராம் நகரி ஒரு வசனம் இல்லாது வெறுமனே நடிப்புடன் கூடிய காமெடி காட்சியை ஒரு சக நடிகருடன் நடத்துகிறார். ஒருவர் இன்னொருவருக்கு முடிவெட்டுவதாகக் காட்சி. அப்போது இருவருடைய முகபாவங்களும் சிரிப்பை வரவழைப்பதற்காகச் செய்யப்பட்டவை. கையில் ஆயுதம் ஒன்றுமில்லாமல் எல்லாமே பாவனையாக, ஒரு வித pantomome ஆகக் காட்டியிருப்பார். எல்லோரும் சிரிக்க பார்வையாளர்களில் ஒருவர் மட்டும் சிரிக்காமல் கோபப்படுவார். அடுத்த காட்சியில்தான் தெரிகிறது அவர் ராம் நகரியின் அப்பா என்று. "அதெப்படி நம்ம குலத்தொழிலை நீ கேலி செய்யலாயிற்று" என்று கோபப்படுவார். அப்போதுதான் கதாநாயகன் நாவிதர் சாதி என்று தெரியும். படமும் சீரியஸ் வகை எனப் புரிந்து போயிற்று.

ஆபீசில் லீவு எடுக்கச் செய்யும் கூத்தை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். பிறகு ராம் நகரியின் கல்யாணம் நடக்கும். அங்கு அவர் சாதிக்கான திருமண சடங்குகள் எல்லாம் சம்பிரமாகக் காட்டப்படுகின்றன. எதுவானால் என்ன, கல்யாணம் கல்யாணம்தானே. நாமும் அந்த உல்லாசத்தில் இழுக்கப்படுகிறோம். கல்யாணம் முடிந்ததும் கூட்டுக் குடும்பமாக வாழ்க்கை ஆரம்பிக்கிறது. புதுமண தம்பதிகளுக்கு ஏற்ப தனிமை கிட்டவில்லை. அதில் சில குழப்பங்கள். வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு வேடிக்கை ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம். அப்போதுதான் தனது டிராமா செயற்பாடுகளால் கிடைத்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு அவருக்கு ஹவுஸிங் காலனியில் வீடு வாடகைக்கு கிடைக்கிறதையும் ஏற்கனவே குறிப்பிட்டேன். இங்கு ஒரு தமாஷ். 24 மணி நேர தண்ணீர் என்பது இது வரை அவருக்கோ அவர் மனைவியின் பிறந்த வீட்டினருக்கோ கிடைத்ததே இல்லை. அதுதான் சாக்கு என அவர் மனைவி முதல் நாளே வீட்டிலிருக்கும் அத்தனை துணிகளையும் தோய்த்து போடுகிறார். அதுவே ஒரு பெரிய புகாராகப் போய் விடுகிறது.

இடையில் தந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லாது போக அவ்ரை மருத்துவ மனையில் சேர்க்கிறார்கள். அங்கிருக்கும் மருத்துவர் ராம் நகரியின் தூரத்து உறவுக்காரர். ராம் நகரி அவரிடம் "நல்ல வேளை நம்ம சாதி ஆள் நீ இங்க இருக்க.." என்று இழுக்கும்போதே, மருத்துவர் ஒரு மாதிரி சங்கடத்துடன் கனைத்து விட்டு அவரை தனியாக அழைத்து சென்று தனது சாதி யாருக்கும் அந்த மருத்துவ மனையில் தெரியாது, ஆகவே தயவு செய்து அங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். பிறகு வரும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த சாதி பிரச்சினை ராம் நகரியை ஒவ்வொரு மாதிரி பாதிப்பதையே பல வகையில் காண்பிக்கிறார்கள்.

ஒரு தமாஷா நாடகத்தில் அவருடன் உயர் சாதியை சேர்ந்த நடிகை கதாநாயகியாக நடிக்க, அந்த நடிகையின் கணவர் நாடகம் முடிந்ததும் தலைமை தாங்குபவரிடம் தனது மனைவியின் புராணம் பாடி ராம் நகரியை சாதி காரணமாக ஓரம் கட்ட செய்கிறார். அப்போதுதான் ராம் நகரிக்கு எல்லோரும் தன்னிடம் காரியம் ஆகும் வரை குழையடித்து விட்டு ஆனவுடன் சாதியைக் காரணம் காட்டி அலட்சியம் செய்கிறார்கள் என்பது அவருக்கு புரிகிறது. இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கே கோபம் வரும் போது ராம் நகரியின் கோபத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்.

இம்மாதிரி காட்சிகள் துணுக்குகளாக வந்தாலும் சொல்ல வந்த செய்தி பார்வையாளர்களை அடைந்து விடுகிறது. அது என்ன செய்தி? சாதி பிரச்சினை தீர்ப்பதற்கு இன்னமும் உழைக்க வேண்டும் என்பதே அது. இந்தப் படம் பற்றி தொண்ணூறுகளில் எனது மராத்திய நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ராம் நகரி என்னும் தமாஷா நாடகக் கலைஞன் உண்மையாகவே வாழ்ந்தவன் என்று சொன்னார். அதனால்தானோ என்னவோ திரைப்படத்தில் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் எனச் சொல்ல முயலவில்லை. ஒரு மாதிரி டிராவிலேயே அதை முடித்து விட்டார்கள். கடைசி காட்சியில் ராம் நகரி தனது மகனுடன் பேசும்போது தனது சாதியை மறக்க மற்றவர்கள் தன்னை அனுமதிக்கவேயில்லை என குறைபட்டு கொள்கிறார். மகனது தலைமுறையிலாவது நல்லது நடக்கும் என்ற ஒரு மெல்லிய நம்பிக்கையுடன் நாம் திருப்தி பட்டு கொள்ள வேண்டியுள்ளது. எனக்கு இந்த முடிவு மன நிறவை அளிக்கவில்லைதான். ஆனால் என்ன செய்வது வாழ்க்கை நாம் எதிர்பார்ப்பது போல இல்லையே. என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/04/2007

ரொம்ப நாட்களுக்குப் பிறகு புதிர்கள்

ரொம்ப நாளைக்கு அப்புறம் சில புதிர்கள் போடுகிறேன்.

1. நான் இப்போது வேறொரு சூழ்நிலையில் கேட்ட இன்னொரு கேள்வியை இங்கு சற்றே மாற்றி கேட்கிறேன்.
ஜகந்நாத பூபதி தன்னுடைய டூ-சீட்டர் காரை ஓட்டிக் கொண்டு பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருக்கிறார். நல்ல மழை, மாலை மறையும் நேரம். பஸ்கள் ஒன்றும் தென்படவில்லை. அவர் வேலப்பன் சாவடி அருகில் வரும்போது ஒரு பஸ் நிறுத்தத்தில் கீழ்க்கண்டவர்களைப் பார்க்கிறார்.
அ) செத்து விடுவார் போன்ற தோற்றத்தில் ஒரு கிழவி ஆஸ்பத்திரி செல்வதற்காக நின்று கொண்டிருக்கிறார்.
ஆ) ஜகந்நாத பூபதியின் உயிரை ஒரு காலத்தில் காப்பாற்றிய உயிர் நண்பன் ஒருவன் நிற்கிறான்.
இ) ஒரு அழகான 20 வயது பெண் நிற்கிறாள்.
டூ-சீட்டர் காரில் இன்னும் ஒருவருக்கு மட்டும்தான் இடம் என்ற நிலையில் ஜகந்நாத பூபதி என்ன செய்யப் போகிறார்?

2. அனாமத்து போன் காலில் வந்த தகவல்படி ஒரு கொலைகாரன் ஒரு வீட்டில் இருப்பதாக நிச்சயமாகத் தெரிகிறது. அவன் எப்படியிருப்பான் என்பது கூட தெரியாது. ஆயினும் அவன் பெயர் ராமசுப்பிரமணியம் என்பது மட்டும் தெரியும். அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது நால்வர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் தச்சர், இன்னொருவர் லாரி டிரைவர், மூன்றாமவர் மருத்துவர், நான்காமவர் மெக்கானிக். போலீஸ்காரர் ஒரு தயக்கமுமில்லாமல் தச்சரை பிடித்து விட்டார். அவர்தான் கொலைகாரர். ஆனால் போலீஸ்காரர் அதை எப்படி எடுத்த எடுப்பிலேயே கண்டு கொண்டார்?

3. ஒரு குட்டிச் சிறுமியின் கார்டியன் அவளை அந்த வீட்டுத் தோட்டத்தில் உள்ள கார் ஷெட் கதவைத் திறக்கவே கூடாது என எச்சரித்து இருக்கிறார். ஒரு நாள் அந்த சிறுமி கார்டியன் இல்லாதபோது அந்த ஷெட் கதவை திறந்து விடுகிறாள். அவள் என்ன பார்த்திருப்பாள்?

4. அமெரிக்காவில் பல கடைகளில் விலைகள் முழு டாலர்களாக இருக்காது. விலைகள் $9.99, $99.95 என்ற ரேஞ்சில்தான் இருக்கும். நம்மூர் பாட்டா கலணிகள் விலை போல. இதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். அதாவது மனோதத்துவ முறைப்படி $9.99 பத்து டாலர்கள் என்று சொல்லும்போது வரும் உணர்வை விட குறைவான விலைத் தோற்றத்தைத் த்ரும் என்று. ஆனால் உண்மை அதுவல்ல? என்ன காரணம்? இது உண்மையான நிகழ்வு என்பதை மனதில் நிறுத்தவும்.

5. எண்பதுகளில் சென்னை பஸ்களில் சில்லறை பிரச்சினை அதிகம் இருக்கும். ஒரு நாள் தில்லியிலிருந்து விடுமுறைக்காக சென்னை வந்த டோண்டு ராகவன் பஸ்ஸில் செல்லும்போது ஒரு காரியம் செய்தான். அதனால் டோண்டு ராகவனை அந்த கண்டக்டருக்கு பிடிக்காமல் போயிற்று. அவன் என்ன செய்திருப்பான்?

6. தபால் நிலையத்தில் விற்கப்படும் தபால் தலைகள் ஏன் கருப்பு வண்ணத்தில் இல்லை?

7. உலகின் மொத்த ஜனத்தொகை கிட்டத்தட்ட 5,000,000,000 (500 கோடிகள்). அவர்களது இடது கை விரல்களை ஒன்றோடொன்று பெருக்கினால் என்ன தொகை வரும்? கட்டை விரலைக் கூட விரல்களில் சேர்த்து கொள்லலாம். சரியான விடை தெரியாவிட்டாலும் அதன் அளவை உத்தேசமாகக் கூற இயலுமா?

8. சமீபத்தில் 1981-ல் குதுப் மினாரில் நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். கட்டடத்தின் ஒரு வடிவமைப்புத் தவறே அதற்குக் காரணமாயிற்று. அது என்ன?

9. நீந்தத் தெரியாத ஒருவன் கப்பலிலிருந்து கடலில் விழ, அவனை உயிருடன் காப்பாற்ற இரண்டு மணி நேரம் ஆயிற்று. அவன் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. பக்கத்தில் மரக்கட்டை ஏதுமில்லை. கப்பலிலும் பிடித்துக் கொள்ள ஏதுவாக ஒன்றுமில்லை. இது எப்படி சாத்தியம்?

10. கப்பலிலிருந்து கடலில் விழுந்த கன்னியை கடலில் குதித்து காப்பாற்றிய அந்த கன்னியாகுமரிக்காரர், இருவருமே கப்பல் தளத்துக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டதும் என்ன கூறியிருப்பார்?

11. பிரணதார்த்தி ஹரன் நல்ல பையன். தினம் அவனுக்கு ஒரே கனவு வருகிறது. அதில் அவனைச் சுற்றி அழகிய இளம் பெண்களாகவே இருந்து அவனைக் கட்டியணைத்து முத்த மழை பொழிகின்றனர். ஆனாலும் பிரணதார்த்தி ஹரன் இக்கனவால் மன வியாகூலத்தில் ஆழ்கிறான். ஏன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/01/2007

வெள்ளத் தனைய மலர்நீட்டம்

நான் ஏற்கனவே கூறியபடி எனது மனைவியின் அத்தையன்பர் உருவாக்கிய திருக்குறள் பரிமேலழகர் உரைக்கான ஆங்கில மொழியாக்கத்தை மொழி பெயர்ப்பு மற்றும் எழுத்துப் பிழைகள் சரிபார்த்து ஒருங்குறியில் தட்டச்சிடும் வேலையில் ஈடுபட்டுள்ளேன்.

நான் தற்சமயம் பொருட்பாலில் 60-ஆம் அதிகாரம், குறள் 595-ல் இருக்கிறேன். அக்குறள்:

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு

[The length of stem of a water-borne flower has to just exceed the depth of the pond. In the same manner, a person's rise and achievement are commensurate with his enthusiasm and zest for life].

இதே குறளை நம்ம கலைஞர் அவர்கள் நிச்சயமாக ஒரு சுவையான கட்டுரையாக தனது குறளோவியத்தில் எழுதியிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நமக்கு திறமை இல்லை. என்னால் வெறும் பதிவு மட்டும்தான் போட முடியும்.

சில நாட்களுக்கு முன்னால் அசுரன் அவர்களது இப்பதிவில் பின்னூட்டமிட்டபோது யதேச்சையாக மேலே சொன்ன குறளையே சுட்டியிட்டுள்ளேன். அப்போதே நினைத்து வைத்த பதிவுதான். இன்று அதே குறளுக்கு வரும்போது, சற்று நேரம் அந்த வேலையை நிறுத்தி விட்டு இப்பதிவைப் போடத் துணிந்தேன்.

ஏற்கனவே நான் வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை, மனித இயற்கைக்கு புறம்பான ஒரு தத்துவம், உலகமயமாக்கல் ஆகியவை பற்றியெல்லாம் பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றை பற்றியெல்லாம் இங்கு பேசப் போவதில்லை.

இங்கு இக்குறள் எவ்வாறு எக்காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது என்பது பற்றி எனது எண்ணங்களை எழுதப் போகிறேன். திருக்குறளை படிக்கப் படிக்க பிரமிப்பு ஏற்படுகிறது. முக்கியமாக அவரது அதிகாரங்கள் ஒரு வித ஒழுங்கில் வரிசையமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு 59-ஆம் அதிகாரம் ஒற்றாடல், அதற்கடுத்தது ஊக்கமுடைமை. இவ்வதிகாரத்தின் முன்னுரையாக பரிமேலழகர் உரையில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

"அஃதாவது, மனம் மெலிதலின்றி வினைசெய்தற்கட் கிளர்ச்சியுடைத்தாதல், ஒற்றரான் நிகழ்ந்தனவறிந்து அவற்றிற்கேற்ற வினை செய்வானுக்கு இஃதின்றியமையாமயின், ஒற்றாடலின் பின் (இவ்வதிகாரம்) வைக்கப்பட்டது".

இப்போது குறளுக்கு வருவோமா?

எனக்கு மிகவும் பிடித்த இஸ்ரவேலர்களுடன் துவக்குகிறேன். (ஆரம்பிச்சுட்டாண்டா, ஆரம்பிச்சுட்டான் என்று துவளப் போகிறவர்களும், சற்றே பொறுமையுடன் படிக்கவும்). யூதர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் உலகெங்கிலும் துரத்தப்பட்டு பீடிக்கப்பட்டனர் என்று நான் ஒரு வரியில் எழுதினாலும், அது மிகப் பெரிய துயரமே. ஆனால் அவர்கள் நம்பிக்கையிழக்கவில்லை. அவர்கள் நோக்கம் மிக ஆழமானது. எப்பாடுபட்டாவது இஸ்ரேலுக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் தலைமுறை தலைமுறையாக வேரூன்றி வந்தது. ஆகவே தங்களை முதலில் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கு மிக உதவியாக இருந்தவ்ற்றுள் முக்கியமானது அவர்தம் நகைச்சுவை உணர்வு. தங்களை வைத்தே நகைச்சுவை துணுக்குகள் கூற அவர்களை மிஞ்சி யாரும் இல்லை. இதெல்லாம் எவ்வாறு நிகழ்ந்தது? அவர்களது ஊக்கம் மிகவும் ஆழமானது. வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல வெளியில் வந்ததும் ஆழங்களைத் தாண்டியே வந்தது. மீதி உயர்வுகளும் மெதுவாக ஆனால் நிச்சயமாக வந்தன.

சமீபத்தில் 1967-ல் நடந்த 6 நாள் யுத்க்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றி நான் ஏற்கனவே பல இடங்களில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறிப்பிட்டது போல பைபிள் பழைய ஏற்பாட்டில் வரும் அரசன் சாலமன், அரசன் தாவூது ஆகியோர் பெற்ற வெற்றிகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல. இது எப்படி கிடைத்தது? அவர்களது தன்னம்பிக்கை மற்றும் ஊக்கமே காரணம். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

சமீபத்தில் 1969-ல் நான் ஜெர்மன் மொழி கற்கத் துவங்கியபோது பொறியியல் படிப்பில் கடைசி ஆண்டு தேர்வில் பெற்ற தோல்வியால் மனம் துவண்டிருந்தேன். அந்த தோல்வியை மறைக்க எனக்கு ஒரு வெற்றி தேவைப்பட்டது. அதை பெறும் வெறியும் ஏற்பட்டு வெற்றி பெற்றேன். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

அதே போல நான் ஐ.டி.பி.எல். லில் பெற்ற பல அனுபவங்கள் எனது ஊக்கத்தின் ஆழத்தால் நிகழ்ந்தவையே. முக்கியமாக பொறியியல் மற்றும் மொழிபெயர்ப்பு என எனக்களிக்கப்பட்ட இரு கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடிந்ததும் இதில் அடங்கும். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

என்னை விடுங்கள். வெற்றி பெற்ற யாரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அம்பானியையே எடுத்து கொள்வோமே. அவர் டைப்பிஸ்டாக தனது அடிநாட்களில் வேலை துவங்கியவர். அவருள் இருந்த ஊக்கத்தின் ஆழமே அவரை இந்தளவுக்கு உயர்த்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவருடன் டைப்பிஸ்டாக இருந்தவர்களில் பலர் அதே நிலையில் பல ஆண்டுகளுக்கும் அப்படியே இருந்தனர். வெள்ளத்தனைய மலர் நீட்டம்.

எங்கள் ஐ.டி.பி.எல். தலைவர் ராவ் அவர்கள், ஆரம்பத்தில் அதே நிறுவனத்தில் ஒரு நடுநிலை அதிகாரியாக ரிஷ்கேஷில் இருந்தார். சௌகரியமான வேலை. குவார்டர்ஸ் உண்டு. அவ்வாறு சென்று அமர்பவர்கள் தேவையின்றி வேலை மாற்றுவதில்லை. ஆனால் இவரோ சௌகரியமான வேலையை விட்டு உதறி, வேறு பல இடங்களில் வேலை செய்து பிறகு அதே கம்பெனிக்கு நிர்வாகியாக வந்தார். அவருடன் சக பதவியில் இருந்தவர்கள் அப்படியே இருந்தனர். இதைத்தான் வெள்ளத்தனைய மலர் நீட்டம் என வள்ளுவர் கூறுகிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது