1/22/2012

ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே

டிஸ்கி: பவுடர் ஸ்டாரின் என்னது ஔவையார் மலையாளியா என்னும் பதிவுதான் எனது இப்பதிவுக்கு தூண்டுதல்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் விகடனில்(?) ஒரு தொடர்கதை வந்திருந்தது. அது பற்றி கூறும் முன்னால் இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன். கிடைப்பதற்கரிய நெல்லிக்கனியை தமிழ்புலவர் ஔவையாருக்கு அளித்து மகிழ்ந்தான் வல்ளல் அதியமான். காரணம் என்னவென்றால், சாதாரண மன்னனான தன்னைவிட தமிழே மூச்சாக வாழும் ஔவையாரே தமிழகத்துக்கு அதிகம் தேவை என்று அவன் நினைத்ததுதான்.

இதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் உண்டா என ஆராயப்புகுந்ததுதான் நான் மேலே சொன்ன தொடர்கதை.

கதை அதியமான் இளைஞனாக இருந்தபோது துவங்குகிறது. அவனுக்கு ஒரு காதலி உண்டு (பெயர் முக்கியமில்லை). அதியமானின் விரோதிகள் அவனைக் கொல்ல நஞ்சு பூசிய பாணத்தை விட அவன் காதலி அப்பாணத்தை தன் உடலில் ஏற்று அவனைக் காப்பாற்றுகிறாள். ஆனால் அவளும் சாகவில்லை. என்ன, அவள் முதுகு வளைந்து, சிறுவயதிலேயே முதுமைத் தோற்றம் வந்து விட்டது. அமிதாப் நடித்த பாஆஆஆஆஆ என்னும் படம் நினைவுக்கு வருகிறதல்லவா?

அக்காதலியே பிற்காலத்தில் பெரிய கவியாகி ஔவையார் என அழைக்கப்பெற்றாள் என்று அந்த தொடர்கதை தோற்றம் கொண்டது. ஆக, அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தது தனது காதலி அவர் என்ற ஹோதாவிலேயே என்ற துணிபுதான் முன்னுக்கு வந்து நிற்கிறது.

இதே ஔவையார் (சில பாடங்களில் கம்பர் என்றும் கூறுவர்) தெலுங்கு பேசும் பிரதேசத்துக்கு சென்று பாஷை புரியாது கஷ்டப்பட்டார் என்றும் படித்திருக்கிறேன். அதை குறித்து அவர் “ஏமிரா வோரி யென்பாள் எந்துண்டி வஸ்தியென்பாள்” என்று துவங்கும் பாடலையும் பார்த்தேன்.

மேலே சொன்ன தொடர்கதையின் தலைப்பையும், பாடலின் முழு வடிவத்தையும் தெரிந்திருந்தால் யாரேனும் சொல்லுங்கப்பூ.

இதைத்தான் ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு பிறகு ஔவையாரையே கடிச்சுட்டாங்களே என்று கூற வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2012

சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல

கீழே உள்ள வீடியோவில் ஃபிரெஞ்சு தெரியாமலேயே எவ்வாறு அம்மொழியை பேசுபவர்களுடன் எல்லாம் தெரிந்தவர் போல பேசுவது என்பதைப் பார்க்கலாம்.நம் தமிழ் சினிமாவில் கூட பல படங்களில் வடிவேலு ஆங்கிலம் பேசுவது போல பாவலா காட்டுவார். உதாரணத்துக்கு மருதமலையில் ஒரு காட்சி கீழே.சங்கீதக் கச்சேரிக்கு போய் எல்லாம் புரிந்தது போல பொய்த்தாளம் போட்டு பாடகரை டரியல் ஆக்கி தனது தாளத்தை அவர் தவறவிடச் செய்வது, தியாகையர் ஆராதனைக்கு திருவையாறு போய் கேமராவுக்கு எதிரில் வெறுமனே வாயசைப்பது ஆகிய விஷயங்களும் அடங்கும். (நிஜமாகவே குன்னக்குடி வைத்தியநாதன் டைரக்ட் செய்த ஒரு படத்தில் அவர் நடிகை சுகன்யாவை ஆராதனை கச்சேரியில் வாயசைக்க வைத்து வாங்கிக் கட்டிக் கொண்டார்)

ஆக, சீன் போடுவது என்பது உலகெல்லாம் ஒரே மாதிரித்தான் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/20/2012

துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனவரி 2012-சற்றே லேட்டாக

2001-ல் சென்னைக்கு வந்தேன். அதுவரை துக்ளக் ஆண்டுவிழா கூட்டங்களுக்கு போக முடிந்ததில்லை. டில்லியில் இருந்தேன். 2002-ஆம் ஆண்டு கூட்டத்துக்கு சென்றேன். அப்போது பதிவராக இல்லை. 2003, 2004 ஆண்டுகளுக்கான கூட்டங்களுக்கு என் வேலை காரணமாக போக இயலவில்லை. ஆனால் 2005 துவங்கி 2011 வரை தவறாமல் சென்றதோடு பதிவும் போட முடிந்தது. இந்த ஆண்டு நான் ஏற்கனவேயே குறிப்பிட்டபடி மருத்துவ காரணங்களுக்காக செல்ல இயலவில்லை.

ஆனால் போன ஆண்டு மாதிரி இவ்வாண்டும் இணையத்தில் வெப்காஸ்ட் செய்தார்கள். அதை பார்க்க கட்டணம் 200 ரூபாய் என்றார்கள். என்னிடம் கிரெடிட் கார்ட் ஏதும் இல்லை. ஆன்லைனில் எப்படி கட்ட முடியும் என விட்டு விட்டேன். ஆனால் நண்பர் என்றென்றும் அன்புடன் பாலா இப்போது உதவிக்கு வந்தார். தான் பணம் கொடுத்து வாங்கியதை என்னுடனும் பகிர்ந்து கொண்டார். என்ன, ஒரு முறை ஓப்பன் செய்தால் விடாது பார்க்க வேண்டும். பாதியில் நிறுத்தினால் திரும்பவும் லாகின் செய்ய வேண்டியிருக்கும். 15 முறைதான் அவ்வாறு செய்யவியலும். ஆகவேதான் நான் குறிப்பிட்ட மாதிரி செய்ய வேண்டியிருந்தது.

நேற்று பிற்பகல் 4 மணிக்கு உள்ளே சென்றவன் அந்த தளத்தை இரவு 9.30 வரை ஒப்பனில் வைத்திருந்தேன். நல்ல ஒளிபரப்பு. என்ன, ஆடியோவில் சில சமயங்களில் குறைபாடு. நானும் கையில் நோட் புத்தகத்தை வைத்துக் கொண்டு குறிப்புகள் எடுக்கத் துவங்கினேன். இம்முறை இட்லிவடை அவர்கள் அமர்க்களமாக கவர் செய்துள்ளார். முதலில் ஆன்லைன் கவரேஜ் செய்து, பிறகு ஆடியோக்களை போட்டு, அதன் பின்னால் ஜெயா டிவியில் வந்த நிகழ்ச்சியின் ஒளிக்காட்சிகளையும் எம்பெட் செய்து தூள் கிளப்பி விட்டார்.

நான் குறிப்பு எடுத்ததாகக் கூறினேன். பாலா அவர்களும் எனது ஸ்டைலில் பதிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளியிட்டார். ஆனாலும் நான் நேரில் சென்று பிறகு சூட்டோடு சூடாக 3 அல்லது 4 பதிவுகளாக வெளியிடுவது போல இம்முறை செய்ய விருப்பமில்லை. ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்ற காரணம் முக்கியமானது. ஆகவே வீடியோக்களை பார்த்த பின்னால் எனது எண்ணங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

முழு வீடியோவையும் ஜெயா டிவி வீடியோக்களையும் பார்த்ததில் ஒன்றை கூற வேண்டும். சரியாகவே ஜெயா டிவியினர் முழு மீட்டிங்கின் சாரத்தையும் போட்டுள்ளனர். உதாரணத்துக்கு முதலில் பேச வந்த வாசகி கல்பனா கூட்டத்திலிருந்து மீண்டு வர பிடித்த நேரத்தை ஜெயா டிவி தவிர்த்தது புத்திசாலித்தனமானது.

மீட்டிங்கை பல பகுதிகளாக பிரிக்கலாம். சோவின் வரவேற்புரை, தனது சகபணியாளர்களை அறிமுகப் படுத்துவது, வாசகர்கள் கேள்விகள், சோவின் உடனுக்குடனான பதிவுகள், சோவின் பேச்சு, அத்வானி பேசியது, மோதி பேசியது, கடைசியில் மீண்டும் சோ பேசியது என்று பல பிரிவுகள்.

மன்மோகன்சிங் இந்த கூட்டத்துக்கு வந்து, தமிழ் அவருக்கு புரிந்திருந்தால் சோ பேசியதை கேட்டு மீட்டிங் முழுவதும் நெளிந்த வண்ணமே இருப்பார். உண்மையாகவே அவர் வந்திருந்தால், சோ அவர்கள் என்ன பேசியிருப்பார்? கண்டிப்பாக விருந்தாளியை நோகடித்திருக்க மாட்டார். அவரது உலக வங்கி சாதனை, 1991-லிருந்து 1996 வரை நிதி மந்திரியாக அவர் செய்த சாதனைகள் ஆகியவை அதிகமாக இடம் பெற்றிருக்கும் என ஊகிக்கிறேன்.

கலைஞர் வந்திருந்தால்? இப்பதிவை படிப்பவர்கள் அவரவர் ஊகத்தை தம் பின்னூட்டங்களில் கூறலாமே. ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்த மீட்டிங்கில் பேசியதை அப்படியே பேசியிருக்க மாட்டார். சபை நாகரிகம் தெரிந்த சோ அவர்கள் என்பதில் நான் திடமாகவே உள்ளேன். அதே சமயம் கூற வேண்டியதை நாசுக்காகவே கூறியிருப்பார்.

வெளிநாட்டவர் நேரடி முதலிட்டாஇ இவர் ஆதரித்தார். அதே சமயம் அப்போது சபையில் இருந்த குருமூர்த்தி ஒப்புக் கொள்ள மாட்டார் என்பதையும் குறிப்பிட்டார். இவ்வாறே தனது மாற்றுக் கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பார் என்பதுதான் உண்மை. போன முறை அத்வானி வந்தபோது (2007) மன்மோகன்சிங் அணு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதை ஆதரித்து, பாஜக ஆட்சியில் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருக்கும் என அவர் குறிப்பிட்டதை இங்கு நினைவில் கொண்டு வருகிறேன்.

நேரடி அன்னிய முதலீட்டைத் தவிர்த்து மத்திய அரசை அவர் எம்முறையிலும் ஆதரிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு பத்தாண்டுகாலமாவது ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தால் மோதியின் குஜராத்தையும் மிஞ்சி அவ தமிழகத்தைக் கொண்டு வருவார் எனக் கூறியது அவரது நம்பிக்கையையே அதிகம் பிரதிபலிக்கிறது. இந்த ஒரு விஷயத்தில் நான் சோ அவர்களிடமிருந்து மாறுபடுகிறேன். நான் ஏற்கனவேயே கீழ்கண்டவாறு கூறியுள்ளேன்.

டிஸ்கி: மனதை நிறையச் செய்த மோதியின் வெற்றி என்று தலைப்பிட்டவன் இப்போது மட்டும் தோல்வியை குறிப்பிடுகிறேன் என்றால் அதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு.

மோதியின் வெற்றிக்கான நேர்மறை காரணங்களே அதிகம். அவருடன் ஒப்பிடும்போது குஜராத்தில் காங்கிரஸ் ஒரு டம்மி காமெடி பீஸ் மட்டுமே. ஆனால் இங்கு அப்படியில்லை ஊழல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிமுகவும் சரி திமுகவும் சரி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை.

நான் ஏற்கனவேயே பல முறை குறிப்பிட்டபடி 1996 தேர்தலில் அதிமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. ஆனால் 2001-லும் சரி, 2006-லும் சரி அப்போதைய ஆளும் கட்சி ஏற்கும்படியாகவே ஆட்சி செய்து முடித்திருந்தது. கூட்டணிகள் கணக்கு விவகாரங்களில்தான் வெற்றி தோல்வி பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்டன.

ஆனால் 2011-ல் திமுக போக வேண்டியது காலத்தின் கட்டாயமே. அதை தமிழக மக்கள் உணர்ந்து செயல் பட்டதற்கு ஒரு ஓ போடுவோம். தேர்தல் ஆணையத்துக்கும் ஒரு ஓ. தொங்கு சட்டசபையெல்லாம் கொண்டுவராது ஒரு கட்சிக்கு தெளிவாக ஆட்சிப் பொறுப்பை தந்திருப்பதும் சிறப்புக்குரியதே.


அத்வானி அவர்கள் தனது பேச்சுக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை, அதுவும் சோ அதை செய்வது உத்தமம் எனக் கூற, சோ அவர்கள் துக்ளக் வாசகர்களுக்கு ஆங்கிலம் நன்கு புரியும் என பெருமிதத்துடன் கூறியது மிகச்சரியான கூற்றே. தனது வாசகர்களை பர்றி அவர் வைத்திருக்கும் உயர்ந்த கருத்து இங்கு வெளியாகிறது. அத்வானி, மற்றும் மோதியின் பேச்சுகள் வழக்கம்போலவே சுவையாக இருந்தன. இட்லி வடை அவர்கள் தந்திருக்கும் ஆடியோ டேப்புகளே சாட்சி.

சோவின் வழக்கமான கலாய்ப்புகள் இருந்தன என்பதைக் கூறவும் வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/13/2012

பெயர் குழப்பங்கள்

ஜெயமோகனின் இப்பதிவுதான் எனது இந்த இடுகையை தூண்டியது. அதில் எஸ்ரா அவர்கள் ஜெயமோகனை ஜெய்சங்கர், மலையாள நடிகர் ஜெயன், மேலும் தமிழ் நடிகர் மோகன் ஆகியோருடன் பல வெவ்வேறு காலகட்டங்களில் குழப்பிக் கொண்டது பற்றி சுவைபட எழுதியுள்ளார். போதாக்குறைக்கு அவரது மாமா வேறு ஜெயமோகன் எம்.எல்.ஏ. என அவரை தவறாகப் புரிந்து கொண்டு மாலை எல்லாம் வாங்கும் அளவுக்கு போனது இன்னும் நகைப்பை வரவழைத்தது.

இம்மாதிரி பல முறை நடந்துள்ளது. சுந்தரகாண்டம் உரை நடை புத்தகத்தை நான் எட்டு வயதில் பார்க்க நேர்ந்தது. அதில் ஜனகன் மகள் ராவணேஸ்வரனிடம் “ராகவனைத் தவிர வேறு எவரையும் நான் நிமிர்ந்து பார்க்க மாட்டேன்” என சூளுரைக்க, எனக்கு ஒரே ஆச்சரியம். நம்மைப் பற்றி இவ்வளவு அன்புடன் குறிப்பிடும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்ற திகைப்பு ஒரு புறம், ஜானகி இப்போது எங்கே என்ற ஆவல் ஒரு புறம். திடீரென என் பெரியப்பா மகன் அம்பிக்கும் ராகவன் என பெயர் என்பது நினைவுக்கு வர, எங்களில் யாரை சீதை குறிப்பிடுகிறாள் என்ற மயக்கம் வேறு பிறகு சேர்ந்து கொண்டது. பிறகு தெளிந்து கொண்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சமயம் என் தந்தை, பெரியப்பா ஆகியோரது ஒன்று விட்ட சித்தப்பாவின் மகன் வெங்கடேசன் சிறிய வயதில் ஜுரம் வந்து இறந்து போனான். என் பெரியப்பா அம்பியை அழைத்து வெங்கட வரதய்யங்காரிடம் போய் இம்மாதிரி நிலையில் நமக்கு எத்தனை நாள் தீட்டு என கேட்டு வா என் அனுப்பிக்க அவனும் ஒரே ஓட்டமாக ஓடி எதிர்வீட்டில் இருந்த அவனது பள்ளி ஆசிரியர் வெங்கட வரதைய்யாங்கரிடம் சென்று கோரிக்கை வைக்க அவரும் அலுப்புடன் பல புத்தகங்களை தேடி விடை கூறினார். சில மாதங்கள் கழித்து எங்கள் தாத்தாவின் திவசம் வர அதற்கு வெங்கட வரதையங்கரிடம் பிராமணார்த்தம் சம்பந்தமாக கேட்டு வர அதே அம்பி என் பெரியப்பாவால் அனுப்பப்பட்டான். அவன் அங்கு சென்று பார்த்தபோது ஆசிரியர் வீட்டில் இல்லை. அவரது மனைவியிடம் கூற அவரும், “இதென்ன கூத்து, எங்காத்து மாமா எப்போதிலிருந்து இந்த வேலையெல்லாம் ஆரம்பித்தார், நேக்கு தெரியவே தெரியாதே” என ஆச்சரியத்துடன் கூற, அவனும் திகைப்புடன் வீட்டுக்கு வந்து பெரியப்பாவிடம் அதை சொன்னான்.

அவர் திடீரென அவனிடம் அவன் எங்கு சென்றான் என கேட்க, அவனும் எதிர்வீட்டுக்கு சென்று கேட்டதாகக் கூற, அவர் சிரிக்க ஆரம்பித்தார். “அடே நான் சொன்னது நம்மாத்துக்கு உபாத்தியாயம் செய்ய வரும் வெங்கட வரதையங்கார் அவர் ராமேஸ்வரம் தெருவில் இருப்பவர்” என்று கூறியதுதான் குழப்பம் விலகியது. இந்த நிகழ்ச்சி எங்கள் குடும்பத்தின் பிரைவேட் ஜோக் கலெக்‌ஷனில் சேர்ந்து கொண்டது. அம்பியே அதை பலமுறை கூறி சிரித்திருக்கிறான்.

இதே போல எங்கள் ஆசிரியர் வி.என் ராகவாச்சாரியார் இன்னொரு ஆசிரியர் ரங்கராஜன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அதை என் வகுப்பில் இருந்த டி.எஸ். ராகவனிடம் கொடுத்து ரங்கராஜனிடம் சேர்ப்பிக்குமாறு கூற, அவனும் கர்ம சிரத்தையாக இன்னொரு செக்‌ஷனில் இருந்த தன் தோழன் ரங்கராஜனிடம் போய் அதை ஒப்படைத்தான். குழம்பிப் போன ரங்கராஜன் எங்கள் வகுப்புக்கு வந்து ஆசிரியருடன் பேச, அவரும் ராகவனைப் பார்த்து என்ன விஷயம் என கேட்க, :இவந்தான் சார் ரங்கராஜன்” என அவன் அழுத்தம் திருத்தமாகக் கூறினானே பார்க்கணும்.

இப்பதிவை பின்னாலிருந்து படித்த என் வீட்டம்மா ராகவன் என பெயர் வைத்தாலே இம்மாதிரித்தான் ஏதாவது ஏடாகூடம் செய்வார்கள் போல என நொடித்து விட்டு திரும்பியது வேறு கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/12/2012

துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா ஜனவரி 2012

நான் மிக ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு இது. ஆனால் அதற்கு போக முடியாமல் என் உடல்நலம் சதி செய்து விட்டதே. ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் இடது காலை பெல்ட் போட்டு இருக்கியிருக்கிறது. ஆகவே காலை இழுத்து இழுத்துத்தான் நடக்க வேண்டியுள்ளது. கீழே உட்கார ஏலாது.

இது எத்தனை நாளைக்கு என்றால் டாக்டர் சீரியசாகவே பிப்ரவரி முதல் வாரம் வரை எனக் கூறிவிட்டார். அதிலும் காலை இழுத்து நடப்பதும் வீட்டுக்குள்ளே மட்டும்தான் வெளியே வந்தால் தெரியும் சேதி என என் வீட்டம்மாவிடம் அவர் கூறிவிட்ட நிலையில் வெளியே வரவே அனுமதி லேது என்றாகி விட்டது.

போன முறை மாதிரி இம்முறையும் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு இருக்குமா என கேட்டதற்கு துக்ளக் ஆஃபீசில் தெரியாது எனக் கூறி விட்டார்கள். சரி பார்ப்போம்.

எனது ஏமாற்றத்தை இங்கு இச்சமயம் பதிவு செய்கிறேன். யாராவது துக்ளக்குக்கு சொல்லி நேரடி இணைய ஆன்லைன் ஒளிபரப்பு வைத்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி கண்ணனின் எதிர்ப்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்ப்பதிவு

வடை பஜ்ஜி பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இது.

//விவசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.


எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ?????//

இதற்கெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இஸ்ரேல் நெகேவ் பாலைவனத்தை சோலை வனமாக மாற்றி விட்டது.

லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது.

இப்பின்னூட்டத்துக்கு இசுலாமிய பதிவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என நினைக்கிறீர்கள்?


இப்போது எனது இப்பதிவின் விஷயத்துக்கு வருவோம்.

நெகேவ் பாலைவனம் பற்றிய இஸ்ரேலின் டூரிசம் வீடியோ கீழே.மற்றொரு வீடியோஇஸ்ரேல் உருவாவதற்கு முன்பிருந்தே அங்கு யூதர்கள் பல முன்னேற்றங்களை விஞ்ஞானம் தொழில் நுட்பத்தில் கொண்டு வந்துள்ளது பற்றி இங்கு பார்க்கவும்.

இஸ்ரவேலர்கள் பல முறை நம் நாட்டுக்கும் தனது விவசாய முறைகளை கற்றுக் கொடுக்க முன்வந்தது. இசுலாமிய ஓட்டு வங்கியை மனதில் கொண்ட இந்திய அரசு அதை மறுத்து வந்திருக்கிறது. ஏதோ நல்ல புத்தி வந்து இப்போதுதான் இஸ்ரேலுடன் பல துறைகளில் - முக்கியமாக தீவிரவாதத்துக்கு பலமான எதிர்வினை - ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளது. இது போதாது. மேலும் செய்ய வேண்டும் என்பதே என் அவா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/08/2012

நக்கீரன் கோபால் மீது நான் தவறேதும் காணவில்லை

“மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்” என கூறியது ஜெயலலிதாதானே. அதை கோட் செய்திருக்கிறது நக்கீரன். அதிலென்ன தவறு?

எனக்கு நக்கீரன் மேல் பல விமரிசனங்கள் அப்படியே இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர் செய்தது தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். சமீபத்தில் 1962-ல் சீன இந்திய யுத்த சமயத்தில் சீனா நம்மை முதுகில் குத்தியது என எல்லோரும் புலம்ப, அப்போது ராஜாஜி அவர்கள் ஒரு விஷயம் சொன்னார். “விரோதியின் வேலையே முதுகில் குத்துவதுதானே. ஆகவே அது பற்றி புலம்பாமல் மேலே காரியத்தை கவனிப்போம்” என்றார் அவர்.

அதைத்தான் இப்போது கூறுகிறேன். சிலர் கூறலாம், அதை ஜெயலலிதா கூறியிருந்தாலும் அட்டைப் படத்தில் பிராமினண்டாக போட வேண்டுமா என்று. எதிரி வேறு என்ன செய்வான் என நான் கேட்கிறேன். பத்திரிகைகள், அதுவும் நக்கீரன் போன்ற pulp பத்திரிகையின் வேலையே அதுதானே. உள்ளே செய்தியில் பார்த்தால் இந்த விஷயத்தை எம்ஜிஆரே கூறியதாகத்தானே ஜெயலலிதா எழுதியுள்ளார்?

எனது பதிவர் நண்பர் ஒருவர் தன்னை பீஃப் உண்ணும் பாப்பான் என குறிப்பிட்டு கொள்வார். அதை இன்னொருவர் கோட் செய்தால் அவர் கோபப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை.

இதன் எதிர்வினையாக நக்கீரன் பத்திரிகை அலுவலகத்தை அதிமுகவினர் சூறையாடியது மிகவும் அராஜகச் செயலே. அதுவும் ஆளும் கட்சியாக இருந்து அதை செய்ததும் கண்டனத்துக்குரியது.

பார்ப்பனர்களில் சிலர் (என்னையும் சேர்த்துத்தான்) அவ்வப்போது புலால் உணவு எடுத்துக் கொள்வது உண்டு. அதை பார்த்து அதிர்ச்சி அடைபவர்கள் அவர்களது பார்ப்பனரல்லாத நண்பர்களே. ஆக, பாப்பானை பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பிம்பம் உண்டு. அதெல்லாம் இக்கால கட்டத்தில் தேவையேயில்லை என்றுதான் நான் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/07/2012

Why this kolaveri kolaveridi

நான் சற்றே லேட் என நினைக்கிறேன். “3” படத்தில் வரும் பாட்டான வை திஸ் கொலவெறி கொலவெறிடி பாடலை இன்றுதான் சரியாகக் கேட்டேன் என்றும் கூட கூற இயலாது, அதன் பல வெர்ஷன்களைத்தான் கேட்டேன்.

முதலில் உண்மைத் தமிழனின் இப்பதிவில் அதன் யாழ்ப்பாண ஆக்கத்தைக் கண்டு கேட்டேன். பிறகு ஒரிஜினலை வீடியோவுடன் கேட்போம் என பார்த்து யூ ட்யூபுக்கு சென்றதும்தான் தெரிந்தது இப்பாடலுக்கு உலகளாவிய வகையில் வெர்ஷன்கள் இருக்கின்றன என. கீழே பாகிஸ்தானின் வெர்ஷன்.ஹிட்லர் இப்போது உயிருடனுன் ஆட்சியிலும் இருந்தால் அவன் எவ்வாறு ரியேக்ட் செய்திருப்பான்? அதையும் கற்பனை செய்து பார்த்து விட்டனர், கீழே பார்க்கவும். இப்பாடலை பார்த்தாக வேண்டுமா என யூ ட்யூப் கேட்கும் ஆம் என செக் செய்து விடுங்கள்.முதலில் சீறும் ஹிட்லர் பிறகு சரெண்டர் ஆகிறான். பாருங்கள் தமாஷாக இருக்கும். சீக்கிரமே ஹிட்லர் பற்றிய வீடியோவை தூக்கினாலும் தூக்கி விடுவார்கள். ஆகவே ஹரி அப்.

இன்னும் ஒரிஜினல் தனுஷின் ”3” படத்தின் வீடியோ காணக் கிடைக்கவில்லை. சுட்டி யாராவது தாருங்களப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஒரிஜினல் பாடலுக்கான சுட்டி தந்த மாதவன் ஸ்ரீனிவாசகோபாலனுக்கும் ஹாஜாஸ்ரீக்கும் நன்றி. ஒரிஜினலை கீழே பார்க்கலாம்.இப்போது படத்தின் சவுண்ட் டிராக்கிலிருந்தே

1/06/2012

2012-க்கான முதல் செட் புதிர்கள்

1. இந்தியாவை விட்டும் எங்குமே வெளி தேசத்துக்கு செல்லாத டோண்டு ராகவன் அந்த நிலை மாறாமலேயே வெறும் தரையில் நின்று கொண்டு சீனாவின் பெருஞ்சுவரை நேரடியாகவே காணவியலும். எங்கனம்?

2. மெக்கானிக் அண்ணாமலையின் சகோதரன் தாயுமானவன் இறந்து விட்டார். ஆனால் தாயுமானவுக்கு சகோதரனே கிடையாது. எவ்வாறு?

3. தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்? இம்சை அரசனுக்கு விடை தெரியாமல் மண்டையே வெடித்து விடும் போல. டோண்டு ராகவனுக்கும்தான்.

4. கோவிந்தாச்சாரி தனது காரை ஸ்பீட் லிமிட்டிற்குள்தான் ரோட்டோரமாக ஓட்டிக் கொண்டிருந்தார். எதிரே வந்த கார்களோ இவரது காரை விட வேகமாகவே வந்தன. இருப்பினும் போலீஸ்காரர் மணவாளன் கோவிந்தாச்சாரியை நிறுத்தி அபராதம் போட்டார். என்ன அக்கிரமம?

5. ராமகிருருஷ்ணன், தன்னருகிலேயே படுத்திருக்கும் தன் மனைவி பத்மாசனிக்கு தனது செல்பேசியிலிருந்து அழைப்பு அனுப்ப, அவள் தனது செல்பேசியை எடுத்து பேசும் முன்னால், தனது செல்பேசியை அணைத்து விட்டு ஆனந்தமாக தூங்கலானான். ஏன் இந்தக் கொலைவெறி அவனுக்கு?

6. எலெக்ட்ரீஷியன் ஆதிகேசவன் அந்த ரூம் விளக்கை அணைச்சுட்டு போனதாலே, 200 பேர் செத்தாங்க? எப்படி?

7. தன் சொந்த வீட்டில் இருந்தும் கூட ராமநாராயணன் தாகத்தால் அவதிப்பட்டான், தண்ணீரை வாங்கிக் குடிக்கவும் இயலவில்லை, பணம் நிறைய இருந்தும். ஏன்?

8. ராஜகுமாரன் பிங்களன் தன் குதிரை நீலவேணியை 15 அடி நீள கயிற்றில் கட்டி விட்டு ராஜகுமாரி பரிமளாவுடன் உல்லாசமாக இருக்க செல்கிறான். குதிரைக்கு 25 அடி தூரத்தில் புல்கட்டு இருக்கிறது. இருப்பினும் நீலவேணியால் அப்புல்லை தின்ன முடிந்தது. எங்கனம்?

9. மெய்யூரில் இருப்பவர்கள் அனைவரும் உண்மையை மட்டும் கூறுவார்கள். பொய்யூரிலோ பொய்யைத் தவிர அம்மக்களுக்கு ஒன்றும் தெரியாது. இரு ஊரையும் இணைக்கும் ராஸ்தாவின் நடுவில் உள்ள கூட்டு ரோட்டில் ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவன் ஒரு அழகான பென்ணைப் பார்க்கிறான் (வயது 18). அவன் மெய்யூருக்கு செல்ல வேண்டும். எவ்வாறு?

10. நான் கடவுளை விட வலிமைமையானவன், ஏழைகளிடம் இருப்பவன், பணக்காரர்களிடம் இல்லாதவன். நான் உன்னிடம் வந்தால் நீ இறப்பாய். நான் யார்?


அன்புடன்,
டோண்டு ராகவன்

8.

1/03/2012

பெப்பே பெப்பெப்பே

சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் எட்டாப்பு படிக்கையில் எங்கள் ஆசிரியர் ஜெயராம ஐயங்கார் ஒரு கதை சொன்னார். அது பின்வருமாறு.

ஒரு கொலை வழக்கில் குற்றவாளி கேசவனுக்கு சார்பாக வக்கீல் பராங்குசம் ஆஜரானார். அரசு தரப்பு கேஸ் ரொம்பவுமே ஸ்ட்ராங். ஆகவே அவர் ஒன்று செய்தார். அதாவது குற்றவாளியிடம் “உன்னை என்ன கேள்வி கேட்டாலும் நீ பெப்பே பெப்பெப்பே எனச் சொல்லவும். நீ பைத்தியம் என வாதாடி நான் விடுதலை வாங்கித் தருகிறேன். அவ்வாறே அவனும் செய்ய அவனுக்கு விடுதலை கிடைத்தது.

அடுத்த நாள் அவன் பராங்குசத்தை பார்க்க வந்தான். அவரும் அவனிடம் ஃபீஸ் கேட்க அவனோ பெப்பே பெப்பெப்பே என்றான்.

இக்கதை ஏன் நினைவுக்கு வர வேண்டும். எதேச்சையாக நான் அறுபதுகளில் படித்த “The anatomy of a murder" என்னும் நாவலின் திரையாக்கம் பர்றி இப்போதுதான் கூகளில் பார்த்தேன். அப்படியே எங்கள் எட்டாப்பு ஆசிரியர் சொன்ன ஒன்லைன் ட்ரீட்மெண்ட்தான் இங்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/01/2012

அவங்க பிராமின்ஸ், அப்படித்தான்

சமீபத்தில் 1963-ஜூன் 27-ஆம் தேதி எனக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இஞ்ஜினியரிங் அட்மிஷன் கிடைத்த சந்தோஷத்தை அது சற்றே பாதித்தது. ஆனால் இப்பதிவு அது பற்றியல்ல.

பிராக்சருகான பிளாஸ்டர் கட்டைப் போட எனக்கு மயக்க மருந்து தரவேண்டியிருந்தது. அப்போது பிற்பகல் மணி இரண்டரை. டாக்டர் என்னிடம் நான் எப்போது பகல் உண்வு உண்டேன் எனக்கேட்க. நான் காலை ஒன்பதரை என பதில் சொன்னேன். அவர் முகத்தில் திகைப்பு. அருகில் இருந்த நர்ஸ் அவங்க பிராமின்ஸ் அப்படித்தான் காலையில் சீக்கிரமே உணவு எடுத்துக் கொள்வார்கள் எனக் கூறினார்.

அது சாதாரணமாக உண்மைதான். விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் நான் பள்ளியில் படிக்கும்போது என் அபிராமண நண்பர்களுக்கு பகல் உணவாக முழு சாப்பாடு வரும். என் போன்ற சிலர் மட்டும் வெறுமனே ஓரடுக்கு டிபன் பாக்ஸில் டிபன் அல்லது தயிர் சாதம் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இந்த வேறுபாடு குறித்து நான் அக்கறை கொண்ட்தில்லை. ஆனால் இப்போது இது பற்றி யோசிக்கும் போது இந்த் வேறுபட்டிற்கான (எனக்குத் தோன்றும்) சமூகக் காரணத்தை ஆராய விரும்புவேன்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை எல்லோருமே அவ்வாறுதான் காலையில் நாஸ்தா, பிறகு மதிய உணவு என்றுதான் இருந்துள்ளனர். ஆனால் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஒரு மாறுதல் ஆரம்பித்தது. பிராமணர்கள் வெள்ளைக்காரன் அரசில் உத்தியோகம் பார்க்க ஆரம்பித்ததில், காலை பத்து மணிக்கே ஆஃபீஸ் என்றாக. அவர்களில் சிலர் மெதுவாக காலை நாஸ்தாவையும் பகல் உணவையும் காலை 9 மணிக்கான சாப்பாடாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். அதுவே அவர்களில் அதிகமாக பரவியது.

ஆனால் ஏனோ தெரியவில்லை, பிந்தைய கால கட்டங்களில் அபிராமணர்களும் உத்தியோகஸ்தர்களானாலும் அவர்கள் மட்டும் பழைய வழக்கப்படியே இருந்துள்ளனர். அது ஒன்றுதான் புதிராக உள்ளது.

ஆகவே இப்பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது