இது பற்றிய பதிவு பின்னூட்டங்களுடன் இங்கே:
நான் சமீபத்தில் 1979-ல் இப்போது நான் இருக்கும் எனது சொந்த வீட்டிலிருந்து காலி செய்து தி.நகர், அங்கிருந்து தில்லி என்றெல்லாம் சென்று விட்டு திரும்பவும் 2001-ல் அந்த சொந்த வீட்டுக்கே வந்தது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றியல்ல.
தற்காலிகமாக திரும்பி வந்ததும் ஒருமாதம் முழுக்க மராமத்து வேலை, பிறகு தில்லி சென்று வீடு காலி செய்து கண்டையனரில் வீட்டு பொருட்களை ஏற்றி விட்டு திரும்ப சென்னைக்கு வருவதற்கும், கண்டையனர் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது. அதுவும் இப்பதிவில் கூறப்போவதில்லை. நான் கூறவந்தது மராமத்து வேலைகள் சமயத்தில் ஒரு மாதம் நங்கநல்லூரிலேயே நண்பர் வீட்டில் தங்கியபோது நடந்தது பற்றி.
தில்லியில் உள்ள வாடிக்கையாளர் மின்னஞ்சலில் மொழிபெயர்ப்புக்கான கோப்புகளை அனுப்ப, நண்பரின் இரு மகன்கள் அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து என்னிடம் தர, நானும் மராமத்து வேலைகளை அவ்வப்போது மேற்பார்த்துக் கொண்டே மொழிபெயர்ப்புகளை கையால் எழுதியதை அவ்விரு இளைஞர்களும் கணினியில் தட்டச்சு செய்து முடிக்க, அதை கணினி திரையிலேயே படித்து நான் திருத்தங்களைக் கூற அவர்கள் அதை அனாயாசமாக நிறைவேற்றி பிறகு மொழிபெயர்ப்பை நான் மின்னஞ்சல் பெட்டி மூலம் அனுப்ப என்று விடாது வேலை. திங்கள் தெரியாது, சனி தெரியாது, கிழமைகளே தெரியாது அப்படி வேலை. என் அக்காவின் கணவர் கூட வேடிக்கையாகக் குறிப்பிடுவார், "நம்ம டோண்டு சென்னைக்கு வந்துட்டான்னுதான் பேரு. ஆனால் இப்பவும் அவனை தில்லி மூலமாகத்தான் பிடிக்க வேண்டியிருக்கு" என்று.
ஆக, மராமத்து, மொழிபெயர்ப்பு தவிர மீதி எல்லாம் கனவைப் போலவே இருந்தன. அப்போதுதான் இந்தப் பாட்டு அடிக்கடி எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் வரும்.
"மச்சினியே மச்சமச்சினியே மச்சத்திலே உச்சம் காட்டு நீயே
துள்ளி துள்ளி இங்கு விளையாடும் ...." அப்பாட்டைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.
என்று ஒரு நதி அருவி வழியாக வீழ்ந்து, சிற்றோடையாகச் செல்லும் அழகில் இப்பாட்டு செல்லும். நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்ற உணர்ச்சி எனக்கு அப்பாட்டை முதலில் சின்னத்தரையில் கண்டு கேட்கும்போதே தோன்றியது. இப்பாட்டு அடிக்கடி வந்து, என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இப்பாடலுக்கு நடன அசைவுகளும் ஒரு வித மேன்மை கணித நேர்த்தியுடன் (advanced mathematical precision) இருந்ததும் என் மனதைக் கவர்ந்தது. அதுவும் நான் அந்த வீட்டில் கணினி இருந்த அறையில் அமர்ந்து மொழிபெயர்ப்பு வேலை செய்தது என் வேலைக்கு அது ஒரு பின்னணி இசை கொடுத்தது போலத் தோன்றியது.
இப்பதிவை எழுதும்போதும் அப்பாட்டை கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியே 2001-க்கு போன உணர்வு. அதுவும் சென்னையில் தில்லி போல நன்றாக மொழிபெயர்ப்பு வேலை நடக்குமா என்று சற்றே அஞ்சியபடி வந்தவன் நான். அப்படியெல்லாம் பயம் தேவையில்லை எனக்கு உணர்த்திய அந்த ஒரு மாதம் என் இனிய தருணங்கள் பலவற்றை அடக்கியுள்ளது. அவற்றில் ஒன்று இந்த மச்சமச்சினியே பாட்டு என்றால் மிகையாகாது.
பிறகு பிப்ரவரி 2002-ல் நானே சொந்த கணினியை வீட்டில் நிறுவிக் கொண்டதும் மேலே நான் குறிப்பிட்ட அந்த இரு இளைஞர்களது உதவியாலேயே நிகழ்ந்தது. பெரியவன் எனது கணினிக்காக பாட்டுகளை தெரிவு செய்ய, சின்னவன் கூவினான், "டேய் அந்த மச்சமச்சினியே பாடலை முதலில் லோட் செய். அந்தப் பாட்டு டோண்டு மாமாவுக்கு பிடிக்கும்" என்று சீரியசாகவே கூறினான். பெரியவனோ "அப்பாடல் மட்டுமென்ன அந்தப் படத்தில் வரும் மீதி பாட்டுக்களையும் லோட் செய்வேன்" என்றான். அப்போதுதான் அப்பாட்டு ஸ்டார் படத்தினுடைய பாட்டு என்பதை அறிந்து கொண்டேன். எல்லா பாட்டுக்களுமே அப்படத்தில் அருமைதான். ஆனால் இப்போதும் அவற்றுள் என் விருப்பப் பாடல் அந்த மச்ச மச்சினியேதான். இப்பாடல் மெட்டில் ஹிந்தியிலும் ஒரு பாடல் ஒரு முறை கேட்டேன். ஆனால் எந்தப் படம் எனத் தெரியவில்லை. இப்போது இதே பாட்டை ஹிந்தியில் கேளுங்கள், ருத் ஆ கயீ ரே எனத் துவங்கும் பாடல் எர்த் 1947 என்னும் படத்தில்.
ஆனால் அப்படத்தை முழுதாக இந்த ஆண்டுதான் சின்னத் திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் அருமையாகத்தான் இருந்தது. வாழ்வின் செல்லும் போக்குக்கெல்லாம் செல்லும் பிரசாந்த ஜோதிகாவின் காதல் கிடைத்ததும் எப்படி தன் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார் என்பது கதை. காதலின் சக்தி என்னவென்பதை அலட்டிக் கொள்ளாமல் காட்டியது. அப்படக்கதையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
காசுக்காக மற்றவர் செய்யும் சிறு குற்றங்களை தான் ஏற்று அடிக்கடி சிறை செல்பவன் பிரசாந்த். சிறையே அவனுக்கு பிறந்த வீடு போலத்தான். அம்மாதிரி வாழ்க்கையை கவிதையாகக் காட்டுவது அப்படத்தில் முதலில் காண்பிக்கப்படும் இந்த மச்ச மச்சினியே பாடல்தான். உருதுவில் பிந்தாஸ் என்று கூறுவார்கள். அது ஒரு அலட்சிய, விட்டேற்றியான, அனாயாசமான பாணி. அப்படி வாழ்ந்தவன் பிரசாந்த். ஒரு முறை சாதாரண ஈவ்டீசிங் வழக்கு என நினைத்து குற்றத்தை ஏற்றுக் கொள்ள, அதில் பாதிக்கப்பட்ட பெண் கோமா ஸ்டேஜில் இருப்பதை பார்த்து வீறு கொண்டெழுந்து குற்றவாளியான திமிர் பிடித்த அந்தப் பணக்காரப் பையனைப் பந்தாடி போலீஸில் ஒப்படைக்கிறான். பிறகு ஜோதிகாவின் காதல் கிட்டுகிறது. ஜோதிகாவின் மாமா விஜயகுமார் பிரசாந்தை கொலை மிரட்டலுக்காளாகியிருக்கும் தன் மகனைக் காப்பாற்ற பிரசாந்தை தன் மகனாக நடிக்கக் கேட்டு கொள்கிறார். ஆனால் உண்மை காரணத்தை மறைத்து தன் மனைவி ஸ்ரீவித்யாவுக்காக அதை செய்வதாகவும், பிள்ளை இறந்து விட்டாலும் அவன் இறந்தது மனைவிக்கு தெரியாது என்று செண்டிமெண்ட் பேசி பிரசாந்தை இணைய வைக்கிறார்.
இதொன்றும் தெரியாத பிரசாந்த் ஸ்ரீவித்யா, விஜயகுமார் இருவரையுமே அன்னை தந்தையாக பாவித்து உருக, விஜயமுமாரின் உண்மை மகன் வில்லனுடன் சேர்ந்து கொள்ள என்றெல்லாம் கதை பல திருப்பங்களுடன் சென்று க்ளைமேக்ஸை அடைகிறது. ஆனால் ஒன்று. எல்லா திருப்பங்களுமே லாஜிக்கலாக காட்டப்பட்டுள்ளன.
இதற்கு மேல் கதையை இங்கு கூற விரும்பவில்லை. சான்ஸ் கிடைத்தால் பார்த்து கொள்ளுங்கள். முக்கியமாக சண்டைக் காட்சிகள் அபாரம் என்று கூறுவது இந்த 64 வயது இளைஞன் டோண்டு ராகவன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரா.முருகன் விமர்சனப்போட்டி
-
விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்
விருது இரா.முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதை ஒட்டி ஒரு கட்டுரைப் போட்டி
அறிவிக்கிற...
10 hours ago