Showing posts with label எந்தையும் தாயும். Show all posts
Showing posts with label எந்தையும் தாயும். Show all posts

10/22/2011

ஒரு தொழிற்சங்கவாதியின் மகனாக இருப்பதில் உள்ள சங்கடம்

எனது பதின்ம வயதுகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கும் என் தந்தைக்கும் இடையே பல விவாதங்கள் நடந்துள்ளதை உணர்கிறேன். முக்கால்வாசி எல்லா விவாதங்களும் இடதுசாரி வலதுசாரி பற்றிய விவாதமே.

உண்மையான அமெரிக்கன் என என் தந்தையே என்னைக் கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு நான் அமெரிக்க தனிநபர் பொருளாதாரத்தை விதந்தோதியிருக்கிறேன். என் தந்தையோ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்தவர். முதலில் எக்ஸ்பிரசில் வேலை பார்த்திருக்கிறார். அப்போதிலிருந்து ராம்நாத் கோயங்காவை அவருக்கு பிடிக்காது. அதுவும் தினமணி, எக்ஸ்பிரஸ் (சென்னை எடிஷன்) ஆகியவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும் கோயங்காவிற்கும் ஏழாம் பொருத்தமே.

தினமணியிலிருந்து பலர் விலகி நவமணி என்னும் பத்திரிகை ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தொழிலாளர்களால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை என்று வேறு கூறப்பட்டது அப்போதெல்லாம். என்ன, சம்பளம் மட்டும் இரு மாதத்துக்கொரு முறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என போட்டு வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு முறை என தந்தை திடீரென ஒரு நாள் கூறினார், “நல்ல வேளை தினமணி மூடிய நேரத்தில் நான் எக்ஸ்பிரஸ் குரூப்பில் இல்லை”. அவ்வாறு இருந்திருந்தால் தனக்கும் அதே கதிதான் என்பதில் அவருக்கு ஐயமேதுமில்லை. இதை அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். என் மரமண்டைக்கு அது எட்டாமல் யூனியன் விஷயங்களில் அவர் அதிகமாக ஆழ்ந்து போவதை அட்டாக் செய்திருக்கிறேன். அவருக்கே நான் கூறியதில் விஷயம் இருக்கிறது என்பதால் மேலே பேசவில்லை.

ஆனால் தந்தை மகன் இடையில் மகன் தந்தையை வெல்வது போன்ற சோகம் ஏதுமில்லை. சிறு வயதில் எங்களுடன் ஓட்டப் பந்தயம் பீச் மணலில் வைப்பார். அவர்தான் வெற்றி பெறுவார். ஆனால் வயதாக ஆக அவரது உடல் பலம் குறைந்து ஒரு நாள் நான் வின் செய்ததில் பிறகு எனக்குத்தான் அவ்வ்வ் என அழும்போல ஆகிவிட்டது. தந்தையின் ஆரோக்கியம் குறைகிறது என்பது மகனுக்கு எப்போதுமே அதிர்ச்சியைத்தான் தரும்.

சற்றே திசை திரும்பி விட்டேன், இருப்பினும் எழுதியது எழுதியபடியே இருக்கட்டும்.

1969-ல் நான் பொறியியல் பட்டம் பெற்றபோது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அச்சமயம் மின்வாரியத்தில் இஞ்சினியர்கள் ஸ்ட்ரைக் வர, பேப்பர்களில் இஞ்சினியர்கள் கேட்டு விளம்பரம் வந்தது. எனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அப்ளை பண்ண என் தந்தை எனக்கு அனுமதி திட்டவட்டமாக மறுத்தார். ஒரு வேலை நிறுத்தத்தை உடைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது உறுதியைப் பார்த்து நானும் அப்ளை செய்யாமல் விட்டுவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு மகத்தான காரியம் செய்திருக்கிறேன் என்பதை உணர மகிழ்ச்சியாக உள்ளது.

1967, 1968-ல் தொடர்ந்து இரு ஸ்ட்ரைக்குகள் ஹிந்துவில் நடந்தன. ரிப்போர்டர்கள் எல்லோரும் மேனேஜ்மெண்டுக்கு துணையாக நிற்க, என் தந்தை மட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். அதனால் பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன. உதவி தலைமை ரிப்போர்டர் பதவி அவருக்கு சீனியாரிட்டி மூலம் கிடைக்கவிருந்த நேரத்தில் அந்த போஸ்டையே நீக்கினார்கள். அதேர் போல அவர் தலைமை ரிப்போர்டராக வரவிருந்தபோது அப்போதைய தலைமை ரிப்போர்டருக்கு வேண்டுமெனவே ஓராண்டு நீடிப்பு தந்தனர். அதனால் எல்லாம் மனம் தளரவில்லை என் தந்தை. அவர் ரிட்டையரானதும் நிம்மதியாக தனது வழியில் ஆக்டிவாக இருந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.

இக்கால கட்டங்களில் அவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் புதுப்புது அசைன்மெண்டுகள் பெற்று வாழ்கின்றனர். அவரது காலகட்டத்தில் அத்தனை வாய்ப்புகள் இல்லை, கூடவே அவரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவருக்கு பொருளாதாரச் சுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நிஜமே. சொல்லி வைத்தது போல எனக்கும் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலை கிடைத்ததும் உதவியாக இருந்தது.

மொத்தத்தில் எனது தந்தை பொருளாதார வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் செல்வம் ஈட்டவில்லையானாலும் அவருக்கு பத்திரிகை உலகில் நல்ல பெயர் இருந்திருக்கிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நான் எதிர்ப்பாராத தருணங்களில் அவரது பழைய நண்பர்களுடன் எனக்கு சந்திப்பு ஏற்படுவதில் எனக்கு மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9/14/2010

கொட்டும் மழையில்

என் தந்தை அமரர் நரசிம்மன் அவர்களுக்கு சிறுகதை எழுத வேண்டுமென ஓர் ஆசை வெகு நாட்களாக இருந்து வந்திருக்கிறது. நான், என் அக்கா, என் பெரியப்பாவின் குழந்தைகள் ஆகியோருக்கு அவர் சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். பீமன் துரியோதனனின் சண்டையை வர்ணித்த அவர் சமீபத்தில் 1952-ல் துரியோதனனின் மரணாவஸ்தையை அபிநயத்துடன் கூறியதை நான் பயத்துடனும் அதே சமயம் ஆர்வத்துடனும் கேட்டுள்ளேன்.

ஹெலன், பாரீஸ், யுலிஸெஸ், அகில்லீஸ், ஹெக்டார் ஆகிய பாத்திரங்களின் இரு கதைகளையும் மிக தத்ரூபமாக கூறியிருக்கிறார். ஆகவேதான் ஹெலன் ஆஃப் ட்ராய் மர்றும் யுலிஸெஸ் திரைப்படங்களை என்னால் மனம் ஒன்றிப் பார்க்க முடிந்தது. பத்துக்கட்டளைகள் நிகழ்வு பற்றி ஏற்கனவேயே எழுதிவிட்டேன்.

அவர் கையெழுத்தில் எழுதி என்னிடம் ஒரு கதையை படிக்கக் கொடுத்தார். அதன் பிறகு சில நாட்களிலேயே உடம்புக்கு வந்து மறைந்து போனார் (செப்டம்பர் 1979). அதை உடனுக்குடனேயே படித்தவனே, தந்தையுடனும் விவாதித்திருக்கிறேன். பிறகு வந்த வீடு மாற்றங்களில் கண் பார்வையிலிருந்து மறைந்து போனது அது. இத்தனை நாட்கள் கழித்து அக்கதை நேற்று எதேச்சையாக என்னிடம் கிடைத்தது. அதை நான் இங்கு தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அக்கதையின் தலைப்புதான் இப்பதிவுக்கும் தலைப்பாகும். ஓவர் டு ஆர். நரசிம்மன்.

நடுப்பகல், ஆனால் வானம் இருண்டிருந்தது. கடல் பக்கமிருந்து ஊதல் காற்று பலமாக வீசியது. எங்கும் கடும் புயலின் சின்னங்கள், செடிகள், பிரவாகமெடுத்தோடும் அருவிகள், மின்னல்கள், இடி.

அடையாற்றின் கரையில் ஒரு சிறிய மேடு. அதில் ஒரு பாறை மீது வீற்றிருந்த அந்த முதியவர் சொட்டச் சொட்ட நனைந்து விட்டார். நீண்ட வெள்ளை கலந்த தாடி மீசை. தீட்சண்யமான பார்வை, கூரிய வளைந்த மூக்கு, மாநிறம். முதியவர் ஆளைத் தள்ளும் மழையையும் காற்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை.

“சாமீ, சாமீ, இப்படி திறந்த வெளியில் கொட்டும் மழையில் ஒக்கார்ந்திருக்கீங்களே. குடிசைக்குள்ள போலாம், வாங்க” என்றான் ஒரு இளைஞன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்த அவன் அப்போதுதான் வந்த அவன் அரையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தான். தலையில் ஒரு சிறு முண்டாசு. அவன் பேசி முடிக்கவில்லை, அப்போதுதான் காதைப் பிளக்கும் சத்தத்துடன் அவர்கள் அருகாமையில் ஒரு இடி நெடிய பனைமரம் ஒன்றைத் தாக்கி, அதன் முடியை வீழ்த்தியது.

முதியவர் அதைப் பொருட்படுத்தவில்லை. கனிவு கலந்த குரலில் “குள்ளா, நீ கூடத்தான் நனைந்து விட்டாய். இது உனக்கும் எனக்கும் ஒரு ஞான ஸ்நானம். நம் பாபங்கள் கரைகின்றன”. இந்த வேதாந்தம் குள்ளனுக்கு அவ்வளவாகப் புரியவில்லைதான். அவ்வளவு பெரியவரை, மதிப்புக்குரியவரை எப்படி உள்ளே போகச் சொல்வது என்று அவன் தயங்கினான்.

அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றன. கீழே அடையாறு ஹோவென்று வெள்ளமெடுத்து ஓடியது. சுற்றிலும் சுள்ளி, சப்பாத்தி, ஏனைய முட்செடிகள், புதர்கள், சிறிய மரங்கள், நீண்ட பனைமரங்கள் தெரிந்தன. பார்வைக்கு சுற்றிலும் அமானுஷ்யமான பிரதேசமாக இருந்த பொழுதிலும் நடுநடுவே சிறிய கிராமங்கள் இருந்தன. சிலவற்றின் இருப்பிடத்திற்கான அறிகுறிகள் கூர்ந்து கவனிப்போர்க்கு மழை சற்று தணிந்த நேரங்களில் தென்பட்டன.

காலம் கடந்தது. முதியவர் என்ன நினைத்தாரோ, பிறகு தானே அருகாமையிலுள்ள குடிசிக்குள் சென்றார். சிறிய குடிசைதான், ஆனால் சாந்தம் தவழும் தூய ஆசிரமம். முதியவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.

அவர் மண்டியிட்டபொழுதுது, குள்ளன் - தாய் தந்தையர் இட்ட பெயர் சாத்தன் என்பது - ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். சுமார் நான்கு கல் தூரத்திலுள்ள மயிலை - திருவல்லிக்கேணியிலே உள்ள ஜனங்கள், ஏன் அவனும்தான், ஆண்டவனை சாஷ்டாங்கமாக நிலம் தோய விழுந்து அஞ்சலி செலுத்துவர். கடந்த சிலகாலமாக, தாடி சாமியார் இங்கு வந்த காலத்திற்கு பின்பு, அவனும் இப்போதெல்லாம் அவருடன் கூடி மண்டியிட்டுத்தான் பிரார்த்தனை செய்கின்றான் என்றாலும், இன்னமும் அவ்வாறு மண்டி போடுவதின் புதுமை அவனை அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஓரோர் தடவை அவன் பழையபடியே கீழே விழுந்து நமஸ்கரிப்பதுண்டு. பிறகுதான் ஞாபகம் வரும்.

“யப்பா” என்ற ஒரு மழலைக்குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. ஒரு மூன்று வயதுப் பெண்குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டது. கூடவே வந்த மனைவியையும் கண்டான். ஒதுக்குப்புறமாக மறுபடியும் வலுக்கத் தொடங்கியிருந்த மழையில் சற்றுத் தள்ளி, ஒரு சிறிய மரத்தடியில் ஒதுங்கியிருந்தவளைப் பார்த்து, “மங்கா ஏன் வந்த? நான் பெரியவருடன் இருப்பதை கிராமத்துலதான் தடுக்கற.இங்குமா வரணும்”? என்று சற்று தணிந்த குரலில் ஆனால் உஷ்ணத்துடன் கேட்டான்.

ஒரு கணம் அவள் பதில் பேசவில்லை. அவள் முகம் பயத்தால் வெளிறியிருப்பதையும், அவள் கெஞ்சும் கண்களையும் பார்த்த பிறகு, அவன் சற்று பரிவுடன் அவளை நோக்கி ஓரடி வைத்தான். அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “சீக்கிரம், சீக்கிரம், நாம் ஓடிப்போகணும் மச்சான். எதிர்க்கரை ஊர்க்காரர்கள் திரண்டு வருகிறார்கள். அவரோடு உன்னையும் கொன்று விடுவார்கள்”, என்றாள். அவள் கண்கள், சுழித்துக் கொண்டு, சிறிய மரங்களையும், செடி, கொடிகளையும் அடித்துக் கொண்டு விரைந்தோடும் ஆற்றிற்கப்பால் பார்வையைச் செலுத்தி, குறிப்பாக உணர்த்தின.

பிரம்மாண்டமான அரச மரத்துக்கருகில் ஒரு சிறிய இடைவெளியில், மழை நடுவே வேல்கம்புகளும், ஈட்டிகளும் கொண்டிருந்த சில மனிதர்கள் தென்பட்டனர்.

ஒரு கணத்தில் நிலைமையைக் குள்ளன் ஊகித்தான். வருபவர்களில் சிலர் அவன் நண்பர்களாக, சமுத்திரத்தில் அவன் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் அவனுடன் கூடவே தாங்களும் அதே பரம்பரைத் தொழிலைச் செய்து வந்தனர். அந்தக் காலம் போய் விட்டது. இப்பொழுது அவர்கள் அவனை நஞ்சைப் போல வெறுத்தனர். சாமியார், மேற்கே ஏதோ கடல் இருக்கிறதாமே, அந்தப் பக்கத்திலிருந்து இங்கு வந்ததிலிருந்து ஏற்பட்டப் பிளவின் காரணமாகத்தான் அந்த விரோதம் ஏற்பட்டது. இப்பொழுது அவன் தன் மனைவியின் கிராமத்தில்தான் வசிக்கிறான்.

அவன் மனைவியைப் பார்த்து, “சரி, சரி நீ போ. குழந்தையை பத்திரமாக எடுத்துப் போ” என்றான். மங்காவும் வேறொரு பக்கமாக விரைந்து சென்று, புதர்களிடையில் மறைந்தாள்.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அந்தச் சிறியகும்பல் அடையாற்றங்கரையை அடைந்தபோது சூரியன் உச்சியைக் கடந்து மேற்கே சிறிது தூரம் சென்றுவிட்டிருந்தது. ஐப்பசி மாதம், வடகிழக்குப் பருவ மழை. கூடவே பெரும்புயல் வேறு. ஓரிரண்டு வாரங்களாக அவர்களில் யாருமே கடலுக்குப் போகவில்லை. காரணம் கடல் கொந்தளிப்பு. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு கடற்காற்று அடிக்கடி தவறிவிட்டது.

சாதாரணமாக மீனவர்கள் காலை வேளையில் நிலக்காற்றின் உதவியோடு கடலுக்குள் வெகுதூரம் சென்று - அதாவது இக்காலக் கணக்குப்படி பத்து, பதினைந்து மைல், கரை மறையும் அளவுக்கு - மீன் பிடிப்பார்கள். ஜூன் ஜூலை மாதங்களில் கோலா மீன் கும்பல்கள் வரும். நீண்ட தூரத்துக்கு நீண்ட தூரம் என்ற பரப்பளவில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும். கைகளால் கூட மீன்களைப் பிடித்து விடலாம் போல தோன்றும். அந்த மீன்களைத்தான் செம்படவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடிப்பார்கள். அவர்றுக்கு சுற்று வட்டாரத்தில் நல்ல கிராக்கி வேறு.

ஆனால் கடற்காற்று - கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது - தவறியதால் அவ்வாண்டு மீனவர்கள் வழக்கம்போல பாய் விரித்து கரையை நோக்கி வர இயலவில்லை. திசை தவறி தவிக்கவும் நேரிட்டது. சிலர் கரைக்குத் திரும்பவேயில்லை. இதற்கெல்லாம் காரணமே அந்தச் சாமியார்தான் என அவர் தலையில் பழியைச் சுமத்தினர். மேலும், அவர் கொண்டு வந்த புதிய மதம் ஏழை எளியவர்களுக்கும், இன்னம் மிகுந்த பாபம் செய்தவர்களுக்கும் அவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அவருக்கும் விமோசனம் உண்டு என்றெல்லாம் போதித்ததை புரிந்து கொள்ளாதவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களுக்கு இம்மதம் ஒரு புரியாத புதிராகவே ஆயிற்று.

நிற்க. தங்கள் தொழிலைப் புயல் காரணமாக செய்ய முடியாத மீனவர்கள் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இப்போது ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பெற்று வந்து விட்டனர். மயிலை - திருவல்லிக்கேணி கடற்கரை எங்கே, இன்றைய சைதாப்பேட்டை - கிண்டி பக்தி எங்கே, அங்கேயே வந்து விட்டனர், நடுவே இருந்த அடர்ந்த முட்காட்டையும் பொருட்படுத்தாமல்.

ஆனால் அடையாறு பயங்கர வெள்ளத்தால் அல்லவா பீடிக்கப்பட்டிருக்கிறது? புயல் வேறு, கேட்க வேண்டுமா?.

ஆற்றங்கரையில் அவர்களில் பலர் திடுக்கிட்டு நின்றனர். அவர்களின் தலைவன் போன்றிருந்த ஒருவன் “ஏன், என்ன பயம்? கடலில் அலைகள் மத்தியில் போகும் எனக்கு இதைக் கண்டு ஏன் பயம் வரவேண்டும்? நான் முன்னேறுகிறேன், தைரியமுள்ளவர்கள் என்னோடு வரட்டும்” என்றான். அவனுக்கு நல்ல கட்டுமஸ்தான தேகம், அகன்ற மார்பு, நல்ல கறுப்பு நிறம், நீளக்கைகள், குட்டையான கால்கள். கையில் ஓர் எரி ஈட்டி வைத்திருந்தான்.

அவன் தைரியம் சொன்னாலும் பலர் பின்தங்கினர். அவர்களில் ஆறுபேர் மட்டும், “மஞ்சனி நாங்கள் உன்னுடன் வருகிறோம்” என்றனர். அவர்களில் இருவர் மஞ்சனியின் தம்பிகள், மீன் குஞ்சு மாதிரி நீந்துபவர்கள். மூன்றாமவனுக்கும் நீச்சல் தெரியும். எஞ்சிய இருவருக்குத் தெரியாது. நீந்தத் தெரிந்தவர்கள் அவர்களை ஒவ்வொருவராக அக்கரையில் சேர்ப்பதில் முனைந்தனர்.

குள்ளனுக்கு சற்றுக் களைப்புதான். மிகுந்த பிரயாசையுடன் சாமியாரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அவர்கள் சின்ன மலையை விட்டு நீங்கி மூன்று நாழிகையாகியிருக்கும்.

சாமியார் முதலில் அவனுடன் வரச்சம்மதிக்கவில்லைதான். ஆனாலும் தான் உயிருடன் இருந்தால்தான் மேலும் பலரைப் புது மார்க்கத்தில் ஈடுபடுத்த முடியும் என்ற காரணத்தால் அவனுடன் செல்லச் சம்மதித்தார். அவர் சாவதானமாகவே இருந்தார். அவரிடம் சிறிதும் பரபரப்பில்லை. இதோ அவர்கள் இப்போது ஒரு சிறிய குன்றை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். காலில் செருப்பில்லாவிடினும் குள்ளன் மிகுந்த லாவகமாக முட்செடிகளின் ஊடே விரைவாக நடந்தான், பயம் அவனை உந்த. செருப்பணிந்த சாமியாரின் கால்களோ அவரது பழக்கமின்மையைப் பறைசாற்றின. முட்கள் கீறி, முழந்தாள்கள் மற்றும் தொடைப்பகுதிகளில் ஆடை கிழிந்து இருந்தது, ரத்தம் வழிந்தோடியது. அவரது நினைவுகள் பின்னோக்கி விரைந்தன. எரூசலத்திலும், காலிலீ கடல் பிராந்தியத்திலும், நாஜரெத்திலும் இப்படியான முட்செடி, மர வளர்த்தி உண்டா? அங்கிருந்த பாலைவனங்களையும், நடுவே ஓடும் ஜோர்டான் நதியையும், புனித நகரமாகிய எரூசலத்தையும் நினைத்தபொழுது அவருக்கு ஓர் ஏக்கம் ஏற்பட்டது. அது ஓரிரு நிமிடங்கள்தான் நீடித்தது. இப்போது அடர்ந்த தாவர வளர்ச்சியூடே அவர் மலை ஏறி, மறுபக்கம் இறங்க வேண்டும்.

மறுபக்கம் இறங்கியதும் என்னாகும்? குள்ளன் கூறியது ஞாபகம் வந்தது.

“சாமி, மலையோட அப்பக்கச் சரிவுல ஒரு குகை இருக்கு. சற்றே சீக்கிரம் நடங்க. நாம அங்கே போயி ஒளிஞ்சிக்கிட்டா யாராலயும் நம்மள சட்டுனு கண்டு பிடிக்க முடியாது. நாளைக்கி காலையோ அல்லது இந்த விரோதிப்பசங்க திரும்பிப் போனப்புறமோ நாம அந்த இடத்திலேருந்து ரண்டு கல் தூரத்துல இருக்கற பெரிய மலைக்குப் போயிடலாம் (இக்காலத்திய பல்லாவரம் மலை). அதனோட அடிவாரத்துல என் மாமன் வீடு இருக்கு. அவரோ மணிமங்கலம் பிரபுவோட ஆள். இந்த ஊர்க்காரர்கள் பாச்சா அங்கே பலிக்காது. ஒங்களை எப்படியும் காப்பாதிடுவோம்”.

“காப்பாதிடுவோம்”, இச்சொல் அவர் காதுகளில் பெரும் ஓசையுடன் ஒலித்தது நெடுநேரம் வரை. கல்லிலும் செடிகளிலும் தான் இடறி வீழ்ந்து சென்றதை அவர் உணரவே இல்லை. அவர் எண்ணங்களோ கட்டுக்கடங்காமல் ஓடின.

“ஆம், நான் ஓடுகிறேன், ஓடிக்கொண்டே இருக்கிறேன். அமலன், பரமபிதாவின் குமாரனைச் சிலுவையில் அறைந்த காலத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இன்னும் எனக்கு ஆத்மசாந்தி கிடைக்கவில்லை. நிலையான இருப்பிடமும் கிடைக்கவில்லை.

“பரமபிதாவே, உம்குமரன் மூலம் உம்மைச் சரணடைந்தேன். சாந்தி அளிப்பீராக.”

அவர் எண்ணங்கள் இவ்வாறு ஓடும்போது அவரையும் அறியாமல் அவர் கால்கள் மடிந்தன. மண்டியிட்டு அமர்ந்தார். அவர் பிரார்த்தனையை ஆரம்பித்தது. குள்ளனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. அவனைப் பொருத்தவரை தெய்வாம்சம் நிறைந்த சாமியார், ஆச்சு கிட்டத்தட்ட மலையுச்சியை அடைந்த இத்தருணத்தில் இப்படிக் காலதமதம் செய்வதை எவ்வாறு தடுப்பது?

இன்னும் பத்தடி நடந்தால் போதும் மலையுச்சி வந்து விடும். இந்த இடத்தில் மரங்களோ முட்செடிகளோ அவ்வளவாக இல்லை. பெரியதாகவும் சிறியதாகவும் பாறைகள் மட்டுமே இந்த உச்சிப் பகுதியில் இருந்தன.

“சாமீ, சாமீ நடங்க, நடங்க” என அவன் கெஞ்சியது அவர் காதுகளில் விழவே இல்லை. அவர் கண்கள் உச்சி மேலிருந்த ஒரு பெரிய பாறையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

அப்போது ஒரு வேங்கையின் உறுமல் கேட்டது. நெருப்பு போல ஜொலிக்கும் அதன் கண்களைப் பார்த்ததும் “ஐயோ” என அலறியவண்ணம் குள்ளன் மலைச்சரிவில் ஒரு பக்கமாக குள்ளன் ஓடினான். அச்சமயத்தில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே அவன் உள்ளத்தில் இருந்தது.

அவன் ஓடியதை சாமியார் அறியவில்லை. அந்த பயங்கரமான வேங்கையையும் அவர் பார்க்கவில்லை. வேங்கை மறுபடியும் உறுமிற்று. வலை இப்பக்கமும் அப்பக்கமும் சுழற்றி அடித்தது. அப்போழுதும் தன் சூழ்நிலையின் பிரக்ஞையே இல்லாமல், சிந்த்னையிலாழ்ந்திருந்த அந்த வணக்கத்துக்குரிய மனிதர் வேங்கைக்கு ஒரு விளங்காப்புதிராகவே இருந்திருக்க வேண்டும்.

சிறிது தொலைவில் மனிதர்கள் வரும் சப்தம் கேட்டது. கூடவே கானகத்தின் சிறுபிராணிகளும் சப்தம் செய்தும், பறவைகளும் மேலே பறந்தும் பிறகு மறைவிடம் தேடுவதும் வேங்கைக்கு புலனாயின. ஆகா இதென்ன? சற்றே கீழே கிறீச், கிறீச் என்னும் சப்தம்? ஆகா ஒரு குரங்குக் கூட்டம். நல்ல வேட்டைதான் என வேங்கை நினைத்தாற்போல சரேலென கீழே நோக்கி ஓடி, அந்தக் காட்டினூடே மறைந்தது.

+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

அடையாற்றை சிரமப்பட்டு கடந்து வந்த அந்த அறுவரும் முதலில் சற்றே திகைத்து நின்றனர். ஏனெனில் சாமியார் அந்தச் சின்னமலைமீது இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த அன்னிய நாட்டுக்காலணிகளின் சுவட்டைப் பின்பற்றி விரைந்தே பின்தொடர்ந்தனர். ஏனெனில் அவர்களில் ஓரிருவர் மிருக வேட்டையாடுவதில் வல்லவர்கள். பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் குட்டைகளால் அவர்களது முன்னேர்றம் அவ்வப்போது தடைபட்டது, ஏனெனில் சுவடுகள் அவற்றில் மறைந்தன. ஆனாலும் சாமியாரின் உடைத்துண்டுகள் முட்செடிகளில் மாட்டியிருந்தது அவர்களது வேலையைச் சுலபமாக்கியதும் நிஜமே. ஆனால் மொத்தத்தில் அவர்களது முன்னேர்றம் தாமதப்பட்டதைத் தவிர்க்கவியலவில்லை. கடைசியில் அவர்கள் சாமியார் அச்சமயம் இருந்த குன்றின் அடிவாரத்துக்கு வந்து விட்டிருந்தனர். அடையாற்றைவிட்டு அவர்கள் காட்டுப் பகுதிக்குள் வந்து இரண்டு நாழிகைகளாகியிருக்கும். இப்போது மலைச்சரிவில் அவர்களது தடையங்களை கண்டுகொள்வது கடினமாக இருந்தது.

அவர்களில் ஒருவன், சிகப்பன், சொன்னான், “மஞ்சனி, இப்போ என்ன பண்ணறது? இன்னும் ஒரு நாழிகையிலே கும்மிருட்டாகிவிடும். இந்தக்கட்டின் மத்தியிலே அப்போ அதிகத் தொல்லையாயிடும். பேசாம இப்போ திரும்பிப்போவோம், இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்றான்.

மஞ்சனி முடியாது என தலையை அசைத்தான். “சிகப்பா, இந்த மஞ்சனி முன்வச்சக் கால பின்னால வைக்க மாட்டான். யாருக்கு இஷ்டமிருக்கோ அவங்க மட்டும் என்னோட வரட்டும்” என்றான். கூடவே தன் கையிலிருந்த எரியீட்டியை குத்தும்பாவனையில் தூக்கிப் பிடித்தான்.

அப்போது “ஐயோ” எனக்கத்தியக் குள்ளனின் குரல் கேட்டது. அவர்கள் பார்வில் மலைச்சரிவை நோக்க அங்கு தூரத்தில் பாதிரியாரின் முள்ளில் மாட்டிய அங்கி தெரிந்தது.

கோபமும் ஆத்திரமும் வெறியும் அவர்களை ஆட்கொள்ள, அந்த அறுவரும் மேல்நோக்கி விரைந்தனர்.

சிறிது நேரத்தில் மழை விட்டுவிட்டது. வெளியில் சூந்திருந்த இருட்டும் சற்றே குறைந்தது. வெளிச்சம் வரவர குள்ளனின் மனதிலும் தைரியம் மீண்டும் பிறந்தது.

“ஐயோ என்னக் காரியம் செஞ்சேன்? செய்யாகூடாத காரிமாச்சே அது” என பச்சாதாபத்துடன் அவன் திரும்ப பாதிரியாரின் இடம் நோக்கி ஓடினான். அந்த வேங்கை அவரை என்ன செய்ததோ தெரியவில்லையே. எனக்கு என்ன ஆனாலும் சரி, முதல்ல அவரோட சௌகரியத்தை பார்க்கோணும்” என புலம்பியவாறே அவன் விரைந்தான்.

மலை உச்சிக்கருகில் சாமியார் அதே மண்டியிட்ட நிலையில் இருந்ததைப் பார்த்த அவன் மனம் நிம்மதியால் நிரம்பியது. பொல்லாத வேங்கையையும் காணோம்.

குள்ளனின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் பெருகிற்று. கூடவே அவமான உணர்ச்சியும் தோன்றிற்று. அவன் வாய் புலம்பியது, “சாமீ என்னப்போல ஒரு பதரும் இருக்க முடியுமா? ஆபத்துக் காலத்தில் பறந்து விட்டேனே”!

சாமியார் அருகே இருந்த பாறைமீது அமர்ந்து அருளுடன் அவனை நோக்கினார். “மகனே வீண்கவலை வேண்டாம். என் ஆசான் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பல வருஷங்களாச்சு. நானும் யூததேசத்தை விட்டு வந்து பலதேசங்களாக சுற்றிவிட்டு இங்கே வந்துள்ளேன். எங்குமே நான் தேடிய அமைதி கிடைக்கவில்லை. அதே சமயம் சிலுவையில் கொடூரமாக அறையப்பட்ட நிலையிலும் தேவகுமாரனது முகத்தில் இருந்த அந்த சாந்தமும் கருணையும் என் மனக்கண் முன்னே அப்படியே உள்ளன.

இத்தருணத்தில் நானும் இப்பூவுலகை விட்டு விலக வேண்டும் என்றே என் குருநாதரின் கட்டளை வந்ததாகவே உணர்கிறேன். என் காலமும் முடியப்போகிறது. அதை முடிக்க வைக்கும் தூதுவர்கள் இதோ மலைமேல் ஏறிவருவதை நான் இப்போது உணர்கிறேன்” என்று அவர் கூறி முடித்தார்.

குள்ளனும் இப்போது கூர்ந்து கவனிக்க, தங்கள் வழியை மறித்து நிற்கும் மூங்கில்களை பின் தொடர்பவர்கள் வெட்டுவது அவனுக்கும் துல்லியமாகக் கேட்டது.

“சாமீ, வரமாட்டீங்களா” என தீனமாக அவன் கேட்க, மாட்டேன் எனத் தலைய்சைத்தார் அவர்.

“குள்ளா வருத்தப்படாதே. நீ என் பிரிய சிஷ்யனாக இருந்தாய். நீ என்னை விட்டு ஓடியது குறித்து வருந்தாதே. பல ஆண்டுகளுக்கு முன்னால் என் ரட்சகரை சிலுவையில் அறைவதற்காக அவரைக் காவலர்கள் கைது செய்தபோது அவர் சீடர்கள் நாங்கள் எல்லாம் இப்படித்தான் ஓடினோம். கடைசி சாப்பாட்டின்போது அவரே தனது பிரதமச் சீடனான பெட்ருவிடம் சொன்னார், ‘நாளைக்காலை சேவல் கூவும் முன்னால் நீ என்னைத் தெரியவே தெரியாது என மூன்றுமுறை மறுப்பாய்’ என. அப்படியேதான் நடந்தது.

இதற்கு முன்னால் என் எஜமானிடம் பலரும் முழுநம்பிக்கையும் வைத்திருந்தனர். நான் மட்டும் அவரைப் பரிசோதித்த வண்ணமே இருந்தேன். அவரைப் புதைத்த இடத்திலிருந்து அவர் மீண்டு வந்தாலும் அதனால் உடனே மகிழ்ச்சியடையாது அவர்தான் உண்மையான ஏசுவா என்பதை நான் அவர் காயங்களைத் தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்டவன். அவ்வளவு நம்பிக்கையின்மை என்னிடம் அப்போது இருந்திருக்கிறது. அவர் என்னை மந்தஹாசத்துடன் நோக்கிக் கூறினார், “தோமா, எல்லோரும் கேள்வியே கேட்காது நம்பினர். ஆனால் நீ மட்டும் என்னைச் சோதித்தாய். நீ அற்புதங்களைப் பார்த்து சரிசெய்த பிறகே என்னை நம்பினாய். ஆனால் அவற்றைக் காணாதவர்கள், என்னை ஒருபோதும் காணாதவர்கள் கூட என் மேல் நம்பிக்கை வைத்தனர். என்றும் அவர்களுக்கு மேன்மை உண்டாவதாகுக” என்றார்.

இப்போ என்ன ஆகி விட்டது? வேங்கையைக் கண்டு ஓடினாய். அது மனித இயற்கைதானே. பயப்பட வேண்டியதற்கு பயப்படாதவன் முழுமூடன். என்னை விடு, நான் வந்த காரியம் முடிந்து விட்டது. போகும் நேரமும் வந்து விட்டது. நான் சாகவும் துணிந்து விட்டேன். அத்ற்காக என் ஆண்டையின் உத்திரவும் கிடைத்து விட்டது.

குள்ளன் அவரை வணங்கிக் கூறினான். “சாமீ இப்போதும் கூட கடற்கரை கிராமங்களில் நம் மதத்தவர்கள் உள்ளனர் நூற்றுக் கணக்கில். ஆனால் அவர்கள் செம்படவர்கள், பள்ளர், பறையர் ஆகிய எளிய சாதியினரே. ஏழைகள். மற்றப்படி உயர் சாதியினர், பணக்காரர்கள், அதிகாரிகள் ஆகியோர் எப்போது நம் மதத்துக்கு வருவார்கள்” என ஏக்கத்துடன் கேட்டான்.

“ஏழைகளே எண்ணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் விண்ணுலகின் அரசு அவர்களுடையதே” என ஏசுவே தனது மலைப்பிரசங்கத்தில் கூறிவிட்டார். நீ கவலை கொள்ளாதே. நான் உனக்கு போதித்ததை நீ மற்றவருக்கும் பரப்புவாயாக. ஒரு தானியம் பூமியில் விழுந்து மன்ணானால் என்ன அதிலிருந்து பல்லாயிரக்கணக்கான தானியங்கள் வரும் அல்லவா? அதுதான் ஆண்டவன் கட்டளை. நீ தப்பித்துச் செல் எனக்கூறிவிட்டு அவர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

குள்ளன் மனமின்றி அங்கிருந்து சென்றான். சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்த்தான். மற்றவர்களால் சூழப்பட்ட தோமாவுக்கு என்ன நடக்கிறது என்பதை அவனால் பார்க்கவியலவில்லை.


அன்புடன்,
டோண்டு ராகவன்

9/05/2010

பத்துக் கட்டளைகள் - ஒரு மொழிபெயர்ப்பு அனுபவம்


இயக்கம்: Cecil B. DeMille, Charlton Heston (டைட்டில்ஸில் பெயர் வரவில்லை)
தயாரிப்பு: Cecil B. DeMille
திரைக்கதை: Joseph Holt Ingraham (novel Pillar of Fire), A.E. Southon (novel On Eagle's Wings), Dorothy Clarke Wilson (novel Prince of Egypt), Æneas MacKenzie, Jesse L. Lasky, Jr.
Jack Gariss, Fredric M. Frank
கதைசொல்லி: Cecil B. DeMille
நடிப்பு:
Charlton Heston, Yul Brynner, Anne Baxter, Edward G. Robinson, Yvonne De Carlo, Debra Paget, John Derek
இசை: Elmer Bernstein
சினிமாட்டோக்ராஃபி: Loyal Griggs, ASC
எடிட்டிங்: Anne Bauchens
விநியோகம்: Paramount Pictures
வெளியீடு: October 5, 1956
சினிமா ஓடும் நேரம்: 220 minutes
நாடு: United States
மொழி: English
பட்ஜெட்: $13,000,000
பாக்ஸ் ஆஃபீஸ்: $65,000,000 (அமெரிக்காவில் மட்டும்)
நன்றி விக்கீபீடியா:

சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும்போது என் தந்தை அமரர் நரசிம்மன் என்னையும் என் அத்தைப் பிள்ளையையும் இப்படத்துக்கு அழைத்துச் சென்றார். படம் ஓடியனில் திரையிடப்பட்டது. ஒரு ஆங்கிலப் படத்துக்கு அதன் நேரம் மிகவும் அதிகமே (3 மணி நேரம் 40 நிமிடங்கள்).

இப்படத்தின் விசேஷம் என நான் இன்றும் கருதுவது எனது தந்தையின் இடைவிடாத மொழிபெயர்ப்புதான். திரையில் பேச்சோ எழுத்துக்களோ வர,வர தனது கம்பீரமான குரலில் மெதுவாக எங்களுக்காக தமிழில் மொழிபெயர்த்தார். அப்படத்தை பார்த்த சில நாட்களுக்கு எனக்கு அத்தனை காட்சிகளும் நெட்டுருவாகியிருந்தன. அந்தந்த காட்சிகளுக்கான வசனங்களின் தமிழாக்கமும்தான்.

ஆகவேதான் அடுத்த நாளைக்கே எனது பெரியப்பா பிள்ளைகளுடன் நான் அதே படத்துக்கு சென்றபோது அவர்களுக்கு சீன் பை சீன் நான் தமிழில் சொல்ல முடிந்தது. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், சுமார் 16 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் 1975-ல் அதே படத்தை காசினோவில் பார்த்தேன். அதில் குறிப்பிட்ட சீன் வந்து கதாபாத்திரம் வாயைத் திறக்க சில நொடிகள் இருக்கும்போது தமிழாக்க வசனம் ஞாபகத்துக்கு வந்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க கிட்டத்தட்ட அப்படியே வந்தது. அச்ச்மயம் என் தங்கைகள் கூட வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் டயலாக் எனக்கு நினைவில் இருப்பதில். இதே மாதிரி அனுபவம் எனக்கு ஏற்கனவே அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் சபாஷ் மீனா படம் பார்க்கும்போது ஏற்பட்டிருந்தபடியால், நான் அவ்வளவாக வியப்படையவில்லை. மறுபடியும் அப்படத்தைப் பார்த்தால் ஞாபகம் வருமாக இருக்கும். இது பற்றி நான் ஜெயா டிவி நேர்காணலிலும் குறிப்பிட்டுள்ளேன்.

அந்த வீடியோ:


ஆனால் எனது தந்தையின் அபார மொழிபெயர்ப்பு பற்றி சில உதாரணங்களுடன் கூறியே ஆக வேண்டும். (டிஸ்கி: இப்பதிவு போடும்போது ஆங்கில மூலத்தில் எனது நினைவுக் குறைவால் தவறு ஏற்படக்கூடாது என்பதற்காக அப்படத்தின் ஸ்க்ரிப்டிலிருந்து எடுத்து எழுதுகிறேன். அதைப் பார்த்ததுமே என் தந்தையின் மொழிபெயர்ப்பு நினைவுக்கு வந்து விடுகிறது).

முதல் காட்சி:
And God said, "Let there be light." And there was light. And from this light, God created life upon earth. And man was given dominion over all things upon this earth and the power to choose
between good and evil. But each sought to do his own will because he knew not the light of God's law.

Man took dominion over man, the conquered were made to serve the conqueror, the weak were made
to serve the strong, and freedom was gone from the world.

So did the Egyptians cause the children of Israel to serve with rigor, and their lives were made bitter with hard bondage.

என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
"வெளிச்சம் உருவாகட்டும்." என்றார் கடவுள். அது உருவாயிற்று. அதன் ஒளியிலிருந்து கடவுள் இந்த பூமியில் உயிர்களை உருவாக்கினார். அவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் வேலை மனிதனுக்குத் தரப்பட்டது, நன்மை தீமை அறிந்து தெரிவு செய்யும் சக்தியும் அவனுக்கு அவர் கொடுத்தார். ஆனால் ஒவ்வொருவனும் தன்னிச்சைப்படியே நடந்தான், ஏனெனில் கடவுளின் ஆணையை அவன் சரியாக உணரவில்லை.

மனிதன் மனிதனை அடிமைப்படுத்தினான். அவ்வாறு அடிமையானவர்கள் ஜெயித்தவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதாயிற்று. உலகிலிருந்து சுதந்திரம் மறைந்தது.

அப்படித்தான் எகிப்தியர்கள் இஸ்ரேலின் மக்களை தங்களுக்காக கடுமையாக உழைக்க வைத்தனர். அவர்கள் வாழ்க்கை அடிமைத்தனத்தால் துன்பம் நிறைந்ததாயிற்று.

ஹீப்ரூக்களின் ஆண் குழந்தைகளைக் கொல்ல பரோவா இடும் ஆணைக்கான காட்சி:
Every newborn Hebrew man-child shall die. So let it be written. So let it be done. So speaks Rameses I.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
ஹீப்ரூக்களின் அப்போதுதான் பிறந்த எல்லா ஆண்குழந்தைகளும் கொல்லப்படட்டும். அவ்வாறே என் ஆணை எழுதப்படட்டும், அது நிறைவேற்றவும் படட்டும், எனக்கூறினான் முதலாம் ரமேசஸ்.
(அடுத்த நாள் என் பெரியப்பா பிள்ளைகளுக்கு இதை நான் அக்காட்சியின் போது தமிழில் கூறுகையில் என் குரல் உடைந்து கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்ததும் நினவிலுள்ளது).

குழந்தை மோசஸை கூடையில் வைத்து கர்ணன் வேலை செய்கிறார்கள் குழந்தையின் அன்னையும் அக்காவும். அக்காட்சி:
God of Abraham, take my child into Thy hands, that he may live to Thy service.
But, Mother, we have not even given him a name.
God will give him a name.

என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
அப்ரஹாமின் கடவுளே, என் குழந்தையை உன் ஆதரவில் ஏற்றுக் கொள். அவன் நன்கு வாழ்ந்து உனக்கு சேவை செய்யட்டும்.
அம்மா, தம்பிக்கு பெயர் வைக்கவில்லையே.
அது கடவுளின் வேலை.

கூடையில் வைத்து நைல் நதியில் மிதந்த குழந்தை பரோவாவின் சகோதரியிடம் கிடைக்கிறது. குழந்தையை சுற்றியிருந்த துணியின் நெய்தல் வேலைப்பாடு ஹீப்ரூக்களுக்கானது என்பதை உணர்ந்த அரசகுமாரியின் தாதி அவளைத் தடுக்கப் பார்க்கிறாள். ஆனால் அவள் கேட்கவில்லை. அதை எடுத்து வளர்க்க நிச்சயிக்கிறாள். தாதி யாரிடமும் இது பற்றிய உண்மையைக் கூறக்கூடாது என ஆணை பிறப்பிக்கிறாள். பிறகு குழந்தையை நோக்கிப் பேசுகிறாள்.

You will be the glory of Egypt, my son, mighty in words and deeds. Kings shall bow before you. Your name will live when the pyramids are dust. And... because I drew you from the water, you shall be called "Moses." Moses! Moses! Moses. Moses! Moses! Moses!

என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
என் மகனே, நீ எகிப்துக்கு பெருமை தேடித் தருவாய். சொல்லிலும் செயலிலும் வல்லவனாக இருப்பாய். அரசர்கள் உன் முன்னால் மண்டியிடுவர். பிரமிடுகள் மண்ணோடு மண்ணாகி போனாலும் உன் பெயர் நிலைக்கும். நீரிலிருந்து நான் உன்னை அடைந்ததால் உன்னை மோசஸ் என அழைக்கிறேன். மோசஸ், மோசஸ், மோசஸ், மோசஸ்!

இவ்வாறே கூறிக் கொண்டு போகலாம். ஆனால் நான் மிகவும் அதிகமாக நினைவில் வைக்கும் வசனங்கள்.

முதலாம் ரமேசஸின் ஆணைப்படி மோசஸ் நாடு கடத்தப்படும்போது, பின்புலத்தில் ஒரு குரல் பிரலாபிக்கிறது.
Into the blistering wilderness of Shur, the man who walked with kings now walks alone. Torn from the pinnacle of royal power, stripped of all rank and earthly wealth, a forsaken man without
a country, without a hope,
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
அதோ போகின்றான் அம்மனிதன், வெயில் தகிக்கும் பாலைவனத்தில். அரசர்களுக்கு இணையாக நடந்தவன் இப்போது தனியே நடக்கின்றான். அரசு அதிகாரம் பிடுங்கப்பட்டு, பதவிகள் பறிக்கப்பட்டு, செல்வமெல்லாம் இழந்து, எல்லோராலும் கைவிடப்பட்டு போகிறான் அந்த நாடற்றவன், நம்பிக்கைக்கு ஏதும் இடமின்றி,

முதலாம் ரமேசஸ் இறந்தபோது, இரண்டாம் ரமேசஸ் கூறுவான்:
The royal falcon has flown into the sun.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
ராஜாளிக் கழுகு சூரியனை நோக்கி பறந்துவிட்டது.

சில ஆண்டுகள் கழித்து எகிப்துக்கு திரும்ப வரும் மோசஸிடம் இரண்டாம் ரமேசஸ் கேட்கிறான்:
What gifts do you bring? We bring you the word of God.
என் தந்தையின் மொழிபெயர்ப்பு:
என்ன கொண்டு வந்தாய்? கடவுளிடமிருந்து கட்டளை கொண்டு வந்தேன்.

சாதாரணமாக திரைப்படம் ஓடும்போது யாராவது இம்மாதிரி பேசிக் கொண்டேயிருந்தால், மற்றவர்கள் கடுமையாக ஆட்சேபிப்பார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை என் தந்தை தனது கம்பீரமான குரலில் மெதுவாக மொழிபெயர்த்துக் கொண்டே வந்தபோது, சுற்றிலிருந்தவர்கள் ஒரு காதை என் தந்தை பக்கம் வைத்தது இடைவேளை போதுதான் தெரிந்தது. பலர் அவரிடம் வந்து சில காட்சிகள் பற்றி சந்தேகம் கேட்டுப் போனார்கள்.

பத்துக் கட்டளைகளையும் கடவுள் தரும் குரல் சார்ல்டன் ஹெஸ்டனுடையதே என்றும், ஆனால் அது டைட்டில்ஸில் இல்லை என்பதும் இப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழந்தை மோசஸாக வந்தது சார்ல்டன் ஹெஸ்டனின் மூன்று மாதக் குழந்தை என்பதை என்னவோ நான் 1975-ல் இரண்டாம் முறையாக அப்படத்தைப் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன்.

செங்கடல் பிளக்கும் காட்சி அற்புதம். தியேட்டரில் ஒரே கைத்தட்டல்.

மோசஸ், ஔவையார், கர்ணன், கிருஷ்ணர் ஆகிய எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை எனப் பார்த்தால் பிறந்ததுமே இடம் பெயரும் நிலைதான். மோசஸின் கூடை நைல் நதியில் போக தனது அன்னையின் ஆணப்படி குழந்தையின் அக்கா பின்னால் கரையிலிருந்த வண்ணம் ஓடுகிறாள். அச்சுட்டிப் பெண்ணின் முகத்தில் எவ்வளவு உணர்ச்சிகள், கவலைகள்? கல்லையும் உருக்கும் காட்சியல்லவா அது.

பத்துக் கட்டளைகளில் பல தகவல் பிழைகள் இருந்ததென விக்கிபீடியா கூறுகிறது. I just don't care.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/16/2006

அப்பா, அன்புள்ள அப்பா

ரயில் அரக்கோணத்திலிருந்து கிளம்பி சென்னையை நோக்கி வேகம் எடுத்தது. பம்பாயிலிருந்து அது வரை பொறுமையாக இருந்த நான் இப்போது வண்டி சீக்கிரம் போகாதா என்று ஏங்க ஆரம்பித்தேன். வண்டி சென்ட்ரலை அடைந்தது. கையில் ஒரு சிறு பெட்டிதான். ஆகவே விறுவிறுவென்று பூங்கா ரயில் நிலையத்தை அடைந்து மீனம்பாக்கத்துக்கு 30 பைசா கொடுத்து டிக்கட் வாங்கினேன். பழவந்தாங்கல் ஸ்டேஷன் அப்போது இன்னும் உருவாகவில்லை. (வருடம் 1971). மீனம்பாக்கத்திலிருந்து பொடி நடையாக 8 நிமிடம் நடந்தால் வீடு. பம்பாயில் அவ்வருடம் ஜனவரியில் வேலையில் சேர்ந்து சில பொது விடுமுறைகள் கூடி வந்ததால், வெறுமனே நான்கு நாட்கள் கேஷுவல் லீவெடுத்து, 11 நாட்கள் மார்ச்சில் கிடைத்தன. ஜாலிதான்.

அப்போதெல்லாம் வழிகளில் வீடுகள் ரொம்பவும் இல்லை. வெகு தூரத்திலிருந்தே என் வீடு என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. என் அப்பா தோட்டத்தில் ஒரு ஆவல் நிறைந்த புள்ளியாய் என்னை எதிர்நோக்கி நின்றார். தூரத்திலிருந்தே என்னைப் பார்த்து கையை வேகமாக ஆட்டினார். அவரைப் பார்த்த உடன் என் வயிற்றில் சுரீரென்று யாரோ ஒரு கத்தியை இறக்கியது போன்று தோன்றியது. எவ்வளவு ஆஜானுபாகுவான மனிதர், ஹிந்து பத்திரிகையில் நிருபராக பணியாற்றி, 1970ல் ஓய்வு பெற்றவர். அவரது சகநிருபர்களால் ப்ரிகேடியர் என்று மதிப்புடன் அழைக்கப்பட்டவர். ஆனால் இன்று? தளர்ந்த உடல் நிலை. "எப்படியிருக்கே அப்பா?" என்று கேட்க, "எனக்கு என்னடா குறைச்சல், நிம்மதியாக சொந்த வீட்டில் இருக்கேன்" என்று கூற என் கவலை அதிகரித்தது. குரல் தளர்ந்திருந்தது. அவருக்கு நான் மாதா மாதம் அனுப்பிய 100 ரூபாய் போதவில்லையோ என்ற எண்ணம் வேறு என்னைப்படுத்தியது. நேரடியாகக் கேட்டால் மனிதர் ஒன்றும் கூற மாட்டார். ஆகவே அவர் இல்லாத போது வங்கிக் கணக்குப் புத்தகங்கள் இரண்டையும் பார்த்தேன். பரவாயில்லை, கிட்டத்தட்ட 1000 ரூபாய் ஒவ்வொரு கணக்கிலும் நிலுவையில் இருந்தது. அவருக்கு பிக்ஸட் டிபாசிட்டுகளிலிருந்து வரும் மாத வட்டிகள் ஒழுங்காய் வருகின்றனவா என்பதையும் பார்த்து வைத்துக் கொண்டேன். செலவுகள் 500க்குள் அடங்குகின்றன என்பதையு அவரது கணக்குப் புத்தகத்தைப் பார்த்து தெளிவு செய்து கொண்டதும் மனதில் நிம்மதி.

பணக்கஷ்டம் இல்லை. ஆனால் மன நிம்மதி? நான் ஒரே பிள்ளை. என் அக்கா கல்யாணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வந்தார். என் அம்மா 1960லியே இறந்து விட்டார். அவரை விட்டு நான் பிரிந்து இருப்பது இதுவே முதன் முறை.

அவரை பார்த்து என்னென்னவெல்லாமோ கூற வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ஒருவித கூச்சம் என்னை தடுத்தது. என் முகபாவத்திலிருந்து ஒரு விதமாக ஊகம் செய்து கொண்ட அப்பாவும் அவசர அவசரமாக "சீக்கிரம் குளித்து விட்டு வாடா, காப்பி போட்டு வைத்திருக்கிறேன். உடனே மாம்பலம் போக வேண்டும், உன் அத்தை வீட்டில் நமக்கு சாப்பாடு என்று கூற, அந்த இடத்தைவிட்டு அப்போதைக்கு அகன்றேன். அத்தையின் இரண்டாவது மகளை (இப்போது என் மனைவி) பார்க்கப் போகும் சந்தோஷத்தில் சற்றே மனம் தெளிந்தேன்.

பிறகு நான் வீட்டிலிருந்த அடுத்த சில நாட்களுக்கு அப்பாவுடன் மனம் விட்டுப் பேச விடாமல் ஏதோ என்னைத் தடுத்தது. அவரும் என் முகபாவ மாற்றங்களை அவ்வப்போது உணர்ந்து ரேடியோவை பெரியதாக வைத்துக் கொண்டு இஸ்ரேலைப் பற்றி என்னுடன் பேசி என் கவனத்தைத் திருப்பினார். அச்சமயம்தான் வீட்டிலிருந்த பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். தலைப்பு "To father with love". படித்தேன். அதில் கட்டுரையாசிரியர் சித்தரித்த நிகழ்ச்சிகள் என்னுடையதைப் போலவே இருந்தன. நினைவிலிருந்து தமிழாக்கித் தருகிறேன்.

//"அப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா, அம்மா எனக்கு ஆறு வயதாயிருக்கும்போது இறந்து விட்டார். என்னை எவ்வளவு அருமையாக வளர்த்தீர்கள்? இருட்டைக் கண்டு அலறும் என்னை அன்புடன் அணைத்து ஆறுதல் கூறி இருட்டின் பயத்தை போக்கினீர்கள்? உங்களைப் போன்ற பல பெரியவர்கள் உலகத்தைத் திறம்பட நடத்துகிறீர்கள் என்ற உறுதியுடன் எங்களைப் போன்ற சிறியவர்கள் காலம் கழித்தோமே. இப்போது இப்படி பாதியாக ஒடுங்கி விட்டீர்களே" என்றெல்லாம் கூற நினைத்த என் முகத்தைப் பார்த்து அப்பா அவசர அவசரமாக வேலைக்காரனை என் பெட்டியை எடுத்து வருமாறு கூறிவிட்டு என்னை ஸ்டேஷனுக்கு வெளியே அழைத்து சென்றார்.

அவருக்கு உடம்பு சரியில்லை என்று அவர் நண்பர் அப்பாவுக்குத் தெரியாமல் எனக்குத் தகவல் தர நான் என் ஆறுவயது பையனை அழைத்து வந்திருந்தேன். குழந்தையும் தாத்தாவுடன் ஒட்டிக் கொண்டான். அவருடன் பேசவிடாமல் என் நாவை ஏதோ கட்டிப் போட்டது. அவரும் அம்மாதிரி சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் ஏதோ அவசர வேலை நினைவுக்கு வந்து பைய நகர்ந்தார். புறப்படுவதற்கு இரண்டு நாள் முன்னால் எனக்கு திடீரென ஒரு பழைய நினைவு ஞாபகத்துக்கு வந்தது.

அப்போது எனக்கு எட்டு வயது. இருள் இன்னும் பிரியாத ஒரு விடியற்காலை பொழுது. திடீரென என் அறையில் ஒரு வெளிச்சம். அப்பாதான். வேட்டைக்கு செல்லும் உடையுடன் வந்து என்னை எழுப்பினார். "அடேய் குட்டிப் பயலே, வா நாம் இருவரும் வேட்டைக்கு போகலாம். சீக்கிரம் பல் விளக்கி விட்டு வா, ஜீப் காத்திருக்கிறது" என்று கூற நானும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரபரப்பாக உடைகளை அணிய ஆரம்பித்தேன். அன்றைய வேட்டையில் ஒன்றும் பெரிதாகக் கிடைக்காவிட்டாலும் அந்த அனுபவமே நல்ல பரிசு.

என் பையனை இங்கு வந்ததிலிருந்து நான் கவனிக்கவில்லை எனத் தோன்றியது. அடுத்த நாள் விடிகாலையில் அவன் அறைக்கு சென்று விளக்கைப் போட்டேன். "அடேய் குட்டிப் பயலே, வா நாம் இருவரும் வேட்டைக்கு போகலாம். சீக்கிரம் பல் விளக்கி விட்டு வா, ஜீப் காத்திருக்கிறது" என்று நான் கூற, அவனும் தலைகால் புரியாத சந்தோஷத்துடன் பரபரப்பாக உடைகளை அணிய ஆரம்பித்தான். அச்சமயம் என் அப்பா உள்ளே வந்தார். ஒரு நிமிடம் அவருக்கு புரியவில்லை. திடீரென மலரும் நினைவுகளால் அவர் முகமும் மலர்ந்தது. தன் பிள்ளை (நான்), தன் பேரன் (என் மகன்) ஆகிய இருவரையும் பார்த்து "அடேய் குட்டிப் பயல்களா போய் நன்னா என்ஜாய் பண்ணுங்க" என்று கம்பீரமாக கூறினார். தான் ஆரம்பித்து வைத்த இந்த வழக்கம் பின்வரும் பரம்பரைகளிலும் வரும் என்பதை உனர்ந்த அவர் மனதில் சந்தோஷம் ஏற்பட்டது அவர் முகத்திலே புலப்பட்டது. கூறவேண்டியதை செயலில் காட்டிய திருப்தி எனக்கு.//


திடீரென்று எனக்குள் ஒரு ஒரு ஃப்ளாஷ். பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரைகளை இதழ்களிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றையெல்லாம் ஒன்றாய் சேர்த்து பைண்டிற்கு கொடுத்தேன். முதல் கட்டுரையே "To father with love" தான். நான் மறுபடியும் பம்பாயிற்கு செல்லும் நாள் வந்தது. அன்று அப்பாவிடம் அந்த பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தைக் கொடுத்து விட்டு ரயிலேறினேன்.

1974ல் சென்னைக்கு மாற்றலாகி வந்து தந்தையுடன் இருந்தேன். அப்போது எனக்கு கல்யாணமும் ஆகிவிட்டிருந்தது. சொந்த மருமகளே மாட்டுப்பெண்ணாய் வந்ததில் அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி. என் வீட்டம்மாவும் அவரை நன்றாகக் கவனித்து கொண்டார். தன் பேத்தியை பார்த்துவிட்டு, குழந்தையுடன் சில ஆண்டுகள் இருந்து விளையாடி விட்டு 1979ல் தன் அருமை மனைவியிடம் சென்றார் என் அப்பா.

அப்போதுதான் அவர் பெட்டியில் அடியில் வைக்கப்பட்டிருந்த அந்த பைண்ட் புத்தகத்தைப் பார்த்தேன். அதை புரட்டிப் பார்த்த போது அப்பக்கம் வந்த வீட்டு வேலைக்காரி "சாமி, நீங்க பம்பாயில் இருந்த போது தினம் இந்த புத்த்கத்தை ஒரு மணி நேரமாவது புரட்டாமல் இருக்க மாட்டார். அதுவும் புத்தக ஆரம்பத்தையே அதிகம் பார்த்தார்" என்று கூற, என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. நான் சொல்ல நினைத்ததை அவர் சரியாகவே புரிந்து கொண்டார் என்ற ஆனந்தத்தால் வந்தது அந்த கண்ணீர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12/29/2005

ஆர். நரசிம்மன் - என். ருக்மிணி: ஆதர்சத் தம்பதியர்

அவர்கள் திருமணம் 1943-ல் நடந்தது. ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு பையன். ஆர்.என். என்று அவர் கூட வேலை செய்பவர்களால் அறியப்படும் நரசிம்மன் ஹிந்து நாளிதழில் ஒரு நிருபர். ருக்மிணி ஹவுஸ்வைஃப். வீட்டை நன்கு நிர்வாகம் செய்பவர். மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருந்தாலும் பிரைவேட்டாகத் தன் அண்ணன் துணையுடன் தானே படித்து இன்டர் வகுப்பு லெவலுக்கு பாடங்கள் கற்றவர். தன் மகனுக்கும் மகளுக்கும் ஆங்கில மற்றும் ஹிந்தி இலக்கணங்களின் அடிப்படையைக் கற்றுத் தந்தவர்.

ஆர். என். எழுதும் ரிப்போர்ட்கள் ஹிந்துவில் பை-லைன் இல்லாமல் வரும். மிஞ்சிப் போனால் "நமது நிருபரிடமிருந்து" என்றுப் போடுவார்கள். அவரைப் போல பல ரிப்போர்டர்கள் அங்கு உண்டு. அவர்கள் ரிப்போர்டுகளும் வரும். இந்தப் பெண்மணி இரவில் கணவர் வீட்டிற்கு வரும் போது அவரிடம் ஒரு குறிப்பிட்டக் கட்டுரையைக் காட்டிக் கேட்பார்: "ஏன்னா இது நீங்கள் எழுதியதா" என்று. முதல் முறை அவ்வாறு நடந்தப் போது ஆர். என். ஆச்சரியத்தில் மூழ்கினார். "எப்படிக் கண்டு பிடிச்சே" என்று மனைவியைக் கேட்க, அவர் "இல்லேன்னா, இது எனக்கு சுலபத்தில் புரிஞ்சுது, அதனால்தான்" என்றுக் கூறினார்.

அதன் பிறகு மனைவி அம்மாதிரி பல முறை தன் கணவரைக் கேள்வி கேட்க, ஒவ்வொரு முறையும் அவர் 100% சரியாகவே தன் கணவர் எழுதியக் கட்டுரையை அடையாளம் காண்பது ஒரு விளையாட்டுப் போலவே நடந்து வந்தது. தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு ராஜாஜி அவர்களே பாராட்டியதைக் கூட ஆர்.என். பெரிசாக நினைக்கவில்லை. மற்றவர்கள் சட்டென்றுப் புரிந்துக் கொள்ளும் முறையில் எளிய ஆங்கிலத்தில் எழுதுவது என்பது எல்லாருக்கும் கைக்கூடாது. அது தனக்கு லகுவாக வந்ததை அவர் மனைவி வாயிலாகவே தெரிந்துக் கொள்வதை விட ஒரு கணவனுக்கு வேறு என்ன வேண்டும். அதைத்தான் அவர் பெருமையாகக் கருதினார்

1960, திசம்பர் 29-ஆம் நாள் ருக்மிணி அவர்கள் காலமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட 19 தனிமையான ஆண்டுகளைக் கழித்து செப்டம்பர் 9, 1979 அன்று ஆர்.என். தன் அருமை மனைவியிடம் சென்றார்.

இந்தத் தனிமை நிறைந்த ஆண்டுகளில் அவர் பல முறை தன் மகனுடன் அவன் அம்மாவைப் பற்றிப் பல விஷயங்கள் கூறுவார். தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்னால் ஆஸ்பத்திரியில் வைத்து தன் மகனிடம் இவ்வாறுக் கூறினார்:

"மற்றவர்களை பிரமிக்க வைக்கும் சொற்களைப் போடுவதால் எந்த மொழியும் சிறப்பதில்லை. மற்றவர்களுக்கு எளிதில் புரிய வேண்டியது மிக அவசியம். இதைத்தான் உன் அம்மா எனக்குச் சொல்லாமல் கூறியது. இதை எப்போதும் மறக்கக் கூடாது, டோண்டு".

அன்புடன்,
டோண்டு ராகவன்
பி.கு. இன்று திசம்பர் 29. இது ஒரு மறுபதிவு.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது