"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"
இந்த இனிய பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற குரலில் இப்போது கேட்டாலும் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும். கவியரசு அவர்களை பற்றிய நினைவுகள் நம் நெஞ்சில் கிளர்ந்தெழும். படம் "கருப்புப் பணம்". ஆனால் இப்பதிவு அப்பாடலை பற்றியல்ல. தனியுடைமை ப்ற்றி இங்கு நான் எழுதப் போகிறேன்.
உலகமயமாக்கலால் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நல்ல மற்றும் கெட்ட பாதிப்புகள் இரண்டும் உண்டு. நிஜமாகவே வல்லான் பொருள் குவிக்கும் காலம்தான் இது. இதை இரு வகையில் நீங்கள் எதிர்கொள்ளலாம். ஒன்று, இதை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதலாம், உங்களுக்கு நேரம் இருந்தால். இல்லையேல் நீங்களும் வல்லானாக மாற வேண்டியதுதான்.
தொண்ணூறுகளுக்கு முன்னால் நம் நாட்டு நடப்பு எப்படியிருந்தது? தொலைபேசி இணைப்புக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது? வெஸ்பா ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு காத்திருந்த ஆண்டுகள் எத்தனை? தூர்தர்ஷன் தவிர வேறு சேனல்கள் இருந்தனவா? ஒரு தலைவர் மண்டையைப் போட்டால் சோக இசை நாள் முழுக்க அல்லவா பார்த்து, கேட்டு அவதிப்பட வேண்டியிருந்தது? இப்போது? மற்ற சேனல்கள் இருக்கும் நிலையில் தூர்தர்ஷன் அவ்வாறு செய்ய இயலுமா?
வல்லான் தன் திறமையால் பொருள் குவித்தால் ஏழைகள் கஷ்டப்படுவார்களா? என்ன வாதம் இது? இவ்வாறு சொல்லித்தான் சோஷலிச இந்தியாவில் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. விளைவு? பெர்மிட் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டும் பொருள் ஈட்டினர். இதைத்தான் தீர்க்கதரிசி ராஜாஜி அவர்கள் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ராஜ் என்று கூறினார். அந்த மாமனிதர் கூறியது இப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கிறது.
ஜூலை 1991. ஸ்ரீராம் க்ரூப் கம்பெனி ஒன்றுக்கு நான் பிரெஞ்சு துபாஷியாக சென்றிருந்தேன். அதில் கம்பெனி தரப்பிலிருந்து அவர்கள் தயாரிக்க போகும் ஒரு பொருளுக்கான மார்க்கெட் மதிப்பீட்டை வந்திருந்த பிரெஞ்சுக்காரருக்காக மொழி பெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, அரசு வெளிதேச வியாபாரிகளின் போட்டியிலிருந்து தங்கள் பொருளுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்திய அரசின் கொள்கை அறிவிப்பு ஒன்று சுட்டப்பட்டிருந்தது. பன்னாட்டு போட்டி வந்தால் சங்குதான் என்ற இழையும் கூறாமலே விளங்கியது.
இதனால் என்ன ஆயிற்று? நுகர்வோர்கள் தரம் குறைந்த பொருளையே வாங்க வேண்டியிருந்தது. மாருதி கார் வருவதற்கு முன்னால் இந்தியச் சாலைகளில் ஃபியட், அம்பாஸடர், ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் தவிர வேறு கார்களை காண முடிந்ததா? அதிலும் ஸ்டாண்டர்ட் மோட்டார் திவாலாக, இரு வகை கார்கள் மட்டுமே சாலைகளில் ஆட்சி செலுத்தின. இப்போது? கூறவும் வேண்டுமோ?
உற்பத்தி பெருக்கத்தால் என்ன நடந்தது? வேலை வாய்ப்பு பெருகியது. பல வல்லான்கள் உருவாயினர். இப்போது கூட எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது.
பதிவை முடிக்கும் முன்னர் ஒரு விஷயத்தை எழுதி விடுகிறேன். வல்லான்தான் முன்னேற முடியும் என்றால் உங்களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சட்டையில் ரூபாயுடன் வர முடியாது, வல்லான் ஒருவனால் பறிக்கப்படும் என்று பொருள் வருமாறு ஒரு நண்பர் பலமுறை எழுதியுள்ளார். அவருக்கு நான் கூறும் பதில் இதுதான். அந்த வல்லானுக்கும் மிஞ்சிய வல்லானாக போலீஸ் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே ஓரிரு முறை வெற்றி பெற்றாலும் மாட்டிக் கொள்வதும் உறுதியே. இது நிரந்தர போராட்டம். அதற்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அப்பாடலை எழுதிய கண்ணதாசனே வல்லான்தானே. அவர் காலத்தில் அவரை மிஞ்சி இன்னொரு கவிஞன் வர இயலவில்லை. அதற்காக அவரை குற்றம் சொல்ல முடியுமா? வாய்ப்பை சமமாக கொடுக்கிறேன் பேர்வழி என்று செயல்பட முடியுமா? அபத்தமாக இல்லை?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
20 hours ago
21 comments:
//தொண்ணூறுகளுக்கு முன்னால் நம் நாட்டு நடப்பு எப்படியிருந்தது? தொலைபேசி இணைப்புக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது? வெஸ்பா ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு காத்திருந்த ஆண்டுகள் எத்தனை? தூர்தர்ஷன் தவிர வேறு சேனல்கள் இருந்தனவா? ஒரு தலைவர் மண்டையைப் போட்டால் சோக இசை நாள் முழுக்க அல்லவா பார்த்து, கேட்டு அவதிப்பட வேண்டியிருந்தது? இப்போது? மற்ற சேனல்கள் இருக்கும் நிலையில் தூர்தர்ஷன் அவ்வாறு செய்ய இயலுமா?
//
அப்படியே அசோகர் காலத்துல பேருந்து இருந்ததா? ராஜராஜன் காலத்துல ஏசி,ஃபிரிட்ஜ் இருந்ததா, நாயக்கர் காலத்துல கார் இருந்ததா என்றும் சேர்த்து கேட்டிருக்கலாம்
//அந்த வல்லானுக்கும் மிஞ்சிய வல்லானாக போலீஸ் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது.
//
காவல் துறை ஏன் இருக்கின்றது? அவர்களுக்கு மெலியவனை காக்க வேண்டியது ஏன்? அதைத் தான் அய்யா கூறினேன் வல்லான் வாழ்வான் என்பது மிருக கூட்டத்திற்கு தான், மனிதன் சமூக அமைப்பில் வாழ்கிறவன் வல்லான் மட்டும் வாழ்வதற்காக இந்த சமூகம் கட்டமைக்கப் படவில்லை என்பதன் உதாரணம் தான் நீங்கள் கூறிய காவல்துறை.
மன்னிக்கவும் இப்படி சொல்வதற்கு வர வர உங்கள் உதாரணங்கள் அபத்த களஞ்சியமாக உள்ளது.
நன்றி
"காவல் துறை ஏன் இருக்கின்றது? அவர்களுக்கு மெலியவனை காக்க வேண்டியது ஏன்?"
ஏனெனில் அதற்குத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். அதை செய்யாவிட்டால் வேலை போய்விடும்.
"மன்னிக்கவும் இப்படி சொல்வதற்கு வர வர உங்கள் உதாரணங்கள் அபத்த களஞ்சியமாக உள்ளது."
பரவாயில்லை, எனக்கும் உங்கள் கருத்துகள் பற்றி அதே அபிப்ராயம்தான்.
வல்லான் பொருள் குவிப்பதை ஆதரித்ததால்தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு நீங்கள் எல்லாம் வெளிநாடுகளுக்கு போய் பணம் கணிசமான அளவில் ஈட்ட முடிகிறது. வேலை வாய்ப்புகள் பெருக பொருளாதார முன்னேற்றம் அவசியமே. வல்லான் பொருள் ஈட்டுகிறான் என்றான் எளியவனை வருத்தித்தான் ஈட்டுவான் என்ற சோஷலிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் வாதத்தை காலம் புறக்கணித்து விட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//"காவல் துறை ஏன் இருக்கின்றது? அவர்களுக்கு மெலியவனை காக்க வேண்டியது ஏன்?"
ஏனெனில் அதற்குத்தான் சம்பளம் வாங்குகிறார்கள். அதை செய்யாவிட்டால் வேலை போய்விடும்.
//
வல்லான் வாழ்வான் என போக வேண்டியது தானே, பின் எதற்கு இந்த காவல்துறை என்ற கட்டமைப்பு? இந்த சமூகத்தில் வல்லான் மட்டுமல்ல எல்லோரும் வாழ வேண்டுமென்பதற்கு தானே, இங்கே பேசி ஆகறதில்லை இத்தோட நான் அப்பீட்டேய்...
ஜயகமல் என்பவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை அவர் அனுமதியுடன் நகலெடுத்து இங்கு ஒட்டுகிறேன். Over to Jayakamal.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dear Dondu Sir,
I very much enjoyed your post on globalization. I
couldn't get the exact meaning of one word 'thaniudaimai', Is it
privatization? Please confirm.
You are exact and right about what you said in your post. You had
said that globalisation causes both good and bad effects. I would have been happier to see it followed by a similar statement like this 'bad effects caused by globalization is very much lesser than the benefits it create'.
You also hit the nail on its head (Nethi Adi) when you said that
when people with ability become successful it is not at the cost of
the poor or those without ability. In economics it is called a non-zero sum game. In a zero-sum game only one can win, the other has
to lose. But in a non-zero sum game each of the players can win.
Globalization is non-zero sum game.
Regarding equality you may be interested in the following two articles by economist Thomas Sowell
Spoiled brat politics: Part I
http://www.townhall.com/opinion/columns/thomassowell/2005/10/11/170808.html
Spoiled brat politics: Part II
http://www.townhall.com/opinion/columns/thomassowell/2005/10/13/171103.html
regards,
Jayakamal
"அப்படியே அசோகர் காலத்துல பேருந்து இருந்ததா? ராஜராஜன் காலத்துல ஏசி,ஃபிரிட்ஜ் இருந்ததா, நாயக்கர் காலத்துல கார் இருந்ததா என்றும் சேர்த்து கேட்டிருக்கலாம்."
முக்கியமானதை சௌகரியமாக மறந்து விட்டீர்கள். அசோகர் காலத்தில் உலகில் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே நிலைதான். யுத்தம், பஞ்சம், கொள்ளையர் ஆட்டம், இத்யாதி, இத்யாதி. ஆனால் தொண்ணூறுகளில் சோஷலிஸ நாடுகளில் நிலைமை தனியுடைமை நாடுகள் அளவுக்கு இல்லையே. வாழ்க்கைத் தரத்தில் எவ்வளவு ஏற்றத் தாழ்வு? மேற்கு பெர்லின் கிழக்கு பெர்லின் உதாரணமே போதுமே. ஆகவே நான் இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய நிலையை இப்ப்தைய நிலையுடன் ஒப்பிடுவது ஏற்கக் கூடியதே. நீங்கள் சரித்திர காலத்தை இழுத்தது வெறும் விதண்டாவாதமே. தூங்குபவர்களை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போன்ற பாவனை செய்பவர்களை எழுப்ப முடியாது, அப்படி எழுப்ப நினைப்பதே வீண்.
ஜயகமல் அவர்கள் காட்டிய சுட்டியை நேரமிருப்பின் படிக்கவும். நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ELiyonai vallaan aakum muyarchi edukkaamal than pera pillaigalai mattum (vallaan) palligalil padikka vaippavargalakku jalra adippavargaluku neengal solvadhu purivadhu kashtam"
அவங்களுக்கா புரியலை? நன்றாகவே புரிகிறது. ஆனால் வல்லானாக தான் மற்றும் தன்னைச் சேர்ந்தவர்கள் மட்டும் வல்லான் ஆக வேண்டும், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் மட்டும் மந்திரி ஆக வேண்டும் மற்றவர்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு நிற்க வேண்டும், முக்கியமாக தன் கட்சியின் தொண்டர்கள் என்று தலைவரும் அவருக்கு ஜாலரா அடிக்கும் வலை[ப்பதிவரும் இருக்கும்போது நானும் நீங்களும் சொல்வது எடுபடுமா என்ன?
விட்டுத் தள்ளுங்கள் சார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதல் முறையா ஐயா எழுதினக்கு பின்னோட்டம் எழுதற வாய்ப்பு கிடைச்சுது எழுதுறேன். ஐயா, நிறையா பின்னோட்டங்கள் வரும்மென்பதற்காக உண்மைக்கு புரம்பாக எழுதுவாரோன்னு எனக்கு படுது. ஐயா, நீங்க சென்னைல தானே இருக்கீங்கா, Globalization_ங்கிறது ஒரு பெரிய சுறமீன் அது நம்ம வீட்டு ஆட்களையும் தூக்கி முழுங்கிற வரைக்கும் நமக்கு விளங்காது. ஒரு கிராமத்து வார சந்தையில Diversity இல்லான்னா அப்புறம் என்ன சந்தை அது. ஒரு walmart super store போல ஒரு க(டல்)டை நம்ம ஒரு முனுசாமி, சுப்பன், குப்பன் போல அயிரம் பேர திண்ணைல உட்கார்ந்து ஈ அடிக்க வைச்சுடும். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்மய்யா. சித்தா சிந்திச்சு பேசுவோம். நாம வயசுக்கும் வார்த்தைக்கும் கொஞ்சம் தொடர்பு இருக்கனும் அப்படிங்கிறது எனது understanding about aging.
அன்புடன்,
தெக்கிக்காட்டான்.
பின்னூட்டத்துக்கு நன்றி தெக்கிக்காட்டான். நம் குப்பன், சுப்பன் வேலையில்லாமல் ஏன் உட்கார வேண்டும்? இப்போதைய நிலைமையில் தேவைக்கேற்ப நம் வேலையயும் மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு இப்போது யாரும் அதிகமாக டைப்பிஸ்ட் வேலைக்கு எடுக்கப்படுவதில்லை. ஏனெனில் கணினி வந்ததில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே நேரடியாக தட்டச்சு செய்து விடுகிறார்கள். இதனால் நேரம் மிச்சமாகிறது. தொழில் நுட்பம் பெருகப் பெருக தேவைகளும் மாறுகின்றன. மாறுவது நம் கடமை. இல்லாவிட்டால் குண்டுசட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான்.
வளர்ந்த நாடுகளிலிருந்து அவுட்சோர்ஸிங் மூலம் எவ்வளவு வேலைகள் வருகின்றன? இதெல்லாம் லாபம்தானே. இந்த விஷயத்தில் தங்கள் நாட்டு வேலைகள் வெளிதேசங்களுக்கு போகின்றனவே என வளர்ந்த நாடுகளில் புலம்பல்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. இது சம்பந்தமாக பார்க்க:
1. http://www.proz.com/topic/12399
2. http://www.proz.com/topic/12992
இப்பதிவுகளில் நான் நரசிம்மன் ராகவன் என்ற பெயரில் பின்னூட்டமிட்டுளேன்.
எது எப்படியானாலும் யார் லபொ திபோ அடித்துக் கொண்டாலும் உலகமயமாக்கல் தவிர்க்க முடியாது. அது தவறு என்று இப்போது பேசுவது வெட்டி வேலைதான். அதை எப்படி நமக்கு சாதகமாக்கிக் கொள்வது என்று பார்ப்பது புத்திசாலித்தனம்.
வல்லான் பொருள் குவிப்பான் நிச்சயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நுனிப் புல் மேய்ஞ்ச இப்படித்தான் ஆகும். கரெக்ககெட் தான் நீங்க சொல்றதும். என்னத்த சொல்லி என்னத்த பன்றது. கொஞ்சம் உங்கள விட பின் தங்கியுள்ள மீதம் உள்ள 300 மில்லியன் மக்களையும் இன்னொரு சுனாமி லபக்கின்னு முழுங்கிப்புட்ட நம்ப விவசாயம் பன்ற நிலபுலத்தையெல்லாம், walmart-கிட்ட எழுதி கொடுத்துப்புட்டு சோரு சாப்புட உட்காரும் போது என்ன அரிசியை walmart recommend பண்ணுதோ அத சத்தம் போடம வாங்கி துண்ணுப்புட்டு, நாம பேரக் குழந்தைங்க "தாத்தா, அரிசி, கிழங்கு எல்லாம் walmart-ல தானே விளையுது அப்படின்னு கேட்கும் போது நாமலும் இல்லட கண்ணான்னு ஒரு புகைப்படத்த காமிச்சு இப்படித்தான் இதல்லாம் விளையுதுன்னு பெருமைய carbon monoxide நல்ல ஒரு முறை அழுத்தம உட் வாங்கிகிட்டு நம்ம Mercedez நோக்கி சந்தோசம நடப்போம். ஏன்னா நாம சொல்லிப்புட்டோம்ல அருள் வாக்கு (டார்வினுக்கு அடுத்து)...
"வல்லான் பொருள் குவிப்பான் நிச்சயம் (தனக்குத் தானே குழி பறிச்சுக் கிட்டு)."
பின் குறிப்பு: முடிஞ்ச நீங்களும் கீழ் உள்ள sites-களுக்கு பொயித்து வாங்க...
http://www.ifg.org/
www.thirdworldtraveler.com
அன்புடன்'
தெக்கிக்காட்டான்.
"மீண்டும் எல்லோரும் மாட்டு வண்டிக்கு போகும்போது நாமும் மாட்டு வண்டிக்கு
போவோம்."
இதை பார்த்ததும் எனக்கு நான் படித்த வேறு விஷயம் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. மூன்றாம் உலக யுத்தத்தை பற்றி ஒரு காலத்தில் மிகுந்த சர்ச்சை இருந்தது. அப்போது ஒரு அறிஞர் கூறினார். "மூன்றம் உலக யுத்தம் எப்போது வருமோ தெரியாது, ஆனால் நான்காம் உலக யுத்தத்தைப் பற்றி ஒன்று நிச்சயமாகக் கூறுவேன் அது வில் அம்புகளுடன்தான் நடத்தப்படும்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
உலகமயமாக்கம் நல்லதா அல்லது கெடுதலா என்று பார்ப்பதில் பயன் ஒன்றும் இல்லை. விரும்புகிறோமோ இல்லையோ அது வந்து விட்டது என்பதுதான் உண்மை. அதை எப்படி நமக்கு சாதகமாக்குவது என்பதுதான் இப்போது முக்கியம்.
நீங்கள் ஜெயிக்க விரும்பினால் உலகமயமாக்கலுக்கு தோதாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ் சசி அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://thamizhsasi.blogspot.com/2006/05/blog-post_02.html
அப்படியா சார், ரொம்ப சந்தோஷம். கம்யூனிசம் தழைத்தோங்கியபோது ரஷ்யாவிலோ, போலந்திலோ அல்லது வேறு எங்குமோ வேலை நிறுத்தமே இல்லை என்பது சரித்திரம். அந்த நிலை தொழிலாளர்கள் சந்தோஷமாக இருந்ததால் வந்தது என்று நீங்கள் கருதினால் பேசுவதற்கு ஒன்றுமில்லை.
போன நூற்றாண்டின் முப்பதுகளில் ரஷ்யாவில் நிலத்தை மறு வினியோகம் செய்கிற வேலையில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் சந்தோஷமாக செத்தார்களா?
சோவியத் யூனியனின் கடைசி காலத்தில் கூட்டுப் பண்ணைகளை விட ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கப் பட்ட தனியார் நிலங்களில் விளைந்த உணவுப் பொருட்களே உணவுப் பஞ்சத்தை பெருமளவு தவிர்த்தன என்பதை மறந்து விட்டீர்களா?
"வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை" என்று பாடிய கவியரசு கண்ணதாசனே வல்லானாக இருந்து நிறையப் பாடல்கள் எழுதி பொருள் குவித்தவர்தானே. சோவியத் யூனியனில் அவர் இருந்திருந்தால் அவரது கவிதைகளும் பொதுக் கோட்டாவின் கீழ்தான் வந்திருக்கும் என்பதை அறிவீர்களா?
கம்யூனிச சித்தாந்தம் என்பது மற்றவர்களை குறைகூறி ஆட்சிக்கு வந்து, பிறகு தேர்தல் நடப்பதையே ரத்து செய்யும் அமைப்பு. அதன் கைங்கர்யத்தால் கிழக்கு ஜெர்மனி, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளே உலக வரைபடத்திலிருந்து மறைந்தன. சீனா முதலாளித்துவத்துக்கு மாறினதால் தப்பிப் பிழைத்தது.
மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு கம்பெனிகளின் முதலாளிகளோடு கூடிக் குலாவுவது உங்களுக்குத் தெரியாதா?
கம்யூனிசத்தின் அடிப்படை சித்தாந்தமே மனித இயல்புக்கு விரோதமானது. "From each according to ability and to each accordig to needs" என்பதைத்தான் நான் சொல்கிறேன்.
பல ஏழைகள் சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த கதை தனியார் பொருளாதாரம் உள்ள நாடுகளில்தான் நடக்கும். இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்ன பெரிய பணக்காரக் குடும்பத்தை சார்ந்தவரா? 1991-ல் சோவியத் யூனியன் அழிந்த போது எல்லா மக்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளாதார நிலையில் தான் இருந்தனர். ஆனால் இப்போது?
துர் உபயோகம் ஆகக்கூடிய அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால் இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய "வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
நந்தன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://mkannadi.blogspot.com/2006/05/blog-post_114784603754804041.html
வல்லான் தன் திறமையால் பொருள் குவித்தால் ஏழைகள் கஷ்டப்படுவார்களா? என்ன வாதம் இது? இவ்வாறு சொல்லித்தான் சோஷலிச இந்தியாவில் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. விளைவு? பெர்மிட் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டும் பொருள் ஈட்டினர். இதைத்தான் தீர்க்கதரிசி ராஜாஜி அவர்கள் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ராஜ் என்று கூறினார். அந்த மாமனிதர் கூறியது இப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கிறது.
ஜூலை 1991. ஸ்ரீராம் க்ரூப் கம்பெனி ஒன்றுக்கு நான் பிரெஞ்சு துபாஷியாக சென்றிருந்தேன். அதில் கம்பெனி தரப்பிலிருந்து அவர்கள் தயாரிக்க போகும் ஒரு பொருளுக்கான மார்க்கெட் மதிப்பீட்டை வந்திருந்த பிரெஞ்சுக்காரருக்காக மொழி பெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, அரசு வெளிதேச வியாபாரிகளின் போட்டியிலிருந்து தங்கள் பொருளுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்திய அரசின் கொள்கை அறிவிப்பு ஒன்று சுட்டப்பட்டிருந்தது. பன்னாட்டு போட்டி வந்தால் சங்குதான் என்ற இழையும் கூறாமலே விளங்கியது.
இதனால் என்ன ஆயிற்று? நுகர்வோர்கள் தரம் குறைந்த பொருளையே வாங்க வேண்டியிருந்தது. மாருதி கார் வருவதற்கு முன்னால் இந்தியச் சாலைகளில் ஃபியட், அம்பாஸடர், ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் தவிர வேறு கார்களை காண முடிந்ததா? அதிலும் ஸ்டாண்டர்ட் மோட்டார் திவாலாக, இரு வகை கார்கள் மட்டுமே சாலைகளில் ஆட்சி செலுத்தின. இப்போது? கூறவும் வேண்டுமோ?
உற்பத்தி பெருக்கத்தால் என்ன நடந்தது? வேலை வாய்ப்பு பெருகியது. பல வல்லான்கள் உருவாயினர். இப்போது கூட எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது.
'வல்லான்தான் முன்னேற முடியும் என்றால் உங்களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சட்டையில் ரூபாயுடன் வர முடியாது, வல்லான் ஒருவனால் பறிக்கப்படும்' என்று பொருள் வருமாறு ஒரு நண்பர் பலமுறை எழுதியுள்ளார். அவருக்கு நான் கூறும் பதில் இதுதான். அந்த வல்லானுக்கும் மிஞ்சிய வல்லானாக போலீஸ் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே ஓரிரு முறை வெற்றி பெற்றாலும் மாட்டிக் கொள்வதும் உறுதியே. இது நிரந்தர போராட்டம். அதற்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை.
மேலே கூறியது என்னுடைய "வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைம" என்னும் பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. முழுப்பதிவையும் அதன் பின்னூட்டங்களையும் பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html
குழலி போன்றவர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்களே வல்லானாக இருந்துக் கொண்டு முன்னேறியவர்கள்தான், ஆனால் மற்ற வல்லான்கள் உருவாவதில் அவர்களுக்கு ஏனோ நாட்டம் இல்லை.
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டியப் பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/blog-post_17.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்
ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்ட கிழக்கிந்திய கம்பேனியின் ஞாபகம் இன்னும் பலரையும்வாட்டுகிறது. சூழ்நிலைகளும், கால கட்டமும் பலவிதமாக மாறினாலும் இந்த பயம் இன்னும் பல இடது மற்றும் பிற சிந்தனைகளை இன்றும் பாதிக்கிறது.
'பன்னாட்டு நிருவனங்களை இங்கு தொழில் தொடஙக அனுமதித்தால், அவை நம் வளங்களை சூறையாடும் ; ஏழை தொழிலாளிகளை சுரண்டும், சிறு தொழில்களை அழிக்கும், அரசின் கொள்கைகளை மறைமுகமாக கட்டுப்படுத்தும்' ; இவ்வாறாக பல குற்றச்சாட்டுகள், பயங்கள். 1950 முதல் 1991 வரை நமது பொருளாதார கொள்கைகள் இதன் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டன.
1955இல் யு.எஸ்.ஸ்டீல் என்னும் அமெர்க்க கம்பெனி, பிகார் / ஒரிசா பகுதிகலில் ஒருபெரிய எஃகு ஆலை அமைக்க விரும்பியது. ஆனால் நமது 'ஜனனாயக சோசியலிச' அரசாங்கம் அதற்கு மறுத்துவிட்டது. அந்நிறுவனம் முதலீடு (டாலர்களில்), தனது தொழில்நுட்பம் மற்றும் (மேனெஜ்மென்ட்) நிர்வாக மேலான்மை போன்றவற்றை முழுவதும் இங்கு பயன்படுத்த தாயாராக இருந்தது. ஆனால் அரசு மிக அதிக செலவில், பொதுத் துறையில், பிலாய் எஃகு ஆலை அமைத்தது. அந்த ஆலைக்கு தேவையான பல ஆயிரம் கோடி முதலீட்டை நாம் கடன் வாங்கியும், மக்களின் வரிப்பணத்திலிருந்தும் செலவளித்தோம். பல ஆண்டுகள் நஷ்டத்திலும், லஞ்ச ஊழ்ல்களிலும், நிர்வாக சீர்கேடுகளிலும் அது நமக்கு மிகப் பெரிய சுமையாக இருந்தது. அதே சமயம் எஃகு தேவை மிக அதிகரித்ததால், பற்றாக்குறைகள், கருப்பு மார்க்கெட் உருவானது. சோசியலிச கொள்கைகளின்படி, எந்த ஒரு தனியார் நிறுவனமும் தனது இஷ்ட்டம் போல் தன்து உற்பத்தியை பெருக்க அனுமதி இல்லை. அதனால் டாடா ஸ்டீல் நிறுவனமும் உற்பத்தி திறனை (புதிய ஆலைகள் அமைத்து) அதிகப்படுத்த முடியவில்லை. கடுமையான பற்றாக்குறை, விலை உயர்வு, கள்ள சந்தை, ஊழல் உருவாகின.
சிமன்ட், சர்கரை, உரம், மருந்து, பொறியியல் எந்திரங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் அனைத்து துறைகளிலும் இதே கதைதான். செயற்கையான பற்றாக்குறை, உலக சந்தையை விட மிக அதிக விலை, தரக்குறைவான பொருள்கள், கள்ள மார்க்கெட், லஞ்சம், பதுக்கல், கடத்தல், போன்ற எதிர்மறையான விளைவுகளே உருவாகின. விலைவாசி இதன் மூலம் கடுமையாக உயர்ந்ததால் வறுமை மிக அதிகமானது.
வரி விதிப்பும் மிக மிக அதிகமாக்கப்படதால் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாக்க தொழில் முனைவோர் விரும்பவில்லை. அரசாங்க வேலைக்கு செல்லவே பெரும்பாலான இளைஞ்ர்கள் விருப்பினர். ஆனால் எல்லேருக்கும் அரசு வேலை தர எந்த காலத்திலும் இயலாது. ஆகவே வேலை இல்லா திண்டாடம் மிக மிக அதிகமானது.
1977இல் அய்.பி.எம் நிறுவனத்தை ஜனதா அரசு நாட்டை விட்டே துரத்தியது. அவர்கள்தாய்லாந்திலும், சைனாவிலும் தங்கள் ஃபெக்ட்ரிகளை அமைத்தனர். நாம் பல ஆண்டுகளை வீணடித்தோம். இறக்குமதி செய்ய டாலர்கள் இல்லாததால், உலக வங்கி (ஐ.எம்.எஃப்) இடமிருந்து பல ஆயிரம் கோடி டாலர்கள் கடன் வாங்க வேண்டிய கட்டாயம். வட்டி கட்டவே மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. இவ்வாறு திவால் நிலைக்கு தள்ளப்பட்டதால், வேறு வழியின்றி கட்டுப்பாடுகளை தளர்தி, அந்ந்திய முதலீடுகளையும், பன்னாட்டு நிறுவனஙகளையும் 1991க்கு பின் தாராளமாக அனுமதித்தோம்.
இன்று பல நூறு பன்னாட்டு நிறுவங்கள் இங்கு சுதந்திரமாக தொழிறசாலைகள் அமைத்து மிக அருமையான, மலிவான பொருட்க்களை உற்பத்து செய்கின்றனர். இதனால் பல லச்சம் பேர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு, அரசுக்கு மிக அதிக வரி வசூல், மற்றும் மக்களுக்கு மலிவான, தரமான பொருள்கள் கிடைக்கின்றன. உதாரணமாக : நோக்கியா செல் போன் நிறுவன்ம் சென்னை அருகே உருவானவுடன், 1500 ரூபாய்க்கு நல்ல செல்போன் கிடைக்கிறது. இன்டெல், அய்.பி.எம், மைக்ரோசாஃப்ட்,ஜி.ஈ., அல்ஸ்தோம், ஹுன்டாய், போர்ட், எ.பி.பி., ஹோன்டா, மிட்ஷுபிஷி, மற்றும் பல நிறுவனங்கள் வந்து உள்ளன. அன்னிய செலாவானி இருப்பும் மிக,மிக அதிகமாகி இன்று அய்.எம்.எஃப் வங்கியிடம் கடனே வாங்க அவசியமில்லா நிலை !!!
புதிய போட்டியினால், இதுவரை ஏகபோகத்தில் சுகமாக வளர்ந்த இந்திய நிறுவனங்கள் (உ.ம் : பி.ஸ்.என்.எல், பஜாஜ் ஆட்டோ, அய்.டி.அய், எஸ்.பி.அய் போன்றவை) தஙகளின் மெத்தன போக்கிலிருந்து மீண்டு, தரத்தை உயர்த்தி, உற்பத்தி செலவை குறைத்து, நவீன தொழில் நுட்பத்தை உபயோகப் படுத்த ஆரம்பித்தனர்.
பன்னாட்டு நிறுவனங்கள், எதோ ஹைடெக் பொருட்க்களை 'பணக்கார' வர்கத்திற்க்காக மட்டும், ஏழை தொழிலாளர்களை 'சுரண்டி', தயாரிக்கினறன என்ற பொய்யான வாதத்தை, பிரமையை இடதுசாரிகள் உருவாக்குகின்றனர். இந்தியாவை மீண்டும் காலனியாக்குகின்றன இவை,என்றும் கதைக்கிறார்கள். முதலாவுதாக இது போன்ற நிருவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, மற்ற நிறுவனங்களை விட மிக அதிக சம்பளம், சலுகைகள். மக்களுக்கு மிக நல்ல சேவைகள்/பொருட்க்கள். அரசாஙக்திற்க்கு நல்ல வரி வசூல் (அதன் மூலம் ஏழ்மை ஒழிப்பு திட்டங்கள், நலத்திட்டங்களை அமல் படுத்த வாய்ப்பு). நாட்டின் பொருளாதாரம் முன்னேற வாய்ப்பு.
1991க்கு முன் இருந்த நிலைமையே பரவாயில்லையா ? ஒப்பிட்டு பாருங்கள். அனேகமாக இதை படிக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பன்னாட்டு நிருவனங்களினால் பயன்டைந்திருப்பீர்கள். அல்லது வேலை வாய்பை பெற்றிருப்பீர்கள். யோசியுங்கள் நணபர்களே.
இங்கு இருக்கும் இடதுசாரிகள் எல்லாம் பெயரளவில் மட்டுமே பொதுவுடைமைவாதிகள். மற்றப்படி அமெரிக்கா போக சான்ஸ் கிடைத்தால் அதன் தூதரகங்களின் வாசலில் பிச்சைக்காரர்கள் போல காத்திருக்கவும் தயாராவார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உலகமயமாதல் பற்றி ரயாகரன் எழுதியதை தமிழ்மணி கிழித்து தோரணம் கட்டிய பதிவு இங்கே.
படித்துப்பாருங்கள்.
நண்பர் ரயாகரனுடன் உலகமயமாதல் விவாதம்
நண்பர் ரயாகரனுடன் உலகமயமாதல் விவாதம்
கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்.
//உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை
பி.இரயாகரன்
14.11.2007
நான் எமுதிய 'உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை" என்ற புதிய நூல் கீழைக்காற்றின் ஊடாக வெளிவர உள்ளது. அநேகமாக சென்னை புத்தக கண்காட்சியில் பெறமுடியும். இதை நான் நேற்றுத் தான் எழுதி முடித்திருந்தேன். அந்த நூலின் முன்னுரை.
முன்னுரை
நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ்வென்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளாhந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள். //
உலகமயமாதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு, அதன்பின்னே உங்களது விமர்சனத்தை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.
globalization என்னும் உலகமயமாதல் என்பது புதியதான ஒன்றுஅல்ல. ரோமானியர்கள் இந்தியாவின் மிளகை வாங்கிக்கொண்டு சென்றதும், அவர்கள் அதற்கு பதிலாக தங்கமோ அல்லது அவர்களிடம் இருந்த வேறு விதமான பொருட்களையோ கொடுத்ததற்கு முன்னமே இந்த உலகமயமாதல் ஆரம்பித்துவிட்டது. பக்கத்து கிராமத்திடம் உள்ளதை உங்கள் கிராமத்தில் இல்லாததை பக்கத்து கிராமத்திலிருந்து வாங்குவதிலிருந்தே இது ஆரம்பித்துவிட்டது.
இன்று அது வேகமாகவோ அல்லது இன்னும் வலிமையாகவோ ஆகியிருக்கிறது என்று சொல்லலாமே தவிர அது புதிய ஒன்று என்று சொல்ல முடியாது.
அது வேகமாக ஆனதற்கு அடிப்படை நாடுகளிடையே வியாபாரம் அதிகரித்ததுதான். வியாபாரம் என்றாலே ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிப்பதும் மற்றொருவன் துன்பத்தை அனுபவிப்பதும் என்று எப்படி நீங்கள் வரையரை செய்கிறீர்கள்? இதன் உள்ளார்ந்த சமூக விதி என்பதுதான் என்ன? என்னிடமிருப்பதை கொடுத்து என்னிடம் இல்லாததை வாங்குவதுதான் எல்லோரும் செய்வது. அதுதான் வியாபாரம். எனக்கு ஒரு பாடபுத்தகம் வேண்டுமென்றால், நானே அதனை உட்கார்ந்து எழுதி பிறகு அதனை படிக்கமுடியுமா? அதனை வேறொருவர் பலருக்கும் பயன்படும் விதத்தில் பதிப்பித்து வேண்டுபவர் வாங்கலாம் என்றால்தானே நான் போய் வாங்க முடியும்? இதிலென்ன புரியாத சமூக விதி?
//நவீன அடிமைத்தனம் என்பது, இப்படி நுட்பமானது. அது சிந்தனை முறையில் திணிக்கப்படுகின்றது. மனித அறிவியல் தற்குறித்தனத்தை புகுத்துகின்றது. சில பொருட்கள், பொருட்களைப் பற்றி கதைத்தல், நுகர்த்தல் என்ற எல்லைக்குள், மனித அறிவை மலடாக்கி நவீன அடிமைத்தனத்தை வாழ்வியலாக மாற்றிவிடுகின்றது. சமூகம் தன்னைச் சுற்றியுள்ள இந்த வட்டத்தை விட்டு, சுயமாக வெளியில் வரமுடியாது. அந்த வகையில், நவீன ஊடகவியல் மனிதனை தனது சொந்த சிறையில் பாதுகாப்பாக வைத்துள்ளது. //
நவீன ஊடகவியல் மனிதனை சொந்த சிறையில் வைத்துள்ளது என்றால், நீங்கள் புது ஊடகத்தை உருவாக்கலாமே? அவரவர் எழுதும் வசதிக்கென பிளாகும், இணையமும் கொண்டுவந்து மக்களை விடுவித்திருப்பதும் இதே உலகமயமாதலின் விளைவுதானே? அது இல்லையென்றால், எப்படி நீங்கள் எழுதியதை நான் படித்திருக்க முடியும்?
//அது தன்னைத் தானே இழிவுபடுத்துகின்றது. கற்றல், கற்றுக் கொள்ளுதல் என்பது, அறிவற்றவனின் வேலை என்கின்றது. சமூகத்தின் சாரத்தை தெரிந்து கொள்ளுதல், வாழத் தெரியாதவர்களின் முட்டாள்தனம் என்கின்றது. சமூக அவலத்தில் இருந்து சமூகத்தை விடுவிக்க முனைவதும் போராடுவதும், வேலையற்றவர்களின் கண்டுபிடிப்பு என்கின்றது.//
அப்படியா? நிச்சயமாக இல்லை. சொல்லப்போனால், ஏதோ நூலகங்களில் சிறைபட்டுக்கிடந்த கோடிக்கணக்கான புத்தகங்களை விடுதலை செய்து கிராமம் கிராமமாக இருக்கும் இண்டெர்நெட் மையங்களிலும் கிடைக்கும் வழியை செய்தது இந்த உலகமயமாதல்தானே?
//இப்படித்தான் நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாறிவிடுகின்றான். உணர்வுகளும், உணர்ச்சிகளும் வக்கிரமடைந்து விடுகின்றது. மனிதனோ மனித உணர்ச்சியற்ற, மிருக உணர்ச்சி கொண்ட நுகர்வு வெறியனாகி விடுகின்றான். நான் என்ற எல்லைக்குள், அனைத்தையும் தீர்மானிக்கின்றான். சுயநலமோ அவன் மேல் ஏறி உட்காருகின்றது. அனைத்தையும் இதற்குள்ளாக்கி, இதற்குள்ளாகவே பார்த்து சமூகத்தை இழிவாடுகின்றது. //
நுகர்வு என்பது வெறியா? எதனை தான் நுகரவிரும்புகிறோம் எதனை நாம் நுகர விரும்பவில்லை என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரியாதா? நிச்சயம் தெரியும். அவன் அதனை நான் என்ற எல்லைக்குள்மட்டும் செய்யாமல் உலகெங்கும் வாழும் அனைவரும் இந்த அறிவு பரவலில் ஈடுபடவேண்டும் என்றுதான் நூலகங்களில் சிறைப்பட்டுக்கிடந்த புத்தகங்களை விடுவித்தான். மின்னணு தொழில்நுட்ப புரட்சி, கணினி புரட்சியாகி, பின்னர் இங்கு கல்வியை பரவலாக்க முடிந்துள்ளது.
மேலும் நுகர்வு என்பதால்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு என்பது உருவாகிறது.
//மனித குலத்தின் சொந்த அவலத்தை கண்கொண்டு பார்க்க மறுக்கின்றது. மனிதனுக்கு எதிரான நடத்தையை, தனது வாழ்வுக்கான கூறாக பார்க்கின்றது. இப்படி உலகளவில் மக்களைச் சுரண்டி சூறையாடி வாழ்கின்ற ஒரு வர்க்கத்தின் சொர்க்கம் தான், உலகமயமாதலின் சுபீட்சம். இப்படி உருவாகும் சிலரின் சுபீட்சமோ, சமூக உயிரியான மனிதனுக்கு நரகத்தை உருவாக்குகின்றது. //
இங்கு சுபிட்சம் சிலருக்கானதாக இல்லை. இங்கே பலகோடி மக்கள் சமீபத்தில் 20 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்து மத்தியதர வர்க்கமாகவும், ஏன் பணக்காரர்களாகவும் ஆகியிருக்கிறார்கள்.
//நவீன மனித அடிமைத்தனங்களே இன்று உலகமயமாகின்றது. இந்த அடிமைத்தனத்தை நாம் எங்கும் எதிலும் காணமுடியும். மனித அடிமைத்தனம் மீது, மனித இழிவுகள் புகுத்தப்படும் வரைமுறையற்ற தன்மை தான் உலகமயமாதலின் வீக்கம். //
உலகமயமாதல் மனிதனை தனது கிராமத்தின் அழுத்தும் கலாச்சாரத்திலிருந்தும், நகரத்தின் குறுகிய மொழி/இன கலாச்சாரங்களிலிருந்தும் விடுவிக்கிறது. கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.
//உலகளாவில் உழைப்பு உருவாக்கும் சொத்துடமையை, சிலரின் சொத்தாக மாற்றுகின்றனர். அதை பாதுகாக்கும் சிலரின் அதிகாரம் வரை நீண்டு விரிந்தது தான், உலகமயமாதலின் சட்ட ஒழுங்கு. இதற்கு உட்பட்டது தான் அனைத்தும். தனிமனித சுதந்திரம் உட்பட ஜனநாயகம் அனைத்தும் இதற்கு கீழ்பட்டது தான். இதை மீறிய (தனிமனித) சுதந்திரம், ஜனநாயகம் என்று எதுவும், இந்த உலகமயமாதலில் கிடையவே கிடையாது. //
இங்கே சொத்துடமை பரவலாக்கப்படுகிறது. வெறும் நிலத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், ஒருவருக்கு நிலத்துக்கு இருக்கும் தேவை உலகமயமாதலில் வெகுவேகமாக குறைந்துள்ளது. அதனால், நில உடமை பரவலாக்கப்பட்டுள்ளது.
//தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தைச் சார்ந்தது என்பது, சிலரின் வர்க்க நலன்களுடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. முன்பு தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தின் பொது நலன் என்ற மாயை கலைந்து, அதில் உள்ள சிலரின் நலன் என்ற எல்லைக்குள் குவிந்துவிட்டது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருக்காக, உலகம் வேகமாக சுருங்கிச் செல்லுகின்றது. //
இல்லை. எல்லோருக்கும் உலகம் வெகுவேகமாக சுருங்கி வருகிறது. அதனால்தான், தமிழக கிராமத்திலுள்ளவரின் மகன் ஐரோப்பாவில் கணினி பொறியியலாளராக இருக்கமுடிகிறது. அவ்வாறு இருப்பதும், ஒருவரோடு ஒருவர் பேசவும் ஆகும் செலவும் மிகமிக குறைந்து மக்களிடையே நெருக்கமும் அதிகரித்துள்ளது.
//இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது. //
கடந்த 20 வருடங்களில் 20 சதவீத இந்திய ம்க்கள் வறுமைக்கோட்டிலிருந்து மேலெழுந்து மத்திய தர வர்க்கத்தினராகவும், பணக்காரர்களாகவும் ஆகியுள்ளார்கள். சமீபத்திய ஆய்வுகள், இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக, வறுமை இல்லாத உலகத்தை மிகவும் நெருங்கிவிட்டோம் என்று கூறுகின்றன. ஒரெ விஷயம், இந்தியா தாமதமாக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதுதான்.
//இந்த தனிமனித நலன் சார்ந்த ஒழுக்கக்கேட்டை பீற்றிக் கொள்கின்ற வக்கிரம் தான், பண்பாடாக கலாச்சாரமாக புணர்ந்து விடப்படுகின்றது. இந்த உலகமயமாதலில் கதாநாயகர்களின் நுகர்வு வக்கிரங்களை பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற ரசிகர் கூட்டமாக, ஒரு கற்பனை உலகில் மக்களை சஞ்சரிக்க கோருகின்றனர். இப்படி மக்கள் கூட்டத்தை அற்ப உணர்வுக்குள் திணிப்பதையும், அதை உணர்வதையும் தான் தனிமனிதனின் சுதந்திர உணர்வு என்கின்றனர்.
இவை எல்லாம் எதற்காக? யாருடைய நலனுக்காக? நிச்சயமாக உழைத்து வாழ்கின்ற மக்களுக்காக அல்ல. இந்த வகையில் உலக பொருளாதாரம் என்பது, தேசிய பொருளாதாரம் முதல் ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் வரையிலான, அதன் சுயேட்சையை அனுமதிப்பதில்லை. தனிமனிதனின் சுயேட்சை முதல் ஒரு மக்கள் கூட்டத்தின் சுயேட்சையான எந்த செயற்பாட்டையும், அதன் இருப்பையும் தகர்ப்பது தான் உலகமயமாதலின் உட்சாரம்.
அதாவது யாரெல்லாம் செல்வத்தை வரைமுறையின்றி மக்களைத் திருடிக் குவிக்கின்றனரோ, அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கையே உலகமயமாதல். இதுவே உலகப் பொருளாதாரம். //
செல்வம் என்பது ஒரு நிரந்தர புள்ளி எண் அல்ல. அது ஒருவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதாலேயே ஒருவரிடமிருந்து மற்றவரிடம் சேர்கிறது என்பதும் அபத்தம்.
//இந்த உலக பொருளாதாரம் என்பது உயர்வான இலாப நோக்கில், அனைத்தையும் சிலரின் தனிச்சொத்தாக்கும் வகையில் திட்டமிட்டப்படுகின்றது. இதற்கு வெளியில் மக்களின் தேவையையும், அவர்களின் அவசியத்தையும் அடிப்படையாக கொண்டு, எவையும் திட்டமிடப்படுவதில்லை. அப்படி எந்த அரசும் கிடையாது. இந்த சமூக அமைப்பில் அதிகாரத்தை பெற விரும்புகின்ற எந்த கட்சியும், எந்த அரசு சாராத அமைப்பிடம் கூட, மக்கள் நலத்திட்டம் எதுவும் கிடையாது. //
ஏதோ உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு மக்களுக்காக திட்டமிடுவது நிறுத்தப்படவேண்டும். மக்களுக்கு அரசியல் சுதந்திரமும், பொருளாதார சுதந்திரமும் கொடுத்தாலே போதும். மக்கள் அவரவர் தங்களுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டு போவார்கள். மக்கள்நலதிட்டத்தால்தான் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பது அபத்தம். மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.
//இவர்களிடம் முதன்மையான (அரசியல்) நோக்கமாக இருப்பது, உலகமயமாதலின் கொழுக்கின்ற வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்தபடி, தாம் எப்படி பிழைப்பது என்பது தான். இந்த உலகமயமாதல் என்ற சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் அரசியல் நலன்களும் கூட, இதற்கு உட்பட்டதே. மக்கள் நலன் என்பது, இவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தில் ஒரு அரசியல் கூறாகக் கூட இருப்பதில்லை.//
உலகமயமாதலால் கொழுக்கின்ற வர்க்கம் என்பது நீங்களும் நானும்தான். சற்றே பார்த்தால் தெரியும். மூலதனம் இன்று தேச எல்லைகளை கடக்கிறது. ஜனநாயக விரும்பிகள் உழைப்பாளர்களும் தேச எல்லைகளை கடந்து சென்று உழைப்பு தேவைப்படும் இடத்தில் வேலை செய்ய உரிமைகலை கோரினார்கள். விரும்பியோ விரும்பாமலோ இன்று உலகெங்கும் அதுதான் நடந்துவருகிறது. தேச எல்லைகளை கடந்து மெக்ஸிகோ உழைப்பாளர்கள் அமெரிக்காவில் உழைப்பதும்,அமெரிக்கர்கள் ஐரோப்பாவில் உழைப்பதும், இந்தியர்கள் வளைகுடா, அமெரிக்கா என்று உலகெங்கும் உழைப்பதும் இன்று உலகமயமாதலால்தான் சாத்தியமாகி இருக்கிறது.
//மக்கள் கூட்டத்தை ஏமாற்ற, மக்களை பிரித்தாள முனைகின்றன. அரசியல் ரீதியாக இவர்கள் வைக்கின்ற கோசங்கள் முழக்கங்கள், மனிதன் தன்னை உணராத வகையில் வைக்கப்படுகின்றது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளாகத்தான், இந்த சமூக அமைப்பினுள் அரசியல் செய்வோரின் நடத்தைகள் உள்ளன. //
ஆனால், கம்யூனிஸ்டுகள் இன்னும் உலகமயமாதலை எதிர்ப்பதன் மூலம், மக்களை பிரித்தாள முயற்சிக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, கிறிஸ்துவ அடிபப்டைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆகியோரும் இவ்வாறு வெளிநாட்டு உழைப்பாளர்களுக்கு உரிமைகள் கொடுக்கக்கூடாது என்று கோஷம் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களாகவும், பர்மா போன்ற நாடுகளில் மனித உரிமைகளை நசுக்குபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.
//இந்த உலகமயமாதலில் யாரெல்லாம் பொருட்களை வாங்கி நுகரும் வசதியும் வாய்ப்பும் உள்ளனரோ, அவர்களுக்கு மட்டும் உற்பத்தி என்பது உலகமயமாதல் சந்தை விதியாகும்.//
உற்பத்தி என்பது வாங்கி நுகருபவர் மையம் கொண்டதாகவே மனித குலம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வருகிறது. அதிகமாக ஒரு பொருளை விரும்புபவர்கள் அதிகமாகும்போது அதனை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் அதிகமாவார்கள். அதிகமாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதால், அதிக பொருட்கள் சந்தைக்கு வரும். அதிக பொருட்கள் இருப்பதால், விற்பவர் சந்தை வாங்குபவர் சந்தையாகிறது. தரம் முக்கியத்துவம் பெறுகிறது. பொருள் விலை குறைகிறது.
// பொருட்களை வாங்கி நுகர முடியாத வகையில் சுரண்டப்படும் மனித குலத்தையிட்டு, உலகமயமாதல் சமூக அமைப்பு கவலைப்படுவது கிடையாது. இந்த சமூக அமைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள், கோட்பாடுகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைத்தும், இந்த சந்தை விதியை அனுசரித்து இதற்குள் செயல்படுகின்றது. இதனிடம் எந்த மனித முகமும், சமூக நலனும் இருப்பதில்லை. இது உலகமயமாதல் நோக்கில் நிர்வாணமானது//
பொருட்களை வாங்கி நுகர முடியாத வகைக்கு மனித குலம் மொத்தத்தையும் கொண்டு செல்லவே முடியாது. பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்த பின்னால், வாங்க ஆளில்லையெனில் தானாக விலை குறைகிறது. மக்கள் வாங்க முடியும் அளவுக்கு விலை குறைந்துகொண்டே போகும். தக்காளி உற்பத்தி அதிகமாக ஆகி, பல கோடி டன் கணக்கில் தக்காளி உற்பத்தி செய்துவிட்டு, விலையை 1000 ரூபாய் என்று வைத்து யாரும் வாங்கமுடியாமல் ஆக்குவார்களா? வாங்க முடியாது எனில் விலையை குறைத்துத்தான் ஆகவேண்டும்.
//இந்த உலகமயமாதல் அறிவியல் நோக்கு என்பது, பொருட்களை வாங்க முடியாதவன், பொருள் உலகில் வாழ தகுதியற்றவனாக பார்க்கின்றது. உலகமயமாதல் பொருட்களினாலானது. இலாபமே குறிக்கோளாக கொண்டது. இதற்குள்ளேயே நுகர்வு என்று தீர்மானிக்கின்றது. சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தும் இதற்குள் அடிமையானதே. இதை மீறி பீற்றிக்கொள்ள எதுவும் கிடையாது. அற்ப வக்கிரத்தை கொட்டி, பீற்றுவதையே சுதந்திரம் என்கின்றன. //
லாபம் ஒரு நல்ல குறிக்கோள். லாபமே மேன்மேலும் பொருட்களின் விலையை குறைக்கிறது. பொருட்களின் விலை குறைய குறைய மேன்மேலும் மக்கள் நுகரவும் வாய்ப்பாகிறது.
//மனித பண்பாடு, கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என எதுவாக இருந்தாலும், உலகமயமாதல் என்ற தனிமனித நலனைச் சார்ந்த சந்தை விதிக்கு உட்பட்டதே. யாரெல்லாம் பணம் கொடுத்து இவற்றை பெறமுடியுமோ, அவர்களுக்கு மட்டுமான ஒரு உலகம் தான் உலகமயமாதல். இதற்கு வாழ வழியற்றவராக்கப்பட்டவர்கள், இந்த உலகமயமாதலில் வாழ முடியாது. //
உலகமயமாதல் தனிநபர் மையம் கொண்டது, அதே நேரத்தில் எல்லா தனிநபர்களையும் மையமாக கொண்டது. ஒரு நபரால் பணம் கொடுத்து பெற முடியும் விஷயம் மற்றவருக்கு தேவையாக இருந்தாலும், அது தற்போது பெற முடியாததாக இருக்கலாம். இதுதான் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இருந்துவருகிறது. அதிக உற்பத்தி, Automation ஆகியவை பொருளின் விலையை குறைத்துக்கொண்டே போகின்றன. ஒரு காலத்தில் பல கோடி கோடி பெறுமானமாக இருந்த கம்யூட்டர் இன்று காய்கறி விலை அளவு மலிந்தது உலகமயமாதலால்தான் சாத்தியமாயிற்று. இதுவே சிலுக்குவார் பட்டியில் கம்ப்யூட்டர் மையம் தோன்றவும் காரணமாயிற்று.
//இப்படி வாழ முடியாதவர்கள் யார்? உலகமயமாதலில் வாழக் கூடியவன் நுகரும் பொருட்களை, அதன் அடிகட்டுமானங்களை உற்பத்தி செய்பவன் தான். இப்படி வாழ முடியாதவனை உற்பத்திசெய்யும் உலகமயமாதல் என்பது, மனித உழைப்பு அதியுயர் இலாப எல்லைக்குள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதால் உருவாக்கப்படுகின்றது. உலகமயமாதல் உற்பத்தி செய்பவனுக்கும் கொடுக்கும் அற்ப கூலியில், அவன் உற்பத்தி செய்தவற்றை அவனே நுகர முடியாது போகின்றது. உண்மையில் ஒரு வர்க்கத்தின் நுகர்வுக்குரிய பொருளை உற்பத்தி செய்பவன், அதை நுகர முடியாது பிறிதொரு வர்க்கமாகின்றான். இதனால் மனித வாழ்க்கையே வர்க்கப் போராட்டமாகி விடுகின்றது. //
தவறு. ஒரு இடத்தில் உற்பத்தி செய்பவன் மறு இடத்தில் நுகர்பவனாக இருக்கிறான். நுகர்வதற்கு ஆட்கள் இல்லையேல், சமூகம், கலாச்சாரம், உணவு, சிற்றுண்டி விடுதி, பத்திரிக்கை, இண்டர்நெட், பிளாக் அனைத்தும் தேவையுமில்லை, இருக்கவும் இருக்காது.
--
டோண்டு சார்!
இயற்கை ஆற்றலை அனைவருக்கும் சமமாக கொடுப்பதில்லை. சொல்லிக் கொடுப்பதை புரிந்துவதும் இதற்குள் அடக்கம். கல்வி அறிவால் உயர்த்த முடியாதவர்களும் இன்னாட்டு மன்னர்கள்தான். இவர்களை எப்படி உயர்த்துவது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். இவர்களை வல்லான் ஆக்க முதலாளித்துவத்தில் ஏதும் வழி இருந்தால் கட்டுரையாக எழுதவும்.
உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாம் உங்கள் தரத்திலா இருக்கின்றார்கள்?
வல்லான் பொருள் சேர்ப்பது சரியென்றால், அரசியல்வாதிகள் பொருள் சேர்ப்பதை ஏன் விமர்சிக்கின்றீர்கள்?
//கல்வி அறிவால் உயர்த்த முடியாதவர்களும் இன்னாட்டு மன்னர்கள்தான். இவர்களை எப்படி உயர்த்துவது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். இவர்களை வல்லான் ஆக்க முதலாளித்துவத்தில் ஏதும் வழி இருந்தால் கட்டுரையாக எழுதவும்.//
தவறான புரிதல். தத்தம் அறிவுக்கேற்ப எல்லோருமே உழைக்கத்தான் வேண்டும். அதற்கான ஊதியமும் கிடைக்கும். மற்றப்படி யாரும் யாரையும் முடிவில்லாமல் சுமக்க இயலாது.
இந்த நிலைமை எல்லா சமூகத்துக்குமே பொருந்தும்.
வல்லான் பொருள் குவிக்கிறான் என்றால் அது அவனது திறமையால், உழைப்பால். மற்றவர்களை வஞ்சித்து முன்னேறியதல்ல. அதை கட்டுப்படுத்தியது கம்யூனிசம். மனித இயற்கைக்கு புறம்பான அந்த தத்துவம் செய்த குளறுபடிகள் சரித்திர ஆவணங்களாகக் காணக் கிடைக்கின்றன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"வல்லான் பொருள் குவிக்கிறான் என்றால் அது அவனது திறமையால், உழைப்பால். மற்றவர்களை வஞ்சித்து முன்னேறியதல்ல."
அப்பாடா! அரசியல்வாதிகளின் பொருள் சேர்க்கும் ஆற்றலுக்கு சான்று கொடுத்த புண்ணியம் உங்களைச் சாரும்
//அப்பாடா! அரசியல்வாதிகளின் பொருள் சேர்க்கும் ஆற்றலுக்கு சான்று கொடுத்த புண்ணியம் உங்களைச் சாரும்//
என்ன தவறான புரிதல்! நான் குறிப்பிட்ட வல்லான் கண்டிப்பாக அரசியல்வியாதி அல்ல. ஒரு அரசியல்வியாதி முதலீடு ஏதுமின்றி ரிஸ்க் ஏதும் எடுக்காமல் தன் பதவியை வைத்து திருடுகிறான். அவன் வெறும் திருடன். அவன் மற்றவரை வஞ்சித்துதான் முன்னேறுகிறான். அதை எப்படி ஒத்து கொள்வது?
நான் கூறியது சந்தையில் போட்டியை சந்தித்து தனது திறமையால் ஆர்டர்கள் பிடித்து அவற்றை நிறைவேற்றி பணம் ஈட்டுவது பற்றியே.
நான் எழுதியதை சரியாகப் படிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இரண்டாயிரத்து ஐந்தில் எழுதிய பதிவா இது? //அசோகர் காலத்துல பேருந்து இருந்ததா// என்பதைத் தாண்டி யோசிக்க மாட்டேன் என்கிறார்களே என்று இப்போதுதான் வருத்தப்பட்டது போல இருக்கிறது. காலம்தான் அந்த பேருந்தையும் விட எவ்வளவு வேகமாக ஓடுகிறது...
அது நிற்க. வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோமா என்று கேள்வி கேட்கும் காலவெள்ளம் எல்லாம் நம்மை கடந்து போய் மாமாங்கம் ஆகிவிட்டது! அட, ரஷ்யாவை விடுங்கள், சைனாவில் போய் இந்த கேள்வியைக் கேட்டால் கூட காதில் விழாதது மாதிரி போய்விடுவார்கள்.
இல்லை, தெரியாமல்தான் கேட்கிறேன் அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பின்னால் ஏன் ஒரு பேராசிரியர் நெடுஞ்செழியனோ அல்லது பேராசிரியர் அன்பழகனோ முதலமைச்சராக வரமுடியவில்லை?
இன்றைய கணத்தில் நல்லான் ஜெயிக்கலாம் - அவன் வல்லானாக இருந்தால் மட்டுமே.
இதை புரிந்துகொண்டது சைனா. புரியாமல் கோட்டைவிட்டது ரஷ்யா.
ஏதாவது சந்தேகம் இருந்தால் மேற்கு வங்காளத்தில் போய் கேட்டுப் பாருங்கள், பளிச்சென்று சொல்வார்கள்: வல்லான் வகுத்ததுதான் வாய்க்கால்!
அம்புடுதேன்.
(PS: கூடிய சீக்கிரம் ஒரு ப்ளாக் அக்கவுண்ட் திறக்கவேண்டும்!)
Post a Comment