ஒரு பிறப்பு சான்றிதழை ஈழத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்து கொண்டிருக்கிறேன். அதில் விண்ணப்பதாரரின் பிறந்த திகதி ஆனி இரண்டாம் தேதி 1965 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு சமமான ஆங்கில தேதி தேவை. தமிழ்நாட்டில் நாங்கள் சித்திரை முதல் தேதி ஏப்ரல் 14 என்று வைத்து கொண்டுள்ளோம். அப்படியென்றால் ஆனி இரண்டாம் தேதி என்பது ஜூன 14/15 ஆக இருக்கும். ஈழத்திலும் அப்படித்தானா?
ஏன் அப்படி கேட்கிறேன் என்றால், சில ஈழ பதிவர்கள் ஜனவரியை சித்திரை என்று குறிப்பிட்டதாக ஞாபகம். எந்த பதிவர் என்பதை மறந்து விட்டேன். ஆக, ஈழத்தில் வழமை என்ன என்று யாராவது ஈழப் பதிவர்கள் கூறினால் நன்றியுடையவனாக இருப்பேன். முக்கியமாக ஆனி இரண்டாம் தேதி 1965 ஆண்டு என்பதின் ஆங்கிலத் தேதி என்ன?
இது மிக அவசரமாக தேவைப்படும் உதவி.
நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
9 hours ago
12 comments:
இந்த தேதி மாற்றியை உபயோகப்படுத்தி தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதி ஒரு வழியாக கண்டுபிடித்தேன். இந்த மாற்றி ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியை கூறும். ஆகவே ட்ரையல் அண்ட் எர்ரர் முறையில் அதை எதிர்திசையில் உபயோகிக்க வேண்டியிருந்தது. ஆனால் இது தமிழ்நாட்டு தளம். ஈழத்துக்கும் இது செல்லுமா எனத் தெரியவில்லை.
இன்னொரு விஷயம். ஏதேனும் காரணத்துக்காக எனக்கு பின்னூட்டம் இட தயங்குபவர்கள் (அதை புரிந்து கொள்கிறேன்) தயவு செய்து எனக்கு raghtransint@gmail.com க்கு மின்னஞ்சல் செய்யவும். இந்த உதவியை முக்கியமாக ஈழ சகபதிவர்களிடமிருந்து வேண்டுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா,
ஈழத்துச் சைவ மரபின் படி தைப் பொங்கல் தினத்தில் இருந்து தான் தமிழ் மாதம் தொடங்குகிறது. அதாவது தைப் பொங்கல் தினம் தை 1. சைவ வீடுகளில் நடக்கும் மங்கள வைபவங்கள் தமிழ் மாதத்தின் பஞ்சாங்க முறைப்படிதான் நாள் பார்த்துச் செய்வார்கள். இதோ மாத ஒழுங்கு:
தை 1 ( தைப் பொங்கல்)
மாசி
பங்குனி
சித்திரை
வைகாசி
ஆனி
ஆடி
ஆவணி
புரட்டாசி
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
இன்னும் தகவல்கள் தேவையாயின் கேளுங்கள். உங்களின் பதிவைப் பார்த்ததும் ஈழத்துப் பெரியவர் ஒருவருடன் தொடர்பு கொண்டேன். அவரின் கருத்துப்படி , ஈழத்தில் பிறப்புச் சான்றிதழ்களில் பெரும்பாலும் ஆங்கிலத் திகதிதான் புழங்குவதாகக் கூறுகிறார். அவருக்கும் சரியாக ஞாபகமில்லை. குறிப்பில் [ஜாதகம்] மட்டும் தான் தமிழ்த் திகதியும் ஆங்கிலத் திகதியும் புழங்கப்படுமாம். அத்துடன் இது பிறப்புப் பதிவாளர்களைப் பொறுத்ததும் கூட என்கிறார் அவர். சில பிறப்புப் பதிவாளர்கள் தமிழ்த் திகதிகளையும் பிறப்புச் சான்றிதழில் பயன் படுத்தியிருக்கலாம் என அவ்ர் கூறுகிறார்.
தமிழ்நாட்டிலும் தை பொங்கல் அன்றுதான் தை மாதம் முதல் தேதி. ஆக, ஆனி இரண்டு 1965 ஆங்கில மாதம் ஜூன், 16-ஆம் தேதி, 1965.
என் குழப்பத்துக்கு காரணமே, ஈழ பதிவர் ஒருவர் தனது வலைப்பூவில் ஜனவரியை சித்திரை என்று குறிப்பிட்டதுதான்.
சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி, வெற்றி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா,
ஈழப் பதிவர்களில் நான் அறிந்த வரையில் , கனக்ஸ்[இவ் வார நட்சத்திரம்], மலைநாடான், யோகன் பாரிஸ் ஆகியோர் சைவ சமயத்தவர்கள் மட்டுமல்ல , வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள். எனவே நீங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டால் சில வேளைகளில் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும். அத்துடன் பகீ [ஊரோடி] யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுபவர். அவரைத் தொடர்பு கொண்டால் சில வேலைகளில் யாழ்ப்பாணத்தில் இது தொடர்புடைய அதிகாரிகளையோ அல்லது விபரம் தெரிந்தவர்களையோ அணுகி விபரம் அறிந்து உங்களுக்கு உதவலாம். எனக்கு இவை பற்றிப் போதிய அறிவு இல்லை.
உங்களுக்கு நான் குறிப்பிட்ட பதிவர்களின் உதவியைப் பெற முடியாவிட்டால் சொல்லுங்கள். இங்கே எனக்குத் தெரிந்த ஈழத்துச் சைவப் பழம்[ஈழத்தில் மருத்துவராகத் தொழில் புரிந்தவர்] இருக்கிறார். அவரைக் கேட்டுச் சொல்கிறேன். அவருக்கு இப்படியான தகவல்கள் தெரியும் என நம்புகிறேன்.
மேலும் இது பற்றி உதவி தேவையாயின் தயங்காது கேளுங்கள். என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.
எனது மின்னஞ்சல் முகவரி:
vettri_kandaswamy@yahoo.com
நன்றி.
பணிவன்புடன்
வெற்றி
மிக்க நன்றி வெற்றி அவர்களே. மொழிபெயர்க்கும்போது சந்தேகத்துக்கு சிறிதும் இடம் அளிக்கக்கூடாது. ஆகவேதான் இந்தப் பதிவையே போட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிறப்புச் சான்றிதழில் ஆனி இரண்டு என்பது நேரடியாக June இரண்டாம் திகதியைத்தான் குறிக்கிறது. அதை பதினைந்து நாட்கள் குறைத்துப் பார்க்கத் தேவையில்லை.
பிறப்புச் சான்றிதழில் ஆனி இரண்டு என்பது நேரடியாக June இரண்டாம் திகதியைத்தான் குறிக்கிறது. அதை பதினைந்து நாட்கள் குறைத்துப் பார்க்கத் தேவையில்லை.
இதை நான் உறுதி செய்துவிட்டே சொல்கிறேன்.
எனது பிறப்புச்சான்றிதழும் இப்படித்தான் இருக்கிறது. அதாவது கிறகோரி நாட்காட்டி முறைக்கு நேரடியாக தமிழ் மாதப்பெயர்களைப் பாவிக்கிறார்கள். ஆனால் திகதிகள் மாற்றமில்லை.
நடைமுறையில் பதினைந்து நாள் வித்தியாசம் வருகிறது. ஆனால் இலங்கைப் பிறப்புச்சான்றிதழ் முறையில் இந்த நாட்கள் வித்தியாசம் கொள்ளப்படுவதில்லை.
ஜனவரி முதலாம் திகதி பிறந்தவரின் பிறந்ததிகதி தை முதலாம் திகதி என்றே பிறப்புச்சான்றிதழில் இடம்பெறுகிறது.
எனவே மேற்படி சான்றிதழில் ஆனி இரண்டாம் திகதி என்றிருப்பது June இரண்டாம் திகதியையே குறிக்கிறது.
நன்றி வசந்தன் அவர்களே. நல்ல வேளையாக மொழிபெயர்ப்பை அனுப்ப நாளை இந்திய நேரம் காலை வரை அவகாசம் உள்ளது. இப்போதே தேதியை திருத்தி விட்டேன்.
ஆக, எனது இந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்கள் எனக்கு முற்றிலும் புதிய விஷயத்தை கூறியுள்ளன.
பை தி வே, ஆடி 21 என்பது ஜூலை 21, சரிதானே? (அன்றுதான் பிறப்பு பதிவு செய்யப்பட்டதாக அந்த சான்றிதழ் கூறுகிறது. ஆகவே அதற்கும் ஆங்கில தேதி தேவை).
ஆனால் தைப் பொங்கல் தை 1 என்றால், யாழில் பொங்கல் ஜனவரி 1ஆ?
நான் என்ன புரிந்து கொள்கிறேன் என்றால் இந்த 15 நாள் வேறுபாடு பிறப்பு சான்றிதழ்களில் மட்டும் பாவிக்கப் படுவதில்லை. இது சரியான அனுமானமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பிறப்புச் சான்றிதழில் ஆனி இரண்டு என்பது நேரடியாக June இரண்டாம் திகதியைத்தான் குறிக்கிறது. அதை பதினைந்து நாட்கள் குறைத்துப் பார்க்கத் தேவையில்லை.//
வசந்தனின் அநுமானமே எனதும்.
ஐயா,
/* ஆனால் தைப் பொங்கல் தை 1 என்றால், யாழில் பொங்கல் ஜனவரி 1ஆ? */
இந்தத் திகதிகள் பற்றிக் கதைக்கும் போது , நீங்கள் முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஈழத்தில் குறிப்பாக என் கிராமம் போன்ற இடங்களில் ஆங்கில மாதங்களின் பெயர்களைப் புழங்குவதில்லை.
எடுத்துக்காட்டாக, ஜனவரி எனும் ஆங்கில மாதத்தை ஆங்கிலத்துக்கு தை மாதம் என்று தான் சொல்வார்கள். குழப்பமாக இருக்கிறதா? ஈழத்தில் ஆங்கிலச் சொற்கள் புழங்குவதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழுக்குத் தை என்றால், எமது தமிழ் மாதம், அதாவது தைப் பொங்கலோடு தொடங்கும் மாதம். ஆக தைப் பொங்கல் தமிழுக்கு தை முதலாம் திகதியில் அதேநேரம் ஆங்கிலத்துக்கு தை 14 ல். விளங்குதோ? இல்லை தலையே வெடிச்சு விடும் போலை இருக்கோ? தைப் பொங்கல் ஜனவரி 14ல் தான். தற்போது வெளிவரும் நாட்காட்டிகள் ஆங்கில மாதப் பெயர்களை [ஜனவரி etc] போன்றவற்றை ஆங்கில மாதங்களுக்குப் புழங்கினாலும் இன்னும் அதிக இடங்களில் மக்கள் தமிழ்ப்பெயர்களையே ஆங்கில மாதங்களுக்கும் பயன் படுத்துகிறார்கள்.
/* நான் என்ன புரிந்து கொள்கிறேன் என்றால் இந்த 15 நாள் வேறுபாடு பிறப்பு சான்றிதழ்களில் மட்டும் பாவிக்கப் படுவதில்லை. இது சரியான அனுமானமா?
*/
மிகவும் சரி. நான் ஏற்கனவே எனது முதலாவது பின்னோட்டத்தில் சொல்லியது போல்[நான் குறிப்பிட்ட பெரியவர், மற்றும் வசந்தன் ஆகியோரின் தகவல்களின் அடிப்படையில்] பிறப்புச் சான்றிதழ்களில் ஆனி என்றால் அது ஆங்கிலத்துக்கு ஆனியையே [June]குறிக்கிறது. ஈழம் இரு இனங்களைக் [தமிழ், சிங்களம்]கொண்ட நாடு. ஆகவே தமிழர்கள் பிறப்புப்பத்திரங்களில் தமிழ் மாதத்தையும் சிங்களவர் தமக்குரிய மாதத்தையும் பாவித்தால் சிக்கல்கள் உருவாகும். அதனால் பிறப்புச் சான்றிதழ்களில் ஆங்கில மாதமே புழங்கப்படுகிறது. ஆக, ஆனி என பிறப்புச் சான்றிதழில் இருந்தால் அதன் பொருள் ஆங்கிலத்துக்கு ஆனி, அதாவது யூன்.
அதே நேரம், சைவத் தமிழர்களின் குறிப்பில்[ஜாதகம்] தெளிவாக இரு திகதியும் குறிக்கப்ப்ட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ஈழத்தில் பிறந்தவரின் குறிப்பில், அவர் தமிழுக்குத் தை 1 ல் பிறந்திருந்தால் இப்படி எழுதப்பட்டிருக்கும்.
தமிழுக்குத் தை 1ம் திகதி 2006 ம் ஆண்டு ஆங்கிலத்துக்கு தை 14 ல்...
இப்ப விளங்குதா ஐயா? அல்லது இன்னும் உங்களைக் குழப்பி விட்டேனா?
// பை தி வே, ஆடி 21 என்பது ஜூலை 21, சரிதானே? //
பிறப்புச்சான்றிதழின்படி சரிதான்.
// ஆனால் தைப் பொங்கல் தை 1 என்றால், யாழில் பொங்கல் ஜனவரி 1ஆ? //
நடைமுறையிலுள்ள தமிழ் நாட்காட்டிக்கும் பிறப்புச்சான்றிதழுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
நடைமுறையில் தை முதலாம் திகதியென்பது தைப்பொங்கலோடு வருவதே. அதாவது ஜனவரி நடுப்பகுதியில் வருவதே. அதேநாள் வித்தியாசம் எல்லாத் திகதிகளிலும் வரும். சித்திரை முதலாம் திகதி, ஏப்ரலின் நடுப்பகுதியில்தான் வரும். இந்த விசயத்தில் தமிழகத்துக்கோ ஈழத்துக்கோ எந்த வித்தியாசமுமில்லை.
ஆனால் இங்கு, பிறப்புச்சான்றிதழில் குறிக்கப்பட்ட திகதி தொடர்பான பிரச்சினையைப் பற்றியே பேசுகிறோம். இரண்டையும் குழப்பாதீர்கள்.
பிறப்புச் சான்றிதழில் குறிக்கப்படும் திகதி ஆங்கில நாட்காட்டிக் கணக்கிற்குரியது. மாதத்தை மட்டும் தமிழில் எழுதுகிறார்கள்.
மிக்க நன்றிகள் Kanags, வசந்தன் மற்றும் வெற்றி அவர்களே. குழப்பம் தீர்ந்தது.
இப்போது இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்தி விடுகிறேன். எனது ஞாபக சக்தியை போட்டு கசக்கியதில் நான் குறிப்பிட்டப் பதிவர் கூட அதே மாதிரிதான் ஜனவரி 1-ஐ தை 1 என்று எழுதியிருந்திருக்கிறார். நாந்தான் தவறுதலாக சித்திரை என்று மெமரியில் போட்டிருக்கிறேன்.
மற்றப்படி ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தேதிகள் போட்டிருப்பது எனக்கு புதிய செய்தி. நான் பாட்டுக்கு அந்த தேதி மாற்றியை கேள்வி கேட்காது அப்படியே ஏற்றிருந்தால் தவறான மொழிபெயர்ப்பாகியிருக்கும்.
அதிலிருந்து என்னை காத்த ஈழ சகோதரர்களுக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment