5/10/2009

எங்கே பிராமணன் - பகுதி - 68

பகுதி - 68 (08.05.2009):
போன பகுதியில் எனது புரிதலில் ஒரு சிறு குறை ஏற்பட்டுவிட்டது. அசோக் சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படிப்பதை காண்பித்தார்கள், திடீரென அவன் மறைந்தான். இது பற்றி நான் அமானுஷ்யமாக வேறென்னவோ நடந்ததாக மனதில் கற்பனை செய்து வைத்திருந்தேன். இன்றைய பகுதியில் அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி வைக்கிறேன்.

கிருபா வீட்டில் பிரியாவும் அவன் அன்னை செல்லம்மாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கிரி தன் அன்னையை அழைத்து கொண்டு அங்கு வருகிறான். கிருபா எங்கே என அவன் கேள்வி கேட்டதற்கு பிரியா அவன் பெங்களூர் சென்றிருப்பதாகக் கூறுகிறாள். செல்லம்மாவிடம் கிரியையும் அவன் அன்னையையும் பிரியா அறிமுகம் செய்து வைக்கிறாள். வேம்பு சாஸ்திரி வீட்டு சம்பந்தம் தன் கையை விட்டு போனதில் கிரியின் அன்னை தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறாள். அதற்கு பிராப்தம் இல்லை போலிருக்கு என வைத்து கொள்ள வேண்டியதுதான் என செல்லம்மா ஆறுதல் கூறுகிறாள்.

“ஏன் சார், இந்த பிராப்தம் என்றால் என்ன? விதிதான் பிராப்தமா” என சோவின் நண்பர் கேட்கிறார். “விதி என சொல்வதை விட, இதை வேறு முறையில் அணுக வேண்டும். பிராப்தம் என்பதை அகராதியில் பார்த்தால் அது பெற்றது என்பதை குறிக்கும்” என தன் விளக்கத்தை சோ ஆரம்பிக்கிறார். முந்தைய பிறவிகளில் செய்யப்படும் நல்வினை மற்றும் தீவினைப் பயன்களின் அடிப்படையில்தான் இப்பிறவியில் நாம் பெறுவது தீர்மானிக்கப்படுகிறது. தமிழில் இதையே நாம் கொடுப்பினை என இன்னொரு பார்வை கோணத்தில் கூறுகிறோம். “அதுக்கெல்லாம் நாம் கொடுத்து வைக்கவில்லை” எனக் கூறுவதும் இவ்வகையே.

கிரியின் அன்னை மேலும் தொடர்கிறாள். தான் முன்பு செய்த தவறுக்கு இப்போது விமோசனம் கிடைத்தது என சந்தோஷப்பட்டதாகவும், ஆனால் கடைசி நிமிடத்தில் எல்லாமே கைவிட்டு போனதாகவும் அவள் கூறுகிறாள். வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவர் மனைவிக்கு இதில் பூரண திருப்தி இல்லையென தான் நினைப்பதாகவும் கூறுகிறாள். செல்லம்மா மிருதுவாக, தான் கேள்விப்பட்டவரை கிரியின் தகப்பனார்தான் நடுவில் புகுந்து, சீர் அதிகம் கேட்டதாகவும், ஆகவேதான் திருமணம் நின்றதாகவும் சொல்ல, அது தன் கணவர் வேம்புவின் மனைவிக்கு இதில் பரிபூரண சம்மதம் இல்லை என்பதை அவர் மட்டும் உடனடியாகவே உணர்ந்ததாகவும், ஆகவே பிற்காலத்தில் வரக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்கவே அவ்வாறு செய்ததாகவும் கூறுகிறாள்.

கிரி சற்றே பொறுமை இழந்து தன் அன்னை ஏன் இப்படி பிராமண குடும்பத்தில்தான் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் பிடிவாதம் பிடிக்க வேண்டும் என கேட்கிறான். அவள் இம்மாதிரி சுயமரியாதையை இழந்து எல்லோரிடமும் கெஞ்சுவது தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறுகிறான். செல்லம்மாவும் கிரியை ஆதரித்து பேசுகிறாள். எது எப்படியானாலும் தன் மகனுக்கு நிச்சயம் பிராமணப் பெண்தான் மனைவியாக வருவாள் எனவும், அவ்வாறு பரந்த மனப்பான்மை கொண்ட ஒரு பிராமண குடும்பம் எங்கோ இருக்க வேண்டும் எனவும் கூறுகிறாள்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவர் செல்லம்மாவிடம், அசோக்குக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கவிருப்பதாகவும், அது நல்லபடியாக முடிய வேண்டும் என தான் 1008 முறை காயத்ரி மந்திரம் ஜபிக்கப் போவதாகவும் கூறிவிட்டு, தன்னை யாரும் அது முடிவடையும் வரையில் தொந்திரவு செய்யாமல் பார்த்து கொள்ளும்படியும் கூறிவிட்டு நிஷ்டையில் அமர்கிறார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு நீலகண்டன் வந்து சாமு சாஸ்திரிகளை உரக்க அழைக்க செல்லம்மா அவரிடம் சத்தம் செய்யாமல் இருக்க சொல்க்றார். என்ன விஷயம் என நீலகண்டன் அடங்கிய குரலில் கேட்க, செல்லம்மா அசோக்கின் நலனுக்காக அவர் காயத்ரி ஜபத்தில் ஈடுபட்டுள்ளதை கூறுகிறார். நீலகண்டன் இதை கேலி செய்கிறார். பிறகு எவ்வளவு நேரம் இதற்கெல்லாம் பிடிக்கும் என கேட்க ஒன்றரை மணி நேரம் ஆகும் என செல்லம்மா பதிலளிக்கிறாள். நீலக்ண்டன் வேண்டுமானால் அப்போதைக்கு சென்றுவிட்டு, பிறகு திரும்பி வரலாம் என ஆலோசனை சொல்ல அவர் காத்திருந்து பார்ப்பதாகவே கூறுகிறார்.

“காயத்ரி மந்திரத்துக்கு இம்மாதிரியெல்லாம் பலன் இருக்கிறதா” என சோவின் நண்பர் கேட்க, சோ நிதானமாக பேச ஆரம்பிக்கிறார். “இந்த மந்திரத்துக்கென்று தனிப்பட்ட விசேஷ பலன்கள் என கிடையாது. இது மனிதனை மேம்படுத்தும் சாதனமே. ஆனாலும் மனதை ஒருவிஷயத்தில் ஒருமுகப்படுத்தி மனதார வேண்டிக் கொண்டால், காரியசித்தி நிச்சயம்”. “வெறுமனே வேண்டிக் கொண்டால் நடக்குமா” என நண்பர் விடாப்பிடியாக கேட்க, “ மனத்தூய்மையுடன் தகுதியான நபர்கள் வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் பலிக்கும்” என அவர் பதிலளிக்கிறார். உபபாரதத்திலிருந்து ஒரு கதையை இங்கு அவர் கூறுகிறார். அருச்சுனன் ஒருமுறை தேவலோகம் சென்றபோது ஓரிடத்தில் புஷ்பங்கள் மலைபோல குவிந்திருப்பதைக் கண்டு அது பற்றி விசாரிக்கிறான். அவை பீமன் சிவபூஜை செய்தபோது அர்ச்சிக்கப்பட்ட மலர்கள் என கூறப்படுகிறது. தனக்கு தெரிந்து பீமன் சிவபூஜை செய்ததாகத் தெரியவில்லையே என ஆச்சரியப்படும் அவன், தானும் தினமும் சிவபூஜைகள் செய்து வருவதாகவும், அந்த மலர்கள் எங்கே எனக் கேட்க, அவனிடம் ஒரு சிறு கூடையில் உள்ள மலர்கள் காண்பிக்கப்படுகின்றன. இந்த வேறுபாட்டை குறித்து அவன் வியப்ப்பையும் திகைப்பையும் தெரிவிக்க, அருச்சுனன் இதை வெறும் சடங்காகக் கருதி செய்ய, பீமனோ எல்லா கணமும் சிவபெருமானை மனத்தினால் தியானம் செய்து வருகிறான் எனக் கூறப்படுகிறது.

அதே போல திருநின்றவூர் எனப்படும் திண்ணனூரில் பூசலார் என்னும் சிவனடியார் தன் மனத்தால் சிவனுக்கு கோவில் கட்டுகிறார். இடம் தெரிவு செய்து, அஸ்திவாரம் எழுப்பி, செங்கல் செங்கலாக சுவர் எழுப்பி என எல்லாவற்றையும் தன் மனதிலேயே செய்கிறார். ஒரு நல்ல நாளாக பார்த்து கும்பாபிஷேகம் செய்ய மனதில் நிச்சயம் செய்கிறார். அதே சமயம் பல்லவ ராஜாவோ நிஜமாகவே கோவில் கட்டுவிக்கிறான். அவனுக்கு புரோகிதர்கள் கும்பாபிகேஷத்துக்காக குறித்து தந்த நாளும் பூசலார் குறித்த நாளும் ஒன்றாக அமைந்து விடுகிறது. ராஜாவின் கனவில் வந்த சிவபெருமான் தான் ராஜாவின் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அங்கிருப்பதற்கு இல்லை, ஏனெனில் தனது அன்பன் பூசலார் திருநின்றவூரில் கட்டிய கோவில் கும்பாபிஷேகம் எனக் கூறுகிறார். அரசனும் அந்த பூசலாரை காணும் அவாவுடன் அந்த ஊருக்கு வந்து பார்த்தால் ஒரு கோவிலும் இல்லை. பூசலார் யார் என விசாரித்தால் ஒரு எளிமையான சிவபக்தரை காட்டுகிறார்கள்.

அரசன் பூசலாரிடம் விசாரிக்க, அவரும் தன் மனத்தால் கட்டிய கோவில் பற்றி கூறுகிறார். அவர் கட்டிய கோவிலின் அதே வடிவமைப்பில் அரசன் அங்கும் கோவில் கட்டி தந்து மகிழ்கிறான். அந்த கோவிலின் ஈசனுக்கு ஹிருதயாலேஸ்வரர் என்ற பெயர். இப்போதும் அக்கோவில் உள்ளது. இருதய நோய் உடையவர்கள் அங்கு சென்று வழிபடுகிறார்கள்.

சாம்பு சாஸ்திரிகள் இன்னும் நிஷ்டையில்தன் இருக்கிறார். நீலகண்டன் செல்லம்மாவிடம் தன்னிடமிருந்து சாம்பு சாஸ்திரிகள் வாங்கிய பசு பற்றி விசாரிக்க, செல்லம்மா மகிழ்ச்சியுடன் அது நன்றாக இருப்பதாக்வும், தினமும் கோபூஜை செய்து விட்டுத்தான் தனது நித்திய கடமைகளை செய்ய ஆரம்பிப்பதாகவும் கூறுகிறாள். வைதீக பிராமணர்கள் இவ்வாறெல்லாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என நீலகண்டன் கேலியாகக் கேட்க, அவருக்கு மரியாதையாகவும் அதே சமயம் உறுதியாகவும் செல்லம்மா தங்கள் வாழ்க்கை முறையை உயர்த்தியே பேசுகிறாள். நீலகண்டன் அவற்றையெல்லாம் ஒத்து கொள்வதில்லை என்பது வேறு விஷயம்.

பிறகு தான் வந்த விஷயத்தை அவர் கூறுகிறார். தான் வேலை செய்யும் வ்ங்கியின் புது கிளை கட்டப்போகிறார்கள் எனவும், அதை கட்ட ஆரம்பிக்கும் முன்னால் பூமி பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறி, அதற்கு நாள் குறித்து வாங்கி வரும்படி தன்னை சேர்மன் அனுப்பித்ததாகக் கூறுகிறார். தனக்கு இன்னும் காத்திருக்க நேரம் இல்லையென கூறி விட்டு, சாம்பு சாஸ்திரிகள் நிஷ்டையிலிருந்து எழுந்ததும் அவரிடம் விஷயத்தைக் கூறி, நாள் ஒன்றை குறிக்கும்படி சொல்ல வேண்டும் என்றும் அவ்வாறு குறித்தததும் தனக்கு ஃபோன் செய்யும்படியும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.

ஆஸ்பத்திரியில் நாதன், அசோக், நீலக்ண்டன் காத்திருக்க, வார்ட்பாய் வந்து அசோக்கை டாக்டர் கூப்பிடுவதாகக் கூறி அவனை ஷாக் ட்ரீட்மெண்டுக்கு அழைத்து செல்கிறான். நாதன் மனம் கலங்க, நீலகண்டன் அவரை ஆஸ்வாசப்படுத்துகிறார்.

கணினி திரையில் ஒரு கீழ்நோக்கி விரியும் மெனு (dropdown menu) கணக்காக நாரதர் இப்போது தோன்றுகிறார். கடின இதயம் படைத்த சோ அவர்களோ இந்த இடத்தில் போய் ‘தேடுவோம்’ என கேப்ஷனை போடச் செய்து, காட்சியை உறையச் செய்து விட்டார். “சோ அவர்களை நீர் மனதில் திட்டுவதை முதன் முறையாக உணர்கிறேன்” எனக்கூறுவது முரளி மனோஹர்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/09/2009

அரசியல் தலைவர்கள், தினகரன் போன்ற பத்திரிகைகள் சொல்லித் தரும் பாடங்கள் - Prefer being cynical to being a sucker

இது ஒரு மீள்பதிவு. அவ்வாறு செய்ய என்னை இன்ஸ்பைர் செய்தது ஆசிட் தியாகு அவர்கள் தினகரன் ஊழியர்கள் எரிப்பு வழக்கில் வெளிவராத உண்மைகள் பற்றி இட்ட பதிவுதான்.

இப்போது பழைய பதிவை அப்படியே பார்ப்போம், பிறகு நான் மேலும் சேர்க்கைகளுடன் வருகிறேன். ஓவர் டு பதிவு:

முதலில் தினகரன் விஷயத்தை கவனிப்போம். இன்று விற்பனைக்கு வந்த துக்ளக் 28.05.2008 தேதியிட்ட துக்ளக்கில் 13-ஆம் பக்கத்தில் இவ்வாறு வந்துள்ளது. அது "நொந்து போன 'தினகரன்' ஊழியர்கள்" என்னும் தலைப்பில் தரப்பட்டுள்ளது:

"கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதிதான் மதுரை தினகரன் அலுவலகம் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு மூன்று அப்பாவி ஊழியர்கள் பலியானார்கள். அப்போது மதுரைக்கு வந்த கலாநிதி மாறன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முன்பாக, 'இதை நாங்கள் கடைசி வரை சும்மா விடப்போவதில்லை' என்று உத்திரவாதம் அளித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மட்டுமில்லாது, தினகரன் ஊழியர்கள் அவ்வளவு பேருமே நம்பிக்கை பெற்றனர். ஆனால் பிற்பாடு காட்சிகள் மாறின; வீராவேச வசனங்களும் அடங்கிப் போயின.

இந்த ஆண்டு அதே மே மாதம் 9-ஆம் தேதி - மூன்று அப்பாவிகளும் அனியாயமாக கருகிப் போன முதலாம் ஆண்டு நினைவு தினம். கடந்த ஆண்டு இதே தினத்தில் சன் டி.வி.யிலும், தமிழ் முரசு நாளிதழிலும் 'அழகிரியின் ஆட்கள்தான் இதைச் செய்தனர்' என்று கூறப்பட்டது.

'தினகரனில் என்ன செய்தி வரும்; தங்கள் ஊழியர்களின் நினைவாக என்ன செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வத்தோடு, வழக்கமாக படிக்காத வாசகர்கள் கூட அன்றைய தினகரனை வாங்கிப் பார்க்கிறார்கள். முதல் பக்கத்தில் 'அழகிரி விடுதலை' என்ற செய்தி, தா. கிருட்டினன் கொலை வழக்கில் விடுதலையான அழகிரியின் கலர் படத்துடன் வெளியாகியது. தங்களிடம் பணிபுரிந்த ஒரே காரணத்திற்காக உயிரை விட்ட அப்பாவி ஊழியர்கள் நினைவு அஞ்சலி, நாளிதழின் எந்த மூலையிலும் இல்லை.

தினகரனின் பிற ஊழியர்கள் நொந்து நூலாகிப் போனார்கள். 'அவர்களே சிறிய அளவிலாவது ஒரு அஞ்சலி விளம்பரம் போடுவார்கள் என்று நினைத்துத்தான் நாங்கள் சும்மா இருந்து விட்டோம். அவர்கள் போடப் போவதில்லை என்று தெரிந்திருந்தால், நாங்களாவது ஆளுக்கு ஐம்பதோ நூறோ போட்டு சொந்தமாக ஒரு அஞ்சலி விளம்பரம் போட்டிருப்போம்' என்று அவர்கள் புலம்பித் தவித்துப் போனார்கள். பாவம்...

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மட்டும், பறிபோன தங்கள் பிள்ளைகளின் நினைவாக சொந்தப் பணத்தைப் போட்டு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தனர். தினகரனில் அல்ல, தினமலரில்".

இதில் தினகரன் சொல்லித் தரும் பாடம் என்ன?

இறந்து போன மூவரில் இருவர் கணினி வல்லுனர்கள், ஒருவர் பாதுகாப்புக்கு பொறுப்பானவர். அவர்கள் வெளியே நடந்த கலவரத்தை கவனியாது தங்கள் வேலையில் மூழ்கியிருந்ததாக அப்போது படித்த ஞாபகம். அதனால் தங்கள் இன்னுயிரையே இழந்தனர். யார் வந்து அவரது குடும்பத்தாரின் நட்டங்களை ஈடு செய்யப் போகிறார்கள்? ஆகவே நான் புரிந்து கொண்ட பாடம் இதுதான். ஒரேயடியாக கடமையில் மூழ்கிவிடாதீர்கள். சுற்றுப் புறத்தையும் கவனியுங்கள். மற்றவர்கள் ஓடிப் போனதை அவ்வாறு செய்திருந்தால் கவனித்திருக்கலாம். அம்மாதிரி அசாதாராண சூழ்நிலை வந்தால் உடனே தப்பி ஓடுங்கள். கணினியாவது மயிராவது. கணினி எரிந்து போனால் நிர்வாகம் இன்னொன்றை வாங்கித் தந்தேயாக வேண்டும். ஆகவே முதற்கண் வெளியே ஓடிவிடுங்கள். என்ன புடலங்காய் பாதுகாப்பு, சுய பாதுகாப்பை விட அது முக்கியமில்லை. உயிர்தான் முக்கியம். அவ்வாறு செய்யாவிட்டால் எந்த முதலாளியின் சொத்தை பாதுகாக்க நினைத்தீர்களோ, அவரே உங்களை சௌகரியமாக மறப்பார். இதுதான் தினகரன் சொல்லித் தரும் பாடம். இது எல்லா நிறுவனங்களுக்குமே பொருந்தும். தியாகிகளாக முயற்சிக்காதீர்கள், ஏமாளிகள்தான் ஆவீர்கள்.

எனக்கு தெரிந்த ஒரு பென்ஷனர் கோபால கிருஷ்ண கோகலேயின் சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தன் மனைவியின் நகைகள் அத்தனையும் தானமாகத் தந்து பிறகு சந்தியில் நின்றார். விஷயம் கேள்விப்பட்ட பலர் அவரை ஏமாளி என்று சொல்லியே டரியல் ஆக்கினர். ஆகவே தலைவர்கள் உளறுவதையெல்லாம் நம்பி கைப்பணத்தை செலவழிக்காதீர்கள். என்றுதான் பாடம் கூறப்படுகிறது. தலைவர் கூறினார் என்பதற்காக தமிழில் எம்.ஏ. பாஸ் செய்து விட்டு இப்போது பியூன் வேலைக்கும் வழியில்லாமல் நிற்கும் பலரை தெரியும். தலைவர் பசங்களோ கான்வெண்டில்தான் படிப்பார்கள். அதை எடுத்து கூறினால் அவர்தம் தொண்டர்களுக்கு கோபம் வரும். தலைவர் மேல் தவறே இல்லை, தான் நல்ல தந்தை என்பதை காட்டி விடுகிறார்; தொண்டர்களுக்குத்தான் அது புரிவதில்லை. ஆகவே தவறு தொண்டர்களதுதான்.

Prefer being cynical to being a sucker!!!

மீண்டும் டோண்டு ராகவன். என்ன புதிதாக கூறலாம்? இன்னொரு ஆண்டு போயிற்று? குற்றவாளி யார்? இது வரை சி.பி.ஐ. சாதித்தது என்ன?

ஆசிட் தியாகு அவரது மேலே சுட்டப்பட்ட பதிவிலிருந்து சில வரிகளை நான் இங்கும் பதிக்கிறேன். ஏனெனில் இன்னும் பலர் இக்கேள்விகளை கேட்க வேண்டும்.

“தினகரன் எரிப்பு வழக்கின் சிபிஐ விசாரணை என்ன ஆனது? அது குறித்து எந்த பத்திரிகையும் வாய்திறக்காதது ஏன் என்பதுதான் நம் கேள்வி?மதுரையில் பலியான ஒருவரின் நெருங்கிய உறவினர் தினகரனில் இப்போது செய்தி ஆசிரியராக இருக்கிறார். அவரது மனசாட்சியாவது இதை பொறுக்குமா? தினமலரில் இருந்து கூட்டத்தை தினகரனுக்கு கூட்டிப்போய் தலைக்கு இவ்வளவு என மாறனிடம் பெற்றது மட்டுமின்றி மாதம் லட்சகணக்கில் சம்பளமும், இலங்கை தமிழர்கள் பற்றி செய்தி வரக்கூடாது என்பதற்காக இலங்கை தூதர் அம்சாவின் கொள்கை பரப்புகளை வெளியிடும் தினகரன் பொறுப்பாசிரியருக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா?கலாநதி மாறன் தரப்பில் பலியானர்களுக்கு பல லட்சம் கொடுக்கப்பட்டது. பல லட்சம் கொடுத்தால் போதுமா?

குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? கிடைத்தது. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் அடித்து கொன்று விட்டு இந்தா பணத்தை வச்சுக்கோ என்று சொலலிவிடலாமா"?

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் 09.05.2009

அவளோட புருஷன் அதை எப்படி எடுத்துப்பான்?
த்ரீ ரோசஸ் தேயிலை விளம்பரம் ஒன்று இவ்வாறு செல்கிறது. கணவன் கண்ணாடி முன்னால் நின்று ஷேவ் செய்து கொண்டிருக்க, அவன் மனைவி அவன் பின்னால் நிற்கிறாள். அவள் ஆதங்கத்துடன் சொல்கிறாள், “திவ்யாவோட புருஷன் அவளை இரண்டாம் ஹனிமூனுக்கு அழைச்சிண்டு போறாராம்”, “அதுக்கென்ன இப்போ” என கணவன் தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்ட வண்ணம் அசட்டையாக கேட்கிறான். “இல்லே, நீங்க அழச்சிண்டு போக மாட்டீங்களா” என இவள் ஆவலுடன் கேட்க, அவள் கணவன் சீரியசாகவே பதிலளிக்கிறான், “போகலாம், ஆனா அவ புருஷன் இதை எப்படி எடுத்துப்பானோன்னு தெரியல்லியே” என்கிறான். மனைவி முகத்தில் முதலில் திகைப்பு, பிறகு மெதுவாக அவளுக்கு கணவன் சொல்லுவது புரிய ஆரம்பிக்கிறது.

இதுக்குமேலே அவள் துடைப்பக்கட்டையை எடுத்தாளா அல்லது அப்பளக்குழவியை தேடுகிறாளா என்றெல்லாம் காட்டாமல் “ஹனிமூன் செல்வதற்கு சம்மதிக்க வைக்க த்ரீ ரோசஸ்” என்ற விளம்பர வாசகத்தை கூறுகிறார்கள். ஆக த்ரீ ரோசஸை பாவித்தால் அடுத்தவன் மனைவியை தள்ளிக்கிட்டு ஹனிமூன் செல்லலாமோ? யாராவது சொல்லுங்கப்பு!

எரிவாயு சிலிண்டர் விவகாரம் (இற்றைப்படுத்தப்பட்டது):
இதுக்கு முன்னாலே போட்ட நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவில் சிலிண்டர்களுக்கான டோக்கன்களில் தனி சேனலில் வியாபாரம் நடக்கும் என எனது அச்சத்தைத் தெரிவித்திருந்தேன். அந்தளவுக்கு நிலைமை மோசம் இல்லையென்று இப்போது புரிந்துள்ளது. எங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண்களை எங்களது கனெக்‌ஷன் தகவல்களில் பதித்து இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னால் எங்கள் வீட்டுக்கு சிலிண்டர் வந்தபோது அவர்கள் ஸ்லிப்பில் நாங்கள் தரவேண்டிய டோக்கன் எண் குறிக்கப்பட்டிருந்தது, நாங்கள் கொடுத்த டோக்கன் எண் அதனுடன் ஒத்து போகிறதா என்பதைப் பார்த்துத்தான் சிலிண்டரையே உள்ளே கொண்டு வருகிறார்கள். ஆக டோக்கன் வியாபாரம் செய்யவியலாது. இருப்பினும் டோக்கன் அதிகம் செலவாகாத பயனர் சும்மா சிலிண்டரை புக் செய்து வாங்கிக் கொண்டு சிலிண்டரை அதிக விலை தருபவர்களிடம் தள்ளிவிட்டு, அவரிடமிருந்து காலி சிலிண்டரை பெற இயலும். என்ன, சிலிண்டர் கொண்டுவரும் பையன்கள் முன் போல அலட்சியமாக இதில் ஈடுபடவியலாது. இருப்பினும் ஏற்ப்பாட்டில் இன்னமும் இந்த ஓட்டை உள்ளது. சிலிண்டருக்கும் ஏதேனும் நம்பர் இருந்து அடுத்த முறை காலி சிலிண்டரை எடுத்து செல்லும்போது எண்களை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு வேளை இந்தக் குறைபாடும் நீக்கப்படலாம்.

எது எப்படியானாலும், இவையெல்லாம் வேண்டாத தலைவலிகள். சப்சிடியை எடுத்துவிடுவதே மிக எளிய வழி. செய்வார்களா அல்லது vested interest குழுக்கள் தடுப்பார்களா?

யாருக்கு ஓட்டுபோடுவது?
திமுக, காங்கிரஸ் ஆகிய இரண்டும் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சிகள். தேதிமுகவிற்கு போடும் ஓட்டுக்கள் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்து, திமுகவின் வெற்றிக்கே வழிவகுக்கும். ஆகவே தேதிமுக கட்சியையும் தவிர்க்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை கன்னியாகுமரி போன்ற பாஜக வெற்றி பெறக்கூடிய ஓரிரு தொகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அதற்கு ஓட்டுப் போடுவது சிறப்புடையதல்ல. ஆக, அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதே இத்தேர்தலுக்கு நல்லது என்ற சோவின் கருத்துகளுடன் நான் முழுமையாக ஒப்புகிறேன்.

13.05.2009 துக்ளக் இதழின் கேள்வி பதில்களிலிருந்து:
கே: எல்.டி.டி.ஈ. தீவிரவாத இயக்கமே. அதன் தலைவர் பிரபாகரன் குற்றவாளியே என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளாரே?
ப: கரெக்ட், காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்சினையில் எடுத்து வருகிற நிலை, மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது.

கே: பாஜகவின் தீவிர ஆதரவாளரான தாங்கள், தமிழ் நாட்டில் அதற்கு ஆதரவாக எழுதாமல், அதிமுகவிற்கு ஆதரவாக எழுதி வருவது முரண்பாடாக இல்லையா?
ப: ஒரு முரண்பாடுமில்லை. அகில இந்திய அளவில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்று, அதன் தலைமியில் மத்திய அரசு அமைய வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன். தமிழகத்தில் பாஜக ஓட்டுப் பிளவு செய்து, காங்கிரஸ் திமுக கூட்டணிக்கே உதவும் என்பது இன்றைய தேர்தல் நிலை. ஆகவே தமிழகத்தில் காங்கிரஸ் திமுக அணியைத் தோற்கடிக்க, அதிமுகவுக்கு வாக்களிப்பதே நல்லது என்பதும், அது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட உதவும் என்பதும் என் கருத்து.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/08/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 66 & 67

பகுதி - 66 (06.05.2009):
அசோக்கை பார்க்க சைக்கியாட்ரிஸ்ட் மார்க்கபந்து வருகிறார். நாதனுக்கு அது பிடிக்கவில்லை. சைக்கியாட்ரிஸ்ட் அசோக்குடன் பேசும்போது அவனை தண்ணீர் கொண்டு வரும்படி அனுப்பி விட்டு, அவர் அசோக்கின் மாத்திரைகளை எடுத்துவிட்டு அவற்றின் இடத்தில் ப்ளாசீபோவை (placebo) வைத்துவிட்டு செல்கிறார். பாகவதரிடம் ஃபோனில் பேசி அவருக்கும் விஷயத்தைக் கூறி அவரை ஆசுவாசப்படுத்துகிறார்.

கிருபா வீட்டில் கிரியும் அவனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஜயந்தியுடன் தனது திருமணம் நின்றதில் அவன் வருத்தத்துடன் இருக்கிறான். கிருபா அவனுக்கு ஆறுதல் கூறுகிறான். அவன் நிலையை நன்கு புரிந்து கொண்ட ஒரு பிராமண குடும்பத்தின் பெண் அவனுக்கு கிடைப்பாள் என உறுதி கூறுகிறான்.

காஞ்சிபுரத்தில் நீலக்ண்டனுக்கும் பாகவதரின் இரண்டாம் மகன் மணிக்கும் நீலக்ண்டன் அவனது மன்னி ராஜிக்கு அளித்த போதனை பற்றியும், அதனால் ராஜி வார்டனுக்கு தந்த லெட்டர் பற்றியும் விவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. பாகவதரும், அவர் மனைவியும் மணியை விலகிச் செல்லுமாறு கூறுகின்றனர். நீலக்ண்டன் கறுவிய வண்ணம் அந்த இடத்தை விட்டு அகலுகிறார்.

ஒரு கோவில் வாசலில் சுலோக புத்தகங்கள், நோன்பு கயிற்கள் விற்கும் ஒரு வயோதிகரிடம் வந்து கிரி அனுமான் சாலிஸா இருக்கிறதா என விசாரிக்கிறான்.

அது என்ன அனுமான் சாலிஸா என சோவின் நண்பர் கேட்க, அவை துளசிதாசரால் அனுமனை பற்றி இயற்றப்பட்ட 40 சுலோகங்கள் என கூறுகிறார். பிறகு துளசிதாசர் பற்றி பேசுகிறார். அவர் முதலில் சாதாரண மனிதராகத்தான் இருந்தார். அவருக்கு தன் மனைவி ரத்னாவளி மேல் பெரிய மோகம். மனைவி பிறந்த வீடு செல்ல, அவரும் மனைவி பின்னாலேயே செல்ல, அவர் மனைவி சலிப்புடன், “என் பின்னால் வருவதற்கு பதிலாக ராமபிரான் பின்னால் அலைந்தால் போகிற இடத்துக்கு புண்ணியமாகுமே” எனக்கூற, அவரும் ஞானம் பெற்று, ராமபக்தராகிறார். பிறகு சிவனின் அனுக்கிரகம் பெற்று அவர் ராமசரிதமானஸ் என்னும் தலைப்பில் ஹிந்தியில் ராமாயணம் எழுதுகிறார்.

வால்மீகி ராமனை மனிதனாகவே முக்கால்வாசி இடங்களில் சித்தரித்து எழுத, இவரோ ராமனை தெய்வமாகவே வர்ணிக்கிறார். ராமாயண கதையோட்டத்தில் இதனாலேயே பல மாறுதல்களையும் செய்துள்ளார். அப்படிப்பட்டவரது அனுமான் சாலிஸாவை தினசரி 7 முறையாக, 21 நாட்களுக்கு பாராயணம் செய்தால், காரியசித்தி கிடைக்கும் எனவும் சோ கூறுகிறார்.

கிரி மற்றும் வயோதிகரின் பேச்சு தொடர்கிறது. இருவருக்குமிடையே ஒருவித பாசம் உருவாகிறது. தான் இறந்ததும், கிரி பொறுப்பேற்று தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும் எனக்கூற, அவனும் ஒத்து கொள்கிறான்.

சாம்பு வீட்டில் அவரும அவர் மனைவி செல்லம்மாவும் அசோக்குக்கு ஷாக் சிகிச்சை தரப்போவது பற்றி பேசுகின்றனர். அசோக்குக்காக தான் 108 முறை காயத்ரி மந்திரம் கூறப்போவதாக கூறிய சாம்பு அம்மந்திரத்தின் பெருமையை வர்ணிக்கிறார். அப்போது அங்கு வரும் அசோக் அவரிடம் தான் அவர் வீட்டில் இரண்டு நாளைக்கு தங்க அனுமதி வேண்டுகிறான். முதலில் மறுக்கும் சாம்பு அவரது மனைவியின் சிபாரிசால் ஒத்து கொள்கிறார்.

பகுதி - 67 (07.05.2009):
பாகவதர் வீட்டில் சிவராமன் தனக்கு ராஜி வார்டனுக்கு லெட்டர் கொடுத்த தகவலே தெரியாது என அழுத்தம்திருத்தமாகக் கூற, பின்னே எப்படி அவனது கையெழுத்து அதில் இருந்ததென பாகவதர் திகைக்க அவரது இரண்டாம் மகன் மணியோ மன்னிதான் அண்ணனது கையெழுத்தை ஃபோர்ஜ் செய்து போட்டிருக்க வேண்டும் என சரியாக ஊகிக்கிறான். விஷயத்தை இத்துடன் விடவேண்டும் என்றும், ராஜியிடம் சிவராமன் இது பற்றி பேசலாகாது என்றும் பாகவதரும் அவர் மனைவியும் சிவராமனிடம் கூறுகின்றனர். சிவராமன் தான் அவளிடம் சுமுகமாகவே பேசப்போவதாக கூறுகிறான்.

நாதன் வீட்டிற்கு சாம்பு அன்றைய பூஜைக்காக வரும்போது நாதனும் வசுமதியும் அசோக்கைக் காணாது தவித்து கொண்டிருக்கின்றனர். அதைப் பார்த்து சாம்புவுக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அசோக் தன் வீட்டில் ஒளிந்திருப்பதை அவரால் கூறவும் முடியவில்லை, கூறாமலும் இருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.

அசோக் தன் வீட்டில்தான் இருக்கிறான் என்னும் உண்மையை சாம்பு மறைப்பது குற்றமில்லையா என நண்பர் கேட்க, சோ அதை ஒத்து கொள்கிறார். “Suppressio veri suggestio falsi" என்று இதை லத்தீன மொழியில் கூறுவார்கள் என கூறும் அவர், உண்மையை மறைப்பது பொய்க்கு சமம் என அதன் பொருளையும் தருகிறார். மாண்டவ்யர் என்னும் ரிஷிக்கு இது சம்பந்தமாக நிகழ்ந்த கழுவேற்றம் பற்றியும் அவர் குறிப்பிடுகிறார். இதன் காரணத்தை அறிய அவர் தர்மதேவதையை போய் கேட்க, அங்கு கிடைத்த பதிலில் திருப்தியடையாது அவர் தர்மதேவதையையே மனித அவதாரம் எடுக்குமாறு சபிக்கிறார். அவர்தான் மகாபாரதத்தில் மகத்தான பொறுப்பை வகித்த விதுரராக அவதரிக்கிறார்.

நாதன் பேசிக் கொண்டிருக்கையில் நீலகண்டனிடமிருந்து ஃபோன் வருகிறது. அசோக்கை எப்படியாவது தான் டாக்டர் அப்பாயின்மெண்டுக்கு அழைத்து வருவதாக அவர் கூறிவிட்டு அசோக்கை தேடத் துவங்குகிறார். தன் வீட்டிற்கு கிளம்பிய சாம்பு மனது கேட்காது, நாதன் வீட்டுக்கு திரும்ப வந்து அசோக் தனது வீட்டில்தான் இருப்பதாகக் கூற, நாதன் அவருக்கு நன்றி கூறுகிறார். வசுமதியோ அவரிடம் கடுமையாகப் பேசுகிறாள். இங்கு சாம்பு வீட்டில் அசோக் அமர்ந்து புத்த்கம் படித்து கொண்டிருக்கிறான். செல்லம்மா மாமி அவனைப் பார்த்த வண்ணம் அடுத்த அறைக்கு செல்கிறாள். திடீரென அசோக் மாயமாக மறைகிறான்.

டாக்டர் மார்க்கபந்து டாக்டர் ஹம்சாவிடம் வந்து அசோக் பற்றி பேசுகிறார். அசோக் முழுக்க நார்மலாகத்தான் இருக்கிறான் என அவர் கூற, ஹம்சா அதை மறுக்கிறார். மார்க்கபந்து ராமகிருஷ்ண பரமஹம்சர், ஐயப்பன் மகரஜோதி, ஆகிய விஷயங்களை பற்றி கூறும் எல்லாவற்றையும் அவர் கேலி செய்கிறார்.

திருச்சியில் சிவராமன் வீட்டில் அவன் ராஜியை அவள் செய்த காரியத்துக்காக கண்டிக்கிறான். அவளும் தன் பக்கத்து நியாயத்தை கூறுகிறாள். ஒரு அன்னை என்ற ஹோதாவில் தான் அவ்வாறு செயலாற்ற வேண்டியதாகவும் அவள் கூறுகிறாள். ஒரு மாதிரியான அசௌகரிய அமைதி நிலவுகிறது.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது