2/06/2010

அவுட்சோர்சிங் பற்றி சில எண்ணங்கள்

எனது முந்தையப் பதிவில் பதிவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இட்ட ஒரு பின்னூட்டமே இப்பதிவுக்கு காரணம். அப்பின்னூட்டம் இதோ:

“உதாரணமாக, ஜெயலலிதா காலத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள், வேலை செய்யவில்லை! அப்போது ஒரு விஷயம் தெளிவாகவே புரிந்தது, அரசு இயந்திரம் உருப்படியாக இருக்க வேண்டுமானால், அரசு ஊழியர்கள் வேலை செய்யாமல் இருந்தாலே போதுமேன்றோ, அல்லது இவர்கள் செய்ததாகச் சொல்லிக் கொண்ட வேலைகள் எதுவுமே பைசாப் பெறாதது என்பதை, அந்தப் போராட்டம் அழகாக நிரூபித்தது.

நாலாயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்திற்கு எடுக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை வைத்து, நிலைமையை சமாளிக்க முடியும் என்பதை அந்தப் போராட்டம், outsourcing ஐப் பயன்படுத்தினால் இன்னும் என்னென்னவெல்லாம் வெளியே வரும் என்பதையும் நிரூபித்தது.

Outsourcing தேவையான இடத்தில் தேவையான அளவில் பயன்படுத்தினால், மிகப் பெரிய பொருளாதார ஊக்கியாக இருக்கவும் முடியும்! அரசின் ஊதாரித்தனமான சம்பளச் செலவைக் குறைக்கவும் முடியும்!

இதற்குக் கண்டனம் தெரிவிக்க ஓடிவருகிறவர்கள், (முதலில் கீழ்க்கண்ட விஷயங்களை அவதானிக்கட்டும்)

முதலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு செலவிடும் சம்பளம், சலுகைகளுக்கு ஈடாக வேலை செய்கிறார்களா?

மக்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புக்களை இவர்களால் நிறைவேற்ற முடிகிறதா அல்லது இவர்களால் மக்களுக்கு உபத்திரவம் தான் அதிகமா?

அரசு நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருப்பதை விட்டு விட்டு, தங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்கும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக இருக்கிறார்களா இல்லையா”?


இரண்டாம் உலக யுத்தம் முடிந்து ஜெர்மனி மீண்டும் பொருளாதார அற்புதத்தை (Wirtschaftswunder) அனுபவித்தபோது, அவர்கள் சந்தித்த முக்கிய பிரச்சினை ஆள்பலக்குறைவுதான். பல புதிய வேலைகள் உருவாயின, சில வேலைகள் உள்ளூர் மக்களால் நிராகரிக்கப்பட்டன. அவர்றை செய்ய ஆட்கள் அவசியம் தேவை. ஆகவே வெளிநாட்டவர்களை உள்ளே விட்டனர்.

அவர்களை விருந்தாளி தொழிலாளர்கள் (Gastarbeiter) என அழைத்தனர். எல்லாம் நல்லபடியாகவே போயிற்று, பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்த வரையில். ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட இரு தலைமுறைகள் புது தொழிலாளர்கள் உள்ளே வந்து விட்டனர். ஜெர்மனியில் இப்போது இருக்கும் பொருளாதார சங்கடத்தில் இந்த வேலையாளிகளை வரவேற்க ரொம்ப பேர் ஆசைப்படுவதில்லை. துருக்கியர்கள், கிழக்கு ஐரோப்பிய நாடினர் ஆகியோர் முக்கியமாக உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டனர்.

இதற்கு மாறாக அமெரிக்கா, மற்றும் மேற்கத்திய நாடுகளில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலைமைதான் அவுட்சோர்சிங். அதாவது யாரும் அவர்கள் தேசங்களுக்கு செல்ல மாட்டார்கள். வெளிநாட்டு வேலையாளிகள் அவரவர் நாட்டிலேயே இருப்பார்கள், ஆனால் இணையத்தின் உதவியோடு அவர்கள் அந்தந்த நாட்டின் பல வேலைகளை இந்தியாவிலிருந்தே செய்வார்கள். அந்த நாடுகளில் உள்ள பல கம்பெனிகளில் முழு டிபார்ட்மெண்டுகளே காணாமல் போயின. உதாரணமாக விற்பனைக்கு பிந்தைய சேவைகள், மனிதவளத் துறைகள் ஆகியவை.

இப்போது இதுவும் பல அரசியல்வாதிகளின் கண்களை உறுத்த ஆரம்பித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி பல நாடுகளில் இந்த அவுட்சோர்சிங் விரோதப் போக்கு நிலவுகிறது. அதை தடுக்க வரிவிதிப்பு சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவர எண்ணுகின்றனர். ஆனால் அவையெல்லாம் சுலபமாக நடக்குமா எனத் தெரியவில்லை. எது எப்படியானாலும், அமெரிக்க ஐரோப்பிய சம்பளங்கள் தந்து உள்ளூர் மக்களை முழுநேர வேலையில் ஈடுபடுத்துவது இனிமேல் பிராக்டிகலாக இருக்குமா எனத் தெரியவில்லை.

நமது நாட்டிலேயே மாஃப்வா போன்ற நிறுவனங்கள் பல கம்பெனிகளுக்கா ஆட்களை வேலைக்கு எடுக்கும் சேவையளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் பெண்ணீன் கல்யாணத்துக்காக முழு சேவைகளையும் ஒப்பந்தத்துக்கு செய்யும் கேட்டரர்ஸ் பெருகிவிட்டனர். எல்லாம் வாழு, வாழவிடு என்னும் பார்வை கோணத்தில்தான் நடக்கின்றன.

நான் செய்யும் வேலையையே எடுத்து கொள்ளுங்கள். முழுநேர மொழிபெயர்ப்பாளர்கள் குறைந்து விட்டனர். என்னைப் போன்ற ஃப்ரீலேன்சர்களே அதிகம். இன்று மொழிபெயர்ப்புகள் தேவைப்படலாம், திடீரென தேவைப்படாமல் போகலாம். அப்போது முழுநேர ஊழியர்களை என்ன செய்வது என்ற பிரச்சினை வரும்? நல்ல வேலை தெரிந்தவர்கள் தாராளமாக கிடைக்கும் நிலையில் அவுட்சோர்சிங் செய்வதே புத்திசாலித்தனம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.

நான் ஐ.டி.பி.எல்.-ல் வேலை செய்தபோது எங்கள் உதவி பொது மேலாளர் ஜலானி அவர்கள் பேசாமல் கம்பெனி கார்கள் அத்தனையையும் டிஸ்போஸ் செய்து விட்டு வாடகைக் கார்களை வைத்துக் கொள்ள ஆலோசனை கொடுத்தார். அப்போது வேலையில் இருந்த டிரைவர்களை சும்மா உட்காரவைத்து சம்பளம் கொடுத்தாலும், மொத்தத்தில் கம்பெனி பணம் சேமிக்கும் என்பதை ஒரு பெரிய ஆய்வுமூலம் எடுத்து காட்டினார். பதறிப்போன டிரைவர்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். காரணம் என்ன? அதுவரை அவர்கள் ரிப்பேர் செய்யும் காராஜுகளுடன் கமிஷன் ஒப்பந்தம் போட்டு கொண்டு ஒவ்வொரு வண்டியிலும் மாதாமாதம் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பில்லாகும்படி செய்து வந்தது நின்று விடுமே? வெறும் சம்பளத்தை வைத்து சொகுசு வாழ்க்கையெல்லாம் வழமுடியாதே என்பதுதான் அவ்ர்தம் எதிர்ப்புக்கு காரணம்.

ஐ.டி.பி.எல். தொழிலாளர்களின் நிர்ப்பந்தத்துக்கு பணிந்தது அதன் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது என்பதைக் கூறவும் வேண்டுமோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அவுட்சோர்சிங்குல அப்படி என்னத்தான் நடக்குது?

என் கணினி குரு முகுந்தனிடமிருந்து வந்த மின்னஞ்சலை கீழே தருகிறேன். எஞ்ஜாய்!!!!!!!!!!

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பாப்பீங்க?

(நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்).

வெள்ளைக்காரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.

அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்.

இந்த மாதிரி அமெரிக்காவுல, இங்கிலாந்துல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, நான் செலவு செய்யத் தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க Clientனு சொல்லுவோம்.

சரி

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு Sales Consultants, Pre-Sales Consultants. .... இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், முடியும்னு பதில் சொல்றது இவங்க வேலை.

இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருப்பாங்க?

MBA , MS னு பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க.

முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?

(அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது).

சரி, இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?

அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிங்கலேயும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.

இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும் 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?

இங்கதான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது,என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.

இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver
பண்ணுவோம். அத பாத்துட்டு ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது
வேணும், அது வேணும்னு புலம்ப ஆரம்பிப்பான்.

அப்புறம்? - அப்பா ஆர்வமானார்.

இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்னு சொல்லுவோம்.

CR- னா?

Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

இதுக்கு அவன் ஒத்துபானா?

ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?

சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?

முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.

அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு.

அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.

அப்போ இவருக்கு என்னதான் வேலை? - அப்பா குழம்பினார்.

நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை.

பாவம்பா

ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.

எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?

ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும்தான் இவரோட வேலை.

நான் உன்னோட அம்மாகிட்ட பண்றது மாதிரி?!

இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.

இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?

வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும்தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.

அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?

இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத
மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.

ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசாத்தான் இருக்கு. சரி, இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?

அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்க்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க

கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?

கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டீமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.

எப்படி?

நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சு நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை. இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்.

சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?

அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.

அப்புறம்?

ப்ராஜக்ட் முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.

அப்புறம்?

அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. இதுக்கு பேரு Maintanence and Support. இந்த வேலை வருஷ கணக்கா போகும். ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/05/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 28 & 29)

எபிசோட் - 28 (03.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ரமேஷும் உமாவும் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்குள் சுமுக பாவனை மறைந்து விட்டது. அதைபார்க்கும் அவள் மாமனார் மாமியார் திகைக்கின்றனர். காரிலிருந்து இறங்கியதும் வீட்டிற்குள் உமாவை செல்லவிடாமல அவள் கணவன் ரமேஷ் அவளை அசோக்குடன் பேசியதற்காக டோஸ் விடுகிறான். அவள் சொன்ன சமாதானங்களை அவன் பொருட்படுத்தவில்லை. அசோக்கை தான் இனிமேல் பார்க்காமலோ, போனில்கூட பேசாமலோ, எப்போதும் கணவனையே நினைத்து கொண்டிருந்தோ இருந்தால் அப்போதாவது தான் அவனுக்கு நல்ல மனைவி என ரமேஷ் நினைப்பானா என உமா கேட்கிறாள்.

அப்படித்தான் ஒரு பெண் இருக்க வேண்டுமா என சோவின் நண்பர் கேட்க, ஒரு விதத்தில் பார்த்தால் குடும்பத்தில் அமைதி நிலவ அப்படித்தான் இருக்க வேண்டும் என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது எனவும், வனவாச சமயத்தில் சீதைக்கும் அனசூயை இதைத்தான் வலியுறுத்துகிறார் எனவும் சோ கூறுகிறார்.

இங்கு உமா, அவ்வாறு தான் நடந்து கொண்டாலும் அதையும் நடிப்பு என்றுதான் ரமேஷ் நினைப்பானா என்றும் கேட்டுவிட்டு உள்ளே சொல்கிறாள். என்ன விஷயம் என தாய் கேட்க, ஒன்றும் இல்லை என சொல்லி விட்டு ரமேஷும் உள்ளே செல்கிறான்.

பாகவதர் வீட்டில் அவர் ஆடியோ நாராயணனிடம் ஏமாந்தது குறித்து அவர் மருமகள் ராஜி அவரை போலீசுக்கு அழைத்து சென்று புகார் கொடுத்ததையும், பிறகு பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுத்ததையும் தன் மனைவியிடம் கூறிய பாகவதர், மருமகளை பாம்பென்று தாண்டுவதா அல்லது பழுதையென கருதுவதா என்பது புரியாமல் இருக்க, அவர்களுக்கு பேசுவதற்கு இணையாக உள்ளே ராஜி தன் கணவனுடன் பேசுகிறாள். தன்னை யாரும் வகைபடுத்திவிட முடியாதபடி நடப்பதை தான் வேண்டுமென்றே செய்வதாக கூறுகிறாள்.

கோவிலில் வைத்து நாதன் அசோக்கை சந்திக்கிறார். அன்று அவனது பிறந்த நாள் என்று அவர் கூற, அதனால் என்ன என அவன் கேட்கிறான். இங்கு இது பற்றி கேள்வி கேட்கும் சோவின் நண்பருக்கு, பிறந்த நாள் கொண்டாடுவது என்பது இப்போதெல்லாம் ரிசுவலாக போனது பற்றி சோ கூறுகிறார். என்ன சாதனையும் இதில் இல்லை என்றும், உண்மை கூறப்போனால் ஒவ்வொரு பிறந்த நாளும் நம்மை மரணத்துக்கு அருகாமைக்கே கொண்டு செல்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

வீட்டுக்கு வந்து அவன் அன்னை அவன் பிறந்த நாளுக்காக தயாரித்துள்ள விருந்து சாப்பிட வேண்டும் என நாதன் கூற, அசோக் வர மறுக்கிறான். தான் பிட்சை எடுத்துத்தான் சாப்பிட வேண்டும் எனவும் கூறுகிறான். அவனுக்காக தான் வாங்கிய வேட்டி உத்தரியத்தை நாதன் அவனுக்கு அளிக்க முற்படுகிறார். அதை அவர் பிறந்த நாள் பரிசாக இல்லாது, ஒரு பிரம்மச்சாரிக்கு தானமாக தந்தால் தான் வாங்கிக் கொள்வதசக அசோக் கூற நாதன் திகைக்கிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 29 (04.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
அசோக் தன் பிள்ளை அவனுக்கு எப்படி தானம் என சொல்ல முடியும் என நாதன் திகைக்க, ஒரு நிமிடத்துக்கு தன் அவர் பிள்ளை என்பதை மறக்கும்படி அசோக் கேட்டுக் கொள்ள அவரும் சம்மதிக்கிறார். அசோக் அவரை வணங்கி விட்டு அவர் தரும் தானத்தை பெறுகிறான்.

அப்பா பிள்ளைக்கு தருவது எப்படி தானமாகும் என கேட்கும் தனது நண்பருக்கு சோ தானத்தின் குணங்கள் பற்றி விளக்குகிறார். ஒரு விதத்தில் அசோக் கூறுவது - அதாவது தந்தை பிள்ளைக்கு தானம் தருவது - சாத்திரப்படி பார்த்தால் சரியில்லைதான் என வைத்து கொண்டாலும், தானம் அளிப்பதற்கான சில கட்டுப்பாடுகள் உண்டு என்றும் அதை தனது அப்பா புரிந்து கொள்ள வேண்டும் என அவன் நினைத்திருக்கலாம் எனவும் சோ கூறுகிறார்.

பாகவதர் ஏமாந்தது பற்றிய செய்தி பேப்பரில் வந்திருப்பதை சமையற்கார மாமி வசுமதிக்கு காட்ட, அப்பக்கம் வரும் நாதனும் அதை ஊர்ஜிதம் செய்கிறார். அச்சமயம் அசோக் உள்ளே நுழைகிறான். அவன் நிஜமாகவே நிரந்தரமாக தங்களுடன் இருப்பதற்காகவே வந்து விட்டான் என எண்ணுகிறாள் வசுமதி. ஆனால் அப்படியில்லை என்றும், ஒரு அநாதை ஆசிரமத்துக்காக தான் பழந்துணிகள் கலெக்ட் செய்வதாகவும், அது சம்பந்தமாகவே இங்கும் வந்ததாகவும் அவன் கூறுகிறான்.

வேண்டாவெறுப்பாக அவனிடம் ஒரே ஒரு புடவையை சமையற்கார மாமி மூலமாக கொடுத்தனுப்புகிறாள் வசுமதி. அதை எடுத்துக் கொண்டு கிளம்பும் அவனிடம் சிங்காரம் தானும் துணி தானம் செய்யலாமா என கேட்க, தாராளமாக செய்யலாம் என அசோக்கும் பதிலளிக்கிறான். தன்னிடம் இரண்டு செட் துணிகளை மட்டும் வைத்து கொண்டு மீதியை தானமாக அளிப்பதாக அவன் கூறுகிறான்.

வீட்டை விட்டு வெளியே வரும் வழியில் பாகவதர் உள்ளே வருகிறார். அவர் ஏமாந்த விவரத்தை சிங்காரம் கூற, பாகவதர் வாக்கு தவறியது மிகப்பெரிய குற்றம் என அசோக் மிருதுவாக ஆனால் உறுதியாக அவரிடம் கூறுகிறான். அவரும் பதில் பேச்சு பேசாது ஒத்து கொள்கிறார். தனக்கென சிறிதளவே வைத்து கொண்டு தானம் செய்யும் சிங்காரம் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என இருப்பதற்கு சிறந்த உதாரணம் என்றும் அசோக் குறிப்பிடுகிறான். பிறகு பாகவதரிடம் விடைபெற்று செல்கிறான்.

அசோக் சொல்வது கேட்கத்தான் நன்றாக இருக்கும் என்றும், இது உண்மையிலேயே சாத்தியமா என சோவின் நண்பர் கேட்க, அது சிரமம்தான் என சோ ஒத்து கொள்கிறார். ஆனால் அதுதான் தேவை என்றும் அவர் கூறுகிறார். ஆசைகளில் மட்டுமல்ல எண்ணங்களுக்கும் ஒரு கணக்கு வேண்டும் எனவும் அதை மீறலாகாது என மகாசுவாமிகள் கூறியிருப்பதையும் அவர் கூறுகிறார்.

உள்ளே வரும் பாகவதரிடம் நாதன் அசோக் பேசியது அதிகப்பிரசங்கம் எனக் கூற, பாகவதர் அவரை மறுத்து அசோக் கூறுவது 100 சதவிகிதம் உண்மை எனவும் தான் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் எனவும் கூறி கலங்குகிறார். போலீசுக்கு போனதில் தன் மானம் சந்தி சிரித்ததுதான் மிச்சம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அசோக் ஓரிடத்தில் அலைந்து கொண்டிருக்க அவன் தீவிரவாதியாக இருப்பானோ என சந்தேகிக்கும் ஒரு போலீஸ்காரர் அவனை விசாரிக்க துவங்குகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 26 & 27)

எபிசோட் - 26 (01.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
முதல் சுட்டி லேட்டாக ஆரம்பிக்கிறது, சில நிமிடங்கள் கழித்து.

நாதன் அலுவலகத்தில் பிரியா, அவளது சீனியர் வக்கீல் அனந்த ராமன், நாதன் ஆகியோரது பேச்சு அசோக்கைப் பற்றி தொடர்கிறது. பிரியா அசோக்கை சிலாகிக்க நாதன் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவள் சிறுபெண், இதில் உள்ள சங்கடங்கள் புரியாது என அவள் வாயை அடக்கி விடுகிறார். பிறகு அவர் கம்பெனி கேஸ் விஷயமாக வக்கீலுடன் பேசுகிறார்.

அவர் கேஸ் வரும் தினம் நல்ல நாள், ஆகவே வெற்றி நிச்சயம் என்றும் அந்த நாள் பற்றி தன் மாமனாரும் அவ்வாறே கூறுவதாகவும் பிரியா கூறுகிறாள். யார் அவள் மாமனார் என நாதன் கேட்க, அவர் வீட்டில் பூஜைக்கு வரும் சாம்பு சாஸ்திரிகள்தான் அவர் எனக்கூற, பிரியாவின் தந்தையை போலவே அவள் மாமனாரும் நல்ல மனிதர் என நாதன் மனம் மகிழ்கிறார்.

பாகவதரை கோவிலில் ஆடியோ நாராயணன் என்பவர் சந்தித்து அதிக ராயல்டி அவரது ஆடியோ கேசட்டுகளுக்கு தருவதாக ஆசை காட்டி அவர் மனதை மாற்றி விடுகிறார். முதன் முறையாக என் மனதை சங்கடம் செய்த காட்சி இத்தொடரில் இதுதான். இது பற்றி மேலே பேச இஷ்டம் இல்லை. நீலகண்டனிடம் பாகவதர் காண்ட்ராக்டில் கையெழுத்திட மறுத்து விட்டார் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

கோவிலில் பர்வதமும் வசுமதியும் சந்தித்து பேசுகின்றன்றனர். அசோக் பற்றி பேசி வருத்தப்படுகிறாள் வசுமதி. உமாவின் குழந்தைக்கு புண்யாதானம் வைத்திருப்பதாகவும் அதற்கு வசுவும் நாதனும் வரவேண்டும் எனவும் பர்வதம் கேட்டு கொள்கிறாள். அசோக் தனி மரமாக நின்று தனது பரிசோதனையில் ஈடுபடுவது பற்றி நினைத்து வசுமதியின் மனம் பாதிக்கப்படுகிறது.

இங்கு நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து கிளம்பும் சமயம் பார்த்து வசுமதி வீட்டில் இல்லை. சமையற்கார மாமி சாம்புவிடம் அவரது மகள் ஆர்த்திக்கு குருபலன் வந்து விட்டதால் அவளுக்கு கல்யாண வேளை வந்து விட்டது எனக் கூறுகிறாள்.

அதென்ன குரு பலன் என சோவின் நண்பர் கேட்க, அவர் அது சம்பந்தமாக சோதிட விளக்கம் தருகிறார். எனக்கு புரியாததால் நான் எஸ்ஸாகிறேன். சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் க்ளிப்பிங்கை பார்த்து தத்தம் வலைப்பூவில் எழுதினால் இன்னும் ஆதண்டிக்காக இருக்கும் என போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறேன்.

தனது உறவினர் ஒருவருக்காக சாம்புவின் மகள் ஆர்த்தியை மணம் முடிக்க சமையற்கார மாமி தனது எண்ணத்தை வெளியிடுகிறாள். இதற்குள் வசுவிடமிருந்து போன் வருகிறது. சாம்பு சாஸ்திரிகள் இன்னும் அங்கே இருக்கிறாரா என கேள்வி எழும்ப, சமையற்கார மாமி அவர் எப்போதோ கிளம்பிப் போய் விட்டார் என அனாவசியமாக ஒரு பொய்யை உதிர்த்து விடுகிறாள். தேவையின்றி ஏன் பொய்யுரைக்க வேண்டும் என சாம்பு அவளை கோபிக்கிறார். முதலில் ஆர்த்தியின் ஜாதகத்தை கையில் எடுத்த பிறகுதான் மற்றதெல்லாம் என்று வேறு அவளிடம் விட்டேற்றியாக கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.

திருவள்ளுவரே பொய் சொல்லலாம் எனச்சொல்லவில்லையா என சோவின் நண்பர் கேட்க, வழக்கம்போல திருவள்ளுவரை இங்கு பலரும் தவறுதலாக புரிந்து கொண்டார்கள் என சோ அவரை கலாய்க்க்கிறார்.

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்” என்று சொன்ன திருவள்ளுவர்

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”

என்றும் கூறியதற்கு உதாரணமாக சோ அவர்கள் ராமாயணத்திலிருந்து ராமரே இரண்டு இடங்களில் பொய்யுரைத்ததை எடுத்து காட்டுகிறார். அவர் வனத்துக்கு தேரில் செல்லும்போது தேரை நிறுத்துமாறு தசரதர் கூவிக்கொண்டே பின்னால் வர, தேரோட்டி சுமந்திரனிடம் காதில் கேட்காதது போல மேலே செல்ல பணிக்கிறார் ராமர்.

வனத்தில் தன்னைப் பார்க்க வரும் பரதனிடம் கைகேயியை திருமணம் செய்து கொள்ளும்போது அவளுக்கு பிறக்கும் மகனுக்கே பட்டம் என தந்தை வாக்களித்ததாக பொய்யுரைக்கிறார் ராமர்.

இரு இடங்களிலும் தன்னை வனத்துக்கு அனுப்பி, பரதனை அரசனாக்கிய தந்தையின் கட்டளை பங்கப்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே உன்னத காரணத்துக்காகவே அவர் அவ்வாறு செய்த்கார் என்பதையும் சோ தெளிவுபடுத்துகிறார்.

(தேடுவோம்)

எபிசோட் - 27 (02.02.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரியின் மனைவி செல்லம்மாவும் மகள் ஆர்த்தியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழமையான குடும்ப பிரச்சினைகள் குறித்து பேச்சு செல்கிறது. சிறு பெண்ணுக்குரிய அத்தனை ஆசைகளும் அடங்கிய ஆர்த்திக்கு கழுத்து மட்டும் குறை அவை நிறைவேறவில்லை என்று. பேச்சு வேம்புவின் மகள் ஜயந்தி பற்றியும் திரும்புகிறது. கிருபாவின் குழந்தையும் பேச்சில் அடிபடுகிறது.

நீலகண்டன் நடேச முதலிய்யரை பார்த்து பாகவதர் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிய விவரம் கூற, அவர் வருத்தமும் கோபமும் அடைந்து பேசுகிறார். பாகவதருக்கு அதிக ராயல்டி கொடுப்பதாக ஆசை காட்டிய பார்ட்டியோ அவருக்கு முழுசாக பட்டை நாமம் போட்டு விட்டு எஸ்ஸாகிறான். அவருக்கு அதில் அதிர்ச்சி. அவரது முதல் மகன் சிவராமன், மருமகள் ராஜி, மனைவி மட்டும் இரண்டாம் மகன் மணி ஆகியோர் அவரை ஏமாந்ததற்காக சாடுகின்றனர். அவரும் புத்தி வந்து எல்லாவற்றையும் ஏற்று கொள்கிறார். அவரது மருமகள் அவரை அழைத்து கொண்டு போலீசுக்கு போகப்போவதாகக் கூறுகிறாள்.

அசோக் கடற்கரையில் கடலை நோக்கி நின்று கொண்டிருக்க, அங்கு வந்த ரமேஷும் உமாவும் அவனை பார்க்கின்றனர். உமா அவனுடன் பேசுவதற்காக வருகிறாள். குழந்தை கிரகணம் தாண்டி பிறந்தது தாங்கள் பகவானுக்கு பிரார்த்தனை செய்து கொண்டதாலேயே என அசோக் கூற, அப்படி செய்திராவிட்டால் அது கிரகணத்தின் போது பிறந்திருக்குமா என உமா கேட்கிறாள். பிரபஞ்சத்தில் லயம் ஒத்திசைவில் இருக்க எல்லாமே முன்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டவை என அசோக் பதிலளிக்கிறான். மேலும் பிரார்த்தனையின் உண்மையான பொருளே ஆண்டவன் செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதுதான் எனவும் அவன் சுட்டிக் காட்டுகிறான்.

குழந்தை பிறந்த வேளை அவள் கணவன் ரமேஷுக்கு கிடைக்க வேண்டிய வேலை உயர்வு கிடைக்காததால் அக்குழந்தை ராசியில்லாதவள் என அவன் கூறுவதாக உமா கூறி வருந்துகிறாள். ஒரு ராசியில்லாத தகப்பனுக்கு பிறந்ததற்காக அக்குழந்தை வருந்தினால் ரமேஷ் என்ன சொல்வான் என அசோக் திரும்பக் கேட்கிறான்.

அப்படியெல்லாம் குழந்தையின் ராசி தகப்பனை பாதிக்குமா என சோவின் நண்பர் கேட்க, அவர் ஒருவனது கெட்ட காலம் ஆரம்பித்தால் அதை குறிக்கும் வண்ணமாக அப்போது பிறக்கும் குழந்தையின் ஜாதகம் அமையலாம். ஆகவே அது ஒரு குறிப்பே, அவனது கெட்ட காலத்துக்கு காரணம் இல்லை என பதிலளிகிறார்.

பிரார்த்தனை செய்யாமல் இருந்திருந்தால் குழந்தை கிரகணத்தின் போது பிறந்திருக்குமா என உமா கேட்டதை நண்பரும் கேட்கிறார். கிரகணத்தின் போது குழந்தை பிறந்தால் பிரச்சினை இல்லை, அந்த நேரத்தில் கருவுறுதல் மட்டும் வேண்டாம் என தான் ஏற்கனவே கூறியதை திரும்பவும் சொல்கிறார் சோ அவர்கள். பிறகு, அவ்வாறு குழந்தை பிறக்க வேண்டுமென்றிருந்தால் பிரார்த்தனையே செய்து கொண்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

பிராமணனாக அசோக் மாறுகிறானா என உமா கேட்க, அவன் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன எனக் கூறுகிறான். எப்போது அங்கீகாரம் கிடைக்கும் எனக் கேட்க, பெர்ஃபக்‌ஷன் வரும்போது என்கிறான். எப்போது பெர்ஃபக்ஷன் வரும் என விடாது உமா கேட்க, அது ஆன்கோயிங் செயல்பாடு, முடிவே கிடையாது என்கிறான். இவ்வாறாக இருக்கும் அவனை தான் ஒரு காலத்தில் தன் தளத்துக்கு இழுக்க முயற்சி செய்தது குறித்து குற்றவுணர்ச்சியுடன் இருப்பதாக அவள் கூற, தானும் அவளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக் கொண்டதாக அவன் கூறுகிறான்.

அவனிடமிருந்து விடை பெற்று கணவனிடம் செல்லும்போது ரமேஷ் ஏற்கனவே காருக்கு போயிருக்கிறான். அங்கு சென்று அவனுடன் வாக்குவாதம் நடக்கிறது. அவனுக்கு அசோக்கை பிடிக்கவில்லை. உமா குழப்பத்தில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது