4/11/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 48, 49 & 50

பகுதி - 48 (08.04.2009):
பாகவதர் நாதன் வீட்டிலிருந்து விலகி செல்கிறார். இப்போது நாதன் தனது அபரித கோபத்தை நீலகண்டன் மேல் காட்டுகிறார். பாகவதரை யாரென்று நினைத்தாய், அவர் எனக்குக் குரு, தகப்பன் போன்றவர் என்றெல்லாம் அவர் உரத்த குரலில் கூற, நீலகண்டன் திக்குமுக்காடி போகிறார். தான் அசோக்கின் நன்மையை உத்தேசித்து மட்டும் அம்மாதிரி பாகவதரை கடுமையாக சாடியதாக கூறுகிறார். ஆனால் நாதன் அதை ஒத்துக் கொள்ளத் தயாராக இல்லை. நீலகண்டனை தனது தம்பி போல நினைத்ததாகவும், இப்போது அவர் தனது மனத்திலிருந்து விலகி விட்டதாகவும், ஆகவே let us part as friends எனக் கூறிவிடுகிறார்.

வசுமதி மிகவும் பாடுபட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்துகிறாள். கடைசியில் ஒரு மாதிரி யுத்த நிறுத்தம் வருகிறது. இனிமேல் பாகவதரை அம்மாதிரி பேசக்கூடாது என்று எச்சரிக்கிறார் நாதன்.

நீலகண்டன் வீட்டில் மேலே நடந்தவை பற்றி காரசார விவாதம் நடக்கிறது. அவரது மகன் நாதன் தன் தந்தையை அவமானப்படுத்தியதை சீரணிக்க முடியாமல் வார்த்தைகளை விடுகிறான். நீலகண்டன் தனது தவற்றை உணர்ந்ததாலேயே நாதனிடம் சரண்டர் ஆனதாகக் கூறுகிறார். அதே மூச்சில் தன்னை நாதன் திட்டியதையும் எண்ணி குமைகிறார். இனிமேல் நாதன் வீட்டுப் பக்கமே போகப்போவதில்லை என சூள் உரைக்கிறார். ஒரேயடியாகப் போய் விழவும் வேண்டாம், இப்படி ஒட்டு மொத்தமாக கத்தரிக்கவும் வேண்டாம், இது என்ன வச்சாக் குடுமி சரச்சா மொட்டைன்னு இருக்கிறது என பர்வதம் நொடிக்கிறாள். எது எப்படியானாலும் தானும் அசோக்கும் நட்பாக இருப்பதாகவும் பெரியவர்களது மனவேற்றுமை தங்களை பாதிக்காது என்ற ரேஞ்சில் உமா பேச, பர்வதம் விழிக்கிறாள்.

வேம்பு சாஸ்திரி வீட்டுக்கு ஒரு என்.ஆர்.ஐ. பெண்மணி வந்து அமெரிக்காவில் ஒரு புரோகிதர் தேவையென்றும் நல்ல சம்பளம், இருக்க வீடு, கார் வசதி எல்லாம் தனியென்றும், அதற்கு சாம்பு சாஸ்திரியை ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு போகிறார். வேம்புவின் மனைவிக்கு தன் கணவரே அந்த வேலையை எடுத்து கொள்ளலாமே என நப்பாசை. ஆனால் அதற்கெல்லாம் வேம்பு இடம் தராது சாம்பு வீட்டிற்கு சென்று அவரிடம் விஷயத்தை கூறுகிறார். சாம்பு அதை மனப்பூர்வமாக வரவேற்க, அவர் மனைவிக்கோ ஒரே அதிர்ச்சி. “நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள்” என அவர் அதிர்ச்சி அடைய, அவரோ என்ன செய்வது ஊரைச்சுற்றிக் கடன். அமெரிக்கா போனால் அதெல்லாம் தீருமல்லவா என நியாயப்படுத்துகிறார்.

இப்போது சோ அவர்கள் சீனுக்கு வருகிறார். நியாயமாக நடந்து வாழ்பவர்களுக்கு இந்தக் கடன் தொல்லை சர்வ சாதாரணமாக இருக்கும் எனக்கூறி, பாரதியாரின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார். தனக்கு ஊரெல்லாம் கடன், வாழ்க்கையை நிம்மதியாக நடத்தயியலவில்லை. பிறகு எப்படி கவிதையெல்லாம் எழுதுவது என்றெல்லாம் புலம்பி, பராசக்தி தனக்கு உதவி செய்யாவிடில் தான் நாத்திகனாக மாறிவிடப்போவதாக அவர் உரிமையுடன் அன்னை சக்தியையே மிரட்டுகிறார் பாரதியார்.

மீண்டு காட்சி சாம்பு வீட்டிற்கு செல்கிறது. சாம்புவின் மனைவி செல்லம்மாள், இத்தனை நாள் கட்டிக் காத்த சாம்புவின் நல்ல பெயர் இந்த ஒரு செயலால் பாதிக்கப்படும் என அஞ்சுகிறார். தனக்கு ஆதர்ச வாழ்க்கை வாழும் சாம்புதான் பிரியம் என சுட்டிக் காட்டுகிறாள். சாம்பு இப்போது தன் மனைவியிடம் தனக்கும் அதே கருத்துத்தான் என்றும், அவளுடைய கருத்தை அறியவே அவ்வாறு பேசியதாகவும் கூறுகிறார். விவேகானந்தர் வெளிநாட்டுக்கு போனது இந்து மதத்தைப் பரப்ப, ஆனால் தான் போனால் அது தன் வசதியைப் பெருக்கிக் கொள்ள மட்டுமே எனக் கூறுகிறார். பிறகு வேம்புவிடம் தான் வரவியலாது என்பதைக் கூறுகிறார். வேம்பு தன் பங்குக்கு தானும் சாம்புவிடமிருந்து இப்பதிலையே எதிர்ப்பார்த்ததாகவும், சாம்பு நிஜமாகவே மாமனிதர் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். பார்ப்பனர் கடல் கடப்பதற்கில்லை எனவும் சாம்பு கூறுகிறார்.

பார்ப்பனர் கடல் கடக்கக்கூடாதா என்று சோவின் நண்பர் வியப்புடன் கேட்க, உண்மை சொல்ல வேண்டும் என்றால் அது ஆமாம் என்கிறார் சோ. அதற்கான காரணங்களையும் விளக்குகிறார். பார்ப்பனருக்கென விதிக்கப்பட்ட கர்மாக்கள் நிலத்தின் மேல்தான் செய்ய வேண்டும், அதுவும் பாரத வர்ஷத்தில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இன்னும் பலரால் பாவிக்கப்படுகின்றன. அந்தப் பலரில் சாம்புவும் ஒருவர். மற்றப்படி பெயரளவில் மட்டுமே பார்ப்பனராக இருப்பவர்கள் (தன்னையும் இதில் சேர்க்கிறார் சோ) இம்மாதிரி கட்டுப்பாடுகளை பாவிப்பதில்லை எனவும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் நீலகண்டன் மனைவி பர்வதம், மற்றும் சமையற்கார மாமி இருக்கிறார்கள். வசுமதி வெளியே போயிருக்கிறாள். அசோக் அங்கு வர, பர்வதம் நாதன் வீட்டில் தன் கணவருக்கும் பாகவதருக்கும் இடையில் நடந்த வாக்குவாதங்களைப் பற்றிக் கூற, அதனால்தான் சில நாட்களாக பாகவதர் வரவில்லையா என திகைக்கிறான் அசோக்.

பகுதி - 49 (09.04.2009):
பாகவதர் பற்றி நீலகண்டன் ஏன் தப்பாகப் பேச வேண்டும் என அசோக் திகைக்கிறான். பர்வதத்தின் எதிரிலேயே பாகவதர் நம்பருக்கு ஃபோன் போட்டு அவரிடம் நடந்ததது என்னவென கேட்க, பாகவதரும் கூறுகிறார். அவர் பெரிய மனது பண்ணி வீட்டுக்கு வர வேண்டும் என கேட்டு கொள்கிறான். பர்வதத்துக்கு திகைப்பு. தங்கள் இருகுடும்பத்தினருக்கிடையே இருக்கக் கூடிய நல்லுறவை விட பாகவதர் முக்கியமா எனக் கேட்கிறாள். பாகவதர் நாதனை பணம் காய்ச்சி மரமாகத்தான் பார்க்கிறார் எனவும் குற்றம் சாட்டுகிறாள். அசோக்குக்காகத்தான் தன் கணவர் பாகவதருடன் சண்டை போட்டதாகவும் ஆகவே நடந்தவை எல்லாவற்றுக்கும் அசோக்தான் காரணம் எனக்கூறிவிட்டு கோபத்துடன் அப்பால் செல்கிறாள். நாதனிடம் அசோக் வந்து எப்படியாவது பாகவதரை வீட்டுக்கு வரவழைக்க வேண்டும் என அவரிடம் கூறுகிறான்.

அரசியல்வாதி வையாபுரி தான் ஓட்டிய காரில் ஒரு வயதானவர் அடிப்பட்டு மரணிக்க, போலீசிடம் தனது கையாள் சிங்காரத்தை சரணடையச் செய்கிறார். அவனும் அதை மனமின்றி செய்கிறான்.

உமாவும் அசோக்கும் பேசுகின்றனர். தனது அன்னை சார்பில் உமா அசோக்கிடம் மன்னிப்பு கேட்க, அதையெல்லாம் அவள் இன்னமும் நினைத்து மனம் குழம்ப வேண்டாம் என அசோக் கூறுகிறான். இதை விளக்க ஒரு குருவின் கதையையும் கூறுகிறான். ஆற்றைக் கடக்க உதவி செய்யும் நோக்கத்தோடு ஒரு இளம்பெண்ணை அந்த குரு தன் தோளில் சுமந்து சென்று அக்கரையில் விட்டுவிட்டு மேலே செல்கிறார். அதை பற்றி நெடுநேரம் சீடர்கள் விவாதிக்க, தான் அப்பெண்ணை எப்போதோ இறக்கி வைத்தாகி விட்டது, அவர்கள் மட்டும் ஏன் அவளை இன்னும் தம் மனதில் சுமக்க வேண்டுமென கேட்கிறார். எல்லாமே தன்னால்தான் என உமா கூறுகிறாள். ராமகிருஷ்ணர் சம்பவம் பற்றி தான் கூறவே இவ்வாறு ஆகிவிட்டது என்கிறாள். இவற்றையெல்லாம் வேறுவிதமாக பார்க்குமாறு அசோக் கூறுகிறான். பாகவதரை நீலகண்டன் சாடியது, பாகவதர் வருத்தப்பட்டது, பர்வதம் மாமி தன்னுடன் பேசியது ஆகிய எல்லா விஷயங்களிலிருந்தும் பல பாடம் கற்று கொள்ளலாம். இவ்வாழ்வே ஒரு மாயை என்பது புரியும் எனக் கூறுகிறான்.

அப்படியென்றால் எல்லாமே பொய்யா என நண்பர் கேட்க, சோ அப்படி இல்லை எனக் கூறுகிறார். மாயை என்பதை பல உதாரணங்களுடன் விளக்குகிறார். இருட்டில் ஒரு கயிற்றைப் பார்க்கிறோம், அது பாம்பு என ஒரு நிமிடத்துக்கு மனம் மயங்குகிறது. கிளிஞ்சல் சூரிய வெளிச்சத்தில் வெள்ளியாக தோற்றமளித்து அருகில் சென்று பார்க்கையில் அது கிளிஞ்சல்தான் எனத் தெளிகிறோம். பல விஷயங்கள் உண்மையும் அல்ல, பொய்யும் அல்ல, அவை மித்யை என்கிறார் சோ அவர்கள்.

[இங்கு டோண்டு ராகவன் தரப்பில் சில வார்த்தைகள். நம் வாழ்வின் பலகட்டங்களில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளோம். பல பிரச்சினைகள் அவை வந்தபோது மிகப் பெரியதாகத் தென்பட்டன. இப்போது பல ஆண்டுகள் கழித்து அப்பிரச்சினைகளை முந்தையச் சுற்றுச் சூழலுடன் சேர்த்து பார்க்கையில் அவை அவ்வளவு பிரம்மாண்டமாகத் தோன்றுவதில்லை என்பதே நிஜம். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. காலம் ஆக ஆக பின்னோக்கிப் பார்க்கும்போது அப்போதெல்லாம் வாழ்க்கை ரொம்ப நிதானமாகப் போனது போல சில சமயம் தோன்றும். காரணம் என்னவென்றால், அப்போது நடந்த விஷயங்கள் நமக்கு இப்போது புதுமையாக ஒன்றும் கூறுவதில்லை. அவை எவ்வாறு டெவலப் ஆயின என்பது நமக்கு முழுதும் தெரிந்து விடுகிறது].

உமா அசோக் பேச்சு தொடர்கிறது. தன்னை வைத்து பலவிஷயங்கள் நடக்கின்றன, ஆனாலும் ஒவ்வொருவரும் அவற்றை ஒவ்வொரு விதமாகத்தான் பார்க்கின்றனர் என அசோக் கூறுகிறான். உண்மையைப் பார்க்க விடாமல் நமது ஐம்புலன்களே தடுக்கின்றன என உமா கூறுவதை அசோக்கும் ஆமோதித்து மேலும் விளக்கங்கள் தருகிறான்.

பகுதி - 50 (10.04.2009):
அசோக் தோட்டத்தில் உட்கார்ந்து படித்து கொண்டிருக்கிறான். அங்கு செடிகளுக்கு நீர்பாய்ச்சும் வேலையாக இருக்கும் சமையற்கார மாமி அவனிடம் அவன் என்ன படிக்கிறான் என கேட்கிறாள். ரமண மகரிஷியின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றி படிப்பதாக அசோக் கூறுகிறான். அவர் ஆஸ்ரமத்துக்கு புலி சிங்கங்கள் எல்லாம் வருவதையும், அவை சித்த புருஷர்கள் என ரமண மகரிஷி கூறியதாகவும் அசோக் கூறுகிறான். இதே போல விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்தபோது அவரருகில் புலி ஒன்று வந்ததையும், அவர் தனக்குள் இருக்கும் இறைவனே புலிக்குள்ளும் இருப்பதாகவும், ஆகவே எது நடந்தாலும் அது கடவுள் சித்தமே என தெளிந்து தியானத்தில் ஆழ்ந்து அரை மணி நேரம் கழித்து கண்விழித்து பார்க்கையில் புலி காணாமல் போனதையும் கூறுகிறான். இதையெல்லாம் யார் நேரே பார்த்தது என அசிரத்தையாக பேசிய மாமி திடீரென உறைந்து போகிறாள். ஏனெனில் சரசரவென்று வந்த நாகம் ஒன்று அசோக் மேலே ஏறி படம் எடுத்து நிற்கிறது. கைகால் உதற மாமி உள்ளே ஓடி நாதனையும் வசுமதியையும் அழைத்து வர, வந்து பார்த்தால் பாம்பு இல்லை. அசோக்கோ பாம்பு வந்ததா என ஆச்சரியமாகக் கேட்கிறான்.

பாகவதர் வீட்டில் நீலகண்டனுக்கும் பாகவதருக்கும் நடந்த வாக்குவாதம் பற்றி பேசுகிறார்கள். அவர் மனைவி ஜானகி ஆறுதல் சொல்கிறாள். இனிமேலும் நாதன் வீட்டிற்கு போய் தன் மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் என ஆலோசனை கூறுகிறாள். அவர் பையனும் அதை ஆமோதிக்கிறான். அப்போது நாதனிடமிருந்து கூரியர் வருகிறது. அசோக்கிடம் பாம்பு வந்த விஷயம் அதில் கூறப்பட்டுள்ளது. இம்மாதிரி அனுபவங்களெல்லாம் உயர்தர ரிஷிகள் போன்ற சித்தபுருஷர்களுக்குத்தான் நடக்கும் என பாகவதர் கூறுகிறார். அப்படியென்றால் பாம்பாட்டிகளெல்லாம் சித்த புருஷர்களா என அவர் மகன் இடக்காக கேள்வி கேட்க, பாம்பாட்டிகள் பாம்பின் பல்லைப் பிடுங்கி விட்டே அதனுடன் நட்பு பாராட்டுகின்றனர். ஆனால் அசோக் விஷயத்தில் பாம்புக்கு பல் இருந்திருக்கிறது என பாகவதர் கூறுகிறார். இப்படியே போனால் அசோக் சன்னியாசியாகி விடுவானோ என அவர் மனைவி அச்சப்பட, காவி மாட்டிண்டாத்தான் சந்நியாசியா என பாகவதர் கேட்கிறார். “அப்போ காவிமாட்டிண்டவா எல்லோருமே சன்னியாசி இல்லையா” என பையன் கேட்கிறான்.

பையன் நல்லா கேள்வி கேட்டதாக சோவின் நண்பர் கூறுகிறார். அதுவும் இந்த காலத்தில் அறிவை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்றும் நண்பர் கூற, இம்மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்க அறிவு ஒன்றும் தேவையில்லை என சோ கூறுகிறார். இம்மாதிரியான கேள்விகள் மிகப்பழையவை. ஆதி சங்கரரே வெறுமனே மழித்தலோ நீட்டலோ செய்து காவி உடுத்துபவர்களை கேலி செய்கிறார். நாத்திக வாதம் என்றாலும் அதுவும் ஆதிகாலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.

பாகவதர் தன் பையனிடம் சுவாமி விவேகானந்தர் நிஜமாக சன்னியாசம் வாங்கிய கதையை கூறுகிறார். ஒரு அரசவையில் அவருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட, அதில் பாட ஒரு தாசியைக் கூப்பிட்டிருந்தார்கள். தாசி வந்ததால் இவர் தன் அறையிலேயே தங்கிவிட, அந்த தாசி அதையறிந்து மனம் வருந்தி நரசி மேத்தாவின் பாடல் ஒன்றை பாடுகிறாள்.

வெறுமனே அழுதால் செய்த பாவம் மறையுமா என சோவின் நண்பர் கேட்க, கண்டிப்பாக அழியும் என்கிறார் சோ அவகள். ஒரு சன்னியாசியும் ஒரு தாசியும் ஒரே ஊரில் வசித்து வந்தனர். சன்னியாசி தாசியின் நடத்தையை மானிட்டர் செய்ய, தாசியோ இந்த சன்னியாசி மாதிரி தான் கடவுள் பக்தியுடன் இல்லையென விசனிக்கிறாள். இருவருமே இறந்த பிறகு, தாசி சொர்க்கம் செல்ல, சன்னியாசி நரகம் செல்கிறார். அவரவர் மனத்தால் வாழ்ந்த வாழ்க்கையே சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போவதை நிர்ணையிக்கிறது என சன்னியாசிக்கு உணர்த்தப்படுகிறது.

தாசியின் பாடலைக் கேட்டு மனம் மாறிய விவேகானந்தர் அவளை வந்து ஆசீர்வதித்திருக்கிறார். அப்போதுதான் தான் உண்மையான சன்னியாசியானதாக அவர் எழுதியுள்ளார், எனக் கூறுகிறார் பாகவதர்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/09/2009

டோண்டு பதில்கள் - 09.04.2009

கிருஷ்ணன்:
1. டோண்டு சார் தங்கள் கணிப்பில் திமுக கூட்டணி எவ்வளவு சீட்ஸ்? அதிமுக கூட்டணி எவ்வளவு சீட்ஸ் வெற்றி பெறும்?
பதில்: அதெல்லாம் சொல்ல முடிந்தால் நான் இங்கேயா உட்கார்ந்திருப்பேன். 5-ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் போட்டு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து வாடிக்கையாளர்களை வரச் செய்து, மூன்று கேள்விகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி வெற்றிகரமான ஜோசியனாகியிருப்பேனே. சரி, கேட்டு விட்டீர்கள், ஏதோ என்னால் குன்ஸாக சொல்ல முடிந்தது, திமுக கூட்டணி 8 அதிமுக கூட்டணி 32.

2. இஸ்ரேல் பற்றி தெரிந்துகொள்ள நல்ல புத்தகங்கள்?
பதில்: இஸ்ரேல் உருவாவதை ஒரு காவியமாக வடித்தவர் லியோன் ஊரிஸ் என்னும் யூத எழுத்தாளர், அவரது எக்ஸோடஸ் என்னும் நாவலில். இஸ்ரேல் பற்றி நன்கு அறிய அதன் நையாண்டி எழுத்தாளர் எஃப்ரைம் கிஷோனின் சாட்டயர் புத்தகங்கள் படிக்கலாம். நான் அவரது பல புத்தகங்களை அவற்றின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பில் படித்துள்ளேன். சும்மா சொல்லப்படாது மொழிபெயர்ப்பாளர் ஃப்ரீட்ரிட்ச் தோர்பெர்க் பின்னிப் பெடலெடுத்து விட்டார்.
இந்த தளத்துக்கு போனால் பல புத்தகங்கள் பற்றி விவரங்கள் அறியலாம்.


அனானி (03.04.2009 பிற்பகல் 4.01-க்கு கேட்டது):
1. ஏழை பார்ப்பனர்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் இல்லையா?
பதில்: வெறுமனே ஏழைகள் என்று இருந்தால் கண்டிப்பாக வரவேற்பேன். அதில் என்ன பிராமணர் எனத் தனியாக ஒரு ஒதுக்கல்? கூடாது.

2. உங்கள் நண்பர் லக்கிலுக்கும் பார்ப்பனர் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டதே? அவர் ஏன் பார்ப்பனர்களை வசைபாடுகிறார்?
பதில்: சும்மா கோவி கண்ணனும் லக்கியும் ஒருவரையொருவர் வடகலை மற்றும் தென்கலை ஐயங்கார்கள் என தமாஷுக்கு கலாய்த்ததை இப்படியா சீரியசாக எடுத்து கொள்வது? லக்கியின் சாதி நான் கேட்டதில்லை, அறியவும் ஆசையில்லை. ஆனால் அதே சமயம் பார்ப்பனர் இல்லை என்பது நிச்சயமாகவே தெரியும்.

3. எதிர்காலத்தில் பார்ப்பனர்கள் பூணூலை துறப்பார்களா?
பதில்: மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

4. பார்ப்பனர்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கவில்லை.
பதில்: பிறாமணானாம் அனேகத்வம், அதாவது பார்ப்பனர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது.

5. நீங்கள் இந்த முறை யாருக்கு ஓட்டு போடும் எண்ணம். பாஜகவுக்கா?
பதில்: எங்கள் தொகுதியில் பாஜக நின்றால் அதற்குத்தான் எனது வோட்டு. இல்லாவிட்டால் அதிமுக.

5. போலி டோண்டு செத்துவிட்டானா?
பதில்: போலி டோண்டுவுக்கு குடும்பம் என்று உண்டு. அதுவும் அவன் குடும்பத்தினர் பட்ட மன உளைச்சலுக்கு பிறகு அவன் திருந்தியிருப்பான் என்றுதான் படுகிறது.

6. உண்மைதமிழனுக்கு மிரட்டல் வந்ததே. அது போலியிடம் இருந்து வந்திருக்கலாம் இல்லையா?
பதில்: செயல்வகை எனப் பார்த்தால் அவன் வேலை மாதிரித்தான் இருக்கிறது. இருப்பினும் அவன் அதற்கு துணிவானா என்பதுவும் கேள்விக்குறியே. வேறு யாராவது காப்பியடித்து செயல்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு.

7. சூடான இடுகைகளில் உங்கள் பதிவுகள் வராததால் ஹிட்ஸ் குறைந்திருக்கிறதா?
பதில்: அது இருக்கட்டும், அதனால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இம்மாதிரி ஆர்பிட்ரரியாக தமிழ்மணம் செயல்படுவது குழந்தைத்தனமாக உள்ளது.

8. நீங்கள், கோவி, செந்தழல், லக்கி ஆகியோரை நீக்கியபிறகு சூடான இடுகைகள் தரம் உயர்ந்துவிட்டதா?
பதில்: நாங்கள் நால்வரும் நீக்கப்பட்டதற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்ப்புகளே காரணம். வேறு ஒன்றும் இல்லை.

9. உங்களுக்கு நமீதாவை பிடிக்குமா. நயனதாராவை பிடிக்குமா. நமீதா இட்லி சாப்பிட்டிருக்கிறீர்களா?
பதில்: ரெண்டு பேருமே சேர்ந்து வந்து நண்பர்களாக இருப்போம் என்றால் வேண்டாம் என்றா கூறப்போகிறேன்? குஷ்பூ இட்டலி சாப்பிட்டிருக்கிறேன். அதற்கு ஜெனரிக் பெயர் செட்டி நாட்டு இட்டலி. அதுதான் நமீதா இட்டலி.

10. ஐதராபாத்தில் பிராமணர்கள் மட்டுமே வசிக்ககூடிய பிரம்மாண்ட குடியிருப்புகள் கட்டுவது சரியா?
பதில்: தனியார் முயற்சியாக இருக்கும் என நினைக்கிறேன். அரசு வரிப்பணம் செலவழித்து இக்குடியிருப்பு கட்டப்பட்டால் அது கண்டனத்துக்குரியதே. மற்றப்படியென்றால் இல்லை.

11. அருந்ததீ பட விமர்சனம் எழுதுவீர்களா?
பதில்: ரோலர் கோஸ்டரில் ஏறிய ஃபீலிங் அப்படத்தைப் பார்த்தபோது. பலர் எழுதியாகிவிட்டது. புதிதாக எழுத எனக்க்குத் தோன்றவில்லை.


Certifiedasshole:
1. பிராமணர்கள் ஏன் வெறுக்க படுகிறார்கள்? பொய்ப் பிரச்சாரம் மட்டும்தான் காரணமா?
பதில்: நீங்கள் அளித்த சுட்டியைப் பார்த்தேன். அதில் கூறப்பட்டுள்ளவை ஏற்கத் தக்கவையே.


வஜ்ரா:
1. "நான் மட்டும் உள்துறை அமைச்சராக இருந்திருந்தால் வருண் காந்தியை ரோட் ரோலர் கொண்டு நசுக்கி சாகடித்திருப்பேன்" என்று மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவ் கூறியது Attempt to murder ஆகாதா?
பதில்: கண்டிப்பாக, ஆனால் இதையெல்லாம் தேர்தல் கமிஷன் கண்டு கொள்ளாது. லாலுவும் சால்ஜாப்பு எல்லாம் கூறுகிறாரே. பார்ப்போம்.


எம். கண்ணன்:
1. தினமும் ஜெயலலிதாவிடம் மாவட்ட / வட்டச்செயலாளர்கள், பேரவை ஆட்கள் 25 லட்சம் பணப்பெட்டிகளை கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்களே - எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு பணம்? ஒரு சின்ன சூட்கேசுக்குள் 25 லட்சத்தை அடக்க முடியுமா? இல்லை இதெல்லாம் கருப்பை வெளுப்பாக்கும் உத்தியா?
பதில்: சின்னக்கவுண்டர் பட ரேஞ்சுக்கு மொய்விருந்து போடுவதாக படித்தேன். மீதியெல்லாம் கட்சியின் உள்விவகாரங்கள். ஒரு செக்‌ஷன் ஆயிரம் ருபாய் நோட்டுகள் ஒரு லட்சம் ரூபாய். பத்து செக்‌ஷன்கள் கொண்ட ஒரு பண்டில் 10 லட்சம் ரூபாய். மூன்று பண்டில்கள் 30 லட்சம் ரூபாய். தாராளமாக ஒரு சூட்கேசில் வரும்.

2. திமுக இன்னும் டீ குடிக்க காசு ஏற்பாடு செய்யவில்லை போலிருக்கிறதே?
பதில்: இல்லை என்று உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா?

3. பாமகவை தோற்கடிக்க புகையிலை/சிகரெட்/மதுபான கம்பெனிகள்/அதிபர்கள் வியூகம் செய்துள்ளார்கள் போலிருக்கிறதே? பாமக 7 இடங்களிலும் தோற்றால் என்ன ஆகும்?
பதில்: அன்புமணி கதை க்ளோஸ்.

4. கலைஞர் டிவியில் இரவு 10.30மணிக்கு வெட்டிப்பேச்சு லீக் (விபிஎல்) என ஐபிஎல்லுக்கு போட்டியாக ஆரம்பித்துள்ளனரே? சரியான அறுவையாக இருக்க்கிறதே ? அதெப்படி எல்லோரும் பிராமணராக பிடித்துப் போட்டார்கள்? (பாஸ்கி, நீலு, ஞாநி.. மற்றுமொருவர்)
பதில்: நான் கலைஞர் டி.வி. பார்ப்பதில்லை. ஆகவே நிகழ்ச்சி பற்றி கருத்து ஒன்றும் கூறுவதற்கில்லை. பார்ப்பனராக தேடிப்பிடித்திருக்க மாட்டார்களாக இருக்கும். தொலைக்காட்சி சொல்வழக்கில் அவ்வாறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களை talents என்பார்கள். அவர்களில் பலர் பார்ப்பனராக இருப்பது யதார்த்தம், என்ன செய்வது? கலைஞர் டிவி என்பது ஒரு தனியார் வணிக நிறுவனம். அங்கெல்லாம் இட ஒதுக்கீடு செல்லாது.

5. கடைசியில் மாலனும் ஜெயாடிவியில் ஐக்கியமாகிவிட்டாரே? (இரவு 9.30மணி அரசியல் விவாதங்கள்). சன் குழுமத்திலிருந்து ஆட்டோ வரும் என்ற பயமில்லையா?
பதில்: மாலன் செய்வது சம்பளத்துக்கு வேலை. இதில் என்ன கொள்கை வந்தது? எங்கு நல்ல சம்பளம் வருமோ அங்கு வேலை. இதில் என்ன பிரச்சினை?

6. தமிழ் சானல்களில் செய்திவாசிக்கும் பெண்மணிகளில் உங்களுக்குப் பிடித்த செய்தி வாசிப்பாளர் யார்? ஷோபனா ரவி? சந்தியா? ஃபாத்திமா பாபு? ஜெயஸ்ரீ? ரத்னா? உஷா? ரமணி மணி? ஏன்?
பதில்: ஷோபனா ரவி. அவரது அழுத்தம்திருத்தமான, சரியான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய உச்சரிப்பு, சொல்லும் செய்திகளின் சீரியஸ்னசுக்கு ஏற்ற முகபாவம் ஆகியவை என்னைப் பொருத்த வரையில் இவரிடம்தான் அதிகம். ஆங்கில செய்தி வாசிப்பாளர்களில் எனக்கு பிடித்தது காவேரி முகர்ஜி.

7. 10 வருடங்கள் முன்பு வரை பிரா, ஜட்டி, பனியன்கள் என விற்று வந்த பல பெருங்கடைகளும் தற்போது 'லிங்கரி' என எஃப் டிவி தாக்கத்தில் புதுபுது விதங்களில் பெண் உள்ளாடைகளை அறிமுகப்படுத்துகின்றனரே ? எஃப் டிவியால் கிடைத்த அறிமுகம் தானே இது?
பதில்: உலகமயமாக்கல் காரணமாக வந்தவை இவை.

8. வைரமுத்து தற்போதெல்லாம் படங்களுக்கு பாட்டெழுதுவது இல்லையா? பிரபல இசை அமைப்பாளர்கள் ஏன் அவரை விட்டு விட்டனர்?
பதில்: இம்மாதிரி சினிமா சம்பந்தமான கேள்விகளுக்கு நான் உதவி கேட்கும் நபர் லக்கிலுக். அவர் சொவது என்னவென்றால், ரஹ்மான் தமிழில் இசை அமைப்பதை குறைத்து விட்டதால் வைரமுத்து பாடல்களும் அவ்வளவாக வருவதிலையாம். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாடலாசிரியர். மற்றப்படி வைரமுத்து பாட்டு எழுதாமல் இல்லை, எழுதிக் கொண்டுதான் இருக்கிறார், சற்றே குறைவான அளவில்.

9. அழகிரி மத்தியில் அமைச்சராகிவிட்டால் பாராளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுவார்? எம்.பி.க்குப் போட்டியிடுவது தயாநிதி மாறனுக்கு டெல்லியில் செக் வைக்கத்தானே?
பதில்: இதென்ன கேள்வி? தமிழில்தான் பேசுவார், பேச வேண்டும்? மொழிபெயர்ப்பாளர்கள் எதற்கு இருக்கிறார்கள்? கேள்வியின் அடுத்த பகுதி குடும்ப பாலிடிக்ஸ். இது பற்றி எனக்கு கருத்து இல்லை.

10. தமிழ்நாட்டில் கள்ள உறவுகள்/தொடர்புகள் அதனால் ஏற்படும் கொலை போன்ற செய்திகளுக்கு தமிழ் டிவி சீரியல்கள்தானே காரணம்?
பதில்: தவறான பார்வை. கள்ள உறவுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்குமே நிறைந்துள்ளன, பல ஆயிரம் ஆண்டு காலமாக. சீரியல்கள் வெறுமனே இருக்கும் நிலையை பிரதிபலிக்கின்றன, அவ்வளவே.

இது பற்றி ஒரு கதை. ஒருவன் சர்ச்சில் பாதிரியார் அளித்த 10 கட்டளைகள் பற்றிய பிரசங்கம் கேட்டு கொண்டிருந்தான். பாதிரியார் சொன்னார், “திருடாதே” என்று. அவனுக்கு அப்போதுதான் உறைத்தது அவனது குடையை யாரோ அபேஸ் செய்து விட்டிருந்தனர் என்று. மனக்குழப்பத்துடன் இருந்தான். அடுத்த கட்டளைகள் முறை வரும்போது “சோரம் போகலாகாது” என்று பாதிரியார் கூறினார். அப்போதுதான் அவனுக்கு தான் குடையை எங்கே வைத்தோம் என்பது ஞாபகத்துக்கு வந்ததாம். மனக்குழப்பம் போயே போயிந்தி.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/08/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் 46 & 47

பகுதி - 46 (06.04.2009):
அசோக்கின் பூணல் கல்யாணத்துக்கு சிங்காரம் பின்தொடர வையாபுரி வருகிறார். “ஐயர் வூட்டு சாப்பாடு நல்லாருக்கும், வா போய் சாப்பிட்டுடுவோம்” என சிங்காரம் பறக்கிறான். தான் நெட்டுரு செய்து வந்த திருக்குறளை சொல்ல வேண்டியதுதான் தனது கடமை என வையாபுரி கொக்குக்கு ஒன்றே மதி என்பதற்கேற்ப நாதனிடம் சென்று, “அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுகலான்” என்னும் குறளை பிடித்து அதையும் அதன் பொருளையும் நெட்டுரு செய்ததை இங்கு எடுத்து விடுகிறார்.

திருக்குறளில் வருவது போல வேறெங்காவது அந்தணர் பற்றி வருகின்றனவா என சோவின் நண்பர் கேட்க, சோ அவ்வாறு வரும் விவரங்களையெல்லாம் பட்டியலிடுகிறார். அந்தணருக்குரிய அறுதொழில்களை திருவள்ளுவர் குறிப்பிட்டதைக் கூறி அவை என்னென்ன என்றும் கூறுகிறார். அவை மறை ஓதுதல், மறை சொல்லித் தருதல், யாகங்கள் செய்தல், அவற்றைச் செய்வித்தல், தானம் பெறுதல், தானம் அளித்தல் ஆகியவையாகும்.

உமா அசோக்கை பார்க்க வருகிறாள். “எப்படியிருக்கே பிரும்மச்சாரி” என அவ்ள் வேடிக்கைக்காக கேட்க, அதே தொனியில் “நான் நல்லா இருக்கேன் கன்னிகையே” என அவன் பதிலளிக்கிறான். ஆனந்தமாகக் கூட பேசத் தெரியுமா அசோக்குக்கு என உமா வியக்க, ஆனந்தம், பிரும்மானந்தமே மானிடரின் நோக்கம் என அசோக் கூறுகிறான். அசோக்குக்கு பரிசாக ‘யோக வாசிஷ்டம்’ என்னும் புத்தகத்தை உமா பரிசாக அளிக்கிறாள். வசிஷ்டர் ராமருக்கு செய்த உபதேசங்கள் என்று வேறு கூறுகிறாள். அப்புத்தகத்தைக் கையில் எடுத்ததுமே அசோக்கின் முகபாவத்தில் மாறுதல் ஏற்படுகிறது. மெய்சிலிர்த்து நிற்கிறான். என்னவென்று புரியாத உமா கவலையுடன் அவனை அது பற்றி விசாரிக்க, அவன் இப்புத்தகத்தைப் பார்த்ததுமே தனக்குள் ஏதோ பிரளயம் போல ஏற்பட்டது என்கிறான்.

அசோக் இப்புத்தகத்தை பார்த்து இப்படி ஏன் திடுக்கிட வேண்டும் என சோவின் நண்பர் கேட்க, அவன் திடுக்கிடுறான் என்பதை விட அவனுக்குள் பழைய ஞாபகங்கள் கிளர்ந்தெழ முயல்கின்றன எனக் கூறுவதே சரியாக இருக்கும் எனக்கூறுகிறார். இந்த யோக வாசிஷ்டம் வால்மீகி ராமாயணத்து அனுபந்தமாக பிரும்மாவின் ஆக்கிஞைக்கு உட்பட்டு இயற்றியது. வசிஷ்டர் ராமருடைய சந்தேகங்களை தீர்க்கும் முகமாக அவருக்கு உபதேசித்தது எனக் கூற, ராமருக்கேவா சந்தேகம் என நண்பர் கேட்கிறார்.

மகாவிஷ்ணுக்கு வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு ரிஷிகளால் மூன்று சாபங்கள் உண்டு என்றும், அவையே ராமாவதாரத்தில் நிறைவேறின என்றும் சோ கூறுகிறார். அதன் பின்புலனை மேலும் விஸ்தாரமாகக் கூறுகிறார். அவற்றின் சுருக்கத்தையே நான் இங்கு தருவேன். நேரடியாக வீடியோ பார்ப்பதே அதிகப் பயனுடையதாக இருக்கும்.

விஸ்வாமித்திரர் தான் செய்யும் யாகத்துக்கு பாதுகாவலாக ராமரை தன்னுடன் அனுப்புமாறு தசரதரிடம் கேட்க, தசரதர் தயங்க, வசிஷ்டர் மன்னரை ஆஸ்வாசப்படுத்தி முனிசிரேஷ்டர் விஸ்வாமித்திரருடன் ராமர் செல்வது ராமருக்குத்தான் நல்லது என எடுத்துக் கூறுகிறார். தசரதரும் அதை ஏற்று, ராமரை அழைத்து வர ஆள் அனுப்புகிறார். அச்சமயம் ராமர் ஒரு பெரிய மனக்கிலேசத்தில் உள்ளார். இந்த மனித வாழ்க்கையின் பயன் என்ன என்ற அடிப்படையையே ஆட்டுவிக்கும் கேள்வி அவர் மனதை ஆட்கொண்டிருந்தது. அவற்றை ராமர் வெளிப்படையாக கூற, ராமருக்கு வந்திருப்பவை சாதாரண சந்தேகங்கள் இல்லை என்றும் அவற்றை நிவர்த்தி செய்ய சரியான நபர் ராமரது குலகுரு வசிஷ்டரே என்றும் கூறுகிறார் விஸ்வாமித்திரர். முன்னொரு காலத்தில் தானும் வசிஷ்டரும் விவாதம் செய்தபோது பிரும்மதேவர் தம்மிருவருக்கும் உபதேசித்ததையே இங்கு கூறுமாறும் அவருக்கு ஆலோசனை கூறுகிறார் விஸ்வாமித்திரர். அதன்படியே வசிஷ்டர் ராமருக்கு செய்யும் உபதேசம்தான் யோக வாசிஷ்டம் என்னும் பெயரில் உள்ளது என சோ கூறுகிறார். வசிஷ்டர்தான் பரமன் ஆணைப்படி இங்கு அசோக்காக அவதரித்ததையும் அவர் ஞாபகப்படுத்துகிறார்.

சீன் மீண்டும் அசோக் மற்றும் உமாவிடம் செல்கிறது. அசோக்குடன் சேர்ந்து பழகியதில் தானும் பக்தையாகவே மாறிவிட்டதாகவும், ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றதாகவும் உமா கூற, ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமைகள் பற்றி இருவரும் பேசுகின்றனர். மண்ணையும் செல்வத்தையும் ஒன்றாக பாவிக்கும் ராமகிருஷ்ணரின் பெருமையை அசோக் சிலாகிக்க, இங்கு தான் ஒரு முரண்பாட்டைக் காண்பதாக உமா கூறுகிறாள்.

பகுதி - 47 (06.04.2009):
அது என்ன முரண்பாடு என அசோக் கேட்க, உமா பேசுகிறாள். செல்வத்தை எவ்வாறு ஒழிக்க முடியும். அதுவும் ஒரு சக்தியே. பலர் அதை தவறாகப் பிரயோகம் செய்வதாலேயே அதை தீய சக்தி எனக் கூறவியலுமா. உதாரணத்துக்கு செக்ஸால் தொல்லை என்றால், ஒரேயடியாக ஒழிப்பது, அதே போல பிரச்சினைகள் வரும் என்பதால் பல விஷயங்களை வெட்டி எறிவது என்பதே அவள் சிந்தனை. அசோக் பதிலளிக்கிறான். மனிதர்கள் பலவகை, மார்க்கங்களும் அனேகம். பணத்தை துச்சமாக மதிப்பது ஞானியர் செயல், அதை எல்லோராலும் செய்யவியலாது. பல மர்க்கங்கள் இருக்கையில், மனிதர்கள் தமக்கு தேவையான நடுநிலையை எடுத்து கொள்ளலாமே இதில் எங்கிருந்து வருகிறது வெட்டி எறிவது?

நாதன் அசோக்கிடம் அவன் பூணலுக்காக மொய் எழுதப்பட்டு வந்த 50000 ரூபாயை அவனிடம் தந்து, அதை வைத்து ஒரு லேப்டாப் வாங்கிக் கொள்ளுமாறு கூறுகிறார். அதனால் அவனது தேடலில் உதவி கிடைக்கும் என்றும் கூறுகிறார். ஒரு கையில் பணத்தையும், இன்னொரு கையில் மண்ணையும் வைத்து ஒரு நிமிடம் பார்க்கும் அசோக், இரண்டையுமே அப்பால் எறிய, பலர் வந்து பணத்தை பொறுக்கிச் செல்கிறார்கள்.

நாதன், நீலகண்டன், பாகவதர் அமர்ந்திருக்க, வசுமதி கைகளைப் பிசைந்த வண்ணம் நிற்க நாதன் மனக்கொதிப்புடன் அசோக்கை அவன் ஏன் அவ்வாறு செய்தான் என கேள்வி கேட்கிறார். தன்னைப் பொருத்தவரை பணமும் மண்ணும் ஒன்றுதான் என்று வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியதை நினைத்ததாகவும், அவாறே செய்து பார்த்ததாகவும் அசோக் அலட்டிக் கொள்ளாமல் கூறுகிறான். ஐம்பதாயிரம் ரூபாயில் சமையற்கார மாமி பாடுபட்டு நாற்பதாயிரம் ரூபாய் வரை சேகரித்து வந்து வசுமதியிடம் தந்திருக்கிறார். நீலகண்டன் அசோக்கை நன்கு கோபித்து, கையில் ஒரு பிடி மண்ணை எடுத்துப் போய், அரிசி, பருப்பு ஆகியவற்றை கடைக்காரனிடம் கேட்டு வாங்கி வர முடியுமா என சவாலிட்டு கேட்க, அன்னத்தை உண்ணும் நாம் கடைசியில் மண்ணுக்குத்தான் போகிறோம். ஆக மனிதனை விட மண்ணே உயர்ந்தது என அசோக் கூறுகிறான்.

இதென்ன, இந்த அசோக் பைத்தியமா என சோவின் நண்பர் கேட்க, சோ அவரிடம் அசோக் இப்போது தேடுதலில் இருக்கிறான். பலவற்றை படிக்கிறான் அவற்றை சோதிக்கிறான். அதே போல ராமகிருஷ்ணர் செய்ததையும் அவன் சோதித்து பார்த்தான் அவ்வளவே எனக் கூறுகிரார். எப்போதுமே அசோக் பணத்தை இப்படித்தான் விட்டெறிவான் என்றும் கூறவியலாது எனவும் கூறுகிறார்.

பாகவதர் அசோக் மெதுவாக ஆன்மீகப் பாதையில் செல்வது போல தோன்றுகிறது எனக்கூற, நீலகண்டன் பாகவதரை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவரால்தான் அசோக் கெட்டுப் போனான் என குற்றம் சாட்டுகிறார். அதனால் மனம் நொந்த பாகவதர் இனிமேல் தான் நாதன் குடும்பத்திலிருந்து தள்ளி நிற்கப் போவதாகவும், மற்றவர்களே இனிமேல் கூடிப் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறும் கூறி விடுகிறார். நாதன் எவ்வளவு கேட்டுக் கொண்டும் அவர் கேட்பதாக இல்லை.

இந்த பாகவதர் இவ்வளவு ஞானம் உடையவர், அவர் ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட வேண்டும் என சோவின் நண்பர் கேட்கிறார். எடுத்த எடுப்பில் சோ பதில் கூறி விடுகிறார், பாகவதர் ஞானி என்று இந்த சீரியலில் எங்குமே கூறப்படவில்லை என. நிறைய படித்திருக்கிறார், அவ்வளவே என்கிறார். ஞானம் என்பது கடவுள் அருளால் மட்டுமே வரும் எனக் கூறிவிட்டு. ஆனானப்பட்ட வியாசரே அவர் மகன் சுகருடன் ஒப்பிடும்போது ஞானி இல்லை என்பதை அவரிடம் சாதாரண பெண்களே கூறிய கதையையும் சோ இங்கு எடுத்துரைக்கிறார்.

ஆக, மிகப்படித்த விஞ்ஞானிகளோ, அறிஞர்களோ டீஃபால்ட்டாக ஞானிகள் ஆவார்கள் எனக் கூறவியலாது (பொறியாளர் - மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களில் அடக்கம் எனக் கூறும் முரளி மனோகர் சரியாகவே சொல்கிறான்). ஞானம் என்பது பிரும்மமும் தானும் ஒன்று என்னும் அறிவு. இந்த பாகவதரிடம் அது இல்லை. அவர் மெத்த படித்தவர் அவ்வளவே என்கிறார் சோ.


எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/07/2009

ஒரே புத்தகம், ஆனால் மூல மொழிகள் இரண்டு

சமீபத்தில் 1982-ல் என் நண்பன் Freedom at midnight என்னும் புத்தகத்தை ரொம்பவுமே சிலாகித்து பேசினான். நான் அவன் சொன்னதை ஆமோதித்தேன், அனால் நான் அப்புத்தகத்தை அதன் ஃபிரெஞ்சு மூல மொழியில் Cette nuit la liberté என்னும் தலைப்பில் படித்ததாகக் கூற, நண்பன் “அப்படீன்னாக்க ஆங்கிலத்தில் அது மொழிபெயர்ப்புதானா” எனக் கேட்க, நான் “இல்லை, ஆங்கிலமும் அப்புத்தகத்தின் மூல மொழிதான்” எனக் கூறினேன். என்ன சொல்லற என்பதுபோல பார்த்தபோது அப்புத்தகத்தின் பின் புலம் மட்டுமின்றி, அதன் ஆசிரியர்கள் லாறி காலின்ஸ் மற்றும் டொமினிக் லாபிஎற் பற்றியும் கூறினேன்.

முதலாமவரது தாய்மொழி ஆங்கிலம, இன்னொருவரது தாய் மொழி ஃபிரெஞ்ச். ஆங்கிலம் தாய் மொழியாக இருப்பவர் ஒரு அத்தியாயத்தை எழுதி, பிரெஞ்சுக்காரருக்குத் தர அவர் அதை ஃபிரெஞ்சில் மொழி பெயர்ப்பார். அதே போல ஃபிரெஞ்சில் எழுதப்பட்ட இன்னொரு அத்தியாயம் மற்றவரால் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பப்படும். இம்மாதிரியே செய்து செய்து கடைசியில் எது மூலம் எது ஒரிஜினல் என்பது புலப்படாது. இரண்டுமே ஒரிஜினலாகத்தான் பாவிக்கப்படும். இந்த எழுத்தாளர்கள் ஜோடி எழுதிய மற்ற புத்தகங்களுக்கும் அதே நிலைதான். அவை [Is Paris burning? - Paris brûle-t-il]?, [Oh Jerusalem - Ô Jérusalem], [Or I'll Dress You in Mourning - Ou tu porteras mon deuil], [Is New York Burning? - New-York brûle-t-il], [The Fifth Horseman - Le Cinquième cavalier] ஆகும்.

மீதி எல்லா மொழிகளிலும் அவை மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றன. அவ்வாறு செய்யப்படுவது ஆங்கில மூலத்திலிருந்தா பிரெஞ்சு மூலத்திலிருந்தா என்பது சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் சாய்ஸ்தான் என அறிகிறேன். ஒரு வேளை இரண்டிலிருந்தும் கூட இருக்கலாம். நானாக இருந்தால் அவ்வாறுதான் செய்திருப்பேன்.

தில்லியில் இருந்த போது எனது வாடிக்கையாளர் ஒருவர் ஸ்விஸ் கூட்டுமுயற்சியில் வேலை செய்து வந்தார். அவரிடம் பல drawings மொழிபெயர்ப்பதற்காக இருந்தன. நான் அந்த வேலையைச் செய்தேன். அவை ஃபிரெஞ்சு ஜெர்மன் ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும். இரு மொழிகளுமே எனக்கு நன்றாகத் தெரியுமாதலால் நான் இரண்டையும் கன்சல்ட் செய்வது வழக்கம்.

ஹாரி பாட்டர் ஏழாவது புத்தகம் பற்றி விவாதிக்க மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் ஒரு பிரத்தியேக விவாதமன்றம் எனது முயற்சியால் 2007-ல் திறக்கப்பட்டது. அப்புத்தகம் அப்போதுதான் வந்ததால் அதை வெளிப்படையாக விவாதிக்க இயலாது, ஏனெனில் பலர் இன்னும் படித்திருக்க மாட்டார்கள், ஆகவே சஸ்பென்ஸ் கெட்டுவிடும் என அஞ்சப்பட்டது. அதற்காக அப்புத்தகத்தைப் படித்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் அளவுக்கு ஒரு விவாதமேடை உருவாயிற்று. அதன் மட்டுறுத்துனர் நானே. வெளியார் எனது க்ளியரன்ஸ் இல்லாமல் அதில் பங்கேற்க இயலாது என்பதால் சஸ்பென்ஸ் காப்பாற்றப்பட்டது. இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், ஹாரி பாட்டர் புத்தகத்தின் வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் எவ்வாறு இருந்தன என நான் கேட்ட கேள்விக்கு வந்த பதில்கள்தான். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அபாரம் என்பது எனக்கே புலப்பட்டது. ரஷ்யனில் நன்றாகவே இல்லை, உக்ரேனியன் மொழிபெயர்ப்பு அற்புதம் என ஒரு மன்ற உறுப்பினர் கூறினார்.

இதுதான் இலக்கிய மொழிபெயர்ப்பில் மிகப்பெரிய கஷ்டம். பல ஆண்டுகளுக்கு போகிறவர் வருபவர் எல்லாம் தர்ம அடி கொடுப்பார்கள். பணமும் அவ்வளவாக வராது. ஆகவேதான் நான் இலக்கிய மொழிபெயர்ப்பு பக்கமே போவதில்லை என்று சொல்லவும் வேண்டுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது