1/15/2010

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2010: பகுதி - 1

ஆறரை மணி கூட்டத்துக்கு நாலரை மணிக்கே போனேனோ அரங்கத்தினுள்ளே அமர கிடைத்ததோ. இல்லாவிட்டால் கதை கந்தல்தான்.

சரியாக ஆறரை மணிக்கு சோ அவர்கள் தன் உதவியாளர்கள் புடைசூழ் கரகோஷங்களுக்கிடையில் மேடைக்கு வந்தார். எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என அவர் கூற, எதிர்பார்த்தது போலவே பல குரல்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் என பிராம்ப்ட் செய்தன. அதை அவரும் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் புறம் தள்ளினார்.

தனது உதவியாளர்களை அறிமுகம் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் குறிப்பிட்டது கலகலப்பை உருவாக்கியது. அவர் அறிமுகம் செய்தவர்கள் (சிலருக்கு அடைமொழிகளுடன்):

1. அருளாளர் ரங்காச்சாரி (ஒரு கோவில் அறங்காவலர்)
2. நிர்வாகச் செம்மல் உதயசங்கர் (அவன் தெலுங்கன், நான் சொல்லறது புரியாது)
3. இளஞ்சிங்கம், இளையதளபதி (இதுக்கென்ன காசா பணமா, கொடுத்தாப்போச்சு) சுந்தரம் (சமீபத்தில் 1940-ல் பிறந்தவர் என அறிகிறான் டோண்டு ராகவன்)
4. சமூகநீதி காவலர் சத்யா
5. மக்கள் திலகம் பர்க்கத் அலி (ஏன்னாக்க, இவன் பேசறது யாருக்குமே புரியாது)
6. நாவுக்கரசர் சுவாமிநாதன்
7. மாவீரன் கணேஷ் (கார் டயர் பக்கத்தில் வெடித்ததற்கு யாரோ பாம் வச்சுட்டான்னு சொல்லி தானும் காபராபட்டு சோவையும் காபராவுக்குள்ளாக்கினார்)
8. உலகம் சுற்றிய வாலிபன் வெங்கையா (ஒரு முறை மலேசியாவுக்கு போயிருக்கிறார்)
9. ஆற்றல் அரசு ஷண்முகம் (நன்றாகக் காப்பி ஆற்றுவார்)
10. மௌனகுரு ராமமூர்த்தி
11. தமிழின் தமிழே வண்ண நிலவன் என்னும் துர்வாசர்
12. சிந்தனைச்செல்வன் வசந்தன் பெருமாள்
13. விஜய்கோபால் - ஆர்டிஸ்ட்
14. ராமு - ஆர்டிஸ்ட்
15. ஸ்ரீகாந்த்
16. குமார் - கார்ட்டூனிஸ்ட்
17. ராஜன் லே அவுட் ஆர்டிஸ்ட்
18. நிகில் - அட்டெண்டர்
19. தினேஷ்

வழக்கம்போல தெரிவு செய்யப்பட்ட வாசகர்களை பேச அழைக்கும் முன்னால் தான் எழுதிய ஹிந்து மகாசமுத்திரம் பகுதி - 5 வெளியிட்டார். அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டவர் அவரது பேத்தி சுட்டிப்பெண் சுசித்ரா.

பெண்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என ஒரு பயலும் இனிமேல் சொல்லமுடியாது என்றதும் அரங்கத்தில் கலகலப்பு.

இப்போது பேச அழைக்கப்பட்ட வாசகர்கள்:

1. ஏ. ஸ்ரீதரமூர்த்தி, கோவை
தனது வயதும் துகள்க்கின் வயதும் ஒன்றே என அவர் கூறினார் பிறகு கேள்விகள் வந்தன.
அ. தமிழ்ச்செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்?
ஆ. அசாமில் பங்களாதேசிகளின் ஊடுருவல்கள், அங்கிருந்தே கோவைக்கும் வந்து விடுகிறார்கள்
இ. துக்ளக்கில் வெளியாகும் ஹிந்து மகாசமுத்திரத்தின் பேப்பர் தரத்தை சரிசெய்தால் பைண்ட் செய்து வைத்துக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும்.

சோவின் பதில்கள்:
அ. அதன் பலன் அது இல்லாமலேயே சிரமம் ஏதும் இல்லாமல் இடைதேர்தலால் கிடைக்கும். பின் இது ஏன் என்றால், அது கலைஞர் புகழாசைக்கு ஒரு தீனி
ஆ. இது ஒரு மைனாரிட்டி பிரச்சினையாக சாயம் பூசப்படுகிறது. கவலைக்குரிய பிரச்சினை. பாஜக மட்டுமே இது பற்றி கவலை தெரிவிக்கிறது.
இ. எல்லோருமே புத்தகத்தை வாங்காது பைண்ட் செய்து போய்விட்டால், அலயன்ஸ் சீனுவாசன் கோச்சுப்பார்.

2. அப்துல் ரஹ்மான்
துக்ளக் படிக்காமல் இருக்க முடியவில்லை என்று சொன்ன அவர் இட்ட கேள்விகள்:
அ. டாக்டர் கலைஞர் பற்றி விமரிசனம் செய்து என்ன பலன் கண்டீர்கள்?
ஆ. தேசீய அளவில் பாஜகவின் நிலைமை ஏன் மங்கி வருகிறது?
இ. திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கைவிட்டால் பாமகவின் கதி?

சோவின் பதில்கள்:
அ. பலன் வேண்டுமென்றால் விமரிசனம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். இப்போது என்ன ஆயிற்றென்றால் தான் இவ்வாறு அதிகாரபீடத்தை எதிர்கொள்வதாலேயே துக்ளக் ஆண்டுவிழா நிகச்சி இவ்வளவு பாப்புலராக உள்ளது. அந்தப்பலனே போதும்.
ஆ. பாஜகவின் பல இன்னல்கள் அதுவாகத் தேடிக்கொண்டதே. வாஜ்பேயீ பிரதமராக இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் அத்வானி கடைசி இரண்டாண்டுகளுக்கு பிரதமராக இருந்திருந்தால் நிலைமையே பாஜகவுக்கு சாதகமாக இருந்திருக்கும். அத்வானி நாடறிந்தவர். இப்போதைய தலைவர் பற்றி அம்மாதிரிக் கூற இயலாது. இருப்பினும் அவரும் நல்ல யோக்கியதைகளை உடையவரே என கூறப்படுகிறது. அது உண்மையானால் சந்தோஷமே.
இ. அப்படி பாமகவை இரு கட்சிகளுமே கைவிடும் எனத் தான் நினைக்கவில்லை. பாமகவும் தன் நிலையை கண்டுணர்ந்து சூதனமாக நடந்து கொள்ள வேண்டும்.

3. குப்புசாமி, கோவை
அ. அடுத்த ஆண்டு காமராஜ் ஆட்சி அமையுமா?
ஆ. பூரண மதுவிலக்கை திரும்பக் கொண்டுவரவேண்டும் என சோ அவர்கள் கலைஞரோடு பேசுவாரா?

சோவின் பதில்க்ள்:
அ. ம்காமராஜின் ஆட்சியை அமைக்கும் தகுதியுடன் இப்போதைய காங்கிரசில் யாருமே இல்லை. எப்படியும் அதனால் அசெம்பிளி தேர்தலில் தனியாக நிற்க முடியாது. திமுக அல்லது அதிமுகவைத்தான் சார்ந்து இருந்தாக வேண்டும், ஏனெனில் லோக்சபா சீட்டுகள்தான் அவர்களுக்கு அதிக முக்கியம்.
ஆ. பூரணமதுவிலக்கு இத்தருணத்தில் பிராக்டிகல் இல்லை.

4. கலைச்செல்வன், ராமநாதபுரம்
அ. பெண்கள் இடஒதுக்கீட்டை அதரிக்கிறீர்களா?
ஆ. அப்படி இடஒதுக்கீடு வந்து, நிறைய பெண்கள் பார்லிமெண்டுக்கு வந்தால் மருமகள் பாதுகாப்புச் சட்டம் வருமா?
இ. நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசியம்.

சோவின் பதில்கள்:
அ. இது வேண்டாத வேலை.
ஆ. தேர்ந்தெடுக்கப்படும் பெண்களில் மாமியார்கள் எவ்வளவு மருமகள்கள் எவ்வளவு என்பதை இது பொருத்துள்ளது.
இ. ஒரு ஹைகோர்ட் தலைமை நீதிபதி தாந்தோன்றித்தனமாகச் செயல்பட்டு நிலங்களை ஆக்கிரமிக்கிறார். அவரை காப்பாற்றவே காய்கள் நகர்த்தப்படுகின்றன. நீதிபதிகள் சொத்து அறிவிப்பு திட்டம் பற்றி சுப்ரீம் கோர்ட்டின் ரெஜிஸ்ட்ரார் கீழ்க்கோர்ட்டில் போட்ட கேஸ் தள்ளுபடியாகிறது. இதென்ன கூத்து? இந்தழகுக்கு அவர் தாழ்த்தப்பட்ட சாதி என்று வேறு ஒப்பாரி.

5. ரகுபதி, ஈரோடு
அ. இடைதேர்தல்களில் மக்கள் தக்க ஆதரவு அளித்ததாகக் கலைஞர் கூறுகிறாரே.

சோவின் பதில்: அந்த ஆதரவெல்லாம் இலவசங்களை நிறுத்தினால் மாயமாக மறையும். அந்த ஆதரவு இல்லை என்ற பயத்தாலேயே இலவசங்கள். (கருணாநிதியின் பேச்சுக்களை வெறுமனே பட்டியலிட்டார், அதற்கே கேலிக்கூச்சல்கள் அரங்கத்துள் எழுந்தன).

6. என். ராஜன், நங்கநல்லூர்
அ. மாநில அரசின் நிதிநிலைமை பற்றி? கருணாநிதி எவ்வாறு இவ்வளவு இலவசங்களை அளிக்கிறார்?
ஆ. மத்திய ரயில்வே அமைச்சராகச் செயல்பட்ட லாலு பிரசாத் யாதவ் பற்றி பிறகு கூறுவதாக சோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கூறினார். இப்போது கூறலாமே?

சோவின் பதில்கள்:
அ. மாநிலநிதிநிலைமை பற்றி பின்னால் முருகன் ஐ.ஏ.எஸ். பேசுவார்.
ஆ. லாலுவை பற்றி இப்போது மமதா பானர்ஜீ கூறுவதைப் பார்த்தாலே போதுமே.

7. வெங்கடேசன்
இவர் கேட்ட கேள்விகள், சோவின் அவற்றுக்கான ப்திக்ல்கள் சரியாக கேட்கவில்லை. துக்ளக் இதழில் அவற்றைப் பின்னால் பார்க்கலாம்.

8. மஹாபிரபு
அ. பிரபாகரன் தந்தையின் இறப்புக்காக ஏன் கவிதை இல்லை கலைஞரிடமிருந்து?
ஆ. முதல்வராக தெரிவு செய்யப்பட மக்களது ஆதரவு ஜெ-க்கா கலைஞருக்கா?
இ. கலைஞருக்கு பிறகு அழகிரியா ஸ்டாலினா என்று போட்டி வருமா?
ஈ. இது வரை அழகிரி சொல்லிச் சொல்லி ஜெயித்திருக்கிறார். வரும் அசெம்பிளி தேர்தலில் 190 சீட்டுகள் திமுகவுக்கு கிடைக்கும் என்பது உண்மையிலேயே நடக்குமா?

சோவின் பதில்கள்:
அ. அதற்குத்தானே மௌன அழுகை அவர் கைவசம் உள்ளது? அதற்கு மேல் பேச அவருக்கு பயமாக இருக்காதா?
ஆ. இலவசங்களை நிறுத்தினால் தானே தெரியும்.
இ. சொல்லமுடியாது, வந்தாலும் வரலாம். இருக்கும் சொத்தை காப்பாற்றிக் கொள்வோம் என எல்லோரும் நினைத்தால் வராமல் போகலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு.
ஈ. இலவசத்தை நிறுத்தினால் தானே தெரிந்து போகிறது.

9. நாராயணன்
அ. எங்கே பிராமணன் சீரியலின் நேரத்தை இரவு எட்டரை மணிக்கு மாற்ற இயலுமா. இரவு எட்டரை மணி ஸ்லாட்டுக்கு வீட்டில் பலத்த போட்டி.
ஆ. அவர் தனியா நின்னா 1500 கோடி ரூபாய்கள் தருவதாக விஜயகாந்திடம் கூறப்பட்டதா?

சோவின் பதில்கள்:
அ. நான் சொல்லியெல்லாம் ஜெயா டிவியில் நேரத்தை மாற்ற மாட்டார்கள். நீங்கள் பேசாமல் வீட்டிலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுப்பதே நலம்.
ஆ. விஜயகாந்தின் செயல்பாடு இந்த சந்தேகத்தை வரவழைத்தாலும், அவ்வளவு பண்மெல்லாம் தந்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
(திடீரென அர்ச்சகர் தேவநாதனுக்கு பலத்த கண்டனம் தெரிவித்தார். ஆனால் எந்த காண்டக்ஸ்டில் என விளங்கவில்லை)

10. ரவி ஹைதராபாத்
அ. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு WTO-வுடன் நாம் செய்து கொண்ட ஒப்பந்த்தத்தால் வந்ததா?
ஆ. விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாறுவது பற்றி
இ. கிறித்துவம் முன்னெப்போதிருப்பதை விடவும் பரவுகிறதே?

சோவின் பதில்க்ள்:
அ. விலைவாசி உயர்வு எப்போதுமே இருந்து வந்துள்ளது.
ஆ. விளை நிலங்களும் வேண்டும் தொழிற்புரட்சியும் வேண்டும் என எவ்வாறு இருக்க முடியும்?
இ. கட்டாய மதமாற்றம், ஆசைகள் காட்டி மதமாற்றம் ஆகியவைதான் கண்டிக்கத்தக்கன. தானே சுயவிருப்பத்தில் மதம் மாறுவதை குறைகூறவியலாது.

11. ஸ்வாமிநாதன் வேளச்சேரி
அ. கருணாநிதி வாக்குறுதி அளித்ததையேல்லாம் செய்து விட்டார்
ஆ. கூட்டணி கட்சிகளை ஜே மதிக்காத விஷயம்
இ. பத்திரிகைகள் ஏன் எப்போதுமே பாஜகவுக்கு எதிராக உள்ளன?

சோவின் பதில்கள்:
அ. எங்கே நிறைவேற்றினார், பட்டியலிடுங்கள்? நிறைவேற்றாத வாக்குறுதிகளில் ஒன்றாக ஆளுக்கு இரண்டு ஏக்க நிலம் அளிப்பதாக சொதப்பியதைக் கூறினார்.
ஆ. கருணாநிதி இந்திராவை திட்டாத வசவுகள் இல்லை, அவரையே காங்கிரஸ் கூட்டணி பார்ட்னராக ஏற்கும்போது ஜெயுடன் ஏன் காங்கிரஸ் கூட்டணி வைக்காது?
இ. எப்போதுமே எதிரிகள் என்றில்லை. ஆதரவு நிலைகளும் எடுத்துள்ளன. ஆனால் பாஜக தலைவர்கள் டிவி மைக்ரோஃபோனை பார்த்தாலே உளற ஆரம்பித்து விடுகிறார்கள்.

வாசகர்கள் கேள்விபதில்கள் முடிந்ததும் அவர் விஜய் என்பவரை நீதித்துறை பற்றியும், முருகனை நிர்வாகத்துறை பற்றியும், குருமூர்த்தியை பொருளாதாரத்துறை பற்றியும், பழ கருப்பையாவை அரசியல் துறை பற்றியும் பேச அழைத்தார்.

இது வழக்கத்துக்கு மாறான செயல்.

அப்பேச்சுகள் பற்றி அடுத்த பதிவில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/14/2010

டோண்டு பதில்கள் - 14.01.2010

ராமானுஜம்
1. Will there be any solution to save BSNL in the meeting convened by the Hon.P.M of india on 6.1.2010?
பதில்: ஏதோ நல்லது நடந்தது போலத்தான் தோன்றுகிறது, பார்ப்போம்.

2. The private operators will increase the cell phone tariff if the bsnl is not in the market. Is it true or not?
பதில்: போட்டியிருந்தால் நுகர்வோருக்குத்தான் லாபம் அதிகம் என்பது உண்மைதான். பி.எஸ்.என்.எல்லும் இருக்க வேண்டும், தனியாரும் செயல்புரிய வேண்டும். அதுதான் பி.எஸ். வீரப்பா சொல்வது போல, சபாஷ் சரியான போட்டி.

3. Will the private operators run services in rural sector, which incur heavy loss to govt owned company?
பதில்: அரசு கம்பெனியின் நஷ்டங்கள் வரிகட்டுவோர் தலையில். அதே நேரம் கிராமப்புற சேவைகளும் அவசியமே. தனியார் அந்த நஷ்டத்தை எடுத்து கொள்வார்கள் என ஏன் நினைக்க வேண்டும்?

4. There are so many cases reported about the non payment of dues (IUC,ADC) to Bsnl by the pvt operators. What is your opininon?
பதில்: என்ன ராசா, அப்படியா? என்னத்தான் பண்ணறீங்க அதையெல்லாம் சரி செய்யாது?

5. Do you agree that the cell phone tariff has come down only after BSNL started cell services?
அதுவும் ஒரு காரணமே.


ரமணா
1. ஹெல்மெட் கட்டாயம் ஆதாயம் யாருக்கு இந்த முறை?
பதில்: ஹெல்மெட் உற்பத்தியாளர்கள், அதிகாரிகள்.

2. ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை பாவ்லா அடுத்து எப்போ?
பதில்: பங்கு பிரிப்பதில் தகராறு வரும்போது.

3. அண்டுக்கு 3 லட்சம் காங்கிரிட் வீடுகள் குடிசை வாசிகளுக்கு. அடுத்த அறுவடை?
பதில்: அரசு ஒப்பந்தப் புள்ளிகளை பெறுபவர்களுக்க்குத்தான்

4. இன்றைய தமிழ்க அரசியல் வாதிகளில் பெரும் பணக்காரர் -இப்போதைய நிலவரம்?
பதில்: முதல்வராகத்தான் இருக்க வேண்டும். அதாவது அரசியல்வாதி பணக்காரர்களில் முதல்வராக இருப்பவர் பற்றி கூறுகிறேன். ஹி ஹி ஹி.

5. ஜக்குபாய் விவகாரம் எப்படி நடந்ததது?
பதில்: நம்ம்வர்களுக்கு ரகசியங்களை காப்பாற்றுவதில் சமத்து போதாது.


கந்தசாமி
டோண்டுவின் ஸ்பெசல் கமெண்ட்?
1.இலங்கையில் மீண்டும் ஜனநாயகம்: தேர்தல் அறிக்கையில் பொன்சேகா - அப்போ இதுவரை என்னவாம்!

பதில்: ஜனநாயகம் இல்லை என்றுதான் பொருள். நெருக்கடி நிலையில் ஒரு நாடு இருக்கும்போது ஜனநாயகம் என்பது கட்டுப்படியாகாத லக்சரி.

2. நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபுசோரன் அரசு வெற்றி -அநியாயத்தின் கொடி பறக்கு!
பதில்: கூடவே பறக்கு பாஜகாவின் மானமும்.

3. பென்னாகரம் தொகுதியில் 2 ஆயிரம் பாமக-வினர் திமுகவில் இணைப்பு: அமைச்சர் தகவல் -அப்போ பாமகவின் டெபாஸிட்!
பதில்: பாவம் மருத்துவர்.

4. சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு -சரியான பாம்பு ஏணி விளயாட்டா!
பதில்: வேறு எப்படி அதை கூற இயலும்?

5. புதுவையில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு - அங்க ஒன்னும் இடைத்தேரதல் இல்லையே!
பதில்: அது அவருக்கு தெரியுமா?

6. பிரபாகரனின் தந்தை மரணம் - இது தேர்தலில் எதிரொலிக்குமா!
பதில்: எங்கே, தமிழகத்திலா? நோ சான்ஸ்.

7. அருப்புக்கோட்டை நகருக்கு தாமிரபரணி நீர் கிடைக்குமா? -இப்படியே போனால்!
பதில்: ஏதோ செய்கிறார்கள் போலிருக்கிறதே. கிடைக்கும், கிடைக்க வேண்டும்.

8. வீடுகளுக்குச் சென்று ஆட்சியர் ரேஷன் கார்டுகள் ஆய்வு -சபாஷ்!
பதில்: எங்கள் வீட்டுக்கும் வந்தார்களே.

9. 2011-க்கு பிறகு அவார்டு படஙகளில் விஜய் நடிப்பார் -அப்போ அதுவரை குருவி, வில்லு, வேட்டைக்காரன் ரேங்க்தானா!
பதில்: குருவி தலையில் பனக்காயை வைத்து வேட்டைக்காரன் வில்லிலிருந்து அம்பு விடுவது போல இல்லை?

10. குப்பையில் இருந்து மின்சாரம்: திட்டம் செயல்படுத்துவதற்கான இடம் குறித்து அமெரிக்க பேராசிரியர் ஆய்வு -அமெரிக்காக்காரன் கெட்டிக்காரன்!
பதில்: நம்ம சீனிவாசனுக்கும் ஓ போட்டுவிடுவோம்.


அனானி (09.01.2010 பிற்பகல் 02.03--க்கு கேட்டவர்)
இந்த பிரபலங்கள் இப்போது?
1.முன்னாள் மாணவர் திமுக மாநில அமைப்பாளர் திருவாளர் எல்.ஜி

பதில்: யார் அவர், பெயரையே கேள்விப்பட்டதில்லையே?

2. கர்மவீரரை வென்ற மாணவர் தலைவர் விருதுநகர் சீனிவாசன்?
பதில்: அவர் இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

3.முன்னாள் நகைச்சுவை மன்னர்களில் சிறப்பான ஜனக்ராஜ்
பதில்: பதில்: நான் விசாரித்த அளவில் அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்றுதான் அறிகிறேன். பை தி வே, ஜனகராஜ் பற்றி பேசும்போது “யாமிருக்க பயமேன்” டிராமாவில் எஸ்.வி.சேகர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

அதில் சேகரிடம், தான் மணக்க விரும்பும் பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஒருவன் கூறுவான். மூக்கு இந்த நடிகை போல, கண்கள் இந்த நடிகை போல என ஒரு லிஸ்டே அடுக்குவான். எஸ்.வி.சேகர் இதையெல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு, “நீ சொல்லறதையெல்லாம் பொருத்தி பார்த்தால் லேசா ஜனகராஜுக்கு பொம்பளை வேஷம் போட்டா மாதிரி இருக்கு” என்று கூறுவார்.

4. முன்னாள் தமிழக சபாநாயகர் தமிழ்க்குடிமகன்
பதில்: அவர் இறந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

5. புன்னகை அரசி கே.ஆர். விஜயா
பதில்: நன்றாகவே இருக்கிறார் என நினைக்கிறேன். சீரியல்களில் வந்தார், அங்கும் அதிகம் காணவில்லை இப்போதெல்லாம்.

6. தேவர் பிலிம்ஸ் வெற்றி இயக்குனர் எம்.ஏ. திருமுகம்
பதில்: அவரும் இறந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாயிற்றே.

7. பம்பாய் சினிமா புகழ் அழகன் அரவிந்தசாமி
பதில்: நடிகர் அரவிந்தசாமி, சினிமா வை விட்டு விலகி, பிசினசில் இறங்கி விட்டார்

8. மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன்
பதில்: திரைப்படம் டைரக்‌ஷனில் இறங்கி விட்டார். எம்மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய படங்கள்.

9. நகைச்சுவையில் வடிவேலுவுடன் கல்ககிய கோவை சரளா
பதில்: ஏன் அவருக்கென்ன? இன்னும் படங்களில் நடிக்கிறார் போலிருக்கிறதே.

10. மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை
பதில்: மூலிகைப் பெட்ரோல் ராமர் பிள்ளைன்னு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு பரபரப்பான பேச்சிருந்துச்சு. ஆனா இவருடைய தயாரிப்பு ஆய்வுக்கூட சோதனையில தோல்வியடைஞ்சிருச்சு. “தமிழ் தேவி” மூலிகை எரிபொருள்ங்கற பேருல இவருடைய கண்டுபிடிப்பு சில காலம் விற்பனை செய்யப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்புக்கு சீனக் காப்புரிமை கோரி வின்னப்பித்திருந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இவருடைய தயாரிப்பை விநியோகம் செய்யப் போவதாகவும் சொன்னது. இவர் தனது மனைவியையும் மகளையும் பிரிந்திருப்பதாக வந்த செய்தியே பத்திரிகைகளில் கடைசியாக இவரைப்பற்றி வந்த செய்தி. நன்றி விஜய் கோபாலஸ்வாமி


அனானி (09.01.2010 மாலை 05.52-க்கு கேட்டவர்)
டோண்டுவுக்கு பவர் கொடுக்கப்பட்டால் இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார்?
பதில்: (எல்லாவற்றுக்கும் சேர்த்து) கடவுள் புண்ணியத்தில் அந்த பவர் டோண்டுவுக்கு கிடைக்காது.
இருந்தாலும் கற்பனை செய்து கொள்ள என்ன தடை? பதில்கள் தந்தால் போச்சு
1. ஆந்திர தெலுங்கான விவகாரம்
பதில்: இரு தரப்பினருக்கும் சரியான உதை புட்டத்தில். ஆந்திராவின் மேம்பாட்டை கவனிக்காமல் இது என்ன சிறுபிள்ளைத்தனமா சண்டை. போடுங்க ஆளுக்கு 30 தோப்புக்கரணம் என்று சொல்வேன்.

2. ஆந்திர முனனாள் முதல்வர் மரணத்தில் உள்ள மர்மம்
பதில்: 21-B பேக்கர் தெரு, லண்டனில் வசிக்கும் ஷ்ர்லாக் ஹோம்ஸை கூப்பிடுவேன்.

3. ஸ்டாலின் அழகிரி ஆடு புலி ஆட்டம்
பதில்: இருவருக்குமே நிஜமாகவே ஆடுபுலி ஆட்டம் போட்டியாக வைத்து ஜெயிப்பவர் முதன் மந்திரி, தோற்பவருக்கு கலைஞர் இதயத்தில் இடம் என கண்டிஷன் போட வேண்டியதுதான்.

4. தமிழக காங்கிரஸில் உள்ள தள்ளு முள்ளு
பதில்: 1. எல்லா கோஷ்டி தலைவர்களுக்கும் ஆளாளுக்கு ஒரு கோப்பை தேநீர் கையில் பிடித்து கொள்ளச் செய்து, பீக் அவரில் சென்னை போக்குவரத்து கழகத்தின் முழுதும் பயணிகளால் நிரம்பிய பேருந்தில் தேநீர் சிந்தாமல் ஏறி இடம் பிடிக்கும் போட்டி வைக்க வேண்டும், 2. அடுத்த போட்டியாக உண்மைத் தமிழனின் 5000 சொற்கள் அடங்கிய ஏதேனும் ஒரு பதிவைப் படித்து அதற்கு precis writing எழுதச் சொல்ல வேண்டும், 3. டோண்டு ராகவனுடன் இஸ்ரேல் பற்றி அரை மணி நேரம் விவாதிக்க வேண்டும், 4. 500-க்கும் மேலாக பின்னூட்டங்கள் வந்துள்ள வினவு பதிவு ஒன்றின் பின்னூட்டங்களை கால வாரியாக அடுக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த தலைவர் ஈடுபட்டு மூளை பேதலிக்காமல் வருகிறாரோ அவருக்கே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சோனியாவுக்கு எக்ஸ்க்ளூசிவாக ஜால்ரா அடிக்கும் முன்னுரிமை, அதாவது தலைவர் பதவி தரப்படும்.

5. அதிமுகவில் உள்ள உட்கட்சி தேர்தல் விவகாரம்
பதில்: ஜெயலைதா மேல் சசிகலாவின் ஹோல்ட் என்ன என்பதைத் தெரிந்து அதை நீக்க ஆவன செய்து, உட்கட்சி தேர்தலை நடத்துவேன்.

6. ஜக்குபாய் திருட்டு சீடி பூதம்?
பதில்: பிடிபட்டவருக்கு தண்டனையாக ஜக்குபாய் சீடியுடன், குருவி, வில்லு ஆகிய படங்களைன் சீடிக்களையும் ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கச் செய்ய வேண்டும், ஒரு வார காலத்துக்கு விடாமல்.

7. மீனவர் புதுச் சட்டம் பற்றிய சர்ச்சை
பதில்: புதுச் சட்டத்தின் வரைவை மீண்டும் பரிசீலிக்க செய்வேன். இப்போதுள்ள சட்டவரைவில் அதிகாரிகள் மீனவர்களிடம் அதிக மாமூல் வாங்கும் வழிதான் பெரும்பாலும் உள்ளது.

8. நெல்லையில் மந்திரிகளின் மனிதாபிமானமற்ற போக்கு
பதில்: தாங்களும் இம்மாதிரி ஒரு நாள் ரோடில் அடிப்பட்டு அநாதையாகக் கிடக்க நேரிடலாம் என்ற பயத்தை அவர்களுக்கு வரவழைக்க ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

9. நடக்கும் மணல்கொள்ளை, மரக் கடத்தல்
பதில்: பார்த்தவுடன் சுடும் உத்தரவுதான் சரி.

10.உணவுப்பொருட்களின் விஷ விலை ஏற்றம்

பதில்: பதுக்கல்காரர்களுக்கு கடும்தண்டனை. அதே சமயம் இடைத்தரகர்களை முடிந்த அளவுக்கு ஒழித்தல்

அனானி (12.01.2010 காலை 08.35-க்கு கேட்டவர்)
இந்த நிகழ்வுகள் பற்றி உங்கள் (நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் டைப்பில்) விமர்சனம்?
1.தமிழக சட்டசபை கூட்ட கடைசி நாளில் ஜெ.ன் தமிழகத்தின் பொருளாதார நிலமை பற்றிய குற்றச்சாட்டுகள்

பதில்: தமிழகத்தின் நிதிநிலைமை கலைஞரின் கட்டுப்பாடற்ற இலவசக் கலாச்சாரத்தல் குட்டிச்சுவரை நோக்கித்தான் செல்கிறது. ஜெ-யின் பேச்சு சரியாகத்தான் உள்ளது.

2. எம்ஜிஆரை நினைவுகூறும் கலைஞரின் பேருரை
பதில்: எம்.ஜி.ஆர் இருந்தவரை முதலமைச்சர் பதவி கலைஞருக்கு எட்டாக்கனி என்ற விஷயம் கலைஞர் மறக்கக்கூடியதல்ல. ஆகவே அவர் எம்.ஜி.ஆரை புகழ்ந்தாலும் அதில் வயிற்றெரிச்சல்தான் அதிகமாக இருக்கும். 40-ஆண்டுகால நண்பருக்கு அவர் வடிவமைத்த நினைவுச்சின்னம் டிராஃபிக் கான்ஸ்டபிளின் நிழற்குடையைத்தான் நினைவுபடுத்தியது. அதுவும் கலைஞரின் வயிற்றெரிச்சலையே பிரதிபலித்தது. எம்.ஜி.ஆர் ரேஞ்சுக்கு கலைஞரால் மக்கள் பிரியத்தை ஒருபோதும் சம்பாதித்துக் கொள்ள முடியாது என்பது எல்லோரும் அறிந்ததே. கலைஞரும் அதை அறிவார்.

3. கர்நாடக முதல்வர் பற்றிய கெளடாவின் அநாகரீகரமான விமர்சனம்
பதில்: இந்த வீடியோவைப் பாருங்கள். இவரெல்லாம் நம் நாட்டு பிரதமராக இருந்தார்கள் என எண்ணுவதே அவமானமாக உள்ளது.

11.01.2010 அன்று டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் இந்த இணையப்பப்பக்கத்தில் வந்த ஒரு கருத்து நிலைமையை நன்றாக சம்மரைஸ் செய்துள்ளது.

N Indiresh,Bangalore,says:Just because once, by fluke, Shri Devegowda became prime minister he cannot presume himself as most intelligent and knows everything. Media portrayed him as most intelligent politician ( actually most cunning)and has to obey him for all his advises. First let him introsepct whether he was eligible to become prime minister of India and he has to recollect how he was made scapegoat of the situation which made him loose power permanently throughout the life. He is still under the impression his contribution to the country's prosperity is applaudable. If he introspects he will realise whether he was eligible for the highest post. It is pity to note that he even condemned IT icon Shri Narayanamurthy, asking him what he contributed for the country. He failed to notice, the growth of IT engine is because of Shri Narayanamurthy which inturn stopped brain drain of young technocrats. The momentum initiated by Infosys in IT sector created enormous jobs in India apart from giving jerk to Real estate, Construction sector, steel industry, Automobile sector etc apart from appreciation of land value accross the country. Insteading of contributing to the nation Shri Devegowda was contributed by our beloved country by way of political rehabilitation for his family which rose from the scrach. Wearing of Mask of farmer yielded rich dividends to his family. If country has to flourish media must stay away from him so that budding politicians can be kept away from the cunning political teaching cultivated by Shri Gowada thereby Nation can be saved. His outbursts by way of filthy language shows his standard.
[11 Jan, 2010 1739hrs IST]


4. முலாயசிங்கிற்கு அமர்சிங்கின் சூப்பர் பஞ்ச்
பதில்: இதையா சொல்கிறீர்கள்? சமாஜ்வாதி கட்சியின் தலைவருக்கெதிராகவே கிரிமினல் வழக்குகள் இருந்ததாக படித்த ஞாபகம். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என ஏற்கனவே கவுண்டமணியானந்தா ஸ்வாமிகள் கூறியுள்ளாரே, கேக்கலையா?

5. பப்ளிக் செக்டார் பங்குகள் (கம்பெனிகளை முன்னேற்ற என்னும் வாதத்துடன்) விற்பனை முஸ்தீபு (பங்கு விற்பனைக்குபிறகும் திணறும் எம்டிஎன்எல்)
பதில்: அவ்வாறு பங்குகள் விற்கப்பட்ட கம்பெனிகளில் அரசின் தலையீடு அப்படியே இருந்தால், வேறு என்ன எதிர்பார்க்க இயலும்?


மீண்டும் அடுத்தவாரம் கேள்விகள் இருந்தால் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/13/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 16 & 17)

எபிசோட் - 16 (11.01.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
அடியாள் சிங்காரம் இரைக்க இரைக்க ஓடிவந்து நாதனிடம் இறந்து போனதாகக் கருதப்படும் அரசியல்வாதி வையாபுரி இன்னும் உயிருடன் இருப்பதாகக் கூற, நாதன் முதலில் நம்பவில்லை. இருப்பினும் அவரை பிடிவாதமாக தன்னுடன் அழைத்துச் சென்று வையாபுரி போலவே இருக்கும் அந்த மனிதரைக் காண்பிக்கிறான். நாதனும் திகைக்கிறார். அவரிடம் பேச்சு கொடுத்ததில் முதலில் சற்றே ரிசர்வ்டாக இருந்து பம்மும் அவர் தான் வையாபுரியின் இரட்டைப் பிறவி என்றும், தன் பெயர் நல்லத் தம்பி என்றும் கூறுகிறார்.

நாதன் அவர் தங்குவதற்கு தனது ஃபிளாட்டை தருகிறார். முதலில் தயங்கும் வசுமதியும் நாதன் சொல்லுக்கு கட்டுப்படுகிறாள். பிறகு வசுமதியிடம் சிங்காரம் தனக்கும் நாதன் வீட்டில் ஏதேனும் எடுபிடி வேலை போட்டுத் தருமாறு கேட்க, அவளும் நாதனுடன் இது பற்றிப் பேசுவதாக வாக்களிக்கிறாள்.

நாதன் வீட்டு சமையற்கார மாமி தெருவோடு போய் கொண்டிருக்கையில் வேம்பு சாஸ்திரியின் மனைவி சுப்புலட்சுமியின் கண்களில் படுகிறாள். அவள் அழைப்பை ஏற்று அவள் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு சுப்புலட்சுமியும் அவள் நாத்தனாருமாக சமையற்காரியிடம் பேச்சு கொடுக்கின்றனர். நாதன் வீட்டில் வேம்பு சாஸ்திரிக்கு விரோதமாக மூட் இருபதை உணர்ந்து சுப்புலட்சுமி வருத்தப்படுகிறாள். அவளும் வேம்பு சாஸ்திரியுமாக திருநள்ளாறு சென்று சனிபிரீத்தி செய்ய வேண்டும் என சுப்புலட்சுமியின் நாத்தனார் கூறுகிறார்.

திருநள்ளாறு ஏன் என சோவின் நண்பர் கேட்க, அதற்கு சோ அந்தத் தலத்தில்தான் நளமகாராஜா சனியால் பீடிக்கப்பட்ட தனது பிரச்சினையிலிருந்து மீண்டதாகக் கூறுகிறார். அந்தத் தலம் பற்றி திருஞான சம்பந்தர் கூறிவதையும் அவர் இங்கு பாட்டாக சொல்கிறார். அப்பாடல்,

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்
துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர்
வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள்ளாறே


இதன் பொழிப்புரை:
விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலை மங்கையை மேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும்.

திருநள்ளாற்றுக்கான வேறு தல புராணங்களையும் கூறுகிறார். முக்கியமாக அங்கிருக்கும் மண்டைக்குளம் பற்றியும் கூறுகிறார். முசுகுந்தன் என்பவனுக்கு இந்திரன் பல சிவலிங்கங்களை தந்தது பற்றியும் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்றுதான் இங்குள்ள சிவலிங்கம் என்றும் சொல்கிறார்.

போகிற போக்கில் வசுமதி சாம்பு சாஸ்திரிகளை வேலையை விட்டு நீக்கியது பற்றியும் வாய்தவறி சமையற்காரமாமி கூறிவிட்டு பயப்படுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 17 (12.01.2010) (சுட்டி - 1 & சுட்டி - 2)
மன அமைதிக்காக கோவிலுக்கு வரும் நாதன் பாகவதரை அங்கு சந்திக்கிறார். மனச்சஞ்சலம் பற்றி அவர் பாகவதரிடம் கூற மனத்தின் இயல்புதான் என்ற பொருளில் பாகவதர் பதிலளிக்கிறார்.

அது பற்றி தனது நண்பர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சோ அவர்கள் யமன் நசிகேதசுக்கு செய்த உபதேசத்தின் ஒரு பகுதியை விளக்குகிறார். உடல்தான் தேர், புத்திதான் தேரோட்டி மனம் கடிவாளம், இந்திரியங்கள் குதிரைகள், அதில் பயணம் செய்வது ஆத்மா. மனம் என்னும் கடிவாளத்தின் துணையால் புத்தி இந்திரியங்களை சரியானபடி வழிகாட்ட, தேர் முன்னால் நகர்கிறது. ஆகவே மனம் போன போக்கில் அதை விடக்கூடாது என சோ கூறுகிறார்.

குருகுல வாசம் போன அசோக் குருவாக பாகவதரைத் தேடாது சாம்பு சாஸ்திரிகளை தேடியது குறித்து வருந்துகிறார். அசோக் ஒரு நல்ல குருவின் தேடலில் இருக்கிறான். அவ்வாறு தேடும்போது குருவைத் தேர்ந்தெடுப்பது அவன் உரிமை எனக் கூறுகிறார். பிறகு அசோக் பிட்சை எடுத்து உண்பதையும் நாதன் சங்கடத்துடன் கூற, அது அதி உன்னத நிலை என பாகவதர் சொல்லிவிடுகிறார். இப்போதைக்கு வசுமதிக்கு இந்த விஷயம் இப்போதைக்குத் தெரிவது நல்லதில்லை என இருவருமே கருதுகின்றனர்.

வரும் சங்கடஹர சதுர்த்திக்கு வசுமதியை கோவிலுக்கு அழித்து வந்து பிள்ளையாரிடம் பாரத்தை போடுமாறு பாகவதர் கூறுகிறார். சங்கடஹர சதுர்த்தி பற்றீ பாகவதர் கேட்கிறார். விநாயக சதுர்த்தி வளற்பிறையில் வருகிறது. அதே சமயம் தேய்பிறை சதுர்த்திக்கான தேவதை விநாயகரை தனக்கும் முக்கியத்துவம் தருமாறு கேட்டதற்கேற்ப விநாயகரால் முக்கியத்துவம் தரப்பட்டதே சங்கட ஹர சதுர்த்தி என சோ கூறுகிறார். அதில் பூஜை செய்தால் சங்கடங்கள் விலகி பிரச்சினைகள் தீரும் எனவும் அவர் கூறுகிறார்.

ஜட்ஜின் மகள் பிரியா சட்டப்படிப்பை கரஸ்பாண்டன்ஸ் கோர்சில் முடித்து விட்டு ஒரு பிரபல வக்கீலிடம் ஜூனியராகச் சேர தனது தந்தை கூறியபடி வருகிறாள். அவளை இண்டர்வ்யூ செய்த வக்கீல் திருப்தியுடன் அவளை ஜூனியராக ஏற்றுக் கொள்கிறார்.

நாதனிடம் வசுமதி சிங்காரத்தை வீட்டிலேயே எடுபிடி வேலைக்கு வைத்துக்கொள்ளச் சொல்கிறாள். முதலில் தயங்கும் நாதன் பிறகு ஒத்துக் கொள்கிறார். அதே போல சிங்காரம் வேலைக்கு சேருகிறான். அசோக் விஷயம் அறிந்து வருந்துகிறான். சாம்பு வீட்டிற்கருகில் நின்று அசோக் என்ன செய்கிறான் என்பதைப் பார்க்க நளினி அவனிடம் சொல்கிறாள். அசோக் பின்னால் செல்லும் அவன் பிட்சை எடுப்பதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அசோக் ஒரு வீட்டு வாசலில் நின்று பிட்சை கேட்கிறான். அந்த வீட்டுப் பெண்மணி அவனிடம் ஒன்றும் இல்லை எனக்கூற, அவளது கணவர் அவளை கண்டித்து பிட்சை போட வைக்கிறார். அசோக் முகத்தில் உள்ள ஒளியால் அவர் கவரப்படுகிறார்.

சங்கடஹர சதுர்த்திக்காக கோவிலுக்கு வந்துள்ளனர் நாதனும் வசுமதியும். அங்கு குடுமி வைத்த ஒரு பிள்ளை நிற்பதைப் பார்த்த வசுமதி அவனை அசோக் என தவறாக அடையாளம் கண்டு கொண்டு அவனருகில் சென்றால் அது வேறு யாரோ. குழப்பத்துடன் நிற்கும் அவளிடம் சிங்காரம் பதற்றத்துடன் வந்து அசோக் பிச்சை எடுக்கிறான் எனக்கூற, அது பிச்சையல்ல பிட்சை என திருத்துகிறாள் வசுமதி. நாதனிடம் வந்து அதுகுறித்து அவள் குமுற, நாதன் அது தனக்கு முதலிலேயே தெரியும் எனக் கூறுகிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் வேதம் படித்துக் கொண்டிருக்கும் அசோக்கிடம் வந்து சிங்காரம் “தாய் தந்தையரை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அவன் படிக்கும் வேதம் கூறவில்லையா, அப்படியானால் அது என்ன வேதம்” எனக் கேட்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/11/2010

ஏதோ என்னாலான உதவி

பெங்களூருவிலிருந்து நண்பர் ஸ்ரீராம் சிவராமன் அனுப்பிய மின்னஞ்சலை இங்கே தந்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.

Dear Raghavan Sir,

I am Sriram from Bangalore. Hope you can recollect that we have interacted over phone few times.

I am a member in TamilBrahmins.Com website which is doing good service for our community. In that regard, I have volunteered for the Vivaha Sangamam (Parents Meet) to be held in Bangalore on 24th of this month. For giving publicity, I need your help by posting the
below content in your blog. Please help!


விவாஹ சங்கமம் - ஜனவரி 24 - பெங்களுரு

கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். பொருத்தமான வரன் கிடைக்க பல நாள் அலைய வேண்டியிருக்கும் பலருக்கு. அவ்வாறு வரன் தேடும் பிராமின் சமூகத்தினருக்கு உதவும் விதமாக http://www.tamilbrahmins.com/ அமைப்பு வரும் ஜனவரி 24 அன்று, மல்லேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு விவாஹ சங்கமம் (பெற்றோர்கள் சந்திப்பு) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழ் பிராமின் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பிராமின் சமூகத்தினரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! கலை, கலாச்சாரம் மற்றும் பக்தியினை வளர்க்கும் விதமாக பிராமின் சமூகத்தினருக்கு ஒரு சிறந்த மேடையாக விளங்கும் http://www.tamilbrahmins.com/ , பக்தி பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும் கேட்க விரும்புவோருக்கு ஓர் வரப்ரசாதம்!

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர், http://www.tamilbrahmins.com/ வலைதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவாஹ சங்கமம் குறித்த விவரங்களை வலைதளத்தின் வலப்புறம் உள்ள இணைப்பு மூலம் எளிதில் அறியலாம்.
சேவை நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த விவாஹ சங்கமம் நிகழ்ச்சி பற்றி தங்களது நண்பர்களுக்கு தெரிவித்து, அவர்களது இல்லங்களில் கெட்டி மேளம் ஒலிக்க அவசியம் உதவி செய்யுங்கள்!


--
Thanks,
Sriram Sivaraman

ஓக்கே ஸ்ரீராம் அவ்வாறே செய்து விட்டேன். உங்கள் முயற்சிகள் நல்லபடி நடக்க எனது ஆசிகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது