இத்தலைமுறையைச் சேர்ந்த எவ்வளவு பேருக்கு ஜேம்ஸ் தர்பரைத் தெரிந்திருக்கும் எனத் தெரியவில்லை. இன்னும் இளமையாக இருப்பதாக உணரும் என்னுடைய சமீபத்தியக் கல்லூரிக் காலங்களில் என்னைப் பாதித்த அமெரிக்க எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். அவர் கட்டுரையைப் படிக்கும்போது எப்படி அதை முடிப்பார் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கும். என்னை மிகவும் பாதித்த அவருடைய சிறுகதை போன்ற ஒரு பதிவு இதோ.
உலக மகா யுத்தம்-XII மனித நாகரிகத்துக்குச் சாவுமணி அடித்தது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஊர்கள், நகரங்கள் மற்றும் கிராமங்கள் காணாமலேயே போயின. அவற்றுடன் சேர்ந்து அழிந்தன தோப்புகள், காடுகள் மற்றும் தோட்டங்கள்; கலை படைப்புகள் கூடத் தப்பிக்கவில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே விலங்குகளை விடக் கீழ்நிலைக்குச் சென்றனர். தைரியம் இழந்து, விசுவாசம் துறந்து நாய்கள் கூடத் தோற்றுப்போனத் தத்தம் எஜமானரை விட்டு விலகின. புத்தகங்கள், ஓவியங்கள் மற்றும் இசைச் செல்வங்கள் உலகிலிருந்து மறைந்தன. மக்கள் கூட்டங்கள் ஒன்றுமே செய்யாது உட்கார்ந்து வெட்டிப் பொழுது போக்கின. பல வருடங்கள் இவ்வாறே கடந்தன. உயிர் தப்பிப் பிழைத்த சில படைதளபதிகள் கூட கடைசி யுத்தம் எதை ஸ்தாபித்தது என்பதை மறந்தனர். இளைஞர்களும் யுவதிகளும் உணர்ச்சி ஏதுமின்றி ஒருவரை ஒருவர் பார்த்து வளர்ந்தனர். காதல் என்பது உலகை விட்டு நீங்கியது.
ஒரு நாள்: பூவையே பார்த்தறியாத ஓர் இளம்பெண் எதேச்சையாக ஒரு பூவைக் கண்டாள். உலகின் கடைசி பூ அது; தன் கடைசி மூச்சில் இருந்தது. தன் கூட்டாளிகளிடம் அப்பூவைப் பற்றிக் கூறினாள். அது சாகாமல் இருக்க ஏதேனும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாள். ஒருவர் அவள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை, ஓர் இளைஞனைத் தவிர. அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பூவைப் பராமரித்தனர். அது மறுபடி வாழத் துவங்கியது. ஒரு நாள் ஒரு தேனீ அப்பூவிடம் வந்தது, கூடவே ஒரு பாடும் பறவை. சீக்கிரம் இன்னொரு பூ உருவாயிற்று, பல பூக்கள் உருவாயின. தோப்புகளும் காடுகளும் மறுபடி வீறு கொண்டெழுந்தன. இளம் பெண்ணுக்கு தன் தோற்றத்தில் அக்கறை பிறந்தது. அவளைத் தொடுவது தனக்கு சந்தோஷம் தருகிறது என்பதை இளைஞன் கண்டுக்கொண்டான். உலகில் காதல் மறுபடியும் தோன்றியது.
அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலசாலிகளாவாகவும் ஆரோக்கியமானவர்களாயும் விளங்கினர். ஓட, சிரிக்க கற்றுக்கொண்டனர். நாய்கள் தங்கள் வனவாசத்திலிருந்துத் திரும்பின. எல்லோரும் வீடுகள் கட்டக் கற்றுக் கொண்டனர். ஊர்கள், நகரங்கள், கிராமங்கள் உருவாயின. இசை திரும்ப வந்தது. நாடோடிப் பாடகர்கள், கழைக்கூத்தாடிகள், தையற்காரர்கள், சக்கிலியர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் மற்றும் சிற்பிகள் உருவாயினர்; கூடவே வந்தனர் சிப்பாய்கள், லெப்டினன்டுகள், கேப்டன்கள், தளபதிகள் பிரதம சேனாதிபதிகள் மற்றும் விடுதலை வீரர்கள். சிலர் ஓரிடம் சென்று வசித்தனர், மற்றவர் வேறிடம். கூடிய சீக்கிரம் சமவெளிகளுக்குச் சென்றவர்கள் தாங்கள் மலையிலேயே இருந்திருக்க வேண்டும் என எண்ணினர், மலைக்குச் சென்றவர்களோ சமவெளியே நல்லது என நினைத்தனர். கடவுள் பெயரில் போராடிய விடுதலை வீரர்கள் திருப்தியின்மைக்குத் தூபம் போட்டனர். ஆக மறுபடி ஒரு உலக மகா யுத்தம் வந்தது, இம்முறை எல்லாம் சுத்தமாக அழிந்தன. உலகில் ஒன்றுமே மிஞ்சவில்லை, ஒரு மனிதன், ஒரு பெண் மர்றும் ஒரு பூவைத் தவிர.
வசந்தன் அவர்கள் பதிவைப் பார்த்ததும் எனக்கு திடீரென இக்கதை ஞாபகம் வந்தது. பார்க்க ஹைப்பர்லிங்க்:
http://vasanthanin.blogspot.com/2005/05/blog-post_111495556338876908.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
22 hours ago
6 comments:
ஜேம்ஸ் தர்பரைத் உண்மையிலேயே எனக்குத்தெரியாது.
என்னார்
எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று ஜேம்ஸ் தர்பரின் 'The Secret Life of Walter Mitty' சிறுகதைப்போட்டி அறிவிப்பில் இதனை பற்றி குறிப்பிட்டிருந்தேன், ஆனால் ஒரு நாள் கழித்து முடிவு அறிவிக்கும் நேரத்தில் சொல்லலாம் என்று எடுத்துவிட்டேன்...
நம் எல்லாரிலும் ஒரு வால்டர் மிட்டி உண்டு.. யாரையும் 'பெரிசு' என்று எண்ணாமல் மரியாதையாக பார்க்க வைக்கும் சிறுகதை. (ஒரு குறிப்பு: நான் இந்த தலைமுறைதான்)
"ஜேம்ஸ் தர்பரை உண்மையிலேயே எனக்குத் தெரியாது."
இழப்பு உங்களுக்குத்தான் என்னார் அவர்களே. அமெரிக்க நூலகத்தில் கிடைக்கும். தேடி எடுத்துப் படிக்கவும் மனிதர் அற்புதமாக கார்டூன்கள் கூட வரைவார். ஞாயிறு மாலைகளில் திருவல்லிக்கேணி பைக்ராஃட்ஸ் சாலை நடைபாதை புத்தகக் கடைகளில் அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாராட்டுக்கள் முகமூடி அவர்களே. இளைய சமுதாயத்தின் மேல் என் நம்பிக்கை வலுக்கிறது.
'The Secret Life of Walter Mitty' பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் படித்ததில்லை. அவ்வகையில் என்னை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
'The Secret Life of Walter Mitty' இங்கே இருக்கிறது
நன்றி முகமூடி அவர்களே, கதை மிக நன்றாய் இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment