வால்பையன்:
1. சுவாரசியமான கேள்வி கேட்க தகுதிகள் வேண்டுமா?
பதில்: கண்டிப்பாக வேண்டும். பல விஷயங்கள் அறிந்திருக்க வேண்டும். யாரை கேள்வி கேட்கிறோமோ அவர்தம் நிறை குறைகளையும் அறிய வேண்டும். அவர்களது சக்தியையும் புரிந்து கொள்ள வேண்டும். என்னிடம் மொழிபெயர்ப்பு தொழிலை பற்றிக் கேட்டால் பதில் சுவாரசியமாக தர இயலும். என்னைப் போய் ஜாவா ப்ரொக்ராம்மிங் பற்றி கேட்டால் என்ன கிடைக்கும்? சற்றே திருதிருவென முழிப்பேனாக இருக்கும். பொதுவான விஷயங்களை பற்றி கேட்டால் எனக்கு தெரிந்ததை கூறுவேன். தெரியாததை புதிதாக கற்றும் கூறலாம்.
2. //அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அம்சமான பிகரைப் பார்க்கலாம்.// உங்கள் வயது எட்டி பார்க்கிறது, அந்த கிழவி உங்களுக்கு பிகரா?
பதில்: 44 வயதெல்லாம் ஒரு வயதா? உடம்பை என்ன ட்ரிம்மாக வைத்து கொண்டிருக்கிறார் அவர் என்பதைப் பாருங்கள். அவரைப் போய் கிழவி என்று கூறுவது அநீதி. 62 வயதாவ்தில் ஒரு சௌகரியம் இதுதான். 44-ம், 34-ம், 24-ம் எல்லாமே ஃபிகர்கள்தான். நல்ல wide சாய்ஸ் இல்லையா?
3. பிரவுசரில் உலாவும் போது பாப்அப்பாக பிட்டு பட சைட் வந்தால் பார்பீர்களா?
இல்லை க்ளோஸ் பண்ணி விடுவீர்களா? (நீங்க தான் எது வேண்டுமானாலும் கேக்கலாம்னு சொல்லிருக்கிங்க)
பதில்: பிட்டு பட சைட்டில் ஒரு அபாயம் உண்டு. அதுதான் வைரஸ்களுக்கான முக்கிய இருப்பிடம். அப்படி இல்லை என்னும் பிட்டு பட சைட்டுகளை பார்ப்பதில் என்ன ஆட்சேபணை? ஆனால் அதை எப்படி நிச்சயமாக தெரிந்து கொள்வது என்பதுதான் 64000 டாலருக்கான கேள்வி.
4. என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறீர்கள்?
பதில்: தேவன் அவர்கள் எழுதிய சி.ஐ.டி. சந்துருவை படித்து கொண்டிருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்துக்கு சாரு நிவேதிதா மீட்டிங்கிற்கு போன போது வாங்கியது. கடைசி அத்தியாயம் மிஸ்ஸிங். பைண்டிங்கில் கோட்டை விட்டு விட்டார்கள் என நினைக்கிறேன். பத்ரி அவர்களுக்கு ஃபோன் செய்தேன். அவரும் நல்ல பிரதி தருவதாக கூறினார். இன்று (வியாழன்) எனக்கு மெனக்கெட்டு ஃபோன் செய்து வந்து வேறு பிரதி வாங்கி கொள்ளும்படி அன்புடன் கூறினார். நானும் சென்று மாற்றிக் கொண்டு வந்தேன். நான் திருப்பியளித்த பிரதியை உடனேயே பிழையானது என கட்டம் கட்டி தனியாக வைத்து விட்டார்கள். போன இடத்தில் இரா. முருகன் சிறுகதைகள் தொகுப்பையும் வாங்கினேன். அடுத்தது அதைத்தான் படிக்க வேண்டும். பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு மறுபடியும் புத்தகம் படிக்கும் வழக்கம் வர ஆரம்பித்துள்ளது. (மற்றப்படி போன இடத்தில் எழுத்தாளர் லா.சா. ராமாமிர்தம் அவர்களது புதல்வரை சந்தித்தது கூடுதல் போனஸ்.
5. இந்திய வங்கிகள் திவாலாகும் வாய்ப்புள்ளதா?
பதில்: அப்படி எல்லாம் ஆகாது என்றுதான் நினைக்கிறேன். நம்மூர் வங்கிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள ரொக்கம்:கையிருப்பு விகிதம் மிக அதிகம். ரூபாயை அன்னியச் செலாவணியாக மாற்றுவதில் இருக்கும் கட்டுப்பாடுகளால் நமது கரென்சிகளுக்கு அவ்வளவாக பாதிப்பு இருக்காது என்றுதான் எண்ணுகிறேன். இது பற்றி பொருளாதார நிபுணர்கள் இன்னும் விஸ்தாரமாக கூறுவார்கள். நான் பொருளாதார ஆர்வலன் மட்டுமே.
6. உங்கள் ஆசை அமெரிக்கா பொருளாதாரத்தில் மண்ணை கவ்வுகிறதே! உங்கள் கருத்து?
பதில்: அமெரிக்கா உலகுக்கே சுதந்திர பொருளாதாரம் கற்று கொடுத்தது. அதுவே தனது சொந்த பாடங்களை மறந்துதான் வினை. யாராய் இருந்தால் என்ன, சொதப்பினால் சங்குதான். வரவு எட்டணா, செலவு பத்ததணா, அதிகம் ரெண்டணா என்று இருந்தால் கடைசியில் துந்தணா என்று அக்காலத்திலேயே கூறிவிட்டனர். அமெரிக்கா செய்த முக்கியத் தவறே சேமிப்பிற்கு மிக மிஞ்சிய அளவில் செலவு செய்ததேயாகும். கிரெடிட் கார்டுகளால் திவாலானது பற்றி அறுபதுகளிலேயே ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டன. சுயக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். கடனை திருப்பித் தரும் சக்தி இல்லாதவர்களுக்கெல்லாம் நம்மூரில் செய்வது போலவே துரத்தி துரத்தி கடன் தரப்பட்டது. அமெரிக்க அரசே பொறுப்பற்று கடன் வாங்கியது. திவாலான பாங்குகளை அரசுமயமாக்கி இந்தியாவின் சோஷலிச அரசு அறுபதுகளில் செய்த தவற்றையே அதுவும் செய்கிறது என்பதை பார்க்கும்போது திகைப்பாகவே உள்ளது. எப்படி மீண்டு வருவார்கள் என்பதை கவலையுடன் நோக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் வெற்றி பெறாவிட்டால் இந்தியா உட்பட மற்ற நாடுகளும் பாதிக்கப்படும் என அஞ்சுகிறேன்.
7. நீண்ட கால முதலீட்டிற்கு நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்?
பதில்: ஒரு சொந்த வீடு இருப்பது மிக அவசியம். அதை குறி வைத்து சேமிப்பது நல்லது. பிறகு வீட்டை வாங்குவது அல்லது கட்டுவது என்பது நீண்ட கால முதலீட்டில் மிக முக்கியம். அடுத்த முன்னுரிமை கையில் தேவையான பணம் திரட்டும் முறையில் சேமிப்பு முதலீடு செய்யப்பட வேண்டும். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை பலர் லாபகரமானதில்லை என ஒதுக்கினாலும் இந்த விஷயத்தில் அவை உபயோகமானவை என்பது எனது கருத்து. பிறகு தங்கம் வாங்கலாம். எல்லாம் உங்கள் சேமிப்புத் திறனை அடிப்படையாக கொண்டவை. பிறகு வருவன கம்பெனி பங்கு பத்திரங்கள். அதற்கெல்லாம் மிகுந்த அறிவு தேவைப்படும். எனக்கு அது இல்லை, ஆகவே நான் அவற்றின் பக்கமே போகவில்லை.
சேமிப்பை பற்றி பேசும்போது நான் வேறு தருணத்தில் எழுதிய வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.
அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.
எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.
இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்.
ராஜா:
1. ஹிந்தி படம் "ஒரு புதன்கிழமை" A Wednesday பார்த்து விட்டீர்களா? பட இறுதியில் நஸீருத்தீன் ஷா பேசும் சொற்பொழிவு எப்படி?
இல்லை. இன்னும் பார்க்கவில்லை. அனுபம் கேரும் நஸ்ருதீன்ஷாவும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் என கேள்விப்பட்டேன். கச்சிதமாக ஒன்றரை மணி நேரத்தில் முடிவடையும் படம் என்று வேறு கூறப்படுகிறது. வாய்ப்பும் நேரமும் கிடைத்தால் பார்க்கிறேன். (அமிதாப் பச்சன் என பிழையாக எழுதியிருந்ததை திருத்திய அனானிக்கு நன்றி)
Arun as Butterfly:
1.இந்திராவின் எமர்ஜென்சி காலம் தொடர்பாக பல்வேறு செய்திகள். எம்ர்ஜென்சி காலம் தொடர்பாக உங்களின் கருத்து என்ன? (விரிவாக தனி பதிவாக சொன்னால் மிக்க நலம்) :).
பதில்: நீங்கள் விரும்பியபடியே பதிவு ஏற்கனவேயே போட்டுள்ளேனே. அதை இங்கேயே மறுபடியும் தருவேன்.
ஜூன் 12, வருடம் 1975. இந்திரா காந்தி தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து அவருடன் போட்டியிட்ட ராஜ் நாராயண் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருந்தார். அதன் தீர்ப்பு வந்து நாட்டையே தலைகீழாக்கியது. வழக்கை விசாரித்த நீதியரசர் சின்ஹா அவர்கள் இந்திரா காந்தி பதவியைத் தவறாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை உறுதி செய்து அவர் வெற்றி செல்லாது என்று அறிவித்தார். அது மட்டுமின்றி அவர் ஆறு வருடங்களுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று வேறு தீர்ப்பு கொடுத்து வைத்து விட்டார்.
இந்திரா காந்தி இந்தத் தீர்ப்பை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. ஏன், அவருக்கு எதிராக கேஸ் போட்ட ராஜ் நாராயணனே எதிர்ப்பார்க்கவில்லை. அடுத்த நாள் நாடே திகைத்து போனது. தீர்ப்பு நடைமுறைக்கு வர நீதிபதி சில நாட்கள் அவகாசம் அளித்தார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிர் வினையாய் பல அடாவடி காரியங்களை இந்திரா காந்தியும் அவர் ஜால்ராக்களும் நிகழ்த்தினர். பல கூலிப்படைகள் பணம் கொடுத்து லாரிகளில் வரவழைக்கப்பட்டு இந்திரா காந்திக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பச் செய்யப்பட்டனர்.
அச்சமயம் விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த கிருஷ்ண ஐயர் அவர்களிடம் இந்திரா காந்தியின் மேல் முறையீடு வந்தது. அவர் அலஹாபாத் தீர்ப்பை சில ஷரத்துகளின் அடிப்படையில் ஜூன் 24-ஆம் தேதி நிறுத்தி வைத்தார். அதன்படி இந்திரா காந்தி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கலாம் ஆனால் சபையில் ஓட்டெடுப்புகளில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது. இது காரியத்துக்காகாது என்று இந்திரா காந்தி செயல்பட்டு June 25 அன்று அவசர நிலை பிரகடனம் செய்தார்.
இந்திரா காந்தியின் நிலையை பலப்படுத்த தேர்தல் விதிகள் மாற்றப்பட்டன. அரசியல் நிர்ணயச் சட்டம் 39-வது முறையாக திருத்தப்பட்டது. அதில் பிரதம மந்திரி மற்றும் சபாநாயகரின் தேர்தல் வழக்குகளுக்கு தனி முக்கியத்துவம் தரப்பட்டன. அதாவது அந்த வழக்குகள் நடத்துவது கடினமாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்திராவின் தேர்தல் வழக்கும் இதன் கீழ் சேர்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக சுப்ரீம் கோர்ட் இந்த திருத்தத்தை சட்ட விரோதம் என்று தள்ளுபடி செய்தது.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதால் அரசியல் நிர்ணயச் சட்டப் பிரிவுகள் 14, 19 மற்றும் 21 தொங்கலில் வைக்கப்பட்டன. பல மாநிலங்களில் பலர் காவலில் வைக்கப்பட, பல ஆள் கொணர்வு கோரிக்கைகள் பல உயர் நீதி மன்றங்களுக்கு முன்னால் வந்தன. அங்கெல்லாம் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வர, விஷயம் உச்ச நீதி மன்றத்திற்கு முன்னால் வந்தது. அந்த நீதி மன்றமோ 4:1 விகிதத்தில் அவசர நிலையின் கீழ் சட்டப் பிரிவு 21 செயல்படாததால் அடிப்படை உரிமைகள் எதுவும் தற்சமயம் செல்லாது என்று தீர்ப்பு அளித்தது. மனித உரிமை செல்லாக்காசாகியது. இதை எதிர்த்து மைனாரிடி தீர்ப்பை அளித்த நீதிபதி கன்னா அவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
இந்தப் பெரும்பான்மை தீர்ப்பு நாட்டிலும் சட்ட வல்லுனர்களிடத்திலும் பெரிய நிராசையை உண்டாக்கியது. 1976-ல் அ.நி.ச. வின் 42-வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது பல அடாவடி காரியங்களுக்கு வழி வகுத்தது.
நாட்டிற்கு பெரும் அபாயம் வரும் நிலையில் மட்டும் வந்திருக்க வேண்டிய அவசர நிலை சர்வாதிகார மனப்பான்மை கொண்ட இந்திரா காந்தியின் நலனைக் காக்கவே கொண்டுவரப்பட்டது. நாடு முழுக்க உறக்கத்தில் இருந்த நடுநிசியில் இது நுழைக்கப்பட்டது. அடுத்த 19 மாதங்களுக்கு நாடு இருட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று. தனிமனித உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. எதிர்கட்சித் தலைவர்கள் இரவோடிரவாகக் கைது செய்யப்பட்டனர்.
அவசர நிலை வந்தபோது எனக்கு வயது 29. எல்லா விஷயங்களுமே நேற்று நடந்தது போல் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. அப்போது துக்ளக், இண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற வெகுசில பத்திரிகைகளைத் தவிர்த்து எல்லாம் அரசு அடக்குமுறைக்கு பயந்து மிகச் சத்தமாக ஜால்ரா அடித்தன. அப்போதைய தி.மு.க. அரசு மட்டும் தைரியமாக அவசர சட்டத்தை எதிர்த்தது. முரசொலியில் இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.
இங்குதான் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஓர் அறிவிப்பை பத்திரிகை தணிக்கை அமுலுக்கு வரும் முன்னர் வெளியிட்டார். மத்திய அரசை எதிர்த்து ஒன்றும் எழுத முடியாத நிலையில் மாநில அரசையும் தான் விமரிசனம் செய்வதற்கில்லை என்று தெளிவாகக் கூறினார். ஏனெனில் அவர் தைரியம் மிக்கவர். அதே போல சினிமா விமரிசனம் பகுதியில் சமீபத்தில் ஐம்பதுகளில் வந்த சர்வாதிகாரி என்ற படத்துக்கான விமரிசனம் வெளியிட்டார். அதில் எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவில் மட்டும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவார் என்று பொருள்பட ஒரு வாக்கியம் சேர்த்தார். பிறகு தணிக்கை முறை தீவிரமானது.
அவசர நிலை கொடுமைகள் நல்ல வேளையாக தெற்கில் அவ்வளவாக இல்லை. ஆனால் வட இந்திய மாநிலங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு மானாவாரியாக அகப்பட்டவர்களையெல்லாம் உட்படுத்தினர். கைதான பலரும் தடயம் இன்றி மறைந்தனர். இந்திராதான் இந்தியா என்று பரூவா என்னும் கோமாளி திருவாய் மலர்ந்தருளினார். தேர்தல்களே நாட்டுக்குத் தேவையில்லை, அன்னிய மொழிகளை படிப்பது தேசவிரோதம் என்றெல்லாம் கூறி சஞ்சய் காந்தி தமாஷ் செய்தார். பத்திரிகை தணிக்கை முறை மிகவும் கடுமையாக்கப்பட்டது. சில காலம் வெளியிடப்படாமல் வைத்திருந்த துக்ளக்கை சோ அவர்கள் மறுபடி வெளியிட்டார். பத்திரிகை தணிக்கை அதிகாரிகளை நன்றாக ஏய்த்தார். அவசர நிலை இருந்த 19 மாதங்களிலும் அவர் வெறுமனே இந்திரா காந்தி என்றுதான் எழுதினாரே தெரிய பிரதமர் இந்திரா காந்தி என்று எழுதவேயில்லை. (நானும் இப்பதிவில் அவ்வாறே செய்திருக்கிறேன் என்பதை கவனிக்க).
1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. ஸ்டாலின் அவர்கள் உள்பட தி.மு.க.வினர் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது கருணாநிதி அவர்கள் தனிமையாக்கப்பட்டார். அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார். கருணாநிதி அவர்கள் வீட்டிற்கே போய் அவருக்கு நடந்தது அநியாயம் என்று கூறி அவருக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். அத்தருணத்தில் அதை செய்தது அவர் உயிருக்கே கூட கேடாக முடிந்திருக்கலாம். என்னதான் இருந்தாலும் அவர் தைரியம் யாருக்கு வரும்? 1976-ல் வந்திருக்க வேண்டிய பொது தேர்தலை இந்திரா காந்தி ஓராண்டுக்கு தள்ளி வைத்தார். இந்த அக்கிரமம் முன்னாலும் நடக்கவில்லை, அதற்கு பின்னாலும் தற்சமயம் வரை நடக்கவில்லை.
சிலர் கூறலாம், அவசர நிலை காரணமாக ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு ஓடின, விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன என்று. இருக்கலாம், ஆனால் இந்திரா காந்தியின் கெட்ட எண்ணத்திற்கு அவையெல்லாம் ஈடாகாது.
1977-ல் பத்திரிகை தணிக்கை முறை தேர்தலுக்கு முன்னோடியாக விலக்கப்பட்டது. அப்போது சோ அவர்கள் சீரணி அரங்கில் ஒரு மீட்டிங் வைத்தார். தணிக்கை முறை தமாஷ்கள் பலவற்றை அவர் கூறினார். ஜனநாயகத்தை ஆதரித்து பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் கூறியவற்றை சோ அவர்கள் மேற்கோள் காட்ட, அது தணிக்கை அதிகாரியால் தடுக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் தமிழகத்தில் நன்றாக நிலை கொண்டுள்ளதாக ஒரு இந்திரா காங்கிரஸ் தலைவர் உளறியதை சோ அவ்ர்கள் அப்படியே மாறுதலின்றி செய்தியாகப் போட இது ரொம்ப ஓவர், தேவையில்லாத கிண்டல் என்று தணிக்கை அதிகாரி நீக்கினார். அதை சோ அவர்கள் கூறியபோது மெரினா கடற்கரையே சிரிப்பலைகளில் மூழ்கியது. அப்போதுதான் மேலே கூறியபடி இந்திரா காந்தியை வெறுமனே பெயரிட்டு அழைத்ததையும் பிரதமர் என்று குறிப்பிடாததையும் கூறினார். இன்னொரு சிரிப்பலை.
இதில் நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கண்டறிந்தேன். அப்போதெல்லாம் எனக்கு ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜெர்மன் இதழ் வீட்டிற்கு வரும். திசம்பர் 1975 இதழில் "Diktatorin Indira Gandhi" (சர்வாதிகாரி இந்திரா காந்தி) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. தணிக்கையதிகாரிகளுக்கு ஜெர்மன் தெரியாதது சௌகரியமாகப் போயிற்று.
தேர்தல் வந்தது. இந்திரா காந்திக்கு சரியான தோல்வி. அவரும் அவர் பிள்ளை சஞ்சயும் தேர்தலில் மண்ணைக் கவ்வினர். அப்போதுதான் பத்திரிகைத் தணிக்கை தனக்கே பாதகமாக முடிந்ததை இந்திரா காந்தி அவர்கள் கண்டு நொந்து போனார். அதாவது பத்திரிகைகள் சுதந்திரமாக இல்லாது போனதால் வசவசவென்று உப்புசப்பில்லாத செய்திகள் வர, உண்மை நிலை மறைக்கப்பட, நாட்டின் நாடியை பார்க்க அரசு தவறியது. என்னமோ அப்போது தேர்தல் வைத்து பெரிய மெஜாரிடியை வைத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம் என்று மனப்பால் குடித்துத்தான் அவர் தேர்தலையே அறிவித்தார். பிளாங்கியும் அடித்தார்.
தேர்தலில் தோற்றதும் இந்திரா காந்தி புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். ஜனாதிபதியிடம் ராஜினாமா தரும் முன்னால் அவசரநிலையையும் நீக்குமாறு சிபாரிசு செய்தார். அது அப்படியே இருந்தால் தான் உடனேயே கம்பியெண்ணவேண்டும் என்று அவர் பயந்ததே அதன் முக்கியக் காரணம். மற்றப்படி வேறு நல்லெண்ணம் எல்லாம் இல்லை.
அவசர நிலையை அவசர அவசரமாக வலது கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க, இடது கம்யூனிஸ்டுகள் அதை எதிர்த்து நாட்டுக்கு நல்லது செய்தனர் என்பது ஆறுதல் அளித்தது. 3 ஆண்டுகளுக்கு பின்னால் இந்திரா காந்தி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தார். ஆனால் மறுபடியும் அவசர நிலையை கொண்டுவர அவருக்கோ மற்ற யாருக்குமோ முடியாதபடி சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டன.
2.அமெரிக்கா பொருளாதார விழ்ச்சியால் இங்கு இந்தியாவில் பல பேர் வேலை இழக்கிறார்களே?
பதில்: என்ன செய்வது? அமெரிக்காவை சார்ந்து இங்கு பல செயல்பாடுகள் உள்ளனவே. முக்கியமாக அவுட்சோர்சிங் முறையில் இங்கு வரும் வேலைகள். கால் செண்டர்கள் ஆகியவை நிச்சயமாக பாதிக்கப்படும் அபாயம் உண்டு. ஐரோப்பாவும் பாதிக்கப்படும். ஆகவே அதன் மூலமாகவும் இந்தியா உடனடி நிவாரணம் எதையும் எதிர்ப்பார்க்க இயலாது என்பதே கசப்பான உண்மை.
3. என்னதான் கம்யூனிச கொள்கை தொடர்பாக விமர்சித்தாலும்..இப்படி ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வரும் அவல நிலைக்கு கம்யூனிச கொள்கை மாற்றுதானே??
பதில்: அதற்குள் கம்யூனிசம் செய்த அலங்கோலங்கள் மறந்து விட்டனவா? அது செய்த கூத்தில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனி நாடுகளே உலக வரைபடத்திலிருந்து மறைந்தனவே. சுதந்திர பொருளாதார கொள்கை தரும் பாடங்களை மறந்தால் இப்படித்தான் நடக்கும். குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக அவற்றை காற்றில் பறக்க விட்டனர் பலர். அதற்கெல்லாம் கண்டிப்பாக விளைவுகள் இல்லாது போகுமா?
4. லாபம் வரும் போது முதலாளிக்கு நஷ்டம் வரும் போது அது தொழிலாளிக்கு என்ற அந்த கண்ணோட்டம் சரியா?
பதில்: இதில் என்ன கண்ணோட்டம் எல்லாம் பாழாய்ப் போகிறது. முதலாளி திவாலானால் தொழிலாளிக்கு வேலை போகும். சம்பளவெட்டுகளுடன் இன்னும் சற்று காலம் உழைத்து நிலைமையை சீராக்கலாம் என்ற வாய்ப்பு வந்தால் அதை பிடித்து கொள்வதுதான் இப்போதைக்கு செய்யக்கூடிய செயல். அதற்கு மறுத்தால் கம்பெனியே மூடப்பட்டு முதலுக்கே மோசம் வரலாம் அல்லவா? இதை தொழிலாள்ர்களும் உணர்ந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.
3. சென்னையில் இனி வரும் மாதங்களில் வாங்க ஆள் கிடைக்காமல் ரியல் எஸ்டேட் தள்ளாடும் என்று சொல்கிறார்களே அது உண்மையா?
பதில்: ரியல் எஸ்டேட் விலைகள் விழும் ஆனால் அந்த விலைகளுக்கும் வாங்குவதற்கு ஆள் இருக்காது என்கிறீர்கள் அல்லவா? ரியல் எஸ்டேட்டையே வெறுமனே முதலீடாக கருதி சகட்டுமேனிக்கு வாங்கி வளைத்து போடுவது கட்டுப்படலாம் என நினைக்கிறேன். பல நிலங்கள் மேல் கட்டுமானங்கள் இல்லாமல் அப்படியே இருக்கும் எனவும் அஞ்சுகிறேன்.
4. இந்தியாவுக்கு இலங்கை அரசு விடுதலைபுலிகள் இதில் யார் நண்பன் யார் எதிரி?
பதில்: இலங்கை அரசுடன் ராஜரீக முறையில் நடந்து கொள்ள முடியும். புலிகளிடம் அது இயலாது. புலிகளை ஆதரித்தால் அவர்கள் இந்தியாவில் பிரிவினைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை வரவழைக்கும் சாத்தியக்கூறு மிகவும் பலமாகவே உள்ளது. இந்தியாவை பொருத்தவரை எதிரியோ நண்பனோ நிரந்தரம் இல்லை, அதன் நலனே முக்கியம்.
5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?
பதில்: மேற்கு வங்கத்திற்கு பெரிய கெடுதலை செய்துள்ளார் மம்தா. டாடா நானோ திட்டத்தை தம்மிடம் வரவழைக்க மற்ற மானிலங்களுக்கிடையே பலத்த போட்டி. டாட்டாவுக்கே இந்த கதி என்றால் மற்ற தொழிலதிபர்களும் மேற்கு வங்கத்திற்கு செல்ல பயப்படுவார்களே. ஆகவே கண்ணுக்கு தெரியாத நஷ்டங்கள் பல அம்மாநிலத்துக்கு இந்த அம்மையாரின் தயவால் வந்து விட்டது.
அடுத்த வாரம் பார்ப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
18 comments:
//அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார்.//
மிகவும் பிற்போக்கான ஆணாதிக்கச் சொல்லாடால்.
Sir
What is that $64000 biz?
Interesting Q&A.
Also the thing on Palin - you too? (Zardari's escapades!)
Mathan (AV) should learn from you!
Cheers!
//அந்த நேரத்தில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் ஒரு ஆண்மை மிக்க காரியத்தை செய்தார்.//
//மிகவும் பிற்போக்கான ஆணாதிக்கச் சொல்லாடால்//
சோ அவர்கள் பெண்மை மிக்க காரியத்தை செய்தார் என்று கூற ஆசைப்படுகிறீர்களா?
அப்படியானால் மேலாண்மை என்பதை
எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன
நன்றி
1. தி.மு.க வை தோற்றுவித்த அண்
ணா காலத்திலிருந்து இன்று வரை எத்தனை பெண்கள் அந்தக் கட்சியிலிருந்து மந்திரி பதவி வகித்திருக்கிறார்கள் ? (சொந்தக்காரர்கள், பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள் எல்லாம் சேர்த்து ஒரு கணக்கு சொல்லவும்).
2. நானாவதி கமிஷன் ரிப்போர்ட் பற்றி ?
அது என்ன "அதை எப்படி நிச்சயமாக தெரிந்து கொள்வது என்பதுதான் 64000 டாலருக்கான கேள்வி. "
64000 $ ஐ விட அதிக பணம் வேண்டாமா ? மில்லியன் டாலர் கேள்வி என்பது தானே புழக்கத்தில் உள்ள சொற்றொடர் ?
//சோ அவர்கள் பெண்மை மிக்க காரியத்தை செய்தார் என்று கூற ஆசைப்படுகிறீர்களா?//
ஐயா, இதைச் செய்ய துணிச்சல் தான் மிகுந்திருக்கவேண்டும்.
//அப்படியானால் மேலாண்மை என்பதை
எவ்வாறு எடுத்து கொள்வீர்கள்?//
மேலாண்மை என்பது பால் சார்ந்து குறிக்கப்படுவதல்ல என எண்ணுகிறேன். அவ்வாரிருப்பின், வேறுசொல் பயன்படுத்த வேண்டும்.
அய்யா,
எமர்ஜென்சி காலத்தில் நான் பிறக்கவில்லை. பிறகு படித்து தெரிந்து கொண்டதன் முலம் திருமதி இந்திரா காந்தி-ஐ போல ஒரு துணிவான பிரதமர் இருந்ததில்லை என தெரிகிறது. இந்தியாவின் வெளியுறவு துறை கொள்கையில் அவர் எடுத்த சில துணிச்சலான முடிவுகள் தற்போது இருக்கும், இருந்த பிரதமர்களால் எடுக்க முடியவில்லை. இது பற்றியும் நீங்கள் எழுதவேண்டும்.
//இந்தியாவின் வெளியுறவு துறை கொள்கையில் அவர் எடுத்த சில துணிச்சலான முடிவுகள் தற்போது இருக்கும், இருந்த பிரதமர்களால் எடுக்க முடியவில்லை. இது பற்றியும் நீங்கள் எழுதவேண்டும்//.
இந்திரா அவர்கள் பற்றி நான் எழுதிய இப்பதிவிலிருந்து:
"அவருடைய தந்தைக்கு இயற்கையாகவே அமைந்த முகராசியை இவர் மெதுவாக உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஒன்று நினைவில் வைக்க வேண்டும். நேரு அவர்கள் என்னதான் முகராசியுடன் இருந்தாலும் மற்றவர்களையும் மதித்து அவர்களை தன்னுடன் அரவணைத்து சென்றார். இந்திராவிடம் அந்த அரவணைக்கும் தன்மை இல்லை. தன்னை சுற்றியிருப்பவர்களை சுத்தவிட்டு தனக்கு ஆதரவு தருபவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் தந்தார். சற்றே சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களுக்கு அவர் மனதில் இடமில்லை. மெதுவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளிப்பட இருந்த சர்வாதிகாரி இப்போதுதான் உருவாகத் தொடங்கினார்.
இந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல முக்கிய விஷயங்கள் நடந்தன.
1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரபு-இஸ்ரவேல ஆறு நாள் யுத்தம் நடந்தது. வழ்க்கம்போல இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு ஜால்ரா அடித்தது. இருப்பினும் இஸ்ரேல் உலகையே பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றது. அப்போது மட்டும் இந்தியா இஸ்ரேலுடன் ஒத்துழைத்திருந்தால் மிக நல்ல பலன் கிடைத்திருந்திருக்கும். ஆனால் எவ்வளவோ பல மாறுதல்களை அரசியல் அணுகுமுறையில் கொண்டு வந்த இந்திரா அவர்கள் இங்கு நேரு அவர்களின் செயல்பாட்டையே தொடர்ந்தார்.
அமெரிக்கா வியட்னாம் விவகாரத்தில் மேலும் மேலும் ஆழமாக சிக்க ஆரம்பித்தது. நடுநிலை கொள்கை என்ற பெயரில் இந்தியா அமெரிக்காவை சாடியது. அதனால் பல நலன்களை இழந்தது. அதே சமயம் 1968-ல் செக்கோஸ்லாவோக்கியாவை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அதை கண்டிக்க வக்கின்றி இந்தியா விளக்கெண்ணெய் நிலையை எடுத்தது. இதனால் இந்தியாவின் தார்மீக நிலை கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.
நடுநிலைமை என்ற பெயரில் அமெரிக்காவை சாடி, சோவியத் யூனியனை துதிப்பதில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் அமெரிக்காவிடம் உதவி கேட்பதும் நிற்கவில்லை. அதுபாட்டுக்கு தனியாக நடந்தது. சராசரி இந்தியர்கள் அரசின் இந்த இரட்டை நிலையை கண்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்தியாவைக் கண்டாலே வெளிநாடுகளில் இளப்பமாயிற்று.
சோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார். நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி அவர்கள் சொன்ன உருப்படியான யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. சோஷலிசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்ததில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. ஒரு காலக் கட்டத்தில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் அவர் வரிகளுக்குப் பிறகு எடுத்து செல்வது வெறும் 35,000 ரூபாயாகவே இருந்தது. இதை இந்திரா அவர்கள் பெருமையாக வேறு கூறிக் கொண்டார். இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க பணக்காரர்களை ஏழையாக்குவதுதான் நடந்தது. அதனால் யாருக்கும் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் போனது.
இம்மாதிரியே நிலைமை சீர்குலைந்து போக, மே மாதம் 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுஸைன் மறைந்தார். இது ஒரு மைல்கல் இந்திய சரித்திரத்தில். இதன் பிறகு இந்திரா அவர்களின் சுயலாப செய்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன".
இப்போது இன்னொரு பதிவிலிருந்து:
"சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார்.
அதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்தார். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்".
நீங்கள் கூறுவது போல வெளிவிவகார கொள்கைகளில் அவர் ஒன்றும் அதிகம் சோபிக்கவில்லை. அதில் பெற்ற ஒரே வெற்றியான பங்களாதேஷ் யுத்தம் பற்றி நான் எழுதிய பதிவிலிருந்து:
"1971 மார்ச்சிலேயே வங்கதேசப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. அதற்கு சற்று முன்புதான் (1970) பாக்கிஸ்தான் பொதுத் தேர்தல் நடந்து முடிந்திருந்தது. அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்த வங்க தேசத்தில் ஷேக் முஜிபூர் கட்சியான அவாமி லீகுக்கும் மேற்கு பாகிஸ்தானில் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் அதிக சீட்டுகள் கிடைத்தன. இருப்பினும் வங்க தேச எம்பிக்கள் முழுமையான பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்றிருந்ததால் முஜிபூர்தான் பிரதமராகியிருந்திருக்க வேண்டும். ஆனால் பஞ்சாபியர் டாமினேட் செய்த பாகிஸ்தானுக்கு ஒரு வங்க தேசத்தவர் பிரதமராக வருவது அவர்களால் சகிக்க முடியாமல் இருந்தது.
ஆகவே மேற்கு பாகிஸ்தானியர் முஜிபூர் ரஹ்மானின் கட்சி பதவி ஏற்க முடியாதபடி அழுகினி ஆட்டம் ஆடினர். யாஹ்யா கான் முஜிபுரை மார்ச் 25, 1971-ல் கைது செய்து மேற்கு பாக்கிஸ்தானுக்கு கொண்டு சென்றார். அதற்கு அடுத்த நாளிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானில் அகோர அடக்குமுறை ஆரம்பமாயிற்று. கிழக்கு பாகிஸ்தானின் கசாப்புக்காரன் என்று பெயர் பெற்ற டிக்கா கானின் அட்டூழியம் கொடி கட்டி பிறந்தது. மதத்தால் மட்டும் நாட்டை ஒன்றாக வைக்க முடியாது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து இசுலாமியர் பாகிஸ்தானை பிரித்து சென்று 1947-48-ல் நடந்த கலவரங்கள் எல்லாமே தவிக்கப்பட்டிருக்கக் கூடியவை என்பதும் நிரூபணமாயிற்று. வெவ்வேறு நாடுகளில் இருந்த பாகிஸ்தான் தூதரகங்களிலிருந்து கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிகாரிகள் சாரி சாரியாக வெளியேறி இந்தியத் தூதரகங்களில் அடைக்கலம் புகுந்தனர். பாகிஸ்தான் மானம் கப்பலேறியது. நாட்டைப் பிரிவினை செய்த இரு தேசக் கோட்பாடு அடிப்படையிலேயே தவறு என்று அப்போது அவர்களில் பலர் கூறினர்.
இசுலாமியரே இசுலாமியரைக் கொன்ற கூத்தும் நடைபெற்றது. இந்தியாவோ சுமார் 100-120 லட்சம் அகதிகள் வருகையால் மூச்சு திணறியது. இந்த தருணத்தில் இந்திரா அவர்கள் திறமையாகச் செயல்பட்டதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். யாஹ்யா கான் திமிருடன் வெளி நாட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தன் இந்திராவை நேரில் பார்த்தால், "வாயை மூடு பொட்டச்சி. எங்க அகதிகளை திருப்பி அனுப்பு" (shut up woman, and let my refugees return) என்று கூறப்போவதாகக் கூறினார். இதைவிட ஒருவர் ஆணாதிக்கத்துடன் பேசியிருந்திருக்க முடியாது. ஆனால் அதே திமிர் பிடித்த ஆண் இந்த வலிமையான பெண்மணியிடம் மண்டியிட நேர்ந்தது.
டிசம்பர் 4 அன்று ஆரம்பித்த யுத்தம், கிழக்கு பாகிஸ்தானில் 16-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. கிழக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் ஜெனெரல் நியாஜி இந்திய ராணுவத் தலைவர் அரோராவிடம் சரணடைந்தார். பாக்கிஸ்தானின் சுமார் 93000 துருப்புகள் இந்தியரிடம் போர் கைதியாக மாட்டிக் கொண்டனர். இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார். பாக்கிஸ்தான் மிகுந்த மனகிலேசத்திலும் அவமானத்திலும் இருந்தது. அதற்கு மேலே யுத்தம் செய்யும் தைரியம் இல்லை. ஆகவே போர் நிறுத்தம் கடைசியில் அமுலுக்கு வந்தது. அப்போது ஜெர்மானிய பத்திரிகையான Der Spiegel "Niederlage gegen Indien" (இந்தியாவிடம் படுதோல்வி) என்ற தலைப்பில் ஒரு இஷ்யூவே போட்டது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் மேற்கு பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வங்க தேசம் இந்தியா வழியாக சென்றார். ஆக, வங்க தேசம் உருவாவதில் இந்தியாவின், முக்கியமாக இந்திராவின், பங்கு ஒரு சரித்திர உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை 1962-ல் சீனாவிடம் தோல்வி, 1965-ல் பாகிஸ்தானுடன் ஒரு மாதிரி குழப்பமான சண்டை. அதற்கு பிறகு முதன் முறையாக சந்தேகத்துக்கிடமேயில்லாத ஒரு வெற்றி. அப்போது இந்திரா அவர்கள் புகழ் உச்சியில் இருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பேயீ அவர்கள் இந்திராவை துர்க்கா என்றார்".
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திரா அவர்களது விஷயத்தில் கெடுதிகளே அதிகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/////5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?
பதில்: மேற்கு வங்கத்திற்கு பெரிய கெடுதலை செய்துள்ளார் மம்தா. டாடா நானோ திட்டத்தை தம்மிடம் வரவழைக்க மற்ற மானிலங்களுக்கிடையே பலத்த போட்டி. டாட்டாவுக்கே இக்கஹ்டி என்றால் மற்ற தொழிலதிபர்களும் மேற்கு வங்கத்திற்கு செல்ல பயப்படுவார்களே. ஆகவே கண்ணுக்கு தெரியாத நஷ்டங்கள் பல அம்மானிலத்துக்கு இந்த அம்மையாரின் தயவால் வந்து விட்டது.///
இதை அந்த மாநிலத்துக்காரர்கள் உணர்ந்து அந்த அம்மணியைக் கட்டம் கட்ட வேண்டும்! எங்கே செய்யப்போகிறார்கள்?
//அனுபம் கேரும் அமிதாப் பச்சனும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் என கேள்விப்பட்டேன்.//
அமிதாப்பச்சன் அல்ல.. நஸ்ருதீன்ஷா..
நன்றி அனானி. நஸ்ருதீன்ஷாதான். அமிதாப் பச்சன் அல்ல. உடனே திருத்தி விடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
` இப்போது இந்திரா காந்தி புத்திசாலித்தனமான காரியம் செய்தார். ஒரு தலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார்.`
சார், இந்திரா காந்தி பாகிஸ்தான் போரில் இன்னும் பெரிய பரிசை இழந்து விட்டர் - இரண்டு தடவை.
டிசம்பர் 15ல், இந்தியா தானாகவே போர் நிறுத்திய போது, பாகிஸ்தான் ராணுவ நிலமை படு மோசமாக இருந்த்தது. பாகிஸ்தான் கையில் போர் நடத்த வேண்டிய சாமாஙல் இல்லை. போர் விம்மனங்களும், டாங்கிகளும் ஒடுவதற்கு முக்கியம் பெட்ரோல். இந்தியா போர் நிருத்திய போது, பாகிஸ்தான் கையில் 1 வாரம் பெட்ரோல் தான் இருந்தது. இந்தியா போரை இன்னும் ஒரு வாரம் நடத்தியிருந்தால், பாகிஸ்தான் ராணுவம் மொத்தமாக குலைந்திருக்கும். உடனே, இந்தியா காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானை மொத்தமா வெளியேற்றியிரிக்கலாம். 1948ச், பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்து, 40% காஷ்மீரை தன் கையில் வைத்துள்ளனர் என்பதை மறக்காதீர்கள்.. ஆனால் இந்திராவிற்கோ, அவளது தன்ந்தைக்கொ ஒரு Strategic view இல்லை. அதனால் ஒரு வெற்றியின் மேல், மற்றோரு வெற்றி போட்டு ரொம்ப கால பிரச்சினைகளை முடிக்க தவறி விட்டனர்.
சரி, ராணுவ நடவடிக்கை எடுக்க தவறினாலும், , அடுத்த வழி ராஜதந்திர முறையில் வந்தது. இந்தியா கையில் 93000 பாகிஸ்தான் ராணுவ கைதிகள். அவர்கலை விடுவிக்க, புட்டோ சிம்லா பேச்சில் ஈடுபட்டான். அதற்காக என்ன வேணாலும் செய்ய தயாராக இருந்தான். பாகிஸ்தான் பேய் இந்தியா கையில் வகையாக மாட்டிக் கொண்டது. அப்போது, காஷ்மீர் பிரச்சினைக்கு கடைசியாக ஒரு முடிவு கொண்டுவந்திருக்கலாம்.. அந்த வாய்ப்பையும் இந்திரா நழுவ விட்டார். இந்திரா என்ன செய்திருக்க வேண்டும்? காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படை முற்றுமாக வெளியேராவிட்டால், ஒரு ட்ரீடியும் ஒப்பமாட்டேன் என திட்ட வட்டமாக சொல்லியுருக்க வேண்டும். புட்டோவின், வாய்பேச்சை நம்பி, போர் கைதிகளை திருப்பி அனுப்பி விட்டார்.
1971-72ல், காஷ்மீர் பிரச்சினை முடிவை, இரு முறை நழுவ விட்ட பெருமை அவரை சாரும்.
ஜவகர்லால் நேரு, இந்திய ராணுவம் காஷ்மீரில் பாகிஸ்தான் துருப்புகளை முற்றிலும் வெளியேற்றும் தறுவாயில், ஐ.நா. சென்று காரியத்தை கெடுத்தான். அப்பனைப் போல் மகள்.
தன் சுய பலத்தில், தன் கை ஒங்கி நிற்க்கும் போது, கத்தியை கீழே இரக்காமல், எதிரியை ஓட விட்ட புத்திசாலிகள்.
விஜயராகவன்
விஜயராகவன் அவர்களே,
என்னதான் கோபம் இருந்தாலும் நேருவையும் புட்டோவையும் அவன் என்று ஒருமையில் அழைத்திருக்க வேண்டாம். மற்றப்படி உங்கள் கருத்தில் ஆட்சேபிக்க வேறு ஏதும் இல்லை.
அதே சமயம் 1971-ல் இந்தியாவின் நிலைமையும் அவ்வளவு வலியதாக இல்லை. பங்களாதேஷில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு முழுக்கவுமே கிட்டியது. மேலும் காஷ்மீர் மேல் தாக்குதல் செய்ய இயலாதபடி சோவியத் யூனியன் இந்தியாவின் கையை கட்டிப் போட்டது. இந்திரா போர் நிறுத்தம் அறிவித்ததை ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்காகவே பார்க்கிறேன்.
கொரியா போரில் இதே போல வடகொரியர்களை தென்கொரியாவிலிருந்து துரத்திய ஜெனெரல் மக் ஆர்தர் அத்துடன் திருப்தியடையாது அவர்களை வடகொரியா வரை துரத்தி சென்றார். அங்கு போரின் திசையே மாறியது. அப்போது ஏற்பட்ட இரண்டுங்கெட்டான் நிலை இன்னும் நீடிக்கிறது.
ஆக எப்போது சண்டையை நிறுத்த வேண்டும் என்பதும் ஒரு யுக்தியே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
`என்னதான் கோபம் இருந்தாலும் நேருவையும் புட்டோவையும் அவன் என்று ஒருமையில் அழைத்திருக்க வேண்டாம்.`
நான் சொந்த கருத்தை எழுதுகிரேனே தவிற, எதோ மேடை பிரசங்கமோ, நேர்காணலோ, லோக்சபா பேச்சோ, சரிதிர தீஸிசோ இல்லை. அதனால் ஒருமையில் எழுதுவது தவறில்லை என நினைக்கிறேன். ஒருமை/பன்மை உபயோகம் சூழலைப் பொருத்தது..
`கொரியா போரில் இதே போல வடகொரியர்களை தென்கொரியாவிலிருந்து துரத்திய ஜெனெரல் மக் ஆர்தர் அத்துடன் திருப்தியடையாது அவர்களை வடகொரியா வரை துரத்தி சென்றார். அங்கு போரின் திசையே மாறியது. அப்போது ஏற்பட்ட இரண்டுங்கெட்டான் நிலை இன்னும் நீடிக்கிறது`
கொரியா போர் வேறு. அங்கு அமெரிக்கர்களும் வெளி நாட்டு துருப்புகள்தான் ; கொரியாவில் தன் ஆதரவாளர்களை ஆதரிக்க சென்றது. அதனால் வட-தென் கொரிய பிரச்சினை சர்வதேச பிரச்சினையாகி விட்டது. . அமெரிக்கா 10,000 மைலகள் வந்து மற்றொரு நாட்டில் சண்டை போட்டால், நான் ஏன் என் கொல்லைப் புரத்திலேயே என் ஆதரவாளர்களுக்கக போர் புரியக்கூடாது என்று, சீனா கொரியா உள்ளெ புகுந்து, அமெரிக்கர்களை துரத்தியது. கொரியா போர் சீனாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக். கொரியப் போர்னால் தான், அமெரிக்கா அதன்பிறகு, சீனாவுடன் பயபக்தியுடன் நடந்தது. கொரியா இன்று இந்த நிலையில் இருக்கலாம், ஆனால் அது சீனாவின் ஆற்றலையும், மனோதைரியத்தையும் உலகுக்கு சாற்றியது. 1971ல் இன்னும் 2 வாரம் போர் நிலைத்திருந்தால், மற்ற நாடுகள் ஒன்றும் செயதிருக்க முடியாது. நான் மற்றநாடுகளின் போர் புரிய மாட்டேன் என்பது சோப்ளாங்கி எண்ணம்.
ஏன் இன்று இந்தியாவை பேரரசாக சர்வதேச அரசுகள் ஏற்றுக் கொள்ள தயங்குகிறனர்? ஏனெனில் தன் ராணுவ பலத்தை உபயோகித்து, தன் சுற்றுவட்டத்தில் அமைதியை காக்க முடியாமல், ரொம்ப நாட்களாக காஷ்மீர் பிரச்சினையை வளரவிட்டு தன் எல்லைப் புரத்தையே சீர் செய்ய முடியாத - அல்லது மனோபலம் இல்லாத நாட்டை - ஏன் மற்றவர்கள் வல்லரசாக ஏற்கவேண்டும்? அது வல்லரசின் அடையாளம் அல்ல.
இன்று ரஷ்யா ஜார்ஜியாவில் படையெடுத்து , தன் நாட்டு நலத்தை பாதுகாக்கிறென் என சொல்லி, பாதி ஜார்ஜியாவையே விழுங்கி விட்டது. ரஷ்யா செயதது தப்பா, சரியா என்று வாதம் புரியலாம்.. ஆனால் வல்லரசுகள், தங்கள் பலத்தை உபயோகித்து, தங்கள் நலத்த்தை உலக அளவில் நிலைநிருத்துவதற்கு தயங்குவதில்லை. அப்படி செய்யாவிட்டல் அவை வல்லரசுகளே அல்ல.
விஜயராகவன்
அய்யா,
இந்திரா காந்தி ஆரம்ப கட்டங்களில் வெளியுறவு துறை தொடர்பான கொள்கைகளில் சில தவறுகள் செய்திருக்கலாம். காரணம், அவர் தந்தை ரோஜாவின் ராஜா விட்டு சென்ற " இந்தோ-சீனி பாய்பாய்" போன்ற கொள்கைகளை முற்றிலும் விலக்கிவிட்டு ஆட்சி செய்ய முடியாது. தமிழ் திரையுலகில் திரைகுடும்பத்திலிருந்து வெளிவரும் கதாநாயகர்கள் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கீன்றார்கள்? அதே போல் அவர் தந்தையார் பாதைப்படி பதவியேற்றபின், தடாலென்று கொள்கைகளை மாற்ற முடிய இயலவில்லை.
கிஸீங்கர்-நிக்ஸன் உரையாடல்களை கேட்டிருக்கின்றீர்களா? இது தொடர்ந்து வருகின்ற பின்னுாட்டங்கள் மிக சுவாரஸ்மாக போய் கொண்டிருக்கின்றன. மேலும் இது பற்றி விவாதிப்பதற்கு நிறைய இருக்கின்றது. இது பற்றி தனி பதிவே போடலாம், இல்லையா அய்யா? அல்லது தொடர்ந்து இதிலேயே தொடரலாமா?
josh
//Blogger SP.VR. SUBBIAH said...
/////5. நானோ கார் வந்தால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம். மம்தாவின் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்து என்ன?
பதில்: மேற்கு வங்கத்திற்கு பெரிய கெடுதலை செய்துள்ளார் மம்தா. டாடா நானோ திட்டத்தை தம்மிடம் வரவழைக்க மற்ற மானிலங்களுக்கிடையே பலத்த போட்டி. டாட்டாவுக்கே இக்கஹ்டி என்றால் மற்ற தொழிலதிபர்களும் மேற்கு வங்கத்திற்கு செல்ல பயப்படுவார்களே. ஆகவே கண்ணுக்கு தெரியாத நஷ்டங்கள் பல அம்மானிலத்துக்கு இந்த அம்மையாரின் தயவால் வந்து விட்டது.///
இதை அந்த மாநிலத்துக்காரர்கள் உணர்ந்து அந்த அம்மணியைக் கட்டம் கட்ட வேண்டும்! எங்கே செய்யப்போகிறார்கள்//
இண்டியா டுடேவோ அவுட்லூகோ படித்தது..
நானோ கார் வந்தால் மாருதி, ஹூண்டாய் கார் நிறுவனங்கள் விற்பனை பாதிக்கபடும் என்பதால் அவர்கள் மம்தாவை தூண்டி விடுகிறார்கள் ( தூண்டி விடுகிறார்கள் என்றால் கரண்சி பசையை அடித்து விடுகிறார்கள் என்று அர்த்தம் கொள்க)
இன்று வரை டாடா நானோவிற்க்கு மாற்றாக இந்த நிறுவனங்களில் இருந்து எந்த வித காரும் வரவில்லை.. ஆராய்சி கூட மந்த கதியில் தான் நடக்கிறது..
நாளை டாடா நானோ
கர்நாடகா வந்தால் தேவகவுடா இதை நாடகைத்தை ஆடுவார்
மகாராச்சிடிரம் வந்தால் அப்போது எது எதிர் கட்சியோ அது தப்பாட்டம் போடும்
தமிழ்நாடு என்றால் ஜெயலலிதா இதே மம்தா வேலையை செய்வார்.
குஜராஜ் மாநிலமே டாடா தொழிற்சாலை குடிபுக சரியான மாநிலம் என்று தோன்றுகிறது. அங்கு எதிர்கட்சிகள் என்றாலும் பணத்துக்காக இதை போல தப்பாட்டம் ஆடுவதில்லை
அவசரகால நிலை பிரகடனப்படுத்தலுக்குப்பின் நடந்த தேர்தலில் இந்திரா தோற்றாலும்..வென்ற..எதிர்க்கட்சி கூட்டணிகள் ஒற்றுமை இல்லாததால்தான்..அவரால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. இந்திராவை எதிர்த்த தி.மு.க. பின் நேருவின் மகளே வருக..நிலையான ஆட்சி தருக..என்ற கோமாளி கோஷத்தையும் கேட்க முடிந்தது.,இதையும் நீங்கள் உங்கள் பதிலில் சேர்த்திருக்கலாம்.
//இதையும் நீங்கள் உங்கள் பதிலில் சேர்த்திருக்கலாம்//
அடுத்த தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றதை கூறியுள்ளேனே. திமுக பற்றி கூறாததற்கு காரணம் பதில் இந்திராவை குறித்து மட்டுமே என்பதால். அக்கட்சி செய்த கோமாளித்தனத்தை பற்றி கூற இது சந்தர்ப்பம் அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment