9/21/2010

இன்றைய பெண் - அவள் மட்டும்தானா அப்படி

தினம் ஒரு தகவல் என்னும் தலைப்பில் எனக்கு மின்னஞ்சல்கள் வந்ததுண்டு. அனந்தகுமார் என்பவர் அனுப்புகிறார். இன்று வந்த மின்னஞ்சல் என் கவனத்தைக் கவர்ந்தது. முதலில் அதை பார்ப்போம். பிறகு நான் பேசுவேன்.

சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் இன்றைய பெண்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். இவர் கூறுவது பெண்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ கிடையாது. பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே!!! எந்த ஒரு பெண்ணும், பெண்களை இழிவுபடுத்துகிறார்கள் அல்லது தாழ்வுபடுத்துகிறார்கள் என்று தவறாக கருத வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை படிக்கிற பெண்கள் அதிகம். ஆனால் தினப்பத்திரிக்கை படிக்கிற பெண்கள் எத்தனை பேர்? நாட்டு நடப்பு பற்றி எத்தனை பெண்கள் அக்கறை காட்டுகிறார்கள்? மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் சினிமா பார்க்கும் போது குடும்பமே பார்க்கிறது. ஆனால் செய்திகள் தொடங்கியதும் பெண்கள் அடுப்படிக்குள் பாய்ந்து உணவை தயார் செய்வது ஏன்? செய்தி நேரம் வந்ததும் சினிமாவில் இடைவெளி மாதிரி அதை சாப்பாட்டுக்குப் பயன்படுத்த பல பெண்கள் விரும்புவது உண்மைதானே! இது சரிதானா? செய்தி நேரம் என்ன சினிமா இடைவெளியா? இப்படி இருந்தால் பெண்ணின் பொது அறிவு எப்படியிருக்கும்?

பெண்களின் அழகுணர்ச்சிக்கான விலை இன்று மிகமிக அதிகம். காலக் கொலையோ அதைவிட அதிகம். எப்படி? நகங்களை வண்ணப்படுத்தி, பழைய வண்ணங்களை நீக்கப் புது வண்ணம் பூச நெயில் பாலிஷ் ரிமூவர், உதடுகளை உயரிப்பேற்ற உதட்டுச் சாயம் (லிப்ஸ்டிக்), கன்னங்களில் கவர்ச்சி கூட்ட ரூஜ், கண்ணிமைகளை பெரிதுபடுத்தி அழகைக் கூட்ட மஸ்காரா, அழகாய்க் காட்ட ஐ லைனர், கழுத்தை, முகத்தைக் கழுவிக் காட்ட கிளன்சிங் மில்க், மாஸ்க் பிளீச், தோலின் இயற்கை மணத்தை வாசனையில் புதைக்க பாடி ஸ்ப்ரே மற்றும் சென்ட் வகைகள். கொண்டை தொடங்கி கெண்டைக்கால் வரை ‘மாட்சிங்’ பார்த்து அலங்கரிக்கத் தேவையான விதவிதமான உபகரணங்கள். பொருட்ச்செலவும், நேரச் செலவும் இவ்வளவு தேவையா? யோசியுங்கள். அறிவார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அதற்காக மம்தா பானர்ஜியாகவும், மாயாவதியாகவும் மாறச் சொல்லவில்லை. கொஞ்சம் சிக்கனம்… தேவை இக்கணம்!!!

இந்த பெண்மையின் நிலை நமது இந்தியப் பெண்ளுக்கு மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் இந்த வியாதி இருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் பல விஞ்ஞானிகள் பங்கேற்ற விருந்து ஒன்றினுக்கு உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போயிருந்தார். அவர் மனைவி அவருடன் போக வேண்டியவர். போக முடியவில்லை. கடைசி நேரத்தில் உடம்பு சரியில்லை.

விருந்து முடிந்து வீட்டுக்குத் திரும்பிய ஐன்ஸ்டீனிடம் அவர் மனைவி கேட்டார்…. விருந்து எப்படி நடந்தது? “நன்றாக இருந்தது?” என்று சுருக்கமாக கூறிவிட்டு அங்கு தாம் சந்தித்த விஞ்ஞானிகள் பற்றியும், அவர்களுடன் விவாதித்த அறிவு பூர்வமான விஷயங்கள் பற்றியும் ஆவலுடன் ஐன்ஸ்டீன் சொல்லத் தொடங்கினார். அவர் மனைவிக்குப் பிடிக்க வில்லை.

ஐன்ஸ்டீன் மனைவி சற்றே கோபமாக, “நான் இந்த அறுவையைக் கேட்க்கவில்லை. அங்கு விருந்துக்கு வந்திருந்த பெண்கள் எந்த மாதிரி கவுன் அணிந்திருந்தார்கள் கவனித்தீர்களா?” என்று சீறினார். ஐன்ஸ்டீன் பொறுமையாக, “இதோ பார்… விருந்து மேஜைக்கு மேலே பெண்களின் முகம் மட்டும் தான் தெரிந்தது. அதனால் அவர்கள் அணிந்து வந்த ஆடை எப்படிப்பட்ட ஆடை என்று எனக்குத் தெரியாது. உனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் நான் மேஜைக்கு கீழே குனிந்து பார்த்திருக்க வேண்டும். அது அவ்வளவு கவுரமாக இருந்திருக்காது” என்றார்.

பெண்கள் வாழ்விற்கு எது தேவை என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் அவர்களது வாழ்க்கை வளமானதாகவும் இனிமையானதாகவும் அமையும்!!!


மீண்டும் டோண்டு ராகவன். பெண்கள் ஏன் அவ்வாறு இருக்கவேண்டுமென்றால், அது இயற்கையின் நியதி. இன்றைய பெண்கள் மட்டும்தானா அப்படி. காலங்காலமாக நடந்து வருவதுதானே. மேலே உள்ள உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், ஐன்ஸ்டைன் மறைந்தே 55 ஆண்டுகளுக்கு மேலாயிற்றே.

இங்கு இன்னொரு இடத்தில் இது சம்பந்தமாக படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒன்றுமில்லை பொதிகை தொலைகாட்சியில் ஷோபனா ரவி அவர்கள் முக்கிய செய்தி படிக்க, அதை கணவன் மனைவி இருவரும் பார்க்கின்றனர். பி.எச்.டி. எல்லாம் படித்த அந்த மனைவி ஷோபனா ரவியின் காதுத் தோட்டை கவனிக்கிறார். கணவருடனும் டிஸ்கஸ் செய்கிறார்.

நான் என் மனைவியிடம் இக்கால நாகரிகப் பெண்கள் நகைகளில் அக்கறை காட்டுவதில்லை என்று கூறிவைக்க, அவரோ அப்படியெல்லாம் இல்லை என அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

இவ்வாறே கூறிக்கொண்டே போகலாம். ஆனால் பெண்களிடம் யார் உதை வாங்குவது? இப்போதே சுகிசிவம் அவர்கள் வீட்டுக்கு மாயாவதி மம்தா பானர்ஜியின் தரப்பிலிருந்து எவ்வளவு ஆட்டோக்கள் வரப்போகுதோ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

அருள் said...

நகை, பட்டுப்புடவை எல்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆயுதங்களாகத்தான் இருக்கின்றன. நகை, பட்டுப்புடவை, ஆடம்பர திருமணம் இவை மூன்றும் திருமணம் ஆகாமைக்கும் பெண் சிசுக்கொலைக்கும் காரணமாக இருக்கின்றன.

ஆனாலும், இவற்றையே பெண்கள் மிகப்பெரிதாக நினைப்பது - நுகர்வோர்மயத்தின் வெற்றி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு ஸ்ரீநாராயண குரு வரப்போவதில்லை - பெண்கள் இத்தீமைகளிலிருந்து விடுபடப் போவதும் இல்லை

Anonymous said...

if men in house assist in runnig the house, women will have enough time to watch news program also.

Anonymous said...

Inherently men and women are different. If we conclude we are same means, we are going against nature.

Women naturally need more talking to relax. In the same situation both will behave differently.

If both have the clothing for 10 years,

The man would be proud saying " I have this shirt for 10 years".

But the woman would say sadly "I have this same cloth for 10 years".

You can tell a man he is ugly, he may not be angry. But you can never tell a man stupid.

But the opposite holds good for woman.

Sridhar.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது