1/15/2005

Pottering around the book fair - Chennai 2005

புத்தகக் கண்காட்சியில் நல்ல வேட்டைதான் போங்கள்.

உள்ளே போகும்போதே பத்ரி அவர்களைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு கிழக்குப் பதிப்பகத்தின் கடை எண்ணைக் கேட்டுக் கொண்டு நேராக முதலில் அங்கே சென்றேன். பத்ரி மற்றும் பாரா அங்கு இருந்தனர்.

இரா. முருகன், பாரா, ஆர்.வென்கடேஷ் மற்றும் அசோக மித்திரன் எழுதிய சிலப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு பாராவிடம் அவர் புத்தகங்களில் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டேன்.

பிறகு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கடைக்குச் சென்று இரு தமிழ் அகராதிகள் (பொறியியல் மற்றும் சட்டம் சார்ந்தக் கலைச் சொற்கள் சார்ந்த அகராதிகளை வாங்கினேன்.

அல்லையன்ஸ் கடைக்குச் சென்று சோவின் ராமாயணம் இரன்டுப் பகுதிகளையும் மற்றப் புத்தகஙளையும் வாங்கினேன்.

1982-லிருந்து டில்லியில் இரட்டைப்படை எண்களுடைய ஆண்டுகளில் நடத்தப்படும் உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்கள் (முக்கியமாக ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அகராதிகள்) வாங்கிக் குவிப்பது என் வழக்கம். ஆகவே இங்கு புத்தகங்கள் தேர்வு செய்வதில் காலத் தாமதம் ஒன்றும் இல்லை.

குடும்பத்துடன் சேர்ந்து வந்ததால் அதிக நேரம் கண்காட்சியில் இருக்க இயலவில்லை. முடிந்தால் இன்னொரு முறை வர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அன்புடன்,
ராகவன்

1/09/2005

யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India

எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.

கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்துஇருக்கும் ரங்கனாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கனாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிபதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கனாதனையும் செருப்பால் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/07/2005

Maitreyi and Piroshka

ஒருவர் இந்தியர் மற்றொருவர் ஹங்கெரிய நாட்டைச் சேர்ந்தவர்.ஒருவருக்கொருவர் பரிச்சயம் இல்லை.

ஆனால் இந்த இரு பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

மைத்ரேயியைப் பற்றி அவர் இள வயது ருமேனிய நண்பர் எலியாட் ருமேனிய மொழியில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு "La nuit bengali" என்றத் தலைப்பில் வந்தது.

பிரோஷ்காவைப் பற்றி அவர் ஜெர்மானிய நண்பர் "Ich denke oft an Piroschka" (பிரோஷ்காவின் நினைவு எனக்கு அடிக்கடி வருகிறது) என்றத் தலைப்பில் ஜெர்மன் மொழியில் எழுதியுள்ளார்.

இரண்டு புத்தகங்களுக்கிடையில் அதிசய ஒற்றுமை உண்டு.

முதலில் மைத்ரேயி: 1930-ல் நடந்த உண்மைக் கதையாக அது குறிப்பிடப்பட்டுள்ளது.16 வயது மைத்ரேயிக்கு எலியாட் மேல் ஒரு மயக்கம். இருவர் காதலும் கலாசார வேற்றுமைகள் காரணமாக முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.தன் அனுபவங்களைப் பற்றி எலியாட் தன் நோக்கில் எழுத அது மைத்ரேயியைப் பற்றி வாசகர்களுக்கு ஒரு தவறானக் கண்ணோட்டம் கொடுத்து விட்டது.

மைத்ரேயியும் தன் சிறு வயதுக் காதலைப் பற்றி எழுதியுள்ளார். ஆனால் அது எனக்கு இதுவரைப் படிக்கக் கிடைக்கவில்லை.பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பு மைத்ரேயி இறந்தபின்புதான் வெளி வந்தது. அதைப் படிக்க எனக்கு விருப்பம் இல்லை.

இப்போது பிரோஷ்காவைப் பார்ப்போம்.1939 ஹங்கேரியில் நடந்தது.16 வயதுப் பிரோஷ்காவுக்கும் இந்த ஜெர்மானிய வாலிபனுக்கிடையிலும் அன்பு மலர்ந்தது. இந்த நாவலில் யுத்தம் காரணமாகப் பிரிவு ஏற்படுகிறது. "பிறகு நான் பிரோஷ்காவை பார்க்கவேயில்லை" என்ற வரியுடன் ஜெர்மானிய நாவல் முடிவடைகிறது.

ஆனால் இதே புத்தகத்தின் பின்னாள் வெளியீட்டை பார்த்தப் போது அவர்கள் இருவரும் மறுபடிச் சந்தித்ததுப் பற்றிக் குறிப்பிடப் படுகிறது.அப்போதுதான் வாலிபன் கூறியது மிகைப்படுத்தப்பட்டது என்றுத் தெரிய வருகிறது.ஆனால் ஒன்று. பிரோஷ்கா இதைப் பற்றி ஹ்ங்கேரிய மொழியில் கதை ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை.

இரண்டிலிருந்தும் நான் அறிந்தது என்னவென்றால் ஒரே நிகழ்ச்சியைப் பற்றி அதில் சம்பந்தப்பட்ட இருவர் பிற்காலத்தில் எழுதும் போது உள்ளடக்கம், கட்டமைப்பு எல்லாவற்றிலும் வேறுபாடுகள் தெரிகின்றன என்பதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. I am reposting this as it has vanished from my archive without trace and without any known reason. It is unfortunate that Raviaa's comment too has vanished. I had replied to his query and that too is gone.

1/06/2005

Even a scene in a mega-serial can be a hyperlink

புறா சமாதானச் சின்னமே இல்லை.

எல்லோரும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவதற்கு முன் நான் கொடுக்கும் ஆதாரங்களைப் பாருங்கள்.

கோன்ராட் லோரென்ட்ஸ் (Konrad Lorenz) என்பவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவர் எழுதியப் புத்தகம் எங்களுக்கு ஜெர்மன் டிப்ளமா பரீட்சைக்குரியப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தின் பெயர் "Er redete mit dem Vieh, den Vögeln und den Fischen"(மிருகம், பறவைகள் மற்றும் மீன்களுடன் பேசினான் அவன் (அரசன் சாலமன்)). இனி புத்தகத்திலிருந்துத் தொகுத்துத் தருகிறேன்.

இரண்டு நாய்கள் ஆவேசமாகச் சண்டை போடுகின்றன. ஒரு நாய் சளைத்து விட்டது. அது உடனே கீழே படுத்துக் கொண்டு தன் கழுத்தை இன்னொரு நாய்க்குக் காட்டுகிறது.

ஒரு கடியில் கதை முடிந்து விடும் என்று எதிர்ப்பார்த்த கோன்ராடுக்கு வியப்பு. வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாய் அதைக் கடிக்கவில்லை. அதையே சுற்றிச் சுற்றி வருகிறது. படுத்திருக்கும் நாய் எழுந்தவுடன் சண்டை மறுபடியும் துவங்குகிறது.

கோன்ராட் இதை Demütsgebärde (சரணாகதிச் சமிக்ஞை) என்றுக் குறிப்பிடுகிறார். நாய், ஓநாய், சிங்கம், புலி ஆகிய மிருகங்களின் பரம்பரை அணுக்களில் புதைந்துள்ள அற்புதம் இது.

ஆனால் புறாக்கள்? அதே புத்தகத்தில் கான்ராட் கூறுவதைப் பாருங்கள்.

இரண்டு புறாக்கள் ஒரே கூண்டில் இருந்தன. ஒரு புறா அமைதியான முக பாவத்துடன் வலிமையற்ற இன்னொருப் புறாவின் கழுத்தைக் கொத்திக் குதறுகிறது. ஒரே ரத்தம். இருப்பினும் கொத்துவது நிற்கவில்லை. மரணத்துக்குப் பிறகே அது நிற்கிறது.

ஆனாலும் இது அதிகம் காணக் கிடைக்காதக் காட்சிதான் ஏனெனில் சுதந்திரமாகப் பறக்கும் நிலையில் வலிமைக் குறைந்தப் புறா பறந்துச் சென்று விடும்.

இப்போது இதை நான் ஏன் கூறுகிறேன் என்றுக் கேட்பவர்களுக்கு:

நேற்று நான் பார்த்த மெட்டி ஒலிக் காட்சிதான் நான் மேலே கூறியதற்கு எனக்கு ஹைப்பர் லிங்காகச் செயல் பட்டது.

ரவிப் புறா லீலாப் புறாவைக் குத்துகிறது. லீலாப் புறாவின் அப்பாவாகிய சிதம்பரம் புறா லீலாவுக்குப் பொறுமையை உபதேசிக்கிறது. ஏன்? இந்தியப் பண்பாடாம்.

இந்தக் கூண்டில் அடைப்பட்டுக் கிடக்கும் லீலாப் புறாக்கள் தேவையானால் கட்டுப்பாடுகளை உடைக்கத் தைரியம் கொள்ளும்படிக் கதையை நடத்தத் தெரியாமல் திருமுருகன் என்னும் டைரக்டர் புறா எல்லோர் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிறது.

எல்லா தமிழ் சீரியலகளுமே இந்தக் குற்றத்தைத்தான் செய்கின்றன. இது பற்றிப் பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது