7/11/2005

செல்லப் பெயரின் பயன்

என் சிறு வயது தோழன் சிங்கு என்ற நரசிம்மனுடன் 30 வருடங்களாக தொடர்பு விட்டு போயிருந்தது. அவனைப் பலகாலமாகத் தேடிக் கொண்டிருந்தேன். அவன் குடும்பத்தினரும் என் அம்மாவின் அத்தையும் திருவல்லிக்கேணி சிங்கராச்சாரித் தெருவில் ஒரே வீட்டில் குடியிருந்தவர்கள். அவ்வீட்டார் அனைவரும் எனக்குப் பழக்கம்.

திடீரென்று ஒரு நாள் சிங்குவின் அக்கா டில்லியின் (இயற் பெயர் தெரியாது) தொலை பேசி எண் கிடைத்தது. பரபரப்புடன் போன் செய்தேன். ஃபோனை எடுத்து பதில் சொன்னது டில்லிதான் என்பதை அவர் குரலிலிருந்து அடையாளம் கண்டு கொண்டேன்.

நான்: ஹல்லோ, டில்லியா பேசுவது?
டில்லி: ஆமாம், நீங்கள் யார் பேசுவது?
நான்: டோண்டு
டில்லி: அடேடே டோண்டுவா, எப்படிடா இருக்கே? என்ன விஷயம்?
நான்: ஒன்றுமில்லை, சிங்குவின் நம்பர் வேண்டும்.
டில்லி: இதோ தருகிறேன்

30 வருட இடைவெளி செல்லப் பெயரால் ஒரு நொடியில் தகர்க்கப்பட்டது. ஆனால் ஒன்று. யாராவது க்ராஸ் டாக்கில் கேட்டிருந்தால் ரொம்பவே நொந்து போயிருப்பர்.

இதற்கு மாறாக வேறு இடத்தில் என்னைப் பற்றி விலாவரியாக என் அம்மாவின் தோழியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர் சாவகாசமாக கேட்டார் "டோண்டுதானே" என்று. அப்போதுதான் செல்லப் பெயரின் உபயோகம் தெரிந்தது.

இப்போது? டோண்டு என்றப் பெயரை நானே எதிர்பார்க்காத அளவுக்கு ரொம்பவுமே முனைந்து பிரபலமாக்கியிருக்கிறார் ஒரு புண்ணியவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/06/2005

நான் தேடும் ஹைப்பெர்லிங்க்

சாதாரணமாக என் ஹைப்பெர் லிங்க் நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதும் போது சம்பந்தப்பட்ட ஹைப்பெர்லிங்க் எது என்பதில் எனக்கு ஐயமே இருந்ததில்லை. இப்போது மட்டும் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன ஆனால் அவற்றைப் பற்றிய நினைவைத் தூண்டிய ஹைப்பெர்லிங்க் எது என்பதைத்தான் மறந்து விட்டேன். என் வலைப்பதிவு நண்பர்கள் எனக்கு இதில் ஏதாவது உதவி செய்ய முடியுமா?

சரி, நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். முதல் நிகழ்ச்சி அலிபாபாவின் கதையில் வரும். அந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அலிபாபா (எம்.ஜி.ஆர்.) தையற்காரனின் (தங்கவேலு) கண்களைக் கட்டி தன் வீட்டுக்கு அழைத்து வருவார். வெட்டப்பட்டிருக்கும் தன் அண்ணன் (எம்.ஜி.சக்கரபாணி) உடலைத் தைக்கச் செய்து, நிறையப் பணம் கொடுத்து, திருப்பி அவன் கண்களைக் கட்டி அவனை அனுப்புவார். வீட்டைத் திரும்ப அடையாளம் கண்டு கொள்ள அந்தத் தையற்காரன் அலிபாபாவின் வீட்டுக் கதவில் ஒரு குறியிடுவான். இதை யதேச்சையாக கவனித்த மார்ஜியானா (பானுமதி) புத்திசாலித்தனமாக தெருவில் இருந்த எல்லா வீடுகளுக்கும் அவ்வாறே குறியிட, பிறகு கொள்ளையர் தலைவன் (பி.எஸ்.வீரப்பா) பின்தொடர வரும் தையற்காரன் வீட்டை அடையாளம் காட்ட முடியாது திகைப்பான்.

இன்னொரு நிகழ்ச்சி நிஜமாக நடந்தது. ஐ.டி.பி.எல்.-லில் எங்கள் பொறியியல் மேலாளர் பாலிகா அவர்கள் தன் சகா மகரபூஷணம் சம்பந்தமாகக் கூறியது. மகரபூஷணத்துக்கு பொது மேலாளர் ஒரு வேலை கொடுத்தார். அதாவது, தனக்கு வேண்டிய மூவருக்கு முன்கூட்டிய ஊதிய உயர்வு அளிப்பதற்காக ஒரு கோப்பைத் தயார் செய்யச் சொன்னார். மகரபூஷணம் ஒரு காரியம் செய்தார். கோப்பைத் தயார் செய்தார், ஆனால் வேண்டிய மூவருக்காக கொடுத்த குறிப்புகளை வைத்து கொண்டு மொத்தம் 10 பேர் முன்கூட்டிய ஊதிய உயர்வுக்கு தகுதியானவர்கள் என்பதாகக் கோப்பைத் தயாரித்தார். பொது மேலாளரும் வேறு வழியின்றி அதை நிதி ஒதுக்கலுக்காகப் பரிந்துரைக்க, தலைமை அலுவலகம் அப்பரிந்துரையை நிதிப் பற்றாக்குறை காரணமாக நிராகரித்தது.

இந்த நிகழ்ச்சிகள் இரண்டும் திடீரென எனக்கு இப்போது ஏன் நினைவுக்கு வந்தன? அதுவும் பிரிட்டிஷ் தயாரிப்பான மார்ரிஸ் மைனர் காரைப் பற்றி ஒரு பழைய பத்திரிகைக் குறிப்பை பார்த்ததும் அவை நினைவுக்கு வந்தன. ஏன் என்று புரியாமல் சிண்டைப் பிய்த்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

7/04/2005

மொழி பெயர்ப்பில் ஹைப்பர் லிங்க்

This is another updated old post.

ஒரு ஜெர்மன் கட்டுரை மொழி பெயர்ப்புக்காக வந்தது. அதில் திடீரென்று ஒரு சுருக்கப்பட்டச் சொல்லைப் பார்த்தேன்.

"ver. Spiegel" என்று குறிப்பிட்டிருந்தார்கள். Spiegel என்றால் கண்ணாடி என்றுப் பொருள். ஆனால் ver.?

கட்டுரை ஒரு பெரிய ஜெனரேட்டரைப் பற்றியது. மேலே குறிப்பிடப்பட்டிருந்தக் கண்ணாடி ஜெனரேட்டரைச் சோதிப்பதற்கு உபயோகப்படுவது. தலை முடியைப் பிய்த்துக் கொள்வதுதான் பாக்கி. ஏனெனில் ver.-க்கு முழு வார்த்தை (expansion) என்னவென்றுக் கூறுதல் மிகக் கடினம்.

அம்மாதிரி நேரங்களில் நான் சிறிது நேரம் வேலையை நிறுத்தி விட்டு வேறு ஏதாவது செய்வது வழக்கம். கையில் ஒரு ஆங்கிலத் துப்பறியும் நாவல் கிடைத்தது. அதை சுவாரஸ்யமாகப் படிக்க ஆரம்பித்தேன்.

அதில் கதாநாயகன் காரில் இரு தேசங்களுக்கிடையில் உள்ள எல்லைக்கோட்டைக் கடப்பதற்காக அங்குச் செல்வான். எல்லையில் உள்ள அதிகாரி காரின் அடியில் ஒரு பெரியக் கழியின் முடிவில் ஒரு கண்ணாடியைப் பொருத்தி ஏதாவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க அக்கண்ணாடியைக் காருக்கு அடியில் தள்ளிப் பார்ப்பார்கள். அதை ஆங்கிலத்தில் "sliding mirror" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதைப் படித்த உடன் என் வழக்கமான பல்ப் மண்டைக்குள் எரிந்தது. என்னை அறியாமலேயே அந்த ஆங்கிலச் சொல்லை ஜெர்மனில் கூறிப் பார்த்தேன்.

"Vershiebbarer Spiegel" என்று வந்தது. அப்புறம் என்ன. புத்தகத்தை ஓரமாக வைத்து விட்டு மொழி பெயர்க்க ஆரம்பித்தேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று வாடிக்கையாளரைக் கேட்டால் அவர் நான் ஊகித்தது சரி என்றுக் கூறினார்.

7/02/2005

ஹைப்பர் லிங்க் (ஆனால் என்னுடையது அல்ல)

ஹைப்பெர் லிங்க் பற்றி நான் முன்னம் பதித்த இன்னொரு பதிவை இங்கு இற்றைப்படுத்துகிறேன் அப்படியே வாசகர்களையும் படுத்துகிறேன் என்று யாராவது கூறிவிடும் முன்னால் நானே அதையும் இப்போதே கூறிவிடுகிறேன்.

வருடம் 1971. அப்போது பம்பாயில் மாதுங்காவில் இருந்தேன். நாங்கள் 10 தமிழர்கள் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கியிருந்தோம். ஆளுக்கொரு கட்டில். ஒரு கட்டிலுக்கு வாடகை 70 ரூபாய்கள்.

அது பற்றிப் பிறகு. இப்போது ஹைப்பர் லிங்க்குக்கு வருவோம்.

ஞாயிறு காலையில் 10 மணி அளவில் ஆனந்தமாக கன்ஸர்ன்ஸில் சாப்பிட்டுவிட்டு 11 மணியளவில் பக்கத்தில் உள்ள அரோரா சினிமாவில் ஏதாவது தமிழ்ப்படம் காலைக் காட்சி பார்க்கச் செல்வது வழக்கம். அன்று அம்மாதிரி என் சக அறைவாசிகள் நரசிம்மன் மற்றும் சுந்தரம் 'குடியிருந்த கோவில்' படத்துக்குச் சென்றிருந்தனர். ஆனால் பாதியிலேயே திரும்பி விட்டனர். என்ன விஷயம் என்று கேட்டேன்.

நரசிம்மன் எரிச்சலுடன் கூறினான்:"அட போப்பா. ஏற்கனவே பார்த்த படம். இந்தப் படத்தைப் பொறுத்த வரை இது நான்காம் முறையாக நடக்கிறது" என்றான்.

"சற்று விவரமாகச் சொல்லப்பா" என்றேன். அதற்கு அவன் கூறினான்:

"நம்பியார் இரண்டாவது சீனில் எம்.ஜி.ஆரின் அப்பா ராம்தாசைத் துரத்திக் கொண்டு வருவார். முகத்தை வழக்கம்போல கோணிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேகக் குரலில் 'அடேய் ராமனாதா' என்று கத்துவார் இல்லையா"?

நான்:"ஆமாம் அதற்கு என்ன இப்போது?"

நரசிம்மன்:" அதுதான் பிரச்சினையே. அந்த 'அடேய் ராமனாதா' வந்தப் பிறகுதான் எனக்கு இது நான் ஏற்கனவே பார்த்த படம் என்று நினைவுக்கு வரும். இது நான்காம் முறை."

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது