1/14/2006

துக்ளக் 36-ஆம் ஆண்டு நிறைவு

பகல் 10.30-க்கு டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபாவில் துக்ளக் பத்திரிகையின் 36-வது ஆண்டு நிறைவு மீட்டிங் துவங்கியது. காலை 8.30-க்கே போய் இடம் பிடிக்க வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக போன ஆண்டு விழா கூட்டம் நடந்த மியூசிக் அகாடெமியை விட இந்த அரங்கு பெரியது. அவ்வளவு சீக்கிரம் சென்றதால் நல்ல வரிசையில் இடம் கிடைத்தது. 9 மணிக்கெல்லாம் அரங்கம் நிறைந்து விட்டது. இம்முறை பாரதியாரின் பாஞ்சாலி சபதம் கேசட் காத்திருப்பு நேரத்தில் போட்டார்கள். சோ குரலில் கேட்க முடிந்தது.

சரியாக 10.30-க்கு சோ மைக்குக்கு வந்து எல்லோருக்கும் வணக்கம் போட்டு மீட்டிங்கை ஆரம்பித்துவைத்தார். எடுத்தவுடன் ஹஜ் பயணிகள் பலர் நெரிசலில் சிக்கியதற்கு துக்ளக்கின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். வழக்கம்போல தன்னுடன் துக்ளக்கில் பணியாற்றியவர்களை அறிமுகம் செய்வித்தார். பிறகு நேரத்தை வீணாக்காமல் சீட்டு குலுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள் சிலர் பேச அழைக்கப்பட்டனர். அவர்களும் நேரத்தை வீணாக்காது கச்சிதமாக தங்கள் கேள்விகளை இட்டு நகர்ந்தனர். போன வருடம் போல இம்முறையும் நான் என் பார்வைக் கோணத்திலிருந்து எழுதுகிறேன். கையில் பேனா பேப்பர் ஏதும் இல்லா நிலையில், பக்கத்தில் இருந்தவரிடம் பேனா இரவல் வாங்கி, நான் பஸ்ஸில் படிப்பதற்காக கொண்டு சென்ற சுஜாதா அவர்களின் புத்தக உள் அட்டையில் குறிப்புகள் எடுத்தேன். கேள்வி கேட்ட வாசகர்கள் பெயர்களை குறிக்கவில்லை.

சோ அவர்கள் வெவ்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலாகக் குறிப்பிட்டதை விஷயவாரியாக தருவேன்.

பாரதீய ஜனதா கட்சி
இக்கட்சிக்கு ஒரு மாதிரி டிப்ரஷன் வந்து விட்டது போலத் தோன்றுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல இடிந்து போயிருக்கிறார்கள். பீஹார் குஜராத் ஆகிய இடங்களில் பெற்ற வெற்றிகள் அவர்களுக்கு சுய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். காங்கிரஸுக்கு எதிராக எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் இந்த நேரத்தில் இக்கட்சி தன் சுய நம்பிக்கையை விடலாகாது. எப்போதும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் அபிப்பிராயம் உருவாகும் நேரத்தில் எதிர்க்கட்சி தன் கட்டுக்கோப்பை இழக்காமல் இருத்தலே தேர்தலில் வெற்றிபெற மிக அவசியமாகும். 1977-ல் நடந்தது இதுதான்.

பா.ஜ.க. வும் பத்திரிகைகளும்
பல பத்திரிககைகள் உண்மையாகவே பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று நினைக்கின்றன. இந்தத் தோற்றத்தை அகற்ற அக்கட்சி நல்ல பப்ளிக் ரிலேஷன்ஸ் வேலை செய்ய வேண்டும். பத்திரிகைக்காரர்களை அழைத்து அத்வானி, வாஜ்பேயீ அவர்கள் பேசவேண்டும். இம்மாதிரி விஷயங்களில் கருணாநிதி அவர்கள் ஜயலலிதாவை விட நல்ல முறையில் செயல்படுகிறார்.

தீவிரவாதம்
தீவிரவாதத்தின் முக்கியக் காரணம் பலவித நாசகார ஆயுதங்கள் சுலபத்தில் விலைக்குக் கிடைப்பதுதான். சோவியத் யூனியன் சிதறியதும் அதன் குடியரசுகளில் உள்ள ஆயுதங்கள் பல வேண்டாத சக்திகளிடம் போய் சேர்ந்தன. எப்படியாவது கலக சூழ்நிலைகளை பெருக்கி ஆயுதங்களை விற்க அமெரிக்கா போன்ற நாடுகளும் செயலாற்றுகின்றன. எப்படியும் வன்முறை என்பது மனிதனின் அடிப்படையிலேயே உள்ளது. அதற்கு தீனிபோடுகின்றனர் ஆயுதங்களை விற்பவர்கள்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கூறுவதை விட தீவிரவாதம் என்றுதான் கூறவேண்டும். புலிகள் இஸ்லாமியர் அல்ல, காலிஸ்தானியர் இஸ்லாமியர் அல்ல, ஐரிஷ் தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. ஸ்ரீலங்காவில் அஹிம்ஸை போதிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த பலர் செய்யாத தீவிரவாதமா? கூறப்போனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்று பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் உருவாகின்றனர். ஆகவே இஸ்லாமியரை மட்டும் குறிவைப்பது நீதியாகாது.

ரஜனிகாந்த்
ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அதை பற்றி பேசுவதையும் தான் விட்டாயிற்று என்று சோ கூறிவிட்டார். உடனேயே, தான் கூறுவதை விட்டுவிட்டதால் ரஜனி வந்தாலும் வரலாம் என்றும் பொடி வைத்து பேசினார். ஒரே சிரிப்பு.

வாஜ்பேயிக்கும் மன்மோகனுக்கும் உள்ள வேறுபாடுகள்
முன்னவர் பிரதம மந்திரியாக இருந்தார். பின்னவரைப் பற்றி அவ்வாறு கூற முடியாது. உதவிப் பிரதமர் என்று வேண்டுமானால் கூறலாம். வாஜ்பேயி காலத்தில் நடத்திய போக்ரான் அணுபரிசோதனை அமெரிக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் உளவுத்துறைக்கு இது நிச்சயம் ஒரு பின்னடைவே. மன்மோகன் இப்போது இருக்கும் நிலையில் அதைக் கண்டிப்பாகச் செய்ய முடியாது. ஒவ்வொருவரிடமும் கேட்டு செய்வதற்குள் நொந்து விடுவார். சோனியா காந்தியைக் கேட்டால் அவர் க்வாட்ரோக்கியோடு ஆலோசனை செய்யச் சொல்வார், மு.க. அவர்கள் தயாநிதி மற்றும் கலாநிதியைக் கேட்கச் சொல்வார். லாலு அவர்கள் பாஸ்வான் மேல் அந்த குண்டைப் போட்டால் தனது ஆதரவு உண்டு என்று கூறுவார். அதற்குள் அமெரிக்காவுக்கு சாட்டலைட் கேமரா இல்லாமலேயே எல்லாம் தெரிந்து விடும். கம்யூனிஸ்டுகள் கடைசியில் கூடாது என்று கூறிவிடுவார்கள். ஆக முயற்சி கைவிடப்படும்.

அரசியல் நாகரிகம்
வெவ்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் சந்திக்கும்போது தமிழ்நாட்டில் முகத்தைத் திருப்பிச் செல்கின்றனர். அதுவே வட இந்தியாவில் சுமுகமாகப் பேசிக் கொள்கின்றனர். இது பற்றிப் பேசுகையில் தமிழ்நாட்டில் இப்போதைய நிலைமைக்கு எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி இடையில் நிலவிய விரோத மனப்பான்மையே காரணம் என்று கூறினார். அது மெதுவாக மறைந்து தமிழகத் தலைவர்களிடம் மனமுதிர்ச்சி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜயலலிதா மற்றும் கருணாநிதியை பற்றி துக்ளக் எழுதும் முறை

கருணாநிதி அவர்கள் பலமுறை மிக நல்ல நகைச்சுவைக்கு இடம் அளிக்கிறார் என்று சோ குறிப்பிட்டார். உதாரணத்துக்கு தான் 2001-ல் கைதான நிகழ்ச்சியை குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகளை மிகைபடுத்திக் கூற ஆரம்பித்தார். கடைசியில் தன் வீட்டுப் பெண்களிடமே போலிஸார் முறைதவறி நடந்தனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்தனர் என்றும் அவர் கூற ஆரம்பித்து விட்டார். இவ்வளவு தமாஷாக எல்லாம் கூறினால் அதற்கேற்பத்தான் தன் நடவடிக்கையும் இருக்கும் எனக் கூறினார். ஜயலலிதா இந்த விஷயத்தில் டெட் சீரியஸ் என்றும் கூறினார். மற்றப்படி இருவரையும் சமமாகவே பாவிப்பதாகக் கூறினார்.

கேள்விகள் எல்லாம் முடிந்த நிலையில் சோ அவர்கள் பேசினார்.

அத்வானி அவர்கள் ஜின்னாவைப் பற்றித் தேவையில்லாது பேசி சங்கடத்தை வரவழைத்துக் கொண்டார், மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தன் பங்குக்கு சொதப்பியது என்றும் அவர் கூறினார். ஜின்னா அவர்களைப் பற்றி சோ மேலே பேசும்போது கிலாஃப்த் இயக்கத்தில் ஈடுபடவேண்டாம் என அவர் காந்தியடிகளுக்கு அறிவுரை கூறியதையும் கூறினார். அப்போது மதச்சார்பற்று இருந்த அவர் பாகிஸ்தானைப் பெறும்போது அவ்வாறு இல்லை என்பதையும் கூறினார். ஆக இது அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இடையே கௌரவப்பிரச்சினையானதுதான், ஆகவே சங்கடத்துக்குரியது என்றும் கூறினார். இப்போதைக்கு வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகிய இருவரும் தேர்தலைச் சந்திக்க கட்சிக்கு தேவை என்றும் அவர் பேசினார். துறவியான உமா பாரதி அவர்கள் நீதி முதலிய நல்ல பண்புகளையும் துறந்தார் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸைப் பற்றிப் பேசும்போது அதுவும் வலிமையான நிலையில் இல்லை என்று கூறினார். காஷ்மீர் தீவிரவாதத்தை பெங்களூர் வரை பரவ விட்டுவிட்டது காங்கிரஸ் என்றும் அவர் கூறினார். க்வாட்ரோக்கி அவர்கள் விஷயத்தில் லண்டனில் முடக்கிய அவர் வங்கிக் கணக்குகளை விடுவிக்க சட்ட மந்திரி முயன்றது கண்டிக்கத் தகுந்த செயல் என்றும் அவர் கூறினார். சோனியா காந்திக்கு அவர் வேண்டிவர் என்ற ஒரே காரணத்தால்தான் இத்தனையும் நடந்ததாகவும் அவர் கூறினார்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு போக வேண்டியதே, ஆனால் இப்போதைக்கு அது போகாது என்றும் கூறினார். இன்னும் பல சொதப்பல்களை செய்து விட்டுத்தான் அது போகும் என்றும் அதுவே பி.ஜே.பி.க்கு சாதகமான நிலை வர வழி செய்யும் என்றும் அவர் கூறினார். பீஹாரில் கூட சட்டசபை கலைப்பால் பி.ஜே.பி. நிதிஷ் குமார் கூட்டணி அரசு இன்னும் நல்ல நிலை அடைய முடிந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழகத்தை பொருத்தவரை இம்முறை யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தான் கூறப்போவதில்லை என்று கூறிக்கொண்டே ஜயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சாதக பாதகங்களை பட்டியலிட ஆரம்பித்தார். அவ்வாறு செய்யும்போது தான் ஒன்றும் பரிந்துரையெல்லாம் செய்யவில்லை என்பதையும் அவர் அடிக்கடி கூறி அரங்கத்தில் கலகலப்பை உண்டாக்கினார். ஆனால் கடைசியில் தீவிரவாத எதிர்ப்பு, தி.மு.க.வால் தூண்டப்பட்ட மத்திய அரசின் எதிர்ப்பு இருப்பினும் அரசை திறமையாக நடத்திச் சென்றது, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கையாண்டது, தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது எல்லாவற்றையும் அடிக்கோடிட்டு ஜெயலலிதாவுக்கு தன் ஆதரவை சூசகமாகத் தெரிவித்தார்.

போன வருடம் சங்கராச்சாரியாரை பற்றி மிகவும் பேசிய சோ அவர்கள் இம்முறை மிகச் சில வாக்கியங்களிலேயே பேசி முடித்தார். அதாவது தெருவில் நியூசன்ஸ் செய்தார் என்ற வழக்கைத் தவிர மற்ற எல்லா வழக்குகளையும் அரசு போட்டுப் பார்த்துவிட்டது என்று கூறினார். தேவையில்லாது குண்டர் சட்டத்தை இவ்வரசு பயனபடுத்தியதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

கடைசியில் நாடகக் காவலர் மனோஹர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/13/2006

பிராமண சங்கம் பற்றி சில வெளிப்படையான எண்ணங்கள்

ரோசா வசந்த் அவர்களின் ஒரு பின்னூட்டத்தில் தாம்ப்ராஸ் மீட்டிங்கைக் குறிப்பிட்டு நான் அதற்கு போனேனா என்பது தெரியாதென்றெழுதியிருந்தார். நான் அதற்கு போகவில்லை என்று அவருக்கு அதே பதிவில் பின்னூட்டமிட்டேன். அன்று (25.12.2005) நான் ஹ்யூமர் கிளப் மைலை சேப்டருக்கு "Guest of Humour" (not honour!) ஆகச் சென்றிருந்தேன். அதற்கு முந்தைய நாளும் மீட்டிங் நடைபெற்றதாக அறிந்தேன். அது எனக்கு நிசமாகவே தெரியாது. தெரிந்திருந்தால் போயிருப்பேன். ஆக, நான் இப்போது அந்த மீட்டிங்கைப் பற்றி எழுதப் போவது நேரடியாகப் பார்த்து வருவதல்ல. பல இடங்களில் படித்து அறிந்ததுதான்.

இப்பதிவை என்னுடைய பழைய பதிவு "சில வெளிப்படையான எண்ணங்கள்"-ன் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன். அது சம்பந்தமான பல பின்னூட்டங்கள் என்னுடைய இன்னொரு பதிவில்தான் அதிகமாக வந்தன. முதற்கண் நான் சில விஷயங்களுக்கு என் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறேன். பல ஆண்டுகளாக தேவையற்ற பொறுமை காத்து வந்திருக்கும் பார்ப்பனர்கள் இப்போது சீறுவது கண்டு சந்தோஷம். இப்போதாவது நான் எடுத்த நிலைதான் சரியானது என்பதை வலைப்பூ உலகில் இருக்கும் பல பார்ப்பனர்கள் புரிந்துகொண்டால் சரிதான்.

சுஜாதா அவர்கள் என்ன அப்படித் தவறாகக் கூறிவிட்டார்? பார்ப்பனர்கள் தமிழை அழிக்கிறார்கள் என்ற அவதூறு பிரசாரத்திற்குத்தான் தக்க பதிலளித்தார் அவர். இப்போது கூட தமிழ் என்று உச்சரிக்க முடியாத பலர் தமிள் என்று கூற அதை ஸ்பஷ்டமாக உச்சரிப்பவர்கள் பார்ப்பனரே. இதை நான் இங்கு கூற காரணம் ழகரம் தமிழின் சிறப்பு என்ற நிலையில் அச்சிறப்பை வளர்க்க இயலாத நிலையில் பலரும் இருப்பதே. மேலும் கூறுவேன், தமிழகத்தில் பிறந்து, இங்கேயே வளர்ந்து வரும் நாங்கள் தமிழர்கள் என்று கூற எவருடைய சான்றிதழும் எங்களுக்கு தேவையில்லை.

ஆனால் ஒன்றை முதலிலேயே கூறிவிடுகிறேன். அரிவாளைத் தூக்கிக் காட்டுவது சற்று மிகைப்படுத்தலே ஆகும். கும்பலில் வந்த ஆக்ரோஷம் என்று கூறினாலும் சற்றே அடக்கி வாசித்திருக்க வேண்டுமென்றே நான் கூறுவேன்.

முகமூடி அவர்கள் தன் பதிவில் கூறுகிறார்: "பிராம்மணர் மாநாட்டில் கலந்து கொண்டதால் திராவிடர் கழக பீரங்கியான உண்மை நாளேடுக்கு சாலமன் பாப்பையா பேச்சு வியாபாரியாகிவிட்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதியும் இவர்களின் விமர்சனத்துக்கு தப்பவில்லை. ஆக இதை ஒரு செய்தியாக இல்லாமல் தனது விமர்சனத்தோடும் சேர்த்து வழங்கியிருக்கும் உண்மையில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை. எப்படியும் உண்மைக்கு பிராமண சங்கத்திடமிருந்து விளக்க கடிதங்களும் வரப்போவதில்லை. ஆக இப்போதைக்கு உண்மை சொல்வதே மெய்..."

உண்மை பத்திரிகை பற்றி. அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தல் கால விரயமே, ஏனெனில் அவர்கள் அதைப் போட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த விஷயத்தில் உண்மை, விடுதலை ஆகிய பத்திரிகைகள் தங்களுக்கு சங்கடம் தரும் விஷயத்தைப் போட மாட்டார்கள் என்பது தெரிந்ததே. ஆகவேதான் பிராம்மணர்கள் சங்கம் உண்மை பத்திரிகைக்கெல்லாம் எழுதி நேர விரயம் செய்யவில்லை.

பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை மட்டும் அடிக்கும்படி கூறிய பெரியார் அவர்களின் சீடர்களிடம் நியாயம் எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான். இத்தருணத்தில் இதை பெரியார் அவர்கள் பிராம்மனாள் ஹோட்டல் என்று குறிப்பிடுவதற்கு எதிர்த்து செய்த ஆர்ப்பாட்டத்தின் சமயத்தில் நான் நேரடியாக கேட்டவன் என்ற முறையில் நான் கூறியது நேரடி சாட்சி மூலம் என்பதையும் சொல்லிவிடுகிறேன். பாப்பாத்தியை தேசீய உடமையாக்கு என்ற ரேஞ்சுக்கெல்லாம் எதிரிகள் பேசுவார்களாம் ஆனால் பார்ப்பனர் பொறுமை காட்ட வேண்டுமா? ஆகவேதான் வெட்டுவோம் என்று பிரமிட் நடராஜன் அவர்கள் அவ்வாறு பேசினார்.

பிராம்மணாள் ஹோட்டல் விஷயமும் கேலிக்கூத்தாகவே முடிந்தது. திருவல்லிக்கேணியில் உள்ள முரளி கஃபேயில்தான் போராட்ட மையம். பெரியார் அவர்கள் பிறாம்மணாள் ஹோட்டல் என்று கல்லில் செதுக்கியது மேல் தாரைப் பூச, அது இன்னும் பளபளவென ஜொலித்ததுதான் மிச்சம். ஹோட்டல் முதலாளி முரளி ஐயர் அவர்களிடம் தி.க.வின் பாச்சா பலிக்கவில்லை என்பதுதான் நிஜம். பிறகு சில ஆண்டுகளுக்கு பிறகு முரளி அவர்களே காஞ்சிப் பெரியவர் கூறியதற்கிணங்க தானே அதை செதுக்கி எடுத்தார்.

கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்பது உண்மையே. பார்ப்பனர்கள் தங்கள் நலனைத் தாங்களே பார்த்துக் கொள்வதுதான் நல்லது.

பத்ரி அவர்கள் கூறுவது போல ஏழ்மை நிலையில் இருக்கும் அந்தணக் குடும்பங்களுக்கு உதவுவது என்பதையும் பிராம்மணர் சங்கம் வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல ஆக்கப் பூர்வ வேலைகள் காத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் செய்ய நாம் யாருடைய தயவையும் எதிர்ப்பார்க்கக் கூடாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/11/2006

உலகமயமாக்கலும் நானும்

சென்னையிலேயே பிறந்து 25 வயது வரை வளர்ந்த நான் 1971-ல் மத்தியப் பொதுப்பணித் துறையில் போஸ்டிங் பெற்று பம்பாய் சென்ற போது பலவித உனர்ச்சிகளுக்கு ஆளானேன். டிகிரி பெற்று ஒரு வருடம் காத்திருந்த பிறகு வேலை கிடைத்தது சந்தோஷம்தான் என்றாலும் சென்னையை விட்டு பிரிய வேண்டியிருக்கிறதே என்ற வருத்தமும் அடைந்தேன். எப்போது சென்னைக்கு மாற்றம் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து 1974-ல் சென்னைக்கு மாற்றம் பெற்று வந்தபோது மிக மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால் அதுவே 1991-ல் ஐ.டி.பி.எல்.லில் என்னை சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபரில் அனுப்ப முயன்றபோது மேலே விழுந்து அதைத் தடுத்தேன். அதற்குள் சென்னை பிடிக்காமல் போய்விட்டதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. விஷயமே வேறு. டில்லியில் என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகள் அமோகமாக நடந்து கொண்டிருந்தன. தலைநகரானதால் இங்கு அன்னிய மொழிகள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு அதிக சாத்தியக்கூறுகள் அவ்வளவுதான். சென்னையில் அந்தக் காலக் கட்டத்தில் அவ்வளவு வாய்ப்புகள் இல்லைதான். ஆகவே 1993-ல் விருப்ப ஓய்வு பெற்றாலும் டில்லியிலேயே 2001 வரை என் மொழிபெயர்ப்பு வேலைகளை மட்டும் நம்பி செயல்பட முடிந்தது.

2001-ல் சென்னைக்கு போகலாம் என்று முடிவெடுத்தபோதும் மனதுக்குள் சிறு உதறல்தான். சென்னையில் இவ்வளவு வேலை கிடைக்குமா என்ற ஒரு சிறு உறுத்தல். இருந்தாலும் சொந்த வீட்டுக்குத்தானே வருகிறோம், டில்லியில் கொடுத்த 5000 ரூபாய் வாடகை மிச்சம், மேலும் மாதம் 5000 கொடுத்தால், தான் சிக்கனமாகக் குடும்பம் நடத்திக் காட்டுவதாக என் வீட்டம்மா வேறு உறுதியளித்தார். இதே மாதிரி உறுதி மொழியை அவர் 1993-லும் கொடுத்ததன் பேரிலேயே நான் விருப்ப ஓய்வு எடுத்திருந்தேன். ஐ.டி.பி.எல்.-ல் கடைசியாக பெற்ற மாத சம்பளத்தை விட மிக அதிகமாகவே ஒவ்வொரு மாதமும் பொருள் இட்ட முடிந்ததை நினைவில் கொண்டு இப்போதும் செயல்பட்டேன். இம்மாதிரி விஷயங்களில் என் வீட்டாம்மா என்னுடைய much much better-half.

இங்குதான் உலகமயமாக்கம் என் துணைக்கு வந்தது. நான் சென்னை போகப் போகிறேன் என்பதை என்னுடைய மிகப்பெரிய டில்லி வாடிக்கையாளரிடம் கூறியபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். "என்ன ராகவன் இவ்வாறு முடிவெடுக்கிறீர்கள், இப்போதுதானே ஒரு பெரிய ஆர்டருக்கு சான்ஸ் இருக்கிறது" என்று அவர் ஆதங்கத்துடன் கூற, அவரிடம் நான் மின்னஞ்சல் முகவரி பெர்று அவருடன் தொடர்பு கொள்வேன் என உறுதியளித்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கு கணினி அறிவு அப்போது பூஜ்யமே. எலிக்குட்டியை பிடித்துக் கூட பார்த்ததில்லை.

சென்னைக்கு வந்த அரை மணிக்குள் என் மருமாள் எனக்கு தன் கணினியில் வைத்து yahoo முகவரி வாங்கிக் கொடுத்தாள். Raghavan Translator Interpreter என்ற சொற்களிலிருந்து raghtransint@yahoo.co.in என்ற முகவரியை பதிவு செய்தேன். டில்லி வாடிக்கையாளருக்கு அதை தெரிவிக்க அவரும் மூன்று நாட்களுக்குள் ஒரு பெரிய கோப்பை அனுப்பினார். எங்கள் குடும்ப நண்பரின் மகன் உதவியுடன் கணினியில் தட்டச்சு செய்வித்து டில்லி வாடிக்கையாளருக்கு அனுப்ப வேலை சூடு பிடித்தது. பிப்ரவரி 2002-ல் நானே கணினி வாங்கி, டயல் அப் இணைய இணைப்பை பெற்று என் வேலைகளைத் தொடர முடிந்தது. 2004 இறுதி வரை டில்லி வேலைகள்தான் பாதிக்கு மேல். சென்னை வாடிக்கையாளர்கள் லிஸ்ட் மிக மெதுவாகத்தான் வளர்ந்தது. டில்லி ஆதரவின்றி நான் சென்னை வந்திருந்தால் முதலில் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன். இணையத்தின் தயவால் பிழைத்தேன். இணையத்தின் வளர்ச்சி உலகமயமாக்குதலுக்கு ஆதாரமா அல்லது உலகமயமாக்கல் இணயத்தின் வளர்ச்சிக்கு வழிகோலியதா என்று பார்த்தால், இரண்டு பக்கமாகவும் பேசலாம். ஆனால் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. எது எப்படியானால் என்ன, முன்னேற்றம்தான் முக்கியம்.

இப்போது? அகலப்பட்டை இணைய இணைப்பு, Windows XP, பல மென் பொருள்கள், கூகள், ஆன்லைன் பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலிய அகராதிகள், இத்யாதி இத்யாதி. உலகமயமாக்கலால் பல வேலைகள் இந்தியாவுக்கு வந்துள்ளன. அவற்றில் மொழிபெயர்ப்பு ரொம்பவும் முக்கியமானது. சில நாட்களுக்கு நியூயார்க்கில் உள்ள ஒரு பாகிஸ்தானியரால் நடத்தப்படும் ஏஜென்ஸிக்கு ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தேன். பணத்தை அவர் இந்திய ரூபாயாக Money Gram-ல் அனுப்ப அடுத்த பத்து நிமிடத்தில் பணம் சென்னைக்கு வந்தது.

அயர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனம் தன்னுடைய ஜெர்மன் கூட்டாளியிடமிருந்து ஜெர்மன் மொழியில் வரும் மின்னஞ்சல்களை மொழிபெயர்க்க என்னைத் தேர்ந்தெடுத்துள்ளது. தினம் பகல் 2 முதல் 10 மணி வரை வேலை. மின்னஞ்சல்கள் வர வர அவற்றை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கோ அல்லது எதிர்த்திசையிலோ மொழி பெயர்க்க வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால் அயர்லாந்து கம்பெனி ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளரை வேலைக்கு வைத்துக் கொள்ளத் தேவையில்லை. எனக்கு என்ன பலன்? ஸ்டெடியான வேலை, அதற்கேற்ப சம்பளம். இருவருமே பயன் பெறுகிறோம். இதுதான் உலகமயமாக்கல். விளையாட்டாகத் தமிழ்மணம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூகள் டாக்கிலிருந்து மின்னஞ்சல் வருவது பலூன் போல மேலெழும்ப உடனே அந்த வேலையை பார்க்க வேண்டியதுதான், அயர்லாந்துக்காரர்களும் அடுத்த சில நிமிடங்களுக்குள் மொழிபெயர்ப்பை பெற முடிந்ததில் மிக மகிழ்ச்சி அடைகின்றனர்.

இப்போது வரும் மெடிகல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன்ஸ்களும் இம்மாதிரி வேலைகளே. கால் செண்டர்களும் அவ்வண்ணமே. ஆகவே நாமும் நம்மை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நிகழ்வுகள் நம்மை ஓரம் கட்டிவிடும். இதை உணர்ந்து இப்போதே முன்னேறிய நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

ஜெர்மனியில் ஒரு தேர்தல் கோஷம் "Kinder statt Inder". (நிறையக் குழந்தைகள்தான் நமக்குத் தேவை, இந்தியர்கள் அல்ல). இதன் பின்புலன். ஜெர்மனியில் மென் பொருள் நிபுணர்களுக்கு பஞ்சம். இந்தியர்களுக்கு இதில் திறமை அதிகம். ஆகவே ஒரு ஜெர்மானிய மந்திரி இந்தியர்களுக்கு சலுகையளித்து கூப்பிட்டிருந்தார். இது அங்கிருந்த எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை, அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

இது ஒரு பழைய பதிவு. தமிழ்மணத்திற்குள் இணைந்த புதிதில் டிஸம்பர் 2004-ல் போடப்பட்டது. அதே மாதிரி கட்டத்தில் இப்போது நந்தவனத்திலும் அதே பிரச்சினை தலை தூக்குவதால் இங்கு மறுபடியும் பதிவு செய்கிறேன், அதன் பின்னூட்டங்களுடன்.

தமிழ் வலைப்பூ பட்டியலில் இருந்து எலிக்குட்டியை ஒரு வலைப்பூவின் சுட்டியின் மேல் வைத்து இடது க்ளிக்கிட்டால் சில சமயம் ஒரு புது ஜன்னல் திறக்கிறது, சில சமயம் பட்டியலின் ஜன்னலே மாறி விடுகிறது.

இரண்டாவது நடக்கும் போது ஒவ்வொரு முறையும் பட்டியலுக்கு திரும்பி வரத் தனியாகச் சொடுக்க வேண்டியிருக்கிறது. இல்லாவிடில் எலிக்குட்டியை வலது க்ளிக்கிட்டு, புது ஜன்னலில் திறக்கும் ஆணையைச் சொடுக்க வேண்டியிருக்கிறது.

இது சிறிது அயர்ச்சியைக் கொடுக்கிறது.

வலைப்பூ பட்டியல் சுட்டியில் இருந்து எப்போதும் புது ஜன்னலில் திறக்க என்ன ஸெட்டிங் தேவைப்படுகிறது? கூகளில் இதற்கானத் தனி ஏற்பாடுகள் உண்டு. இங்கும் அம்மாதிரி உண்டா? யாராவது உதவ முடியுமா?

நன்றி,
டோண்டு ராகவன்.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது