10/15/2009

அப்பாடி, ஒரு வழியாக மடிக்கணினி வாங்கி விட்டேன்

நான் பலமுறை பல இடங்களில் கூறியது போல என்னை எனது கணினியின் அருகாமையிலிருந்து பலவந்தமாக இழுத்துக் கொண்டுதான் என் வீட்டம்மா கோவில்கள் டூருக்கு அழைத்து செல்வார். நானும் நடுவில் வரும் ஊர்களில் ஏதேனும் உலாவி மையங்களை தேடிச் செல்வேன்.

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு புது வாடிக்கையாளர் என்னை ஒரு மாதகாலத்துக்கு ஹைதராபாத் வந்து அங்கு மொழிபெயர்ப்பு/துபாஷி வேலை செய்யவியலுமா எனக் கேட்டதற்கு நோ சான்ஸ் எனக் கூறிவிட்டேன். ஏனெனில் எனது மற்ற வாடிக்கையாளர்களது வேலையை புறக்கணிக்க இயலாது அல்லவா? அப்போதுதான் நான் ஏன் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொள்ளக் கூடாது என யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் அது மட்டும் போதாதே, இணைய இணைப்பும் நான் செல்லுமிடத்திலெல்லாம் இருக்க வேண்டுமே. அதற்குத்தான் டேட்டா கார்ட் வாங்கிக் கொள்ளலாம் என எனது கணினி குரு முகுந்தன் கூறினான்.

பல நாட்கள் யோசித்த பிறகு போன சனியன்றுதான் காம்பாக் மடிக்கணினியும் ரிலையன்ஸ் டேட்டா கார்டும் வாங்கினேன். மடிக்கணினி மொத்தமாக 34000 ரூபாய் ஆயிற்று. டேட்டா கார்ட் ரூபாய் 3500. மடிக்கணினியை செட் செய்வதில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது. விண்டோஸ் எக்ஸ்.பி. மீடியா செண்டரை அதில் ஏற்ற இயலவில்லை. கடையில் போய் கேட்டால் ஏதோ பயாஸில் ஒரு ஆப்ஷனை செயலிழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறி அதை செய்தும் காட்டினார்கள். மீதியை முகுந்தன் பார்த்து கொண்டான். ஆனால் அதெல்லாம் செவ்வாயன்றுதான் நடந்தது. அதற்குள் டேட்டா கார்டும் செயலாக்கப்பட்டது.

இப்போது அமர்க்களமான வேகத்தில் இணையத்தில் உலாவ முடிகிறது. ஸ்கைப்பும் போட்டுக் கொண்டேன். அதற்காக மேஜை கணினியை விட்டு விட முடியுமா. அதையும் பராமரிக்கிறேன். இப்போது எனது கோப்புகள் இரு கணினிகளிலும் ஏற்றப்படுகின்றன. இதுவே நல்ல Backup ஆகவும் ஆகிவிட்டது. இப்போது என்னிடம் மூன்று இணைய இணைப்புகள் உள்ளன, டாட்டா இண்டிகாம், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் டேட்டாகார்ட். சரியான முன்ஜாக்கிரதை முத்தண்ணா என்று வேண்டுமானாலும் கூறிக் கொள்ளுங்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் 2002-ல் நான் டெஸ்க்டாப் வாங்கியபோது அதன் விலை கிட்டத்தட்ட 35,000 ரூபாய். அப்போது மடிக்கணினி கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்கள், எனக்கு தெரிந்து டேட்டா கார்டுகள் லேது. வெறுமனே தொலைபேசி இணைப்புகள்தான் பெரும்பாலும். நவம்பர் 2002-ல்தான் டிஷ்னெட் போட்டுக் கொள்ள முடிந்தது. அதற்கு அப்போதைய செலவு 32,000 சொச்ச ரூபாய்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரு வேளை வரவேண்டும் என நினைக்கிறேன். 2000 ஆண்டில்தான் எனது மிகப்பெரிய வாடிக்கையாளரை தில்லியில் பிடித்தேன். 2001-ல் சென்னைக்கு வந்தபிறகும் அவரது வேலைகளால்தான் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சென்னையில் குப்பை கொட்ட முடிந்தது. இப்போது சென்னையிலும் நல்ல பிக்கப் ஆகிவிட்டது. இனிமேல் எங்கு சென்றாலும் கவலையில்லை என்னும் நிலைதான். எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள்தான். ஆகவே 2000 ஆண்டுக்கு முன்னால் வந்திருந்தால் வாடிக்கையாளரை பிடிப்பதில் பிரச்சினையாக இருந்திருக்கும்.

பை தி வே மடிக்கணினியில் சிறு பிரச்சினை. ஷட் டௌன் செய்யும்போது கடசியில் மூடாது சிஸ்டம் தொங்குகிறது. நானும் சரியான வழிமுறைகளையே உபயோகித்தாலும் அப்படித்தான் நடக்கிறது. ஆகவே ஒவ்வொரு முறையும் பவர் ஸ்விட்ச் மூலம்தான் அணைக்க நேரிடுகிறது.

மறுபடியும் சிஸ்டத்தை ரீலோட் செய்ய வேண்டும் என முகுந்தன் அபிப்பிராயப்படுகிறான். ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை. ஏனெனில் மிகவும் சள்ளை பிடித்த வேலை. எனது ஏவிஜி, அட்அவேர், பிராக்டிகௌண்ட் & இன்வாய்ஸ் ஆகிய மென்பொருட்களை மீண்டும் நிறுவ வேண்டும். அவற்றில் பலவற்றுக்கு பல இற்றைப்படுத்தல்களும் செய்ய வேண்டும். விண்டோஸ் எக்ஸ்பிக்கும் பல இற்றைப்படல்கள் தேவைப்படும்.

நண்பர்கள் யாரேனும் ஆலோசனை த்ரவியலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 15.10.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?

ராஜன்
1. பரிசுகளை வென்றுள்ள திரைப்படங்களில் 98 சதவிகித திரைப்படங்களின் டிவி ரைட்ஸ்கள் கலைஞர் டிவியிடம்தான் உள்ளனவாம். திரைப்படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதால் அவர்களுக்கு பரிவு காட்டும் பொருட்டு இந்த ஏற்பாடு?
பதில்: கேள்விலேயே பதில் தொக்கி நிற்கிறதே. ஆமாம் உளியின் ஓசையின் கதை என்ன? அதை யார் துணிந்து வாங்கினார்கள்? சன் குழுமம்?

2. யாருக்காக யாரால் ஆட்சி செய்யப்படுகிறது?
பதில்: முதல்வர்தம் மக்களால் அவர்தம் மக்களால் நடத்தப்படுகிறது அவரது மக்கள் ஆட்சி.

3. ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஒரே நாளில் அரை மணி நேர வித்தியாசத்தில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தை ஒளிபரப்பியதில் இருக்கும் மர்மம்?
பதில்: உண்மைத் தமிழனின் இப்பதிவைப் பார்க்கவும்.

4. 'பூ' பார்வதியையும், 'பொம்மலாட்டம்' ருக்மணியையும் தாண்டி த்ரிஷாவுக்கா?
பதில்: கிளாமராய நமஹ

5. கமலஹாசனின் 50 ஆண்டு திரையுலக வாழ்க்கை?
பதில்: பிரமிக்க வைக்கிறது.

அனானி (06.10.2009 மாலை 05.2-க்கு கேட்டவர்)
1. DMK leader Mr.Karunanithi has donated his Gopalapuram house for the use of hospital for the treatment of poor people. His sons have given their consent for this. What is your comment for this?
பதில்: காரணங்கள் எதுவாக இருப்பினும் கலைஞரின் இந்த சமிக்ஞை வரவேற்புக்கு உரியதே.

2. Is Saratkumar going to the dmk fold once again?
பதில்: சரத்துக்கு வேறு போக்கிடம்தான் ஏது?

நான் நினைக்கிறேன், ஒரு நேரத்தில் ஒரு நடிகர் மட்டுமே தமிழக அரசியலில் பிரகாசிக்க முடியும். எம்ஜிஆர் இருக்க சிவாஜி, பாக்கியராஜ், டி. ராஜேந்தர் ஆகியோர் பிசுபிசுத்து போனார்கள். அதே போல விஜயகாந்த் ஒரு மாதிரி முன்னேற கார்த்திக், சரத் ஆகியோர் அடிபடுகின்றனர். எஸ். வி சேகர் கூட இதை நினைத்து யோசிக்க வேண்டியுள்ளது.

3. Will ramadoss join with dmk again?
பதில்: 2011-க்குள் என்னென்னவோ நடக்கலாமே. இப்பவே ஏன் மண்டையை உடைத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்?

4. Why is Jeyalaitha doing all the damage the admk?
பதில்: தெரியவில்லையே. விநாசகாலே விபரீத புத்தி.

5.it seems the tamil nadu will be ruled by dmk for ever. is it true? (based on state govt employees'100 %support, huge money power, huge cadre power, free schems, free medical help to poor, strong allainace,weak admk)
பதில்: அரசியலில் எதுவும் நடக்கலாம். விஜயகாந்தை குறைத்து மதிப்பிடலாகாது. தமிழக வாக்காளர்களையும் குறைத்து மதிப்பிடலாகாது. திடீரென ஜனாதிபதி ஆட்சி தேர்தல் நேரத்தில் வந்தால், தேர்தலில் கண்டிப்பான செயல்பாடுகள் வந்தால், பணபலம் பிரயோசனப்படாது.

கந்தசாமி
1. கந்து வட்டி பிசினஸ்காரர்கள், பதுக்கல் வியாபாரம் செய்பவர்கள், அடுத்தவர் சொத்தை அபகரிக்கும் எத்தர்கள், அரசுக்கு வரிகட்டாமல் ஏய்ப்பு செய்யும் களவாணிகள், வாங்கும் சமபளத்திற்கு நியாயமாய் வேலை செய்யாமல் லஞ்சம் வாங்கும் கபோதிகள், நியாயமற்ற அரசியல்வாதிகள், இவர்களில் ஒரு பகுதியினர் திருப்பதி வெங்கடாசலபதியை பார்ட்னராய் பாவித்து வரும் கொள்ளையில் ஒரு பகுதியை கோவில் உண்டியலில் போடும் செயல் பற்றி உங்கள் கமெண்ட்?
பதில்: இந்த வழிமுறை ஆண்டாண்டுகாலமாக நடந்து வருவதுதானே. இதில் புதிது ஒன்றும் இல்லையே. தனது திருட்டில் பாதியை நாணயமாக உண்டியலில் போடும் திருடனின் கதை மதனகாமராஜன் காலத்திலிருந்தே இருந்து வருகிறதே.

2. இது மாதிரி நம் மாநிலத்தில் நடை பெறும் ஒரு செயலாய் எதை சொல்வீர்கள்? (அரசியல் சம்பந்தப்பட்டது)
பதில்: இலவச டிவி, இலவச வாயு இணைப்புகள் ஆகியவை என்னவாம்?

3. இலவசம் கொடுத்து இளிச்சவாயராய் ஆக்கும் போக்கு பற்றி?
பதில்: உங்கள் முதல் கேள்வியில் கூறிய உதாரணங்களே.

4. உலகவெப்பமயமாதலின் இயற்கையின் கோபம்தான் ஆந்திர கர்நாடக வெள்ளமா?
பதில்: அப்படித்தான் என்று பல சீரியஸ் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அதே சமயம் கோபம் என்றெல்லாம் நான் கூற மாட்டேன். எதிர்வினை என்றுவேண்டுமானால் கூறலாம். எதற்கும் பாலாவின் பதிவைப் பாருங்கள்.

5. ஒரு கிலோ அரிசி ரூபாய் 100 ஆந்திராவில், இனி?
பதில்: ஆந்திராவில் துவரம் பருப்பு என்ன விலை ஒரு கிலோவுக்கு?

எம். அருணாச்சலம்
1. நடிகை புவனேஸ்வரியின் செயலுக்கும், மருத்துவரின் அரசியல் flip-flop க்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?
பதில்: புவனேஸ்வரிக்கும் மருத்துவருக்கும் என்ன சம்பந்தம்?

2. நடிகர் வடிவேலுவின் விஜயகாந்துக்கு எதிரான வீராப்பு பேச்சும், பின்பு தேர்தல் சமயத்தில் அதே வடிவேலு பேச்சுமூச்சே இல்லாமல் போனதற்கும், திருமா, குருமா போன்றவர்களின் இலங்கை வீராப்பு பேச்சுகள் சமயம் வரும்போது (தேர்தல் சமயம்) சத்தமின்றி மறந்து போய் அதுவரை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சியுடனேயே கூட்டு வைப்பதற்கும் ஏதாவது வேறுபாடு காண்கிறீர்களா?
பதில்: அது பற்றிக் கூறவேண்டுமானால் பின்புலனில் நடந்த பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவை எனக்குத் தெரியாதே.

அனானி (08.10.2009 காலை 10.52-க்கு கேட்டவர்)
1. நோபல் பரிசுக்கு தெரிவாகியுள்ள, சிதம்பரத்தில் பிறந்த, அமெரிக்கர், இங்கிலாந்தில் வசிப்பவர், டாக்டர்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - பிராமணர் என்ற ஒரே காரணத்திற்காக தமிழக அரசியல் வட்டாரத்தில் கொண்டாடப்படவில்லையே? என்ன கொடுமை சார் இது?
பதில்: அவர் என்ன சாதி என்று தெரியவில்லை. ஆனால் பிராமணராக இருக்கும் வாய்ப்பு அதிகமே. ஆகவே அதனால் மட்டுமே தமிழக அரசு அவரைக் கண்டு கொள்ளவில்லையென்றால் நஷ்டம் அவருக்கல்ல. அவர் எப்போதோ தமிழகத்தின் சுழற்சியை விட்டுப் போய்விட்டார்.


சவகிருஷ்ணா
1. புவனேசுவரி வழக்கில் தினமலர் ஆசிரியர் கைது செய்யபட்டது சரிதானே ஏன் ரமேசை கைது செய்யவில்லை
பதில்: முக்கியமாக பத்திரிகைகளுக்கு லீக் செய்த போலீசாரைத்தான் கண்டிக்க வேண்டும். SITA சட்டத்தின் அக்கிரமங்களை சாடவேண்டும். நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. இப்போது பத்திரிகைகளுக்கும் அவ்வாறு செய்தி தந்த போலீசார்தான் முதல் குற்றவாளி.

எம். கண்ணன்
1. மது அருந்தும்போது அதை நல்ல கோப்பையில் ஊற்றி அதில் ஐஸ் கட்டியோ, சோடாவோ, லெமனேட், கோலா, தக்காளி சாறு என கலந்து அரைக் கப்பை அரை மணிநேரம் உறிஞ்சியபடி, வறுத்த முந்திரிகளையோ, நல்ல உருளை சிப்ஸ் அல்லது கடலை/வெங்காய மிக்ஸ் என நண்பர்களுடன் அளவளாவியபடி எஞ்சாய் செய்யாமல் டாஸ்மாக்கில் பல்வேறுவித மணங்கள், வாந்தி மற்றும் இன்னபிற சமாச்சாரங்களுடன் கல்ப் அடிப்பதில் என்ன சுகம் கிடைக்கப்போகிறது ? ஃபைவ் ஸ்டார் பார் எல்லாம் வேண்டாம். ஏன் தமிழக அரசு டாஸ்மாக்கை கள்ளுக்கடை சாராயக்கடை ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது ? (ஒருவித குடோன் போல)
பதில்: இதற்கான பதிலைக் கூற வேண்டியவர் வால்பையனே. ரோசா மற்றும் ஜ்யோவ்ராம் சுந்தரைக் கூட கேட்களாம். ஆனால் வெறும் தம்ஸ் அப்புக்கு ஃபிளாட் ஆகும் முக்கிய மடிப்பாக்கம் பதிவர் இதற்கான விடையைக் கூறுவாரா எனத் தெரியவில்லை.

2. டில்லியிலும் சரி சென்னையிலும் சரி மத்திய/மாநில அரசுப் பணிகளில் இருப்போர் வெளியூர் செல்லும்போது அந்த அந்த ஊர் அரசு அதிகாரிகளை ரூம் புக் பண்ணி, கார் புக் பண்ணி என ஒருவிதமாக வேலை வாங்கிக்கொள்கிறார்களே? இவர்கள் பண்ணும் அலம்பல் (அதைக் கொண்டா, இதைக் கொண்டா என) ஜாஸ்தியாக இருக்கிறதே ? மேலும் இவர்கள் மக்கள் பணத்தில் தானே 2 அல்லது 3 கார், ஜீப் என எல்லாவற்றிற்கும் உபயோகிக்கிறார்கள்?
பதில்: இதெல்லாம் காலத்தின் கட்டாயம். இல்லாவிட்டால் ரிப்போர்ட் நல்லபடியாக இருக்காது. உதாரணத்துக்கு மிக யோக்கியமான ஆய்வு அதிகாரி வந்து தனக்குரிய படிகளுக்குள் தங்கி செலவு செய்து காலணாவுக்குக் கூட ஓசி பெறாது உண்மையான அட்வெர்ஸ் ரிப்போர்ட் தருபவர்கள் மகாத்மாக்கள் என போற்றப்படுவார்களா? ஏண்டா போயும் போயும் இந்த யோக்கிய மொட்டை நாய் நம்ம இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்தான் என்றுதானே நொந்து கொள்வார்கள் கீழ்மட்ட அதிகாரிகள்?

3. தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைதுக்குப் பிறகு அனைத்து நாளிதழ், வார இதழ்களும் சுதாரிக்குமா? விவேக்கின் பேச்சு ஓவராகத் தெரிகிறதே?
பத்திரிகைகளும் சரி நடிக நடிகையரும் சரி ஒருவரைச் சார்ந்து மற்றவர்கள் இருப்பதுதான் நிஜம். நடிகர்கள்/நடிகைகள் மிகவும் உணர்ச்சிப்படுபவர்கள். சிலருக்கு அம்மாதிரி தருணங்களில் ஓவரா சீன் காட்டுவது வழக்கமே.

4. விஜய் டிவியில் கோபிநாத் நடத்திய 'உங்களில் ஒருவன் உலகநாயகன்' நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 'பார்ப்பண மகளிர் - ஷாப்டாச்சா என்றெல்லாம் பேசி தமிழை கொலைசெய்கின்றனர். அதை கேலிசெய்துதான் தான் சில தமிழ் சம்பந்தப்பட்ட கேலிகளை படத்தில் வைத்ததாகவும் சொன்னார். எந்த பார்ப்பண மகளிர் தற்போதெல்லாம் 'ஷாப்டாச்சா' என்று பேசுகின்றனர் ? கமல் பழகிய பார்ப்பன மகளிர் 20- 25 ஆண்டுகள் முந்தைய பார்ப்பன மகளிராக இருக்கலாம். இவரின் 'ஹே ராம்' படத்தில் இந்தி ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி இதே 'ஷாப்டாச்சா' வசனத்தை எப்படி பேசினார்? அவருக்கு இயக்குனராக சொல்லிக் கொடுத்தது யார்?
பதில்: கமலஹாசன் ஒரு கலை வியாபாரி. நல்ல சரக்கைத் தருகிறார். அது போதுமே. அவரது தனிப்பட்ட கருத்துகள் அவருடையவை.

5. அதென்ன பார்ப்பண மகளிர்? தற்போது பார்ப்பனர் அல்லாத இளைஞிகளும் சிவா என்பதை ஷிவா எனவும் சக்தி என்பதை ஷக்தி எனவும் தானே உச்சரிக்கின்றனர். (அலைபாயுதே முதல் ஆரம்பித்த பழக்கம்)
பதில்: சிவா என்பதற்கு சரியான வடமொழி உச்சரிப்பு ச-வுக்கும் ஷ-வுக்கும் இடையில் இருக்கும். அதற்கான எழுத்துரு தமிழில் வேண்டுமானால் ஸ்லோக புத்தகங்களில்தான் தேட வேண்டும். மேலும் அவை கிரந்த எழுத்துக்களே.

6. கர்நாடகம் - ஆந்திரம் வெள்ள சேதத்திற்குப் பிறகு நதி நீர் இணைப்பு முயற்சிகள் வலுப்பெறுமா? இல்லை எதிர்ப்பு வலுக்குமா? இந்த அளவிற்கு சேதமடைய நேர்ந்ததற்கு ஆந்திராவில் முதல்வர் ரோசைய்யாவின் கட்டளைகளைக் கேட்டு நடக்க விருப்பமில்லாத அதிகாரிகள்/அமைச்சர்களும் காரணமா?
பதில்: வெள்ளம் பாட்டுக்கு வரும், போகும். அவற்றால் எல்லாம் நதிநீர் இணைப்பு வரும் என நான் நம்பவில்லை. நாட்கள் ஆக ஆக அதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்துதான் வருகின்றன. மற்றப்படி ரோசையாவின் வார்த்தைகளை அதிகாரிகள் கேட்கவில்லை என்பது எனக்கு புதிய செய்தி.

ஆந்திராவில் வெள்ளம் பற்றி நம்ம என்றென்றும் அன்புடைய பாலா பதிவு போட்டுள்ளார். படியுங்கள், சுவாரசியமாக இருக்கிறது.

7. ஜெ. நாளை சென்னை வருகிறாராமே? மழை பெய்யுமா?
பதில்: வந்தால் மட்டும் போதாது. உளறவும் வேண்டும். அப்போதுதானே நல்லார் ஒருவர் உளறேல் எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை என்ற வாக்கு பலிக்கும். ஆனால் அதற்கு முதலில் அவர் நல்லாராக இருக்க வேண்டுமே என்கிறீரா? சரி, சரி.

8. பொக்ரான் அணுகுண்டு சோதனை ஃபெயிலியர் என விஞ்ஞானி சந்தானம் சொல்லுகிறாரே ? ஏன் இத்தனை வருடம் கழித்து? அதை மறுக்கும் அரசு மற்றும் கலாம் கூறும் பதில்கள் ஆணித்தரமாக இல்லையே?
பதில்: சந்தானத்தின் மோட்டிவேஷன் புரியவில்லை. இருப்பினும் நமது குழப்பங்களை அம்மாதிரி வெளிச்சத்தில் காட்டுவது துரதிர்ஷ்டவசமானது.

9. பாமக மூன்றாவது அணி என்கிறதே? அடுத்த தேர்தலில் திமுக, அதிமுக இருவரும் பாமகவை சேர்த்துக் கொள்ளாவிட்டால் மருத்துவர் ஐயா என்ன செய்வார்?
பதில்: அதனால்தான் மூன்றாம் அணி என்கிறாரோ அவர்.

10. விஜய் டிவி புதிது புதிதாக நிகழ்ச்சிகளை வைத்தாலும், தாம்பரம் தாண்டி (அதாவது பெருநகரங்களைத் தவிர) அதன் ரீச் இல்லையாமே? ஆனாலும் க்ரியேடிவிடி என்பதைவிட - வெளிநாட்டு டிவி நிகழ்ச்சிகளை ஸ்டார் டிவி இந்தியில் காப்பி அடிக்க, அதை அப்படியே தமிழ்ப் படுத்துகிறது விஜய். இதைப் பார்த்து சன், கலைஞர் மற்ற டிவிக்கள் காப்பி அடிக்கிறது. டி.ஆர்.பி.யில் வெற்றி பெற ஒரிஜினலாக நிகழ்ச்சியே தயாரிக்க முடியாதா?
பதில்: அப்படியே கிரியேட்டிவிடி வைத்தால் மட்டும் என்ன ஆகிவிடுமாம்? கலைஞர் டிவி நோகாமல் அதையும் நகல் செய்யப் போகிறது. ஆகவே இதற்கென ஒரு கான்சப்டை ஏன் மெனக்கெட்டு யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்?


எம். அருணாச்சலம்
1. இன்னும் ஏன் "தமிழக மனித உரிமை கழகம்" நடிகைகளின் மானம் காக்க களத்தில் குதிக்கவில்லை?
பதில்: யார் அவர்கள்?

2. கூடவே, "பெண் உரிமை சங்கமோ அல்லது கழகமோ" ஒன்று உள்ளதே, அதுவும் சேர்ந்து கோதாவில் குதித்தால், "சபாஷ், சரியான போட்டி" என்று சொல்ல இயலுமா?
பதில்: ஆக, இதெல்லாம் தமாஷ்தான் மச்சி என்கிறீர்கள்!

3. Do you think Immoral Traffic Act provides for the arrest of gigolos also for indulging or soliciting in immoral acts? If so, do you think any present day "actors" will be a prime suspect for the TN police?
பதில்: ஆண்விபசாரிகளும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இந்த SITA சட்டம் புகுந்து பார்த்தால் பல முன்முடிவுகளை வைத்துள்ளது. ஊசி வழிவிடாது நூல் வரமுடியாது என்னும் தோரணையில் சிந்திக்கிறது. சட்டத்தின் நோக்கம் குழப்பமாக உள்ளது. உடல் உறவு குற்றமில்லை, ஆனால் அதற்காக ஆசைகாட்டி வரவழைப்பது குற்றம் என்கிறது. மற்றவரை அதில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பது குற்றம் என்கிறது. எல்லாமாக சேர்ந்து இச்செயலில் ஈடுபடும் ஒரு சாராரை மட்டும் தண்டிக்கிறது.

அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. தினமலர் நாளிதழின் செய்தி ஆசிரியர் லெனினை, போலீசார் கைது செய்ததற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு. தானும் ஒரு பத்திரிக்கையாளர் எனச் சொல்லி பெருமைப்படும் கலைஞரின் அடுத்த மூவ்?
பதில்: தான் திரைத்துறையிலும் இருப்பதாகவும் கூறிக்கொள்கிறாரே?

2. முல்லைப் பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் ஜெ-யின் சப்போர்ட் கலைஞருக்கு,இது எப்படி இருக்கு?
பதில்: மாநிலத்தின் நலன் என வரும்போது அவ்வாறு இணைவது நல்லதே. இப்பவாவது புத்தி வந்ததே.

3. தீவிரவாதம் மற்றும் தீவிரவாதிகளை ஒழிக்க ராணுவ உதவி என்கிற பெயரில் அமெரிக்கா அளித்த கோடிக்கணக்கான பணத்தை பாகிஸ்தான் மிஸ்யூஸ் பண்ணியது கண்டு இனி அமெரிக்கா என்ன செய்ய்யும்?
பதில்: இத்தனை நாள் தெரியாமலா இருந்திருக்கும்? என்ன், இப்போது அவர்களுக்கும் தெரியும் என்பது மற்றவருக்கும் தெரிந்து விட்டது, அவ்வளவே.

4. காந்தியின் விடுதலை இயக்கம், பெரியாரின் தன்மான இயக்கம், அண்ணாவின் தமிழியக்கம், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம், லோகியா, கிருபளானிகளின் சோஷலிச இயக்கம் பற்றி?
பதில்: காலத்தின் கட்டாயங்கள். ஆனால் அவற்றில் பெரியாரின் தன்மான இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியாரை அளவுகடந்த முறையில் அவமரியாதை செய்வதாக ஆகிப்போனது கோமாளித்தனமே. அவரை சீரியசாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

5. இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:திமுகவின் ஆதரவு பற்றி?
பதில்: போகாத ஊருக்கு வழியாகத்தான் எனக்குப் படுகிறது..

6. இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை:ஜெ-யின் எதிர்ப்பு?
பதில்: ஜெ அவர்களின் ஆட்சேபணை ஏற்கக் கூடிய்தே.

7. தமிழ்குடிதாங்கிகளின் நிலை இதில்?
பதில்: அவர்களோ இடிதாங்கிய நிலையில் பதவி சுகம் இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களது நிலை பற்றி இங்கே என்ன வந்தது?

8. காங்கிரசுடன் உறவில் சிக்கல் வருமா திமுகவுக்கு?
பதில்: பண/அதிகார பங்கீட்டில் சிக்கல் வந்தால் வரும்.

9. அமைச்சர் சிதம்பரம் இந்த விசயத்தில்?
பதில்: அவர் என்ன ஸ்பெஷல் இதில்?

10. பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பின்மை, சாமானியனுக்கு மருத்துவக் காப்பீடு கிடைப்பதில் கூடச் சிரமம் எனச் சொல்லப்பட்ட அமெரிக்காவின் இன்றைய நிலை?
பதில்: ஒன்றும் மாறுதல்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

11. அமெரிக்காவின் பணக்காரர்கள் பாடு இப்போது எப்படி?
பதில்: எல்லா பிரச்சினைகளையும் மீறி, கடனின்றி நல்ல நிலைமையில் ஒருவன் தேவையான பணத்துடன் இருந்தால்தான் அவன் பணக்காரன் எனக் கருதப்படுவான். இது எங்குமே பொருந்தும். அதன்றி கடன் தொல்லைகளால் பீடிக்கப்பட்டு அதே சமயம் பந்தா காட்டுபவன் பணக்காரனாக இருக்க முடியாது. அதுதான் பணக்காரர்கள் என அழைக்கப்படும் இப்போதைய பணக்கார அமெரிக்கர்களது நிலை. அவர்கள் ஒரு பெரிய ரோல்லர் கோஸ்டரில் பயணம் செய்கின்றனர். பாவம் அவர்கள்.

12. முல்லைப்பெரியாறு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் வழக்கு. இது காலம் கடந்த ஒன்றா?
பதில்: இப்போதைக்கு அப்படித்தான் தோன்றுகிறது. தனது குடும்பத்தினருக்கு மட்டும் அமைச்சகப் பதவிகள் கேட்டு காவடி எடுக்கும் முயற்சிகளை இதிலெல்லாம் கலைஞர் காட்ட மாட்டார்.

13. இந்த விசயத்தில் கலைஞரின் அடுத்த கடிதம் என்ன சொல்லும்?
பதில்: கண்ணீர் விடும் தமாஷாகத்தான் இருக்கும். நமக்கும் சிரித்து சிரித்து கண்ணீர் வரும்.

14. மத்திய அரசுக்கு எப்போதும் கேரளா மேல் ஒரு எக்ஸ்ட்ரா பாசம்? ஏன்?
பதில்: அம்மாநிலத்தில் காங்கிரஸ் பதவிக்கு வரும் வாய்ப்பு உண்டு, தமிழகத்தில் வாய்ப்பு லேது. அவ்வளவுதான் விஷயம்.

15. ஹோகனேக்கல் தண்ணிர் வருமா வராதா?
பதில்: மழை பெய்தால் வரலாம், வானத்திலிருந்து.

16. தளபதி துணைமுதல்வர்-மாவீரன் அண்ணன் மத்திய இரசாயன அமைச்சர்- 3 மாத செயல் பாடு -ஒரு ஒப்பீடு?
பதில்: அழகிரி சந்தோஷமாக இல்லை. குறுநில மன்னர் பேரரசன் அவையில் துணையின்றி இருப்பதாக உணருவது போல அவர் தில்லியில் உணர்கிறார் என நினைக்கிறேன்.

17. புவனேஸ்வரி பேட்டி பற்றிய கசமுசா பற்றி உங்கள் விமர்சனம்?
பதில்: நடிகை புவனேஸ்வரியை போலீசார்களே போலி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து அவரை வரவழைத்து பிடித்த நிகழ்ச்சி முதல் பார்வையிலேயே provocation policière என அறிய முடிகிறது. முதலும் கோணல் முற்றும் கோணல்.

18. ரஜினிகூட?
பதில்: ஏன் அவர் மட்டும் என்ன ஸ்பெஷல்?

19. இந்த விசயத்தில் தினகரன் சம்பந்தப்பட்டிருந்தால் தலைவர் என்ன செய்திருப்பார்?
பதில்: மாறன் சகோதரர்களுடன் அவருக்கு இருக்கக்கூடிய உறவுதான் அதை தீர்மானிக்கும். இப்போதைக்கு நல்லபடியாக இருப்பதால் தலைவர் அடக்கி வாசித்திருப்பார்.

20. நடிகர் சங்கம் இந்த அளவுக்கு பெரிது பண்ணியிருக்குமா?
பதில்: இந்தளவுக்கு பண்ணியிருக்காது என்றுதான் நினைக்கிறேன். மேலும் அது பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகை இல்லையே?

21. பொதுவாய் நடிகை என்றாலே ஏன் இப்படி கிசு கிசு?
பதில்: சம்பந்தப்பட்ட நடிகையின் துயரம் அறியாத வக்கிரம் பிடித்தவர்களுக்கு நடிகை என்றாலே கிசுகிசுதான்.

22. உங்கள் அனுபவத்தில் இது மாதிரி காயப்படாத இந்தி நடிகைகள் யார் யார்?
பதில்: காயப்பட்ட நடிகைகளா? காயப்படாத நடிகைகளா? கேள்வி புரியவில்லையே? மேலும் நான் தில்லியில் வசித்தபோது பாலிவுட் பற்றிய கிசுகிசு பத்திரிகைகள் எல்லாம் படித்ததில்லை. (உதாரணம் ஸ்டார்டஸ்ட்).

23.தமிழ் நடிகைகள்?
பதில்: முந்தைய கேள்வியின் குழப்பம் இங்கும் தொடர்கிறது.

24. ஆந்திர, கர்நாடக வெள்ளச்சேதம் உலக வெப்பமயமாதலின் எச்சரிக்கையா?
பதில்: அது ஒரு புறம் இருக்க, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நடந்த பல முன்நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்து விட்டன. என்றென்றும் அன்புடன் பாலாவின் இப்பதிவை மறுபடியும் நான் இங்கு சுட்டுகிறேன்.

25. நதிநீர் இணைப்பு இதற்கு ஒரு தீர்வாகுமா?
பதில்: நதிநீர் இணைப்பு இப்போதைக்கு கஷ்டமே. காலம் செல்லச் செல்ல மேலும் அதிகம் சிக்கலாகும்.

26. ராஜகுமாரன் ராகுல்ஜி இனியாவது இதற்கு எதிர்ப்பு செய்வதை நிறுத்துவாரா?
பதில்: சுற்றுப்புறச் சூழலுக்கு அதனால் வரும் பாதிப்புகளையும் அலட்சியம் செய்ய முடியாதில்லையா?

27. அவரின் தலித் பாசம்? உண்மையா?
பதில்: அப்படிப் பார்த்தால் எந்தத் தலைவருமே தேற மாட்டார்களே.

28. தமிழ் நாட்டில், அடைமழை, கனமழை, புயல்மழை எனக் கொட்டும் இலவசங்களில் மூழ்கியிருக்கும் பாமர மக்களை காங்கிரஸ் பக்கம் மாற்ற அவரால் முடியாது போலுள்ளதே?
பதில்: கஷ்டம்தான் ஆனால் முயன்றால் முடியும். அதற்கு முன்னால் ஒரு காரியம் செய்ய வேண்டும். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே திமுக மந்திரிசபைக்கு தாங்கள் தரும் ஆதரவை நிறுத்தி குடியரசுத் தலைவர ஆட்சியை நிறுவி, நல்ல கவர்னரை நியமித்து பாரபட்சமற்ற முறையில் தமிழகத் தேர்தலை நடத்த வேண்டும். இலவச வைபவங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். முடியுமா?

29. ராஜீவ் காந்தி படுகொலை கேஸ் நளினி, இப்போது?
பதில்: இன்னும் சிறையில்தான் இருக்கிறார். விடுதலைப் புலிகள் ஒடுங்கியுள்ள இந்த நிலையில் அவரைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார் என்று தெரியவில்லை.

30. அ.தி.மு.க., வுடன் இனி உறவு இல்லை! பா.ம.க.வின் திடீர் அறிவிப்பு ஏன்? எதற்கு அச்சாரம்?
பதில்: அது மருத்துவருக்கே தெரியாது. எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?

31. டெல்லி மேல்சபை உறுப்பினர் பதவி நஷ்டமா டாக்டருக்கு? (அதிமுகவின் ஒப்பந்தம் இனி?)
பதில்: அது கண்டிப்பாகக் கிடைக்காது என்று ஏதேனும் சமிக்ஞை அவருக்கு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன். அதனால்தான் இப்போது அவர்களாகவே வெளியேறியுள்ளனர் எனத் தோன்றுகிறது.

32. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்,அடுத்து மதுரையில் அழகிரியாரின் கோரிக்கை பற்றி?
பதில்: அவரது கோரிக்கை என்ன? மதுரையிலும் மத்தியப் பல்கலைக்கழகம்? எனக்கு தெரியவில்லையே.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/14/2009

திராவிட கழகத்தில் வாரிசு அரசியல் - பெரியாரின் நினைவுகளுக்கு நல்ல மரியாதைதான்!!

ஆக வீரமணி அவர்களும் ஜோதியில் கலந்து விட்டார். தனது மகன் அன்புராஜை தடாலடியாக தனக்கடுத்த நிலையில் உள்ள தலைமை நிலைய செயலாளராக ஒரு நாடகத் தன்மையுடன் நியமித்துள்ளார். இதற்காகவே கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

இந்த விஷயம் அதுவரை ஒரத்தநாடு குணசேகரன், அடுத்த கைத்தடிகளான நெய்வேலி ஜெயராமன், மாநில மாணவரணி அமைப்பாளர் ரஞ்சித்குமார் ஆகியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது (ஜூனியர் விகடன், 18.10.2009 தேதியிட்ட இதழ்). “இந்த அறிவிப்புக்கு எதிராக என்ன விமரிசனங்கள், பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்த வீரமணி தயாராக இருக்கிறான்னு சொல்லி அமர்ந்து விட்டார்” என ஜூ.வி. மேலே எழுதுகிறது.

அரங்கத்தில் இதை ஆதரித்து எல்லோரும் எந்திருச்சு கைதட்டணும்னு மாநில துணை பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் கேட்டுக் கொண்டதற்கு ரெஸ்பான்ஸ் சுத்தமாக லேது. அதை புரிஞ்சுகிட்டு கூட்டத்தை உடனே முடிச்சுக்கிட்டாங்க. வீரமணியும் அவசரமா வெளியே போயிட்டாரு.

திராவிடர் கழக்ப் பொதுச்செயலாளர் கலிபூங்கன்றனிடம் தொலைபேசி மூலம் கருத்து கேட்ட குமுதம் ரிப்போர்டருக்கு “அன்புராஜ் சம்பந்தமாக நான் எதுவும் பேச முடியாது. தலைவர்தான் பேச வேண்டும் என்றவர்” “அவரும் உங்களிடம் பேச மாட்டார்” என்று கூறி தொலைபேசித் தொடர்பை துண்டித்தாராம்.

எப்படி ஐயா இப்போதே பேசுவார்? சரியான சாக்குபோக்குகள் உருவாக்கிக் கொள்ள வேண்டாமா? தமிழ் ஓவியா ஆகியோருக்கு ஓவர்டைம் வேலைதான் இவற்றைக் கண்டுபிடிப்பதில்.

இதில் பெரியாரின் நினைவ்களுக்கு என்ன மரியாதை என்பவர்களுக்காக: தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காகவே மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டது, மணியம்மையார் தனது உயிலில் வீரமணியை வாரிசாக நியமித்தது ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான் வீரமணியும் நடந்துள்ளார் என்று பார்த்தால், அவர் பெரியாரின் வழிப்படி நடப்பவரே எனலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/10/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.10.2009

திருக்குறள் காவ்யா
திருக்குறளின் வாரிசாக திருக்குறள் காவ்யா என்னும் சுட்டிப் பெண்ணின் சாதனை பற்றி படித்ததில் மிக்க மகிழ்ச்சி. அப்பதிவில் கூறியபடி,
“திருவள்ளுவர் தவமாய் தவமிருந்து எழுதிய அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ந‌ம்மை மூக்கில் விர‌ல்வைக்க‌ வைக்கிறார், இவர். பார்வையாள‌ர்க‌ள் ப‌குதியிலிருந்து இந்த‌க் குற‌ள் வ‌ருவ‌து எந்த அதிகார‌த்தில்? குற‌ள் எண் 412 எப்ப‌டி துவ‌ங்குகிற‌து? "இக‌லின் மிக‌லினி" என்று துவ‌ங்கும் குற‌ள் எந்த‌ அதிகார‌த்தில் வ‌ருகிற‌து? அத‌ன் குற‌ள் எண் என்ன? "முய‌ங்க‌ப்பெறின்" என்று முடியும் குற‌ள் எத்த‌னையாவ‌து குற‌ள்?.....இப்ப‌டிப் ப‌ட‌ப‌ட‌வென‌ பார்வையாள‌ர்க‌ள் வினாக்க‌ளை விசிறிய‌டித்து வாய் மூடும் முன் வாய் திற‌க்கிறார் மிகச்ச‌ரியான‌ விடையுட‌ன்!

திருவள்ளுவர் இன்றைக்கு இருந்தால் இவரையே தன் வாரிசாக அறிவித்திருப்பார்.
யாரிந்த‌ப் பெரும்புல‌வ‌ர் என்று உங்க‌ள் புருவ‌ம் ச‌ற்றே விரிகிற‌தா? ஒரு சிறுமி என்றால் வியந்து விரியாம‌ல் என்ன‌ செய்யும்? இன்னும் இதில் விய‌ப்பு என்ன‌வென்றால், தாய்த் த‌மிழ‌க‌த்தில் அன்றாடம் தமிழ் பேசி வளர்ந்த சிறுமியல்ல;தும்மினால் ஆங்கிலம்; இருமினால் ஆங்கிலம் என்ற அமெரிக்க மண்ணில் வளர்ந்த சிறுமி என்பது தெரிந்தால் பெருவியப்பே ஏற்படும் அல்லவா?
சிகாகோ தமிழ் பள்ளிகள் இணைந்து நடத்திய‌ விழாவில் அசைந்தாடி மேடையேறிய அந்தச் சின்னஞ்சிறு சிறுமி,"தன் நினைவிலூறிய‌ திருக்குறள்களைப் பாடலாகப் பாடி, தனக்கு பிடித்த குறள்களைக் கூறி, அதன் அதிகாரங்கள் கூறி, கூடி இருந்தவர்களைக் கவர்ந்தார்”
.


சாதனை செய்ய என ஒருவர் வந்தால் அவரை சோதனை செய்ய ஆட்களுக்கு பஞ்சமில்லைதானே. அந்த சோதனைகளையும் வெற்றி கொண்டு அனைவரின் மனத்தையும் கவர்ந்துள்ளாள் இந்த சுட்டிப்பெண். மேல் விவரங்களுக்கு ரிச்மண்ட் தமிழ் சங்கம் வலைப்பூவின் அப்பதிவைப் பார்க்கவும். தமிழுக்கு அணி சேர்க்கும் இந்த சாதனைப் பெண் மேல்மேலும் முன்னேற்றம் பெற என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் தாக்கப்பட்ட விவகாரம்
இந்த நிகழ்வை பற்றி படித்ததிலிருந்து கலக்கமாக உள்ளது. சம்பந்தப்பட்ட இருவருமே எனக்கு தெரிந்தவர்கள். சில நாட்களுக்கு முன்னால் ரோசா வசந்த் நங்கநல்லூருக்கு வருகையில் என் வீட்டுக்கும் வந்திருந்தார். அடிப்படையில் நல்ல மனிதர் சில பெக்குகள் போட்டால் இவ்வாறு மாறிவிடுவது கவலைக்குரியது. ஜ்யோவ்ராம் சுந்தரோ குழந்தை மாதிரி. சிறுகதை பட்டறையில் நான் மதிய உணவுக்குப் பிறகு சென்று விட்டதை நோட் செய்து, ஏதேனும் மனவருத்தத்தில் அவ்வாறு செய்தேனா என அக்கறையாக எனக்கு மின்னஞ்சல் செய்து கேட்டவர்.

என்னதான் மனவேறுபாடு இருந்தாலும் அதை கைகலப்பாக மாற்றக் கூடாது என்ற கருத்தில் ஒரு சமாதானமும் செய்து கொள்ள முடியாது. அந்த வகையில் ரோசா வசந்தின் காரியம் கண்டனத்துக்குரியதே. இது பற்றி பதிவர் ப்ரூனோவுடன் செல்பேசினேன். சும்மா சொல்லப்படாது மனிதர் சரியான நேரத்தில் மருத்துவரீதியிலும், மருத்துவமனை நிர்வாக ரீதியாகவும் செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததில் அவரது செயல்பாடு பாராட்டுக்குரியது. அவருடன் பேசும்போது கூட இது பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இருப்பினும் இந்த சண்டை மனப்பான்மையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காக இங்கு பதிவு செய்கிறேன்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டோண்டு ராகவன்
ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்திருந்த அப்பெண்மணி மனித முடிகளை இறக்குமதி செய்து டோப்பாக்கள் தயாரிப்பவர். அவரை உள்ளூர்க்காரர் ஏமாற்றியிருக்கிறார். மனித முடிகளை ஏற்றுமதி செய்வதாக ஆர்டர் பெற்று அப்பெண்மணி வங்கி மூலம் பணத்தை அவரது கணக்குக்கு மாற்றியதும் காணாமல் போய் விட்டார். அவருக்கு ஆங்கிலமோ தமிழோ தெரியாது. ஆகவே நான் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டேன்.

அவரது வங்கி கணக்கு இருக்கும் கிளையில் விஷயத்தைச் சொல்லி அவரது முகவரியைக் கேட்டால் தர மறுத்து விட்டார்கள். பிறகுதான் கமிஷனர் ஆஃபீசுக்கு அவரை அழைத்து வந்தேன். முதல் தடவை சென்றபோது மணி பிற்பகல் 3 ஆகிவிட்டது. கமிஷனரை சந்தித்து நேரில் புகார் தரும் நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் 11 மணி வரைக்கும்தானாம். நடுவில் எனக்குத் தெரிந்த வக்கீலிடம் அவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப அழைத்து சென்றேன்.

அடுத்த நாள் காலை முதல் ஆளாக கமிஷனர் அலுவலகத்தில் நின்றோம். புகாரை எழுத்து வடிவம் மூலம் கொடுத்தபின் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். இரண்டு ஆய்வாளர்கள் தனித்தனியே விசாரிக்கிறார்கள். அவர்களது கேள்விகளும் புகார் விவரத்தை இன்னும் அதிக அளவில் எடுக்கும் அளவிலேயே இருந்தன. இருவரும் கேஸ் சுருக்கத்தை தத்தம் வழியில் எழுத்தில் பதிவு செய்கின்றனர். 12 மணி வாக்கில் கமிஷனர் ராஜேந்திரன் வந்தார். எங்கள் கேசைத்தான் முதலில் கூப்பிட்டார்கள். அவரிடம் இரு ஆய்வாளர்களும் வாய்மொழியாக புகாரின் சுருக்கத்தைக் கூறினர். பிறகு அப்பெண்மணியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

அவர்றை நான் பிரெஞ்சில் மொழிபெயர்க்க, அப்பெண்மணி பதிலளித்ததை தமிழில் மொழிபெயர்த்தேன். கமிஷனரும் சரி, மற்ற ஆய்வாளர்களும் சரி முதலில் நான் யார், அங்கு ஏன் வந்தேன் என்றுதான் முதலில் கேள்வி கேட்டனர். அவர்களிடம் எனது துபாஷி வேலையை பற்றிச் சொன்னதும் சமாதானமடைந்தனர்.

இங்கு இவற்றையெல்லாம் எழுதக் காரணமே கமிஷனர் அலுவலகத்தில் மெதாடிக்கலாக செயல்படும் முறையை சிலாகிக்கவே. இப்போதைய கமிஷனரும் சரி அவரது உதவியாளர்களும் சரி பொறுமையாகவே மக்களைக் கையாளுகின்றனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது