10/24/2005

சரி செய்ய முடியாத தருணங்கள்

காசி அவர்களின் பதிவு ஒன்றை படித்ததிலிருந்தே மனம் பாரமாக உள்ளது. யாருடனும் தேவைக்கதிமாக சண்டை போடக் கூடாது என்று கூற மனம் விழைகிறது. சண்டையை பற்றி மட்டும் நான் இங்கு பேசப்போவதில்லை. சில விஷயங்கள் நிரந்தரமாகவே சரி செய்ய முடியாத நிலைக்கு போய் விடுகின்றன. அவற்றைப் பற்றி இங்கு பேசுவேன்

ராஜாஜி அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவர் மனைவி மரணப் படுக்கையில். பல மணி நேரங்கள் அவரது தலை ராஜாஜி அவர்கள் மடியில் இருந்திருக்கிறது. அவருக்கு கால் மரத்துப்போனதால் சற்றே மனைவியின் தலையை உயர்த்தி தலையணை மேல் வைக்கிறார். அது வரை நினைவில்லாமல் படுத்திருந்த மனைவி கண் விழித்துப் பார்த்து, "ஏன், நான் உங்களுக்கு பாரமாகி விட்டேனா?" என்று கேட்கிறார். ராஜாஜி அவர்கள் பதிலளிக்கும் முன்னரே அவர் மறுபடி நினைவிழந்து, சிறிது நேரத்தில் நினைவு வராமலேயே இறந்து விடுகிறார். இப்போது ராஜாஜி அவர்கள்தான் பாவம் அல்லவா? யாரிடம் போய் அவர் இதைக் கூறுவார்? இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகள் தன் உள்ளேயே வைத்து புழுங்கியிருக்கிறார். ஒரு நாள் தன் நண்பர் (காஸா சுப்பாராவ் என்று நினைவு) ஒருவரிடம் இந்த நிகழ்ச்சியை கூறுகிறார்.

தமிழ் படம் "பிராப்தம்". சிவாஜி, சாவித்திரி நடித்தது. இப்படம் "மிலன்" என்ற பெயரில் ஹிந்தியிலும், "மூக மனசுலு" என்று தெலுங்கிலும் வந்து போடு போடு என்று போட்டது. தமிழ் படம் வெற்றியடையவில்லை.

இப்படத்தில் ஒரு காட்சி. சிவாஜி, சாவித்திரி ஒரு பிறவியில் ஒன்று சேர முடியாமல் இறந்து விடுகிறார்கள். மறு பிறவியெடுத்து, திருமணம் புரிந்து தாங்கள் முந்தையப் பிறவியில் வசித்த இடத்திற்கே வருகிறார்கள். அங்கு இரண்டாம் கதாநாயகி சந்திரகலாவைப் பார்க்கிறார்கள். அவள் முந்தைய பிறவியில் சிவாஜையை காதலித்தவர். சிவாஜி சாவித்திரி இறந்ததும் அவர்கள் சமாதிக்கருகில் ஆண்டுகணக்காக உட்கர்ந்திருக்கிறார். சிவாஜி அவரை இப்போது பார்க்கும்போது அவர் தொண்டுக்கிழவி. பூர்வ ஜன்ம நினைவு சிவாஜிக்கு வர, அவர் சந்திரகலா அருகில் ஓடி தன்னையும் சாவித்திரியையும் அறிமுகப்படுத்த முயல்கிறார். ஆனால் அச்சமயம் பார்த்து சந்திரகலா இறந்து விடுகிறார். இவ்வளவு ஆண்டுகள் சோகத்தில் இருந்த சந்திரகலாவின் துக்கம் பெரிதா அல்லது அவரை சோகத்திலிருந்து மீட்கச் செய்த முயற்சி வெற்றியடையாமல் போனதில் சிவாஜி அடைந்த துக்கம் அதிகமா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சரி செய்ய முடியாத தருணங்களில் இதுவும் ஒன்று.

டாக்டர் சாமுவெல் ஜான்ஸன் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி. அதை பற்றி இங்கு பாருங்கள். இந்த நிகழ்ச்சியை நான் என்னுடைய பத்தாம் வகுப்புக்கான ஆங்கில பாடப்புத்தகத்தில் சமீபத்தில் 1960-ல் படித்தேன்.

இப்போது காசி அவர்களின் பதிவுக்கு திரும்ப வருகிறேன். இதில் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் சோகமும் என்னை விட்டு அகலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/18/2005

இரண்டு செய்திகள் - ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

நான் சாதாரணமாக பத்திரிகைகளிலிருந்து என்னுடைய வலைப்பூ பதிவுகளுக்கு விஷயம் எடுப்பதில்லை. இருப்பினும் 5 - 5 - 2005 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டரில் 34 மற்றும் 35 பக்கங்களில் வெளியான இரு சாட்டையடிகளுக்கும் இடையே உள்ளத் தொடர்பைக் கண்டதால் இப்பதிவு.

முதல் சாட்டையடி இதோ. மும்பை வாழ் தமிழர்கள் சிலர் மறைந்தத் தமிழகத் தலைவர் ஒருவரின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மும்பை மாநகர காவல் துறையின் அனுமதி வேண்டி சிலர் அருகிலுள்ள ஏரியா காவல் நிலத்தை அணுகியுள்ளனர். அங்குள்ள இன்ஸ்பெக்டர் தன்னிடம் வந்தவர்களை வரவேற்று அமரச் செய்து அவர்களிடம் சில கேள்விகள் கேட்டுள்ளார். முடிவில் வெளியான விஷயம் என்னவென்றால் வந்திருந்த ஒருவருக்கும் தன் சொந்தத் தாய் தந்தையின் பிறந்த நாட்கள் தெரியவில்லை.

அவர்கள் நாணமடையும் அளவுக்கு அவர் அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கிறார். அதாவது சம்பாதிக்கும் பணத்தை அவர்கள் தங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்தப் பெற்றோருக்கு அனுப்பாமல் சம்பத்தமேயில்லாத தலைவனின் பிறந்த நாளுக்கு செலவழிப்பது வீண் செலவே. அவர்களும் தாங்கள் திருந்தியதாகக் கூறியுள்ளனர்.

இப்போது இரண்டாம் சாட்டையடி. தில்லியில் இருக்கும் டாக்டர் அன்புமணியின் இரு குழந்தைகளும் "மேட்டர் டே" என்னும் ஆங்கில - இந்திப் பள்ளியில் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் தமிழே கிடையாது. இவ்வளவிற்கும் தில்லித் தமிழ் சங்கம் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை இங்கு நடத்துகிறது. இவற்றில் எதிலும் சேர்க்காமல் ஆங்கில - இந்திப் பள்ளியில் தன் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறார் அன்புமணி. அவர் தந்தை என்னவோ இங்கு எல்லாம் தமிழ் என்றிருக்கிறார். இந்த சாட்டையடியில் கூறப்படாத ஒரு உண்மையை இங்கே கூறுகிறேன் "தில்லி தமிழ் கல்விக் கழகம்" ஐம்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. நல்ல தரமானக் கல்வி. ஆனாலும் மேட்டுத் தமிழ்க்குடியினர் ஆறாவதிலிருந்துதான் இப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றனர். அதற்கானக் காரணம் பிறகு.

முதலில் ஃபீஸ் பற்றி. அங்கத்தினர் கட்டணம் மாதத்துக்கு ரூ. 20. குழந்தையின் படிப்புக்காக மாதம் அறுபது பைசாக்கள் மட்டுமே! இதில் இன்னொரு சமாசாரம். அங்கத்தினர் கட்டணம் ஒரு முறை மட்டுமே கட்ட வேண்டும். அதாவது ஒருவரூகு ஒன்றுக்கு மேற்பட்டக் குழந்தைகள் இருந்தால் மற்றக் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அறுபது பைசாக்கள் செலுத்தினால் போதும். இந்த நிலை என் பெண் படிக்கும்போது (1988-ல்) இருந்தது. இப்போது சிறிது உயர்ந்திருக்கலாம்.

ஆனாலும் ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுக்குடியினர் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் படிக்கவைத்து ஆறாம் வகுப்பு வரும் போதுதான் இங்கு வருகின்றனர். அப்போதும் தமிழை எடுக்காமல் குழந்தைகள் ஹிந்தி எடுத்துக் கொள்கின்றனர். ஏன் இந்த நிலை? முதல் ஐந்து வகுப்புகளில் தில்லியில் வீட்டுவேலை செய்யும் சேலத்துக்காரர்களின் குழந்தைகள் படிக்கின்றனர். சொல்லிவைத்தால் போல் அவர்களில் பெரும்பான்மையினர் கல்வி கற்பதை ஆறாம் வகுப்பு வரும்போது கைவிட்டு விடுகின்றனர்.

அன்புமணி அவர்களின் விவகாரத்துக்கு வருவோம். முதல் சாட்டையடியில் இன்ஸ்பெக்டர் கூறியது என்ன? உங்கள் பெற்றோர்களை மதியுங்கள், தலைவன் மூன்றாம் மனிதனே. அந்த இன்ஸ்பெக்டரைப் பார்க்காமலேயே அன்புமணி அவர்கள் இம்மாதிரி யோசித்திருக்க வேண்டும். "தமிழ் உணர்வு எல்லாம் மற்றவருக்கே. என் பிள்ளைகள் எதிர்காலம் எனக்கு முக்கியம்." நல்ல ப்ராக்டிகலான முடிவு என்றுதான் கூற வேண்டும்.

இதில் நாம் என்ன செய்ய வேண்டும்? "வேலையற்றுப் போய் தலைவர்கள் தங்கள் அரசியல் எதிர் காலங்களுக்காகத் துவக்கும் போராட்டங்களை ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்". அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள்.

இன்னும் ஒரு படி மேலே செல்வேன். அன்புமணி அவர்களை இங்கு நான் குறை கூற வரவில்லை. அவர் தான் ஒரு நல்ல தந்தை என்பதை நிரூபித்துள்ளார். அவர் வழியில் செல்வதே அவர் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்லதுதான். நல்லது யார் செய்தாலும் அதை பின்பற்றுவது நல்லதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/17/2005

மழை, புயலுடன் கடந்த வாரம்

கடந்த ஒரு வாரமாக மழை, புயலாக இருந்தது. மழை மிகுந்த ஒரு பகலில் மனநெகிழ்வை அளித்த ஒரு காரியத்தை என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள் செய்தார். அன்று அதை லைவ் ஆகப் பார்க்க எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.

அதே சமயம் என்னுடைய சில பதிவுகளும் புயலென பின்னூட்டங்களை சந்தித்தன. ஒரு சிலர் தவிர எல்லோரும் கண்ணியமாகவே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். எதிர்ப்பு வரும் என்று தெரிந்தாலும் அப்பதிவுகளை நான் இட்டதால் அதிகம் பாதிக்கப்படவில்லை. தரக்குறைவான பின்னூட்டங்களை ஏற்கனவே எதிர்கொண்டவன் என்பதால் இம்முறை பாதிப்பு அவ்வளவு இல்லை.

எனக்கு நட்சத்திர வாய்ப்பை இரண்டாம் முறையாய் தந்த தமிழ்மண நிர்வாகத்திற்கு - குறிப்பாக மதி மற்றும் காசி அவர்களுக்கு - என் நன்றி உரித்தாகுக. இவ்வார நட்சத்திரம் சுரேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை

"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி
வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"

இந்த இனிய பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் கணீரென்ற குரலில் இப்போது கேட்டாலும் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும். கவியரசு அவர்களை பற்றிய நினைவுகள் நம் நெஞ்சில் கிளர்ந்தெழும். படம் "கருப்புப் பணம்". ஆனால் இப்பதிவு அப்பாடலை பற்றியல்ல. தனியுடைமை ப்ற்றி இங்கு நான் எழுதப் போகிறேன்.

உலகமயமாக்கலால் எல்லா நாடுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் நல்ல மற்றும் கெட்ட பாதிப்புகள் இரண்டும் உண்டு. நிஜமாகவே வல்லான் பொருள் குவிக்கும் காலம்தான் இது. இதை இரு வகையில் நீங்கள் எதிர்கொள்ளலாம். ஒன்று, இதை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதலாம், உங்களுக்கு நேரம் இருந்தால். இல்லையேல் நீங்களும் வல்லானாக மாற வேண்டியதுதான்.

தொண்ணூறுகளுக்கு முன்னால் நம் நாட்டு நடப்பு எப்படியிருந்தது? தொலைபேசி இணைப்புக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது? வெஸ்பா ஸ்கூட்டருக்கு புக் செய்து விட்டு காத்திருந்த ஆண்டுகள் எத்தனை? தூர்தர்ஷன் தவிர வேறு சேனல்கள் இருந்தனவா? ஒரு தலைவர் மண்டையைப் போட்டால் சோக இசை நாள் முழுக்க அல்லவா பார்த்து, கேட்டு அவதிப்பட வேண்டியிருந்தது? இப்போது? மற்ற சேனல்கள் இருக்கும் நிலையில் தூர்தர்ஷன் அவ்வாறு செய்ய இயலுமா?

வல்லான் தன் திறமையால் பொருள் குவித்தால் ஏழைகள் கஷ்டப்படுவார்களா? என்ன வாதம் இது? இவ்வாறு சொல்லித்தான் சோஷலிச இந்தியாவில் காங்கிரஸ் பதவிக்கு வந்தது. விளைவு? பெர்மிட் லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டும் பொருள் ஈட்டினர். இதைத்தான் தீர்க்கதரிசி ராஜாஜி அவர்கள் பெர்மிட், லைசன்ஸ், கோட்டா ராஜ் என்று கூறினார். அந்த மாமனிதர் கூறியது இப்போதுதான் எல்லோருக்கும் உரைத்திருக்கிறது.

ஜூலை 1991. ஸ்ரீராம் க்ரூப் கம்பெனி ஒன்றுக்கு நான் பிரெஞ்சு துபாஷியாக சென்றிருந்தேன். அதில் கம்பெனி தரப்பிலிருந்து அவர்கள் தயாரிக்க போகும் ஒரு பொருளுக்கான மார்க்கெட் மதிப்பீட்டை வந்திருந்த பிரெஞ்சுக்காரருக்காக மொழி பெயர்த்து சொல்ல வேண்டியிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது. அதாவது, அரசு வெளிதேச வியாபாரிகளின் போட்டியிலிருந்து தங்கள் பொருளுக்கு பாதுகாப்பு தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதற்கு ஆதரவாக இந்திய அரசின் கொள்கை அறிவிப்பு ஒன்று சுட்டப்பட்டிருந்தது. பன்னாட்டு போட்டி வந்தால் சங்குதான் என்ற இழையும் கூறாமலே விளங்கியது.

இதனால் என்ன ஆயிற்று? நுகர்வோர்கள் தரம் குறைந்த பொருளையே வாங்க வேண்டியிருந்தது. மாருதி கார் வருவதற்கு முன்னால் இந்தியச் சாலைகளில் ஃபியட், அம்பாஸடர், ஸ்டாண்டர்ட் ஹெரால்ட் தவிர வேறு கார்களை காண முடிந்ததா? அதிலும் ஸ்டாண்டர்ட் மோட்டார் திவாலாக, இரு வகை கார்கள் மட்டுமே சாலைகளில் ஆட்சி செலுத்தின. இப்போது? கூறவும் வேண்டுமோ?

உற்பத்தி பெருக்கத்தால் என்ன நடந்தது? வேலை வாய்ப்பு பெருகியது. பல வல்லான்கள் உருவாயினர். இப்போது கூட எந்த கட்சி பதவிக்கு வந்தாலும் உலகமயமாக்கலை எதிர்க்க முடியாது.

பதிவை முடிக்கும் முன்னர் ஒரு விஷயத்தை எழுதி விடுகிறேன். வல்லான்தான் முன்னேற முடியும் என்றால் உங்களால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சட்டையில் ரூபாயுடன் வர முடியாது, வல்லான் ஒருவனால் பறிக்கப்படும் என்று பொருள் வருமாறு ஒரு நண்பர் பலமுறை எழுதியுள்ளார். அவருக்கு நான் கூறும் பதில் இதுதான். அந்த வல்லானுக்கும் மிஞ்சிய வல்லானாக போலீஸ் இருப்பதால் அவனால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியே ஓரிரு முறை வெற்றி பெற்றாலும் மாட்டிக் கொள்வதும் உறுதியே. இது நிரந்தர போராட்டம். அதற்கும் பொருளாதார முன்னேற்றத்துக்கும் சம்பந்தம் இல்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அப்பாடலை எழுதிய கண்ணதாசனே வல்லான்தானே. அவர் காலத்தில் அவரை மிஞ்சி இன்னொரு கவிஞன் வர இயலவில்லை. அதற்காக அவரை குற்றம் சொல்ல முடியுமா? வாய்ப்பை சமமாக கொடுக்கிறேன் பேர்வழி என்று செயல்பட முடியுமா? அபத்தமாக இல்லை?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது