5/05/2005

வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள் - 7

நான் முதல் பதிவில் கூறிய அடுத்த விஷயத்தை இப்போது பார்ப்போம். நான் கூறியது:

"தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்."

ஐ.எஸ்.ஓ. 9001 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அதில் கூறப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று தகவல் மேலாண்மை ஆகும். கம்பெனியில் ஒருவரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ வேலை கொடுக்கும்போது அவ்வேலைக்குத் தேவையான எல்லா தகவல்களையும் தர் வேண்டும் ஆனால் தேவைப்படாத தகவல்கள்? மூச், தரவே கூடாது. இது என்னப் புதுக் கதை என்று வியப்பவர்களுக்கு: தகவல் என்பது சக்தி. தேவையற்றவருக்கு கொடுத்தால் கெட்டது குடி. இதில் மொழிபெயர்ப்பாளர் எங்கு வருகிறார் என்று கேட்கிறீர்களா? மேலே கூறிய சினேரியோவைப் பாருங்கள்.

உங்களிடம் உள்ளத் தகவல்கள் என்னென்ன?

நீங்கள் பொறியாளர். எவ்வளவு வருட அனுபவம்? உங்களுக்குத் தெரிந்த மொழிகள் என்னென்ன? ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம்? எவ்வளவு வேகமாக மொழிபெயர்க்க இயலும். ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது முடித்துக் கொடுக்கத் தோதுப்படும்.

இவையெல்லாம் வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டுமா? கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அவையும் உண்மையானத் தகவல்களாக இருக்க வேண்டும்?

கொடுக்கக் கூடாதத் தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம். நான் மேலே கூறியபடி நீங்கள் முழுநேர வேலையிலும் இருக்கிறீர்கள். எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள பல வாடிக்கையாளர்கள் முயலுவர். இதைத் தெரிந்து என்ன நல்லது ஆகப் போகிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.

என்ன கெட்டது ஆகப் போகிறது என்றக் கேள்விக்கோ அனேக பதில்கள் உள்ளன. ஒரு தகவலைக் கொடுத்தப் பிறகு அது உங்கள் கட்டுப்பாட்டில் இனிமேல் இருக்காது. அதற்கு மாறாக உங்கள் தலை மேல் தொங்கும் கத்தியாகிவிடும். வாடிக்கையாளர் உங்களை பயமுறுத்த ஓர் ஆயுதத்தைத் தேவையில்லாமல் நீங்களே அவர் கையில் கொடுக்கிறீர்கள். வேண்டுமென்றோ அல்லது எதேச்சையாகவோ கூட உங்கள் முழுநேர வேலை கொடுத்த முதலாளிக்கு நீங்கள் செய்யும் சைட் பிசினெஸ் தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்புமளவுக்கு அது போய் விடலாம். அப்படித்தான் என் கம்பெனியில் ஒரு ஆடிட்டருக்கு வேலை போயிற்று.

என் விஷயம்? இருவருக்கே என் கம்பெனியில் தெரியும். ஒருவர் டைப்பிஸ்ட், இன்னொருவர் அந்த டைப்பிஸ்டின் அடுத்த மேல்நிலையில் உள்ள அதிகாரி. அவர்களுக்குக் கூட நான் வெளிவேலை செய்கிறேன் என்பதுதான் தெரியுமே ஒழிய, எங்கிருந்து அவற்றைக் கொண்டு வருகிறேன் என்பது தெரியாது. ஏனெனில் அது அவர்களுக்குத் தேவையற்றத் தகவல். டைப்பிஸ்ட் இதில் எங்கு வந்தார்? என் மொழிபெயர்ப்புகளைத் தட்டச்சு செய்வது அவரே. அவருக்கு ஒரு பக்கத்துக்கு இத்தனை ரூபாய் என்று ஏற்கனவே பேசி வைத்துக் கொண்ட விலையில் எவ்வளவு பக்கங்கள் தட்டச்சு ஆகிறதோ அதற்கான முழுதொகையையும் உடனுக்குடனே செட்டில் செய்துவிடுவேன். ஆகவே அவர் நான் செய்யும் வேலை குறித்து வாய் திறக்கப் போவதில்லை. அந்த டைப்பிஸ்டின் மேலதிகாரி? இது சுவாரஸ்யமானது. முதலில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அதை விட டைப்பிஸ்டுக்கு வேலை கொடுக்குமுன் அவரிடம் நான் கம்பெனி வேலையில் ஒரு பாக்கியும் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டேன். ஒரு தற்பாதுகாப்பு என்று வைத்து கொள்ளுங்களேன். ஆக நடந்தது என்ன? மேலதிகாரி கொடுக்கும் காகிதங்கள் கடகடவென்றுத் தட்டச்சுச் செய்யப்பட்டு, அவர் மேஜைக்குத் திரும்பச் சென்றன. அவருக்கு அதில் மிக்க மகிழ்ச்சி. என் வேலையைச் செய்வதால் அவர் வேலை தாமதமின்றி நடந்தது. அவரும் என்னைப் பற்றி ஒன்றும் கூறப் போவதில்லை. உண்மையைக் கூறப்போனால் நான் 10 நாள் விடுமுறைக்குப் பிறகு வேலைக்குச் சென்ற போது என்னை உற்சாகமாக வரவேற்றது அந்த டைப்பிஸ்டும் அவர் மேலதிகாரி மட்டும்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆக ஐ.டி.பி.எல்லில் இருந்த 12 வருடங்களும் கனவுபோலக் கடந்தன.

டில்லிக்கருகில் இருந்த நோய்டாவில் ஒரு வாடிக்கையாளர். முதலாளியே என்னை நான் எங்கே வேலை செய்கிறேன் என்பதையெல்லாம் ஒன்றுமே கேட்கவில்லை. கீழ்மட்டத்தில் இருக்கும் பொறியாளர் ஒருவர் ரொம்பவும் தொந்திரவு கொடுத்தார். நான் எங்கெ வேலை செய்கிறேன் என்பதை அடிக்கடி என்னிடம் கேட்டு வந்தார். நானும் பொறுமையாக அவருக்கு தகவல் எதையும் கொடுக்க மறுத்தேன் "ராகவன், நான் உங்கள் நண்பன், என்னிடம் கூறக் கூடாதா?" என்று கேட்டார். எனக்கு கோபம் வந்தது. இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காமல் அவரிடம் கூறினேன். "ஐயா, நீங்கள் என் நண்பனல்ல விரோதி" என்று. "என்ன அப்படிக் கூறிவிட்டீர்கள்" என்று கேட்டதற்கு "அப்படித்தான்" என்று பதில் கூறி இடத்தைக் காலி செய்தேன் விருப்ப ஓய்வு பெர்று கொண்டப் பிறகு அந்த அலுவலகம் சென்றேன். அப்போது அவர் மறுபடியும் நான் வேலை செய்யும் இடத்தைப் பற்றிக் கேட்டபோது உண்மையைக் கூறினேன். நான் அந்த வேலையில் இல்லை என்பதையும் கூறினேன். அப்போது அவர் கூறியது என்னை வியப்பிலாழ்த்தியது. "அடேடே ஐ.டி.பி.எல்லா? அங்கேதானே என் மனைவியின் தம்பி வேலை செய்கிறான் என்று அவன் பெயரைக் கூற அவன் எனக்கும் தெரிந்தவன்! முன்னாலேயே உண்மையைக் கூறியிருந்தால் அதோகதிதான் என்று நினைத்துக் கொண்டேன்.

தெரிவிக்க வேண்டியத் தகவல்கள், தெரிவிக்கக் கூடாதத் தகவல்கள் ஆகியவை அதே கேடகரியில் இருப்பதில்லை; அவை மாறக்கூடியவை. இப்போதெல்லாம் ஐ.டி.பி.எல்லில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக இருந்ததைச் சொல்வது மிக முக்கியம். புது வாடிக்கையாளருக்கு நம் மேல் அதிக நம்பிக்கை வரும்.

அடுத்த விஷயம் அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

Moorthi said...

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் கைகாட்டி உங்கள் இந்த பயனுள்ள கட்டுரை!

Muthu said...

டோண்டு அவர்களே,
தனது அனுபவத்தில் இருந்து கற்பவர்கள் மேதைகள், ஆனால் அடுத்தவரின் அனுபவத்தில் கற்பவர்கள் மாமேதைகள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அடுத்தவரின் அனுபவங்கள் நமக்கு எளிதில் கிடைப்பதில்லை. யாராவது இதுபோல் எழுதினால்தான் உண்டு, அல்லது சமயம் கிடைக்கும்போது அடுத்தவரையும் உன்னிப்பாய்க் கவனிக்க வேண்டும்.

தன்னைப் படிப்பவர்களின் வாழ்வையும், தரத்தையும் உயர்த்த முயலும் எழுத்து மிக உயரிய எழுத்து என்று சொல்வார்கள். உங்களின் இத்தகைய பதிவுகள் அந்த வகையைச் சார்ந்தவை. நன்றிகள். தொடரட்டும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி மூர்த்தி மற்றும் முத்து அவர்களே. நான் மொழிபெயர்ப்பாளனாக நான் பெற்ற அனுபங்களை எழுதும் போது அது சம்பந்தமான உதாரணங்கள்தான் கொடுக்கிறேன். ஆனால் இவை சில மாற்றங்களுடன் எந்தத் தொழிலுக்கும் பொருந்தும். முக்கியமாக, சினம் கொண்டாலும் அதைக் காண்பிக்காது புன்னகை செய்யும் முகத்துடன் இருப்பவரை எல்லோருமே விரும்புவர். நான் கூறியவை எல்லாம் எளிதாகவே கடைபிடிக்கக் கூடியவையே. எந்தக் கருத்தாயிருந்தாலும் உங்கள் நிலைமைக்கு தகுந்தவாறு மாற்றங்கள் செய்து கடைபிடித்தால் வெற்றி நிச்சயம். அதே சமயம் சிறு பின்னடைவு ஏற்பட்டால் அதன் காரணங்களை ஆராய்ந்து, அவற்றைத் தவிர்த்தால் பின்னால் வெற்றி நிச்சயம். வெற்றி இளவரசி உஙளுக்கு மாலையிடக் காத்திருக்கிறாள். சீக்கிரம் போய் கழுத்தை நீட்டுவதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
மறுபடியும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பொன் வானவில் said...

2005 ஆம் ஆண்டில் நீங்கள் எழுதியிருக்கும் இத்தொடரை இப்போது தான் கண்டெடுத்து ஆர்வத்தோடு படித்து வருகிறேன். எல்லோரும் இவ்வாறு தங்கள் அனுபவங்களை சொல்ல முற்பட மாட்டார்கள், எங்கே அடுத்தவன் முன்னேறி விடுவானோ என்று. வெற்றிக்கு வழிவகுக்கும் உங்கள் கட்டுரைகளுக்கு மிக்க நன்றி.

ஓர் இளவரசி எனக்கு ஏற்கனவே மாலையிட்டு விட்டாள். ஆனால் ஆசை யாரை விட்டது. கழுத்தை இன்னமும் தான் நீட்டிக் கொண்டிருக்கிறேன். வலி எடுத்தது தான் பாக்கி. பெண்கள் இப்போது முன்பு போல இல்லை. மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்களே..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது