1954 - ல் முதலைமச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜாஜி அவர்கள் சில ஆண்டுகள் தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்விலிருந்தார். அவர் கவனம் இலக்கியத்துக்கு திரும்பியது. அடாடா என்ன பாக்கியம் அவர் வாசகர்களுக்கு. அப்போது எனக்கு 8 அல்லது 9 வயது. சிறுவர்களுக்கானக் கதைகளை அவர் வாரா வாரம் கல்கியில் எழுதுவது அவர் வழக்கம்.
வியாழக்கிழமை வந்தாலே எங்கள் வீட்டில் சண்டை எனக்கும் என் அக்காவுக்கும் தூள் பிறக்கும். கலகி பத்திரிகையை யார் முதலில் படிப்பது என்பதைப் பற்றித்தான் அது என்று கூறவும் வேண்டுமோ? வெள்ளிக்கிழமை சண்டை விகடனைப் பற்றியிருக்கும் ஆனால் அது வேறு கதை. பிறகு எழுதுகிறேன்.
அப்போது ராஜாஜி அவர்கள் "சக்கிரவர்த்தித் திருமகன்" என்றத் தலைப்பில் குழந்தைகளுக்காக ராமாயணக் கதை ஆரம்பித்தார். முதல் அத்தியாயம் "சந்தத்தைக் கண்டார்" என்றத் தலைப்பில். வால்மீகி அவர்கள் ராமகாதையை எழுதத் தூண்டிய நிகழ்ச்சியை அது விவரித்திருந்தது. இப்போது அதைத் திரும்பப் படித்தாலும் மெய் சிலிர்க்கும் எனக்கு. துணையிழந்த க்ரௌஞ்ச பட்சியின் சோகத்தால் பாதிக்கப்பட்டு வால்மீகி முனிவர் வேடனை சபிக்க, அச்சாபத்தின் வார்த்தைகள் ஒரு ஒழுங்கு முறையில் அமைந்து விட, வியாகூலத்தில் ஆழ்கிறார் மஹரிஷி. தேவ ரிஷி நாரதர் அவர் முன் தோன்றி அவர் செய்யவேண்டிய காரியத்தைப் பற்றிக் கூற நிகழ்ச்சிகள் விறுவிறுவென்று நகர்கின்றன. அடுத்த அத்தியாயத்திலிருந்து நாமாயணக் கதை ஆரம்பம். கதை கடகடவென்று நகர்கிறது. சொற்சிக்கனம் ராஜாஜி அவர்களின் சிறப்பு. விஸ்வாமித்திரர் அரசன் திரிசங்குவை சந்திக்கிறார். அவனோ வஷிஷ்டர் சாபத்தால் கோர உருபெற்றவன். இருந்தும் விஸ்வாமித்திரர் அவனை அடையாளம் கொண்டு கேட்கிறார்: "நீ அரசன் திரிசங்கு அல்லவா? என்ன நடந்தது? யார் சாபம்?" இதை விட சொற்சிக்கனம் செய்ய முடியுமா? இந்த நூலுக்காக அவருக்கு சாகித்திய அகாடெமி விருது கிடைத்து அது அவரால் பெருமை பெற்றது.
குழந்தைகளுக்கானக் கதைகள் தனி. ஒவ்வொரு வியாழக்கிழமையும் அவ்வாரத்துக் கதையை ராஜாஜி அவர்களே வானொலியில் வாசிப்பார். தெளிவான உச்சரிப்பு, அலட்டலில்லாத நடை. நான்தான் கல்கியில் வந்த உடனேயே படித்து விடுவேனே. இருப்பினும் அவர் வாயால் அதைக் கேட்பது நான் செய்த பாக்கியம். ஆனால் அச்சமயத்தில் இதையெல்லாம் நினைத்தவன் இல்லை நான். அவர் கதைகளைப் படிக்க எனக்கு பிடிக்கும். அவ்வளவுதான். அக்கதைகளில் பல இப்போதும் என் மனதில் நிலை கொண்டுள்ளன.
ஒரு அரண்மனை நந்தவனத்தில் இருந்த ஒரு துளசிச் செடியையும் ரோஜாச் செடியையும் பற்றி ஒரு கதை. ராஜாஜியின் கதைகளில் அச்சமயத்தில் கல்கியில் வந்த முதல் கதை. ரோஜா செடிக்குத் தன் பூக்களின் மணம் மற்ரும் அழகில் கர்வம். துளசிச் செடியைக் கேலி செய்கிறது. துளசிச் செடியை நோக்கி வருபவர் பெருமாள் கோவில் பட்டாச்சாரி ஒருவர்தான். ரோஜாவையோ எல்லோரும் நாடுவர். அதனால் அதற்குக் கர்வம். ஒரு நாள் 6 வயது ராஜகுமாரி ரோஜாவைப் பறிக்க முயல, அதன் முள் அவள் கையைக் குத்திக் காயப்படுத்தி விடுகிறது. ராஜா கோபம் கொண்டு செடியை வெட்டிப் போட்டு விடுகிறான். தன் தோழி வெட்டப்பட்டதற்கு துளசி அழுகிறது. அன்று கோவிலில் பட்டாச்சாரியாருக்கு ஒரே வியப்பு. ஏனெனில் துளசி மாலையில் ரோஜாவின் மணம்.
இன்னொரு கதையில் அனுமதியில்லாது கட்டப்பட்ட குடிசைகளை அரசு ஆணையின்படி பிய்த்து எறிகிறார்கள். அதைப் பார்த்தக் குழந்தைகள் அழுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அரசு சார்பில் குடிசைகளைப் பிய்த்து எறிந்த அரசு ஊழியன் கோவிலில் நின்று தன்னை மன்னிக்குமாறு தெய்வத்திடம் மன்றாடுகிறான். என்னை மிகவும் பாதித்தக் கதை இது.
இன்னொரு கதையில் ஒரே இறைவனை பல உருவங்களில் எவ்வாறு வழிபடுகிறார்கள் என்பதை ஒரு அணில் மற்றும் குருவியை வைத்து அழகான கற்பனையுடன் விளக்கியிருப்பார் ராஜாஜி அவர்கள்.
மொத்தமாகவே கதைப் புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர். தினம் பீச்சுக்கு விளையாடப் போவதாக வீட்டில் சாக்கு கூறி அங்கு மெரினா நீச்சல் குளத்தருகில் இருந்த நூலகத்தில் பொழுதைக் கழிப்பதே என் வாடிக்கை. ஆகவே ராஜாஜியையையும் விரும்பிப் படித்தேன் என்றுதான் கூற வேண்டும்.
மற்றப்படி அவர் ரேஷன் முறையை ஒழித்து, இந்தியாவுக்கே முன் உதாரணமாக இருந்தவர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அவரைப் பற்றி தனிப்பட்ட முறையில் அறிந்தவனில்லை. இந்த நிலைமை நீடித்தது 1959-ல் அவர் சுதந்திரா கட்சியை நிறுவியது வரை. அப்போது எனக்கு வயது 13. அது பற்றி அடுத்தப் பதிவில் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
23 hours ago
10 comments:
சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நல்லவர் வல்லவர்
மூதறிஞர் முதல் சுதந்திர இந்திய கவர்ணர்ஜெனரல்; இருந்துமென்ன!!!
அவர் எதை எல்லாம் வெறுத்தாரோ தமிழ் நாட்டில் வரக்கூடாதென நினைத்தாரோ
அவைகளை லாட்டரி சீட்டு, கள்,சாராயம், சூதாட்டதைக் கொண்டுவந்து ஒரு தலைமுறையினருக்கே
தெரியாத பழக்கத்தை உண்டு பண்ண காரணமாயிருந்து விட்டாரே திராவிட கட்சிகளுடன்
கூட்டு சேர்ந்து. கருணாநிதி கொண்டு வர முயன்றபோது நேராக வீட்டிற்கு சென்று
அவைகளை எடுத்துச்சொல்லியும் கொண்டு வரவேண்டாம் என கேட்டுக்கொண்டும்
கருணாநி கேட்காமல் தனது மகன்நரசிம்மனுக்கு சீட்டுகேட்டு தான் வந்தார் என அன்பில்
தர்மலிங்கத்தின் மூலம் பரப்பனார்.
காமாராஜை வீழ்த்தனும் என்ற ஒரே நோக்கத்தோடு வீழ்த்தி தனது கொள்கையை திராவிட
கட்சியுன் சேர்ந்து வீழ்த்திக் கொண்டாரே.
பின் நடக்கப்போவதை முன்பே கூறக்கூடிய தகுதி வாய்ந்தவர் என பாராட்டப்பட்ட அவர்
இந்த ஒரு வகையில் பின்னடைந்து விட்டாரே.
என்னார்
என்னார் அவர்களெ இது பற்றி அடுத்தப் பதிவில் எழுத எண்ணியிருக்கிறேன். இப்போதைக்கு இதைக் கூறுவேன். 1967-ல் காங்கிரஸை எதிர்த்தது காலத்தின் கட்டாயம். திமுகவினரே தங்கள் வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை. 1969-ல் காங்கிரஸை இந்திரா காந்தி உடைக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தின் தலைவிதி மாறியிருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி எதிர்பார்க்கிறேன்
தாங்கள் கொடுத்த பதில் எனக்கு மின்னஞ்சலில் வரவில்லையே என்ன காரணம்
என்னார்
சாதாரணமாக என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் என் ஜிமெயிலில் வரும். இதில் என் பதிவிலியே நான் இடும் பின்னூட்டங்களும் அடங்கும்.
நான் மற்றவர்கள் பதிவில் கொடுக்கும் பின்னூட்டங்கள் என் ஜிமெயிலில் வருவதில்லை. அம்மாதிரி வருவதற்கு ஏதேனும் செட்டிங்ஸ் இருக்கின்றனவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு சில நாட்களுக்கு முன் வந்தது இப்பொழுது வரவில்லை என்பதனால் தான் நான் தங்களைக்கேட்டேன் தாங்கள் என்னையே திருப்பிக்கேட்டால் நான் என்ன செய்ய? தாங்கள் சீனியர் என்பதால் கேட்டேன் அல்லது கண்டு பிடித்துச் சொல்லுங்களேன்.
நன்றி
நான் புரிந்து கொண்டது வரை உங்கள் பதிவில் இருக்கும் செட்டிங்ஸில் ஏதேனும் உங்களை அறியாமல் நீங்கள் மாற்றியிருக்க வேண்டும். ஏனெனில் எனக்குத் தெரிந்து இம்மாதிரி நான் மற்றவருக்கிடும் பின்னூட்டங்கள் என்னுடைய மின்னஞ்சல் பெட்டிக்கு வரக்கூடும் என்பதே எனக்குப் புதிய செய்திதான். இருந்தாலும் நீங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் நான் வேறு யாரிடமாவது தெரிந்து கொண்டு பதிலளிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்ன நடக்குதுங்க இங்க?
ஒன்றுமில்லை மாயவரத்தான் அவர்களே. நான் புரிந்து கொண்ட அளவில் என்னார் அவர்கள் தான் எனக்கிட்டப் பின்னூட்டத்துக்கு நான் எதிர்ப்பின்னூட்டம் என் பதிவில் இட்டால் அதுவும் அவர் மின்னஞ்சலுக்கு வரும் எனக் கூறுகிறார். இது எனக்குப் புதிய செய்தி. ஒரு வேளை நம் பதிவில் அவ்வாறு செட்டிங் செய்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சில பதிவுகளை ட்ராக்கிங் செய்ய வசதி இருக்கிறது என நினைக்கிறேன். இதைத்தான் அவர் கூறுகிறாரா என்பது தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மன்னிக்கவும் அப்படி வருவது முத்தமிழ் மன்றத்தில் மட்டும் தான்
பிழைதான்
என்னார்
பரவாயில்லை என்னார் அவர்களே, இப்போது ராஜாஜியைப் பற்றி அடுத்தப் பதிவும் வந்து விட்டது. பார்த்து கருத்து கூறுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment