நேற்று நடந்தது போல இருக்கிறது, Y2K பிரச்சினை இல்லாமல் போன ஜனவரி 1, 2000 ஆண்டு. அதன் பிறகு பல விஷயங்கள் நடந்தன என்றாலும் இப்பதிவுக்கு 2012-ல் நடந்ததை நினைவுக்கு கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் Y2K பற்றிய பதிவை முதலில் பார்த்து விடுவோமா. ஓவர் டு Y2K.
புது தில்லி, திசம்பர் 31, வருடம் 1999, இரவு 10.30 மணி. All India Radio வெளிநாட்டு ஒலிபரப்பு சேவை. நானும் போஸ் அவர்களும் காரில் சென்று இறங்கி, நியூஸ் ரூமுக்கு சென்றோம். அன்று பிரெஞ்சு செய்திகள் எழுதி படிக்க வேண்டியது என் முறை. அன்று இரவு ஒன்பது மணிவாக்கில் படிக்கப்பட்ட ஆங்கில செய்திகளின் பக்கங்கள் அங்கு எனக்கு கொடுக்கப்பட்டன.
முதல் செய்தியே Y2K பற்றித்தான். உலகமே வருடம் 2000-த்தை ஒரு வித பயத்துடன் பார்த்து கொண்டிருந்தது. அது வரை கணினியில் வருடங்களை இரு எண்களிலேயே குறிப்பிட்டு வந்தனர். உதாரணத்துக்கு 1999 வருடத்தை 99 என்று குறித்தனர். அறுபதுகளில் கணினி உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்த போது தேதிகளை குறிப்பிடும்போது 1960 என்பதற்கு பதிலாக 60 என்றே குறிப்பிட்டு வந்தனர். அப்போது அதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை. 2000 ஆண்டு நெருங்க நெருங்க பயம் ஆரம்பித்தது. அப்போதைய நிலவரப்படி வருடம் 2000 வெறுமனே 00 என்று ஆகிவிடும். அதைக் கணினி ஏற்பாடுகள் எவ்வாறு புரிந்து கொள்ளும் என்பதில்தான் குழப்பமே. அதை 1900 என்றுதான் புரிந்து கொள்ளும் என்று பலரும் நினைத்தனர். அவ்வாறின்றி 2000 என்று புரிந்து கொள்ள வேண்டுமானால் வருடங்களை நான்கு எண்களில் குறிக்க ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இருக்கும் எல்லா தகவல் கோப்புகளிலும் அதை 2000-க்குள் செய்து விட முடியுமா என்பதுதான் பிரச்சினைக்குரிய கேள்வி.
அப்போது கணினி பற்றி என் அறிவு பூஜ்யம். இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடிந்தது. இதைத் தீர்ப்பதில்தான் இந்தியர்களின் மென்பொருள் திறமை உலகுக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாக பல கட்டுரைகள். ஒன்றிரண்டை நான் பிரெஞ்சிலிருந்தும் ஜெர்மனிலிருந்தும் மொழிபெயர்த்ததில் எனக்கு செம துட்டு வேறு.
இப்போது ரேடியோ செய்திக்கு திரும்ப வருவோம். 9 மணி ஆங்கில செய்தியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பிரச்சினையின்றி 2000 ஆண்டுக்குள் நுழைந்தன, இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் அந்த கோட்டை கடக்கும் என்று செய்திகள் வாசிக்கப்பட்டன. அந்த செய்திதான் என்னிடம் மொழிபெயர்க்க கொடுக்கப்பட்டது.
ஆனால் நான் செய்தி வாசித்தபோது மணி விடியற்காலை 1.20. வெற்றிக் களிப்புடன் முதல் தலைப்பு செய்தியாக இந்தியா வெற்றிகரமாக 2000 ஆண்டிற்குள் பிரவேசம் செய்தது என்று படித்து, பிறகு விரிவான செய்தியில் ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதலில் அப்பிரச்சினையை வெற்றிகரமாக தாண்டினர் என்று படித்தேன். செய்தியை முடித்து விட்டு இன்னொரு அறிவிப்பாளர் செய்தி விமரிசனம் படிக்கும்போது அறையை விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் கட்டுப்பாடு அதிகாரி வேகமாக வந்து என்னிடம் எனக்கு தரப்பட்ட ஆங்கிலச் செய்தியை அப்படியே மொழிபெயர்த்தேனா என்று கேட்க, அவரிடம் நான் செய்த மாறுதலைக் கூறினேன். நான் மேலும் கூறினேன்: "நாம் ஏற்கனவே 2000 ஆண்டில் பிரவேசித்து விட்டோம். எல்லாம் நல்லபடியாகத்தானே ஓடுகின்றன" என்று கூற அவரும் பாராட்டினார். இரவு 12.15-க்கு ஹிந்தி செய்தி வாசித்தவர் தனக்கு கொடுத்ததை அப்படியே மொழிபெயர்த்தார் என்பதைக் கூறிவிட்டு, நான் செய்த மாறுதலை ஆதரித்தார். ஆக அகில இந்திய வானொலியில் இந்த செய்தியை முதலில் கொடுத்தது நானே என நினைக்கிறேன்.
இப்போதும் Y2K பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதில் நான் தெளிவாக இல்லை. யாரேனும் மென்பொருள் நிபுணர்கள் கூறினால் நலமாக இருக்கும். அல்லது பிரச்சினை முதலிலிருந்தே இல்லையா? எல்லாமே கற்பனைதானா?
சரி, நிகழ்காலத்துக்கு வருவோம்.
2012 எப்படி இருந்தது? என்னைப் பொருத்தவரைக்கும் அது எனது புற்றுநோயால் நிரப்பப்பட்டது. லட்சக்கணக்கில் பணச்செலவு வேறு. இருப்பினும் என் வீட்டம்மாவின் அன்பான கவனிப்பில் என்னை சுதாரித்துக்கொள்ள முடிந்தது
மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வர, செலவழித்த தொகையை மீண்டும் சம்பாதிக்க முடிந்தது, எனது தன்னம்பிக்கையும் வளர்ந்தது. சென்னைக்கு வரவிருக்கும் மெட்ரோ ரயில் இஞ்சினுக்கான முகப்புக் கண்ணாடியின் ஸ்பெசிஃபிகேஷன்களை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த வேலை எனக்கு நிறைவைத் தந்தது. மொத்தத்தில் 2012-ஆம் ஆண்டு தொழில்முறையில் நம்பிக்கை அளித்தது என்றுதான் கூற வேண்டும்.
பொதுவாகப் பார்த்தால் குஜராத்தில் மோதி அவர்கள் வெற்றி பெற்றது மனதுக்கு நிறைவைத் தந்தது.
அதே சமயம் உடல்நிலை ஒத்துழைக்காதலால் துக்ளக் ஆண்டு நிறைவு கூட்டத்துக்கு போக இயலவில்லை. வெளியூர் சென்று செய்யவேண்டியிருந்த ஜெர்மன் துபாஷி வேலையும் செய்ய இயலவில்லை. புத்தகக் கண்காட்சிக்கும் செல்ல முடியவில்லை. இவையெல்லாம் குறைகளே, இருந்தாலும் வேறு வழியில்லைதானே.
இன்று 2013-ஆம் ஆண்டு ஆரம்பம். நல்லபடியாகவே இருக்கும் என்னும் நம்பிக்கையுடன் வலைப்பூ நண்பர்கள் எல்லோருக்கும் டோண்டு ராகவனின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
10 hours ago
23 comments:
முதல்ல எண்கள வச்சிக்கிறதுக்கு ஒரு எடத்த பிடிப்போம்.
இது ஏற்கனவே நிரல்ல இருக்கு.
வருசம் = இரண்டு இலக்க எண்தாங்கி
இத புதுசா நிரல்ல உருவாக்குறோம்.
புதுவருசம் = நான்கு இலக்க எண்தாங்கி
இதயும் இப்பிடி பிரிச்சிக்கிறேன்.
செஞ்சுரி = புதுவருசத்தோட முற்பாதி இரண்டு இலக்க எண்தாங்கி
இயர் = புதுவருசத்தோட பிற்பாதி இரண்டு இலக்க எண்தாங்கி
இப்ப நிரல்ல எங்கங்க எல்லாம் வருசம் உபயோகிக்கிறோமோ, அங்க இந்த லாஜிக்க போட்டு தாக்கேய்
அதாவது..
வருசங்கிறது 50 அல்லது அதுக்கு மேலன்னா
செஞ்சுரி = 19..
இல்லாகாட்டி செஞ்சுரி = 20..
எப்பிடின்னாலும் வருசம் = இயர்..
முடிஞ்சிது.
புதுவருசம் பிறக்கறதுக்கு முன்னாடி வருசம் 50க்கு மேலயா இருக்கும், லாஜிக் படி செஞ்சுரி 19. ஆக புதுவருசம் = 19** ஆனா புதுவருசம் பிறக்க சொல்லோ, வருசம் 00ன்னு ஆகும். இப்போ லாஜிக் படி வருசம் 50க்கு கீழன்றதால செஞ்சுரி 20 ஆயிடும். ஆக புதுவருசம் = 2000. நிரல்ல எங்கங்க எல்லாம் வருசம் வருதோ அதயெல்லாம் தேடி பிடிச்சி அங்க எல்லாம் புதுவருசம் உபயோகப்படுத்தினாங்க... இது ஒரு ஸ்டைலுதான். இத மாதிரி பல ஸ்டைல்ல மேட்டர் பண்ணாங்கோ.
*
// இதைத் தீர்ப்பதில்தான் இந்தியர்களின் மென்பொருள் திறமை உலகுக்கு தெரிந்தது என்று நினைக்கிறேன் // அப்படீன்னு எல்லாம் ஒன்னும் இல்ல.. டைம் க்ரஞ்ச்.. அல்லாரும் எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்க சொல்லோ, இந்தியாவுல ஏகப்பட்ட ஆள்பலம் + கொடக்கூலி கம்மிங்கறதால நாம சந்தர்ப்பத்த நல்லா ஊஸ் பண்ணிகினோம். அதான் மேட்டரு.
புத்தாண்டு வாழ்த்துகள் !!!
புத்தாண்டு வாழ்த்துகள் !!!
நன்றி கார்த்திக் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"அதாவது..
வருசங்கிறது 50 அல்லது அதுக்கு மேலன்னா
செஞ்சுரி = 19..
இல்லாகாட்டி செஞ்சுரி = 20..
எப்பிடின்னாலும் வருசம் = இயர்..
முடிஞ்சிது"
அப்படீன்னா 2050-ல மறுபடியும் சங்கா? இல்லை ஒரு வேளை நாம் இப்போது தெளிவாக வருடத்துக்கெல்லாம் 4 எண்களை உபயோகிப்பதால் அந்தப் பிரச்சினை வராது எனக் கொள்ளலாமா?
Y10K எப்படி எதிர்க்கொள்ளப்படும்? இல்லை அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது என விட்டுவிட்டார்களா?
"அல்லாரும் எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்க சொல்லோ, இந்தியாவுல ஏகப்பட்ட ஆள்பலம் + கொடக்கூலி கம்மிங்கறதால நாம சந்தர்ப்பத்த நல்லா ஊஸ் பண்ணிகினோம். அதான் மேட்டரு."
அந்தத் திறமையாவது இருந்ததேன்னு சந்தோஷப்பட்டுக் கொள்வோம்.
இப்போது என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒன்றுமே செய்திருக்க வேண்டியதில்லை என்று சிலர் இப்போது கருதுகிறார்களே, அதில் ஏதேனும் மேட்டர் இருக்கிறதா என்பதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி ஞானவெட்டியான் அவர்களே. என் தரப்பிலிருந்து உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி தருமி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோதனை
டோண்டு சார்,
நான் உங்களுக்கு SMSலயே புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டேன்.
இருந்தாலும் இன்னொருமுறை சொல்வதில் தப்பில்லையே..
புலரும் புத்தாண்டு உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என வாழ்த்தும்,
டிபிஆர் ஜோசஃப்
நன்றி ஜோசஃப் அவர்களே. அது இருக்கட்டும் நான் கேட்டதற்கு ஏதாவது பதில்?
"இப்போதும் Y2K பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதில் நான் தெளிவாக இல்லை. யாரேனும் மென்பொருள் நிபுணர்கள் கூறினால் நலமாக இருக்கும். அல்லது பிரச்சினை முதலிலிருந்தே இல்லையா? எல்லாமே கற்பனைதானா?"
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்கள் சார்பாக உங்கள் இல்லத்த்தினர்,உறவினர்,நட்புக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அந்த சமயத்தில் Y2KD என்று ஒரு நகைச்சுவை சிறுகதை எழுதியிருந்தேன். ஏதோ நம்மால் முடிந்தது.
டோண்டு சார்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்!எல்லாம் நன்மைக்கே என்று கடந்தது காலம்! நீங்கள் உடல் நலம் தேறி, மறுபடியும் சுறுசுறு ப்பாகப்பதிவெழுதுவதைப் பார்க்க மிகவும் ஆசை!
No no, Y2K bug was a real problem, it especially affected those codes and programs written in languages like COBOL many years earlier.
Vijayaraghavan
Sent from IPad
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! நீங்கள் உடல் நலம் தேறி, மறுபடியும் பதிவெழுதுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்!
Y2K - மக்கள் பயத்தை பகடையாக்கி பணம் பார்த்தனர; எல்லா தொழிலும் உண்டு...முக்கியமாக மருத்துவத்தில்.
ஒரு வரியில் சொன்னால் ஈரைப் பேனாக்கி பேனை பெருமாளாக்கின கதை. கூடவே, அந்த பெருமாளை காட்டி நல்லா காசு பார்த்தானுங்க...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
வாழ்த்துக்கள்!!!
நீங்கள் உடல் நலம் தேறி, மறுபடியும் பதிவெழுதுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி
புத்தாண்டு வாழ்த்துகள்...
டோண்டு சார்,
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புற்று நோயை எதிர்த்து வென்றதற்கு ஒரு Salute.
"அப்படீன்னா 2050-ல மறுபடியும் சங்கா? இல்லை ஒரு வேளை நாம் இப்போது தெளிவாக வருடத்துக்கெல்லாம் 4 எண்களை உபயோகிப்பதால் அந்தப் பிரச்சினை வராது எனக் கொள்ளலாமா?"
டோண்டு சார், இப்போது வருடத்தை குறிக்க நான்கிலக்க எண்களை உபயோகிப்பதால் 2050-ல் அந்த பிரச்சினை வராது. மேலும் இந்த சிக்கல் பெரும்பான்மையாக COBOL என்ற கணினி மொழியில் எழுதப்பட்ட நிரல்களில் மட்டும்தான். இப்போது நாம்வேறு பல கணினி மொழிகளை உபயோகிக்கிறோம். அவற்றின் கட்டுமானம் இதை சமாளிக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கவலை இல்லை.
இதனால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றுக்கு நல்ல வணிகம். அவை தொடர்ந்து வெற்றிகரமாக வளர்ச்சி அடைந்ததற்கு இந்த Y2K Projects-களை நல்லபடியாக முடித்து கொடுத்தததுகூட காரணமாய் இருக்கலாம்.
முகமூடி சொன்னது மாதிரி நாம் 'மலிவாய் கிடைக்கும் பலபட்டரை' - நன்றி - சுஜாதா. எனவே நமக்கு சாதகமாய் காற்று அடித்தது.
Y10K ?
ஹா..ஹா பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம். :)
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
Post a Comment