1/02/2006

இஞ்சி லாபம் மஞ்சளிலே

தில்லியில் நான் வசித்தபோது ஒரு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் அதன் மேனேஜருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு வார்த்தை விட்டாரே பார்க்கலாம். அதாவது அந்த நிறுவனத்தில் எம்.டி. அவர்களுக்கு பிரெஞ்சு நன்றாகத் தெரியுமாம். ஆகவே நான் பிரெஞ்சு துபாஷி வேலைக்கான ரேட்டை குறைத்து கொள்ள வேண்டுமாம். அவரைப் பார்த்து வெறுமனே ஒரு பெரிய புன்னகை செய்தேன். என்ன என்று கேட்பது போல அவர் தன் புருவங்களை உயர்த்த மெதுவாக பேச ஆரம்பித்தேன்.

அந்த நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு ஒரு பிரெஞ்சு நிபுணர் டிரய்னிங் கொடுப்பதற்காக வரவிருந்தார். அவருடைய வேலை முழுவதும் தொழிற்சாலையில்தான். ஆக எம்.டி. அவர்கள் தனது எல்லா வேலையையும் விட்டு விட்டு பிரெஞ்சுக்காரருடன் உட்கார்ந்திருக்க வேண்டும். 8 மணி நேரம் இந்த மொழிபெயர்ப்பு வேலையை செய்தால் அவருடைய ஒரு நாள் சம்பளம் என்ன? அவருடைய மற்ற வேலைகளின் கதி என்ன? இதனால் கம்பெனி மிச்சம் பிடிக்கப் போவது என்ன என்றெல்லாம் நான் கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாணியில் அடுக்க, அவருக்கே சிரிப்பு வந்து விட்டது. பிறகு நார்மலாகப் பேச ஆரம்பித்தோம்.

இன்னொரு கம்பெனி ஸ்ரீபெரும்புதூரில் இருந்தது. அதில் இரண்டு பிரெஞ்சுக்காரர்களுக்கு நான் துபாஷி வேலை செய்ய வேண்டியிருந்தது. அதாவது அவர்கள் அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்ஸர் பிளாஸாவுக்கு மாலை ஐந்து மணிக்கு வருவார்கள். நான் நங்கநல்லூரிலிருந்து கிளம்பி ஸ்பென்ஸர் பிளாசாவுக்கு அந்த சமயத்தில் வர வேண்டியது. பிறகு அவர்கள் ஷாப்பிங்கிற்கு நான் உதவி செய்ய வேண்டியது. எனக்கு கால் டாக்ஸிக்கு பணம் கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. நான் இப்போது ஒரு ஆலோசனை கூறினேன். எப்படியும் அவர்கள் கத்திபாரா வழியாகத்தான் சென்னைக்கு வர வேண்டும். அங்கிருந்து எங்கள் வீட்டிற்கு வந்து என்னை பிக் அப் செய்து கொண்டு போகலாம் என்று ஐடியா கொடுத்தேன். கம்பெனி ஒத்துக் கொல்ளவில்லை, ஏனெனில் அதனால் தேவையின்றி கம்பெனி கார் சுற்ற வேண்டியிருக்குமாம். கத்திபாராவிலிருந்து என் வீடு 5 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.

சரி என்று கையில் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு சரியாக ஐந்து மணிக்கு ஸ்பென்ஸர் பிளாசாவிற்கு சென்றேன். 5.30 மணி வரை யாரும் வரவில்லை. ஃபோன் செய்து விசாரித்தால் பிரெஞ்சுக்காரர்கள் இன்னும் ஸ்ரீபெரும்புதூரை விட்டு கிளம்பவேயில்லை எனத் தெரிந்தது. பிறகு 6.30 அளவில் வந்து சேர, 9.00 மணி வரை அவர்களுடன் நேரத்தைக் கழித்தேன்.

இப்போது இந்தக் கணக்கைப் பாருங்கள். என் டாக்ஸி கட்டணம் ரூ.180+180=360, 1 மணி முப்பது நிமிடம் காத்திருந்த நேரமும் பில்லில் சேர்ந்தது, ரூபாய் 900. அதுவே என்னை வீட்டில் இருந்து பிக்கப் செய்து வீட்டில் விட்டிருந்தால் கம்பெனியின் செலவு 20 கிலோமீட்டருக்கு (5x4=20) வெறும் 100 ரூபாய்கள்தான். காத்திருந்த 90 நிமிடங்களில் ஒரு மணி நேரம் என் நேரத்துக்கான பில்லும் மிச்சமாயிருந்திருக்கும். ஆக தண்டமாக ரூபாய் 860 செலவு.

இன்னொரு நிறுவனத்தில் ஒரு கட்டு ஜெர்மன் டிராயிங்குகள் மொழிபெயர்ர்க வேண்டியிருந்தன. எனக்கு வேலையளித்த அக்கம்பெனியின் அதிகாரி ஒவ்வொரு டிராயிங்கிலும் சில வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட்டு அவற்றை மொழி பெயர்த்தால் போதுமெனக் கூறிவிட்டார். ஏனெனில் மற்றவை அவருக்கு தெரியுமாம். எனக்கென்ன, நான் நேர அடிப்படையில் வேலை செய்தேன், ஆகவே அவர் கூறியபடி மொழிபெயர்த்துவிட்டு செக்கை வாங்கிச் சென்றேன். சில நாட்களிலேயே அந்த அதிகாரி கம்பெனியை விட்டு விலகிச் செல்ல, அடுத்து வந்தவர் மொழிபெயர்க்காத வார்த்தைகளை வைத்துக் கொண்டு பேய் முழி முழிக்க, பிறகு என்ன, வழக்கம்போல டோண்டு ராகவன் அங்கு வந்து வேலை செய்து மேலும் பணம் வாங்கிச் சென்றான்.

அதே கம்பெனியின் தலைமை அதிகாரியும் அவர் பங்குக்கு ஒரு குளறுபடி செய்தார். பகல் நேர வேலை முடிந்ததும் அவர் அப்போது அங்கிருந்த பிரெஞ்சு விருந்தாளியை 5-நட்சத்திர ஹோட்டலுக்கு மாலை விருந்துக்காக அழைத்துச் சென்றார். என்னையும் கூப்பிட்டார். என்னைப் பொருத்தவரை அங்கும் நான் துபாஷி வேலை செய்ய வேண்டியதுதான். ஆகவே அவரிடம் நான் டின்னருக்கான நேரமும் பில் செய்யப்படும் என்றேன். அவர் நான் 5-நட்சத்திர சாப்பாடு வாங்கித் தருவதால் வேறு சார்ஜ் செய்ய மாட்டேன் என எதிர்ப்பார்த்திருக்கிறார். நான் இவ்வாறு கூறியதும் யோசித்து, பிறகு என்னை வரவேண்டாம் என்று கூறி அவர் மட்டும் விருந்தாளியை அழைத்து சென்றார். நான் சந்தோஷமாக வீட்டிற்கு சென்று வீட்டில் விட்டு வைத்திருந்த ஜெர்மன் மொழிபெயர்ப்பு வேலையை செய்தேன்.

அடுத்த நாள் அந்த பிரெஞ்சு நிபுணருக்கு வாந்தி, பேதி. நாள் பூரா அவரை நர்ஸிங்க் ஹோமில் வைக்க வேண்டியதாயிற்று. அங்கு நான் அவருக்கும் மருத்துவருக்குமிடையே துபாஷி வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. இந்த அழகில் விருந்தாளி நர்ஸாக பணி புரிந்த கேரள அம்மணியைப் பார்த்து அசடு வேறு வழிய அதையும் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. 65 வயதானாலும் அந்த பிரெஞ்சு பெரிசு அந்த உடல் நிலையிலும் லொள்ளு செய்தது. நானும் அம்மணியைப் பார்த்து வழிந்தேன் என்பது இங்கு கூறப்படும் விஷயத்திற்கு சம்பந்தமில்லை. தலைமை அதிகாரிக்கு இதில் சிரிக்க ஒரு விஷயமுமில்லை. என்னை முந்தைய நாள் அழைத்து சென்றிருந்தால் பிரெஞ்சுக்காரர் என்ன சாப்பிடலாம், முக்கியமாக என்ன சாப்பிடக்கூடாது என்பதையெல்லா கவனித்து இருந்திருப்பேன் என்பதையும் அப்போதுதான் தலைமை அதிகாரி உணர்ந்தார்.

ஆக, இஞ்சி லாபம் மஞ்சளிலே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

ENNAR said...

//வயதானாலும் அந்த பிரெஞ்சு பெரிசு அந்த உடல் நிலையிலும் லொள்ளு செய்தது. நானும் அம்மணியைப் பார்த்து வழிந்தேன் என்பது இங்கு கூறப்படும் விஷயத்திற்கு சம்பந்தமில்லை//
சார் மாமி இருக்காங்களா கூப்பிடுங்க வத்திவைக்கிறேன்.
அப்போது உங்களுக்க என்ன வயது

dondu(#11168674346665545885) said...

அப்போது நான் இளைஞன். 47 வயதுதான் ஆகியிருந்தது.

பை தி வே உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

புத்தாண்டு வாழ்த்துகள் டோண்டு :-)
Y2K பற்றிய உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன்.. அருமை !!

*****

போன ஆண்டினை போல் இந்த ஆண்டிலும் நல்ல பதிவுகளைக் கொடுத்து கலக்குங்கள் !!

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி சோம்பேறி பையன் அவர்களே. உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். பம்பாய் எப்படியிருக்கிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

இதைத்தான் கடுகு போறதுகணக்குப் பார்த்தா, அங்காலே பூசணிக்கா போயிருமுன்னு சொல்வாங்க.

புத்தாண்டுலே வழக்கம்போல கலக்குங்க.

வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

வணக்கம் துளசி அவர்களே. நீங்கள் கூறுவத்கு உண்மைதான். உதாரணத்துக்கு மேன்யுவல் தட்டச்சு கருவிகள் காலத்தில் நான் எப்போதுமே அதைச் செய்ய முயன்றது க்டையாது. இன்ஸ்டாக் நிறுவனத்தில் ஒரு பக்கம் மொழிபெயர்ப்புக்கு 1981-ஆம் வருடம் 20 ரூபாய் கிடைத்தது. ஒரு பக்கம் தட்டச்சு செய்ய நான் ஒன்றரை ரூபாய் கொடுக்க வேண்டியது. தட்டுத் தடுமாறி ஒவ்வொரு எழுத்தாகத் தேடி நான் ஒரு பக்கத்தை அடிக்க எனக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும். அந்த நேரத்தில் இரண்டு பக்கங்கள் மொழிபெயர்ப்பை என்னால் தர முடியும். எது எனக்கு லாபம்? ஆகவே ஜாப் டைப்பிங்தான் ஒரே வழி.

ஆனால் இப்போது? நானே எல்லாவற்றையும் தட்டச்சு செய்கிறேன். ஏனெனில் இதில் நேரம் மிச்சமாகிறது. நேரம் பணம் அல்லவா? திருத்தம் செய்து கொள்வது மிகச் சுலபம் என்பதால் பிரச்சினையே இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

மிகவும் அனுபவ பூர்வமான ஸ்வபாவமான எழுத்து.

தங்களின் வாழ்க்கை நியாயங்களை அலசும் போக்கு ரொம்பவும் சிலாக்யம்.

வாழ்த்துக்கள். மேலும் எதிர்பார்க்கிறேன்.

(இன்னொரு விஷயம். தங்கள் மணி ரேட் ரொம்பவும் கீழே தெரியறது. எப்போ நடந்தது இது?)

நன்றி

ஜயராமன்

dondu(#11168674346665545885) said...

(இன்னொரு விஷயம். தங்கள் மணி ரேட் ரொம்பவும் கீழே தெரியறது. எப்போ நடந்தது இது?)

இன்ஸ்டாக்கைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? 1981.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நண்பன் said...

சாப்பிடறதுக்கு பணம் கொடுக்கறதுக்குப் பதிலா,

காசு கேட்டீங்களா?

ரொம்ப கொடுத்து வச்ச ஆள் சார்நீங்க!!!

dondu(#11168674346665545885) said...

நண்பன் அவர்களே, நல்ல கேள்வி. இம்மாதிரி வாடிக்கையாளர் இடத்துக்கு சென்று வேலை செய்யும்போது ஒரு மணிக்கு இவ்வளவு என்று ரேட் பேசிக் கொள்ள வேண்டும். போய் வர டாக்ஸி கட்டணம் கொடுக்க வேண்டும். வேலை நேரத்தில் காப்பி, டீ, டிபன் மற்றும் உணவை சமயத்துக்கேற்ப தர வேண்டும்.

நான் இப்பதிவில் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு என்பது வேலை நேரத்தில் வருவது. அதற்கு வாடிக்கையாளர்தான் பணம் தர வேண்டும். மேலும் வெறுமனே சாப்பிடச் செல்லவில்லை. ஒரு நல்ல வியாபாரி அந்த நேரத்திலும் தொழில் சம்பந்தமாக பேசி தனக்கு சாதகமான முடிவுகளை எடுக்கத்தான் முயலுவார். அதற்குத்தான் என்னையும் கூப்பிடுவார்.

இந்த நிகழ்ச்சியை பற்றி நான் ஆங்கிலத்தில் எழுதிய பதிவைப் பார்க்க: http://raghtransint.blogspot.com/2005/09/life-before-internet.html

See also:
http://www.proz.com/topic/40693

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது