1/05/2006

நேர்காணல் அனுபவம்

வேலைக்காக நான் இது வரை சென்ற நேர்காணல் தருணங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இஞ்சினியர்களுக்கு எழுபதுகளில் வேலை தேடுவது ஒரு பிரச்சினையாகவே இருந்தது. ஏதோ கடவுள் அருளால் C.P.W.D. வேலை கிடைத்ததால் பிழைத்தேன். பிறகு ஐ.டி.பி.எல்.-ல் வேலை கிடைத்தது என் பிரெஞ்சு மொழித் திறமைக்காகவே. இந்த இரண்டு நேர்காணல்களை தவிர மூன்று நான்கு முறை இண்டர்வியூக்களுக்கு சென்றிருக்கிறேன். அவற்றில் இரண்டு முறை வேலை கிடைத்தது ஆனால் சேரவில்லை.

இப்போது? நான் சொந்த முறையில் மொழிபெயர்ப்பு வேலைகள் ஏற்று கொள்வதால் அம்மாதிரி தருணங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் கடவுள் என்ணம் வேறாக இருந்தது. தற்சமயம் மூன்று இண்டர்வியூக்களில் பங்கு கொண்டேன். ஆனால் வேலை தேடுபவனாக அல்ல, வேலை தேடி வருபவர்களை நேர்காண வேண்டியிருந்தது. சென்னையில் ஒரு நிறுவனத்தினரின் கால் செண்டரில் பிரெஞ்சு பேசுபவர்களை நியமிக்க வேண்டியிருந்தது. அவர்கள் இதற்காக என் ஒத்துழைப்பை கேட்டனர்.

முதல் இரண்டு முறை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செல்ல வேண்டியது. அங்கிருந்து கொண்டு வேலைக்காக விண்ணப்பித்தவர்களை தொலைபேசியில் எஸ்.டி.டி. மூலம் தொடர்பு கொண்டு பிரெஞ்சில் அவர்களை இண்டர்வியூ செய்ய வேண்டியிருந்தது. இந்த முறைதான் இப்போதெல்லாம் பரவலாக உபயோகிக்கப்படுகிறது என அறிந்தேன். ஆனால் என்னைப் பொருத்தவரை அது புதிய முறையே. எனக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. இல்லாவிட்டால் நேர்காணல்களுக்கு வருபவர்க்கெல்லாம் பயணச் செலவு எல்லாம் கொடுத்து, எல்லோரையும் ஒரு அறையில் உட்கார்த்தி, ஒவ்வொருவராக கூப்பிட்டு,.... இது எழுதும்போதே அலுப்பாக எனக்கே உள்ளபோது சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்னும் கஷ்டமாக அல்லவா இருக்கும்?

இன்றும் அதே நிறுவனத்துக்கு சென்றிருந்தேன். இம்முறை எல்லோரும் சென்னையை சேர்ந்தவர்கள். ஆகவே எல்லோரும் நேரில் வந்திருந்தனர். மொத்தம் 6 பேர். நான் செலக்ட் செய்தவருக்கு உடனே வேலை கொடுக்கப்பட்டது. வந்தவர்கள் எல்லோரும் நன்றாக தயார் செய்து கொண்டு வந்திருந்தனர். நேர்காணல் மேஜைக்கு மறுபக்கத்தில் மூன்று முறை வேலை செய்தவன் என்ற முறையில் இது சம்பந்தமாக என் சில எண்ணங்களை இப்போது கூறுவது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

முதலில் விண்ணப்பதாரர்களுக்கு சில வார்த்தைகள்:

1. எல்லா சான்றிதழ்களும் ஒரிஜினலாக, அவற்றின் பல நகல்கள், பயோடேட்டா சில நகல்கள், தேவையான எழுதும் காகிதங்கள் எல்லாம் கிரமப்படி கையில் உள்ள ஃபோல்டரில் இருக்க வேண்டும். நன்றாக எழுதக்கூடிய பேனா ரொம்ப முக்கியம். (முக்கியமாக நான் இண்டர்வியூ செய்தவர்களை முதலில் அவர்கள் பயோடேட்டாவை கேட்டு என்னிடம் வைத்து கொண்டேன். அதன் பின்னாலேயே அவர்கள் பிரெஞ்சு பேசும் முறையை ஆராய்ந்து என் எண்ணங்களை உடனுக்குடன் குறித்து வைத்தேன். பிறகு கம்பெனி என்னிடம் கொடுத்த மதிப்பிடும் தாளை பூர்த்தி செய்து நான் குறிப்புகள் நிரப்பியிருந்ததையும் கம்பெனிக்காரர்களிடம் கொடுத்தேன். எல்லா விண்ணப்பதாரர்களும் நான் கேட்டதை பூர்த்தி செய்தனர் என்பதையும் இங்கு கூறி விடுகிறேன்..)
2. மனதில் நம்பிக்கையுடன் நேர்காணுபவரை அணுக வேண்டும். அவரும் உங்களைப் போன்ற மனிதர்தான். அவரைக் கண்டு டென்ஷன் ஆக வேண்டாம்.
3. கேட்ட கேள்வி என்ன என்பதை கவனமாகக் கேட்டு, அதன் பொருளை உள்வாங்கி, பிறகு நிதானமாக நிறுத்தி விடை அளித்தல் ஒரு நல்ல எண்ணத்தை உங்கள் மேல் ஏற்படுத்தும்.
4. கண்ணியமான உடை அணிய வேண்டும். ஜிங்குச்சா ஜிங்குச்சா என்றெல்லாம் உடை அணிவது நல்லதல்ல.

இப்போது சில வார்த்தைகள் நேர்காண்பவர்களுக்கு:

1. விண்ணப்பதாரரை கூலாக இருக்க செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
2. முதலில் சுலபமான கேள்விகளைக் கேட்டு அதற்கு அவர்கள் விடை அளிக்க அவர்கள் டென்ஷனும் குறையும். அப்போதுதான் முக்கியமான கேள்விகள் வரும்போது அவர்களால் சரியான பதிலை பதறாமல் அளிக்க இயலும். நீங்களும் சுலபமாக ஒரு நல்ல விண்ணப்பதாரரை தேர்ந்தெடுக்கலாம்.
3. என்ன வேலைக்காக நேர்க்காணுகிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம். இது என்னைப் போன்று நிறுவனத்துடன் சம்பந்தப்படாத வெளி ஆட்களுக்கு மிகவும் அவசியம்.
4. நீங்களும் ஒரு காலத்தில் வேலைக்காக இண்டர்வியூக்களில் பங்கு கொண்டீர்கள் என்பதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் பட்ட மனக்கஷ்டம் இப்போது வேலைக்கு வரும் இளைஞர்கள் படாமல் பார்த்து கொண்டால் நீங்களும் நல்ல முறையில் உங்களுக்கிட்ட வேலையை நிறைவேற்றி ஒரு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரை கம்பெனிக்கு சிபாரிசு செய்தீர்கள் என்ற திருப்தியுடன் மேலே செல்ல முடியும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

டி ராஜ்/ DRaj said...

எல்லோரும் candidates-களுக்கு மட்டும் தான் அறிவுரை சொல்லுவார்கள். நீங்கள் வித்தியாசமாக interviewer-க்கும் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. :)
அன்புடன்
ராஜ்

kunchamanee said...

DONDU

don't they have to be parpan in order to get a job?

Because you said you are racist


Thank you Sir

டுபாக்கூர் said...

பையனும் இண்டர்வியூ செய்பவரும் பார்ப்பனராக இருந்து விட்டால் இரட்டிப்பு சந்தோஷம். வேலை கண்டிப்பாக கிடைக்கும்.

dondu(#11168674346665545885) said...

நான் சமீபத்தில் 1963 (பொறியியல் கல்லூரி), 1970 (C.P.W.D. & Bokaro Steel Limited) மற்றும் 1981 (IDPL) ஆகிய ஆண்டுகளில் விண்ணப்பதாரராக சென்றது இன்னும் நன்றாக நினைவிலிருக்கிறது. எல்லா நேர்க்காணர்களுமே என்னிடம் மிகக் கருணையுடன் நடந்து கொண்டனர். முத்தையன் அவர்களிடம் 1963-ல் சற்று துடுக்காகக் பதிலளித்ததை கூட என்னுடைய இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/04/blog-post.html
இருப்பினும் அவர் என்னையும் தேர்ந்தெடுத்தது அவரது பெருந்தன்மையையே குறிப்பிடுகிறது. அதே போல மத்தியப் பொதுப்பணித் துறைக்கு நடந்த நேர்க்காணலில் எங்கள் Superintending Engineer நடராஜன் அவர்கள் என்னை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள வாய்ப்பளித்து பிறகு கேள்விகள் கேட்டார். பிறகு ஒரு நாள் அவரிடம் இது பற்றி நன்றியுடன் குறிப்பிட்ட போது அவர் புன்னகையுடன் கூறினார்: "வேலை கிடைப்பது விண்ணப்பதாரர்ருக்கு எவ்வளவு முக்கியமோ, அதை விட அதிக முக்கியம் நேர்காணல் செய்பவர் நன்கு வேலை செய்யக்கூடியவர்களைத் தேர்ந்தெடுப்பது"

இதை நான் மறக்கவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"don't they have to be parpan in order to get a job?"
இல்லை.
"Because you said you are racist"
நான் அவ்வாறு சொன்னேன் என்பதை என் வார்த்தைகளிலிருந்து நிரூபியுங்கள்.

"பையனும் இண்டர்வியூ செய்பவரும் பார்ப்பனராக இருந்து விட்டால் இரட்டிப்பு சந்தோஷம். வேலை கண்டிப்பாக கிடைக்கும்."
அப்படியா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

நல்ல பாயிண்ட்டுகள் டோண்டு.

dondu(#11168674346665545885) said...

நன்றி துளசி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டிபிஆர்.ஜோசப் said...

டோண்டு சார்,

உங்கள் மாதிரி ஆளுங்க இண்டர்வியூவராயிருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு யோசிக்கறேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜோசஃப் அவர்களே. நான் நினைக்கிறேன், திடீரென்று என் மேல் இந்த பொறுப்பை சுமத்தியதால் எனக்கு அதற்கான பந்தா எல்லாம் செய்து கொள்ள நேரம் இல்லை என்று, ஹி ஹி ஹி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Karthikeyan said...

பயனுள்ள பதிவுகள்...

எந்தக்காலத்திலும் தேர்வு பயம் இருக்கத்தானே செய்கிறது?

அன்புடன்
கார்த்திகேயன்

Karthikeyan said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

உண்மைதான் தேர்வு பயம் இருக்கத்தான் செய்கிறது. அடிக்கடி கனவு வேறு வந்து பயமுறுத்துகிறது. இது பற்றி நான் போட்டப் பதிவு இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_111165195524744737.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

எக்ஸ் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://selfconf.blogspot.com/2006/04/blog-post_114586978153482757.html

சில மாதங்களுக்கு முன்னால் நான் நேர்காணல் ஒன்றுக்கு சென்றிருந்தேன், நேர்காணுபவராக. ஒரு கால் செண்டருக்கு பிரெஞ்சு பேசுபவர்களை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அப்போது நான் விண்ணப்பதாரர்களிடம் என்ன எதிர்பார்த்தேன் என்பதை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_05.html

அதிலிருந்து ஒரு பகுதி:

"விண்ணப்பதாரர்களுக்கு சில வார்த்தைகள்:

1. எல்லா சான்றிதழ்களும் ஒரிஜினலாக, அவற்றின் பல நகல்கள், பயோடேட்டா சில நகல்கள், தேவையான எழுதும் காகிதங்கள் எல்லாம் கிரமப்படி கையில் உள்ள ஃபோல்டரில் இருக்க வேண்டும். நன்றாக எழுதக்கூடிய பேனா ரொம்ப முக்கியம். (முக்கியமாக நான் இண்டர்வியூ செய்தவர்களை முதலில் அவர்கள் பயோடேட்டாவை கேட்டு என்னிடம் வைத்து கொண்டேன். அதன் பின்னாலேயே அவர்கள் பிரெஞ்சு பேசும் முறையை ஆராய்ந்து என் எண்ணங்களை உடனுக்குடன் குறித்து வைத்தேன். பிறகு கம்பெனி என்னிடம் கொடுத்த மதிப்பிடும் தாளை பூர்த்தி செய்து நான் குறிப்புகள் நிரப்பியிருந்ததையும் கம்பெனிக்காரர்களிடம் கொடுத்தேன். எல்லா விண்ணப்பதாரர்களும் நான் கேட்டதை பூர்த்தி செய்தனர் என்பதையும் இங்கு கூறி விடுகிறேன்..)
2. மனதில் நம்பிக்கையுடன் நேர்காணுபவரை அணுக வேண்டும். அவரும் உங்களைப் போன்ற மனிதர்தான். அவரைக் கண்டு டென்ஷன் ஆக வேண்டாம்.
3. கேட்ட கேள்வி என்ன என்பதை கவனமாகக் கேட்டு, அதன் பொருளை உள்வாங்கி, பிறகு நிதானமாக நிறுத்தி விடை அளித்தல் ஒரு நல்ல எண்ணத்தை உங்கள் மேல் ஏற்படுத்தும்.
4. கண்ணியமான உடை அணிய வேண்டும். ஜிங்குச்சா ஜிங்குச்சா என்றெல்லாம் உடை அணிவது நல்லதல்ல."

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டு ராகவனே இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை என்னுடைய மேலே சுட்டிய பதிவிலேயே பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_05.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது