எனது முந்தைய பதிவு பாகிஸ்தான் பற்றிய வேறு சில எண்ணங்களுக்கு வழிவகுத்தது.
உதாரணத்துக்கு நான் எழுதிய இந்த நீதிக்கதை பாகிஸ்தானில் முடிவடைகிறது. சரி, சரி அந்தக் கதை சற்று டூ மச் என்றுதான் இப்போது எனக்கும் தோன்றுகிறது. முரளி மனோஹரும் அதைத்தான் பலமுறை சொன்னான். :))))))))))
என் தந்தையின் சக நிருபர் ராமச்சந்திரன் அவர்கள் சில காலம் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணி புரிந்துள்ளார். பிறகு ஹிந்துவில் கல்கத்தா நிருபராகவும் இருந்துள்ளார். அவர் ஒரு முறை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் ஃபீல்ட் மார்ஷல் அயூப்கானை பேட்டி எடுக்க சமீபத்தில் அறுபதுகளில் சென்றுள்ளார். கூடவே வேறு பத்திரிகை நிருபர்கள் கூட. திடீரென அவர் ராமசந்திரன் அவர்களைப் பார்த்து "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே" எனக் கேட்க அவர் தான் அயூப் கான் கீழே பணி புரிந்திருப்பதை கூறியுள்ளார். அவ்வளவுதான் உடனே பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் அயூப்கான். பிறகு ராமச்சந்திரன் அவர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு தந்து, அவ்வாறு வந்தவரை தனது விருந்தோம்பலில் திக்குமுக்காட வைத்து விட்டார். அரசு விருந்தினராக அவர் அங்கு தங்கியிருந்த காலத்தில் அவர் எங்கே வேண்டுமானாலும் பாகிஸ்தானில் பயணிக்கலாம் என்று கூறி சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் அவருக்கு ஒத்துழைப்பு தர ஆணை பிறப்பியுள்ளார்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் நான் தில்லியில் இருந்தபோது காயிதே ஆஜம் முகம்மது அலி ஜின்னா அவர்களைப் பற்றிய படம் வெளிவந்தது. காந்தி படத்தை பார்த்த எனக்கு அதையும் பார்க்கும் ஆவல் வந்தது. ஆகவே பாகிஸ்தான் ஹைகமிஷனின் கலாச்சார அதிகாரிக்கு ஃபோன் போட்டு அப்படம் ஹைகமிஷனால் தில்லியில் திரையிடப்படுமா என ஆவலுடன் கேட்டேன். மிகவும் கனிவான முறையிலேயே பதில் வந்தது. அவ்வாறு உத்தேசம் அப்போதைக்கு இல்லல என்றும், அப்படியே வந்தால் எனக்கு கண்டிப்பாக அழைப்பு அனுப்புவதாகவும் அவர் கூறினார். நான் சென்னையைச் சேர்ந்தவன் என்றதும் வணக்கம் என்று தமிழில் வேறு கூறினார்.
கம்யூனிஸ்ட் எம்.பி. ராமமூர்த்தி அவர்களைப் பற்றி இன்னொரு செய்தி குமுதத்தில் எழுபதுகளில் படித்திருக்கிறேன்.
வருடம் 1972. சிம்லா ஒப்பந்தத்துக்காக புட்டோ அவர்கள் தில்லியில் இருந்தார். அவருடன் கூட அவர் மந்திரிசபை சகாக்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென்று பி. ராமமூர்த்தி அவர்களுக்கு பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து தொலைபேசி வந்தது. அதாவது ஒரு பாகிஸ்தான் மந்திரி, அவரைப் பார்க்க விரும்புவதாக. திகைப்படைந்தாலும் இவரும் போயிருக்கிறார். மந்திரியிடம் இவர் மரியாதையாக அழைத்து செல்லப்பட்டார். ராமமூர்த்தி அவர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசத் துவங்க, அவரோ தூய தமிழில் "என்ன ராமமூர்த்தி சார், தமிழில் பேச ஆசைப்பட்டு உங்களைக் கூப்பிட்டால் நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்களே" என்று கேட்டாரே பார்க்கலாம்!
பிறகுதான் தெரிந்தது, அவர் 1947 - க்கு முன் திருவல்லிக்கேணியில் அக்பர் சாஹேப் தெருவில் இருந்திருக்கிறார். ராமமூர்த்தி அவர்களும் திருவல்லிக்கேணியுடன் சம்பந்தம் உடையவர். திருவல்லிக்கேணி பாசம் விட்டுப் போகுமா? சம்பந்தப்பட்ட மந்திரியின் பெயர் ஆகா ஷஹி அல்லது ஆகா இலாஹி.
நான் ஏற்கனவே கூறியபடி பாக் டி.வி. நாடகங்கள் அருமையாகவே இருக்கும். உருது மொழியில் அவை இருப்பது மேலதிக போனஸ். தென்னிந்தியர்களுக்கு அதிகப் பாந்தமாகவும் இருக்கும், ஏனெனில் முறைப்பெண், முறை மாப்பிள்ளை கதைகள் அங்கும் அதிகம். வட இந்தியாவில் உறவு முறை திருமமணங்கள் இந்து லா பிரகாரம் தடை செய்யப்பட்டவை. அஞ்சும் மூணும் எட்டு அத்தை மகளை கட்டு என்றெல்லாம் சொன்னால் முட்டியைப் பேர்த்து விடுவார்கள். கணவனை மாமா என்று அழைத்தால் அவர்களுக்கு இதயமே நின்று விடும்.
Sardar Farooq Ahmad Khan Leghari (Urdu: سردار فاروق احمد خان لغاری) அவர்கள் பாகிஸ்தானின் அதிபராக தொண்ணூறுகளில் இருந்துள்ளார். அவர் ஒரு முறை அபத்தமாக என் கனவில் வந்தார். அவரிடம் சுத்த உருதுவில் கதைத்தேன். பாக் டி.வி. சீரியல்களை பற்றி பேச நான் ஆரம்பித்ததுமே அவை போர் என்று கலங்கினார் அவர். நான் விடவில்லையே. டைட்டில்ஸ்கள் போடும்போது உருது லிபியில் போடுவதுடன்கூடவே தேவ நாகரி லிபியிலும் போட்டால் என்னைப் போன்ற உருது தெரிந்த, ஆனல் உருதுவை தேவநாகரியில் மட்டும் படிக்க முடிந்த இந்தியர்களும் பயன் பெறுவார்களே என்று மேலும் ஆர்க்யூ செய்தேன். ஹிந்தி திரப்படங்களில் டைட்டில்களை ஆங்கிலம், தேவநாகரி மற்றும் உருதுவில் போடுவதையும் சுட்டிக்காட்டினேன். மனிதர் சரியாகப் பிடி கொடுத்து பேசவில்லை. ரொம்பவும் போர் அடித்து விட்டேன் போலிருக்கிறது. கனவு வந்த சில நாட்களிலேயே அவர் அதிபர் பதவியை விட்டுவிட்டார். :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நமக்கான மனலைச்சிகரங்கள்
-
மலைச்சிகரங்களில் நின்றிருக்கையில் மானுடர் உணர்வது என்ன? மலைச்சிகரங்களை நாடி
ஏன் சென்றுகொண்டிருக்கிறார்கள்? நமக்கான சிகரங்கள் என்ன? ஆல்ப்ஸ்
மலையுச்சியில் நி...
2 hours ago

