4/16/2009

டோண்டு பதில்கள் 16.04.2009

சங்கர பாண்டிய ராசா:
1. புலிகளுக்கு பின் இலங்கை பிரச்சனை சரியாகி விடுமா?
பதில்: ஆட்டமேட்டிக்காகவெல்லாம் சரியாகி விடாது. அதற்கெல்லாம் நிறையவே பாடுபட வேண்டியிருக்கும். ஆனால் அதே சமயம் புலிகள் ஆட்டம் போடும் நிலை அப்படியே இருந்தால் நிலைமை சரியாக ஆகவே ஆகாது என்று மட்டும் கூறவியலும்.

2. இலங்கை பிரச்சனை முக்கியமான தேர்தல் பிரச்சனையா?
பதில்: இப்போது வரும் லோக்சபா தேர்தலில் அது முக்கிய பிரச்சினை இல்லைதான். ஆனால் வெளிப்படையாக அதை கூறமாட்டார்கள்.

3.பிரபாகரனின் உற்ற சகாக்கள் பல பேரை இலங்கை ராணுவம் அழித்து விட்டதே, இனி புலிகள் தலை எடுப்பது சாத்தியமா?
பதில்: இம்மாதிரி பல தோல்விகளை புலிகள் சந்தித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் மீண்டும் தலையெடுத்துள்ளனர். இம்முறை எப்படி எனத் தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

4. அமெரிக்காவில் சூப்பராக செட்டில் ஆனவர்கள் ஆன NRIகள் இந்தியாவை திட்டுவதே வேலையாக வைத்து இருக்கிறார்களே ( உதா- xxxx) இவர்கள் ஏதாவது மன நோயால் பாதிக்கபட்டு உள்ளனரா?
பதில்: பெயரெல்லாம் வேண்டாமே. நீங்கள் குறிப்பிடுபவர் யார் என்றுகூட எனக்கு தெரியாது. ஆகவே பொதுவாகவே பதிலளிக்கிறேன். இப்போதிருக்கும் நிலையில் யாருமே சூப்பராக செட்டில் ஆனவர்கள் எனக்கூறவியலாது. அப்புறம் என்ன இந்தியாவை திட்டுவது?

5. கருணாநிதிக்கு பார்பனர் ஓட்டு இந்த தேர்தலிலாவது விழுமா?
பதில்: தெரியாது, ஆனால் நான் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன்.

அனானி அனுப்பிய அந்துமணி கேள்விகள்:
1. முன்பெல்லாம் பயணம், யாத்திரை போகிறவர்கள், தாகம் தீர்க்க கையோடு ஒரு கூஜாவில் தண்ணீர் கொண்டு போவர்... இப்போது யாரும் கூஜா பயன்படுத்துவது இல்லையே, ஏன்?
பதில்: காலத்தின் கோலம். முன்பெல்லாம் சாதாரணமாக வெளியில் சாப்பிட மாட்டார்கள். பிரயாணம் முழுதுக்கும் கட்டுச்சாதம் எடுத்து செல்வர். தண்ணீரும் அப்படித்தான். பிரயாணங்களும் அவ்வளவு சுலபத்தில் மேற்கொள்ள மாட்டார்கள். இப்போது எல்லாமே மாறிவிட்டன. பயணச்சீட்டுகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் பெற்று கொள்ளலாம். நல்ல தண்ணீர், சாப்பாடு எல்லாம் வழியிலேயே வாங்கி கொள்ளலாம். யூஸ் அண்ட் த்ரோ பொருட்கள் வேறு வந்து விட்டன. பிறகு ஏன் இந்த அலம்பல்கள் எல்லாம்?

2. முன்பெல்லாம் எழுத்தாளர், கவிஞர் என்றால், அவர்கள் ஜிப்பாதான் அணிவர்; இப்போது ஜிப்பா அணிவதில்லையே, ஏன்?
பதில்: இப்போதெல்லாம் ஜீன்ஸ் அணிகின்றனர். தோளில் அழுக்காக ஒரு ஜோல்னாப்பை இருக்கிறது. ஆனால் சில கவிஞர்கள் ட்ரிம்மாக விளம்பர மாடல்கள் போல உள்ளனர், பதிவர் வளர்மதி போல.

3. முன்பெல்லாம், "பாத்திரத்திற்கு பெயர் வெட்டறது...' என்று கூவியபடி ஒருவர் தெருவுக்குத் தெரு வருவார்; இப்போது அப்படி யாரையும் காணோமே, ஏன்?
பதில்: அவர் மட்டும்தானா, இன்னும் பல தெருவியாபாரிகளை காணவில்லைதான். சமீபத்தில் 1950-களில் “ஊஊ” என கத்திய வண்ணம் ஒருவர் வருவார். அது “பெருகூ” என்ற கன்னடச் சொல்லாம். அப்படி என்றால் தயிர் எனப் பொருளாம். சமீபத்தில் 1957-ல் விகடனில் டாக்டர் கீதா என்னும் தலைப்பில் சித்திரக்கதை வந்தது. அதில் வரும் கிராமத்தார் அப்பளக்குடுமியார் சாட்டை என்பவர் திண்ணையில் படுத்துறங்க விடியர்காலையில் ஊஊ என கத்திக்கொண்டே தயிர்க்காரன் செல்ல, ஐயோ செத்தேன் என படுக்கையை சுருட்டிக் கொண்டு சட்டை திண்ணையிலிருந்து ரேழிக்கு வருவதைக் கண்டு அக்காலக்கட்டத்தில் வயிறு நோவ சிரித்திருக்கிறேன். இப்போது திண்ணை ஏது, ரேழி ஏது? எல்லாம் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அவையெல்லாம் இன்னும் பசுமையாக எனது நினைவில் உள்ளதால்தான் சமீபத்தில் 1957-ல் என்றெல்லாம் போட்டு திரிகிறேன் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

4. முன்பெல்லாம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளிக்கூட வாசலிலும் ஒரு கிழவி, அழுகியும், அழுகாத சின்னச் சின்ன மாம்பழங்களை வைத்து, ஈ ஓட்டிக் கொண்டே விற்றுக் கொண்டிருப்பாளே... அந்த மாதிரி கிழவிகளே இப்போது காணோமே, ஏன்?
பதில்: எனது குடும்ப நண்பரின் மனைவி ஆசிரியையாக நங்கநல்லூர் மாடர்ன் பள்ளியில் பணிபுரிகிறார். அவருக்கு போன் போட்டு கேட்டேன். இப்போதெல்லாம் இடைவேளைகளில் பள்ளி கேட்டுகளை பூட்டியே வைக்கிறார்களாம். வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவது டிஸ்கரேஜ் செய்யப்படுகிறது என அறிகிறேன். அதே சமயம் கார்ப்பரேஷன் மற்றும் அரசு பள்ளிகளில் என்னமோ அதே நிலைதான் என அம்மாதிரி ஒரு பள்ளியிலிருந்து போன ஆண்டுதான் ப்ளஸ் 2 தேர்வு பெற்று சென்ற ஒரு மாணவி கூறுகிறார். எது எப்படியானாலும் சுகாதாரக் குறைவான அக்கடைகள் இல்லாதிருப்பதே நலம்.

5. முன்பெல்லாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு பெரியவர்கள் வரும் போது, பட்டு சரிகை வைத்த அங்கவஸ்திரம் போட்டு வருவர்; இப்போது அப்படி யாரும் அணிந்து வருவதில்லையே, ஏன்?
வேட்டி திடீரென அவிழும் அபாயம் இருக்கிறதே, ஏனெனில் பழக்கம் விட்டுவிட்டதல்லவா? ஆகவே நான் நினைக்கிறேன், ப. சிதம்பரம் தவிர யாருமே வேட்டி அணிந்து வருவதில்லை என.

6. முன்பெல்லாம் சாயங்கால வேளையில் வீட்டு வெளிச் சுவரில் உள்ள மாடத்தில் விளக்கேற்றி வைப்பர்; இப்போது செய்வதில்லையே, ஏன்?
பதில்: அம்மாதிரி இப்போதெல்லாம் விளக்கு ஏற்றி வைத்தால் அவை அரைமணிக்குள் திருட்டு போய்விடும் அபாயம் உண்டு. பை தி வே முதற்கண் மாடங்கள் எங்கே?

7. முன்பெல்லாம் சினிமாவில் கதாநாயகனும், வில்லனும் சண்டை போட, முடிவில் ஜீப்பில் போலீஸ் வந்து திபுதிபுவென்று இறங்குவரே... இப்போது அப்படி வருவதில்லையே, ஏன்?
பதில்: பலபடங்களில் இம்மாதிரி காட்சிகளையே பார்த்து மக்கள் மனம் நொந்த நிலையில் கடைசியாக ஒரு டைரக்டர் அம்மாதிரி காட்சியை வைத்து பார்வையாளர்களால் நையப்புடைக்கப்பட்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன. அதிலிருந்து இக்காட்சிக்கு தடா என அறிவிக்கப்பட்டுள்ள ரேஞ்சுக்கு விஷயம் இருக்கிறது என்றும் அதே நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.

சேதுராமன்:
1. வாதி, பிரதிவாதி இருவருக்கும் வழக்குகளில் ஆஜராக முடியாதென்ற அடிப்படை கொள்கை கூடத் தெரியாத அஞ்சலியை எப்படி முதலில் நியமித்தார்கள்?
பதில்: ரொம்பவும் மோசமாகத்தான் இருக்கிறது வக்கீல்களின் சட்ட அறிவு. இப்போது வரும் சில கதைகளில் கோர்ட்டு சீன்கள் வரும். அதிலுள்ளது போல பிராசிக்யூட்டரோ டிஃபன்ஸ் தரப்பு வக்கீலோ நடந்து கொண்டால் சன்னது பிடுங்கப்படுவது உறுதி என நான் படித்தது நினைவுக்கு வருகிறது.

2. செருப்பு எறியும் பண்பு இந்தியக் கலாசாரத்திலும் அதுவும் தேசீய காங்கிரஸ் சூரத் கூட்டத்திலும், இருந்திருக்கிறது என்பதைப் படித்தீர்களா? (எஸ்.முத்தையா ஹிந்துவில் திங்கள் தோறும் எழுதும் மதராஸ் மிஸ்செல்லனி 13-4-09)
பதில்: சூரத் கூட்டத்தில்தான் காங்கிரஸ் இரண்டாக பிளந்தது என கேள்விப்பட்டேன். இதற்கு அக்காலம் என்ன, இக்காலம் என்ன. மனிதர்கள் எப்போதுமே ஒரே மாதிரித்தான் இருந்து வந்துள்ளனர். பை தி வே நீங்கள் சொல்லித்தான் முத்தையாவின் அக்கட்டுரையை தேடி படித்தேன். உங்களுக்கு என் நன்றி.

3. அத்வானி, மன்மோஹன் பேச்சுக்கள் இடையே ராஹுல் புகுந்து தனது ரத்தினக் கருத்துக்களைத் தெரிவிப்பது சரியா? இதில் இவர் வருங்கால பிரதமர் என்று வேறு கூறிக்கொள்கிறார்கள்?
பதில்: தேர்தல் பரபரப்பில் அப்படித்தான் பேச்சுகள் இருக்கும் கண்டுக்கப்படாது.

வெங்கி என்னும் பாபா:
1) தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகா- வுக்கு நல்ல ஓட்டு வங்கி தற்பொழுது உள்ளது. இந்திய அளவிலான கூட்டணியிலும் காங்கிரசை விட பாஜகா முந்துகிறது. ஒருவேளை பாஜகா ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி, இந்தியா இதுவரை கண்ட ஆட்சிகளை விட ஒரு சிறந்த ஆட்சியை அளிக்கும் என எதிர்பாக்கலாமா?
பதில்: ஜனநாயகம் சீராக செயல்பட ஆட்சி மாற்றங்கள் அவசியம். அப்படி பாஜக ஆட்சி அமைத்தால் முக்கியமாக பார்க்க வேண்டியது அதற்கு போதுமான பெரும்பான்மை இருக்கிறதா என்பதுதான். அது இல்லை என்றால் கூட்டணி கட்சிகளின் இழுப்புக்கு ஏற்றபடி ஆட வேண்டியிருக்கும். மக்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் தொங்கும் பாராளுமன்றம் வராது பார்த்து கொள்ள வேண்டும். நமது கையில்தான் இப்போது எல்லாமே இருக்கிறது.

2) அனைத்து காங்கிரஸ்காரர்களும் இப்பொழுதும் எப்பொழுதும் (ஒரு 50 வருடங்களாக) ஒரு குடும்பத்தின் தலைமையையே சாடி இருந்திருகிறார்கள். இந்தியா சுதந்திர போராட்டத்தில் தொண்டாற்றி பல நல்ல தலைவர்களை கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இந்த நிலைமை?
பதில்: ஆனாலும் காங்கிரஸ் ஒரே ஒரு குடும்பத்தின் மேல் இவ்வளவு நம்பிக்கை வைப்பது அதற்கு நல்லதல்ல. போகிறபோக்கில் ஒசாமா பின் லேடனின் மகளை ராகுல் மணக்கிறார் என வைத்து கொண்டால், அப்பெண்ணும் பிற்காலத்தில் காங்கிரசின் பிரதம மந்திரி வேட்பாளராகிவிடலாம் போலிருக்கிறதே. இது என்னடா இந்தியாவுக்கு வந்த சோதனை?

3) என் நண்பன் ஈரோடு தொகுதியை சேர்ந்தவன். அத்தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. பாஜக போட்டியிட்டாலும் அது டெபாசிட்கூட பெறாது என்று என் நண்பன் உறுதியாக கூறுகிறான். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று அவன் குழப்பத்தில் உள்ளான். இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
பதில்: நான் வசிக்கும் தொகுதியில் பாஜக நின்றால் அதற்குத்தான் எனது ஓட்டு. நமது ஓட்டை ஜெயிக்கும் கட்சிக்குத்தான் போட வேண்டும் என்று நினைத்தால் அது முட்டள்தானம். நாம் மந்தையில் இருக்கும் ஆடுகள் இல்லையே. நம் கடமையை நாம் செய்வோம், மீதி ஆண்டவன் விட்ட வழி.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Arun Kumar said...

டோண்டு சார்
இந்த வார பதில்கள் அருமை :)

// இப்போதெல்லாம் விளக்கு ஏற்றி வைத்தால் அவை அரைமணிக்குள் திருட்டு போய்விடும் அபாயம் உண்டு. பை தி வே முதற்கண் மாடங்கள் எங்கே?//

சூப்பரான பதில் :)

வால்பையன் said...

//ஆட்டமேட்டிக்காகவெல்லாம் சரியாகி விடாது. அதற்கெல்லாம் நிறையவே பாடுபட வேண்டியிருக்கும். ஆனால் அதே சமயம் புலிகள் ஆட்டம் போடும் நிலை அப்படியே இருந்தால் நிலைமை சரியாக ஆகவே ஆகாது என்று மட்டும் கூறவியலும்.//

பாடுபடவேண்டும் என்றால் யார் பாடுபடவேண்டும்.
அப்படி பாடுபட ஆரம்பித்து தானே புலிகள் உருவாகினார்கள்!
அவர்கள் போட்டால் மட்டும் ஆட்டம்!
மற்றவர்கள் செய்தால் போராட்டமா?

வால்பையன் said...

//அமெரிக்காவில் சூப்பராக செட்டில் ஆனவர்கள் ஆன NRIகள் இந்தியாவை திட்டுவதே வேலையாக வைத்து இருக்கிறார்களே ( உதா- xxxx) இவர்கள் ஏதாவது மன நோயால் பாதிக்கபட்டு உள்ளனரா?//

”வாழ தகுதியான நாடுகள்”னு ஆங்கிலத்தில் அடித்து தேடி பாருங்கள்!
அமெரிக்கா முதலிடத்தில் வந்தால் அவர்கள் சொல்வது சரி!
இல்லையென்றால்
இவர்கள் வாழ தகுதியில்லாதவர்கள்!

எதையாவது குறை சொல்வது ஒரு வகையான மனவியாதி தான்!
இது எல்லோருக்கும் உண்டு!

வால்பையன் said...

//முன்பெல்லாம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளிக்கூட வாசலிலும் ஒரு கிழவி, அழுகியும், அழுகாத சின்னச் சின்ன மாம்பழங்களை வைத்து, ஈ ஓட்டிக் கொண்டே விற்றுக் கொண்டிருப்பாளே... அந்த மாதிரி கிழவிகளே இப்போது காணோமே, ஏன்?//

சென்னையில் இல்லாமல் இருக்கலாம்!
ஈரோட்டில் இருக்கிறார்கள்!

வால்பையன் said...

அமெரிக்காவின் உண்மை நிலவரம் என்னஒரு சிறப்பு பார்வை
மேலுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்!

ஞாபகம் வருதே... said...

//காலம்தான் பதில் சொல்ல வேண்டும்//
அப்புறம் எதுக்கு சார் டோண்டு கேள்வி பதிலில் இந்த கேள்வி.

dondu(#11168674346665545885) said...

@ஞாபகம் வருதே
வேறு என்னதான் செய்ய முடியும்? Your guess is as good as mine என்ற நிலையில்தான் சில பதில்கள் இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மெனக்கெட்டு said...

'மெனக்கெட்டு' சில கேள்விகள்.. (டோண்டு பதில்கள் பகுதிக்கு)

டோண்டு சார்!
1. 1971 ல் இருந்து மூன்றரைஆண்டுகள் பம்பாயில் அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில், 1981 – 2001 தில்லியில், தற்பொழுது சென்னையில். பல ஊர்கள் சென்றிருக்கிறீர்கள். எந்த ஊர் உங்களுக்குப் பிடித்தது? ஏன்?

2. வெளிநாடு(கள்) சென்றதுண்டா? அதைப் பற்றி ஏதாவது?

3. தென் திருப்பேரை எங்கிருக்கிறது? அதற்கு தங்களது தனி கவனம் வரக்காரணம்?

4. ‘இடிபோன்ற மௌனம்’ என்றால் என்ன?

5. ‘ஜாட்டான்’ என்றால் என்ன?

6. இது வரை எவ்வளவு சினிமா (தியேட்டரில்) பார்த்திருப்பீர்கள்?

7. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் செய்வீர்களா?

8. ஆல் இண்டியா ரேடியோ வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்புகள் செய்துள்ளீர்கள், ஜெயா டீவி நேர்காணலில் வந்துள்ளீர்கள், FM ரெயின்போ நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் எப்படி உணர்ந்தீர்கள்?

9. முரளி மனோகர் தற்பொழுது என்ன செய்கிறார்?

10. இந்த 63 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காரணம் என்ன?வலைப்பதிவுகள் :

1. தமிழில் 740 க்கு மேற்பட்ட பதிவுகள் போட்டிருக்கிறீர்கள், புதிதாக வருபவர்களுக்கு என்ன ஆலோசனைகள் தறுவீர்கள்?

2. சொந்த காசு கொடுத்து டொமைன் வாங்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்?

3. பதிவர் சந்திப்புக்கள் யாரால், எப்படி ஒருங்கிணைக்கப் படுகிறது?

4. திரட்டிகளில் இணைப்பது எப்படி?

5. தமிழில் எழுத என்ன எழுத்துரு, மென்பொருள் பயன் படுத்துகிறீர்கள் எது எளிதாக இருக்கும்?

6. RSS, feeds, twitter என்றெல்லாம் சொல்கிறார்களே அதைப் பற்றி?

7. தங்களது top 10 catagory ல் தங்களது favorite எது?

1 விவாத மேடை 221
2 டோண்டுவின் அனுபவங்கள் 93
3 பதிவர் வட்டம் 87
4 அரசியல் 69
5 டோண்டு பதில்கள் 62
6 மொழிபெயர்ப்பு 52
7 சோ 50
8 தன்னம்பிக்கை 45
9 மொக்கை 38
10 பொருளாதாரம் 37

8. Google Adsense என்கிறார்களே.. அப்படியெல்லாம் கூட வருமானம் வருமா?

9. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானே அச்சுக்கு செல்லுமாறு பிளாக்கரில் முன்அமைவு செய்வது எப்படி?
10. பதிவுகளுக்கு கவர்ச்சிகரமாக பெயர் வைப்பது எப்படி? (உ.தா. “பணவீக்கத்தின் கொட்டைகளை பிடித்த ஹேயக்”)


தேர்தல் :

1. தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்னமும் சினிமா கவர்ச்சி பயன்படுவது பற்றி?

2. தன் தலைவர் முதல்வராக நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தும் தொண்டர் பற்றி?

3. வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்படும் கோடிக் கணக்கான சொத்துக்கள் பற்றி?

4. அரசியல் வாதிகளின் சுவிஸ் வங்கி கணக்குகள் பற்றி?

5. அரசியல் வாதிகளின் மேல் செருப்பு வீச்சுக்கள் பற்றி?

6. தேர்தல் அறிக்கைகளில் இலவச அறிவிப்புகள் பற்றி?

7. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சிகள் பற்றி?

8. நக்ஸலைட்டுகள் தேர்தல் காலங்களில் மட்டும் உத்வேகம் பெறுவது பற்றி?

9. நவீன முறை தேர்தலிலும் கள்ள ஓட்டு புகார் வருவது பற்றி?

10. வாக்குச்சாவடி என்ற பெயர் ஏன் ? ‘சாவடி!’ தவிர வேறு நல்ல தமிழ்ச்சொல் ஏதாவது?

வால்பையன் said...

//சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் செய்வீர்களா?//

ஏன் இந்த கொலைவெறி
நாங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா

வால்பையன் said...

//ஆல் இண்டியா ரேடியோ வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்புகள் செய்துள்ளீர்கள், ஜெயா டீவி நேர்காணலில் வந்துள்ளீர்கள், FM ரெயின்போ நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் எப்படி உணர்ந்தீர்கள்?//

பாவம் மக்கள் என்று தான்

வால்பையன் said...

//இந்த 63 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காரணம் என்ன?//

தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங் போற சாக்கில் சைட் அடிப்பது தான்!

Anonymous said...

//இம்மாதிரி பல தோல்விகளை புலிகள் சந்தித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் மீண்டும் தலையெடுத்துள்ளனர். //

புலிகள் அழிந்து போகாமல் காப்பாற்றிவிட தானே தமிழ்நாட்டிலும் சில வெளிநாடுகளிலும் இவ்வளவு கூத்துக்கள் நடக்கின்றன. இலங்கை தமிழர்களை பற்றி இவர்களுக்கு சிறிதும் அக்கறை கிடையாது.

Anonymous said...

கப்பம் வாங்கும் பணத்தில் எப்படி எல்லாம் வாழலாம் என்பதை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

சுதாகர் said...

இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

http://mathavaraj.blogspot.com/2009/04/blog-post_18.html

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது