1/15/2010

துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2010 பகுதி - 2

நான் ஏற்கனவேயே சொன்னமாதிரி நான்கு நிபுணர்களையும் சோ அவர்கள் நான்கு பொருட்கள் பற்றி பேசச்சொன்னார். இதனால் என்ன ஆயிற்றென்றால் சாதாரணமாக இர்ண்டு மணிநேரத்தில் முடிந்திருக்க வேண்டிய கூட்டம் மூன்று மணிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது. கூட்டம் முடியும்போது இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகு நங்கநல்லூருக்கு போக வேண்டும் என்றதில் சற்றே டென்ஷன் ஆனது.

செல்பேசியை எடுத்துச் செல்லவில்லை, போலிசார் அதை வெளியே வைடா என்றால் என்ன செய்வது என்ற பயம். வீட்டம்மாவுக்கும் என் மகளுக்கும் காய்ச்சல் வேறு. நான் மீட்டிங்கிற்கு போவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தபோது வீட்டம்மா தைரியம் கொடுத்து போகச் சொன்னார். எது எப்படி இருந்தாலும் டென்ஷன் டென்ஷனே. வீடு திரும்பும்போது இரவு பத்தேமுக்கால் தாண்டி விட்டது. ரொம்ப களைப்பாக இருந்ததால் அப்படியே படுத்துத் தூங்கிவிட்டேன், சில மெயில்களை பார்த்த பிறகு.

இன்று காலையிலிருந்து எனக்கும் கணகணவென காய்ச்சல் அடிக்கிறது. ஆகவே இன்றைய வேகமும் குறைவு பட்டது.

வக்கீல் விஜயன் பேச்சு:
முப்பதாண்டுகளாக பிராக்டீஸ் செய்யும் அவர் தனது தனிப்பட்ட அப்சர்வேஷன்களையே உபயோகித்து பேசினார். தனது பிராக்டீஸ் 1978-ல் ஆரம்பித்தது என்றும், முதல் பத்தாண்டுகளுக்கு யார் நீதிபதியாக இருந்தாலும் கவலை இன்றி அவர் முன்னால் வாதம் புரிந்திருக்கிறார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நீதிபதியின் விருப்பு வெறுப்புக்களை பார்த்து வாதம் புரிய வேண்டியிருந்தது. கடைசி பத்தாண்டிலோ நீதியைத் தவிர வேறு விஷயங்களே தீர்ப்புகளை தீர்மானிக்கின்றன என்றார்.

வழக்கறிஞர்களில் பத்து சதவிகிதம் பேர் அடாவடி செய்து மிகுதி 90 சதவிகிதம் மௌனமான மெஜாரிட்டிக்கு கெட்ட பேர் வாங்கித் தருகின்றனர். 1980-லிருந்து சட்டத்தை நிலைநிறுத்தும் தீர்ப்புகளுக்கு பதில் சமரச தீர்ப்புகளே வருகின்றன. நீதிபதிகளின் தேர்வில் இடஒதுக்கீடு இல்லையென்று கூறப்பட்டாலும் அது இப்போது கோரப்படுகிறது என்றார் விஜயன். அது கூடவே கூடாது என சொன்னவர் காமராஜர். ஆனால் மருத்துவர் ராமதாஸ் தனது சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு நீதிபதிகள் என்ற ரேஞ்சில் பேசுகிறார்.

நீதித்துறை நேர்மையாக இருக்க வேண்டுமெனில் வக்கீல்கள் திருந்த வேண்டும். இந்த ஆண்டு துவக்கத்தில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மேல் ஒரு ஆக்‌ஷனும் இல்லை. இப்போது நீதிபதிகளும் சொத்துக் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதிர்க்கப்படுகிறது. பார் கவுன்சில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதில் வரும் தேர்தல் ஊழல்கள் சொல்லி மாளாது.

விஜயன் எதிர்க்கொண்ட அராஜக தாக்குதல் பற்றி சோ குறிப்பிட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து செயல்பட்டார், அது பாராட்டுக்குரியது என்றார்.

ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அது வரை அமர்ந்திருந்த சோ அவர்கள் மைக் அருகில் சென்ற ஒரு நிமிடத்துக்குள் அவரவர் பேச்சை முடித்து கொண்டது ஆறுதலாக இருந்தது. அப்படியும் இட்லிவடை பதிவில் உள்ள ஆடியோ டேப்பின்படி குருமூர்த்தியும் பழ கருப்பையாவும் சேர்ந்து 33 நிமிடங்களுக்கு மேலே பேசியுள்ளனர். பேச்சுகள் நன்றாக இருந்தாலும் நேற்று அவை கால அட்டவணையில் பொருந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சோ இதை அடுத்த ஆண்டு கூட்டங்களில் தவிர்ப்பார் என நம்புகிறேன்.

முருகன் அவர்கள் பேச்சு
முருகனின் தைரியம் பற்றியும் சோ அவர்கள் சிலாகித்தார். முருகன் அவர்கள் தனது வேலைகாலத்தில் நடந்த விஷயங்களை பட்டியலிட்டார். ஆனால் அவை இப்போது புறக்கணிக்கப்படுகின்றன. அரசு ஊழியர்களிடம் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் சுத்தமாகவே இல்லை.

நிர்வாகத் துறை நன்றாக இருந்தால், அரசியல் அமைச்சரவைகள் அடிக்கடி கவிழ்ந்தாலும் நாட்டின் நிர்வாகம் நன்றாகவே நடக்கும் என்பதற்கு அவர் பிரான்சின் உதாரணத்தை எடுத்து கொண்டார். கனடாவிலிருந்து வந்த ஒருவர் தான் வாங்கிய நிலத்தை விற்க முயன்றபோது முந்தைய சொந்தக்காரர் அரசுக்கு பாக்கியாக 9000 வைத்திருக்க, இவருக்கு வில்லங்கம் சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்தத் தொகை, அதற்கான வட்டி ஆகியவை சேர்ந்து ஐம்பதாயிரத்துக்கு வந்திருக்க, அதைக் கட்டுவதாக இவர் கூறினாலும், அரசு அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. அதற்கு பதிலாக அதே தொகையை லஞ்சமாக கொடுத்திருந்தால் ஒரு நொடியில் வேலை முடிந்திருக்கும் என்று முருகன் குறிப்பிட்டார்.

சாவு சான்றிதழ் இறந்தவர் பெயரை ஒரு குமாஸ்தா தவறாகக் குறிப்பிட்டதால் கிடைக்காமல் போன கதையையும் அவர் சொன்னார்.

தான் வேலையில் இருந்தபோது சர்ப்ரைஸ் செக் எல்லாம் செய்ததாகவும் இப்போது யாரும் அதை செய்வதில்லை எனவும் அவர் கூறினார். ஒரு தபால் வந்தால் அதை எப்படி திறக்க வேண்டும் என்பதற்கெல்ல்லாம் விதிமுறைகள் இருக்க அவை இப்போது அலட்சியம் செய்யப்படுகின்றன என்றார் அவர்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் புரோக்கர்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது என்றார். நெல்லையில் ஒரு எஸ்.ஐ. அடிப்பட்டு தெருவில் கிடந்தபோது இரு மந்திரிகள் அதை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர். தனது கால கட்டத்தில் அதற்கே enquiry வைப்பார்கள் என முருகன் கூற, இப்போது கூட அது நடக்கும், ஆனால் வீடியோ எடுத்து எல்லாவற்றையும் வெட்டவெளிச்சம் ஆக்கியது யார் என்ற ரேஞ்சில்தான் அது இருக்கும் என சோ கிண்டலாகக் கூறினார்.

ட்யூடி சார்ட்படி போலீசார் செல்லாது விளங்காத வி.ஐ.பி.களுக்கு பந்தோபஸ்துக்கே எல்லோரும் பயன்படுத்தப்படுகின்றனர். இப்போது நடந்த இந்த நிகழ்ச்சியை கூறினால் மகாமகம் குளம் விஷயத்தை எடுத்து ஜேயை குறை கூறுகின்றனர். அதுவும் கண்டிக்கத்தக்க செயலே என்பதை சோ ஒத்துக் கொண்டார்.

குருமூர்த்தி பேச்சு
சோ முதலிலேயே தன்னை பொருளாதாரம் பற்றி மட்டும் பேசும்படி கேட்டு கொண்டார் என குருமூர்த்தி கூறினார். இப்போது சென்செக்ஸ் பழைய குறியீட்டு எண்ணில் இருப்பதை காட்டி பொருளாதார ரிகவரி வந்து விட்டது எனப் பேசுவது அபத்தம் என்றார். அவர். பிரச்சினை அமெரிக்காவிலிருந்து ஆரம்பிக்கிறது. நமது நாட்டில் இருப்பதுபோல குடும்ப சேமிப்பு அங்கு ஊக்குவிக்கப்படவில்லை என அவர் கூறினார். குடும்பப் பொறுப்புகளை அரசே ஏற்றுக் கொண்டதால் அரசு நடத்துவது தனியார்மயமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். டெர் ஷ்பீகல் (Der Spiegel) என்னும் ஜெர்மானிய வாரப்பத்திகை ஐந்து பொருளாதார நிபுணர்களை இச்சரிவு பற்றி கேட்டதற்கு நோபல் பரிசு பெற்ற அந்த ஐவரும் ஒருமித்தக் கருத்தை கூறவில்லை. இதற்கு என்ன செய்யலாம் என்பதற்கும் தெரியாது என்றே பதில் வந்தது என்றார். பிரச்சினை பொருளாதாரச் சரிவா அந்த பொருளாதார விஞ்ஞானத்தின் சரிவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்கா தனது தவறுகளைத் திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் இன்னும் கடன் வாங்குவதிலேயே உள்ளனர் எனவும் அவர் கூறினார். இந்தியாவுக்கு அயல்நாட்டு முதலீட்டு தேவை இல்லை என தான் 1993 வாக்கில் சொன்னபோது எல்லோரும் தன்னை தேசத் துரோகி போல பார்த்தார்கள், ஆனால் இப்போது பார்த்தால் நமது தொழில் மேம்பாட்டில் அன்னிய முதலீடுகள் 2 சதவிகிதமே பங்கு வகிக்கின்றன. பாக்கி 98% இந்தியர்களின் சேமிப்பிலிருந்தே வருகின்றன.

இந்த அழகில் நாம் அமெரிக்காவை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எதனால் இத்தனை பிரச்சினைகள் வந்தனவோ, அதையே தீர்வாகக் கொள்வது மதியற்றச் செயல். நமது பொருளாதாரம் நமது செமிப்புகளால் அதிகம் பாதிக்கப்படாமல் உள்ளது. அதை நாம் மறக்கலாகாது.

குருமூர்த்தியின் பொருளாதார அறிவை சோ அவர்கள் சிலாகித்து பேசினார். அவருடன் தனக்கு பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது தேசபக்தி சந்தேகத்துக்கப்பாற்பட்டது என்றார் அவர்.

பழகருப்பையா பேச்சு:
நான்கு பேச்சுகளில் இதற்குத்தான் கலகலப்பு அதிகம். அவரது தனித்தமிழையும் சோ நட்புரீதியாக கலாய்த்தார்.

தனது சோவுடனான 40 ஆண்டுகள் பரிச்சயம் பற்றி பேச ஆரம்பித்த வர் பல உதாரணங்களை அடுக்கினார். கருணாநிதிக்கு எதிராக அவர் ஒற்றை மனித எதிர்க்கட்சியாக செயல் படுகிறார் என்றார். கருணாநிதியும் எழுச்சியும் சோவின் எதிர் எழுச்சியும் ஒரே கோட்டில் இருக்கிறது என்றவுடன் ஒரே சிரிப்பு. தீமை அதிகமாக ஆக, அதை எதிர்க்கும் சோவின் பெருமையும் அதிகரிக்கும். காந்தி அரசியலுக்கு இளைஞர்களை அழைத்தபோது யோக்கியர்கள் வந்தார்கள், அயோக்கியர்கள் வரவில்லை. ஆனால் இப்போது கருணாநிதி அதையே செய்யும்போது நேரெதிராகவே நடக்கிறது.

மதுரை மீனாட்சி கோவிலில் செருப்பு பாதுகாக்கும் வேலைக்கு டெண்டர் போடுவது போல பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனமும் அதே போல டெண்டர் போடும் வேலையாயிற்று. தான் கடந்த சிலமாதங்களாக துக்ளக்கில் எழுதுவதை தனது தந்தை பார்க்க உயிருடன் இல்லை எனவும் அவர் குறைபட்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதியை எதிர்க்க கன்ணதாசன், ஜெயகாந்தன் மற்றும் சோ பேனா எடுத்தனர். இப்போது ஜெயகாந்தனின் பேனா முறிந்து விட்டது என்றதுமே ஒரே சிரிப்பு. ஆனால் அதுவே நாற்பதாண்டுகளுக்கு முன்னால் முறிந்திருந்தால் வைரமுத்து ரேஞ்சுக்கு அவர் ஓகோன்னு இருந்திருப்பார என்று மேலும் கூற சிரிப்பு அதிகரித்தது. சோவின் பேனா மட்டுமே முறியவில்லை என்றார் அவர்.

பழகருப்பையாவின் தனித்தமிழை கலாய்த்தது தனது இயலாமையாலேயே என சோ ஒத்து கொண்டார்.

சோ அவர்களது பேச்சு அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Anonymous said...

\\கருணாநிதியும் எழுச்சியும் சோவின் எதிர் எழுச்சியும் ஒரே கோட்டில் இருக்கிறது என்றவுடன் ஒரே சிரிப்பு.\\

என்ன காரணத்திற்காக?

Madhavan Srinivasagopalan said...

உங்களது கஷ்டம் எனக்குப் புரிகிறது.. எனினும், உங்கள் செயல்திறனை பாராட்டி, பதிவிற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

Anonymous said...

No one talked abt Thuglak magazine.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது