6/09/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 97 & 98)

எபிசோடு - 97 (07.06.2010) சுட்டி - 2
அசோக் வேலைக்கு செல்லும் நாள். தந்தையின் நிறுவனத்திலேயே ஒரு நல்ல உத்தியோகம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து எல்லோருக்கும் கற்பூரத் தட்டை நீட்ட எல்லோரும் கண்ணில் ஒற்றிக் கொள்கின்றனர். காதம்பரியும் நாதனும் நடந்ததை மறந்து சுமுகமாகின்றனர். நாதன் ஆஃபீசுக்கு காரில் கிளம்ப, அசோக்கோ பஸ்ஸிலேயே செல்கிறான். காதம்பரி கஷ்டப்பட்டு அவனை ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ள செய்கிறாள். பேண்ட் போட மறுத்து வேட்டியிலேயே செல்கிறான்.

சாம்பு விடைபெற்றுச் செல்ல, மாமியாரும் மருமகளும் அவர் சென்ற பிறகு அவரை இகழ்கின்றனர். அலுவலகத்தில் ரமேஷ் அசோக்கைப் பார்க்க வருகிறான். உமாவுடன் பேசி தன்னுடன் வந்து வாழக் கூறுமாறு கேட்டுக் கொள்ள, அசோக்கும் சம்மதிக்கிறான். தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து தான் படும் சிறுமைகளை குறிந்து மனம் நொந்து பேசுகிறான். அசோக் அவனுக்கு ஆறுதல் சொல்கிறான். அவனையும் உமாவையும் சம்பந்தப்படுத்தி தான் சந்தேகித்ததை குறித்து மன்னிப்பும் கேட்கிறான். ஒரு சலவைத் தொழிலாளி எழுப்பிய சந்தேகத்தால் சீதையே அக்கினிப் பிரவேசம் செய்ய நேர்ந்ததை அசோக் குறிப்பிடுகிறான்.

சோவின் நண்பர் இது பற்றிக் கேட்க, சோ முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறார். அக்கினிப் பிரவேசம் என்பது யுத்தம் முடிந்த உடனேயே நடந்து விட்டது. அலவைத் தொழிலாளியின் கதையோ பின்னால்தான் வருகிறது. அதுவும் வால்மீகி ராமாயணத்தில் சலவைத் தொழிலாளி என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நாட்டில் பலரும் சந்தேகப்பட்டனர். இதெல்லாம் கூறிவிட்டு உத்திர ராமாயணத்தில் வரும் அந்த நிகழ்வுகள் பற்றி மேலும் பேசுகிறார். எப்போதுமே என் மனதை சஞ்சலம் செய்யும் இந்த விஷயங்களும், அதுவும் என் அப்பன் ராமபிரானா இவ்வாறு அநியாயமாக நடந்து கொண்டானே என்ற எனது ஆதங்கமும் இது பற்றி மேலே பேச விடாமல் என்னைத் தடுக்கின்றன.

ரமேஷ் விடைபெற்று செல்கிறான். அசோக் கோவிலில் உமாவை சந்தித்துப் பேசுகிறான். அவளோ அவன் கூறும் அறிவுரைகளை சுலபத்தில் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வளவு இரக்கம் பற்றிப் பேசும் அவன் முதலில் ஏன் ரமேஷை போலீசில் காட்டிக் கொடுக்கும்படி தனக்கு உபதேசித்தான் என கடைசியாக அவனை கேள்வி கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 98 (08.06.2010) சுட்டி - 2
உமாவின் கேள்விக்கு புன்னகையுடன் அசோக் பதிலளிக்கிறான். சட்டம் நாமே போட்டது அதை நாம்தான் மதிக்கணும். ஆகவேதான் ரமேஷ் சட்டத்தை மீறியதற்காகாக போலீசில் புகார் கொடுக்கும்படி அறிவுரை அச்சமயம் தரப்பட்டது. அவ்வாறே கைதும் செய்யப்பட்டு, வழக்கை சந்தித்து இப்போது வேளியே வந்து விட்டான் ரமேஷ். அவன் இப்போது உமாவிடம் வந்து காலில் விழாத குறையாக தன்னை மன்னிக்குமாறு கேட்கிறான். இப்போது அவனுக்கு ஒரு வாய்ப்பைத் தருவதன் மூலம் அவன் திருந்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சட்டம் தண்டிக்க மட்டும்தான் செய்யும், அது திருத்துவது என்பது சந்தேகத்துக்குரியதே. ஆனால் சட்டம் இல்லாவிட்டால் எல்லோருமே துணிந்து தவறுகள் செய்வார்கள். நாடே அழியும் என்கிறான் அசோக்.

அப்படியா சார் எனக்கேட்கும் நண்பருக்கு 90% கேஸ்களில் இதுதான் யதார்த்தம் என்கிறார் சோ. போக்குவரத்து விதிகளை போலீஸ்காரர் இருக்கும்போதுதான் சாதாரண ஜனங்களே மதிக்கிறார்கள். ஒருவரும் அருகில் இல்லாத போது போக்குவரத்து விளக்குகளின் சமிக்ஞைகளை சுலபமாகவே மீறுகிறார்கள். தண்டனை அளிப்பது அரசனின் கடமை. சத்திரியனால்தான் அது முடியும். ஒரு பார்ப்பனனால் முடியாது. ஆகவேதான் பார்ப்பனர்கள் எப்போதுமே அரசர்கள் ஆகவியலாது. இதையெல்லாம் மனுவே அழுத்தந்திருத்தமாகவே கூறிவைத்துள்ளார் என்கிறார் சோ.

ரமேஷை கைது செய்த சட்டமே அவனை விட்டதற்கு முக்கியக் காரணமே அக்குற்றத்தின் மூல வேரை அவன் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதாலேயே என்கிறான் அசோக். அதை அடிப்படையாக வைத்துத்தான் அவனுக்கு விடுதலை கிடைத்தது என்றும் அவன் கூறுகிறான். இப்போதும் சட்டத்தை மதித்து நாமும் நடக்க வேண்டும் என்கிறான் அசோக். வீடணன் சரணாகதி அடைந்தது போல அவன் உமாவிடம் சரணடைந்தான் என அசோக் கூற, இந்த இடத்தில் சிடியை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் சோ. விபீஷண சரணாகதியும் ரமேஷ் இங்கு சரணடைந்ததும் ஒன்றே அல்ல. ஆகவே இவ்விரண்டையும் சேர்த்து அசோக் பேசியது ஒத்துக் கொள்ள முடியாது என்கிறார் சோ. பிறகு வீடணன் சரணாகதி படலத்தையும், அது குறித்து ராமரின் சகாக்கள் பேசியதையும் எடுத்துரைக்கிறார். கடைசியில் ராமரின் சுயதருமம் யார் சரணாகதி அடைந்தாலும் அவனைக் காப்பாற்றுவதே என்பதையும் கூறுகிறார். இதெல்லாம் கூறியபிறகு இப்போதெல்லாம் சரணாகதி என்ற கோட்பாடு எப்போது முன்னுக்கு வந்தாலும் வீடணனின் உதாரணமே தரப்படுவதையும் கூறுகிறார்.

அசோக்கின் வாதங்களை ஏற்று உமா தன் தந்தையுடன் ரமேஷ் வீட்டுக்கு செல்கிறாள். ரமேஷ் மனம் மகிழ்கிறான். இப்போது ரமேஷின் பொருளாதார நிலை பற்றிப் பேச்சு வருகிறது. அவனுக்கு வேலை இல்லை. அவனை வெளியே அழைத்துவர வீட்டையும் அடமானத்தில் வைத்திருக்கிறார்கள். இப்போது உமா ரமேஷிடம் அவன் நாதனை பார்க்கச் செல்ல வேண்டும் எனவும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறாள். முதலில் மிகத் தயங்கும் அவன் கடைசியில் அவ்வாறே செய்ய ஒத்துக் கொள்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

Anonymous said...

சென்ச‌ஷ் எடுத்தீங்க‌ளானு நீங்க‌ கேட்ட‌ நேர‌ம், ந‌ல்ல‌ நேர‌ம். நான் வேலை செய்வ‌து உல‌க‌ள‌வில் புக‌ழ் பெற்ற இந்திய அர‌சின் ஆராய்ச்சி ம‌ற்றும் க‌ல்வி நிறுவ‌ன‌ம். திங்க‌ள், செவ்வாய் ம‌ற்றும் புத‌ன் நாட்க‌ளில் முனைவ‌ர் ப‌ட்ட‌ப் ப‌டிப்பிற்கான‌ நேர்காண‌ல் ந‌ட‌த்தினோம். இந்த‌ நேர்காண‌லில் க‌ல‌ந்து கொள்ள‌, CSIR ந‌ட‌த்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க‌ வேண்டும். GATE தேர்வில் முத‌ல் 100 ரேங்கிற்குள் உள்ள‌வ‌ர்க‌ளும் க‌ல‌ந்து கொள்ளலாம். எங்க‌ளுக்கு வ‌ந்த‌ விண்ண‌ப்ப‌ங்க‌ளின் எண்ணிக்கை 380. அதில் 140 விண்ண‌ப்ப‌ங்க‌ள் OC பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் (36.8%) (த‌மிழ‌க‌த்தில் என‌க்கு மிக‌ பிற்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌ பிரிவில் இட‌ஒதுக்கீடு இருந்தாளும், நான் இன்று வ‌ரை அதை ப‌ய‌ன்ப‌டுத்திய‌து இல்லை. அதுபோல‌ எத்துனை பேர் இந்த‌ 140 இல் உள்ள‌ன‌ர் என்ப‌து தெரியாது. அது த‌விர‌ OC யில் பிராம‌ண‌ர் அல்லாத‌வ‌ர்க‌ளும் உண்டு என்ப‌து உங்க‌ளுக்கு தெரிந்தே இருக்கும்). இதில் 85 மாண‌வ‌ர்க‌ளை நேர்காண‌லின் மூல‌ம் தெரிவு செய்தோம். இதில் 40 பேர் OC பிரிவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் (47%). ப‌தினைந்து ஆண்டுக‌ளுக்கு முன்னர், ஏற‌க்குறைய‌ 90% ஆக‌ இருந்த‌ பிராம‌ண‌ மாண‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கை 47% ஆகி இருக்கிற‌து. எந்த‌ இட‌ ஒதுக்கீடும் இல்லாமல், 53% ச‌த‌விகித‌த்தை பிற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட ம‌ற்றும் அட்ட‌வ‌ணைப் பிரிவின‌ர் பெற்றிருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இதே நிலைமை நீடிக்குமானால், ந‌டிக‌ர் விவேக் "ஐய‌ர் ம‌க‌ன்" என‌ ப‌ட‌மெடுத்து, போங்க‌டா போய் உங்க‌ பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைங்க‌டா என்று சொல்கிற‌ நிலை வ‌ரும். வின‌வில், எப்பொழுது பார்த்தாலும் பிராம‌ண‌ர், வ‌ன்னிய‌ர், தேவ‌ர் இன‌த்தை திட்டி ப‌திவெழுதுகின்ற‌ன‌ர். இப்ப‌டிப் ப‌ட்ட‌ ப‌திவுக‌ளால், தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு எந்த‌ ந‌ன்மையும் ஏற்ப‌ட‌ப் போவ‌தில்லை. அதேபோல‌ உங்க‌ள் ப‌திவுக‌ளால், பிராம‌ண‌ர்க‌ளுக்கு எந்த‌ ந‌ன்மையும் ஏற்ப‌டாது. வ‌ள‌மான‌ தேச‌த்திற்கு, ச‌முதாய‌த்தின் அனைத்து பிரிவின‌ரும் ந‌ன்றாக‌ இருக்க‌ வேண்டும். நான் சொல்வ‌து உங்க‌ளுக்கு புரியும் என‌ நினைக்கிறேன். - கிருஷ்ண‌மூர்த்தி

ஸ்ரீராம் said...

திரு டோண்டு அவர்களே,

நான் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருக்கிறேன். தயை கூர்ந்து என் பதிவுகளை படித்து உங்கள் மேலான கருத்தை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்

http://sriramsrinivasan.net

-ஸ்ரீராம்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது