4/18/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 4
மேலே செல்வதற்கு முன்னாலேயே ஒன்றைக் கூறி விடுகிறேன். நான் கூறியவை, கூறவிருப்பவை எல்லாமே எல்லோருக்கும் பொருந்தும். நான் என்னுடைய அனுபவத்திலிருந்துக் கூறுவதால் மொழி பெயர்ப்பு வேலை முன்னிறுத்தப்படுகிறது, அவ்வளவுதான். படிப்பவர்கள் தங்கள் தேவைக்கேற்ப அவற்றை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

நிறுவனத்துக்கு கடிதம் எழுதி அவர்களும் உங்களை அழைத்துள்ளனர். இப்போது நிறுவனத்தினுள்ளே இருக்கிறீர்கள். சிறிது நேரம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்கள். காத்திருத்தலும் ஒரு கலையே. சிலர் தேவையில்லாது டென்ஷன் அடைகிறார்கள். நகத்தைக் கடிப்பது, அடிக்கடி கடிகாரத்தைப் பார்ப்பது போன்ற சேஷ்டைகள் இருக்கும். அவற்றையெல்லாம் தவிர்க்கவும்.

நான் அவ்வாறு காத்திருக்கும் நேரத்துக்காகவே கையில் ஒரு குண்டு புத்தகம் எடுத்துச் செல்வேன். நான் பாட்டுக்கு படித்துக் கொண்டிருப்பேன். நேரம் போவதே தெரியாது. அவ்வாறு படித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் என்னப் பேச வேண்டும் என்பதை மனத்துக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன். நிர்வாகி எம்மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்பார், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்றும் யோசிப்பேன். நானே சில ஓபனிங்குகளைக் கொடுத்துப் பேச்சுவார்த்தையை ஒரு மாதிரி என் கட்டுக்குக் கீழே கொண்டு வர ஏற்பாடு செய்வேன்.

நிறுவனத்தில் இருக்கும் சூழ்நிலையையும் பார்க்க வேண்டும். யாரைப் பார்த்துப் பேச நேரினும் ஒரு புன்னகையுடன் பேச்சைத் துவங்கல் நலம். அது ரிஷப்ஷனிஸ்டாகக் கூட இருக்கலாம். நிறுவனத்துடன் வேலைத் தொடர்பைப் பெற்றப் பிறகு, எல்லார் தயவும் தேவைப்படும். ஆகவே சுமுகமாக இருப்பதை முதலிலேயே துவங்கல் நலம்.

இப்போது அலுவகங்களில் புகை பிடிப்பது அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் எண்பதுகளில் நிலை வேறு. நிர்வாகி சிகரெட்டை ஆஃபர் செய்தால் முதல் தடவை நான் மறுப்பதில்லை. இதற்காகவே என்னுடைய சிகரெட் கோட்டா 12 - ஒரு வருஷத்துக்கு. அவர் சிகரெட்டை நீட்ட அதை ஏற்றுக் கொண்டாலே ஒரு சுமுக உறவு ஏற்படுகிறது. இதில் ஒரு சூட்சுமம் உள்ளது. சாதாரணமாக சிகரெட் புகைப்பவர்கள் அதை எப்படியாவது விட வேண்டும் என்ற அழுத்தத்தில் இருப்பார்கள். அப்போது நான் சிகரெட்டே பிடிப்பதில்லை என்று கூறினால் தேவையில்லாது அவரை நான் மட்டம் தட்டுவதாகத் தோன்றலாம். அதனால் எதற்கு வம்பு? இப்போதெல்லாம் அவ்வாறு நிர்ப்பந்தம் வருவதில்லை என்பதில் சந்தோஷம்.

நிர்வாகி சொலவதை கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள். நிறுவனத்தின் தேவை என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் அளிக்க வேண்டிய சேவைகளைப் பற்றி நம்பிக்கையுடன் பேச முடியும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டப்படி பல நேரத்தில் தலைமை நிர்வாகி எப்படி ஒருவன் பொறியாளனாக வேலை செய்து கொண்டே மொழிபெயர்ப்பாளனாகவும் செயல்படுகிறான் என்பதை அறிய ஆவலாக இருப்பார். பொறியாளனின் மொழி அறிவைப் பற்றி எங்குமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. தவறானக் கண்ணோட்டம்தான், ஆனால் பலருக்கு இந்த அபிப்பிராயம் உண்டு என்று நான் கூறினால் நீங்கள் நம்புவதை தவிர வேறு வழியே இல்லை. ஆகவே தவறின்றி ஆங்கிலத்தில் உரையாட வேண்டும். சிறு விஷயம் என்று எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எல்லாம் சேர்ந்துதான் உங்களுக்கு ஆதரவான நிலை உருவாக வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

வேலையை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலநேரத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். வாடிக்கையாளருக்கு எப்போதுமே அவசரம்தான். எப்போது வேலையை முடிக்க வேண்டும் "நேற்றைக்கு" என்று பதில் வரும். உங்களால் முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒத்துக் கொண்ட மற்ற வேலைகளை மறக்கக் கூடாது. அதற்காக இப்போது முரட்டுத்தனமாகப் பேசக்கூடாது. மறுப்பை நாசூக்காக்த் தெரிவிக்க வேண்டும். நான் செய்வது என்ன? எப்போதுமே சற்று முன்சாக்கிரதையுடனேதான் செயல் படுவேன். ஆகவே தேவையானால் அட்ஜஸ்ட் செய்ய முடியும். ஒரு முறை இவ்வாறு அவசரம் என்று கூறியவரிடம் "ஐயா, என்னால் 10 நாட்களில் வேலையை முடிக்க முடியும். நீங்கள் ஒரு வாரத்திலேயே கேட்கிறீர்கள். ஆகவே அதிக நேரம் உழைக்க நேரிடும். உங்களுக்கான விலை 50% அதிகரிக்க வேண்டியிருக்கும், பரவாயில்லையா?" என்று கேட்க, அவரோ அவசரமாக "10 நாட்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார். அவ்வளவுதான் விஷயம். ஆனால் ஒன்று. ஒத்துக்கொண்ட நேரத்துக்குள் வேலையை முடித்துத் தரவேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

புது வாடிக்கையாளருடன் ரேட் பேசும்போது மிகக் கவனம் தேவை. இதைப் பற்றிப் பின்னால் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 3

எதை எழுத வேண்டும் அல்லது கூடாது, எப்படி எழுத வேண்டும் அல்லது கூடாது என்பவை மிக முக்கியம். நான் முதலில் கூறியபடியே அனேகமாக எப்போதும் எழுதுவேன். இருந்தாலும் மாறுதலுக்காகச் அவ்வப்போது சிறிதே மாற்றியிருக்கிறேன்.

உதாரணத்துக்கு ஒரு கடிதத்தில் நான் முதலில் பொறியாளன் என்பதைக் குறிப்பிட்டுப் பிறகு மொழிபெயர்ப்பாளர் என்பதை எழுதினேன். பின் நடந்தது என்ன? எனக்கு வந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

"ஐயா, எங்கள் நிறுவனத்தில் விற்பனைப் பொறியாளராகச் சேர நீங்கள் அனுப்பியக் கடிதம் சம்பந்தமாக" என்று இருந்தது. இது என்னடா கஷ்டம் என்றுதான் முதலில் நினைத்தேன். இருந்தாலும் தலைமை நிர்வாகியைச் சந்தித்தேன். அவரிடம் விஷயத்தை எடுத்துக் கூற அவர் சிரித்தார். மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பற்றி ஒரு தெளிவு நிலை அடைந்தேன்.

சுருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் சொல்ல நினைப்பது அத்தனையும் கடிதத்தில் இருக்க வேண்டும். அவையும் பெறுநரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும். அவர்தம் தேவைகளைப் பற்றி எழுத வேண்டும். தலைமை நிர்வாகிக்கே எழுத வேண்டும். தட்டச்சிடவில்லை நான். என் கடிதங்கள் அதனால் ஒரு தனித்தன்மை பெற்றன. தில்லியில் 2001 ஜூலை வரை இருந்தேன். எல்லா மொழிபெயர்ர்ப்புகளும் கையாலேயே எழுதப் பட்டன. அங்கிருந்த கடைசி கட்டத்தில் மொழி பெயர்ப்புகள் கையெழுத்திலேயே கொடுக்கப்பட்டன. இம்மாதிரி ஆயிரக்கணக்கானப் பக்கங்கள். ஆகவே என் கையெழுத்து நல்லத் தோற்றம் பெற்றது.

நல்லது. உள்ளே நுழைந்து விட்டீர்கள். தலைமை நிர்வாகி எதிரில் உள்ளீர்கள். மேலே? அடுத்தப் பதிவில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/16/2005

நட்சத்திரக்குறியீட்டை எவ்வாறு பொருள் கொள்வது?

உதாரணத்துக்கு ஒரு பதிவு 0/100 என்று குறிப்பிடப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இது கூறுவது என்ன? 50 பேர் ஆதரித்து, 50 பேர் எதிர்த்து ஓட்டுப் போடப்பட்டதாகப்படுகிறது. முதலில் ஒரு ஓட்டு ஆதரவாகப் போட்டால் ஸ்கோர் 1/1 என்று வருகிறது. அடுத்த ஓட்டு எதிர்ப்பாக போடப்பட்டால் ஸ்கோர் 0/2 ஆகிறது. இதன் லாஜிக் புரியவில்லை. 1000-ல் 500 பேர் ஆதரவு, 500 பேர் எதிர்ப்பு, ஸ்கோர் 0/1000. அபத்தமாக இல்லை?

இங்கிலாந்தில் க்ளப்புகளில் புது உறுப்பினரை தேர்வு செய்யும்போது இரண்டு வர்ணஙள் உடையப் பந்துகளை உபயோகிப்பார்கள். அவற்றில் ஒரு வர்ணம் கறுப்பு. புது அங்கத்தினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது. அதற்கு இரட்டை மதிப்பு. அவ்வாறு செய்வதை "blackballing" என்பார்கள். அதைத்தான் இங்கும் பின்பற்றுகிறோமா? யாராவது விளக்குவார்களா? ஸ்கோரின் பின்னத்தில் மேலே ஆதரவு வோட்டையும் கீழே மொத்த வோட்டையும் போடுவதுதானே முறை? Or vice versa?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/15/2005

வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 2

நான் கூறும் ஆலோசனைகள் யாவையும் சொந்த முறையில் தொழில் செய்பவருக்கே. நீங்கள் ஒரு நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தால் வேலை உங்களை நாடி வரும். நான் ஐ.டி.பி.எல்லில் முழுநேர பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக இருந்ததைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.

வாடிக்கையாளர்களை எங்கெல்லாம் பிடிக்கலாம்? எங்கிருந்து வேண்டுமானாலும் என்பதே என் பதில்.

1982. ஹிந்துஸ்தான் டைம்ஸைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேலை வாய்ப்புகள் பகுதியை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒரு நிறுவனத்துக்கு அக்கௌண்டன்ட் வேலைக்கு ஆள் கேட்டு விளம்பரம். அதில் நான் பார்த்தது என்ன? அது ஒரு ஜெர்மானிய ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்துக்கானது என்பதே. ஷ்யாம் ஆன்டென்னா என்பது நிறுவனத்தின் பெயர். ஒரு இன்லேண்ட் லெட்டரை எடுத்தேன். அதில் தலைமை நிர்வாக அதிகாரி என்று விலாசமிட்டு ஒரு கடிதம் கையால் எழுதினேன். தட்டச்சிடவில்லை. என்ன ஆச்சரியம். உடனே பதில் வந்தது. போய் பார்த்தேன். வேலை கொடுக்கப்பட்டது. திரும்பத் திரும்ப வேலை கொடுத்தார்கள்.

இந்திய அரசு அனுமதிக்கும் வெளிநாடுகளுடனான கூட்டு முயற்சிகள் ஒரு அரசு மாதப்பதிப்பில் வரும். அதிலிருந்து ஜெர்மன், ஃபிரெஞ்சு மொழி பேசும் நாடுகளுடன் கூட்டு முயற்சி அனுமதிக்கப்பட்ட, தில்லியில் உள்ள நிறுவனங்களின் பெயரை எடுக்க வேண்டியது. சம்பந்தப்பட்டத் தலைமை நிர்வாகிகளுக்கு எழுதுவது, போய் பேசுவது, வேலை கிடைத்தால் ஒழுங்காகச் செய்வது எல்லாம் கனவு போலவே நடந்தன.

இன்னொரு முறை, கண்ணையும் காதையும் தீட்டி வைத்துக் கொள்வது. யாராவது அறிமுகமானால் அவர்கள் வேலை செய்யும் கம்பெனியைப் பற்றி விசாரிப்பேன். அந்த நிறுவனத்துக்கு வெளிநாடுகளுடன் கூட்டு முயற்சிகள் உண்டா என்றுத் தெரிந்துக் கொள்ள முயற்சிப்பேன். தேவையானால் ஒரு கடிதத்தை அனுப்புவேன். பிறகு எல்லாம் வழக்கம் போல. இந்தோ-ஜெர்மானிய மற்றும் இந்தோ-ஃபிரெஞ்சு வணிக அமைப்புகளுக்குப் போய் தில்லியில் நிலைகொண்டிருக்கும் அவற்றின் உறுப்பினர்கள் பட்டியலைத் தயாரிப்பது கூட இவ்வேலையில் அடக்கம்.

எல்லாம் சரி, புது வாடிக்கையாளருக்கு அனுப்பும் முதல் கடிதத்தில் என்ன எழுதுவது? கடவுள் அருள் என்றுதான் கூற வேண்டும். நான் 1982-ல் எழுதிய முதல் கடிததின் உள்ளடக்கமே இப்போது நான் எழுதும் கடிதங்களிலும் ஏறக்குறைய அப்படியே உள்ளது. சிறிய மாற்றங்கள் வேண்டுமானால் உண்டு, அவ்வளவுதான். ஒரு மாதிரிக் கடிதத்தைப் பார்ப்போமா? இது 1982-ல் ஷ்யாம் ஆன்டென்னாவிற்கு எழுதப்பட்டது.

ஐயா,
பொருள்: ஜெர்மானிய, பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வேலைகள்
நான் சொந்த முறையில் தொழில் புரியும் ஒரு ஜெர்மானிய/பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளன் மற்றும் துபாஷி. இம்மொழிகளில் எனக்கு 7/4 வருடங்கள் அனுபவம் உண்டு. நான் கடந்த 11 வருடங்களாக ஒரு மின்பொறியாளனாகவும் பணி புரிகிறேன். ஆகவே நான் தொழில்நுட்பக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறேன்.

ஜெர்மானியக் கம்பெனியுடன் கூட்டு முயற்சி வைத்திருக்கும் உங்களுக்கு என் சேவை அடிக்கடித் தேவைப்படும் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாம் மேற்கொண்டு பேசலாம்.

அன்புடன்,
ராகவன்.

ஒரு விஷயம். அப்போது என்னிடம் தொலை பேசி கிடையாது. ஆகவே எல்லாமே கடிதம் மூலம்தான். தொலைபேசி தொடர்பு கிடைத்ததும் அதையும் கடிதத்தில் குறிப்பிட ஆரம்பித்தேன்.

1982 விஷயத்துக்கு மறுபடி வருவோம். என்னைக் கூப்பிட்ட அந்த நிறுவனத்தின் தலைவர் என்னுடன் பேசும்போது நான் எழுதியக் கடிதத்தில் அவரை எது கவர்ந்தது என்பதைக் குறிப்பிட்டார். "பொறியாளராகத் தொழில் புரியும் ஒரு நபர் மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதில் அவர் மிக வியப்பை அடைந்தார். அப்படிப்பட்ட ஒருவரை நேரில் காணவே என்னை முக்கியமாக அழைத்ததாகக் கூறினார். எந்தக் காரணமாக இருந்தால் என்ன? போனதில் வேலை கிடைத்தது. நான் தில்லியில் இருந்தவரை அவர் பல முறை வேலை கொடுத்தார்.

என்ன எழுதக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். அதையும் என் அனுபவத்திலிருந்தே அடுத்தப் பதிவில் கூறுவேன். வாடிக்கையாளரிடம் முதலில் என்ன பேசுவது, என்ன பேசாக்கூடாது என்பதையும் அதில் பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது