மே மாதம் 1981. நான் ஐ.டி.பி.எல்.-ல் ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கு சென்றிருந்தேன். அது பற்றி நான் ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். நான் இங்கு பேச வந்த விஷயமே வேறு.
எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் வாசந்தி. அவர் டில்லியில் சாணக்கியபுரியில் இருக்கிறார் என்று என் மனைவியின் அத்தை கூற நான் அவருடன் வாசந்தி அவர்கள் வீட்டிற்கு சென்றேன். அப்போது பல விஷயங்களைக் குறித்து பேசினோம். அவரிடம் அவர் எழுத்து சம்பந்தமாக சில கேள்விகள் வைத்தேன். அவற்றில் ஒன்றைப் பற்றித்தான் இப்பதிவு.
வெகு நாட்களாக என் மனதை ஒரு கேள்வி அரித்து வந்தது. கற்பழிப்பு காட்சிகளில் கதாநாயகியைக் காப்பது கதாநாயகன் மட்டுமே. அவன் இல்லையென்றால் பூனை பாலை உருட்டும் காட்சியை வைத்து டைரெக்டோரியல் டச் எல்லாம் கொடுத்து விடுவார்கள். கதாநாயகி தனியாக மாட்டிக் கொண்டால் அதோகதிதான். புன்னகை என்னும் படத்தில் ராம்தாஸ் வழக்கம்போல கற்பழிக்க வர, ஜெயந்தி "ஆணையிட்டேன் நெருங்காதே" என்று ஒரு பாட்டை சாவகாசமாகப் பாட பாட்டு முடிந்ததும் ராமதாஸ் தன் கடைமையைச் செய்து விட்டு செல்வார். ஜயந்தியும் கர்ப்பமடைந்து, ஜெமினி கணேசன் வாழ்வு கொடுத்து, என்னத்த, கதையை, எழுதி, என்று நம்மையெல்லாம் என்னத்த கன்னையாவைப் போல சலிப்புடன் கூற வைத்துவிடுவார்கள்.
நான் கேட்கிறேன், ஜயந்தி திடகாத்திரமானப் பெண்தானே, ராமதாஸ் தனியாகத்தானே இருந்தார், அதுவும் குடிபோதையில்? குறிபார்த்து ஒரு உதை விட்டால் ஆட்டம் க்ளோஸ்தானே? அவ்வாறு செய்து ராமதாஸிற்கு பிறகு பெண்ணாசையே வரவிடாமல் செய்திருக்க முடியாதா? அது என்ன எப்போதும் பெண்ணை இந்த ரேஞ்சுக்கு அபலையாக காட்டுவது? காந்தியடிகள் கூறினாரே, "உன் கைநகங்கள் பற்கள் ஆகியவை உன் ஆயுதங்கள், அவற்றைப் பயன்படுத்து" என்று? இந்த கூறுகெட்ட திரைகதையாசிரியர்கள் என்ன கிழிக்கிறார்கள்?
இந்தக் கேள்வியைத்தான் நான் வாசந்தி அவர்கள் முன்னால் வைத்தேன். அவர் மென்றுவிழுங்கினார். பிறகு மிருதுவாக கூறினார். அவ்வாறெல்லாம் எழுதினால் பத்திரிகையில் போடுவது கஷ்டம் என்று கூறினார்.
தாதா கோண்ட்கே என்னும் மராட்டிய நடிகர் பல படங்களும் எடுத்தார். எல்லாம் சாஃப்ட் போர்ணோ வகையைச் சார்ந்தது. இருந்தாலும் அவருடைய ஒரு படம் "ஆகே கீ ஸோச்" நிச்சயம் பார்க்க வேண்டியதே. கதாநாயகியை வில்லன் கற்பழிக்கவர, அவள் ஓர் உதைவிட, அடுத்தக் காட்சியில் வில்லன் தன் கூட்டாளிகளுடன் "ஜய் ஜகதீஷ்கரே" என்று பாடி பஜனை செய்யும் காட்சி. தியேட்டரே சிரிப்பால் அதிர்ந்தது. தாதாவுக்கு இருக்கும் சமூக உணர்வு நம்மூர் இயக்குன சிகரத்துக்கு இல்லையே, எங்கு போய் முட்டிக் கொள்வது?
இந்தத் தருணத்தில் விகடன் தயாரித்துவரும் கோலங்கள் மெகாசீரியலை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. ஆண் கதாபாத்திரங்கள் டைவர்ஸ் எல்லாம் செய்து வேறுகல்யாணம் எல்லாம் செய்வார்களாம். பெண்கள் மட்டும் பொத்திக் கொண்டு இருக்க வேண்டுமாம். பாஸ்கர் இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள அபி ஒப்புதல் கடிதம் கொடுப்பாளாம் ஆனால் அதே மாதிரி தான் மறுகல்யாணம் செய்து கொள்ள எதிர் ஒப்புதல் கடிதத்தை அவர் கேட்க மாட்டாளாம். என்ன ஐயா பேசுகிறீர்கள். அபி பாத்திரத்தை பிறகு பாஸ்கருடன் சேர்த்துவைக்கத்தானே அவளைப் புனிதமாக வைக்கும் ஏற்பாடுகள்? இம்மாதிரி எத்தனை நாட்களுக்குத்தான் கேவலன்களுக்காக (இதில் ஸ்பெல்லிங் தவறில்லை) கண்ணகிகளை இவ்வாறு அடக்கி ஆளப் போகிறீர்கள்? இப்படித்தான் பெண் இருக்கவேண்டும் என்று எவ்வளவு நாட்கள் ஜல்லியடிக்கப் போகிறீர்கள்?
நிற்க. நான் கேட்ட குறிபார்த்து உதை சம்பந்தமான கேள்விக்கு உங்கள் பதில்(கள்) என்ன?
பகுதி மூன்றின் பக்கத்திலேயே முதல் இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காட்டில்…
-
காடு நமக்கு ஒரு இடம் அல்ல, ஒரு வெளி, அகவெளி. காட்டின் உயிர்த்துடிப்பும்
முழுமையும் எல்லையின்மையும் நாம் நமக்கென உருவாக்கிக்கொண்டுள்ள
எல்லைக்குட்பட்ட, நமக்க...
10 hours ago

