2/11/2006

கற்றனைத்து ஊறும் அறிவு

கிணற்று நீரை இறைக்க இறைக்கத்தான் அதில் தண்ணீர் சுரந்து கொண்டே வரும். அதே போல புதிதாகக் கற்றுக் கொண்டிருந்தால்தான் அறிவும் வளரும். இதுதான் இயற்கையின் நியதி. கல்விக்கு அளவே கிடையாது. நூறாண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்வின் கடைசி நாளன்று கூட ஏதாவது புதிதாகக் கற்க வேண்டியிருக்கும்.

சிலருக்கு கல்லூரியில் சேர்ந்து படித்து ஏதாவது பட்டம் பெற்றவுடனேயே தான் மிகுந்த அறிவு பெற்று விட்டதாக ஓர் எண்ணம் தோன்றி விடும். இது ரொம்ப ஆபத்தானது. உண்மையைக் கூறப்போனால் ஒருவன் பட்டப் படிப்பு முடித்ததும்தான் வாழ்க்கைக் கல்வியையே கற்க ஆரம்பிக்கிறான். அவ்வாறு அக்கல்வியை அவன் பெறத் தொடங்கியதும்தான் தனக்குத் தெரியாத இன்னும் பல விஷயங்கள் இருப்பதையே அவன் அறிகிறான்.

மேலும், ஒருவன் ஒரு விஷயத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போதுதான் இத்தனை நாள் எத்தனை அறியாமையில் அவன் இருந்திருக்கிறான் என்பது அவனுக்கு புலப்படுகிறது. ஏட்டுக் கல்வி அவனுக்கு பல விதிகளைப் பற்றிச் போதிக்கிறது. ஆனால் வாழ்க்கைக் கல்வியிலோ அவன் பார்ப்பது பல விதி விலக்குகளை.

இதைத்தான் ஔவையார் கூறுகிறார், கற்றது கைம்மண்ணளவு, கல்லாததது உலகளவு என்று. இதை நிரூபிப்பது போலவே அவர் வாழ்விலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் பட்டப் பகலில் நீண்ட தூரம் நடந்த களைப்பில் அவர் பசியுடன் ஒரு நாவல் மரத்தினடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அப்பக்கம் சில ஆடுகளை ஓட்டிக் கொண்டு ஒரு 12 வயது பாலகன் வந்தான். ஔவையாரைப் பார்த்ததும் அவன் கேட்டான் "என்ன பாட்டி, மரத்திலேறி, பசிக்கு சில பழங்கள் போடட்டுமா" என்று. ஔவையும் சரி என்று சொல்ல, அவன் மரத்தில் ஏறிக் கொண்டே கேட்டான், சுட்டப் பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று. ஔவைக்கு அவன் சொன்னது புரியவில்லை, இருப்பினும் சமாளித்துக் கொண்டு கூறினார், "மகனே, நான் கிழவி, சுட்டப் பழம் சாப்பிடுவது கஷ்டம், சுடாத பழமே போடு" என்று. அவனும் சில பழுக்காத, மற்றும் பழுத்த நாவல் பழங்களைப் பறித்துப் போட்டான். ஔவை பழுத்தப் பழங்களாக தேடி எடுத்து, அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணை வாயால் ஊதி விலக்கினார். அப்போது பையன் கேட்டான், "என்ன பாட்டி, பழம் சுடுகிறதா என்று. ஔவையார் அவனைப் பார்த்து, "என்னையே மடக்கிய நீ யார் அப்பா?" என்று கேட்க பாலகன் மறைந்து முருகப் பெருமான் தோன்றினார்.

அதே போல பொய்யாமொழிப் புலவர் என்ற பெயருடைய ஒருவர் "அம்மையப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ" என்று கூறி, சிவன் பார்வதியைத் தவிர வேறு யாரையும், முக்கியமாக முருகனைப் பாட மறுத்துவிட்டார். இந்த அழகுக்கு எதுகை மோனையாக வந்ததென்ற சாக்கில் அவரை முட்டை என்றும் குறிப்பிட்டு விடுகிறார். விடுவாரா தமிழ்க் கடவுள். ஒரு நாள் அவர் முன்னால் ஒரு படிப்பறியாத இடையன் வேடத்தில் காட்சியளிக்கிறார். பேச்சு கொடுத்து பிறகு பேச்சுவாக்கில் தன்னைப் பற்றி ஒரு கவி பாடச் சொல்கிறார். புலவர் இடையனிடம் பெயரைக் கேட்க, அவர் "முட்டை" என்று கூற, இம்மாதிரி விசித்திரப் பெயரை வைத்தவரின் ரசனையை நொந்துக் கொண்டே (அவ்வாறு வைத்தது தானே என்பதைக் கூட உணராது) அவர் ஒரு பாடலை இயற்றுகிறார். அப்பாடலிலும் ஒரு பொருட்குற்றத்தைக் கண்டுபிடிக்கிறார் அந்த இடையன். தன் செருக்கை அடக்கிய அவ்விடையனை வியப்புடன் பார்க்க, முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மன்னிக்கவும், பாடல் நினைவில்லை. ஆகவே அக்குறிப்பிட்டப் பொருட் குற்றம் என்னவென்றும் இப்போது கூற இயலவில்லை. ஏதோ சப்பாத்திக் கள்ளியை வைத்து அது கூறப்படும் என்று நினைவு. என்ன செய்வது, கற்றது கைம்மண்ணளவே. ஏதோ இதைப் படிக்கும் நண்பர்கள் யாராவது பாடலைக் கொடுத்து, பொருட் குற்றம் என்னவென்று கூறினால் நன்றாக இருக்கும்.

இதைப் பற்றித்தான் திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு.

மேலே நான் எழுதியவற்றில் பொய்யாமொழிப் புலவர் பற்றிய பத்தியைத் தவிர்த்து மீதியெல்லாம் என் இணைய நண்பர் ஒருவரின் குழந்தை தன் பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்காக நான் எழுதிக் கொடுத்தது. அந்த இணைய நண்பரும் நான் கூறியதை அழகாக மெருகேற்றி அவளைப் பேச வைத்தார். குழந்தையும் அழகாகவே அதை எடுத்துரைத்தாள். நானே அதை தொலைபேசியில் கேட்டேன். போட்டியின் விதிப்படி, 3-லிருந்து 5 நிமிடங்களுக்குள் பேச்சு இருந்திருக்க வேண்டும். அதை மனதில் நிறுத்தி, நண்பரும் வாக்கியங்களைச் செதுக்கி, குழந்தை எளிதாக உச்சரிக்குமாறு வார்த்தைகளைத் தேவையான இடங்களில் மாற்றினார். குழந்தையும் அற்புதமாகவே பேசியதைக் கேட்டு மகிழ்ந்தார். ஆனால் பரிசு? விதிகளுக்குப் புறம்பாக 10 நிமிடங்களுக்கு மேல் வளவன்று பேசிய மாணவன் ஒருவனுக்கே பரிசு. அது முன்பே தெரிந்திருந்தால் இன்னும் கூட எழுதியிருக்கலாம் என்றே தோன்றியது, என்ன செய்வது, கற்றது கைம்மண் அளவே.

அதே போல நான் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது கண்டிப்பாக 6 வயது முடிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. (இப்போதும் அப்படித்தானோ?) ஆக, ஜூலைக்கு அப்புறம் பிறந்த குழந்தைகள் ஒரு கல்வியாண்டையே இழந்தனர். ஆனால் பல பள்ளிகளில் இவ்விதியைப் புறக்கணித்து குழந்தைகளை ஐந்து வயதிலேயே முதல் வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். பள்ளியிறுதித் தேர்வு முடிந்து சமீபத்தில் 1962-ஆம் வருடம் புகுமுக வகுப்பில் நான் புதுக்கல்லூரியில் சேர விண்ணப்பித்தப்போது, விண்ணப்பத் தாளில் இவ்வாறு வயது வரம்பைக் குறிப்பிட்டிருந்தனர்: "Those who were born after 15th January 1948 are not eligible to join P.U.C.". ஏப்ரல் 1946-ல் பிறந்த எனக்கு எப்படியிருந்திருக்கும்? அவ்விதியைப் புறக்கணித்து, சீக்கிரம் பள்ளியில் சேர்க்கப்பட்டவர்கள் புத்திசாலிகள் ஆனார்கள். விதியை மதித்த நாங்கள் சோப்ளாங்கிகள் ஆனோம். ஆக, இங்கு வாழ்க்கைக் கல்வி விதிவிலக்கை கற்றுக் கொடுத்தது! ஒரு வருட வித்தியாசம் என்பது என்ன இழப்பு என்பது 58 வயதில்தான் புரியும்.

பிறகு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். சில விதிகள் பைத்தியக்காரத்தனமானவையாகவே பட்டன. உதாரணத்துக்கு முழுநேர வேலையில் இருக்கும்போது பகுதி நேர வேலை எதையும் செய்யக் கூடாது என்ற விதியையே எடுத்துக் கொள்வோம். நான் இவ்விதியை முதலிலிருந்தே மதிக்கவில்லை. நான் பாட்டுக்கு என் மொழிபெயர்ப்பு வெலைகள் செய்து கொண்டே போனதில் என் career தலைகீழாக மாறி இப்போது ரிடையர்மெண்டுக்குப் பின்னாலும் வேலை செய்ய முடிகிறது. ஆக, நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் சில விதிகள் மீறப்படுவதற்காகவே உள்ளன. ஆக, கற்றனைத்து ஊறும் அறிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/09/2006

கைப்புள்ள கேட்ட கேள்விக்கு பதிலை உள்ளடக்கி

கைப்புள்ள அவர்கள் தன்னுடைய இப்பதிவில் ஒரு கேள்வி வைத்துள்ளார். அதாவது ராமு என்னும் மாணவன் கிருஷ்ணாவதாரக் கதையைக் கூறிய வகுப்பாசிரியரிடம் ""சார்! எட்டாவது குழந்தை தான் தன்னை கொல்ல போகுதுன்னு தெரிஞ்ச கம்சன் தேவகியையும்,வசுதேவரையும் என் சார் ஒரே ஜெயிலில வச்சான்?" என்று கேட்டதாக.

இந்த விஷயம் பற்றி நானும் ராமு வயசில் இருக்கும்போதே யோசித்து, பலரைக் கேட்டு பலரிடம் உதையும் வாங்கியிருக்கிறேன். அது பற்றிப் பிறகு.

இப்போது சீரியசாகப் பேசுவோமா? இந்த இடத்தில் திருமணத்தின் நோக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். உயிரினங்களின் முக்கிய நோக்கம் இனப்பெருக்கமே. அதுவும் பகுத்தறிவு உள்ள மானிட இனத்திற்கு அந்த நோக்கம் சிறுவயதிலிருந்தே நினைவில் புகுத்தப்படுகிறது. ஆகவேதான் எல்லா மதங்களிலும் இது முக்கிய இடத்தைப் பெறுகிறது.

கம்சனுடைய அருமைத் தங்கை தேவகி. அவளையும் வசுதேவரையும் ரதத்தில் வைத்து கம்சனே ரத சாரதியாக வர ஒரு அசரீரி ராபணா என்று தேவகியின் எட்டாவது குழந்தையைப் பற்றி அவனிடம் போட்டுக் கொடுக்க, கதை ஆரம்பிக்கிறது.

முதலில் தேவகியைக் கொல்லத் துணிந்த கம்சனை அவனுடையத் தோழனும் தங்கையின் கணவனுமான வசுதேவனின் சொல்லைக் கேட்டு அவளைச் சிறையில் அடைக்கிறான் வசுதேவரையும் சேர்த்து. ஏன் சேர்த்து அடைத்தான் என்றுதானே கேள்வி?

கம்சன் இந்தத் தருணத்தில் மிகக் குழப்பத்தில் இருக்கிறான். அதுவரை சாதாரண ஆசாபாசங்கள் உள்ள ஷத்திரியனாக இருந்தவன் மனதில் அதுவரை உறங்கிக் கிடந்த அசுரத்தன்மை விழித்தெழுகிறது. ஆகவேதான் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் அவன் மனதில் மாறி மாறி வருகின்றன. சிறையில் அடைப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அருமைத் தங்கையைத் தனியாக அடைத்து வைக்கவும் மனதில்லை. ஏனெனில் தங்கை கன்னி கழிய வேண்டும். அக்கடமையை நிறைவேற்றாது தடுப்பவருக்கு பெரும் பாவம் சம்பவிக்கும் என்று உறுதியாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே தனியாக அடைத்து வைப்பதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லையென்றுதான் கூறவேண்டும்.

வசுதேவராவது சும்மா இருந்திருக்கலாம் என்று யோசித்தாலும் அங்கும் இடிக்கிறது. ருதுவான மனைவியுடன் கூடுவது அவர் கடமை. அக்காலச் சட்டத் திட்டங்கள் இந்த விஷயத்திலும் மிக்க உறுதியானவையே.

கம்சன் இவ்வாறுகூட யோசித்திருக்கலாம். அதாவது எட்டாவது குழந்தைதானே, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று. நாம் சாதாரணமாக படிக்கும் பாரதக் கதைகளில் முதல் குழந்தை பிறந்ததுமே அதைக் கொன்று விடுகிறான் என்றும் இவ்வாறே முதல் 6 குழந்தைகள் கொல்லப்பட்டன என்றும் கூறப்படுகிறது. ஏழாவது குழந்தையாகிய பலராமர் தேவகியின் வயிற்றிக் கருவாக இருக்கும்போதே தெய்வ சக்தியால் வசுதேவரின் இன்னொரு மனைவி ரோஹிணியின் கருப்பைக்கு மாற்றப்பட்டு விடுகிறார். கம்சனிடம் ஏழாவது குழந்தை குறைப் பிரசவத்திலேயே இறந்து விடுகிறது என்று கூறப்பட்டு விடுகிறது. பிறகு எட்டாவது குழந்தையாக விஷ்ணு ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலாகிறார். அது பின்னால் வருவது.

அப்படியானால் முதல் 6 குழந்தைகளைக் கொல்லவேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி கேட்கலாம் - கேட்கலாம் என்ன நானே வாத்தியாரைக் கேட்டு அதற்காக, "ராகவையங்கார் பெஞ்சுமேல் ஏறும்" என்ற ஆணையை என்னுடைய இந்தப் பதிவில் வரும் அதே வாத்தியாரிடம் பெற்று பெஞ்சு மேல் ஏறி உதையும் வாங்க வேண்டியதாயிற்று. அது எதற்கு இப்போது. ஆனாலும் அக்கேள்வியும் முக்கியமே, அதற்கான விடை பின்னால் வேறொரு சந்தர்ப்பத்தில் (பெஞ்சு மேல் ஏறாமல், உதை வாங்காமல்) பெற்றேன். அதை இங்கே கூறுவேன்.

"யசோதா கிருஷ்ணா" எழுபதுகளில் ஓடிய, தமிழில் டப் செய்யப்பட்ட ஒரு தெலுங்குப் படம். அதில் ரங்காராவ் கம்சனாக நடித்தார். கம்சனிடம் தேவகியின் முதல் குழந்தையைக் கொண்டு வந்து வசுதேவர் கொடுக்கிறார். அக்குழந்தையைப் பார்த்த கம்சன் மனதில் மாமன் என்ற முறையில் பாசம் பொங்க, "முதல் குழந்தைதானே, இவன் என்னைக் கொல்லமாட்டான்" என்று தனக்குத்தானே கூறிக் கொண்டு அக்குழந்தையைக் கொல்லாமல் தன்னிடம் வைத்து வளர்க்கிறான். அதே போல முதல் ஆறு குழந்தைகளும் அவனிடம் வந்து சேருகின்றன. தேவகிக்கும் நிம்மதி. அப்போதுதான் கம்சனைப் பார்க்க வருகிறார் தேவரிஷி நாரதர். கம்சனிடம் அக்கறையாகப் பேசுவது போல செந்தில் குரலில் பேசுகிறார்:

"கம்சனே, எட்டாவது குழந்தை என்று எவ்வாறு எண்ணிக்கை செய்யவேண்டும் என்று ஒன்றும் இருக்கிறது அல்லவா, ஆக கடைசியிலிருந்து எட்டாவது என்றால் முதல் குழந்தைதானே அந்த எட்டாவது" என்று பேசி அவனைக் குழப்பிவிடுகிறார். இருப்பினும் தான் பாசத்துடன் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும் கொல்ல மனமில்லாது, "சரி அப்படியானால் முதல் குழந்தையை மட்டும் கொன்று, மற்றவர்களை விட்டுவிடுகிறேனே" என்று கவுண்டமணியின் குரலில் குழம்ப, "தங்கள் அண்ணனைக் கொன்ற உன்னை மீதி ஏழு பேர் எப்படி விட்டுவைப்பார்கள்?" என்று செந்தில் குரலில் நாரதர் கேட்கிறார். இப்போதுதான் கம்சன் அந்த ஆறுகுழந்தைகளையும் கொல்கிறான்.

அப்புறம்தான் அந்த ஆறுகுழந்தைகளும் அவன், தான் காலநேமி என்ற அரக்கனாக இருந்த முற்பிறவியில், அவனுடைய ஆறுபிள்ளைகள் என்றும் அவர்கள் தங்கள் தந்தை கையால் மரணமடைய வேண்டும் என்பது அவர்கள் பெற்ற சாபம் என்றும், ஆகவே இப்பிறவியில் அவன் தங்கை வயிற்றில் பிறந்தார்கள் என்பதை அறிந்து, "அடே கோபுரத்தலையா" என்ற ரேஞ்சில் கத்தி மேலும் நொந்து போகிறான்.

இதையெல்லாம் பார்க்கும்போது இக்கால மெகாதொடர்கள் எல்லாம் ஜுஜுபிதான். ஆனால் ஒன்று, கைப்புள்ள கேட்ட, கேட்காத என்று இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்தாகிவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/08/2006

முதல் வேலை



என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இங்கு பதிவிட அன்புடன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

ரவி அவர்கள் அனுப்பிய சில மின்னஞ்சல்கள் இங்கு ஏற்கனவே பதிவாக்கப்பட்டுள்ளன.
துணைவியின் பிரிவு
மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்
Palindrome (இரு வழி ஒக்குஞ்சொல்)

படத்தை பதிவில் ஏற்றிவிட்டு ப்ரெவ்யூ பார்த்தால் பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் பார்க்க முடியாத அளவில் சிறிதாய் உள்ளன. ஆகவே அவற்றை நான் கீழே தட்டச்சு செய்கிறேன்.

முதல் வேலை
என்ன இது வேலை,
எனக்கு பிடித்தவாறு
உடையணிய உரிமைதர மறுக்கும் வேலை!!!

என் தாய்மொழி,
என் நாவில்
எட்டிப்பார்க்கக்கூட தடைபோடும் வேலை!!!

போலியான புன்னகையொன்றை,
நிரந்தரமாய் என் முகத்தில்
ஒட்டிவிட்ட வேலை!!!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்
கம்ப்யூட்டரில் கட்டிப்போட்ட
வேலை!!!

காந்தி விரட்டிய
வெள்ளையன் இரவில் நித்திரை காண,
என் நித்திரை கலைக்கும் வேலை!

குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம் சுக்குநூறாய் சிதறடித்தது,
"இரு துளி" கண்ணீர்!

"ரொம்ப சந்தோசமா இருக்குடா"
முதல் மாச சம்பளத்தை நீட்ட,
தாயின் கண்களில் தோன்றிய
ஒரு துளி!!!

"ரொம்ப கஷ்டமா இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்,
நண்பனின் கண்களில் தோன்றிய
மற்றொரு துளி!!!

- கெ. கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இட்டக் கவிதை இது

படிக்கப் படிக்க என் மனக்கஷ்டம் அதிகரித்தது.கால் செண்டர்களில் வேலை செய்வது ரொம்பக் கடினமே. அதிலும் திமிர்பிடித்த பல வெள்ளையர்கள் நம்மவர்களை தொலைபேசியில் தாறுமாறாக சாடுவதுபற்றி பல செய்திகள் வேறு வந்து விட்டன.

ஆனால் உடைவிஷயத்தில் ஏன் இந்தக் கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலம் பேசவேண்டியது வேலையின் கட்டாயம். மற்றப்படி லைட்டாக பேன்ட், இன் பண்ணாத சொக்காய், டை இல்லை என்று ஏன் இருக்கக் கூடாது? வெய்யில் மிகுந்த நம்நாட்டில் சூட், கோட் மற்றும் டை கட்டி வலம் வருபவரை பார்க்கும்போதே எனக்கு வியர்வை வருகிறதே! மேலும் போனில்தானே ஆங்கிலம் பேசக்கூடாது, போன் இல்லாதபோது பக்கத்து சீட்காரனிடம் கடைசியாக போனில் வந்த வெள்ளைக்கார சாவுகிராக்கியை திட்டி நம் "சென்னைத் தமிழில்" நாம் பேசிக் கொண்டாலே பாதி டென்ஷன் குறையுமே! ஆனால் நமக்குள்ளேயே ஆங்கிலம் பேசுவதைத்தானே நாம் கௌரவம் என்று நினைக்கிறோம்?

இப்போது இப்பதிவை இடும் நான் வெறும் எட்டுமுழவேட்டியணிந்து, பனியன்கூடப் போடாமல் ஃப்ரீயாக இருக்கிறேன் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2/07/2006

புதிர்கள் பத்து - 2

வழக்கம்போலவே சில நாட்களுக்குள் விடை கிடைக்காத வினாக்கள் கேரி ஓவர் செய்யப்பட்டு அடுத்த கேள்விகள் பட்டியலில் சேர்க்கப்படும்.

1. எம்.ஜி. ஆர். அவர்களுக்குத் தெரியாத ஒரு விஷயம் சிவாஜி அவர்களுக்குத் தெரியும். என்ன அது? இதில் பல விடைகள் வந்து குழப்பம் ஆனதால் இங்கொரு க்ளூ. இருவருக்கும் ஒரே விஷயம்தான் நடந்தது.

2. இமயமலை ஏறுவதற்காகச் அந்த மலையடிவாரத்துக்கு சென்றவன் காலை உணவுக்கு ஆம்லெட் எடுத்துக் கொண்டதால் மரணமடைந்தான். ஏன்? ஆம்லட்டை அவன் முகாமிலிருந்தே கொண்டு வந்ததால் அவன் அடுப்பு எதையும் மூட்டவில்லை என்பது நான் கொடுக்கும் ஒரு க்ளூ.

3. பாலைவனத்தில் வழி தவறிய ஒருவன் ஒரு சப்பாத்திக் கள்ளி அருகே வருகிறான். அதில் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி குத்தி வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துப் படித்த அவன் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறான்.

4. ஒரு பார்வையற்றவன் ஓர் ஆஸ்பத்திரி ரிசப்ஷனில் யாருக்காகவோ காத்திருக்கிறான். அவன் பக்கத்து நாற்காலியில் அவன் முன்பின் அறியாத இன்னொருவன் கையில் கூடையுடன் அமர்கிறான். அவனிடம் பேச்சுக் கொடுக்காமலேயே அவன் கூடையில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்கிறான். என்ன நடக்கிறது இங்கே?

5. டோண்டு ராகவன் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும்போது ஒரு திருப்பத்தில் எப்போதும் விபத்துத்தான். என்ன பிரச்சினை? முத்து (தமிழினி) அவர்களே தயவு செய்து நீங்கள் இதற்கு விடை அளிக்காதீர்கள்

6. திவான் பகதூர் ஆவுடையப்பர் ஒரு காரியம் செய்தார். அதிலிருந்து அவர் மேல் பெருமதிப்பு வைத்திருந்த சென்னை ராஜதானி கவர்னர் அவருடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். ஏன்? (1930-ல் இந்த நிகழ்ச்சி நடந்தது, ஆனால் 2006-லும் இது நடக்கக் கூடும்)

7. தான் பலான தேதி பலான கிழமை பலான மணிக்கு இறக்கப் போவதாக அறிவித்தார் ஒருவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள நால்வரில் அவர் யாராக இருக்கும்?
அ: கபீர்தாஸ் ஆ: சுவாமி விவேகானந்தர் இ: ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஈ: ராமமூர்த்தி.
விளக்கமும் கூற வேண்டும்.

8. ஒரு பணக்காரரின் பிள்ளையின் 10-ஆம் பிறந்த நாள் விழா 1988-ல் நடக்கிறது ஆனால் அப்பிள்ளையின் 20-ஆம் பிறந்த நாள் விழாவோ 1978-ல் நடக்கிறது. பிள்ளை பிறந்தது என்னவோ கி.பி.யில்தான்

9. ஒரு சித்திரச் சாலையில் சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சைத்திரிகரின் பல சித்திரங்களை அடுக்க அவருக்கு ஒரே இடம்தான் கொடுக்கப்பட்டது. 2 மணியளவில் அவர் பார்வைக்கு மாட்டிய சித்திரத்தின் எண் 300, 9 மணிக்கு பார்வைக்கு வைத்த சித்திரத்தின் எண் 90 என்றால் 5 மணிக்கு அவர் பார்வைக்கு பொருத்திய சித்திரத்தின் எண் என்னவாக இருக்கும், ஏன்?

10. டோண்டு ராகவனும் பாராவும் ஒரு குறிப்பிட்ட 5 செட் டென்னிஸ் போட்டியில் ஆடினர். இருவருமே 3 செட்களில் வெற்றி பெற்றனர். என்ன கூத்து இது? வெற்றி பெற்றது யார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது