
நேற்று மாலை (20.09.2008) கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சாரு நிவேதிதா பங்கு பெறும் கலந்துரையாடல் பற்றிய பதிவை பார்த்து விட்டு அங்கு செல்லும்போது மணி சரியாக மாலை 05.15. "கிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று அப்பதிவில் கூறப்பட்டதை மனதில் வைத்து மூன்று மாடிகள் லிஃப்ட் இல்லாமல் ஏறினால் அங்கு அச்சமயம் பா. ராகவன் மட்டும் இருந்தார். என்னை வரவேற்ற பா. ராகவன் மைக் டெஸ்டிங் செய்யும் தோரணையில் டோண்டு ராகவனை வரவேற்பதாக மைக்கில் கூறினார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். முதலில் வந்தது ஐக்காரஸ் பிரகாஷ். பிறகு நாராயணன், ஹரன் பிரசன்னா. சற்று நேரத்தில் லக்கிலுக்கும் வந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொன். மகாலிங்கம் என்னும் பத்திரிகையாளர் (இவர் ரேடியோ சிங்கப்பூரில் பணி புரிகிறார்), நவியா மார்க்கெட்ஸ் லிமிட்டடின் வைஸ் பிரெசிடெண்ட் வள்ளியப்பன் ஆகியோரிடம் கார்டு பரிமாறிக்கொண்டேன்.
பத்ரி அவர்கள் மிக மிக சுருக்கமாக துவக்க உரையைக் கூறி மைக்கை சாருவிடம் தந்தார். சாரு பேசும்போது எல்லோரும் தங்களுக்கு பேசவராது என்ற டிஸ்கியை முதலில் போட்டு விட்டு பிறகு தங்கு தடையின்றி பேசுவதாகவும், ஆனால் தனக்கு நிஜமாகவே பேச வராது என்று கூறிவிட்டு, மேலே கூறப்பட்ட டிஸ்கிதான் அவரது விஷயத்திலும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நன்றாகவே பேச ஆரம்பித்தார்.
இணையத்தின் உபயத்தால் பலர் எழுத வந்துள்ளதை சுட்டிக் காட்டினார். ஆனால் வருபவர்கள் ஜஸ்ட் லைக் தட் எழுதுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றும். உடனேயே சிறுகதை, கவிதை ஆகியவற்றை போட முயற்சிப்பதாகவும் கூறினார். அதெல்லாம் செய்வதற்கு முன்னால் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும் என்றும் படிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவரது முக்கிய கம்ப்ளைண்ட் என்னவென்றால் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை என்பதே. ஒரு சராசரி மலையாள எழுத்தாளருக்கோ, வங்காள எழுத்தாளருக்கோ இந்த பிரச்சினை இல்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதையும் கோடி காட்டினார். இர்ண்டு பஞ்சாபியரோ, மலையாளியோ தங்களுக்குள் தத்தம் தாய்மொழியில் பேச தயங்காத போது, தமிழர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அவலத்தையும் சுட்டிக் காட்டினார். நல்ல தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.
சுருக்கமாகவே பேசிய பிறகு அவர் கேள்விகளுக்கு நேரம் தந்தார். முதல் கேள்வி கேட்டது அடியேன். மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றும் அதற்கு முதலில் மூல ஆசிரியரின் அனுமதி வேண்டும் என்றும், அப்படியே மொழிபெயர்த்தாலும் அதற்கான சன்மானம் அவ்வளவாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினேன். காலஞ்சென்ற சமுத்திரம் அவர்கள் என்னை தொலைபேசியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்பு கொண்டு அவரது "அடுக்கு மல்லி" நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கூறியதை நான் இதற்கு மேற்கோளாகக் காட்டினேன். நான் கேட்ட தொகைக்கு சிறிதும் சம்பந்தமில்லாது அதன் மொழிபெயர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை இருந்ததால் அதை நான் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் கூறினேன். நான் கூறியதை சாருவும் ஒத்து கொண்டார். இருப்பினும் மொழிபெயர்ப்புகளின் அவசியத்தை மறுபடி வலியுறுத்தினார். இன்னொருவர் எழுந்து புனைக்கதை இல்லாத எழுத்துக்களை பற்றி கேள்வி கேட்டார். அவையும் முக்கியமே என சாரு கூறினார்.
தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்தது ஒருபக்கமிருக்க ஆங்கிலமும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை என்பதை ஒருவர் கூற அதையும் சாரு ஆமோதித்தார். இந்த நிலைக்கு முக்கியக் காரணமே ஆங்கில கான்வெண்டு பள்ளிகளை ஒரு குடிசைத் தொழில் ரேஞ்சுக்கு தெருவுக்கு தெரு கொண்டு வந்ததுதான் என்றார். ஆங்கில மொழியை போதிப்பது சரியான தரத்தில் இல்லை என்பதையும் அவர் கூறினார்.
அவர் ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களை பற்றி கூறி அவற்றை ஆங்கில மொழியாக்கத்தில்தான் படித்ததாகக் கூறினார். இவ்வளவு பேசும் இவர் நிஜமாகவே பிரெஞ்சு கற்று தேர்ந்திருந்தால் சம்பந்தப்பட்ட புத்தகங்களை பிரெஞ்சிலேயே படித்து மகிழ்ந்திருக்கலாம் என்ற எனது ஆதங்கத்தை நான் அவரிடம் கூற அவர் தனக்கு வேற்று மொழி கற்று கொள்வதில் ஒரு விதமான மெண்டல் பிளாக் இருப்பதாகக் கூறினார். இது நிஜமாகவே துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் என்ன செய்ய அதுதான் வாழ்க்கை. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பேசப்படும் நாடுகளில் அனாயாசமாக சென்று வர இயலும் எனக்கு வெளிநாடுகளுக்கு செல்வதில் எவ்வித ஆர்வமும் இல்லை என்பதும் நகை முரண்தானே.
கமகமவென மணத்துடன் சமோசாக்கள் மற்றும் சுவையான தேநீர் வழங்கப்பட்டன. கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் சில புத்தகங்கள் சாருவுக்கு தரப்பட்டன. மீட்டிங் முடிந்ததும் கீழே உள்ள புத்தகக் கடைக்கு சென்று நான் தேவன் அவர்கள் எழுதிய "சி.ஐ.டி. சந்துரு" மற்றும் லிவிங் ஸ்மைல் எழுதிய "நான் வித்யா" புத்தகங்களையும் வாங்கினேன்.
மீட்டிங் சமயத்தில் குறிப்புகள் எடுத்து கொள்ளாததால் இப்பதிவை நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். இன்று காலை பத்ரிக்கு போன் செய்து அவர் எடுத்த புகைபடத்தை அனுப்புமாறு கேட்டு கொள்ள அவரும் அனுப்பியுள்ளார். அதுதான் பதிவின் ஆரம்பத்தில் உள்ள படம். அவருக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை:
சாரு அவர்கள் தனது தளத்தை கட்டணத் தளமாக மாற்றவிருப்பதாக அதில் கூறியிருந்தார். அது பற்றி கேட்டதற்கு ஆனானப்பட்ட சுஜாதாவுக்கே அம்பலம் பே சைட்டில் 14 உறுப்பினர்கள்தான் என்ற தகவல் வந்ததாகவும் ஆகவே அந்த எண்ணத்தையே தான் விட்டுவிட்டதாகவும் சிரித்தவன்ணம் கூறினார்.




