5/07/2009

டோண்டு பதில்கள் - 07.05.2009

சிவகுமார்:
1. சொந்தமாக தொழில் செய்வது நல்லதா? 20 - 25 வருடங்கள் உத்யோகத்தில் இருப்பது நல்லதா?
பதில்: இதே விஷயம் பற்றி நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டேன். அதிலிருந்து சில வரிகள்:
ஒரு சராசரி இந்தியக் குடிமகன் மாதசம்பள வேலையைத்தான் முதலில் விரும்புகிறான் என்பது நான் அறிந்தவரையில் நிலை. அதிலும் அரசு வேலை என்றால் டபுள் ஓக்கே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலில் மின்வாரியத்தில் இளம் பொறியாளர் வேலைக்குத்தான் மனு போட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது. ஆகவே அந்த வேலை கிடைக்கவில்லை. அதாவது, அதற்கு முந்தைய ஆண்டு போட்டிருந்தால் கிடைத்திருக்கக்கூடும். ஆனால் அப்போது என் அதிர்ஷ்டம் நான் கடைசி ஆண்டு பரீட்சையில் கம்பார்ட்மெண்ட் வாங்கினேன். நிஜமாகவே எனது நல்வினைப்பயனே அது. இல்லாவிடில் ஜெர்மன் படித்திருக்க மாட்டேன். பின்னால் பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் படித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பதிவு அதைப் பற்றி இல்லை.

நான் சொல்ல வந்தது என்னவென்றால், எனது டிஃபால்ட் விருப்பம் சம்பளத்துடன் கூடிய வேலைக்குத்தான். அதில் 23 ஆண்டுகள் கழித்த பிறகே இப்போதைய சொந்த தொழிலுக்கு வந்தேன்.

மற்ற தொழில்களை பற்றி எனக்கு சொந்த அனுபவம் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்புத் துறையை பற்றி ஒன்று கூற முடியும். எடுத்த எடுப்பிலேயே அதை முழுநேரத் தொழிலாகக் கொள்ள முடியாது என்பதே. ஒன்று உங்களிடம் ஏற்கனவே நிறைய பணம் இருக்க வேண்டும், அதாவது உங்கள் அப்பாவிடம். அவரும் உங்களுக்கு முழுமனதோடு ஆதரவு தர வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் முதலில் நல்ல கணினி வேண்டும், அகலப் பட்டை இணைய இணைப்பு வேண்டும். அச்சடிக்கப்பட்ட நல்ல அகராதிகள் வேண்டும். அவையும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் தனி கவனம் செலுத்த விரும்பும் துறைக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கெல்லாம் பணம்? கணக்கு பார்ப்போமா?

கணினி ரூபாய் முப்பதாயிரத்துக்கு குறையாமல் ஆகும். தவறு என்றால் எனக்கு சரியான தொகையை பின்னூட்டமாக இடுங்கள். விண்டோஸ் எக்ஸ் பி ப்ரோ குறைந்தபட்ச தேவை. பிறகு அகலப்பட்டை இணைய இணைப்பு. மோடம் முதலியவை ரூபாய் 2000/க்கு மேல் ஆகும். மாதக் கட்டணம் குறைந்த பட்சம் ரூபாய் 800. அகராதிகள்? உதாரணத்துக்கு ஜெர்மன் -> ஆங்கில பொறியியல் அகராதி ரூபாய் 5000. பொது அகராதி ரூபாய் 1000. பிறகு இருக்கவே இருக்கின்றன கட்டட இயல் அகராதி, சிமெண்ட் சம்பந்தப்பட்ட அகராதி முதலியன. மற்ற துறைகளுக்கான அகராதியும் உண்டு. இதெல்லாம் சேர்த்து தேவையான முதல் தொகை அரை லகரத்தைத் தாண்டி விடும். ஆகவே பணக்கார, இளகிய மனதுடைய அப்பா தேவை. :)


2. ஆங்கில அறிவை மேம்படுத்த என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?
பதில்: ஆங்கிலம் என்று மட்டும் இல்லை எந்த மொழி அறிவையுமே மேம்படுத்த சில பொது வழிகள் உள்ளன. சம்பந்தப்பட்ட மொழியில் வரும் புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை படித்த வன்ணம் இருக்க வேண்டும். அம்மொழியில் விடாது கூச்சமின்றி பேசவும் வேண்டும். அம்மொழியில் வரும் ரேடியோ மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை தவறாது கேட்டு வரவேண்டும். தவறில்லாமல் எழுதும் பழக்கம் வருவதற்கு அதிகம் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். மொழியை முறையாக கற்கும்போது இலக்கணத்தை முதலில் கையகப்படுத்தல் அவசியம்.

3. வேற்று மொழி கதைகள் படிக்கும் போது எத்தகைய முறையைக் கையாண்டால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்?
பதில்: எந்த மொழியாக இருப்பினும், கதையை படிக்கும்போது கற்பனைக்கு தடைபோடாது அவற்றுக்கு சிறகுகள் பொருத்தவேண்டும். படிக்கும்போது மனதில் காட்சிகளாக விரிந்தால் மிகவும் மயிர்கூச்செறியும் அனுபவங்கள் ஏற்படும். ஹாரி பாட்டர் 7-ஆம் புத்தகத்தில் கடைசி சண்டை காட்சி வர்ணனைகள் படிக்கும்போது என்னால் நாற்காலியில் அமர இயலவில்லை. அவ்வளவு உணர்ச்சிவசப்பட்டேன்.

4. தங்களுக்கு தமிழ் தவிர இந்திய மொழிகள் என்னென்ன தெரியும்?
பதில்: ஹிந்தி மட்டுமே; அம்மொழியை பொருத்தவரை மொழிபெயர்க்கும் அளவுக்கு தெரியும். நன்கு பேசவும் தெரிவதால் அம்மொழி பேசுபவர்களுக்கு துபாஷியாகவும் செயல்பட இயலும்.

5. சமஸ்கிருதத்தில் தங்களுடைய புலமை எத்தகையது?
பதில்: சுத்தமாக லேது. சடங்குகள் செய்யும்போது மந்திர ரூபத்தில் கேட்பதுடன் சரி.

6. ஒரு வாரத்திற்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் வருமானம் சார்ந்த வேலைக்காக ஒதுக்குவீர்கள்?
பதில்: கைவசம் இருக்கும் வேலையை பொருத்து அமையும்.

7. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எவ்வளவு நேரம் டிவி பார்ப்பீர்கள்?
பதில்: மேகலா, எங்கே பிராமணன், கோலங்கள். ஆக நிச்சயமாக ஒன்றரை மணி நேரம். அதிலும் விளம்பர இடைவேளை சமயங்களில் கணினி அறைக்கு சென்றுவிடுவேன். விளம்பரங்கள் முடியும்போது என் வீட்டம்மா எனக்கு குரல் தருவார். மற்றப்படி ஏதேனும் சுவாரசியமான டயலாக்கோ, பாடலோ காதில் பட்டால் சிறிது நேரம் போய் கேட்பேன்.

8. பே சானல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நம்மிடம் பணம் வசூல் செய்யும் அத்தகைய சானல்களுக்கு ஏன் விளம்பரக் கட்டுப்பாடு ஏன் விதிக்கக்கூடாது? (விஜய் டிவியில் விளம்பர இடைவேளை மிகமிக அதிகம்)
பதில்: நாம் கொடுக்கும் பணத்தைவிட பலமடங்கு விளம்பரதாரரிடமிருந்து கிடைப்பதால் நீங்கள் சொல்வது நடப்பது துர்லபமே. நாம் ஏன் அதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டும்? வேறு வேலைகளை பார்க்கலாமே? விளம்பரங்கள் முடிந்ததும் தெளிவாக மியூசிக் வருமே, அப்போது டிவி பக்கம் போனால் போயிற்று.

9. உங்கள் வீட்டில் கேபிளா டிடீஎச்-ஆ? கேபிள் எனில் உங்கள் பகுதியில் எவ்வளவு வசூலிக்கிறார்கள்? டிடீஎச் எனில் எந்த கனெக்ஷன் வைத்துள்ளீர்கள்?
பதில்: கேபிள் டிவி, மாதம் 110 ரூபாய். அதுவே தேவைக்கும் மேல் நிகழ்ச்சி சேனல்களை தருகிறது. ஸ்போர்ட்ஸ் சேனலில் சுவாரசியமே இல்லை. காமெடி சேனல் இலவசமாகவே, கொடுக்கும் மாத சந்தாவுக்கு உட்பட்டே கிடைக்கிறது.

10. எங்கே பிராமணன் இ-புத்தகம் எங்கே கிடைக்கும்? (சுட்டி தந்தால் தன்யன் ஆவேன். சீரியல் அநியாயத்திற்கு டிவிஸ்ட் ஆகிறது)
பதில்: இ-புத்தகம் எங்கும் கிடைப்பதாக தெரியவில்லை. சீரியல் புத்தகத்திலிருந்து ஏற்கனவே மிகவும் வேறுபட்டு விட்டது. இப்போது புத்தகம் படித்தால் குழப்பம்தான் மிஞ்சும். சீரியல் மிக நன்றாகவே எடுக்கப்பட்டு வருகிறது. செய்யப்பட்ட மாறுதல்கள் புத்தகத்துக்கு மேலும் மெருகூட்டுகின்றன என்பதுதான் நிஜம்.

11. எங்கே பிராமணன் சீரியலில் ஏன் ஐயங்கார் கதாபாத்திரங்கள் வரவில்லை? சோ ஐயர் என்பதாலா? (வரப்போகிறது என்று சொல்ல வேண்டாம் - டைடிலில் ஒரு ஐயங்கார் வருகிறார்)
பதில்: சீரியல் முழுவதுமே யார் பிராமணன், அவன் எங்கே இருக்கிறான் என்பது பற்றித்தான். ஆகவே இதில் ஐயர் என்ன, ஐயங்கார் என்ன?


எம். கண்ணன்:
1. எங்கே பிராமணன் தொடரில் பாத்திரத் தேர்வுகள் மிக அருமை தானே? நல்ல ஃபிகர் என யாரைச் சொல்லுவீர்கள்? கிருபாவின் மனைவியாக வரும் சங்கீதாவா? இல்லை சமையல் மாமியா?
பதில்: கிருபாவின் மனைவி பெயர் பிரியா அல்லவா, அல்லது அப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகையை குறிப்பிடுகிறீர்களா? மற்றப்படி நிஜமாகவே சொல்கிறேன், எல்லா ஆண்/பெண் கதாபாத்திரங்களுக்குமே மிக அருமையான முறையில் நடிகர்கள்/நடிகையர் தேர்வு நடந்துள்ளது. நடிகை யாரை பார்த்தும் எனக்கு நீங்கள் சொன்ன “ஃபிகர்” என்ற வார்த்தையே நினைவுக்கு வரவில்லை. நல்ல தேஜஸ் ஒவ்வொரு முகத்திலும். ஏதோ பக்கத்தாத்தை எட்டிப் பார்ப்பது போல யதார்த்தமான நிகழ்ச்சிகள், சம்பாஷணைகள். அவர்களை நேரில் பார்த்தால் கூட முகம் மட்டுமே பார்த்து பேசத்தான் தோன்றும்.

2. குமரி முனையில் வசிக்கும் ஜெயமோகனை பல ஊர்களிலிருந்தும் கூப்பிட்டு (வெளிநாடுகள் உட்பட) அவர் பல இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறதே? ஆனால் சென்னை மாநகரத்திலே வசிக்கும் சாரு நிவேதிதாவை யாரும் கூப்பிடுவது போல் தெரியவில்லையே ? சக வலைப்பதிவர் என்ற முறையில் ஏன் என நீங்கள் நினைக்கீறீர்கள்?
பதில்: இல்லையே, சாருவும் ஸ்பெயின், அமெரிக்கா எல்லாம் அடிக்கடி போகிறார் போலிருக்கிறதே.

3. ஆண் வாரிசு இல்லையே என வருத்தப் பட்டதுண்டா? ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு நீங்கள் கூறும் மனவியல் அறிவுரை என்ன?
பதில்: இப்போது 63 வயதில் வருத்தப்பட்டு என்ன ஆகப்போகிறது? பைதிவே இக்காலத்தில் ஆணென்ன, பென்ணென்ன? சொல்லப்போனால் பெண் குழந்தைகளிடமிருந்துதான் அதிகம் பாசம் கிடைக்கும்.

4. ஜெர்மனியும் பிரான்ஸும் போகாமலேயே மொழிபெயர்ப்பு வேலைகள் செய்து வருகிறீர்கள். அங்கு ஒரு முறை சென்று அவர்கள் (தற்போது) வாழ்க்கை நடைமுறையை கண்டு வந்தால் உங்கள் மொழிபெயர்ப்பு இன்னும் சிறக்கக் கூடும் அல்லவா?
பதில்: பிரான்சும் ஜெர்மனியும் இத்தாலியும் எனது வீடு தேடி வரும்போது நான் ஏன் போக வேண்டும்? பாஸ்போர்ட் கூட என்னிடம் இல்லையே. ஒரு முறை ஸ்விட்சர்லேந்திலிருந்து ஜெர்மன் தாய்மொழிக்காரர்கள் இருவர் வந்திருந்தனர். நான் பேசுவது ஸ்விஸ் ஜெர்மன் என கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்தனர்.

5. குமுதத்தில் வரும் ஜாதிகள் பற்றிய தொடர் ஏன் இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளில் எடுத்துப் போடுவதில்லை? அந்தந்த ஜாதிகளில் பிரபலங்களைப் பற்றிய சிறப்புச் செய்திகள் வருகின்றனவே? (குமுதம் பே சைட் ஆனது தான் காரணம் என சொல்லமாட்டீர்கள் என எண்ணுகிறேன்)
பதில்: முக்கியக் காரணமே சோம்பேறித்தனம்தான். இலவச சைட்டாக இருந்தவரை காப்பி பேஸ்ட் செய்ய முடிந்தது. இப்போதெல்லாம் கை ஒடிய தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது என்பது ஒரு காரணம். இன்னொரு காரணம் என்னை மிகவும் இன்ஸ்பைர் செய்த நாடார் சாதிக்கு பிறகு பதிவு போட மோட்டிவேஷன் இல்லை. ஆகவே காப்பி பேஸ்ட் இல்லை என ஆனவுடன் அப்படியே விட்டு விட்டேன்.

6. கம்ப ராமாயணம், வால்மீகி ராமாயணம் - எது பிடிக்கும்? ஏன்? உங்களுக்குப் பிடித்த அதன் சுவையான / நீங்கள் ரசித்த பாடல்களை / வர்ணனைகளை எடுத்து பதிவாக (தொடர்ந்து - வாரம் ஒருமுறை) பகிரலாமே? (வெறும் பாடல் அதன் பொருள் என்றில்லாமல் கொஞ்சம் விரிவாக)
பதில்: கேள்வி மிகவும் தவறான ஆளுக்கு வந்திருக்கிறது. நண்பர் ஹரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு செல்ல வேண்டிய கேள்வி.

7. கதா காலட்சேபம் செய்யும் பௌராணிகர்கள் குறைந்துவிட்டார்களே? சுகி.சிவம், நாகை முகுந்தன் என சிலர் இருந்தாலும் எல்லோரும் வாழ்வியல் பக்கம் ஒதுங்கிவிட்டனரே? ஒரு டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரிகள் போலவோ, கிருபாநந்த வாரியாரைப் போலவோ, கமலா மூர்த்தி போலவோ ஆன்மீகம்/பக்தி பற்றி சொல்ல பெரியவர்கள் குறைந்ததற்கு என்ன காரணம்?
பதில்: எல்லாம் சப்ளை மற்றும் டிமாண்ட் விஷயம்தான். பௌராணிகர்களுக்கான தேவை குறைந்து விட்டது. அவ்வளவே. மெகா சீரியல்களின் தாக்கம்.

8. பெரும்பாலும் அரட்டையாகவே நடைபெறும் பதிவர் சந்திப்புகளுக்கு 'சொந்த' கார் வாடகைக்கு எடுத்துச் செல்ல எப்படி கட்டுப்படியாகிறது? பழவந்தாங்கலில் இல்லை வேளச்சேரியில் ரயில் பிடித்து போகலாமே?
பதில்: அவ்வளவு ஏன், எங்கள் வீட்டின் எதிரில் இருக்கும் டெர்மினசிலிருந்து கிளம்பும் M45B M21G பஸ்கள் கூட நேரே காந்தி சிலைக்குத்தானே வருகின்றன? பஸ்களில் செல்வது அல்லது “எனது” காரில் செல்வது ஆகியவற்றின் அனுகூல பிரதிகூலங்கள் பற்றி நான் இட்ட இப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கு பொருத்தமாக இருக்கும்.
“கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் சென்னையை விட்டு பிரிந்திருந்த சமயத்தில் எனக்கு அடிக்கடி வந்த கனவு பற்றி ஏற்கனவே பதிவு போட்டுள்ளேன். அது எனது நங்கநல்லூர் வீட்டுக்கு மட்டுமல்ல, சென்னைக்கும் சேர்த்துத்தான். வேலை அதிகமாக இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கால் டாக்சியில்தான் அதிகம் செல்வேன். அதில் உள்ள ஒரே பிரச்சினை என்னவென்றால் நகரத்தின் பல அனுபவங்கள் கிடைக்காமல் போவதுதான். அவற்றில் முக்கியமானது பஸ்களில் செல்வது. ஆகவே கடந்த சில மாதங்களாக எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் பஸ்களில் செல்வது என ஆரம்பித்துள்ளேன்”.

ஒரு பொருளாதாரக் கணக்கு போடுவோமா? கால் டாக்சியில் செல்வதால் நேரம் குறைந்த பட்சமாக இரண்டு மணி நேரம் மிச்சமாகிறது. 5 மணி நேர டாக்சி, 30 கிலோமீட்டர், சார்ஜ் 400-450 வரை. கைவசம் வேலை இருந்து சேவ் ஆன அந்த இரண்டு மணி நேரமும் கணினியில் வேலை செய்கிறேன் என வைத்து கொள்ளுங்கள். 1400 ரூபாய் அனாயாசமாக வந்து விடும். அதில் டாக்சி போக மீதி நம் கைக்குத்தானே. அதுவும் வாடிக்கையாளர்கள் எல்லாம் வேலையை நாளைக்கு முடித்துத் தா என்று கூட கேட்பதில்லை. “எனக்கு மொழிபெயர்ப்பு நேற்றைக்கே வேண்டும்” என சொல்பவர்கள்தான் அனேகம். அவ்வளவுதான் விஷயம்.

9. உங்களுடைய கருத்துகளில் உறுதியாக நின்றாலும், அனைவரிடமும் நட்பு பாராட்டும் இந்த பன்முகத் தன்மை உங்களுக்கு வந்தது உங்கள் பம்பாய், டில்லி வாசத்தினால் என்று கூறினால் சரிதானே? பொதுவாக வடக்கில் (தமிழகம் / தென்னகம் விட்டு வெளியே) பல வருடங்கள் வாழ்ந்தவர்களுக்கு தமிழகத்திலேயே இருந்தவர்களை விட கொஞ்சம் பரந்த மனது என நண்பன் ஒருவன் கூறினான். உங்கள் கருத்து என்னவோ?
பதில்: இதில் என்ன ஆச்சரியம், நான் மட்டும்தானா அப்படி? பதிவர் சந்திப்புக்கு வரும் எல்லோருமே நேரில் பார்க்கும்போது மலர்ந்த முகத்துடனேயே பேசுவோமே. மற்றப்படி நீங்கள் குறிப்பிட்ட இந்த பன்முகத்தன்மை எனக்கு சமீபத்தில் 1971-ல் என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமையன்று வந்தது.

10. நங்கநல்லூர் வட்டாரங்களில் தற்போது வீட்டு வேலை செய்ய வரும் பெண்மணிக்கு எவ்வளவு மாதச் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது? சம்பளம் தவிர வேறு அடிஷனல் உண்டா? (உதா: காபி, மாதம் 2 நாட்கள் லீவு; வருடம் 2 புடவை என)? நகரத்தில் வேலைக்கு நம்பகமான ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறதே?
பதில்: ஒரு வேளை வீட்டை பெருக்கி துடைத்து, காலை மற்றும் மாலை பாத்திரம் தேய்க்க மாதத்துக்கு 500 ரூபாய். துணி துவைக்கச் சொன்னால் அதிகப்படியாக 200 ரூபாய். காலை ஒரு வேளை காப்பி, தீபாவளிக்கு ஒரு மாத சம்பளம் போனஸ், மாதம் 3 நாட்கள் லீவ். நீங்கள் சொல்வதுபோல நம்பகமான ஆள் கிடைப்பதும் கஷ்டமே.


சேதுராமன்:
1. சோனியா காந்தி கூட்டத்தை ரத்து செய்து விட்டாங்களாமே?
பதில்: புத்திசாலித்தனமான முடிவு. தமிழகத்தில் அவருக்கு வெளிப்படையான எதிர்ப்பு உருவாகியுள்ளதை யாராவது சொல்லியிருப்பார்கள் போல. இப்போது கூட்டத்துக்கு வந்து அது சந்தேகத்துக்கிடமின்றி ருஜுவாகி விட்டால் என்னாவது என்ற தயக்கம் அவருக்கிருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. Discretion is the better part of valor.

அதே சமயம் அம்மாதிரி தயக்கம் இல்லாமல் வேறு காரணங்களுக்காக அவ்வாறு செய்திருந்தால் அது துரதிர்ஷ்டவசமானதே. பயம் என மற்றவர்கள் முத்திரை குத்தி விடுவார்கள். அவுரங்கசீப்பும் அவன் சகோதரன் தாரா ஷுகோவும் அரியணைக்காக சண்டை போட்டபோது, திடீரென தாரா யானையிலிருந்து இறங்கி குதிரைக்கு மாறினார். ஓரிரு நிமிடம் அவர் கண் பார்வையிலிருந்து மறைய, “தாரா இறந்து விட்டார்” என கோஷம் எழுந்து, அவரது வீரர்கள் பயந்து ஓட ஆரம்பித்தனர். இறுதி வெற்றி அவுரங்கசீபுக்குத்தான்.

2. பிரபாகரன் சொந்த ஊர் கொல்லமாமே? இன்று காலை என்.டி.டிவி. அவங்க சொந்தக்காரங்களை பேட்டி எடுத்திருக்காங்க தெரியுமா?
பதில்: பிரபாகரனின் அத்தை மகள் கொல்லத்தில் இருப்பதாக அறிகிறேன். இந்த உரலைப் பார்க்கவும்.

3. பாரதி ராஜா, சேரன், சீமான் - சினிமாக்காரங்கள் திட்டம் சோனியா காந்தி கூட்டம் ரத்திலே முடிந்துள்ளது - இது இன்னும் தொடருமா?
பதில்: காங்கிரசுக்கு சுயபலம் தமிழகத்தில் லேது என்பது சோனியா காந்திக்கு நன்றாகவே தெரியும். இங்கு இப்போது பிரசாரத்துக்கு வந்து யாராவது தன்னையும் “சிதம்பரம்” செய்தால் என்ன செய்வது என அவர் பயந்திருக்க வேண்டும். மேலே என்ன நடப்பதானாலும் தேர்தலுக்கு பிறகுதான் பார்க்க வேண்டும்.

4. ராஹுல் ஸ்ருதி இறங்குகிறதே? ஏன்?
பதில்: எந்த விஷயத்தில் சுருதி இறங்குகிறதாம்? ஒருவேளை யாராவது உ.பி. யில் நடக்கப் போவதை அவருக்கு ஜோசியம் சொல்லியிருப்பார்களோ!

5. இந்த களேபரத்திலே பா.ஜ.வுக்கு ஏதாவது சான்ஸ் கிடைக்குமா?
பதில்: புத்திசாலித்தனமாக செயல்பட்டால் ஏதாவது நடக்கலாம். ஆனால் தமிழகத்தை பொருத்தவரை கட்சி ஐயோ பாவம் நிலையில்தான் உள்ளது.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/06/2009

எங்கே பிராமணன் - பகுதி - 65

பகுதி - 65 (05.05.2009):
திருச்சியில் சிவராமன் வீட்டில் பாகவதரின் மனைவி ஜானகி ராமசுப்பு விஷயமாக மாட்டுப் பெண் ராஜியிடம் விளக்கம் கேட்கிறார். அவளும் நீலகண்டன் தன்னிடம் சொன்ன விஷயத்தை கூறி, தான் பயந்து விட்டதாகவும், ஆகவே தன் கணவனிடமிருந்து கையெழுத்து வாங்கி ஹாஸ்டலில் கொடுத்ததாகவும் பொய் சொல்கிறாள். பிறகு இது பற்றி அவர்கள் சிவராமனிடம் பேச வேண்டாம் என்பதையும் நாசூக்காக கூறிவிடுகிறாள். அப்பாவியான ஜானகி மாமியும் அவ்வாறே வாக்களிக்கிறார்.

கிரியின் வீட்டில் அவன் தாயார் தன் கணவனிடம் வேம்பு சாஸ்திரி வீட்டில் அவர் நடந்து கொண்டது பற்றி கேட்கிறாள். அவர் தனது தரப்பை தெளிவாகவே கூறுகிறார். அதாவது வேம்பு வீட்டில் அவரைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையெனவும், ஒப்புக்காக வந்ததாகவும் கூறுகிறார். பிற்காலத்தில் தன் பையனை பார்த்து அவர்கள் வீட்டினர் ஏதேனும் அவமரியாதையாகவும் பேசக்கூடும் என்றும் கூறுகிறார். தன் மனைவியின் ஜாதியிலேயே அவள் பெண் பார்க்கலாம் என்றும், ஆனால் பெண்வீட்டார் அத்தனை பேரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், அது வரையில் தானும் தன் பிள்ளையும் காத்திருக்க போவதாகவும் கூறுகிறார். முத்தாய்ப்பாக வேம்பு சாஸ்திரிகளின் குடும்பம் அப்படிப்பட்டதில்லை எனவும் கூறி அப்பால் செல்கிறார். கிரியின் தாயார் திகைக்கிறாள்.

சிவராமன் வீட்டில் அவனுக்கு தன் தாயின் கோபத்துக்கு காரணம் தெரியமால் திகைக்கிறான். ராஜியிடம் கேட்க, அவள் சாமர்த்தியமாக அவர்கள் சென்னை ட்ரான்ஸ்ஃபருக்காக தத்தம் அலுவலகத்தில் கொடுத்த கடிதம் பற்றி குறிப்பிட்டு அது பற்றி தங்களுக்கு முன்னாலேயே தெரிவிக்காததுதான் அவர்கள் கோபம் எனக் கூறி மறுபடியும் திசை திருப்புகிறாள். சிவராமன் தன் தாயிடம் இது பற்றி கூறி மன்னிப்பு கேட்க, ஜானகியோ இன்னொரு கடிதத்தை நினைத்து பேச, இந்த குழப்பத்தை ராஜி பயன்படுத்தி தப்பிக்கிறாள்.

காஞ்சிபுரத்தில் பாகவதரை நாடி சைக்கியாட்ரிஸ்ட் மார்க்கபந்து வருகிறார். அசோக்கால் தனக்கு ஆன்மீகத்தில் ருசி ஏற்பட்டதாகக் கூறி அவர் சில சந்தேகங்கள் எழுந்ததாகவும், அது பற்றி அசோக்கை கேட்க, அவன் அவரை பாகவதரிடம் அனுப்பியதாகவும் கூறுகிறார். பாகவதரும் தான் அவரது எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

“அது எப்படி, பாகவதருக்கு எல்லாமே தெரியுமா” என ஆச்சரியத்துடன் சோவின் நண்பர் சோவை கேட்கிறார். சோ கூறுவதாவது, பாகவதரை போன்று நிறைய படித்தவர்களுக்கு பல விஷயங்களில் ஞானம் உண்டு, ஆனாலும் எந்தெந்த விஷயங்கள் தமக்கு தெரியாது என்பது பற்றி அவர்களுக்கு தெளிவு இல்லை. இதையே ராஜா பத்ருஹிரி ஒரு ஸ்லோகமாக இவ்வாறு கூறுகிறார், ‘நீதியெல்லாம் தெரிந்தவன் உண்டு, சாத்திரம் அறிந்தவனும் உண்டு, மகா ஞானியும் உண்டு, ஆனால் தனக்கு எது தெரியாது என அறிபவர்கள் அபூர்வம்’.

இப்போது நண்பர் சோவை கேட்கிறார். “இந்த பாகவதரை விடுங்கள், உங்களுக்கு எல்லாம் தெரியுமா”? என. சோ கூறுகிறார், தான் எழுதும் பல புத்தகங்களுக்காக பல ரெஃபரன்ஸ்களை படிக்கிறார் (இப்போது அவற்றைப் பட்டியலிடுகிறார். வீடியோவிலே பார்த்து கொள்ளவும்). ஏதோ அவற்றிலிருந்து பீராய்ந்து அவ்வப்போது சரியான சந்தர்பத்தில் கூறுவது மட்டுமே தான் செய்வது என்றும் கூறுகிறார். ஆனால் இதற்கே சோ என்னவோ பெரிய விஷயங்கள் தெரிந்தவர் என்ற பெத்த பெயர் அவருக்கு வந்து விட்டது என்றும், மற்றப்படி தன்னிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லை எனவும் அவர் கூறிவிடுகிறார்.

மார்க்கபந்து தான் வரும்போது நோட்டு புத்தகம் என்று எதையும் கொண்டு வரவில்லை எனவும், ஆகவே நோட்ஸ் எடுக்க முடியவில்லை எனவும் வருந்த, பாகவதர் அடுத்தமுறை வரும்போது மெடிகல் ரெப்ரெசெண்டேடிவ்கள் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷன் அட்டைகளை இவற்றுக்காக உபயோகிக்கலாம் எனக் கூற, அவரும் அவ்வாறே செய்வதாகக் கூறுகிறார்.

பிறகு பாகவதர் இப்போது அசோக்கை செகண்ட் ஒபீனியனுக்காக வேறொரு டாக்டரிடம் அழைத்து சென்றிருப்பதாகவும். அவர் பல மருந்துகள் எழுதித் தந்ததாகவும், ஷாக் ட்ரீட்மெண்ட் கூட தரவிருப்பதாகவும் கூறி வருத்தப்படுகிறார். அந்த மருந்துகள் நோயாளிக்குத்தான் என்றும், அசோக் போன்றவர்களுக்கு கொடுத்தால் அது விஷமாக மாறிவிடும் எனக் கூற, பாகவதர் அவரிடம் எப்படியாவது அசோக்கை காப்பாற்றும்படி கேட்டு கொள்கிறார். அவரும் இம்முறை தன்னால் காப்பாற்ற முடியும் எனவும், அடுத்த முறை இம்மாதிரி நடந்தால் தன்னால் இது சம்பந்தமாக எவ்வித உத்திரவாதமும் தரவியலாது எனவும் கூறுகிறார். இதாவது நடக்கிறதே என்ற மகிழ்ச்சியுடன் பாகவதர் டாக்டரிடம் அவர் இம்முறை அசோக்கை எவ்வாறு காப்பாற்ற போகிறார் என ஆவலுடன் கேட்கிறார். டாக்டர் அது ஒரு ரகசியம் என கூற, அந்த ரகசியத்தை தன்னிடம் கூறக்கூடாதா என பாகவதர் விடாது கேட்கிறார். டாக்டர் அவரிடம் சீரியஸாக அவர் ரகசியத்தை காப்பாற்றுவதில் வல்லவரா என கேட்க, பாகவதரும் ஆமாம் எனக் கூறுகிறார். அதே சீரியஸ் தொனியில் தன்னாலும் அதே மாதிரி ரகசியத்தைக் காப்பாற்ற இயலும் என டாக்டர் கூறி விடுகிறார்.

சோ அவர்கள் குறிப்பிட்ட தன்னையே அறிதல் என்பது ரொம்ப முக்கியமான விஷயம். நான் 34 ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்ய துவங்கியபோது, அந்த வேலையில் தடையில்லாமல் ஈடுபட்டேன். நான் எழுதுவதுதான் மொழிபெயர்ப்பு என்ற நிச்சயம் எனது மனதில் நிறைந்திருந்தது. வாக்கிய அமைப்புகளில் துளியும் தயக்கமின்றி முன்னேறினேன்.

ஆனால் இப்போது? ஒவ்வொரு வாக்கியம் எழுதும்போதும் ஜாக்கிரதையாக அளந்து அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் பல விஷயங்களில் எனது அறியாமையின் அளவை நான் உணர்ந்து கொண்டதால்தான் அந்த தயக்கம். ஐடிபிஎல் காலகட்டத்தில் தெனாவட்டாக ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்னால் நான் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த சில பக்கங்களை எனது பேப்பர் குவியலில் காணப்பெற்றேன். எவ்வளவு குழந்தைத்தனமான பிரெஞ்ச் எழுதியிருக்கிறேன்? ஏதோ பொறியியல் பேப்பர்களாக போயினவோ, பிழைத்தேனோ. ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், அறிவு வளர்கிறது என்று சொல்வதை விட நமது அறியாமைகள் என்னென்ன என்பது பற்றிய அறிவுதான் விருத்தியாகிறது என்று கூறுவதே நலம்.

உன்னையறிந்தால், உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று சும்மாவா சொன்னார் கவியரசு கண்ணதாசன்?

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2009

பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய புரிதல்கள்

நான் சமீபத்தில் 1954-ல் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போது ஸ்கூல் பீஸ் மாதத்துக்கு இரண்டே முக்கால் ரூபாய். 15-ஆம் தேதிக்குள் அதை கட்டிவிட வேண்டும். பிறகு கட்டினால் ஃபைன் இரண்டணா (12 பைசா). என் நண்பர்கள் பலர் மிக ஏழ்மை நிலையில் இருந்தனர். குறிப்பிட்ட தேதிக்குள் ஃபீஸ் கட்ட இயலாது. ஃபைன் கட்ட வேண்டியிருக்கும். அவர்களை கேட்டால், “நான் ஃபைன் கட்டிவிடுகிறேன்” என்று கூறுவார்கள். இப்போது இதை எழுதும்போது எனக்குள்ளேயே என் மேல் கேலியான புன்னகை எழுகிறது. நான் இதை எப்படி புரிந்து கொண்டேனென்றால், 15-ஆம் தேதிக்கு பிறகு ஃபைன் இரண்டணா கட்டினால் போதும் என்றுதான். எனக்கு அப்போது ஒரே ஆச்சரியம், அதென்ன பேசாமல் இரண்டணா கட்டுவதை விட்டு வேலையில்லாமல் இரண்டே முக்கால் ரூபாய் கட்ட வேண்டுமென்று.

ஒரு மாதம் என அம்மா ஐந்தாம் தேதிவாக்கில் ஃபீஸ் பணம் கொடுக்க, நான் 15-ஆம்தேதிக்கு அப்புறம் ஃபைன் கட்டி விடுகிறேன் எனக் கூற அவருக்கு முதலில் புரியவில்லை. பிறகு நான் மேலே புரிந்து கொண்டதை கூற, அவருக்கு சிரித்து சிரித்து புரைக்கேறி விட்டது. “அட அசடே, வெறுமனே இரண்டணா கொடுத்தால் சரீன்னு ஸ்கூல்ல வாங்கிக்க மாட்டார்கள். இரண்டே முக்கால் ரூபாயுடன் சேர்த்து இரண்டணாவும் தர வேண்டியிருக்கும். சரியான பேருக்கேத்த மாதிரி அசடா இருக்கியே” என்று தலையில் குட்டினார் (டோண்டு என்றால் அசடு என பொருள் என அவர் ஏற்கனவே எனக்கு கூறியிருக்கிறார்).

சரி இப்போது அது ஏன் நினைவுக்கு வரவேண்டும்? கீழே உள்ள பதிவை பார்த்ததால்தான்.

செல்வராஜ் என்னும் பதிவர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதற்கு கீழ்க்கண்ட வாதங்களை முன்வைக்கிறார்.

“இந்திய அரசியல் சட்டத்தின்படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்? இது இருக்கின்ற உரிமையை தானாக கேட்டு குறைபதல்லாமல் வேறென்ன”!

“சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், நாளைய பெண்கள் சமூகத்திற்கு அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியாதபடியாகும். நிச்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம். அப்படி வரும்போது. இந்த முப்பதிமூன்று சதவிகிதம் என்பது அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக இருக்கும்”.

அவருக்கு நான் இட்ட பின்னூட்டம்:
“பெண்கள் கேட்கும் இட ஒதுக்கீட்டை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பஸ்களில் லேடீஸ் சீட் என தனியாக இருப்பது போலத்தான். அதாகப்பட்டது 33% தொகுதிகளில் அவர்கள் மட்டும்தான் நிற்க முடியும். அதனால் 67 % ஆண்கள் தொகுதிகளாகி விடாது. அவற்றிலும் பெண்கள் நிற்கலாம், தடை ஏதும் இல்லை.
பஸ்களில் பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்கார இயலாது, ஆனால் பொது சீட்டுகளிலும் பெண்கள் தாராளமாக உட்காரலாம். ஆண்கள் சீட் என்று ஒன்றும் கிடையாது”.

அவரது பதில்:
“வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராகவன்!
இப்போது 100% சதவிகித தொகுதிகளிலும் போட்டியிட உரிமையுள்ளதே பெண்களுக்கு”.

அப்போ அவரது புரிதலின்படி தலித்துகளுக்கும் மற்றவருக்கும் கூடத்தான் இட ஒதுக்கீடு தேவையில்லை. அட ஆண்டவா?

வேறென்ன செய்வது, பெருமூச்சு விடுவதை விட?

நான் தில்லியில் இருந்தபோது தூர்தர்ஷனில் ஆப் அவுர் ஹம் என்னும் நிகழ்ச்சி வரும். பார்வையாளர்களின் கடிதங்களை ஒருவர் படிப்பார், அதற்கு இன்னொருவர் விடையளிப்பார். நம்மூரில் அந்த நிகழ்ச்சிக்கு எதிரொலி என்று பெயர். அதில் பேச்சுவாக்கில் பதிலளிப்பவர் ஒரு முத்தான கருத்தை உதிர்த்தார், அதாகப்பட்டது, பஸ்களில் பெண்கள் சீட்டில் ஆண்கள் உட்காரக் கூடாது என சொல்லும் அதே பெண்கள் மட்டும் ஆண்கள் சீட்டில் உட்காரலமா என்று. கூட இருந்து கேள்வி கேட்டவர் ஒரு பெண். அவரும் பேசாமல் தேமேனென்று கேட்டு கொண்டிருந்தார். உடனேயே அந்த நிகழ்ச்சிக்கு ஒரு கடிதம் தட்டினேன். அதில் பஸ்களில் பெண்களுக்கு மட்டுமே என சீட்கள் நிச்சயம் உண்டு, ஆனால் மீதி எல்லாம் ஆண்களுக்கு எனப் பொருள் இல்லை. அவை பொது சீட்கள் பெண்களும் உட்காரலாம். என்ன, அவ்வாறு பொது சீட்டில் பெண் உட்கார்ந்திருக்கும் போது பக்கத்தில் ஆண் வந்து அமர்ந்தால் ஆட்சேபிக்க இயலாது அவ்வளவே”. இக்கடிதமும் அடுத்த வாரம் படிக்கப்பட்டது அதே பெண்ணால். பதிலளிக்க வேண்டியவர் அதே ஆண்தான். பெண்ணின் முகத்தில் புன்முறுவல். ஆண் அதிகாரி கர்சீப்பால் முகத்தை துடைத்து கொண்டு, அடுத்த கடிதத்தை படிக்குமாறு கூறினார்.

இதை இங்கு ஏன் கூறுகிறேன் என்றால், இம்மாதிரி புரிதல்கள் ரொம்ப சர்வ சகஜமாகவே உள்ளது. அதையேதான் மேலே சொன்ன பதிவரும் செய்திருக்கிறார். என்ன, டோண்டு என்ற 8 வயது அசடுக்கு 1954-லேயே, அவன் அம்மா விவரித்த உடனேயே அது புரிந்து விட்டது, ஆனால் உலகில் ஒரு டோண்டு மட்டும் இல்லை போலிருக்கிறதே! :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 05.05.2009

எலெக்சன் கோட்:
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்கள் திடீரென சில நாட்களுக்கு முன்னால் பஸ்கட்டணங்களை கணிசமாக குறைத்தன. ஏற்கனவே திருமங்கலம் பை எலெக்‌ஷன் சமயத்தில் அந்த ஏரியாவுக்கு மட்டும் இதை செய்து எலெக்‌ஷனுக்கு பிறகு கட்டணக் குறைப்பு வாபஸ் பெறப்பட்டது என கேள்விப்பட்டேன். இப்போது எலெக்‌ஷன் கமிஷன் உறுதியாக செயல்பட்டு, கட்டணக் குறைப்பை வாபஸ் வாங்கச் செய்துள்ளது என்ற செய்தி ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

விளக்கம் கேட்ட தேர்தல் கமிஷனுக்கு அரசு அளித்த விளக்கம் கேனத்தனமாக இருந்தது. அதாவது போக்குவரத்து கழகங்களின் நிர்வாக தலைவர்களே தன்னிச்சையாக இக்காரியத்தை செய்தார்களாம். அதுவும் எப்படி, பரேடில் கவாத்து செய்யும்போது ஒரே முறையில் அடியெடுத்து செய்யும் கணக்காக எல்லா கழகங்களின் தலைவர்களும் ஒருமித்து செய்தார்களாம். இந்த பொய்யை எப்படி சிரிக்காமல் தேர்தல் கமிஷனிடம் சொன்னார்கள் எனத் தெரியவில்லை. தேர்தல் கமிஷன் எதால் சிரித்திருக்கும் என்பது சுவையான கற்பனைக்கு வழிவகுக்கும்.

எனக்கு ஒன்று தோன்றுகிறது. கட்டணங்களை குறைக்கச் சொன்னதும், பிறகு பழைய நிலைக்கு கொண்டு போகச் சொன்னதும், இரண்டுமே வாய்வழி உத்திரவு மட்டுமே என்றும், எழுத்து ரூபத்தில் இல்லை என்றும் பேப்பரில் போட்டிருந்தார்கள். பேசாமல் இந்த சில தினங்களில் அரசுக்கு வருவாய் குறைவு எத்தனை என்பதை கணக்கிட்டு (ரொம்ப சுலபம், கணக்கிடுவது - விற்ற டிக்கெட்டுகளை விலை வித்தியாசத்துடன் பெருக்க வேண்டியதுதான். அந்தத் தொகைக்கு போக்குவரத்து அமைச்சரை தனிப் பொறுப்பு ஏற்க செய்ய வேண்டும். அல்லது திமுக கட்சி அதை சரி செய்ய வேண்டும் என்றால் இன்னும் உத்தமம், அதுதான் பல ஆயிரம் கோடிகள் ஐந்தாண்டுகளில் ஈட்டப்பட்டிருக்குமே, அதிலிருந்து கட்டச் சொல்ல வேண்டியதுதானே. இந்த முன் உதாரணம் எதிர்காலத்தில் எல்லோருக்குமே ஒரு நல்ல பாடமாக இருக்குமே.

மதுரையில் செய்யப்பட்ட கூத்துகளை பார்த்தால் அத்தொகுதி எலெக்‌ஷனையே கேன்சல் செய்தால்தான் சம்பந்தப்பட்டவர்களுக்கும் புத்தி வரும். இதுவரை லஞ்சமாக தரப்பட்ட பணமும் கோவிந்தா ஆகும். நடக்குமா?

எரிவாயு சிலிண்டர்கள் பிரச்சினை (தொடர்ச்சி)
நண்பர் DFC எனது முந்தைய நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவில் பின்னூட்டமிட்டது போல, எரிவாயு சிலிண்டர் வைத்து கொள்ளும் நிலையில் இல்லாதவர்களுக்கு கெரோசின் சப்சிடியில் வழங்கப்படுகிறது. சிலிண்டர் என்பதை சற்றே வசதிபட்டவர்கள்தான் உபயோகிக்கின்றனர். ஆகவே அவர்களுக்கெல்லாம் இம்மாதிரி பாதிக்கு மேல் சப்சிடி தருவது அதர்மம். நான் ஏற்கனவே சொன்னதையே இங்கு மீண்டும் கூறுவேன். சிலிண்டரின் முழு விலையையும் சார்ஜ் செய்தாலே அதில் உள்ள கள்ளமார்க்கெட் தானே ஒழிந்து போகும். ஆனால் நடப்பதைப் பார்த்தால் பலருக்கு இந்த கள்ள மார்க்கெட் இருப்பதுதான் சௌகரியம் போலிருக்கிறது.

உலகம் முழுவதும் இதுதான் பிரச்சினை. எந்த சப்சிடியையும் கொடுப்பது சுலபம். ஆனால் அதை திரும்பப் பெறுவதென்பது குதிரைக் கொம்பே. அதை துர் உபயோகம் செய்வதற்கென்றே கோஷ்டிகள் உருவாகி விடுகின்றன. அதை திரும்பப் பெறும் எந்த எண்ணத்தையும் முளையிலேயே கிள்ளிவிட துடிக்கின்றன.

டெலிஃபோன் இணைப்பு பெற 90-கள் வரை மிகக் கடினமான விஷயமாகவே இருந்தது. 1997-ல் கூட டெலிஃபோன் என்பது பணக்காரருக்கே உரியது போன்ற தோற்றம் அளிக்கப்பட்டு, அதை வைத்திருப்பவர்கள் வருமான வரி ரிடர்ன் தந்தே ஆகவேண்டும் என்று கூட காபந்து செய்தனர். ஏனென்றால், சேவை அளிப்பு கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் தேவையோ மிக அதிகம். இணைப்புகளை அதிகரித்தால் அரசுக்குத்தான் அதிக வருமானம் என்ற இரண்டாம் கிளாஸ் கணக்கை போடவும் தெரியாத அரசு கொள்கைகள் ஆட்சி செலுத்தின. இப்போது அந்த நிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா. அதே போல இந்த எரிவாயு சிலிண்டர் சப்சிடியை ஒழித்தாலே பல பிரச்சினைகள் தீரும். செய்வார்களா? அதே சமயம் எரிபொருளுக்கான வரிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் விலையும் யதார்த்தத்தை ஒட்டி இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது