5/06/2009

எங்கே பிராமணன் - பகுதி - 65

பகுதி - 65 (05.05.2009):
திருச்சியில் சிவராமன் வீட்டில் பாகவதரின் மனைவி ஜானகி ராமசுப்பு விஷயமாக மாட்டுப் பெண் ராஜியிடம் விளக்கம் கேட்கிறார். அவளும் நீலகண்டன் தன்னிடம் சொன்ன விஷயத்தை கூறி, தான் பயந்து விட்டதாகவும், ஆகவே தன் கணவனிடமிருந்து கையெழுத்து வாங்கி ஹாஸ்டலில் கொடுத்ததாகவும் பொய் சொல்கிறாள். பிறகு இது பற்றி அவர்கள் சிவராமனிடம் பேச வேண்டாம் என்பதையும் நாசூக்காக கூறிவிடுகிறாள். அப்பாவியான ஜானகி மாமியும் அவ்வாறே வாக்களிக்கிறார்.

கிரியின் வீட்டில் அவன் தாயார் தன் கணவனிடம் வேம்பு சாஸ்திரி வீட்டில் அவர் நடந்து கொண்டது பற்றி கேட்கிறாள். அவர் தனது தரப்பை தெளிவாகவே கூறுகிறார். அதாவது வேம்பு வீட்டில் அவரைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த சம்பந்தத்தில் விருப்பம் இல்லையெனவும், ஒப்புக்காக வந்ததாகவும் கூறுகிறார். பிற்காலத்தில் தன் பையனை பார்த்து அவர்கள் வீட்டினர் ஏதேனும் அவமரியாதையாகவும் பேசக்கூடும் என்றும் கூறுகிறார். தன் மனைவியின் ஜாதியிலேயே அவள் பெண் பார்க்கலாம் என்றும், ஆனால் பெண்வீட்டார் அத்தனை பேரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும், அது வரையில் தானும் தன் பிள்ளையும் காத்திருக்க போவதாகவும் கூறுகிறார். முத்தாய்ப்பாக வேம்பு சாஸ்திரிகளின் குடும்பம் அப்படிப்பட்டதில்லை எனவும் கூறி அப்பால் செல்கிறார். கிரியின் தாயார் திகைக்கிறாள்.

சிவராமன் வீட்டில் அவனுக்கு தன் தாயின் கோபத்துக்கு காரணம் தெரியமால் திகைக்கிறான். ராஜியிடம் கேட்க, அவள் சாமர்த்தியமாக அவர்கள் சென்னை ட்ரான்ஸ்ஃபருக்காக தத்தம் அலுவலகத்தில் கொடுத்த கடிதம் பற்றி குறிப்பிட்டு அது பற்றி தங்களுக்கு முன்னாலேயே தெரிவிக்காததுதான் அவர்கள் கோபம் எனக் கூறி மறுபடியும் திசை திருப்புகிறாள். சிவராமன் தன் தாயிடம் இது பற்றி கூறி மன்னிப்பு கேட்க, ஜானகியோ இன்னொரு கடிதத்தை நினைத்து பேச, இந்த குழப்பத்தை ராஜி பயன்படுத்தி தப்பிக்கிறாள்.

காஞ்சிபுரத்தில் பாகவதரை நாடி சைக்கியாட்ரிஸ்ட் மார்க்கபந்து வருகிறார். அசோக்கால் தனக்கு ஆன்மீகத்தில் ருசி ஏற்பட்டதாகக் கூறி அவர் சில சந்தேகங்கள் எழுந்ததாகவும், அது பற்றி அசோக்கை கேட்க, அவன் அவரை பாகவதரிடம் அனுப்பியதாகவும் கூறுகிறார். பாகவதரும் தான் அவரது எல்லா கேள்விகளுக்கும் பதிலளிப்பதாக அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

“அது எப்படி, பாகவதருக்கு எல்லாமே தெரியுமா” என ஆச்சரியத்துடன் சோவின் நண்பர் சோவை கேட்கிறார். சோ கூறுவதாவது, பாகவதரை போன்று நிறைய படித்தவர்களுக்கு பல விஷயங்களில் ஞானம் உண்டு, ஆனாலும் எந்தெந்த விஷயங்கள் தமக்கு தெரியாது என்பது பற்றி அவர்களுக்கு தெளிவு இல்லை. இதையே ராஜா பத்ருஹிரி ஒரு ஸ்லோகமாக இவ்வாறு கூறுகிறார், ‘நீதியெல்லாம் தெரிந்தவன் உண்டு, சாத்திரம் அறிந்தவனும் உண்டு, மகா ஞானியும் உண்டு, ஆனால் தனக்கு எது தெரியாது என அறிபவர்கள் அபூர்வம்’.

இப்போது நண்பர் சோவை கேட்கிறார். “இந்த பாகவதரை விடுங்கள், உங்களுக்கு எல்லாம் தெரியுமா”? என. சோ கூறுகிறார், தான் எழுதும் பல புத்தகங்களுக்காக பல ரெஃபரன்ஸ்களை படிக்கிறார் (இப்போது அவற்றைப் பட்டியலிடுகிறார். வீடியோவிலே பார்த்து கொள்ளவும்). ஏதோ அவற்றிலிருந்து பீராய்ந்து அவ்வப்போது சரியான சந்தர்பத்தில் கூறுவது மட்டுமே தான் செய்வது என்றும் கூறுகிறார். ஆனால் இதற்கே சோ என்னவோ பெரிய விஷயங்கள் தெரிந்தவர் என்ற பெத்த பெயர் அவருக்கு வந்து விட்டது என்றும், மற்றப்படி தன்னிடம் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லை எனவும் அவர் கூறிவிடுகிறார்.

மார்க்கபந்து தான் வரும்போது நோட்டு புத்தகம் என்று எதையும் கொண்டு வரவில்லை எனவும், ஆகவே நோட்ஸ் எடுக்க முடியவில்லை எனவும் வருந்த, பாகவதர் அடுத்தமுறை வரும்போது மெடிகல் ரெப்ரெசெண்டேடிவ்கள் கொடுக்கும் ப்ரிஸ்க்ரிப்ஷன் அட்டைகளை இவற்றுக்காக உபயோகிக்கலாம் எனக் கூற, அவரும் அவ்வாறே செய்வதாகக் கூறுகிறார்.

பிறகு பாகவதர் இப்போது அசோக்கை செகண்ட் ஒபீனியனுக்காக வேறொரு டாக்டரிடம் அழைத்து சென்றிருப்பதாகவும். அவர் பல மருந்துகள் எழுதித் தந்ததாகவும், ஷாக் ட்ரீட்மெண்ட் கூட தரவிருப்பதாகவும் கூறி வருத்தப்படுகிறார். அந்த மருந்துகள் நோயாளிக்குத்தான் என்றும், அசோக் போன்றவர்களுக்கு கொடுத்தால் அது விஷமாக மாறிவிடும் எனக் கூற, பாகவதர் அவரிடம் எப்படியாவது அசோக்கை காப்பாற்றும்படி கேட்டு கொள்கிறார். அவரும் இம்முறை தன்னால் காப்பாற்ற முடியும் எனவும், அடுத்த முறை இம்மாதிரி நடந்தால் தன்னால் இது சம்பந்தமாக எவ்வித உத்திரவாதமும் தரவியலாது எனவும் கூறுகிறார். இதாவது நடக்கிறதே என்ற மகிழ்ச்சியுடன் பாகவதர் டாக்டரிடம் அவர் இம்முறை அசோக்கை எவ்வாறு காப்பாற்ற போகிறார் என ஆவலுடன் கேட்கிறார். டாக்டர் அது ஒரு ரகசியம் என கூற, அந்த ரகசியத்தை தன்னிடம் கூறக்கூடாதா என பாகவதர் விடாது கேட்கிறார். டாக்டர் அவரிடம் சீரியஸாக அவர் ரகசியத்தை காப்பாற்றுவதில் வல்லவரா என கேட்க, பாகவதரும் ஆமாம் எனக் கூறுகிறார். அதே சீரியஸ் தொனியில் தன்னாலும் அதே மாதிரி ரகசியத்தைக் காப்பாற்ற இயலும் என டாக்டர் கூறி விடுகிறார்.

சோ அவர்கள் குறிப்பிட்ட தன்னையே அறிதல் என்பது ரொம்ப முக்கியமான விஷயம். நான் 34 ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்ய துவங்கியபோது, அந்த வேலையில் தடையில்லாமல் ஈடுபட்டேன். நான் எழுதுவதுதான் மொழிபெயர்ப்பு என்ற நிச்சயம் எனது மனதில் நிறைந்திருந்தது. வாக்கிய அமைப்புகளில் துளியும் தயக்கமின்றி முன்னேறினேன்.

ஆனால் இப்போது? ஒவ்வொரு வாக்கியம் எழுதும்போதும் ஜாக்கிரதையாக அளந்து அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகளில் பல விஷயங்களில் எனது அறியாமையின் அளவை நான் உணர்ந்து கொண்டதால்தான் அந்த தயக்கம். ஐடிபிஎல் காலகட்டத்தில் தெனாவட்டாக ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு மொழிபெயர்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்னால் நான் அவ்வாறு மொழிபெயர்ப்பு செய்த சில பக்கங்களை எனது பேப்பர் குவியலில் காணப்பெற்றேன். எவ்வளவு குழந்தைத்தனமான பிரெஞ்ச் எழுதியிருக்கிறேன்? ஏதோ பொறியியல் பேப்பர்களாக போயினவோ, பிழைத்தேனோ. ஆக, நான் சொல்ல வருவது என்னவென்றால், அறிவு வளர்கிறது என்று சொல்வதை விட நமது அறியாமைகள் என்னென்ன என்பது பற்றிய அறிவுதான் விருத்தியாகிறது என்று கூறுவதே நலம்.

உன்னையறிந்தால், உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்று சும்மாவா சொன்னார் கவியரசு கண்ணதாசன்?

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது