10/28/2011

கணினியா குப்பைத் தொட்டியா?

என் நண்பன் ஒருவன் தன் கணினியைத் திறக்கும்போது எதேச்சையாக நானும் அருகில் இருந்தேன். அவனது டெஸ்க்டாப்பைப் பார்த்து ஆடிப்போனேன். எண்ணற்ற கோப்புகளால் அது நிறைந்திருந்தது. என்னடா எனக் கேட்டால் அவன் டவுன்லோட் செய்வதெல்லாம் டெஸ்க்டாப்புக்குத்தானாம். கிழிஞ்சது கிருஷ்ணகிரி என நினைத்தேன்.

அதே சமயம் ஏதேனும் கோப்பை அப்ப்டேட் செய்து வெளியில் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமானால் தாவு தீர்ந்து விடுகிறது என்று வேறு மூக்கால் அழுதான். “வேறு எதையடா எதிர்ப்பார்த்தாய் மடையா” எனக் கூறி அவன் தலையில் செல்லமாகக் குட்டினேன். பிறகு அவனுக்கு நான் சொன்னதை இங்கும் பதிவாகப் போடுகிறேன், ஏனெனில் அவனைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என அவன் அல்ப திருப்தியுடன் குறிப்பிட்டான்.

வழ்க்கம் போல எனது உதாரணங்களையே கூறுவேன். என் நண்பன் செய்வது போல எல்லாம் நான் எல்லாவற்றையும் டெஸ்ட்டாப்பில் லோட் செய்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஒரு வாடிக்கையாளர் ஒரு கோப்பை மொழிபெயர்ப்புக்காக அனுப்பியதும் நான் சரியான முறையில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் சுலபமாக அதை அடைய முடியும்.

டெஸ்க்டாப்பில் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம் அதில் சேமிக்கப்படுபவை எல்லாமே C டிரைவில்தான் இருக்கும். திடீரென புதிதாக ஃபார்மாட்டிங் செய்தால் முதலில் போவது டெஸ்க்டாப் கோப்புகளே என்பதை மறக்கக் கூடாது. சி டிரைவில் புரொக்ராம் கோப்புகள் மட்டுமே இருப்பது நலம். கணினியின் ரீபூட்டுக்கான வசதிகளும் அதில் இருக்க வேண்டும். தேவையின்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது.

நான் கோப்புகளை எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை இப்போது கூறுகிறேன். மொழிபெயர்ப்புக்காக வரும் வாடிக்கையாளர் கோப்புகளை நான் F டிரைவில் சேமிக்கிறேன். E டிரைவில் நான் டவுன்லோட் செய்யும் மென்பொருள்கள் இருக்கும். அவற்றை இன்ஸ்டால் செய்யுபோது அது ஆட்டமேடிக்காக சி டிரைவில்தான் இன்ஸ்டால் ஆகும். அதே போல ரீஃபார்மாட்டிங் செய்யும்போது இ டிரைவிலிருந்து நிரலிகளை தேர்ந்தெடுத்து வழமையான முறையில் இன்ஸ்டாலும் செய்து கொள்ளலாம்.

எஃப் டிரைவில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு தனி ஃபோல்டர். அந்த ஃபோலட்ருக்குள் வாடிக்கையாளர் அனுப்பும் ஒவ்வொரு வகை கோப்புக்கும் (வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், பிடிஎஃப் ஆகியவை) தனித்தனி ஃபோல்டர். உதாரணத்துக்கு எனது ஒரு வாடிக்கையாள்ர் விஷயத்தில் இவ்வாறு 7 துணை ஃபோல்டர்கள் உண்டு. ஒவ்வொரு துணை ஃபோல்டரிலும் இன்னும் பிரிவினை தொடரும். கோப்பை டவுன்லோட் செய்யும் தேதியை தலைப்பாக வைத்து அதனுள் அக்குறிப்பிட்ட கோப்பை வைப்பது. அக்கோப்பின் மொழிபெயர்ப்பும் அதிலேயே வரும்.

ஒரு மாதிரி குன்ஸாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன்.

இதற்கு இணையாக எனது மின்னஞ்சல்களையும் அடுக்க வேண்டும். ஜிமெயில் பாவிப்பதால் எதையும் அழிக்க வேண்டியதில்லை. ஒரு குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கான பதிலோ அல்லது ஆக்‌ஷனோ நடந்து விட்டால் அதை உடனே ஆர்கைவ்சில் போட வேண்டும். சாதாரணமாக எனது இன்பாக்ஸ் காலியாகத்தான் இருக்கும். பிறகு தேவையான மின்னஞ்சலை எப்போது வேண்டுமானாலும் சர்ச் போட்டு தேடிக் கொள்ளலாம். (பலரது இன்பாக்ஸில் நூற்றுக்காண மின்னஞ்சல்கள் இருப்பதையும் பார்த்துள்ளேன்).

ஒரு வாடிக்கையாளர் நீண்டகால மௌனத்துக்கு பிறகு என்னை அணுகினால் ஆர்கைவ்ஸை வைத்து அவரது பழைய மின்னஞ்சலைப் பார்த்து அதிலிருந்து எனத் எஃப் டிரைவில் உள்ள அவரது ஃபோல்டருக்கு போவதெல்லாம் இடது கை விளையாட்டுதான். ஆகவே முந்தைய ரேட் என்ன என்பதை பார்த்து அதற்கேற்ப கோட் செய்வதும் நடக்கும். அவர்களில் சிலர் தான் பழைய வாடிக்கையாளர் என்றெல்லாம் சீன் போட்டு ரேட்டை குறைக்க நினைத்தால், “ஐயா நீங்கள் கடைசியாக எனக்கு வேலை அனுப்பியது சில ஆண்டுகளுக்கு முன்னால் பலான தேதியில்” எனக்க்கூறி அவர் சீன் போடுவதைத் தடுப்பேன்.

நான் மேலே கூறியவை மிக எளிதாக எல்லோராலும் செய்யவியலும்.

நான் முதலில் குறிப்பிட்ட தோழனிடம் இந்த இடுகை பற்றி கூறியபோது அவன் இன்னொரு பீதியைக் கிளப்பினான். லேப்டாப் எல்லாம் இப்போது இன்ஸ்டால் செய்யப்பட்ட செயல் நிரலியுடன் வரும்போது ஒரே ஒரு சி டிரைவ்தான் இருக்கும் என்கிறான். கூடவே டி டிரைவில் கோஸ்ட் பேக் அப் இருக்கும் அவ்வளவே என்கிறான்.

நல்லா பீதியை கிளப்பறாங்கப்பா. ஏம்பா அது உண்மையா? யாராவது சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/27/2011

டோண்டு பதில்கள் - 27.10.2011

pt
டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-1. வாஸ்து பிரச்னை: ஆன்டிலியாவிலிருந்து வெளியேறுகிறார் முகேஷ் அம்பானி?

பதில்: இதில் என்ன சொல்ல இருக்கிறது? ஒரு பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்பவர் இம்மாதிரி வாஸ்து மூட நம்பிக்கை வைத்திருப்பதால் வாஸ்து கன்சல்டண்டுக்குத்தான் பணம் வரப்போகிறது என்பதில் என்ன ஆர்வம் எனக்கு இருக்கப் போகிறது?

எனக்கு இதில் மொழிபெயர்ப்பு வேலை ஒன்றும் இல்லாததால் நோ கமெண்ட்ஸ். :))))))))

கேள்வி-2. ஊழல்களால் வர்த்தகத்துறை முதலீடுகளில் பாதிப்பா? பிரணாப் மறுப்பு
பதில்: பாதிப்பு என்பதைத்தான் மறுக்கிறார் போலிருக்கிறது. ஊழல்கள் இருக்கு என்பதை சிரிக்காமல் மறுக்க அவராலேயே முடியாது.

கேள்வி-3. விமான டிக்கெட் பாணியில் ரயில் டிக்கெட் விற்க பரிசீலனை: தினேஷ் திரிவேதி
பதில்: அப்போ தேவை குறையும்போது டிக்கெட் விலை குறையுமா?

கேள்வி-4. டி.என்.பி.எஸ்.சி., ரெய்டு எதிரொலி: நடந்து முடிந்த தேர்வுகள் குறித்தும் விசாரணை
பதில்: அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தானே.

கேள்வி-5. அமைதியான முறையில் நடந்து முடிந்தது 2ம் கட்ட ஓட்டுப்பதிவு: 80 சதவீத ஓட்டுக்கள் பதிவு
பதில்: 2-ஆம் கட்ட ஓட்டுப் பதிவில் கலந்து கொண்ட மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.


BalHanuman
கேள்வி-6. எடியூரப்பா?
பதில்: பாஜகாவுக்கு அவரால் சங்கடமப்பா.

கேள்வி-7.‘தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்கிறாரே பரிதி இளம்வழுதி?
பதில்: தனக்கு என வரும்போதுதான் அவருக்கு உரைக்கிறது என ஒரு வார இதழில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அதுதான் என் கருத்தும்.

கேள்வி-8. கனிமொழி ஜாமீனில் தீபாவளி ரிலீஸ்?
பதில்: அவரை புக் செய்த செக்சன் 409 (?) ஜாமீனை அனுமதிக்காது என படித்த நினைவு இருக்கிறதே.

கேள்வி-9. கூடங்குளம் குழப்பங்குளம்?
பதில்: ரஷ்யாவின் சம்பந்தம் உள்ள எதுவுமே சரியில்லை.


ரமணா
கேள்வி-10. கனிமொழிக்கு கடைசியில் ஜாமீன்?
பதில்: கேள்வி 8-க்கான பதில்தான் இங்கும். ஒரு வேளை எனக்குத்தான் சரியாக புரியவில்லையா?

கேள்வி-11. கருணாநிதியின் சோனியாவை சந்திக்க மாட்டேன் எனும் சபதம் உடைந்தது ஏன்?
பதில்: குண்டி காஞ்சா குதிரையும் வைக்கோல் தின்னும்னு ஒரு பழைய சொலவடை உண்டு.

கேள்வி-12. தேமுதிகவின் படுதோல்வி?
பதில்: அது தனது செயல்பாட்டை சரி செய்து கொள்வது நல்லது.

கேள்வி-13. மருத்துவர் இனி என்ன செய்வார்?
பதில்: மரம் வெட்ட கோடாலியை தீட்டுவாரோ?

கேள்வி-14. காங்கிரசின் எதிர்காலம் இனி யார் கையில்?
பதில்: யாரும் அதை கையில் எடுத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள், குறைந்த பட்சமாக தமிழகத்தில்.

கேள்வி-15. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை நடத்திய விதம் எப்படி?
பதில்: மோசமில்லை என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி-16. ரஜினி மீண்டும் திரை வானில்?
பதில்: அவர் பிழைக்க வேண்டாமா?

கேள்வி-17. இனி சட்ட சபை களை கட்டுமா?
பதில்: விஜயகாந்த் புள்ளி விவரங்களை அள்ளி வீசுவாரா? களை கட்டுகிறதோ இல்லையே தளை கட்டாமல் இருந்தால் சரிதான்.

கேள்வி-18. பாஜக‌வின் செல்வாக்கு தமிழகத்தில் உயர்ந்துள்ள‌தா?
பதில்: நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. முதலில் இருந்தது பூஜ்யம் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

கேள்வி-19. 3ஜி உரிமம் இல்லாமல் சில தனியார் கம்பெனிகள் 3 ஜி வியாபாரம் செய்யும் விஷயம் அடுத்த ஸ்கீமா?
பதில்: அப்படி நடக்கவியலுமா?

கேள்வி-20. ஒரு உண்மையான தொழிற்சங்க வாதியின் அன்பு மகனாய் வளர்ந்த நீங்கள் அமெரிக்காவின் வலதுசாரி கொள்கையின் கண்மூடி ஆதரவளராய் இருப்பதின் அடிப்படை காரணம் என்ன?
பதில்: பதின்ம வயதுகள் என்பதே ரிபல்களின் வயதுதானே. இந்தியாவில் அப்போது நிலவி வந்த பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்யத்தில் தொழிற்சங்கங்கள் சர்வாதிகாரமே செலுத்தின. எனது தந்தையின் நம்பிக்கையையே அவை சில சமயம் ஆட்டிப் பார்த்தன.

அப்போது நான் வலதுசாரி ஆதரவாளனாக இருந்தது காலத்தின் கட்டாயம்.

கேள்வி-21. அமெரிக்கா,ஐரோப்பா,ஆஸ்திரேலியாவில் உள்ள வசதி இல்லாத மக்களின் எழுச்சியை பார்த்த பிறகவாது‍ மன மாற்றம் வருமா?
பதில்: எழுச்சியா, எங்கே, எங்கே, எங்கே?

கேள்வி-22. அரசியல் சொல்வக்குடன், இல்லாத பொல்லாத செயல்கள் எல்லாம் செய்து பொருள் குவிக்கும் வல்லான்களை எப்பொழுது வசை பாடுவீர்கள்?
பதில்: அதைத்தான் பெர்மிட் லைசன்ஸ் கோட்டா ராஜ்ய கால கட்டங்களில் ஆள்பவர் துணை கொண்டு செய்யலாயினர். அதைத் நான் அப்போதே சாடினேனே.

கேள்வி-23. லஞ்ச லாவண்யத்தின் தயவால் நடத்தப்படும் ஆட்சி, அதிகாரம், வணிகம், கொள்ளை லாபம் பற்றி?
பதில்: முந்தைய கேள்வியிலேயே இதற்கான பதிலும் அடங்கியுள்ளது.

கேள்வி-24.பொருள் வர்த்தக வணிகம் மூலம் பரமபதம் விளையாடும் வர்த்தக சூதாடிகளை எதிர்ப்பீர்களா?
பதில்: பொருளாதார சுதந்திரத்தில் இதைத் தவிர்க்கவியலாது. ஸ்பெகுலேஷன் எனப்படும் இவ்வகை குற்றங்களை சோவியத் யூனியன் காலத்தில் சட்ட விரோதமாக்கி பார்த்துள்ளனர். காரியத்துக்காகவில்லை.


மேலும் கேள்விகள் வந்தால் அடுத்த வாரம் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/22/2011

ஒரு தொழிற்சங்கவாதியின் மகனாக இருப்பதில் உள்ள சங்கடம்

எனது பதின்ம வயதுகளை நினைத்துப் பார்க்கும்போது எனக்கும் என் தந்தைக்கும் இடையே பல விவாதங்கள் நடந்துள்ளதை உணர்கிறேன். முக்கால்வாசி எல்லா விவாதங்களும் இடதுசாரி வலதுசாரி பற்றிய விவாதமே.

உண்மையான அமெரிக்கன் என என் தந்தையே என்னைக் கிண்டலாக குறிப்பிடும் அளவுக்கு நான் அமெரிக்க தனிநபர் பொருளாதாரத்தை விதந்தோதியிருக்கிறேன். என் தந்தையோ உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் தீவிர பங்கெடுத்து வந்தவர். முதலில் எக்ஸ்பிரசில் வேலை பார்த்திருக்கிறார். அப்போதிலிருந்து ராம்நாத் கோயங்காவை அவருக்கு பிடிக்காது. அதுவும் தினமணி, எக்ஸ்பிரஸ் (சென்னை எடிஷன்) ஆகியவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கும் கோயங்காவிற்கும் ஏழாம் பொருத்தமே.

தினமணியிலிருந்து பலர் விலகி நவமணி என்னும் பத்திரிகை ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. தொழிலாளர்களால் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் பத்திரிகை என்று வேறு கூறப்பட்டது அப்போதெல்லாம். என்ன, சம்பளம் மட்டும் இரு மாதத்துக்கொரு முறை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை என போட்டு வந்திருக்கிறார்கள். அப்போது ஒரு முறை என தந்தை திடீரென ஒரு நாள் கூறினார், “நல்ல வேளை தினமணி மூடிய நேரத்தில் நான் எக்ஸ்பிரஸ் குரூப்பில் இல்லை”. அவ்வாறு இருந்திருந்தால் தனக்கும் அதே கதிதான் என்பதில் அவருக்கு ஐயமேதுமில்லை. இதை அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். என் மரமண்டைக்கு அது எட்டாமல் யூனியன் விஷயங்களில் அவர் அதிகமாக ஆழ்ந்து போவதை அட்டாக் செய்திருக்கிறேன். அவருக்கே நான் கூறியதில் விஷயம் இருக்கிறது என்பதால் மேலே பேசவில்லை.

ஆனால் தந்தை மகன் இடையில் மகன் தந்தையை வெல்வது போன்ற சோகம் ஏதுமில்லை. சிறு வயதில் எங்களுடன் ஓட்டப் பந்தயம் பீச் மணலில் வைப்பார். அவர்தான் வெற்றி பெறுவார். ஆனால் வயதாக ஆக அவரது உடல் பலம் குறைந்து ஒரு நாள் நான் வின் செய்ததில் பிறகு எனக்குத்தான் அவ்வ்வ் என அழும்போல ஆகிவிட்டது. தந்தையின் ஆரோக்கியம் குறைகிறது என்பது மகனுக்கு எப்போதுமே அதிர்ச்சியைத்தான் தரும்.

சற்றே திசை திரும்பி விட்டேன், இருப்பினும் எழுதியது எழுதியபடியே இருக்கட்டும்.

1969-ல் நான் பொறியியல் பட்டம் பெற்றபோது வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. அச்சமயம் மின்வாரியத்தில் இஞ்சினியர்கள் ஸ்ட்ரைக் வர, பேப்பர்களில் இஞ்சினியர்கள் கேட்டு விளம்பரம் வந்தது. எனது வகுப்புத் தோழர்கள் அத்தனை பேரும் அப்ளை பண்ண என் தந்தை எனக்கு அனுமதி திட்டவட்டமாக மறுத்தார். ஒரு வேலை நிறுத்தத்தை உடைக்கும் செயலுக்கு துணைபோவது துரோகம் என்பதே அவரது நிலைப்பாடு. அவரது உறுதியைப் பார்த்து நானும் அப்ளை செய்யாமல் விட்டுவிட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது என்னையறியாமலேயே நானும் ஒரு மகத்தான காரியம் செய்திருக்கிறேன் என்பதை உணர மகிழ்ச்சியாக உள்ளது.

1967, 1968-ல் தொடர்ந்து இரு ஸ்ட்ரைக்குகள் ஹிந்துவில் நடந்தன. ரிப்போர்டர்கள் எல்லோரும் மேனேஜ்மெண்டுக்கு துணையாக நிற்க, என் தந்தை மட்டும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றார். அதனால் பல தொல்லைகள் அவருக்கு ஏற்பட்டன. உதவி தலைமை ரிப்போர்டர் பதவி அவருக்கு சீனியாரிட்டி மூலம் கிடைக்கவிருந்த நேரத்தில் அந்த போஸ்டையே நீக்கினார்கள். அதேர் போல அவர் தலைமை ரிப்போர்டராக வரவிருந்தபோது அப்போதைய தலைமை ரிப்போர்டருக்கு வேண்டுமெனவே ஓராண்டு நீடிப்பு தந்தனர். அதனால் எல்லாம் மனம் தளரவில்லை என் தந்தை. அவர் ரிட்டையரானதும் நிம்மதியாக தனது வழியில் ஆக்டிவாக இருந்து நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.

இக்கால கட்டங்களில் அவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் புதுப்புது அசைன்மெண்டுகள் பெற்று வாழ்கின்றனர். அவரது காலகட்டத்தில் அத்தனை வாய்ப்புகள் இல்லை, கூடவே அவரும் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் அவருக்கு பொருளாதாரச் சுமைகள் ஏதும் இல்லை என்பதுதான் நிஜமே. சொல்லி வைத்தது போல எனக்கும் மத்தியப் பொதுப்பணி துறையில் வேலை கிடைத்ததும் உதவியாக இருந்தது.

மொத்தத்தில் எனது தந்தை பொருளாதார வாழ்க்கையில் பிரமிக்கத்தக்க வகையில் செல்வம் ஈட்டவில்லையானாலும் அவருக்கு பத்திரிகை உலகில் நல்ல பெயர் இருந்திருக்கிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு பின்னும் நான் எதிர்ப்பாராத தருணங்களில் அவரது பழைய நண்பர்களுடன் எனக்கு சந்திப்பு ஏற்படுவதில் எனக்கு மகிழ்ச்சி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

10/21/2011

துபாஷி வேலையில் எதிர் கொண்ட பிரச்சினை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி இது. ஸ்ரீலங்காவிலிருந்து ஒரு தொழிலதிபருக்கு பிரெஞ்சு துபாஷி தேவைப்பட்டது. அவர் இது சம்பந்தமாக சென்னையிலுள்ள தனது க்ரூப் கம்பெனியை அணுகியிருக்கிறார். அந்த கம்பெனிக்காக நான் ஏற்கனவேயே பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளேன்.

அக்கம்பெனி என்னை சிபாரிசு செய்ய, இவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். நானும் சென்றேன். அவர் என்னிடம் கொட்டேஷன் கேட்க அதையும் தந்தேன். சற்று பேரம் பேசிப் பார்த்தார், நான் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சரி என ஒத்துக் கொண்டார். பிறகுதான் தமாஷ். தன்னுடன் இன்னும் பலர் வந்திருப்பதாகவும், எல்லோரும் இரு குழுக்களாக பிரிந்திருப்பார்கள் என்றும், ஆகவே இன்னொரு துபாஷியும் வேண்டுமெனக் கேட்டார். நான் ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் கேட்டார்.

நான் யோசித்துச் சொல்கிறேன் என ஒரு நாள் டைம் கேட்டு வந்தேன். முடியாது என்று சொன்னால் அவர்கள் யாரேனும் இன்னொருவரை கூப்பிட்டு, அவருடன் நெகோஷியேட் செய்து அவரையே இன்னொருவரையும் கொண்டுவரச் செய்து என்னைக் கழட்டிவிடும் அபாயம் இருந்தது.

நான் தேர்ந்தெடுத்தது ஒரு பெண் துபாஷியை. ஒருவரை ஒருவர் பார்த்திருக்காவிட்டாலும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் அவருடன் பரிச்சயம் உண்டு. அவருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு துபாஷியாக வர விருப்பமா எனக் கேட்டேன். அவரும் சரி எனச் சொல்ல, அவருக்கு சில கண்டிஷன்கள் போட்டேன்.

1. நான் ஒத்துக் கொண்ட ரேட்டைத்தான் அவரும் கேட்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது (இது ரொம்ப முக்கியம்). பிற்காலத்தில் அதே வாடிக்கையாளர் அவரை மட்டும் வேறு அசைன்மெண்டுக்கு கூப்பிட்டால், தாராளமாக தனது ரேட்டை என்ன வேண்டுமானால் கூறிக் கொண்டு செய்யட்டும். ஆனால் இம்முறை மட்டும் எனது ரேட்டைத்தான் கேட்க வேண்டும்.

2. வாடிக்கையாளர் அவருடன் தனியாகப் பேசி, அவர் மனதைக் கலைக்க முயற்சி செய்யலாம். ஆனால் அதற்கு இவர் இடமே தரலாகாது. ரேட்டை ராகவன் மட்டுமே நிர்ணயிப்பார் எனக் கூற வேண்டும்.

3. அவருடைய பணத்திலிருந்து நான் ஒரு பைசா கூட கமிஷனாகக் கேட்க மாட்டேன். அதே சமயம் தனது பில்களை சப்மிட் செய்து பணம் வாங்குவது அவரது பொறுப்பேதான். அவரது நிலையும் எனது நிலையும் இந்த அசைன்மெண்டில் ஒன்றுதான் எனவும் தெளிவுபடுத்தினேன்.

இந்த கண்டிஷன்களை அப்பெண்மணி தனது கணவரிடம் தெரிவிக்க, மறுபேச்சு பேசாமல் அவரை ஒத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்.

மூன்று நாட்கள் எங்கள் இருவருக்கும் வேலை இருந்தது. ஆக்சுவலாக அப்பெண்மணியின் குழுவினர் அவரை அதிக நேரம் ரீடைன் செய்ததில் அவரது பில் என்னுடையதை விட அதிகமே. அதில் எனக்கு பிரச்சினையில்லை, அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். இருவருக்குமே பணம் கிடைத்தது.

இதில் என்ன வேடிக்கை என்றால், நான் அந்த தொழிலதிபர் இவ்வாறு செய்வார் என அனுமானித்தது அப்படியே நடந்தது. அப்பெண் ரேட் விஷயம் ராகவன் சொற்படி எனக்கூறி தப்பித்துக் கொண்டார்.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இரு குழுவினருமாக சேர்ந்து கடைசியில் ஒரு பார்ட்டி வைத்திருக்கின்றனர். என்னைக் கூப்பிடவில்லை, அப்பெண்மணிக்கு மட்டும் அழைப்பு போயிருக்கிறது. அப்பெண்மணியின் கணவர் ஒரு விஷயம்தான் அவரிடம் கூறினார், “ராகவன் சாரும் வருவதாக இருந்தால் தாராளமாகச் செல்”. அப்பெண் என்னிடம் இது பற்றிக் கேட்க, எனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என நான் தெளிவுபடுத்த, அவரும் பார்ட்டிக்கு செல்ல மறுத்து விட்டார். இது பற்றி பிறகுதான் அறிந்தேன்.

துபாஷி வேலையில், அதுவும் பெண்களுக்கு, இம்மாதிரி சங்கடங்கள் வரலாம். இந்த விஷயத்தில் அப்பெண்ணின் கணவர் சரியான முறையில் தன் மனைவியை வார்ண் செய்து அச்சங்கடத்தைத் தவிர்த்திருக்கிறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது