1/14/2006

துக்ளக் 36-ஆம் ஆண்டு நிறைவு

பகல் 10.30-க்கு டி.டி.கே. சாலையில் உள்ள நாரத கான சபாவில் துக்ளக் பத்திரிகையின் 36-வது ஆண்டு நிறைவு மீட்டிங் துவங்கியது. காலை 8.30-க்கே போய் இடம் பிடிக்க வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக போன ஆண்டு விழா கூட்டம் நடந்த மியூசிக் அகாடெமியை விட இந்த அரங்கு பெரியது. அவ்வளவு சீக்கிரம் சென்றதால் நல்ல வரிசையில் இடம் கிடைத்தது. 9 மணிக்கெல்லாம் அரங்கம் நிறைந்து விட்டது. இம்முறை பாரதியாரின் பாஞ்சாலி சபதம் கேசட் காத்திருப்பு நேரத்தில் போட்டார்கள். சோ குரலில் கேட்க முடிந்தது.

சரியாக 10.30-க்கு சோ மைக்குக்கு வந்து எல்லோருக்கும் வணக்கம் போட்டு மீட்டிங்கை ஆரம்பித்துவைத்தார். எடுத்தவுடன் ஹஜ் பயணிகள் பலர் நெரிசலில் சிக்கியதற்கு துக்ளக்கின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார். வழக்கம்போல தன்னுடன் துக்ளக்கில் பணியாற்றியவர்களை அறிமுகம் செய்வித்தார். பிறகு நேரத்தை வீணாக்காமல் சீட்டு குலுக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள் சிலர் பேச அழைக்கப்பட்டனர். அவர்களும் நேரத்தை வீணாக்காது கச்சிதமாக தங்கள் கேள்விகளை இட்டு நகர்ந்தனர். போன வருடம் போல இம்முறையும் நான் என் பார்வைக் கோணத்திலிருந்து எழுதுகிறேன். கையில் பேனா பேப்பர் ஏதும் இல்லா நிலையில், பக்கத்தில் இருந்தவரிடம் பேனா இரவல் வாங்கி, நான் பஸ்ஸில் படிப்பதற்காக கொண்டு சென்ற சுஜாதா அவர்களின் புத்தக உள் அட்டையில் குறிப்புகள் எடுத்தேன். கேள்வி கேட்ட வாசகர்கள் பெயர்களை குறிக்கவில்லை.

சோ அவர்கள் வெவ்வேறு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலாகக் குறிப்பிட்டதை விஷயவாரியாக தருவேன்.

பாரதீய ஜனதா கட்சி
இக்கட்சிக்கு ஒரு மாதிரி டிப்ரஷன் வந்து விட்டது போலத் தோன்றுகிறது. தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது போல இடிந்து போயிருக்கிறார்கள். பீஹார் குஜராத் ஆகிய இடங்களில் பெற்ற வெற்றிகள் அவர்களுக்கு சுய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். காங்கிரஸுக்கு எதிராக எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் இந்த நேரத்தில் இக்கட்சி தன் சுய நம்பிக்கையை விடலாகாது. எப்போதும் ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் அபிப்பிராயம் உருவாகும் நேரத்தில் எதிர்க்கட்சி தன் கட்டுக்கோப்பை இழக்காமல் இருத்தலே தேர்தலில் வெற்றிபெற மிக அவசியமாகும். 1977-ல் நடந்தது இதுதான்.

பா.ஜ.க. வும் பத்திரிகைகளும்
பல பத்திரிககைகள் உண்மையாகவே பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று நினைக்கின்றன. இந்தத் தோற்றத்தை அகற்ற அக்கட்சி நல்ல பப்ளிக் ரிலேஷன்ஸ் வேலை செய்ய வேண்டும். பத்திரிகைக்காரர்களை அழைத்து அத்வானி, வாஜ்பேயீ அவர்கள் பேசவேண்டும். இம்மாதிரி விஷயங்களில் கருணாநிதி அவர்கள் ஜயலலிதாவை விட நல்ல முறையில் செயல்படுகிறார்.

தீவிரவாதம்
தீவிரவாதத்தின் முக்கியக் காரணம் பலவித நாசகார ஆயுதங்கள் சுலபத்தில் விலைக்குக் கிடைப்பதுதான். சோவியத் யூனியன் சிதறியதும் அதன் குடியரசுகளில் உள்ள ஆயுதங்கள் பல வேண்டாத சக்திகளிடம் போய் சேர்ந்தன. எப்படியாவது கலக சூழ்நிலைகளை பெருக்கி ஆயுதங்களை விற்க அமெரிக்கா போன்ற நாடுகளும் செயலாற்றுகின்றன. எப்படியும் வன்முறை என்பது மனிதனின் அடிப்படையிலேயே உள்ளது. அதற்கு தீனிபோடுகின்றனர் ஆயுதங்களை விற்பவர்கள்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கூறுவதை விட தீவிரவாதம் என்றுதான் கூறவேண்டும். புலிகள் இஸ்லாமியர் அல்ல, காலிஸ்தானியர் இஸ்லாமியர் அல்ல, ஐரிஷ் தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. ஸ்ரீலங்காவில் அஹிம்ஸை போதிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த பலர் செய்யாத தீவிரவாதமா? கூறப்போனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்று பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் உருவாகின்றனர். ஆகவே இஸ்லாமியரை மட்டும் குறிவைப்பது நீதியாகாது.

ரஜனிகாந்த்
ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை இல்லை. அதை பற்றி பேசுவதையும் தான் விட்டாயிற்று என்று சோ கூறிவிட்டார். உடனேயே, தான் கூறுவதை விட்டுவிட்டதால் ரஜனி வந்தாலும் வரலாம் என்றும் பொடி வைத்து பேசினார். ஒரே சிரிப்பு.

வாஜ்பேயிக்கும் மன்மோகனுக்கும் உள்ள வேறுபாடுகள்
முன்னவர் பிரதம மந்திரியாக இருந்தார். பின்னவரைப் பற்றி அவ்வாறு கூற முடியாது. உதவிப் பிரதமர் என்று வேண்டுமானால் கூறலாம். வாஜ்பேயி காலத்தில் நடத்திய போக்ரான் அணுபரிசோதனை அமெரிக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர்கள் உளவுத்துறைக்கு இது நிச்சயம் ஒரு பின்னடைவே. மன்மோகன் இப்போது இருக்கும் நிலையில் அதைக் கண்டிப்பாகச் செய்ய முடியாது. ஒவ்வொருவரிடமும் கேட்டு செய்வதற்குள் நொந்து விடுவார். சோனியா காந்தியைக் கேட்டால் அவர் க்வாட்ரோக்கியோடு ஆலோசனை செய்யச் சொல்வார், மு.க. அவர்கள் தயாநிதி மற்றும் கலாநிதியைக் கேட்கச் சொல்வார். லாலு அவர்கள் பாஸ்வான் மேல் அந்த குண்டைப் போட்டால் தனது ஆதரவு உண்டு என்று கூறுவார். அதற்குள் அமெரிக்காவுக்கு சாட்டலைட் கேமரா இல்லாமலேயே எல்லாம் தெரிந்து விடும். கம்யூனிஸ்டுகள் கடைசியில் கூடாது என்று கூறிவிடுவார்கள். ஆக முயற்சி கைவிடப்படும்.

அரசியல் நாகரிகம்
வெவ்வேறு கட்சியைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் சந்திக்கும்போது தமிழ்நாட்டில் முகத்தைத் திருப்பிச் செல்கின்றனர். அதுவே வட இந்தியாவில் சுமுகமாகப் பேசிக் கொள்கின்றனர். இது பற்றிப் பேசுகையில் தமிழ்நாட்டில் இப்போதைய நிலைமைக்கு எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி இடையில் நிலவிய விரோத மனப்பான்மையே காரணம் என்று கூறினார். அது மெதுவாக மறைந்து தமிழகத் தலைவர்களிடம் மனமுதிர்ச்சி வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜயலலிதா மற்றும் கருணாநிதியை பற்றி துக்ளக் எழுதும் முறை

கருணாநிதி அவர்கள் பலமுறை மிக நல்ல நகைச்சுவைக்கு இடம் அளிக்கிறார் என்று சோ குறிப்பிட்டார். உதாரணத்துக்கு தான் 2001-ல் கைதான நிகழ்ச்சியை குறிப்பிடுகையில் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சிகளை மிகைபடுத்திக் கூற ஆரம்பித்தார். கடைசியில் தன் வீட்டுப் பெண்களிடமே போலிஸார் முறைதவறி நடந்தனர் எனவும் நூற்றுக்கணக்கானோர் தீக்குளித்தனர் என்றும் அவர் கூற ஆரம்பித்து விட்டார். இவ்வளவு தமாஷாக எல்லாம் கூறினால் அதற்கேற்பத்தான் தன் நடவடிக்கையும் இருக்கும் எனக் கூறினார். ஜயலலிதா இந்த விஷயத்தில் டெட் சீரியஸ் என்றும் கூறினார். மற்றப்படி இருவரையும் சமமாகவே பாவிப்பதாகக் கூறினார்.

கேள்விகள் எல்லாம் முடிந்த நிலையில் சோ அவர்கள் பேசினார்.

அத்வானி அவர்கள் ஜின்னாவைப் பற்றித் தேவையில்லாது பேசி சங்கடத்தை வரவழைத்துக் கொண்டார், மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸும் தன் பங்குக்கு சொதப்பியது என்றும் அவர் கூறினார். ஜின்னா அவர்களைப் பற்றி சோ மேலே பேசும்போது கிலாஃப்த் இயக்கத்தில் ஈடுபடவேண்டாம் என அவர் காந்தியடிகளுக்கு அறிவுரை கூறியதையும் கூறினார். அப்போது மதச்சார்பற்று இருந்த அவர் பாகிஸ்தானைப் பெறும்போது அவ்வாறு இல்லை என்பதையும் கூறினார். ஆக இது அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் இடையே கௌரவப்பிரச்சினையானதுதான், ஆகவே சங்கடத்துக்குரியது என்றும் கூறினார். இப்போதைக்கு வாஜ்பேயி மற்றும் அத்வானி ஆகிய இருவரும் தேர்தலைச் சந்திக்க கட்சிக்கு தேவை என்றும் அவர் பேசினார். துறவியான உமா பாரதி அவர்கள் நீதி முதலிய நல்ல பண்புகளையும் துறந்தார் என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸைப் பற்றிப் பேசும்போது அதுவும் வலிமையான நிலையில் இல்லை என்று கூறினார். காஷ்மீர் தீவிரவாதத்தை பெங்களூர் வரை பரவ விட்டுவிட்டது காங்கிரஸ் என்றும் அவர் கூறினார். க்வாட்ரோக்கி அவர்கள் விஷயத்தில் லண்டனில் முடக்கிய அவர் வங்கிக் கணக்குகளை விடுவிக்க சட்ட மந்திரி முயன்றது கண்டிக்கத் தகுந்த செயல் என்றும் அவர் கூறினார். சோனியா காந்திக்கு அவர் வேண்டிவர் என்ற ஒரே காரணத்தால்தான் இத்தனையும் நடந்ததாகவும் அவர் கூறினார்.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு போக வேண்டியதே, ஆனால் இப்போதைக்கு அது போகாது என்றும் கூறினார். இன்னும் பல சொதப்பல்களை செய்து விட்டுத்தான் அது போகும் என்றும் அதுவே பி.ஜே.பி.க்கு சாதகமான நிலை வர வழி செய்யும் என்றும் அவர் கூறினார். பீஹாரில் கூட சட்டசபை கலைப்பால் பி.ஜே.பி. நிதிஷ் குமார் கூட்டணி அரசு இன்னும் நல்ல நிலை அடைய முடிந்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழகத்தை பொருத்தவரை இம்முறை யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தான் கூறப்போவதில்லை என்று கூறிக்கொண்டே ஜயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சாதக பாதகங்களை பட்டியலிட ஆரம்பித்தார். அவ்வாறு செய்யும்போது தான் ஒன்றும் பரிந்துரையெல்லாம் செய்யவில்லை என்பதையும் அவர் அடிக்கடி கூறி அரங்கத்தில் கலகலப்பை உண்டாக்கினார். ஆனால் கடைசியில் தீவிரவாத எதிர்ப்பு, தி.மு.க.வால் தூண்டப்பட்ட மத்திய அரசின் எதிர்ப்பு இருப்பினும் அரசை திறமையாக நடத்திச் சென்றது, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கையாண்டது, தண்ணீர் பஞ்சத்தை சமாளித்தது எல்லாவற்றையும் அடிக்கோடிட்டு ஜெயலலிதாவுக்கு தன் ஆதரவை சூசகமாகத் தெரிவித்தார்.

போன வருடம் சங்கராச்சாரியாரை பற்றி மிகவும் பேசிய சோ அவர்கள் இம்முறை மிகச் சில வாக்கியங்களிலேயே பேசி முடித்தார். அதாவது தெருவில் நியூசன்ஸ் செய்தார் என்ற வழக்கைத் தவிர மற்ற எல்லா வழக்குகளையும் அரசு போட்டுப் பார்த்துவிட்டது என்று கூறினார். தேவையில்லாது குண்டர் சட்டத்தை இவ்வரசு பயனபடுத்தியதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

கடைசியில் நாடகக் காவலர் மனோஹர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பிறகு தேசீய கீதம் பாடப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

ஜோ/Joe said...

டோண்டு சார்,
அடுத்த துக்ளக்-ல வர வேண்டியதை இப்பவே படிக்க தந்தமைக்கு நன்றி!

பூங்குழலி said...

//இஸ்லாமியத் தீவிரவாதம் என்று கூறுவதை விட தீவிரவாதம் என்றுதான் கூறவேண்டும். புலிகள் இஸ்லாமியர் அல்ல, காலிஸ்தானியர் இஸ்லாமியர் அல்ல, ஐரிஷ் தீவிரவாதிகள் இஸ்லாமியர் அல்ல. ஸ்ரீலங்காவில் அஹிம்ஸை போதிக்கும் புத்த மதத்தைச் சேர்ந்த பலர் செய்யாத தீவிரவாதமா? //

இந்தியாவின் ஏதோ ஒரு இந்து அமைப்பை அல்லது ஒரு திராவிட அமைப்பை, இந்த பட்டியலுடன் சேர்த்து தனது நடுநிலைமையை காட்டிக்கொண்டிருக்கலாம்.

நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள்.

அல்லது நீங்களே ஞாபக மறதியில் விட்டுவிட்டீர்களா?

பதிவுக்கு நன்றி.

37- வது ஆண்டில் அடியெடுத்துவைத்த துக்ளக் இதழுக்கும், அதன் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

பூங்குழலி.

நிலா said...

நல்ல விரிவான பதிவு. வாழ்த்துக்கள்

மாயவரத்தான் said...

இன்றைய ஜெயா டி.வி.செய்தியில் துக்ளக் விழாவை 3 நிமிடங்கள் காட்டியபோது கூட்டத்தினரிடையே உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தது நீங்கள் தானே சார்?!

மாயவரத்தான் said...
This comment has been removed by a blog administrator.
dondu(#11168674346665545885) said...

"அடுத்த துக்ளக்-ல வர வேண்டியதை இப்பவே படிக்க தந்தமைக்கு நன்றி!"

நீங்க வேற, இது அடுத்து 3 துக்ளக் இதழ்களில் வரும் சாரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இந்தியாவின் ஏதோ ஒரு இந்து அமைப்பை அல்லது ஒரு திராவிட அமைப்பை, இந்த பட்டியலுடன் சேர்த்து தனது நடுநிலைமையை காட்டிக்கொண்டிருக்கலாம்."

கூறப்போனால் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர் என்று பல மதத்தைச் சேர்ந்தவர்கள் தீவிரவாதிகளாகவும் உருவாகின்றனர் என்றுதான் பின்னாலேயே எழுதப்பட்டுள்ளதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி நிலா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இன்றைய ஜெயா டி.வி.செய்தியில் துக்ளக் விழாவை 3 நிமிடங்கள் காட்டியபோது கூட்டத்தினரிடையே உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருந்தது நீங்கள் தானே சார்?!"
நிஜமாகவே என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டீர்களா? உங்கள் அப்சர்வேஷனுக்கு பாராட்டுகள்.

பை தி வே நீங்கள் அனுப்பித்த பொங்கல் வாழ்த்துக்கு நன்றி மாயவரத்தான் அவர்களே. எப்போது இந்தியா வருகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாயவரத்தான் said...

துக்ளக் விழா என்று ஆரம்பித்த உடனேயே கண்ணில் பிரேஞ்ச் ஆயில் ஊற்றிக் கொண்டு பார்த்தேனாக்கும் :)

மார்ச் 17,18 தேதிகளில் நீன்க்கள் கொஞ்சம் நேரத்தை 'வெட்டியாக' செலவழிக்க ஒதுக்கி வைத்துக் கொள்ளவும்.

மாயவரத்தான் said...

//இந்தியாவின் ஏதோ ஒரு இந்து அமைப்பை அல்லது ஒரு திராவிட அமைப்பை, இந்த பட்டியலுடன் சேர்த்து தனது நடுநிலைமையை காட்டிக்கொண்டிருக்கலாம்.//
அப்படி சேர்த்தாலும் அவர் நடுநிலைவாதி என்பதை சிலர் ஒப்புக் கொள்ள போவதில்லை. அப்படியெல்லாம் பம்மாத்து செய்யவும் அவருக்கு தெரியாது.

அவர் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார்? சாதி, மதம் சம்பந்தப்பட்ட ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு 'மத சார்பற்ற கூட்டணி' என்று பீலா விடுவதைப் போல?!

dondu(#11168674346665545885) said...

"அவர் என்ன அரசியல் கட்சியா நடத்துகிறார்? சாதி, மதம் சம்பந்தப்பட்ட ஒரு சில கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு 'மத சார்பற்ற கூட்டணி' என்று பீலா விடுவதைப் போல?!"
நான் மறுபடியும் என் குறிப்புகளைப் பார்த்தேன். அவர் நக்ஸலைட்டுகளையும் குறிப்பிட்டுள்ளார். அதை நான் கூற மறந்துவிட்டேன். தவிர, எனக்குத் தெரிந்து எந்த இந்து அமைப்போ அல்லது திராவிட அமைப்போ தீவிரவாதத்தில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

மேலும் நீங்கள் கூறுவது போல அவருக்கு பமாத்து வேலைகள் தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"மார்ச் 17,18 தேதிகளில் நீங்கள் கொஞ்சம் நேரத்தை 'வெட்டியாக' செலவழிக்க ஒதுக்கி வைத்துக் கொள்ளவும்."
ஆவலுடன் உங்கள் சந்திப்பை எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Srikanth Meenakshi said...

ராகவன் சார், ரொம்ப நன்றி. விரிவான பதிவு, சுவையான தகவல்கள்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஸ்ரீகாந்த் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மாமன்னன் said...

சுத்தப்பேத்தல்.

பைபிளில் சொல்லியிருக்கின்றது என்பதற்காக கருத்தடை மருத்துவ மனைகளில் குண்டு வீசுவதுதான் கிரிஸ்துவ தீவிரவாதம். கிரிஸ்துவர்கள் குண்டு வீசினார்கள் என்பதால் அது கிரிஸ்துவ தீவிரவாதம் அல்ல.

அதே போல் முஸ்லீம்கள் குண்டு வீசினார்கள் என்பதால் அது இஸ்லாமிய தீவிரவாதம் அல்ல. இஸ்லாமின் கொள்கைகள் காரணமாக அவர்கள் குண்டு வீசினால்தான் அது இஸ்லாமிய தீவிரவாதம்.

இங்கு இஸ்லாமிய தீவிரவாதம் என்பது கொள்கைகளின் அடிப்படையிலானது. யார் செய்கிறார்கள் என்பதன் அடிப்படையிலானதல்ல.

சோ வழக்கம்போல உளறுகிறார்...

Ennamopo.blogsome.com

dondu(#11168674346665545885) said...

"இங்கு இஸ்லாமிய தீவிரவாதம் என்பது கொள்கைகளின் அடிப்படையிலானது. யார் செய்கிறார்கள் என்பதன் அடிப்படையிலானதல்ல.
சோ வழக்கம்போல உளறுகிறார்..."

சோ அவர்கள் துக்ளக்கில் இதை பற்றி ஆண்டு விழா கட்டுரையில் என்ன எழுதுகிறார் என்பதை பார்க்கும் வரை என் அபிப்பிராயத்தை ஒத்தி வைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது