2/23/2006

IDPL - நினைவுகள்-1

சிலரைப் பார்த்த உடனேயே பிடித்து விடும். அவர்களுக்கும் நம்மை அதே போல பிடித்து விடுவது மிக அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். அவர்களில் திரு. ஜலானியும் ஒருவர்.

வருடம் 1981. ஐ.டி.பி.எல்லுக்கு (Indian Drugs and Pharmaceuticals Limited) அல்ஜீரியாவில் சில ஒப்பந்தங்கள் கிடைக்கும் போலிருந்ததால் ஒரு பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதற்கான நேர்முகத் தேர்வுக் குழுவின் தலைவர் ஜலானி அவர்கள். ஜே.என்.யூ-விலிருந்து ஒரு பிரெஞ்சுப் பேராசிரியை இதற்காகப் பிரத்தியேகமாக வந்திருந்தார். நாங்கள் இருவரும் பிரெஞ்சில் சரளமாகப் பேசுவதை ஜலானியும் மற்றவரும் ஆர்வமாகப் பார்த்தனர். பிறகு வேலை சம்பந்தமாகப் பேசினோம்.

ஜலானி:"ராகவன், நீங்களோ ஒரு இஞ்சினீயர். அத்துறையை விட்டு ஏன் மொழித் துறைக்கு வர ஆசைப் படுகிறீர்கள்?"
நான்: "ஐயா, மொழி பெயர்க்கப் போவது என்னவோ இஞ்சினீயரிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தானே. என் இஞ்சினீயரிங் அறிவு தேனீரில் சர்க்கரைப் போல கரைந்திருக்கும். ஆகவே அத்துறை அறிவை இழக்க மாட்டேன்."

அவருக்கு இந்த பதில் பிடித்திருந்தது. இருந்தாலும் அவர் விடவில்லை.

ஜலானி:"எனக்கென்னவோ பிரெஞ்சு மொழி பெயர்ப்பு வேலை அதிக நாட்கள் நீடிக்கும் என்றுத் தோன்றவில்லை. இங்கு இஞ்சினியர் வேலை ஒன்றும் காலியாக உள்ளது. அதையும் எடுத்துக் கொள்ளுகிறீர்களா?"
நான்: "கண்டிப்பாக".

பிறகு இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளர் என்ற பெயரில் அங்கு நான் 12 வருடம் வேலை செய்தேன். ஜலானி அவர்கள் கூறியபடி 2 வருடங்கள் பிறகு அல்ஜீரியா வேலை இல்லை என்றாயிற்று. இங்குதான் அவரது தீர்க்க தரிசனம் வெளிப்பட்டது. அடுத்த 10 வருடங்கள் இஞ்சினியராக வேலை செய்தேன். பெரிய வேலை ஒன்றுமில்லை. நிறைய ஓய்வுதான். நான் பாட்டுக்கு சந்தோஷமாக வெளி மொழி பெயர்ப்பு வேலைகளை மேற் கொண்டு என் வாடிக்கையாளர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டேன். விருப்ப ஓய்வு பெற்று டில்லியிலேயே 8 வருடம் முழு நேர மொழி பெயர்ப்பாளனாக வெற்றிகரமாக உலா வர முடிந்தது.

"இஞ்சினியர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்" என்ற டெஸிக்னேஷன் எனக்குத் தெரிந்து இதுவரை யாருக்கும் கொடுக்கப்படவில்லை. இனிமேலும் யாருக்காவது அது கிடைக்கும் என்று தோன்றவில்லை. இத்தனைக்கும் மூல காரணங்களில் ஒருவராக இருந்த ஜலானி எப்போதும் என் நன்றிக்குரியவர்.

என்னைப் பொருத்தவரை எனக்கு முன்னேற்றமிருந்தாலும் ஐ.டி.பி.எல். என்னும் ஆலமரம் 1980-லிருந்தே தனது சரிவை சந்திக்க ஆரம்பித்து விட்டது என்பது பின்னோக்கிப் பார்க்கும்போது புரிகிறது. அரசு நிறுவனம் ஆதலால் மினிஸ்ட்ரியிலிருந்து பல தொல்லைகள். சாதாரணமாக விட்டிருந்தால் லாபம் இட்டியிருக்க வேண்டிய இந்த மருந்து நிறுவனம் ஆளும் கட்சியிலிருந்த அரசியல்வாதிகளால் அலைகழிக்கப்பட்டது. பொருளாதார நோக்கம் என்று ஒன்று இல்லாமல் பல முடிவுகளை அரசியல் காரணமாக எடுப்பதற்கு இந்த நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டது. அவற்றில் ஒன்றுதான் இந்த அல்ஜீரிய வேலையும். அல்ஜீரியாவில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு கழிவு நீர் சுத்திகரிக்கும் டர்ண்கீ வேலை அது. இதற்கு ஒரு மருந்து கம்பெனி சரிப்படுமா என்பதைக் கூடப் பார்க்காது குருட்டுத்தனமாக முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மருந்து கம்பெனியின் கழிவுநீர் சுத்திகரிப்பு வேலை என்றால் பரவாயில்லை, ஆனால் இங்கே சம்பந்தமே இல்லாத வேலை.

நல்ல வேளையாக கடவுள் கிருபையால் அந்த வேலை ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் அந்த முடிவுக்கு வருவதற்கு கூட 2 ஆண்டுகள் தேவைப்பட்டன. அது தவிர, அக்காலக் கட்டத்தில் Rites மற்றும் Ircon-ஐ விடுத்து அல்ஜீரியா சென்ற எந்த அரசுக் கம்பெனியும் உருப்படவில்லை. நம்மூர் அரசியல்வாதிகள் உத்தமர்கள் என்று கூறும் அளவுக்கு அந்த ஊர் அரசியல்வாதிகள் லஞ்ச லாவண்யங்களில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்கள்.

12 வருடங்கள் எனக்கு ஆதரவு அளித்த இந்த நிறுவனம் சந்தித்த சரிவு என் மனத்தை மிகவும் பாதித்தது. இனி வரும் சில பதிவுகளில் இந்த நிறுவனத்தில் நான் பெற்ற அனுபவங்களைக் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Boston Bala said...

இர்கான் கேள்விப்பட்டதில்லை. ரைட்ஸ் மற்றும் ஐடிபிஎல், இரண்டுமே கேம்பஸ் காணல்களுக்காக பிட்ஸ் பக்கம் எட்டிப் பார்த்ததில் அறிமுகமும் (சேரும்) ஆசையும் உண்டு.

வெளிகண்ட நாதர் said...

அப்படி இல்ல டோண்டு, எங்க கம்பெனி, EIL, அல்ஜீரியாவில பெரிய பெரிய வேலைகள் எடுத்து செஞ்சு, நல்ல லாபம் ஈட்டினோம். பொதுவா Oil&Gas Industryக்கு நல்ல கிராக்கி இருக்கு அங்க!

dondu(#11168674346665545885) said...

ஐ.டி.பி.எல். கேம்பஸ் நேர்காணலுக்கு வந்திருந்ததா? எந்த வருடம்? யாரையாவது எடுத்தனரா? இது எனக்கு செய்தி. 1981-ல் கார்பரேட் அலுவலகத்தில் நான் சேர்ந்த பிறகு சேர்க்கப்பட்ட அதிகாரிகளை கை விரல்களில் எண்ணி விடலாம்.

இண்டஸ்ட்ரியல் இஞ்ஜினியராக ஒருவர் வந்தார். ஞானசேகரன் என்று பெயர், ஓரிருவர் மார்கெட்டிங்கில் வந்தனர். ஆனால் நான் சேர்ந்த பிறகு கம்பெனியை விட்டு போனவர்களே அதிகம். நூற்றுக்கணக்கில் இருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது சரி வெளிகண்ட நாதர் அவர்களே. இ.ஐ.எல்லை மறந்து விட்டேன். அவர்கள் வேலை செய்யும் முறையே அலாதி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதாவது ஒரு ப்ராஜெக்டில் வேலை செய்யும்போது நேரத்தையும் கணக்கில் எடுத்து எந்த வேலையை எவ்வளவு நேரத்தில் முடிப்பார்கள் என்பதையெல்லாம் பார்ப்பார்களாமே. ஒருவர் செய்யும் வேலைகள் கனத்த மானிட்டரிங்கிற்கு உட்படுத்தப்படுமாமே. உண்மையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெளிகண்ட நாதர் said...

ஆமாம், இஞ்சினியரிங் புராஜக்ட்களில், எப்பொழுதுமே Manhour basisல் தான் வருவாயை கணிப்பது, அது போல தொடர்ந்து மானிட்ரிங் செய்து அதன் வீச்சு நீச்சுகலை அறிந்து, கணித்த Manhours குள்ளேயே வேலை செய்து முடிக்கவேண்டும். இது மாதாமாதம் கண்கானிக்கப்பட்டு, நிலை மாறினால் கட்டுப்படுத்தப்படும். வருவாயும்,அதற்கு தகுந்தால் போல Invoice எழுப்பி, ownerகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும். எல்லா இஞ்சினியரிங் வேலைகளுக்கும் வேலை செய்யும் நிர்ணயநேரமுண்டு. ஒரு புராஜக்கெட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் கூறுபோட்டு, மொத்த நிர்ணயநேரத்தை estimate, செய்து, ஒவ்வொரு manhourக்கும், விலை உண்டு, தகுதி வாரியாக, அதை மொத்தமாக கணக்கிட்டு முன்கூட்டியே சொல்லவேண்டும், அதன் பின் cost Reimbursable basisல் எங்களுக்கு வருவாய் கிட்டும்!

dondu(#11168674346665545885) said...

இ.ஐ.எல்லிலும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் கேட்டிருந்தனர். அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் அவர்கள் கொடுத்த சம்பள விகிதம் 550-900 ரூபாய்கள் மட்டுமே. மேற்பார்வையாளர் ஸ்கேல். நான் ஐ.டி.பி.எல்லில் இருந்ததோ 700-1300-ல் ஆஃபீசர் ஸ்கேல். ஜூனியர் க்ளாஸ்-1 என்று கூறுவார்கள். ஆகவே விட்டு விட்டேன்.

மேலும் க்வாலிஃபிகேஷன் என்று பார்த்தால் அவர்கள் ஃபிரெஞ்சில் எம்.ஏ. பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். இது ஒரு தனிக் கதை. அதை பற்றி அடுத்தப் பதிவில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

நல்லா எழுதியிருக்கீங்க டோண்டு, ஆமாம் இந்த பதிவு ஏற்கனவே வந்திருக்குதுன்னு நினைக்கிறேன்.. படித்தது போல் இருக்கிறது..

***

மும்பை நினைவுகள் போல் டில்லி நினைவுகளையும் சுவராசியமாக எழுதுங்கள் !!

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் சோம்பேறி பையன் அவர்களே. உங்கள் ஞாபக சக்தி அபாரம். ஏற்கனவே ஜலானி அவ்ர்களை பற்றி போட்ட பதிவைத்தான் மறு பதிப்பு செய்திருக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, தில்லி நினைவுகள் என்று மீள் வகைபடுத்தல் செய்யும்போது ஏற்கனவே வேறு பதிவுகளில் கூறப்பட்டவை, பின்னூட்டங்களாகக் கூறப்பட்டவை ஆகியவற்றை தவிர்க்க முடியாது.

சில பதிவுகள் புதிய பதிவாளர்களும் படித்து எதிர்வினை தரட்டும் என்ற எண்ணமே இரண்டாவது காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது