மதுசூதனன் அவர்களது இப்பதிவில் தி.நகரைப் பற்றி வந்துள்ளது. ஆங்கிலத்தில் வந்துள்ளதை இங்கு தமிழில் தருகிறேன்.
இந்த மார்கழிப் பனியிலும் உங்களுக்கு வியர்க்கிறதா? நடைபாதையில் போக்குவரத்து நெருக்கடி? ரெயில்வே ஸ்டேஷன் ஓய்வு அறையில் உள்ள கழிப்பிட நாற்றத்தையும் மிஞ்சும் நாற்றத்தை உணர்கிறீர்களா?
மேலே உள்ள எல்லா கேள்விகளுக்கும் உங்கள் விடை ஆமாம் என்றிருந்தால், நீங்கள் தி.நகருக்கு வந்துள்ளீர்கள். உங்கள் வரவு நல்வரவாகுக. தி.நகர் நமது பால்வெளிவீதியில் உள்ள ஒரு தீவிர ஷாப்பிங் பகுதியாகும். இங்கு ஷாப்பிங் செய்ய உங்களுக்கு தேவைப்படுவது அசாத்திய பொறுமை மற்றும் இந்த இடத்தை ஷாப்பிங் செய்வதற்காக நீங்கள் தெரிவு செய்வதற்கான அபார முட்டாள்தனம். இங்கு இருக்கும் எல்லா கடைகளிலும் புகுந்து சாமான்களை வாங்க முயன்றால், கி.பி. 2020-க்கு முன்னால் வெளியில் வர இயலாது.
இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியதை கூறும் நோக்கத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.
1.தி.நகர் எங்குள்ளது?
இந்தக் கேள்விக்கு சரியான விடை அறிந்தவர் இலர். சென்னையில் உள்ள இந்த அழகிய இடத்துக்கு மறுமுறை நீங்கள் வர எண்ணினால், கீழ்பாக்கத்து மனநிலை மருத்துவமனையில் ஜன்னலோர பெட் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். விடுமுறை பேக்கேஜ் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
2. மூன்றாம் முறையும் நான் அங்கு வந்தால்?
ஏர்வாடியில் சேது விக்கிரமுக்கு பக்கத்து தூணில் சங்கிலியுடன் கட்டப்படுவீர்கள். விடுமுறை பேக்கேஜில் சங்கிலியின் விலையும் அடக்கம்
3. ஆனால் அழகிய இடம் என்று சொன்னீர்களே? இங்கு சுற்றுலாப் பயணிகளாக வருபவர்கள் உள்ளனரா?
ஒரு மாதிரி அப்படித்தான். இது சென்னையின் தற்கொலை முனையாகவும் கருதப்படுகிறது.
4. இங்கு ஷாப்பிங் செய்ய இயலுமா?
இங்கு செய்யக் கூடிய காரியங்கள் இரண்டேதான். ஒன்று ஷாப்பிங் மற்றது செத்துப் போதல். முந்தையது மட்டும் என்னவோ உங்கள் சாய்ஸில் வரும், பின்னது இல்லை.
5. என் வீட்டம்மா சில பட்டுப் புடவைகள் வாங்க விரும்பறாங்க. அவங்களை எங்கே அழைத்து செல்லலாம்?
அவங்களை போத்தீசுக்குள்ளே தள்ளி விட்டுட்டு எகிறி குதிச்சு எஸ்கேப் ஆயிடுங்க. அப்போத்தான் பிற்காலத்திலே சுயமரியாதையோடு வாழ முடியும்.
6. நான் ஓடாம அங்கேயே இருந்தாக்க?
பீஹார் தேர்தல்லே பங்கு பெறும் எல்லா தகுதியும் உங்க கிட்டே இருக்கு.
7. நானும் கடைக்குள்ளே போனாக்க?
உங்க பேர் அண்ணாமலைன்னு இருந்தால் வெளியில் வரும்போது நீங்க அரோஹரா ஆகிடுவீங்க.
8. அங்கே சில கடைகளிலே தங்கம் பயங்கர சீப்பாமே?
விலை மட்டுமே சீப்பா இருக்காது. ஒரு வேளை ரங்கநாதன் தெரு அண்ணாச்சி கடையை பற்றி கேக்கறீங்களா?
9. ஆமாமாம். அங்கே எப்படி போறது?
அந்தத் தெருவோட ஒரு முனையிலே நிந்துக்கோங்க. கண்ணை மூடிக்குங்க. முழிச்சுப் பாத்தா கடைக்குள்ளே நீங்க. மத்த வாடிக்கையாளர்கள் உங்களை அங்கே தள்ளிண்டே போய் சேர்த்துடுவாங்க.
10. என் வண்டியை எடுத்துட்டு போகலாமா?
வாயைக் கழுவுங்க. லாலு பிரசாத் யாதவுக்கு கூட அந்த துணிச்சல் வராது.
11. அப்படியா? அங்கே கூட்டம் அதிகமோ?
ஆமாம். சுத்தி இருக்கறவங்களை நீங்க எண்ணி முடிக்கறதுக்குள்ளே ஜுனூனை ரெண்டு தடவை ஒளிபரப்பிடலாம்.
12. ஜுனூனா? அது யார் அல்லது என்ன?
கடவுளே. தெரியாதா உங்களுக்கு ஜுனூனை பற்றி? பாத்ததில்லையா இதுவரை அதை நீங்க? அது என்னவோ பெரிய சீரியல். அதில் பேசுவாங்க மாத்தி மாத்தி மொழிபெயர்த்த தமிழிலே.
13. சரி இருக்கட்டும். தி. நகர்லே ஆண்களும் ஷாப்பிங் செய்யறாங்களா?
புத்திசாலி ஆண்கள்னா செய்ய மாட்டாங்க. கல்யாணமான ஆண்கள்தான் செய்வாங்க.
14. அங்கே நிறைய நடைபாதை கடைகள் இருக்குன்னு கேள்விப்படறேனே?
நடைபாதையா? அது எங்கே இருக்கு? ஆனா கடைங்க இருக்கு.
15. சரி தொலையட்டும். பொருட்கள் எப்படி இருக்கும்?
நிஜம்மாவே நல்லா இருக்கும். குறைஞ்ச விலையிலே எல்லா பிராண்டுகளும் கிடைக்கும். Nykee, Ribok, Adeedas, இன்னும் இப்படி பல பிராண்டுகள்.
16. ஏம்பா இதெல்லாம் போலி மாதிரி இருக்கே? ஸ்பெல்லிங் வேற தப்பு தப்பா இருக்கு!
அப்படியில்லை சார். நியூமராஜிபடி இருக்கு ஸ்பெல்லிங், அவ்ளோதான்.
17. சரி, சரி. அங்கே ஏதாவது நல்ல ஹோட்டல் இருக்கா?
இருக்கே, சரவணா பவன்.
18. ஹை! 50 ரூபா கொடுத்தா இங்கே என்ன கிடைக்கும்?
நிறைய கிடைக்குமே. பாதி தோசை, சின்ன சொப்பிலே சாம்பார், சில பொடி கற்கள்.
19. பொடி கற்களா? ஏன், ஏன், ஏன்?
என்ன சார் குழந்தை மாதிரி கேட்டுண்டு. காக்கா, பானை மற்றும் அதில தண்ணி கதை கேட்டதில்லையா நீங்க? கல்லைப் போட்டாத்தானே சாம்பர் சொப்பில் மேலே வரும்?
20. அப்ப சட்னி?
கதவு கிட்ட பெரியா பாத்திரத்துலே சட்னி இருக்கும். அதை வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு ஓடிடணும்
21. அடேடே ரொம்ப மோசம்தான் நிலைமை. ஆனா அங்க ஹாட் சிப்ஸ் கூட கிடைக்குமாமே?
ரங்கநாதான் தெருலே நுழைஞ்சா நீங்களே ஹாட் சிப்பா மாறிட போறீங்க. அப்போ தனியா எதுக்கு ஹாட் சிப்ஸ் எல்லாம்?
22. தி. நகர்லே சுற்றுப்புற சூழல் எப்படி?
அங்கே போய் நீளமா மூச்சை இழுங்க. உடனே சாவு நிச்சயம். இல்லேன்னாக்க பணம் வாபஸ்.
23. இவ்ளோ பிரச்சினைகளா அங்கே? கடைசியா ஒரு கேள்வி. தி.நகரின் சிறப்பு என்ன?
வெரைட்டிதான். அவ்ளோ கடை, அவ்ளோ வகை உடைகள், இன்ன பிற சமாசாரங்கள். வேறு எந்த முறைலே சாகாம தப்பிச்சாலும் கொழப்பத்திலேயே செத்துடுவீங்க!
நன்றி மதுசூதனன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
23 hours ago
21 comments:
டோண்டு ஐயா...
உங்களை மாதிரி பெரிய பதிவர்கள் நம்ம பதிவுப் பக்கம் வந்ததே பெரிசு. அதுலையும் எனக்காக நீங்க செஞ்ச இந்த மொழிபெயர்ப்பு அதை விடவும் பெரிசு. அடிக்கடி வந்து போங்க. நீங்க எல்லாம் வந்தாதான உங்களைப் பார்த்து மத்தவங்களும் வருவாங்க...
டோண்டு சார்,
உண்மையாக உதவும் படி வேண்டிக் கொண்டால், ஒருபக்க அளவில் அதிகநேரம் எடுக்காமல், சாத்தியப்படும்படி இருக்கும் பட்சத்தில், உடனடி மொழிபெயர்ப்புச் செய்ய எந்தத் தயக்கமும் இல்லை என்பதை உங்கள் இந்த உடனடி மொழிபெயர்ப்பு கூறுவதாக எடுத்துக்கொள்ளலாமா?
நன்றி அபிராமம் அவர்களே. ஆங்கில மூலமும் சுட்டப்பட்டுள்ளது. அதையும் படிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக்க நன்றி மதுசூதனன் அவர்களே. தமிழில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வந்துள்ளதா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எவ்வளவு அனுமானங்களுடன் கேள்வி ஹரிஹரன் அவர்களே. :)
விடை ஆமாம்.
மொழிபெயர்ப்பை பற்றி உங்கள் கருத்து? ஆங்கில மூலம் மதுசூதனன் அவர்கள் பதிவில் உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திநகருக்குள் செல்லும் போது பழைய செருப்புகளையே அணிந்து செல்ல வேண்டும். புதிய செருப்புகள் அணிந்து செல்லும் போது அவைகள் பழையனவாகத் திரும்பிவரும்.
ஒருத்தர் கால்மேலே மற்றொருவர் ஏறி நின்றால் என்னவாகும்? செருப்பு பிஞ்சிடும் :)))
//மொழிபெயர்ப்பை பற்றி உங்கள் கருத்து?//
நல்லா இருக்கு சார் :-)))
ஏற்கனவே மதுசூதனன் பதிவிலும் படித்துச் சிரித்தேன்! எங்க பக்கத்து ஊர் இப்படி வலையிலும் சிக்கலா சிக்கிப் பிரபலமாகிறதே:-( என்று கூடுதலாகக் கவலையும்தான்!
"ஒருத்தர் கால்மேலே மற்றொருவர் ஏறி நின்றால் என்னவாகும்? செருப்பு பிஞ்சிடும் :)))"
அமர்க்களமான சிலேடை!!
:)))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹரிஹரன் அவர்களே,
தி.நகரில் நானும் குடியிருந்திருக்கிறேன். பிறந்து வளர்ந்த ஊர் திருவல்லிக்கேணியாயினும் நினைவு தெரிந்த சமயம் (சமீபத்தில் 1950) தி.நகரில்தான் வாசம், 1953 வரை. பிறகு திருவல்லிக்கேணி.
1979-81-லும் தி.ந்கர்தான். மோதிலால் தெருவில், ரங்கநாதன் தெருவுக்கு கிழக்கே, உஸ்மான் சாலையின் எதிர்ப்பக்கம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிக நல்ல மொழிபெயர்ப்பு சார்
மிக்க நன்றி கால்கரி சிவா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"I heard gold is pretty cheap at some place there?
Very cheap yeah, not just the rate.
அங்கே சில கடைகளிலே தங்கம் பயங்கர சீப்பாமே?
விலை மட்டுமே சீப்பா இருக்காது."
புரியல்லியே டோண்டு சார். வேற என்ன அங்கெல்லாம் சீப்பா இருக்குமாம்?
முகம்மது யூனுஸ்
ஆங்கில மூலத்தை அப்படியே மொழி பெயர்த்தேன். ஆனால் இது பற்றி நானும் யோசித்தேன். நான் முதலில் எழுதியது:
"விலை மட்டுமே சீப்பா இருக்காது. அங்கே வாடிக்கையாளர்களை நடத்தும் விதமும்தான்".
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அமர்க்களமான சிலேடை//
அப்போ டபுள் மீனிங்ல எழுதுறதுதான் சிலேடையா? :))
சிலேடை என்றால் இரட்டை அர்த்தத்தில் எழுதுவதுதான். ஆனால் டபிள் மீனிங் என்று கூறும்போது பெரும்பாலும் பலான அர்த்தம் வருவது போல் எழுதுவதையே கூறுகின்றனர்.
அப்படி பொருள் கொள்ளும் பட்சத்தில் டபிள் மீனிங்கில் எழுதறுதான் சிலேடை என்று கூறுவதை விட டபிள் மீனிங்கில் எழுதுவதும் சிலேடை என்று கூறுவதே அதிக பொருத்தமாக இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவங்களை போத்தீசுக்குள்ளே தள்ளி விட்டுட்டு எகிறி குதிச்சு எஸ்கேப் ஆயிடுங்க.
புதுப் புடவை கேட்ட குற்றத்திற்காக புது பொண்டாட்டியே தேட வைக்கும் உத்தி போலத்தான் இது தெரிகிறது.
மற்றபடி, கலக்கலான நகைச்சுவை. மொழிபெயர்ப்பில் அனுபவத்தோடு ஒன்றுகின்றது.
Push her into Pothys and run.
அவங்களை போத்தீசுக்குள்ளே தள்ளி விட்டுட்டு எகிறி குதிச்சு எஸ்கேப் ஆயிடுங்க.
எஸ்கேப் ஆறது ஷாப்பிங் தொல்லையிலிருந்துதான். புதுப் பெண்டாட்டியெல்லாம் வந்தாக் கூட, அவங்களும் புதுப் பொடவை எல்லாம் கேப்பாங்களே. அப்ப என்ன பண்ணுவதாம்?
என்னைப் பொருத்தவரைக்கும் வீட்டம்மாவை புடவை குவியலருகில் விட்டு விட்டு நான் பாட்டுக்கு எஃப்ரைம் கிஷோனின் புத்தகத்துடன் ஒரு ஸ்டூலில் செட்டில் ஆகிவிடுவேன். அவ்வப்போது செல்பேசி "அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" என்று பாட ஆரம்பித்ததும், கிஷோனை ஒதுக்கி, வெள்ளையப்பனை எடுத்து தர வேண்டும். பிறகு கையில் புடவை மூட்டைகளை சுமந்து கொண்டு கார் வரைக்கும் செல்ல வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"பிறகு கையில் புடவை மூட்டைகளை சுமந்து கொண்டு கார் வரைக்கும் செல்ல வேண்டும்."
நீங்க ஒரு நல்ல ஹஸ்பெண்டு சார். உங்க மனைவி கொடுத்து வச்சவங்க. அது சரி, என்ன கார் வச்சிருக்கீங்க?
தங்கம்மா
என்ன தங்கம்மா மேடம், தமிழ்மணத்துக்கு புச்சா? டோண்டு சாரைப் போய் என்ன மேக் கார்னு போய் கேக்கலாமா?
வாடகைக் காரெல்லாம் அவரோட காருதானே. எந்த மேக் கிடைக்குதோ அத்தக் கொணாருவாரு. என்ன டோண்டு சார் சரிதானே?
கிருஷ்ணன்
"டோண்டு சாரைப் போய் என்ன மேக் கார்னு போய் கேக்கலாமா?
வாடகைக் காரெல்லாம் அவரோட காருதானே. எந்த மேக் கிடைக்குதோ அத்தக் கொணாருவாரு. என்ன டோண்டு சார் சரிதானே"?
ரொம்ப சரி கிருஷ்ணன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அநன்யாவின் வலைப்பதிவில் சுட்டியைப் பார்த்து வந்தேன். அட்டகாசமான மொழிபெயர்ப்பு! பட்டையைக் கிளப்பியிருக்கிறீர்கள். :-))
Post a Comment