6/11/2007

உண்மை கற்பனையை விட விந்தையானது

மேலே உள்ள தலைப்பு ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது. இன்று காலை கூகள் மின்னஞ்சல் பெட்டியில் அருமை நண்பர் ஜெயகமலிடமிருந்து இரு அஞ்சல்கள் வந்தன. அவற்றுள் ஒன்றுதான் இப்பதிவை போடத் தூண்டியது.அவருக்கு என் நன்றி.

கடந்த காலத்துக்கு செல்வது பலரது கற்பனையில் உள்ளது.எனக்கும் அது உண்டு. அது பற்றி பதிவே போட்டுள்ளேன். எஸ்.வி.சேகர் நாடகத்திலும் அது வரும். பாரதியார் காலத்துக்கு இரு நண்பர்கள் கால யந்திரத்தில் செல்ல மவுண்ட் ரோடுக்கு வருகிறார்கள். அதில் ஒருவன் திடீரென கூவுகிறான், டேய் எல்.ஐ.சி. எங்கேடா என்று. இன்னொருவன் இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை ஆகவே அது இல்லை என்று கூற ஒரே தமாஷ்தான்.

அதாவது கடந்த காலத்துக்கு செல்ல இயலாது. எதிர்காலத்துக்கு? அதைத்தான் நாம் தினசரி செய்கிறோமே என்றால், அதை நான் குறிப்பிடவில்லை. திடீரென நான் இப்போது 2077க்கு சென்று சமீபத்தில் 2007 என வலைப்பதிவில் எழுதி, மடிப்பாக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞர் "நம்ம கொள்ளுத்தாத்தா சொன்னது போல நிஜம்மாவே இந்த ஆள் இருந்திருக்கான் போலிருக்கே" என்று வேறு எங்காவது பின்னூட்டத்தில் புலம்புவாரோ? தெரியாது. ஆனால் நான் கூறவரும் இன்னொரு கண்டிஷன் 2077-லும் நான் இப்போது இருப்பது போல 61 வயது வாலிபனாகவே இருக்க வேண்டும். அது மட்டும் நடக்காது என நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்துக்கு போவது பலமுறை நடந்துள்ளது, இப்போது நடந்துள்ளது போல.

போலந்தில் 1988-ல் கோமாவில் விழுந்த ஒருவர் இப்போது விழித்திருக்கிறார்.

அவர் கோமாவில் விழுந்தபோது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இப்போது இல்லை. உணவுப்பொருள் ரேஷனிங் இல்லை. கடைகளில் தேயிலையும் ஊறுகாய் மட்டும் கிடைத்து வந்த காலம் போய் இபோது பொருள்கள் மண்டுகின்றன. ஜான் க்ரெப்ப்ஸ்கி (Jan Grzebski), வயது 65, 1988-ஆம் ஆண்டு ரயிலில் அடிப்பட்டு கோமாவில் விழுந்தார்.

"இப்போது தெருக்களில் ஆளாளுக்கு செல்போன் வைத்து கொண்டு திரிகிறார்கள். கடைகளில் பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. இருந்தாலும் ஜனங்கள் புகார் செய்த வண்ணம் உள்ளனர்," என்று ஆச்சரியப்படுகிறார் அவர். (புகார் செஞ்சாத்தான் மக்கள் என டோண்டு ராகவன் கருதுகிறான்).

இந்த கலாட்டாவில் அவர் மனைவியின் விடாநம்பிக்கையையும் தியாக மனப்பான்மையையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். மருத்துவர்கள் இன்னும் சில ஆண்டுகளே இருப்பான் என்று கைவிட்ட கேஸை சாவித்திரி கணக்கில் எமனுடன் போராடிய ஜெர்ட்ரூடா (Gertruda) பெயர் பொன்னெழுத்துக்களில் அச்சடிக்கப்பட வேண்டியவை. அவரது போராட்டம் ஒரு காவியம். இருந்தாலும் அவரைப் பற்றி மேலும் மேலும் எழுதி அவரை கூச்சப்பட வைக்க நான் விரும்பவில்லை.

அவர் கோமாவில் சென்ற ஆண்டுக்கு அடுத்த ஆண்டு கம்யூனிஸ்ட் அரசு வீழ்ந்தது. போலந்து நாட்டோவில் 1999-ல் சேர்ந்தது. ஐரொப்பிய ஒன்றியத்தில் 2004-ல் இணைந்தது.

"மற்றவர்கள் புகார் செய்யலாம். ஆனால் நான் செய்ய மாட்டேன் என கூறுகிறார் இந்த போலந்துக்காரர்".

எதிர்காலக் கற்பனை சம்பந்தமாக பல நாவல்கள் வந்து விட்டன. எட்வேர்ட் பெல்லாமியின் "பின்னோக்கிப் பார்க்கும்போது", ஜார்ஜ் ஆர்வல்லின் 1984, ஆல்டஸ் ஹக்ஸ்லியின் "புதிய தைரியம் மிக்க உலகம்", எச்.ஜி. வெல்ஸின் "கால யந்திரம்" ஆகியவை உடனேயே மனதுக்கு வருகின்றன.

அவை எல்லாமே நிகழ்காலத்தில் இருப்பனவற்றை எதிர்காலத்துக்கு நீட்டிக்கின்றன. ஆனால் இம்மாதிரி கேஸ்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் கற்பனையெல்லாம் மிஞ்சி விடுகின்றன. அந்த போலந்து தொழிலாளியை பொருத்தவரை அவர் நேரடியாக எதிர்காலத்துக்கே சென்று விட்டார்.

அதனால்தான் கூறுகின்றனர், "உண்மை கற்பனையை விட விந்தையானது" என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

Anonymous said...

//இருந்தாலும் அவரைப் பற்றி மேலும் மேலும் எழுதி அவரை கூச்சப்பட வைக்க நான் விரும்பவில்லை.
//

பரவால்லை சார்...நாம தமிழ்ல தான எழுதறம்...அவங்க என்ன படிக்கவா போறாங்க ? :)))))

dondu(#11168674346665545885) said...

//பரவால்லை சார்...நாம தமிழ்ல தான எழுதறம்...அவங்க என்ன படிக்கவா போறாங்க ? :)))))//
நான் சொல்ல வந்தது என்னவென்றால், அவர் நான் எழுதியதைப் படித்தால் கண்டிப்பாக கூச்சப்படுவார் என்று தோன்றியது. மேலும் அவர் செய்ததது காவிய அளவில் உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நம்பிக்கை விடாது செயலாற்றிய அந்த சாவித்திரியை புகழ இந்த வெறும் டோண்டு ராகவனின் வார்த்தைகள் போதாது என்பதே.

அவரது செய்கை கொடுக்காத சான்றையா குறைந்த மொழியறிவுடைய நான் அளித்துவிட முடியும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Jay said...

டோண்டு ஸார்,

எவ்வளோ பேருக்கு 19 வருசம் பொருமையா பிணம் மாதிறி கிடக்கிற மனிதர கவனிக்க முடியும? அவர் மனைவி செய்தது மிகப் பெரிய செயல். பாராட்டுக்கு மீரிய செயல்.

இதுல மற்றொரு விசயம் அப்ப இருந்த சோஷலிஸ ஆட்சியில புகார் செய்தால் அபராதம் ஆனால் இப்ப சுதந்திர சந்தையில் புகார்கள் வரவேற்க்கபடுகின்றது. ்

dondu(#11168674346665545885) said...

நானும் அதைத்தான் சொல்கிரேன் ஜயகமல் அவர்களே. அச்செயலை புகழ என் மொழியறிவு போதாது.

மேலும் புகார்களைக் கேட்டால்தான் நிறுவனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள முடியும். அவசர நிலை காலத்தில் இந்திரா காந்தி பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டு போட்டதால் நாட்டு மக்களின் நாடியைப் பார்க்கத் தவறினார். தனது பிரசாரத்தை தானே நம்பி சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்டார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//திடீரென நான் இப்போது 2077க்கு சென்று சமீபத்தில் 2007 என வலைப்பதிவில் எழுதி, மடிப்பாக்கத்தில் இருக்கும் ஒரு இளைஞர் "நம்ம கொள்ளுத்தாத்தா சொன்னது போல நிஜம்மாவே இந்த ஆள் இருந்திருக்கான் போலிருக்கே" என்று வேறு எங்காவது பின்னூட்டத்தில் புலம்புவாரோ? தெரியாது.//

ஓவர் குசும்பு சாரே உங்களுக்கு :-))))))

dondu(#11168674346665545885) said...

//ஓவர் குசும்பு சாரே உங்களுக்கு :-)))))) //
நன்றி லக்கிலுக்:))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

அந்தப் பெண்மணியின் தியாகம் கண்டிப்பாக போற்றத்தக்கது. எதற்கெடுத்தாலும் ஒட்டுமொத்தமாக மேலை நாடுகளை மனிதத்தனமற்ற கலாச்சாரச் சூழல் என்று குற்றம்சாட்டும் கும்பல்கள் இதைப் படித்துத் தெளிந்தால் நல்லது.

பி.பி.சி.யில் செய்திக் கட்டுரையாக இதைக் காண்பித்தார்கள். தன் மனைவியைக் காட்டி "என்னால் நம்ப முடியல.. நாட்டின் நிலைமையைவிட என் மனைவி இன்னமும் அதே போல்தான் இருக்கிறாள்.." என்று மனைவியின் கரத்தைப் பற்றியபடி சொன்னபோது அவர் மனைவியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே? காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார் இவர்.

அது சரி டோண்டு ஸார்.. மடிப்பாக்கத்திலிருக்கும் உங்களது ரசிகர் மன்றத்தின் தலைவர், எனக்கு முன் பின்னூட்டமிட்டிருக்கும் குசும்பான நண்பர்தானோ..?

dondu(#11168674346665545885) said...

//மடிப்பாக்கத்திலிருக்கும் உங்களது ரசிகர் மன்றத்தின் தலைவர், எனக்கு முன் பின்னூட்டமிட்டிருக்கும் குசும்பான நண்பர்தானோ..?//
அதிலென்ன சந்தேகம்?

இம்முறை நான் குசும்பாக எழுதியதற்கு நல்ல முறையில் எதிர்வினை கொடுத்து என்னை நிராயுதபாணியாக்கியவர். சபாஷ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது